 |
| குடவாயில் பாலசுப்ரமணியன் |
குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாற்று ஆய்வாளர். தமிழின் பண்பாட்டு முகங்களில் ஒருவர். சோழர் வரலாறு, சோழர்கள் எடுத்த பெருங்கோவில்கள், தஞ்சாவூர் அரச வம்சங்கள், சைவ சமயம், கோவில்களின் பண்பாட்டு இவை குறித்தான பாலசுப்ரமணியனின் நூல்கள் திரளான வாசகர்களை வரலாறு நோக்கி ஈர்த்துள்ளது. கோவில்களை மையப்படுத்தி, அவற்றின் பண்பாட்டு கூறுகளின் வழியே வரலாற்றை தொகுத்தளிப்பது குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுப்பாணி. ஒரு கவிதையின் நுட்பத்தை தேர்ந்த வாசகன் சுவைப்பது போல, கலை சார்ந்த அழகியலை வரலாற்றின் வழியே விதந்தோதிக்கொண்டே இருக்கிறார் பாலசுப்ரமணியன். அவரது எழுத்துக்களை வாசிப்பவர்களும் அந்த வியப்பை சென்றடைகிறார்கள்.
தமிழ்நாடு கோவில்கள் நிரம்பிய மாநிலம் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஏறத்தாழ 43,700 கோவில்கள் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு கோவில்கள் இருப்பது ஒரு வரலாற்று நிகழ்தகவு என்று கடந்துசெல்லமுடியாது. ஏனெனில் இங்கு கோவில் என்பது இறை வழிபாடு செய்யும் இடம், ஆனால் அது மட்டுமே அல்ல, கோவில்கள் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியங்கள், வரலாற்று தரவுகளை பதிவுசெய்துள்ள கல்வெட்டுகள், இசை மரபு, பக்தி இலக்கியம், ஆடற்கலை, படையல் உணவுகள், தத்துவம், திருவிழாக்கள், சடங்குகள் என்று ஏராளமான பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கிய கலைக்களஞ்சியங்கள். நமது பண்பாட்டின் அனைத்துக்கூறுகளும் இந்த பீஜ கும்பத்தில் உள்ளன, அரியவை அனைத்தும் கோவில் கலாச்சாரத்தோடு பிணைக்கப்பட்டுள்ளன.
காலத்தால் கோவில்கள் மாறிக்கொண்டே வருகின்றன. ஒன்று புரப்பாரின்றி கைவிடப்படுகின்றன, அல்லது பரிகாரக்கோவிலாக மாறி முற்றிலும் டைல்ஸ் கற்களும் சிமெண்டும் வண்ணமும் பூசி தன பொலிவை இழந்துபோகின்றன. கோவில் கலை பண்பாட்டு கூறுகள் அழிவின் நிலையில் இருந்தாலும் அவற்றுக்கு போதிய கவனம் ஆய்வுப்பரப்பில் கிடைப்பதில்லை, இந்த இடத்தில் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ஆய்வுகள் முக்கியம் பெறுகின்றன.
குடவாயில் பாலசுப்ரமணியம் தான் பிறந்த சோழ தேசம் மீது அபிமானம் கொண்டவர், அந்த வரலாற்றுக்காலத்தின் மீதான அவரது பெருவிருப்பமே அவரது ஆய்வுகளாக உருப்பெற்றுள்ளது. குடவாயில் பாலசுப்ரமணியன் தனது ஆரம்ப காலத்திலேயே தனது எல்லைகளை தெளிவாக்கிக்கொண்டார். தஞ்சாவூர் என்ற வரலாற்று நகரத்தை தனது ஆய்வுகளுக்கான மையமாக்கிக்கொண்டார். இந்த நகரம் முத்தரையர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் என்ற நான்கு அரச வம்சங்களால் ஆளப்பட்டது. தஞ்சாவூர் நகரத்தில் பல வரலாற்று எச்சங்கள், கலைத்தொடர்ச்சிகள், ஆவணக்காப்பகம் எல்லாம் உண்டு. இந்த பொக்கிஷப்பேழையை தனது கைகளில் எடுத்துக்கொள்ள அவர் சிறிதும் தயங்கவில்லை.
