Tuesday, 17 February 2026

மீட்சிக்கான ஆசிரியன் - கடலூர் சீனு

குடவாயில் பாலசுப்ரமணியன்

என் அப்பா ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோயில் எதிரேதான் எங்கள் வீடு. எங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த சிறுவர்கள் எல்லோருக்கும் நான் உட்பட, அவர்களின் பால்யம் நெல்லையப்பர் கோயிலோடு கலந்த ஒன்றாகவே இருக்கும். என் அம்மாவின் ஊர் திருச்சி. நடை தூரத்தில் மலைக்கோட்டை கோயில். சில கிலோமீட்டரில் திருவரங்கப் பேராலயம். கடலூரில் சிறு வயது வாழ்வில் எங்கள் வீடு பாடலீஸ்வரர் கோயில் மிக அருகே இருந்தது. என் வாழ்நாளெல்லாம் அதன் நினைவுகளில் பல கோயில் நிகழ்வுகளுடன் கலந்தே கிடக்கிறது.

அதே சமயம் இதில் மிகப்பெரிய வினோதம் ஒன்றும் இருந்தது. இந்தக் கோயில் சார்ந்த விஷயங்கள் எல்லாம் என் கண்ணில் மட்டுமே விழுந்து, ஆனால் எந்த விதத்திலும் கருத்தில் பதியாத ஒன்றாகவே இருந்தது. இந்தச் சிலை கர்ணன் என்றோ, அந்தச் சிலை கங்காதரர் என்றோ தெரியாது. எது குல தெய்வம் அது ஏன் குல தெய்வம், எது பெருந்தெய்வம் அது எதனால் என எதுவுமே தெரியாது. எல்லாமே சாமி. கோயில் என்பது சாமி கும்பிட என்று இன்று உள்ள பெரும்பான்மையினர் தெரிந்து வைத்திருந்த அளவுதான் அன்று என் அறிவும்.


பதின் வயதின் இறுதியில் புற வாழ்விலும் அக வாழ்விலும் சில நெருக்கடிகளைச் சந்தித்து, அதன் வழியே எழுந்த கேள்விகளைத் தொடர்ந்து தீவிர இலக்கியத்துக்குள் வந்து, தொடர் வாசிப்பு வழியே ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலை நான் முதன்முதல் வந்தடைந்து அதை வாசிக்கையில் ஒரே நேரம் மிகுந்த நிலைகுலைவையும், அது வரை அங்கே இருந்து ஆனால் என் கருத்தில் பதியாத அந்த ஒன்றைக் காணும் புதிய விழி ஒன்றையும் அந்த நாவல் வழி அடைந்தேன். நெல்லையப்பர் கோயில் முதல் பாடலீஸ்வரர் கோயில் வரை, அதன் ராஜகோபுரமும் அதன் நூற்றுக்கணக்கான தெய்வங்களும் கோயிலின் சிற்பங்கள் யாவும் முற்றிலும் முதன்முறையாக என்னுள் அர்த்தம் கொண்டு துலங்கி வந்தன. எத்தனை பிரம்மாண்டக் கலைவெளி என் தலைக்கு மேலே என்பதை உணர்ந்து விக்கித்துப் போனேன். 


விஷ்ணுபுரம் அளித்த கற்பனை விரிவை நேரில் காண கோயில் கோயிலாக திரிந்தேன். எங்கெங்கும் எத்தனை எத்தனையோ கலைத்தடங்கள். இங்கே அடுத்த சிக்கல் வந்தது. இவற்றையெல்லாம் பின் தொடர்ந்து மேலதிகமாக இவற்றின் சாராம்ச பின்புலத்தைத் தெரிந்து கொள்ள நான் எங்கே தொடங்குவது? தீவிர நவீனத்துவ இலக்கியக்களமோ தமிழ்நிலத்தின் கலைமரபு குறித்த எந்த பிரக்ஞையும் இன்றி, மரபை உதறி காமம் பசி போன்ற சிறிய விஷயங்களைப் பேசி உழன்றுகொண்டிருந்தது. பின்நவீனத்துவமோ மனித வாழ்வுக்கே சம்பந்தம் இல்லாத எதிலோ உழன்றுகொண்டு இருந்தது. ஆனந்த குமாரசாமி, கணபதி ஸ்தபதி போன்ற பெயர்கள் எல்லாம், சென்றுசேர இயலாவண்ணம் அன்று எங்கோ ஏழு கடல், ஏழு மலை தாண்டிக் கிடந்தன. கோயிற் கலை சார்ந்து சொற்ப நூல்கள் கிடைத்தாலும், அவை எந்தத் தேடலும் சாரமும் இல்லாத தகவல் தொகுப்புகளாக மட்டுமே எஞ்சின. வெகுமக்கள் இலக்கியத்திலோ பொதுவில் பத்திரிக்கை துறை எழுச்சி வழியே, குமுதம் பக்தி போல பல அத்மீக இதழ்கள் வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் எந்த கோயில் எதற்கு, பரிகாரங்கள் என்னென்ன, எந்த கோயில் போனால் என்ன பலன்கள், இந்த பரிகாரத்தை சிவனே செய்தார், இந்த பலனை விநாயகரே அடைந்தார் போன்ற துணை 'வரலாறுகள்'. உபரியாக பாலகுமாரன் போன்றோர் எழுதும் இந்த கோயிலில் நல்ல அதிர்வுகள் உண்டு போன்ற அரிய தகவல்கள் அடங்கிய தொடர்கள் தான் இருந்தது.


