Tuesday, 17 February 2026

அடித்தெழுதப்பட்ட வரலாற்றில் ஆடித்திருவாதிரை - இரா. கோமகன்

கங்கைகொண்ட சோழபுரத்து நிசும்பசூதனி

1

வரலாற்றில் விருப்பம் கொண்டவர்கள், குறிப்பாக சோழ வரலாற்றில் முனைப்பு காட்டுபவர்கள் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஆக்கங்களைத் தவிர்த்து கடந்து செல்ல இயலாது. அவ்வகையில் அவரது படைப்புகள் சோழ வரலாற்றைச் சுற்றி அமைந்துள்ளது. தமிழகத் தொல்லியல்துறையில் திரு. நாகசாமி அவர்கள் இயக்குநராக பணியைத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில் குறிப்பிடக்கூடிய வகையில் வரலாறு, தொல்லியல் தொடர்பானப் பணிகள் தீவிரம் கொண்டன. பணிநிறைவடையும் காலத்தின் பின் பத்தாண்டுகளில் பல வரலாற்று அறிஞர்கள் தமிழக வரலாறு தொல்லியல் தளத்தில் இயங்கினர். குடவாயில் திரு. நாகசாமி அவர்களைத் தன் குருவாக வரித்துக்கொண்டவர்.

திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகள் தமிழகத்தில் இனப் பெருமிதங்களைக் கட்டமைப்பதில் முனைப்பு கொண்டிருந்த காலத்தில் வரலாறு தொல்லியல் தொடர்பான முயற்சிகள் ஏற்றம் கண்டிருந்தன. மூவேந்தர்களை, தமிழநில மன்னர்களை போற்றி தமிழ் வரலாற்றை எடுத்துரைப்பதின் வழி தமிழின அரசியல் தளத்தில் தமிழின வரையறைக் கோட்பாடு திரட்சி கொண்டது. தமிழர், தமிழர் அல்லாதோர் வகைப்பாட்டில் தமிழ் வேந்தர் வரலாறு அணுகப்பட்டது. கடந்த கால வரலாறு நிகழ்கால தாக்கங்களில் இருந்து விடுபட்டு எழுதப்படுவதில்லை. இதுபற்றிய கண்ணோட்டத்தை புது வரலாற்றுவாதம் (New Historism) வழங்குகிறது. புது வரலாற்றுவாதம் பண்டைய வரலாற்று முறையிலிருந்து மாறுபடும் தளங்களை கோபிசந்த் நாரங் பட்டியலிடுகிறார். (கோபிசந்த் நாரங்க்:2005.பக்.542-543)

1. வரலாறு என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன. அ) கடந்த கால நிகழ்வுகள் ஆ) கடந்த கால நிகழ்வுகளின் வர்ணனை எனும் உரைக்கோவை அல்லது எழுத்தியல் எனும் பொழுது மொழி, அரசியல், அதிகாரம் ஆகியவற்றின் ஆதிக்கத்தால் வரலாறு என்பது பிற்காலத்து மக்களுக்கு மாசற்ற நிலையில் கிடைப்பதில்லை. வரலாறு நிகழ்வுகளின் எடுத்துரைப்பாக (narrative) மாறுவதால் அது நிகழ்வின் அப்பட்டமான உண்மையாக இருப்பதில்லை. இதனால் வரலாறு மொழியால் உருவாக்கப்படும் 'பிரதி' (Text) ஆகின்றது. அதாவது வரலாறு என்பது 'பிரதி ' தான் நிகழ்வு அல்ல.

2. வரலாற்றுக்காலகட்டம் ஒருங்கிணைந்த உண்மையல்ல, எந்த ஒரு காலகட்டத்திலும் 'ஒரே ஒரு வரலாறு ' என்பது இல்லை. வரலாற்று காலகட்டம் பல குரல்கள், பல பண்பாடுகள், பலமக்கள் கூட்டங்கள் கொண்ட ஒன்று; அதிகார வர்க்கம் தன்னலனுக்கு ஏற்ப எடுத்துரைக்கப்பட்ட கதையாடலே வரலாறாக அறியப்படுகிறது, மற்றவை மறுதலிக்கப்படுகிறது. வரலாற்றில் காணப் படுகிறது என்று கூறப்படும் ஒரே மாதிரியான ஒருங்கிணைவு கொண்ட பண்பாட்டின் கருதுகோள் வெறும் மாயை தான்.

