Tuesday, 17 February 2026

என்னை இழந்த நலம் - முத்துமாணிக்கம்

சண்முகர்

அன்றைக்கு சிவன் கோவிலில் சண்முகர் சன்னதி முன் நின்று கொண்டிருந்தேன். மனம், 

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ? 

என்ற கந்தர் அனுபூதி பாடலை முனுமுனுத்தது. இப்படி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே என் அருகில் ஒரு குழந்தை 5 அல்லது 6 வயது இருக்கும், "அம்மா, அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தாள். மனதில் ஓடின அனுபூதி பாடல் நின்று விட்டது. அக்குழந்தையின் அம்மா சட்டை செய்யாமல் இருந்தாள். இந்தப் பிள்ளையோ முந்தானையைப் பிடித்து இழுத்து அம்மா அம்மா என்று விடாமல் கூப்பிட்டது. என்ன, ஏன் நச்சறிக்கிற. சொல்லு என்று ஆறு ரசங்களில் ஒரு ரசத்தை அப்பிள்ளை மீது கொட்டினாள். 

அந்தப் பிள்ளை ஒரு சந்தேகம், என்று தன் அம்மாவிடம் சொன்னது. சட்டென என் காது கூர்மை பட்டு விட்டது. என்ன கேட்கப் போகிறாள். homework இருக்கா என்றா, இல்லை வேற ஏதாவதா என்று என் மனம் கேள்வி கேட்க ஆரம்பித்தது. 

அவள் அம்மா சொல்லு என்றாள். அந்தப் பிள்ளை இந்த முருகனுக்கு 6 முகங்கள் இருக்கு. 12 கைகள் இருக்கு. ஆனா கால் மட்டும் 2 இருக்கு. அது எப்படி? 12 கால்ல இருக்கனும் என்றாள். இக்கேள்விக்கு அவள் அம்மா திகைப்படைந்தாளோ தெரியவில்லை. நான் திகைத்து விட்டேன். ஆனால் அவள் அம்மா, "இதுக்குத்தான் உன்ன கூட்டிட்டு வரக்கூடாதுனு சொல்றது. என்னத்தையாவது கேட்டு உயிர எடுக்கிறது. வா என்று அந்தப் பிள்ளையின் கையை பிடித்துக்கொண்டு, சென்றாள். 

அவள் கேட்ட கேள்வி ஆழமான தத்துவார்த்தமான கேள்வி. அதன் பதிலை அந்தப் பிள்ளைக்கு சொல்லலாமா என்று தோன்றியது. சொன்னாலும் சற்று புரியுமா என்றும் யோசித்துக் கொண்டேன். இருவரும் சென்று விட்டனர். 

ஆனால் மனம் அகலவில்லை. சரி இதே கேள்வியை ஒரு பக்தன் கேட்டிருப்பானா? என்றால் ஒரு வேளை அவன் மனதில் அது தோன்றியிருந்தாலும் அவனுக்கு பதில் தேவையில்லை. பக்தி தான் முக்கியம் என்று கடந்து சென்றிருப்பான். சரி ஒரு கவிஞன் இந்தக் கேள்வியை கேட்டிருப்பான் என்றால் மிகச் சிறந்த கவிகளை கொட்டியிருப்பான். ஒரு தத்துவவாதி இந்தக் கேள்வி கேட்டிருந்தால் அதன் பதிலை வெவ்வேறு கோணங்களில் சிந்தித்து தத்துவ வெளிப்பாட்டு உண்மையை சொல்லியிருப்பான். ஒரு வரலாற்று ஆய்வாளன் இந்தக் கேள்வியை கேட்டிருப்பான் என்றால், அவன் தான், மேலே உள்ள மற்ற அனைவரின் கோணத்தில் இருந்தும் சிந்தித்து அதற்கு வரலாற்று தொடர்பையும் சேர்த்து அதன் 360 பாகை கோணங்களையும் தந்திருப்பான். அவன் பல்வேறு கோணங்களில் அதன் எல்லை வரை செல்வான். அவன் எந்த வித கண்ணாடியும் அணிந்து பார்க்க மாட்டான். முன் முடிவுகள் இன்றி தான் எடுத்துக் கொண்ட ஆய்விற்கு உண்மைப் பொருளை அடையும் வரை துரத்திக் கொண்டே இருப்பான்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்த சோழப் பேரசுகளின் மொத்த வரலாற்றுகளையும் தன் கரணங்களால் வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்த பேரறிஞர் மேதை குடவாயில் பாலசுப்பிரமணியன். ஒரு தேய் வழக்கு, உடைந்த வழக்குத் தொடர் உண்டு. என்னவென்றால் ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய பணியை, அரசு செய்ய வேண்டிய பணியை தனிநபர் செய்திருக்கிறார். இது எல்லோரும் எழுதக்கூடியது தான். ஆனால் அதில் 100 சதவீத உண்மை இருப்பதனால் நானும் இங்கே அதே தொடரை பயன்படுத்த வேண்டியுள்ளது. 