இந்தச் சூழலில்தான் ஒருமுறை தஞ்சைப் பேராலயம் அருகே தள்ளு வண்டியில் இயங்கிய பழைய புத்தகக் கடை ஒன்றில் தஞ்சைப் பேராலயம் குறித்த மிகச் சிறிய கையேடு ஒன்றைக் கண்டெடுத்தேன். முதல் வாசிப்பிலேயே இதுவே எனக்கான நூல் என்று உணரச் செய்த நூல். அந்த நூலின் துவக்கமாகத் தஞ்சை என்று தலைப்பு கொண்ட ஒரே ஒரு பக்கத்தில், தஞ்சை நகரம் குறித்த முதல் கல்வெட்டுச் செய்தி துவங்கி, தஞ்சை சோழர் தலைநகரமாக எழுந்த விதம், தஞ்சையைத் தலை நகராகக் கொண்டு இயங்கிய விரிந்த பரந்த நிலப்பரப்பு, 1250 துவங்கித் தொடர்ந்து தஞ்சை தாக்கி அழிக்கப்பட்ட விதம், அடுத்து வந்த நாயக்கர் காலத்தில் தஞ்சை பெரிய கோயில் புனர் நிர்மாணம் பெற்ற விதம், சுதந்திர இந்தியாவில் அதன் இடம் என தஞ்சை பேராலயம் நிற்கும் நிலத்தின் பின்புல வரலாறு முழுமையையும் சுருக்கமாகவும், தெளிவாகவும், செறிவாகவும் அதில் அளிக்கப்பட்டிருந்தது. 

தஞ்சை பெரிய கோயில்

பெரிய கோயில் முன்பு நிற்கும் கேரளாந்தகன் வாயில் துவங்கி, விமான கலசம் வரை, ராஜராஜன் காலம் துவங்கி 18 ஆம் நூற்றாண்டு வரை விரிவாக்கம் கண்டுகொண்டு இருந்த அந்தக் கோயிலின் ஒவ்வொரு அலகையும், சன்னிதிகளையும், தெய்வங்களையும், சிற்ப அழகுகளையும், அவற்றின் பின்புல புராணங்களையும், அந்த ஒட்டு மொத்த விமானத்தின் தத்துவார்த்த சாரத்தையும் வெறும் 40 பக்கமே கொண்ட அந்த நூல் சுருக்கமாக விளக்கி அந்தக் கோயில் குறித்து எல்லாமே எனக்குத் தெரியும் என்ற உவகையை எனக்கு அளித்தது. அந்த நூலை கையில் பிடித்தபடி அன்று முழுக்க பரவசமாகத் தஞ்சை கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்து அந்த நூலில் இருந்த ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் பார்த்தேன். தஞ்சைப் பெரியகோயில் என்ற தலைப்பு கொண்ட அந்தச் சிறிய அறிவுபூர்வமான ஆச்சர்யகரமான நூலின் ஆசிரியர் திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள்.


**********


தமிழ் நிலத்தில் கிடைத்த மொத்தக் கல்வெட்டுகளை எண்ணினால், அதன் எண்ணிக்கையில் பாதி சோழக் கல்வெட்டுகளாகவே இருக்கும். தமிழ் நிலத்தின் நீண்ட நெடிய ஸ்திரமான ஆட்சி அவர்களுடையது. அவர்களின் நில மானிய முறை, சமூக கட்டமைப்பு சார்ந்து சோழ நிலத்தின் பெரும்பாலான விஷயங்கள் கல்வெட்டு சாசனங்களாக எழுதப்பட்டன. 


1650 துவங்கி அடுத்து வந்த முந்நூறு ஆண்டுகாலம் இந்தியா வந்து தங்கிய பன்மொழி அறிந்த மேலை நாட்டு அறிஞர்களால் கீழைத்தேயவியல் எனும் பெரிய அறிவுப்புலம் இங்கே செயல்பட்டு, தொல்லியல் துறை தோன்றி, அதன் ஒரு பகுதியாகக் கல்வெட்டியல் எனும் விரிவான கல்விக்களம் தோன்றி வந்து, இங்கே இந்தியாவில் பல்வேறு இருண்ட வரலாறுகள் மீது வெளிச்சம் பாய்ச்சியது. அது தமிழ்நாட்டில் நிகழும்போது தமிழ் நிலத்தில் பெரும்பாலும் வாசிக்கக் கிடைத்தது சோழக் கல்வெட்டுகளே. அங்கே துவங்கித்தான் தமிழக வரலாறே எழுதப்பட்டது என்று கூட சொல்லிவிடலாம். இந்த பணியின் ஒரு பகுதியாக, வெளி நாட்டு அறிஞர்களால் முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்டு, 1915 இல் இந்த தஞ்சை கோயிலை கட்டியவர் இவரே என முற்றுறுதி செய்யப்பட்டவர் தான் ராஜராஜ சோழன். அதற்கு முன்னர் தமிழ் நிலத்துக்கு ராஜ ராஜ சோழன் என்ற பெயர் தெரியாது. 


தில்லை

முன்னதாக ராஜராஜ சோழன் தில்லை தீட்சிதர்கள் ஒளித்து வைத்திருந்த திருமுறைகளை மீட்டான் என்று சந்தான குரவர் ஒருவர் பெயரில் உள்ள ஓர் இலக்கியக் குறிப்பு உண்டு. அது அந்த சந்தானக் குரவர்தான் எழுதினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் பனுவலின் மொழிநடை 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அந்நியர் படையெடுப்பு இடர் ஓய்ந்து, கோயில் சார்ந்த விஷயங்களை மீண்டும் துவங்குகையில், இடைவெளிகளை நிரப்ப வாய்மொழி மரபு உட்பட அகப்பட்ட கதைகளை எல்லாம் திரட்டி அதன்படி கோயில் ஸ்தல புரணங்களை எழுதி முக்கியஸ்தர் எவர் பெயரிலோ இயற்றி அதை புழக்கத்துக்குக் கொண்டு வரும் வழக்கம் இருந்தது. அப்படி உருவான பல கதைகளில் ஒரு புனைகதையே அது. அதற்கு எந்த வரலாற்று மூலமும் இல்லை என்று குடவாயில் அவர்கள் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். 


