வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்று ஆசிரியர்களால் இந்தியாவைப் பற்றிய முதற்கட்ட வரலாற்று வரைவு உருவாக்கப்பட்டது. வரலாற்றை வாசிக்கப் புகும் எந்தவொரு வாசகருக்கும் இந்த வரைவு உற்சாகம் தரக்கூடியது. ஏனெனில் நாம் நேரடியாக சான்றுகள் அடிப்படையில் 'உருவாக்கப்படும்' வரலாறுகளை வாசிப்பதில்லை. சான்றுகள் அடிப்படையில் எழுதப்படும் வரலாறு எப்போதும் தன்னை பொய்ப்பித்துக் கொள்ளும் நிலையிலேயே உள்ளது. புதிதாக ஒரு சான்று கிடைக்கும்போது அதுவரை சொல்லப்பட்ட வரலாற்றில் அச்சான்றினை பொருத்த வேண்டி இருக்கிறது. ஆகவே ஒரு நல்ல வரலாற்று நூல் எப்போதும் தன்னை எல்லாப் பக்கங்களிலும் திறந்தே வைத்திருக்கிறது. முற்று முடிவாக எதையும் சொல்லிவிடுவதில்லை. ஆனால் அத்தகைய வரலாறுகளை வாசிப்பதில் வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. ஏனெனில் சந்தேகத்துடனும் 'மாற்றத்துக்கு உட்பட்டது' என்ற உபதலைப்புடனும் சொல்லப்படும் வரலாற்றில் இருந்து கதைகளை உருவாக்க முடிவதில்லை.
நம்முடைய கடந்தகாலத்தை நாம் பெரும்பாலும் கதைகளாகவே நினைவில் வைத்திருக்கிறோம். 'ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார்' அல்லது 'முன்னொரு காலத்தில்' என்றுதான் நம்முடைய கதைகள் தொடங்குகின்றன. கதையில் நாயகர்கள் வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். உணர்ச்சிகரமான தருணங்கள் வேண்டியிருக்கிறது. காதல், துரோகம், வீரம் என்று எத்தனையோ உணர்ச்சிகளை கதைகளில் எதிர்பார்க்கிறோம். இதே மனநிலையுடன்தான் நாம் வரலாற்றையும் அணுகுகிறோம். நம்மைப் பொறுத்தவரை கதை மற்றும் வரலாறு இரண்டுமே கடந்த காலத்தில் இருக்கின்றன. ஆகவே யாரோ ஒருவன் 'நல்லது' செய்திருப்பான், இன்னொருவன் 'கெட்டது' செய்திருப்பான் என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடுகிறோம். இந்த மனநிலையை ஏற்றுப்பாடுவதாகவே இரண்டாம்தர வரலாற்று நூல்களும் புனைவுகளும் அமைகின்றன. கல்கி, சாண்டில்யன் போன்றோர் எல்லாம் இந்த மனநிலையைப் பயன்படுத்தியே புகழடைந்தனர்.
ஆனால் உண்மையில் வரலாறு என்பது என்ன? வரலாறு ஒரு அறிவியல். ஆனால் மற்ற எல்லாத் துறைகளையும்விட மிக அதிகமாக சமகாலத்துடனும் அரசியலுடனும் வரலாறு பிணைக்கப்பட்டுள்ளது. வணிக எழுத்துகள், திரைத்தொடர்கள், சினிமாக்கள் போன்றவை வரலாற்றினை ஒரு வகையில் எளிமைப்படுத்துகின்றன என்றால் அரசியல் வேறொரு வகையில் வரலாற்றைக் குறுக்குகிறது. வரலாற்றுத் தரவுகளை தங்களுடைய வசதிக்கேற்றபடி வளைத்து ஒரு வகையான மொழிபை அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளுக்காக இயங்கும் கூலி அறிவுஜீவிகளும் முன்வைக்கின்றனர்.
மூன்றாவதாக 'உண்மையான வரலாறு' என்ற சொல்லே எள்ளி நகையாடப்படுகிறது. வரலாறுகள் அனைத்தும் மொழிபுகள் மட்டுமே என்றொரு தரப்பு சொல்கிறது.
இம்மூன்று தரப்புகளில் எதிலாவது ஒன்றில் சிக்கிக் கொள்கிறவர்களால் வரலாற்றின் 'மையம்' எதுவோ அதை நெருங்க முடிவதில்லை.
வரலாற்றின் மையம் என்பது என்ன? நிறுவத்தக்க தரவுகளைக் கொண்டு சொல்லப்படும் குறைந்தபட்ச வரலாறுதான் மைய வரலாறு. வரலாறு குறித்த அத்தனை மொழிபுகளும் இந்த மைய வரலாற்றினை ஏற்றோ மறுத்தோதான் உருவாக முடியும். நம் சூழலின் மாபெரும் கேடு என்பது குறைந்தபட்ச வாசகர்களுக்கு கூட மைய வரலாற்றின் மீது ஆர்வமோ அதைப் புரிந்து கொள்ளும் பொறுமையோ உள்வாங்கும் அறிவோ இல்லாததுதான்.
