Saturday, 29 November 2025

நமது தெய்வம் - அஜிதன்

''மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாடமுடியாதா என்ன? இரு விளையாட்டுகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒன்றை ஒன்று ஆடி போல பெருக்கிக்கொள்கின்றன. அலகிலா ஆடலுடையது தெய்வம். தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டிவைக்கிறது.”

இவ்வாறு முடிகிறது குமரித்துறைவி நாவலுக்கு ஜெயமோகன் எழுதிய சிறு முன்னுரை. 

முடிவிலாது பெருகும் ஆடிப் பிரதிபலிப்புகள். மனிதனும் தெய்வமும் இரு ஆடிகள் எனில் பெருகும் அந்த ஆடல் என்ன?

குமரித்துறைவியை ஒரு பின்நவீனத்துவத்துக்கு பின்னான படைப்பாக நிறுத்துவது இந்த தேடல்தான். இலக்கியத்தின் காலமாற்றப் படிநிலைகள் தோறும் கடவுளின் தோற்றத்தை இவ்வாறு பின் தொடர்வது ஒரு சுவாரஸ்யமான பயணமாக இருக்கும். இப்போது ஒரு வாதத்துக்கு நாம் ஒரு நவீனத்துவ பிரதியை கற்பனை செய்வோம். யூ.ஆர். அனந்தமூர்த்தி எழுதியிருக்க வாய்ப்புள்ள அந்த பிரதி எப்படி இருக்கும்?

ஒரு கிராமத்திற்கு தெய்வம் ஒன்று இறங்கி வருகிறது. அதன் தெய்வீகம் அம்மக்களை வழிபட வைக்கிறது. அது அம்மக்களுக்கு ஆணைகளை பிறப்பிக்கிறது. கொடைகளும் வேள்விகளும் பெருகுகின்றன. ஆனால் நாளடைவில் தெய்வத்துக்கும் மக்களுக்கும் முரண்கள் தோன்றுகின்றன. தெய்வங்கள் கோரும் முடிவற்ற வேள்விகள் மனிதர்களால் இயல்வதல்ல. மனிதர்களால் ஆன வாழ்க்கை தெய்வத்தை சுழித்து கடக்கிறது. வழிபடப்படாத தெய்வம் படிப்படியாக கைவிடப்படுகிறது. இறுதியில் அது வெறும் கற்சிலையாகி நிற்கிறது. 

சிலை என்பது என்ன? பொருளிழந்த ஒரு சொல். இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இந்த கதை துவங்கும் இடம் நவீனத்துவத்துக்கு முந்தைய இறை நம்பிக்கையில் இருந்து. அங்கிருந்து ஒரு மாபெரும் நம்பிக்கையிழப்பை நோக்கிய நகர்வையே நவீனத்துவ இலக்கியம் பதிவு செய்கிறது. எல்லா சிறந்த இலக்கியமும் இத்தகைய நகர்வுகளின் பதிவுகளே. நவீனத்துவத்தின் இந்த பதிவு ஒரே நேரத்தில் அந்த நகர்வின் கசப்பையும் விடுதலையையும் நேர்மையாக உற்று நோக்குகிறது. ஆனால் அத்தகைய ஒரு நகர்வுக்கு பின் என்ன எஞ்சமுடியும்? இயல்பாக இலக்கியம் காலியான சிலைகளை குறித்து பொருளிழந்த வார்த்தைகளால் பேசத் துவங்குகிறது. நவீனத்துவம் தன்னை தானே சென்று அடைத்துக்கொண்ட சிறையும் அதுவே. அங்கிருந்து பின் நவீனத்துவம் பேச ஆரம்பிக்கிறது. 

