
அந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே
-காரைக்கால் அம்மையார்
தண்விசும்பாய்த் தண்விசும்பின் உச்சியாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞாலமாகிக்
காண்கின்ற கதிரவனும் மதியுமாகிக்
குடமுழவச் சதிவழியே அனல் கையேந்திக்
கூத்தாட வல்ல குழகனாகிப்
படவரவொன்றது வாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே
-அப்பர்
மனித குல வரலாற்றை திரும்பிப் பார்த்தால் அனைத்து நாகரிகங்களுமே தாளத்தை உணர்ந்திருப்பதை கண்டுகொள்ளலாம். மண்ணைக் கொண்டு பாண்டம் செய்யும் பொழுதே அதிலிருந்து பிறக்கும் ஓசையை கூர்கின்றனர். துந்துபி என்ற தாளக்கருவியை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. தோலால் கட்டப்பட்டு இயக்கப் படும் அவனத்த வாத்தியங்களைப் பற்றிய குறிப்பை பரதரின் நாட்டிய சாத்திரத்தில் இருந்து காண்கிறோம். தமிழ் நிலங்களில் மட்டுமே முப்பது வகையான தோற்கருவிகள் வழங்கி வந்தன என்பதை அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்து அறியலாம்.
சீர்மிகு மத்தளம் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை
தமருகம் தண்ணுமை தாவில் தடாரி
அந்தரி முழவொடு சந்திர வளையம்
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம்
மாசில் தகுணிச்சம் விரலேறு பாகம்
தொக்க உபாங்கம் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே (பஞ்சமரபு)
சீர்மிகு மத்தளம் முதன்மை தாள இசைக்கருவியாக விளங்கிய காலத்து எழுந்து வந்த முழவு வகையாகிய குடமுழா/குடமுழவம்/குடபஞ்சகி/ஐம்முக முழவம்/ஐங்கண் முழவு/பஞ்சமுகவத்தியத்தை பற்றிய வரலாற்று சித்திரத்தை தொல் சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் இலக்கியத்தரவுகளைக் கொண்டு பண்பாட்டு ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியம் ‘குடமுழா’ என்ற ஆய்வுநூலில் விரித்துச் சொல்கிறார்.
![]() |
| (ஓவியம் - தமிழ்குமரன்) |
குறிப்பாக ஐந்து முக முழவம் ஆடல்வல்லானின் நடனத்திற்கு உகந்தது என்பதை திருவாலங்கட்டு மூத்த பதிகத்தில் காரைக்கால் அம்மையார் முதன்முறையாக கையாள்கிறார். தேவாரப் பாடல்களின் மூலம் நந்திதேவர் மற்றும் வாணன் ஆகிய இருவருமே குடமுழா இயக்குபவர்கள் என்ற கருத்தை அறிய முடிகிறது. (வாணன் என்பவன் வாணாசுரன் என்ற அரக்கனாக இருந்தவன், திரிபுரத்தை சிவன் எரிக்க, வெல்லப்பட்டு ஆட்கொள்ளப்பட்டவன்.) மேலும், பூதங்களும் பேய்களும் இக்கருவியை இசைக்கின்றன. தமிழகத்தில் நந்தியும் வாணாசுரனும் என்றால் சேரநாட்டில் குடமுழாவை இயக்குபவர் திருமால். கேரள ஓவியங்களில் சிவதாண்டவத்திற்கு மிழவு என்ற ஒருவகை குடமுழாவை திருமால் இசைக்கிறார்.
பொ யு 5 இலிருந்து 10 வரையில் பிறந்த பல இலக்கியப் படைப்புகள் ஈசன் நடனத்திற்கு சிறப்பாகவும் பெண்கள் ஆடும் நடனத்திற்கும் குடமுழா பயன்பாட்டிலிருந்ததை உறுதி படுத்துகின்றன. 11-ஆம் நூற்றாண்டின் கல்லாடம் என்ற நூல் திருப்பரங்குன்றத்தில் ஈசன் பதஞ்சலி வியாக்ரபாதர் ஆகிய முனிவர்களுக்காக பல்வகை கருவிகளின் இசை முழங்க ஆடிய நிகழ்வை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு தாளக்கருவியின் உருவ அமைதியும் அதை தாக்கி ஒலி எழுப்பும் முறைமை பற்றியும் சொல்லப் படுகிறது.