அதே சமயம் எந்த ஆய்வும் கோரும் நேரத்தை அவர் முழுதும் அளித்திருக்கிறார். சில ஆய்வுகளை பத்து ஆண்டுகள் தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார். அவ்வகையில் சோழர்களின் கலைப்பெருமிதங்களையும், நாயக்கர், மராட்டியர் கால இலக்கியங்கள் குறித்தும் இவர் வெளிக்கொணர்ந்த விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுகள் மிக விரிந்த களங்களில் அமைந்தவை, இருப்பினும் அவற்றின் மையம் கோவில்கள் தான். பெருங்கோவில்கள் முதல் காவிரிக்கரையில் சிறிய கோவில்கள் வரை தொடர்ந்து ஆய்வு செய்பவர். மேலும் வரலாற்றின் சில தவறான தகவல்களை மீளாய்வு செய்து சரிசெய்யவும், புதிய தகவல்களை சேர்த்தும் வரலாற்றுக்கு பங்களித்துள்ளார்
குடவாயில் பாலசுப்ரமணியனுக்கு தற்போது எழுபத்தி எட்டு வயது. நல்ல உடல்நலத்தோடு இருக்கிறார். இருப்பினும் வெளிநபர்களை சந்திக்க அதிகம் ஆர்வமில்லாமல் இருக்கிறார். காரணம் அவர் திட்டமிட்டிருக்கும் எழுத்துப்பணி. அடுத்து அவர் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை முக்கியமாக கருதுவதால் பெரும்பாலும் சந்திப்புகளை தவிர்த்து விடுகிறார். நீண்ட காத்திருப்புக்குப்பின் சுவடியியல் அறிஞர் கோவை மணி மூலம் அவரை சந்திக்க தருணம் அமைந்தது.
குடவாயிலை நேரில் சந்திப்பதே முற்றிலும் புதிய அனுபவம், அவரைப்பற்றிய ஏற்பு மறுப்புகள் அனைத்தையும் தாண்டி வேறெங்கோ ஒரு உலகில் சஞ்சரிப்பவர் போல ஒரு தோற்றம். அவ்வளவு உயரத்திலிருந்து அனைவரையும் சற்று கீழே குனிந்து பார்க்கிறவர் போல இருந்தார், மிக இயல்பாக தஞ்சை கோபுரத்தோடு அவர் உயரத்தை மனம் ஒப்பிட்டுக்கொண்டிருந்தது. உ.வே.சா ஏடு தேடியதுபோல சோழ தேசம் முழுதும் கோவில் தேடி அலைந்து திரிந்தவர்.
நீண்ட காலம் மரபுக்குள் நின்று அதை ஆய்வு செய்தவர் என்ற பெருமை குடவாயிலுக்கு உண்டு. வரலாற்றுப்பெருமிதங்களை துணிந்து ஆய்வு செய்தவர், ஏனென்றால் எந்த புரட்சிப்பாவனையையும் அவர் ஏற்கவில்லை. அவர் ஆய்வாளராக வளர்ந்த காலத்தில் அந்தப்பாவனைதான் அதிகம் விற்ற சந்தைப்பொருள், இவர் அதை பொருட்படுத்தவில்லை.
குறுகிய நேர அளவிலான உரையாடலில், குடவாயிலிடம் கேள்விகளை கேட்டோம். பொறுமையாக உரையாடிய பாலசுப்ரமணியன், பல இடங்களில் முனைவர் மணி. மாறன் முன்பு செய்த நேர்காணலை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார். ஆகவே இந்த உரையாடல் முனைவர் மணி.மாறன் செய்திருந்த நேர்காணலை பெரிதும் பயன்படுத்தியும் நேரில் உரையாடிய விஷயங்களை தொகுத்தும் அமைக்கப்பட்டுள்ளது.
குடவாயில் பாலசுப்ரமணியன் - Tamil Wiki
 |
| குடவாயில் பாலசுப்ரமணியன் |
தொல்லியல், வரலாறு போன்ற இத்துறைகளில் தங்களுக்கு எப்போதிருந்து ஆர்வம் ஏற்பட்டது? அதற்கு காரணம் என்ன?
குடவாயில் அகர ஓகை போர்டு ஹைஸ்கூலில் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து வரலாறு மீதான என்னுடைய ஆர்வம் துவங்கியது. இதற்குக் அடிப்படையாக இரண்டு காரணங்கள் உண்டு. என்னுடைய வீடு குடவாயிலைச் சார்ந்த பெருமங்கலம் எனும் சிற்றூரில் இருந்தது. எங்களூர்ப் பகுதியே சங்க இலக்கியங்களில் பேசப்பெறும் குடவாயிற் கோட்டம் என்பது. என் கிராமத்தினை ஒட்டி கோட்டவம், மூப்புக் கோயில் திடல் என்ற இரு கருவேலங்காட்டுப்பகுதிகள் இருந்தன.
அந்த காட்டுப்பகுதியில் மிகுதியான மழை பெய்யும் பொழுது தரை மண் அரிக்கப்பட்டு வாய்க்கால்களாகப் பெருக்கெடுத்து ஓடும். அப்போது எங்களூருக்கு அருகிலுள்ள வடவேர் என்ற ஊரினைச் சார்ந்த ஒரு பழங்குடி இனத்தவர் அக்கருவேலங்காட்டிற்கு வந்து தரையில் இருந்து வெளிப்படும் செம்பு, வெள்ளி அரிதாகக் கிடைக்கும் தங்கக் காசுகள் ஆகியனவற்றைப் பொறுக்கி எடுத்து வந்து குடவாயில் கடை வீதியிலுள்ள பக்தர்களிடமும், பழம் பொருட்கள் வாங்குவோரிடமும் விற்பார்கள்.
