குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரைகள் குறித்த சிறு நூல் பனை உறை தெய்வம். இந்த தொகுப்பு கோயில் கட்டிடக்கலை, சிற்பவியல், பக்தி இலக்கியங்கள் சார்ந்த 25 கட்டுரைகள் அடங்கியது.
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு அணுகுமுறை மூன்று சரடுகளால் ஆனது. சிற்பவியல் பின்புலம் கொண்ட ஆய்வறிஞராக ஒவ்வொரு ஆய்வு முடிவிலும் சிற்பங்களில் அமைப்பை முக்கிய சான்றாக கொள்கிறார். சிற்பவியலுடன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள், பக்தி இலக்கிய சான்றுகள் என்று மூன்று சரடையும் இணைத்து தனது ஆய்வுகளை முன் மொழிகிறார்.
முதல் கட்டுரை மயூர மன்னர்களின் காலத்திலிருந்தே பனைமரம் ஒரு சிவனின் வடிவமாக வழிபடப்பட்டு வருவதை விவரிக்கிறது. சதாசிவ வடிவத்தின் ஐந்து முகங்களான ஈசான்யம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவற்றை குறிக்கும் விதமாக 4 பட்டைகளும் மேலே ஈசானமாக உள்ள முகமும் கொண்ட பனை மரம் போற்றப்படுகிறது. இதனை கி.பி 2ம் நூற்றாண்டை சேர்ந்த போபால் மற்றும் குவாலியர் அருங்காட்சியகங்களில் உள்ள நான்கு முகங்கள் கொண்ட பனை மர சிற்பங்களை கொண்டு விளக்கியுள்ளார்.
திருமாலுக்கும் பிரம்மனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்ற வாதத்தின் போது அவரிடையே தோன்றிய தழல் வடிவாகிய நெடுந்தூணின் அடிமுடியை யார் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என முடிவு செய்து திருமால் வராக உருவெடுத்து மண்ணை அகழ்ந்து செல்ல, பிரம்மன் அன்ன உருவெடுத்து மேலே பறந்து சென்றார். இருவரும் தோல்வியுற்று திரும்ப, அவர்கள் முன் தோன்றிய தீ வடிவான தூணே பரம்பொருளாகிய சிவம் என்பதை கண்டுணர்ந்தனர்.
கார்த்திகை தீப திருநாளில் சிவாலயங்களில் கொளுத்தப்படும் சொக்கன்பனையில் இந்த புராணக்கதை நிகழ்த்திக்காட்டபடுகிறது. ஆலவாயில் உள்ள சிவனை குறிக்கும் சொக்கன் இன்னும் சொல்லோடு அமைந்த சொக்கன் பனை என்பது பின்னாளில் மருவி சொக்கப்பனை ஆகியுள்ளது. நெடிய பனை மரத்தை நட்டு அதை சுற்றியும் பனை ஓலைகளால் கூடமைத்து மூலவரிடமிருந்து ஏற்றப்பட்டு வந்த ஐந்து தீபங்களை ஒன்றாக்கி சொக்கன் பனையை கொளுத்துவர்.
| சொக்கன் பனை |
இந்த முதல் கட்டுரை கொண்ட மயூர மன்னர் ஆட்சியில் எடுக்கப்பட்ட சிற்பத்தில் தொடங்கி பனை தலவிருட்சமாக இருக்கும் வெவ்வேறு தலங்களை குறிப்பிட்டு, கிருபநாதீஸ்வரர் கோயிலில் இருக்கும் பனை குறித்த கல்வெட்டை தொட்டு, சேர மன்னர்கள் காவல் மரமாக பனை இருந்ததையும் சொல்லி முடிகிறது.
குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரைகள் வரலாற்றின் ஒரு காட்சியின் மீது மட்டும் துளி வெளிச்சத்தை பாய்ச்சுவது. அதிலிருந்து முன்னும் பின்னுமாக பல சரடுகளை தொடர்ந்து செல்ல முடியும். குடந்தை கிடந்த மாமாயன் என்ற கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் ராஜகோபுரம் குறித்த கட்டுரை இந்த செய்திகளை சொல்கின்றன.
ராஜகோபுரம் திப்பதேவ மகாராயர் காலத்தில் எடுக்கப்பட்டது.
கோயிலின் கட்டிட அமைப்பு திருச்சுற்றுகள் பரிவார ஆலயங்கள், உற்சவர் குறித்த அறிமுகம்.
அதிஷ்டானத்திற்கு மேல் அவர் எழுப்பிய கந்தன் ஆடும் கரணசிற்பங்கள் (இவை முருகன் ஆடும் கரண சிற்பங்கள் என்று தமிழக கோபுரக்கலை மரபு புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்).