பின்நவீனத்துவத்தின் நகர்வு நவீனத்துவத்தின் நம்பிக்கையின்மையில் இருந்து துவங்குகிறது எனலாம். இப்போது அதே கிராமத்தின் மக்கள் தங்கள் வாழ்வின் பொருளின்மையை உணர்கிறார்கள். கைவிடப்பட்ட அந்த சிலையை எடுத்து வேள்விகள் அளிக்கத் துவங்குகிறார்கள். அது கேளிக்கை கொண்டாட்டமாக மாறுகிறது. சந்தையும் பொருட்காட்சிகளும் பெருகுகின்றன. நவீனத்துவத்தின் துயரநாடகம் இங்கு ஒரு பின் நவீனத்துவ அபத்த நாடகமாக உருபெறுகிறது. அர்த்தமற்ற காலி குறிப்பான்களின் ஆடல். ஒருவிதத்தில் அது நம்பிக்கையின்மையின் மேலும் ஆழமான அதே நேரத்தில் மேம்போக்கான வெளிப்பாடு. எல்லாமே ஒற்றைபரப்பாக ஆகும்போது ஆழம் மேம்போக்கு என்னும் பிரிவுகள் அர்த்தமிழக்கின்றன.

ஆனால் கதை இங்கு முடிந்துவிடவில்லை. இதன் அடுத்தகட்டம் என ஒன்றை நாம் கற்பனை செய்யமுடியும். முடிவில்லாத கேளிக்கைகளுக்கு நடுவே வேள்விகளால் உயிர்பெற்ற அந்த தெய்வம் இதழ் பிரிக்கிறது. அதன் பேச்சில் இருந்து மீண்டும் சொற்களுக்குள் அர்த்தம் குடியேறுகிறது. பொருட்கள் மீண்டும் மந்திரத்தன்மை (enchanted) அடைகின்றன. 

ஆம், இப்போது நாம் நம் உருவகக் கதையின் முடிவுக்கு வந்து விட்டோம். ஒரு முழு வட்டத்தை பூர்த்தி செய்துவிட்டோம். தெய்வத்தை மீண்டும் கண்டடைந்துவிட்டோம். ஆனால் எல்லா மறு-கண்டடைவும் புத்தம் புதியதும் கூட. அவற்றில் நாம் கடந்துவந்த பாதையின் பொடி மணல் புதிய அனுபவங்களை பிறப்பிக்கின்றன. இப்போது நாம் ”பேசும் கடவுளில்” இருந்து ”பதிலளிக்கும் கடவுளை” வந்தடைந்திருக்கிறோம். உரையாடும் ஒரு கடவுள்.

மேற்கே தத்துவத்திற்குள் கடவுளை சார்ந்த பின்நவீனத்துவத்துக்கு பின்னான இந்த நகர்வை குறித்து தீர்க்க தரிசனத்துடன் பேசிய பெரும் மரபு ஒன்று இருக்கிறது, வில்லியம் ஜேம்ஸ், ஹென்றி பெர்க்ஸன் என துவங்கி, அது ஏ.என். வைட்ஹெட்டின் இயக்க தத்துவத்தில் (process philosophy) உச்சம் பெறுகிறது. 

வைட்ஹெட்டின் முக்கியமான ஒரு வாக்கியத்தில் இருந்து தொடரலாம் என நினைக்கிறேன். தனது “process and reality” (இயக்கமும் யதார்த்தமும்) என்ற இருபதாம் நூற்றண்டின் மிக முக்கியமான பிரதிகளில் ஒன்றில் வைட்ஹெட் இவ்வாறு குறிப்பிடுகிறார்; ”god’s purpose in the creative advance is the evocation of intensities” (”படைப்பு முன்னேற்றத்தில் கடவுளின் பங்கு என்பது தீவிரங்களை தூண்டுதல்”) இங்கு இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். 

முதலாவது ”தீவிரம்” என்னும் பிரயோகம். நன்மை அல்ல, ஒழுங்கு அல்ல வழக்கமாக நாம் கடவுளுக்கு அளிக்கும் எந்த நோக்கமும் அல்ல. தீவிரம். 

