![]() |
| photo courtesy: Sunil Abhiman Awachar |
சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் வட்டார வரலாறு
1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் நாள் காஞ்சிபுரத்திற்கு அருகேயிருந்த அங்கம்பாக்கம் கிராமத்தின் சேரிக்குள் அதிகாலை ஒரு கும்பல் நுழைந்தது. 70க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டிருந்த அக்கும்பல் அங்கிருந்த தலித் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கியது. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். தாக்குதலை முடித்த கும்பல் குடிசைகளைக் குடிசைகளைக் கொளுத்தி விட்டு அங்கிருந்த குப்புசாமி என்பவரின் வீட்டை நோக்கி முன்னேறியது. அந்த வீட்டின் வெளிப்புறக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றது. அப்போது வெளியூரிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த குப்புசாமி சேரி மக்களின் நிலைமையை அறிந்ததோடு தம்வீடு சேதப்படுத்தப் பட்டிருந்ததையும் கண்டார். தன் குடும்பத்தினரின் நிலைமையை அறிய வீட்டிற்கு உள்ளே ஓடிய அவரை மறைந்திருந்த கும்பல் கடுமையான ஆயுதங்களோடு சூழ்ந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர் கதவைத் தாளிட்டுக்கொண்டு வீட்டிலிருந்த துப்பாக்கியால் தற்காப்பிற்காகக் கூரையை நோக்கிச் சுட்டார். ஆனால், கும்பல் வீட்டை வைக்கோலிட்டுத் தீயிட முயன்று கொண்டிருந்தது. பிறகு வேறுவழியில்லாத குப்புசாமி உள்ளிருந்த வாறே கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மொத்தம் இருபத்தோருமுறை சுட்டார். இதில் 15 பேர் காயமடைந்தனர். 9 பேர் படுகாயமுற்றனர். ஐந்து உயிர்களும் போயின. இவையெல்லாம் முடிந்தபோது காலை மணி ஆறாகியிருந்தது. பிறகு சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் கலெக்டருக்கும் தந்தி அனுப்பிய குப்புசாமி, போலீசார் வந்தபின்பு துப்பாக்கியை ஒப்படைத்தார். அவரோடு ஏழு தலித்துகளும் கைதுசெய்யப்பட்டனர்.

