Saturday 14 October 2023

நாட்டார் தெய்வ வடிவங்கள் - அ.கா. பெருமாள்


நாட்டார் தெய்வம் பற்றிய விளக்கம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டு விட்டாலும் நாட்டார் வழக்காற்றியல் செய்திகளின் சேகரிப்பு பரவலாகிய பின்புதான் கருத்தாக்கங்கள் உருவாயின.

நெறிப்படுத்தப்பட்ட சமயத்தில் இடம் பெறாதது; ஜனங்களின் உள்ளுணர்வு தொடர்பானது; உயிர்ப்பலி நலன் நோக்குவது; ஜனங்களின் சொந்த வழிப்பட்ட வழக்காறு உடையது; வழிபடுபவருடன் நேரடித் தொடர்புடையது; வட்டாரத் தன்மையுடனும் சாதிக்குழுமத்துடனும் இனங்காணப்படுவது; உருவகத்துக்கான குறியீடு உடையது என்னும் விளக்கங்கள் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ளன.

பெருநெறிச் சமயம் எனச் சமூகவியலாரால் சொல்லப்படும் நெறிப்படுத்தப்பட்ட சமயம் சார்ந்த செய்திகளுடன் நாட்டார் சமயத்தை ஒப்பிடுவதன் மூலம் புதிய விளக்கத்தைத் தர முடியும் என்னும் கருதுகோளும் அண்மைக் காலத்தில் உருவானது. நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வங்களுக்கும் நாட்டார் சமயத் தெய்வங்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் வடிவ வேறுபாடு முக்கியமானது.

நாட்டார் தெய்வங்களின் வடிவங்கள் விதிமுறைக்கு உட்பட்டதல்ல. திரிபுடையது நாட்டார் வழக்காறு என்பதற்கேற்ப இவற்றின் வடிவங்கள் அமைந்திருக்கும்.

நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வங்களின் படிமங்கள் பற்றிய பொதுவான விதிகளைத் தெரிவதன் மூலம் நாட்டார் தெய்வங்களின் நெகிழ்வான தன்மைகளை அறிந்துகொள்ள முடியும்.

நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வப் படிமங்களைப் பொதுவாக சித்திரம், சித்திரார்த்தம், சித்திரபாகம் என்று பகுக்கின்றனர். கல் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட முழு உருவப் படிமங்களைச் சித்திரம் என்பர். இத்தகு படிமங்களை வழிபடுவதால் உத்தம பலன் கிடைக்கும்.

சித்திரார்த்தம் என்பது படிமங்களின் முன்பகுதி வடிவம் உருவாக்கப்பட்டு பின்புற உறுப்புகள் புலப்படாமல் இருப்பது. இதைப் படைப்புச் சிற்பங்கள் என்பர். இத்தகு படிமங்களை வழிபடுவதால் மத்திம பலன் மட்டுமே கிடைக்கும்.

சுவர், திரைச்சீலை, பலகை, காகிதம் போன்றவற்றில் வரையப்படும் ஓவியங்களைச் சித்திரபாகம் என்பர். இந்த வடிவங்களைத் தெய்வமாக நினைத்து வழிபடுவதால் குறைந்த பலன் மட்டுமே கிடைக்கும். 

நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வப் படிமங்கள் அமைக்கப்படும் நிலையின் அடிப்படையில் அகலம், கலம், கலாகலம் என மூன்று வகைப்படுத்துவர். குறிப்பிட்ட இடத்தில் அசைக்க முடியாதபடி படிமம் அமைக்கப் பட்டால் அதை அகலம் என்பர். இத்தகு படிமங்கள் அஷ்டபந்தனம் செய்யப்பட்டவை; பிரதிஷ்டையானவை; இவை இருக்கும் இடம் கர்ப்பக்கிரகம் எனப்படும்.

இடம்விட்டு இடம் பெயர்ப்பதற்காகவே செய்யப்படும் படிமங்கள் கலம் எனப்படும். இவற்றை உத்சவ விக்கிரங்கள் (விழாப்படிமங்கள்) எனலாம்.

இடம்விட்டு இடம் மாற்றக்கூடியதும் ஆனால் மாற்றக் கூடாது என்னும் நோக்கத்தில் நிறுவப்படும் படிமங்கள் கலாகலம் எனப்படும். இவற்றை அர்ச்சனா விக்கிரகங்கள் (வழிபாட்டுப் படிமங்கள்) எனலாம்.

பொதுவாக நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வங்களை அவற்றின் தன்மையை வைத்து சாத்வீகப் படிமம், இராஜசப் படிமம், தாமசப் படிமம் எனவும் பாகுபடுத்துவர்.

யோக முத்திரையும் இயல்பான சாந்த குணமும் அன்பர்களுக்கு அச்சம் அகற்றும் கைகளையும் கொண்டு விளங்குவது சாத்வீகப் படிமம் எனப்படும் (எ.கா.தட்சிணாமூர்த்திப் படிமம்).

நின்ற கோலத்திலோ ஊர்தியிலோ பலவகை அணிகலன் களுடனோ ஆயுதங்களுடனோ இருந்து அபயமுத்திரை தாங்கி நிற்பது இராஜசப் படிமம் (ஆறுமுகப் பெருமாள் படிமம்).

அம்பு, வாள் முதலிய ஆயுதங்களுடன் பகைவர்களைக் கொல்லத் துடிக்கும் அச்சத்தைக் காட்டியபடி இருப்பது தாமசப் படிமம் (மகிஷாசுர வர்த்தினி படிமம்).

தமிழக படிமங்களைப் பற்றிய இந்த விளக்கங்களின் அடிப்படையில் நாட்டார் தெய்வங்களைப் பார்க்கலாம்.