3. கடந்தகாலம் பற்றிய ஆய்வு கலப்பற்றதும் நூற்றுக்குநூறு சதவிகிதம் புறவயமானது என்றும் எந்த வரலாற்றுவாதியும் கூறமுடியாது. வரலாற்று ஆய்வாளரான எழுத்தாளர் தன்னுடைய வரலாற்று நிலமையில் இருந்து விடுபட்டவனாக இல்லாததால் கலங்கமற்ற இட்டுக்கட்டாத உண்மைகளைக் கூறுவதில்லை. வரலாற்றெழுத்தியல் கடந்தகால எழுத்தாவணங்கள், தொல்லெச்சங்களைக் கொண்டு அமைகின்றது. அவை உருவாக்கப்பட்டக் காலத்தியச் சமூகப்பண்பாட்டு ஆதிக்கச்சொல்லாடல்களால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாகத் தான் இருக்கும். எனவே கடந்தகால வரலாறு என்பது நிகழ்காலப் புனைவே.

4. இலக்கியம், இலக்கியமல்லாத சட்டம், அறிவியல் பிரதிகள் எல்லாம் வரலாற்றுக்குள் அடக்கம். வரலாறேப் பிரதித்தன்மையாக உள்ளபொழுது வரலாற்றுச் சொல்லாடல்களில் மலர்வதே இலக்கியம் என்பதால் வரலாற்றின் தளைகளில் கட்டுண்டதாக இலக்கியம்; அதன் வடிவங்களும் அமைந்து விடுகிறது. கடந்தகாலத்தின் வர்ணனையான மற்றப்பிரதிகளில் இருந்து தன்னுடைய பிரதித்தன்மையை நிறுவுகிறது.


வரலாற்றுக்கு அடிப்படையாக எடுத்தாளப்படும் சான்றுகள் என்பது ஒருவகைச் சொல்லாடல்தான், புறச்சான்றாக அல்லது அகச்சான்றாக இருந்தாலும் வரலாற்றை எழுதுபவனால் அவனது இயங்குதளம், சொல்லாடல் புலம் அனுமதித்த அளவில் எடுத்துரைக்கப்படும் ஒன்று, அதாவது வரலாற்றாளன் தனது நிகழ்காலத்தின் அரசியல், சமூகப்பொருளாதாரம், அதிகாரக்கருத்தியல் கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்டவனாகத் நிகழ்வதால், அவன் வாழும்காலத்தில் சொல்லாடல் புலத்தின் ஆதிக்கத்திற்கு அகப்பட்டவனாக இருப்பதால், சான்றுககளத் தான் உள்வாங்கிய, அறிந்தமுறையில் வரலாற்றின் அடிப்படைகளாக எடுத்துரைக்கின்றான். ஒரு வரலாற்று நிகழ்வைச் சான்று காட்டி பொருளுரைக்கின்றான். அதாவது கடந்தகால நிகழ்வை அல்லது கடந்தகால வர்ணனைகளை நிகழ்கால அரசியல் சொல்லாடல்புலத்தின் அடிப்படையில் பொருள்கொள்ளப்படுகின்றது. இதனால் வரலாற்று நிகழ்வு எடுத்துரைப்புகள் உரைக்கோவைகள் மாறுபட்டு நிற்கின்றன அல்லது மாறிக்கொண்டே இருக்கின்றன, அடித்தெழுதப்படும் பிரதி ஆகின்றன.

2

அப்படி அடித்தெழுத்தப்பட்ட பிரதிகளில் ஒன்று சோழப்பெருவேந்தனான இராஜேந்திரசோழனது பிறந்த நாள். தமிழ் பண்பாட்டில் ஆதிரை நாளுக்கு முக்கியத்துவம் உண்டு. சிவன் ஆதிரை நாளுக்கு உரியவன். "ஆர்த்ரா" என்ற வடமொழிச் சொல்லை "ஆதிரை" என்று தமிழில் அறிகிறோம். ஆதிரையின் முதல்வன் ஆதிரையான் என சிவனை அழைக்கின்றோம். தாருகா வனத்து முனிவர்களுடன் ஏவுதலை வென்று முயலகன் மீது நின்று இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மையை விளக்கியது 'ஆருத்திரா தரிசனம்' (ஆதிரை காட்சி). தட்சிணாயத்தின் இறுதி மாதமான மார்கழியில் தில்லைக் கூத்தனைக் கண்டு அருள்பெற தேவர்கள் கூடுவதாக நம்பிக்கை. தில்லையில் மார்கழியில் நடராசர் திருவாதிரை நாளில் தேரில் வீற்றிருந்து வீதியுலா வருவார். மார்கழி திருவாதிரை நாளில் உளுந்து மாவினால் செய்த களி நைய்வேத்தியமாக படைக்கப்படும். "திருவாதிரைக்கு ஒருவாய்ககளி" என்ற பழமொழி கூட உண்டு. திருவாதிரை நாளில் தான் சிவன் பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் காட்சி தந்ததாகவும், விஷ்னுவே மனம் உருகிய நடனம் ஆதிரை நாளில்தான் நடந்தது என்றும். மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனைக் கண்டதும் இந்த திருவாதிரை தான் என்ற கூற்றும் உண்டு. 