நான்முகம் தட்டி நடுமுகம் உரைப்ப
என்ற வரியில் பெரிய உடலும் தலையையும் கொண்ட ஐம்முக முழவம் இசைக்கப் படுகிறது. பானையின் வட்ட வடிவின் புறத்தில் இருக்கும் நான்கு முகத்தையும், நடுவில் அமைந்த முகத்தையும் மாறி மாறி புடைத்து இசைக்க வேண்டும்.
மேலும், வாணனை பற்றி
மேருக்கிளைத்த தோளாயிரத்தோடும்
எழுகிடல் கிளர்ந்த திரல் கலி அடங்க
முகம் வேறிசைக்கும் குடமுழ விரட்ட
என்ற பாடலில் மேரு மலை ஆயிரம் கிளை விட்டது போல தோள்களையுடைய வாணன் ஏழு கடல்களின் ஆராவரம் அடங்க எழுப்பிய குடமுழவின் இசை என்பது இன்று நம்மால் மனக்கண்ணால் சென்று தொடக்கூடிய காட்சியாகவே தோன்றுகிறது. ஐந்து முகம் கொண்ட வாத்தியம் என்றால் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சுருதியில் தனித்தனி ஒலியை கொண்டிருக்க வேண்டும். அதற்கென மேற்தோலை சரியாக பதப்படுத்தியும் முறையான விறைப்புத் தன்மையுடனும் கட்டி இருக்க வேண்டும். யோசித்துப் பார்த்தால் இன்றைய ட்ரம் கிட் போல அது ஒரு தாள வாத்திய தொகுப்பு, ஒரு கூட்டு வாத்தியம். அதை ஒருவர் பலவித வேகங்களில் விரட்டி, அதாவது தான் முன்சென்று தாக்கி, ஓசை எழுப்புகிறார். மண் பானை வடிவிலிருந்து செப்பிற்கும் வெண்கலத்திற்கும் பின்னாளில் பஞ்சலோகத்திற்கும் குடமுழவு மாறிய காலத்தில் அதன் கணத்தையும் கருவி அமைப்பின் நுட்பங்களைக் கருதி, இயக்குபவரை மலை போன்ற ஆயிரம் தோள்களுடன் அல்லாமல் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ஆலய வாசிப்பு
பாரசைவம் என்ற வாத்திய இசை மரபினரின் வழி வந்த ‘முட்டுக்காரர்’ திருவாரூர் சங்கரமூர்த்தியின் முன்னோர் வழி கிடைத்த பாரசைவ உற்பத்தி: பஞ்ச முக வாத்திய லட்சணம் என்ற அரிச்சுவடி பற்றிய விரிவான விவரங்களை அறிகிறோம். வாசிப்பின் முறை அதிகம் விளக்கப்படவில்லை. பாரசைவர்கள் வாத்தியத்திற்கு தர வேண்டிய மதிப்பும் சமூகம் கலைக்கு தரவேண்டிய முக்கியத்துவம் விளக்கப் படுகிறது. பாரசைவர் பிடாரி கோயில் பூசையோடும் சிவாலய திருவிழாக்களில் கொடியேற்றும் பொழுது மட்டுகம் என்ற தாள இசைக் கருவியை கையாள்பவராகவும் திகழ்ந்திருக்கின்றனர். இவர்கள் நந்திதேவரின் வழி வந்ததாக நம்பப்படுகிறது. இன்றளவும் திருவாரூர் தியாகராஜர் சந்நிதியில் திங்கள் மற்றும் வெள்ளியன்று மாலை வேளை சாயரட்ச பூசையின் தொடக்கத்தில் தனிச்சிறப்பாக குடமுழவு பாரிநாதசுரத்தொடும் கைத்தாளத்தொடும் சேர்ந்து இசைக்கப்படுகிறது. வாத்தியத்தின் எடை காரணமாக அதை மரத்தாலான வண்டியை வைத்து தள்ளி எடுத்து வருகிறார்கள். காரைக்கால் அம்மை கண்ட ‘அந்தி’ நிருத்தம் ஆடும் அழகன் இவராக இருக்கலாம். இதைத்தவிர, திருத்துறைப்பூண்டி பவ ஔஷதேஸ்வரர் கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை குடமுழவு இசைக்கப்படுகிறது. இரண்டுமே சோழர் காலத்தில் வடிக்கப் பெற்று அளிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. முட்டுக்காரர் சங்கரமூர்த்தியின் வாழ்நாளில் இவவிரண்டு இடங்களுக்கும் அவரே சென்று வாசித்திருக்கிறார். “த, தீம், தொம், நம்” என்ற சொற்கட்டோடு தியாகர் முன்பு குடமுழவம் ஒலிப்பது “எல்லாம் தாங்கள் தான்” என்று அந்த ஈசனை நோக்கி