வேறொரு அறிவுச்சூழலில் எழுதி இருந்தால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கக்கூடிய குடவாயில் பாலசுப்ரமணியன் தமிழ்ச்சூழலில் பெரிய அளவில் வாசிக்கப்படாததற்கு நம் சூழலின் அறிவின்மை தவிர வேறொரு காரணம் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுடைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை அவருடைய சில நூல்களை முன்வைத்து விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
தேவார மாண்பும் ஓதுவார் மரபும், தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, தஞ்சாவூர் என்ற மூன்று நூல்களையும் மையமாகக் கொண்டு குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுகளைப் பற்றிய ஒரு புரிதலை உருவாக்குவதும் இக்கட்டுரையின் நோக்கம்.
இம்மூன்று நூல்களும் ஏதோவொரு குறிப்பிட்ட காலத்தில் எழுதி வெளியிடப்பட்டவை அல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேலும் மேலும் விரிவாக்கப்பட்ட பிறகு செம்பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இம்மூன்று நூல்களின் தன்மையும் வெவ்வேறானவை.
தஞ்சாவூர்
‘தஞ்சாவூர்’ குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்களில் புகழ்பெற்ற ஒன்று. வரலாற்றில் முதன்முறையாக தஞ்சாவூர் என்ற பெயர் தென்படத் தொடங்கும் ஏழாம் நூற்றாண்டிலிருந்து தஞ்சாவூர் பிரிட்டிஷார் வசமாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தஞ்சையின் வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. அப்பர் தேவாரத்தில் முதல்முறையாக தஞ்சை என்ற பெயர் இடம்பெறுகிறது. அதன்பிறகு திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் உள்ள பல்லவர் காலக் கோவிலில் தஞ்சை என்ற பெயர் இடம்பெறுகிறது. முத்தரையர்களின் தலைநகரமாக விளங்கும் தஞ்சையை அவர்களிடமிருந்து பிற்காலச் சோழ அரசனான விஜயாலய சோழன் கைப்பற்றுகிறார். அவர் தொடங்கி இராஜேந்திர சோழன் காலம்வரை - இராஜேந்திர சோழன் சோழப்பேரரசின் தலைநகரத்தை தஞ்சையில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றும்வரை - ஒன்றரை நூற்றாண்டாக தஞ்சை சோழப்பேரரசின் தலைநகராக விளங்குகிறது. அதன்பிறகு மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலம்வரை தஞ்சை சோழப்பேரரசின் இரண்டாம்நிலை நகரமாகவேத் திகழ்கிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் படையெடுப்பால் தஞ்சை பேரழிவைச் சந்திக்கிறது. நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கர் காலம்வரை (கி.பி 1545) தஞ்சை வரலாற்றில் முக்கியத்துவம் இழந்து போயிருக்கிறது. சோழர்கால அரண்மனை உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அழிக்கப்பட்டன. இன்று காணும் தஞ்சையை மறு உருவாக்கம் செய்தது செவ்வப்ப நாயக்கரே. தஞ்சை அரண்மனை, அகழி, பெரிய கோவில் நந்தி உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் போன்றவை நாயக்கர் காலத்திலேயே நிகழ்ந்துள்ளன. தஞ்சை மீண்டும் உயிர்ப்பு மிக்க நகரமாக நாயக்கர் ஆட்சியின் போதும் அதைத் தொடர்ந்த மராட்டியர் ஆட்சியிலும் நீடித்திருக்கிறது. அந்த நகரமே அருட்தந்தை ஸ்வார்ட்ஸ் போன்றவர்களின் தலையீட்டால் மெல்ல மெல்ல பிரிட்டிஷ்காரர்கள் வசமாகிறது.
இந்த வரலாற்றினை சொல்வதற்கு குடவாயில் பாலசுப்ரமணியன் ஏராளமான கல்வெட்டுத் தரவுகளையும் இலக்கியச் சான்றுகளையும் முன்வைக்கிறார். கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கப்பெறும் முதன்மையான இடங்கள் கோவில்களே. சோழர்கள் வழிபட்ட தெய்வமான நிசும்பசூதனி, சோழர் காலத்தில் தழைத்திருந்த லகுலீச பாசுபத சைவ மரபு தொடங்கி மராட்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட கோவில்கள் அதன்பிறகு பிரிட்டிஷ் பாதிரியார்களால் எழுப்பப்பட்ட தேவாலயங்கள் வரை கடந்தகாலத்தின் எச்சங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் ஆய்வு செய்கிறார்.
சோழர்களின் குலதெய்வமாக விளங்கிய நிசும்பசூதனியின் சிற்பத்தை குடவாயில் பாலசுப்ரமணியன் கண்டறியும் தருணம் அபாரமானது. தஞ்சை பூமால் ராவுத்தன் தெருவில் உள்ள ஒரு காளி சிற்பம்தான் நிசும்பசூதனி என்று நிறுவுகிறார். நிதானமான மொழியில் ஆதாரங்களை அடுக்கபடியே ஒவ்வொன்றாக நிறுவிச் செல்லும் குடவாயில் பாலசுப்ரமணியனின் மொழி இத்தகைய தருணங்களை விவரிக்கும் போது விரைவு கொண்டு விடுகிறது. ‘’ஆறு அடி உயரத்திற்கும் மேலுள்ள இவ்வரும் சிலையில் தேவி அமர்ந்து காணப்படுகிறாள். பல கரங்கள். அக்கரங்களில் பல படைக்கலன்கள். தலையில் தீச்சுடர்போல் மேல் எழுகிறது முகத்தில் ஓர் உறுதி. அசுரப்பூச்சிகளை அழிக்க வேண்டும் என்னும் சீற்றம். வலது காதில் பிரேத குண்டலம். இடக்காதில் பெரியகுழை. சதை வற்றிய உடல். அவள் உடலில் சதையேயில்லை. வெறும் எலும்புதான். ஆயினும் திண்மையான நீண்டு தொங்கும் மார்பகங்கள். அவற்றைச் சுற்றிலும் பாம்பு கச்சாக சுழல்கிறது. மண்டை ஓடுகள் பூணூலாக அவள் உடலில் திகழ்கின்றன. எட்டுக்கரங்கள். அவை சூலம்,வில்,மணி,கத்தி,பாசம்,கேடயம்,கபாலம் தரித்துள்ளன. ஓர் இடக்கரம் காலின் கீழ் கிடக்கும் அசுரரைச் சுட்டுகிறது. அவளது அடி துண்டிக்கப்பட்ட ஒரு தலையின் மீது ஊன்றியுள்ளது. அந்தத் தலையே பெரிதாக உள்ளது. அதன் மீது ஊன்றியுள்ள அவளது காலில், எலும்பாக இருப்பினும், அழுத்தும் வலிமையைக் காணலாம். அவளது இடக்காலை அசைத்துக் கிடத்தியுள்ளாள். அவ்விருக்கையின் கீழ் நான்கு அசுரர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மூச்சுத் திணறுகிறார்கள். ஓடுகிறார்கள். என்ன பெருமிதமான சிற்பம். மயிர்கூச்செறியும் அமைப்பு. சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன் என்னும் அசுரர்கள் நால்வரும் வதைபடும் காட்சியைக்காண கண்கோடி வேண்டும்’’.
![]() |
| நிசும்பசூதனி (ஓவியம் - விஷ்ணு ராம்) |
குடவாயில் பாலசுப்ரமணியனின் தஞ்சாவூர் என்ற நூலின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் சான்றுகளாக மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் உள்ளன. ஒரு அறையில் அமர்ந்தபடி படியெடுக்கப்பட்ட கல்வெட்டுத் தரவுகளையும் ஏற்கனவே எழுதப்பட்ட வரலாற்று நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாற்றினை எழுதுவதில்லை. வரலாற்று எழுத்துக்கான அடிப்படைகளை உருவாக்கும் பணியையும் இணைத்தே செய்கிறார். கோவில்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிய அவருடைய அபாரமான அறிவு மற்ற வரலாற்று ஆசிரியர்கள் கண்டுணர முடியாத எண்ணற்ற தரவுகளை கொண்டு வந்து தருகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோவிலைப் பற்றிய அவருடைய ஆய்வு அத்தகைய ஒன்று. பெரிய கோவில் கட்டுவதற்கு முன் தமிழகத்தில் அத்தகைய உயர்ந்த கோபுரங்களை அமைக்கும் வழக்கம் இல்லை. ஒரு சாதாரண ஆய்வாளனுக்கு பெரிய கோவில் கோபுரம் மன்னனின் ஆணவத்தை பிரதிபலிப்பதாகத் தோன்றலாம்! ஆனால் பாலசுப்ரமணியன் அந்த உயர்ந்த விமானத்தின் தத்துவத்தை விளக்குகிறார்.
பெரியகோவிலின் வாசலில் உள்ள துவாரபாலகர் சிற்பத்தில் துவாரபாலகரின் காலினை கழல் போல ஒரு பாம்பு சுற்றி இருக்கிறது. அப்பாம்பின் வாயில் ஒரு யானை விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யானையை விழுங்குமளவு பெரிய பாம்பினை காலில் அழுத்திக் கொண்டிருக்கும் துவாரபாலகர் எவ்வளவு பிரம்மாண்டமானவராக இருக்க வேண்டும்! அவ்வளவு பிரம்மாண்டமான வாயில் காவலனை உடைய ஈசன் எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்! ஈசனின் முடிவிலாத் தோற்றத்தின் பிரம்மாண்டத்தைச் சுட்டவே துவாரபாலகரின் கால்களைச் சுற்றி இருக்கும் அப்பாம்பும் அது விழுங்கும் யானையும் சிற்பத்தில் இடம்பெறுவதாக பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
அதுபோல பெரிய கோவிலில் சிவ லிங்கத்திற்கான பூசனை முறையும் அவ்வாறே உள்ளது.
‘’சிவலிங்கப்பெருமானை நவந்தருபேதம் எனும் தத்துவ அடிப்படையில் அர்ச்சிப்பர். இலிங்க உருவின் நடுவே திகழும் பாணம் மூன்று பெரும் பகுதிகளாகப் பகுத்துப் பேசப்பெறும். சதுரமான தூண்பகுதி பிரமபாகமாகவும், அதற்கு மேலுள்ள எட்டுப் பண்டையுள்ள தூண்பகுதி விஷ்ணுபாகமாகவும் கூறப்பெறும். இவை இரண்டும் முறையே அதோபத்மம் (கீழ்நோக்கிய தாமரை இதழ்கள் அடங்கிய பீடம்) ஊர்த்துவ பத்மம் (மேல்நோக்கிய தாமரை இதழ்கள் அடங்கிய பீடம்) என்ற பீடப்பகுதிகளுள் பொதிந்து காணப்பெறும். இவைகளுக்கு மேலாக வட்டத்தூண் வடிவில் உச்சிப்பகுதி குழைவுடன் திகழும் பகுதியே சிவபாகமாகும். இதனை எழுபகுதிகளாகப் பிரித்து அர்ச்சிப்பர். உருத்திரன், மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி, பரசிவன் எனப் போற்றுவர். பிரம்மாய நம: எனத்தொடங்கி ஒவ்வொரு பகுதிகளையும் மலரால் அர்ச்சித்து நிறைவாகப் பரசிவாய நம: எனப் போற்றும்போது அதுவரை சிவமாக விளங்கிய இலிங்கத் திருமேனி மறைந்து அதற்கு மேலாக விளங்கும் பரவெளியே சிவமாகக் காட்சிதரும். அந்நிலைக்கு வந்த பிறகு முழு வழிபாடும் பரவெளிக்கே உரியதாகும். பிரபஞ்சம் முழுவதின் ஒட்டுமொத்தமான உருவமே சிவமாகும்’’
ஒன்பது பேருக்கும் பூஜை முடிந்த பிறகு லிங்கம் மறைந்து லிங்கத்தின் மேலுள்ள பிரம்மாண்டமான விமானத்தின் உட்கூடே சிவமாக காட்சி தருவதைச் சுட்டவே பெரிய கோவிலில் அவ்வளவு பிரம்மாண்டமான கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. (இன்று போல் அல்லாமல் கட்டப்பட்ட காலத்தில் லிங்கத்தின் மேல் எந்தவித விதானமும் அமைக்கப்படவில்லை.) இது போன்ற ஏராளமான நுணுக்கமான தகவல்களின் அடிப்படையில் பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் பெரிய கோவிலை இந்நூலில் அறிமுகம் செய்கிறார். அதேநேரம் பெரிய கோவிலின் கோபுர நிழல் தரையில் விழாது, பெரியகோவில் கோபுரம் எண்பது டன் கொண்ட ஒரே கல்லால் கட்டப்பட்டது என்பன போன்ற கட்டுக்கதைகளையும் தவறென்று நிறுவுகிறார்.
இந்நூலினை வாசித்தபிறகு ஒருவர் காணும் தஞ்சாவூர் அவர் இதுவரைக் கண்டதிலிருந்து வேறுபட்ட ஒன்றாக இருக்கும். தஞ்சையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட முக்கியமான கோவில்கள் எந்தெந்த காலத்தில் கட்டப்பட்டன அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்குகிறார். அடுத்ததாக தஞ்சையில் இருந்து பிரிந்த மற்ற முக்கிய நகரங்களை இணைக்கும் பெருவழிகள் பற்றிப் பேசுகிறார். தமிழ்நிலத்தின் வரலாற்றில் தஞ்சையும் மதுரையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பெயர்கள். மதுரை அதன் தொன்மை காரணமாகவும் தஞ்சை தமிழ்நிலத்தில் அமைந்த ஒரு பேரரசின் மையமாக அமைந்த ஊர் என்ற காரணத்தாலும் முதன்மை பெறுகின்றன. ஆனால் குடவாயில் பாலசுப்ரமணியனின் இந்த நூல் தமிழகத்தின் எந்தவொரு நகரம் பற்றியும் இதுபோன்ற ஒரு வரலாற்றை எழுதுவதற்கான வரைவினை அளிக்கிறது. வெறும் வணிகக் காரணங்களுக்காக நம்முடைய வரலாற்றுச் சின்னங்கள் ஏற்கனவே ஏராளமாக அழிக்கப்பட்டுவிட்டன. எல்லா ஊர்களின் முகமும் ஒரே மாதிரியானதாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. தனித்துவங்கள் மிகத் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இத்தகைய சூழலில் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முன்னோடி ஆய்வு தமிழகத்தின் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஏராளமான நகரங்களின் வரலாற்றை மறு கட்டமைப்பு செய்ய உதவும்.
தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு
‘தஞ்சாவூர்’ நூல் தஞ்சை என்ற நகரத்தினை அதன் வரலாற்றுத் தடம் தெரியத் தொடங்கும் காலத்தில் இருந்து தற்போதுள்ள நிலைவரை ஆய்வு செய்கிறது. தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு கி.பி.1545 முதல் 1675 வரை ஒன்றேகால் நூற்றாண்டு காலம் நீடித்த நாயக்கர்களின் ஆட்சியைப் பேசுகிறது.
தஞ்சையின் முதல் நாயக்க மன்னரான செவ்வப்ப நாயக்கர் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், இராமபத்ர நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்று நீடித்த ஆட்சியை இந்நூல் விவரிக்கிறது.
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல வரலாற்றில் ஆர்வம் கொள்ளும் வாசகர்கள் மன்னர்களின் வீரம், போர் வெற்றி, கைப்பற்றிய நாடுகள், ஆட்சிப்பரப்பின் விஸ்தாரம் போன்றவற்றையே முக்கியமானதாகக் கருதுகிறார்கள். ஆனால் இவற்றைவிட அதிகமான பங்களிப்பினை செய்தவர்கள் வரவாற்றிலிருந்து மறக்கப்பட்டிருக்கலாம் என்பதை இந்நூலினை வாசிக்கும்போது உணர முடிகிறது.
கிருஷ்ணதேவராயரின் மரணத்துக்கு பிறகு அவருடைய சகோதரர் அச்சுததேவராயர் விஜய நகரப் பேரரசின் மன்னராகப் பொறுப்பேற்கிறார். அவருடைய அரசில் "வாசல்" என்றொரு முக்கியமான பதவியை வகித்தவரே செவ்வப்ப நாயக்கரின் தந்தை. விஜயநகரப் பேரரசு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்தையும் 'மகாநாயன்காரர்' என்ற ஆட்சியாளரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதானியான செல்லப்பா என்பவரால் ஏற்பட்ட கலகத்தை அச்சுததேவராயர் படையெடுத்து வந்து அவரை வெல்ல வேண்டி இருக்கிறது. அதன் பிறகு செவ்வப்ப நாயக்கர் தஞ்சையில் மகாநாயன்காரராக பொறுப்பேற்கிறார். ஆனால் அவர் பொறுப்பேற்கும் காலத்தில் இருந்தே விஜயநகரப் பேரரசில் ஏகப்பட்ட அரசியல் குழப்பங்கள் நிகழ்கின்றன. தலைக்கோட்டைப் போர் ஏறத்தாழ விஜயநகரப் பேரரசை சிதைத்து விடுகிறது. ஒரு பெயராக மத்திய அரசு என்ற ஒன்று இருந்தாலும் தஞ்சை தனி ராஜ்ஜியமாகவே இயங்குகிறது. ஆகவே தஞ்சை நாயக்கர்களை மன்னர்கள் என்று அழைப்பதில் தவறில்லை!
செவ்வப்ப நாயக்கர் தஞ்சை மன்னராக பொறுப்பேற்கும் போது அது பொலிவிழந்த ஒரு பழைய நகரமாகவே உள்ளது. தஞ்சை பெரிய கோவில் திருப்பணிகள், கோவிலைச் சுற்றி அமைந்த சிறிய கோட்டை, தஞ்சை அரண்மனை, அதனைச் சுற்றி எழுப்பப்பட்ட பெரிய கோட்டை, கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்ட செவ்வப்பனேரி என்று தஞ்சாவூர் செவ்வப்ப நாயக்கராலேயே மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தஞ்சை பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைந்துள்ள ராஜ வீதிகளை உருவாக்கியவர் செவ்வப்ப நாயக்கரே. ஒரு வகையில் ராஜராஜ சோழனின் பெருமைகள் இன்றைய உலகிற்கு பறைசாற்றியதில் செவ்வப்ப நாயக்கரின் பங்கு முதன்மையானது. ஆனால் இவ்வளவு முக்கியமான வரலாற்று நிகழ்வு 'சண்டைக்காட்சிகள்' இல்லாததால் மறக்கப்பட்டிருக்கிறது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் பதினோரு நிலை கோபுரம், மன்னார்குடி இராஜகோபாலசாமி கோவிலின் கருடஸ்தம்பம் என்று நாயக்கர் காலத்தில் பல முக்கியமான கோவில் திருப்பணிகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. கோவில் திருப்பணிகள் மட்டுமல்லாது நிர்வாகமும் சிறப்பாகவே இருந்திருக்கிறது. தஞ்சை நாயக்கர்கள் பல்வேறு விஷயங்களில் சோழப் பேரரசின் முறைமைகளையே கடைபிடித்துள்ளனர். வைணவரான செவ்வப்ப நாயக்கர் ஏராளமான சைவத் திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்ததே அதற்கு உதாரணம். அது மட்டுமின்றி நாயக்கர் காலத்தில் தஞ்சாவூர் பாண்டிய குலாசனி வளநாடு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. 'பாண்டிய குலத்திற்கு எமனாக வந்த' என்று பொருள்படும் இப்பெயர் சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் தஞ்சையை வென்று தீக்கிரையாக்கிய பிறகு தஞ்சை 'பாண்டிய குலபதி வளநாடு' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாயக்கர்கள் சோழ மரபையே பின்பற்றி இருக்கின்றனர்.
![]() |
| அச்சுதப்ப நாயகர் - மன்னார்குடி கருடஸ்தம்பம் |
செவ்வப்ப நாயக்கர் காலத்தில் வலுவான அடித்தளமிட்டு தொடங்கப்படும் நாயக்கர் ஆட்சி இராகுநாத நாயக்கர் காலத்தில் உச்சம் பெறுகிறது. விஜயராகவ நாயக்கர் ஆட்சி காலத்தில் போர்த்துகீசியரின் ஆதிக்கம், மராட்டியர்களின் படையெடுப்பு என்று பிரச்சினைகளை சந்திக்கும் நாயக்க அரசு விஜயராகவ நாயக்கருக்குப் பிறகு மெல்ல வீழ்ச்சி அடைகிறது. குடவாயில் பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் நாயக்கர்கள் பற்றி எழுதிய இந்த விரிவான நூல் அளிக்கும் சித்திரம் இதுதான். இரகுநாத நாயக்கர் காலத்தில் நடந்த பெரும்போர்கள் தலைக்கோட்டை போர் பற்றியெல்லாம் இந்நூலில் பெரிய விவரிப்புகள் இல்லை. மாறாக நாயக்கர் ஆட்சியில் விவசாயம், வரிவசூல் போன்றவை எவ்வாறு நடைபெற்றன என்பதையே இந்நூல் விரிவாகப் பேசுகிறது. நிலையான ஆட்சியையை நாயக்கர்கள் வழங்கி இருக்கிறார்கள் என்பதை இந்நூலின் வழியே அறிகிறோம். அதோடு இரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் காலத்தில் கலை, இலக்கியம், இசை என்று பல்வேறு துறைகளில் தஞ்சை சிறப்புற்றிருந்ததை அறிய முடிகிறது. செவ்வப்ப நாயக்கர் காலத்தைவிட இரகுநாத நாயக்கர் சிற்பங்கள் கலை அமைதி கூடியவையாக இருப்பதை குடவாயில் பாலசுப்ரமணியன் ஆதாரங்களுடன் நிறுவுகிறார். தஞ்சை பெரிய கோவிலை விட தாராசுரம் சோழர் கால சிற்பக் கலைக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்வது போல நாயக்கர் காலக் கலையும் மேம்பாடு அடைந்து கொண்டே இருந்திருக்கிறது. அதோடு தாராசுரம் கோவிலில் உள்ள புகழ்பெற்ற சிற்பம் ஒன்று நாயக்கர்களின் நாணயங்களில் இடம்பெற்றிருப்பது நாயக்கர்கள் தமிழ் பண்பாட்டுடன் தொடர்ச்சியை வருவித்துக் கொள்ள எவ்வளவு முயன்றிருக்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.
![]() |
| மன்னார்குடி இராஜகோபால சுவாமி- விஜயராகவ நாயக்கர் அலங்காரம் |
தேவார மாண்பும் ஓதுவார் மரபும்
குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுப்புலம் விரிவானது. நந்திபுரம் என்ற ஊர் எங்கிருந்தது?, கருணாகரத்தொண்டைமானின் ஊரான வண்டை வளம்பதி எது? என்பன போன்ற எளிமையான இழைகளில் தொடங்கும் குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுலகம் இவற்றுக்கான பதில்களைத் தேடிச்செல்லும்போது மிகுந்த சிக்கலானதாக சிலந்தி வலை போலத் தோன்றத் தொடங்கி விடுகிறது. ஆனால் சிலந்திவலை சீர்மையற்ற கட்டுமானம் கிடையாது. மிகச் சரியாகவே சிலந்தி தன்னுடைய வலையைப் பின்னுகிறது. குடவாயில் சுப்ரமணியனின் ஆய்வு முறையும் அவ்வாறானதே. சிற்பம், சுவடிகள், கல்வெட்டுகள், கோவில்கள், முந்தைய வரலாற்று நூல்கள், ஊள்ளூர் தரவுகள் என பல்வேறு இழைகளின் வழியாக சுப்ரமணியன் இந்த வரலாற்று வலையைப் பின்னுகிறார். ஒவ்வொரு இழையும் வெட்டிக் கொள்ளும் இடங்களிலும் நமக்கொரு ஆய்வு முடிவு கிடைக்கிறது. இம்முடிவுகளிலிருந்தே மிக விரிவான பெரும் நூல்களை பாலசுப்ரமணியன் எழுதி இருக்கிறார். இந்நூல்களில் தனித்துவம் வாய்ந்த ஒரு நூல் தேவார மாண்பும் ஓதுவார் மரபும். ஐநூற்று சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதல் இருநூறு பக்கங்கள் தேவார மூவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றி சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளின் விவரிப்பாக உள்ளது. குடவாயில் பாலசுப்ரமணியனின் மற்ற நூல்களை வாசித்தவர்களுக்கு இந்த விவரிப்பு சற்று ஏமாற்றத்தை அளிக்கலாம். ஏனெனில் ஏறத்தாழ இப்பகுதி ஒரு "புராண விளக்கம்" போலவே உள்ளது. நூலினை தொடர்ந்து வாசிக்கும் போதுதான் இந்த முதற்பகுதியின் முக்கியத்துவம் விளங்குகிறது. பல்வேறு வரலாற்றுக் காலங்களின் வழியே ஒரு நகரம் எவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளானது என்பதைச் சொல்லும் நூல் 'தஞ்சாவூர்' என்றால் இந்த நூல் பதிமூன்று நூற்றாண்டுகளாக தேவாரம் என்ற நூல் (இலக்கியம், இசை, பக்தி, தத்துவம் என எவ்வகை நூலாகவும் வாசிக்கத்தக்கது) எவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் நீடிக்கிறது என்பதை விவரிக்கிறது.
தேவார மூவர் பற்றிய விவரிப்பு பெரும்பாலும் சேக்கிழாரின் பெரிய புராணத்தை ஒட்டியே எழுதப்பட்டுள்ளது என்றாலும் அதனூடாகவே பாலசுப்ரமணியன் எந்த தேவாரப்பாடல் எந்தக் கோவிலில் இருந்தபடி பாடப்பெற்றது என்பதையும் விவரிக்கிறார். இத்தகைய விவரிப்புகளுக்கு புராண விளக்கம் போன்ற தொனியே பொருத்தமாக அமைகிறது. அதேநேரம் வரலாற்றுத் தரவுகளையும் தருவதற்கு தவறவில்லை.
திருநாவுக்கரசர் சமண மதத்தில் இருந்து சைவத்திற்கு திரும்பியபோது அவருக்கு சமண சமயத்தை தழுவிய மன்னன் இன்னல்களை விளைவித்தான் என்றும் பின்னர் அவனும் சைவ மதம் தழுவி குணபரவீச்சரம் என்ற கோவிலை எடுத்தான் என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
‘’எப்போதுமே மன்னர்கள் தாம் எடுக்கும் சிவாலங்களுக்கு தங்கள் பெயரையோ அல்லது தங்கள் பட்டப் பெயரையோ கூறி , பின் ஒட்டாக ஈச்சரம் என குறிப்பர். அவ்வகையில் இங்கு குணபரன் எனும் பட்டப்பெயர் கொண்ட பல்லவ மன்னன் தன் பெயரில் திருவதிகையில் குணபரவீச்சரம் எடுத்தான் என்பதை சேக்கிழார் பெருமான் வாக்கால் அறிகிறோம். குணபரன் என்ற பட்டம் பூண்ட ஒரே பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர பல்லவனாவான். எனவே வாகீசருக்கு இன்னல்களைத் தந்து பின்பு சமணம் விடுத்து சைவம் ஏகியவன் மகேந்திர பல்லவனே என்பதை இதனால் அறியலாம். மேலும் திருச்சிராப்பள்ளி மலைமேல் மகேந்திர பல்லவனால் எடுக்கப்பெற்ற லலிதாங்குர பல்லவ ஈஸ்வர கிருஹம் எனும் குடைவரைக் கோயிலில் உள்ள மகேந்திர பல்லவனே யாத்து கல்லில் பொறித்த வடமொழிப் பாடல்களில் ஒன்றில் புறச்சமயம் சார்ந்திருந்த தான் அதனை விடுத்து லிங்கத்தைத் தழுவினேன் என்று கூறியிருப்பதால் அப்பரின் சமகாலத்தில் வாழ்ந்து அவர் வாழ்வோடு தொடர்புடையவனாகத் திகழ்ந்தது மகேந்திர பல்லவனே (கி.பி.590-630) என்பது திண்ணம்’’.
புராணம் வரலாற்றினைச் சந்திக்கும் இத்தகைய புள்ளிகளையும் பாலசுப்ரமணியன் முதல் பகுதியில் தொடுகிறார்.
![]() |
| மூவர் முதலிகள் உலாச் செல்லும் தேவாசிரிய மண்டப ஓவியம், திருவாரூர் |
நூலின் அடுத்தடுத்த பகுதிகள் தேவாரம் குறித்த நேரடியான ஆய்வுகளாக அமைகின்றன. இசைநூலான தேவாரத்தை முதலில் பண்ணிசைத்துப் பாடியவர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் துணைவியான மதங்கசூளாமணியாரும் ஆவர். அவர்களிலிருந்து தொடங்குவதே தேவார ஓதுவார் மரபு. ஆனால் ஓதுவார் என்ற பெயரும் தேவாரம் என்ற பெயரும் வரலாற்றில் மிகவும் பிந்தியே அறிமுகமாகின்றனர்.
தேவாரம் பெரும்பாலும் திருப்பதிகம் என்ற பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது. ஓதுவார்கள் திருப்பதிகம் விண்ணப்பஞ்செய்வார், அடிகள்மார், பிடாரர், பண் எடுப்பார் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றனர். திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கொள்ளலாம். சுந்தரர் காலத்தால் அவர்களுக்கு சற்றுப் பிந்தியவர். ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கோவில்களில் திருப்பதிகம் விண்ணப்பம் செய்வதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன. தேவாரம் பாடப்பட்டு ஒரு நூற்றாண்டுக்குள்ளாகவே மன்னர்களின் செல்வாக்கை - மறைமுகமாக மக்களின் செல்வாக்கை - தேவாரம் பெறத் தொடங்கி விடுகிறது. பரவலாக எண்ணப்படுவது போல பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணம் எழுதப்பட்ட பிறகு தேவாரம் புகழடையவில்லை. அதற்கு முன்பாகவே எண்ணற்ற கோவில்களில் திருப்பதிக விண்ணப்பஞ் செய்வதற்கான ஓதுவார்கள் நியமிக்கப்பட்டதையும் அவர்களுக்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டத்தையும் பாலசுப்ரமணியன் விவரித்திருக்கிறார். பெரும்பாலான கோவில்கள் இன்றைய தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி மாவடங்களைச் சுற்றி அமைந்துள்ளன. கணிசமான எண்ணிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், கன்னியாகுமரியிலும் திருப்பதிக விண்ணப்பம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.
சோழப்பேரரசனான முதலாம் ஆதித்தனின் திருப்பழனம் ஆபத்சாயேஸ்வரர் கோவில் கல்வெட்டு ஒன்றில் (கி.பி.891) கண்ணிழந்த அடிகள்மார் பன்னிரெண்டு பேருக்கும் அவர்களுடைய கண்காட்டுவார் இருவருக்கும் காணியாக நிலம் அளிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. இதுவே ஓதுவார்கள் குறித்த முதல் வரலாற்றுச் சான்று. கண்ணிழந்தவர்கள் தேவாரம் பாடும் பல்வேறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இது அன்றைய சூழலில் விழி இழந்தவர்கள் பிழைக்கும் வழியாகவும் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கலாம்.
