Friday, 8 August 2025

ஆய்வாளனின் நிமிர்வும் ஆய்வில் ஒரு மூலப்பொருள்தான் - வெ. வேதாசலம் நேர்காணல்

வெ. வேதாசலம்
வெ. வேதாசலம் தமிழின் முக்கியமான தொல்லியல் ஆய்வாளர். தொல்லியல் ஆசிரியர். வேதாசலம் அவர்களின் ஆய்வுகள் பன்முகத்தன்மை கொண்டவை. திருவெள்ளறை கோவில் குறித்த அவரது முதல் புத்தகம், கோவில் ஆய்வுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்டத்தக்கது. சமணம் குறித்த இவரது ஆய்வுகள் பாண்டிய நாட்டில் சமணம் பதினான்கு நூற்றாண்டு வரை திகழ்ந்ததற்கு முக்கியமான சான்றுகளாக ஆகின. தவ்வை, இயக்கி வழிபாடுகள் குறித்தும் அறுவகை சமயங்கள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். வாணாதிராயர்கள் என்னும் சிற்றரசர் குலம் குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார்.

பாண்டிய நாட்டின் நிலவியலை வரலாற்று அடிப்படையில், சமூகவியல் அடிப்படையில், வணிகத்தின் அடிப்படையில் என்று பலவாறு வகுத்து அளித்திருக்கிறார். ஆய்வுக்காக பெரும்தரவுகளை சேகரித்து அவற்றின் வழி ஆய்வு செய்யும் முறையை தமிழில் பின்பற்றிய மிகச்சில ஆய்வாளர்களில் ஒருவர். தொல்லியல் பயணங்கள் வழியாகவும், பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் கற்பிப்பது வழியாகவும் தொல்லியல் விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார். பாண்டிய நாடு மற்றும் தமிழ் சமணம் இரண்டிலும் ஆய்வு செய்பவர் யாரும் வேதாசலத்தின் ஆய்வுகள் வழியாகவே தனது ஆய்வுகளை தொடர முடியும். 

வேதாசலம் மதுரை மாவட்டம் மதிச்சியத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர். தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி கலாவதி. மகள் திருநங்கையும் ஆய்வாளர், மகன் திருநம்பி முதுகலை பொறியியல் படித்தவர். வேதாசலம் தற்சமயம் தனது மனைவியுடன் மதுரையில் வசித்து வருகிறார். 

வெ. வேதாசலம் தமிழ் விக்கி

உங்களது வாழ்வில் பயணங்களுக்கு பெரிய இடம் அளித்திருக்கிறீர்கள், உங்கள் ஆளுமையை உருவாக்கிய காரணிகளில் பயணம் முக்கியமான ஒன்று என்று தோன்றுகிறது. 

பதியெழு அறியா பழங்குடி மதுரையில் பிறந்த எனக்கு பயணங்கள் எப்போதும் சலிப்பதே இல்லை, எனது வேலை காரணமாகத் தொடர்ந்து பயணித்த போதும் எல்லா வார இறுதி நாட்களிலும் தனிப்பட்ட முறையிலும் ஆய்வுகளுக்காக பயணித்திருக்கிறேன். தமிழகத்தின் எல்லா தொல்லியல் தளங்களுக்கும், என் காலத்தில் நடந்தேறிய பெரும்பாலான அகழாய்வுக்களங்களுக்கும் நேரடியாக சென்றிருக்கிறேன், பங்கு பெற்றிருக்கிறேன். இந்தியா முழுக்க உள்ள சமண, பௌத்த, சைவ, வைணவ தலங்கள், சிந்து சமவெளி நாகரிக களங்களைத் தேடித்தேடி பார்த்திருக்கிறேன். எகிப்து, ஐரோப்பா, கிழக்காசிய நாடுகளில் உள்ள வரலாற்றுச்சின்னங்களை, அருங்காட்சியகங்களைப் பார்த்துவந்தேன். இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன. 

எனது சொந்த ஊர் மதுரையில் உள்ள மதிச்சியம், இது வைகையின் வடகரையில் உள்ள ஒரு சின்ன கிராமம். எனது குடும்பம் விவசாயக்குடும்பம், எங்களுக்கு பொன்மேனி, அரசரடி பகுதிகளில் நிலங்கள் இருந்தன. இயல்பாகவே வரலாறு மீதும் பயணங்கள் மீதும் எனக்கு ஆர்வம் இருந்தது. அதற்கு எனது அம்மாதான் காரணம். எனது வீட்டில் மொத்தம் பதிமூன்று பிள்ளைகள், ஐந்து ஆண்கள் எட்டு பெண்கள் நான்தான் கடைக்குட்டி. அதனால் அம்மா எங்கு பயணம் சென்றாலும் என்னையும் அழைத்துச்செல்வார். அவரது பயணங்கள் பெரும்பாலும் கோயில்களுக்குத்தான். மதுரை, அழகர்கோவில், தஞ்சாவூர் என்றெல்லாம் கோவில்களுக்குப் போகும்போது என்னையும் அழைத்துப்போவார். சிவராத்திரியின் போது மதுரையின் நான்கு மாசிவீதிகளையும் சுற்றி வந்தாலே எவ்வளவோ கலைவடிவங்களை பார்க்கலாம், லாவணி போன்ற கலைகளையெல்லாம் அப்போதுதான் பார்த்தேன். அம்மா வழியே எனக்கும் பயணிக்கும் ஆர்வம் வந்துவிட்டது. 

எகிப்தில்
தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது, இன்று மெய்நிகர் சுற்றுலாக்கள் வந்துவிட்டன. நேரில் சென்று பார்ப்பது ஏன் முக்கியமாகிறது ? 

அஜந்தாவையும் எல்லோராவையும் அலெக்ஸ்சாண்டிரியாவையும் தொலவீராவையும் நேரில் பார்க்கும்போது எனக்கு ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது. நீண்ட நாட்களாக யோசித்துக்கொண்டே இருக்கும் ஒன்றை நேரடியாகப் பார்க்கும் அந்த கணம் தனித்துவமானது, அனுபவிப்பவர்களுக்குத் தான் அந்த பரவசம் புரியும்.

ஒரு தகவல் என்பது உங்களுக்கு புத்தகங்களில் இருந்தும் காணொளியில் இருந்தும் கிடைக்கலாம், எனக்கு அவற்றை விட நேரடி காட்சி அனுபவம் மிகவும் முக்கியம். ஒரு வரலாற்றுச்சின்னம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை ஒரு செய்தியாக முதலில் நீங்கள் அறிகிறீர்கள், நேரில் சென்று பார்க்கும்போது அது ஒரு அழியாத காட்சியாக மனதில் பதிந்து விடுகிறது. ஒரு ஆய்வாளனாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு தொல்லியல் இடம் அது குடைவரையோ, சமணத்தளமோ, வாழ்விடமோ, கோவிலோ எதுவாக ஆனாலும் நான் பார்க்க விரும்புவது வேறொரு கண்களின் வழியே அல்ல. எனது பார்வையை எனது ஆய்வுக்கான மூலப்பொருளாக கருதுகிறேன் என்பதுதான் அது.

