Saturday 8 April 2023

தெய்வ தசகம்: நாராயண குரு, உரை: நித்ய சைதன்ய யதி


வாழ்க்கையை தத்துவம், மதம், அறிவியல் என்ற மூன்று கோணங்களிலிருந்து அணுகலாம். முதல் வழி ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தனையின் மூலம் மெய்மையை கண்டடைவோருடையது. இரண்டாவது உணர்வுபூர்வமான அனுபவத்திற்கு முதன்மை அளிக்கும் பக்தர்களுடையது. வாழ்வின் புறவயமான அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றின் கடந்துபோன அத்தியாயங்கள் தரும் செய்தியை மனதில் கொண்டு பரிசோதனைகளையும் ஆய்வுகளையும் பயன்படுத்தி புதிய முடிபுகள் நோக்கி செல்லும் அறிவியலாளரின் வழி மூன்றாவது.

‘தெய்வ தசக’த்தை எழுதிய நாராயண குருவை இவற்றில் ஏதோ ஒரு பிரிவில் அடக்கிவிட இயலாது. குருவின் தரிசனங்கள் அடங்கிய படைப்புகளை பார்க்கும்போது அதிநுட்பமான யோகதிருஷ்டியின் மூலம் அறியக்கூடிய எந்த ஒரு தத்துவத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு எறும்பைக் கூட துன்புறுத்தாத கருணையால் செலுத்தப்பட்டது அவருடைய வாழ்வு. “அன்புள்ளவன் மட்டுமே வாழ்பவன்” என்பதே அவருடைய அடிப்படை ரகசியம். சமூக வாழ்வில் அநீதிக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாத போராட்டத்தை அவரது ஒவ்வொரு அடிவைப்பிலும் காணமுடியும். அத்தகைய நாராயண குருவின் தெய்வ தசகத்தை படிக்கத் தொடங்குகையில் அது ஒரு தரிசனம் என்பதையும், வேண்டுதல் (பிரார்த்தனை) என்பதையும், அறிவியல் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

தத்துவார்த்தமான பிரார்த்தனை

வேதங்களில் முதன்மையானதான ரிக்வேதத்தில் வருணன், மித்ரன், அக்னி, இந்திரன் முதலான தேவர்களை போற்றுகின்ற பல வேண்டுதல்கள் உண்டு. ஆனால், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உலகைப் படைத்த ஒரு ஒற்றை தெய்வத்தை போற்றும் வேண்டுதல் எதையும் நாம் வேதங்களில் காண முடிவதில்லை. காயத்ரி மந்திரம் மட்டும் ஒரு விதிவிலக்காகத் தெரிகிறது. இதனால் ரிக்வேதத்தில் அத்வைதம் பற்றிய குறிப்பு இல்லை என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை. என்றாலும் புருஷ ஸூக்தத்தில் வரும் வர்ணனைக்குப் பிறகு, ஈசாவாஸ்ய உபநிடதத்தில்தான் ‘எங்கும் நிறைந்து அனைத்தையும் ஆளும் ஒரு ஒற்றை தெய்வத்தைப்’ பற்றிய குறிப்பை நாம் காண முடிகிறது. ஈசாவாஸ்யம் ஒரு உபநிடதம்தான் என்றாலும் அது இடம்பெறுவது சுக்ல யஜுர் வேத சம்ஹிதையில் என்பதால் அதையும் வேதத்தின் பகுதியாகவே கருதலாம். ஆனாலும் சங்கராசாரியாரின் கூற்றுப்படி அது ஞானத்தை கற்பிப்பதால் அதை உபநிடதமாகவே கருதவேண்டும். ஆக, தெய்வீகஞானம் என்ற அடிப்படையில் தெய்வத்தைப் பற்றி முதன்முதலில் பேசுவது ஈசாவாஸ்யமே எனலாம். என்றாலும் தொடக்கத்தில் ஒற்றை தெய்வத்தை விளிக்கும் ஈசாவாஸ்ய உபநிடதம் இறுதியில் சூரியனையும், அக்னியையும் தெய்வங்களாகவே குறிப்பிடுகிறது. அது வினை முதலான அறங்களைப் பற்றி பேசுகிறது. அதன் பின்னர் நீண்டகாலம் வேத வேதாந்த மரபில் தர்ம அதர்மங்களுக்கு மேலாக ஒளிரும் பிரம்ம தத்துவம் இதயத்திலிருந்து வெளிப்படும் ஒரு வேண்டுதல் வடிவம் பெறவில்லை. 

