Thursday 30 November 2023

தொல்லியலில் களஆய்வு முக்கியமானதுதான், அதை மேம்பட்டதாக்க வாசிப்பு அதிகம் தேவைப்படுகிறது - ர.பூங்குன்றன் நேர்காணல்

ர.பூங்குன்றன் தொல்லியல் ஆய்வாளர். கொங்கு மண்டலத்தில் பலகாலம் வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டவர். இவர் எடுத்த கல்வெட்டு பதிவுகள் கொங்குப்பகுதியின் வரலாற்றை தெளிவுபடுத்துகின்றன. இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றை கண்டறிந்தவர். செங்கம் நடுகற்கள் மீதான இவரது ஆய்வு மிகமுக்கியமான ஒன்று. மு.இராகவையங்காருக்கு பிறகு தொல்லியல் மற்றும் இலக்கியச்சான்றுகளுடன் வேளிர் வரலாறு குறித்து விரிவாக எழுதியவர் பூங்குன்றன். அனைத்துக்கும் மேலாக சிறந்த தொல்லியல் ஆசிரியர், இளம் ஆய்வாளர்களை பயிற்றுவிக்க வயது கருதாது இன்றும் தமிழகம் முழுக்க பயணிப்பவர்.

கிருஸ்துவின் சித்திரங்கள்: பகுதி 1 - தாமரைக்கண்ணன் அவிநாசி

மீட்பர், ஆண்ட்ரி ரூப்லெவ். ஸ்வெனிகோரோட், ரஸ்யா. 1410

 (1) 

கிருஸ்துவின் உருவ விவரணைகள் பற்றி பைபிளில் எந்த குறிப்பும் இல்லை. அவரின் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்ட நற்செய்திகளிலும் (Gospels) குறிப்புகள் இல்லை. ஆனால் ஐரோப்பிய ஓவியங்களில் மூன்றில் ஒரு பங்கு கிருஸ்துவின் ஓவியங்களே. முதன்மையான ஐரோப்பிய அமெரிக்க அருங்காட்சியங்களிலுள்ள ஓவியங்களில் பெரும்பாலானவை கிருஸ்துவின் சித்தரிப்புகளே. பிறப்பு, திருமுழுக்கு, சிலுவையேற்றம், சிலுவையிலிருந்து இறக்குதல், உயிர்த்தெழல் என அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்களும், மடோனாவுடன் குழந்தையாக, அரசனாக, புனித இருதயத்தை உடையவராக, அன்னை மடியில் இறந்து கிடப்பவராக, உடல்முழுதும் காயங்களுடன் மனிதர்களின் துயரங்களை சுமப்பவராக சித்தரிக்கும் வழிபாட்டு ஓவியங்களும் என பொ.யு.2ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை 20 நூற்றாண்டுகள் தொடர்ந்து பல கலைஞர்களால் கிருஸ்து சித்தரிக்கப்பட்டு வருகிறார். 

புதிரும் தீர்வும் - ஸ்ரீ அரவிந்தர்


எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதா? அல்லது இன்றும் வேத இரகசியம் என எதாவது இருக்கிறதா? 

தற்கால கருத்துக்களின்படி, பழங்கால புதிரொன்று தீர்க்கப்பட்டு அனைவரின் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது, அல்லது என்றுமே அப்படி புதிரென ஒன்று இருந்ததில்லை. நவீனகால கருத்துக்களின் படி, ’வேதம் என்பது நாகரிகமடையாத பழங்குடிகளால் ஆளுமையாக உருவகிக்கப்பட்ட இயற்கை சக்திகளை நோக்கி எழுதப்பட்ட வேண்டுதல் மற்றும் சடங்கு சார்ந்த பாடல்களின் தொகை. தொடக்க நிலை வான்வெளி உருவங்களாலும், முழுதும் உருப்பெறாத தொன்மங்களாலும் நிறைந்தவை. பின்னர்வரும் பாடல்களிலேயே ஆழ்ந்த உளவியல்ரீதியான அம்சங்களும் உயர் கருத்துக்களும் காணப்படுகின்றன. அவை ‘கள்வர்’ என்றும் ‘வேத மறுப்பாளர்’ என்றும் வேதப்பாடல்களில் குறிப்பிடப்படும் திராவிடர்களிடமிருந்து பெறப்பட்டவை என்ற கருத்தையும் சிலர் முன்வைக்கின்றனர். எனினும் அப்பாடல்களே பிற்காலத்தில் தோன்றிய வேதாந்த பார்வையின் முதல் விதை.’ இந்த நவீன கோட்பாடு பெரிய அளவில் நிகழ்ந்த சமுகவியல் திறனாய்வுகளின் (critical research) துணைகொண்டுள்ளது. இன்னும் முதிர்ச்சியடையாத ஒப்பீட்டு-சொல்லாய்வியல், ஒப்பீட்டு-தொன்மவியல், ஒப்பீட்டு-மதவியல் போன்று ஊகம்சார் முறைமைகளைக் கொண்டு முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கும் அறிவியல் துறைகளால் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

