Tuesday, 17 February 2026

வரலாற்றுத்தன்மை எழுத்து - தேவார மாண்பும் ஓதுவார் மரபும், பவித்ரா

திருஞானசம்பந்தர் (ஓவியம் - விஷ்ணு ராம்)

கோவையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நடந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் வரலாற்றாய்வில் அவர் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அவ்வுரையில் வரலாற்றிக்கும் (History) வரலாற்றுதன்மைக்குமான (Historicity) வேறுபாடுகளை கூறி இரண்டாம் வகைமையில் பொருந்துபவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் என்றார். 

வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றி நாம் சொல்லும் கதை (என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது).

வரலாற்றுத்தன்மை என்பது அந்தக் கதை யதார்த்தத்தில் வேரூன்றியிருப்பதற்கான ஆதாரம் அல்லது உறுதித்தன்மையை ஆய்வது (அது உண்மையில் நடந்ததா?).

அதற்கு சான்றாக குடவாயிலின் நூல்களில் ஒன்றாக தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூலை குறிப்பிட்டிருந்தார். தேவாரங்களின் மேல் கொண்ட ஆர்வத்தால் இந்நூலை விரும்பிப் படித்தேன். எனது வாசிப்பின் வழியே வரலாற்றுத் தன்மைக்குள் தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூல் எப்படி பொருந்துகிறது என்பதை இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன்.

 [1]

தமிழ்நாட்டில் தேவாரம், திருவாசகம் என்ற சொற்களை சொல்லளவிலேனும் கேளாதவர்கள் குறைவு. தேவாரம் என்ற சொல் மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிச்செய்த திருபதிகங்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இச்சொல் மூவர் முதலிகள் அருளிய காலம் தொட்டே அப்பெயரால் தான் அழைக்கப் பெற்றதா? இல்லையெனில் என்னவென்று? எதனால், எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது என்பதை இலக்கிய மற்றும் கல்வெட்டு சான்றுகள் கொண்டு இந்நூலில் நிறுவுகிறார் குடவாயில்.

தேவாரம் என்ற சொல் பெறுவதற்கு முன் அப்பனுவல்களை திருப்பதியம் என்றே அழைத்துள்ளனர். கி.பி.863ஆம் ஆண்டு நந்திவர்ம பல்லவனின் திருவல்லத்துச் சாசனம் முதல் கி.பி.1242ஆம் ஆண்டின் திருப்பத்தூர் இரண்டாம் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு மற்றும் கி.பி.1243 இல் வெட்டுவிக்கப் பெற்ற கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு வரை ஏறத்தாழ நானூறு ஆண்டு காலம் வரை திருப்பதியம் என்ற சொல்லாட்சி தான் மக்கள் வழக்கில் இருந்திருக்கின்றது.

குறிப்பிட்ட சில தேவாரப்பாடல்களைப் 'பாமாலை' என்றும், 'திருத்தொண்டத்தொகை’, 'திருத்தாண்டகம்' என்றும் குறித்துள்ளனர். மூன்றாம் இராஜராஜனின் இரண்டு சாசனங்களில் (கி.பி.1223 & 1244) தேவாரப்பாடல்களைத் "திருமுறை" என்ற சொல்லாலும், பாண்டிநாட்டில் “திருஞானம்” என்ற சொல்லால் குறிக்கும் மரபும் இருந்துள்ளது. கி.பி. 1263 இல் வரையப்பெற்ற மூன்றாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் தொடங்கி பாண்டியர்கள், சம்புவரையர்கள் விஜயநகர அரசர்கள் நாயக்கர்கள் காலத்து சாசனங்கள் வரை தேவாரப் பாடல்களைத் "திருப்பாட்டு” என்று கூறும் வழக்கும் இருந்துள்ளது.

தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஏழு கல்வெட்டுச் செய்திகளையும், ஏகாம்பரநாதர் உலாவில் இரட்டைப் புலவர்கள் கூறும், "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்” என்னும் அடிகளையும், கொற்றங்குடி உமாபதி சிவாச்சாரியார் தம் கோயிற்புராணத்தில் "தப்பற்றுயர் தவ மூவாயிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணி முற்றப் புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்” என்று கூறியுள்ளதையும் மேற்கோள்காட்டி தேவாரம் என்பது வழிபாடு எனும் பொருளில் வழங்கப்பெற்றதை கூறி, வழிபாட்டில் பாடப்பட்டதால் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்று வருகின்றன என்றும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயர் பெற்றமைக்கு எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

க.வெள்ளைவாரணனார் "வாரம்” என்ற சொல்லையும், தேவபாணி என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டு அவை எவ்வாறு இலக்கியங்களில் கையாளப் பெற்றுள்ளன என்பதை விளக்குகிறார். வாரம் பாடுதல் என்பது இசைப்பாடலாற் கடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் சிலப்பதிகார அரங்கேற்றுக்காதையில் கையாளப்பட்டுள்ளது. மேலும் தெய்வத்தைப் பண்பொருந்திய இசைப் பாடல்களால் போற்றுவதற்கு தேவபாணி எனப் பெயர். தேவபாணியென்ற சொல்லிலிருந்து தேவாரம் என்ற பெயர் வழங்கியிருத்தல் வேண்டும் என்கிறார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டு இசை நூலாசிரியரான சாரங்கதேவரின் "சங்கீத ரத்னாகரம்" எனும் நூலில் மூவர் திருப்பதிகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்கள் சிலவற்றை "தேவார வர்த்த நீ" என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன்பே திருப்பதிகங்களுக்கு தேவாரம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள்து என்கிறார்.

இரா.நாகசாமி சோழர்கள் காலம் வரை தேவாரம் என்ற சொல் வழிபாடு செய்யப்படும் இடத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, இராஜராஜ சோழனின் இருபத்தியேழாம் ஆண்டு அல்லூர் சாசனத்தில் மூலம் “திரு வடகுடி ஸ்தான மடத்து தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்" நிறுவுகிறார். தேவாரம் என்ற இடத்தில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு இருந்ததால் அப்பெயர் பெற்றிருக்கலாம். தேவகரம் (தெய்வத்தை வழிபாடு செய்யும் இடம்) தேவாரமென மருவியது என்கிறார்.

இம்மூவரின் ஆராய்ச்சியையும் மூலமாக எடுத்துக் கொண்டு, தன் ஆய்வு முடிவுகளையும் முன்வைக்கிறார். முதன் முதலாக தேவாரம் எனும் சொல் வழிபடும் இடம் என்ற பொருளில் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமய கருப்பங்குன்று கல்வெட்டும், கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ சமய திருவொற்றியூர் கல்வெட்டும் கூறுகின்றன. மூவர் திருப்பதிகங்களைத் தேவாரம் எனக் குறிப்பிடும் முதற் கல்வெட்டுச் சான்றாக விளங்குவது திருகோளிலி எனும் திருக்குவளையில் உள்ள கி.பி.1286ஆம் ஆண்டு கல்வெட்டுச் சாசனமாகும் அடுத்ததாக கி.பி.1306ஆம் ஆண்டு பிரான்மலை கல்வெட்டு என்று குறிப்பிடுகிறார். எனில் 13ஆம் நூற்றாண்டு இறுதி என கொள்ளலாம்.

இலக்கியச் சான்றாக மேற்கூறிய இரட்டை புலவர்களின் காலம் (இராச நாராயண மல்லிநாத சம்புவரையன் காலம் கி.பி.1336 - 1373) கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் தொண்டை மண்டலப் பகுதியில் மூவர் பதிகங்களும் தேவாரம் என்று கூறும் மரபு தோன்றியிருக்கலாம் என்கிறார். 

மேலும் குலசை உலா ( 15ஆம் நூற்றாண்டு) எனும் நூலில் "நாவாரத் தேவாரம் நண்ணு திருவாசகமும் பாவாணர் பண்ணில் படித்துவர" வரும் வரியும், சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகத்தில் (16ஆம் நூற்றாண்டு) ''வாய்மை வைத்த சீர்த்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர்" மூவர் திருமுறைகளையும் தேவாரம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றது.

தேவாரம் என்ற சொல் எப்படி வழக்கில் வந்தது எனும் இந்த ஆய்வொன்றே வரலாற்றுத்தன்மையை (Historicity) பற்றியது தான். அதற்காகவே நூலில் உள்ள இந்த அத்தியாயத்தை கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டுமென தோன்றியது.

தேவாரம் எனப்பெயர் பெற்ற பனுவல்கள் ஏட்டில் தான் எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக திருஞானசம்பந்தர் புராணத்தில் 

’’மெய்த்த நற்றிருவேட்டினைக் கழற்றி மெய்ம்மகிழ்ந்து, கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்”

என்றதாலும், மேலும் அனல் வாதம், புனல் வாதம் ஏட்டில் எழுதிய பதிகங்களையே கொண்டே செய்யப்பட்டது என்பதும், ”அருமறைச்சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்" என்றதாலும், மூவர் திருப்பதிகப் பாடல்களையும் நாயன்மார்களுடன் உடன் சென்ற அடியார்களில் சிலர் ஏட்டில் எழுதினர் என்பதும் தெரிய வருகிறது.

பனையோலை ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதி, ஏட்டில் உள்ள துளைவழியே கயிற்றைக் கோர்த்து அக்கயிறு கொண்டே அந்நூலினைக் காப்பிடுதலே மரபாக கொள்ளப்ப்பட்டுள்ளது. இன்றும் திருமுறை ஏட்டில் கயிறு சாற்றிப்பார்க்கும் வழக்கம் சைவர்களிடையே உள்ளதை காணலாம். இவ்வாறு ஏட்டில் எழுதப்பட்ட பதிகங்களை தில்லை பெருங்கோயிலில் கண்டெடுத்து ஏழு திருமுறைகளாக தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள் (நூற்றாண்டு). எனில் அதற்கு முன்னர் திருமுறைகள் பயிலபடவில்லையா என சந்தேகம் எழும், அதற்கு முன்னரும் கோவில்களில் திருமுறைகள் பாடினதற்கான சான்றுகள் உள்ளன. ஓட்டு மொத்தமாக தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகளாவர். இச்செய்தி பற்றி கூறும் திருமுறை கண்ட புராணம் என்ற நூலின் உண்மைத் தன்மையையும் இந்நூலில் ஆராய்கிறார்.