தீவிரம் என்பது முக்கியமாக ஒரு அறம் சார்ந்த மதிப்பீடு மட்டும் அல்ல, அது அழகியல் சார்ந்ததும் கூட. வைட்ஹெட்டின் தத்துவத்தில் அது பன்மை, செறிவு, ஒழுக்கு, அழகிய முரண்கள் என பல்வேறு அர்த்தங்களை கொள்கிறது. வைட்ஹெட்டின் மொழியில் அழகிய முரண் என்பதே கூட ஒரு தேவைக்கதிகமான சொல்லமைவு. அவரை பொறுத்தவரை அழகனைத்தும் முரண்களே (contrasts), அதேபோல முரண்கள் அனைத்தும் அழகும் கூட. எதிர்வுகளை முரண்களாக மாற்றி பொருத்துவதே கடவுளின் உன்னத செயல்பாடு. முரண்களே தீவிரம் அமையும் புள்ளிகள். 

கடவுள் அற்ற நிலத்தில் நாம் இழப்பது இந்த தீவிரத்தையே. அல்லது நாத்திகவாதிகளுக்காக நாம் அதை இப்படி சொல்லிப்பார்க்கலாம். தீவிரம் என நாம் உணரும் தருணங்கள் எல்லாவற்றிலும் தெய்வீகம் குடிபுகுகிறது. 

வைட்ஹெட்டின் மேற்சொன்ன வாக்கியத்தில் நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம், அதில் கடவுள் என்பது படைப்பது அல்ல, படைப்பு செயல்பாட்டின் ஒரு எல்லை. இரண்டு ஆடிகளில் ஒன்று. உரையாடலின் போதே அது இயக்கம் பெருகிறது.

இங்கு நாத்திகவாதியின் குரலை நாம் எதிர்கொள்கிறோம். எப்படி மானுடனால் ’சிருஷ்டிக்கப்பட்ட’ கடவுள் பேசமுடியும்? கடவுள் என்பது மானுடத்தின் ஒரு சமூக கட்டமைப்பு என்பதைத்தான் நாம் கட்டுடைத்தாயிற்றே?

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த மிக முக்கியமான மாற்றம் என்பது கட்டுடைப்பில் இருந்து கட்டமைப்புவாதம் நோக்கிய நகர்வு என்கிறார் ப்ரூனோ லத்தோர். பொருட்கள் தன்வயமானவை அல்ல, அவை வெவ்வேறு காரணிகளால் கட்டமைக்கப்படுவன என்று சொல்வது கட்டுடைப்பு என்றால், கட்டமைப்புவாதம் அந்த புள்ளியில் இருந்தே தன் பணியை துவங்குகிறது. அது அந்த கட்டமைப்பின் இயங்கியலை பரிசோதிக்கிறது. எப்படி கட்டமைக்கப்பட்ட ஒன்று ’தன்னிச்சையான’ ஒரு குரலை பெறுகிறது என அது ஆராய்கிறது. சுயம், சுதந்திரம் போன்ற அகவயத்தின் நிபந்தனைகள் எல்லாமே கட்டமைக்கப்பட்டன எனில் கடவுள் எனும் கட்டமைப்பும் அதே இருப்பை, பொருன்மையை பெருகிறது அல்லவா? நம் பொதுவான ஆங்கில வழக்காடலில் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு, “it’s a thing now”. அதன் அர்த்தம் உண்மையில் என்ன? அடிப்படையில் பொருள் என்பது மற்றொரு புற விளைவை உருவாக்கவல்லது. அவ்வாறு புற விளைவை உருவாக்கும் அனைத்தும் பொருட்களே. அவை ஒருமை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இங்கு அடிப்படை விதியல்ல. இங்கு ஆங்கிலத்தின் thing என்னும் சொல்லுக்கான வேர் எப்படி “கூட்டமைப்பு” என்ற அர்த்தத்தில் இருந்து வந்தது என ப்ரூனோ லத்தோர் பேசுகிறார். எப்படி நாற்காலி ஒரு அர்த்த கூட்டமைப்போ அதே போல கடவுளும் ஒரு அர்த்த கூட்டமைப்பே. இரு நபர்கள் ஒரு சத்தியத்தை செய்துகொள்ளும்போது அது ஒரு ”பொருளாகிறது”. உடனடியாக அங்கு அதற்கென்று ஒரு அற ஆற்றல் வந்துவிடுவதை நாம் காண்கிறோம். அது இருவரும் சேர்ந்து இயற்றியது என்பதால், அது சமூக கட்டமைப்பு என்பதால் அதை இருவரும் சேர்ந்து கைவிட முடிவதில்லை. (இதேதான் இந்த நாவலின் இறுதியிலும் நிகழ்கிறது.)

