 |
| வால்ரஸ் (Walrus) photo: vermontpublic.org |
கடல் விலங்குகள் அந்தச் சிறிய தீவு முழுதும் பாறைகள் போல் குவிந்திருக்கின்றன. பனிக்கடல் யானை என்று அழைக்கப்படும் வால்ரஸ் (Walrus) கூடியிருக்கும் இடம் அது. ஆகாயத்தில் இருந்து பார்க்கும் பொழுது தீவே நீலக் கடலில் மிதக்கும் ஒரு பெரும் உயிரினத்தைப் போல் உள்ளது. அதன் பழுப்பு சருமம் மெல்ல அதிர்ந்து, தசையாலான அலைகளாக விரிந்து, தீவின் எல்லா திசைகளுக்கும் பரவுகிறது. வாயில் துருத்திக் கொண்டிருக்கும் இரு தந்தங்கள் மின்ன, ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு, கண்களில் மிரட்சியும், கோபமும் எதிரொலிக்க, ஒன்றின் மேல் ஒன்று படர்ந்து, தவழ்ந்து தத்தி தத்தி முன்னேறுகின்றன. திரையில் இந்தக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது பின்னணியில் டேவிட் அட்டன்பரோவின் (David Attenborough) குரல் ஒலிக்கிறது. மனிதனால் உந்தப்பட்ட காலநிலை மாற்றம் கடலில் மிதக்கும் பனிக்கட்டிகளின் அளவை அதிரடியாக குறைத்திருக்கிறது என்று வருந்துகிறது. வால்ரஸ்கள் ஓய்வெடுக்க இது போன்ற மிகச் சிறிய தீவுகளே மிச்சம் உள்ளன என்று வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறது. அவரின் குரலில் இவ்வளவு அழகான வீட்டை நாசம் செய்திருக்கிறோமே என்ற ஆதங்கம் பூரணமாக ஒலிக்கிறது.
இடப் பற்றாக்குறையால் வால்ரஸ்கள் படிப்படியாக தீவின் மேல்தளத்திற்கு நகர்கின்றன. இயற்கையால், பனிப்பாறைகளின் வழுவழுப்பான பரப்புகளின் மேல் தவழ்வதற்கும், குளிர்ந்த நீரில் நீந்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட உடல்கள், சிறு கைகள் கொண்டு நிலத்தைக் கீறி ஏறக்குறைய எண்பது மீட்டர் உயரம் ஏறுகின்றன. அந்த உயரத்தில் இருந்து கடல் எங்கோ பாதாளத்தில் ஆர்ப்பரிக்கிறது. வால்ரஸ்களுக்கு பார்வை சற்று மந்தம், அட்டன்பரோ தொடர்கிறார், ஆனால் அவற்றால் கீழே கடலில் நீந்திக் கொண்டிருக்கும் தன் இனத்தை உணர்ந்து கொள்ள முடியும், ஆகவே அவற்றோடு சேர்ந்து கொள்ள அவை அந்த உயரத்தில் இருந்து…
கடலுக்கு செல்ல வேண்டும் என்ற விசை அவற்றை முடுக்க மேலிருந்துத் தட்டுத் தடுமாறி இறங்குகின்றன. பொல பொலவென்று சரியும் மண் மற்றும் வழுக்குப் பாறைகள் நிரம்பியிருக்கும் செங்குத்தான சரிவில் ஊர்ந்து, பிடி நெகிழ்ந்து, அவற்றின் ஒரு டன் எடை புவிஈர்ப்பு சக்தியிடம் தோற்று, காற்றில் கரணம் அடித்தபடியே, கீழே பழுப்பேறிய பற்கள் போல் துருத்திக் கொண்டிருக்கும் பாறைகளை நோக்கி, ஒன்றின் பின் ஒன்றாக…
(Frozen World ஆவணப்படத்தில் இருந்து ஒரு காட்சி)
காலநிலை மாற்றம் என்ற சொற்றொடர் புழக்கத்திற்கு வந்து சில பத்தாண்டுகள் ஆகி விட்டன. மாற்றங்களைக் கண்காணிக்க, அதைப் பற்றி ஆராய, அறிக்கைகள் எழுத, அரசாங்கங்களை ஒன்று திரட்ட என்று பல கட்டமைப்புகள் உருவாகி விட்டன. ஆனால், இவை யாவும் ஒரு சராசரி மனிதனின் மனதைத் தொடுமா? சந்தேகம் தான்.
