Tuesday, 17 February 2026

கல் சொல்லும் கதை - கலையியல் ரசனைக் கட்டுரைகள், மகேந்திரன்

கொற்றவை- ஓவியம் சில்பி

ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய கலையியல் ரசனைக் கட்டுரைகள் என்ற புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை கீழ்வருமாறு நாம் வகைப்படுத்தி கொள்ளலாம்.

  1. சிற்பங்களை கவிதைகள், புராணங்கள் வழியாக விளக்கும் கட்டுரைகள்

  2. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்கள் (உ.தா: தலைக்கோலி, இட்டிகை)

1.சிற்பங்களை கவிதைகள், புராணங்கள் வழியாக விளக்கும் கட்டுரைகள்:

தமிழகத்தில் பொதுவாக சிற்பங்களைப் பார்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அதனை பொம்மை என்ற அளவில் கடந்து போதல். (ஆபாசம், வீண்வேலை எல்லாம் இதில் சேரும்). இரண்டாவது வகையினர் முழுக்க பக்தி சார்ந்தவர்கள். இவை இரண்டிலும் சேராது அது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு சிறு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சிற்பங்களைப் பார்த்து புரிந்துகொள்ள இந்த புத்தகம் பெரிய உதவியாக இருக்கிறது.

கவிதையிலிருந்து சிற்பம்:

“கார் ஆர் கமழ் கொன்றைக் கண்ணிசூடி

கபாலம் கையேந்தி கணங்கள் பாடா’

- சுந்தரமூர்த்தி தேவாரப் பாடல் (6.2.5)

பெண்கள் பலி பெய்ய இடபத்தின் மேல் அமர்ந்து உண்ணும் பெருமான் - தஞ்சையில் ராஜகோபுரத்தில் இருக்கும் சிற்பம். 

ஒரு சிற்பிக்கு உத்வேகம் அளிப்பது கவிதைகள்தான் என்ற முடிவுக்கு வருகிறார் குடவாயில் அவர்கள். அருவமாக இருக்கும் கடவுளுக்கு கவிஞன் உருவம் அழிப்பது பற்றிய விளக்கத்தை தன் கவிதைகள் மூலம் கொடுக்கிறான். வலிமையான இடபத்தின் மேல் அமர்ந்து, பிச்சையை கபாலத்தில் ஏந்தி, மணம் வீசக்கூடிய கொன்றை மாலையைச் சூடி சிவபெருமான் பலிதேறும் அந்த காட்சியை விவரிக்கிறார் சுந்தரமூர்த்தியார். கவிதைகள் மூலம் சிற்பி ஸ்தூலமான உருவத்தை வடிக்கிறார். இந்த சிற்பம் என்பது வேறு எந்த கோவிலும் காணப்படவில்லை. இதற்கு வேறு புராண ஆதாரங்களும் இல்லை எனச் சொல்கிறார் குடவாயில். இதனை விவரிக்க கூடிய சான்று எனத் தேட ஆரம்பித்தால் அவருக்கு கிடைத்தது சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய பாடலும், அப்பர் அடிகள் இயற்றிய பாடலும் இருக்கின்றன என்கிறார். 

அப்பர் அடிகள் 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். தஞ்சை கோவில் மூன்று நூற்றாண்டுகள் கழித்து 11 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. ராஜராஜ சோழன் சைவத்திற்கு தன் பெரும் ஆதரவை நல்கினான். பக்தி இயக்கம் அதன் உச்சகட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அப்பர் பாடல்கள் அதன் அடி நாதமாக விளங்கியது. தேவாரப் பாடல்கள் பெரும்பாலுமான சிவாலயங்களில் பாடப்பட்டுக்கொண்டிருந்தது. அது பொது மக்களின் மனதில் பெரும் செல்வாக்கை செலுத்தி இருக்க வேண்டும். அந்த ஆழ்மனதில் நிகழ்ந்த மாற்றம்தான் சிற்பியின் கைகளால் தஞ்சையில் சிற்பமாக வந்தது. 

