![]() |
| டேவிட் அட்டன்பரோ(1956) |
கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம் பெற்ற டேவிட் அட்டன்பரோ 1952-ல் பி.பி.சி.யின் வானொலி நிகழ்ச்சிகளுக்காக காட்டுயிர் சார்ந்த உரைகளை எழுதினார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மேற்கொண்ட ஆப்பிரிக்க பயணம் புறவுலகிற்கு அவரது கண்களை திறந்து விட்டது. அந்த வெப்ப நாடுகளில் அவர் கண்ட பல்லுயிரிய வளம் அவரை ஈர்த்தது. இயற்கை சார்ந்த ஆய்வு தான் தன் வாழ்நாள் பணி என்று முடிவு செய்தார்.
தொலைக்காட்சி தோன்றியபின், சின்னத்திரையில் ஒரு முறை மட்டுமே காட்டப்படும் குறும்படங்களின் தேவை உணரப்பட்டது. காட்டுயிர் பற்றிய குறும்படங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.
இந்தவகைப் படங்கள் உயிர்காட்சியகங்களிலிருந்துதான் தொடங்கின. அங்கிருந்த சில உயிரினங்களை படப்பிடிப்பு நிலையத்திற்கு கொண்டு வந்து படங்கள் தயாரித்தார்கள். இந்தப்படங்களுக்கு பின்னணி வர்ணனை எழுத அந்தத்துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்கள் தேவைப்பட்டனர். இந்த தருணத்தில் தான் அட்டன்பரோ தோன்றினார். லண்டன் உயிர்காட்சியங்களிலிருந்த விலங்குகள் பற்றி Zoo Quest என்ற தொலைக்காட்சித் தொடரை, திரைக்கதை போல, அட்டன்பரோ எழுதினார். பின்னர் Life on Earth என்ற தலைப்பில் பதிமூன்று பாகத்தில் ஒளிபரப்பப்பட்ட தொலைகாட்சித் தொடர்தான் அவருக்கு பன்னாட்டளவில் பெயர் வாங்கித் தந்தது. இவரே திரையில் தோன்றி விளக்கம் கொடுத்தார். படமெடுக்கும் குழுவினருடன் மூன்று வருடங்களாக பல லட்சக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்து உருவாக்கப்பட்ட தொடர் இது. இந்த தொடருக்காக அவர் செய்த ஆய்வை Life on Earth என்ற நூலாக 1979இல் அவர் வெளியிட்டார். 1990இல் Trials of Life என்ற இன்னோரு மகத்தான தொடரை உருவாக்கினார். பின்னர் நான்கு ஆண்டுகளாக 64 நாடுகளுக்கு பயணித்து, உழைத்து Planet Earth என்ற தொடரை வெளியிட்டார்.
தொலைக்காட்சி தொடருடன் அவ்வப்போது சில இயற்கையியலாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதி படமாக்கினார். அமெரிக்காவில் வாழ்ந்த இயற்கை ஓவியர் ஜேம்ஸ் ஆடுபான், (James Audubon) கென்யாவில் வாழ்ந்த வில்ஃப்ரெட் தெசிகர் (Wilfred Thesiger) ஆகியோரைப்பற்றி குறும்படங்கள் தயாரித்தார்.
பின்னர் பி.பி.சி. நிறுவனத்திற்காக தொடர்ந்து பணியாற்றினார். அவர் பயணிக்கும் போது எப்போதும் அவருடன் மூன்று படப்பிடிப்பு குழுக்கள் சென்றன. அட்டன்பரோவின் எழுத்தின் அடிப்படையில் இவர்கள் உருவாக்கும் காட்சிகள் பற்றி அவர் திரையில் தோன்றி, தொகுப்பாளராகவும் நெறியாளராகவும் விளக்குவார். அற்புதமான பிம்பங்களுடன் இயற்கை சார்ந்த அறிவியல் கருதுகோள்களை எளிமையான மொழியில் விளக்குவது இந்த படங்களின் சிறப்பு. அவருடைய இந்த பாணிதான் பார்வையாளர்களை ஈர்த்தது. பொருள் பொதிந்த, மனதில் பதியக்கூடிய இவரது சொற்கள் காட்சிப்படிமங்களுக்கு மெருகூட்டின. அவர் ஒருமுறை சொன்னார் Nature once determined how we survive. Now we determine how nature survives.
இயற்கை சார்ந்த திரைப்படங்களுடன் அவர் பெயர் ஒன்றென கலந்து விட்டாலும், அவர் பின்புல ஆய்வு செய்து, திரைக்கதை எழுதி, அதற்கு நெறியாளராகத்தான் பணியாற்றினார். எப்போதும் அவருடன் இருந்த ஒளிப்பதிவாளர்கள்தான் கடலடியிலும், பனிப்பிரதேசங்களிலும், பாலைவனங்களிலும் இயங்கினார்கள். ஒரு திரைப்பட தயாரிப்பில் இயக்குனர்தான் கடவுள் என்றால், காட்டுயிர் பற்றிய பட உருவாக்கத்தில் கடவுள் தான் இயக்குனர் என்றார் ஒரு ஒளிப்பதிவாளர். ஏனென்றால் எந்த காட்சி கிடைக்கின்றதோ அதை வைத்துத்தான் படத்தை உருவாக்க வேண்டும். திமிங்கலத்தையோ கம்மோடோ டிரேகனையோ இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொல்ல முடியாதே. இங்கு படமெடுத்தபின் திரைக்கதை எழுதப்படும். அதை துல்லியமாக செய்தார் அட்டன்பரோ. Life on Earth என்ற தொலைக்காட்சி தொடர் சார்ந்த அதே தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் பரந்த வரவேற்பை பெற்றது.