காலநிலை மாற்றத்தை மனிதன் உணர்ந்து கொள்ளும் விதத்தை விளக்க ஒரு குரூரமான உபமானம் உண்டு. கொதிக்கும் நீரில் தவளையை விட்டால் அது சட்டென்று துள்ளிக் குதித்து ஓடி விடும். ஆனால், குளிர்ந்த நீரில் தவளையை இட்டு, நீர் இருக்கும் பாத்திரத்தை படிப்படியாக சூடேற்றினால், உடல் வேகும் வரை தவளை அதனுள்ளேயே இருக்கும்.
பெரும் பாத்திரம் போல் இருக்கும் இந்த பூமியில் நடந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றம் அது போலத் தான். மெதுவாக மாறிக் கொண்டிருக்கும் இதன் தாக்கத்தை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. தவளைகள் போல் நமக்கும் பாத்திரம் சூடாகிறது என்று தெரிவதில்லை. அதற்கு காரணங்கள் உண்டு.
இயற்கையைப் பற்றிய நமது சிந்தனை கால அளவில் சிறியவை. சில வருடங்களோ அல்லது சில பத்தாண்டுகளோ தான் அவற்றின் நீட்சி. போன வருடத்தின் வெள்ளம், வரப் போகும் ஆண்டின் நீர் பற்றாக்குறை, மூன்றாண்டுகளுக்கு முன் அடித்த கடுமையான வெயில் என்ற சிறு இடைவெளிக்குள்ளே தான் இயற்கையை அவதானிக்கிறோம்.
அது மட்டும் அல்லாது புற உலகில் நாம் காணும் இடங்களும் ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கிவிடும். நம் பயணங்கள் சுருக்கமானவை. பெரும்பாலும் நாம் சென்று வருவது ஊர்களுக்கும், நகரங்களுக்கும் மட்டும் தான். காடுகளுக்கோ, பாலைவனங்களுக்கோ நம் கால்கள் செல்வதில்லை. இந்த இடங்கள் எல்லாமே ஒரு விதத்தில் வேற்று கிரகங்கள் தான். எங்கோ, நம் அன்றாடங்களுக்கு அப்பால், மிகத் தொலைவில் இருப்பவை.
இப்படியாக வாழ்க்கையைச் சுற்றி நாம் வரைந்து கொண்ட கோடுகள் நடைமுறையால் வகுக்கப்பட்டவை. அவை உள்ளடக்கிய விஸ்தீரணம் குறைவு. பென்ஷன், விலைவாசி, கிரிக்கெட், காபியின் தரம், என்று தினசரிகளால் நிறைந்திருக்கும் அகத்தில் காலநிலை மாற்றம் எங்கோ, யாருக்கோ நடப்பது என்ற சிந்தனை உதிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. நம் உலகம், நம் பிரச்சனைகள்.
ஆனால், எப்பொழுதாவது மாயக்கரம் ஒன்று, மெதுவாக சூடேறிக் கொண்டிருக்கும் நீரில் இருந்து நம்மை மேலே தூக்கி நிறுத்தும். நாம் வசித்து வரும் இந்தப் பாத்திரத்தின் முழு வடிவையும், நம்மை சுற்றி இருக்கும் அளவிலா பரப்புகளையும், அதன் அதிசயங்களையும், அதில் உண்டாகும் சலனங்களையும், அதில் நாம் உண்டாக்கும் சலனங்களையும், கொப்பளித்து வரும் வெப்பக் குமிழிகளையும் நமக்கு காண்பிக்கும். இந்த விஸ்வரூப காட்சியை காணும் நம்மில் சிலருக்கு, சில கணங்களுக்காவது, நாம் யார், இங்கே நம் இடம் என்ன, கருங்கடலில் வண்ணக் கோலிக்குண்டு போல் மிதக்கும் இந்தப் பூமியை நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது போன்ற சிந்தனைகள் அன்றாடங்களால் கெட்டிப்பட்ட நம் மனங்களை சற்றேனும் நனைக்கும். இப்படி நம்மை மேலே தூக்கி நிறுத்தி வைக்கும் ஒரு மாயக்கரம் டேவிட் அட்டன்பரோ.