1930ஆம் ஆண்டில் சுவடியில் கிளியன்னவூர் பதிகம் கண்டுபிடிக்கப்பட்டு 127 பதிகமாக மூன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டது. இதே போல், அதுவரை கிடைக்கப்பெறாத மற்றுமொரு பதிகம் திருவிடைவாயில் கல்வெட்டில் 1911 ம் ஆண்டு மு.சுவாமிநாத மாதவராயரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு பொறிக்கப் பெற்ற கற்பலகைகளை பின்னாளில் நடந்த திருப்பணிகளின்போது சிதைத்துவிட்டனர். 1918இல் படி எடுக்கப்பெற்ற காகிதப்படியே மைசூரில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளதை போலவே செப்பேடுகளிலும் தேவாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி.1070-1125 வரையிலான ஆண்டுகளில் தில்லைப் பெருங்கோயிலில் மணவிற்கூத்தன் காலிங்கராயனால் வைக்கப்பெற்ற மூவர் தேவாரச் செப்பேடுகள் மற்றும் கி.பி.1206 இல் பாண்டியநாட்டு ஆற்றூரில் வைக்கப் பெற்றிருந்த திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் எழுதப்பெற்ற செப்பேடுகள் குறித்தும் கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. ஆனால் அச்செப்பேடுகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. எதனால் நமக்கு கிடைக்காமலானது குறித்து வரலாற்று சித்திரம் விரிவாக விளக்கியள்ளார்.

தமிழக வரலாற்றில் சோதனையான காலம் என்பது கி.பி. 1311இல் தொடங்கி 1371 வரை. தில்லியிலிருந்து படை எடுத்து வந்து தமிழகத்தைக் கொள்ளையடித்த மாலிக்காபூர், குஸ்ரூகான் என்பவர்களின் செயல்களும், மதுரை சுல்தான்களின் ஆட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளும் தான் கோயில்களையும் அதனோடு இயைந்த பிற கலைகளையும் பேரழிவுக்கு உட்படச் செய்தது. மேலும் தில்லை மற்றும் திருவாரூர் பெருங்கோயில்கள் பல்வேறு நவாப்புகள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியிருக்கு இராணுவ கேந்திரமாக இருந்துள்ளது. இது போன்ற காரணங்களால் நமது அரிய பொக்கிஷங்கள் இடமாற்றத்திற்கோ அல்லது சிதைவிற்கோ உட்பட்டிருக்கலாம் என்று கூறி, இன்றும் திருவாரூரில் உள்ள இரகசிய அறைகளை திறந்தால் அரிய சுவடிகள் கிடைக்க வாய்ப்புண்டு என்கிறார். அன்று முதல் இன்று வரை கோவில்களுக்கு ஏற்படும் தாக்குதல் நிற்கவில்லை தாக்கும் விதம் தான் மாறியிருக்கிறது.

ஏட்டில் எழுதப்பட்ட இப்பதிகங்களை இறைவன் திருவடி முன் பாடுபவர்களை ஓதுவார்கள் என்றும் பாடுவதை விண்ணப்பம் செய்தல் என்றும் கூறுதல் மரபு. திருக்கோயில்களில் மூவர் திருப்பதிகங்களைப் பாடும் ஓதுவார் மரபின் முதல் இசைவாணர்களாகத் திகழ்ந்தவர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் ஆவர். ஏனெனில் திருஞானசம்பந்தர் பதிகங்களை அருளிய காலத்திலேயே உடனிருந்து யாழிசைத்து பாடியவர்கள் இவ்விருவர். அதனை பெரியபுராணம், 

"திருநீல கண்டத்துப் பெரும்பாணர் தெள்ளமுதின் 

வருநீர்மை இசைப்பாட்டு மதங்கசூளாமணியார் 

ஒருநீர்மை யுறுடைய பிள்ளையார் கழல்வணங்கத் 

தருநீர்மை யாழ்கொண்டு சண்பையிலே வந்தணைந்தார்”

"தானநிலைக் கோல்வடித்துப் படிமுறையைத் தகுதியினால்

 ஆனஇசை ஆராய்வுற் றங்கணர்தம் பாணியினை 

மானமுறை பாடினியாருடன் பாடி வாசிக்க 

ஞானபோனகர் மகிழ்ந்தார் நான்மறையோ ரதிசயித்தார்’’ என்று கூறுகிறது.

இரண்டாம் இராஜராஜ சோழன் தாராசுரம் கோவிலில் திருத்தொண்டத்தொகை கூறும் அடியவர்களின் வரிசைப்படி அவர்களின் வாழ்வைச் சித்திரிக்கும் சிற்றுருவச் சிற்பத் தொகுதிகளை இடம்பெறச் செய்துள்ளான். அவற்றில் ஒரு சிற்பத் தொகுதியில் மதங்கசூளாமணியார் கையில் தாளம் கொண்டு இசைத்த வண்ணம் மிடற்றிசையால் பாடுவதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் சகோடயாழினை வாசிப்பதுமாகிய காட்சி இடம் பெற்றுள்ளது. இச்சிற்பக்காட்சியே நூலுக்கு அட்டை படமாக இருப்பதுதான் எவ்வளவு பொருத்தம்.

இந்நூலில் கி.பி 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டு சாசனங்களையும் மன்னர்கள் தேவாரம் பாடுவதற்கு அளித்த கொடைகளையும் விரிவாக கூறுகிறார். திருப்பதிகம் விண்ணப்பிப்பது பற்றி பேசும் சோழர்கால முதற்கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் கி.பி.892 இல் பொறிக்கப் பெற்ற திருப்பழனக் கல்வெட்டாகும். இதில் ஆதித்தசோழனின் விருப்பப்படி கண்ணிழந்த அடிகள்மார் பன்னிருவருக்கும், அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவருக்கும், நந்தவனக்குடிகள் இருவருக்கும் காணியாக நிலம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பெற்றுள்ளது. 

திருஞானசம்பந்தர்

கி.பி 892ஆம் ஆண்டு முதல் கி.பி 992 வரை சோழநாட்டு சாசனங்களில் தேவாரம் பாடுபவர்களை அடிகள்மார் என்று குறிப்பிட்டுள்ளனர். ராஜராஜசோழன் கல்வெட்டு (கி.பி 915 - 1014) மூலம் அவன் அளித்த நிவந்தமும் தேவாரம் பாடுபவர்களை பிடாரர்கள் என்று குறிப்பிட்டதையும் அறியலாம். இராஜராஜசோழன் காலத்தில் தஞ்சைக் கோயிலில் நாளும் தேவாரம்பாட நியமனம் பெற்ற பிடாரர்களின் எண்ணிக்கை நாற்பத்தெட்டு. அவர்கள் பாடும்போது உடன் கொட்டிமத்தளம் வாசிக்கவும், உடுக்கை வாசிக்கவும் இருவர் நியமனம் பெற்றனர். இவர்களது ஒருநாள் ஊதியம் முக்குறுணி நெல்லாகும். இவர்கள் பணிபுரியும்போது இறந்தாலோ அல்லது வேறு நாட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டாலோ அவர்கள் வழிச் சார்ந்தார்கள் அப்பணியை புரியலாம். அடுத்து வருபவருக்குப் போதிய தகுதி இல்லை என்றால் தகுதி உடைய ஒருவரை அவர்களே நியமிக்கலாம் என்பன போன்ற உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இவர்களில் பெரும்பாலானோருக்கு தேவார மூவர்களாகிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருஆரூரர் ஆகியவர்களின் பெயர்கள் இருப்பதும், மணிவாசகரின் பெயர் யாருக்கும் இல்லை என்பதும், இவர்கள் அனைவரும் சிவதீட்சை பெற்றவர்கள் எனபதையும் கூறுகிறார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஓதுவார்களாக இருந்துள்ளனர் என்று திருவொற்றியூர் கி.பி1063 கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலில் இறைவன் முன்பு 16 தேவரடியார் பெண்கள் பதிகம் பாடி நின்றனர் என்றும் அவர்கள் திருப்பதிகங்களை அகமார்க்கத்தில் பாடி ஆடினர் என்பதும் தெரிய வருகிறது. அகமார்க்கம் என்பதனை குறைந்த ஒலியுடன் பெருமான்மீது காதல் வயப்பட்டு உள்ளம் உருகப் பாடுதலாம்.

தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலின் வடபுறத் திருச்சுற்று மாளிகையின் சுவரில் 108 அடியவர்கள் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இக்கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்தவர்களாவர். மேலும் ஊர், பெயர், தீட்சை நாமமும் பொறிக்கப்படுள்ளது. இங்கு காணப்பெறும் சிற்பங்களைச் சில ஆசிரியர்கள் தவறாகச் சிவாச்சாரியர்கள் என்பர். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மழித்தலையிலும் மார்பிலும், கைகளிலும் உருத்திராக்க மாலைகள் திகழ முழங்கால் வேட்டி அதன் மேல் கட்டியுள்ள துண்டு ஆகியவற்றுடன் இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ளனர். இவர்களது மார்பில் முப்புரிநூல் இல்லை என்பதால் பிராமணர் அல்லாத தேவாரம் பாடிய ஓதுவார்களை சிறப்பிக்கவே இச்சிற்பங்கள் என்று குடவாயில் குறிப்பிடுகிறார்.

கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருமுட்டம் ஸ்ரீநித்தீஸ்வரர் திருக்கோயில் கோபுர வாயிலில் ஒருவரது உருவச்சிலை காணப்பெறுகின்றது. அச்சிலைக்கு மேலாக, ”இத்திருக்கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்து விடை கொண்ட மானக் கஞ்சறார் என்ற கல்வெட்டுப் பொறிப்பும் உள்ளது. இதனை நோக்க ஓதுவார்களின் சிறப்பையும் புகழையும் அறிய முடிகிறது.

முன்னர் தேவாரம் பாடுகின்றவர்களை அடிகள்மார் மற்றும் பிடாரர்கள் என்றும் குறிப்பிட்டதுபோல், 13ம் நூற்றாண்டை சார்ந்த நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு தவசிகள் என்றும், சோழபுரம் கல்வெட்டு ஆண்டார்கள், என்றும், திருவீழிமிழலை கல்வெட்டு “திருப்பாட்டோதும் திருமேனி" என்றும் குறிக்கிறது. பாடுதலை ’பண் எடுத்தல்’ என கூறும் மரபு இருந்ததை கி.பி 14 நூற்றாண்டு திருநள்ளாறு கல்வெட்டு குறிக்கிறது. கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருமலை நாயக்கர் கல்வெட்டில் தான் ஓதுவார் என்று கூறும் மரபு தொடங்குகிறது. 

ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் செய்வதற்கு தனிமண்டபங்கள் கட்டுவது 13ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது எனலாம். அம்மண்டபங்கள் திருகைக்கொட்டி எனப்பட்டன. இதனை திருவுச்சாத்தானம், திருப்பாலைவனம், பேரூர், சீயமங்கலம் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அதில் திருவீழிமிழலை கல்வெட்டு கூறும் திருகைக்கொட்டி மண்டபம் தற்போது விளங்கும் வௌவால் நெத்தி மண்டபம் என்கிறார் நூலாசிரியர்.

ஓதுவார்கள் பாடும்பொழுது உடுக்கை, கொட்டி மத்தளம், இடக்கை, வீணை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் யாழும் பொற்றாளமும் தான் தேவார மரபில் முதல் இசைக்கருவிகளாக விளங்கியவை. 

தற்போது மிருதங்கம், குழல், வயலின் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. தாளம் மட்டும் என்றுமே மாறாத இசைக் கருவியாக உள்ளது.

பதினான்காம் நூற்றாண்டின் சோதனை காலகட்டத்தில் தொய்ந்து போன கோயில் கலைகளில் தேவாரம் விண்ணப்பித்தலும் ஒன்றாகும். பின் வந்த விஜயநகரப் பேரரசர்களும் மற்ற சைவத்திருமடங்ளும் அதற்கு எழுச்சியூட்டின. மதுரையில் திகழ்ந்த பழம்பெரும் மடமான திருஞானசம்பந்தர் மடம், திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம், சூரியனார் கோயில் மடம், திருப்பனந்தாள் காசி மடம் போன்ற மடங்களும், அவற்றின் தலைவர்களாகத் திகழ்ந்த சன்னிதானங்களும், குருமார்களும், பிறரும் வீழ்ந்து கிடந்த தேவார மரபை மீண்டும் நிலைபெறச் செய்தனர். தேசிகர்கள் குலக் கல்வியாக தங்கள் மரபினர்களுக்கு கற்பித்துத் திருக்கோயில்களில் முறையாகத் திருப்பதிக விண்ணப்பம் செய்து வந்தனர். ஏறத்தாழ பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இம்மறுமலர்ச்சியின் தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை 1950 வரை தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேவாரம் விண்ணப்பம் செய்யும் மரபில் ஒரு தொய்வு நிலை ஏற்படத் தொடங்கியது. இன்றும் தேவார பாடல் பெற்ற பல தலங்களில் ஓதுவார்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது.

மூவர் முதலிகள், தென்பரங்குன்றம் குடவரை

[2]

இப்பகுதியில் தேவார மூவர் வழிபாடு, அவர்களின் பெயரில் இருந்த மடங்கள்,கொண்டாடப்படும் திருவிழாக்கள், கலை படிமங்கள் பற்றி நூலில் விவரிக்கப்பட்டுள்ளதை சுருக்கமாக காணலாம்.

தேவார மூவர்களை அவர்களின் குருபூஜை தினங்களை வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களை குருவாக நினைந்து வணங்கியும் பின்னர் சிவாலயங்கள் தோறும் அவர்களுக்குக் கோயில் எடுத்து வழிபடும் மரபும் தோற்றம் பெற்றது. தேவார மூவர் வழிபாட்டு மரபுக்கு வித்திட்டவர் அறுபத்து மூவரில் ஓருவரான கணநாத நாயனார்தான் என்று கூறலாம். தன்னை நாடி வருபவர்களுக்கு திருமுறை எழுதுதல் வாசித்தல் ஆகியவற்றை பயிற்றுவித்து திருஞானசம்பந்தரின் திருவடிகளை நாள்தோறும் பூஜித்தவர். இதே போல் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை வணங்கியவர்.

வரலாற்றில் பல்லவர் கால கோயில்களில் கல்லிலோ செம்பிலோ வடிக்கப் பெற்ற மூவர் முதலியர் உருவங்களோ அல்லது அவை பற்றிய கல்வெட்டுக்களோ இதுவரை கிடைக்கவில்லை என்றும் சோழப் பேரரசன் பராந்தக சோழன் காலம் முதல்தான் இவ்வழிபாட்டு நெறி சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

பராந்தக சோழனின் (கி.பி. 945) திருவிடைமருதூர் கல்வெட்டுச் சாசனத்தில் திருநாவுக்கரசு தேவர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் செப்புப் பிரதிமங்கள் பற்றிய குறிப்பு காணப்பெறுகிறது. இதனை அடுத்து தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் காணப்பெறும் முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டில் மூவர் முதலியர், பரவை நங்கையார் பெரிய பெருமாள் எனப்படும் இராஜராஜ சோழன், அவனது பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோர் செப்புப் பிரதிமங்கள் பற்றி கூறப்பெற்றுள்ளது.

தேவார மூவர் முக்தி அடைந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஞானசம்பந்தர் முதலில் ஜோதியில் கலந்தமையால் அவர் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசர் புகலூரில் இறைவனை அடைந்த காலம் ஞானசம்பந்தர் சோதியில் கலந்த காலத்துக்குச் சில ஆண்டுகள் பிற்பட்டதாதலின் அவர் அருளிய பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும், இவ்விருவருக்கும் பிற்பட்டு அவதரித்துக் கயிலை சேர்ந்த சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறையாகவும் வைக்கப்பட்டன என்று பண்டித கோபாலய்யர் 'தேவாரம் ஆய்வுத் துணை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டுகளில் இவ்வரிசை முறை பின்பற்றப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவிலில் காணப்பெறும் இரண்டாம் குலோத்துங்கனின் (கி.பி.1140) கல்வெட்டு மூவர் வழிபாடு பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு நாளும் சந்திப்பொழுதுகளில் செய்ய வேண்டிய அமுது படிகள், திருவீதி உலாப் போகும் நாளில் செய்யவேண்டிய அமுதுபடிகள், அவைகளுக்கு வேண்டும் பொருள்கள், பணிசெய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதியம் ஆகிய அனைத்தும் பட்டியலிட்டுக் கூறப்பெற்றுள்ளது. சுந்தரர் பரவை நாச்சியார் திருமுன்பு வைக்க திருநுந்தா விளக்கு இரண்டு, சந்தி விளக்கு 23 அவை எரிக்கத் தேவையான எண்ணெய் ஆகியவையும் குறிக்கப் பெற்றுள்ளன. இதனை அடுத்து அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆளுடைய பிள்ளையாருக்கும், திருநாவுக்கரசு தேவருக்கும் இம்மன்னனே செய்வித்த வழிபாடு மற்றும் விழாக்கள் பற்றிய செய்திகள் தனித்தனியே விவரிக்கப் பெற்றுள்ளன.

ஆரூர்க் கல்வெட்டில் அமுதுபடிகளைப் பொறுத்தவரை மூவருக்கும் எந்த வேறுபாடுமில்லை என்றாலும் திருவீதி எழுந்தருளுவதைப் பொறுத்தவரை சுந்தரர் பரவை நங்கையார் படிமங்கள் ஓராண்டுக்கு 56 முறையும், திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் படிமங்கள் மூன்று முறை மட்டுமே எழுந்தருளச் செய்யப் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறாக மூவர் வழிபாட்டில் திருவீதி உலா எத்தனை முறை எழுந்தருளப்பட்டது என்பது வரை நமக்கு சான்றுகள் கிடைக்கின்றன். சோழர்கள் காலத்தில் மூவர் வழிபாடு ஓங்கியிருந்ததை அறிய முடிகிறது.

வழிபாட்டில் இருந்த மூவர் திருமேனியை மீட்பதற்காக மேற்கொண்ட போர் பற்றி செய்தியும் இந்நூலில் கிடைக்கிறது. மாறவர்ம பராக்கிரம பாண்டியனின் கி.பி 1338 கல்வெட்டு கூறும் செய்தி, விக்கிரமசோழ தேவரின் நான்காம் ஆட்சியாண்டில் போசளர் (கர்நாடகம்) நாட்டை ஆட்சி செய்த முதலாம் விஷ்ணுவர்த்தன் சோழநாட்டில் நுழைந்து போர் தொடுத்தான். அப்போர் பெரியவடுகன் கலகம் எனப்பட்டது. அப்போரின் போது போசளர் ஆடுதுறை சிவாலயத்திலிருந்து இறைவன் திருமேனிகளையும், மூவர் திருமேனிகளேயும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமான துவார சமுத்திரத்தில் (ஹளிபேடு) வைத்திருந்தனர். அப்போது ஆடுதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி இன மக்கள் அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று கவரப்பெற்ற தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் பிரதிமங்களையும் மீட்டு வந்து புனர் நிர்மாணம் செய்தனர். நித்ய வழிபாடுகள் செய்ய ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும் 5000 காசும் கொடையளித்தனர். 

திருவாஞ்சியம் கல்வெட்டு (கிபி 1203) மூவருடன், சேக்கிழாருக்கும் மூவருக்கும் குலோத்துங்கனுக்கும் பிரதிமங்கள் இருப்பதை குறிக்கின்றது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் அகஸ்திய கொண்டா மலை மேலுள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் காணப்பெறும் வீரராஜேந்திர சோழரின் (கி.பி.1077) கல்வெட்டு நுளம்ப அரசன் உத்தமசோழ கங்கன் என்பவனின் தேவி திருநாவுக்கரசு தேவரின் பிரதிமத்தை அத்திருக்கோயிலில் எடுத்து பிரதிட்டை செய்து வழிப்பட்டதை கூறுகிறது. இதுபோல் வெவ்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற மூவர் வழிபாடு சார்ந்த செய்திகள் அனைத்தும் விரிவாக கூறியுள்ளார்.

மூவர் வழிபாடு எப்பொழுது நால்வர் வழிபாடாக மாறியது என்பது மிக சுவாரசியமானது. பதின்மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த திருப்பரங்குன்றத்து குடைவரையை விரிவு செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூவர் திருவருவங்களை குடைவுச் சிற்பமாக ஒரு மாடத்திலும் மணிவாசகரை தனி பாடத்திலும் வைத்திருப்பதை நோக்க பிற்கால பாண்டியர் காலத்திலும் நால்வராக சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமில்லை என்பதை கூறுகிறார்.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக திருவண்ணாமலை சாசனங்கள் கூறும் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகம் எனும் நூலில்,

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல் எனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்த் திருத்தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொன்தாள் எம்உயிர்த் துணையே”

எனத் தொடங்கும் இப்பாடலில் தான் மூவர் தேவாரத்தோடு மாணிக்க வாசகரின் திருவாசகம் இணைத்துக் கூறப்படுகிறது. நால்வர் என்ற பிற்கால மரபு இங்கிருந்துதான் தோன்றுகிறது என்கிறார்.