இயற்கை சார்ந்த திரைப்படங்கள் காட்டுயிர் பற்றிய பல புரிதல்களை நமக்களித்தன. எளிதாக காண முடியாத, ஆழ்கடலில் வாழும் மீன்கள் போன்ற, உயிரினங்களை பார்வையாளர்கள் திரையில் பார்க்க முடிந்தது. அண்மையில் முதல்முதலாக அதன் வாழிடமான லடாக் பகுதியில் வாழும் பல்லா பூனையை (Palla’s Cat) நாம் திரையில் காண முடிந்தது. காட்டுயிருக்கும் வாழிடத்திற்கும் உள்ள தொடர்பை உணர முடிந்தது. இரண்டாவதாக, உயிரியலாளர்கள் கள ஆய்வு மூலம் கண்டறிந்த சில உண்மைகளை படமாக்கி காட்ட முடிந்தது. தான்சனியாவில் உள்ள செரங்கட்டி சரணாலயத்திலிருந்து வில்டபீஸ்ட் (Wildebeest) போன்ற ஆயிரக்கணக்கான உயிரினங்கள் புலம்பெயர்வதை நாம் பார்க்க முடிகின்றது. மூன்றாவதாக காட்டுயிர் பற்றிய ஒரு படம், அவற்றின் வாழிடத்தை ஆவணப்படுத்துகின்றது. பல ஆண்டுகள் கழித்து, அந்தப்பகுதி சிதைந்திருக்கின்றதா இல்லையா என்று நாம் அறிந்து கொள்ள முடியும். நான்காவதாக, ஒரு உயிரினத்தின், இது வரை நாம் அறிந்திராத நடவடிக்கையை படம் பிடிக்க வாய்ப்பு உண்டு. அண்மையில், இருவாச்சி ஒன்று, கிளிக்குஞ்சுகளை உயிருடன் பிடித்து மரப்பொந்திற்குள் இருக்கும் தனது குஞ்சுகளுக்கு இரையாக ஊட்டுவதை ஒருவர் படமாக்கி இணையத்தில் காட்டினார்.
எண்பதுகளில் தோன்றி புழக்கத்தில் வந்த டிஜிடல் போட்டோகிராபி இயற்கையைப்பற்றிய திரைப்படங்களுக்கு பெரிய உந்துதலாக அமைந்தது. பிலிம் செலவு இல்லை. குறைந்த ஒளியிலும் படமெடுக்க முடியும். ஆயிரத்தில் ஒரு வினாடி என்ற ஷட்டர் வேகத்தைக்கொண்டு, அதிவேகத்தில் ஒடும், பறக்கும் உயிரிகளை கச்சிதமாக படமெடுக்க முடிகின்றது.
இந்தியாவில் காட்டுயிர் வளம் சிறந்திருந்தாலும் இங்கு அட்டன்பரோ செய்த பணி குறைவே. Secrets of Wild India என்று ஒரு படத்தையும், Tiger: The Spy in the Jungle என்ற படத்தையும் 2008-ல் தயாரித்தார். 2018-ல் கர்நாடக அரசு இவரை கொண்டு Wild Karnataka என்ற குறும்படத்தை தயாரித்தது. அட்டன்பரோ ஏன் இந்தியாவில் அதிகம் இயங்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. இந்திய வனத்துறையுடன் ஊடாடுவது மிகச்சிரமானது என்று காட்டுயிர் படத்தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும் எக்கச்சக்கமான விதிகள். அதுமட்டுமல்ல. இந்தியாவின் காடுகள் அடர்த்தியாக இருப்பதால், வெளிச்சம் குறைவு. ஆகவே படமெடுப்பது சிரமம்.
இயற்கையை போற்ற தனது படைப்புகள் மூலம் அட்டன்பரோ ஒரு பெரும் விழிப்புணர்வை தோற்றுவித்தார் என்றாலும், அவர் படங்களில் வெளிப்படும் காட்டுயிர்பேணல் சார்ந்த சித்தாந்தத்திற்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு. இவர் தன் படங்களில் மக்களை முற்றிலுமாக ஒதுக்கி அழகியலுக்கே சிறப்பிடம் கொடுக்கின்றார் என்றனர். ஆதிவாசிகளையும் காட்டில் வாழும் பழங்குடியினரையும் அவர்களின் பிரச்னைகளையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்வதேயில்லை. இவரை மதிப்பீடு செய்யும் சிலர் இந்த சித்தாந்தத்தை Fortress conservation என்று முத்திரை குத்தியுள்ளனர். அதாவது காட்டை ஒரு கோட்டையைப் போலாக்கி அதனுள் மக்கள் வராமல் தடுப்பது. இது மக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்றனர்.
காட்டுயிர்ப் பேணலுக்கு அவரது அணுகுமுறை மேட்டிமைத்தனமாக இருந்தது என்றனர். சுற்றுச்சூழல் சீரழிவிற்கு மக்கள்தொகை ஏற்றமே காரணம் என்றார் அட்டன்பரோ. இது ஒரு பத்தாம்பசலி வாதம். எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும் பணக்காரர்களே உலகின் மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்தி சுற்றுச்சூழலை அழிக்கின்றனர் என்பதை பல அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டிருக்கின்றார்கள். அதே போல காலநிலை மாற்றம் என்ற பிரச்னையிலும் அவர் அக்கறை காட்டவில்லை.
காட்டுயிர் பற்றிய திரைப்படங்கள் பொழுதுபோக்கு என்ற அளவில் நின்று விடக் கூடிய ஆபத்து இருந்தாலும் அட்டன்பரோவின் படைப்புகள் உலக அளவில் பல்லுயிரியத்தைபற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதில் சந்தேகமேயில்லை.
சு. தியடோர் பாஸ்கரன்