அப்படியென்றால் ”கட்டமைக்கப்பட்ட” கடவுளும் ’தன்னிச்சையான’ குரலை பெற முடியும். உரையாட முடியும். 

இதற்கு மறுபுறம் மரபான குரல் ஒன்று, “எப்படி கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள் அதனுடன் உரையாட முடியும், அதை மாற்றமுடியும்?” (மாற்றத்தை ஏற்படுத்துவதே உண்மையான உரையாடல்) என கேள்வி எழும்பும் எனில் அதற்கு பதில் என்னவாக இருக்கும்? 

வைட்ஹெட் வேறொரு இடத்தில் மிக எளிமையாக, இவ்வாறு சொல்கிறார். “கடவுளே உலகின் கவி”. இந்த உவமை மரபான ஒன்றுதான் என்றாலும், படைப்புச்செயல்பாட்டை குறித்து நாம் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தால் அதில் சில மரபுவாதிகளுக்கான விடையிருப்பதை காணலாம். ஒரு கவி முழுக்க முழுக்க தன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட, பதில் குரல் எழுப்பாத கதாபாத்திரம் ஒன்றை படைக்கும் போது அது உயிரற்றதாக இருப்பதை காண்கிறோம். உயிருள்ள கதாபாத்திரங்கள் எப்போதும் பதில் குரல் கொடுப்பவை, கவியின் அதிகாரத்திற்கு எதிர்ப்பை அளிப்பவை, கவியுடன் உரையாடுபவை. தடையில்லா அதிகாரத்துடன் படைக்கும் கவி உயிரற்ற கதாபாத்திரங்களை படைக்கிறான். உயிரற்ற கதாபாத்திரங்களை படைக்கும் கவி தானும் இறக்கிறான். 

சிலை வடிக்கும் சிற்பி எவ்வளவு வினையாற்றுபவனாக இருக்கிறானோ அதேயளவு சிற்பத்தின் கோரிக்கைக்கு வினைப்படுபவனாகவும் இருக்கிறான். கடவுள் மனிதனால் மாற்றப்படுவதில்லை என கூறுபவர்கள் இங்கு பல சமயம் கடவுளின் குரலாக ஒலிக்கும் அடிப்படைவாத போலிக்குரலாளர்களாகவே இருக்கிறார்கள். 

அப்படியென்றால் கடவுளுக்கும் மனிதனுக்குமான உண்மையான உரையாடல் ஒன்று இருக்க முடியும். அதுவே இரு ஆடிகளின் பிம்ப பெருக்காக உலகை நிறைக்கிறது. படைப்பூக்கத்தின் இந்த பிம்ப பெருக்கில் முதல் குரல் எழுப்பியது யார் என தேடுவது ஒரு வகையில் பொருளற்றது. அதில் ஆத்திகவாதிகளும் நாத்திகவாதிகளும் சென்று தலை உடைத்துக் கொள்ளட்டும். இங்கு நாம் யதார்த்தவாதிகளாக மண்ணில் நிற்போம். மானுட குலத்துடன் ஓயாமல் உரையாடும் உச்சம் ஒன்று உள்ளது என்பதை உணர்வோம். அது நிலையானது அல்ல, எனில் தேங்கிவிடும். மாறிக்கொண்டே இருப்பதுமல்ல, எனில் வலுவிழக்கும். நிலைத்தும் உருமாறியும் அது நம்முடன் தன் ஆடலை நிகழ்த்துகிறது. கருணையும் நீதியும் அதன் இருபக்கங்கள்.

