![]() |
| தியாகராஜர்- (ஓவியம் சில்பி) |
"திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்" என்ற தம்பிரான் தோழர் சுந்தரர் சொல்லால் உந்தப்பட்டு, ஆரூர் அமர்ந்த அரசனை, தியாகராஜனை நேரில் காண காதல் கொண்டிருந்தேன். அப்படியான சூழலில் திருவாரூர் கோவில் பற்றி அறிந்த கொள்ளத் தேடியபொழுது கிடைத்ததே இந்த "திருவாரூர்த் திருக்கோவில்" என்னும் ஆவணம். வரலாற்றுத் தளத்தில் பயணிக்கும் எவரும், இந்த நூலாசிரியரான திரு குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களை அறியாதவர் இல்லை என்றே சொல்லலாம். ஆய்வு நோக்கில் திரு குடவாயில் பாலசுப்பிரமணியனின் இந்தப் படைப்பு ஆரூர்க் கோவிலின் விலைமதிப்பில்லா ஆவணம். இந்த நூல் மூலம் ஆசிரியர் வழியிலே பயணித்து ஆரூர்த் தியாகராஜரை அறிந்து கொள்வோம்.
1.ஆரூர் – ஒரு அறிமுகம்
தமிழகச் சைவத் திருத்தலங்களுள், தொன்மையும் தொடர்ச்சியான வரலாறும் ஒருங்கே பெற்ற தலம் என்ற அடையாளத்துடன் விளங்குவது சில கோவில்களே. அவற்றுள் திருவாரூர்க் கோவிலும் தலையாய ஒன்றாகும். குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள், தமது “திருவாரூர்த் திருக்கோயில்” ஆய்வு நூலில், திருவாரூரை ஒரு சாதாரண தலமாக அல்லாது, தமிழ்ச் சமய–சமூக வரலாற்றின் மையப் புள்ளியாகத் தரவுகள் மூலம் நிறுவுகிறார்.
அப்பர்ப் பெருமான் பாடிய தேவார வரிகள் வழியாக “இல்லைக்கு முன் கோயில்” என்ற தொன்மையான நிலையைக் கல்வெட்டுகள் மூலமும், சிற்ப படிமவியல் வாயிலாகவும், இலக்கியச் சான்றுகளாலும், வழிபாட்டு மரபுகளாலும் உண்மையைப் நம் கண் முன் உறுதிப்படுத்துகிறார்.
இதன் அடிப்படையில், திருவாரூர் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் புகழ் பெற்ற தலம் அல்ல; பல நூற்றாண்டுகளைத் தாண்டி தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வரும் தலம் என்பதும் விளங்குகிறது. மேலும், “கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி” என்ற பழமொழியாக நிலைத்திருக்கும் பரப்பளவை வெறும் ஒரு வழிபாட்டு இடமாக மட்டுமன்றி, ஒரு விரிந்த பண்பாட்டு வளாகமாக இருந்துள்ளதை உணர்த்துகிறது என ஆசிரியர்க் குறிப்பிடுகிறார்.இந்த அடிப்படையில்தான், குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் திருவாரூரை “ஒரு கோயில் வரலாறு” எனச் சுருக்காமல், தமிழ்ச் சைவ வரலாற்றை அறியும் நுழைவாயில் எனக் கருதுகிறார்.
2.பூங்கோவிலும் அறநெறியும் - அறிந்து கொள்ள வேண்டிய ஆய்வு
சைவத்தில் திளைத்த அடியார்க்கு ஆரூர் என்று சொன்னாலே அது "தியாகராஜர்" என்று மட்டும் தான் தெரியும். மூலமூர்த்தியான புற்றிடங்கொண்டாரே இரண்டாம் பட்சம் தான் என்பது போலத் தியாகராஜர் மீதான காதல் கொண்டவர்கள் சைவர்கள். திருவாரூர் கோவிலில் இன்று நாம் காணும் பெரும்பான்மையான தளங்களும் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு திருப்பணி, பல சாம்ராஜியங்கள், பல சடங்குகள் என்று பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தவையே. இவற்றை நாம் ஆய்வு நோக்கில் விருப்பு வெறுப்பற்று அணுகிட வேண்டும். அப்பொழுது தான் உண்மையான வரலாறு புலப்படும். அப்படி நடுநிலைமையோடு தரவுகளின் அடிப்படையில் அறிவியற் பூர்வமாக ஆசிரியர் இந்நூலின் அடித்தளத்தை அமைத்து இருக்கிறார். இன்றைய ஆரூர் பெருங்கோவிலினுள் அமைந்த இரு வேறு தனி ஆலயங்களான திருவாரூர் அறநெறி மற்றும் பூங்கோவில் ஆகியவற்றை சான்றுகளுடன் விளக்குகிறார்.