நாட்டார் தெய்வங்கள் முழு உருவமானதாகவோ புடைப்புச் சிற்பங்களாகவோ ஓவியங்களாகவோ இருக்கும். இவை கல், மண், மரம், உலோகம் ஆகியவற்றில் ஒன்றினால் செய்யப்பட்டதாய் இருக்கும், இவை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். விழாக்களில் ஊர்வலம் வருவதற்காகவோ (விழாக்காலப் படிமம்) தினப்பூசை செய்வதற்காகவோ (வழிபாட்டுப் படிமம்) தனியாக என்று படிமம் அமைப்பதில்லை! முக்கிய தெய்வத்தின் படிமத்திலிருந்து சக்தியை வழிபாட்டுப் படிமத்திற்கு ஆவோகனம் செய்வது என்னும் ஆகமமுறை நாட்டார் தெய்வ வழிபாட்டில் இல்லை.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாட்டார் தெய்வங்களின் வடிவங்கள் பற்றி செய்திகளைத் தமிழக நாட்டார் தெய்வங்களின் படிமச் செய்திகளுடன் ஒப்பிடும்போது பொதுவான குணங்களில் இணைந்தும் குறிப்பிட்ட சில நிலைகளில் வேறுபட்டும் உள்ளன. இந்த மாவட்டத்தின் நாட்டார் தெய்வங்களின் வடிவங்களைப் பொதுவான நிலையில் கீழ்க்கண்டவாறு வரையறை செய்யலாம்.

ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களின் அடிப்பகுதியில் மஞ்சணை தேய்த்து அதன் மேல் கருஞ்சிவப்பு துணியைக் கட்டியோ மாலை சாத்தியோ அல்லாமலோ தெய்வமாக ஆக்குதல்'

வடிவமற்ற குத்துக்கல் அல்லது வடிவமுடைய பட்டையான கல்சுவர் மீது மஞ்சணை தேய்த்து தெய்வவடிவமாக மாற்றுதல்' பெரிய கல் தூணில் நடப்பட்ட இரும்புக்கழியில் மஞ்சணை தேய்த்து தெய்வவடிவமாக்குதல்.

செவ்வகவடிவத்தின் மேல் அரைக்கோள வடிவத் தலை அமைத்து தெய்வமாக்குதல், இது சுதை, மண், கல் போன்றவற்றில் ஒன்றினால் அமைக்கப்படுவது. இதற்கென்று முறைப்படியான உயரம், அகலம் கிடையாது.

செவ்வகவடிவம் அல்லது சமசதுரம் பீடம் பிரமிட் போன்ற வடிவம் மேல் குழிந்த நிலையில் உள்ள செவ்வக வடிவம்.


மண்ணால் செய்து சூளையில் சுடப்பட்டு நிறம் கொடுக்கப்பட்ட வடிவம். இது நேர்ச்சைக்காகவும் கொடுக்கப்படும். இது பெரும்பாலும் இயக்கியம்மன் என்னும் தெய்வத்திற்குரிய வடிவம். சாஸ்தாவிற்கும் மிகக் குறைந்த அளவில் உள்ளது.

கல், மண், சுதை ஆகியவற்றில் ஒன்றினால் ஆன படிமம். இது முழு உருவ அமைப்புடன் நின்ற அல்லது அமர்ந்த கோலத்தில் இருப்பது. உலோகத்தில் ஆன முழுச் சிற்பம் அல்லது உலோகப் புடைப்புச் சிற்பம், பீடத்தின் மேல் வைக்கப்படும் அங்கி (கவசம்) என்பது இதில் அடங்கும்.

இந்த வடிவங்களில் அரைக்கோளத்தலை தாங்கிய செவ்வக அரைக்கோளத்தில் கண், மீசை, வாய் போன்றனவும் உடல் பகுதியில் சூலம் அல்லது வெட்டருவாள் படமும் வரையப்பட்டிருக்கும். இதே வடிவத்தில் அரைக்கோளத் தலையிலோ உடல்பகுதியிலோ புடைப்புச் சிற்பம் உண்டு; இவை மிக அருகியே காணப்படுகின்றன.

மண் அல்லது சுதையால் ஆன முழு உருவப் படிமங்களின் மேல் நிறம் பூசப்பட்டிருக்கும். மொத்த படிமத்தின் மேல் மஞ்சள் பூசப்படுவதும் உண்டு. பொதுவாக இந்த மாவட்டத்தில் மண் அல்லது சுதையால் அமைந்த முழுஉருவ நாட்டார் தெய்வங்கள் வேலைப்பாடு அற்றவையாக உள்ளன.

நாட்டார் தெய்வ மண் உருவங்கள் செய்வதற்கு வழிமுறை உண்டு. ஏழு குளங்களில் மண் எடுத்து ஏழு நீர் நிலைகளில் நீர் எடுத்து பதநீர் கருப்புக்கட்டி பாம்புப் புற்றுமண் சேர்த்து சுண்ணாம்பு அரைக்கும் ஆலையில் இட்டு மைபோல் அரைத்துச் செய்யப்படும் என்பது மரபுவழிச் செய்தி இதைக் குயவர் சாதிக் கலைஞர் 41 நாட்கள் விரதம் இருந்து செய்ய வேண்டும் என்பது விதி. குமரி மாவட்டத்தில் உள்ள முழுஉருவப் படிமங்களில் பெரும்பாலானவை 1960க்கு முற்பட்டவை. கடந்த 50 ஆண்டுகளாக மண் அல்லது சுதையில் படிமம் செய்யப்படும் வழக்கம் இல்லாமல் ஆகிவிட்டது.

ஓர் ஊரிலிருந்து ஏதோ காரணத்தால் வேறு ஊருக்குக் குடிபெயர்கின்றவர்கள், தங்களின் சொந்த ஊரில் வணங்கிய தெய்வத்தையும் கொண்டு செல்வர். இதற்கு அடையாளமாக, கோவிலின் முன்பகுதியில் உள்ள வெளியிடத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து கொள்வர். இந்த மண்ணைக் குடியேறிய ஊரில் ஓரிடத்தில் வைத்து கோவில் எடுப்பர். இப்படியாகக் கோவில் உருவாக்கும் போது பெரும்பாலும் தாங்கள் முன்பு வழிபட்ட பழைய தெய்வ வடிவத்தைப் போன்றே அமைத்துக் கொள்வர்.

நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வங்களின் படிமம் அது தொடர்பான புராணம் அல்லது காவியம் சார்ந்து அமைக்கப்படுவது போன்ற பண்பு நாட்டார் தெய்வப் படிமங்களை அமைப்பதில் இல்லை. இதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு.


வரிசையில் உள்ள தெய்வங்களுக்கும் அகாலமரணத் தெய்வங்களுக்கும் நாட்டார் தெய்வங்களின் புராணச்சார்புத் தெய்வங்களின் உள்ள வடிவங்களில் நுட்பமான வேறுபாடு உண்டு. புராணச் சார்பு தெய்வங்களின் முழு உருவ வடிவங்களில் குறிப்பிட்ட சிலவற்றிற்கு மட்டுமே நான்கு கைகள் உள்ளன.