பசிபிக் கடலில் உள்ள கலப்பகோஸ் (Galapagos) தீவுகளில், பிண்டா தீவு (Pinta Island) ஆமை இனத்தின் கடைசி பிரதிநிதியான, Lonesome George என்ற ஆமையின் பின்னே தவழ்ந்து செல்கிறார் டேவிட் அட்டன்பரோ. இவரை பல ஆண்டுகள் முன்பு இங்கே சந்தித்துள்ளேன், என்று ஆமையை பார்த்து கூறுகிறார். ஜார்ஜ் தன் கண்களை உருட்டி, சதை தொங்கும் நீண்ட கழுத்தை துருத்திக் கொண்டு, வயதான கால்கள் தள்ளாட மெதுவாக முன் நகர்கிறது. இவருக்கு ஏறக்குறைய எண்பது வயது, மூட்டுக்கள் கொஞ்சம் தேய்ந்து விட்டன என்று சொல்லி விட்டு நம்மை நோக்கி, என்னைப் போலவே என்கிறார் அட்டன்பரோ.
(Attenborough’s last encounter with Lonesome George, Nature on PBS, ஒரு காட்சி)
 |
| Lonesome George (photo: orionmagazine.org) |
காலநிலை மாற்றம் போன்ற நம் மனம் எளிதாக உள்வாங்க மறுக்கும் கருத்துக்களை மிகச் சாதுர்யமாக, அதே சமயத்தில் மிகவும் சுவாரஸ்யமாக, நம் மனதிற்குள் திணிப்பதில் டேவிட் அட்டன்பரோ வல்லவர். இதற்கு அவர் எடுத்து வைத்த முதல் அடி இந்த பூமியில் வசிக்கும் பிற உயிரினங்களை நமக்கு பரிச்சயப்படுத்துவது. இது திமிங்கிலம், இதன் எடை பல டன்கள், இது இங்கெல்லாம் வாழ்கிறது என்ற வர்ணனைகளைத் தாண்டி, காட்சிப்படுத்தப்படும் உயிரினத்தின் மீது ஒரு வித ஈர்ப்பையும், ஆவலையும் உண்டாக்கக்கூடியவர் அட்டன்பரோ.
இவர் எழுதி, தயாரித்து, விவரிக்கும் ஆவணப்படங்களில் உலா வரும் கானுயிர்களுக்கு ஒரு புனைவின் நாயகன் எதிர்கொள்ளும் வெற்றி, தோல்வி, காதல், சோகம் போன்ற பல உணர்ச்சிகள் உண்டு. ஒளிப்பதிவு, காட்சித் தொகுப்பு, பின்னணி இசை ஆகியவை சேர்ந்து இந்த உணர்ச்சிகளை நம் மனதிற்குள் கடத்தினாலும், இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் இருப்பது இவற்றை பற்றி டேவிட் அட்டன்பரோ சொல்லும் கதைகள். நாம் மிகவும் விரும்பும் ஒருவர் நம் அருகே உட்கார்ந்து நம் கரம் பற்றி நமக்கு மட்டும் சொல்வது போல் இருக்கும் கதை சொல்லும் பாணி இவருக்கே உரியது. எங்கே பேச வேண்டும், எங்கே அமைதி காத்து காட்சிகளை பேச வைக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர் அட்டன்பரோ.
எங்கோ இருக்கும் நியூ கினீ (New Guinea) தீவுகளில் இணையை ஈர்க்க பாலே நடன நங்கை போல் இடுப்பை சுழட்டி நடனம் ஆடும் வெஸ்டர்ன் பரோடியா (Western Parotia) பறவைகள் ஆனாலும் சரி, ஆப்பிரிக்காவின் செரெங்கெட்டி வெளிகளில் காட்டு நாய்கள் கூட்டத்திலிருந்து தன் குட்டியை காக்கும் வில்டெபீஸ்ட் (Wildebeest) தாயாக இருந்தாலும் சரி, பென்குயின்களை பந்தாடும் ஆர்கா திமிங்கிலங்கள் ஆனாலும் சரி இந்தக் காட்சிகளுக்கு அட்டன்பரோவின் சற்றே மெல்லிய குரல் அளிக்கும் வர்ணனை கூடுதல் அழகு தான். ஏற்கனவே வரையப்பட்ட கோட்டோவியத்தை ஓரிரு கோடுகள் கூட்டி மெருகேற்றும் கைதேர்ந்த ஓவியர் போல் தான் இந்தக் கதைசொல்லியின் வர்ணனையும்.