இந்நிகழ்ச்சிகளை சிறு வயதிலிருந்தே பார்த்து வந்த நானும், நண்பர்களுடன் அங்கு சென்று அவ்வாறு வெளிப்படும் காசுகளைச் சேகரித்து வருவோம். அதில் குறிக்கப் பெற்றுள்ள எழுத்துகள், காணப்பெறும் உருவங்கள் ஆகியவற்றைப் பார்த்து அவை எந்தக் காலத்திற்கு உரியவை? யாரால் வெளியிடப் பெற்றவை? போன்றவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற பேரார்வம் எனக்கு இருந்தது. ஆனால், அதைப் பற்றி எனக்கு கற்பிக்கவோ, எடுத்துச் சொல்லவோ யாரும் கிடைக்கவில்லை.
எங்களூர் கோணேசர் திருக்கோயில் திருஞானசம்பந்தரால் பதிகம் பாடப்பெற்ற தலம். அக்கோயிலுக்கு தலைமை அறங்காவலராக என் தந்தையார் திகழ்ந்தார். அதுபோன்றே அக்கோயிலின் நடராஜருக்குரிய ஐந்து மகா அபிஷேகங்களில் ஒன்றினைச் செய்யும் உரிமை எங்கள் குடும்பத்திற்குரியது. கார்த்திகை மாத மூன்றாம் சோம வார மண்டகப்படியும் எங்கள் குடும்பத்திற்கே இருந்து வருகிறது. இக்காரணங்களால் அத்திருக்கோயிலோடு எனக்கு ஒரு நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அக்கோயிலில் காணப்படும் கல்\வெட்டு அருகில் என் நண்பர்களுடன் சென்று அந்த எழுத்துக்களை தடவித்தடவி படிக்க முற்படுவோம். ஆனால், எதையும் எங்களால் படிக்க இயலவில்லை. இருந்தும் அந்த எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற வெறி மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அக்கால கட்டத்தில் என் வீட்டிற்கு தினமணி நாளிதழ் வந்து கொண்டிருக்கும் அதில் ஞாயிற்றுக் கிழமைகளில் 'தினமணி சுடர்' என்ற அநுபந்த பகுதி இருக்கும். அந்த சுடர் பகுதியில் ஒரு வரலாற்றுக் கட்டுரை, ஒரு கலையியல் கட்டுரை, ஒரு பயணக் கட்டுரை, ஒரு அறிவியல் கட்டுரை எனப் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வெளிவரும். அக்கட்டுரைகளை எல்லாம் நான் மிகவும் விரும்பிப் படிப்பேன். குறிப்பாக, வரலாறு, கலையியல், திருக்கோயில்கள், கல்வெட்டுக்கள் பற்றி வருகின்ற கட்டுரைகளைப் படிப்பதோடு என் வீட்டு நூலகத்திலும் சேகரிக்கத் தொடங்கினேன். அதுபோலவே, எங்கள் ஊரில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு நல்ல மாத, வார இதழ்கள் வந்துகொண்டு இருந்தன. பள்ளி விடுமுறை நாட்களில் நூலகத்திற்குச் சென்று கலைமகள், மஞ்சரி, கலைக்கதிர் போன்ற இதழ்களை விரும்பிப் படிப்பேன். அவற்றில் என்னை ஈர்க்கக்கூடிய கட்டுரைகளைப் படித்து நோட்டுப் புத்தகத்தில் குறிப்புகளும் எடுத்து வருவேன்.
நான் படித்த அகர ஓகை பள்ளிக்கூடத்தில் ஒரு நல்ல நூலகம் உண்டு. அந்தப் பள்ளியோ, சாவூர் மாவட்டத்தில் அக்காலத்தில் தோன்றிய முதல் வரிசை பள்ளிக்கூடங்களில் ஒன்று. அக்காலத்துப் புண்ணியவான்கள் பல அரிய நூல்களை எங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வைத்திருந்தனர். எங்கள் பள்ளியில் என் ஆசிரியர் பெருமக்களெல்லாம் எங்கள் நூலகத்தைப் பயன்படுத்தி நன்கு வாசிக்கின்ற ஒரு பண்பு நெறியினை வளர்த்தார்கள். அவர்களின் தூண்டுதல்களால் பல நல்ல நூல்களைப் படித்து அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ளும் பெரு வாய்ப்பு ஏற்பட்டது. நான் எட்டாம் வகுப்பிலிருந்து S.S.L.C. வருகின்ற காலகட்டத்திற்குள் ஓய்வு நேரங்களில் எங்களூர் பொது நூலகத்தாலும் எங்கள் பள்ளி நூலகம் அனுமதித்து வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கும் நூல்களாலும் எனக்கு வரலாற்றிலும், கலையியல் துறைகளிலும் மேலும் ஈர்ப்பு ஏற்பட்டது. அக்காலகட்டத்தில் அரசு வெளியிட்ட கலைக்களஞ்சியம் நூல்கள் மேற்படி நூலகங்களில் வாங்கப்பெற்றன.
