![]() |
| (ஓவியம்-விஷ்ணு ராம்) |
தாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்கள் பலர். திருவாரூர் வி.கலியாண சுந்தரனார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசாமி முதலியார், சுன்னாகம் குமாரசாமி புலவர், சூளை சோமசுந்தர நாயகர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தொழுவூர் வேலாயுத முதலியார், திருமானூர் கிருஷ்ணையர் போன்ற பல தமிழறிஞர்கள் தங்கள் பெயரோடு பிறந்த ஊரை அல்லது வாழ்ந்த ஊரை இணைத்துக்கொண்டு ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இசையுலகில் பெரிய இசைவாணர்கள் தங்கள் ஊர்ப் பெயரோடுதான் புகழ் பெற்று விளங்கினர். அந்த வரிசையில் குடவாயில் என்ற ஊரை உலகறியச் செய்தவர் பாலசுப்ரமணியன். அவரைக் ‘குடவாயில்’ என்றே அறிஞர் உலகம் அழைக்கிறது.
தொல்லியல் அறிஞர் நாகசாமியிடம் தொல்லியல் ஆய்வு நுட்பங்களைக் கற்றவர் இவர். சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களிடம் திருமுறைகளையும், சாத்திரங்களையும் என்னுடன் இருந்து பயின்றவர். இளமையிலிருந்தே தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டி, அதில் ஆழங்கால்பட்டு அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அவருடைய வளர்ச்சியை முப்பதைந்து ஆண்டுகளாக உடனிருந்து கவனித்து வருகிறேன். களஆய்வு செய்யாமல் இவர் கட்டுரை எழுதியதே இல்லை. மூலத்தைப் பார்க்காமல் பாடலையோ உரையையோ இவர் மேற்கோள் காட்டியதில்லை. இவர் எழுதிய நூல்கள் அறிஞர் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
நந்திபுரம் எங்குள்ளது என்று நிர்ணயிக்க முடியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தை ஊகித்துக் கொண்டிருந்த வேளையில் 1992ஆம் ஆண்டில் நந்திபுரம் இதுதான் என்று உறுதி செய்து நூல் எழுதி INTAC மூலம் வெளியிட்டார்.
தஞ்சை பெரிய கோயிலை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து இவர் எழுதிய இராஜராஜேச்சுரம் நூல் அறிஞர் உலகில் பெரிதும் பாராட்டப்பட்ட நூலாகும்.
அதேபோல் இராஜேந்திர சோழன் பற்றி இவர் எழுதிய நூல் பல ஆண்டு ஆராய்ச்சிகளால் விளைந்ததாகும். கங்கை கொண்ட சோழபுரம் பற்றி எழுதத் தொடங்கி, அதனை இராஜேந்திர சோழன் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக அவன் பெயரிலேயே இதனை வெளியிட்டுள்ளார். கங்கை நதியில் எந்த இடத்தில் நீர் முகந்துகொண்டு எந்த வழியாக கங்கை கொண்ட சோழபுரம் கொண்டு வந்து சேர்த்தான் என்பதை ஆதாரத்தோடு விளக்கியுள்ளார். தென்கிழக்கு ஆசியா முழுதையும் கைப்பற்றி மிகச் சிறந்த கப்பற்படையை உருவாக்கி, தன் தந்தைக்கும், தனக்கும் பெருமை சேர்த்த வரலாறு அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.
இராஜேந்திர சோழனின் பிறந்த நாளைப் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு நாட்களைக் குறிப்பிட்டிருந்ததைத் தகர்த்தெறிந்து திருவாரூர்க் கோயில் கல்வெட்டைச் சுட்டிக்காட்டி, இராஜேந்திரனே தன்னுடைய பிறந்த நட்சத்திரத்தைப் பதிவு செய்துள்ளதை உலகிற்கு அறிவித்தார்.
இதைப் போன்றே தாராசுரம் திருக்கோயிலின் சிறப்பினை இவர் எடுத்துக் கூறியதுபோன்று யாருமே எடுத்துக் கூறியது இல்லை. கருவறைக் கோயில் எப்படி கைலாயமாகத் திகழ்கிறது என்பதையும், கங்கையும், யமுனையும் எப்படிக் கவரி வீசி நிற்கின்றனர் என்பதையும் இவர் எடுத்து விளக்கியதும்தான் கோயிலின் சிறப்பு நமக்குப் புரிகிறது.