டேவிட் அட்டன்பரோ உலகின் மூலை, முடுக்குகளில் இருக்கும் உயிரினங்களை அறிமுகம் மட்டும் செய்வதில்லை, இவற்றோடு நாம் கொண்டுள்ள தொடர்புகளையும் அவர் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறார்.
பாலைவனத்தில் இருந்து கிளம்பும் புழுதிப் புயல் பெரும் திரை போல் நிலத்தில் இருந்து எழுகிறது. இது விண்வெளியிலிருது பூமியை சுற்றி இருக்கும் ஒரு மென் படலம் போல் காட்சியளிக்கிறது. இந்தத் துகள்களின் கனம் பல்லாயிரம் டன்கள். காற்றால் அலைக்கழிக்கப்பட்டு பல நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடல் பரப்பின் மேல் மெல்லிய மழை போல இறங்குகிறது இந்தத் தூசு. கடலில் வாழும் நுண்ணுயிர்களுக்கு இதுவே உணவு. நுண்ணுயிர்களை உண்ண கூனிப்பொடிகள் (Krill) தோன்றுகின்றன, அவற்றை உண்ண வரும் சிறு மீன்கள், என்று படிப்படியாக வளரும் உணவு சங்கிலியின் உச்சத்தில் ஓங்கில்கள் (Dolphins) அந்தப் பகுதிக்கு வந்து சேர்கின்றன. இவை சிறு மீன் கூட்டங்களை கீழிருந்து மேலே விரட்டுகின்றன. வானிலிருந்து நீர்காகங்களும் (Cormorants), ஆலாப் பறவைகளும் (Terns), போர் விமானங்களில் இருந்து விழும் குண்டுகள் போல், செங்குத்தாக நீரைக் கிழித்து நுழைந்து மீன்களை வேட்டையாடுகின்றன. பல நிமிடங்களுக்கு அந்தக் கடல் பகுதியே ஒரு பெரும் மத்து வைத்து கடைந்ததைப் போல், பொங்கி நுரையாடுகிறது.
(Our Planet தொடரிலிருந்து ஒரு காட்சி)
இந்த உலகில் எந்த உயிரினமும் தனித்து இல்லை. எல்லாமே வலை போல் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளன. நேராகவோ அல்லது அவை வாழும் நிலப்பரப்புகள் வழியாகவோ பின்னப்பட்ட இந்தப் பிணையம் பல கோடி ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிறது. இந்த வலையில் விழும் ஓட்டைகளும், பொத்தல்களும், முறிவுகளும் அதிர்வுகள் போல் இவ்வலை முழுதும் படர்ந்து பெரும் தாக்கங்களை உருவாக்குகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் வளைய வரும் நீரோட்டங்கள், ஐரோப்பாவின் வெப்ப நிலையை தீர்மானிக்கின்றன. பசிபிக் சமுத்திரத்தின் நீர் பரப்பின் வெப்ப நிலை தென்னிந்தியாவின் பருவமழையின் அளவை நிர்ணயிக்கிறது. இது போன்ற பெரும் தொடர்புகளை டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூட திடகாத்திரமாக இருந்த ஆஸ்திரேலிய பவளப்பாறைகள், கடல் நீரின் அதிகரிக்கும் வெப்பத்தால் வெளுத்து, மடிந்து கொண்டிருக்கும் காட்சிகளை ஆவணப்படுத்திய இவரது படம் உலகம் முழுதும் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது. இது போன்ற மாற்றத்தின் தாக்கம் பெரியது.
பவளப்பாறைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் இவை வரவேற்று, தங்க வைக்கும் கடல் உயிரினங்களின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த மீன் வளத்தை நம்பி வாழும் மனித சமூகங்கள் பல. ஏன், இந்தியாவில் கூட கச் வளைகுடாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை பல கடலோரப் பகுதிகளில் பவளப்பாறைகள் உள்ளன. இவற்றில் பல உயிரற்று போய்க் கொண்டிருகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மீன்களை நம்பி வாழும் மக்களின் வாழ்வியலுக்கு இது ஒரு பெரிய அச்சுறுத்தல். ஆகவே, காலநிலை மாற்றம் என்பது எங்கேயோ நடப்பது அல்ல. அது நம் முன்னேயே நடந்து கொண்டிருக்கிறது.