இரண்டாவது நான் சமூகவியல் ஆய்வுகளைச் செய்பவன். இதற்கு நேரடி கள ஆய்வுதான் நல்ல வழி. ஒரு ஊருக்குள் புகுந்தவுடன் நேரடியாக நீங்கள் ஆய்வுசெய்துவிடமுடியாது. அந்த மக்களிடம் நட்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும், நிறைய பேச வேண்டும். அவர் உங்களை நம்மவர் என்று நினைக்கவேண்டும். அவர்களுக்கு உங்களிடம் நட்பும் நம்பிக்கையும் ஏற்பட்டுவிட்டால் பிறகு அவர்கள் உங்கள் ஆய்வுக்கு உதவும் தன்னார்வலராகிவிடுவார்கள். இங்கே இன்னொரு சிலை இருக்கிறது போய்ப்பாருங்கள் என்பார்கள், வழி தெரியாவிட்டால் அவர்களே அழைத்துப்போவார்கள். குக்கிராமங்களில் சாப்பாடு கிடைக்காது, அங்கேயே திண்ணைகளில் அமர்ந்து ஊரார் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டிருக்கிறோம். நேரடி பயணங்களில் கிடைத்த அனுபவங்கள் மகத்தானவை.

அது போல அவர்கள் பேசுவதைக் கேட்பது, அவர்கள் ஏதோ தொடர்பில்லாமல் பேசுகிறார்கள், நமக்கு தெரியாதவற்றையா பேசிவிடப்போகிறார்கள் என்று நினைத்துவிடக்கூடாது. மாற்றங்கள் எவ்வளவு இருந்தாலும் ஒரு இடத்தின் சூழல், அதை பழமையின் தொடர்ச்சியாக பார்க்க முடியும். மக்கள்கள் தான் அங்கு பெரிய தரவுமூலங்கள்.

உங்களுடைய முதல் புத்தகம் திருவெள்ளறை கோவிலைப்பற்றியது, 1977ல் வெளிவந்த அதன் உள்ளடக்கம் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. தொல்லியல் ஆய்வுகளோடு அப்போதே சமூக ஆய்வையும் செய்திருக்கிறீர்கள். அதில் ஓரிடத்தில் சாக்கைக்கூத்தை விளக்குகையில் கூடியாட்டம் குறித்தும் எழுதியுள்ளீர்கள், எழுபதுகளில் தமிழில் வேறு யாரும் இந்த அளவுக்கு செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

இந்த அளவுக்கு புத்தகங்களை நீங்கள் படித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வருட தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் படிப்பின் முடிவில் எங்களுக்கெல்லாம் ஆய்வேடு சமர்ப்பிக்கவேண்டும் என்றிருந்தது. நான் திருவெள்ளறையை தேர்ந்தெடுத்தேன், துறையிலும் ஒப்புக்கொண்டனர். திருச்சிக்கு பக்கத்தில் உள்ள திருவெள்ளறை கிராமத்திற்குச் சென்று அந்த கிராமத்தின் சமூக வரலாறு, கலை வரலாறு, பொருளாதார வரலாறு இவை அனைத்தையும் சேர்த்து பன்முகத்தன்மை கொண்ட ஆய்வாக செய்தேன். எனது ஆய்வு நன்றாக வந்திருந்தபடியால் துறையில் இருந்தே புத்தகமாக அது வெளிவந்தது. 

இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் சிறப்பாக இருப்பதாக நீங்கள் கருதினீர்கள் என்றால் அதற்கு காரணமாக அமைந்த நாங்கள் பெற்ற பயிற்சியை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். நான் முதுகலை தமிழ் முடித்தபோது எனது வீட்டு பொருளாதார சூழல் அவ்வளவு நன்றாக இல்லை. என்னை சுற்றி இருந்தவர்கள் மருத்துவம், ஆசிரியர் பயிற்சி என்று வேறு துறைகளில் படித்துக்கொண்டிருந்தார்கள். எனக்குக் கல்லூரியில் ஆசிரியர் பணி புரிய விருப்பம் இல்லை. புதிதாகக் கற்றுக்கொள்ளும் துறைகளை என் மனம் நாடியது.

அப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையில் இருந்து ஓராண்டு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் முதுகலை பட்டயப்படிப்புக்கான விளம்பரம் செய்தித்தாளில் வந்திருந்தது (பிஜி டிப்ளமோ இன் ஆர்க்கியாலஜி அண்ட் எபிக்ராபி). அந்த விளம்பரத்தில் சமஸ்கிருதம், தமிழ், வரலாறு, தொல்லியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போட்டிருந்தது. அதற்கு விண்ணப்பித்து தேர்வானேன். அப்போது தொல்லியல் துறை மந்தைவெளியில் இருந்தது, நான் திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கியிருந்து படித்தேன். மாதத்தில் பாதி நாட்கள் களப்பயணமும் பாதி நாட்கள் வகுப்பறையுமாக எங்கள் படிப்பு இருந்தது. 

கட்டிடக்கலை, சிற்பக்கலை, அகழாய்வு, கல்வெட்டு இவையெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டது சம்ஸ்கிருதமும் எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது. கல்வெட்டுக்கான மொழிப்பயிற்சி, மௌரியன் பிராமி, தமிழ் பிராமி, வட்டெழுத்து, கிரந்தம், தமிழ் எழுத்துக்கள் இவற்றை தினந்தோறும் எழுதி எழுதி படிப்போம். நிறைய விஷயங்களை மனப்பாடம் செய்யச்சொல்லுவார்கள். முக்கியமான அரசர்களின் காலம், முக்கியமான கல்வெட்டுக்கள் இவற்றை அரிச்சுவடி போல மனப்பாடம் செய்யவேண்டும். அதுபோல அரசர்களின் மெய்க்கீர்த்திகளை மனப்பாடமாகச் சொல்லவேண்டும். இராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி நூற்றுக்கு மேற்பட்ட வரிகளைக்கொண்டது, ஆசிரியர்கள் அந்த மெய்க்கீர்த்தியில் நான்காம் வரியிலிருந்து நீங்கள் சொல்லுங்கள், பத்தாம்வரியிலிருந்து நீங்கள் சொல்லுங்கள் இந்தபடிக்கு இடையில் இருந்தும் கேட்பார்கள். காலக்கணக்கீட்டுக்கான பஞ்சாங்க குறிப்புக்கள் சொல்லித்தந்தார்கள். தினந்தோறும் எழுத்துருக்களை 40 பக்கம் எழுதும் பயிற்சி இருந்தது. ஒரு ஆண்டு முழுக்க புறஉலகின் எந்த தாக்குதலுக்கும் உள்ளாகாதபடி முழுகவனத்துடனும் படித்தேன். தொடர்ந்து எங்களுக்கு அவ்வளவு பாடங்களை படிக்க கற்றுக்கொடுத்தார்கள். அது ஒரு குருகுலம்போலவே இருந்தது.