கலைக்களஞ்சியம் தொகுதிகளை வாசிக்கத் தொடங்கிய போதுதான் கல்வெட்டுக்களைப் படிக்க எனக்கு ஒரு தடம் தென்பட்டது. அகர வரிசைப்படி காணப்பெறும் கலைக்களஞ்சியத்தில் ஒவ்வொரு எழுத்தின் தொடக்கமும் கூறும்போது கல்வெட்டுக்களில் நூற்றாண்டுதோறும் அந்த எழுத்து எவ்வாறு வரிவடிவம் பெற்றிருந்தது என்பது குறிக்கப் பெற்றிருக்கும். என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் அந்த எழுத்துகளை அப்படியே எழுதி தொகுத்து வைத்து அந்த நோட்டுப் புத்தகத்தின் உதவியோடும், என் நண்பர்களோடும் குடவாசல் கோணேசர் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கல்வெட்டு எழுத்துக்களை நான் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தக எழுத்துக்களுடன் ஒப்பிட்டு எழுத்துக்களைப் படிக்க முற்பட்டு மகிழ்வோம்.
.jpg) |
| குடவாயில் கோணேசர் திருக்கோயில் |
ஆனாலும், அச்சாசனங்கள் என்ன கூறுகின்றன என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. ஆண்டுதோறும் பள்ளி விடு முறையில் மன்னார்குடியிலுள்ள என் பெரியம்மா வீட்டிற்குச்சென்று ஒரு மாதத்திற்கு மேல் தங்கியிருப்போம். மன்னை நகரில் இராஜ கோபாலசாமி கோயிலுக்கு அருகே கோட்டூர் அரங்கசாமி முதலியார் அறக்கட்டளை நூலகம் இருந்தது. அந்நூலகத்தில் இல்லாத நூல்களே இல்லை என்று கூறலாம். ஒவ்வொரு ஆண்டு விடுமுறையிலும், அந்நூலகத்திற்குக் காலையும் பிற்பகலிலும் சென்று மிகவும் ஆர்வமாக நான் விரும்பும் துறை சார்ந்த நூல்களை எல்லாம் எடுத்துப்படிப்பேன். இவை தான் எனக்கு கல்வெட்டிலும், வரலாற்றிலும் ஒரு பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்தின. அக்காலகட்டத்தில் எங்கள் பள்ளியின் நூலகராகவும் பின்னாளில் என் ஆத்மார்த்த நண்பராகவும் விளங்கிய திரு. புண்ணியமூர்த்தி இருந்தார். பல அரிய நூல்களை அவர் தலைமையாசிரியரிடம் ஒப்புதல் பெற்று வீட்டிற்கு எடுத்துச் சென்று படிக்கக் கொடுத்து உதவுவார். அந்தப் படிப்புதான் இன்று என்னை ஒரு ஆய்வாளனாக பரிணமிக்கச் செய்துள்ளது என்பதை தெளிவாகக் கூறுவேன்.
உங்களின் பெற்றோர், உங்கள் கல்வி, பணி குறித்து என்ன விரும்பினார்கள்?
என் தந்தையார் என்னை ஒரு மருத்துவராக்க பெரிதும் விரும்பினார். புதுமுக வகுப்பு தேறியவுடன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நேர்முகத் தேர்விற்குச் சென்றிருந்தேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்பு பி.எஸ்ஸி., முடித்த பிறகு பல் மருத்துவம் படிப்பதற்குரிய நேர்முகத் தேர்விற்குச் சென்றிருந்தேன்.
தெரிவில் காத்திருப்போர் பட்டியலில் என் பெயர் இருந்தும் எனக்கு வாய்ப்பு கிட்டாமலேயே போயிற்று. இருந்தாலும் என் வாழ்நாளில் என் தந்தையார் விருப்பப்படி மருத்துவத் துறையில் டாக்டர் பட்டம் பெறாவிட்டாலும், கட்டிடக் கலைத்துறையில் டாக்டர் (முனைவர்) பட்டம் பெற முடிந்தது. ஆனால், அப்போது என் தந்தையார் இல்லை. அது எனக்கு ஒரு வருத்தம் தரும் நிகழ்வுதான்.
நாகசாமியுடன் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது ?
