அறிவியல் தத்துவம்
அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் - பகுதி 2 - சமீர் ஒகாஸா
அறிவியல் மதிப்பீடு (Value) அற்றதா?
சிலநேரங்களில் அறிவியல் அறிவு அறமற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஏறக்குறைய அனைவரும் இதை ஒத்துக்கொள்வார்கள். அணு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்தல் இதற்கு உதாரணம். ஆனால் அறத்தின் அடிப்படையில் அறிவியல் அறிவு கண்டிக்கத்தக்கது என்பதை இது போன்ற செயல்பாடுகள் காட்டவில்லை. அந்த அறிவை எடுத்துக்கொண்ட பயன்பாடு தான் அறமற்றது. அறிவியல் அல்லது அறிவியல்-சார் அறிவு அறமுடையதா, அறமற்றதா என பேசுவது பொருளற்றது என பல தத்துவவாதிகள் சொல்கிறார்கள். அறிவியல் என்பது மாறாவுண்மைகளுடன் (fact) சம்மந்தப்பட்டது. அறிவியலுக்குள் இருக்கும் மாறாவுண்மைகளுக்கு அறம்சார் முக்கியத்துவமும் எதுவும் கிடையாது. அந்த மாறாவுண்மைகளை கொண்டு நாம் செய்வது சரியா, தவறா, நியாயமானதா, நியாயமற்றதா என பார்ப்பதே முக்கியம். இந்த பார்வையின் படி, அறிவியல் அதன் அடிப்படையிலேயே மதிப்பீடுகளற்ற ஒரு செயல்பாடு. அதன் வேலை உலகைப் பற்றிய தகவல்களை தருவது மட்டுமே. அந்த தகவல்களைக் கொண்டு சமூகம் என்ன செய்கிறது என்பது வேறுவிஷயம்.
அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் - பகுதி 1 - சமீர் ஒகாஸா
அறிவியலை நல்ல விஷயம் என்று பலர் கருதுகின்றனர். எனென்றால் அதுதான் நமக்கு மின்சாரம், சுத்தமான குடிநீர், பென்சிலீன், கருத்தடை, விமானப் பயணம் போன்ற பலவற்றை கொடுத்தது. இவை அனைத்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் மனித இனத்திற்கு பயனளிக்கின்றன. மனித நலனுக்கு இதுபோன்ற பங்களிப்புகளை கொடுத்த போதிலும் அறிவியல் அதன் மீதான விமர்சனங்களைக் கொண்டிராமல் இல்லை. சமூகங்கள் கலைக்கு செலவளிக்கும் பணத்தை விட அறிவியலுக்கு அதிக அளவு செலவு செய்வதாக சிலர் வாதிடுகிறார்கள். வேறு சிலர், பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்தல் போன்ற அறிவியல் கொடுத்த தொழில்நுட்பத் திறன்கள் இல்லாமல் இருந்திருந்தால் நாம் நன்றாக இருந்திருப்போம் என்கிறார்கள். அறிவியல் அதன் இயல்பிலேயே ஆண் தன்மைக்கு சார்பானது என சில பெண்ணியவாதிகள் சொல்கிறார்கள். மத நம்பிக்கை கொண்டவர்கள் தங்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்கும் ஒன்றாக அறிவியலை கருதுகின்றனர். மேலும் உலகில் உள்ள பல பழங்குடி பண்பாடுகளின் நம்பிக்கை மற்றும் அறிவை விட மேற்கத்திய அறிவியல் தன்னை உயர்வாக கருதுவதால் மானுடவியளாலர்கள் அதை ஆணவமுடையது என குற்றம் சாட்டுகின்றனர். இவை மட்டுமே அறிவியல் மீதான விமர்சனங்கள் அல்ல. எனினும் இந்த பகுதியில் தத்துவ கவனம் பெற்ற மூன்று விமர்சனங்களை மட்டும் நாம் பார்க்கப் போகிறோம்.
தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 3: உளவியல் - சமீர் ஒகாஸா
மனம் கூறுகளால் ஆனதா (modular)?
![]() |
| நோம் சாம்ஸ்கி |
மனிதர்களால் பல்வேறு அறிதகு பணிகளை (Cognitive tasks) செய்ய முடியும். அப்பணிகள் பெரும்பாலும் குறைந்த பிரக்ஞையுடனேயே செய்யப்படுகின்றன. அறிதகு பணி என சொல்வது குறுக்கெழுத்துப் புதிர்களை தீர்ப்பது போன்ற செயல்கள் மட்டும் அல்ல, சாதாரணமான செயல்களான பாதையை பாதுகாப்பாக கடப்பது, ஒரு பந்தைப் பிடிப்பது, வேறு மனிதர்கள் சொல்வதைப் புரிந்துகொள்வது, முகங்களை அடையாளம் காண்பது போன்ற பலவற்றையும் குறிக்கிறது. இத்தகைய பணிகள் நமக்கு மிகவும் பரிச்சயமானவையாக இருந்தாலும் அவற்றை செய்யும் நம்முடைய திறன் நிஜமாகவே சிறப்பு வாய்ந்ததுதான். இது போன்ற பணிகளை ஒரு சராசரி மனிதர் செய்யும் அளவுக்கு எந்திரமனிதனால் செய்ய இயலாது. எப்படியோ நம்முடைய மூளை அத்தகைய சிக்கலான அறிதகு பணிகளை குறைந்த ஆற்றலைக் கொண்டு நம்மை செய்ய வைக்கிறது. இவற்றை எப்படி செய்ய முடிகிறது என விளக்க முயற்சிப்பதே அறிதகு உளவியல் (அல்லது அறிதல்சார் உளவியல் - cognitive psychology) துறையின் முக்கியமான பகுதி.
தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 2: உயிரியல் - சமீர் ஒகாஸா
உயிரியல் சிற்றினங்கள் (Species) என்றால் என்ன?
அறிவியலாளர்கள் தாங்கள் ஆராயும் பொருள்களை வகைப்படுத்த பொதுவாக விரும்புவார்கள். நிலவியலாளர்கள் பாறைகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பொருத்து அவற்றை அனற்பாறை (igneous), படிவுப்பாறை (sedimentary), அல்லது உருமாற்றப்பாறை (metamorphic) என வகைப்படுத்துகின்றனர். பொருளியலாளர்கள் வரிவிதிப்பை அதன் கடினத்தன்மையைப் பொருத்து சரிவிகித வரி (proportional), வளர்விகித வரி (progressive) அல்லது தேய்வுவீத வரி (regressive) என வகைப்படுத்துகின்றனர். வகைப்படுத்தலின் முக்கிய செயல்பாடு தகவலை தெரிவிப்பது. வேதியியலாளர் ஒரு பொருளை உலோகம் என்று சொன்னாலே அது அப்பொருளின் பெரும்பாலான பண்புகளை நமக்கு தெரியப்படுத்திவிடும். அடிப்படையிலேயே பொருள்கள் பல வழிகளில் வகைப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. இதை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தலில் சில சுவாரஸ்யமான தத்துவ சிக்கல்கள் எழும்புகின்றன. உதாரணமாக, வகைப்படுத்தல் முறைகளில் ஒன்றை எப்படி தெரிவு செய்ய வேண்டும்? வகைப்படுத்த ஒரு ‘சரியான’ வழிமுறை உள்ளதா? இல்லை அனைத்து வகைப்படுத்தல் வழிமுறைகளும் எதேச்சையானது தானா? போன்றவை. இக்கேள்விகள் உயிரியல் வகைப்பாடு (Classification) அல்லது வகையியல் (taxonomy) சூழலில் அதிக கவனம் பெறுகின்றன. இதையே இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.
| கார்ல் லின்னியஸ் 1707-78 |
தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 1: இயற்பியல் - சமீர் ஒகாஸா
இதுவரை நாம் பார்த்த அனுமானம், விளக்கம், ரியலிசம் மற்றும் அறிவியல் மாற்றங்கள் ஆகியவை ‘அறிவியலின் பொது தத்துவங்களை’ சேர்ந்தது. இவை வேதியியல் அல்லது நிலவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமல்லாமல் பொதுவாக உள்ள அறிவியல் ஆய்வுகளின் இயல்பு மீது கவனத்தை செலுத்துகின்றன. எனினும் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த சுவாரஸ்யமான தத்துவார்த்த கேள்விகளும் உள்ளன. அவை ’தனி-அறிவியல்களின் (Special sciences) தத்துவம்’ எனப்படுகின்றன. இக்கேள்விகள் பாதி தத்துவார்த்தமாகவும், பாதி புறவய-உண்மைகளையும் (empirical facts) சார்ந்தது. இதுவே அவற்றை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குகின்றன. இப்பகுதியில் இதுபோன்ற மூன்று கேள்விகளை ஆராய்ந்து பார்க்கலாம், இயற்பியல், உயிரியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கேள்வியைப் பார்க்கலாம்.
![]() |
| நியூட்டன் மற்றும் லீப்னிஸ் |
அறிவியல் மாற்றங்களும் அறிவியல் புரட்சிகளும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா
ஒப்பிடவியலாமை (Incommensurability) மற்றும் தரவின் கோட்பாட்டு-சுமை (theory-ladenness of data)
குண் தான் முன்வைத்த கூற்றுகளுக்கு இரண்டு முக்கிய தத்துவார்த்தமான வாதங்களை முன்வைக்கிறார். முதலாவது, போட்டியிடும் கருத்தோட்டங்கள் ஒன்றுக்கொன்று ’ஒப்பிடவியலாதவை’ என சொல்கிறார். இந்த கருத்தைப் புரிந்துகொள்ள நாம் குண் சொல்லிய ஒரு விஷயத்தை நினைவில்கொள்ள வேண்டும்: ’ஒரு அறிவியலாளரின் கருத்தோட்டமே அவரின் ஒட்டுமொத்த உலகப்பார்வையையும் தீர்மானிக்கிறது, அவர் அந்த கருத்தோட்டத்தின் வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார்’. ஒரு அறிவியல் புரட்சியில் தற்போதுள்ள ஒரு கருத்தோட்டம் புதிய ஒன்றினால் மாற்றப்பட்டால் இதுவரை அறிவியலாளர்கள் உலகைப் புரிந்துகொள்ள பயன்படுத்திய முழு கருத்தியல் கட்டமைப்பையும் கைவிட நேரிடும். எனவே ’அறிவியலாளர்கள் ஒரு கருத்தோட்டத்தின் மாற்றத்திற்கு முன்பு ஒரு உலகிலும், மாற்றத்திற்குப் பின்பு வேறொரு உலகிலும் வாழ்கின்றனர்’ என உருவகப்படுத்தி சொல்கிறார் குண். ஒப்பிடவியலாமை என்ற கருத்து ஒன்றுக்கொன்று எந்தவொரு நேரடியான ஒப்பீடையும் செய்ய இயலாத மிகவும் வேறுபட்ட இரு கருத்தோட்டங்களைக் குறிப்பது. அவைகளுக்கிடையே தொடர்புபடுத்திக்கொள்ள எந்தவொரு பொது மொழியும் இருக்காது. இதன் விளைவாக வெவ்வேறு கருத்தோட்டத்தை பின்பற்றுபவர்கள் தங்களின் பார்வைகளுக்கிடையே ஒரு முழுமையான தொடர்பை ஏற்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளனர் என்கிறார் குண்.