நீங்கள் கூடியாட்டம் குறித்து கேட்டீர்களே அது தொடர்பாக இரண்டு விசயங்கள். முதலாவது இயக்குனர் நாகசாமி எங்கள் மீது எடுத்துக்கொண்ட அக்கறை. எங்களுடன் களப்பயணங்கள் எல்லாவற்றிற்கும் வருவார், வசதிக்குறைவு பற்றி கவலைப்படமாட்டார். கோவில் மண்டபங்கள், மரத்தடி, அகழாய்வு இடம் எல்லாம் வகுப்பறையாகும். கிராமங்களில் மின்சார வசதி இருக்காது கட்டிலில் உட்கார்ந்து பாடம் சொல்வார் நாங்கள் தரையில் உட்கார்ந்து கேட்டிருக்கிறோம். ஆற்றில் கிணற்றில் குளிப்பது எல்லாம் எங்களுக்கு மகிழ்ச்சி. இன்று கனவு போல இருக்கிறது, தஞ்சைப் பெரிய கோவிலில் பௌர்ணமி இரவில் மணிக்கணக்காக அமர்ந்து பேசியதும் கற்றுக்கொண்டதும்.

இந்திய அளவில், உலக அளவில் யாராவது ஆய்வாளரோ வரலாற்று அறிஞரோ சென்னைக்கு வந்தால் நாகசாமி எப்படியாவது அவர்களை அழைத்து வந்து எங்களிடம் உரை நிகழ்த்தச்சொல்வார். அப்படி B.P லால், தேஷ் பாண்டே முதலியவர்கள் எங்களிடம் பேசியிருக்கிறார்கள். அதுபோல முக்கியமான கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் மாணவர்களுக்காகப் பேசவைத்திருக்கிறார். அடிப்படைகளைக் கற்பிப்பதோடு நின்றுவிடாமல், ஒரு அறிவுத்தரப்பாக எங்களை உருவாக்க அவர் எவ்வளவு முயற்சி செய்தார் என்பதை இப்போது நினைத்துப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி கல்வியோடு நிகழ்ந்த பல்வேறு துறையினருடனான உரையாடல் ஒரு காரணம்.

இரண்டாவது எனது புத்தக வாசிப்பு, இப்போதும் நீங்கள் எனது நூலகத்தை பார்க்கலாம். ஐயாயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. துவக்க காலத்திலிருந்தே என்ன ஆய்வு செய்கிறோமோ அவை தொடர்பான அனைத்தையும் படித்துவிடுவேன். அப்போதே நான் வைத்துக்கொண்டிருந்த நட்பு வட்டமும் பெரிது, கேரளாவிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். அங்கு பயணம்செய்து விவரங்களை சேகரித்துக்கொண்டேன். தனிப்பட்ட முறையிலும் கருத்தரங்குகளில் பங்கேற்றுக்கொண்டிருந்தேன். அப்படியெல்லாம்தான் எனக்கு சாக்கியார் கூத்து, கூடியாட்டம் குறித்தெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது.

புகழ்பெற்ற வாதாபி கல்வெட்டு
தொல்லியல் படிப்பிலிருந்து தொல்லியல் பணிக்குச் செல்கையில் எப்படி இருந்தது. எங்கெல்லாம் ஆய்வு செய்ய துவங்கினீர்கள்?

எனக்கு தொல்லியல் துறையில் பணி கிடைத்தவுடன் முதலில் சென்னை, மதுரை, இராமநாதபுரம் முதலிய பல இடங்களில் பணிபுரிந்திருக்கிறேன். என்றாலும் கள ஆய்வுகள் செய்ய தமிழகம் முழுவதும் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் துறையில் மிகவும் குறைவான ஆட்கள். பத்துபேர் அளவில்தான் பணிபுரிந்தார்கள் என்றால் அவர்களில் நான்குபேர் திரும்பத்திரும்ப கள ஆய்வுகளுக்கு அனுப்பப்படுவார்கள், அதில் நானும் ஒருவன். துவக்க காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் அதிகம் பணிபுரிந்திருக்கிறேன். சக ஆய்வாளர்களுடன் இணைந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தொல்லியல் கையேடுகள் தயாரித்துக்கொடுத்திருக்கிறேன். எனது பணியின் பிற்பகுதியில் அதிகமும் பாண்டிய நாட்டுப்பகுதியில்தான் வேலைசெய்திருக்கிறேன்.

கரூர் , கோவலன் பொட்டல், திருத்தங்கல், மாங்குடி, அழகன்குளம், கீழடி, தொண்டி ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வில் நான் பங்குகொண்டுள்ளேன். கல்வெட்டு, கோவில் கலை, பல வகையான எழுத்துருக்கள் இவற்றையெல்லாம் புத்தகமாகப் பதிவுசெய்யும் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தேன். வேலைகளை சுமையாக எடுக்காமல் மகிழ்ச்சியாக, கற்றல் அனுபவமாக எடுத்துக்கொண்டேன். தனியாகவும் நண்பர்களுடனும் இணைந்தும் விக்கிர மங்கலம் - அரிட்டாபட்டி - திருமலை - சமண மலை ஆகிய நான்கு இடங்களில் புதிய தமிழ் பிராமி கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளேன்.

இந்தியா முழுக்க தொல்லியல் களங்கள், வரலாற்று சின்னங்களை பார்த்திருக்கிறீர்கள், ஒரு ஆய்வாளராக இந்தியப்பண்பாடு உங்களுக்கு எப்படி பொருள்படுகின்றது.

பணியில் சேர்ந்த துவக்கத்திலேயே எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, தில்லி தேசிய அருங்காட்சியகத்துறையில் இருந்து அருங்காட்சியகத்துக்கான சான்றிதழ் படிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது, தில்லியில் ஒன்றரை மாதங்கள் இருந்து படிக்க வேண்டும். துறையிலிருந்த அனுபவசாலிகளுக்குக் கிடைக்காத அந்த வாய்ப்பு அப்போது இளைஞனான எனக்கு கிடைத்தது. தொல்லியல் துறை இயக்குனர் என்னை பரிந்துரைத்திருந்தார். கல்வெட்டியலை பொறுத்தவரை சமஸ்கிருதம் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும், தமிழ்க்கல்வெட்டுக்களின் இடையேயும் சமஸ்கிருத சொற்கள் வரும். எனக்கு ஓராண்டு பயிற்சியிலேயே சமஸ்கிருத அடிப்படை பயிற்சியும் கொடுக்கப்பட்டிருந்ததால், இந்திய அளவில் இருந்த கல்வெட்டுக்களை புரிந்துகொள்ள முடிந்தது. தொல்லியல் அடிப்படையில் இந்தியாவின் கலை பண்பாடு ஆகியவற்றையும் புரிந்துகொள்ளமுடிந்தது. இந்திய அளவில் C சிவராம மூர்த்தி போன்ற பெரிய தொல்லியல் கலைவரலாற்று அறிஞர்கள் எங்களுக்குப் பாடமெடுத்தார்கள். எங்களுக்கு பல வடஇந்திய தொல்லியல் களங்களைச் சுற்றிக்காண்பித்தார்கள். அதுவரை தில்லிக்கே போனதில்லை, வடநாட்டில் முக்கியமான நினைவிடங்கள், கல்வெட்டுக்கள் இவையெல்லாம் பார்க்கும் நேரடி அனுபவத்தால். எனது தொல்லியல் பார்வையும் இந்திய அளவிலான ஒன்றாக விரிவடைந்தது.

