
காம தகன மூர்த்தி- கங்கை கொண்ட சோழபுரம்
![]() |
| வள்ளலார் |
பண்ருட்டி தர்காவிற்கு நாங்கள் செல்வதுபோல், நண்பர்கள் திருவந்திபுரம், திருவதிகை மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு கோயிலுக்கு செல்வார்கள். பண்ருட்டி தர்காவில் நிகழும் சந்தனக்கூண்டு திருவிழாவிற்கு, நாங்கள் மாட்டு வண்டு கட்டிக்கொண்டு செல்வதுபோல, நண்பர்களும் வடலூர் தைப்பூசம், வேலுடையான்பட்டு பங்குனி உத்திர திருவிழாக்களுக்கு மாட்டுவண்டி கட்டிக்கொண்டு செல்வார்கள். பின்னர் வளர்ந்த பிறகு எங்களுடன் அவர்களும், அவர்களுடன் நாங்களும் சென்று அந்தந்த திருவிழாக்களை கண்டு களித்திருக்கிறோம். வடலூர் தைப்பூசத்திலும் வேலுடையான்பட்டு உத்திரதிருவிழாவிலும் நிகழும் அன்னதானத்தை போட்டிபோட்டுக்கொண்டு உண்டு மகிழ்வோம். பொதுவாக இசுலாமியர்கள் மாற்று மதத்தினர் கொடுக்கும் படையல் உணவுப் பொருட்களை உண்ண மறுப்பார்கள் என்பார்கள். எங்களுக்கு அந்த தடை ஏதும் இருந்ததில்லை.
தைப்பூச திருவிழாவிற்கு செல்லும்போது வள்ளலார் ஜோதியாய் மறைந்த கதையை சொல்வார்கள். வேலுடையான்பட்டில் காவடி எடுத்துக்கொண்டு வாயில் வேல்கம்பியை குத்திக்கொண்டு செல்வதைப் பார்க்கும்போது நண்பர்களிடம் இவர்களுக்கு வலிக்காதா? என்பேன். சாமிக்காக குத்திக்கொள்வதால் வலி இருக்காது என நண்பர்கள் சொல்வார்கள்.
கல்லூரி காலம் வரையிலும் கூட மரவள்ளி கிழங்கு அறுவடை காலங்களில் அப்பாவுடன் ஓரிரு முறை சேலம் ஆத்தூர் சென்றது தவிர்த்து நான் சார்ந்த கடலூர் மாவட்டத்தைத் தாண்டி பெரிதாய் வெளியே எங்கும் சென்றதில்லை என்று தான் சொல்ல வேண்டும். கிழங்கு அறுவடைக் காலத்தில்தான், ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை போடுவார்கள். ஐயப்பன் கோயிலுக்கு செல்ல காட்டுமேட்டை கடந்து செல்ல வேண்டுமென்பதால், குருசாமியின் வழிகாட்டுதலுடன் கடினமான விரதத்தை மேற்கொண்டு தூய்மையுடன் இருக்க வேண்டும் இல்லையெனில் காட்டில் விலங்கு அடித்துவிடும் என பல சாகச கதைகளை சொன்னதோடு, மாலை போட்ட 100 சாமிகளை கண்களால் பார்த்து எண்ணிவிட்டால்போதும், பள்ளியில் நாம் பரீட்சையில் எளிதில் பாஸ் ஆகிவிடலாம் எனவும் நண்பர்கள் சொல்வார்கள். அதனால் அப்பாவுடன் கிழங்கை சுமந்த லாரியில் ஆத்தூர் செல்லும்போது ஐயப்பனுக்கு மாலை போட்ட பக்தர்களை கண்ணால் பார்த்து எண்ணிய அனுபவமும் உண்டு.
அடிப்படையில் எனக்கு பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்த ஒன்று. பணியில் சேர்ந்து திருமணத்திற்கு பிறகு மிகவும் தாமதமாகதான் எனக்கு டூவீலர் வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே டூவீலர் வந்த பிறகு விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சுற்றுவட்டார பகுதிகளில் பயணிப்பேன்.
![]() |
| குடவாயில் பாலசுப்ரமணியன் |
இப்படி விளையாட்டாக ஆரம்பித்த பயணம் எனக்கு மிகப் பெரிய விடுதலை உணர்வை அளித்தது. அதனால் விடுமுறை தினத்தில் மட்டுமே பயணித்தவன் நிறுவனத்தில் காலைப்பணி வேளை வாய்க்கும்போதெல்லாம், இடையிடையே மதியத்தில் குறைந்த தூரத்தில் ஏதாவது ஒரு பயணத்தை திட்டமிட்டு நண்பருடன் பயணித்தேன். அப்படி தொடர்ந்து பயணிக்கும்போது தான் தெரிந்தது, தமிழகத்தில் கடற்கரை தவிர்த்து, பயணம் செய்ய ஏதுவான இடங்களாக பெரும்பாலும் கோயில்களே இருந்தன. சிதம்பரம், திருக்கோயிலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சை, கும்பகோணம் என எங்கள் கடலூர் மாவட்டத்திற்கு அருகில் இருந்த ஒவ்வொரு ஊராய் பயணித்தேன்.
விழுப்புரம், செஞ்சி பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள வரலாற்று, தொன்மங்களின் சிறப்பை நண்பர் சொல்ல கேட்டு அவருடன் பயணித்தேன். அதில் பல சமணர் படுக்கைகளும் உண்டு. விழுப்புரம் பகுதிகளில் பல வரலாற்று சுவடுகளையும் நடுகற்கள், கொற்றவை சிலை ஆகியவற்றை பயணித்து கண்டதுண்டு. ஒவ்வொரு பயணத்திலும் அந்த மண் சார்ந்த மனிதர்களுடன் உரையாடி, அவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ளும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு வாய்த்த நண்பர்கள் ஒரு விதத்தில் எனக்கு குருவும் கூட என சொல்லலாம். அவர்கள் ஆன்மீகத்திலும் கலையிலும் மிகவும் ஈடுபாடும் தேர்ச்சியும் கொண்டவர்களாக இருந்தார்கள்.
தொடக்கத்தில் கோயில்களுக்கு செல்லும்போது கோயில் கட்டிட கலை குறித்தோ, சிற்பக்கலை குறித்தோ ஒன்றும் தெரியாது. அவற்றின் அளவின் அடிப்படையிலும் புகழின் அடிப்படையிலுமே அந்த கோயில்களின் சிறப்புகளை அறிந்திருந்தேன். நண்பர்களின் வாயிலாக மெல்ல எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களின் பெயர்கள் அறிமுகமாகிறது.
அவர்களின் தளத்தை தொடர்ந்து வாசிக்கும் போதுதான், கோயில் என்பது வெறுமனே மதம் சார்ந்த வழிபாட்டு இடம் மட்டுமல்ல, கோயில் என்பதும் ஒரு கலை வடிவம்தான் என்னும் உண்மை தெரியவருகிறது. எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்களின் வாயிலாக குடவாயில் பாலசுப்ரமணியன் எனும் பெயர் அறிமுகமாகி அவருடைய நேர்காணலை முதலில் வாசித்தேன். அவர் அதில் கஜசம்ஹாரமூர்த்தி எனும் சிலையின் நுட்பத்தைப் பற்றி கூறியிருந்தார். சிவபெருமான் கஜாசூரனின் ஆணவத்தை அழித்து யானையின் தோலையே உரித்து போர்த்திக்கொண்டு நிற்கும் காட்சியில், சிவனின் முகத்தில் வலதுபுறம் கோபமும், இடதுபுறம் உமையாள் குழந்தை முருகனுடன் இருப்பதால் கோபத்தைக் காட்டினால் முருகன் பயந்துவிடுவான் என்பதால் புன்னகையுடனும் சிலை காணப்படும் என சிற்பியின் கலைநுட்பத்தை குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு ஒருமுறை தஞ்சை சரஸ்வதி மகாலுக்கு சென்றபோது, கஜசம்கார மூர்த்தி சிலையை பார்க்கும்போதுதான் புரிந்தது கல்லும் பேசும் என்பது.
![]() |
| கஜசம்கார மூர்த்தி |
திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய நூல்களில், நான் முழுமையாக வாசித்த நூல்கள் என, தமிழகக் கோயில் கலை மரபு, தமிழகக் கோபுரக்கலை மரபு, கலையியல் ரசனைக் கட்டுரைகள் மற்றும் தஞ்சை பெரிய கோயில் குறித்த சிறிய நூல் போன்றவற்றைச் சொல்லலாம்.அத்துடன் கோயில் கட்டிடக் கலை குறித்தும், சிற்பக்கலை குறித்தும் அவருடைய பல மணி நேர உரைகளை கேட்டிருக்கிறேன். அவருடைய நூல்களை வாசித்தப் பிறகு தான் கோயில் கட்டிடக்கலை, சிற்பக்கலை மற்றும் கோயில் பண்பாடு குறித்தும் அடிப்படையான சில புரிதல்களை அடைந்தேன் என்றும் சொல்ல வேண்டும்.
கடந்த பத்து பதினைந்து வருடங்களில், நண்பர்களுடன் பல ஊர்களில் அமைந்த பல கோயில்களுக்கு சென்று வந்தாலும் கூட, இப்போது தான், மனிதன் குகை மனிதனாய் வாழ்ந்த போது எவ்வாறு இயற்கையையும் தன்னைவிட வலிமை வாய்ந்த விலங்குகளை வணங்கினான் என்பதையும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே அவன் வணங்கிய தாய்தெய்வம், நடுகல், கல்திட்டை தொடங்கி ஆதித் தாய் தெய்வமான விசிறிப்பாறை, மண்சுதைக் கோயில், செங்கல் கோயில், குடைவரைக் கோயில், முழுதும் கற்களால் கட்டப் பட்ட கற்றளி என ஆதிமனிதன் தொடங்கி பல்லவர், முற்கால பாண்டியர், முற்காலச் சோழர், பிற்காலச்சோழர், விஜய நகரப்பேரரசு, நாயக்கர்கள், மராத்தியர்கள் என ஒவ்வொரு ஆட்சியாளர்களின் காலத்திலும் கோயில் கட்டிடக்கலையும் சிற்பக்கலையும் எவ்வாறு வளர்ந்து வந்துள்ளன எனும் அதனுடைய வளர்ச்சியின் பரிணாமத்தை நன்றாக உணரமுடிகிறது. மேலும் இந்தியாவில் உள்ள சைவம், வைணம், சாக்தம், செளரம், கணாபத்யம், கெளமாரம் எனும் ஆறு மதங்கள் குறித்தும் அவற்றின் சாராம்சம் குறித்தும் அறிந்துகொண்டேன்.
சிதம்பரம் கோயிலுக்கு அடிக்கடி நண்பர்களுடன் செல்வது வழக்கம். அப்படி பலமுறை ஆருத்ரா தரிசனத்தின் போன அனுபவம் நிறைய உண்டு. அந்த வைபவத்தின் போது ஒரு நாளில் பிச்சாடனார் உலா நிகழும்.அதற்கான புராணக் கதையை மேலோட்டமாக கேள்விப்பட்டாலும்கூட குடவாயிலின் கட்டுரையை வாசிக்கும்போதுதான் தாருகா வனத்தில் ரிஷிகளின் ரிஷி பத்தினிகளின் ஆணவத்தை,ஆசையை,காமத்தை அழிக்க சிவபிரான் நிர்வாண நிலையில் பிச்சை எடுக்க சென்ற கதைப் பின்னணி தெரிந்தது.அந்த கதையை தெரிந்து கொண்டு,அங்கே நிகழ்த்தப்படும் பிச்சாடனார் திருஉலா வைபத்தைக் காணும்போது, அந்த காட்சியும் கதைப் பின்னணியும் தரும் உணர்வெழுச்சியில் நம்முள் குடிகொண்ட ஆணவத்தையும் காம குரோதத்தையும் கண நேரத்திற்கு தொலைக்கும் உணர்வை கொஞ்சம் உணர்ந்திருக்கிறேன் என்றும் சொல்லலாம். தமிழகக் கோயில்களில் இம்மாதிரியான புராண காட்சிகள் சிற்பக் கதை தொகுப்புகளாக வடிக்கப்படுவதற்கு திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தர மூர்த்தியார் எனும் மூவர் பாடிய தேவார பதிகங்களின் பாடல்களே காலத்தால் முன்மாதிரியாக இருந்திருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது. மேலும் இவை எவ்வாறு பல்லவர், சோழர்காலம் மற்றும் நாயக்கர்காலத்திலும் கலை நேர்த்தியுடன் சிற்பிகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை மாமல்லபுரத்திலும், தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரத்திலும் சென்று கண்களால் காணும்போது உணரமுடிகிறது.
தஞ்சை பெரிய கோயிலுக்கும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கும் சிலமுறை நண்பர்களுடன் சென்றதுண்டு என்றபோதிலும் கோயிலின் பிரமாண்டத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வந்து விடுவேன். பின்னரே கேரளாந்தகன் கோபுரம் குறித்தும் ராஜராஜன் கோபுரம் குறித்தும் குடவாயிலின் மூலம் சில அரிய தகவல்கள் தெரியவருகிறது. ராஜராஜன் கோபுரத்தின் முன்னே 18 அடிஉயரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் துவாரபாலகர்களின் சிலைகளை மட்டுமே சில மணி நேரங்கள் நின்று ரசிக்கலாம். கோயிலின் உள்ளே பிற்காலத்தில் நாயக்கர்களால் கட்டப்பட்ட கந்தக்கோட்டம் கோயிலில் அமைந்த மார்க்கண்டேயன் கதை தொகுப்பு காட்சிக்கும் பெரியகோயில் சுவற்றில் செதுக்கப்பட்டிருக்கும் மார்கண்டேயன் கதை தொகுப்பு காட்சிக்கும் உள்ள நுணுக்கத்தையும் தத்ரூபத்தையும் குடவாயில் சொன்ன பிறகுதான் நன்றாக கண்டுணர முடிந்தது. அதேபோல் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவனை, காமன் தன் வில் அம்பால் யோகம் கலைத்து சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட கதை தொகுப்பான காமதகன மூர்த்தி சிலையையையும் தரிசிக்க முடிந்தது. இதுபோல் சண்டீசர், லிங்கோத்பவர், கஜலட்சுமி என ஒவ்வொரு சிற்பத்தையும் அதனுடைய பின்புல கதையுடன் இணைத்து பார்க்க பழகிக்கொண்ட பின், குடவாயில் சொல்வதைப்போல் கல்லும் நம்முடன் உயிருடன் பேசுவதை உணர்ந்தேன்.
மனிதன் தன்னை உணர்தலும் உணர்ந்ததை பிறர்க்கு உணர்த்துவதுமே கலையின் அடிப்படை என்பார்கள். அந்த அடிப்படையில் வெறுமனே பயண நோக்கங்களுக்காக கோயிலுக்கு போகத் தொடங்கிய எனக்கு, கோயில் என்பதும் கலையின் ஒரு வகை தான் என்பதை உணர்த்தியதில் மிகப் பெரிய பங்கு குடவாயிலாருக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயமில்லை. மேலும் இந்த கோயில் கலையின் வாயிலாக நான் என்னுடைய அழகியல் உணர்வை மேம்படுத்தியதோடு, என்னில் இருக்கும் ஆணவம், காமம், குரோதம் எனும் அழுக்குகளிலிருந்து வெளியேறவும் அன்பையும் அருளையும் நாடவும் என்னை ஒருபடி மேலே உயர்த்தியிருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் உணர்கிறேன். அவருக்கு எனது நன்றிகள். அவர் நீளாயுளுடன் இருந்து எண்ணிய அனைத்தையும் எழுத, இறைவனை வேண்டுகிறேன்.