அறிவியல் மாற்றங்களும் அறிவியல் புரட்சிகளும்: பகுதி 1 - சமீர் ஒகாஸா
அறிவியல் கோட்பாடுகள் மிக வேகமாக மாறி வருகின்றன. உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு அறிவியல் துறையை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள பல முக்கியமான கோட்பாடுகள் 50 வருடங்களுக்கு முன்பிருந்த கோட்பாடுகளிலிருந்து வேறுபட்டு காணப்படும், 100 வருடங்களுக்கு முன்பிருந்த கோட்பாடுகளிலிருந்து முழுவதுமாக வேறுபட்டிருக்கும். வேறு அறிவுத் தளங்களுடன் ஒப்பிடும் போது அறிவியல் மிக வேகமாக மாறிவரும் துறை. இந்த மாற்றத்தை மையமாகக் கொண்டு பல சுவாரஸ்யமான தத்துவக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன: காலப்போக்கில் அறிவியல் கருத்துக்கள் மாற்றமடைவதில் தெளிவான வடிவம் ஏதாவது உள்ளதா? அறிவியலாளர்கள் தங்களின் தற்போதைய கோட்பாடை புதிய கோட்பாடுக்காக கைவிடும் போது அதை எப்படி விளக்கிக்கொள்வது? புதிதாக வந்த கோட்பாடுகள் அதற்கு முன்பிருந்த கோட்பாடுகளை விட புறவயமாக சிறந்தவையா?
![]() |
| தாமஸ் குண் |
அறிவியல் ரியலிசமும், ரியலிச மறுப்பும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா
அவதானிக்க இயல்பவை / இயலாதவை வேறுபாடு
ரியலிசம் மற்றும் ரியலிச மறுப்புவாதத்திற்கு இடையேயான மைய விவாதம் என்பது எவை அவதானிக்க இயல்பவை மற்றும் எவை அவதானிக்க இயலாதவை என்பதற்கு இடையே உள்ள வேறுபாடே. இதுவரை இவ்வேறுபாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். உதாரணமாக, நாற்காலி, மேஜை போன்றவை அவதானிக்க இயல்பவை, அணுக்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் அவதானிக்க இயலாதவை. ஆனால் இவ்வேறுபாடு உண்மையிலேயே தத்துவார்த்தமாக சிக்கலானது. ’அடிப்படையிலேயே அவதானிக்க இயல்பவைக்கும் இயலாதவைக்குமான வேறுபாட்டை வரையறுக்க முடியாது’ என்பது ரியலிசம் முன்வைக்கும் முக்கியமான வாதங்களில் ஒன்று.
அறிவியல் ரியலிசமும், ரியலிச மறுப்பும்: பகுதி 1 - சமீர் ஒகாஸா
தத்துவத்தில் புறயதார்த்தவாதம் (Realism) மற்றும் கருத்தியல்வாதம் (Idealism) என்ற இரு எதிர் சிந்தனை மரபுகளுக்கு இடையே புற உலகின் இயல்பைப் பற்றிய விவாதம் பலகாலமாக நடந்துவருகிறது. புறவுலகம் மனிதர்களுடைய சிந்தனையையும் பார்வையையும் சாராதது என புறயதார்த்தவாதம் சொல்கிறது. இதை கருத்தியல்வாதம் நிராகரிக்கிறது. புறவுலகம் மனிதர்களுடைய பிரக்ஞையை சார்ந்தது என்கிறது. புறயதார்த்தவாதம் கருத்தியல்வாதத்தை விட மிகவும் நம்பகத்தன்மை கொண்டதாக தெரியலாம். ’உலகைப் பற்றிய உண்மைகள் புறவயமாக வெளியே உள்ளன, அவை நம்மால் கண்டறியப்படுவதற்காக காத்திருக்கின்றன’ என்ற பொதுச்சூழலின் பார்வைக்கு புறயதார்த்தவாதம் நன்கு பொருந்துகிறது. கருத்தியல்வாதம் பற்றி முதன்முதலில் கேள்விப்படும் போது அதுவொரு எளிய விளையாட்டுத்தனமான கருத்தாகவே தெரியும். ஏனென்றால் மனித இனமே அழிந்துவிட்டாலும் மரங்கள் பாறைகள் போன்றவை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அப்படியென்றால் ‘அவற்றின் இருப்பு எப்படி மனித மனதை சார்ந்ததாக இருக்கும்’ என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் இவ்விரு தரப்புகளுக்கும் இடையிலுள்ள பிரச்சனை மிகமிக நுட்பமானது. இன்றும் தத்துவவாதிகளிடையே தொடர்ந்து விவாதிகப்பட்டு வருவது. இந்த புறயதார்த்தவாத-கருத்தியல்வாத பிரச்சனை தத்துவத்தில் மீபொருண்மையியல் (metaphysics) பகுதியைச் சேர்ந்தது. இதற்கு அறிவியலுடன் எந்த தொடர்பும் கிடையாது.