உலகம் முழுதும் வியாபித்திருக்கும் காலநிலை மாற்றத்தின் பல பரிமாணங்களை, அவை எவ்வாறு நம் கண்களுக்கு புலப்படா தொடர்புகளை கத்தரித்து, பெரிதாக்கி ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளாக இருந்த சமன்பாட்டை குலைக்கிறது என்பதை, அதன் தாக்கங்களை, காட்சிகளாக நமக்குக் கடத்துவதில் அட்டன்பரோ போன்றவர்களின் பங்கு மிகப் பெரியது. இது போன்ற காட்சிகள் நமக்குத் தேவை. ஏனென்றால், இயற்கையில் ஏற்பட்டிருக்கும் இந்தச் சேதங்களுக்கு நாம் ஒரு முக்கியக் காரணம்.
ஒரு மலர் இதழ்களை விரிப்பது போல் விரல்கள் அபிநயிக்க ரோமம் நிறைந்த ஆரஞ்சு வண்ணக் கரம் ஒன்று மெதுவாகத் திரையில் நீள்கிறது. கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காய்களை நளினமாகக் கொய்து அவற்றை வாயில் இடுகிறது. காய்களின் சத்தான பகுதிகள் மெதுவாக மெல்லப்பட்டு, தேவையில்லாத பகுதிகள் கடைவாய் வழியே வெளியேற்றப்படுகின்றன. மேலிருந்து காட்டின் தரைக்கு வந்து சேரும் இந்த எச்சங்களில் இருக்கும் விதைகள் சிதறி பல இடங்களுக்கு உருள்கின்றன. இந்த உயரமான மரங்கள் உராங்குட்டான்களின் வீடு டேவிட் அட்டன்பரோ நம்மிடம் கூறுகிறார், மரத்தின் விதைகளை பல்வேறு திசைகளுக்கு பரப்பி, கானகத்தை வளர்த்து, பராமரிப்பதில் இவற்றின் பங்களிப்பு முக்கியமானது.
திரையில் இருக்கும் உராங்குட்டான் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்தின் நீண்ட கிளையை தனது காலால் பற்றி பாலம் ஒன்று அமைக்க அதன் மீதேறி உராங்குட்டான் குட்டி ஒன்று செல்கிறது. அவை வாழ இது போன்று இடைவெளிகள் ஏதும் இல்லாத அடர்வனங்கள் தேவை. ஆனால்…அவரின் குரல் தேய்கிறது. காட்சி மாறுகிறது.
பிரமாண்டமான மரங்களை வேரோடு சாய்த்து, புதர்களுக்கு தீ மூட்டி சாம்பலாக்கிய நில பரப்பில், பாதி வெட்டப்பட்ட ஒரு மரத்தின் கிளையில் உராங்குட்டான் ஒன்று, புகைச் சுருள்கள் வான் நோக்கி எழும்பும், வெட்ட வெளியை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருக்கிறது. அதன் சருமத்தில் சாம்பல் திட்டுகள். உராங்குட்டான்களின் வீடு இப்பொழுது செம்பனைத் தோட்டம், அட்டன்பரோவின் குரலில் கோபத்தைத் தாண்டி, அயர்ச்சியும் சேர்ந்திருக்கிறது. கச்சிதமாக, நேர் வரிசைகளில் நடப்பட்டிருக்கும் செம்பனை மரங்களின் காட்சி திரையில் தோன்றுகிறது…
(Life on Our Planet ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சி)
 |
| உராங்குட்டானுடன் டேவிட் அட்டன்பரோ 1982(photo: discoveranimals.co.uk) |
கடந்த சில ஆண்டுகளாக டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படங்களில் பூமி என்ற இந்தப் பெரிய இணையத்தை, தன் செயல்களால், துண்டுகளாக்கும் மனிதன் தான் மையம்.