வரலாற்றின் அண்மைக்காலம் வரை அதாவது பிரிட்டிஷ் காலத்திற்கு முன்பு வரை பல சிறிய நாடுகளாக இந்தியா அறியப்பட்டிருந்தாலும் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை, பாம்பேயில் இருந்து அசாம் வரையிலும் இவர்களிடையே ஒரு பண்பாட்டுப்பின்னல் எப்போதும் இருந்து வருகிறது. மௌரியர் காலத்தில் ஏற்பட்ட ஸ்தூபங்கள், குடைவரைகள் துவங்கி அஜந்தா எல்லோரா இப்படியான கலைஅம்சங்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலான தொடர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. இந்த இந்திய பயண அனுபவங்கள் என்னுடைய அறுவகை சமயங்கள் என்னும் புத்தகத்தில் முழுவதும் பயன்பட்டுள்ளது, சமணம் குறித்த ஒப்பாய்வுகளிலும் வெகுவாகப் பயன்பட்டுள்ளது. 

என்னைப் பொறுத்த வரை தொல்லியல் அடிப்படையில் இந்தியாவில் காணப்படும் கிராம, நகர வசிப்பிடங்களுக்கான திட்டமிடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை என்று கருதுகிறேன். பிரமிடுகள் போன்ற அரசர்களுக்கான ஈமக்கல்லறைகளோடு நான் ஒப்பிடவில்லை, நம்முடையது அனைத்து குடிகளுக்குமான திட்டமிடல். இந்த காலகட்டத்தில் கூட நாம் அந்த கற்பனையை நெருங்க முடியாது.

சிந்துவெளி நாகரிக பயண அனுபவங்கள் குறித்து சொல்லுங்கள்.

சிந்துசமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த காளிபங்கன், ராக்கிகடி, தொலவீரா, லோத்தல் ஆகிய இடங்களுக்கு நேரில் போயிருக்கிறேன். இந்திய அளவில் எனக்கு தொல்லியல் நண்பர்கள் இருக்கிறார்கள் எனவே அங்கேயே தங்கியிருந்து முடிந்தவரை அந்த இடங்களை சுற்றிப்பார்த்தேன். இப்போது அவ்வளவு எளிதாக ஹரப்பா, மொகஞ்சதாரோவுக்கு நாம் போக முடியாது, அது இழப்பாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள அதே நாகரிகத்தை சேர்ந்த தொல்லியல் இடங்களை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம், உண்மை அப்படியல்ல. முக்கியமாக குஜராத்தில் உள்ள தொலவீரா, அது 15 ஆண்டுகளுக்கு மேலே அகழாய்வு செய்யப்பட்ட இடம். அதன் காலம் பொ ஆ மு 3000 ஆண்டு என்று கணிக்கப்படுகிறது. ஒரு பெரிய நகரின் இரண்டு புறங்களிலும் ஆறுகள், அவற்றிலிருந்து தடுப்பணை கட்டி அங்கிருந்து நகருக்கு தேவையான நீர் அனுப்பப்பட்டுள்ளது. கோட்டையைச் சுற்றிலும் மூன்று அடுக்குகளாக குடியிருப்புகள், மக்களின் வாழ்நிலைக்கேற்ப தனித்தனியே முதல்நிலை, இடைநிலை, மூன்றாம் நிலை குடியிருப்புகள்.

திட்டமிட்ட தெருக்கள் அமைப்பு, ஒரே நேர்கோட்டில் தெருக்கள், குறுக்கு சாலைகள். வீடுகளின் சீரான அமைப்பு. கழிவு நீர் குழாயை மூடிய வாய்க்கால் வழியே நகரத்திற்கு வெளியே கொண்டு சென்று சேர்க்கிறார்கள். அங்குள்ள கிணற்றில் இப்போதும் தண்ணீர் இருக்கிறது நாம் பயன்படுத்தலாம். உலகத்திலேயே பழமையான பெயர்ப்பலகை அங்குதான் கிடைத்தது. கற்களை வெட்டி அவற்றை மரப்பலகைகளில் பதித்து நட்டிருக்கிறார்கள், நமது கைகாட்டி மரம் போல. அந்த அகழாய்வில் இவையெல்லாம் கிடைத்தன. உலக அளவில் பழைய நகர நாகரிகம், முன்னோடி நாகரிகம் இதுதான் என்று சொல்லுவேன். 

இதே போன்று இராஜஸ்தானில் உள்ள காளிபங்கன் அகழாய்வு இடத்திற்கும் சென்றிருக்கிறேன். அங்குள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு முறை தங்கியுள்ளேன் காளிபங்கன் அருங்காட்சியகமும். தொல்லியல் மேடும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். ஏனெனில் அகழாய்வுக்கு செய்யப்பட இடத்திற்கு அருகிலேயே உள்ள அருங்காட்சியகம் என்பதால், வாழ்விடம், அங்கு கடைத்த தொல்பொருள்களை ஒருசேர பார்க்க முடியும். 

பல்வேறு ஆய்வாளர்களுடன் பணியாற்றியுள்ளீர்கள் அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

ஆம், பலருடன் பணிபுரித்துள்ளேன், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஐராவதம் மகாதேவனுடைய தமிழ் பிராமி குறித்த ஆய்வில் நான்கு ஆண்டுகள் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன், அவருடைய புத்தக உருவாக்கத்தில் பங்குபெற்றிருக்கிறேன். அப்போது மகாதேவன் ஒரு சிறிய கார் வைத்திருந்தார், அதில் அதிகபட்சம் ஐந்து பேர் பயணிக்கலாம். நன்றாக கார் ஓட்டுவார், எங்கு போகவேண்டுமென்றாலும் அவரே காரை எடுத்து வந்துவிடுவார். நாங்கள் ஒவ்வொரு பிராமி கல்வெட்டு இருக்குமிடத்திற்குச் சென்று புகைப்படம் எடுப்போம், கல்வெட்டை படி எடுப்போம். எங்களைக் கல்வெட்டை வாசித்துக்காட்ட சொல்வார், மாற்று வாசிப்புகளையும் விவாதிப்போம். அப்போது இருந்தவர்கள் எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்.