நால்வர் நான்மணி மாலையின் ஆசிரியரான துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 40 பாடல்களில் நால்வர் பெருமையைத் தனித்தனியாகப் பாடியுள்ளார். இவர் 17-18ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.

திருவண்ணா மலையில் காணப்பெறும் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் ( கிபி 1443) நால்வர் என சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், சண்டேஸ்வரர் ஆகியோர் குறிப்பிடப்பெறுவதும், அதே திருவண்ணாமலையில் 16ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற அருணைக் கலம்பகத்தில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் இணைத்து, அதன் ஆசிரியர்களை நால்வர் எனக் குறிப்பிடும் மரபின் தொடக்கத்தையும் காண முடிகின்றது.

தேவார மூவர் பெயரில் மடங்கள் இருந்ததற்கான செய்திகளையும், கோவிலோடு இயைந்த மடங்கள் பற்றிய செய்திகளையும் பெரிய புராணமும் கல்வெட்டு சாசனங்களும் கூறுகின்றன.

பெரிய புராணத்தில் அமர்நீதி நாயனார் அமைத்த திருநல்லூர் மடம், திருவதிகையில் திலகவதியார் இருந்த மடம், திருஞானசம்பந்தர் இருந்த சீர்காழி மடம், திருப்புகலூரில் முருகநாயனார் திருமடம், திருப்பூந்துருத்தியில் அப்பர் அடிகளே தோற்றுவித்த மடத்தை "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஆங்கொன்று செய்தார்" என்கிறார் சேக்கிழார். இன்றும் இம்மடத்தை காணமுடியும்.

திருஞானசம்பந்தருடன் திருக்கடவூர் வந்தணைந்த நாவுக்கரசர் "பொங்கிய வெங்கூற்றடர்த்த பொன்னடிகள் தொழுதேத்திக் குங்கிலியக் கலயனார் திருமடத்தில் குறைவறுப்ப அங்கவர்பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் என்று திருக்கடவூர் மடம் பற்றி கூறுகின்றார். திருவீழிமிழலையிலே திருஞான சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் தனித்தனியே மடங்கள் இருந்ததை பின்வரும் பாடலால் குறிப்பிடுகிறார்.

ஆறு சடைமேல் அணிந்தருளும் அண்ணல் வைத்த படிக்காசால்

ஈறிலாத பொருளுடைய இருவருடைய திருமடங்கள் 

சோறுநாளுந் தொண்டர் மகிழ்ந்துண்ண உணத் தொலையாதே 

ஏறு பெருமை புவிபோற்ற இன்புற்றிருக்கும் அந்நாளில்” 

நல்லூர் பெருமணம், அவிநாசி, சதுர்வேதி மங்கலம், திருக்குறுக்கை, கோட்டூர், நொடியூர், திருநெல்லிக்கா, திருவானைக்கா, முன்னியூர், தீருவீழிமிழலை, திருவொற்றியூர், திருச்சத்தி முற்றம், கல்லிடைக்குறிச்சி, பழையாறை போன்ற இடங்களில் திருஞானசம்பந்தர் பெயரில் மடமும், திருவதிகை, குறுக்கை வீரட்டம், திருவீழிமிழலை, பிரான்மலையில் திருநாவுக்கரசர் பெயரில் மடமும். கோவிந்தபுத்தூர், திருவிடைவாய், காளையார் கோவிலில் சுந்தரர் பெயரில் மடங்கள் இருந்ததற்கான கல்வெட்டு சாசனங்கள் கிடைக்கின்றன.

 மூவர் முதலிகள் உலாச் செல்லும் தேவாசிரிய மண்டப ஓவியம், திருவாரூர் 

பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாதிப்பினால் திருமடங்கள் செல்வாக்கிழந்து அழிந்தன. குமாரகம்பணன் எனும் விஜயநகர அரசனின் தென்னகப்படை எடுப்பிற்குப் பிறகு தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கோயில்களும், திருமடங்களும் மீண்டும் பொலிவு பெற்றன. சோழநாட்டில் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் காசிமடம் போன்ற மடங்களும், மதுரையில் திருஞானசம்பந்தர் மடமும், கொங்குநாட்டில் பேரூர் மடம், திருவண்ணாமலை மடம் போன்ற பல மடங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சிக்கு இன்றளவும் தொண்டாற்றி வருகின்றன.

சிவாலயங்களில் ஆண்டுதோறும் நிகழும் பெருவிழாக்களில் பக்தர் உற்சவம் நிகழும். இவ்விழாவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் திருமேனிகளை அலங்கரித்து திருவீதியில் உலாவாக எழுந்தருளச் செய்வரார்கள். இவ்விழா தவிர 63 அடியார்களின் திருநட்சத்திர நாட்களை முக்கிய நாளாக கொண்டாடப்படும் மரபும் உள்ளது.

பக்தர் உற்சவம் தவிர தேவார மூவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை எடுத்துக்காட்டும் விழாக்கள் காலப்போக்கில் குறைந்துவிட்டாலும் இன்றும் அம்மரபினைப் போற்றும் வகையில் திருமயிலையில் அறுபத்து மூவர் விழா, மறைக்காட்டில் மூவர் விழா, திருக்கதவம் திறக்க அடைக்கப்படும் விழா, சீர்காழியில் திருமுலைப்பால் திருநாள், திருக்கோலாக்காவில் பொற்றாள விழா,திருமருகலில் செட்டிப்பெண் கலியாண விழா, அப்பருக்கு கயிலை காட்சி விழா, திருப்பாதிரிப்புலியூர் விழா, திருப்புகலூர் சதய விழா, சுந்தரருக்கு திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட்கொண்ட விழா, திருக்கச்சூரில் அமுதிடும் விழா, திருக்குவளை நெல் மகோற்சவம் போன்றவை நிகழ்கின்றன.

தேவார மூவரையும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், செப்புத் திருமேனிகளாகவும் வெவ்வேறு கோவில்களில் தமிழகமெங்கும் வடித்துள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றளவும் இம்மரபு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. தாராசுரம் கோவில், மேலக்கடம்பூர் சிவாலயம், திருப்பனந்தாள் தாடகேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் சுந்தரர் திருவாரூரில் பாடிய திருத்தொண்டத்தொகை அடியார்களின் வரலாறு தொடர் சிற்பக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. தஞ்சைப் பெரிய கோயில், திருப்புடைமருதூர்க் கோபுரம், திருமறைக்காட்டுத் திருக்கோயில் போன்ற ஆலயங்களில் உள்ள ஓவியங்களில் மூவர் வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை ஒருவர் கையில் வைத்திருப்பதே பேரனுபவத்தை தரகூடியது. மூவர் சார்ந்த கலைபடிமங்களை பார்ப்பதற்கும் விழாக்களுக்கு செல்வதற்கும் நம்மை தூண்டக்கூடியது. அதற்கு கையேடாகவும் இந்நூல் விளங்கும். 

திருநாவுக்கரசர்

தேவாரங்கள் தோன்றுவதற்கு ஆதாரமான மூவர் முதலிகளின் வாழ்க்கை வரலாறு பெரியபுராணத்தின் அடிப்படையில் நூலின் முதல் அத்தியாத்திலேயே தரப்பட்டுள்ளது. அறிந்த வாழ்க்கை வரலாறு தானே என நாம் எண்ணக் கூடும் ஆனால் குடவாயில் பெரும்ஆய்வாளர் அல்லவா! அதன் தனித்துவம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் உதாரணமாக, சுந்தரர் சிவபெருமானை ’’மடங்கலானைச் செற்றுகந்தீர்’’ என்று ஏழாம் திருமுறையில் திருவெண்காடு பதிகத்தில் (7.6) கூறியுள்ளார். மடங்கலான் என்பது நரசிங்கத்தை செற்ற சிவபெருமானின் அம்சமாக வந்த சரபமூர்த்தியை குறிப்பது மூவர் பாடல்களில் இந்த ஒரு பாடலில் மட்டுமே வருகிறது என்றும், அதே போல் 7.65 பாடலில் ஆல்அமர் பெருமானை கூறும் பொழுது,

காது பொத்தர் ஐக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம் கோது இல் மாதவர் குழுஉடன் கேட்பக் கோல ஆல்நிழல் கீழ் அறம்பகர..”

காதுகளை எப்போதும் ஆடையால் மூடிய வண்ணம் பெருமானோடு இருக்கும் காதுபொத்தர் இருவர் பற்றி சுந்தரர் மட்டுமே கூறியுள்ளார் என்றும்,

திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய திருவண்ணாமலை பதிகங்கள் தற்போது உள்ள பெரிய கோவிலில் பாடப்பட்டவையல்ல (அவர்கள் பாடிய நூற்றாண்டில் அக்கோவில் கட்டப்படவில்லை) திருமலையையே அண்ணாமலையாராக பாவித்து பாடப்பட்டவை என்கிறார். இது போன்ற பல நுண் தகவல்கள் உள்ளன. வேறெங்கும் கிடைக்காதாவை நம் விழிப்பாவையை விரியச் செய்பவை.

வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல், வெறும் தரவுகளை மட்டும் வெவ்வேறு நூல்களில் இருந்து எடுத்துக்கொண்டு, சமகாலத்தில் எது ஏற்க்கப்படுமோ அதை மட்டும் கருத்தில் கொண்டு எழுதப்படும் நூல்களுக்கு மத்தியில் 25 ஆண்டு கால உழைப்பைக் கோரி படைக்கப்பட்ட இந்நூல் ஒரு அருமணி. கனியை ருசிப்பவர்கள் வேரை பற்றி எண்ணுவதில்லை. ஆனால் வேரையும் எண்ணி சிலாகிப்பவர்களும் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கானது இந்நூல்.

 [3]

தமிழ்நாட்டில் தேவாரம், திருவாசகம் என்ற சொற்களை சொல்லளவிலேனும் கேளாதவர்கள் மிக குறைவு. தேவாரம் என்ற சொல் மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் அருளிச்செய்த திருபதிகங்களை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இச்சொல் மூவர் முதலிகள் அருளிய காலம் தொட்டே அப்பெயரால் தான் அழைக்கப் பெற்றதா? இல்லையெனில் என்னவென்று? எதனால், எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டது என்பதை இலக்கிய மற்றும் கல்வெட்டு சான்றுகள் கொண்டு இந்நூலில் நிறுவுகிறார் குடவாயில்.