சிற்பங்களின் வளர்ச்சி:

  • அகத்தே கண்ட வளர்ச்சி

  • பிறபுலத்து கலையால் கண்ட வளர்ச்சி

அகத்தே கண்ட வளர்ச்சி: 

பல்லவர் காலம் தொட்டு தமிழகத்தில் கிடைக்கும் கோவில்கலை கூறுகளின் வளர்ச்சி, அவை அடைந்து வந்த உருமாற்றத்தை சான்றுகளோடு விளக்குகிறார் குடவாயில். அவர் காட்டும் உதாரணமாக இளமுருகு உடனுரையும் அம்மையப்பர் சிலையின் வளர்ச்சியைப் பற்றி பார்க்கலாம். குடவாயில் அவர்கள் கவிதையிலிருந்து துவங்குகிறார். 

“நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினை

தென்கடம்பனைத் திருக்கரக்கோயிலோன்”

- திருக்கடம்பூர்ப் பதிகம் - திருநாவுக்கரசர் (5:19.9)

பல்லவனின் சிற்பம்: (முதல் கட்டம்)

கடம்பனைப் பெற்றவள் பங்கினன் எனச் சொல்லி அம்மையப்பரோடு கந்தனாம் குழந்தையையும் இணைத்துக் காட்டியுள்ளதை மேற்கோள் காட்டி அதனை இராஜசிம்ம பல்லவனின் சிற்பி உத்வேகமாகக் கொண்டு (கி.பி 690 முதல் கி.பி 728) கருவறையின் இலிங்கத்திருமேனிக்குப் பின்புறம் சுவரில் சோஸ்கந்தர் திருவுருவத்தை நான்முகன், திருமாலோடு புடைப்புச் சிற்பமாக வடிக்கும் புதிய நெறியை உருவாக்கினான் என்கிறார். அதே உருவத்தை சோழ நாட்டில் இருந்த சிற்பி செம்பில் வடித்தான். அது கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவாலங்காடு கோயிலில் இருக்கிறது. 

சோழர்கள் காலம்: (இரண்டாம் கட்டம்)

விஜயாலன் மற்றும் ஆதித்தசோழன் காலங்களில் சிவபெருமானின் கருவறைக்கு அருகில் தனித்த சிற்றாலயத்தில் இளமுருகு உடனுறை அம்மையப்பர் திருமேனிகளை வைத்து வழிபட்டதோடு அம்மூர்த்தியினையே வீதி உலாப்போகும் திருவடிவாக போற்றினர். இப்படி வழிபடப்பட்ட இடங்களை சப்தவிடங்கத் தலங்கள் என அழைப்பதாக சொல்கிறார். அந்த மரபையொட்டியே தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் இன்றளவும் சோமஸ்கந்தர் சிலை முக்கியதுவம் பெற்றது. சோழர்கால செம்பு சிலைகளின் உச்சவெளிப்பாடாக சோமஸ்கந்தர் சிலையை சொல்லலாம் எனச் சொல்கிறார். 

விஜயநகரம் (மூன்றாவது கட்டம்)

திருமழபாடித் திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் விஜயநகர காலத்தில் வடிக்கப்பட்ட சோமஸ்கந்தர் சிலை சிறுகோயிலாக உள்ளது. அழகிய சிற்பமான இதில் குழந்தை முருகனை சிவபெருமான் தனது மடியில் அமர்த்தியிருக்கிறார். இவ்வாறு சிற்பவியலில் மாறிவரும் கூறுகளை நமக்கு விளக்குகிறார் குடவாயில்.

பிறபுலத்து கலையால் கண்ட வளர்ச்சி:

தமிழக மன்னர்கள் போரில் வென்று கலைச் செல்வங்களாக சிற்பங்களை எடுத்துவருவதும் உண்டு. பிறபுலத்துக் கலையால் கண்ட மாற்றம் பற்றி குடவாயில் அவர்களின் பார்வையை பார்க்கலாம்.

பல்லவர்கள் மற்றும் முற்கால சோழர்கள் கொற்றவை சிற்பத்தில் தேவியின் இருபுறமும் இரண்டு அடியவர்கள் அமர்ந்து ஒருவர் தன் தலையை போர் வாள் கொண்டு அறுக்கும் காட்சியும், அடுத்தவர் தன் உடல் உறுப்புகளை கத்திகொண்டு வெட்டி எடுப்பது அமைந்திருக்கும். இது கொற்றவைக்கு உறுப்புக்களைப் பலியாக கொடுக்கும் போர் வீரர்கள் பற்றிய காட்சியை காட்டுவதாக இருக்கிறது. ஆனால் இதுவே முதல் குலோத்துங்கன் காலத்திலிருந்து உறுப்பை அறுக்கும் காட்சி முற்றிலும் தவிர்க்கப்பட்டு அவளது முகத்தில் புன்னகையையும் பெரும் கருணையையும் வெளிப்படுமாறு செய்தது ஒரு பெரிய மாற்றம் ஆகும். 