யூத மதத்திலும், கிறிஸ்தவத்திலும், இஸ்லாத்திலும் உள்ள இறை நம்பிக்கை ஆறுதரிசனங்களில் காணப்படுவதில்லை. பின்னர் வந்த சைவ, வைணவ, சாக்த, காணபத்ய மதங்களைப் பின்பற்றியவர்கள் தத்தமக்குகந்த இறை வடிவங்களைப் போற்றிப்பாடியதையும், அக்கடவுளரிடம் வேண்டுதல்களை முன்வைத்ததையும் காண்கிறோம். இவற்றிலிருந்தெல்லாம் மாறுபட்டு ஒற்றை தெய்வத்தை இறையென ஏற்று, குறிப்பிட்ட பகுதிக்கெனவும், மதத்திற்கெனவும் ஒரு எல்லைக்குள் அடக்காமல், ஈசாவாஸ்ய உபநிடத காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, நாராயண குரு இயற்றிய ‘தெய்வ தசகம்’ என்ற வேண்டுதல், தத்துவார்த்த அடிப்படையில் எழுதப்பட்ட மானுட குலத்தின் நன்மைக்கான பாடல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

‘தெய்வமே’ என்ற விளியுடன் தொடங்கும் இந்த வேண்டுதல் ‘சுகம்’ என்ற சொல்லுடன் நிறைவடைகிறது. எல்லா மதங்களின் நோக்கமும் ‘ஆன்மசுகம்’ என்பதே. இதனால்தான் நாராயண குரு ‘பல மதங்களின் அடிப்படையும் ஒன்றே’ என்றும் ‘உலகில் இம்மதம் ஒன்றே’ என்றும் ஆத்மோபதேச சதகத்தில் குறிப்பிடுகிறார். இறையின் இருப்பே இன்பமளிக்கக் கூடியது என்று இறைநம்பிக்கை கொண்ட (theistic) மதங்களெல்லாம் உறுதியாக நம்புகின்றன. எனவே, இறை என்பது குறிக்கோளாகவும் அதே சமயம் குறிக்கோளை அடைவதற்கான நெறியாகவும் திகழ்கிறது. குறிக்கோளையும் அதற்கான நெறியையும் ஒன்றெனவே இணைத்தறிய முடியும் என்பதே யோகம் சொல்லும் ரகசியம். இந்த தத்துவத்தையே குரு தெய்வ தசகத்தின் மையத்தில் மிக நுட்பமான மொழியில் பொதிந்து வைக்கிறார். ‘நீ ஸத்யம் ஞானம் ஆனந்தம்’ என்று தெய்வத்தை வரையறுப்பதோடு ‘ஓதும் மொழியும் ஓர்க்கில் நீ’ (எண்ணிப்பார்க்கையில் பேசும் மொழியும் நீ) என்று சொல்லி, அத்வைத அடிப்படையிலான ஒரு இணைவை நிறுவுகிறார். இவ்வாறு ஆராய்ந்து பார்த்தால் இந்தப் பதிகத்தில் ஒரு அறிவியலறிஞர் கைக்கொள்ளக்கூடிய தெளிந்த அடுக்குமுறை ஒன்றை உணரமுடிகிறது. இத்துணை செறிவான ஒரு வேண்டுதலை எளிய முறையில் அணுகுவது சரியல்ல. இதிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் தீவிரமாக ஆராய்ந்தறிய வேண்டியிருக்கிறது.