அறிவியலில் காரணகாரியம் - சமீர் ஒகாஸா
காரணகாரிய அனுமானம் (Causal inference)
இயற்கை நிகழ்வுகளுக்கு காரணத்தைக் கண்டறிவது அறிவியலின் முக்கியமான இலக்குகளில் ஒன்று. இந்த தேடல் பலசமயம் வெற்றியடைந்துள்ளது. உதாரணமாக, ’உலக வெப்ப நிலை மாற்றத்துக்கு காரணம் புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது’ என்பதை பருவநிலை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்; ’ஒரு திரவத்தை வெப்பபடுத்தினால் அது வாயுவாக மாறும்’ என்பதை வேதியியலாளர்களும்; ’MMR தடுப்பூசி ஆட்டிசத்தை (autism) தடுக்கும்’ என்பதை தொற்றுநோயியல் (epidemiology) வல்லுனர்களும் கண்டறிந்தனர். காரணகாரிய தொடர்புகள் நேரடியாக அவதானிக்கக் கூடியவை அல்ல (டேவிட் ஹுயுமின் வாதம்) என்பதால் இத்தகைய அறிவியல் அறிதல்கள் கண்டிப்பாக அனுமானத்தின் முடிவுகளாகத்தான் இருக்க வேண்டும். அந்த அனுமானமே காரணகாரிய அனுமானம். நாம் சென்ற பகுதியில் பகுத்தல் மற்றும் தொகுத்தல் அனுமானங்களைப் பார்த்தோம். காரணகாரிய அனுமானம் எப்படி செயல்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
![]() |
| டேவிட் ஹுயும் |
அறிவியல் விளக்கங்கள் - சமீர் ஒகாஸா
அறிவியலின் முக்கியமான இலக்குகளில் ஒன்று நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விளக்குவது. சில நேரங்களில் அறிவியல் விளக்கங்களை நடைமுறை பயன்பாட்டிற்காக கேட்கிறோம். உதாரணமாக, ஒசோன் படலம் மிக வேகமாக சுருங்குகிறது, அதைத் தடுக்க எதாவது செய்யவேண்டும். எனவே அது எதனால் சுருங்குகிறது என்பதற்கு விளக்கத்தைக் கேட்கிறோம். மற்ற சமயங்களில் நாம் இப்பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிவதில் உள்ள ஆர்வத்தினால் கேட்கிறோம். இந்த இருவித கேள்விகள்தான் அறிவியல் விளக்கங்களுக்கான தேடலை காலங்காலமாகத் தூண்டுகின்றன.
![]() |
| Carl Hempel |
அறிவியல் அனுமானங்கள் - சமீர் ஒகாஸா
நாம் நம்பமுடியாத விஷயங்கள் பலவற்றை அறிவியலாளர்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணமாக, நாம் சிம்பன்சிகளுக்கு மிக நெருக்கமான உயிரினம் என உயிரியலாளர்கள் சொல்கின்றனர். நிலவியலாளர்கள் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்கள் முற்காலத்தில் ஒன்றாக இருந்தன என்கின்றனர். இந்த பிரபஞ்சம் விரிவடைகிறது என்கின்றனர் பிரபஞ்சவியலாளர்கள். ஆனால் யாரும் பிரபஞ்சம் விரிவடைவதையோ, ஒரு கண்டம் மற்றொரு கண்டத்தில் இருந்து பிரிந்ததையோ, ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினம் பரிணாமம் அடைவதையோ நேரில் பார்த்தது கிடையாது. பின் எப்படி அறிவியலாளர்கள் இது போன்ற முடிவுகளுக்கு வருகின்றனர்? இதற்கான பதில், அனுமானம் (Inference or reasoning) மூலமாகவே அறிவியலாளர்கள் இதுபோன்ற நம்பிக்கைகளுக்கு வருகின்றனர். அனுமானத்தில் இருவகைகள் உள்ளன - பகுத்தல் அனுமானம், தொகுத்தல் அனுமானம். இவைகளின் இயல்புகள் என்ன?
![]() |
| டேவிட் ஹுயும் |
அறிவியல் தத்துவம் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா
அறிவியல்-தத்துவத்தின் முதன்மையான பணி பல்வேறுபட்ட அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சி முறைகளை பகுப்பாய்வு செய்வது. இந்த பணி அறிவியலாளர்களிடம் அல்லாமல் ஏன் தத்துவவாதிகளிடம் விழுந்தது? தத்துவார்த்த கண்ணோட்டத்தின் மூலமே அறிவியல் ஆய்வு முறையில் மறைமுகமாக இருக்கும் ஊகங்களை வெளிக்கொண்டுவர முடியும். அந்த ஊகங்கள் அறிவியளாலர்களிடையே வெளிப்படையாக விவாதிக்கபடுவதில்லை. இதை விரிவாக பார்க்க அறிவியல் பரிசோதனை முறையை கவனியுங்கள். அறிவியலாளர் ஒருவர் ஒரு பரிசோதனை வழியாக முடிவு ஒன்றை பெறுகிறார் எனக் கொள்வோம். அவர் அதே பரிசோதனையை மேலும் பல முறை திரும்ப செய்து அதே முடிவை எட்டுகிறார். பிறகு தனது சோதனையை நிறுத்திக்கொண்டு, மிகச்சரியாக இதே நிலையில் அந்த பரிசோதனையை எத்தனை முறை திரும்ப செய்தாலும் அந்த முடிவையே அடைவோம் என்ற உறுதிக்கு வருகிறார். இந்த ஊகம் தெளிவானதாக இருந்தாலும், தத்துவவாதியாக இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இந்த பரிசோதனையை எதிர்காலத்தில் செய்தாலும் அதே முடிவையே கொடுக்கும் என ஏன் ஊகிக்க வேண்டும்? அந்த முடிவு சரியானது என்று நாம் எப்படி தெரிந்துகொள்வது? இது போன்ற விசித்திரமான கேள்விகளை கொண்டு குழம்பிக்கொள்ள அறிவியலாளர்கள் நேரத்தை ஒதுக்கமாட்டார்கள். எனென்றால் அவர்களுக்கு இதை விட சிறப்பாக செய்ய பல விஷயங்கள் உள்ளன.
