Tuesday, 17 February 2026

பெருஞ்சுடர் வாயில் - தமிழகக் கோபுரக்கலை மரபு, லால்குடி தினேஷ்

நிலவுடன் எந்நேரமும் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் ஒர் கந்தர்வன் கடவுளை நோக்கி தவமிருந்தான். அவன் தவத்திற்கு இறங்கிய கடவுள் அவனை மலை உச்சியில் உள்ள சுனையில் மீனாய் படைத்தார். அச்சுனையில் விழும் நிலவின் பிம்பத்துடன் அவன் காலம் முழுவதும் நீந்திக் களித்தான். அது போலத்தான் குடவாயிலின் புத்தங்கள் எனக்கு.

அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்த பெருந்தொற்றுக்காலம், எழுத்தாளர் ஜெயமோகன் தனது வாசகர்கள் ஒவ்வொருவரிடமும் இணையம் மூலம் ரைமணி நேரம் தனியாக உரையாடினார். எனக்கு அவரிடம் பேச வாய்ப்புக்கிடைத்தது. அவரிடம் எனக்கு ஆலயகலையில் ஆர்வம் ஆனால் எந்த புத்தகங்களை படிக்கவேண்டும் என்று தெரியவில்லை எனக் கேட்டேன், அதற்கு ஜெயமோகன் குடவாயில் பாலசுப்ரமணியனின் புத்தகங்களை படிக்கலாம் என்றார். அவ்வாறு தான் குடவாயில் பாலசுப்ரமணியன் குறித்து அறிந்துகொண்டேன், பின் அவரது புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன்.

சோழர் பெருங்கோவில்கள் குறித்த குடவாயில் பாலசுப்ரமணியனின் புத்தகங்களை வாசித்துவிட்டு, அந்தப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அக்கோவில்களை பார்ப்பது ஓர் பேரனுபவம். அவ்வாறு தாராசுரம் குறித்த அவரது புத்தகத்தை வைத்து கொண்டு நாள் முழுவதும் அக்கோவிலில் உள்ள சிற்பங்களை தேடி தேடி பார்த்த போது ஆசிரியர் நம்முடனே இருந்து வழிகாட்டுவதை போல் இருந்தது. ஆலயங்களை அறிவதற்கு மட்டுமல்ல ஆலயங்கள் குறித்து ஏதேனும் எழுத முற்படும் போதும் அவரது நூல்களே எனக்கு வழிகாட்டி.

அவரது பெரும்புத்தகங்களுக்கு இணையாக அவரது கட்டுரைகளும் முக்கியமானவை, பொதுவாக தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த ஆய்வில் இருக்கும் உட்சுருங்கும் தன்மை அவற்றில் இருக்காது. உதாரணமாக கரிகாலான் கண்ணனார் என்ற சங்கப் புலவருக்கு எடுப்பித்த 16 கால் தூண் குறித்த ஆய்வு கட்டுரையில் குடவாயில் முதலில் உலகம் முழுவதும் பிற இலக்கியவாதிகளுக்கு எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களை குறித்து கூறிவிட்டு பின் கரிகாலன் எடுத்த நினைவு மண்டபத்தை குறித்து விவரிக்கிறார். மேலும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மாண்பை விளக்கும் போது பிரான்ஸ் நாட்டில் “Academia Franchise” என்ற அமைப்புடன் அதை தொடர்புபடுத்தி தனது பார்வையை முன்வைக்கிறார். இவ்வாறு உலகப் பண்பாட்டின் ஒரு பகுதியாக தமிழ் பண்பாட்டை பொருத்தும் அவரது தனித்தன்மை இதில் வெளிப்படுகிறது.

மரபை அதிகம் தனது ஆய்விற்கு பயன்படுத்துபவர் குடவாயில், புராணங்களை தனது எழுத்திற்கு ஆதாரமாக நிறைய இடங்களில் குறிப்பாக சிற்பங்கள் குறித்து எழுத்திற்கு பயன்படுத்துபவர். அதேசமயம் புரணங்களை ஆய்வின்படி மட்டுமே ஏற்பார் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று நினைத்தால் அதை நிராகரிக்கவும் தயங்கியதில்லை, உதாரணமாக திருமுறை கண்ட புராணத்தை தகுந்த காரணங்கள் சொல்லி குடவாயில் அதன் வரலாற்று தன்மையை நிராகரிக்கிறார். ஆனால் அதை முழுவதும் பொய் என்று இகழாமல் அப்புராணம் சமுகத்தில் உருவாகி வந்ததன் காரணத்தை புரிந்து கொண்டே நிராகரிக்கிறார்.