நான் கல்லூரியில் பயின்ற காலங்களில் டாக்டர் இரா. நாகசாமி அவர்களின் கட்டுரைகள் தினமணி நாளிதழில் வெளிவரும். அவர்தம் கட்டுரைகள் என்னை அத்துறையில் வெகுவாக ஈர்த்தன. பின்னாளில் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது. இத்துறையில் என் ஆசானாக அவரை வரித்துக்கொண்டேன். கலையியல், கல்வெட்டுக்கள், வரலாறு ஆகிய துறைகளில் எனக்குப் பல நுட்பங்களை அவர் சொல்லித் தந்திருக்கிறார். என்னோடு பல கோவில்களுக்கு வந்து அங்குள்ள கல்வெட்டுத்தகவல்கள் குறித்தும், சிற்பவியல் குறித்தும் எனக்கு பாடம் எடுத்திருக்கிறார். எனது கட்டற்ற ஆர்வம் அவரால் முறைப்படுத்தப்பட்டது, நான் தொல்லியலுக்குள் ஆற்றுப்படுத்தப்பட்டேன்.
 |
| நாகசாமி |
நீங்கள் தேர்ந்த புகைப்படக்காரர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்...
துவக்க காலத்தில், அதாவது நான் ஆய்வுகளை துவங்கிய காலத்தில் புகைப்படக்கலை எனக்கு எவ்வளவு உதவியது என்று சொல்லமுடியாது, அக்காலத்தில் புகைப்படக்காரரை அமர்த்திக்கொள்வது செலவீனம் அதிகமாகும் விஷயம், மேலும் அவருக்கு நீங்கள் சொல்வது புரிய வேண்டும். பின்னாளில் பணி நிமித்தமாகவும் எனக்கு புகைப்படக்கலை உதவியது. நான் பள்ளியில் பயிலும்போது என் தந்தையின் அணுக்க நண்பர் ஒருவரின் மகனான ஷேக் அலாவுதீன் வகுப்புத் தோழரானார், ஓர் ஆண்டு அவரும் நானும் இணைந்து படித்தோம், அவர்தான் எனக்கு இதை கற்பித்தவர்.
ஷேக் அலாவுதீன் அடுத்த ஆண்டு சிங்கப்பூர் செல்ல முயன்று படிப்பை நிறுத்தினார். பின் அவர் சிங்கப்பூர் செல்ல இயலாமையால் மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். அதனால் எனக்கு ஓராண்டு பின்னாலேயே அவர் படிக்க நேர்ந்தது. இருப்பினும் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். அவருக்கு அறிவியல் துறையில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. பல அறிவியல் கட்டுரைகளையும் நூல்களையும் சேகரித்து வந்தார். பள்ளி நாட்களிலேயே புகைப்படம் எடுக்கும் கலையை எனக்குக் கற்பித்த ஆசான் அவரே. அவரிடம் நல்ல கேமரா இருந்தது. அதன் நுட்பங்களையும், படம் எடுத்து பிரிண்ட் போடும் கலையையும் எனக்குச் சொல்லித் தந்தார்.
அவர் வீட்டிலும், என் வீட்டிலும் புகைப்படங்கள் பிரிண்ட் செய்யக்கூடிய கருவிகளையும் இருட்டு அறையினையும் வைத்திருந்தோம். அன்று அவர் சொல்லித்தந்த அக்கலை இன்று வரை எனக்கு கைகொடுக்கின்றது. ஏன் சோறு போட்டது என்றே கூடச் சொல்லுவேன். அவர் பின்னாளில் மிகச்சிறந்த மருத்துவராகி சிங்கப்பூரில் பணிபுரிந்து தற்போது சென்னையில்

உங்கள் முதல் ஆய்வு எவ்வாறு துவங்கியது ?
நான் குடந்தை அரசினர் கல்லூரியில் BSc. விலங்கியல் படித்து வந்தேன். அக்கல்லூரி இருந்த கும்பகோணம் பகுதி கோயில்கள் சூழ்ந்த ஒரு வளமான பகுதி. என் ஆய்வுக்கு அதுவே களமாக அமைந்தது. சங்க இலக்கிய நூல்கள் அடிப்படையில் குடவாயிற் கீரத்தனார் பாடிய குடவாயிற் கோட்டத்தின் பெருமைகளை அறிந்து அவ்வூர் பற்றி ஆராய்வதே என்னுடைய முதல் நோக்கமாக இருந்தது.
பல தரவுகளைச் சேகரித்து வந்தபோதும், என்னுடைய அந்த முதல் ஆய்வு பூர்த்தி பெறாமலேயே தொடர்ந்தது. அதேநேரத்தில் குடந்தைக் கல்லூரியில் பயிலும்போதே அடிக்கடி தாராசுரம் திருக்கோயிலுக்கு செல்வேன். அங்குள்ள சிற்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினேன். பல நூல்கள் வழி அக்கோயில் குறித்து அறிந்தேன். என் முதல் ஆய்வுக் கட்டுரை 'கல்லெல்லாம் கதை சொல்லும் தாராசுரம்' என்ற தலைப்பில் 1970ஆம் ஆண்டு தினமணி சுடரில் வெளிவந்தது. என்னுடைய முதல் எழுத்துலகப் பிரவேசம் அதுதான். இருப்பினும் அத்திருக் கோயிலைப் பற்றி 2012ஆம் ஆண்டுவரை ஆய்வு செய்தேன். அந்த ஆய்வின் முடிவாக 2013இல் தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக் கோயில் என்ற ஒரு பெருநூல் வெளிவந்தது.