ராஜேந்திர சோழன் - (ஓவியம்- ராஜராஜன்) 

தமிழ் மண்ணில் திருவாதிரைத் திருநாள் எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. குறிப்பாக மார்கழி மாதத்து திருவாதிரைத் திருநாள் முதன்மைப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டிருக்கிறது. திருவூறல் எனப் பெற்ற தக்கோலம் சிவன் கோவிலில் உள்ள இராஜேந்திரச்சோழனின் மூன்றாம் ஆண்டு கல்வெட்டு⁹ வெளியிடப்பட்டுள்ளது. அதில் உடையார் ஸ்ரீராஜேந்திரச்சோழத்தேவர் திருநாள் திருவாதிரை நாள் எழுந்தருளும் திங்கள் திருவிழாக்கான நிவந்தம் பற்றிக் கூறுகிறது. இவ் நிவந்தம் பதின்ரெண்டு மாதங்களிலும் திருவிழா செய்யும். இதுபோன்றே விருத்தாச்சலத்தில் உள்ள இராலஜேந்திரனின் 20- ஆண்டு கல்வெட்டின்¹⁰ மூலம் மாதந்தோறும் நிகழும் திருவாதிரை திருவிழா பற்றி அறிய முடிகிறது.

சண்டீசருக்கு அருளும் மூர்த்தி (ஓவியம் சில்பி)

சோழ மன்னர்களின் பிரமாண்டத்தின் உச்சமாக விளங்கிய இராசேந்திர சோழனின் பிறந்தநாள் அவன் ஆட்சி/அரியணை ஏறிய ஆயிரம் ஆண்டு வரை சிக்கலற்றதாகவே இருந்தது. இம்மன்னன் பிறந்த நட்சத்திம் ஆதிரை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள நீலகண்ட சாஸ்திரியார் அடித்தளமிட்டுவிட்டார். 1935-ல் வெளியிடப்பட்ட வரலாற்று நூலில் சாஸ்திரி "The Star of Rajendra's Nativity was Ardra"¹ என ஆதிரையில் பிறந்தவன் எனக் கூறிவிட்டார். அதற்கு ஆதாரமாக கல்வெட்டுத்துறை ஆய்வறிக்கை² பஞ்சவன்மாதேவிச்சரக் கல்வெட்டைக் காட்டுகிறார். இக்கல்வெட்டு இராசேந்திரச்சோழனின் 7-ம் ஆட்சியாண்டு (கி.பி. 1019) வெளியிடப்பட்டது. அக்குறிப்பு,

"Begins with the historical introduction Thirumani Valera etc., of the inscription of the king. Registers a gift of land for providing workship and offerings to the God mahadeva in the temple of panchavan mahadevisavaram which was built as a pallippadai at Palayaru alais Mudikonda cholapuram in Thirunaraiyur nadu a.s.d of kshatriya sikhamani valanadu. Gives Tiruvadirai as the natal star of Rajendra -I and Revati as that of his queen."

இவர் அடிப்படையாகக் கொண்ட கல்வெட்டின் 21-ம் வரி இப்படிதான் சொல்கிறது.

"ன்னுழியும் உடையார் ஸ்ரீராஜேந்திரச்சோழதேவர் திருநாளான திருவாதிரை திரு.....ளில் சிவிகை காவுவார்க்கு ப., இரு கல நெ - இருநாழி உழக் காக ஆண்டு வரை திருவாதிரை திருநாள் 12-ம் நம் பிராட்டியார் இரேவதி திரு........... யித முது செய்யும் அ....... க்கு"

எனத்தொடர்கிறது. அதாவது 12 மாத திருவாதிரை நட்சத்திரங்களிலும் இங்கு உறையும் மகாதேவருக்கு பூசைகள் செய்ய நிவந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இராசேந்திரனின் எந்த மாதத்து ஆதிரையில் பிறந்தான் என அறுதியிட முடியாத நிலை. ஆனால் அவன் பிறந்தது "ஆதிரை" விண்மீன் நாளில் என்பது உறுதியானது.