எனில் 1950க்கு பிறகு ராஜராஜ சோழன் மற்றும் சோழ தேசம் சார்ந்த வரலாறு மொத்தமும் வெளியான பிறகு, வெற்று தமிழ் பெருமிதம், ஆரியர் தமிழர் முரண் அரசியல் சார்ந்து, சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் வரை ஊதிப் பெருக்க வைக்கப் பட்டதே இந்த புனைகதை என்பதை எவரும் அறியலாம். குடவாயில் பாலசுப்ரமணியம் பணிகளில் ஒரு பகுதியாக, பிறரன்றி அவர் மட்டுமே பேசிய, மேற்சொன்னவற்றைப் போல பலவை உண்டு.


*********


தமிழ் நிலத்தின் வரலாற்றை எழுதிய முன்னோடிகளில் ஒருவரான திரு நீலகண்ட சாஸ்திரிகள் மீது அவர் தமிழ் தேசியம் என்பதற்கு எதிரானவர். இந்திய தேசியச் சார்பு கொண்டவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. 1915இல் ராஜராஜ சோழன் கண்டு பிடிக்கப்பட்ட சில வருடங்களுக்கு உள்ளாகவே 1935இல் சோழர்கள் வரலாறு இரண்டு பாகங்களாக நீலகண்ட சாஸ்திரி அவர்களால் முழுமையாகவே எழுதப்பட்டு விட்டது. தொல்லியல் அறிஞர்கள் வாசித்து வைத்திருந்த கல்வெட்டுகள் அனைத்தையும், அவற்றைத் தக்கச் சான்றுகள் அடிப்படையில் வரிசைக் கிரமமாக அடுக்கி, நவீன வரலாற்று எழுத்தின் முறைமைகளுக்கு உட்பட்டு மன்னர்கள் பெயர் வரிசையுடன் சோழ நிலத்தின் ஆதாரபூர்வமான முதல் வரலாற்றை அவரே முதன்முதலாகக் கொண்டு வந்தார்.


அவருக்குப் பின்னால் வந்த சதாசிவ பண்டாரத்தார் மேலும் அதிகமாக முன்சென்று முதன்மையாகக் கல்வெட்டுச் சான்று, அடுத்ததாகத் துணை வரலாற்றுச் சான்று, மூன்றாவதாகத் தமிழ் இலக்கியச்சான்றுகள் இவற்றுடனான இணைந்த அறிவியல்பூர்வமான ஊகம் இவற்றைக் கொண்டு முற்கால, பிற்காலச் சோழர் வரலாற்றையும் இணைத்து தமிழ் நிலத்தில் அதில் சோழ தேசத்தின் இடத்தை வரலாற்றை எழுதி முழுமை செய்தார். இன்றளவும் மேற்கண்ட இருவர்தான் சோழ நிலம் சார்ந்த வரலாற்று எழுத்தின் மதிப்புக்குரிய முன்னோடிகள்.


அதன் பின்னர் ஈழ நிலத்தின் சோழ ஆட்சி சார்ந்த ஆதாரங்கள், பிற தூர தேசங்களின் சோழ ஆட்சி சார்ந்த ஆதாரங்கள் இணைய, சோழநாட்டின் பொருளாதாரச் சமூக கட்டமைப்பு சார்ந்த ஆய்வுகள் விரிந்தன. அதில் ஜப்பானைச் சேர்ந்த ஆசிரியர் நோபுரு கராஷிமா எழுதிய, வரலாற்றுப் போக்கில் தென்னிந்தியச் சமூகம்: சோழர் காலம் எனும் நூல் ஒரு செவ்வியல் ஆக்கம். சோழப் பேரரசு மெல்ல மெல்ல அதன் நில மானிய முறை, வரி விதிப்புகள் முறை வழியே விரிந்து வளரும் சித்திரத்தைக் கல்வெட்டு ஆதாரங்கள் வழியாக மட்டுமே தொகுத்துக் காட்டுகிறார் கராஷிமா.


இத்தனை விரிவான பகைப்புலத்தின் பின்னே நின்று, அதில் எழுந்த சோழர் காலத்தின் தனித்துவமான 'கலைப் பண்பாட்டு' வெளியை நுண்மையாகவும் விஸ்தீரணமாகவும் எழுதி எடுத்த முன்னோடி என்று திரு குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை சொல்லலாம்


************

(ஓவியம்- சில்பி)
தொல்லியல் ஆய்வாளர் திரு இரா. நாகசாமி அவர்களின் மதிப்பு மிகு மாணவரான, கோயில் கட்டிடக் கலையில் முனைவரான குடாவாயில் அவர்களின் ஒட்டு மொத்த ஆக்கங்களின் எழுத்து பாணி தனித்துவம் மிக்கது. அவரது நூல்கள் குறிப்பிட்ட முறைமைப்படி அமைந்த அறிவுத்துறைசார் நூல்கள் எனினும், ஒரு சாமானியனும் கூட எந்த இடரும் இன்றி அந்த நூல்களை வாசித்து தனது அறிதலை விரிவாக்கிக்கொள்ள இயலும் வண்ணம் எழுதப்பெற்றவை. 

குடவாயில் நூல்களின் உள்ளடக்க முறைமையும் தனித்துவம் கொண்டதே. ஒரே ஒரு குறிப்பிட்ட களம் ஒன்றை எடுத்துக்கொண்டு, அது சார்ந்த தரவுகள் அனைத்தையும் வரிசைக்கிரமமாகத் தொகுத்து, தனது நோக்கு வழியே அந்த குறிப்பிட்ட களம் சார்ந்து கலை, பண்பாட்டு, வரலாற்று ரீதியான முழுமை நோக்கிய பார்வை ஒன்றை முன்வைப்பதே குடவாயில் அவர்களின் பணி முறைமை.