***********

குமரித்துறைவியை வாசிப்பவர்கள் யாரும் தவிர்க்கமுடியாது உணர்வது அதன் உணர்வுத்தீவிரத்தையே. அவ்வகையில் உணர்வுபூர்வமாகவே அது தன் தரிசனத்தை முதன்மையாக கடத்துகிறது. 

கதை துவங்குவது ஒரு நவீனத்துவ தளத்தில் இருந்துதான். மிக துல்லியமான ஒரு வரலாற்று காலகட்டத்தில், முழுக்க அந்த சூழலால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சம்பவத்தொடர்ச்சியால் மீனா‌க்ஷியின் சிலை (இங்கு அது சிலை) வேணாட்டுக்கு வந்து சேர்கிறது. புராணத்தின் அகாலத்திற்கு எதிராக ஒரு வரலாற்று கால புள்ளியை கதை நிறுவுகிறது. அந்த காலப்பொருன்மையில் இருந்து காலம்கடந்த ஒன்றை நோக்கிய உரையாடலே கதையின் சாரம். கதையின் அடிப்படை பிரச்சனை எழுந்தவுடன் அதன் பதிலாக ஒரு புராண புத்துருவாக்கத்தை செய்வது என்ற தீர்வை கொண்டு கதை நகர்கிறது.

தென்னிந்திய இந்து புராண மரபில் மீனாக்ஷி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் என்பது மானுட திருமண பந்தங்களுக்கெல்லாம் அதிகாரம் தருவதாகவும், சான்று அளிப்பதாகவும் கொள்ளப்படுவது என்றால், இங்கு அதுவே தலை கீழாக்கப்படுகிறது. மானுடர்கள் சேர்ந்து அந்த தெய்வீக திருமணத்தை இங்கு நடத்திவைக்கிறார்கள்.

ஆனால் குமரித்துறைவி முதன்மையாக ஒரு நவீன இலக்கிய படைப்பாக நிலைபெறுவது அந்த கதைக்களம் தன்னுள்ளே கொண்டுள்ள நகைமுரணால்தான். கதையின் உச்ச நாடக தருணத்திலும் அதன் மையத்தில் இருப்பது ஒரு சிலை என்னும் அறிதல் நமக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அல்லது ஒரு படி மேலாக, அந்த நகைமுரணே இங்கு உச்ச நாடகமாக மாறுகிறது. நவீனத்துவத்தின் விரக்தியோ, பின்நவீனத்துவத்தின் எள்ளாலோ அங்கில்லை. மாறாக நகைமுரண் மூலமே இங்கு உணர்வுத்தீவிரங்கள் மீட்டளிக்கப்படுகின்றன. கதை நெடுக ஆசிரியர் தன் நடையில் செயப்பாட்டுவினையின் மூலம் அதை ஒரு சிலை என நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். கண்முன்னே நாம் அன்புடன் பேணிக்காத்த ஒவ்வொன்றும் மிக வேகமாக வெற்று சிலைகளாக உருமாறிக்கொண்டிருக்கும் இந்த நவீன சூழலில், ஒரு இலக்கிய படைப்பு சிலை ஒன்று உயிர்பெற்று எழுவதை கண்முன்னே நிகழ்த்திக்காட்டுகிறது. மேலும், உயிர்பெற்ற அந்த சிலை தெய்வமாக மாறும் தருணமே கதையின் இறுதியுச்சமாக இருக்கிறது.

எளிமையான ஒரு கதைக்கருவிதான் இங்கு செயல்படுகிறது. கதைசொல்லி கதையின் இறுதிக்கட்டத்தில் கடவுளை சான்றாக கொண்டு தன் தலையை ஈடாக வைத்து ஒரு சத்தியத்தை செய்கிறான். அது செய்த கணமே அவன் அறிவான், அது தன்னையும் அதை கோரியவனையும் மீறியது என்று. ஆட்டத்தின் விதிகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. பகடைக்காய்களை கடவுளிடம் அளித்துவிட்டு நாயகன் காத்திருக்கிறான். 