தேவாரம் என்ற சொல் பெறுவதற்கு முன் அப்பனுவல்களை திருப்பதியம் என்றே அழைத்துள்ளனர். கி.பி.863ஆம் ஆண்டு நந்திவர்ம பல்லவனின் திருவல்லத்துச் சாசனம் முதல் கி.பி.1242ஆம் ஆண்டின் திருப்பத்தூர் இரண்டாம் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு மற்றும் கி.பி.1243 இல் வெட்டுவிக்கப் பெற்ற கோப்பெருஞ்சிங்கனின் கல்வெட்டு வரை ஏறத்தாழ நானூறு ஆண்டு காலம் வரை திருப்பதியம் என்ற சொல்லாட்சி தான் மக்கள் வழக்கில் இருந்திருக்கின்றது.

குறிப்பிட்ட சில தேவாரப் பாடல்களைப் 'பாமாலை' என்றும், 'திருத்தொண்டத்தொகை’, 'திருத்தாண்டகம்' என்றும் குறித்துள்ளனர். மூன்றாம் இராஜராஜனின் இரண்டு சாசனங்களில் (கி.பி.1223 & 1244) தேவாரப் பாடல்களைத் "திருமுறை" என்ற சொல்லாலும், பாண்டிநாட்டில் “திருஞானம்” என்ற சொல்லால் குறிக்கும் மரபும் இருந்துள்ளது. கி.பி. 1263 இல் வரையப்பெற்ற மூன்றாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டில் தொடங்கி பாண்டியர்கள், சம்புவரையர்கள் விஜயநகர அரசர்கள் நாயக்கர்கள் காலத்து சாசனங்கள் வரை தேவாரப் பாடல்களைத் "திருப்பாட்டு” என்று கூறும் வழக்கும் இருந்துள்ளது.

தி.வை.சதாசிவ பண்டாரத்தார் ஏழு கல்வெட்டுச் செய்திகளையும், ஏகாம்பரநாதர் உலாவில் இரட்டைப் புலவர்கள் கூறும், "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்” என்னும் அடிகளையும், 

கொற்றங்குடி உமாபதி சிவாச்சாரியார் தம் கோயிற்புராணத்தில் "தப்பற்றுயர் தவ மூவாயிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணி முற்றப் புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்” என்று கூறியுள்ளதையும் மேற்கோள்காட்டி தேவாரம் என்பது வழிபாடு எனும் பொருளில் வழங்கப்பெற்றதை கூறி, வழிபாட்டில் பாடப்பட்டதால் கி.பி. 14ஆம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்று வருகின்றன என்றும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயர் பெற்றமைக்கு எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சுந்தரர்

க.வெள்ளைவாரணனார் "வாரம்” என்ற சொல்லையும், தேவபாணி என்ற சொல்லையும் எடுத்துக்கொண்டு அவை எவ்வாறு இலக்கியங்களில் கையாளப் பெற்றுள்ளன என்பதை விளக்குகிறார். வாரம் பாடுதல் என்பது இசைப்பாடலாற் கடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் சிலப்பதிகார அரங்கேற்றுக்காதையில் கையாளப்பட்டுள்ளது. மேலும் தெய்வத்தைப் பண்பொருந்திய இசைப் பாடல்களால் போற்றுவதற்கு தேவபாணி எனப் பெயர். தேவபாணியென்ற சொல்லிலிருந்து தேவாரம் என்ற பெயர் வழங்கியிருத்தல் வேண்டும் என்கிறார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடநாட்டு இசை நூலாசிரியரான சாரங்கதேவரின் "சங்கீத ரத்னாகரம்" எனும் நூலில் மூவர் திருப்பதிகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்கள் சிலவற்றை "தேவார வர்த்த நீ" என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன்பே திருப்பதிகங்களுக்கு தேவாரம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள்து என்கிறார்.

இரா.நாகசாமி சோழர்கள் காலம் வரை தேவாரம் என்ற சொல் வழிபாடு செய்யப்படும் இடத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை

இராஜராஜ சோழனின் இருபத்தியேழாம் ஆண்டு அல்லூர் சாசனத்தில் மூலம் “திரு வடகுடி ஸ்தான மடத்து தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையன்" நிறுவுகிறார். தேவாரம் என்ற இடத்தில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்யும் மரபு இருந்ததால் அப்பெயர் பெற்றிருக்கலாம். தேவகரம் (தெய்வத்தை வழிபாடு செய்யும் இடம்) தேவாரமென மருவியது என்கிர்றார்.

இம்மூவரின் ஆராய்ச்சியையும் மூலமாக எடுத்துக் கொண்டு, தன் ஆய்வு முடிவுகளையும் முன்வைக்கிறார். முதன் முதலாக தேவாரம் எனும் சொல் வழிபடும் இடம் என்ற பொருளில் கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமய கருப்பங்குன்று கல்வெட்டும், கி.பி.10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சைவ சமய திருவொற்றியூர் கல்வெட்டும் கூறுகின்றன. மூவர் திருப்பதிகங்களைத் தேவாரம் எனக் குறிப்பிடும் முதற் கல்வெட்டுச் சான்றாக விளங்குவது திருகோளிலி எனும் திருக்குவளையில் உள்ள கி.பி.1286ஆம் ஆண்டு கல்வெட்டுச் சாசனமாகும் அடுத்ததாக கி.பி.1306ஆம் ஆண்டு பிரான்மலை கல்வெட்டு என்று குறிப்பிடுகிறார். எனில் 13ஆம் நூற்றாண்டு இறுதி என கொள்ளலாம்.

இலக்கியச் சான்றாக மேற்கூறிய இரட்டை புலவர்களின் காலம் (இராச நாராயண மல்லிநாத சம்புவரையன் காலம் கி.பி.1336 - 1373) கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் தொண்டை மண்டலப் பகுதியில் மூவர் பதிகங்களும் தேவாரம் என்று கூறும் மரபு தோன்றியிருக்கலாம் என்கிறார். 

மேலும் குலசை உலா ( 15ஆம் நூற்றாண்டு) எனும் நூலில் "நாவாரத் தேவாரம் நண்ணு திருவாசகமும் பாவாணர் பண்ணில் படித்துவர" வரும் வரியும், சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகத்தில் (16ஆம் நூற்றாண்டு) ''வாய்மை வைத்த சீர்த்திருத் தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த நால்வர்" மூவர் திருமுறைகளையும் தேவாரம் என்று அறுதியிட்டுக் கூறுகின்றது.

தேவாரம் என்ற சொல் எப்படி வழக்கில் வந்தது எனும் இந்த ஆய்வொன்றே வரலாற்றுத்தன்மையை (Historicity) பற்றியது தான். அதற்காகவே நூலில் உள்ள இந்த அத்தியாயத்தை கொஞ்சம் விரிவாக சொல்லவேண்டுமென தோன்றியது.

தேவாரம் எனப்பெயர் பெற்ற பனுவல்கள் ஏட்டில் தான் எழுதப்பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக திருஞானசம்பந்தர் புராணத்தில் 

’’மெய்த்த நற்றிருவேட்டினைக் கழற்றி மெய்ம்மகிழ்ந்து, கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர்”

என்றதாலும், மேலும் அனல் வாதம், புனல் வாதம் ஏட்டில் எழுதிய பதிகங்களையே கொண்டே செய்யப்பட்டது என்பதும், ”அருமறைச்சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர்" என்றதாலும், மூவர் திருப்பதிகப் பாடல்களையும் நாயன்மார்களுடன் உடன் சென்ற அடியார்களில் சிலர் ஏட்டில் எழுதினர் என்பதும் தெரிய வருகிறது.

பனையோலை ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதி, ஏட்டில் உள்ள துளைவழியே கயிற்றைக் கோர்த்து அக்கயிறு கொண்டே அந்நூலினைக் காப்பிடுதலே மரபாக கொள்ளப்ப்பட்டுள்ளது. இன்றும் திருமுறை ஏட்டில் கயிறு சாற்றிப்பார்க்கும் வழக்கம் சைவர்களிடையே உள்ளதை காணலாம். இவ்வாறு ஏட்டில் எழுதப்பட்ட பதிகங்களை தில்லை பெருங்கோயிலில் கண்டெடுத்து ஏழு திருமுறைகளாக தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகள் (நூற்றாண்டு). எனில் அதற்கு முன்னர் திருமுறைகள் பயிலபடவில்லையா என சந்தேகம் எழும், அதற்கு முன்னரும் கோவில்களில் திருமுறைகள் பாடினதற்கான சான்றுகள் உள்ளன. ஓட்டு மொத்தமாக தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பிகளாவர். இச்செய்தி பற்றி கூறும் திருமுறை கண்ட புராணம் என்ற நூலின் உண்மைத் தன்மையையும் இந்நூலில் ஆராய்கிறார்.

1930ஆம் ஆண்டில் சுவடியில் கிளியன்னவூர் பதிகம் கண்டுபிடிக்கப்பட்டு 127 பதிகமாக மூன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டது. இதே போல், அதுவரை கிடைக்கப்பெறாத மற்றுமொரு பதிகம் திருவிடைவாயில் கல்வெட்டில் 1911 ம் ஆண்டு மு.சுவாமிநாத மாதவராயரால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு பொறிக்கப் பெற்ற கற்பலகைகளை பின்னாளில் நடந்த திருப்பணிகளின்போது சிதைத்துவிட்டனர். 1918இல் படி எடுக்கப்பெற்ற காகிதப்படியே மைசூரில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுள்ளதை போலவே செப்பேடுகளிலும் தேவாரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி.1070-1125 வரையிலான ஆண்டுகளில் தில்லைப் பெருங்கோயிலில் மணவிற்கூத்தன் காலிங்கராயனால் வைக்கப்பெற்ற மூவர் தேவாரச் செப்பேடுகள் மற்றும் கி.பி.1206 இல் பாண்டியநாட்டு ஆற்றூரில் வைக்கப் பெற்றிருந்த திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் எழுதப்பெற்ற செப்பேடுகள் குறித்தும் கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன. ஆனால் அச்செப்பேடுகள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை. எதனால் நமக்கு கிடைக்காமலானது குறித்து வரலாற்று சித்திரம் விரிவாக விளக்கியள்ளார்.