உண்மையில் குடவாயில் ஒரு பகாசுரன். சோழர்களை இண்டு இடுக்கு விடாமல் நுழைந்து நுழைந்து ஆய்வு செய்தவர். அவர் சோழர்களைப் பற்றின கல்வெட்டு செப்பேடு ஓவியங்கள் இப்படி முதலில் ஆய்வு செய்தவர் தான். ஆனால் அவருக்கே இது முழுமை அடைய வில்லை, வேறு வழிகளிலும் தேட வேண்டும் என்று தன் ஆசிரியர்களில் ஒருவராகிய சேக்கிழார் அடிப்பொடி டி.என் இராமச்சந்திரன் அவர்களிடம் கேட்கிறார். அவரோ நீங்க இத மட்டும் பாத்தா போதாது. இலக்கியம் பக்கமும் பார்க்க வேண்டும். தேவாரம், திருவாசகம், பெரிய புராணம் போன்ற இலக்கியத்தையும் நாட வேண்டும் என்கிறார். 

அதன் பின் தான் இவர் இப்பகுதியையும் நாடி அவரின் ஆய்வு உச்சம் தொடுகிறது. அன்று தொட்டு அவர் கல்வெட்டு செய்திகளோடு இப்படி திருமுறைகளையும் சான்றாக தந்து கொண்டே வருகிறார்.

பிள்ளையார்பட்டி விநாயகர்

தமிழகத்தில் வடக்கில் இருந்து வந்த தெய்வம் என்று சொல்லப்படுவது பிள்ளையார். அவர் பட்டுக் கொண்டிருக்கும் பாடு இருக்கே கொஞ்ச நஞ்சம் இல்லை. தயவு செய்து நான் ஓரத்தில் மரத்தடியில் இருந்து விடுகிறேன் என்று புலம்பும் அளவிற்கு அரசியலாக்கப்படுகிறார். ஆனால் குடவாயில் போன்ற ஒரு மேதை இல்லை என்றால் உண்மை வெளிவராது. கோவில் அமைப்பில் இன்று தமிழகத்தில் முதலில் தோன்றியது குடவரை அமைப்பு . அது பாறையை தானாக குடைந்து அமைத்து அங்கே தெய்வ உருவங்களை பாறையிலேயே செதுக்கும் அமைப்பு கொண்டது. இதை முதன் முதலில் பல்லவர் காலத்தில் மகேந்திர பல்லவன் தான் தோற்று வித்தான் என்றும், அதன் பின் அவன் மகனாகிய நரசிம்ம பல்லவன் வளர்த்தான் என்ற கருத்து உண்டு. மேலும் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி பரஞ்சோதியார் வாதாபியை வென்று அங்கிருந்து அவர் கொண்டு வந்தது தான் முதல் கணபதி சிற்பம் என்று வரலாற்றில் ஆணி அடித்தார் போல் நிறுவப்பட்டு விட்டது. 