| கார்ல் பாப்பர் |
அறிவியல் என்றால் என்ன? - சமீர் ஒகாஸா
அறிவியல் என்றால் என்ன? பதில் சொல்வதற்கு இது எளிய கேள்வியாக தோன்றலாம். ஏனென்றால் இன்று அனைவருக்கும் இயற்பியல், வேதியியல், விலங்கியல் போன்றவை அறிவியல் துறைகள் என தெரியும். அதேசமயம் இசை, கலை, இறையியல் போன்றவை அறிவியல் துறைகளுக்குள் வராது என்றும் தெரியும். ஆனால் தத்துவவாதியாக இருந்து கொண்டு அறிவியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு நாம் இது போன்ற ஒரு பதிலை எதிர்பார்க்கமாட்டோம். இங்கு நாம் பொதுவாக அறிவியல் என சொல்லப்படும் செயல்பாடுகளின் பட்டியலை கேட்கவில்லை. நாம் கேட்பது இந்த பட்டியலிலுள்ள அனைத்திற்கும் பொதுவாக என்ன அம்சம் உள்ளது? எது அவற்றை அறிவியலாக ஆக்குகிறது? என்பது. இதைப் புரிந்து கொண்டால் நம்முடைய கேள்வி அவ்வளவு எளிமையானதல்ல என்பது தெரியும்.
![]() |
| நிகோலஸ் கோபெர்நிகஸ் |
ஆனால் இன்னமும் கூட நீங்கள் இந்த கேள்வி எளிமையானது தானே என கருதலாம். அறிவியல் என்பது நாம் வாழ்கின்ற உலகத்தை புரிந்து கொள்ளவும், விளக்கவும் கணிப்பதற்குமான முயற்சிகள்தானே என நீங்கள் பதில் சொல்லலாம். இது ஒரு நியாயமான பதில் தான். இருந்தாலும் முழுமையான பதிலல்ல. மதங்கள்கூட இந்த உலகத்தை புரிந்துகொள்ளவும் விளக்கவும் முயல்கின்றன, ஆனால் நாம் அதை அறிவியல் துறையாக எடுத்துக்கொள்வதில்லையே. இதேபோல ஜோதிடமும் எதிர்காலத்தை கணிக்க முயல்கிறது. இருந்தும் பலர் இதை அறிவியல் செயல்பாடாக ஏற்றுக்கொள்வதில்லை. வரலாறுகூட அறிவியலாக கருதப்படுவதில்லை. வரலாற்று ஆய்வாளர்கள் சென்ற காலங்களில் நிகழ்ந்ததைப் புரிந்துகொள்ளவும் விளக்கவும் செய்கிறார்கள். ஆனால் வரலாறு கலைத்துறையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளது, அறிவியலாக அல்ல. ஆகவே பல தத்துவக் கேள்விகளைப் போலவே ‘அறிவியல் என்றால் என்ன?’ என்ற கேள்வியும் முதலில் எளிமையாக தெரிந்தாலும் கடினமான ஒன்றுதான்.
அறிவியலின் தனித்துவமான அம்சம் அறிவியலாளர்கள் ஆய்வு செய்யப் பயன்படுத்தும் முறைகளில் உள்ளது. பல அறிவியல் துறைகள் தனித்துவமாக ஆய்வு முறைகளைக் கொண்டுள்ளன. அவற்றை அறிவியல் அல்லாத மற்ற துறைகளில் பார்க்கமுடியது. நன்கு தெரிந்த உதாரணம் ’பரிசோதனை’ (experiment). ஆய்வுகளில் பரிசோதனைகளைப் பயன்படுத்தியதே வரலாற்றுரீதியாக நவீன அறிவியல் முன்னேற்றத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அனைத்து அறிவியல் துறைகளும் பரிசோதனைகளை செய்யக் கூடியதல்ல. உதாரணமாக வானியலாளர்களால் விண் மீது தங்களது பரிசோதினைகளை செய்ய முடியாது. அதற்கு பதிலாக அவை அவதானிப்புகளைக் (Observations) கொண்டிருக்கும். இது பல சமூக அறிவியல் துறைகளுக்கும் பொருந்தும். அறிவியலின் மற்றொரு முக்கியமான அம்சம் கோட்பாடுகளைக் கட்டமைப்பது. அறிவியலாளர்கள் தங்களது பரிசோதனை முடிவுகளையும் அவதானிப்புகளையும் வெறுமனே பதிவேடுகளில் குறித்து வைத்துக்கொள்வதில்லை. அந்த முடிவுகளை ஒரு பொதுவான கோட்பாடின் மூலம் விளக்குகின்றனர். இது எப்பொழுதுமே எளிமையான ஒன்றாக இருந்ததில்லை. எனினும் இதில் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளும் நிகழ்ந்துள்ளன. அறிவியலாளர்கள் பரிசோதனை, அவதானிப்பு, கோட்பாடைக் கட்டமைத்தல் ஆகியவற்றை கொண்டு எவ்வாறு இயற்கையின் பல ரகசியங்களை கட்டவிழ்க்கின்றனர் என்ற நுட்பத்தை புரிந்துகொள்வதே அறிவியல் தத்துவம் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சினை.