இந்த வகைக்குள் அமைந்த அவரது நூல் வரிசைகளை, புரிதல் வசதி கருதி ஒரு குறிப்பிட்ட விதத்தில் வகுத்துச் சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்லலாம். 


முதலாவது தீவிர அறிவுப்புலம் சார் நூல்கள்.

1. வரலாற்று இடைவெளிகளை நிரப்பும் நூல்கள்


இந்த வகைமையின் கீழ் குடவாயிலின் இரண்டு நூல்கள் முக்கியத்துவம் கொண்டவை. முதலாவது நந்திபுரம் எனும் தலைப்பிலான சிறு ஆய்வு நூல். சோழ நிலத்தில் தஞ்சை தலைநகரமாக உருவாகும் முன்னர், அங்கே தஞ்சை போலவே கீர்த்தி மிகுந்த நந்திபுரம் என்றொரு நகரம் இருந்து, அப்படியே காலவோட்டத்தில் கரைந்து மறைந்து போனது. ஆய்வாளர்கள் கிடைத்த தரவுகள் அடிப்படையில் இப்போதைய பழையாறைக்கு அருகே உள்ள நாதன் கோயில் என்று அழைக்கப்பெறும் சிற்றூர்தான் அந்த நந்திபுரம் என்ற முடிவில் இருந்தனர்.


அந்த பகுதிக்குப் பல்லவர் கலையிலிருந்து பரிமாண வளர்ச்சி கண்ட சோழக் கலையின் தடயங்களை ஆய்வு செய்ய வந்த குடவாயிலுக்கு அந்த நந்திபுரம் சார்ந்த சில தடயங்கள் கிடைக்க அதைப் பின்தொடர்கிறார். தொடர் ஆய்வுகள் வழியே இப்போதைய கண்டியூருக்கு அருகே உள்ள செங்கமேடு எனும் சிற்றூரே பண்டைய நந்திபுரம் என்று நிறுவுகிறார். அங்கே தமிழகச் சைவத்தின் லகுலீச பாசுபதம் சார்ந்த முன்சுவடுகள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து சொன்னார். அவைகள் அடங்கிய செறிவான ஆய்வு நூலே வரலாற்று ஆய்வுலகில் குடவாயிலுக்குத் தனி இடம் அமைத்துத் தந்த நந்திபுரம் நூல்.


இரண்டாவது நூல் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சித் தலைமையை ஏற்காது, தமிழ் நிலத்தில் தனி நிலம் கொண்டு ஆட்சி செய்த கோனேரி ராயன் எனும் மன்னனை, தமிழ் வரலாற்று ஆய்வுலகம் தவற விட்ட அவனது வரலாற்றை அவனது ஆட்சி பரப்பை, அவனது சமூக நடவடிக்கைகளை, முப்பதுக்கும் மேலான கல்வெட்டுகள், இலக்கியச் சான்றுகள், காசுகள் உள்ளிட்ட தொல்லியல் சான்றுகள் வழியே குடவாயில் எழுதி எடுத்த, தமிழ் மன்னன் கோனேரி ராயன் எனும் சிறு ஆய்வு நூல்.


2. வரலாற்றைத் தொகுத்துச் சொல்லும் நூல்கள்


இந்த வகைமையின் கீழ் இரண்டு நூல்கள் முக்கியத்துவம் கொண்டவை. முதலாவது 550 இல் கிடைக்கும் முதல் கல்வெட்டுச் சான்று துவங்கி இந்திய விடுதலை வரை அந்நிலம் கொண்ட வரலாற்று வளர்சிதை மாற்றத்தை முழுமையாக விவரிக்கும் தஞ்சாவூர் எனும் நூல். இரண்டாவது தஞ்சை நாயக்க மன்னர்கள் எனும் நூல். இந்த இரண்டு வரலாற்று நூல்களும் தனித் தனியே வாசிக்கத் தக்கன எனினும், குடவாயில் நூல்களைக் கல்வியாகப் பயிலும் ஒருவர்க்கு அந்த மொத்த நூல்களும் எழுந்த அடித்தளத்தை விரிவாக அறிந்து கொள்ள வகைமை செய்யும் நூல்கள் என்றும் அமைவன இவ்விரு நூல்களும்.


3. கோயிற்கலை நூல்கள்


இந்த வகைமைக்குள் அமைவனவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்த நூல். தமிழகக் கோபுரக் கலை மரபு எனும் நூல். சோழ மண்டலப் பேராலயங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த நூல், ஆநிரை கொட்டிலின் வாயில் துவங்கி, யாக குண்டத்தின் வேள்வி எனும் வடிவம் வரை, கோபுரங்கள் படிப்படியாக அடைந்த வளர்ச்சியை, அதன் அதிட்டானம் முதல் கலச வரிசை வரை விரிவாக விளக்குகிறது. பல்வேறு ஆலயக் கலை நூல்களுள் இந்நூல் ஒரு முதன்மை செவ்வியல் ஆக்கம் என்றே நிலைபெற்று விட்டது.


இந்த வகைமையில் ராஜராஜேச்சரம், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர், திருவாரூர் திருக்கோயில், என்ற நான்கு நூல்களும் இந்தக் கோயில்களை அவை எழுந்து வந்த வரலாற்றுப் பண்பாட்டுப் பின்புலத்தில் பொருத்தி, இந்தக் கோயில்கள் கொண்ட தத்துவார்த்த ஆத்மிகத் தளங்கள் வழியே, இவை தமிழ் நிலத்தின் செழிப்பான கலைச் செல்வங்களாகத் திகழும் வகைமையை விரித்துரைக்கும் நூல்கள் ஆகும்.