தமிழக வரலாற்றில் சோதனையான காலம் என்பது கி.பி. 1311இல் தொடங்கி 1371 வரை. தில்லியிலிருந்து படை எடுத்து வந்து தமிழகத்தைக் கொள்ளையடித்த மாலிக்காபூர், குஸ்ரூகான் என்பவர்களின் செயல்களும், மதுரை சுல்தான்களின் ஆட்சியில் ஏற்பட்ட நிகழ்வுகளும் தான் கோயில்களையும் அதனோடு இயைந்த பிற கலைகளையும் பேரழிவுக்கு உட்படச் செய்தது. மேலும் தில்லை மற்றும் திருவாரூர் பெருங்கோயில்கள் பல்வேறு நவாப்புகள் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியிருக்கு இராணுவ கேந்திரமாக இருந்துள்ளது. இது போன்ற காரணங்களால் நமது அரிய பொக்கிஷங்கள் இடமாற்றத்திற்கோ அல்லது சிதைவிற்கோ உட்பட்டிருக்கலாம் என்று கூறி, இன்றும் திருவாரூரில் உள்ள இரகசிய அறைகளை திறந்தால் அரிய சுவடிகள் கிடைக்க வாய்ப்புண்டு என்கிறார். அன்று முதல் இன்று வரை கோவில்களுக்கு ஏற்படும் தாக்குதல் நிற்கவில்லை தாக்கும் விதம் தான் மாறியிருக்கிறது.

ஏட்டில் எழுதப்பட்ட இப்பதிகங்களை இறைவன் திருவடி முன் பாடுபவர்களை ஓதுவார்கள் என்றும் பாடுவதை விண்ணப்பம் செய்தல் என்றும் கூறுதல் மரபு. திருக்கோயில்களில் மூவர் திருப்பதிகங்களைப் பாடும் ஓதுவார் மரபின் முதல் இசைவாணர்களாகத் திகழ்ந்தவர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவரது மனைவியார் மதங்க சூளாமணியாரும் ஆவர். ஏனெனில் திருஞானசம்பந்தர் பதிகங்களை அருளிய காலத்திலேயே உடனிருந்து யாழிசைத்து பாடியவர்கள் இவ்விருவர். அதனை பெரியபுராணம், 

"திருநீல கண்டத்துப் பெரும்பாணர் தெள்ளமுதின் 

வருநீர்மை இசைப்பாட்டு மதங்கசூளாமணியார் 

ஒருநீர்மை யுறுடைய பிள்ளையார் கழல்வணங்கத் 

தருநீர்மை யாழ்கொண்டு சண்பையிலே வந்தணைந்தார்”

"தானநிலைக் கோல்வடித்துப் படிமுறையைத் தகுதியினால்

ஆனஇசை ஆராய்வுற் றங்கணர்தம் பாணியினை 

மானமுறை பாடினியாருடன் பாடி வாசிக்க 

ஞானபோனகர் மகிழ்ந்தார் நான்மறையோ ரதிசயித்தார்’’ என்று கூறுகிறது.

இரண்டாம் இராஜராஜ சோழன் தாராசுரம் கோவிலில் திருத்தொண்டத்தொகை கூறும் அடியவர்களின் வரிசைப்படி அவர்களின் வாழ்வைச் சித்திரிக்கும் சிற்றுருவச் சிற்பத் தொகுதிகளை இடம்பெறச் செய்துள்ளான். அவற்றில் ஒரு சிற்பத் தொகுதியில் மதங்கசூளாமணியார் கையில் தாளம் கொண்டு இசைத்த வண்ணம் மிடற்றிசையால் பாடுவதும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் சகோடயாழினை வாசிப்பதுமாகிய காட்சி இடம் பெற்றுள்ளது. இச்சிற்பக்காட்சியே நூலுக்கு அட்டை படமாக இருப்பதுதான் எவ்வளவு பொருத்தம்.

இந்நூலில் கி.பி 9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டு சாசனங்களையும் மன்னர்கள் தேவாரம் பாடுவதற்கு அளித்த கொடைகளையும் விரிவாக கூறுகிறார். திருப்பதிகம் விண்ணப்பிப்பது பற்றி பேசும் சோழர்கால முதற்கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் கி.பி.892 இல் பொறிக்கப் பெற்ற திருப்பழனக் கல்வெட்டாகும். இதில் ஆதித்தசோழனின் விருப்பப்படி கண்ணிழந்த அடிகள்மார் பன்னிருவருக்கும், அவர்களுக்குக் கண்காட்டுவார் இருவருக்கும், நந்தவனக்குடிகள் இருவருக்கும் காணியாக நிலம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பெற்றுள்ளது. 

கி.பி 892ஆம் ஆண்டு முதல் கி.பி 992 வரை சோழநாட்டு சாசனங்களில் தேவாரம் பாடுபவர்களை அடிகள்மார் என்று குறிப்பிட்டுள்ளனர். ராஜராஜசோழன் கல்வெட்டு (கி.பி 915 - 1014) மூலம் அவன் அளித்த நிவந்தமும் தேவாரம் பாடுபவர்களை பிடாரர்கள் என்று குறிப்பிட்டதையும் அறியலாம். இராஜராஜசோழன் காலத்தில் தஞ்சைக் கோயிலில் நாளும் தேவாரம்பாட நியமனம் பெற்ற பிடாரர்களின் எண்ணிக்கை நாற்பத்தெட்டு. அவர்கள் பாடும்போது உடன் கொட்டிமத்தளம் வாசிக்கவும், உடுக்கை வாசிக்கவும் இருவர் நியமனம் பெற்றனர். இவர்களது ஒருநாள் ஊதியம் முக்குறுணி நெல்லாகும். இவர்கள் பணிபுரியும்போது இறந்தாலோ அல்லது வேறு நாட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டாலோ அவர்கள் வழிச் சார்ந்தார்கள் அப்பணியை புரியலாம். அடுத்து வருபவருக்குப் போதிய தகுதி இல்லை என்றால் தகுதி உடைய ஒருவரை அவர்களே நியமிக்கலாம் என்பன போன்ற உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இவர்களில் பெரும்பாலானோருக்கு தேவார மூவர்களாகிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், திருஆரூரர் ஆகியவர்களின் பெயர்கள் இருப்பதும், மணிவாசகரின் பெயர் யாருக்கும் இல்லை என்பதும், இவர்கள் அனைவரும் சிவதீட்சை பெற்றவர்கள் எனபதையும் கூறுகிறார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஓதுவார்களாக இருந்துள்ளனர் என்று திருவொற்றியூர் கி.பி1063 கல்வெட்டு கூறுகிறது. இக்கோயிலில் இறைவன் முன்பு 16 தேவரடியார் பெண்கள் பதிகம் பாடி நின்றனர் என்றும் அவர்கள் திருப்பதிகங்களை அகமார்க்கத்தில் பாடி ஆடினர் என்பதும் தெரிய வருகிறது. அகமார்க்கம் என்பதனை குறைந்த ஒலியுடன் பெருமான்மீது காதல் வயப்பட்டு உள்ளம் உருகப் பாடுதலாம்.

தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலின் வடபுறத் திருச்சுற்று மாளிகையின் சுவரில் 108 அடியவர்கள் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இக்கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்தவர்களாவர். மேலும் ஊர், பெயர், தீட்சை நாமமும் பொறிக்கப்படுள்ளது. இங்கு காணப்பெறும் சிற்பங்களைச் சில ஆசிரியர்கள் தவறாகச் சிவாச்சாரியர்கள் என்பர். ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மழித்தலையிலும் மார்பிலும், கைகளிலும் உருத்திராக்க மாலைகள் திகழ முழங்கால் வேட்டி அதன் மேல் கட்டியுள்ள துண்டு ஆகியவற்றுடன் இறைவனை வணங்கும் கோலத்தில் உள்ளனர். இவர்களது மார்பில் முப்புரிநூல் இல்லை என்பதால் பிராமணர் அல்லாத தேவாரம் பாடிய ஓதுவார்களை சிறப்பிக்கவே இச்சிற்பங்கள் என்று குடவாயில் குறிப்பிடுகிறார்.

கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருமுட்டம் ஸ்ரீநித்தீஸ்வரர் திருக்கோயில் கோபுர வாயிலில் ஒருவரது உருவச்சிலை காணப்பெறுகின்றது. அச்சிலைக்கு மேலாக, ”இத்திருக்கோயிலில் திருப்பதியம் விண்ணப்பம் செய்து விடை கொண்ட மானக் கஞ்சறார் என்ற கல்வெட்டுப் பொறிப்பும் உள்ளது. இதனை நோக்க ஓதுவார்களின் சிறப்பையும் புகழையும் அறிய முடிகிறது.

முன்னர் தேவாரம் பாடுகின்றவர்களை அடிகள்மார் மற்றும் பிடாரர்கள் என்றும் குறிப்பிட்டதுபோல், 13ம் நூற்றாண்டை சார்ந்த நெல்லையப்பர் கோவில் கல்வெட்டு தவசிகள் என்றும், சோழபுரம் கல்வெட்டு ஆண்டார்கள், என்றும், திருவீழிமிழலை கல்வெட்டு “திருப்பாட்டோதும் திருமேனி" என்றும் குறிக்கிறது. பாடுதலை ’பண் எடுத்தல்’ என கூறும் மரபு இருந்ததை கி.பி 14 நூற்றாண்டு திருநள்ளாறு கல்வெட்டு குறிக்கிறது. கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த திருமலை நாயக்கர் கல்வெட்டில் தான் ஓதுவார் என்று கூறும் மரபு தொடங்குகிறது. 

ஓதுவார்கள் திருமுறை விண்ணப்பம் செய்வதற்கு தனிமண்டபங்கள் கட்டுவது 13ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது எனலாம். அம்மண்டபங்கள் திருகைக்கொட்டி எனப்பட்டன. இதனை திருவுச்சாத்தானம், திருப்பாலைவனம், பேரூர், சீயமங்கலம் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அதில் திருவீழிமிழலை கல்வெட்டு கூறும் திருகைக்கொட்டி மண்டபம் தற்போது விளங்கும் வௌவால் நெத்தி மண்டபம் என்கிறார் நூலாசிரியர்.

ஓதுவார்கள் பாடும்பொழுது உடுக்கை, கொட்டி மத்தளம், இடக்கை, வீணை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் யாழும் பொற்றாளமும் தான் தேவார மரபில் முதல் இசைக்கருவிகளாக விளங்கியவை. 