திப்பதேவ மகாராயர் எழுதிய தால தீபிகை நூல், இந்த சிற்பங்களுக்கு மூலமாக அமைந்திருக்க கூடிய குகேஷ பரத லக்ஷணம் இன்னும் சுவடி நூல்.
இவை விப்ர சபாபதி ஈஸ்வரம் என்னும் கோயிலில் இருந்து இடம் பெயர்ந்து எழுந்தவை.
இவற்றில் எந்த ஒரு சரடையும் பற்றி அறிதலை விரிவாக்கிக்கொள்ள முடியும். திப்பதேவ மகாராயர் சோழ நாட்டின் மகா பிரதானியாக இருந்தவர். இதிலிருந்து தொடங்கி விஜயநகர வரலாற்றை தொடர்ந்து செல்ல முடியும். கரண சிற்பங்களில் தொடர்ந்து சென்று நாடிய நாடக வரலாற்றிற்குள் நுழையலாம். விப்ர சபாபதி ஈஸ்வரம் என்ற சிவன் கோயிலிலிருந்து இந்த கரண சிற்பங்கள் எவ்வாறு இங்கு இடம் பெயர்ந்தன என்று தொடர்ந்து எழுந்து கோபுரங்கள் என்னும் பெரும் ஆய்வு களத்திற்குள் நுழையும் சாத்தியங்களும் உள்ளன.
திருநாவுக்கரசர் குறித்த மூன்று கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. முதல் கட்டுரையில் மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு நாவுக்கரசர் பிறந்தது, சமண மதத்தை தழுவியது, சூலை நோயிலிருந்து மீள தமக்கை திலகவாதியாரை சரணைடைந்தது, அவர் கூற்றுப்படி திருவதிகை வீரட்டானத்தில் "கூற்றாயினவாறு விளக்ககலீர்" என்ற பதிகம் பாடி மீண்டது, ஈசன் நாவுக்கரசர் என பெயர் வழங்கியது, கயிலாய காட்சி காண சென்றுது, ஞான சம்பந்தரை பல்லக்கில் தூக்கி சென்றது வரையிலான வரலாறு ஒரு கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
“யாதுஞ் சுவடு படாமல் ஐயாறடைகின்ற போது” என்ற வரிக்கு சேக்கிழார் அடிப்பொடி இராமச்சந்திரனின் உரை துணைக்கொண்டு கைலாயத்தில் நைந்த உடல் விடுத்து புதிய பிரணவ யாக்கையை அடைந்தார் என்ற விளக்கத்தை அளிக்கிறார். பின்னர் முனிபுங்கவரிடம் கயிலை நாதன் காட்சி கேட்ட நாவுக்கரசர், திருவையாற்று வாவியில் மீண்டெழுந்து ஈசனின் கட்சி கிடைக்கப்பெறுகிறார்.
ஞானசம்பந்தர் "எங்குற்றார் அப்பர்" என்று வினவ, "இங்குற்றேன்" என்று மறுமொழியுரைத்த இடமான சம்பந்தர் மேடு குறித்து ஒரு கட்டுரையில் விவரித்துள்ளார்.
மேலும், திருவையாற்றில் கயிலாய காட்சி கண்ட அப்பர் "மாதர்ப் பிறைக் கண்ணியானை" என்ற 11 பாடலில் பதிவுசெய்ததையும், அதனை விளக்கும் தாராசுரம் சிற்ப தொகையும் விளக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் புடைப்பு சிற்பமாகவோ கோஷ்ட சிற்பமாகவோ அமைந்துள்ள பிச்சாண்டவர் சிற்பம் பாதுகை அணிந்து குள்ள பூதத்துடன் கையில் பிச்சை பாத்திரம் ஏந்தி வரும் நிலையில் அமைந்திருக்கும். ஆனால் தஞ்சை பெருங்கோயிலின் ராஜராஜன் திருவாயிலின் அதிஷ்டானத்தின் ரிஷபத்தின் மீது அமர்ந்து பிச்சையேற்கும் புடைப்பு சிற்பம் உள்ளது. இந்த உருவத்தை இந்த வடிவத்தை குறிப்பிடும் தேவார பதிகங்களை தொகுத்து ஒரு கட்டுரையில் விலக்கியுள்ளார். இந்த சிற்பம் தமிழகத்தின் வேறு எந்த கோயிலிலும் இல்லை. இதை போன்ற அறிய வடிவங்களும், தக்ஷிணாமூர்த்தி போன்ற அறிந்த வடிவங்களில் உள்ள சில மாறுதல்களும், அந்த மாற்றத்தின் பரிணாமமும் இவரது கட்டுரைகளில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