முதற்பாடல்

தெய்வமே காத்துக்கொள்கங்கு
கைவிடாதிங்கு ஞங்ஙளெ
நாவிகன் நீ பவாப்திய்க்கோ
ராவிவன்தோணி நின்பதம்

இறையே காத்துக்கொள்வாய் அங்கு
கைவிடாதே எம்மை இங்க
வாழ்வெனும் ஆழியில் நாவிகன் நீ
உன்னடியே எமக்கோர் தோணி

தெய்வமே: ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கும் ஆன்ம (சைதன்ய) வடிமே 

கைவிடாதிங்கு ஞங்ஙளெ: இங்கு இந்த வாழ்வில் (ஸம்ஸாரத்தில்) அகப்பட்டிருக்கும் எங்களை கைவிடாமல்

காத்துக்கொள்கங்கு: அங்கு காத்தாலும்

நாவிகன்  நீ பவாப்திய்க்கு: பிறப்பும், இறப்புகள் கொண்டும் சுகதுக்கங்கள் கொண்டும் வாழ்பவரை எப்போதும் அலைக்கழித்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்வெனும் பெருங்கடலை கடப்பதற்கு எங்களுக்கு உதவும் கண்ணுக்குப் புலனாகாத நாவிகன் (கப்பலோட்டி)தான் அங்கிருப்பது

ஆவி வன்தோணி நின்பதம்: உனது திருவடியை (அல்லது) பெயரை போற்றும் பக்தர்களுக்கு அதுவே முழுமையான காப்பளித்து அனைத்துலகங்களையும் கடக்க உதவும் ஆவிக்கப்பல்

(தெய்வமே, நாங்கள் வாழ்வெனும் பெருங்கடலில் சிக்கியிருக்கிறோம். எங்களை நீ கைவிடாதிருப்பாயாக! கண்ணுக்குப் புலப்படாத நீயே எங்கள் நாவிகன் . உன்னடியை வணங்குகிறோம். அதுவே எம்மை பிறப்பிறப்பெனும் துயரக்கடலின் மறுகரையில் கொண்டு சேர்க்கும் ஆவிக்கப்பல்)

அறிந்ததிலிருந்து அறியாததற்கும், இருமையிலிருந்து இருமையற்றதற்கும் செல்ல வழிகாட்டும் குருவானவர் இயற்றிய வேண்டுதல் இது. ‘தெய்வமே காத்துக்கொள்கங்கு கைவிடாதிங்கு ஞங்ஙளெ’ எனும்போது அதில் பல்வகையான இருமைகள் அடங்கியிருப்பது தெளிவு. ‘அங்கு-இங்கு’ என்கையில் ‘மேல்-கீழ்’ எனும் இருமை தோன்றுகிறது. ‘கைவிடாதிங்கு ஞங்ஙளெ’ என்கையில் அடைக்கலம்-அடைக்கலம் கோருபவன் என்ற இருமை உண்டாகிறது. மேலும், அடைக்கலம் கோருபவனின் தாழ்மையும், இயலாமையும், துணையின்மையும் வெளிப்படுகிறது. அத்வைத ஞான குரு ஒருவர் இப்படியாக இருமையை சுட்டும் வேண்டுதல் ஒன்றை எழுதியிருப்பது சரிதானா என்ற ஐயம் தோன்றுவது இயல்பே. இதற்கு விளக்கம் உண்டு. இருமையை உணர்பவருக்குதான் வேண்டுதலுக்கான தேவையே ஏற்படுகிறது. இருமை உள்ளதுவரை துயரமும் இருக்கும். துன்பத்தில் உழல்பவன் தன்னை ஆற்றலும் துணையும் அற்றவனாய், தாழ்த்தப்பட்டவனாய் உணர்வது இயல்புதானே? துன்பத்தை போக்குவதற்கும் தன்னையறிதலுக்குமான மிகச்சிறந்த கருவி பக்தியே என்று சங்கரர் தன் விவேகசூடாமணியில் கூறுகிறார். பக்தனின் முதல் அடிவைப்பே தன்முனைப்பைத் துறந்து பேரிறையை முழுமனதோடு ஏற்றுக் கொள்வதுதானே? அதனால்தான், துயரம் நிறைந்த இந்நிலவுலகை வாழ்க்கைப் பெருங்கடலாகவும், பக்தனை அதில் அகப்பட்டவனாகவும், தெய்வத்தை வாழ்வெனும் ஆழியில் சிக்கியவனை மறுகரை சேர்ப்பிக்கும் கப்பலோட்டியாகவும், இறையின் பதத்தை ஒரு கப்பலாகவும் உருவகித்திருக்கிறார் குரு.

மிக எளிமையான இந்த வேண்டுதலை உரைகளின் வழிகாட்டல் எதுவுமின்றி எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றலாம். ஆனால், அத்வைத தத்துவத்தை இவ்வரிகளில் நுட்பமாக பொதிந்து வைத்திருப்பதை ஒதுக்கிவிடக்கூடாது. ‘தெய்வம்’ என்ற சொல் அளிக்கக்கூடிய பரந்துபட்ட பொருளை ஆராய்ந்து பார்க்கலாம். ‘திவ்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்துதான் தெய்வம் என்ற சொல் உண்டானது. ‘திவ்’ என்பது ஒளியை, ப்ரகாசத்தை குறிப்பது. ஒளி இருளை அகற்றுகிறது; பொருட்களின் இயல்பான வடிவை காணும்படி செய்கிறது. ஒளி அறிவைத் தரும் என்றால், இருள் அறிவின்மையை உண்டாக்குவது எனலாம். எங்கு ஒளி இல்லையோ அங்கு இருளும், எங்கு அறிவில்லையோ அங்கு அறிவின்மையும் உண்டாகியிருக்கும். எங்கு இருளும் அறிவின்மையும் உண்டோ அங்கு அச்சமும் துயரம் உண்டாகிறது. துயரும் விழைவும் நிறைந்திருப்பதால் உலகை இருள்சூழ்ந்த வாழ்க்கைப் பெருங்கடலெனக் கருதுகிறோம். புற ஒளிகொண்டு புறவய இருளை அகற்றி புறப்பொருள்களின் உருவை ஒளிரச் செய்ய முடியும். ஆனால் அகவயமான இருளை எவ்வகையான புற ஒளியாலும் அகற்ற முடியாது. விழிப்புநிலையில் இல்லாத ஒருவனுக்கு முன்பாக சூரியனே ஒளிர்ந்துயர்ந்தாலும் அவன் எதையும் காண்பதில்லை. புறவய ஒளியைப் போல ஒளிரும் ஒரு வெளிச்சம் அகத்தில் உருவாக வேண்டும். இப்படி ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கும் ஒன்றையே தெய்வம் என்றழைக்கிறோம். அனைத்திலும் உறைவதாகவும், தன்னொளி கொண்டதாகவும் உள்ள இந்தப் பேருண்மையையே கேனோபநிடதம் முதலாயவை கண்ணின் கண்ணென்றும், செவியின் செவியென்றும், மனதின் மனமென்றும் கூறுகின்றன. (ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம், மனஸோ மனோயத் வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: சக்ஷுஷஸ்சக்ஷுரதிமுக்ய தீரா: ப்ரேத்யாஸ்மால்லோகாதம்யதா பவந்தி - கேனோபநிடதம் 1-2)

இறையே மெய், இறையைத் தவிர்த்து வேறொன்றுமில்லை என்ற நிலையில் காக்கப்பட வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம் என்று சொல்வதும்; தெய்வம் அனைத்துக்கும் இறையாய், அனைத்தையும் அறிந்ததாய் இருக்கையில் எம்மை கைவிடாது காக்க வேண்டும் என்று சொல்வதும் முரண் அல்லவா என்ற ஐயம் எழக்கூடியதே. இதற்கும் விளக்கமுண்டு. ஆன்மக்கொலை புரிந்தவர், விழைவு கொண்டவர் அசுர உலகத்தை அடைந்து மரணத்திலிருந்து மரணத்திற்குச் செல்வார்கள் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம். ஆன்மாவுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்ற நிலையில் ஆன்மாவை கொல்லுதல் என்பது பற்றி உபநிடதம் பேசுவதும் மேலே சொல்லப்பட்டது போன்ற ஒரு தவறுதான். ஆனால், இதை நுணுகி நோக்கினால் உபநிடதம் சொல்வதும், தெய்வ தசகம் கூறுவதும் தவறல்ல என்பதை தெளிவாக உணரலாம். ‘நான்’ என்பது எனது உடலே என்று தவறாக கருதுபவர், தன் உடலை ஆன்மா என்று பிழையாக புரிந்துகொள்கிறார். உடல் அழியக்கூடியது என்பதால் அதன் மரணத்தை ஆன்மாவின் இறப்பென்று நினைக்கிறான் மூடன். அத்தகையவனது நிலைபாட்டில் இருந்தபடிதான் ஆன்மக்கொலை என்பது உபநிடதத்தில் சொல்லப்படுகிறது. அதேபோல், அகத்தே எண்ணி தெய்வத்திலிருந்து தான் வேறல்ல என்று அறியாத ஒருவனது பார்வைக் கோணத்திலிருந்தபடிதான் ‘கைவிடப்பட்ட எம்மை காக்கவேண்டும்’ என்று இங்கே வேண்டப்படுகிறது.

தெய்வத்தை நாவிகனோடு ஒப்பிட்டிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒன்று. நடுக்கடலில் சிக்கிய கப்பலொன்றை ஏதோ ஒரு வழியில் திசைதிருப்பினால் அது சேரவேண்டிய இடத்திற்கு சென்று சேர்ந்துவிடும் என்று கருதமுடியாது. கப்பலின் செல்வழியும், அருகமைந்த கரையும் நன்கறிந்த ஒரு கப்பலோட்டியால் மட்டுமே அதை கரைசேர்க்க முடியும். அதுபோலவே வாழ்வின் ரகசியத்தை அறிய முடிந்த ஒருவரால் மட்டுமே ஸம்ஸாரஸாகரம் எனும் பெருங்கடலின் அக்கரைக்கு அதனை கொண்டு சேர்க்க முடியும். இந்த ரகசியத்தை அறிந்த நாவிகன் வேதாந்த சித்தாந்தங்களுக்கு மட்டுமே புலனாகக் கூடிய குரு மட்டுமே. கப்பலில் பயணிப்போர் மாலுமியை நேரில் காண்பதில்லை. அவர் மறைவில் இருந்தபடி வழங்கும் கட்டளைகளை தெய்வவாக்கென மதித்து நிறைவேற்றுகின்றனர். அதுபோல, தெய்வம் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கிறது. குருவும் அப்படியே.

‘தெய்வம்’ என்ற சொல்லின் பொருள் ஒளி என்பது போலவே, ‘குரு’ என்ற சொல்லும் இருளை அகற்றுபவர் என்ற பொருளையே தருவது. எனவே, தெய்வத்தையும் குருவையும் ஒருபொருட்பன்மொழி என்றே கொள்ள வேண்டும். ‘குரு ஸாக்ஷாத் பரப்ரஹ்ம’ என்ற குரு தியானத்தை இங்கு நினைவுகூரலாம். குரு சீடனின் அகத்தில் ஒளியை கொண்டு வருவதில்லை. குரு எங்ஙனம் ஒளிவடிவாய் இருக்கிறாரோ அதேபோல் சீடனும் ஒளிவடிவம் மட்டுமே. ஆனால் ஆன்மாவை மூடியிருக்கும் இருளை குரு இல்லாதாக்குகிறார். அதற்கான வழி கடற்பாதை போல வழிகாட்டப்படுவதாகவும் வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பது. கப்பலில் உள்ளவர் கண்ணுக்குத் தெரியாதிருந்தபோதும் மாலுமியின் ஆணைகளுக்கு தம்மை முழுதளிப்பது போல, விடுதலை நாடுபவனுக்கு குருவின் சொல்லில் முழு நம்பிக்கை இருத்தல் வேண்டும். தன்விடுதலையை விழைபவன் முதலில் ஈட்ட வேண்டியது பற்றின்மையும் நம்பிக்கையுமே. ‘பவாப்தி’ என்ற சொல் இவ்வுலகில் பற்றின்மையை குறிப்பது. ‘நாவிகன் நீ’ என்று ஏற்றுக்கொள்வதன் மூலம் பரம்பொருளான குருவின் மீதுள்ள தூய நம்பிக்கை சுட்டப்படுகிறது.

மீதமுள்ளது ‘ஓராவிவன்தோணி நின் பதம்’ என்பது. ‘பதம்’ என்றால் ‘சொல்’ என்றும் ‘பாதம்’ என்றும் பொருள் கொள்ளலாம். பாதம் என்பதையே முதலில் கருதவேண்டும். அருளை நாடுபவர் அருள் வழங்குபவரது கால்களில் விழுந்து வணங்குவது கீழை நாடுகளில் எவரும் அறிந்த ஒன்று. ஒரு குருவை காண்கையில் சீடன் அடிவணங்குவது இயல்பாக நடப்பது. கால்கள் என்பவை அவை செல்லும் பாதையின் குறியீடுமல்லவா? எனவே, தெய்வத்தின் அல்லது ப்ரம்மத்தின் பாதையில் செல்பவர் ப்ரம்மசாரி ஆகிறார். குருவின் அடிகளை வணங்குவதன் மூலம் ‘குருவின் பாதங்கள் சென்ற பாதையிலேயே நானும் செல்ல விழைகிறேன்’ என்று குறிப்பால் உணர்த்துகிறான் சீடன்.

நித்ய சைதன்ய யதி

‘பதம்’ என்பதை வாக்கு அல்லது சொல் என்று கொண்டால் அது பரந்துபட்ட பொருளை தருவதாகிறது. மாண்டூக்ய உபநிடதம் ஆன்மாவை நான்கு கால்கள் கொண்ட ‘ௐ’காரமாய் சித்தரிக்கிறது. ஜாக்ரத்-ஸ்வப்னம்-ஸுஷுப்தி-துரியம் என்ற நான்கு பாதங்களின் மறைபொருளை உணர்ந்தவரே ப்ரணவத்தை உணர்ந்த குரு.

வேதம், பைபிள், குர்ஆன், கீதை - இவை நான்கும் உலகப் புகழ்பெற்ற பெருநூல்கள். வேதம் என்பதற்கு அறியப்பட்டது-அறிவு என்பது பொருள். பைபிள் என்றால் புத்தகம். குர்ஆன் என்பது ‘வாசிக்கப்பட்டது’ என்பதை சுட்டுவது. கீதை என்பது பாடப்பட்டது. இவை நான்கும் தெய்வத்தின் சொல்லைத்தான் பேசுகின்றன. ‘ஓமித்யேததக்ஷரமிதம் ஸர்வம் தஸ்யோபவ்யாக்யானம் பூதம் பவத் பவிஷ்யதிதி ஸர்வமோம்கார ஏவ யச்சான்யத் த்ரிகாலாதீதம் ததப்யோம்கார ஏவ’ என்கிறது மாண்டூக்ய உபநிடதம். இங்கு காணப்படுபவை எல்லாம் ‘ௐ’ எனும் எழுத்தே. கழி, நிகழ், எதிர்வெனும் முக்காலங்களுமே அதற்கு கொடுக்கப்படும் துணை விளக்கங்கள். காலத்தைக் கடந்ததாக விளங்குவதும் ‘ௐ’காரமே. அதே போல் ‘யோவானி’ல் ‘ஆதியில் சொல் இருந்தது; சொல் தெய்வத்தோடு கலந்திருந்தது; சொல் தெய்வமாயிருந்தது’ என்று சொல்லப்படுகிறது. ‘தெய்வத்தை நேரில் கண்டவர் எவருமில்லை; தெய்வத்தை ஏற்பவர் தெய்வத்தின் சொல்லை ஏற்கிறார்’ என்கிறது குர்ஆன். ‘தர்மம் சரணம் கச்சாமி’ என்று பௌத்தர்கள் கூறும்போது குருவின் பதத்தை (உபதேசத்தை) ஏற்கிறோம் என்றே சொல்கிறார்கள். புத்தரின் புகழ்பெற்ற திருவாய்மொழிகள் ‘தம்மபதம்’ என்றே அறியப்படுகின்றன.

‘வலிமையற்றவனும், எளியவனுமான எனக்கு அடைக்கலமென அனைத்து ஆற்றல்களை பெற்றவனும் முழுமையானவனுமான ஒரு இறைவன் உண்டு’ என்றும், ‘நான் அந்த இறையை நம்புகிறேன்’ என்றும், ‘அந்த இறையிடம் என் வேண்டுதலை வைக்கிறேன்’ என்றும் ஒரு பக்தன் கூறுகையில் அதில் தோன்றும் இருமையை அத்வைத தத்துவத்தில் பொருத்திப் பார்க்க உதவும் வகையில் அடுத்த பாடல் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு வேதாந்த மரபின் ‘அன்வயவ்யதிரேகம்’ (agreement and contrariety) என்ற உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழில் - ஆனந்த் ஶ்ரீநிவாசன்

(தத்துவ பாடல்கள் பல இருப்பினும் நாராயண குருவின் ஒப்பற்ற தத்துவ பாடல்கள் கிடைத்ததில் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவற்றில் ‘தெய்வ தசகம்’ எளிமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. நாராயண குருவால் சிவகிரியில் நிறுவப்பட்ட ஆசிரமத்தில் சில மாணவர்கள் வாழ்ந்து வந்தனர். அப்போது குரு மாணவர்கள் தினமும் மாலையில் செய்யும் பிராத்தனையில் பிரபஞ்சம் தழுவிய பிரார்த்தனை ஒன்று தேவை என்று எண்ணினார். அதனால் இயற்றப்பட்டதே ‘தெய்வ தசகம்’ - ஸ்வாமி முனி நாராயண பிரசாத்.)


தெய்வ தசகம்: தெய்வம் - இறை, தசகம் - பத்து. பத்து இறைப்பாடல்கள் என்பது பொருள். தமிழில் பத்துப் பத்துப் பாடல்களாக பாடப்பட்ட தேவார பாடல்களை ‘பதிகம்’ என்பர். 

நாராயண குரு (1856 - 1928)

இந்திய தத்துவ ஆன்மீக ஞானியரில் முக்கியமானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி கேரள சமூகத்தை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்ப தகவமைத்த முன்னோடி. மதச் சீர்திருத்தவாதி, சமூக சீர்திருத்தப் போராளி, அறிவியக்கத் தலைவர், மாபெரும் இலக்கிய ஆசிரியர் என பன்முக ஆளுமை அவருடையது. நாராயண குருவின் மாணவர்களே கேரளத்தில் எல்லா அறிவுத்துறைகளிலும் முன்னோடிப் பங்களிப்பை நிகழ்த்தியவர்கள்.

நித்ய சைதன்ய யதி (1923 - 1999)

நடராஜ குருவின் நேரடி சீடர். நாராயண குருவின் தத்துவ பள்ளியைச் சேர்ந்தவர். தத்துவத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற பிறகு கொல்லம் ஶ்ரீ நாராயண கல்லூரியிலும், சென்னை விவேகானந்தா கல்லூரியிலும் தத்துவப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். நாராயண குருவின் தத்துவ நூல்களுக்கும் பகவத் கீதை, உபநிஷதங்களுக்கும், சங்கரரின் சௌந்தர்ய லஹரிக்கும் விரிவான உரைகள் எழுதியுள்ளார். ஆங்கிலம், மலையாளம், தமிழ் என இருநூறுக்கும் மேலான குருவின் நூல்கள் வெளியாகி உள்ளது. 

ஆனந்த் ஶ்ரீநிவாசன்

தமிழ் மொழிபெயர்ப்பாளர். இலக்கிய பிரதி மேம்படுத்துனர், திருத்துனர். எழுத்தாளர் ஜெயமோகனின் 25,000 பக்க நாவலான ‘வெண்முரசு’க்கு தன் மனைவி சுதாவுடன் இணைந்து திருத்துனராக இருந்தார். நித்ய சைதன்ய யதியின் படைப்புகளை தமிழில் கொணர்வதற்காக ‘நித்ய சைதன்யம்’ என்ற இணைய தளம் நடத்தி அதில் நித்யாவின் படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். கன்னட எழுத்தாளர் ஹெச். எஸ். சிவபிரகாஷின் ‘குரு’, வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் ‘உயிர்த்தெழல்’ ஆகிய நூல்கள் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.