நவீன அறிவியலின் தோற்றம்
இன்றைய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அறிவியல் பெரும்பாலும் வரலாற்று ரீதியாக கற்பிக்கப்படுவதில்லை. பாடநூல்கள் அறிவியல் துறையின் முக்கிய கருத்துக்களை முடிந்தவரை வசதியாக புரிந்துகொள்ளும் வகையில் கொடுக்கின்றன. அந்த கருத்துக்கள் எப்படி கண்டுபிடிக்கப்பட்டன என்பதைப் பற்றி அந்நூல்கள் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் அவை பெரும்பாலும் நெடிய சிக்கலான வரலாற்றைக் கொண்டிருக்கும். கல்வித்துறையின் அணுகுமுறைப்படி இது சரியானது தான். ஆனால் அறிவியல் கருத்துக்கள் எவ்வாறு உருவாகி வந்தன என்ற வரலாற்றை கொஞ்சமாவது தெரிந்திருப்பது அறிவியல் தத்துவவாதிகள் கவனம் செலுத்தும் பிரச்சனைகளை புரிந்துகொள்ள உதவும்.
நவீன அறிவியலின் தோற்றம் ஐரோப்பாவில் அறிவியல் முன்னேற்றம் வேகமாக நடைபெற்ற காலகட்டமான 1500க்கும் 1700க்கும் இடையில் நிகழ்ந்தது. இதுவே அறிவியல் புரட்சி என குறிப்பிடப்படுகிறது. அறிவியல் ஆய்வுகள் பண்டைய காலங்களிலும் அதைத் தொடர்ந்த இடைக்காலத்திலும் கூட நடைபெற்றுள்ளன. அதாவது அறிவியல் புரட்சி அறிவியலே இல்லாத இடத்திலிருந்து புதிதாக முலைக்கவில்லை. பண்டைய கால அறிவியலில் அரிஸ்டாடிலின் நோக்கு ஆதிக்கம் செலுத்தியது. இவர் இயற்பியல், உயிரியல், வானியல், பிரபஞ்சவியல் போன்றவற்றில் விரிவான கோட்பாடுகளை முன்வைத்தவர். ஆனால் இவருடைய கருத்துக்களும் ஆய்வு முறைகளும் ஒரு நவீன அறிவியலாளருக்கு மிகவும் வித்தியாசமாகத் தென்படும். உதாரணமாக இவர் உலகிலுள்ள அனைத்து பொருள்களும் மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு கூறுகளால் ஆனவை என நம்பினார். இந்த நோக்கு நவீன வேதியியல் நமக்கு சொல்லியவைகளுடன் முரண்படுகிறது.
நவீன அறிவியல் உலகநோக்கின் (worldview) முதல் நகர்வு கோபெர்நிக்கன் (Copernican) புரட்சி. நிகோலஸ் கோபெர்நிகஸ் (1473-1543) என்ற போலந்தை சேர்ந்த வானியலாளர் 1542ல் ஒரு நூலை வெளியிட்டார். அந்நூல் அதுவரை ஆதிக்கம் செலுத்திவந்த புவிமையக் கோட்பாட்டை மறுக்கிறது. புவிமையக் கோட்பாடு பிரபஞ்சத்தின் மையமாக நிலையான பூமியை வைத்து சூரியனும் மற்ற கோள்களும் பூமியை சுற்றிவருகின்றன என்கிறது. இதற்கு ப்டோல்மியின் வானியல் என்றும் பெயர். ப்டோல்மி (ptolemy) ஒரு கிரேக்க தத்துவவாதி. அரிஸ்டாடில்வாத பார்வையை அடிப்படையாக கொண்ட இக்கோட்பாடு 1800 வருடங்களாக எந்த எதிர்ப்பையும் சந்திக்காமல் இருந்தது. ஆனால் கோபெர்நிகசிஸ் இதற்கு மாறான ஒன்றை பரிந்துரைத்தார். சூரியன் இந்த பிரபஞ்சத்தின் மையத்தில் நிலையாக உள்ளது, பூமி முதலான கோள்கள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றுகின்றன. இது சூரிய மைய கோட்பாடு. இதன் படி பூமியும் மற்ற கோள்களைப் போலவே வெறும் ஒரு கோள் தான். இதனால் மனிதர்கள் மரபாக பூமியின் மீது வைத்திருந்த தனித்துவமான நிலை இல்லாமலாகிறது. கோபெர்நிக்கசின் கோட்பாடு ஆரம்பத்தில் பல எதிர்ப்புகளை சந்தித்தது. கத்தோலிக்க திருச்சபை இந்த கோட்பாட்டை புனித நூலுக்கு எதிரானதாக எடுத்துக்கொண்டது. இதனால் 1616ல் புவியின் இயக்கம் சார்ந்த நூல்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் அடுத்த நூறு வருடங்களுக்குள் கோபெர்நிகஸ்வாதம் அறிவியலில் மிக முக்கியமான ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டது.
| ஜொன்னெஸ் கெப்ளர் |
| கலிலியோ கலிலி |
கலிலியோவின் பங்களிப்புகளில் மிக நீடித்த பங்களிப்பை கொண்ட துறை வானியல் அல்ல, இயக்கவியல். அதில் இவர் அரிஸ்டாடிலின் கோட்பாடான ’அதிக நிறை கொண்ட பொருள் குறைந்த நிறை கொண்ட பொருளை விட வேகமாக கீழே விழும்’ என்பதை நிராகரித்து இதற்கு நேர்ரெதிரான கோட்பாட்டை முன்வைத்தார். காற்று தடை இல்லாத வெற்றிடத்தில் அனைத்து பொருள்களும் அவற்றின் எடையை பொருட்படுத்தாமல் சமமான வேகத்தில் கீழே விழும் என்றார் (நடைமுறையில் ஒரு பீரங்கி குண்டையும் ஒரு இறகையும் சமமான உயரத்தில் இருந்து கீழே போடும் போது நிச்சயமாக குண்டு தான் முதலில் தரையைத் தொடும். ஆனால் இது காற்று தடையின் காரணமாகவே நிகழ்கிறது என கலிலியோ சொல்கிறார். எந்த தடையும் இல்லாத வெற்றிடத்தில் இவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையை தொடும் என்கிறார்). மேலும் தடையில்லாத இடத்தில் கீழ் நோக்கி விழும் பொருள்கள் ஒரேசீராக முடுக்கமடையும் (Accelerate) என்றார். அதாவது அவற்றின் வேகம் ஒரே சீராக ஒரே சமயம் அதிகரிக்கும். இதுவே கலிலியோவின் தடையில்லா-வீழ்ச்சி விதி (free-fall law). கலிலியோ இந்த விதிக்கு முழுமுற்றான ஆதாரத்தை தரவில்லை என்றாலும் நம்பத்தகுந்த ஆதாரத்தை வழங்கினார். இந்த விதியே இவருடைய இயக்கவியலின் மையத்தை கட்டமைத்தது.
கலிலியோவை முதல் நவீன இயற்பியலாளர் என்கிறார்கள். இவர்தான் முதன்முதலாக பொருள்களின் (Material objects) பண்புகளை வரையறுக்க கணித மொழியைப் பயன்படுத்த முடியும் என காட்டினார். இயற்பியல் மட்டுமல்லாமல் உயிரியல், பொருளியல் போன்ற அறிவியல் துறைகளும், அறிவியல் கோட்பாடுகளும் கணித மொழியையே பயன்படுத்துகின்றன. இன்று இது நமக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் கலிலியோவின் காலத்தில் அப்படியல்ல. கணிதம் முற்றிலும் அருவமான விஷயங்களுடன் தொடர்புடையது, ஆகவே புற யதார்த்தத்தை (physical reality) வரையறுக்க பயன்படாது என்ற எண்ணம் பரவலாக இருந்தது. மேலும் கலிலியோ கருதுகோள்களை பரிசோதனை வழியாக சோதிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தார். நவீன அறிவியலாளருக்கு இதுவும் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவரின் காலத்தில் அறிவை பெருவதற்கான நம்பகமான வழிமுறையாக பரிசோதனைகள் கருதப்படவில்லை. பரிசோதனை வழியாக சோதனை செய்வதற்கு கலிலியோ முக்கியத்துவம் கொடுத்ததே இயற்கையை ஆராய்வதற்கு இன்று வரை தொடரும் புலனறிவு அணுகுமுறையின் (Empirical approach) துவக்கம்.
| ரெனெ டெகார்த்ஸ் |
கலிலியோவிற்கு பின் அறிவியல் புரட்சி வேகமாக முன்னேறியது. 1596 - 1650-ல் வாழ்ந்த ரெனெ டெகார்த்ஸ் (Rene Descartes) என்ற பிரான்சு தத்துவவாதி-அறிவியலாளர் இயக்கவியல் தத்துவத்தை (Mechanical philosophy) வளர்த்தெடுக்கிறார். இது ’பிரபஞ்சம் (Physical world) மிக நுண்ணிய துகள்கள் ஒன்றோடொன்றுடன் கொண்டுள்ள தொடர்பு மற்றும் மோதல்களினால் ஆனது’ என்ற விதியின் அடிப்படையில் அமைந்தது. நுண்துள்களின் இயக்கத்தை சொல்லும் இவ்விதி கோபர்னிகஸ்வாத பிரபஞ்சத்தின் அமைப்பை புரிந்துகொள்ள மிகவும் முக்கியமானது என நம்பினார். அவதானிக்க இயலும் அனைத்து நிகழ்வுகளையும் நுண்ணிய உணரமுடியாத துகள்களுடைய இயக்கத்தின் வழியாக விளக்க முடியும் என இயக்கவியல் தத்துவம் உறுதியளித்தது. இவரின் பார்வை 17ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் அறிவியல் நோக்கில் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக உடனடியாக மாறியது. இந்த ஆதிக்கம் குறைந்த அளவில் இன்றும் நீடிக்கிறது. இவரை தொடர்ந்து இயக்கவியல் தத்துவம் ஹ்யூஜென்ஸ் (Huygens), காஸ்ஸெண்டி (Gassendi), ஹூக் (Hooke), பாயில் (Boyle) போன்றவர்காளால் முன்னெடுக்கப்பட்டது. இந்த பார்வை பரவலான ஏற்றுக்கொண்டதே அரிஸ்டாட்டில்வாத உலகநோக்கின் முடிவாக கருதப்படுகிறது.