ஆனால் அறிஞர் சதாசிவப்பண்டாரத்தாரோ இம்மன்னன் மார்கழித்திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தான் என தனது நூலில்³ அறிவிக்கிறார். அந்நூலில் பண்டாரத்தார்,

"பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று கல்வெட்டுகள் புகழ்ந்து கூறும் இவ்வரசர் பெருமான், முதல் இராசராசசோழனுக்கு அவன் கோப்பெருந்தேவியருள் வானவன்மாதேவி என்று வழங்கும் திருபுவனமாதேவியால் பிறந்த புதல்வன் ஆவான். இவன் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தவன் என்பது திருவொற்றியூரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.

விருத்தாசலத்திலுள்ள கல்வெட்டொன்று இவ்வேந்தன் நலங்கருதி திருமுதுகுன்றமுடையார் கோயிலில் திங்கள் தோறும் திருவாதிரை நாளில் விழா நடத்துவதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தியைக் கூறுகிறது. இதனாலும் திருவாதிரை நாளிற் பிறந்தவன் என்பது உறுதியாதல் காண்க" என்று எழுதுகிறார்.

இந்த இரு கல்வெட்டுச்சான்றுகளின் மூலம் இராசேந்திர சோழன் பிறந்த விண்மீன் ஆதிரை எனவாகிறது. ஆனால் நீலகண்ட சாஸ்திரிகள் எந்த மாத ஆதிரை என்பதை எங்கும் குறிக்கவில்லை. சதாசிவப்பண்டாரத்தாரோ அதை போதுமான சான்றுகளின்றியே, மார்கழி ஆதிரை என உறுதிப்படுத்துகின்றார். தி.வை.சதாசிவபண்டாரத்தார் அடிக்குறிப்பில் காட்டும் திருவொற்றியூர் கல்வெட்டு⁴ "திருவொற்றியூருடைய மகாதேவர்க்கு உடையார் ஸ்ரீராசேந்திரசோழத்தேவர் திருநாள் மார்கழி திருவாதிரை ஞான்று நெய்யாடியருள வேண்டுமிடத்துத் திருவொற்றியூர் திருமயானமும் மடமுடைய சதுரானன் பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்றைம்பது" என அமைந்துள்ளது.

இந்த இரு அறிஞர்களும் எடுத்துக்கொண்ட சான்றுகளை இங்கு தொகுத்துப்பார்ப்போம்,

அ) பஞ்சவன்மாதேவீஸ்வரம் கல்பொறிப்பில் உடையார் ஸ்ரீராஜேந்திரச்சோழர் தேவர் திருநாளான திருவாதிரை திரு(நா)ளில்.

ஆ) விருத்தாச்சலம் கல்பொறிப்பில்⁵ "திருமுதுகுன்றமுடைய மகாதேவர்க்கு திங்கள் திருவிழா மார்கழித் திருவாதிரைக்கும் பஞ்ஸ கவ்யத்துக்கும் சிதாரிக்கும் அமாவாஸி தோறும் குறுணி நெய் ஆடி அருளவும் ஸ்ரீராஜேந்திரச்சோழத்தேவர் ஸ்ரீபுஜங்கள் வத்திக்க......."

இ. திருவொற்றியூர் கல்பொறிப்படி ஆதிபுரீஸ்வரர் கோவிலில் தென்புற சுவரின் சாசனப்படி "உடையார் ஸ்ரீராஜேந்திரத்தேவர்க்கு யாண்டு முப்பத்தொன்றாவது (ஜயங்கொண்ட மண்டல)த்து புழற் கொட்டத்து புழல்னாட்டு திருவொற்றியூருடைய மஹாதேவர்க்கு உடையார் ஸ்ரீராஜேந்திரத்தேவர் திருநாள் மார்கழி திருவாதிரைனான்று னெய் யாடியருள வெண்டு மிசத்துக்கு திருவெற்றியூர் திருமயானமுமடமுடைய சதுராநந் பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்த காசு நூற்றைம்பது."

மேற்குறித்த கல்பொறிப்புகளின் மூலம் உறுதியாவது இம்மன்னன் பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்பதும் அந்த ஆதிரை நட்சத்திர நாள் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதும்தான்.

