Tuesday, 17 February 2026

இன்னறு நீர் கங்கை - கங்கை நதியும் கங்கா தேவியும், கடலூர் சீனு

கங்கா தேவி

இன்னறு நீர்கங்கை யாறேங்கள் யாறே;

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே.

 -சுப்பிரமணிய பாரதி


1) கங்கை: தொன்மம் முதல் நவீன காலம் வரை


பாரம்பரிய இந்திய மனங்களுக்கு, இமையமலைத்தொடர் என்பது கைலாயம். சிவன் வாழும் இடம். இமையத்தின் ஒவ்வொரு சிகரமும் சிவலிங்கமே. இமையம் என்பது அந்த சிவனேதான். சிவனின் பெயர்களில் ஒன்று, கங்கைவார் சடையன். தனது ஜாடாமுடிக்குள் வைத்து கங்கையைக் கட்டியவன். விண்ணுலகில் இருந்து கங்கை மண்ணுலகு வீழும்போது அதன் வேகத்தில் பூமி சிதறிவிடாதிருக்க, சிவன் அந்த ஆகாய கங்கையை தனது ஜாடாமுடிக்குள் சிறைப்படுத்தி, மண்ணுலகுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் கங்கையை கசிய விட்டார் என்பது தொன்மக் கதை.

இமையமலைத் தொடரின் உச்சியில் உள்ள வெவ்வேறு இடங்களின் பனி அடுக்குகள் உருகி, கங்கோத்ரி துவங்கி படிப்படியாக வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஊற்றுமுகங்கள் தோன்றி நதிகளாகி, நான்கு சங்கமங்களில் அந்த நதிகள் கூடிப் பெருகி, பாகீரதி மற்றும் அளகனந்தா என்னும் பெயர்களில் இரு நதிகளாக ஐந்தாவது கூடுதுறையான தேவப்பிரயாகையில் சங்கமிக்கும்போது அங்கே கங்கை எனும் பெயர் தரித்து பெருநதியாக மாறி, ரிஷிகேஷ் வந்து சமநிலத்தை அடைகிறது கங்கை. சம நிலத்தில் பாட்னா அருகே இமையத்துக்கும் முன்பே தோன்றிய மூத்த நதியாக ஆய்வாளர்களால் கணிக்கப்படும், அங்கே தோன்றி நேபாளம், திபெத் எல்லைகளை கடந்து வரும் காளி கந்தகி நதி இணைகிறது. திரிவேணி சங்கமத்தில் இமையத்தில் தோன்றி வரும் மற்றொரு நதியான யமுனை இணைகிறது. இப்படித் தோன்றி வளர்ந்து பயணித்த கங்கை இறுதியாக, வங்க நிலத்தில் இரண்டு நதிகளாக பிரிந்து, பல்வேறு சிற்சிறு நதிகளாக மாறி கங்கா சாகர் எனும் பெயரில் கடலில் கலக்கிறது.


2500 கிமி தூரம் ஓடி, பல்லாயிரம் ஹெக்ட்டர் நிலப்பரப்பை, ஆண்டு தோறும் தனது பலநூறு டன் வண்டல் வழியே பசுமை செழிக்க செய்யும் கங்கை எனும் இந்த நதி இன்றி இந்திய வரலாறோ பண்பாடோ எழுந்தே இருக்காது எனும்படிக்கு இந்திய வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது கங்கை. சரஸ்வதி நதிக்கரை நாகரிகம், சரஸ்வதி நதி மண்ணுக்குள் மறைந்த பிறகு, சிந்து வெளி நாகரிகத்துடன் இணைந்து, சிந்து சரஸ்வதி நாகரிகமாக செழித்து, சிந்துவின் காலம் முடிந்ததும் அங்கிருந்து நகர்ந்து, இங்கே வந்து அமைந்து செழித்ததே கங்கைநதிக்கரை நாகரிகம் என்பது மிஷேல் தானினோ போன்ற ஆய்வாளர்கள் கூற்று. மண் மறைந்த அந்த சரஸ்வதி நதி, அந்தர் வாகினயாக ஓடிவந்து கங்கை மற்றும் யமுனை உடன் திரிவேணி (அலகாபாத்) சங்கமத்தில் இணைவதாக தொன்மக் கதை.


