![]() |
| குடவாயில் பாலசுப்ரமணியன் |
1
"வரலாற்று எழுத்து ஒவ்வொரு ஐம்பது அண்டுகளில் மாறி வந்திருப்பதை நாம் தமிழ் வரலாற்று நூல்கள் கொண்டு அறியலாம். அந்த வகையில் இன்றைய வரலாற்றெழுத்தென்பது நுண்வரலாறு சார்ந்ததாகவே இருக்க முடியும்" என எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். வரலாறாய்வுலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இது.
நம் ஆரம்ப கால வரலாற்று ஆசிரியர்கள் (கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சி. மீனாட்சி, கே.கே. பிள்ளை போன்றவர்கள்) எழுதியது ஒட்டுமொத்த தமிழக/தென்னிந்திய வரலாற்றை. முதற்கட்ட வரலாற்றாய்வில் அதற்கான தேவையிருந்தது. நமக்கு நவீன யுகம் தோன்றும் முன் முறையான வரலாற்று பதிவுகள் என எதுவும் கிடையாது. ஜே.ஹெச். நெல்சன், கால்டுவெல் போன்ற ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று ஆவணங்கள் தவிர. எனவே நம் வரலாற்றை ஒட்டுமொத்தமாக ஆவணப்படுத்த நாம் எழுதும் தேவையிருந்தது.
அதற்கு அடுத்தகட்டம் என்பது முதல் காலகட்டத்தில் தொகுத்த நூல்களை பகுதி வாரியாக மேலும் தெளிவுடன், மேலும் சான்றுகளுடன் ஒட்டுமொத்தமாக அணுகி பார்ப்பது.
நொபரு கராஷிமா, பட்டர் ஸ்டெயின், எ. சுப்பராயலு போன்றவர்கள் நீலகண்ட சாஸ்திரியிலிருந்து தொடங்கி சோழர் வரலாற்றை பற்றிய முழுமையான வரலாற்று சித்திரத்தை வழங்கினர். உதாரணமாக, சோழர் போர் படையிலிருந்த வலங்கை, இடங்கை பிரச்சனை குறித்து நீலகண்ட சாஸ்திரியின் நூலில் ஒரு தீற்றல் மட்டுமே உள்ளது. அதில் தொடங்கி பட்டர் ஸ்டெயின் மேலும் வலங்கை, இடங்கை சார்ந்து விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஏ. சுப்பராயலு மேலும் தீர்க்கமான முடிவுகளுக்கு சென்றுள்ளார் (பார்க்க: சமூகவியல் மாற்றம் மற்றும் வலங்கை – இடங்கை பிரிவு, எ. சுப்பராயலு).
மேலும் முதற்கட்டத்தில் மானுடவியல் நோக்கில் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை. அவை இரண்டாம் காலகட்டத்திற்கான தேவையாக இருந்தது. பாண்டிய நாட்டு வரலாற்றை மானுடவியல் நோக்கில் ஆய்வு செய்தவர் வெ. வேதாசலம். பாண்டிய நாடு பற்றிய ஒட்டுமொத்தமான வரலாற்று சித்திரம் அவரால் எழுதி துவங்கப்பட்டது .
மூன்றாவதாக, இன்று நாம் வாழும் காலகட்டம். நுண்வரலாற்று காலகட்டம். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று வரலாற்றிலிருந்து மேலும் நுணுகி இனக்குழு, சாதிய, பிராந்திய வரலாறு என மேலும் அணுகி ஆராய்வது. உதாரணமாக, பாண்டிய நாட்டில் தென்காசி பற்றிய ஆய்வு இன்றே நிகழ்த்தப்படுகிறது. நாட்டாரியல் தனித்துறையாக 1986ல் உருவான போது அவையும் இந்த மூன்றாம் கட்ட வரலாற்று ஆய்வுடன் இணைந்துக் கொண்டன.
இதன் இரண்டாம் வகை, நுண்ணிய ஒன்றிலிருந்து முழுமையான ஒரு வரலாற்றை நோக்கி செல்வது. உலகளாவ இவ்வகை ஆய்வு முறையே இன்று பிரதானமாக உள்ளது. ‘History of world through 100 Objects’ நூல் இதற்கு சிறந்த சான்று. நூற் பொருட்களின் வாயிலாக உலக வரலாற்றை அறிமுகம் செய்யும் நூல்.