3

எனில் இங்கு அந்த அரசனது பிறந்த மாதம் எது என்ற கேள்வி உருப்பெருகி வருகிறது. அது ஆடி மாதத்து திருவாதிரை நாளே என்பது வேறு இரு கல்வெட்டுகள் மூலம் உறுதியாகின்றது. அவற்றுள் முதன்மையான திருவாரூர் கல்வெட்டு குறித்தும், அதைத்தேடிச்சென்ற காரணம் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

திருவாரூர் கல்வெட்டு

இராசேந்திரச்சோழனின் அகவைநாளை விழாவாக தமிழக முதல்வராக விளங்கிய திரு. எம்.ஜி.இராமசந்திரன் தான் முதன் முதலாக கங்கைகொண்டசோழபுரத்தில் கொண்டாடினார். 1982 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் அவ்விழாக்கள் நடைபெற்றன. அந்நாட்கள் மார்கழி மாதம் திருவாதிரை நாட்களில் நடந்தன. அந்நாளில் இராசேந்திரசோழனின் அகவைநாள் மார்கழித் திருவாதிரையாகவே கருதப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தால் சோழன்மன்னன் இராசராச சோழன் வரலாற்றை முன்னிலைப்படுத்திய நிலையில், ஆளும் அரசியல் முரண்பாடுகளால் திரு. எம்.ஜி.ஆர். இராசேந்திரச்சோழனை முன்னிலைப்படுத்த முனைந்தார் எனலாம்.

இராஜேந்திரசோழனது ஆட்சியேற்ற 1000-ம் ஆண்டான 2012-ஐக் கொண்டாட ஆடித் திருவாதிரைநாளில் விழா எடுக்க அரியலூர் மாவட்ட நிர்வாகத்திடம் கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பாக அனுமதி கேட்கப்பட்டது. அவரின் பிறந்த நாளையும், விழா நாளையும் உறுதி செய்ய மாசட்ட நிர்வாகம் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம், முனைவர்.இல.தியாகராஜன், பொறியாளர்.இரா.கோமகன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு அறிக்கைக் கோரப்பட்டது.

திருவாரூர்

அதன்படி திரு.குடவாயில் பாலசுப்ரமணியம் 1988- தன் திருவாரூர்¹² நூலுக்காக அக்கோவிலுள்ள 91-கல்வெட்டுகளையும் தொகுத்துள்ளார். அதுபோன்றே முனைவர்.இல.தியாகராஜனும் இதை நேரில் படித்து படியெடுத்துள்ளார்.¹³ இவர்களோடு திருவாரூர் தியாகேசர் மூலஸ்தானத்தின் மேற்குபுறச் சுவற்றின் குமுதவரிக் கல்வெட்டை நேரில் கண்டு படித்து புரிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆடித்திருவாதிரை தான் இராஜேந்திரச்சோழனின் பிறந்தநாள் என்பது தெரிவிக்கும் அறிக்கைச் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் அரசால் மேற்கொள்ளப்படாத்தால் அவ்வாண்டு கடந்து போயிற்று. பிறகு இராசேந்திரச்சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டான 2014-ஐ மிகச்சிறப்பாக கங்கைகொண்ட மேம்பாட்டுக் குழுமத்தோடு ஊர்மக்கள் இணைந்து இருநாள் விழா எடுத்துக் கொண்டாடினோம்.அவ்விழாவின் நாளை உறுதி செய்ய என்னோடு உற்றத்துணையாக உடன் நின்றவரில் முதன்மையானவர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களும் திரு.பேரா.இல.தியாகராசனும் ஆவர். 

அக்கல்வெட்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"திருமுகப்படி கோனேரின்மை கொண்டான் ஷத்திரிய சிகாமணி உள்நாட்டு திருவாரூர் கூற்றத்து திருவாரூர் உடையார் ஸ்ரீமூலஸ்தான முடையவர்க்கு ஸ்ரீகாரியம் செய்வானுக்கும் பதிபாத மூலப் பட்டுடைப் பஞ்சாற்றியர் தேவர் கண்மீளுக்கும்.... உடையார் புதியது செய்யத் திருமுளையட்டவும் புத்தரிசி அமுதுக்கு நெல்லுக்கு பெய்யும் மாளவம்க்கு திருமுளையட்டவும் திருச்சுண்ணம்........ பயிரக்கு காப்புகட்டவும் மார்கழி திருவாதிரைக்கும் திருமுளையட்டவும் திருசுண்ணம்......திருப்பூரத்திற்கு திருமுளையட்டவும் திருப்பணி அமுது நெல்லில் பெய்யும் ஆவணி அவிட்டத்திற்கு திருமுளையட்டவும் ஆண்டு உச்சிக்கு திருமுளையட்டவும் அய்யர் பிறந்த அருளின அப்பிகை சதயவிழா வரைவுக்கு திருமுளையட்டவும் தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும் நாம் பிறந்த ஆடித் திருவாதிரை திருநாளில் திருவிழா விரைவு திருமுளையட்டவும் தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும் திருவரநெறி உடையார்க்கு உரிமை செய்யும் முன்பு பெற்றுடைய..... கடவார்களெல்லாம் செய்யும் இடத்தே இவர்களில் முடிதீரச் செய்யவும் இத்தேவ திருவிழாவில் தளியிலார் அரங்கேறும் இடத்து முள்ளங்கேறவும் திருவிழாவிலும் திருவேட்டையிலும் தளியிலார் அரங்கம் ஏறும் இடத்து.... வென்று திருமந்திர ஓலை சிங்கானை மும்முடிச்சோழன் எழுத்தினாலும் யாண்டு முப்பத்தொன்று நாள் இருநூற்று நாற்பத்து நாலினால் கல்வெட்டுவித்து....."