கங்கை பாவநாசினி. பாவங்களை போக்க விண்ணிலிருந்து பூலோகம் வந்து, பாதாள லோகம் வரை சென்றவள். மூவுலகிலும் அவளை தொட்டவர்கள் பாவம் நீங்கும் எனும் நம்பிக்கை கொண்டு, கங்கை துவங்கும் கங்கோத்ரி துவங்கி, பஞ்ச பிரயாகைகள் தொட்டு, கங்கை சமநிலம் காணும் ரிஷிகேஷ் தொடர்ந்து, காசி, திரிவேணிசங்கமம், தொடர்ந்து கங்காசாகர் வரை கங்கை இந்த நிலத்தில் நகரும் ஒவ்வொரு அடியும் இந்தியர்களுக்குப் புனித நிலமே. யுவான் சுவாங் கங்கை நதியில் மனிதர்கள் மட்டுமல்லாது பல்வேறு உயிர்களும் பாய்ந்து முக்தி தேடிக் கொள்வதாக குறிப்பிடுகிறார். என்றும் இந்தியர்கள் வாழ்வுக்கும், வாழ்க்கைக்குப் பிறகான நிலைக்கும் வாசலாக கங்கையே இருந்திருக்கிறது.


பண்டைய இந்திய ஆட்சி நிலப் பிரிவான 52 ஜனபதங்கள் கங்கைக் கரை உபரி கொண்டே எழுந்திருக்கிறது. இரும்பு யுகத்தில் விவசாயம் தொழில்நுட்பம் இவற்றில் வேகம் கூடிய கங்கை நதி நாகரிகம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் முழுத்த நகர நாகரிகம் கொண்டுவிட்டதைத் தொல்லியல் சான்றுகள் உறுதி செய்கின்றன. வரலாற்றில் கங்கைக் கரை நெடுக ஆண்ட ஒவ்வொரு மன்னருக்கும் கங்கை புனித நதியாகவே இருந்திருக்கிறது. அக்கினி போலவே தன்னில் விழுந்த எல்லா மலினங்களையும் நீக்குப்பவளாக, பின்னும் தூய்மை கெடாதவளாக கங்கை இருக்கிறாள் என்பது காலம் காலமான நம்பிக்கை. அக்பர் அன்றாடம் கங்கை நீரை அருந்துபவராக இருந்திருக்கிறார். எல்லா கோயில்களிலும் அபிஷேகத்துக்கு கங்கை நீரே சென்றிருக்கிறது.


காலனிய யுகத்தில் கங்கையின் தூய்மை செய்யும் நிலை விரிவாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. பிற நதிகள் போலன்றி கங்கை தனது பிராண ஆற்றலைக் குன்றாது எவ்விதம் தக்க வைத்துக் கொள்கிறது எனும் நிலை மீது ஆய்வுகள் நடந்திருக்கின்றன. கப்பல்களில் பயணிக்கையில் கங்கை நீர் கெடாமலே இருக்கும் நிலை கண்டு, கிழக்கிந்திய கம்பெனியால் அன்று கங்கை நீர் விற்பனை பண்டமாகவும் மாறி இருந்திருக்கிறது.


1830 துவங்கி அடுத்தடுத்த ஆண்டுகள் கங்கை யமுனை இரண்டு நதிகளுக்கும் இடைப்பட்ட பகுதி கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹூக்ளி நதியில் முதல் நீராவிப் படகு இயங்கி இருக்கிறது. கங்கை நதி மேல் முதல் பாலமும் புகை வண்டியும் காசி நோக்கி உருவாக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம் கண்ட பிறகு மேற்கு வங்கத்திலும், உத்ராகாண்டிலும் கங்கை மீது அணைகள் கட்டப்பட்டு முதன் முறையாகக் கங்கையை கட்டுப்படுத்தப்படுகிறது.


சிவன் சிரசு விடுத்து மண்ணில் இறங்கிய பிறகும் கங்கையின் ஆற்றல் தணியவில்லை. எனவே ஜன்னு மகரிஷி அவளைக் குடித்து, காது வழியாக வெளியேற்றினார் என்பது மற்றொரு தொன்மக் கதை. தொன்மைக் கால ஜன்னு முனிவரின் இடத்தை நவீன கால அணைகள் எடுத்துக்கொண்டு விட்டன.

2) கலாச்சார கங்கை


இந்தியா பண்பாட்டு ரீதியாக ஒரே நாடு. அதே சமயம் அதில் ஒவ்வொரு மொழி பேசும் நிலமும் அது அமைந்திருக்கும் சார்ந்து தனக்கே உரிய 'தனித்தன்மைகள்' சிலவற்றையும் கொண்டிருக்கின்றன. ஒட்டு மொத்த இந்தியாவின் வட இந்தியா, தென்னிந்தியா எனும் தனித்தன்மைகளை (பிரிவினை அல்ல) உருவாக்குவதில் பெரும்பங்கு, தண்டகாரண்ய காடுகளுக்கு உண்டு. தண்டகாரண்யக் காடுகளைத் தாண்டி மேலிருந்து கீழே வந்ததுதான் சைவம். தமிழ் நிலத்தின் சித்தாந்த சைவம் மிக மிக பிந்தி எட்டாம் நூற்றாண்டு துவங்கி மெல்ல மெல்ல வளர்ந்து 12 ஆம் நூற்றாண்டில் அமைப்பாக்கம் கண்ட ஒன்று. அதே போல தண்டக்காரண்யம் தாண்டி கீழே இருந்து மேலே போனதுதான் பக்தி இயக்கம். வெகு மக்கள் ஆத்மீகத்தில் வடக்கின் காசியும் தெற்கின் ராமேஸ்வரமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான். தேவாரத்துக்கு தெற்கின் திருக்காளத்தியும், வடக்கின் திருக்கேதாரமும் ஒன்றேதான். 


இந்திய நிலத்தின் இத்தகு பரிவர்த்தனையின் முக்கிய அலகாக என்றுமே கோயில் பண்பாடும் அதன் கலைமேன்மைகளும் இருந்திருக்கின்றன. அத்தகு கலாச்சார பரிவர்த்தனையில் கங்கையின் இடம் என்ன? குறிப்பாகத் தமிழ் நிலத்தின் இலக்கியங்களில், வரலாற்றில், கோயிற் கலைத் தடங்களில் கங்கையின் இடத்தை விவரித்துக் கூறும் முக்கிய நூலே முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதி அன்னம் வெளியீடாக வாசிக்கக் கிடைக்கும் ''கங்கை நதியும் கங்கா தேவியும்'' என்ற முக்கிய நூல். 


இந்த 2020 இல் கங்கை குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் உண்டு. தமிழில் அதன் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அந்த இடைவெளியைக் குறைக்க வந்த இந்த நூல், ஸ்டீபன் டெரியன் எழுதிய - கேஞ்ஜஸ் இன் மித் அண்ட் ஹிஸ்ட்ரி - எனும் நூலை படித்த உத்வேகத்தில், கங்கையின் துவக்கம் முதல் முடிவு வரை பல்வேறு புனிதத் தலங்களைக் கண்டு வரப் புறப்பட்டு, பயணம் முடித்து வந்து எழுதியது என்று முன்னுரையில் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.


கங்கை தோற்றம் முதல் சங்கமம் வரை என்ற தலைப்பில் அமைந்த முதல் அத்தியாயம், தலைப்பை விவரிக்கும் முகமாக கங்கை தோன்றும் இடம் முதல் அது கடலில் கலக்கும் இடம் வரை உள்ள நிலவியல் தரவுகள், கங்கோத்ரி உள்ளிட்டு, பஞ்சப் பிரயாகை, ரிஷிகேஷ், காசி, திரிவேணி சங்கமம் என ஒவ்வொரு புனிதத் தலத்தையும் கட்டமைத்த தொன்மக் கதைகள், அதன் இலக்கிய வெளிப்பாடுகள், கோயில்கள், அது கட்டப்பட்ட காலம், அதை கட்டிய மன்னர்கள், அங்கே உள்ள கங்கையன்னை, பகீரதன் படிமங்கள் என முழுமையாக விவரிக்கிறது.


இதிகாசங்களில் கங்கை என்ற அத்யாயம், வால்மீகி ராமாயணம், வியாச பாரதம், கம்ப ராமாயணம் இவற்றிலிருந்து கங்கை குறித்த பூர்வ கதையின் விவரணைகளைத் தொகுத்தளிக்கிறது.


பகீரதனின் முன்னோர்கள் பாதாள உலகில் சாபம் பெற்று இறப்பது. அவர்கள் ஆத்மா விண்ணுலகு செல்ல இயலாமல் தவிப்பது. அவர்களுக்கு அந்த ஆகாயகங்கை கொண்டு நீர்க்கடன் செய்தால் மட்டுமே அவர்கள் ஆன்மா விண்ணை அடையும் என்பதை அறிந்து, அந்த ஆகாய கங்கையை கீழே வரவழைக்க பகீரதன் தவமியற்றுவது, ஆகாய கங்கை சிவனால் தடுக்கப்பட்டு ஆற்றல் குறைந்து பூமிக்கு வருவது, பூமிக்கு வந்த கங்கையை ஜன்னு முனிவர் குடித்து அதை காது வழியே வெளியேற்றி கங்கையின் ஆற்றலை இன்னும் கட்டுப்படுத்துவது, அந்த கங்கையைப் பாதாள உலகுக்கு கொண்டு சென்று பகீரதன் தனது முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்து அவர்களை விண்ணகம் அனுப்புவது, இந்த கதையை இந்த அத்யாயம் இதிகாச சான்றுகளை வரிசையாக அடுக்கி முழுமையாகவே விவரிக்கிறது. இந்த அத்யாயம் இவ்வளவு விரிவு இல்லையேல் இந்த நூல் விவரிக்கும் கலை அழகுகள் அளிக்கும் விகாசம் குறைவுபடவே செய்யும்.


தமிழிலக்கியத்தில் கங்கை எனும் அத்யாயம், சங்க இலக்கியம் துவங்கி, மூவர் பாடிய தேவாரம் வரை கங்கை பயின்று வரும் இடங்கள், தமிழ் நிலத்தின் காவிரி என்பது கங்கை நதியுடன் ஒப்பு சொல்லி நிறுவப்படும் தன்மைகளைச் சுட்டிக்காட்டுகிறது.


சீரார் சிவகங்கை எனும் அடுத்த அத்யாயம், கங்கை தமிழ் நிலத்தில் சிவ கங்கையாக நிலைபெறும் வகைமையை விளக்குகிறது. தஞ்சை பெரிய கோயில் விமானம் என்பது இமைய மலையின் குறியீடே, அதில் பெய்யும் மழை யாவும் கங்கையின் குறியீடே. அந்த நீர் யாவும் சேரும் அந்தக் குளம் சிவகங்கை வாவி என்றே அழைக்கப்பெறுகிறது. தஞ்சை கோயிலுக்குள் கார்த்திகேயனுக்கு தனிக் கோயில் உண்டு. சிவனின் அக்கினி கங்கையில் விழுந்து, அதில் எழுந்த குழந்தையே கார்த்திகேயன் எனும் புராணக் கதையை அடியொற்றிய கோயில்.

  • குற்றாலத்தில் அருவி விழும் பாறையில் சிவனை பூஜை செய்யும் முருகன் புடைப்பு சிற்பம் உண்டு. அதைத் தழுவியே அருவி விழும். கங்கையைப் பூமிக்கு விட்ட சிவன் அவர். கங்கையின் மகன் முருகன். எனில் மக்கள் நீராடும் அந்த குற்றாலம் அருவி என்பது சிவகங்கையே.
  • கர்நாடகாவின் சிர்சி -யில் ஓடும் ஷால்மலா நதியின் குறிப்பிட்ட இடத்தில், நதியின் கீழ் பாறைகளில் ஸஹஸ்ர லிங்கங்கள் செதுக்கப்பட்டு உள்ளது. எனில் அந்த நதி கங்கையே. சிவகங்கை.
  • இப்படி கம்போடியாவின் நியாம்ரீப் நதி, ஜாவாவின் டாக்மாஸ் நதி இவற்றின் படுகைகளில் செதுக்கப்பட்ட ஸஹஸ்ரலிங்கங்கள் வழியே இந்த நதிகளும் கங்கை என்றே ஆகிறது.
  • தமிழ் நிலத்தின் சித்தன்னவாசல் குன்றின் மேலே நாவற்சுனை என்ற பெயர் கொண்ட சுனை உண்டு. அதன் ஆழத்தில் சிவ லிங்கம் செதுக்கப்பட்டிருக்கிறது. எனில் அந்தச் சுனை நீரும் சிவ கங்கையே.
  • திருச்சி திருச்செந்துறையில் கிபி 883 ஆம் வருடத்தைச் சேர்ந்த சோழக்கல்வெட்டு, காவிரியை கங்கைக்கு இணையாக வைத்துப் பேசுகிறது.

தஞ்சை பெரிய கோயில் ஓவியத்தில் சுந்தரர் சிவகங்கை வாவி ஒன்றுக்கு பூஜை செய்வது போலக் காட்சி உண்டு. அந்த ஓவியத்தில் உள்ள வாவி திரு வஞ்சைக்களம் கோயிலைச் சேர்ந்தது. 1000 வருடம் கடந்தும் இப்போதும் அதே போலத் தோற்றதுடன் அதே போல வழிபாட்டில் இருக்கும் வாவி அது. திருவிடை மருத்தூர் கோயிலில் குளம் வாயில் சிம்ம முகத்துடன் காட்சி அளிக்கிறது. அந்த வாயிலின் இரு புறமும் கங்கை யமுனை படிமங்கள் அமைந்து அந்த வாவி சிவகங்கை என்பதை வலியுறுத்துகின்றன. இப்படி கங்கை கொண்ட சோழபுரம், விரிஞ்சிபுரம் கோயில் என நீளும் கங்கையின் இன்னும் பல்வேறு கலைத் தடயங்களை விவரிக்கிறது இந்த அத்யாயம்.


சோழகங்கம் எனும் அடுத்த அத்தியாயம் ராஜேந்திர சோழன் படை கொண்டு எந்த வழியே சென்று, எந்தெந்த கங்கைக் கரை அரசுகளை வென்று, இன்றைய ஹூப்ளி-யில் கங்கையை எடுத்துக் கொண்டு தமிழ் நிலம் திரும்பி வந்து, தனது தலை நகரமான கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்த கங்கை கொண்ட சோழ புறம் கோயிலில் தெளித்து அதை புனிதம் செய்து, அதே கோயிலின் சிவகங்கை வாவியில் கங்கையை கலந்த வரலாற்று நிகழ்வை, கங்கை அன்றைய மன்னர்கள் மத்தியில் அவர்கள் உள்ளத்திலும் பண்பாட்டின் உயரத்திலும் எப்படி உயர்வு கொண்டு வீற்றிருந்தது எனும் நிலையை விவரிக்கிறது.

தமிழகத்துக் கலைப்படைப்புகள் எனும் அத்யாயம் மாமல்லபுரம் சிற்ப தொகுதியான அர்ஜுனன் தபசு சிற்ப வரிசையில் துவங்குகிறது. சா. பாலுச்சாமி போன்ற பல ஆய்வாளர்கள் பல்வேறு சான்றுகள் அடிப்படையில் அது அர்ஜுனன் தபசு சிற்பமே என்று நிறுவிய அந்த சிற்ப வரிசையை நூலாசிரியர் இந்த அத்யாயத்தில், பட்டடக்கல், எல்லோரா, உதயகிரி போன்ற இடங்களில் அமைந்த பகீரதன் தவச் சிற்ப வரிசைகள், பகீரதன் தவ இலக்கிய விவரணைகள் இவற்றின் வழியே, அந்த சிற்ப தொகுதி பகீரதன் தவம்தான் என்பதையும், அதில் ஆகாய கங்கை, மண்ணுலக கங்கை, பாதாள கங்கை என்ற மூன்று நிலைகளிலும் கங்கை காணப்பெரும் கலைத் தடத்தையும் விரிவாக விளக்குக்கிறார்.


பல்லவர் காலக் கலைப்படைப்புகளில் தலையாயதாக திருச்சி மலைக்கோட்டை குடைவரை கங்காதரர் சிற்பத்தைக் குறிப்பிட்டு நூலாசிரியர் அந்த படிமத்தைப் பாதாதிகேசம் விவரிக்கிறார். கேசத்தின் அருகே கங்கை பணிந்து வணங்கி சிவனின் ஜடாமுடிக்குள் புகுகிறாள். கல் மேல் நடந்த காலம் நூலில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் இந்த படிமையில் இடம்பெறும் நாய் குறித்து, அது அங்கே இடம் பெற எந்த புராண அடிப்படையும் இல்லை என்பதையும் விவரித்திருப்பார். இங்கே இந்த நூலில் பல்வேறு கங்காதரர் படிமை உடன் நாய் இடம் பெறுகிறது. பாலசுப்ரமணியன் அதை நரி என்று குறிப்பிடுகிறார். கங்கை வரும் வேகம் கண்டு ஊளையிடும் நரி என்கிறார். அதற்கு என்ன புராண கதை என்பதை இவரும் குறிப்பிட வில்லை.


மாமல்லையில் உள்ள இரண்டு கங்காதரர்களில் ஒருவர் விரிசடை இன்றி இருக்கிறார். மற்ற படிமையில் கங்கை முதன் முறையாக நின்ற கோலத்தில் முழுமையாகத் தோற்றம் அளிக்கிறாள்.

கங்காதரர், காஞ்சி கைலாசநாதர் கோயில்

அதே போல காஞ்சி கைலாசநாதர் கோயிலில் அமைந்த நான்கு கங்காதரர் படிமையும் வெவ்வேறு விதங்களில் அமைந்தவை. சிதைந்த ஒன்றை தவிர்த்து விட்டால், மற்ற மூன்றில் முதல் கங்காதரர் கங்கை இல்லாது நிற்கிறார். அடுத்தவர் ஊர்துவ தாண்டவராக நிற்கிறார். மூன்றாமவர் எண்கரங்கள் கொண்டு காட்சி அளிக்கிறார். பல்லவர் கலையில் ஒவ்வொரு படிமையும் பிரிதொன்றிலா வகைமையில் அமைந்திருக்கிறது.


பாண்டியர் கலையில் முற்றிலும் தனித்தன்மை கொண்ட கங்காதரரை புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோயிலில் காணலாம். இந்த கங்காதரர் படிமையை வடித்த சிற்பி பெயர் பகதாச்சார்யன் என கல்வெட்டின் அடிப்படையில் கூறுகிறார் நூலாசிரியர். தமிழ் நிலத்தில் குடைவரைகளில் புடைப்பு சிற்பமாக அமைந்த கங்காதரர் நான்கு மட்டுமே என்கிறார் வேறொரு ஆய்வாளர். ஒன்று திருச்சியில் மற்ற இரண்டு மாமல்லையில். நான்காவது இந்த கோகர்ணத்தில்.

கங்காதரர் திரிபங்க நிலையில், இடக்கையை இடையில் கடி ஹஸ்தமாக வைத்து, வலக் கையில் கூந்தல் இழையை இழுத்துப் பிடித்திருக்கிறார். கங்கை அஞ்சலி ஹஸ்தம் கொண்டு மண்டி இட்ட படி சிவன் சிரம் புகுகிறாள். இந்தக் கோயிலில் இந்தக் குடைவரை சிற்பத்துக்கு மேலே குன்றில் ஒரு சுனை உண்டு. இந்தக் கோயிலையும் இந்தச் சுணையையும் முன்பு பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த நூலை வாசித்த பிறகே சித்திரம் பிடி கிடைக்கிறது. இந்த நூல் சொல்கிறது. அந்தச் சுனைதான் ஆகாய கங்கை. ஒரு கணம் திகைத்து விட்டேன். என்ன ஒரு சிற்ப மேன்மை. இப்போதே ஓடிச் சென்று மீண்டும் அந்தக் கலை மேன்மையைக் காணும் ஆவல் எழுகிறது. இதுவே இந்த நூலின் பண்பும் பயனும் என்று சொல்வேன்.


அதியமான் கலையில் முக்கியத்துவம் கொண்டது நாமக்கல் குடைவரை ஹரிஹரர் சிற்பம். ஹரிஹரர் தலை மேல் கங்கையைச் சூடி நிற்கிறார். இது போல வேறொரு படிமம் வேறெங்கும் இல்லை என்று நூலாசிரியர் கூறுகிறார்.


சோழர் கலையில்தான் பல்வேறு இடங்களில், தலையில் வந்து இறங்கும் கங்கையின் பொருட்டு ஊடல் கொண்டு விலகும் பார்வதியை சமாதானம் செய்யும் கங்காதரர் எனும் எழிலார்ந்த தனித்துவமான படிமைகள் பல காணக் கிடைக்கிறது.

    கங்கோத்ஸர்ஜனர் (ஓவியம்- தமிழ்குமரன்)

    தஞ்சை பெரிய கோயில் இத்தகு கங்காதரர் படிமை சில உண்டு. கோயில் விமானத்தில் மேலதிகக் கலைச் சுவடாக அஷ்ட வசுக்களின் (அஷ்ட வசுக்கள் தங்கள் சாபம் தீர கங்கைக்குப் பிறந்தவர்கள். எட்டாவது வசுவின் பெயர் காங்கேயன் எனும் பீஷ்மர்) புடைப்பு சிற்பங்கள் உண்டு என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.


    மானம்பாடி, பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்று தொடரும் கலை அழகுகள் வரிசையில், கங்கை கொண்ட சோழபுரம் நடராஜர் படிமை (அவரது புன்னகை) சிறப்பு வாய்ந்தது. அதில் அவரது விரிசடையில் கங்கை குடிகொண்டிருக்கிறாள்.


    தாராசுரம் கோயிலில் ராஜ கம்பீரன் திருமண்டபத்தில் முற்ற முழுதான பெண் உடல் கொண்ட ஆளுயர அழகிய கங்கை சிலை உண்டு. கங்கையின் வாகனமாகிய மகரம் அல்லது முதலை இல்லாததால் இவள் மாயா தேவியாக இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் யூகித்திருந்தனர். (இந்த நூலில் இதை குறிப்பிடவில்லை) குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களே இதன் கோஷ்டத்தில் சிதைந்து மங்கி இருந்த பெயர் பொறிப்பு வழியே இவள் கங்கை என்பதை உறுதி செய்தார். இதே போலவே இதே கோயிலில் ஏழு நதிப் பெண்களையும் கண்டுபிடித்து ஆவணம் செய்தார்.


    பழுவேட்டரையர், இருக்கு வேளிர், கெட்டி முதலி, என்று அரசர்கள் கலை பாணி வழியே தொடரும் கங்கையின் நிலையை விவரிக்கும் நூலாசிரியர், தில்லை கோயிலின் ராஜ கோபுரத்தின் இருபுறமும் நின்று நம்மை வரவேற்பவர்கள் கங்கையும் யமுனையும் என்கிறார். திருநாவலூர் கோயிலில் சிவன் சன்னதி கருவறைக்கு இரு புறமும் நிற்பவர்கள் கங்கையும் யமுனையும் என்கிறார். அனைத்துக்கும் மேல் நூலாசிரியர் சோழ கலையின் உச்சமான செப்பு திருமேனிகளில், நடராஜர் படிமத்தில் அதன் அக்கினி பிரபைக்குக் கீழே வணங்கி நிற்கும் கங்கையை விவரிக்கையில் சிவனின் சிரம் துவங்கி கழலடி வரை என கங்கை கொண்ட பயணத்தையே முழுமையாகக் கண்டுவிட முடிகிறது.


    இவை போக திருக்குறுங்குடி ஏரி மதகில் வாயில் மேலே இரு புறமும் சங்கு சக்கரம், அதே வாயில் கீழே இரு புறமும் முதலையும் ஆமையும். இரண்டும் கங்கை யமுனையின் வாகனம். ஆக அந்த ஏரி மொத்தமும் கங்கையே. இப்படி தமிழ் நிலம் முழுக்க நீரெல்லாம் கங்கை என்னும்படிக்கு நீக்கமற நிறைந்து நிற்கிறாள் கங்கா தேவி.


    பிற மாநில கலைப் படைப்புகள் எனும் அத்யாயம் மேலும் சிறப்பானது. போபால் அருகே உதயகிரி குடைவரையில், கங்கை கடலில் கலக்கும் முன்பாக அது இரண்டாக பிரியும் வகைமை சிற்பமாக வடிக்கப்பெற்றிருக்கிறது.


    எலிபெண்டா குகையில் உள்ள கங்காதரர் மேலே உள்ள கங்கை மூன்று முகம் கொண்டு விளங்குகிறாள். முதல் முகம் ஆகாய கங்கையான மந்தாகினி, அடுத்த முகம் பூலோக கங்கையான பாகீரதி, மூன்றாவது முகம் பாதாள கங்கையான போகவதி. 


    எல்லோராவில் வேறு எங்குமே இல்லாத வகையில் கங்கை யமுனை சரஸ்வதி மூன்று நதிகளும் தனித் தனி சன்னதிகள் கொண்டு சிற்பங்கள் என நிற்கின்றன.

    இறுதி அத்யாயம் அருங்காட்சியகங்களில் உள்ள கங்கை சார் சிற்பங்கள், குப்தர் காலம் துவங்கி நாணயங்களில் இடம்பெற்ற கங்கை வடிவங்கள் குறித்து பேசுகிறது.


    ****************

    அன்று ஒரு நாள் இமைய அடிவாரத்தில் ரிஷிகேஷ்ல் இருந்தேன். எதோ ஒரு ஆசிரம வாயில் வழியே ஓடும் கங்கைக்கு மாலை ஆரத்தி. அதைக் காண அந்த ஆசிரமக் கங்கை படித்துறையில் அமர்ந்திருந்தேன். அந்த ஆசிரமத் தலைமை சாமியார் வந்து கங்கைக்கு ஆரத்தி காட்டும் முன்பாக, சூழ இருந்தோருக்கு ஆங்கிலத்தில் சிறிய பிரசங்கம் நிகழ்த்தினார். அதில் யோக முறைகள் குறித்து சிலவற்றை சொல்லும்போது இட நாடியை கங்கையுடனும் பிங்களா நாடியை யமுனையுடனும், சூட்சும நாடியை சரஸ்வதியுடனும் ஒப்பிட்டார். 


    ஆம் இங்கே என்றும் இமையமும் கங்கையும் மலையும் நீரும் என்றான புறப்பொருள் மட்டுமே அல்ல. அதற்கு ஒரு ஆத்மிக பரிமாணம் உண்டு. புறத்திலிருந்து அகத்தில் இறங்கி ஆழத்தில் அது என்னவாக வாழ்கிறதோ அதன் வெளிப்பாடே இங்கே நாம் காணும் கங்கை இமையம் சார்ந்த கலையாக்கங்கள் எல்லாம்.


    அந்த ஆத்மீக பரிமாணத்தின் கலைச் சாட்சியங்கள் குறித்த ரசனை பொங்கும் விவரணைகள் அடங்கிய நூல் என்பதே இந்த நூல் கொண்ட முதன்மை முக்கியத்துவம். இந்திய கோயிற் கலை அளிப்பது என்ன என்று எதுவுமே அறியாத ஒரு எளிய வாசகரும் கூட இந்த நூலைக் கையேடாகக் கொண்டு அந்த ஆத்மீக பரிமாணத்தின் ஒரு திவலையை, சிற்ப அழகியல் வழியே துய்க்க முடியும் என்பதே இந்த நூல் கொண்ட தனித்துவம். இந்திய கலாச்சாரத்தில் கோயிற் கலையில் வரலாற்றில் கங்கையின் இடம் குறித்து செறிவாக விவரிக்கும் வாசிப்பு சுவாரஸ்யம் கொண்ட நூல். 


    கடலூர் சீனு

    குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki

    கடலூர் சீனு கலை விமர்சகர், எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கிய வாசிப்பு குறித்த இவரது பார்வைகள் முக்கியமானவை. நவீன இலக்கியம் மட்டுமன்றி மரபான பண்பாட்டுத்தளங்கள் குறித்தும், சினிமா ஆவணப்படங்கள் குறித்தும் விரிவாக தொடர்ந்து எழுதுபவர். கவிதைகள் குறித்த இவரது கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் பரவலான வாசிப்பை பெற்றவை.