அந்த வகையில் தமிழகத்தில் கோயிற்கலை வாயிலாக வரலாற்றை அணுகுவது என்பது இன்றிருக்கும் முக்கியமான போக்கு. முனைவர் அ.கா. பெருமாள் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயம் பற்றி எழுதிய நூல்களை இவ்வகையில் குறிப்பிடலாம்.
ஆனால், கோயிற்கலை ஆய்வின் முதன்மையான வரலாற்று ஆசிரியர் என முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களையே குறிப்பிட வேண்டும்.
2
கோவில்கள் இன்று நம் கண்முன் இருக்கும் பிரம்மாண்டமான வரலாற்று ஆவணம். வரலாறு, தொன்மம், இலக்கியம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. நம் கல்வெட்டு சான்றின் பெரும் பகுதி கோவிலில் இருந்து கிடைத்தது. முதல் இரண்டு கட்ட வரலாற்று ஆய்வில் கல்வெட்டு, செப்பேடுகள் ஆகிய இரண்டை தவிர பிற எதுவும் வரலாற்று சான்றாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் வரலாற்றில் முக்கியமான அரசன். தென்காசி காசி விஸ்வநாதர், உலகம்மை ஆலயத்தை நிர்மாணித்தது இவனே. கோவிலின் பிரதான கிழக்கு கோபுரத்தை ஒன்பது நிலைகளாக எடுப்பித்தான். இது காலத்தில் பழுதாகி பின் 1990ல் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பராக்கிரமன் இயற்றிய பதிமூன்று செய்யுள் விஸ்வநாதர் ஆலயத்தில் கிடைத்துள்ளது. அதில் வெவ்வேறு வகையில் தான் எடுப்பித்த கோவிலின் கிழக்கு கோபுரத்தை காப்பவர்கள் முன் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளான். இதிலிருந்து பராக்கிரம பாண்டியன் பாண்டியர்களுள் எத்தகையவன் என அறிய முடிகிறது. இது பற்றிய விரிவான தகவல் குடவாயில் பாலசுப்ரமணியன் நூல் வாயிலாகவே நமக்கு அறிய கிடைக்கிறது (நூல்: அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள், அன்னம் வெளியீடு).
![]() |
| (ஓவியம் சில்பி) |
இங்கிருந்து கோவில் கோபுரங்களின் முக்கியத்துவம் நம் பண்பாட்டில் எவ்வண்ணம் இருந்தது. கலை ரீதியாக அதன் தனிச் சிறப்பென என்பது அடுத்த கேள்வி. தமிழில் அதற்கான ஒரே புத்தகம் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய ‘தமிழகக் கோபுரக்கலை மரபு’ கோபுரம் என்னும் சொல்லாய்வில் தொடங்கி, சாஞ்சி ஸ்தூபத்திலிருந்து நாயக்கர் கால பெரிய கோபுரங்கள் வரை எவ்வண்ணம் பரிணாமம் கொண்டன என்பது வரலாற்று, இலக்கிய ஆதாரங்களுடன் முன்வைக்கும் நூல்.
அதே வேளையில் சுவாரஸ்யமாக இந்த நூற்றாண்டில் நாம் அறிந்திடாத பல தகவல்களையும் கொண்டது. உதாரணமாக, நமக்கு கோவில் கோபுரக்கலை என்றாலே கருங்கற் வேலைப்பாடுகளுடன் கூடிய அமைப்பே நினைவிற்கு வரும். ஏனென்றால் நம் கண் முன் பிரதானமாக காணப்படுவது கருங்கற்களே. ஆனால் அதற்கு இணையான கோபுர அமைப்பு செங்கற்கலால் ஆனது. தஞ்சை பெரிய கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில் போன்ற ஒரு சில முக்கியமான கோவில்களே முழுதும் கற்களால் ஆனது. பிற அனைத்து கோவில்களும் உபபீடம் வரை கருங்கற்களால் எழுப்பப்பட்டு அதற்கு மேலே செங்கற் சுதை கொண்டு நிலைகள் உருவாக்கப்படுவது.