இருப்பினும் பள்ளிப் பருவத்தில் தொடங்கிய என் முதல் ஆய்வான குடவாயிற் கோட்டம் நிறைவு பெற்று 1978ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் சென்னை வரலாற்றுப் பேரவையினரால் அச்சிடப்பெற்று முதல் நூலாக வெளிவந்தது. இவ்வாறாகத்தான் என் ஆய்வுப் பாதையில் முதல் கட்டுரையும் முதல் நூலும் வெளிவந்தன.

உங்கள் பணி அனுபவங்கள் பற்றி கூறுங்களேன்?
தொடக்கத்தில் நான் எந்த அரசு சார்ந்த பதவிக்கும் போகவில்லை. கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் அறிவியல் உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால், பின்பு என் வாழ்க்கையின் தடம் மாறியது. 1979 ஆம் ஆண்டு உலகப்புகழ்பெற்ற தஞ்சை அரண்மனை நூலகமான சரசுவதி மகால் நூலகத்தில் காப்பாட்சியராகவும், நுண்படத்துறை வல்லுநராகவும் பணியில் சேர்ந்தேன். பின்னர். வெளியீட்டு மேலாளராகி பணி செய்து 30.06.2006ஆம் நாள் நூலகப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
ஓர் அறிவுச் சுரங்கத்தில் பணி செய்தோம் என்ற மனநிறைவு எனக்கு எப்போதும் உண்டு. என் பணிக்காலத்தில் பல அரிய சுவடிகளை நூலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளேன். அதேபோல் பல அரிய நூல்கள் அச்சில் வெளிவருவதற்குக் காரணமாகவும் இருந்துள்ளேன். அங்கு பணிபுரிந்தபோது பல ஆய்வுக் கட்டுரைகளை அந்நூலகத்திற்காக எழுதியிருக்கிறேன். நூலகத்தின் சிறந்த வெளியீடுகள் வரிசையில் திகழும் தஞ்சை நாயக்கர் வரலாறு என்ற பெருநூலும், கோயிற்கலை மரபு எனும் சிறு நூலும் என் படைப்புக்களே என்பதில் எனக்கு மனநிறைவு உண்டு.
 |
| தஞ்சை சரசுவதி மகால் |
உங்கள் ஆய்வுகளுக்கு பணிச்சூழல் உறுதுணையாக இருந்ததா?
இருந்தது, ஏனெனில் பல வல்லுநர்கள் என்னுடன் பணியாற்றினார்கள். எனக்கு அவர்களிடம் இருந்து அறிந்துகொள்ள விஷயங்கள் இருந்தது. தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற பிறமொழி வல்லுநர்கள் உதவி எனது ஆய்வுகளுக்கு பெரும்துணையாக இருந்தது.
உங்களது ஆய்வில் சோழர்கள் வரலாற்றிற்கு சிறப்பிடம் அளிப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ஆம், அப்படித்தான். ஏனெனில் நான் பிறந்த மண் சங்க காலச் சோழர்களின் தலைநகரமான குடவாயிற் கோட்டம். நான் குடித்து வளர்ந்த காவிரி நீரோ சோழன் வெட்டிய சோழ சூடாமணி ஆற்றுநீர். நான் சுவாசிக்கின்ற காற்று சோழ அரசர்கள் இராஜராஜனும், இராஜேந்திர சோழனும் சுவாசித்த அதே காற்று. நான் வணங்கும் கோயில் சோழன் எடுப்பித்த பெருங்கோயில். நான் இவற்றால் ஆனவன், ஆகவே என் ஆய்வுத் தளமாக சோழ மண்டலம் முதன்மையாக விளங்குகிறது.
 |
| குடவாயில் |
கீழ்த்திசை நாடுகளில் தாங்கள் செய்த ஆய்வுகள் குறித்து கூறுங்களேன்.
காம்போஜம் என்னும் கம்போடிய நாட்டிலும், இந்தோனேசியாவின் ஜாவா பகுதியிலுள்ள பெரம்பனான், போராபுதூர் ஆகிய இடங்களிலும், பாலித் தீவிலும் நேரில் கள ஆய்வு செய்து கோயிற்கட்டடக்கலை, சிற்பக் கலை போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தரவுகளைச் சேகரித்து வந்தேன். 2013ஆம் ஆண்டில் நிகழ்ந்த இப்பணி என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று.