நொபுரு கராஷிமா பாண்டிய நாட்டில் ஆய்வு செய்தபோது அவரை தென்தமிழ்நாட்டுக் கடற்கரை பட்டினங்களுக்கும், முக்கியமான ஊர்களுக்கும் அழைத்துச்சென்றிருக்கிறேன். பேராசிரியர் சுப்பராயலு, விஜயவேணுகோபால் ஆகியோருடன் பணியாற்றியது துவக்க காலத்தில் தொல்லியல் சார்ந்து கருத்துக்களை உருவாக்க உதவியது.

உங்களுடைய ஆரம்ப கால நூல்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு சமணம் குறித்த ஆய்வுகள் வெளிவந்தன. பெரும் விசையோடு துவங்கிய உங்கள் ஆய்வு எழுத்து அவ்வாறே தொடராதது ஆய்வுலகத்தின் இழப்பு என்றே தோன்றுகிறது. 

திருவெள்ளறை ஆய்வுக்கு பிறகு இரண்டாவதாக ‘பாண்டி மண்டலத்தில் வாணாதிராயர்கள்’ புத்தகம் 1987ல் வெளிவந்தது. 1989ல் இயக்கி வழிபாடு என்ற 150 பக்கங்கள் கொண்ட புத்தகம் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகம் வழியாக வெளிவந்தது. இயக்கிகள் என்னும் பெண் தெய்வங்களை சமணம், பௌத்தம், சைவம், வைணவம் முதலிய மதங்களில் இணைத்துக்கொண்டு வழிபடப்பட்டார்கள். சங்க காலத்தின் அணங்கு முதல், நாயக்கர் காலம் வரை வழிபடப்பட்ட இசக்கியம்மன்கள் குறித்து இப்புத்தகத்தில் ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். இந்தப்புத்தகம் அறிவுலகில் பெரிதும் பேசப்பட்டது, எனக்கு நல்ல பெயர் வாங்கித்தந்தது.


அப்போது அரசுப்பணியில் நான் இருந்ததால் ஒவ்வொரு புத்தகத்தை வெளியிடும்போதும் நான் அதிகாரிகளிடம் முன்னனுமதி பெறவேண்டி இருந்தது. எனது கருத்துக்களை அவ்வகையில் சுதந்திரமாக வெளிப்படுத்த முடியுமா என்று எனக்கு சந்தேகம் எழுந்தது, தணிக்கைகளுக்குட்பட்டு எழுதுவதை எந்த எழுத்தாளர்தான் விரும்புவார்? ஒரு சமயம் எனது பேராசிரியரான சுப்பராயுலுவிடம் நான் இது குறித்து வருந்தினேன். அவர் எனக்கு கவலைப்படாதீர்கள் தரவுகளை சேகரித்துக்கொண்டே இருங்கள், ஆய்வுகளை நிறுத்த வேண்டாம். வெளியிடும் காலம் மட்டும்தானே தள்ளிப்போகிறது என்று சொன்னார். எனவே நான் பணி நிறைவு பெற்ற 2010 வரை தனிப்பட்ட முறையில் பெரிதாகப் புத்தகங்கள் எதுவும் வெளியிடவில்லை. 

இதனால் உங்களைப் பல்லாண்டுகாலம் வெளிப்படுத்தி கொள்ளவேயில்லை, எப்படி இந்த காலகட்டத்தை கடந்தீர்கள்? 

எனது முக்கியமான ஆய்வுகளை வெளியிடாவிட்டாலும், தொல்லியல் துறை வெளியீடுகள் சார்ந்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். திருமலை நாயக்கர் செப்பேடுகள், திருமலை மன்னன் கையேடு, மதுரை, திருவாரூர் மாவட்டங்களுக்கான தொல்லியல் வரலாற்று புத்தகங்கள், விருதுநகர், மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுப்பு இவை போன்று நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டு இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கருத்தரங்குகள் மூலம் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன். பாண்டியன் ‘நின்றசீர் நெடுமாறன்’ குறித்து ஒரு புத்தகம் எழுதினேன். சோழவந்தான் அருகில் தென்கரை என்ற கிராமம் உள்ளது, அதனுடைய வரலாறு மற்றும் சமூகவியல் என அனைத்து தகவல்களையும் திரட்டி ‘பராக்கிரம பாண்டியபுரம்’ என்ற புத்தகத்தை மா. சந்திரமூர்த்தியுடன் சேர்ந்து எழுதி வெளியிட்டேன்.

அந்த காலத்தில் ஆய்வுலகில் பெரும்பாலானவர்களின் கவனம் தங்கள் பெயரை வெளிப்படுத்திக்கொள்வதில்தான் இருந்தது, நான் அதைக்குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தேன். எல்லா வார இறுதி நாட்களையும் ஆய்வுக்கானப் பயணங்களுக்காக என வகுத்துக்கொண்டேன். சைக்கிளில் பல சமயங்களில் நாற்பது கிலோமீட்டர் வரை கூட பயணித்திருக்கிறேன், இரு சக்கர வாகனம் வாங்கியபின் ஒரு லட்சம் கிலோமீட்டர் அதில் பயணித்திருக்கிறேன்.

இந்த காலஇடைவெளி எனக்கு ஒரு நன்மையையும் செய்தது, ஒவ்வொரு ஆய்வுக்கும் எனக்கு நீண்ட காலம் கிடைத்தது. நான் அவற்றை செறிவுபடுத்திக்கொண்டே இருந்தேன். அதேபோல என்மீது எந்த எதிர்பார்ப்புமில்லாமல் இருந்ததும் நன்மைக்கு என்றே நினைக்கிறேன், எந்த அழுத்தமுமின்றி என்னால் எழுத முடிந்தது. 


சமணம், பாண்டிய நாடு இவை சார்ந்தே நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள், எது உங்களை இந்த ஆய்வுகளை நோக்கி செலுத்தியது?


எனக்கு சமயம் சார்ந்து, சமணம் சார்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று எந்த எண்ணமும் இருக்கவில்லை. அதே போலத்தான் பிரதேசம் சார்ந்த ஆய்வும், குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்ற உணர்வும் இல்லை. என்னைப்பொறுத்தவரை வரலாற்றில் எல்லாமே சமஅளவில் முக்கியமானவை, எல்லா பகுதிகளும் எல்லா சமயங்களும் எல்லா காலகட்டங்களும் முக்கியமானவை தான். இவற்றில் வரலாற்றுக்கு எது அதிகமாக வெளிச்சத்திற்கு வராத பகுதியோ, அதிகமும் ஆய்வு செய்யப்படாத அல்லது முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாததோ அவற்றை ஆய்வு செய்யவேண்டும் என்பதைத்தான் நான் தீர்மானித்துக்கொண்டேன்.