இவரது ‘தேவார மாண்பும் ஓதுவார் மரபும்’ என்ற நூல் ஓர் அரிய கருவூலம், கால் நூற்றாண்டு உழைப்பில் உருவான ஆய்வுச் சுரங்கம். எங்கெல்லாம் சிவாலயங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நேரில் சென்று கல்வெட்டுகளைப் பயின்று, சிற்பங்களைப் பார்வையிட்டு, தேவாரச் செய்திகளோடு ஒப்பிட்டு, தம் ஆய்வுக் கருத்துக்களை ஐயம் திரிபற உறுதிப்படுத்தியுள்ளார். தேவாரம் என்ற பெயர் எப்படிக் காலமாற்றத்தால் இறைவன் சந்நிதிக்குச் சூட்டப்பட்டிருந்தது திருப்பதிகங்களுக்கு மாற்றம் பெற்றுவிட்டது என்பதை ஆழ்ந்து ஆய்வுசெய்து நிறுவியுள்ளார்.
மன்னர்கள் தமிழ் வளர்த்ததையும், தமிழில் இறைவனைத் துதி செய்ய தேவாரம் பாடுவோரைப் பராமரித்ததையும் அறிய முடிகிறது. தேவாரம் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பகுதி. அது வரலாற்றையும், தமிழிசையையும் பாதுகாத்து வந்துள்ளது. தமிழ் இலக்கணத்திற்கு அரிய பாடல்கள் வழியாக இலக்கிய நயத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
தமிழகத்தில் கலைச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் அருமை பெருமையெல்லாம் அறியாத பாமரராய் தமிழர்கள் புறக்கணித்து வாழ்கின்றனர். குடமுழுக்குக்காக கோவில் சுவர்களைச் சிதைத்து வரலாற்று ஆவணங்களை அழித்து வருவதை திருவிடைவாய் தேவாரக் கல்வெட்டுச் சிதைவு நமக்கு எடுத்துரைக்கிறது.
தேவாரத்தில் ‘ங’கர வெல்கொடி என்று பாடப்பட்டிருப்பதைப் பழங்கால எழுத்தமைதியில் ;ங’ கரம் எப்படி இடபத்தின் தலைபோல் உள்ளது என்பதைப் படம்போட்டு விளக்கினார். இடபக் கொடிதான் 'ஙகர' வெல்கொடி என்று நிலைநாட்டினார்.

'தாவிமுதல்' என்று தொடங்கும் தேவாரப் பாடலில் எல்லா நதிகளின் பெயர்களும் வருகின்றன. ஆனால் தாவி என்பதே ஜம்முவில் உள்ள புண்ணிய நதி என்பதை ‘ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்' இரயில் வண்டியை மேற்கோள் காட்டி விளக்கம் தந்தார்.
பொய்யடிமையில்லாத புலவர் என்பது சங்கப் புலவர்களையே குறிக்கும் என்பதைத் தாராசுரம் பெரிய புராண சிற்பங்களைச் சுட்டிக்காட்டி, 49 புலவர்களின் படிமம் எப்படி 4;9 என்று சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது; சங்கப் பலகை காட்டப்பட்டுள்ளது என்று விளக்கினார்.
மன்னர்கள் தமிழ் வளர்த்ததையும், தமிழில் இறைவனைத் துதி செய்ய தேவாரம் பாடுவோரைப் பராமரித்ததையும் அறிய முடிகிறது. தேவாரம் தமிழ் இலக்கியத்தின் சிறப்பான பகுதி. அது வரலாற்றையும், தமிழிசையையும் பாதுகாத்து வந்துள்ளது. தமிழ் இலக்கணத்திற்கு அரிய பாடல்கள் வழியாக இலக்கிய நயத்தை எடுத்துக் காட்டியுள்ளது.
சமயாசாரியார்களின் வரலாற்று நிகழ்வுகள் ஆலயங்களில் விழாக்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. திருமயிலையில் அறுபத்து மூவர் விழாவும், சீர்காழியில் திருமுலைப்பால் விழாவும், திருவையாற்றில் கயிலைக்காட்சி விழாவும், திருமுருகன் பூண்டியில் வேடுபறி விழாவும், மதுரையில் பிட்டுத் திருநாள் விழாவும், திருவேடகத்தில் ஏடு எதிரேறிய விழாவும், திருப்பாதிரிப்புலியூரில் அப்பர் தெப்ப விழாவும், திருவாரூரில் ஆழித்தேர் விழாவும், திருக்குவளையில் நெல் மகோத்சவ விழாவும் சமயாசாரியார்களின் பெருமையை வெளிப்படுத்தும் விழாக்களாகும். பிற தலங்களில் கொண்டாடப்படும் விழாக்களைப் பற்றியும் நூலாசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அத்தகைய விழாக்களுக்கு மன்னர்கள் ஏற்படுத்திய அறக்கட்டளைகள் பற்றி கல்வெட்டுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
இருண்டகாலம் களப்பிரர் காலம் என்று தமிழகத்தின் வரலாற்றாசிரியர்கள் கூறிவந்துள்ளனர். அதை மறுத்து சுல்தான்களின் காலம்தான் இருண்டகாலம் என்று கூறி, தமிழக ஆலயங்களுக்கு அவர்களால் ஏற்பட்ட அழிவுகளை சுட்டிக் காட்டியுள்ளார்.