இந்த கல்வெட்டின் மூலம் கோனேரின்மை கொண்டான் இராஜேந்திரச்சோழன் திருவாரூர் கோவிலில் உள்ள மூலஸ்தான உடையாருக்கு திருவிழாக்காலங்களில் செய்ய வேண்டியது பற்றி ஆணை வழங்கியுள்ளார். இதன்படி புதியது அமுது செய்யும் நாள், ஆவணி அவிட்டம், மாளவ திருநாள், மார்கழித் திருவாதிரை, ஆடிப்பூரம், சித்திரை (ஆண்டு உச்சி)விழா, மற்றும் ஐப்பசி சதயம், ஆடித்திருவாதிரை போன்ற விழாக்களும் புது அமுது, திருமுளையட்டுதல், திருச்சுண்ணம் இடித்தல் போன்றவற்றிற்கு நிவந்தம் அளித்துள்ளார்.

இக்கல்வெட்டில் கூர்ந்து நோக்கத்தக்க செய்திகள்:

  • அ) மார்கழித் திருவாதிரைக்கு திருமுளையட்டவும் திருச்சுண்ணம்....

  • ஆ) அய்யர் அருளின அப்பிகை சதய திருவிழா விரைவுக்கு திருமுளையட்டவும் தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும்.....

  • இ) நாம் பிறந்த ஆடி திருவாதிரை திருநாளில் விரைவுக்கு திருமுளையட்டவும் தீர்த்தத்துக்கு திருச்சுண்ணம் இடிக்கவும்.....

சிவனுக்கே உரித்தான விழாவினை அப்பர் பெருமான் பாடியபடி "ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்" என்றபடி மார்கழித் திருவாதிரையில் விழா எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஆடித்திருவாதிரையிலும் விழா எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் 'நாம் பிறந்த ஆடித் திருவாதிரை' என ஆணையில் இராசேந்திரன் குறிப்பிட்டிருக்கிறார். இவற்றோடு அவர் தந்தை (அய்யர்) பிறந்த அருளின் அப்பிகை சதய திருவிழாவும் நடந்து இருக்கிறது.

ஆக ஆடித்திருவாதிரையே மன்னன் இராஜேந்திரன் அவதார தினமாகக் கொள்ள வேண்டிய தெளிவு இக்கல்வெட்டின் மூலம் கிடைக்கிறது.இதற்கு திரு.குடவாயில் பாலசுப்பரமணியம் அவர்கட்கு நான் நன்றிக்கடன் பட்டவனாக உள்ளேன்.

அதற்கு ஆதாரமாக மேலும் வலு சேர்க்கும் செய்திகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இக்கல்வெட்டு உள்ள திருவாரூர் தியாகராசர் திருக்கோவில் மூலஸ்தானம் இராஜேந்திரனால் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது. அதன் ஜகதிப்படையின் குமுதப் பகுதியில்தான் மேற்குறிக்கும் கல்வெட்டு உள்ளது.

மேலும் இவ்வாணையை பதிப்பித்து திருமந்திர ஓலை சிங்கானை மும்முடிச்சோழன் எழுத்தினாலும்..என்கிறது. இந்த ஆணையான இராஜேந்திர சோழனது 31-ம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1043-ல் வெளியிடப்பட்டிருக்கிறது. இம்மன்னனின் எசாலம் செப்பேடு¹⁴ இருபத்தைந்தாவது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாண்டு கி.பி.1036-37 ஆகும். இந்த செப்பேட்டை கூர்ந்து நோக்கினால் ஆறாம் ஏடு முதல் பக்கத்தில் 133 வரியிலிருந்து 135 வரிவரை உள்ள செய்தி, கலவெட்டு ஆணையை ஓலையில் எழுதிய அதே திருமந்திர ஓலை சிங்காணை மும்முடிச்சோழனைக் குறிப்பிடுகின்றது.