சோழர்களைப்பற்றி, கொங்கு நாட்டைப்பற்றி, பல்லவர்களைப்பற்றி ஆய்வு நூல்கள் வந்த அளவுக்கு பாண்டிய நாட்டுக்கு வரவில்லை. அதிலும் பாண்டியர்களின் அரசியல் வரலாறு வந்திருக்கிறது, ஆனால் சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு இவையெல்லாம் வரவில்லை. இப்படி வெளியாகாத பகுதிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதுதான் ஒரு ஆய்வாளனுடைய முக்கியமான கடமையாக இருக்கவேண்டும். ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்வதற்கு ஆய்வாளன் எதற்கு, புதியவற்றை செய்வோம் என்றுதான் இதை செய்ய துவங்கினேன். 

அரசியல் வரலாற்று காலக்கணக்கை அடிப்படையாகக் கொண்டு பாண்டிய நாட்டின் பண்பாடு, சமூக வரலாற்றை பார்த்தால் அதில் சமண சமயம் மிக நீண்டகாலத் தொடர்ச்சியோடு அதாவது அசோகன் காலத்திற்கு முன்பிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ச்சியாக செல்வாக்கு செலுத்திய சமயமாக இருந்திருக்கிறது. எனவே இதை நாம் தனியாக எழுதவேண்டும் என்று எழுதத்துவங்கினேன். பாண்டிய நாட்டில் சமண சமயம் என்ற எனது கட்டுரைதான் முதலில் வெளிவந்தது.

அந்த காலகட்டத்தில் ஞானசம்பந்தர் வருகைக்குப்பிறகு சமணம் மதுரையில் முழுவதும் அழிந்துவிட்டது என்று நிறையபேர் பேசினார்கள், ஆய்வாளர்களே அதை எழுதவும் செய்தார்கள். ஆனால் உண்மையில் ஞானசம்பந்தரின் காலத்திற்கு பிறகு சமணம் மதுரைப்பகுதியில் மேலும் வளர்ச்சி பெற்றது, 14ம் நூற்றாண்டு வரை இங்கு நிலை பெற்றிருந்தது என்பதற்கு தொல்லியல் சான்றுகள் நிறைய இருந்தன. இவற்றை அடிப்படையாக வைத்து எனது கட்டுரையை விரிவாக்கி எண்பெருங்குன்றம் என்ற புத்தகமாக 2000த்தில் வெளியிட்டேன், இரண்டாம் பதிப்பும் வெளியாகி அது நல்ல வாசிப்பைப்பெற்றது.

பாண்டிய நாட்டில் உள்ள சமணத்தலங்களில் முக்கியமானது கழுகுமலை. அங்கிருந்த சமணப்பள்ளி பெரும் சமண மையமாக விளங்கியிருக்கிறது. முக்கியமான கல்வி நிலையமாக, வழிபாட்டிடமாக இருந்திருக்கிறது, இதனால் கழுகுமலை சமணப்பள்ளி என்னும் நூலை எழுதி வெளியிட்டேன். இடைப்பட்ட காலத்தில் பாண்டிய நாட்டு ஊர் வரலாறு, சமுதாய வரலாறுகள் தொடர்பான புத்தகங்கள் எழுதினேன். இவை அனைத்தும் எனக்களித்த அனுபவத்தைக்கொண்டு சங்க காலம் முதற்கொண்டு 14ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இருந்த தொல்லியல் இலக்கிய சான்றுகளை தொகுத்து “பாண்டிய நாட்டில் சமண சமயம்” என்ற பெரிய புத்தகம் வெளிவந்தது.

பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் என்ற உங்களுடைய புத்தகம் தமிழில் இதுவரை செய்யப்படாத முன்மாதிரி, அதன் நிலவியல் குறித்து மிக விரிவான வரைபடங்களை கொடுத்துள்ளீர்கள்.

இந்தப்புத்தகத்தை எப்படி தனியாக எழுதமுடியும் என்றே என்னைக் கேட்டிருக்கின்றனர். ஆனால் நாற்பதாண்டுகால உழைப்பும் திட்டமிடலும் அதன்பின்னால் இருக்கிறது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஊர்களுக்கு சென்று அவற்றின் GPS புவி அமைவிடங்களைச் சேகரித்து, தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் அவற்றின் பழைய பெயர்களையும் தற்போதைய பெயர்களையும் ஒப்பிட்டு வரைபடங்களாக்கி அளித்திருக்கிறேன். வெவ்வேறு காலகட்டத்தில் பாண்டிய நாட்டு நிர்வாக அலகுகளின் எல்லைகளை அவை அடைந்த மாற்றங்களோடு பதிவு செய்திருக்கிறேன். 'பிரெஞ்சு-இந்திய' ஆய்வு நிறுவனத்தின் இந்தியவியல் துறையினர் வரைபடங்களை இறுதி வடிவம் செய்ய உதவினர்.

ஒரு அரசாட்சியில் பல குறுநாடுகளாக நிலம் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டது என்று படித்திருப்போம். இந்த குறுநாடு நிர்வாக பிரிவு என்பது சமூக பிரிவுதான், பாண்டிய நாட்டில் உள்ள வேளாண் குழுக்கள் எப்படி நாடுகளாக பின்னால் வகுக்கப்பட்டு அரசால் நிர்வகிக்கப்பட்டன என்று இந்த ஆய்வு காட்டுகிறது. பேராசிரியர் சுப்பராயலு தலைமையில் Historical atlases if south India என்ற புராஜக்ட் பிரெஞ்சு-இந்திய ஆய்வு மையத்தின் மூலமாக செய்தோம். அங்கு வரைபடங்கள் பிரிவு தனியாக இருக்கிறது, முத்து சங்கர் என்னும் நண்பர் அங்கு பணிபுரிகிறார். 1976 முதல் அவரைத்தெரியும், கணிப்பொறிப்பயன்பாட்டுக்கு வந்த காலம் முதலே அவர் ஆய்வுகளுக்கு கணினிப்பயன்பாட்டை மேற்கொள்கிறார். நான் உருவாக்கிய வரைபடங்களை தொழில்நுட்ப ரீதியில் சரிபார்த்து செய்தளித்தது அவர்தான். இது தான் எனது புத்தகத்தின் வரைபடங்களை உருவாக்க உந்துதலாக இருந்தது. 

இந்த ஆய்வு முழுக்கவே நுண்தகவல்களால் ஆனது. ஒவ்வொரு கிராமத்தின் வரலாற்று சிறப்பு, அதன் நிலவியல் ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பாண்டிய நாட்டில் சமணம் போன்ற விஷயங்களைகூட யாரும் யோசித்துப்பார்க்க முடியும், ஆனால் இந்த ஆய்வு தனித்தன்மை வாய்ந்தது என்றே கருதுகிறேன்.