கோயில் வளாகத்திலேயே புதைக்கப்பட்ட செப்பேடுகள், சிலைகள், ஆறுகளிலும் வயல்களிலும் புதையுண்டு கிடந்து அகப்படும் சிலைகள் எல்லாம் வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. ஆலயக் கருவூலங்களைக் காப்பாற்ற அடியார்கள் அவற்றை பூமிக்கடியில் புதைத்து வைத்து மறைத்துள்ளனர். இப்போதும் அங்கங்கும் புதையல்களாகக் கலைச்செல்வங்கள் கிடைத்து வருகின்றன.
நாயன்மார்கள் தெய்வநிலை எய்தியவர்கள் ஆதலால் அவர்களுடைய பிரதிமங்கள் கோயில்களில் இடம்பெற்றுள்ளன. மூவர் முதலிகளும் மாணிக்கவாசகரும் சைவ சமயாசாரியர்களாகப் போற்றப்பட்டு அவர்களுடைய செப்புச் சிலைகள் வீதி உலாவில் வலம் வருகின்றன. சைவப் பெருமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவபெருமான் திருநாமங்கள் மட்டுமன்றி சமயாசாரியார் பெயர்களையும் வைத்துப் புண்ணியம் சேர்க்கின்றனர்.
மூவர் தேவாரப் பாடல்கள் எந்த எந்த தலம் பற்றிப் பாடப்பட்டன, எந்த எந்த இடத்தில் பாடப்பட்டன என்பதை திருத்தொண்டர் புராண அடிப்படையில் வரிசைப்படுத்தி இந்நூலில் கூறப்பட்டுள்ளது. இது புதிய முயற்சி. இதுவரை யாரும் செய்யாத ஆய்வுப் பணி.
ஓதுவார்கள் எப்படியெல்லாம் அர்ப்பணிப்புடன் தமிழ்த் தொண்டாற்றி வந்துள்ளனர் என்பதையும், மன்னர்களும் கொடையாளர்களும் அவர்களை எப்படிப் போற்றி வந்துள்ளனர் என்பதையும் அவரது ‘தேவார மாண்பும் ஓதுவார் மரபும்’ விவரிக்கிறது.
திருப்பனந்தாள் சோ.முத்து கந்தசாமி தேசிகர் எழுதிய ‘ஓதுவித்த வாய்மையும், ஓதிவந்த வாய்மையும்' என்ற கட்டுரையை நன்றியுடன் போற்றி, அக்கட்டுரை வாயிலாக இருபதாம் நூற்றாண்டில் தேவார மரபு காத்த ஓதுவார்களைப் பட்டியலிட்டுள்ளது அரிய ஆவணப் பதிவாகும். தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் கல்வெட்டுச் செய்திகளையே ஆதாரமாகக் கூறி வரலாற்றை எழுதும் நிலையில், இவர் திருமுறைப் பாடல்களை ஒப்பிட்டுத் தொல்லியல் செய்திகளை நிலை நிறுத்தினார்.
தமிழக அரசு இவருக்கு உ.வே.சா. விருது அளித்துப் பெருமைப்படுத்தியது. சைவத் திருமடங்கள் இவருக்கு பல்வேறு பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. தமிழ்ப் பல்கலைக் கழகம் இவருக்கும் தமிழன்னை விருது அளித்துப் போற்றியுள்ளது. இவருடைய நூல்கள் தமிழக அரசின் பரிசுகள் பெற்றுள்ளன. சென்னை செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்திலும் இரண்டு ஆய்வு நூல்களை நிறைவு செய்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட அரிய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், அரிய காசுகளையும், ஓவியங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
அருமை நண்பர் குடவாயில் பாலசுப்ரமணியனின் இந்நூல்கள் இவருடைய ஆய்வு நெறியின் உச்சமாகத் திகழ்கிறது. இவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்க் கலைக்கும், பண்பாட்டுக்கும் தொண்டுசெய்ய வேண்டும் என்றும் இவர் உலகப் புகழ் பெற்ற தொல்லியலறிஞராக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன். இறையருள் துணை செய்வதாக.
இரா.சுப்பராயலு
இரா.சுப்பராயலு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் துணைப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழில் பல்துறை நூல்களை எழுதியுள்ளார். கார்டன் பி. ராபியின் மேலாண்மை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.