அறநெறி - கோவில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள இச்சிறிய கோவில் இன்றைக்குப் பார்த்தால் பெருங்கோவிலின் ஒரு உபசன்னிதி போலக் காட்சி தரும். ஆனால் உண்மையில் முற்சோழர்க் காலத்துத் தனிக் கற்றளி என்ற பிரமிப்பூட்டும் தகவலை குடவாயில் விளக்குகிறார். வெறுமனே அலங்கார வார்த்தைகளால் சொல்லாமல், ஆய்வுக்கு வலு சேர்க்கும் சிற்ப படிமவியல், கல்வெட்டு மற்றும் இலக்கிய சான்று மூலம் விவரிக்கிறார். அறநெறி கோவிலின் தனிச் சிறப்பு யாதெனில் அப்பர்ப் பெருமானால் தனித்து பாடப்பெற்ற கோவில் என்பதே.
பூங்கோவில் - இன்றைக்கு நாம் திருவாரூர் என்றால் சொல்லும் தியாகராஜர் வீற்றிருக்கும் இடத்திற்கு அருகே உள்ள புற்றிடங்கொண்டார் சன்னிதியே பூங்கோவிலாகும். லிங்க ரூபமாகச் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவ்விடம் செங்கல் தளியாக இருந்து பின்னாளில் கருங்கல் தளியாக மாற்றம் பெற்றிருக்கிறது. ஆனால் இக்கோவில் தன்னகத்தே பல பல்லவர்கால அடையாளங்களை வைத்துக் கொள்ளத் தயங்கவில்லை என்பதை எஞ்சியுள்ள பல்லவர் கால சிற்பங்கள் மூலம் ஆசிரியர் எளிமையாகப் புரிய வைக்கிறார். இந்தப் புற்றிடங்கொண்டாரை தான் அப்பர்ப் பெருமானார் "தில்லைக்கும் முந்திய கோவில்" என்று குறிப்பிடுகிறார்.
3.சைவ அடியார்கள் வளர்த்த ஆரூர்
திருவாரூரின் சமயச் சிறப்பை விளக்குவதில், சைவ அடியார்களின் பங்கு மையமானது என்பதைக் குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் தமது ஆய்வு நூலில் தெளிவாக இலக்கிய சான்றுகள் மூலம் நிறுவுகிறார். ஒரு தலத்தின் பெருமை, அதன் கட்டிடங்களாலும் அரச ஆதரவாலும் மட்டுமே அளக்கப்படுவதில்லை; அடியார்களின் வாழ்வும் வழிபாடும் தான் அந்தத் தலத்திற்கு உயிர் அளிக்கின்றன என்ற அடிப்படையில் ஆசிரியர் ஆரூரை அணுகுகிறார்.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் ஆரூரைப் பாடியிருப்பது, இந்தத் தலம் அவர்களது சைவப் பயணத்தில் மைய இடம் பெற்றிருந்ததை உணர்த்துகிறது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். திருவாரூர், குறிப்பாகச் சுந்தரர் தேவாரத்தில் தனித்த இடம் பெறுகிறது. அவர் திருவாரூரை தன் வாழ்க்கையோடு பின்னிப் பிணைத்துக் கொண்ட பாடல்கள், இந்தத் தலம் வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல; அடியாருக்கும் இறைவனுக்கும் இடையிலான உறவுத் தளம் என்பதை வெளிப்படுத்துகின்றன.
இதன் மூலம், ஆரூர் தத்துவ உரையாடல்கள் நடந்த இடமாக மட்டுமன்றி, சைவ தொண்டின் நடைமுறைக் களமாகவும் விளங்கியதை அறிய முடிகிறது. இந்த அடிப்படையில்தான் ஆசிரியர் திருவாரூரை அரசர்கள் கட்டிய கோயிலாக மட்டும் அல்லாமல் “சைவ அடியார்கள் உருவாக்கிய தலம்” எனக் குறிப்பிடுகிறார்.