ஆய்வில் தரவுகள் முதன்மையானவை, அவ்வகையில் பெரும்தரவுகளை உங்களுடைய பாண்டிய நாட்டு ஆய்வுகளுக்கு அடிப்படையாக்கியுள்ளீர்கள். எவ்வாறு இந்த தரவுகளை சேகரித்து, வகுத்து அவற்றிலிருந்து ஆய்வு மேற்கொள்கிறீர்கள். ஆய்வாளர் வேதாசலம் பரிந்துரைக்கும் ஆய்வுஅணுகுமுறை என்ன?

இங்கு எனது ஆசிரியர்களை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறேன். பேராசிரியர் சுப்பராயலுவும் எனது முனைவர் பட்ட வழிகாட்டி பேராசிரியர் விசயவேணுகோபால் அவர்களும் என்னை இதற்கு ஆற்றுப்படுத்தினார்கள் என்று சொல்வேன். மிகப்பெரிய ஆய்வாளரான சுப்பராயலு அவரது புத்தகத்தை கொடுத்து அப்போது நண்பர்களான எங்களைச் சரிபார்க்க சொல்லுவார், அவர் தகவல்கள் மீது எடுத்துக்கொள்ளும் கவனம் ஆச்சரியமாக இருக்கும். நாங்கள் சமர்ப்பிக்கும் ஆய்வேட்டிலும் அவர்களது திருத்தங்கள் இருக்கும், எங்காவது ஓரிடத்தில் தரவு இன்றி செய்தி அளிக்கப்பட்டிருந்தால் அந்த இடம் சிவப்பு மையால் சுழிக்கப்பட்டு 'சான்று ? ' என்று எழுதப்பட்டிருக்கும். இவையெல்லாம் மனதில் பதிந்து விட்டது.

பின்னர் ஐராவதம் மகாதேவன், நொபுரு கராஷிமா போன்றவர்களின் ஆய்வு அணுகுமுறையை அருகிலிருந்து பார்த்த, பங்கேற்ற அனுபவங்கள். கராஷிமாவும் இதுபோல தரவுகளைக் கையாண்டவர்தான். மகாதேவன் அந்தந்த இடங்களிலேயே கல்வெட்டுகளை விவாதிப்பார், வெவ்வேறு வாசிப்பு சாத்தியங்களை எங்களோடு கலந்துகொள்வார். களஆய்வில் கராஷிமா அன்றைய நாளின் இறுதியில் உணவு மேஜையில் எங்களோடு நீண்ட நேரம் உரையாடுவார். ஜப்பானியர்களின் உணவுமுறையில் காலை உணவுக்குப் பிறகு மாலைதான் உணவு, மாலை எங்கள் உணவு மேசை விவாதங்கள் சாதாரணமாக மூன்று மணிநேரம் வரை நீளும். அப்போது கிடைக்கும் அறுதி தகவல்களை ஆய்வுக்காக தொகுத்துக்கொள்வார், இது அவர் பாணி. 

என்னுடைய ஆய்வு பன்முகத்தன்மை கொண்டது, அனைத்து பார்வைகளையும் சேர்த்துக்கொள்வது. என்னுடன் எப்போதும் பயணிக்கும் இன்னொரு நபர் எனது கேமரா. துவக்க காலத்தில் இருந்து இப்போது வரை என்னுடைய கேமராக்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் முதல் நாளிலிருந்து இப்போது வரையிலான புகைப்படங்கள் எனது சேகரிப்பில் உள்ளன, ஒரு லட்சம் புகைப்படங்களுக்கு மேல் எனது சேகரம் இருக்கும். இவை பெரிய ஆதாரங்கள், ஏனெனில் இன்று அந்த சின்னங்களின் நிலை என்ன என்று தெரியாது. அந்த புகைப்படங்கள் மூலம் அந்த ஆய்வில் நடந்த அனைத்தையுமே என்னால் நினைவுகூர முடியும். இது என்னுடைய பலம். 

என்னுடைய ஆய்வு முறையை இப்படிச் சொல்லலாம், நீங்கள் தரவுகளை சேகரிக்கிறீர்கள், அதுதான் பெரும்பணி. அந்த தரவுகளை நம்புங்கள், அவை உங்களுக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை கவனியுங்கள். அவற்றிலிருந்து உங்கள் ஆய்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள். தரவு அடிப்படையில்லாத எந்த பொதுத்தகவல்களையும், அது எவ்வளவு பெரிய ஆய்வாளர் கூறியிருந்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை.

தன் இல்ல நூலகத்தில்
புதிய ஆய்வாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

ஆய்வுக்கு முடிவே கிடையாது. ஒரு இடத்திற்கு ஒருமுறை மட்டும் போனால் போதாது, மீண்டும் மீண்டும் செல்வதும் ஒரு நல்ல அணுகுமுறைதான். நான் விக்கிரமங்கலம் என்ற இடத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன், வெயில் தாங்காமல் ஒருமுறை குகைத்தளத்தில் ஓய்வு எடுத்தபோது, கூரை விதானத்தில் ஒரு தமிழ் பிராமி கல்வெட்டை கண்டுபிடித்தேன். முன்னாய்வுகள் குறித்து படிப்பது முக்கியம். உண்மையான ஆய்வாளன் ஒரு ஆய்வில் ஈடுபடும்போது அதற்கு முன்பாக என்ன ஆய்வு நடைபெற்றிருக்கிறது என்று தெரிந்துகொண்டு ஈடுபட வேண்டும். ஆய்வில் உணர்வுபூர்வமான ஈடுபாடும், அறிவுப்பூர்வமான செயல்பாடும் இருக்க வேண்டும்.

தொல்லியல் என்பது இன்று பல்துறை பங்களிப்புமாகும், வரலாறு, மானுடவியல், நிலவியல், தாவரவியல், இயற்பியல் போன்ற துறையினரின் தொடர்பு வேண்டும். மொழி வல்லுனர்களது தொடர்பும் முக்கியம். இன்று வரலாற்றில் நிகழ்ந்த காலநிலை மாற்றங்கள் மிகத்தீவிரமாக ஆராயப்படுகின்றன. இவை அனைத்தையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் தேவை.

ஆய்வாளன் நடுநிலையாக இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம், அவன் கருத்தியலுக்குள் அரசியலுக்குள் சிக்கிக்கொண்டால் அவனது ஆய்வை நேர்மையாக முன்வைக்க முடியாது. நான் துறைக்கு வந்து இது ஐம்பதாவது வருடம், பல இழப்புகளை சந்தித்திருக்கிறேன். இருந்தாலும் எனது ஆய்வுகளை நான் சமரசமின்றி, சார்புகளற்று நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறேன் என்ற திருப்தி உள்ளது. ஆய்வாளனின் நிமிர்வும் ஆய்வில் ஒரு மூலப்பொருள்தான். 