*******

குடவாயிலின் கட்டுரைத்தொகுப்புகள் தவிர்த்த பிற நூல்கள் இரண்டு வகையானவை ஒரு குறிப்பிட்ட கோவிலை எடுத்துக் கொண்டு அதை விரிவான ஆய்விற்கு உட்படுத்துபவை .முதல் வகை, உதரணமாக தாராசுரம், தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம் கோயில் குறித்தான நூல்கள். இரண்டாம் வகை ஒரு குறிப்பிட்ட மரபை எடுத்துக் கொண்டு அதை வரலாற்று, இலக்கிய, கட்டிடக்கலை மற்றும் சமுக ரீதியாக முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தி எழுதப்படுபவை உதாரணமாக தமிழகக் கோபுரக்கலை மரபு, தேவார மரபு, குடமுழா போன்ற நூல்கள். கோபுரம் என்பது ஆலயத்தின் ஒரு உறுப்பு அதை ஆய்வு பொருளாக கொண்டு அதன் தோற்றம், வளர்ச்சி, சொல்லாட்சி, கோபுரத்தின் வகைகள், அதன் தத்துவம், அதை மையப்படுத்தி நடந்த வரலாற்று சமூக நிகழ்வுகள் என்று அனைத்தையும் விளக்கும் நூல் தான் “தமிழகக் கோபுரக்கலை மரபு”.

இந்நூலின் முதல் பகுதியின் முதல் அத்தியாயம் கோபுரம் என்ற சொல்லின் வேர் பற்றியது. இந்த சொல்லாய்வின் மூலம் தமிழில் பிற மொழி இலக்கியத்தின் தாக்கம் அக்காலம் தொட்டு இருந்துள்ளதை அறியமுடிகிறது. பிறகு கோபுரத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விளக்கும் பகுதியை படிக்கும் போதும் நாம் உணர்வது தமிழக கட்டிடக்கலை என்பது இந்தியக் கலையின் வளர்ச்சிப் போக்கின் ஒரு பகுதிதான் அதில் நமக்கென சில தனித்தன்மைகள் இருக்கிறது என்பதை. கோபுர தத்துவத்தை விளக்கும் இதன் இறுதி அத்தியாயம் கோவிலை நாம் பார்க்கும் கோணத்தை மாற்றி அமைக்கக்கூடியது. இதில் குடவாயில் கோபுரம் என்பது வேதிகை நெருப்பின் வடிவம் என்று கூறுகிறார். இதை படித்த பிறகு ஒரு கோபுரம் கொண்ட ஆலய வளாகம் அகல் விளக்கை போலவும் பல கோபுரம் கொண்ட ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்கள் கொத்துச்சுடர் கொண்ட தீபாராதனை விளக்கை போலவும் எனக்கு தெரிய ஆரம்பித்தது. ஹம்பி சென்றிருந்த போது விருபாக்ஷர் ஆலய கோபுரம் அந்தி சூரியனில் ஜொலிப்பதை கண்டபோது ஒரு தீபச்சுடர் நலுங்குவதை போன்ற உணர்வை அடைந்தேன். மேலும் கோபுர வாயிலை கடந்து ஆலயம் நுழையும் ஒவ்வொருவரும் தீயால் உடலும் உள்ளமும் தூய்மைபடுத்தபட்டே நுழைகிறார்கள்.

இந்நூலின் இரண்டாம் பகுதி கோபுர கட்டுமானத்தின் வளர்ச்சியை பற்றியது, இதில் அரண்மனை அல்லது ஒரு ஊரின் நுழைவு வாயிலாக ஆரம்பித்து பின் ஆலயத்தின் முகப்பாக கோபுரம் என்ற கலை வடிவம் பிரம்மாண்டமாக வளர்ந்த விதத்தை விளக்குகிறார். மேலும் கோபுரத்தின் உறுப்புகள் மற்றும் கோபுர நிர்மாணத்தின் போது கடைப்பிடிக்க படும் சடங்குகள் குறித்து விளக்குகிறார். இதில் தில்லைக் கோவிலின் நான்கு கோபுரத்தின் கட்டுமான வரலாற்றை விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தி அதை எழுதியுள்ளார். தில்லை கோபுரங்கள் சோழர், பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகர மற்றும் கோப்பெருஞ்சிங்கன் போன்ற சிற்றரசர்கள் என அனைவரது பங்களிப்பும் இருப்பதை படிக்கும் போது ஒரு கோவிலின் வரலாறு என்பது தமிழ் நிலத்தின் வரலாறே தான் என்ற எண்ணம் வருகிறது.