இந்தச் செய்தியை உடைக்கிறார் குடவாயில். நரசிம்ம பல்லவன் காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தென் பகுதியில் பாண்டிய நாட்டில் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோவில் தான் முதற்கோவில் என்றும் அப்போதே பிள்ளையார் வந்து விட்டார் என்றும் சான்றுகளோடு விளக்குகிறார். அது பிள்ளையார் கோவில் இல்லை சிவன் கோவில். குடவரையில் சிவனின் சிலை வடிக்கப்பட்டு இருக்கிறது, அதற்கு பிள்ளையார் வழிபாடு செய்கிறார், மேலும் அந்தக் குடவரை மற்ற குடவரைப் போல் அல்லாமல் கஜ பிரதிஷ்ட அமைப்பு போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு என்னவென்றால் ஒரு யானை மல்லாந்து படுத்து அதன் பின் பகுதி எப்படி இருக்குமோ அப்படி குடையப்பட்டது இந்தக் குடவரை என்கிறார். விநாயகரைப் பற்றி ஒரே ஒரு ஆய்வு, ஆனால் அது வரலாற்றையே சற்று அசைத்து விட்டது யானையின் தும்பிக்கை போல....

வரலாற்றை படிக்க ஆரம்பிப்பவர்களுக்கும், அல்லது அதைப் பற்றி ஆர்வத்தோடு கேள்விப் பட்டாலே, முதலில் ஒரு தெய்வத்தின் பெயர் நிச்சயம் காதில் விழும். அது கொற்றவை. நாட்டார் மரபிலும் சரி, பெருங்கோயில் மரபிலும் சரி இந்த கொற்றவை பல்வேறு வடிவங்களில் பல விதமாக பரிணமித்து வந்திருக்கிறது. தொல்காப்பியம் தொடங்கி, எட்டுத்தொகை, பத்துப் பாட்டு போன்ற சங்க இலக்கியங்கள் தொடங்கி இதன் இலக்கிய ஆக்கங்கள் வெளிப்படுகின்றன. சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் அழகையும், மேன்மையும், சிறப்பையும் விரிவாக இளங்கோவடிகள் எழுதுகிறார். இவைகள் எல்லாம் இலக்கிய வடிவங்களாக இருந்தாலும், பல்லவர் காலத்தில் அது சிற்ப அழகியலோடு திகழ ஆரம்பித்து இருக்கின்றன என்கிறார் குடவாயில். கோடியக்கரை கோவில் சுந்தரர் தேவார பதிகத்தில் கொற்றவையின் குறிப்பு வருகிறது. இந்தக் கொற்றவை மகிஷனை சம்காரம் செய்கிற ரெளத்திரி. அவள் சோதியாக பிழம்பாக பெருவெடிப்பாக மகிஷனை வதம் செய்கிறாள். செய்த பின் அவள் தாய். இன்முகத்தோடு அவள் அருள் வழங்கும் அன்னையாக திகழ்கிறாள். 

இந்தக் கொற்றவை சிற்பங்கள் பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் பல்வேறு கோவில்களில் பல வகைகளில் வெளிப்பட்டாலும், மாமல்லபுரத்தில் உள்ள மகிஷனை வதம் செய்யும் காட்சியை சிலப்பதிகாரத்தில் சொல்லதைப்போன்றே வடிக்கப்பெற்ற சிற்பம் உலகலப்புகழ் பெற்ற கொற்றவை சிலையின் முதல் உச்சம். 

இந்த சிற்பத்தில் மனித உடலும் எருமைத்தலையும் கொண்ட அரக்கன் தன் வலிய உடலோடு இரு கைகளிலும் கதையை ஏந்தியவனாக எதிரே வரும் தேவியை தாக்கும் கோலத்துடன் நிற்கிறான். அவன் அவுணர் குலத்து அரசன் எனக் காட்ட தலையில் மகுடமும், தலைக்கு மேல் கொற்றை குடையும் உள்ளன. அவனைச் சுற்றி வாளும் கேடயமும் ஏந்திய அவுணர்கள் சூழ்ந்து போர் புரிகின்றனர். எதிரே பாயும் சிம்மத்தின் முதுகில் அமர்ந்து வாளும் பிற போர் கருவிகளையும் கையில் எடுத்தவளாக கொற்றவை என்னும் பெருந்தேவி மகேஷனை வதைக்க ஆர்ப்பரித்து வருகிறாள். தலைக்கு மேல் கொட்டக்குடை திகழ்கிறது. வாளும் கேடயமும் ஏந்திய கணங்களும், பெண்களும் அன்னையுடன் ஆவேசமாக வந்து அவுணர்களை வெட்டி வீழ்த்துகின்றனர். வில்லின் துணையுடன் அம்பு எய்தல் நீண்ட வாள் எடுத்து வீசுதல் ஆகிய துர்க்கையின் செயல்பாடுகள் இச்சிற்பக் காட்சிக்கு மேலும் மேலும் உயிர்ப்பூட்டுகின்றன. வாள் பிடித்து கடும் போர் புரிந்த குமரியம்மையாகக கொற்றவை திகழும் இக்காட்சியினை மீண்டும் உளி கொண்டு ஒருவரால் இத்தனை உயிரோட்டத்தோடு படைத்திடல் என்பது இயலவே இயலாததாகும் என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியம். இந்தப் பத்தியை படித்தாலே போதும் மொத்த கொற்றவையின் காட்சியும் நம் கண் முன்னே விரிந்து விடும். அந்த அளவிற்கு குடவாயில் அந்த கொற்றவையின் போர் புரியும் காட்சியை விவரித்துள்ளார்.