இவை இரண்டிற்கும் இணையாக கோபுரங்கள் முழுவதும் செங்கற்களால் உருவாக்கும் பாணி சோழ நாட்டில் மட்டும் இருந்துள்ளது. தற்போது கும்பகோணம் வீரபத்திரசுவாமி கோவில் கோபுரம் (மகாமகம் குளத்திற்கு அருகே உள்ளது) தெளிவாக இவ்வகையை காட்டுக்கிறது. அடியில் ஆதிஷ்டானம் தொடங்கி முழுவதும் செங்கற்களால் ஆனது. தோரண அலங்காரங்கள், சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் செங்கற்கள்.
செங்கல்லை எப்படி தோரணங்களாக ஆக்குவது என்பதே இதலுள்ள முதல் சவால். இன்று இம்மரபின் தொடர்ச்சியென யாருமில்லை. பொ.யு. 17 ஆம் நூற்றாண்டுடன் நின்றுவிட்ட கலை பாணி இது. இதனை பற்றிய தகவல் கொண்ட ஒரு கலைஞரும் தமிழ்நாட்டில் இல்லை. குடவாயில் பாலசுப்ரமணியன் அதற்கான தகவல்களை விடாமல் தேடி செல்கிறார்.
ஒரு கட்டத்தில் சிற்ப சாஸ்திர நூல்களை ஆராய்ந்து ‘மயமதம்’ என்னும் நூலில் இதற்கான விரிவான விளக்கத்தை தமிழ்ப்படுத்தி அளிக்கிறார். செங்கற்கல்லை சுடாமல் எப்படி பதப்படுத்தி வடிவங்களை உருவாக்குவது. சுதைப்பூச்சு வெளியே தெரியாமல் முழுதும் செங்கல்லால் ஆனது போல் எப்படி உருவாக்குவது போன்ற பல நூதன தகவல்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருகிறார்.
இரண்டு, கருங்கல் போல் எப்படி நிலைத்து நிற்கும் தன்மை செங்கல்லிற்கு உருவாகுகிறது. நம் இந்திய செங்கற் கட்டடக்கலை நீண்ட பாரம்பரியம் கொண்டது. இன்றிருக்கும் நாலந்தா பல்கலைகழகம் 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி, ஹர்ஷவர்த்தனர் காலம் என பல காலகட்டங்களில் செங்கற்களால் உருவானது. அவற்றில் பல பகுதிகள் சேதமில்லாமல் முழுவதுமாக இன்றும் காணக்கிடைக்கின்றன. இன்று அழிந்துவிட்ட இக்கலைமரபு தமிழக கோபுரங்களில் எத்தகைய செல்வாக்கு செலுத்தியது என்பது குடவாயில் வாயிலாகவே நமக்கு அறிய கிடைக்கிறது.
வரலாற்றாய்வில் குடவாயிலின் முதன்மையான பங்களிப்பு எனக் கேட்டால் இதனையே சொல்வேன். அவர், கோயிற்கலையில் தொடங்கி அறியப்படாத பல தகவல்கள் வழியே வரலாற்று பரிணாமம் ஒன்றை நமக்கு வழங்குகிறார்.
நம் தமிழ்நாட்டில் பெரும் கோவில்கள் பற்றிய வரலாறு இன்று வரை எழுதப்படவே இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி புகைப்படங்களுடன் கூடிய காபி டேபிள் புக் பல வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் தெளிவான வரலாற்று ஆய்வுடன் கூடிய ஒரு புத்தகம் நமக்கு இல்லை.
அப்படி ஒன்று இல்லை என்பது நாம் அக்கோவிலை பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதற்கான சான்று. ஶ்ரீரங்கம் கோவில், ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் என தமிழகத்தின் முக்கியமான பல பெரிய கோவில்களை குறிப்பிடலாம்.
விதிவிலக்கு சோழ நாட்டிலுள்ள கோவில்கள் மட்டும். குடவாயில் எழுதிய தஞ்சாவூர் 1000, இராசராசேச்சரம், கங்கை கொண்ட சோழீச்சரம், திருவாரூர் திருக்கோவில் நம் பெரிய கோவில் பற்றிய விரிவான தகவல்கள் வழங்குவதுடன் சோழர் கால கலைப்பணி, ஆட்சி முறை, சிற்ப சிறப்புகள் என விரிவான வெவ்வேறு ஆய்வுகளுக்கு வித்திட்டவை.