இந்த மாறுதலுக்கு சாளுக்கிய, நுளம்பர், கலிங்கர் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த கொற்றவை சிற்பங்கள் முக்கிய காரணம் என ஆசிரியர் நினைக்கிறார். அவற்றில் முக்கியமானது என மூன்று சிற்பங்களைச் சுட்டிக்காட்டுகிறார். 

  1. ராஜராஜ சோழனின் சேனாதிபதி கோதாவரியில் இருந்து கொண்டு வந்த கொற்றவை சிற்பம்.

  2. சாளுக்கிய நாட்டில் இருந்து கொண்டு வந்த திருவாஞ்சியம் வாஞ்சினாதர் கோயிலில் இருக்கும் துர்க்கை.

  3. திருகொள்ளம்பூதூரில் இருக்கும் கொற்றவை சிற்பம். 

சிற்பங்களை எப்படி ரசிப்பது:

குடவாயில் அவர்கள் சிற்பங்களை எப்படி ரசிப்பது என இந்த நூலில் விளக்கிய விதத்தை இப்படி புரிந்துகொள்ளலாம். புராணம், பக்தி இலக்கியம், சிற்ப ஒப்பீடு இவை மூலம் எவ்வாறு சிற்பங்களை அறிந்துகொள்வது என்ற பயிற்சியை குடவாயில் நமக்கு அளிக்கிறார்.

சிற்பங்களை அடையாளம் காணுதல் என்பது முதல் மற்றும் முக்கிய கட்டம். உதாரணமாக மாமல்லை குடைவரையில் அனந்தசாயி - மதுகைடபர்கள் அங்கு வரும் காட்சி. இதனை அடையாளம் கண்டால் ஓழிய அடுத்த கட்டத்திற்கு போக முடியாது. அதற்கு நமக்கு பண்பாட்டுப் பயிற்சி தேவையாக இருக்கிறது. 

புராணம்: 

மது கைடபர் என்னும் அரக்கன் துயில் இருக்கும் மாயனையும், தேவர்களையும் கொல்ல நினைத்து அங்கு வருகிறான். நித்ராதேவி அகன்றதும் விழித்த பெருமாள் அவர்கள் அழித்தார்.

“உளைந்திட்டு எழுந்த மது கைடபர்கள்

உலப்பில் வலியில் அவர் பால் வயிரம்”

-பெரியதிருமொழி பத்தாம் பத்து. (திருமங்கை ஆழ்வார்)

ஆசிரியர் ஒப்பீடு

மூன்று இடங்களில் இருக்கும் சிற்பங்களை எடுத்துக்கொள்கிறார். 1.மகாபலிபுரம், 2.நாமக்கல், 3.திருமயம். இந்த மூன்று இடங்களில் இருக்கும் சிற்பிகளின் கற்பனைகள் வெவ்வேறாக இருக்கிறது. 

  1. கைகளில் கதை ஏந்தி மது கைடபர் மெதுவாக பெருமாளை அழிக்க நடந்து வருகிறார்கள். பிரம்மதேவனின் வேண்டுதலை ஏற்ற மாயசக்தி அந்த இடத்தைவிட்டு பறந்து செல்கிறது. இன்னும் பெருமாள் கண் விழிக்கவில்லை. ஒருவேளை அந்த அரக்கர்கள் பெருமாளை ஏது செய்வார்களோ? எனத் தோன்றும் சிற்பம் மாமல்லபுரம். அந்த கலக்கத்தை பார்ப்பவர்கள் மேல் செலுத்துகிறது அந்தச் சிற்பம்.

  2. மது கைடபர் இருவரும் வேகமாக கதை தூக்கிக்கொண்டு ஓடிவருகிறார்கள். மெதுவாக வருவதாக இருந்த மாமல்ல சிற்பத்திலிருந்து இந்த நாமக்கல் சிற்பம் வேறுபடுகிறது. இதைப் பார்பவர்களை அதிரச்செய்யும்படி உள்ளது.

  3. ஆதிசேசன் உமிழ்ந்த தீப்பந்துகளால் தாக்கப்பட்ட மது கைடபர் இருவரும் அலறுகின்றனர். சூட்டின் தகிப்பை பொறுத்துக்கொள்ளாமல் அலறும் இருவரின் உணர்ச்சிகளும் நன்றாக காட்டப்பட்டு உள்ளது. இது திருமயம் சிற்பங்கள் ஆகும். 