இரண்டாவது சிற்பம், தில்லை கோவில் மேற்கு கோபுரத்தில் உள்ள சோழர் கால சிற்பமாகும். அதற்கு திரிபுரசுந்தரி என்று பெயர் வழங்குகின்றனர். மனித உடலும் எருமைத்தலையும் உடைய மகிசனை தன் வழக்காலால் மிதித்துத் தள்ளி 18 கரங்களிலும் ஆயுதங்களை சுமந்து வெட்டி வீழ்த்த, பின் கருணை முகத்தோடு திரிபுரசுந்தரி ஆக காட்சி தருகிறாள். அனபாயன் என்கிற இரண்டாம் குலோத்துங்கன் எடுத்துப் போற்றிய திருவடிவம் இது. தமிழக கலை படைப்புகளிலேயே இச்சிற்பம் அதி உயர் உச்சம் தொட்ட சிற்பம் என்கிறார் குடவாயில். ஆனால் இன்றைக்கு அந்த சிற்பத்தில் தூக்கிய வலது காலை உடைத்துள்ளனர். பலவாறாக சிதைத்தும் உள்ளனர். அப்படி இருந்தும் அந்த சிற்பத்தின் கலையம்சம் குறையாது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்று கொற்றவையை தன் நெஞ்சத்தில் இருக்கும் ஆழமான அன்னையின் காட்சியை விதந்தோத்தி முடிக்கிறார் குடவாயில்.


தமிழக பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் அழிந்து போய் விட்டால் என்னவாகும்? அப்படி அழிந்து போய்விடுமா, காலம் இத்தனை நாள் காத்து வந்த நம் மரபை ஏதோ ஒன்று அழித்து விட்டால் தமிழ் நிலம் என்னவாக இருக்கும் என்று என் மனதில் தோன்றும். அப்படி ஒன்றும் நடந்து விடாது என்று என் வலிமையான நம்பிக்கை, என்றாலும் இப்படியும் யோசித்தது உண்டு. ஒரு வேளை அப்படி நேர்ந்தால் அதற்குத் தீர்வு ஒன்று உள்ளது, என்ற அறிந்த போது மனம் மகிழ்ந்தது. 

மொத்த தமிழ் மரபு தீக்கிரை ஆனாலும் ஒரே ஒரு நூல் மட்டும் இருந்தால் போதும். அனைத்தையும் மீட்டு விடலாம். அதுதான் கம்பராமாயணம். உண்மையில் கம்பராமாயணம் என்பது மேகம் வெடித்து கொடிக் தீர்க்கும் மழை. அத்தனை உவமைகள், அத்தனை சொற்சித்திரங்கள், அத்தனை அணிகள் என்று எண்ணி எண்ணி வியக்க வைக்கும் ஒரு கனவு. 

இந்த கம்பராமாயணத்தில் பல்வேறு காட்சிகளில் கம்பன் தன் கவி ரசத்தை தந்தாலும், அவன் உச்சம் தொட்ட ஒரு இடம் வாலி வதை. இந்த வாலி வதையைப் பற்றி தமிழகத்தில் கம்பனை விட, எழுதியும் பேசியும் விவாதித்தும் குவித்துள்ளனர். ஆனால் கம்பன் அதை ஆழமாக முடிச்சாக போட்டு விட்டான். இன்று வரை அதை அவிழ்க முற்பட்டுக் கொண்டே இருக்கிறோம். 