துருவங்களில் உறைந்திருக்கும் பனிப்பாறைகளின் சுருக்கத்திலிருந்து, மழைக்காடுகளின் அளவுகள் அதிரடியாக குறைந்தது வரை. வெளுத்துப் போகும் பவளப்பாறைகள் முதல் கடலில் மிதக்கும் பல்லாயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் வரை மனிதன் சுற்றுசூழலுக்கு விளைவித்த தீமைகள், கேமராவின் கண் கூசவைக்கும் ஒளியில், ஆபாசமாக நம் கண் முன்னே உலவுகின்றன. இது ஏதோ அவரின் சொந்தக் கருத்து, கதை என்ற எண்ணம் சில பார்வையாளர்களுக்கு வந்திருக்குமோ என்ற ஐயம் அவருக்கு தோன்றியது போல அவரின் சமீபத்திய ஆவணப்படங்களில் பல அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்கள் திரையில் அணிவகுக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த Life on Our Planet என்ற ஆவணப்படம் இதற்கு ஒரு உதாரணம். உலகத்தின் பாதி மழைக்காடுகள் அழிந்து விட்டன; கடலில் பெரிய மீன்களின் எண்ணிக்கை ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் குறைந்து விட்டது; மனிதனும் அவன் வளர்க்கும் கால்நடைகள் மட்டுமே உலகளவில் பாலூட்டிகளின் எண்ணிக்கையில் தொண்ணூற்று ஆறு சதவிகிதம், அதாவது வெறும் நான்கு சதவிகித பாலூட்டிகளே காடுகளில் உள்ளன என்று பட்டியல் நீள்கிறது. மனிதனுக்காக மனிதனால் நிர்வகிக்கப்படும் இந்த பூமியில் மற்ற உயிரினங்களுக்கு சிறிது தான் இடமுண்டு என்கிறது இந்த விவரங்கள்.
டேவிட் அட்டன்பரோ நல்ல கதைசொல்லி. தொலைக்காட்சி முன் அறுபது நிமிடங்கள் செல்வதே தெரியாத வகையில் நிகழ்ச்சி நடத்தும் கேளிக்கையாளர் என்ற பிம்பங்களைத் தாண்டி, இந்த பூமியில் உள்ள சகல உயிரினங்கள் மேலும் மிகுந்த அக்கறை கொண்ட ஒருவரின் குரல் தான் இந்த ஆவணப்படம் முழுதும் ஒலிக்கிறது. அந்த அக்கறையின் காரணமாகவே நம்மை பயமுறுத்தவும் செய்கிறார்.
பூமி இதுவரை ஐந்து பேரழிவுகளைக் கண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு நிகழ்விலும் பூமியின் பெரும்பாலான உயிரினங்கள் மடிந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட ஒரு பேரழிவில் (Permian-Triassic extinction event) பூமியின் ஏறக்குறைய 80 சதவிகித உயிரினங்கள் அழிந்தன. இதைப் போன்ற பேரழிவுகளுக்கு எரிமலை வெடிப்பு, பூமியில் விழுந்த பெரும் விண்கல் என்று பல இயற்கையான காரணங்கள் உண்டு. ஆனால், பூமியின் வரலாற்றில் முதன் முறையாக ஒரேயொரு உயிரினத்தால் பேரழிவு ஒன்று நடந்தேறப்போகிறது. உலகத்தின் ஆறாவது பேரழிவு மனிதனால் ஏற்படும். காடுகள் அழிந்து, பனிப்பாறைகள் உருகி, நிலம் வளமையை இழந்து, வறண்ட பூமியில் சுழற்காற்றுகள் எலும்புக்கூடுகள் போல் நிற்கும் மரங்களைப் பந்தாடும் காட்சிகள் நம் திரையில் தோன்றி நிலைகுலைய வைக்கின்றன.
இதைப் போன்ற துன்பியல் செய்திகளை அளிக்கும் தூதுவனாக இருப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்கிறார் டேவிட் அட்டன்பரோ. ஆனால், இதைச் சொல்லாது விட்டால் தான் பெரும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகக் கூடும் என்பதும், இத்தனை ஆண்டுகள் இயற்கையைத் திரையில் கொண்டு வந்ததற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும் என்ற எண்ணமே அவரை இந்த வயதிலும் இது போன்ற ஆவணப்படங்களைத் தொகுத்து, பின் குரலாக ஒலிக்க முடுக்குகிறது. பூமியை அச்சுறுத்தும் பேரழிவுகளை அவர் நமக்கு அடிக்கடி நினைவூட்டினாலும் அடிப்படையில் மனிதன் மீது அவருக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதன் பேரில் தான் இந்தப் பேராபத்திலிருந்து பூமியை மீட்க மனிதனால் வடிவமைக்கப்பட்ட சில வழிகளையும் வர்ணிக்கிறார்.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, மொரோக்கோ போன்ற நாடுகள், பெரும் அளவில் சூரிய ஒளியை எரிசக்தியாக்கும் முயற்சிகள். கட்டற்ற மீன் பிடிப்பை மட்டுப்படுத்தும் விதத்தில், கடலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக சிலவற்றை அறிவித்து, அவற்றில் ஏற்படும் நல்ல மாற்றங்கள் எப்படி கடலின் பிற பகுதிகளிலும் மீன் வளத்தை அதிகப்படுத்துகிறது என்று காண்பித்து கொடுக்கும் பலாவு (Palau) போன்ற சில நாடுகள். சிறு இடங்களில் விவசாயத்தின் உற்பத்தியை பன்மடங்காக உயர்த்தியிருக்கும் நெதர்லாண்ட்ஸ் போன்ற நாடுகள். இந்த உதாரணங்கள் எல்லாம் சிறு முன்னோடிகள் தான். ஆனால், நல்ல மாற்றத்திற்கான விதைகள் இது போன்ற முயற்சிகளில் தான் உள்ளன.