4. பண்பாட்டு ஆய்வு


இந்த வகைமையின் முக்கிய நூல், தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற தலைப்பிலான விரிவான ஆய்வு நூல். சைவ பக்தி மரபின் முக்கிய கூறான ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் தொகுப்பான மூவர் தேவாரம் வழியே, பதிகங்கள் முதன் முதலாக எப்போது தேவாரம் என்று மாறின, பண்ணிசைத்து முதலில் பாடியவர் யார், இசை கூட்டியவர் யார் யார், எவர் எவர் ஆட்சிக் காலம் வழியே இந்த ஓதுவார் மரபு வளர்ந்து செழித்தது என்பதனை கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் பிற கலை சாட்சியங்கள் வழியே இந்தப் பண்பாட்டு வரலாற்றை விரிவாக எழுதிக்காட்டுகிறது.

5. நுண் கலைப் பண்பாடு


இந்த வகையின் முக்கிய நூல், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் என்ற தலைப்பில் அமைந்த நூல். மகேந்திர பல்லவன் உருவம் துவங்கி 17 ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் ஓவியங்கள் வரை சோழ மண்டலம் முழுக்க நிறைந்து நிற்கும் வரலாற்று ஆளுமைகளின் உருவங்களை அவை அங்கே அமைந்த பின்புலம் உள்ளிட்டு விரிவாக விளக்கி, வரலாற்று ஓட்டம் ஒன்றின் சுழிப்பைத் தொகுத்துக் காட்டும் நூல்.


இரண்டாவது வெகுமக்கள் நோக்கி எழுதப்பட்ட நூல்கள்.


6. கோயில்கள் கொண்ட தனித்துவங்கள்.


ராஜ ராஜ சோழன் வந்து வழிபட்ட, மயூர சர்மன் என்பவர் சூரியனைத் துதித்து பாடிய சூரிய சதகம் என்ற 100 பாடல்கள் கல்வெட்டாகப் பதியப்பெற்ற கோயில் எது? 


நேற்று ஒருவனைக் கண்டேன்

இன்றோ அவன் இல்லை. (இறந்துவிட்டான்)

இந்த நிலையாமை கொண்ட உலகில் எதன் மீதும் ஆசை கொண்டு நில்லாதீர்

நாம் ஈட்டியவற்றில் நமக்குப் பயன்பட்டவை போக எஞ்சியவற்றை

இந்த உலகம் நலம் பெற மனம் உவந்து அளியுங்கள்.


இப்படி ஒரு கல்வெட்டு, எழுதியவர் பெயர் ஆதம்பாக்கத்துக் கம்பன் அரையன். இந்த கல்வெட்டு தமிழ் நிலத்தின் அபூர்வமான சுவஸ்திக் வடிவ படிக்கிணறு ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த குளத்தைத் தனது மன்னன் மார்பிடுகு மீதான அன்பில் எடுப்பித்தவரே இந்த அரையன்தான். இந்த கல்வெட்டு பாடல் கொண்ட அபூர்வ வடிவ குளம் எங்கே உள்ளது?


இப்படி தமிழ் நிலத்தின் பல்வேறு கோயில்கள் கொண்ட தனித்துவத்தை, அங்குள்ள கல்வெட்டுகள் சொல்லும் தகவலின் படி தொகுத்து 100 கட்டுரைகளுக்கும் மேலாக எழுதி அவை


  • கலைமிகு கோயில்களும் கல்வெட்டு சாசனங்களும்.

  • கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்.

  • அரிய செய்திகள் சொல்லும் அற்புத ஆலயங்கள்.

  • சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்.


என்ற தலைப்புகளில் நான்கு புத்தகங்களாக எழுதப்பெற்றிருக்கிறது.


7. மரபுச் சுவடுகள்


தமிழ் நிலத்தின் ஏறு தழுவுதல் எனும் வீர விளையாட்டு வரலாறு நெடுக எவ்விதம் பரிணாமம் கொண்டது? 


அன்றில் பறவையைப் பார்த்தது உண்டா? அவை நமது கோயிற் கலை மரபில் எங்கெல்லாம் இடம்பெற்றிருக்கிறது.


இப்படி 50கும் மேலான கட்டுரைகளை


  • தமிழக மரபுச் சுவடுகள்.

  • தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்.


எனும் இரு நூல்கள் தாங்கி நிற்கிறது.


8. ரசனையியல்


சிற்பிகள் பிரம்மனை இறக்கைகளுடன் வடித்த ஒரே ஒரு அபூர்வ படிமை எங்கே உள்ளது, அதன் இலக்கிய வடிவம் எங்கேவுள்ளது.


திருமெய்யம் குடைவரை சயணப்பெருமாள் சுற்றி நிகழும் நாடகம் என்ன.


இப்படி ஐம்பதுக்கும் மேலான கட்டுரைகள் அடங்கியது


கலையியல் ரசனை கட்டுரைகள் 


எனும் தலைப்பு கொண்ட இரண்டு தொகுதி நூல்கள்.


இறுதியாக வந்த இரண்டு நூல்களின் தலைப்பே அதன் உள்ளடக்கப் பேசுபொருளை விவரித்துவிடும். 


கலையியல் ரசனை கட்டுரைகள் - முதல் நூல்


  • செம்மொழித் தமிழ் நூல்களில் தொன்மக் கூற்றுகளும் அவற்றின் கலை வடிவங்களும்.


இந்த நூலில் சிபிச் சோழன் புராணம், முசுகுந்தன் புராணம், இந்திரன் ஆயிரம் கண் பெற்ற புராணம் போன்ற இன்ன பிற புராணக் கதைகள் எல்லாம் சிற்ப சாட்சியங்களாக இடம்பெற்ற தடங்களை, அவற்றின் கலை எழிலை விவரிக்கிறார் நூலாசிரியர்.