அறத்தின் நாயகன் ஏன் மறைந்து நின்று கொல்ல வேண்டும், என்று ஆயிரம் பட்டிமண்டபம் நடத்தினாலும் விடை காண முடியாத விசித்திரம் தான். வாலியின் நெஞ்சில் அம்பு பாய்கிறது. அவன் வீழ்கிறான், குருதி அந்த அம்பின் மீது படுகிறது. யார் தன் மீது ஏவினான் என்று பார்த்த போது இராம என்று அந்த அம்பில் இருக்கிறது. அவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவு இல்லை.

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
    மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
    பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
    மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
    கண்களின் தெரியக் கண்டான்.

இராமனும் இலச்சுமணனும் வருகிறார்கள். வாலி துடித்துக் கொண்டு இருக்கிறான். வாலி இராமனை பார்த்து இராமா நீயா இப்படி செய்தாய் நீ தெய்வ புருஷன் வில்வீரன் அறத்தின் நாயகன். நீ இப்படி மறைந்து நின்று கொல்லலாமா என்று கோபம் கலந்து கேட்கிறான். 

வீரம் அன்று; விதி
    அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின்
    மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று; பகை அன்று;
    பண்பு அழிந்து
ஈரம் இன்றி, இது
    என் செய்தவாறுஅரோ?

இராமன் உடனே நீ மாற்றான் மனைவியை கவர்ந்து வைத்திருப்பது தவறு இல்லையா? என்று கேட்கிறான். 

இராமா அதெல்லாம் உங்களைப் போன்ற மனித சாதிக்கு, நாங்கள் விலங்கினம். எங்களுக்கு அதெல்லாம் கிடையாது என்கிறான். 

ஐய! நுங்கள் அருங் குலக் கற்பின், அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சிபோல்
செய்திலன், எமைத் தே மலர் மேலவன்;
எய்தின் எய்தியது ஆக, இயற்றினான். 

'மணமும் இல்லை, மறை நெறி வந்தன;
குணமும் இல்லை, குல முதற்கு ஒத்தன;-
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால்-
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!  

உடனே இலக்குவன், உன் முன்னால் நின்று போரிட்டால் பாதி வலிமை போய் விடும் என்று தான் என் அண்ணன் மறைந்து நின்று போரிட்டார். இது வாலிக்கே அபத்த வாதம் என்று தெரிந்து விட்டது. 

இராமன் பின் பேசவே இல்லை. அதை வாலி புரிந்து கொண்டான். இராமனின் மனதில் ஏதோ ஒரு முள் தைக்கிறது என்று அறிந்து இராமா என் தம்பி பாவம். ஒன்றும் அறியாதவன், அவனிற்கு நீ தான் அடைக்கலம் என்று சொல்லிவிட்டு மாண்டான். 

பின் தாரை வருகிறாள். ஐயோ என்று கதறி தன் மார்பு வெடிக்க அழுகிறாள். பக்கத்தில் பல குரங்கினங்கள் எல்லாம் அழுகின்றன. புறளுகின்றன. தேம்புகின்றன. அது இழப்பின் உச்சம். இந்தத் தாரை புலம்புவதை கம்பன் ஒரு படலமே வைத்து 20 பாடல்கள் எழுதுகிறான். அனைத்தும் கண்ணீர் வழிந்தோடும் பாடல்கள்.

குங்குமம் கொட்டி என்ன, குவி முலைக் குவட்டுக்கு ஒத்த
பொங்கு வெங் குருதி போர்ப்ப, புரி குழல் சிவப்ப, பொன் - தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்,
வெங் கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள்

மறைந்தான் மாலை அருக்கன்; வள்ளியோன்
உறைந்தான், மங்கை திறத்தை உன்னுவான்;
குறைந்தான், நெஞ்சு குழைந்து அழுங்குவான்,
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான். 20 

என்று உடலும் உள்ளமும் ஆன்மாவும் கரையும் துடிக்கிறாள் தாரை.