இராஜேந்திர சோழனின் கரந்தை செப்பேட்டில் காம்போஜ மன்னன் இப்பெருமன்னனின் நட்புறவு வேண்டி, அவன் போர் மேற்சென்று வெற்றித் திருமகளைத் தழுவிய போது எந்தத் தேரில் சென்றானோ அதனை சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தான் என்ற குறிப்பு உள்ளது. காம்போஜ மன்னர்கள் போரில் பயன்படுத்திய தேரின் வடிவமைப்பு எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை அங்கோர்வாட் கோயிலில் இருக்கின்ற சிற்பங்கள் வழி ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளேன்.
அதுபோல தமிழ் நாட்டுக் கோயில்களின் நீர்நிலைகளை சிவகங்கை என்றழைக்கும் மரபிற்கும் கம்போடிய நாட்டில் காணப்பெறும் இதே மரபு பற்றிய தொடர்பு குறித்தும் விரிவாக ஆராய்ந்துள்ளேன். ஆயிரலிங்க வழி பாடு சோழ நாட்டிலும், கம்போடிய நாட்டிலும் இருந்ததற்கான ஒப்புமைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளேன்.
தமிழ்நாட்டு சிவாலயங்களில் காணப்பெறும் இராமாயணச் சிற்பங்களுக்கு கம்போடியாவிலும், இந்தோனேசியாவிலும் உள்ள இராமாயணச் சிற்பங்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து தெளிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டின் நாட்டியக்கலைக் கூறுகள், போராபுதூர் சிற்பங்களில் காணப்படுவதையும், அந்நாட்டு சிற்பங்களில் மனுநீதிச் சோழனின் வரலாறு காட்டும் சிற்பங்கள் இடம் பெற்றிருப்பதையும், பஞ்சதந்திரக் கதையின் ஒரு வெளிப்பாட்டை தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில் சிற்பக் காட்சிக்கும் இந்தோனேசியாவின் மென்டட் புத்தர் ஆலயத்தில் உள்ள ஒரு சிற்பக் காட்சிக்கும் உள்ள தொடர்பு பற்றியும், கிச்சு கிச்சு தாம்பூலம் என்ற தமிழக நாட்டுப்புற விளையாட்டை காட்சிப்படுத்தும் சிற்பம் அதே மென்டட் கோயிலில் இருப்பது குறித்தும், கோழிப் போர் என்ற வீரவிளையாட்டில் நம் நாட்டிற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளேன்.
சோழர் வரலாறு தாண்டி வரலாற்றுத்துறையில் வேறு வரலாறுகள் தங்களை ஈர்த்திருக்கிறதா?
எனக்கு எகிப்து வரலாறு மீது மிகுந்த ஆர்வம் உண்டு, உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்று இல்லையா. நான் அங்கு சென்றும் வந்திருக்கிறேன். தருணம் அமைந்தால் அதைப்பற்றி நான் எழுதக்கூடும்.
 |
| எகிப்தில் குடவாயில் |
ஆய்வுமீதான விமர்சனங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்
பொருட்படுத்தத்தக்க விமர்சனங்களை மட்டும் மதிக்கிறேன். நீங்கள் ஏன் இதையெல்லாம் செய்யவில்லை என்ற கேள்விகளுக்கு பெரும்பாலும் எனது பதில் நான் இந்த ஆய்வுகளை இப்படி செய்திருக்கிறேன், அடுத்து வருபவர்கள் இதை விரும்பும் வகையில் முன்னெடுத்துச்செல்லுங்கள் என்பதே.
தங்களது ஆன்மீக வழிகாட்டிகளாக யாரை கருதுவீர்கள் ?
சுவாமி தயானந்த சரஸ்வதி நான் வணங்கக்கூடிய குரு, என்மீது பிரியம் உள்ளவர். எனது அண்ணனும் அவரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். பலசமயங்களில் அவருடனான உரையாடல் எனக்கு மனத் தெளிவை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சி காமகோடி பீடாதிபதியான சந்திர சேகரேந்திர சரஸ்வதி எனது ஆய்வின் துவக்க காலத்திலேயே என்னை அங்கீகரித்திருக்கிறார், அவரது தூண்டுதலால்தான் கருணாகரத்தொண்டைமான் குறித்த ஆய்வை மேற்கொண்டேன். இதை புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறேன்.
அதேபோல சேக்கிழார் அடிப்பொடி தி ந ராமச்சந்திரனின் அணுக்கம் என்னை சைவத்தில் ஆழ்ந்துசெல்லத்தூண்டியது. நானும் எனது நண்பர் சுப்பாராயலுவும் அவரைப்பார்த்து தொடர்ந்து உரையாடுவோம். தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என்ற நூலை எழுத அவர்தான் எனக்கு தூண்டுதலாக இருந்தார், உண்மையில் அந்த நூல் அவரது கனவு.
 |
தயானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் ஆசி பெறும் குடவாயில் பாலசுப்ரமணியன்.
|
ஆய்வுக்களங்களில் மறக்கமுடியாத தருணங்களை பகிர்ந்துகொள்ள முடியுமா?