தற்போது மிருதங்கம், குழல், வயலின் போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. தாளம் மட்டும் என்றுமே மாறாத இசைக் கருவியாக உள்ளது.

பதினான்காம் நூற்றாண்டின் சோதனை காலகட்டத்தில் தொய்ந்து போன கோயில் கலைகளில் தேவாரம் விண்ணப்பித்தலும் ஒன்றாகும். பின் வந்த விஜயநகரப் பேரரசர்களும் மற்ற சைவத்திருமடங்ளும் அதற்கு எழுச்சியூட்டின. மதுரையில் திகழ்ந்த பழம்பெரும் மடமான திருஞானசம்பந்தர் மடம், திருவாவடுதுறை மடம், தருமபுரம் மடம், சூரியனார் கோயில் மடம், திருப்பனந்தாள் காசி மடம் போன்ற மடங்களும், அவற்றின் தலைவர்களாகத் திகழ்ந்த சன்னிதானங்களும், குருமார்களும், பிறரும் வீழ்ந்து கிடந்த தேவார மரபை மீண்டும் நிலைபெறச் செய்தனர். தேசிகர்கள் குலக் கல்வியாக தங்கள் மரபினர்களுக்கு கற்பித்துத் திருக்கோயில்களில் முறையாகத் திருப்பதிக விண்ணப்பம் செய்து வந்தனர். ஏறத்தாழ பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இம்மறுமலர்ச்சியின் தாக்கம் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை 1950 வரை தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேவாரம் விண்ணப்பம் செய்யும் மரபில் ஒரு தொய்வு நிலை ஏற்படத் தொடங்கியது. இன்றும் தேவார பாடல் பெற்ற பல தலங்களில் ஓதுவார்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது.

[4]

இப்பகுதியில் தேவார மூவர் வழிபாடு, அவர்களின் பெயரில் இருந்த மடங்கள்,கொண்டாடப்படும் திருவிழாக்கள், கலை படிமங்கள் பற்றி நூலில் விவரிக்கப்பட்டுள்ளதை சுருக்கமாக காணலாம்.

தேவார மூவர்களை அவர்களின் குருபூஜை தினங்களை வழிபாடு செய்யும் வழக்கம் இன்றளவும் உள்ளது. அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அவர்களை குருவாக நினைந்து வணங்கியும் பின்னர் சிவாலயங்கள் தோறும் அவர்களுக்குக் கோயில் எடுத்து வழிபடும் மரபும் தோற்றம் பெற்றது. தேவார மூவர் வழிபாட்டு மரபுக்கு வித்திட்டவர் அறுபத்து மூவரில் ஓருவரான கணநாத நாயனார்தான் என்று கூறலாம். தன்னை நாடி வருபவர்களுக்கு திருமுறை எழுதுதல் வாசித்தல் ஆகியவற்றை பயிற்றுவித்து திருஞானசம்பந்தரின் திருவடிகளை நாள்தோறும் பூஜித்தவர். இதே போல் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை வணங்கியவர்.

வரலாற்றில் பல்லவர் கால கோயில்களில் கல்லிலோ செம்பிலோ வடிக்கப் பெற்ற மூவர் முதலியர் உருவங்களோ அல்லது அவை பற்றிய கல்வெட்டுக்களோ இதுவரை கிடைக்கவில்லை என்றும் சோழப் பேரரசன் பராந்தக சோழன் காலம் முதல்தான் இவ்வழிபாட்டு நெறி சிறப்பிடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

பராந்தக சோழனின் (கி.பி. 945) திருவிடைமருதூர் கல்வெட்டுச் சாசனத்தில் திருநாவுக்கரசு தேவர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் செப்புப் பிரதிமங்கள் பற்றிய குறிப்பு காணப்பெறுகிறது. இதனை அடுத்து தஞ்சாவூர்ப் பெரிய கோயிலில் காணப்பெறும் முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டில் மூவர் முதலியர், பரவை நங்கையார் பெரிய பெருமாள் எனப்படும் இராஜராஜ சோழன், அவனது பட்டத்தரசி லோகமாதேவி ஆகியோர் செப்புப் பிரதிமங்கள் பற்றி கூறப்பெற்றுள்ளது.

தேவார மூவர் முக்தி அடைந்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு, ஞானசம்பந்தர் முதலில் ஜோதியில் கலந்தமையால் அவர் பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், நாவுக்கரசர் புகலூரில் இறைவனை அடைந்த காலம் ஞானசம்பந்தர் சோதியில் கலந்த காலத்துக்குச் சில ஆண்டுகள் பிற்பட்டதாதலின் அவர் அருளிய பாடல்கள் அடுத்த மூன்று திருமுறைகளாகவும், இவ்விருவருக்கும் பிற்பட்டு அவதரித்துக் கயிலை சேர்ந்த சுந்தரர் பாடல்கள் ஏழாம் திருமுறையாகவும் வைக்கப்பட்டன என்று பண்டித கோபாலய்யர் 'தேவாரம் ஆய்வுத் துணை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கல்வெட்டுகளில் இவ்வரிசை முறை பின்பற்றப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவிலில் காணப்பெறும் இரண்டாம் குலோத்துங்கனின் (கி.பி.1140) கல்வெட்டு மூவர் வழிபாடு பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு நாளும் சந்திப்பொழுதுகளில் செய்ய வேண்டிய அமுது படிகள், திருவீதி உலாப் போகும் நாளில் செய்யவேண்டிய அமுதுபடிகள், அவைகளுக்கு வேண்டும் பொருள்கள், பணிசெய்யும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதியம் ஆகிய அனைத்தும் பட்டியலிட்டுக் கூறப்பெற்றுள்ளது. சுந்தரர் பரவை நாச்சியார் திருமுன்பு வைக்க திருநுந்தா விளக்கு இரண்டு, சந்தி விளக்கு 23 அவை எரிக்கத் தேவையான எண்ணெய் ஆகியவையும் குறிக்கப் பெற்றுள்ளன. இதனை அடுத்து அக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆளுடைய பிள்ளையாருக்கும், திருநாவுக்கரசு தேவருக்கும் இம்மன்னனே செய்வித்த வழிபாடு மற்றும் விழாக்கள் பற்றிய செய்திகள் தனித்தனியே விவரிக்கப் பெற்றுள்ளன.

ஆரூர்க் கல்வெட்டில் அமுதுபடிகளைப் பொறுத்தவரை மூவருக்கும் எந்த வேறுபாடுமில்லை என்றாலும் திருவீதி எழுந்தருளுவதைப் பொறுத்தவரை சுந்தரர் பரவை நங்கையார் படிமங்கள் ஓராண்டுக்கு 56 முறையும், திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் படிமங்கள் மூன்று முறை மட்டுமே எழுந்தருளச் செய்யப் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறாக மூவர் வழிபாட்டில் திருவீதி உலா எத்தனை முறை எழுந்தருளப்பட்டது என்பது வரை நமக்கு சான்றுகள் கிடைக்கின்றன். சோழர்கள் காலத்தில் மூவர் வழிபாடு ஓங்கியிருந்ததை அறிய முடிகிறது.

வழிபாட்டில் இருந்த மூவர் திருமேனியை மீட்பதற்காக மேற்கொண்ட போர் பற்றி செய்தியும் இந்நூலில் கிடைக்கிறது. மாறவர்ம பராக்கிரம பாண்டியனின் கி.பி 1338 கல்வெட்டு கூறும் செய்தி, விக்கிரமசோழ தேவரின் நான்காம் ஆட்சியாண்டில் போசளர் (கர்நாடகம்) நாட்டை ஆட்சி செய்த முதலாம் விஷ்ணுவர்த்தன் சோழநாட்டில் நுழைந்து போர் தொடுத்தான். அப்போர் பெரியவடுகன் கலகம் என்ப்பட்டது. அப்போரின் போது போசளர் ஆடுதுறை சிவாலயத்திலிருந்து இறைவன் திருமேனிகளையும், மூவர் திருமேனிகளேயும் கவர்ந்து சென்று போசளர் தலைநகரமான துவார சமுத்திரத்தில் (ஹளிபேடு) வைத்திருந்தனர். அப்போது ஆடுதுறைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி இன மக்கள் அங்கிருந்து துவாரசமுத்திரம் சென்று கவரப்பெற்ற தெய்வத் திருமேனிகளையும் நாயன்மார் பிரதிமங்களையும் மீட்டு வந்து புனர் நிர்மாணம் செய்தனர். நித்ய வழிபாடுகள் செய்ய ஆண்டொன்றுக்கு 100 கலம் அரிசியும் 5000 காசும் கொடையளித்தனர். 

திருவாஞ்சியம் கல்வெட்டு (கிபி 1203) மூவருடன், சேக்கிழாருக்கும் மூவருக்கும் குலோத்துங்கனுக்கும் பிரதிமங்கள் இருப்பதை குறிக்கின்றது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் அகஸ்திய கொண்டா மலை மேலுள்ள அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் காணப்பெறும் வீரராஜேந்திர சோழரின் (கி.பி.1077) கல்வெட்டு நுளம்ப அரசன் உத்தமசோழ கங்கன் என்பவனின் தேவி திருநாவுக்கரசு தேவரின் பிரதிமத்தை அத்திருக்கோயிலில் எடுத்து பிரதிட்டை செய்து வழிப்பட்டதை கூறுகிறது. இதுபோல் வெவ்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்ற மூவர் வழிபாடு சார்ந்த செய்திகள் அனைத்தும் விரிவாக கூறியுள்ளார்.

மூவர் வழிபாடு எப்பொழுது நால்வர் வழிபாடாக மாறியது என்பது மிக சுவாரசியமானது. பதின்மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த திருப்பரங்குன்றத்து குடைவரையை விரிவு செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூவர் திருவருவங்களை குடைவுச் சிற்பமாக ஒரு மாடத்திலும் மணிவாசகரை தனி பாடத்திலும் வைத்திருப்பதை நோக்க பிற்கால பாண்டியர் காலத்திலும் நால்வராக சேர்த்து வழிபாடு செய்யும் வழக்கமில்லை என்பதை கூறுகிறார்.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக திருவண்ணாமலை சாசனங்கள் கூறும் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய அருணைக் கலம்பகம் எனும் நூலில்,

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வம் இல் எனும் நான்மறைச் செம்பொருள் வாய்மை வைத்த சீர்த் திருத்தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச்செய்த நால்வர் பொன்தாள் எம்உயிர்த் துணையே”

எனத் தொடங்கும் இப்பாடலில் தான் மூவர் தேவாரத்தோடு மாணிக்க வாசகரின் திருவாசகம் இணைத்துக் கூறப்படுகிறது. நால்வர் என்ற பிற்கால மரபு இங்கிருந்துதான் தோன்றுகிறது என்கிறார்.