மேலே கம்பராமாயணத்தில் வரும் ஒரு உச்சம். இதனை காட்சிகளையும் ஒரு சிறு சதுரத்திற்குள் செதுக்கி வைத்தாள் எப்படி இருக்கும். அதைச் செய்தார்கள் சோழர்கள். புள்ளமங்கை மற்றும் தாராசுரம் கோவில்கள் இந்தக் கதையை கல்லில் வடித்திருக்கிறார்கள். அதில் தாரை நெஞ்சில் அழுது புலம்பும் காட்சியும் அதோடு மற்ற குரங்குகளும் சேர்ந்து அழும் காட்சியின் உச்ச ஸ்தாதியை கம்பனுக்கு சற்றும் குறையாமல் கல்லில் வடித்திருக்கிறார்கள் என்கிறார் குடவாயில். 

வாலி வதம்- புள்ளமங்கை

சைவத்தில் இறைவனுடைய நிலைகளை இரண்டு விதமாக பிரிப்பார்கள். ஒன்று சொரூபம். இரண்டாவது தடத்தம். சொரூபம் என்பது இன்றைக்கு நாம் நினைப்பது போல வடிவ நிலை இல்லை. சொரூபம் என்ற நிலை என்பது நம்மளுடைய புத்திக்கு அகப்படாத நிலை. அதை நாம் எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் ஒரு வகைமை. இதை மாணிக்கவாசகர் சித்தமும் செல்லா சேச்சியன் காண்க, நூலறிவு அறியா நுண்ணியோன் காண்க என்கிறார். எனவே இந்த சொரூப நிலையை நாம் ஓதவோ உணரவோ சிந்திக்கவோ எந்த வகையிலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிலை.

சரி இப்படிப்பட்ட ஒரு நிலையில் இறைவன் இருந்து என்ன பயன் என்றால் அடுத்த நிலையை சித்தாந்தம் சொல்கிறது, தடைத்த நிலை என்று. இந்த தடத்த நிலையில் இறைவன் மூன்று பிரிவுகளாக பிரிக்கிறார்கள் சித்தாந்தவாதிகள். இறைவன் இந்த தடத்தை நிலையில் அருவமாக அருவுருவமாக உருவமாக இருக்கிறான் என்கிறார்கள்.

அருவம் என்றால் வடிவம் இல்லாதது. ஆனால் அந்த அருவம் நம் புத்திக்குள் அகப்படும். உதாரணமாக ஒரு இடத்தில் குடம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த இடத்தில் குடம் இல்லை என்று சொன்னால் குடம் இல்லை தான் ஆனால் குடம் என்கிற பொருள் நம்மளுடைய புத்திக்கு அகப்பட்டுவிட்டது குடம் என்கிற பொருளும் இருக்கிறது என்று நமக்குத் தெரிந்து விட்டது எனவே அது ஒரு அருவ நிலை. அடுத்தது அருவுருவம். இது அருவமும் உருவமும் கலந்த நிலை. அதாவது இது உருவமா என்று கேட்டால் உருவம்தான் உருவம் இல்லையா என்று கேட்டால் உருவம் இல்லை தான். இது சைவத்திற்கே உரித்தான ஒரு நிலையாக கருதப்படுவது. வேறு எங்குமே இந்த நிலை இல்லாதது. அதற்கு உதாரணமாக லிங்கம் என்ற வடிவம் இருக்கிறது. அந்த வடிவத்தை பார்த்தால் உருவம் போல தான் தெரியும் ஆனால் ஏதோ ஒரு பிடித்து வைத்தது போலத்தான் இருக்கும் அருவமாகவும் அது தெரியும் எனவே அது அருவுருவம் என்கிறது சித்தாந்தம்.