![]() |
| வீதிவிடங்கர் (ஓவியம்-விஷ்ணு ராம்) |
திருவாரூர் பற்றி அறியும் எவரும் இவ்வூரின் ஆழித்தேரைப்பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் திருவாரூர் கோவிலுள்ள வீதிவிடங்கர், சிதம்பரம் ஆடவல்லான் அளவிற்கே முக்கியமானவர். தமிழகத்தில் சைவ ஸ்தலங்களில் ஆடற்கலைக்கென குறிப்பிடப்படுவது சிதம்பரம் கோவில் ஒன்றையே. ஆனால் திருவாரூர் கோவில் ஆடற்கலையில் சிதம்பரத்திற்கு இணையானது. இங்குள்ள தேவாசிரியன் மண்டபத்திலுள்ள சிற்பங்கள், ஓவியங்கள் அனைத்தும் ஆடற் அணங்குகளை முன்வைத்து எடுப்பிக்கப்பட்டவை. கோவில் கோபுரத்தில் ஆடல் அணங்குகளின் முக்கியமான சிற்பங்கள் தமிழகத்தில் வேறெங்கும் காணப்பட்டாத அளவு அழகுடன் உள்ளன.
நாயன்மார்களின் கதைகள் பெரும்பாலும் திருவாரூருடன் சம்பந்தப்பட்டது. ஒரு சைவன் முக்கியமாக அறிந்திருக்க வேண்டிய ஊர் திருவாரூர். தேவாசிரியன் மண்டபத்தில் இக்கதைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. குடவாயில் இதனை தன் நூலில் முழுவதுமாக விளக்கமளிக்கிறார்.
4
21 ஆம் நூற்றாண்டின் பிரதானமான அறிவியக்கமென்பது வரலாற்றாய்வு. அதிலிருந்தே மானுடவியல், இலக்கியம், ஓவியம் என பல கிளைகள் பிரிகின்றன. எனவே ஒரு வரலாற்றாசிரியன் பிற துறைகளில் வல்லுனனாக இருக்கும் தேவை இந்நூற்றாண்டில் எழுகிறது. அந்த வகையில் ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு இலக்கியம் மீது, ஓவியம் மீது, தத்துவம் மீது, மரபான யோக சாதகங்கள் மீது முறையான பரிட்சயம் இருப்பது அவசியமாகிறது.
உதாரணமாக, தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை பார்க்க செல்லும் ஒருவர் பெரியபுராணம் அறியாமல் அங்கு செல்ல முடியாது. தாராசுரம் கோவில் பிரகாரம் முழுவதும் காணப்படுவது பெரிய புராணத்துள்ள 63 நாயன்மார் கதைகளே.
![]() |
| தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில் |
நம் தொன்மங்கள் என குறிப்பிடும் போது இரண்டு வகை தொன்மங்கள் நம் மரபில் உள்ளன. வரலாற்று இதிகாச தொன்மங்கள் ஒன்று. இவை ராமாயணம், மகாபாரதம். இவற்றை பற்றிய பரவலான அறிமுகம் நாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே வெவ்வேறு ஊடகங்கள் மூலம் கதைகளாக உருவாக்கியது.
இரண்டாம் வகை பக்தி எழுச்சி காலகட்டத்தில் உருவான தொன்மங்கள். சைவத்தில் அறுபத்திமூன்று நாயன்மார்களின் கதை. வைணவத்தில் ஆழ்வார்களின் கதை.
சிறுத்தொண்டர் தன் பிள்ளையின் கறியை சமைத்து பரிமாறும் கதை, பூவை மணந்ததால் அரசியின் மூக்கையும், கையையும் அறுத்த செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் கதை அனைத்தும் சிற்பங்களாக பார்த்த ஆங்கிலேய அறிஞர்கள் அவற்றின் புராண பின்புலம் அறியாமல் அவற்றை ஒருவித காட்டுமிராண்டி தனம் என முன்வைத்தனர். அவற்றுக்கு பதிலாக இந்த இரண்டாம் தொன்மங்களை பற்றிய விரிவான ஆய்வென்பது இந்நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் நம்மை பற்றி முழு அறிதல் இல்லாமல் காட்டுமிராண்டிகள் எனக் கூறிய போது அதற்கான தெளிவான மறுப்பை சொல்லும் துணிவு நம்மிடம் ஏற்பட ஒரு நூற்றாண்டு தேவைப்பட்டுள்ளது.