கலையியல் ரசனை கட்டுரைகள் - இரண்டாவது நூல்


  • தமிழ் இலக்கியமும் தமிழகத்து கலைப் படைப்புகளும்.


இந்த நூலில் கோயிற் கலையில் தலைக்கோலிகள் கொண்ட இடம் சார்ந்த சிற்ப சான்றுகள், இன்றளவும் தொடரும் குடக்கூத்து என்பதன் சிற்ப சான்றுகள் இப்படி பல கட்டுரைகள் உள்ளன. அதில் தலையாயது வான் தோய் வெல் கொடி எனும் கட்டுரை. கொடி என்பது நமது இலக்கிய மரபில் எங்கெல்லாம் எவ்விதமெல்லாம் பயின்று வருகிறது, சிவன் கொடி ஏந்தி நடனம் புரியும் அபூர்வ சிற்பம், தங்கள் கைகளில் கொடிகள் ஏந்தி அமர்ந்திருக்கும் அபூர்வ சப்த மாதர் சிலைகள், தாராசுரத்தில் திரிபுரம் எரிக்க கொடி பறக்கும் தேரில் எழும் சிவன் சிற்பம், திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில், பங்குனித் திருவிழா சார்ந்து கோயில் கொடியேற்றம் நிகழும் 17 ஆம் நூற்றாண்டு துவஜாரோகன ஓவியம் என, நமது பண்டைய தமிழ் நிலத்தில் கொடிகள் கொண்ட இடத்தை விரிவாக விளக்கும் கட்டுரை.


**********

கொற்றவை

சமீபத்தில் நண்பர்கள் நால்வர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரங்கியூர் திருமூலநாதர் கோயில் சென்றிருந்தோம். கோயில் வளாகத்தின் உள்ளே தனியே ஒரு மண்டபத்தில் முற்கால சோழர் கலை மேன்மைகளான எழில்மிகு வராஹி, கொற்றவை சிலைகளைக் கண்டோம். பல்லவர் கலையின் தாக்கம் கொண்டு சோழர் கலை நோக்கி நகரும் உருவ அமைதி கொண்ட சிலைகள் அவை. அப்படி அவை பரிணாம மாற்றம் பெறும் அழகை அங்கே ரசிக்கலாம். 


தமிழகக் கோயிற் கலை எழுத்தின் துவக்கத்தில், பல்லவர் கலை வேறு, சோழர் கலை வேறு. இரண்டும் தனித்தனி என்ற எண்ணம் இருந்தது. பின்னே மெல்ல மெல்ல பாரதம் தழுவிய சிற்பிகள் மரபு வேறு, மன்னர்கள் வரிசை வேறு என்ற விளக்கம் கிடைத்தது. சிற்பிகள் மரபு தனி. அவர்கள் மன்னர் மரபு கேட்ட வண்ணம் சிலவற்றை செய்து அளிக்கிறார்கள். இப்படி வளர்ந்ததே பாரதம் நெடுக உள்ள கோயிற் கலை மரபு. ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய தலைமை சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்து உபசரணை செய்தார் போன்ற கதைகள், சிற்பிகள் மரபின் இடத்தை திட்டவட்டமாகவே வெளிப்படுத்துவன.


இந்த பரிணாம வளர்ச்சி அளவுக்கே, கோயிற் கலைக்குள் பரிவர்த்தனைகளும் உண்டு. குடவாயிலை பயிலும் ஒருவர் அவரது ஒவ்வொரு நூல் வழியாகவும் அதை அறிய முடியும். உதாரணத்துக்கு பிரம்மன் உருவம் கெளட தேசத்தில் எவ்விதம் வடிக்கப்பெறும் என்பதை விளக்கி அந்த பிரம்மனின் சிற்ப வடிவங்கள் எங்கே எவ்விதம் இங்கே சோழக் கலையில் இடம்பெறுகிறது என்பதை குடவாயில் அவர்கள் தொகுத்து விளக்கி காட்டுகிறார்கள். அதே போல தமிழ் நிலத்தின் தனித்துவமான இசைக்கருவி ஒன்று சிற்பிகள் மரபு வழியே கர்நாடகம் தொட்டு எல்லோரா வரை செல்லும் வகைமையை சிற்ப சாட்சியம் வழியே விளக்குகிறார். குடமுழா என்பதே தமிழ்நிலம் கண்ட தனித்துவமான அந்த இசைக்கருவியின் பெயர். அது குறித்த நூலின் தலைப்பும் குடமுழா என்பதே. 


பண்டைய தமிழ் நிலம் கண்ட நூற்றுக்கணக்கான இசைக்கருவிகளில் முழவு எனும் இசைக் கருவி எங்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்பட்டது, அந்த முழவுகளில் எத்தனை வகைகள் உண்டு, அதில் குடமுழவம் எனும் முழவின் தனித்தன்மை என்ன, அது சிவனார் ஆடும் தாண்டவத்தின் பிரதான இசை கருவிகளில் ஒன்றாக எவ்விதம் மாறியது, அந்தக் குடமுழவம் ஒரு முகம் இருமுகம் என வளர்ந்து ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முகக் குடமுழாவாக எவ்விதம் உயர்ந்தது என்பதை, சங்க இலக்கியம் தொட்டு, பஞ்ச மரபு நூல் தொடர்ந்து, கல்லாடம் நூல் வரை குடமுழவத்தின் வளர்ச்சிப்போக்கை ஆசிரியர் விவரிக்கிறார்.