பல தேவாரத்தலங்களையும் மூவர் முதலிகள் ஒருசேரப் பாடி இருப்பர். அவற்றில் சில தலங்களுக்கு அரிதாக ஒன்றிரண்டு சைவ அடியார்களுடன் தொடர்பு இருக்கும். ஆனால் ஆரூர்ப் பெருங்கோவில் அப்படியல்ல. பல சைவக் குரவர்கள் வாழ்ந்த மண்!
நமிநந்தியடிகள், ஏயர்கோன் கலிகாம நாயனார், விரன் மிண்டர், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், தண்டியடிகள், சோமாசிமாற நாயனார் ஆகிய அடியவர்கள் வாழ்ந்த மண் என்பதை நமக்கு அருமையாகப் பெரிய புராணம் மூலம் குடவாயில் பாலசுப்ரமணியன் விளக்குகிறார்.
4.தியாகராஜர் - ஆதாரம் சொல்லும் உண்மை
திருவாரூர் என்றாலே தியாகராஜர் என்று மக்களுடன் மக்களாகக் கலந்திட்ட சொல்லாடல் ஆய்வு நோக்கில் பார்க்கும் பொழுது, சற்றே நம்ப முடியாத உண்மையை நமக்கு ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இது தான் ஒரு வரலாற்று ஆய்வாளரின் வெற்றி. உண்மையைப் புறந்தள்ளாமல், தியாகராஜர் என்ற சொல்லின் பயன்பாடு குறித்த ஆய்வைப் பல கோணங்களில் தரவுகள் மூலம் விளக்கி நம்மைப் புரியவைக்கிறார்.
ஆம், "தியாகராஜர்" என்ற சொல்லாடலே மிகவும் பிற்காலத்தியது என்பதை ஆணித்தரமாக அடுக்கடுக்கான தரவுகளால் விளக்கி இருக்கிறார். உள்ளபடியே பல சைவ அடியவர்களுக்கு இது புண்படும் செய்தியே. அவர்களின் ஆன்மாவுடன் இரண்டற கலந்துவிட்ட "தியாகராஜா" என்ற கோஷம் 16ம் நூற்றாண்டிற்க்குப் பிந்தையது என்று சொல்லும் பொழுது அவர்கள் மனதில் ஏதோ ஆசிரியர்த் திட்டமிட்டு "இருட்டடிப்பு" செய்யப் பார்க்கிறார் என்ற பார்வைத் தோன்றலாம். ஆனால், ஆசிரியரின் நோக்கம் அதுவன்று என்று அவர் விளக்கும் "சோமாஸ்கந்த மூர்த்தம்" குறித்த செய்தியைப் பொறுமையுடன் அணுகினால் புரியும். அவர் தியாகராஜரை இருட்டடிப்பு செய்யவில்லை, மாறாக இருட்டடிப்பு செய்யபட்ட "வீதி விடங்கர்" என்ற சொல்லாடலை வெளி உலகிற்க்கு சொல்லத் துணிகிறார் என்று.
அழகான வீதி விடங்கராக பல நூற்றாண்டாக வலம் வந்த சோமாஸ்கந்த மூர்த்தமே பின்னாளில் ஏதோ சில சமய மாற்றங்களால் மறைபொருளாக மாற்றப்பட்டு "தியாகராஜராக" நமக்கு அருட்கொடை வழங்கி வருகிறார் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஆய்வு தான்.
5.மண்டபங்களும் ஆரூர்க் கோவிலும்
நாம் இன்று கோவில்களில் மண்டபங்களை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. அது ஏதோ இளைப்பாறும் இடம், சிற்பக்கூடம் என்று பார்வையைச் சுருக்கிக் கொள்கிறோம். அது தவறெனத் தனது ஆய்வு பார்வை மூலம் ஆசிரியர் விளக்கி இருக்கிறார்.