குறிப்பிடும் தாளச் சொல்லாகக் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக சிவனை மையமாக அமைத்து குடமுழவம் வளர்ந்தமைக்கான காரணம் இந்திய பண்பாட்டின் அடிப்படைகளில் உள்ளது. சிவன் நாதபிரம்மத்தின் வடிவினர். ஒலி அவரிடமிருந்தே பிறந்தது. இசையையும் தாளத்தையும் நடனத்தையும் தோற்றுவித்தவர் அவரே. ஏழிசையாகவும் இசையின் பயனாகவும் அமைந்தவர் என்பதை பக்தி இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன. சதாசிவனின் ஐந்து முகத்திலிருந்து ஐம்முக முழவம் தோன்றியது என்று பஞ்சமுகவாத்ய லக்ஷணம் சொல்கிறது. சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய முகங்களிலிருந்து முழவின் பஞ்ச மகா சப்தங்களான நாகபந்தம், ஸ்வஸ்திகம், தலக்னம், சுத்தம், சமஸ்கலி முறையே பிறக்கின்றன என்று சொல்லப்படுகிறது. முட்டுக்காரர் சங்கரமூர்த்தியின் முன்னோர் வழி கிடைத்த பரதக்கலை விளக்கம் கூறும் சுவடியில் ஐந்து முகங்களில் இருந்து கிடைக்கும் சதிகளில் இருந்து பெருக்கி 35 வகையான சொல்லுக்கட்டுகளாக பகுத்து பஞ்சமுக வைத்தியம் வாசிக்கப்படலாம் என்பதற்கான விளக்கம் தலபாடங்களுடன் முழுமையாக கூறப்பெற்றுள்ளது.
சிற்பத்தில் முழவம்
வாகடர்களின் ஆட்சியில் 5ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ஏழிசை வடிவமான சிவனைச் சுற்றி சிவகணங்கள் யாழ், முழவம், குழல் ஆகிய கருவிகளை வாசிக்குமாறு அமைந்திருக்கிறது. எல்லோரா குகையில் ஆடும் சிவனருகில் பலா வடிவ குடமுழவம் வாசிக்கும் சிற்பம் கிடைக்கப்பெறுகிறது. கீழக்கங்ககர்கள், இராஷ்ட்ரகூடர்கள், கூர்ஜரபிரதிஹாரர்கள், மேலைச் சாளுக்கியர்கள், நுளம்பர்கள் என்று பல அரசுகளைச் சேர்ந்த சிவாலயங்களில் சிவகணமோ அல்லது நேரடியாக சிவனே இசைக்கும் வண்ணம் முழவு அமைந்திருக்கிறது. இது இக்கருவியின் அக்கால ஏற்பை காட்டுகிறது. வழிபாட்டு நோக்கில் மட்டுமல்லாது கலைப் பயன்பாட்டிலும் தன்னை சிறப்புற தக்கவைத்திருக்க வேண்டும்.
8ஆம் நூற்றாண்டில் இருந்து 10ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் செதுக்கப்பட்ட முழவங்களின் உருவ அமைதி பகுதி காலத்திற்கேற்ப மாறுகிறது - தற்கால கடம் போலவும், தபலா போலவும் போங்கோ போலவும் அவை இருக்கின்றன. வாசிக்கும் தோரணை – அமர்ந்திருக்கும் முறை, உடல் இயக்கத் தன்மையில் மாற்றங்கள் தெரிகின்றன. (பட்டதக்கல் கோயில் தாண்டவ சிவனின் சிற்பத் தொகுதிகளை இணையத்தில் தேடித் பார்க்கும் பொழுது சில இடங்களில் முழவம் இன்றைய கடமாக தவறாக அடையாளம் கண்டிருக்கின்றனர்)
தமிழக சிற்பங்களில் 7ஆம் நூற்றாண்டிலிருந்து குடமுழவங்கள் இடம்பெறுகின்றன. தமிழக ஆடல்வல்லான் சிற்பங்களிலேயே தொன்மையானது என்று கலைவல்லுநர் C.சிவராமமூர்த்தியால் நம்பப்படுகிற சீயமங்கலம் குடைவரையில் நீளவாக்கு மத்தள வடிவில் சிவகணம் முழவம் இசைக்க புஜங்கநிசிதம் (புஜங்கதிராசிதம் என்ற கரண அமைப்பாக இருக்கலாம்) என்ற கோலத்தில் ஒரு கால் தரையில் இருக்க ஒரு கால் தூக்கி ஆடும் ஈசனின் சிற்பம் கிடைக்கிறது. முழவின் நீள உடலில் வார்கள் குறுக்காக பின்னப்பட்டிருப்பதை காணலாம். இது பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் ஏழாம் நூற்றாண்டில் எடுகக்கப்பட்டது.