தமிழக சிவாலயங்களில் உள்ள ராமாயண சிற்பங்களை குறித்த கட்டுரை முக்கியமானது. அகப்பாடல், புறப்பாடல் இரண்டிலுமே ராமாயணம் குறித்த குறிப்புகள் உள்ளன, சிற்பக்கலை நோக்கில் மூன்றாம் குலோத்துங்க சோழன் அவை புலவராக கருதப்படும் கம்பர் 12ம் நூற்றாண்டில் கம்பராமாயண காவியத்தை அரங்கேற்றுவதற்கு முன்பே, பல தமிழக சிவாலயங்களில் ராமாயண சிற்ப தொகைகள் எடுக்கப்பெற்றுள்ளன. உதாரணமாக முதலாம் ஆதித்தசோழன் காலத்து குடந்தை கீழ்க்கோட்டத்தின் கருவறை அதிஷ்டானத்தில் 60க்கும் மேற்பட்ட ராமாயண சிற்ப காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ராமரின் வழி வந்தவராக கருதப்படும் சோழ அரச மரபினர் முதலாம் ஆதித்தன் மூன்றம் குலோத்துங்கன் ஆகியோர் தங்களின் மெய்கிர்த்தீயில் தன்னை ராமன் என்று அறிவித்துகொள்கின்றனர். அதிலிருந்து தொடங்கி, குடந்தை நாகேஸ்வரன் கோயில் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலில் போன்ற கோயில்களில் உள்ள ராமாயண குறுஞ்சிற்பங்களை விவரிக்கும் கட்டுரை.
| புள்ளமங்கை கோயிலில் உள்ள ராமாயண குறுஞ்சிற்பம் |
தஞ்சை பெருங்கோயில், கங்கை கொண்ட சோழீச்சரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆகிய மூன்று சோழர் கால மணி மகுடங்களை குறித்த ஒப்பாய்வை நிகழ்த்தியிருக்கிறார். இவை மூன்றிற்கும் தனியாக பெரும் புத்தகங்கள் இருப்பினும் இந்த கட்டுரைகளில் அவற்றின் திரட்டப்பட்ட வடிவமாக உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள சிற்பங்கள், கோயில் அமைப்பு ஆகியவற்றை விவரிக்கிறார், தாராசுரம் கோயிலிலுள்ள புகழ் துணை நாயனாரின் சிற்ப தொகையை குறித்து தனி கட்டுரை உள்ளது.
கொள்ளிக்காடு, உம்பலப் பாடி நிலாவணை மகாதேவர், தென்குடி திட்டை போன்ற பாடல் பெற்ற தலங்களை குறித்த சிறிய அறிமுகம் கட்டுரைகளில் உள்ளன.
கோச்செங்கணான் செய்த கோயில் சேர்மீன்காள் என்ற கட்டுரை சுவாரசியமானது, கோச்செங்கணான் வரலாற்றையும் தான் முன் பிறவியில் ஆனைக்காவில் சிலந்தியாக பிறந்ததறிந்து 70 மாட கோயில்கள் எடுப்பித்தார் என்ற புராணக்கதை விவாதிக்கப்பட்டுள்ளது. தாராசுரம் மற்றும் மானம்பாடி கோயில்களில் உள்ள கோச்செங்கணான் சிற்பங்களையும், மானம்பாடி கைலாசநாதர் கோயிலின் மகாமண்டபத்து வடபுற கோஷ்டம் ஒன்றின் மேல் உள்ள மகர தோரணத்தில் கோச்செங்கணான் வரலாற்று சிற்பமும் அதில் சாமரம் வீசும் காவிரியின் சிற்பமும் குறிக்கப்பட்டுள்ளது.
சோழர், நாயக்கர் குறித்த விரிவான வரலாற்று சித்திரத்தை அளித்த பேரறிஞர் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ராஜராஜேஸ்வரம், ராஜேந்திர சோழன் போன்ற பெரும் வரலாற்று நூல்களை போலவே, மிக சிறந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு பனை உறை தெய்வம். பல கட்டுரைகள் ஒரு தொடக்க முன்னுரையை அளிக்கின்றன. அதிலிருந்து அந்த ஆலயத்தையும், முன்வைத்துள்ள பார்வை கோணத்தையும் விரித்தெடுக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளன.
மனோஜ் குமார்
குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki
மனோஜ் குமார் திருவானைக்கோவிலை சேர்ந்தவர், பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். வரலாறு, கோயில் கட்டிடக்கலை ஆர்வலர். வலைப்பூவில் ஆலய அறிமுகங்கள் மற்றும் பயணக்கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கியில் பங்களித்துள்ளார்.