மூன்றாவது நிலை உருவ நிலை. இந்த உருவநிலையில் முதன்மையான நிலையாக கருதப்படுவது ஆடல்வல்லான். தூக்கிய பாதத்தோடு ஆடுகின்ற சிவபெருமானை சோழர்கள் வியந்து வியந்து வியந்து வியந்து பல்வேறு விதமாக வடித்திருக்கிறார்கள் தங்களுடைய ஆட்சிக்காலத்தில். உதாரணமாக தஞ்சை பெரிய கோவிலில் இந்த மூன்று நிலைகளையும் நாம் பார்க்கலாம். உள்ளே பெரிய லிங்கமாக அருவுருவமாக இருக்கிறார். அந்த லிங்கத்திற்கு மேலே ஸ்ரீ விமானம் என்று சொல்லப்படுகிற விமானம் இருக்கிறது. அது ஆகாச பெருவழியில் பிரபஞ்ச நிலையாக கருதப்படுவது அது அருவமாக போற்றப்படுகிறது. எனவே அங்கே அருவம் வந்துவிட்டது. மூன்றாவதாக கருவறைக்கு நேரே பின்பகுதியில் ஆடல் வல்லானின் வண்ண ஓவியம் வரையப்பட்டு இருக்கிறது. காலையில் சூரிய உதயம் அருவுருவமாக கருதப்படும் லிங்கத் திருமேனியில் படும்பொழுது ஒரு ஒளியோடு இருக்கும்போதும் அழகைத் தரும். மாலையில் சூரியன் மறையும் போது அந்த சூரிய கதிர்கள் ஆடல் வல்லானின் ஓவிய திருமேனியில் படும்போது அவரின் மேனி வேற ஒரு வடிவமாக கருதப்படுவதும் சோழ மன்னனுடைய பக்தியையும் கலையையும் சேர்ந்து தொட்ட உச்சமாக பார்க்கப்படுகிறது.(தற்போது இந்த ஆடல்வல்லானின் வண்ண ஓவியத்தை நாம் பார்க்க முடியாது. அதை பூட்டி வைத்து விட்டிருக்கிறார்கள்) 

இந்த உருவ நிலையில் பல வடிவங்கள் இருக்கிறது. 64 வடிவங்கள் இருக்கிறது என்று சொல்கிறது சைவம். நமக்கு மிகப் பிரபலமாக தெரியப்படுவது ஆடல்வல்லான், சோமாஸ்கந்தர், பைரவர், பிக்ஷாடனார் இப்படி சில வடிவங்கள் தெரியும். இதில் ஒரு வித்தியாசமான ஒரு உருவ நிலையான சிவபெருமானை சோழர்கள் வியந்து வடித்திருக்கிறார்கள், அது என்னவென்றால் வீணாதாரர். இந்த வீணாதாராருடைய வடிவங்கள் சோழர்கள் மட்டும் இல்லை, முற்கால பாண்டியர்கள் தொட்டு பல்லவர்கள் நாயக்கர்கள் என்று பல்வேறு மன்னர்கள் தங்களுடைய கலைத் திறமைக்கு ஏற்ப பல வடிவங்களோடு பல திறத்தோடு வடிவமைத்துள்ளார்கள். ஆனால் அதில் உச்சம் தொட்டது சோழர்கள் தான். உதாரணமாக ஒன்றே ஒன்று. நாகை மாவட்டம் மேலப்பெரும்பள்ளம் என்னும் ஊர். தேவாரத்தில் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் சுந்தரர் என்று மூவரும் பாடிய பாடல் பெற்ற திருத்தலம். அந்த கோவிலில் சிவபெருமான் தம் இரு கரங்களால் வீணை வாசித்தவாறு ஆடிக்கொண்டே ஒய்யாரமாக நடந்து வருகிறார். அவரோடு முன் கால்களை தூக்கியவாறு பின் கால்களால் நடந்து வரும் மான் ஒன்று பெருமானின் திரு விரல்களை நக்குகின்றது. இடப்பின்கரம் சூலம் ஒன்றினை ஏந்துகின்ற பாவனையில் உள்ளது. அருகே பூதகணங்களோடு தலையில் பரிகளம் ஒன்றினை சுமந்தவாறு வருகின்றது. இந்தச் செப்புத் திருமேனியை அங்கம் அங்கமாக ரசித்தவாறு தன்னுடைய இரு கண்களால் திளைத்து திளைத்து அதன் அழகை திருநாவுக்கரசர் தன்னுடைய தேவாரத்தில் இப்படி பாடுகிறார்.

கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால்
    காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்;
முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி,
    முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும்
தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம்
    வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ,
மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி,
    வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.

இந்த சிலைக்கு பட்டனை பட நடந்த நாயகர் என்று அந்த ராஜதிராஜன் உடைய கல்வெட்டுச் செய்து குறிப்பிடுகிறது. மேலும் என்ன சிறப்பு என்றால் சிவபெருமான் கையில் வீணையே இல்லாமல் இருக்கிறார். உருவமாக இருக்கும் சிவபெருமான் கையில் அருவமாக வீணை இசைத்துக் கொண்டு வருவது போல வடிவமைத்திருக்கிறார்கள். அது நாதமாக பிரபஞ்ச பெருவழியில் பரவிக் கொண்டு வருகிறது என்ற கற்பனையோடு சோழனும் அந்த சிற்பியும் செதுக்கியிருக்கிறார்கள். இதை நினைத்து திளைக்காமல் நிகழாமல் எப்படி நம் மனம் இருக்க முடியும்..