அவ்வகையில் தமிழக கோவில் ஆய்வு எழுத்து நாகசாமி, குடவாயில் இருவரிடமிருந்தே தொடங்குகின்றன. அதில் பிரதான முகம் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களே. குடவாயிலின் விரிந்த தளங்களிலான ஆய்வே இதற்கு சாத்தியமாகியுள்ளது.
புராணங்கள் தொட்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் அறியலாம். அவை நம் மரபில் ஒன்றை ஒன்று பின்னிபிணைந்து வரலாற்றில் பலவாறாக உருமாறியுள்ளது. நம் வரலாறு என்பதே ஒட்டுமொத்த கலை, இலக்கிய, தத்துவத்தின் ஊடுபாவான நெசவு தான்.
திருவாரூர் கோவில் பற்றிய புரிதலிலிருந்து இதனை விளக்குகிறேன். திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள தேவாசிரியன் மண்டபத்திலுள்ள ஓவியங்களில் ஒன்று விஷ்ணு பாற்கடலில் சயன கோலத்திலிருக்க சிவன் சோமாஸ்கந்த மூர்த்தியாக உமை, குட்டி முருகனுடன் விஷ்ணு நெஞ்சில் மேல் நிற்கும் ஓவியம். இதனை பல சைவர்கள் விஷ்ணு வென்று அவர் நெஞ்சின் மேல் நிற்கும் சோமாஸ்கந்த மூர்த்தி என்றே குறிப்பிடுகின்றனர்.
ஆனால் குடவாயில் அதற்கு புதிய விளக்கமொன்றை தன் நூலில் அளிக்கிறார். விஷ்ணு தியானத்திலிருக்க அவர் நெஞ்சின் மேல் ‘அஜபா கல்பம்’ என்னும் நடனம் புரிந்தவாறு சோமாஸ்கந்தர் மேல் நிற்கிறார்.
யோக மரபில் அஜபா கல்பம் ஒரு முக்கியமான பயிற்சி முறை. அஜபா – ஜபமற்ற சாதகம். சம், ஹம் என்னும் இயற்கையாக வெளியேறு மூச்சு பயிற்சி கொண்டு நிகழ்த்தப்படுவது. தியாகேசர் விஷ்ணுவின் மேல் ஆடுவது இந்த அஜபா நடனம். இந்த யோக, நடன முறையிலிருந்து தத்துவார்த்தமான ஒரு விளக்கமும் வழங்கப்படுகிறது. லௌகீகத்தில் கட்டுண்ட ஒருவன் இந்த அஜபா கல்பத்தை அறிவதில்லை. எனவே வீடுபேறு வழியில்லாமல் லௌகீகத்தில் சிக்கியிருக்கிறான். அவன் வீடுபேறுக்கான வழி என சைவம் முன்வைத்து இதனை அறிந்து ஆனந்த நிலையான மோட்சத்தை அடைவது.
![]() |
| விஷ்ணு நெஞ்சின் மேல் சோமாஸ்கந்தர், தேவாசிரியன் மண்டபம். |
இப்படி ஒரு ஓவியத்திலிருந்து, சிற்பம், இலக்கிய சான்றுகள் வாயிலாக தத்துவார்த்தமான ஒன்றை விளக்கும் தேவை இன்றைய வரலாற்று எழுத்தின் பிரதான தேவையாகிறது. குடவாயில் பாலசுப்ரமணியன் அதன் முதல் தொடக்கம் எனச் சொல்லலாம்.
குடவாயிலை வாசிக்கும் ஒருவர் அறிந்துக் கொள்வது கோவில் பற்றிய விவரங்களை மட்டுமல்ல. அதற்கு மேலான ஒட்டுமொத்தமான ஒன்றை.
கோவில் நம் தமிழக பரப்பளவில் நுண்ணிய ஒன்று தான். ஆனால் அந்த நுண்ணிய ஒன்று வரலாறு, தொன்மம், கலை என அனைத்தையும் தன்னுள் அடக்கியது. தத்துவத்தின் அடிநாதம் அங்கே சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. அவை நுண்ணியவை ஆனால் பிரபஞ்சம் என்னும் பிரம்மாண்டத்தை தன்னுள் அடக்கியவை.
ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki







