Showing posts with label சுவடியியல். Show all posts
Showing posts with label சுவடியியல். Show all posts

Monday, 29 July 2024

உங்களது இரண்டுமணிநேரத்தை எனக்கு கொடுத்தால் உங்களை ஓலை வாசிப்பவராக என்னால் மாற்ற முடியும் - கோவைமணி நேர்காணல்

கோவைமணி, மனைவி சாந்தி

மோ. கோ கோவைமணி அவர்கள் சுவடியியல் அறிஞர், ஆய்வாளர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் முப்பத்துமூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பல ஓலைச்சுவடிகளை நூலாக பதிப்பித்திருக்கிறார். இவர் மேற்கொண்ட சுவடியியல் பணிகளில் முக்கியமானது பல்கலைக்கழகச் சுவடி சேகரிப்பை மின்னாக்கம் செய்தது. இதற்காக பிரிட்டிஷ் நூலக ஆவணக் காப்பக திட்டத்தின் (Endangered Archives Programme - EAP) நல்கை பெற்று இப்பணியைச் செய்திருக்கிறார். மாணவர்களுக்குத் தொடர்ந்து சுவடியியல் கற்பிப்பதும் சுவடிப்பயிற்சி அளிப்பதும் இவர் மேற்கொள்ளும் இன்னொரு முக்கியமான பணி. கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் இணையம் மூலமாக சுவடிப்பயிற்சி அளித்திருக்கிறார். 2024 ஆண்டிற்கான தமிழ் விக்கி - தூரன் விருதைப் பெற்றிருக்கிறார்.

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு - மோ.கோ. கோவைமணி

நூலாசிரியரால் ஓலையிலோ காகிதத்திலோ தம்மாலோ பிறராலோ எழுதப்பெற்றதைச் சுவடி என்கின்றோம். இச்சுவடி நாளடைவில் பல படிநிலைகளில் ஓலை எழுதுவோராலும் எழுதுவிப்போராலும் பல்கிப் பெருகிற்று எனலாம். மூலத்தை மட்டுமோ அல்லது மூலத்துடன் அடிக்குறிப்பு, உரை, கருத்துரை, குறிப்புரை, பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை போன்றவற்றில் ஏதாவதொன்றினையோ ஒன்றிற்கும் மேற்பட்டவைகளைப் பெற்றோ பதிப்பிக்கப்பெறுவதே 'சுவடிப்பதிப்பு' எனப்பெறும். அதாவது, சுவடிகளை (ஓலை, காகிதம்) அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப் பெறுவன எல்லாம் சுவடிப்பதிப்பு எனலாம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிவருவதைக் 'கால இதழ்' (Periodical) அல்லது 'பருவ இதழ்' (Magazine) எனலாம்.