குடவாயில் பாலசுப்ரமணியன் உடன் இரா. கோமகன்

எனவே திருவாரூர் கோனேரின்மை கொண்டான் ஆணையை பதிப்பித்த திருமந்திர ஓலை நாயகன் சிங்கானை மும்முடிச்சோழன் தான் இராஜேந்திரச்சோழனின் சைவ குருவாகிய சர்வ சிவ பண்டிதர் எடுபித்த திருக்கற்றளியான திருவீராமீச்வரமுடைய மாதேவர் கோவிலுக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாக நிலமளிக்கும் திருமந்திர ஓலையையும் எழுதியவரின் முதன்மையாக இருந்தவர் என அறிய முடிகிறது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் "ஷத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துத் திருவாரூர்' எனும் பிரிவு இராசராசன் காலம் தொட்டு இராஜேந்திர சோழன் மகன் முதலாம் இராஜாதிராஜன் காலம் வரை வழக்கில் தொடர்ந்துள்ளதால் 'திருமுகப்படி கோனேரின்மை கொண்டான் என்பது இராசராசன், இராசேந்திரன், இராஜாதிராஜன் ஆகிய மூவரில் ஒருவருடையது ஆகும். அதில் குறிக்கப்படும் திருமந்திர ஓலை நாயகம் சிங்கானை மும்முடிச்சோழன் இராசேந்திரச்சோழன் அதிகாரி என்ற அடிப்டையில் கல்வெட்டு குறிக்கும் கோனேரின்மை கொண்டான் இராசேந்திரச் சோழனே எனத் துணியலாம்.

திருவாரூர் கல்வெட்டு அரசாணை என்பதோடு, அவ்வாணையை பிறப்பித்தவன் இராஜேந்திரச்சோழன் என்பதும் உறுதிபடுகிறது. எனவே அதில் குறிக்கப்பெறும் "நாம் பிறந்த" என்ற தொடரில் "நாம்" என்ற பதம் இராசேந்திரனைக் குறிக்கின்றது. "அய்யர்" என்பது அவர் தந்தையை குறிக்கின்றது. அவர் பிறந்தருளின அப்பிகை சதயம் எனபது மன்னன் இராஜராஜன் பிறந்தநாள் என்பதை உறுதிபடக் கூறமுடியும். அதைத் தொடர்ந்து "நாம் பிறந்த ஆடித்திருவாதிரை" என உரைப்பதால் ஐய்யத்திற்கு இடமின்றி இராஜேந்திரச்சோழன் பிறந்த நாள் "ஆடித்திருவாதிரையே" எனத் துணியலாம்.

கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திலிருந்து செம்பியர் கோன் இராசேந்திரனின் பேரனுக்கு பேரனான இரண்டாம் குலோத்துங்கச்சோழன் நூறு ஆண்டுகள் கடந்தும் ஐப்பசி சதயத்தையும் ஆடித்திருவாதிரையையும் திருவிழாவாக கொண்டாடிய செய்தியை அம்மன்னனின் 7-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகிறது.

இத்துடன் மேலதிக சான்றாக இம்மன்னனது 10-ம் ஆண்டு கல்பொறிப்பு ஆவணம்⁶ மேல்பாடி என்ற ஊரின் கோவிலில் உள்ள சோழேந்திர சிங்க ஈஸ்வரமுடையவர்க்கு தன் 3-ம் ஆட்சியாண்டில் பழையாறு அரண்மனையிலிருந்து இறையிலி வழங்கும் ஆணையைக் கூறுகிறது. இது இம்மன்னனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை என்பதற்கு மற்றுமொரு முக்கியமான சான்றாகிறது . அக்கல்வெட்டு,

'யாண்டு மூன்றாவது முந்நூற்று எழுபத்திநால் உடையார் ஸ்ரீராஜேந்திரச்சோழத்தேவர் பழையாற்று கோவிலுனுள்ளாள் திருமஞ்சனசாலைப் பள்ளிபீடத் தெழுந்தருளியிருந்து சயங்கொண்ட சோழ மண்டலத்து பெரும்பாணப்பாடித் தாய் நாட்டு இராஜாங்கப்புரத்து சோளேந்திர சிங்க ஈஸ்வரத்து மகாதேவர் தேவதான தாமற் கோட்டத்து கரிவேடு நாட்டு தேவர்க்கு நீக்கி இறைகட்டி நெல்லு உடையார் ஸ்ரீராஜேந்திரச்சோழத்தேவர் ஆட்டி திருவோதிரை திருநட்சத்திரையை - எ-ங் கல்லத்துக்கு அடிக்கீழ் அட்டநெல்லு'

இக்கல்வெட்டால் "ஸ்ரீராஜேந்திரச்சோழத்தேவர் ஆட்டித் திருவாதிரை திருநட்சத்திரையை" என்ற சொற்தொடர் மூலம் ஆடித் திருவாதிரை இராசேந்திரனின் பிறந்த நாள் என்பதாகவே கொள்ளலாம்.