ஆரூர்க் கோவில் வளாகத்தில் பூங்கோவிலும், அறநெறியும் எவ்வளவு முக்கியமோ அதைப் போலப் பல வரலாற்று நிகழ்வுகளைத் தாங்கி வாழும் தேவாசிரிய மண்டபமும் முக்கியமானது என்பதை விளக்கும் தகவல்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன. சோழர்கள் முதல் பின்னால் வந்த நாயக்கர் காலம் வரை தொடர் திருப்பணி நடைபெற்ற தேவாசிரிய மண்டபம் வெறும் தூண்கள் நிறைந்த அழகு பெட்டகமோ, ஓவியங்கள் நிறைந்த கலைக்கூடம் மட்டுமோ கிடையாது. மாறாக மேற்சொன்ன தியாகராஜர் ஆய்வுக்கு வாழும் சாட்சிதான் அந்த மண்டபம். வீதி விடங்கராக அமர்ந்த அதே சோமாஸ்கந்த பெருமான் பின்னாளில் மறைப் பொருளாகி முகம் மட்டும் காட்டி "தியாகராஜராக" இன்று வரை அமர்ந்து வருகிறார். இம்மண்டபத்தின் தனிச்சிறப்பு சுந்தரர்ப் பெருமானால் "திருத்தொண்டர்த் தொகை" இயற்றபட்ட வரலாற்று நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது.
அதே போல் ராஜராரயணன் மண்டபம், சபாபதி மண்டபம், ராஜேந்திரச் சோழனின் மண்டபம் குறித்து ஆசிரியர்த் தடயங்கள் மூலம் அழகாக விவரித்த பாங்கு நம்மை வரலாற்றோடு பயணிக்க வைக்கிறது.
6.திருக்காமக்கோட்டம்
திருக்காமக்கோட்டம் என்றால் என்ன என்று தொடங்கி, பல்லவர் - சோழர் கால கோவில் அமைப்பு முறையை அழகாக பாமரனும் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர் விலக்கி கூறி உள்ளார். இன்று நாம் பார்க்க கூடிய அல்லியங்கோதை மற்றும் கமலாம்பாள் சந்நிதி தவிர்த்து இரு வேறு காமகோட்டங்கள் இருந்துள்ளதை பன்னிரெண்டாம் நூற்றாண்டு கல்வெட்டு பதிவுசெய்கிறது என்ற தகவல் அரிய செய்தியாகும்.
7.தீர்த்தக்குளம்
நம் கண்களை அகல விரித்துப் பார்த்தாலும் கண்களுக்குள் அடங்காது சமுத்திரம் போன்று பறந்து விரிந்து காணும் கமலாலய குளத்தின் அருமையான வரலாற்றுப் பெயரை நமக்குத் தேடித் தந்து இருக்கிறார் ஆசிரியர். சோழர் காலத்தில் "தீர்த்தக்குளம்" என்ற சொல்லாடலே வழக்கில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இக்குளத்தைப் பற்றிய இலக்கியக் குறிப்பும் நமக்குப் பெரிய புராணத்தில் கிடைப்பது மற்றுமொரு சிறப்பு. மேலும் இத்தலத்தில் சுந்தரருடன் தங்கியிருந்த சேரமான் பெருமான் அவர்களின் மும்மணிக்கோவையிலும் சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளது இக்குளத்தின் தொன்மையை நமக்கு உணர்த்துகிறது.
இக்குளத்தின் நடுவே உள்ள நாகநாத சாமியின் சன்னிதியை ஆசிரியர் பிற்கால சேர்க்கையாகக் குறிப்பிடுவதன் மூலம் கமலாலயம் என்னும் பெயர் தோன்றிய காலத்திலே இதுவும் கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று அனுமானிக்க வழிவகை செய்கிறது.
![]() |
| ஆழி தேர் - ஓவியம் விஷ்ணு ராம் |
8.அழியா அதிசயம் ஆழித்தேர்
திருவாரூரையும் ஆழித்தேரையும் பிரித்துப்பார்க்க முடியாது என்பதை
ஆழித்தேர் வித்த களை நான் கண்டது ஆரு ரே"
என்று அப்பர் பெருமான் வாக்கில் இருந்தே நாம் அறியத்துவங்குகிறோம்.
ஆழித்தேர் ஒரு அதிசயம் என்பதற்கு என்று நான் சொல்ல வேண்டியதில்லை, ஆசிரியர் சொல்லும் அழகான தரவுகளே போதுமானது. பெரும்பான்மையான கோவில்களில் பெரிய தேர்கள் எல்லாம் 16-17ம் நூற்றாண்டுக்குப் பின்னரே வழக்கத்திற்கு வந்துள்ளது. அதே பார்வையில் நாம் ஆழித்தேரை அணுகமுடியாது என்று சான்று கூறுகின்றன கல்வெட்டு தரவுகள்.
ஆழித்தேர் செய்யும் முறை, அதன் நீள அகல அளவு, கால ஓட்டத்தில் நடந்த மாற்றங்கள் என்று எல்லாச் செய்திகளை நமக்குத் தருவது போலவே அருமையான ஆவணத்தைக் காலத்துக்கும் கொடுத்து உதவி இருக்கிறார் ஆசிரியர். மிக முக்கியமாக ஆழித்தேர் தீ விபத்து மற்றும் முத்து கொத்தனார் குறித்துப் பேசிய கையோடு, ஆழித்தேர் செய்து சில காலம் ஓடியுள்ளதை ஆவணங்கள் மூலம் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். பின்னாளில் மீண்டும் பழுதுபட்டு தேரோட்டம் நின்றதைக் குறிப்பிட்டு அதை ஓடச்செய்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முயற்சியையும் பதிவு செய்கிறார்.
9.கல்வெட்டாய்வு
“திருவாரூர் திருக்கோயில்” நூலில், குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களின் ஆய்வு நுட்பம் முழுமையாக வெளிப்படும் பகுதி கல்வெட்டாய்வே ஆகும். மகாத்மிய மரபுகளால் உருவான பெயர்கள், நிகழ்வுகள், பெருமைகள் ஆகியவற்றை அவர் ஏற்றோ மறுத்தோ விடாமல், கல்வெட்டு மொழியின் வழியே மறுவாசிப்பு செய்வதே அவரது ஆய்வு முறையாக இங்கு வெளிப்படுகிறது.
10.மூன்றாம் குலோத்துங்கன் – அளப்பறியத் திருப்பணி
திருவாரூர்த் திருக்கோயிலின் கட்டுமான வரலாற்றில், மூன்றாம் குலோத்துங்க சோழனின் பங்கு அளப்பறியது என்பதை குடவாயிலார் கல்வெட்டுச் சான்றுகளுடன் விளக்குகிறார். தாராசுரம் மற்றும் திருபுவனம் கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகள், திருவாரூரில் அவர் மேற்கொண்ட திருப்பணிகள், ஏற்படுத்திய கட்டுமானங்கள், வழிபாடுகள் என அனைத்தும், அவரது ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மிகப் பெரிய கலை–வழிபாட்டு மையமாக வளர்ந்ததை உணர்த்துகின்றன.
இதே போல ராஜேந்திரச் சோழன் தனது காதலிக்காகக் கட்டி எழுப்பிய தியாகராஜர்ச் சன்னிதி குறித்தும், அதன் மீது பொன்வேய்ந்த குறிப்பும் கொண்டு அழகாக விவரிக்கிறார். எதையும் விடாமல் எல்லாவற்றையும் கால வரிசைப்படி தொகுத்து விளக்கமளித்து இருப்பது ஆசிரியரின் மிகப் பெரிய பணியாகும்.
ஆசிரியர் கல்வெட்டு பகுதியில் ஓவொரு கல்வெட்டையும் மிகத் தெளிவாகத் தமிழ்ப்படுத்தி, கல்வெட்டு கலைச் சொற்களுக்கு விளக்கம் தந்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேர்த்தியாகத் தந்துள்ளது, புதிய ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தொல்லியல் துறை வெளியிட்ட ஒவ்வொரு கல்வெட்டு தொகுப்புகளையும் தேடி, அதில் ஆவணம் ஆகாத கல்வெட்டைக் கண்டுபிடித்து ஆய்வு உலகுக்குக் கொடுத்த கொடை என்பது தியாகராஜருக்கு அவர் செய்த கொடையே ஆகும்.
செப்புப் பட்டயம், சித்திரம் என்று எதையும் புறம் தள்ளாமல், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் பறந்து பட்ட பார்வையின் ஊடே தனது ஆய்வை நிறைவு செய்துள்ள உழைப்பு வேறு யாருடனும் ஒப்பிட இயலா வண்ணம் அமைந்துள்ளது.
![]() |
| தியாகராஜர் - ஓவியம் விஷ்ணு ராம் |
11.கலை வளர்த்த ஆரூர்
ஆரூர் என்பது வெறுமனே சைவ சமயம் வளர்த்த இடமாக இல்லாமல் கலை வளர்த்த மூதூராகத் தரவுகள் மூலம் ஆசிரியர் கூறியிருப்பது சிறப்பான பகுதியாகும். ஆரூரரில் மட்டும் இன்றளவும் வாசிக்கப்படும் பஞ்சமுக வாத்தியம் தொடங்கி, சங்கீத மும்மூர்த்திகள் வரை அலசி ஆராயும் ஆசிரியர் தஞ்சைத் தளிச்சேரி கல்வெட்டு மூலம் ஆரூரில் இருந்து சென்ற ஆடல் மகளிர் 51 பேருக்கும் வெளிச்சம் பாய்ச்சி பெருமை சேர்க்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனது ஆய்வுகள் மூலம் வீதிவிடங்கர் தான் தேவாசிரிய மண்டபத்தில் நடுநாயகமாக அமர்ந்து ஆடலைக் கண்டு களித்தார் என்று நிறுவுகிறார் தரவுகள் கொண்டு.
12.நூலின் விடுபடல்கள்
குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற பெரும் ஆய்வாளரை மதிப்பீடு செய்வதாக அல்லாமல், கீழ்க்கண்ட தகவல்களும் சேர்க்கப்பட்டிருந்தால் இந்தப்புத்தகம் இன்னுமே வாசகர்களுக்கு பயன்தரும் என்ற நம்பிக்கையில் சிலவிஷயங்களை சொல்கிறேன்.
1.ஒரு ஊர் என்றால் அதன் புவியியல் தான் முக்கியம். அதனை ஆசிரியர் விரிவாகத் தனித்த அத்தியாயமாகப் பேசியிருக்கலாம். மூவர் முதலிகளே மண்ணை வணங்கித் தான் ஆரூர் இறைவனைப் பாடியுள்ளதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.
2.கல்வெட்டு தரவுகளைப் பேசும் முன், கோவிலுடன் தொடர்புடைய புராணக் கதைகளை அறிமுகப் பகுதிகளில் விளக்கி இருந்தால் எளிய மக்களால் தரவுகளோடு வேறுபடுத்திப் பார்க்கச் சுலபமாக இருந்திருக்கும்.
3.ஆண்டு முழுவதும் நடக்கும் திருவிழாக்கள ைஅட்டவணைப் படுத்தித் தனித்துக் காட்டி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்
4.மூவர் முதலிகள் பேசப்பட்டது போல பாண்டிய தளபதி மாணிக்கவாசக பெருமானுக்கும் ஆரூருக்கும் ஆன பந்தத்தை குறித்து விரிவாக ஆய்ந்து பேசியிருக்கலாம்
மேற்சொன்ன யாவையும் "சேர்த்திருக்கலாம்" என்ற ஆசை தானே ஒழிய வேறல்ல. ஆசிரியர் ஓரிடத்தில் கூட தரவுகளை விடுத்துத் தன் பார்வையை முன் வைக்கவில்லை. எல்லா ஆய்வு பார்வையும் கிடைத்த தரவுகளின் படியே தான் உள்ளது.
திருவாரூர் மகாத்மியம் குறித்த விரிவான தகவல்களைத் தந்து, அதில் தனது ஆய்வு பார்வை என்ன என்பதை விளக்கி இருக்கலாம் ஆசிரியர் என்ற ஒற்றைக் குறையை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். காரணம் ஒரு ஆய்வாளர் தனது ஆய்வு பார்வைச் சொல்லும் பொழுது தரவுகளின் அடிப்படையில் சொல்கையில் எழும் விமர்சனங்களை விட, புராணக் கதைகளின் ஊடே சொல்லும் ஆய்வில் தான் அதிக விமர்சனங்கள் எழும். அவற்றுக்கான பதில் அளிக்கப்படுகையிலேயே அந்த ஆய்வுப்பார்வை முழுமை பெறுகிறது.