குடவாயில் பாலசுப்ரமணியன்

தமிழக வரலாற்றை படிப்பவர்கள், சோழர் காலத்தை பற்றி படிக்க நேரிட்டால் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய ஆய்வு இல்லாமல் தொடக்கூட முடியாது. அந்த அளவிற்கு சோழர்களின் கற்றளிகளையும், கட்டுமானங்களையும், கல்வெட்டுகளையும், செப்பேடுகளையும், ஓவியங்களையும் என அனைத்தையும் மூலை முடுக்கு விடாமல் ஆய்வு செய்து எழுதிக் குவித்தவர். தேவாரம் என்ற வார்த்தையே எப்போது வந்தது என்று முதன் முதலில் ஆய்வு செய்து வெளியிட்டவர். சோழர்கள் காலம் தான் தமிழக பொற்காலங்களில் ஒன்று. அதிலும் சைவத்தின் உச்சம் தொட்ட காலம் அதுதான். 

அப்படி ஆய்வு செய்த குடவாயில் தேவாரத்தை இராஜராஜ சோழன் மீட்டான் என்ற பொய்யான தகவலை தன் ஆய்வின் மூலம் நிருபணம் செய்கிறார். அவர் சோழ சாம்ராஜ்ஜியத்தையே விதந்தோத்தி ஆய்வு செய்தவர். ஆனால் அவரே தான் சொல்கிறார் இராஜராஜன் தில்லையில் தேவார பதிகங்களை மீட்கவில்லை. அக்கருத்தே 15 ஆம் நூற்றாண்டில் வந்த ஒன்று என்று வரலாற்றை பொட்டில் அறைந்தும் அறையாமலும் உலகிற்கு வெளிப்படுத்துகிறார். 

ஆம் இது தான் குடவாயில் பாலசுப்பிரமணியன் என்ற மேதையின் ஆய்வு. அவருக்கு எந்த வித கண்ணாடியும் அணிய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற துணிச்சல். இம் மேதைக்கு தமிழக வரலாறு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. தமிழக ஆய்வாளர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஏன் மொத்த சோழ பரம்பரையே கடன்பட்டிருக்கிறது. இந்தக் கருத்து சற்று மிகையாகக் கூட இருக்கலாம், ஆனால் அதில் சற்று உண்மையும் இருக்கிறது. 

கோவிலை வலம் வந்து வெளியே வரப்போகும் போது, சண்முகர் சன்னதியில் மனதில் முனுமுனுத்த கந்தர் அனுபூதி பாடலை பாதியில் விட்ட நினைவு வந்தது. அந்தப் பாடலின் அடுத்த இரண்டு வரியோடு இப்படி முடிகிறது. -

எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூபதியே -

என்று அருணகிரிநாதர் இழத்தல் நலம் என்கிறார். குடவாயில் பாலசுப்பிரமணியன் ஆய்விற்காக பொருளை இழந்திருக்கலாம். சுகத்தை இழந்திருக்கலாம். இன்னும் என்னவெல்லாமோ இழந்திருக்கலாம். அவை எல்லாம் புற இழப்புகள். அதைத் தாண்டி, தன் ஆன்மாவை வரலாற்று ஆய்விற்காக இழந்திருக்கிறார். அது இழப்பு அல்ல, மாபெரும் பேறு பெறுதல். அது நலம் மட்டுமே தவிர ஒரு போதும் இழப்பு அல்ல.

முத்துமாணிக்கம்


உ. முத்துமாணிக்கம் இராஜபாளையத்தை சேர்ந்தவர். சைவ சித்தாந்தம், மரபிலக்கியம், கர்னாடக சங்கீதம், பண்ணிசை இவற்றில் ஆர்வம் உடையவர். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜிடம் பாடம் கேட்டுள்ளார். 'சித்தாந்தம்' இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர்.