பொதுவாக கோவில் என்பது ஒரே இடத்தில் ஆயிரம் ஆண்டுகளாக இருப்பது என்ற நம்பிக்கை நம்மிடையே உள்ளது. ஆனால் வரலாற்றில் சில கோவில்கள் அது கட்டப்பட்ட இடத்தில் இருந்து கல்கல்லாக பெயர்த்து எகிப்தின் அபுசிம்பல் போல, வேறு இடங்களில் மாற்றிக் கட்டப்பட்டது என்பது எனக்கு மிகுந்த ஆர்வமூட்டுவதாக இருந்தது. அவ்வாறு மாற்றி அமைக்கப்பட கோபுரங்களை பற்றியது இந்நூலின் மூன்றாம் பகுதி.

இந்நூலின் பெரிய பகுதி அடுத்ததாக வருகிறது. இதில் கோபுரத்தில் உள்ள தெய்வ சிற்பங்கள், மனித சிற்பங்கள், நாட்டிய சிற்பங்கள், அரசர் மற்றும் அவர்களது இலச்சினைகள், சுதை, செங்கல் மற்றும் மரச் சிற்பங்கள், ஓவியங்கள் என கோபுரங்களில் உள்ள அரிய கூறுகளை தொகுத்துள்ளார். இதை ஒரு கையேடாக கொண்டு இதில் ஆசிரியர் கூறியுள்ள அனைத்து கோவில்களையும் சென்று பார்த்தால் தமிழக ஆலயக்கலை மரபின் ஒரு பகுதியை முழுவதுமாக உணர்ந்து விடலாம். இந்நூலின் இறுதியில் உள்ள மற்றுமோர் சுவாரசியமான பகுதி, கோபுரத்தை மையமாக வைத்து தமிழகத்தில் நடந்த சில வரலாற்று நிகழ்வுகளை ஆசிரியர் விளக்குகிறார். இதில் நான் சிறுவயது முதலே கண்டு வரும் ஸ்ரீரங்கத்து கோபுரத்தில் இருந்து குதித்து பலர் உயர்துறந்துள்ள செய்தி ஆச்சரியமளித்தது. இதுபோன்ற பல அரிய நிகழ்வுகள் இப்பகுதியில் விவரிக்கப்படுகிறது.

தமிழ் நிலத்தின் வரலாற்றைத்தான் கோபுரம் என்ற ஒரு கட்டுமானத்தை விளக்குவதன் மூலம் குடவாயில் இந்த நூலில் விளக்க முற்படுகிறார். அவரால் அதன் மூலம் இந்திய வரலாற்றின் ஒரு பக்கம் நிரப்பபடுகிறது. 

ஆலயக்கலை, வரலாறு மற்றும் பண்பாடு குறித்த பெரும் நூலானாலும் சிறிய ஆய்வு கட்டுரையானாலும் அதை வாசிக்கும் போது நாம் சென்றடைவது குடவாயில் பாலசுப்பிரமணியம் எனும் ஆளுமையை அதில் செயல்படும் அவரது ஆய்வுமனத்தை. இத்துறையை அறியவேண்டுபவர்க்கும் இதில் ஏதேனும் செயல்புரிய நினைப்பவர்க்கும் என்றும் துணையாக விளங்குபவை.

லால்குடி தினேஷ்
லால்குடி தினேஷ், பொறியாளர். பணிநிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார். வரலாறு, ஆலயக்கலை ஆர்வலர். தொடர்ந்து கர்நாடகத்தின் அரிய ஆலயங்களுக்கு பயணித்து அவற்றை பதிவு செய்து வருகிறார். தமிழ் விக்கியில் பங்களித்துள்ளார். பெங்களூரில் கலை வரலாறு சார்ந்து பாணர் முற்றம் என்ற பெயரில் கூட்டங்கள் நடத்தி வருகிறார்.