தாயம் அவனை தோற்கடிக்கிறது. ஒவ்வொரு சிறு ஏற்பாடாக அவன் கச்சிதமாக நடத்திமுடிக்க நினைத்த அந்த மாபெரும் நிகழ்வு அந்த சிறிய ஒரு மானுடப்பிழையால் பிறழ்கிறது. எது சத்தியம் செய்யப்பட்டதோ அது நிகழ்ந்தாக வேண்டும். சத்தியத்தை கோரியவன் கூட எல்லாவற்றையும் கொடுங்கனவென்று கூறி கைவிடக் கோருகிறான். ஆனால் அது கடவுளை சான்றாக வைத்து ஆடிய விளையாட்டு, கடவுளுடன் ஆடிய விளையாட்டு. மறுபுறம் அவன் வைத்தது அவனது தலையை. கருணையற்ற நீதியின் முன் அவன் மண்டியிடவேண்டிய தருணம்.

கதையில் தெய்வம் பேசுவது அங்குதான். ஒரு மகத்தான திருப்பத்தின் மூலம் மானுடப்பிழை தெய்வீக குறுக்கீடாக மாறுகிறது. ஒரு கிரேக்க நாடகத்தின் ”டேயுஸ் எக்ஸ் மஷினா”. இயந்திர இயக்கத்தில் கடவுள் புகுந்தது போல எல்லாம் தலைகீழாக மாறுகிறது. அதுவரை பிழையில்லாது இருந்தது பிழையாகவும், அதுவரை பிழையாக இருந்தது பூரணமும் மங்கலமுமாக உருமாறுகிறது. பகடை காய்களை மாற்றவில்லை, ஆடலின் விதியை மாற்றுகிறது கடவுள். மானுடனின் அத்தனை மகத்தான இக்கட்டுகளிலும் கோடுகளை அழித்து விதிகளை மாற்றும் பெரும் கருணை.

கதையில் இங்குதான் உரையாடல் உச்சம் பெருகிறது. தெய்வமும் மனிதமும், செயலும் செய்விக்கப்படுதலும், நீதியும் கருணையும் எல்லாம் இடம் மாறுகின்றன. இத்தகைய தருணங்களையே படைப்பூக்கம் என்கிறோம். உலகின் வரலாறு எல்லாம் படைப்பூக்கத்தின் தருணங்களாலேயே எண்ணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றிலும் தெய்வத்துக்கும் மனிதனுக்குமான ஆடல் இருக்கிறது. அது ஒரே நேரத்தில் ஒவ்வொரு மனிதனுடனும், ஒத்துமொத்த மானுடத்துடனும் தன்னை நிகழ்த்துகிறது. மானுடன் குறிகொள்ளும் உச்சம் எதுவும் நிலையானது அல்ல, ஒற்றைபடையானது அல்ல, அதிகார செலுத்தல்கள் அல்ல. அது உச்சம் என்பதாலேயே மாற்றம் கொள்வது, பன்மையானது, கருணை கொண்டது. தளர்ந்து நாம் அமரும்போது சற்று தழைந்து கீழிறங்கும் கடவுள் அது.

திறந்த, சுதந்திரமான, முடிவில்லா படைப்பூக்கம் பிறப்பிக்கும் ஒரு கடவுள்.

உலகின் உயிர்களனைத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்ட கருணைமிகு தெய்வம்!

அஜிதன்

photo courtesy: Krishna for today Keshav

அஜிதன் தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். மேலையிசை, தத்துவம் ஆகியவற்றை கற்பிப்பவர். முழுமையறிவு அமைப்பு சார்பில் மேலத்தத்துவம், மேலை இசை வகுப்புகளை நடத்தி வருகிறார்.