கடந்த அறுபது ஆண்டுகளாக, ஆழ் கடல்கள், வான் தொடும் வனங்கள், பல கோடி ஆண்டுகளாக உறைந்து இருக்கும் நீலப் பனிப்பாறைகள், கடல் வற்றி போனது போல் காட்சி அளிக்கும் உப்பு நிலங்கள் என்று பல லட்சம் மைல்கள் பயணித்து, ஏறக்குறைய முப்பத்தொன்பது நாடுகளுக்கு சென்று, பல நூறு உயிரினங்களைக் கண்டு, அதை மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஒருவரின் சிந்தனை இவை.
‘இயற்கைக்கு வீரியம் அதிகம். கொஞ்சம் நேரம் கொடுத்தால் போதும். கிளைத்தெழுந்து விடும்’ ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் அணு உலை உருகி பெரும் சுற்றுசூழல் மாசு ஏற்பட்டு முற்றிலும் கைவிடப்பட்ட செர்னோபில் நகரத்தின் சிதிலங்களில் நின்று கொண்டு சொல்கிறார் அட்டன்பரரோ. சிவப்பு நரி ஒன்று பள்ளி போல காணப்படும் கட்டிடம் ஒன்றில் சாவகாசமாக நுழைந்து அங்குமிங்கும் உலவுகிறது, மேடு பள்ளங்கள் கொண்ட தார் சாலையில் முளைத்த புற்களை காட்டு குதிரை ஒன்று மேய்கிறது. மனிதனுக்கும் பிற உயிரினங்களுக்கும் உள்ள ஒரு பெரும் வித்தியாசம், மனிதனால் எதிர்காலத்தை கற்பனை செய்து கொள்ள முடியும். அந்த எதிர்காலம் இருண்டு இருக்கும் என்று நானும் நீங்களும் எண்ணியிருந்தோம். ஆனால், அது அப்படி இருக்க தேவையில்லை. நம்மை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. இயற்கையோடு இணைந்து வாழ வழி இருக்கிறது. நமக்கு அளிக்கப்பட்ட உலகத்தை மீண்டும் வளமாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற்ற நமக்கு தேவை மன உறுதி மட்டுமே…கற்பனை செய்து பாருங்கள், என்று சொல்லிவிட்டு நடந்து செல்கிறார் டேவிட் அட்டன்பரோ. காட்டிற்கு நடுவே செர்னோபில் நகரத்து அடுக்குமாடி கட்டிடங்கள் நிற்பதை ஒரு பறவையின் பார்வையில் நமக்கு காண்பித்து விட்டு காட்சி மறைகிறது.
(A Life on Our Planet ஆவணப்படத்திலிருந்து ஒரு காட்சி)
ரகு ராமன்
 |
| ரகு ராமன் |
ரகு ராமன் எழுத்தாளர் அறிவியல், சூழலியல் மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர். இவரின் கட்டுரைகள், சிறுகதைகள் சொல்வனம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளி வந்துள்ளன. காலநிலை மாற்றங்கள் உலக வரலாற்றை எப்படி மாற்றியிருக்கின்றன என்பதை விவரிக்கும் இயற்கையின் மரணம் (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வேற்று கிரக வாசிகளைப் பற்றிய அறிவியல் தேடலை அறிமுகப்படுத்தும் ஏலியன் வேட்டை (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வெளிவந்துள்ளன. ரகு ராமன் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார், சென்னையில் வசித்து வருகிறார்.
madhuvanam2013@gmail.com