நால்வர் நான்மணி மாலையின் ஆசிரியரான துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் 40 பாடல்களில் நால்வர் பெருமையைத் தனித்தனியாகப் பாடியுள்ளார். இவர் 17-18ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்.

திருவண்ணா மலையில் காணப்பெறும் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் ( கிபி 1443) நால்வர் என சம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், சண்டேஸ்வரர் ஆகியோர் குறிப்பிடப்பெறுவதும், அதே திருவண்ணாமலையில் 16ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற அருணைக் கலம்பகத்தில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் இணைத்து, அதன் ஆசிரியர்களை நால்வர் எனக் குறிப்பிடும் மரபின் தொடக்கத்தையும் காண முடிகின்றது.

தேவார மூவர் பெயரில் மடங்கள் இருந்ததற்கான செய்திகளையும், கோவிலோடு இயைந்த மடங்கள் பற்றிய செய்திகளையும் பெரிய புராணமும் கல்வெட்டு சாசனங்களும் கூறுகின்றன.

பெரிய புராணத்தில் அமர்நீதி நாயனார் அமைத்த திருநல்லூர் மடம், திருவதிகையில் திலகவதியார் இருந்த மடம், திருஞானசம்பந்தர் இருந்த சீர்காழி மடம், திருப்புகலூரில் முருகநாயனார் திருமடம், திருப்பூந்துருத்தியில் அப்பர் அடிகளே தோற்றுவித்த மடத்தை "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம் ஆங்கொன்று செய்தார்" என்கிறார் சேக்கிழார். இன்றும் இம்மடத்தை காணமுடியும்.

திருஞானசம்பந்தருடன் திருக்கடவூர் வந்தணைந்த நாவுக்கரசர் "பொங்கிய வெங்கூற்றடர்த்த பொன்னடிகள் தொழுதேத்திக் குங்கிலியக் கலயனார் திருமடத்தில் குறைவறுப்ப அங்கவர்பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள் என்று திருக்கடவூர் மடம் பற்றி கூறுகின்றார். திருவீழிமிழலையிலே திருஞான சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் தனித்தனியே மடங்கள் இருந்ததை பின்வரும் பாடலால் குறிப்பிடுகிறார்.

ஆறு சடைமேல் அணிந்தருளும் அண்ணல் வைத்த படிக்காசால்

ஈறிலாத பொருளுடைய இருவருடைய திருமடங்கள் 

சோறுநாளுந் தொண்டர் மகிழ்ந்துண்ண உணத் தொலையாதே 

ஏறு பெருமை புவிபோற்ற இன்புற்றிருக்கும் அந்நாளில்” 

நல்லூர் பெருமணம், அவிநாசி, சதுர்வேதி மங்கலம், திருக்குறுக்கை, கோட்டூர், நொடியூர், திருநெல்லிக்கா, திருவானைக்கா, முன்னியூர், தீருவீழிமிழலை, திருவொற்றியூர், திருச்சத்தி முற்றம், கல்லிடைக்குறிச்சி, பழையாறை போன்ற இடங்களில் திருஞானசம்பந்தர் பெயரில் மடமும், திருவதிகை, குறுக்கை வீரட்டம், திருவீழிமிழலை, பிரான்மலையில் திருநாவுக்கரசர் பெயரில் மடமும். கோவிந்தபுத்தூர், திருவிடைவாய், காளையார் கோவிலில் சுந்தரர் பெயரில் மடங்கள் இருந்ததற்கான கல்வெட்டு சாசனங்கள் கிடைக்கின்றன.

பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாதிப்பினால் திருமடங்கள் செல்வாக்கிழந்து அழிந்தன. குமாரகம்பணன் எனும் விஜயநகர அரசனின் தென்னகப்படை எடுப்பிற்குப் பிறகு தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கோயில்களும், திருமடங்களும் மீண்டும் பொலிவு பெற்றன. சோழநாட்டில் தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் காசிமடம் போன்ற மடங்களும், மதுரையில் திருஞானசம்பந்தர் மடமும், கொங்குநாட்டில் பேரூர் மடம், திருவண்ணாமலை மடம் போன்ற பல மடங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சிக்கு இன்றளவும் தொண்டாற்றி வருகின்றன.

சிவாலயங்களில் ஆண்டுதோறும் நிகழும் பெருவிழாக்களில் பக்தர் உற்சவம் நிகழும். இவ்விழாவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் திருமேனிகளை அலங்கரித்து திருவீதியில் உலாவாக எழுந்தருளச் செய்வரார்கள். இவ்விழா தவிர 63 அடியார்களின் திருநட்சத்திர நாட்களை முக்கிய நாளாக கொண்டாடப்படும் மரபும் உள்ளது.

பக்தர் உற்சவம் தவிர தேவார மூவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை எடுத்துக்காட்டும் விழாக்கள் காலப்போக்கில் குறைந்துவிட்டாலும் இன்றும் அம்மரபினைப் போற்றும் வகையில் திருமயிலையில் அறுபத்து மூவர் விழா, மறைக்காட்டில் மூவர் விழா, திருக்கதவம் திறக்க அடைக்கப்படும் விழா, சீர்காழியில் திருமுலைப்பால் திருநாள், திருக்கோலாக்காவில் பொற்றாள விழா,திருமருகலில் செட்டிப்பெண் கலியாண விழா, அப்பருக்கு கயிலை காட்சி விழா, திருப்பாதிரிப்புலியூர் விழா, திருப்புகலூர் சதய விழா, சுந்தரருக்கு திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட்கொண்ட விழா, திருக்கச்சூரில் அமுதிடும் விழா, திருக்குவளை நெல் மகோற்சவம் போன்றவை நிகழ்கின்றன.

மணிவாசகர்

தேவார மூவரையும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், செப்புத் திருமேனிகளாகவும் வெவ்வேறு கோவில்களில் தமிழகமெங்கும் வடித்துள்ளனர். கி.பி.10ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றளவும் இம்மரபு தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. தாராசுரம் கோவில், மேலக்கடம்பூர் சிவாலயம், திருப்பனந்தாள் தாடகேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் சுந்தரர் திருவாரூரில் பாடிய திருத்தொண்டத்தொகை அடியார்களின் வரலாறு தொடர் சிற்பக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. தஞ்சைப் பெரிய கோயில், திருப்புடைமருதூர்க் கோபுரம், திருமறைக்காட்டுத் திருக்கோயில் போன்ற ஆலயங்களில் உள்ள ஓவியங்களில் மூவர் வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை ஒருவர் கையில் வைத்திருப்பதே பேரனுபவத்தை தரகூடியது. மூவர் சார்ந்த கலைபடிமங்களை பார்ப்பதற்கும் விழாக்களுக்கு செல்வதற்கும் நம்மை தூண்டக்கூடியது. அதற்கு கையேடாகவும் இந்நூல் விளங்கும். 

தேவாரங்கள் தோன்றுவதற்கு ஆதாரமான மூவர் முதலிகளின் வாழ்க்கை வரலாறு பெரியபுராணத்தின் அடிப்படையில் நூலின் முதல் அத்தியாத்திலேயே தரப்பட்டுள்ளது. அறிந்த வாழ்க்கை வரலாறு தானே என நாம் எண்ணக் கூடும் ஆனால் குடவாயில் பெரும்ஆய்வாளர் அல்லவா! அதன் தனித்துவம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் உதாரணமாக, சுந்தரர் சிவபெருமானை ’’மடங்கலானைச் செற்றுகந்தீர்’’ என்று ஏழாம் திருமுறையில் திருவெண்காடு பதிகத்தில் (7.6) கூறியுள்ளார். மடங்கலான் என்பது நரசிங்கத்தை செற்ற சிவபெருமானின் அம்சமாக வந்த சரபமூர்த்தியை குறிப்பது மூவர் பாடல்களில் இந்த ஒரு பாடலில் மட்டுமே வருகிறது என்றும், அதே போல் 7.65 பாடலில் ஆல்அமர் பெருமானை கூறும் பொழுது,

காது பொத்தர் ஐக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பரும் சீயம் கோது இல் மாதவர் குழுஉடன் கேட்பக் கோல ஆல்நிழல் கீழ் அறம்பகர..”

காதுகளை எப்போதும் ஆடையால் மூடிய வண்ணம் பெருமானோடு இருக்கும் காதுபொத்தர் இருவர் பற்றி சுந்தரர் மட்டுமே கூறியுள்ளார் என்றும்,

திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய திருவண்ணாமலை பதிகங்கள் தற்போது உள்ள பெரிய கோவிலில் பாடப்பட்டவையல்ல (அவர்கள் பாடிய நூற்றாண்டில் அக்கோவில் கட்டப்படவில்லை) திருமலையையே அண்ணாமலையாராக பாவித்து பாடப்பட்டவை என்கிறார். இது போன்ற பல நுண் தகவல்கள் உள்ளன. வேறெங்கும் கிடைக்காதாவை நம் விழிப்பாவையை விரியச் செய்பவை.

வரலாற்றெழுத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்ளாமல், வெறும் தரவுகளை மட்டும் வெவ்வேறு நூல்களில் இருந்து எடுத்துக்கொண்டு, சமகாலத்தில் எது ஏற்க்கப்படுமோ அதை மட்டும் கருத்தில் கொண்டு எழுதப்படும் நூல்களுக்கு மத்தியில் 25 ஆண்டு கால உழைப்பைக் கோரி படைக்கப்பட்ட இந்நூல் ஒரு அருமணி. கனியை ருசிப்பவர்கள் வேரை பற்றி எண்ணுவதில்லை. ஆனால் வேரையும் எண்ணி சிலாகிப்பவர்களும் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கானது இந்நூல்.

செ.பவித்ரா
Dr.செ.பவித்ரா. கால்நடை மருத்துவர். சித்தாந்தம் இணைய இதழின் ஆசிரியர்களுள் ஒருவர். ஈரோடில் வசிக்கிறார். சைவ திருமுறைகள் மற்றும் சித்தாந்தத்தை பயில்பவர். இலக்கியம் மற்றும் இந்திய தத்துவத்தில் ஆர்வம் கொண்டவர்.