 |
| டேவிட் அட்டன்பரோ |
எங்கள் ஊருக்கு முதன்முதலில் டிவி அறிமுகமான போது அது ஏற்படுத்திய சலசலப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. அப்போதெல்லாம் டிவியில் செய்திகள் பார்ப்பது, பாடல்கள் கேட்பது போன்றவை ஒரு பெரிய கோலாகலமாய்க் கடந்து போகும். பின்னர் 90களில் கேபிள் டிவிக்கள் வந்தன. கேபிள் டிவி மூலமாக வீடியோ கேஸட்டில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல் அது வரை பரிச்சயமே இல்லாத டிஸ்கவரி, பிபிசி போன்ற சேனல்களோடு அறிமுகமும் ஏற்பட்டது. இவை ஆங்கில சேனல்கள். பாஷை புரியாவிட்டாலும் அந்தச் சேனல்களில் பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றிய ஆவணப்படங்கள் வரும்போதெல்லாம் ஆச்சரியம் ததும்பும் கண்களோடு பார்த்துக் கொண்டிருப்போம். அது வரை வீட்டு வாசலில் தென்படும் காக்கை, கூஉஉ என்றால் எதிர்கூவல் விடுக்கும் குயில், பல்லி, பூனை, மிஞ்சிப்போனால் ஒரு சில பூச்சிகள் இவற்றைத் தவிர எதையும் அறிந்திராத எங்களுக்கு இந்தப் பரந்த உலகத்தில் உள்ள எத்தனையோ உயிரினங்களைக் கண்முன்னே காட்டி, அற்புதமான ஒளிப்பதிவு நேர்த்தியுடனும் அதற்கேற்ற பின்னணி இசையோடும் சேர்ந்து ஒரு குரல் இவற்றை விவரித்துக் கொண்டே செல்லும்.
பல்லுயிர்ப் பெருக்கம் என்ற சொல்லே பெரிதும் புழக்கத்தில் இல்லாத காலத்தில் புவியின் மூலை முடுக்குகளில் உள்ள மெல்லிய இலைகளின் அசைவுகள், சாரை சாரையாகச் செல்லும் எறும்புக் கூட்டங்கள், பீடுநடை போடும் சிங்கங்கள், புலிகள், யானைகள், வண்ணவண்ணப் பறவைகள், ஆழ்ந்த சமுத்திரத்தினுள் கற்பனைக்கும் எட்டாத நீர்வாழ் உயிரினங்களின் அணிவகுப்புகள் என்று – ஒன்றா இரண்டா, அது வரை பார்த்தோ கேட்டோ அறிந்திராத அற்புதமான உயிரியல் உலகம், நம் கண்களுக்கு எட்டாத உலகங்கள் எத்தனையோ இருக்கின்றன என்ற கற்பனையை வண்ணமயமாக்கியது.
எங்களைப் போலவே உலகத்தில் பாதி பேருக்கும் மேல் ஒரு புகைப்படம் கூட எடுக்கும் வாய்ப்பில்லாத காலகட்டத்தில் ஒரு டைம் லாப்ஸ் டெக்னாலஜி, ஒரு ஸ்லோ மோஷன் டெக்னாலஜி, த்ரீ-டி, இன்ஃப்ராரெட் கதிர்கள் போன்ற தொழில்நுட்பங்கள் வழியே பூக்கள் மலர்வதையும், முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிப்படுவதையும், பாம்புக் குட்டிகளையும், கிளைகளில் தொங்கும் குரங்குகளையும், பறவைகளின் படபடக்கும் சிறகுகளில் தெரியும் மாறுபாடுகளையும், சிற்றெறும்பின் கண்களையும், வண்ணத்துப்பூச்சியின் வாயையும் நாம் வாய்பிளந்து பார்க்கும்படி காட்சிப்படுத்தும் ஆவணப்பட இயக்குநருக்கு வாய்த்திருப்பது ஒரு மகரிஷியின் மனம் தானோ என்று கூட நினைத்ததுண்டு. அந்த வகையில் ஒரு மனிதனின் பாதங்கள் செல்ல முடிந்த இடங்களுக்கெல்லாம் சென்று, நுழைவதற்கரிய இடங்களில் நுழைந்து, இடத்துக்கு ஏற்றவாறு அனுசரித்துக் கொண்டு, இயன்ற எல்லாக் கோணங்களிலும் அற்புதமான நீலக் கடலின் அலைகளையும், அதன் அகாத ஆழங்களில் பொதிந்திருக்கும் உயிரினச் செல்வங்களையும், தொடுவானத்தின் விளிம்பில் சிறகடித்துச் செல்லும் பறவைகளையும், சலனமற்ற ஆகாயவெளியால் சூழப்பட்ட பூவுலகெங்கும் வாழும் உயிர்களை அபாரமான ஒளிப்பதிவு நயத்தோடு சூழியல் ஆவணப்படங்களாக வெளியிட்ட சர் டேவிட் ஃப்ரெட்ரிக் அட்டன்பரோ ரிஷிகளுக்கு ஒப்பான பெருமை படைத்தவர்.
பருவநிலை, சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல், பல்லுயிர்ப் பெருக்கம், சூழல் மாசுபாடு போன்ற ஆழமான சொற்கள் அரிதாகப் பேசப்பட்ட காலத்திலேயே இந்த ஒவ்வொரு அம்சமும் ஒட்டுமொத்த புவிமண்டல பாதுகாப்பில் எவ்வளவு நுட்பமான பங்கு வகிக்கிறது என்பதை அவரது ஆவணப்படங்கள் எடுத்துக் காடடின; ஒரு சாமானியனும் கூட இவற்றை உணர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தன. என்னைப் போல இன்னும் எத்தனையோ பேர் தங்கள் வீட்டின் அறையில் சுகமாக உட்கார்ந்துகொண்டே பல்வேறு உயிரினங்களைப் பார்த்து மகிழ்ந்த தருணங்களுக்குப் பின்னணியில் இருந்த அறிவியல் பார்வைகளைக் கண்டறிந்த உலகம், அவர் ஆற்றிய அரும்பணியை மிகுந்த மதிப்புடன் வரவேற்றது. வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் அறிவியல் கொள்கைகளை முன் வைப்பதற்காகவும் அதன் வழியாக இப்புவியில் மனிதனின் பங்கும் பொறுப்பும் என்ன என்று நினைவூட்டுவதற்காகவும் தங்களது வீட்டுக்கே கொண்டு வரப்பட்ட அழியாக் கலைச்செல்வங்களாக உலகம் அவரது படங்களைக் கொண்டாடியது.
டேவிட் ஃப்ரெட்ரிக் அட்டன்பரோ அவர்கள் 1926ம் ஆண்டில் மே 8 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார். அவருடைய தந்தை லெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல்வராகப் பணியாற்றியவர். சிறு வயதிலிருந்தே பலவிதமான புதைபடிவங்கள், பறவைகளின் இறகுகள், கற்கள், பூச்சிகள் ஆகியவற்றைச் சேகரிக்கும் பழக்கம் இவரிடத்தில் உயிரியல் பற்றிய ஆர்வத்தை உருவாக்கியது. அந்த ஆர்வத்தினாலேயே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். 1952 ஆம் ஆண்டு பிபிசி-யில் உதவி தயாரிப்பாளராக இணைந்த அட்டன்பரோ, பொழுதுபோக்கு உலகிலும் இயற்கைக்கு இடமுண்டு என்பதை உணர்ந்து கொண்டதே அவரது வாழ்க்கையின் மாபெரும் திருப்புமுனை. 1954 இல் தொடங்கிய Zoo Quest நிகழ்ச்சிக்காக அவர் நேரடியாகக் காடுகளுக்குச் சென்று, பறவைகள், விலங்குகள், மற்றும் தொழில்நுட்ப நாகரிகம் எட்டாத பழங்குடி சமூகங்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டினார். அதற்காக ஆதிவாசிகளிடம் கலந்துப் பழகி அவர்களுடைய பழக்கங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கவேயில்லை. அந்த ஆவணப்படத்துக்குக் கிடைத்த வெற்றி, அடுத்தடுத்த ஆவணப்படங்களின் வடிவமைப்பில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கையை அளித்தது.
தன் சிறுவயதில் தான் சேகரித்து வைத்திருந்த அரக்குப் பிசினில் சிக்கிக் கிடந்த கொசுவின் புதைபடிவத்தை (Mosquito trapped in Amber) ஊக்கமாகக் கொண்டு The Lost World போன்ற டாக்குமெண்டரியை அவரால் எடுக்க முடிந்தது என்பது அவரது கூர்ந்த அறிவாற்றலுக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
1979 முதல் இதுவரை அவர் உருவாக்கிய டாக்குமெண்டரிகள் நூற்றுக்கும் மேல். அவற்றைக் Life on Earth (1979), The Blue Planet (2001), Planet Earth (2006), Our Planet (2019), A Life on Our Planet (2020), The Private Life of Plants, The Green Planet (2022) போன்ற பிரிவுகளாகப் பகுத்து தொடர் வடிவில் வெளியிட்டிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் தாமே குரல் கொடுத்து காட்சிகளை வர்ணிக்கவும் செய்வார். ஒவ்வொரு ஆவணப்படமும் அற்புதம். அவர் பயன்படுத்திய தொழில்நுட்பமும், சொல்ல விரும்பிய கருத்தும், காட்டிய காட்சிமுறையும், அவற்றின் முக்கியத்துவமும், இவை எல்லாம் சேர்ந்து கோடிக்கணக்கான ரசிகர்களை அவருக்குப் பெற்றுத் தந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமாக மனிதனின் வரம்புகள் இன்னவை என்பதை இப்படங்கள் உணர்த்தின.
அவரது விவரிப்பு முறை ஆர்வத்தைத் தூண்டும் வகையில் மென்மையும் எளிமையும் கொண்டிருந்ததோடு, ஒவ்வொரு காட்சி வரிசையையும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் அமைந்திருந்தது. அதுவும் அவை பிரபலமடைவதற்குப் பெரிய காரணம். இவ்வாறு அவர் தனது 28வது வயதிலிருந்து வனவிலங்கு டாக்குமெண்டரிகள் எடுக்கத் தொடங்கி, கடந்த ஏழு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஓயா உறுதியோடு அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். இன்று நூறு வயதை எட்டிய தறுவாயிலும், கடலைப் பாதுகாப்பது பற்றிய செய்தியோடு இந்த ஆண்டும் ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
அவர் பி.பி.சி.க்காக வேலை செய்தாரென்றாலும் உண்மையில் ஒட்டுமொத்த புவிச்சூழலுக்காகவே பணியாற்றினார் என்று சொல்வதே பொருந்தும். ஏனெனில் அவர் எடுத்த ஆவணப்படங்கள் யாவும் மொத்த மனிதகுலத்திற்குமானவை. படைப்பூக்கமிக்க உயிர் வாழ்வைப் பற்றியும், உயிர்கள் ஒன்றின் மீது ஒன்று ஏற்படுத்தும் பரஸ்பரத் தாக்கங்களைப் பற்றியும் கூறுபவை. மத, அரசியல் கண்ணோட்டங்களுக்கு அப்பால் உயிரினங்களின் பாதுகாப்பு, அவற்றின் நீடித்த வாழ்வு ஆகியவற்றை உறுதி செய்யும் முறையில் அவற்றை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்துபவை.
தமது பரந்த அனுபவங்களை அவர் நூல்களாகவும் வெளியிட்டார். Life on Earth (1979), The Living Planet: A Portrait of the Earth (1984), The Private Life of Plants, The Life of Birds (1998), A Life on Our Planet: My Witness Statement and a Vision for the Future (2020) போன்ற நூல்கள் என்றைக்கும் அவருடைய உழைப்பின் சான்றுகளாக இருப்பது மட்டுமின்றி, தீர்வுகள் தேடும் பாதையில் வழிகாட்டிகளாகவும் துணை நிற்கும்.
“பூமி நமக்கு மட்டுமே சொந்தமல்ல; இங்கு பிறந்த எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது” என்று உணர வைக்கும் பரந்த மனப்பான்மை இந்த ஆவணப்படங்களைப் பார்ப்பதன் மூலம் உருவாகிறது. ஒவ்வோர் உயிரினமும், அது எந்த வடிவில் இருந்தாலும் இவ்வுலகில் வாழவும், தொடர்ந்து தன் வாழ்வைப் பேணவும் அதற்கு நியாயமான உரிமை இருக்கிறது என்ற பார்வையை அவரது படங்கள் அளிக்கின்றன. அவை பலரை வனவிலங்கு பாதுகாப்பை நோக்கி ஈர்த்துள்ளன. அறிவியல் ஆராய்ச்சியாளர்களைத் தங்கள் ஆய்வுகளுக்குத் தூண்டி, உலக அரசாங்கங்களைப் பாதுகாப்பு கொள்கைகளை நோக்கித் திருப்பியுள்ளன என்று கூறினால் அது மிகையாகாது. அனைத்திற்கும் மேலாக கோடானுகோடி சாமானிய மக்களிடம் அவர்களது சுற்றுச்சூழல் குறித்தும், அதிலுள்ள உயிர்களைக் குறித்தும் கருணையும், பரிவும் ஏற்படச் செய்து, ஒழுக்கத்தோடும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்ளச் செய்துள்ளதே அவரின் உண்மையான வெற்றி.
மேலும், அவரை முன்மாதிரியாக ஏற்றுக் கொண்ட எண்ணற்ற இளைஞர்கள் வனவிலங்கு ஆய்வுகள், வனவிலங்கு புகைப்படம், படப்பிடிப்பு, ஆவணப்பட உருவாக்கம் போன்றவற்றை தங்கள் வாழ்வாகக் கொண்டு இயங்கி வருகிறார்கள் என்பதும் மிகையல்ல. இதற்கும் அப்பாற்பட்டு, சுற்றுச்சூழல்–வனவிலங்கு பாதுகாப்பில் எல்லா நாடுகளையும் பங்குதாரர்களாக்கும் முயற்சியில் அவர் ஊக்கத்துடன் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அதற்கான பாதுகாப்பு அமைப்புகள் உருவாகவும் தொடர்ந்து இயங்கவும் அவர் ஊற்றாகவும் ஊக்கமாகவும் இன்றும் திகழ்கிறார்.
 |
| அட்டன்பரோ |
டேவிட் அட்டன்பரோவிற்கு பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. 1985ல் கெளரவ நைட் பட்டம் (Sir David Attenborough) அவருக்கு வழங்கப்பட்டது. பிரிட்டனின் உயரிய விருதான “Order of Merit” (2005), ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத் துறையில் பல BAFTA விருதுகள் மட்டுமல்லாமல், 2020ல் “UN Champion of the Earth” என்ற பெருமைமிகு விருதும் அவரை அலங்கரித்தது. உலகின் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களிடமிருந்து மொத்தம் முப்பத்திரண்டு கெளரவ டாக்டரேட் பட்டங்கள் பெற்றிருப்பது அவருடைய அரிய சிறப்புகளில் ஒன்று. அவரது களப்பணியை கௌரவிக்கும் வகையில் 45க்கும் மேற்பட்ட தாவர, விலங்கினங்களின் அறிவியல் பெயர்களில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. நமது இந்தியாவில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்ட இரண்டு நண்டு வகை உயிரினங்களுக்கும் ஒரு வகைப் பல்லிக்கும் என மொத்தம் மூன்று இனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டேவிட் அட்டன்பரோ வெளியிட்ட ஒவ்வொரு ஆவணப்படமும் அற்புதமே. பல உயிரினங்களை அடையாளம் கண்டு, அவற்றின் வாழ்வுமுறையை உயிரியல் ஆய்வு வரம்புக்குள் கொண்டு வருவதற்கு அவருடைய வீடியோ பதிவுகளே ஆதாரங்களாக இருந்தன என்று சொல்வதில் ஆச்சரியமேதும் இல்லை. இந்த மாமனிதர் 2019ல் நம் நாட்டிலேயே வெளியான Wild Karnataka என்ற ஆவணப்படத்துக்கும் தனது தனித்துவம் மிக்க வர்ணனையின் மூலம் உயர்ந்ததொரு அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தார்.
நூறு வயதை தொட்டுக் கொண்டிருந்தாலும், அவர் தமது பணிகள் எதையும் நிறுத்தி விடவில்லை. அவர் அண்மையில் கடல்களைப் பற்றிச் செய்த ஆவணப்படம் குறித்து பேசும்போது, “கடலைக் காப்பாற்றினால் உலகமே காப்பாற்றப்படும். ஆகையால் கடலைப் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்துகிறார். The Truth about Climate Change என்ற தனது ஆவணப்படத்தின் மூலம், மனிதகுலம் பூமிக்கு விளைவிக்கும் தீமைகளை அவர் வெளிப்படையாகச் சொல்லி சுமார் இரண்டாயிரம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று எச்சரித்திருக்கிறார். “இன்னும் இந்த அகன்ற பூமண்டலத்தின் பாதியைக்கூட நாம் பார்த்ததில்லை; இது இங்கு பிறந்த எல்லா உயிர்களுக்குமான உலகம்; அவை அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமையும், அவற்றையும் வாழ விட வேண்டிய ஒழுக்க நெறிப்பட்ட வாழ்வும் நமக்கு அவசியம்” எனவும் அவர் அறிவுறுத்துகிறார்.
“சக உயிர்களைப் மதிப்பின்றி நடத்துதல், மட்டின்றி இயற்கை வளங்களைச் சுரண்டுதல், ஒழுக்கமோ பொறுப்புணர்வோ இல்லாத வளர்ச்சிக் கொள்கைகள் ஆகியவை அனைத்தும் நாம் நிகழ்த்திய அறிவியல் சாதனைகளுக்கு ஏற்பட்ட களங்கங்கள்; அவற்றை விட்டுவிட வேண்டும்” என்பதே அவருடைய வாக்கு. “மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே அன்றி அதிபதி அல்ல” என்பது அவர் உணர்ந்த உண்மை. “இயற்கையைக் காப்பதே நம் எதிர்காலத்தை காப்பது” என்பது அவரது செய்தி.
டேவிட் அட்டன்பரோ இந்த பூமியையே ஓர் உயிரோட்டம் மிக்க, வற்றாத ஞானப்பெருக்காகக் கண்டு அதற்காகவே தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர். தமது நீண்ட பயணத்தில் அவர் உணர்ந்து நமக்கு வழங்கிய வழிகாட்டல்களைப் பின்பற்றுவது நம் கடமை மட்டுமல்ல, அவருடைய அரும்பணித் தொடர்ச்சிக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையும் ஆகும்.
தேவனபள்ளி வீணாவாணி
தெலுங்கிலிருந்து தமிழில்: விக்னேஷ்வரன் புதுச்சேரி
அவர் நோக்கில் நம் பூமி - தெலுங்கு மூலம்
 |
| தேவனபள்ளி வீணாவாணி |
தேவனபள்ளி வீணாவாணி தெலுங்கின் முக்கியமான சூழலியல் எழுத்தாளர், கவிஞர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த வீணாவாணி தெலங்கானா மாநில வனத்துறையில் பணிபுரிகிறார். அங்குள்ள மஹபூப்நகர் மாவட்ட வனச்சரகத்தின் பொறுப்பாளர் (District Forest Officer). 2018ல் வெளியாகிய இவரது முதல் புத்தகமான நிக்வண, இரண்டாவது புத்தகம் சிலாபலகம் (மார்ச் 2020) ஆகியவை கவிதைத்தொகுப்புகள். 2022ல் அவர் வெளியிட்ட 'தரணீருஹ' என்ற புத்தகம் இயற்கை ஆர்வலர்களிடையேயும் சிறந்த கவனத்தைப் பெற்றது. தரணீருஹ புத்தகத்தில் அவர் எழுதியது தன் வனத்துறை பணி சார்ந்த அனுபவங்களைத்தான் என்றாலும் அதன்வழி வரலாறு, மானுடவியல், தத்துவம், கவிதை, மற்றும் இந்து-பௌத்த ஆன்மீக தளங்களை வாசகன் அறிந்துகொள்ள முடிகிறது.
'இவை வெறும் தொழில் ரீதியான அனுபவ பகிர்வுகள் அல்ல. பல்லுயிரிகளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை மட்டும் பேசுபவை அல்ல. இந்தக் கட்டுரைகளின் உள்ளொழுக்கு வேறு. அது மனிதர்களை மேலும் நுண்ணறிவு கொள்ள, சூழலுடன் ஒத்திசைய வைக்க, ரசனைமிக்கவர்களாக்க முயல்கிறது' என்று இவரது 'தரணீருஹ' புத்தகம் குறித்து மதிப்பிடுகிறார் தெலுங்கின் மூத்த கவிஞர், இலக்கிய விமர்சகர் திரு வாடரேவு சின்னவீரபத்ருடு.
 |
| விக்னேஷ்வரன் |
விக்னேஷ்வரன் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வு மையத்தில் (EFEO) ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பயின்றவர். மொழிகளின் மீது கொண்ட ஈடுபாட்டால் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தென்னிந்திய மொழிகள் நான்கிலும், வடமொழியிலும் நல்ல பரிச்சயமும் திராவிட மொழியியல் ஒப்பாய்வில் பயிற்சியும் உடையவர். மரபிலக்கிய நூல்களைக் கற்பதிலும் ஆராய்வதிலும் ஆர்வம் கொண்ட இவர் கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணத்தை தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்.