தே: ஓரு இலையின் கதை - ராய் மாக்ஸம்


செப்டெம்பர் 22 1747, ராணியால் பணியமர்த்தப்பட தனியார் கப்பல் 'ஸ்விஃப்ட்', வில்லியம் ஜான்ஸனின் தலைமையில் டார்செட் பகுதியில் பூல் எனும் இடத்தில் கடத்தல்காரர்களை கண்காணிக்கும் பணியிலிருந்தது. அரசரின் சுங்கத் துறை தனியார் கப்ப‌ல்களை தங்கள் பணிக்காக ஒப்பந்தம் செய்திருந்தது. பலநேரங்களில் இந்த முடிவு பின்னடைவைத் தந்தது ஏனென்றால் இந்தத் தனியார் கப்பல்களே திடீரென கடத்தலில் ஈடுபடுவதுண்டு. மாலை ஐந்துமணிக்கு திரீ பிரதர்ஸ் எனப் பெயர்கொண்ட சந்தேகத்துக்குரிய பட‌கு வருவ‌தைக்கண்டு ஸ்விஃப்ட் அதை நெருங்கியது. திரீ பிரதர்ஸ் காற்றின் வேகத்தைப் பயன்படுத்தி தப்பிச்செல்ல முயன்றது. ஸ்விஃப்ட் பின்தொடர்ந்தது. படகை சுற்றி வளைக்க ஆறு மணிநேரங்கள் ஆகின. அதன்பின்னும் நிற்காமல் சென்றது 'திரீ பிரதர்ஸ்'. துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னரே சரணடைந்தது. 

தெய்வ தசகம் - 6, 7: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி

பாடல் - 6

நீயல்லோ மாயயும் மாயா
வியும் மாயாவிநோதனும்
நீயல்லோ மாயயெ நீக்கி
ஸ்ஸாயுஜ்யம் நல்குமார்யனும்

மாயையும் மாயாவியும்
மாயையில் திளைப்பவனும் நீயன்றோ
மாயையை விலக்கி வீடுபேறளிக்கும்
ஐயனும் நீயேயன்றோ

நீயல்லோ மாயயும் - யதார்த்தத்தில் இல்லாததும் அதே நேரத்தில் இருக்கின்ற ஒன்றாய் தோன்றுவதுமான மாயையும் தெய்வமே

மாயாவியும் - சித்திஜாலங்கள் எல்லாம் சித்தனாகிய யோகியையும், கனவுகளெல்லாம் கனவு காண்பவனையும் சார்ந்தவை. அதுபோலவே, கானல்நீர் போன்ற இந்த உலகமெனும் மாயையும் கற்பனையாய் அதை உருவாக்கிய தெய்வத்திலேயே அடங்கியிருப்பது.

மாயாவிநோதனும் - கனவில் தோன்றும் உலகம் மனதின் கற்பனை மட்டுமே; அந்தக் கனவை உணர்வது அந்த மனதல்லாமல் மற்றொன்றில்லை. அதேபோல், தெய்வத்தின் கருத்தால் உண்டாகியிருக்கின்ற மாயாஜாலங்களைக் கொண்டு நடக்கும் ஆடலில் திளைப்பதும் தெய்வம் மட்டுமே.

அறிவியல் ரியலிசமும், ரியலிச மறுப்பும்: பகுதி 2 - சமீர் ஒகாஸா

அவதானிக்க இயல்பவை / இயலாதவை வேறுபாடு 

ரியலிசம் மற்றும் ரியலிச மறுப்புவாதத்திற்கு இடையேயான மைய விவாதம் என்பது எவை அவதானிக்க இயல்பவை மற்றும் எவை அவதானிக்க இயலாதவை என்பதற்கு இடையே உள்ள வேறுபாடே. இதுவரை இவ்வேறுபாட்டை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டோம். உதாரணமாக, நாற்காலி, மேஜை போன்றவை அவதானிக்க இயல்பவை, அணுக்கள் மற்றும் எலெக்ட்ரான்கள் அவதானிக்க இயலாதவை. ஆனால் இவ்வேறுபாடு உண்மையிலேயே தத்துவார்த்தமாக சிக்கலானது. ’அடிப்படையிலேயே அவதானிக்க இயல்பவைக்கும் இயலாதவைக்குமான வேறுபாட்டை வரையறுக்க முடியாது’ என்பது ரியலிசம் முன்வைக்கும் முக்கியமான வாதங்களில் ஒன்று.