தேவாரம் கல்லில் பதியப்பட்டு கிடைக்கும் முதல் கல்வெட்டு பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. திருவிடைவாயில் (தற்போது திருவிடைவாசல்) சிவாலயத்தில் 1911ஆம் ஆண்டு மு.சுவாமிநாத உபாத்தியாயர் இக்கல்வெட்டினை படியெடுத்துள்ளார். இப்பதிகம் சுவடிகளில் காணப்பெறாமல் நேரடியாக கல்வெட்டிலிருந்து கிடைத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக திருப்பணி என்ற பெயரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டு அழிக்கப்பட்டுவிட்டது.
சோழர்களாலும் பாண்டியர்களாலும் போற்றி வளர்க்கப்பட்ட தேவார மரபு கி.பி.1311ல் மாலிக்கபூர் படையெடுப்பின் போது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அடுத்த அறுபாதாண்டுகள் (கி.பி.1371வரை) பல்வேறு கோவில்கள் அழிவுக்கு உள்ளாகி இருக்கின்றன. பதினெட்டாம் நூற்றாண்டில் ஹைதர் அலி, பிரட்டிஷ்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் எனப் பலரும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை தங்களுடைய படைத்தலமாக பயன்படுத்தி இருக்கின்றனர்! இந்தக் காலங்கள் நீங்கலாக மற்ற நாட்களில் ஓதுவார் மரபு தமிழகத்தில் செழித்தே இருந்திருக்கிறது. 1950க்கு பிறகே ஓதுவார் மரபு சுணங்கி இருப்பதாக குடவாயில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
*********
![]() |
| குடவாயில் பாலசுப்பிரமணியன் |
நிலம் சார்ந்த வரலாறு, காலம் சார்ந்த வரலாறு, இலக்கியம் சார்ந்த வரலாறு என்று மூன்று வகைமைகளுக்குச் சான்றாக இம்மூன்று நூல்களும் அமைகின்றன. தமிழகத்தில் வேறெந்த நிலத்திற்கும் கிடைத்திராத வாய்ப்பு தஞ்சைக்கு கிடைத்திருக்கிறது. கோவில்களை மட்டும் சொல்லவில்லை. கோவில்களைச் சார்ந்து அமைந்த ஒரு பேரரசும் இங்கு வெகு நாட்கள் ஆட்சி செய்திருக்கிறது. ஏராளமான வரலாற்று ஆணவங்கள் வெவ்வேறு தளங்களில் சிதறிக் கிடந்திருக்கின்றன. இவற்றை தொகுத்து நோக்கும் ஒரு பெரும்பணியை குடவாயில் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்திருக்கிறார். அவருடைய நாற்பதாண்டுக்கும் மேலான கடும் உழைப்பினால் இந்த வரலாறு நமக்குக் கிடைத்திருக்கிறது. அவர் தேடலின் விரிவுக்கான சான்றே தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூல். வெறும் 'சுவையான' செய்திகளின் தொகையாக வரலாற்றைக் காணாமல் கடந்தகாலத்துக்கும் தற்காலத்துக்குமான ஒரு கோட்டினை மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் வரைந்திருக்கிறார். சமகால மனம் எதுவொன்றையும் சந்தேகத்துடனேயே அணுகுகிறது. அது இயல்பானதும் கூட. அந்த நவீன மனதுடன் உரையாட ஆய்வாளர்கள் ஒரு கறாரான மொழியை பயன்படுத்துகின்றனர். அல்லது கடந்தகாலத்தின் 'மர்மங்களை' அப்படியே காண்பித்து மட்டும் செல்கின்றனர். மரபின் மீதான மரியாதையும் அணுக்கமும் இருந்தால்கூட அதனை வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற கவனம் ஆய்வுமொழியில் தெரிகிறது. ஆனால் குடவாயில் பாலசுப்ரமணியனின் எழுத்தில் மரபின் மீதான மரியாதை ஆழமாக வெளிப்படுகிறது. இவருக்கு கடந்தகாலத்தின் மீது விமர்சனமே இல்லையோ என்ற சந்தேகம்கூட எழுகிறது. ஆனால் அவருடைய வலுவான ஆய்வு முடிவுகள் இக்கேள்விகளை தகர்த்து விடுகின்றன. பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை வெவ்வேறு இடங்களிலிருந்து எடுத்து வந்தாலும் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு மையமாக தஞ்சையே உள்ளது. கடந்தகாலத்தை வகுத்துரைப்பதன் வழியாக நிகழ்காலத்திற்கு தேவையானவற்றையும் எதிர்கால செல்திசையையும் சமூகத்திற்கு உணர்த்திச் செல்வது ஒரு பெரும் கலைஞனின் பணி. குடவாயில் பாலசுப்ரமணியன் மாபெரும் கலைஞன்.
சுரேஷ் பிரதீப்
குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki
சுரேஷ் பிரதீப் (சுரேஷ் பன்னீர்செல்வம்) (பிறப்பு: ஜனவரி 14, 1992) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். தஞ்சை திருவாரூர் மாவட்டப் பின்னணியில் கதைகளை எழுதிவருகிறார். நேர்கோடற்ற வடிவில் கதைகள் எழுதுவதிலும் மனிதனின் அடிப்படையான இருத்தலியல் சிக்கல்களை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.