ராஜராஜன் சிலை மீட்பில் பங்களித்தது, ராஜேந்திரனின் பிறந்த நாளை கல்வெட்டு மூலம் உறுதிப்படுத்தியது போன்ற பல பலதருணங்கள் இருக்கின்றன. ஒரு முறை ஓரிடத்தில் வீடுகட்ட பள்ளம் வெட்டுகையில் சிலைகள் கிடைத்ததாக தாவல் வந்தது. துறையினருக்கு தகவல் கூறிவிட்டு அங்கு சென்றோம். நானே எனது கைகளால் ஒரு ஆண்டாள் சிலையை வெளியே எடுத்து தோள்களில் தூக்கி வந்தேன். அந்தக்கணம் எனக்கு சொல்லமுடியாத வகையில் சிலிர்ப்பாக இருந்தது, ஏதோ ஓரிடத்தில் பெரியாழ்வாருக்கும் அதே உணர்வு இருந்திருக்கும் இல்லையா.
 |
| ராஜராஜன், லோகமாதேவி சிலை |
ஆய்வு மாணவர்களுக்கு தாங்கள் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?
நான் கூற விரும்புவது, இங்குள்ள திருக்கோயில்களை சமயம் சார்ந்த ஒரு வழிபாட்டுத்தலம் என்று மட்டும் கருதாதீர்கள். அவை தமிழ்ப்பண்பாட்டின் முகவரி என்றுதான் சொல்லவேண்டும். அவை ஒவ்வொன்றும் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. சமூக மேம்பாடுகள் அனைத்தும் கோயில் சார்ந்தே நடந்துள்ளன.
தமிழனுடைய பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு அத்தனையும் திருக்கோயில்களில் தான் பொதிந்து திகழ்கின்றன. அவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழனின் தலையாய கடமையாகும். குறிப்பாக, கல்வெட்டுக்களிலும் ஓலைச்சுவடிகளிலும் காணப்பெறும் கிரந்தம் என்ற எழுத்துமுறை தமிழன் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஒரு முறைதான். கிரந்தத்தில் உள்ள சமஸ்கிருத நூல்கள் எல்லாம் வடநாட்டவர் எழுதியவை என்று புறம் தள்ளாதீர்கள். அவை அனைத்தும் தமிழன் படைத்தவையே என்பதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழன் எத்தனை மொழிகளைக் கற்றுக்கொள்ள இயலுமோ அது அவனது மேம்பாட்டிற்கு நிச்சயம் உதவும் என்பதே என் கருத்து.
இளைய தலைமுறைக்கு அறிவியல் சார்ந்த துறைகளில் சாதனைகள் புரியும் இளைஞர்கள் நம் வரலாற்றை அறிய வேண்டும். அவை வெறும் வரலாறு மட்டுமன்று அவர்களது அனுபவம் நமக்கு வழிகாட்டும் ஒருதடமே என்பதை உணர வேண்டும். குறிப்பாக, அவர்களுக்கு பின் வரும் சந்ததியினருக்கு குறைந்தபட்சம் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுத்தர வேண்டும்.
தற்போது என்ன ஆய்வில் ஈடுபட்டு வருகிறீர்கள்
என்னுடைய பெருங்கோவில் நூல்கள் வரிசையில் இன்னும் இரண்டு நூல்கள் வெளியாகவுள்ளன. அதற்கான எனது நேரம் முழுமையும் செலவழித்து வருகிறேன். இன்னும் செய்து முடிக்க வேண்டிய திட்டங்கள் பல உள்ளன.
நேர்காணல் : முனைவர் மணி.மாறன், தாமரைக்கண்ணன்
 |
| மணி. மாறன் |
த.ம.சரபோஜி என்கிற மணி. மாறன் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ்ப்பண்டிதராகப் பணியாற்றிவருகிறார். வரலாறு, கலை, இலக்கியம், வரலாறு மற்றும் சுவடியியல் சார்ந்த துறைகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் இவர், தமிழ் எண்ணும் எழுத்தும், தமிழறி மடந்தை கதை முதலிய நூல்களை எழுதியுள்ளார். காகித ஆவணங்களில் காணப்படும் செய்திகளை இன்றைய தமிழ் வடிவிற்கு மாற்றித் தரும் பணியைச் செய்துவருகிறார். சிற்றிலக்கிய வகைகளில் அந்தாதி, குறவஞ்சி, சதகம் என்ற வகையில் முறையே அழகரந்தாதி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, அறப்பளீசுர சதகம் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
 |
| குடவாயில் பாலசுப்ரமணியனுடன் தாமரைக்கண்ணன் |