சீயமங்கலம்

சிற்ப மரபில் குடமுழவம் இடம்பெறும் சாட்சியங்கள் வியக்க வைப்பது. சீயமங்கலம் பல்லவர் குடைவரை கண்ட முதல் நடராஜர் சிற்பத்தின் கீழே இருக்கும் பூதம் இசைப்பது ஒரு முகக் குடமுழா. 


காஞ்சி கைலாச நாதர் கோயிலில் சிவனார் ஆடும் சம்ஹார தாண்டவ சிற்பத்தில் இரட்டை குடமுழா இசைக்கப்பெறுகிறது. தஞ்சை கோயில் சோழர் கால ஓவியத்தில் மூன்று முகம் கொண்ட குடமுழா காணக்கிடைக்கிறது. தில்லையில் இரு முகங்கள் கொண்ட இரட்டை குடமுழவம் வாசிக்கும் சிற்பம், வாணன் ஒருவன் நான்கு கரங்களால் ஐந்து முகம் கொண்ட குடமுழா இசைக்கும் சிற்பமும் செதுக்கப்பெற்றிருக்கிறது. பல்வேறு ஓவியங்களில் சிற்பங்களில் சிவனார் தாண்டவத்தில் நந்தியம் பெருமான் இசைப்பதாகக் காட்சி தரும் ஐந்து முகக் குடமுழா, நேர்காட்சியாக திருத்துறை பூண்டியில் சோழர் கால எழுத்துப்பொறிப்புடன் காணக்கிடைக்கிறது.


**********


மேற்சொன்ன பரிவர்த்தனைகள் அளவே குடவாயில் நூல்கள் வழியே காணக் கிடைக்கும் கோயில் வழிபாட்டு பண்பாடு சார்ந்த அசைவுகளும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. உதாரணத்துக்கு எல்லா சிவாலயங்களிலும் கோயில் கொடிமரம் முன்பு கவிழ்த்தி வைத்த தாமரை உருவில் பலி பீடம் ஒன்று காட்சி தரும். அந்த பலி பீடத்தை மையமாகக் கொண்டு நிகழ்ந்த ஸ்ரீ பலி திருவிழா குறித்த ஆசிரியரின் சித்தரிப்புகள்.


தெய்வத்துக்கு உயிரையையே பலியாகத் தந்த பண்டைய வழிபாட்டு மரபு, உன்னதமாக்கம் பெரும் சித்திரத்தை சிலப்பதிகார சதுக்க பூதம் கொள்ளும் பலி உணவுகளும், அது சார்ந்த விழாவும் சித்தரிக்க, மணிமேகலையின் மலர்வனம் புக்க காதை மயன் அமைத்த மாய பத்மபீடம் குறித்துப் பேசுகிறது. நாயன்மார் கதைகளிலோ புகழ்த்துணை நாயனாருக்கு பத்மபீடம் வழியே இறையனார் தங்கக்காசு அருள்கிறார். ராஜராஜ சோழன் பல எடை கழஞ்சு பொன் கொண்டு பத்மபீடம் எடுத்ததாகக் கல்வெட்டு குறிப்புகள் சொல்கிறது. தாராசுரம் கோயிலில் தனிச் சன்னதி போலவே படிகள் அமைந்த பத்ம பீடம் உண்டு. தாராசுர சிற்ப தொகுதிகள் துவங்கி, திருவாரூர் கோயில் தேவாசிரிய மண்டப விதான ஓவியங்கள் வரை ஸ்ரீபலி திருவிழா எவ்விதம் நிகழும் என்பதை விரிவாக சித்தரிக்கிறது. இலக்கிய, ஓவிய, சிற்ப வரிசையில் மட்டும் கலைத்தடம் என்று எஞ்சி வாழும் இந்த வழிபாட்டு மரபு, எங்கே எவ்விதம் மறைந்து போனது? 


அதே போல பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பிறகு புதிதாகத் தோன்றிய நவக்கிரக சன்னதிகளும் நவக்கிரக வழிபாடு சார்ந்த ஆசிரியரின் எழுத்துக்கள். சங்க இலக்கியம் துவங்கி கோள்கள் தெய்வங்களாக வணங்கப்பெறும் வழிமுறை இங்கே உண்டு. குறிப்பாக சூரியனை வணங்குவது. சூரியன் தனி சன்னிதி கொண்ட கோயில்கள் தமிழ் நிலம் தொட்டு பாரதம் நெடுகவே உண்டு. அந்த வரிசையில் தாராசுரத்தில் உள்ள அர்த்தநாரி சூரியன் பாரத நிலத்தில் வேறு எங்கும் காணக்கிடைக்காத தனித்துவம் கொண்ட சிற்பம். தமிழ் நிலத்தில் தில்லை கோபுரத்தில்தான் ஒன்பது கோள்களின் தெய்வங்களும் முதன் முறையாக இடம்பெறுகின்றன. சூரியனை முதன்மை தெய்வமாகக் கொண்ட சோழர் கோயிலான கும்பகோணம் சூரியனார் கோயில், கிருஷ்ணதேவராயர் சூரியன் சன்னதியைச் சுற்றி முதன்முறையாக பிற எட்டுக் கோள்களின் தெய்வங்களுக்கு சன்னதி அமைக்கிறார். அங்கிருந்தே சிவாலயங்களில் நவக்கிரகச் சன்னதி அமைப்பதும், வெகுமக்கள் மத்தியில் அதன் வழிபாடும் பெருகுகிறது. இப்படி இருந்த வழிபாட்டு மரபு ஒன்று மறைவதும், புதிய வழிபாட்டு மரபு ஒன்று உதிப்பதுமான பண்பாடு சார்ந்த வசீகர மர்மத்தை குடவாயில் நூல்கள் வழியே ஒருவர் நெருங்கி அறிய முடியும். இப்படி தமிழ் நிலத்தின் கோயிற் கலை சார்ந்த பல பல அலகுகளில் மிக முக்கிய விஷயங்கள் பலவற்றை தொட்டெடுப்பவை குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் நூல்கள்.