தொல்லியல் வகுப்பில் வேதாசலம்
தொடர்ந்து தொல்லியல் விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்து வருகிறீர்கள்.

நான் தொல்லியல் படித்து வெளியே வந்த உடனே வகுப்புகள் எடுக்க ஆரம்பித்துவிட்டேன், அப்படிப்பார்த்தால் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தொல்லியல் பயிற்சி அளிக்கிறேன். தொல்லியலை வளர்க்க வேண்டும், சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்றால் அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இளம் ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இப்படி பலதரப்பட்டவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். நிறைய மாணவர்களை நேரடியாக அந்த இடங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறேன். பணிஓய்வு பெற்ற பிறகு பதினைந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தானம் அறக்கட்டளையின் மூலம் தொல்லியல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். எனக்கு மற்றவர்களை பயிற்றுவிப்பதில் தனிப்பட்ட மகிழ்ச்சி உண்டு. எந்தக்கல்லூரிப் பேராசிரியரை விடவும் நான் அதிகமாக வகுப்புகள் எடுத்திருக்கிறேன். எனக்கு கிடைத்த அறிவை எழுத்து மூலமாகவும் பேச்சு மூலமாகவும் பிறருக்கு கடத்த வேண்டும் என்பது எனது எண்ணம். மேலும் இது இந்த சமுதாயத்திற்கான எனது பங்களிப்பு என்று நம்புகிறேன். 

உங்கள் புத்தக உருவாக்க முறை மிகவும் நேர்த்தியாக இருக்கிறது, அழகான வடிவமைப்பும் புகைப்படங்கள் நிரம்பியதுமாக இருக்கிறது.

நான் எனது புத்தகங்களையே மீண்டும் மீண்டும் முன்வைக்கிறேன். ஏனெனில் நல்ல வாசகர் அதன் பின்னால் இருக்கும் எனது உழைப்பை அவற்றை வாசிக்கும்போதே புரிந்துகொள்வார். பலசமயம் இதையெல்லாம் நீங்கள் மட்டுமே எப்படி செய்தீர்கள் என்ற கேள்வி என்னிடம் வரும், நான் இதற்காக எத்தனை ஆண்டுகள் உழைத்துள்ளேன் என்பதை வெகுசிலரே அறிவார்கள்.

எனது ஆய்வு நூல்கள் எத்தனை ஆண்டுகள் காத்திருந்திருக்கின்றன, அவை நல்ல முறையில் பதிப்பாக வேண்டாமா. எனவே மிகுந்த அக்கறை எடுத்து புகைப்படங்கள், தரவுகள் சேர்த்து வடிவமைப்பேன், பதிப்பிக்கும் அச்சகங்களுக்கும் என்னைப்பார்க்க ஆச்சரியம்தான். அவர்கள் பார்க்க எந்த 'ஆய்வாளரும்' இத்தனை அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பார்கள். 

சிலர் எனது நூல்களுக்கு இத்தனை அக்கறை தேவையா என்று நினைக்கலாம், விலை கூடுதல் என்று நினைக்கலாம். ஆனால் எனது ஆய்வுக்கான உழைப்பு நீங்கள் நினைப்பதை விடவும் பெரிது, ஒவ்வொன்றும் பல்லாண்டுகால முயற்சிகள். அவற்றிற்கு நான் செலுத்தும் மரியாதை இந்த செம்மையான பதிப்புகள். 

கீழடியில்
வேறு பொழுதுபோக்குகளே உங்களுக்கு தேவைப்படவில்லையா?

மனதில் எப்போதும் எழுத்து மீது தனித்த மரியாதை உண்டு. ஒரு காலம் தீவிர வாசகனாக இருந்தேன். அப்போதைய எழுத்தாளர்களை முழுவதும் படித்திருக்கிறேன், ஜெயகாந்தனைத் தேடிப்போய் பார்த்து பேசியிருக்கிறேன். அது ஒரு காலம், பிறகு தொல்லியலில் ஆர்வம் வந்த பிறகு எனது வாழ்நாள் முழுவதையும் தேடிக்கற்கவும் கற்பிக்கவுமே செலவிட்டேன். இதில் எனக்கு வருந்த ஒன்றுமில்லை பெருமைதான். விளையாட்டாக வகுப்புகளில் சொல்வதுண்டு எனது மனைவி, குழந்தைகளின் பிறந்தநாளை கேட்டால் எனக்கு நிஜமாகவே தெரியாது ஆனால் சுந்தரபாண்டியனோ, இராஜராஜனோ அவர்களது காலத்தை கேட்டால் உடனே சொல்லிவிடுவேன்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும் எனது மனைவி இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்தார். அவர் கல்லூரி பேராசிரியை, அவர்தான் எனக்கு புத்தகங்களை செம்மைப்படுத்த உதவுவார். ஒருபோதும் அவர் என்னை கடிந்துகொண்டதில்லை, புத்தகங்களாக வாங்கிக்குவிக்கும் போதும், எனது சேமிப்பை முழுவதும் பயணங்களுக்காக செலவிட்டபோதும் கூட வேண்டாம் என்று சொல்லியதில்லை. வேறு யாரும் இப்படி இருக்க மாட்டார்கள், அவ்வகையில் நான் கொடுத்து வைத்தவன்.

வேதாசலத்தின் மனைவி கலாவதி. மகள் திருநங்கை (ஆய்வாளர்), மகன் திருநம்பி

இப்போது என்ன ஆய்வுகள் செய்து வருகிறீர்கள்?

ஆய்வுக்கு முடிவென்பதே இல்லை. இன்னும் பாசன முறை குறித்து, நடுகற்கள் குறித்து, சமயங்கள் குறித்தெல்லாம் ஆய்வுநூல்கள் எழுதவேண்டும். சிட்டி சிவபாதசுந்தரம் ‘கௌதமபுத்தர் அடிச்சுவட்டில்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார், படித்துப்பாருங்கள் பிரமாதமாக இருக்கும். எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்திலேயே லும்பினி முதல் புத்தர் பயணித்த அனைத்து இடங்களுக்கும் சென்று எழுதியிருப்பார். அது போன்ற ஒரு புத்தகத்தை தொல்லியல் நோக்கில் எழுதவேண்டும் என்று ஆசையிருக்கிறது. அவ்வாறு பல ஆசைகள் உள்ளன. எனக்கு சக்தி இருக்கும்வரை நான் ஆய்வில் இயங்கிக்கொண்டுதான் இருப்பேன்.

சந்திப்பு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி, சசிகுமார்

Integrity is also a core element in research - V. Vedachalam Interview

5,000 நூல்கள் கொண்ட வீட்டு நூலகத்தில் வேதாசலம் உடன் சசிகுமார்

ஆய்வாளர் வேதாசலத்துடன் புதுவை தாமரைக்கண்ணன்