| நியூட்டன் |
நியூட்டனின் இயற்பியல் அடுத்த 200 வருடங்களுக்கு தேவையான கட்டமைப்பை அறிவியலுக்கு கொடுத்தது. மேலும் கார்டீசியன் இயற்பியலை வெகுசீக்கிரத்தில் அகற்றிவிட்டது. நியூட்டனுடைய கோட்பாடு அடைந்த வெற்றியினால் அறிவியலாளர்களின் நம்பிக்கை இந்த காலகட்டத்தில் வேகமாக அதிகரித்தது. நியுட்டனின் கோட்பாட்டை கொண்டு இயற்கையின் உண்மையான செயல்பாடுகளை வெளிக்கொண்டுவர முடியும் என்றும் குறைந்தபட்சம் அனைத்தையும் கோட்பாட்டு அளவிலாவது விளக்கிவிட முடியும் என்றும் நம்பினர். நியூட்டனின் விளக்க முறைகளை பல நிகழ்வுகளுக்கு பொருத்தும் முயற்சி மிக விரிவாக நடைபெற்றது. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வேதியியல், ஒளியியல், ஆற்றல், வெப்ப இயக்கவியல், மின்காந்தவியல் போன்ற ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நடைபெற்றன. அவற்றில் பெரும்பகுதி நியூட்டன் கோட்பாட்டின் பிரபஞ்சப் பார்வைக்குள் வருவதாகவே கருதப்பட்டன. அறிவியலாலர்கள் நியூட்டனின் நோக்கு முற்றிலும் சரியானது என ஏற்றுக்கொண்டனர். ஆகவே இனி செய்ய வேண்டியதெல்லாம் விடுபடல்களை நிரப்புவது மட்டுமே என கருதினர்.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் நியூட்டனின் பார்வை மீதான நம்பகத்தன்மை சிதைய ஆரம்பித்தது. இதற்கு இயற்பியலில் நடந்த புரட்சிகரமான இரண்டு முன்னேற்றங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். ஒன்று சார்பியல் கோட்பாடு, மற்றொன்று குவாண்டம் இயக்கவியல். நியூட்டனின் கோட்பாடை மிக அதிக நிறை கொண்ட பொருட்களுக்கோ அல்லது அதிக திசை வேகத்துடன் நகரும் பொருள்களுக்கோ பொருத்திப் பார்க்கும் போது சரியான முடிவுகள் கிடைக்கவில்லை என்பதை ஐன்ஸ்டினால் கண்டுபிடிக்கப்பட்ட சார்பியல் கோட்பாடு (Relativity Theory) காண்பித்தது. இதற்கு நேரெதிராக குவாண்டம் இயற்பியல் மிக நுண்ணிய நிறை கொண்ட பொருட்களுக்கு அதாவது நுண்துகள்களுக்கு நியூட்டனின் கோட்பாடு பொருந்தவில்லை என்பதை காண்பித்தது. சார்பியல் கோட்பாடு மற்றும் குவாண்டம் இயக்கவியல் ஆகிய இரண்டுமே (குறிப்பாக குவாண்டம் இயற்பியல்) மிகவும் வித்தியாசமானவை, அதேசமயம் முக்கியமான கோட்பாடுகளும் கூட. இவை பொதுமக்களால் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள கடினமான பல கூற்றுகளை தருகின்றன. இவற்றின் தோற்றம் கணிசமாக கருத்தியல் எழுச்சியை இயற்பியலில் உருவாக்கியது, அது இன்றுவரை நீடிக்கிறது.
இதுவரை நாம் பார்த்த அறிவியல் வரலாற்றின் சுருக்கம் இயற்பியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. இது தற்செயலானதல்ல. ஏனென்றால் வரலாற்றின் படி இயற்பியலே அனைத்து அறிவியல் துறைகளுக்கும் மிக அடிப்படையான அலகு. மற்ற துறைகள் ஆய்வு செய்யக்கூடிய பொருள்கள் அனைத்துமே கூட்டுபொருள்களால் ஆனவை. உதாரணமாக தாவரவியலாளர்கள் ஆய்வு செய்யும் தாவரங்கள் செல்களால் ஆனவை, செல்கள் உயிர்-மூலக்கூறுகளாலும், உயிர்-மூலக்கூறுகள் அணுக்களாலும், அணுக்கள் இயற்துகள்களால் (physical particles) ஆனவை. ஆகவே இயற்பியலுடன் ஒப்பிடும் போது தாவரவியல் மேல் நிலை, அதாவது இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலுள்ள கூட்டுபொருள்களை ஆய்வுசெய்கிறது, அடிப்படை அலகை அல்ல. இருந்தாலும் தாவரவியல் முக்கியமான துறையல்ல என்று கருதப்படாது. மேலும் நவீன அறிவியலின் தோற்றத்தைப் சொல்லும் எந்தவொரு சுருக்கமாக வரையறையும் இயற்பியல் தவிர்த்த மற்ற துறைகளை ஒதுக்கிவிட்டால் முழுமையடையாது.
=================
அறிவியல் தத்துவ வரலாறு பேராசிரியரான Samir okasha எழுதிய Philosophy of science நூலில் இருந்து சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்ட பகுதி
மொழிபெயர்ப்பு: தாமரைக்கண்ணன், அவினாசி
தொடர்ச்சி: அறிவியல் தத்துவம் என்றால் என்ன?