அகால மரணமடைந்த ஆண் மாடனுடனும் பெண் இசக்கியுடனும் இணைந்து தெய்வமாகும் என்பது ஒரு கருதுகோள். இதன்படி இணையும் தெய்வங்களில் பெரும்பாலும் மாடனுடன் இணைபவை மாடனின் பொதுவான வடிவத்தையும் இயக்கியுடன் இணைகின்ற பெண் தெய்வங்கள் சுமைதாங்கி வடிவையோ குத்துக்கல் வடிவையோ அடையும். இப்படி இணைபவையின் சிறப்பு அம்சம் காரணமாக இயக்கியின் பொதுவான ஒட்டுருவத்தையும் பெறலாம். சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். தென்மாவட்ட நாட்டார் தெய்வங்களில் பிராமணர் அல்லாது பிற எல்லாச் சாதியினரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும் வழிபாட்டுமுறை முத்தாரம்மனுக்கு உண்டு. இது புராணச்சார்புடைய தெய்வம். இதன் பிறப்பு கயிலை மலையில் பார்வதியுடன் தொடர்புடையது.

முத்தாரம்மன் பார்வதியின் அம்சமாகவே கொள்ளப்படுகிறாள். இவளது வரலாறு சிவ புராணத்தை முழுதும் சார்ந்து இருப்பது. தாருக வதைக்காகப் படைக்கப்படுபவளாகவே முத்தாரம்மன் காட்டப் படுகிறாள். சிவனின் கோபத்தீயில் முப்புராதியர் பிறக்கின்றனர். அவர்கள் தங்களைப் படைத்த சிவனை எதிர்க்கின்றனர். பின்னர் முத்தாரம்மனின் வேண்டுகோள்படி முப்புராதியர் வரம்பெற்று தெய்வமாகின்றனர்.

சக்தி முனிவர் வேள்வி செய்கிறார். வேள்வித்தீ பார்வதியின் உடலில் படுகிறது. அதனால் வியர்வை பெருகுகிறது. பார்வதி அந்த வியர்வையை வழித்து எறிகிறாள். அதிலிருந்து முத்தாரம்மன் பிறக்கிறாள். இவள் சிங்கக்கொடியை உடையவள் எனக் கதைப்பாடல் கூறும்.

முத்தாரம்மன் கதைப்பாடலில் இவளை காளி, கொற்றவை, மூன்று முகம் உடையவள், வாலை எனக் கூறும். இவள் பிரம்பை வைத்திருப்பாள். கப்பறையும் சூலமும் இவளிடம் இருக்கும் என்று இக்கதை இவளது வடிவத்தை விவரிக்கும். இந்த வடிவமே முத்தாரம்மன் கோவில்களில் உள்ளது. இந்த இடத்தில் நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வப் படிம வகைப்பாட்டுடன் முத்தாரம்மன் சிறிது ஒத்துப் போகிறது.

நாஞ்சில் நாட்டில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும் பாலான கோவில்களில் முத்தாரம்மன் படிமம் சுதை அல்லது மண் வடிவில்தான் இருந்தது. முத்தாரம்மன் - எல்லாக் கோவில்களிலும் அமர்ந்த கோல வடிவத்துடன் உள்ளது. 2 அல்லது 4 கைகள், கிரீடா மகுடம், கழுத்தில் முத்துமாலை, காதில் முத்து அல்லது பத்ர குண்டலம், பாதங்களில் பாடகம் என்னும் அணிகள் சகிதம் அமைந்தது. இப்படிமம் 120 முதல் 140 செ.மீ. உயரமுடையது.

இதன் கைகளில் சூலம், கப்பறை, உடுக்கு, சட்டி,எலுமிச்சம்பழம் போன்றவற்றில் ஒன்றோ இரண்டோ நான்கோ இருக்கும். மூலக்கதைப் பாடலில் முத்தாரம்மன் மூன்று தலைகளும் ஆறு கைகளும் உடையவள் என்று கூறப்பட்டாலும் ஒரு தலையுடைய முத்தாரம்மன் படிமங்களே பெருமளவில் காணப்படுகின்றன. மூன்று தலைகளும் ஆறு கைகளும் கொண்ட படிமங்கள் அபூர்வமாக உள்ளன. இவை பழமையானவை.

அமர்ந்தகோல அம்மனின் வலது காலின் கீழ் சிங்கம், நாகம், வேதாளம் போன்றவற்றில் ஒன்று காட்டப்பட்டிருக்கும். நாக வடிவ உருவே பெருமளவில் உள்ளது.

அறுபதுகளில் முத்தாரம்மன் கோவில் படிமங்கள் கல் சிற்பங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவை மூலப்படிமத்தைப் போன்ற அமைப்புடையவை என்று சொல்கின்றனர். சுதை அல்லது மண்ணால் செய்யப்பட்ட படிமங்களில் நிறம்கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வகை சிற்பங்கள் பழமையானவை.


சுடலைமாடன் அல்லது பிற நாட்டார் தெய்வங்கள் முக்கிய தெய்வமாக இருக்கும் கோவில்களில் முத்தாரம்மன் துணைத் தெய்வமாக இருந்தால் முத்தாரம்மனுக்குச் செவ்வக வடிவத்தில் அரைக்கோளத் தலையுடன் கூடிய பொதுவடிவமே அமைக்கப் பட்டுள்ளது.

முத்தாரம்மன் கதையின்படி, முத்தாரம்மன் பார்வதியின் அம்சம் ஆனதால் பெரும்பாலான கோவில்களில் முத்தாரம்மனின் அருகே ஆண்தெய்வமான இவரும் நிறுவப்பட்டிருக்கிறார். இவர் முத்துசாமி, முத்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

முத்தீஸ்வரர் படிமம் அமர்ந்த கோலம் உடையது. இதற்கு இரண்டு கைகளே உள்ளன. கைகளில் எலுமிச்சை, கப்பறை,கதாயுதம் போன்றவற்றில் இரண்டு இருக்கும், இது கிரீடா மகுடம் அல்லது கரண்ட மகுடம் உடையது, தலையில் பிறையும் உண்டு. இவ்வகையின அபூர்வமானது (ஆசாரிப்பள்ளம்). கரியமாணிக்கபுரம் முத்தாரம்மன் கோயிலில் செவ்வக்கல்லில் பிறை, சூலம், பசு ஆகியவற்றின் வரை படங்கள் உள்ளன. இதை முத்தீஸ்வரராகவே வணங்குகின்றனர்.

முத்தாரம்மனுடன் வேறு துணைத்தெய்வங்களும் பிறந்தன என்று கதைப்பாடல் கூறும். வயிரவன், வண்டிமலையன், வண்டி மலைச்சி, முப்பிடாரி போன்ற இத்தெய்வம் முத்தாரம்மன் கோவிலில் துணைத் தெய்வமாக உள்ளன.

முத்தாரம்மன் கதையில் வரும் தெய்வக் கன்னி நாகக் கன்னி ஆகியோர்களும், சப்த கன்னிகளும் கூட வழிபடு தெய்வங்களாக உள்ளன. இவற்றின் வடிவங்கள் ஓரளவு பெருநெறி வடிவ மரபு சார்ந்து உள்ளது. இவை மிக அபூர்வமாகவே காணப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சப்த கன்னிகளுக்கு குளம், நீர்நிலை, சுனை அருவி கரைகளில் சிற்பங்கள் உள்ளன. இவை அமர்ந்த கோலமுடையவை. ஒரு தலை இரண்டு கைகள் என அமைந்தவை.

முத்தாரம்மன் கதை கூறும் வண்டி மலைச்சியும் வண்டி மலையானும் தனித் தெய்வமாகவும் துணைத் தெய்வமாகவும் வழிபாடு பெறுகின்றனர்.

முத்தாரம்மன் தாருகனைக் கொன்றாள். அப்போது அசுரனின் உடலிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் வண்டிமலையனும் வண்டி மலைச்சியும் பிறந்தனர். அவனுக்கு அம்மன் வரங்கொடுக்கிறாள்!

வண்டிமலையனும், வண்டிமலைச்சியும் வண்டியில் சாய்வான நிலையில் (Slanting) பிறந்ததால் இவ்விரு தெய்வங்களும் இப்படியே அமைக்கப்பட வேண்டும் என்பது நியதி. தாருகனின் ரத்தம் கடலளவு பெருகியதால் அதில் பிறந்த இவர்களின் வடிவமும் பெரிதாய் இருக்க வேண்டும் என்பது நம்பிக்கை."

பறக்கை சந்தனமாரியம்மன் கோவிலில் துணைத் தெய்வங்களாக உள்ள வண்டிமலையனும் வண்டிமலைச்சியும் 3.5 மீட்டர் 2.5 மீட்டர் என அளவுள்ள அறையில் முழு அளவில் பரந்து கிடக்கின்றனர். சாய்ந்த நிலையில் கிடக்கும் இவர்கள் ஒரு தலை இரண்டு கைகள் என உள்ளனர். கரண்ட மகுடம், கைகளில் கதை ஆயுதம் என அமைந் துள்ளன. இந்த வடிவம் சுதையால் செய்யப்பட்டது.

வண்டி மலைச்சி தனித்தெய்வமாக உள்ள இடங்களில் வேறு வடிவம் பெற்றிருக்கிறாள். சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தெளித்த எட்டு தீப்பொறிகளின் வழி பார்வதியின் அம்சமாக எட்டு சக்திகள் பிறக்கின்றனர். அவர்களில் ஒருத்தி வண்டிமலைச்சி. இவள் மகிஷ அரக்கனை அழித்தவள். இப்படி ஒரு கதை வாய்மொழி மரபில் உண்டு.

இந்தக் கதை வழங்கும் கோவில்களில் குடிகொண்ட வண்டி மலைச்சி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். வலது கையில் சூலம், இடது கையில் கப்பறை, சிங்கவாகனம் என்னும் நிலையில் இருக்கிறாள். இவ்வடிவம் கல் அல்லது சுதையால் ஆனது.


முத்தாரம்மனுடன் உடன்பிறந்தவனாகவும், தாருகனைக் கொல்ல அவளுக்கு உதவுபவனாகவும் கூறப்படும் பைரவன் (வைரவன்) என்ற தெய்வம் பெருநெறி மரபிலும் சிறுநெறி மரபிலும் வழிபடப்படுவது. முத்தாரம்மன் கோவில்களில் இது துணைத் தெய்வமாகவே உள்ளது. பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் இது கல் சிற்பமாக இருக்கிறது.

பைரவனை அவைதிகத் தெய்வமாகவே பெருநெறிச் சார்பாளர் கருதுகின்றனர். பொதுவாகப் பெருநெறி மரபில் வைரவனின் படிமம் கழுத்தில் கபாலமாலையுடனும் கரங்களில் கபாலம், கத்துவாங்கம், நெருப்பு, ஈட்டி, உடுக்கு, நாகம், சூலம் போன்றவற்றில் ஏதாவது சில இருக்கும். 2 அல்லது 4 கைகள் கொண்ட இப்படிமத்தின் அடையாளமாக நாய் காட்டப்பட்டிருக்கும்.

நாஞ்சில்நாட்டு நாட்டார் கோவில்களில் பைரவர் நின்ற கோலமாகவே உள்ளார். அமர்ந்த கோல உருவங்கள் குறைவு (குளத்தூர் சம்பவர் சாதிக்கோவில்) பைரவனுக்கு 2 அல்லது 4 கைகள் காட்டப் பட்டிருக்கும். கைகளில் உடுக்கு, சூலம், கப்பறை, பொந்தந்தடி ஆகியன இருக்கும். கரியமாணிக்கபுரம் வேளாளர் முத்தாரம்மன் கோவிலில் உள்ள ஈழுவர் சிற்பம் 4 கைகள் கொண்டது. இதன் வலது கையில் உடுக்கும் சூலமும் இடது கைகளில் பாம்பும் கப்பறையும் உள்ளன.

பொதுவாக நாட்டார் தெய்வம் படிமங்களில் முத்திரைகள் காட்டப்படுவதில்லை. இது முத்தாரம்மன் வைரவன் போன்ற எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். ஆயுதங்கள் வட்டாரச் சார்பு உடையதாய் இருக்கும். பெருநெறிச் சிவனிடம் உள்ள கபாலம் நாட்டார் தெய்வ முத்தீஸ்வரர் முத்தாரம்மனிடம் கப்பறையாக மாறியிருக்கிறது. பெருநெறித் தெய்வ வடிவங்களின் கைகளில் உள்ள சூலம் கத்தி இரண்டும் நாட்டார் தெய்வங்களின் கைகளில் காட்டப் பட்டுள்ளன. அண்மைக் காலமாக மேல்நிலையாக்கம் பெறும் நாட்டார் தெய்வ வடிவங்களின் நிலை மாறி வருகிறது.

முத்தாரம்மனுடன் பிறந்தவனான முப்பிடாதி (முப்புடாரி) என்பவனை நாராயணனே சூழ்ச்சியால் அழிக்கிறான். இந்த முப்பிடாரி முத்தாரம்மனின் துணைத் தெய்வமாக உள்ளது. இது ஆண் தெய்வம் ஆயினும் முப்பிடாரி அம்மன் என்னும் பெண் தெய்வமாகவும் அழைக்கப்படுகிறது!" இது மூன்று தெய்வங்களாகவும் கருதப்படும். இதற்கென்று தனிச்சிற்பங்கள் இல்லை. ஒரே பீடத்தில் மூன்று அரைவட்டத் தலைகள் அமைப்பது இத்தெய்வ வடிவத்தின் நடைமுறை. இது 40 முதல் 50 செ.மீ. உயரமுடன் இருக்கும்.

இதற்கு அபூர்வமாகவே முழு உருவச் சிற்பங்கள் உள்ளன; கரிய மாணிக்கபுரம் ஊர் முத்தாரம்மன் (வேளாளர், விசுவகர்ம சாதிக் குரியது) கோவிலில் உள்ள முப்பிடாரி அமர்ந்த கோலம் உடையது. 4 கைகள் கொண்டது. இவற்றில் சூலம் பாம்பு கப்பறை உடுக்கு போன்றன உள்ளன. இந்த ஒரே உருவம் சிவனின் அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

முத்தாரம்மனைப் போன்று பரவலாக வழிபடப்படும் தெய்வம் சுடலைமாடன். சிவனின் அம்சமாகவே சுடலையைக் கொள்ளும் வழக்கம் நாட்டார் வழக்காற்றில் பரவலாக இருக்கிறது. சுடலை மாடனைக் கபாலம் ஏந்தியவன், ஆலமரத்தடியில் இருப்பவன், சுடுகாட்டில் வாழ்பவன் என்னும் பழைய செய்திகள் வாய்மொழி வழக்காற்றுடன் ஒத்துப் போகின்றன.

சுடலைமாடன் வில்லிசை ஏடு அவன் வேள்வியிலிருந்து பிறந்த செய்தியை விவரிக்கும்போது வட்டமான மூன்று தலைகளுடன் முகம் ஒளிவீச தலைமுடி அலங்காரத்துடன் பலவகை ஆயுதங்களுடனும் தலைப்பாகையுடனும் சமுதாடு எடுத்து வந்தான் எனக் கூறும்." இந்தக் கதைப் பாடலில் மாடன் மிக உயரமானவன் பலவகை ஆயுதங்களைத் தாங்கியவன் என்பதை வேறு இடங்களிலும் கூறும்.

சுடலைமாடனுடன் 21 மாடன்களும் பிறந்தனர். இவர்களும் மாடனைப் போன்ற வடிவமுடையவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுடலை மாடனுக்கு இரண்டு வகையான வடிவங்கள் உள்ளன.

செவ்வகப் பீடத்தில் அரைக்கோள வடிவில் தலை அமைந்த வடிவம், முழு உருவில் அமைந்த வடிவம்.

இவ்விரு வடிவங்களில் அரைக்கோள வடிவத்தலை வடிவம் பெருமளவில் உள்ளது.

அரைக்கோளத் தலைவடிவம் கல், சுதை, சிமெண்ட், மண் போன்றவற்றில் ஒன்றினால் செய்யப்பட்டிருக்கும். வெட்ட வெளியில் அல்லது ஆலமரத்தின் கீழ் அமைந்த சுடலைமாடன் வடிவம் பெரும்பாலும் கல்லால் ஆனதாக இருக்கும். விழா அல்லது சிறப்பு நிகழ்ச்சியில் உருவாக்கப்படும் மாடனை மண்ணால் அமைப்பதுண்டு.

அரைக்கோள வடிவத் தலையில் கண் மீசை வரையப்பட்டோ வெள்ளியிலான கண் மீசை பொருத்தப்பட்டோ இருக்கும். உடல் பகுதியில் வெட்டுக்கத்தி அல்லது குண்டாந்தடியின் பெரிய உருவம் வரையப்பட்டிருக்கும்.

முழு உருவச் சுடலைமாடன் வடிவம் கல்லால் ஆனது. சுதை வடிவங்கள் மிக அபூர்வமாக உள்ளன.

ஒரு தலை, 2 கைகள், கிரீடம் அல்லது கரண்ட மகுடம் என அமைந்தது. கைகளில் கத்தி, பொந்தந்தடி, ஈட்டி, வல்லயம், சமுதாடு போன்ற ஆயுதங்களில் இரண்டு இருக்கும். வலது கையில் உள்ள ஆயுதத்தை மேலே தூக்கிப் பிடித்தும் இடதுகை ஆயுதத்தை தரையில் ஊன்றியும் அமைக்கப்படும்.

திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் திருவிழாக் காலங்களில் மண், சணல், வாழைத்தடைகளால் தற்காலிக மாடன் உருவம் அமைப்பதுண்டு. குமரி மாவட்டத்தில் பெரும்பாலும் நிரந்தர வடிவமே உள்ளது.

சுடலை மாடனின் உடன்பிறந்தவர்களாகக் கொள்ளப்படும் 21 மாடன்களுக்கும் தனித்தனி வடிவங்கள் கிடையா. விழாக்காலங்களில் மண்ணால் வெறும் பீடம் அமைத்துப் படையல் செய்வது வழக்கம். இவற்றில் கழுமாடன் விடுமாடன் போன்றவை தனி வழிபாடு பெற்றுள்ளன. இத்தகைய இடங்களில் இவற்றின் வடிவம் சுடலை மாடனின் பொது வடிவத்தையே பெற்றுள்ளது.

மாடன் என்னும் பின் ஒட்டையோ (தளவாய் மாடன்) முன் ஓட்டையோ (மாடன் தம்புரான்) பெறும் தெய்வங்களும் சுடலை மாடனுக்குரிய வடிவத்தையே பெறும். என்றாலும் கரடிமாடனின் வடிவம் இதனின்று வேறுபட்டது. நின்றகோலமுடையது. இரண்டு கைகள் கொண்டது. ஒரு கையில் பொந்தந்தடி; இன்னொரு கை தொங்கிக் கொண்டிருக்கிறது. தலை கரடியின் தலை. உடல் மனித உடல்; 135 செ.மீ. உயரமுடையது."

மாடன் என்னும் பின் ஒட்டையோ முன் ஒட்டையோ உடைய குறிப்பிட்ட வகை மாடன்கள் (வேம்ப மாடன், மாடன் தம்புரான்) அரைக்கோளத் தலை வடிவம் இல்லாமல் பிரமிட் வடிவில் உள்ளன. இந்த வடிவம் 30 முதல் 35 செ.மீ. உயரமுடையது. இது அபூர்வமாக உள்ளது.

இரவிபுதூர் ஊரில் உள்ள இடைகரைபுலை மாடன் வடிவமற்ற கல் என்றாலும் இக்கல் தலைகீழாக இருப்பதான நம்பிக்கை உள்ளது. இதற்கு இத்தெய்வம் தொடர்பான கதை காரணமாகக் கூறப்படுகிறது."

அகால மரணமடைந்து தெய்வமாகி மாடனுடன் இணைபவர் இறக்கும்போது இருக்கும் நிலையைப் பொறுத்து வடிவம் பெறுவர் என்னும் நம்பிக்கை உண்டு. இயக்கி வடிவங்களுக்கு இது பொருந்தும்.


குமரி மாவட்ட நாட்டார் தெய்வங்களில் புராணச் சார்பற்று அகாலமரணத்துடன் தொடர்புடையதான தெய்வங்களில் குறிப்பிடத் தகுந்தது இயக்கியம்மன். தென் மாவட்டங்களில் முக்கிய தெய்வ மாகவும் துணைத் தெய்வமாகவும் வழிபாடு பெறும் இத்தெய்வம் பிராமணர் தவிர்த்த பிற எல்லாச் சாதியினருக்கும் பொதுவானதாக உள்ளது.

அகால மரணமடைந்த பெண் தனிவழிபாட்டிற்குப் பின்னர் இயக்கியுடன் இணைவது என்பது ஒரு கருதுகோள். இவ்வாறு இணைவதற்கு முன் இது வெறும் கல் அல்லது சுமைதாங்கி வடிவில் இருக்கும். இத்தெய்வம் இயக்கியுடன் இணைந்தபின்பு இயக்கியின் பொது வடிவத்தைப் பெற்றுவிடும்.

இயக்கியம்மன் வடிவம் கீழ்க்கண்ட வகைகளில் காணப்படுகிறது.

முக்கோண வடிவில் அமைந்த கல்: பெரும்பாலும் இது துணைத் தெய்வமாக அமைந்த இடங்களில் உள்ளது.

சுடலைமாடனுக்குரிய பொது வடிவம்: இதுவும் துணைத் தெய்வமாக அமைந்த இடங்களில் இருப்பது.

சிறு மண்பீடம்: இது 50 செ.மீ. முதல் 100 செமீ. உயரமுடையதாய் இருக்கும். இதன் மீது செம்பு அல்லது பித்தளை கவசத்தை வைத்து வழிபடுதல் உண்டு, இது விழாக்காலங்களில் மட்டுமே அமைக்கப்படும். 

சுமைதாங்கிக்கல்: இது இயக்கியம்மனுடன் பெரிதும் தொடர் புடைய வடிவம். இவ்வடிவம் இறந்த கர்ப்பிணியின் நினைவில் நடப்படுவது. இது எப்போதும் தனித்தெய்வமாகவே இருக்கும்.

இலுப்பை, வேம்பு, ஆல், பனை போன்ற மரங்களில் மஞ்சணை தேய்த்து தெய்வமாகக் கொள்ளுதல். இது பெரும்பாலும் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் வடிவமாகும். சுடுகாட்டு மரங்களும் இதில் அடங்கும்.

கல் வடிவ இயக்கி: இது 100 செமீ. முதல் 120 செமீ. உயரமுடையது. இதன் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும் மறுகை ஒரு குழந்தையை இடுப்பில் இடுக்கியபடியும் இருக்கும். இது முக்கியத் தெய்வமாகவே பெரும்பாலும் இருக்கும். இது பிற்கால வடிவம்.

ஒட்டுருவம் அல்லது சுடுமண் உருவம்: இயக்கியம்மனுக்கு என்று உரிமை உடைய வடிவம். 200 செமீ. உயரமுடைய இந்த வடிவம் மண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுடப்பட்டு வண்ணம் கொடுக்கப் பட்டிருக்கும். இதன் ஒரு கை இடுப்பைப் பிடித்தபடியும் மறுகையில் குழந்தையும் வைத்திருக்கும். வாய் அகலத் திறந்திருக்கும், கழுத்தில் அழகிய ஆபரணங்கள் காட்டப்பட்டிருக்கும்.

இந்த உருவம் முக்கியத் தெய்வமாகவும் துணைத் தெய்வமாகவும் உள்ள இயக்கி கோவில்களில் உள்ளது. இயக்கியம்மன் கதையில் இயக்கி கள்ளியை குழந்தையாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு திரிந்தாள் என்னும் நிகழ்ச்சியைக் காட்டவே இவ்வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் கருவை வாயில் கடித்தபடியும் உள்ள சுடுமண் இயக்கி வடிவம் உண்டு. கோவில் நேர்ச்சைக்காகக் கொடுக்கப்பட்ட இவ்வுருவம் பின்னர் வழிபாட்டிற்கு உரிய  தாகிவிடும்.

இயக்கியின் அண்ணன் எனக் கதைப்பாடல் குறிப்பிடும் நீலசாமிக்கும் தனி வழிபாடு உண்டு. நீலனுக்குப் பொட்டல் ஊரில் தனிக்கோவில் உள்ளது என்றாலும் இங்கு உருவம் இல்லை. பிற இடங்களில் துணைத் தெய்வமாக உள்ள நீலனின் வடிவம் சுடலை மாடனை ஒத்து இருக்கிறது. இதைத் தனியாகக் காட்டுவதற்கு அடையாளம் இல்லை.

காளி, பேச்சி அம்மன், உச்சிமாகாளி, மாரியம்மன், முந்நூற்று நங்கை, துர்க்கை என நூற்றுக்கு மேற்பட்ட நாட்டார் பெண் தெய்வங்கள் இங்கே வழிபாடு பெறுகின்றன. இவை பார்வதியின் அம்சமாகக் கருதப்படுவதால் இவற்றின் வடிவங்களும் அப்படியே உள்ளன.

நெறிப்படுத்தப்பட்ட சமயக் காளியின் வடிவம் இடத்துக்கு இடம் வேறுபட்டு இருக்கிறது. இவள் மூன்று கண்களும் எட்டு கைகளும் உடையவள்; கைகளில் சூலம், சக்கரம், பாசம், கேடயம் சங்கு போன்றன இருக்கும். சடாமகுடம் உடையவள்; சிங்கம் அல்லது வேதாள வாகனம் கொண்டவள். துர்க்கை என்னும் தெய்வம் வைணவ சமயச் சார்புடையது. இவள் கைகளில் சங்கு, சக்கரம் காட்டப்பட்டிருக்கும்.

நாஞ்சில் நாட்டு நாட்டார் பெண் தெய்வங்களின் வடிவமைப்பு நெறிப்படுத்தப்பட்ட சமயப் பெண் தெய்வங்களை ஒத்தும் இருக்கிறது. முக்கியமாக காளி, துர்க்கை இரண்டும் இத்தகையன. ஆனால் இப்படிமங்களில் அபய, வரத முத்திரைகள் கிடையா. சங்கு, சக்கரம், சின்னங்களும் நாட்டார் துர்க்கையிடம் இல்லை. நெறிப்படுத்தப்பட்ட சமய துர்க்கை போன்றே நாட்டார் துர்க்கைக்கு சிங்கம் அல்லது வேதாளம் இருக்கும்.

சில காளி கோவில்களில் முக்கியத் தெய்வம் இருக்கும் அறைக்கு எதிரே பலி பீடத்தை ஒட்டி வேதாளம் இடம் பெற்றிருக்கும். இவளின் எதிரே நந்தி இருக்கும். பெருநெறி மரபை ஒட்டியதுதான் இது. வேதாளம் பெண் தெய்வமாகவே காட்டப்பட்டிருக்கும். இது நின்ற கோலமாய் கைகளில் ஆயுதங்களுடன் கோரமான வடிவத்துடன் தொங்கிய மார்புகளுடன் இருக்கும்.

நாட்டார் பெண் தெய்வங்களில் புராணச் சார்புடையவற்றிற்கு வாள் கேடயம் காட்டப்பட்டிருக்கிறது. பேச்சி அம்மன் கைகளிலும் கால்களின் கீழும் பாம்பு வடிவம் இருக்கும்.

நெறிப்படுத்தப்பட்ட சமயத் தெய்வமான விஷ்ணு, நாட்டார் தெய்வமாகவும் வழிபாடு பெறுகிறார்.

இங்கு இவர் பெருமாள்சாமி எனப் பெயர் பெறுகிறார். சங்கு சக்கரம் தாங்கி நான்கு கைகளுடன் கூடிய இந்த ஐம்பொன் விக்கிரகம் அமர்ந்த கோலத்தில் உள்ளது (இலந்தவிளை ஊர்). இதற்கு ஆடு பலி கொடுக்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட நாட்டார் தெய்வங்களின் வடிவங்களில் காணும் பொதுத்தன்மை, இவற்றின் மேல்நிலையாக்கம் தான். வழிபாடு, பூஜை, பூசகர் கோவில் கட்டிட அமைப்பு என்னும் முறைகளில் வேகமாக அடையும் மேல் நிலையாக்க மாற்றம் தெய்வ வடிவங்களில் ஏற்படவில்லை.

அ.கா. பெருமாள்

அடிக்குறிப்புகள்:

*அண்மைக் காலங்களில் மேல்நிலையாக்கம் காரணமாகச் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களில் விழாக்காலப் படிமத்தை முக்கிய தெய்வத்தின் அருகே வைப்பது என்னும் நடைமுறை சில நாட்டார் தெய்வக் கோவில்களில் உள்ளது.

*பனை போன்ற பல்வேறு மரங்களிலும் மஞ்சணை தேய்த்து நாட்டார் தெய்வமாக ஆக்குதல் உண்டு. மஞ்சணை: நாட்டார் தெய்வக் கோவில்களின் வடிவத்தில் மேல் பூசப்படும் சிவப்பு நிறக்கலவை. சுண்ணாம்பு மஞ்சள் எண்ணெய் கலந்த மணமான சாந்து.

*'கன்னி வழிபாடு' நாட்டார் தெய்வம் தொடர்பானது. திருமணமாகாத பெண் அகால மரணமடைந்தால் அவளுக்கு வீட்டின் உள்பகுதி அறையில் சுவரில் மஞ்சணை தேய்த்து வழிபாடு செய்வது உண்டு, இதற்குத் தனிஉருவம் இல்லை. இந்தக் கன்னி கொடூரத்தன்மையுடையவளாகக் கருதப்பட்டால் ஊருக்கு வெளியே இவளை நிலைநிறுத்துவர். அப்போது இவள் இயக்கியின் வடிவத்தைப் பெறுவர்.

*கழுமாடன் என்னும் தெய்வத்தின் வடிவம் இத்தகையது. இது பெரும்பாலும் சுடலை மாடன் வடிவத்தின் எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் கழுமாடனின் ஈட்டிமுனை வடிவத்தில் கோழியைக் குத்தி பலி கொடுப்பதுண்டு.

*அங்கி என்பது செம்பு அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட புடைப்புச் சிற்ப உடையதாய் இருக்கும். இந்த அங்கி வடிவத்தை கல் அல்லது கதை வடிவ வடிவம். இது உள்ளீடு உடையதாய் இருக்கும். 30 முதல் 200 செ.மீ. வரை உயரம் சுடலைமாடன் மீது வைத்து ஒப்பனை செய்கின்றன. இந்த அங்கியை வாடகைக்கு விடுவதற்கென்று கடைகள் உள்ளன.

*நெறிப்படுத்தப்பட்டசமயத் தெய்வப் படிமங்களில் கடு சர்க்கரைப் படிமம் தயாரிப்பது பற்றிய செய்திகளுடன் இதையும் இணைத்துப் பார்க்கலாம். கடினமான சுக்கான் மூலிகைகளின் சாற்றையும் கலந்து தயாரிக்கப்படும் சாந்து கடுசர்க்கரை கற்களைப் பொடித்துக் கிடைக்கும் சிறு மண்ணையும் பலவகையான எனப்படும்.

*கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்படியாகப் பிடிமண் வைத்து உருவாக்கப் பட்ட கோவில்கள் உள்ளன. கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் அருகே உள்ள தீப்பாய்ந்த அம்மன் கோயில் தென்பாண்டிப் பகுதியுடன் தொடர்புடையது. இது பிடிமண் எடுத்துக் கொண்டு வந்து உருவாக்கப்பட்டது. இவ்வாறு கோவிலை உருவாக்கும் போது, சொந்த ஊருக்கு படிமத்தை அமைப்பவரை அழைத்துச் சென்று, மூலபடிமத்தைப் பார்வை இடச் செய்வதுண்டு.

*கர்ப்பிணிகள் இறந்தால் அவர்களின் ஆன்ம சாந்திக்காக நடப்படும் கல். இது மாஸ்திக்கல் எனப்படும். பொதுவாக இக்கல் வழிநடைப் பாதையில் அமைக்கப் பட்டிருக்கும். பொருட்களைத் தலையில் சுமந்து வருவோர் இளைப்பாறு வதற்காக நடப்படும் கல் சுமைதாங்கி எனப்படும்.

*வண்டிமலையனும் வண்டிமலைச்சியும் மாட்டு வண்டிகளை மறிப்பவர்கள் என்னும் நம்பிக்கை உண்டு. இதனால் புதிய வண்டி செய்யப்பட்டதும் இத்தெய்வங்களுக்கு வழிபாடு செய்யப்படும்.

*காஞ்சி மடம் ஜெயேந்திரர், கிராமப்பூசாரிகள் மாநாட்டில் நாட்டார் தெய்வ வடிவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் அவரிடம் வண்டிமலைச்சியின் வடிவத்தை நிமிர்த்தி வைக்கலாமா என்று யோசனை கேட்ட போது அப்படியே செய்யலாம் என்றார்.

*மேல்நிலையாக்கம் பெறும் தெய்வங்களின் கைகள் அபயவரத முத்திரை காட்டும்படி அமைக்கப்படும் வழக்கம் இப்போது பரவி வருகிறது. 

*சிவபுராணம் கூறும் தாருகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி என்னும் மூன்று அரக்கர்களை இவன் எரித்தே அழித்தான் என்னும் கதை பலவித மாற்றங்களுடன் முத்தாரம்மன் கதைப் பாடலில் வருகிறது. இங்கு முப்பிடாரி அரக்கனாகவே காட்டப்படுகிறான். ஆனால் வாய்மொழி மரபு முப்பிடாரியைப் பெண் தெய்வமாகவும் கூறுகிறது. இதனால் இவ்வடிவத்தை அமைப்பதில் சிக்கல் உள்ளது என மூத்த சாமியாடிகள் கூறுகின்றனர்.'

*சுடலைமாடன் வில்லிசைப் பாடலில், அவன் தோன்றிய வடிவம் பின்வருமாறு கூறப்படுகிறது.

தோன்றி நின்றான் சுடலையில் மாடனும் 
துய்ய கண்களும் வட்டிலும் போலவே 
மூன்று கண்ணும் முகமும் பஞ்சாச்சாரமும் 
மூடிக் கொண்ட தலையலங்காரமும் 
அழகுவர்ணக் கருமலை போலவே 
ஆயுதங்களும் வேள்வியில் தேணுமாம் 
பழைய சந்திரக் காலிச் சரிதமும்
பாரவர்ணத் தலைப்பாகைத் தொப்பியும்.

*சுடலை மாடனுடன் பிறந்த பிற மாடன்கள் கடலைமுண்டன், கல்லெறிமாடன், கவுதலை மாடன், வண்ணாராமாடன், புலமாடன், இருளகற்று மாடன் திருக்குழி மாடன், பன்றி மாடன், குழி தோண்டி மாடன், இடுகாட்டு மாடன், சுடுகாட்டு மாடன், ஆத்திமாடன், உதிர மாடன், கழுமாடன், கலுங்கடி மாடன், ஆலடிமாடன், ஆற்றடி மாடன், அருதகுல மாடன், உச்சிப்பலி மாடன், அறகுலமாடன், மாடிப்பிள்ளை.

*கரடிமாடன் கோவில் ஆரல்வாய்மொழி ஊரில் உள்ளது. இது செட்டியார் சமூகத்துக்குரிய கோவில். பாண்டி நாட்டிலிருந்து செட்டியார்கள் குடிபெயர்ந்த போது வந்த தெய்வம் இது.

*நம்பூதிரி ஒருவர் தலைகீழாக கிணற்றில் விழுந்தார்; அவரின் ஆவி தனக்கு தலைகீழாகவே உருவம் அமைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாராம்.

*கொடூரமான இயக்கிக்கு நேர்மாறான வடிவம் உண்டு. இதை அக்கா இயக்கி என்கின்றனர். இவள் சாந்தமானவள். இவளுக்கு இரண்டு கைகள் இதன் முகத்தில் கொடூரம் காட்டப்படுவதில்லை.

நன்றி - நியு சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

குறிப்பு: இக்கட்டுரை தன்னானே 2001 டிசம்பர் இதழில் வெளிவந்தது, குருகு இதழுக்காக சில திருத்தங்களுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.


அ.கா. பெருமாள் (1947) நாட்டாரியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகத்தில் உள்ள ஆய்வாளர்களில் முதன்மையானவர். தென்குமரி நாட்டார் ஆய்வு, குமரி மாவட்ட வரலாற்று ஆய்வு, இலக்கிய ஆய்வு என தொண்ணூறுக்கும் மேல் நூல்கள் எழுதியுள்ளார். பழைய சுவடிகளை பதிப்பித்தும் உள்ளார். தொல்லியல் துறை, ஆய்வுத்துறை, தமிழக வளர்ச்சித் துறை என ஆய்வு சம்பந்தப்பட்ட முக்கியமான துறைகளில் தொடர்ந்து, தனது ஆய்வு பங்களிப்பை தருபவராகவும் ஆலோசகராகவும் உள்ளார். 

அ.கா. பெருமாள் - Tamil Wiki