மாமன்னன் முதலாம் இராஜராஜசோழனுக்கும் அவன் நம்பிராட்டியார் வானவன்மாதேவி எனப்பெறும் திருபுவனமாதேவிக்கும் மகனாய் பிறந்த முதலாம் இராசேந்திரச்சோழன் சிவனுக்கு உகந்த நாளான ஆதிரையில் ஆடிமாதத்தில் அவதரித்தான் என்பதை பலமுறை விளக்கியும் விழா எடுத்தும் உலகிற்கு அறிவித்தாகிவிட்டது.இருந்தும் இதை ஏற்காதவரும் உளர். திரு.குடவாயிலாரும் நானும் இன்னும் பேசவேண்டியுள்ளதை தமிழக அரசு அந்நாளை அங்கீகரித்து எங்களுக்கு ஓய்வளித்துள்ளது. தற்பொழுது ஒவ்வொரு ஆண்டும் அவன் அவதாரத் திருநாளில் அவன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழீஸ்வரருக்கு மாமங்கள நன்நீராடல் நடைபெறுகிறது. இம்மன்னன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை ஆடித் திருவாதிரை நாளில் அரசுப்பெருவிழாவாக உள்ளூர் விடுமுறையோடு கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை:

  1. The Colas - K. A. Nilakanta Sastri, 1935.

  2. கல்வெட்டுத்துறை ஆய்வறிக்கை எண்: 271-1927 (Epigraphical Report No: 271 of 1927).

  3. பிற்காலச் சோழ வரலாறு - தி. வை. சதாசிவப் பண்டாரத்தார், பக்கம் 116, வெளியீடு ஆண்டு 1974. அண்ணாமலைப் பல்கலைக்கழகம். (Pirkala Chozhar Varalaru - T. V. Sadasiva Pandarathar, page 116, published 1974. Annamalai University).

  4. S.I.I. Vol.V. No. 1354.

  5. Ins. 54 of 1918.

  6. Ins. 102 of 1921.

  7. பரிபாடல் - 11, நல்லத்துவனார் வரிகள் 75 முதல் 90 வரை (Paripadal - 11, lines 75 to 90 by Nallanthuvanar).

  8. திருமயிலைப்பதிகம் - திருஞானசம்பந்தர் - 4வது பாடல் (Thirumayilaipathigam - Thirugnanasambandar - 4th song).

  9. S.I.I. Vol.V. No. 1379.

  10. ARE. No. 1918 Ins: 54.

  11. Ins. 674 of 1919.

  12. திருவாரூர் - குடவாயில் பாலசுப்ரமணியம் நூல் பக்கம் (ARE No. 674 of 1919) (Thiruvarur - Kudavayil Balasubramanian, citing ARE No. 674 of 1919).

  13. கங்கை கொண்ட இராசேந்திரசோழன், பக்கம் 25, வெளியீடு ஆண்டு: 2017 - டாக்டர். இல. தியாகராஜன் (Gangai Konda Rajendra Cholan, page 25, published 2017 - Dr. L. Thyagarajan).

  14. சோழர் காலச் செப்பேடுகள் - தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, ஆசிரியர் புலவர் வே.மகாதேவன், நூல் பக்கம் 886, வெளியீடு ஆண்டு: 2013. (Chozhar Kaala Cheppedugal - Tamil University Publication, Author Pulavar V. Mahadevan, page 886, published 2013).

  15. கோபிசந் நாரங்க் : 2005- அமைப்புவதம், பின் அமைப்பியல் மற்றும் கீழைக் காவிய இயல், தமிழாக்கம்: எச்.பாலசிப்பிரமணியம். ISBN:978-81-260-1909-3 வெளியீடு; சாகித்திய அகாடமி,புது தில்லி.

இரா. கோமகன், கங்கைகொண்டசோழபுரம்

குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki

இரா. கோமகன் வரலாற்று ஆர்வலர், பொறியாளர். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் மீது பெரும்பற்று கொண்டவர். இந்த பேராலயத்தின் குடமுழுக்கு தருணத்திலும், அதன் திருவிழாக்கள் குறைவற நடப்பதிலும் ஊக்கத்தோடு செயலாற்றியவர். கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவராக உள்ளார். தொடர்ந்து அந்த ஆலயத்தின் வரலாற்று பெருமிதத்தை பேசியும் எழுதியும் வருகிறார்.