நாம் வெறுமனே சிற்பங்களைப் பார்த்து இது சிவன், பெருமாள் என அடையாளப்படுத்துவதோடு முடித்துக்கொள்வோம். இவ்வாறு அவர் கொடுக்கும் குறிப்புக்களுடன் அந்த சிற்பங்களைப் பார்க்கும் போது இன்னும் நமது ரசனை மேம்படுகிறது. 

2. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்கள்:

நம்முடைய அன்றாட வாழ்வில் பல விஷயங்களை நாம் கவனிப்பதில்லை. அவை எவ்வளவு பண்பாட்டு ஆழமும், வரலாற்று நீட்சியும் கொண்டது என அறியும் போது நமது பார்வைகள் மாறுதலுக்கு உட்படுகின்றன, நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கிறோம் என்பதும் விளங்கும். உதாரணமாக பலிபீடம் என்பது பற்றி கொண்டிருந்தல் புரிதல் எல்லாம் எவ்வளவு மூடத்தனமானது என்பதை விளக்குகிறார். இவ்வகை கட்டுரைகளில் ஒன்றை மட்டும் விளக்கமாக பார்க்கலாம்.

திரு என்னும் கடவுள்:

  • திரு என்னும் தொன்மையான தெய்வம் பற்றிய சங்ககால குறிப்புக்களை கொடுக்கிறார் - வாயில்களின் விட்டத்தில் இரு யானைகளும், இரு செங்கழுநீர்ப் பூக்களும் திகழ அவற்றின் நடுவில் திரு என்னும் கடவுள் இடம் பெற்றிருப்பதை கலித்தொகையும், திரு என்னும் உருவினை தன் மார்புமேல் தாங்கியிருப்பதை பெரும்பாணாற்றுப்படையும் கூறுகின்றன.

  • உதயநத்தம் என்னும் ஊரில் இருக்கும் திரு என்னும் தாய்தெய்வத்தையும் (விசிறிக்கல்) ஏனாதி என்னும் ஊரில் கிடைத்த செம்பாலான தாய் உருவையும் திருமறு என்னும் ஸ்ரீவத்ச குறியீட்டோடு ஒப்பிடுகிறார்.

  • மணமகள் சூடும் தாலி என்பது திரு என்னும் தாய் செய்வத்தின் உருவமே என்று உருவங்களை ஒப்பிட்டு விளக்குகிறார். இதன் மூலம் ஒரு பெரிய கோட்டை வரலாற்றில் இருந்து நிகழ்காலத்திற்கு இழுக்கிறார். இப்போது நம் கதவின் மேல் உள்ள கஜலட்சுமியையோ அல்லது தாலியையோ பார்க்கும் போது அது எங்கிருந்து இங்கு வந்து இருக்கிறது? அதன் பண்பாட்டு அடையாளம் என்ன? என்பதை உணர்ந்து ஆச்சரியப்படவும் இன்னும் நம் பண்பாட்டை ஆழமாக உணர்ந்துகொள்ளவும் முடிகிறது. 

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது பண்பாட்டின் ஆழத்தை கண்ட உணர்வு ஏற்படுகிறது. ஒரு சமயம் சிற்பங்கள் பேசுகின்றன மறுபக்கம் எப்படி தெய்வ சிற்பங்கள் உருமாறி இப்போதைய நிலைக்கு வந்தன என்ற ஒரு சித்திரம் கிடைக்கிறது. எவ்வளவு தகவல்களை திரட்டியும் களஆய்வு செய்தும் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கல்வெட்டுக்கள், தற்போதைய வழிபாடுகள் என எவ்வளவு விஷயங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பேருழைப்பு செலுத்தி, நமக்கு இதையெல்லாம் ஒரு குழந்தைக்கும் புரியும்படி எளிமையாக தொகுத்தளித்தமைக்கு ஆசிரியருக்கு நமது வணக்கங்கள்.

மகேந்திரன்
மகேந்திரன், கொங்கு பகுதியைச் சேர்ந்தவர், சென்னையில் ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்த்து வருகிறார். சிறுகதைகள் எழுதி வருகிறார். தத்துவம், சிற்பக்கலை மேல் ஈடுபாடு உண்டு.