**********


இருபது வருடம் முன்பாக வாசித்த, தஞ்சை பெரியகோயில் கருவறை முன்பு நிற்கும் துவார பாலர் சிற்பங்களை எவ்விதம் அணுகி அறிவது என்பதன் மீதான ஆசிரியர் குடவாயில் அவர்களின் (மாசுணத்து வாய் மத களிறு எனும் தலைப்பில் அது தனிக் கட்டுரையாகவும் எழுதப்பட்டிருக்கிறது) விளக்கம் வழியாகவே என்றென்றும் அவரை தொடரும் வாசகனாக ஆனேன். யானையை விழுங்கும் பாம்பு எத்தனை பிரம்மாண்டம், அந்தப் பாம்பை அணியாகப் பூண்ட கதாயுதம் எத்தனை பிரம்மாண்டம், அத்தகைய்ய கதை அந்த துவாரபாலகன் இடையளவே என்றால் அந்த துவாரபாலகன் உயரம் எத்தகைய அசாத்திய உயரம், அவனே கைகளில் விஸ்மையா முத்திரை காட்டி வியந்து நிற்கிறான் என்றால் அந்த கருவறை தெய்வம் கொண்ட விஸ்வரூப விரிவுதான் என்ன, இப்படிப் பல சொல்லித் தந்த அந்த ஆசிரியர் வழிகாட்டலில் கோயிற்கலை மரபு நூலை கையில் காவியபடி கோயில் கோயிலாகத் திரிந்து கோபுரக் கலையை ரசித்திருக்கிறேன். இமயத்தில் பொங்கி வழியும் கங்கையை நேரில் கண்டிருக்கிறேன். குடவாயில் விவரித்த சிற்ப அழகியலை தொடர்ந்து கோயில் கோயிலாக சென்று பெரும்பாலான கங்காதரர் சிலைகளை அதன் கலை எழிலை ரசித்திருக்கிறேன். மிகச் சமீபக் கோயில் காண் பயணம் வரை என்னுடன் குடவாயில் உடன்வராத பயணம் என ஒன்றில்லை.

இந்த ஓட்டத்தில் நான் கண்ட வரையில் இன்றைய கால சூழலில் ஆசிரியர் குடவாயில் செய்த பணிகளும் அதன் வழியே அவர் கொண்ட இடமும், அதன்படியிலான அவரது தேவையும் மிக மிக அவசியம், அவர் தந்த கலை பண்பாடு சார்ந்த விழிப்புணர்வின் சமூக தேவை மிக அவசரம் என்றாகிக்கொண்டு வருகிறது. ஆசிரியரின் அரை நூற்றாண்டு களப்பணியில் அவர் கண்ட பல கலை மேன்மைகளை முற்றிலும் நமது அறியாமையால் அழிய விட்டு விட்டோம் என்று அவரே சொல்கிறார். அவரது நூல்கள் வழியே புகைப்படமாக ஆவணம் கண்ட பல நூறு கலைதடங்களில் முக்கியமான பல அழிந்து விட்டன. கோயில் புணர் நிர்மாணம் எனும் பெயரில் பல அரிய கல்வெட்டுகள் சிமெண்ட் பூசி மறைக்கப்பட்டு விட்டன, அரிய தொன்மையான ஓவியங்கள் மீது வெள்ளையடிக்கப்பட்டு அவை மறைந்து விட்டன. பஞ்ச முக குடமுழா எனும் அரிய இசை கருவியை இசைக்க முட்டுவார் மரபு என்ற ஒன்று உண்டு. அதை மரபார்ந்த முறையில் இசைக்கத் தெரிந்த கடைசி கலைஞரும் சில வருடம் முன்னர் மறைந்து விட்டார். அந்த கருவியை வாசிக்கும் மரபு அவருடன் முற்றிலும் அறுந்து விட்டது. 


கொரோனா முடக்கத்துக்கு பிறகு கோயில்கள் யாவும் தாள இயலா கூட்டம் நிரம்பி வழிகிறது, பேராலயம் எனும் அமைப்பே கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு வருகிறது. உபரியாக எல்லா ஆத்மீக அலகுகள் மீது இணையக்கோமாளிகள் உருவாக்கும் அபத்தங்களுக்கு பெருகும் வெகுமக்கள் ஆதரவு என பல பல காரணிகள் வழியே கோயிற்கலை மரபு மூச்சு திணறிக்கொண்டு இருக்கிறது. 


மீளும் வழி தேடும், நமது கலை பண்பாடு சார்ந்து உண்மையான தீவிர தேடுதல் கொண்ட மனங்கள் முன்பு, மீட்சிக்கு மிகச்சில பாதைகளே உள்ளன. அத்தகு பாதை ஒன்றை தனது வாழ்நாளையெல்லாம் இட்டு சமைத்தளித்த குடவாயில் பாலசுப்ரமணியம் என்ற என் பிரியத்துக்குரிய ஆசிரியரை, எங்கள் திருக்கோயில் கலைச்செல்வரை சிரம் தாழ்த்திப் பணிகிறேன்.


கடலூர் சீனு


குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki



கடலூர் சீனு கலை விமர்சகர், எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கிய வாசிப்பு குறித்த இவரது பார்வைகள் முக்கியமானவை. நவீன இலக்கியம் மட்டுமன்றி மரபான பண்பாட்டுத்தளங்கள் குறித்தும், சினிமா ஆவணப்படங்கள் குறித்தும் விரிவாக தொடர்ந்து எழுதுபவர். கவிதைகள் குறித்த இவரது கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் பரவலான வாசிப்பை பெற்றவை.