| சீயமங்கலம் |
திருப்பரங்குன்றத்தில் ஒரு புறம் சிவனும் மறுபுறம் சப்தமாதர்களும் சதுரதாண்டவம் ஆட இடையில் நந்திதேவர் இரண்டு முழவங்களை இசைக்கிறார். பிற்காலத்தில் சுவர் எழுந்து பாதி மறைந்திருப்பதாக குடவாயில் பாலசுப்ரமணியம் கூறுகிறார்.
சோழர் காலத்தை முழவத்தின் பெருவளர்ச்சிக் காலம் எனலாம். இராஜராஜன், இராஜேந்தின், இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், அதிராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவியர் எடுத்த கற்றளிகளில் எங்கெல்லாம் ஆடும் ஈசனின் கோலம் இடம்பெறுகிறதோ, அங்கெல்லாம் குடமுழவம் இடம் பெறுகிறது. பிற்கால சோழர் ஆலயங்களில் முழவத்தின் முகங்களின் எண்ணிக்கை உயர்ந்து அது நுட்பமான வாசிப்பிற்குரிய கருவியாக துலங்கி வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக 11-12ஆம் நூற்றாண்டுகளை ஐம்முக முழவத்தின் வளர்ச்சியின் பொற்காலம் என்று கூறும் அளவிற்கு பல ஆலய சிற்பங்களிலும் செப்புத் திருமேனிகளிலும் இலக்கியத்திலும் இக்கருவி இடம்பெறுகிறது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலின் கரண சிற்பவரிசையில் லலாடதிலகம் என்ற ஒரு கால் தரையில் ஊன்றி மறுகால் தலைக்கு மேல் செங்குத்தாக உயரத்திருக்கும் கோலத்தில் சிவன் பதினெட்டுகரங்களுடன் அமைகிறார், 11ஆம் நூற்றாண்டு காலத்து இச்சோழ ஆலயத்தில் நந்திதேவர் ஐம்முக முழவத்தை இசைக்கிறார். இங்கு பானைவடிவின் மையமுகம் அளவில் பெரிதாக உள்ளது. மற்ற நான்கு வாய்கள் மையவாய் போல மேல் நோக்கி இல்லாமல் பக்கவாட்டில் அமைந்துள்ளன.
சிதம்பரம் நடராசன் கோயிலில் (11ஆம் நூற்றாண்டு) அதிட்டானத்தில் (பொன்னம்பலத்தின் எதிரம்பலத்தில்) வாணன் இசைக்கும் விரிவான சிற்பத்தில், எட்டுகரங்களில் நான்கில் நடுவில் இருக்கும் பஞ்சமுக வாத்தியமும், வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் தனித்தனி ஒருமுக முழவத்தையும், மீதி இரண்டு விஸ்மயம் காட்டியும் அமைகிறது. தாள இசை மரபின் இறுதி என்றும், குடமுழவு சிற்பங்களிலேயே தலையாயது என்றும் குடவாயில் பாலசுப்ரமணியம் இந்த சிற்பத்தை கருதுகிறார். இது என்ன பிரமாதம் என்றோ, இது எவ்வளவு உயர்ந்தது என்றோ, இவ்விசையை விஞ்சும் ஆடலுக்காக நான் இசைக்கிறேன் என்றோ வாணன் நம்மிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஐம்முகமுழவே மஹா சதாசிவ வடிவம் எனும் போது. உள்ளும் புறமும் எங்கும் நாதவடிவான பிரம்மத்தை அறிந்த இசை கலைஞரின் பேருவகையே அங்கு வெளிப்படுகிறது என்று தோன்றுகிறது.
இவ்வாறு சிற்பங்களில் மட்டுமல்லாமல், செப்பேடுகளிலும், செப்புத் திருமேனிகளிலும் ஓவியங்களிலும் ஐம்முக முழவங்கள் பற்றிய செய்திகளை பல விரிவான சான்றுகள் மூலமாக குடவாயில் பாலசுப்ரமணியம் நமக்கு கடத்துகிறார். குறிப்பாக திருவலஞ்சுழி உள் மண்டபத்தில் அமைந்த நாயக்கர் கால ஓவியமொன்று சிந்தையை ஈர்க்கிறது. தாருகாவன காட்சியில் ரிஷிகள் ஏவிய ஐந்தலை அரவத்தை மித்தித்தபடி ஊர்த்துவ ஜானு கரணத்தில் நின்றாடும் சிவனும், கையில் சக்கரத்துடன் திருமாலும், வணங்கிய கையுடன் பிரமனும்,பஞ்சமுகவாத்தியத்தை நின்றபடியே இசைக்கும் நந்தியும், இவை அனைத்தையும் களித்து நோக்கும் உமையும் இணைந்த ஓவியத் தொகுப்பு. சுண்ணாம்பு அடிக்கப்பட்டு இந்த ஓவியம் இன்று அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தகைய அரியவகை சிற்பங்களும் ஓவியங்களும் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்ற ஆய்வாளரின் ஆய்வுகள் வழியாகவே ஆர்வமுள்ளோர் அறிய இயலும். அவ்வகையில் இந்த நூல் கலை-இலக்கிய-பண்பாட்டு ஆர்வலர்களுக்கு அரும்பொன்.
![]() |
| ஆடல்வல்லான்- கங்கை கொண்ட சோழபுரம் |
இதற்கு தேவைபட்ட விரிவான பயணங்களும் நூல்களும் வியப்பிற்குரியவை. அதைவிட ஆராய்ச்சிக்காக தன்னை முழுவதுமாக கொடுத்துத் தேடிய அவர் மனம் வணக்கத்திற்குரியது. என்றாலும், அரும்பதவுரையும், நூற்பட்டியலும் நூலில் இடம்பெறவில்லை என்பது குறையாக உள்ளது. இன்றைய ஆராய்ச்சி முறைக்கான ஆய்வு முறைகளையும் கச்சிதங்களையும் சார்புநிலைகளையும் கைகொள்ளவில்லை என்பது எந்நிலையிலும் இத்தகைய முன்னெடுப்புகளை புறந்தள்ளுவதற்கான காரணமாக அமைந்துவிடலாகாது. குறிப்பாக வழிபாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ள மரபு கலை இலக்கியத்தை அணுகும் பொழுது ஆய்வாளரின் மரபு மனம் வெளிப்படுவதை குறை என்று கொள்ளுதல் பிழைப் புரிதல்களுக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருக்கிறது.
இந்திய இசை மரபில் பல இசைக்கருவிகள் தோன்றித் திகழ்ந்து அழிந்திருக்கின்றன. அதிலும் வாய்பாட்டுக்கலை, கூத்து-நடனக்கலை போன்ற முதன்மை நிகழ்த்துக்கலைகளை நம்பி அவற்றுடன் இணைந்து அமைந்ததால் சில கருவிகள் அதன் பயன்பாட்டு லாகவம் கருதி ஏற்றம் பெற்றும், சில அவற்றின் தனித்துவம் சிதைந்தும் வந்திருக்கின்றன. இசைக்கே உண்டான தொழில்நுட்ப காரணங்களினாலும், புரவலர் இன்றி தொழில்முறையாக லாபகரமாக இல்லாதது போன்ற புற காரணிகளும் இதில் அடங்கும். ஆனால் இன்றைய வளர்ச்சி நிலையின் பின்னணியில், குடமுழா உட்பட தொல் கருவிகள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு வழி வகுத்திருப்பது அதன் முந்தைய வடிவங்களைப் பற்றிய விரிவான பயணங்களையும் உசாவல்களையும் நிகழ்த்திய ஆய்வாளர்களே. பண்பாட்டின் நீண்ட இடைவெளிகளை நிரப்பியமைக்காக இந்த நூல் முக்கியமாகிறது.
பார்கவிஉசாத்துணை:




