சோழப் பேரரசர்கள் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதை ஒரு பெருந்தலைநகராக்கி, சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கும் முன்னர், இப்பகுதியில் பெரும் தலைநகராகத் திகழ்ந்தது "நந்திபுரம்" என்னும் நகர். சோழப் பேரரசு நிறுவிய பிறகு கூட இரண்டு மூன்று நூற்றாண்டுகள் மிகச் சிறந்த நகராகத் திகழ்ந்தது இவ்வூர். பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் மறைந்து போயிற்று. ஆதலின் ஆராய்ச்சியாளர்கள் தலைநகராகத் திகழ்ந்த நந்திபுரம் எது?, எங்கிருக்கிறது? என்று ஆய்வு செய்து பழையாறைக்கு அருகில் இப்பொழுது 'நாதன் கோயில்' என்று அழைக்கப்பெறும் ஊர்தான் நந்திபுரம் என்று முடிவுக்கு வந்தனர். அதையே எல்லோரும் இதுகாறும் ஏற்று வந்துள்ளனர்.
பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும் சோழர் கலைக்கும் தொடர்பு இல்லை, சோழர் கலை தனித்ததொரு கலை என வாதாடுகின்றனர். பல்லவர் கலைதான் சோழர் கலைக்கு வித்திட்டது என்பது மாற்றுக் கருத்து. அண்மையில் தஞ்சைக்கருகில் பல்லவர்கலை எந்த அளவுக்குச் சோழர்காலத் தொடக்கத்தில் நிறைந்திருந்தது என்று காட்ட, நண்பர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களைக் கண்டியூர் கோயிலுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கல்வெட்டுகளில் நிருபதுங்க பல்லவனின் கல்வெட்டைக் காண்பித்தேன். அதோடு கண்டியூரைப் பற்றி விரிவாக ஆராயச் சொன்னேன்.
அவரோ அத்துடன் அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று, களஆய்வு நடத்தி அரிய பல செய்திகளை வெளிக் கொணர்ந்திருக்கிறார். பல கல்வெட்டுகளையும் ஆய்ந்திருக்கிறார். கலைச்செல்வங்களையெல்லாம் நம் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இந்த ஆய்வின் பயனாகப் பண்டைய நந்திபுரம் அரண்மனை இருந்த நந்திபுரம், ஆயிரத்தளி என்று பெயர்பெற்றது, இப்பொழுது கண்டியூருக்கு அருகில் உள்ள வீரசிங்கம்பேட்டை என்றும், செங்கமேடு என்றும் அழைக்கப்படும் பகுதிதான் என நிறுவியுள்ளார். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆய்வு.
பண்டைய தலைநகராய்த் திகழ்ந்த நந்திபுரம் இதுதான் என ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். இது போன்ற களஆய்வுகள்தான் நமக்கு ஏராளமானவை தேவை. பிராந்திய வரலாறுகளைச் செவ்வனே வகுக்கவும், அறிந்து கொள்ளவும் இவை மிகவும் பயனுள்ளவை. குடவாயில் பாலு மிகவும் உற்சாகம் நிறைந்த இளைஞர். வரலாற்றில் இயல்பான ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். குடவாயிற் கோட்டம்", "கருணாகரத் தொண்டைமான், "சோழமண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும்”, “திருவாரூர் திருக்கோயில்" போன்ற பல நூல்களை உருவாக்கி வருகிறார். இவை அனைத்திலும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கும், சுற்றுப்புற இடங்களுக்கும், பலமுறை சென்று பல அரிய செய்திகளை வெளிக்கொணர்கிறார். பல அரிய கண்டுபிடிப்புகளை நம் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இவர் போன்ற ஒருவரைச் சீடனாகக் கொள்வது எனக்கு பெருமைக்குரியது.
இரா. நாகசாமி
![]() |
| இரா.நாகசாமி |
இரா. நாகசாமி இந்தியத் தொல்லியல், கல்வெட்டியல் அறிஞர். கோயில் கல்வெட்டுகள் மற்றும் கலை வரலாற்றியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர். இந்தியாவில் முதல்முறையாக பூம்புகாரில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொண்டார். மத்திய அரசின் கலை, பண்பாட்டுக் குழுக்களில் அங்கம் வகித்தார். ஆர்வம் மிக்க இளைஞராக இருந்த குடவாயில் பாலசுப்ரமணியனை தொல்லியலுக்குள் ஆற்றுப்படுத்தியவர் நாகசாமி..
***************
திருக்கோவில் கலைச்செல்வர் - சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன்
அன்பர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஒரு தனிச் சிறப்புடைய ஆய்வாளர். கல்வெட்டியல், தொல்லியல், சிற்பவியல், அன்ன பிறன்னவை அவருக்கு இறையருளால் தடக்கை நெல்லிக்கனியாக விளங்குகின்றன. இந்நிலையை எய்துவதற்கு அவர் நாற்பதாண்டுகளுக்கு மேல் பாடுபட்டிருக்கிறார். மேம் போக்காக ஆய்வு செய்வாரிலிருந்து முற்றும் மாறுபட்டிருக்கின்றார். எந்தச் செய்தியையும் வெளியிடுவதற்கு முன்னால் அதற்கான சான்றாதாரங்களை வைத்துத்தான் செயல்படுகின்றவர்.
"தேவார மாண்பும் ஓதுவார் மரபும் நூல்" என்ற நூலை எழுதியமையால் தமிழகம் குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு நிரந்தர கடன்பட்டிருக்கிறது. மாண்பு என்பது தேவாரத்தின் பல சிறப்புகளில் தலையாயது. தேவாரம் ஓதுவாரால் பேணப்பட்டு நமக்கு ஒரு பெருங்கொடையாகக் கிடைத்துள்ளது. தேவாரம் ஓதுதலும் பாடுதலும் நம் கடன். நம் கடன் பணி செய்து கிடப்பதுமல்லாமல் பிரசாரம் செய்வதும் ஆகும். சாதனை(தொடர் பயிற்சி) இன்றி ஒன்றைச் சாதிப்பார் இல்லை. இது உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை.
குடவாயில் பாலசுப்ரமணியன் ஊகங்களில் ஈடுபடாதவர். உறுதிப்பட்ட செய்திகளையே வெளியிடுதல் என்ற கொள்கை வழி செயலாற்றி வருபவர். இதனால் பலர் பார்வைக்கு கிட்டாத அரிய செய்திகளை இவர் ஆதாரபூர்வமாக கூறமுடிகின்றது. தஞ்சை நாயக்கர் விஜயநகர அரசு வழி தோற்றுவிக்கப் பெற்றனர். இந்தப் பின்புலத்தில் முறையான ஆய்வினை மேற்கொண்டு மிகச்சரியான முடிவுகளை நமக்கு குடவாயில் பாலு அவர்கள் 'தஞ்சை நாயக்கர் வரலாறு' நூலை படைத்திருக்கிறார். இதற்குரிய காலம் கிபி 1535 முதல் கி.பி 1675 முடிய உள்ள காலப் பகுதி. இந்நூலில் செவ்வப்பநாயக்கர் தொடங்கி விஜயராகவ நாயக்கர் இறுதியாக தஞ்சை நாயக்கமன்னர் அனைவரின் வரலாறும் விளக்கமுற கூறப்பெற்றுள்ளது.
குறிப்பாக இரகுநாத நாயக்கரின் போர்கள் பற்றிய செய்திகள் துல்லியமாக விவரிக்கப் பெற்றிருப்பதோடு மகாபிரதானி கோவிந்த தீட்சதரின் வரலாறு சான்றாதாரங்களோடு துலக்கம் பெற்றுள்ளது. நாயக்கர் கால காசுகள், புலவர்கள், அவர்கள் யாத்த நூல்கள் பற்றிய செய்திகள் பாராட்டுக்குரியனவயாகும். விஜயராகவ நாயக்கர் கால வரலாறு, அவர்தம் முடிவு ஆகியவை இதுவரை வேறு யாராலும் கூறப்பெறாத அளவுக்கு இந்நூலாசிரியர் தந்திருப்பது வியப்பளிக்கின்றது. இந்நூல் தமிழக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது என்பது மெய்யே.
குடவாயில் பாலசுப்ரமணியன் வரைந்துள்ள இன்னொரு நூலான "இராஜேந்திர சோழன்" தமிழ் நாட்டின் வரலாற்றிற்குக் கிடைத்த ஓர் அற்புதமான வரவு. இந்நூல் அம்மாமன்னர் பெற்ற வெற்றிகள், அவருடைய தலைநகரம், அம்மாமன்னர் கட்டுவித்த திருக்கோயில் பற்றிய அதி அற்புத செப்பேடுகள், ஆராய்ச்சிச் செய்திகள், உண்மைகள் மிக விரிவாகவும், அதீதமான ஆதாரங்கள் கொண்டனவாகவும் விளங்குகின்றன.குடவாயில் பாலசுப்ரமணியன் கவலை அறியாதவர் என்று கூற முடியாது. கவலைப் படுவதால் பிரச்சனை தீராது என்று உணர்ந்தவர் இவர். ஆகவே காரியத்தில் கண்ணாய் இருப்பார். ஏற்ற பொறுப்பை நன்கு வகிப்பவர், இதுவே செய்யத்தக்கது என்று எண்ணி செயலில் ஆழங்கால்படுவார். வெட்டிப் பேச்சுக்களையும், பேச்சாளர்களையும் பற்றி இளவயதில் இவரிடம் இருந்த முன் கோபம் முற்றுமாய் மறைந்து விட்டது என்று சொல்லலாம். இவர் மீது பொறாமை பாராட்டும் சிலர் உளர். அத்தகையோரை இழித்தோ, பழித்தோ பேசுவது அல்லது எழுதுவதை இவர் செய்யார். அவ்வளவில் அவர் மகிழ்க என்று எண்ணி விலகி நிற்பார்.
குடவாயில் பாலசுப்ரமணியன் நூல்களை படித்துச் சரியான பார்வை பெற்றவர்கள் பலர். பலருக்கும் உதவ முடிந்ததை எண்ணி குடவாயில் நியாயமான மகிழ்ச்சி அடைகிறார். தாம் அறிவிப்பதே கடைசி வார்த்தை என்று எண்ணாமல், ஆராய ஆராய புதுப் புது பொருள்கள் காண முடியும் என்பது இவரது துணிபு. “நோக்க நோக்க களியாட்டம்" என்பது இவரது அனுபூதி. இவரிடம் தெளிவு மண்டிக் கிடக்கிறது. தெளிவு என்பது நிச்சய புத்தி. இவருடைய பேச்சிலும் எழுத்திலும் மயக்கத்திற்கு இடமில்லை. சாதனையின்றி ஒன்றைச் சாதிப்பார் இல்லை. சாதனைக்கு முற்றுப்புள்ளி கிடையாது. இது தொடர் நிகழ்ச்சி. இதனால் சாதனைக்கு மெருகு ஏறும். இது வெறும் மினுக்கு அன்று. இது நல்லொளியின் பாற்படும், நல் ஒளி மும்முறை வரவேற்புப் பெறும்.
![]() |
| சேக்கிழார் அடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன், குடவாயில் பாலசுப்ரமணியன் |
சேக்கிழார் அடிப்பொடி தி.ந. ராமச்சந்திரன், சைவ அறிஞர். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் சைவம் குறித்து நூல்கள் எழுதியுள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். 40000 புத்தகங்கள் கொண்ட புத்தக சேகரிப்பு இவரிடம் இருந்தது. குடவாயில் பாலசுப்ரமணியன் தனது ஆர்வம் காரணமாக, இவரிடம் சைவ இலக்கியங்களை கற்றுக்கொண்டார். "அவருடன் தொடர் உரையாடலில் இருந்தார். தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூல் தான் எழுத திரு ராமச்சந்திரன் தான் தூண்டுதலாக இருந்தார்" என்று குடவாயில் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


