Tuesday, 17 February 2026

குடவாயிலார் என்னும் முன்னத்தி ஏர் - வே.பார்த்திபன்

குடவாயில் பாலசுப்ரமணியன்

வரலாறும் கற்பனைகளும்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து, ஆர்குட் கம்யூனிட்டி வலைத்தளம் மற்றும் அது தொடர்பான குழுக்களில் கற்பனையில் திரிந்த காலம் அது. ஒருநாள் பொன்னியின் செல்வன் வாசகர்கள் தஞ்சையில் குழுமினோம். அப்போது அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முதுமுனைவர். திரு.குடவாயில்.பாலசுப்ரமணியன் கலந்து கொள்கிறார் என அப்போது தெரிவித்தார்கள், அதற்கு முன் அவரை கேள்விப்பட்டதில்லை, யாரோ ஒருவர் தலைமையேற்கிறார், நாமும் செல்வோம் என்ற அளவிலேயே எனது புரிதல் இருந்தது. கோவிலின் தென்புறவாயிலின் சுற்றுச்சுவர் அருகில் குடவாயில் பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்தார் என்பதனை தாண்டி, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி முதல் பினாகபாணி வரையிலும் அவர் உடைத்து எறிந்த கற்பனை பாத்திரங்கள் ஏராளம். அவர் பேசப்பேச எது கற்பனை எது வரலாறு என்ற சித்திரம் எங்களுக்குள் இயல்பாக எழுந்து வந்தது. அவரைத்தவிர வேறு யார் அன்று இதை விளக்கியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. பின்னர் கல்வெட்டுகளிலிருந்து “வல்லவரையன் வந்தியத்தேவன்”, “ஆழ்வார் பராந்தகன் குந்தவை”, “லோகமாதேவி”, “கிருஷ்ணன் ராமன்”, “சிவபாதசேகரன்”, “வாழைப்பழ பிள்ளையார்”, தஞ்சைக்கோவில் கல்லெழுத்து எழுதிய, ‘'ரவிபாளூர்” என அவர் வாசித்து காட்ட, அப்படியொரு பிரமிப்பு.

தூரத்திலிருந்தே அவர் ஆளுமையை ரசித்துக் கொண்டிருந்தேன். அதன்பின் அவரைத்தேடி படிக்க ஆரம்பித்தேன், அவர் எழுதிய புத்தகங்கள், நாளிதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் பற்றி சேகரிக்க ஆரம்பித்தேன். நான் திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தின் உறுப்பினர், நூலகத்தில் அலைந்து திரிந்ததில் குடவாயிற்கோட்டம் எனும் அவரது முதல் ஆய்வு நூல் கிடைத்தது. முதல் ஆய்வு நூல் என்பதை விட முதல்தர ஆய்வுநூல் எனலாம். தேர்ந்த எழுத்துநடை, தரவுகளின் அடிப்படையில் ஆய்வுநோக்கு என அந்நூல் அமைந்திருந்தது. அதன்பின் நந்திபுரம் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்நூலின் வாயிலாக நந்திபுர ஆயிரத்தளி எனும் ஒரு ஊர் மற்றும் ஆயிரத்தளி எனும் ஒரு மரபு இருந்ததையும் அறிந்தேன். மேலும் வாகீசர், வாகீஸ்வரி, இரட்டைக்கோவில்கள் எனும் சுந்தரசோழர், வானவன் மாதேவி பள்ளிப்படை முன்பு இருந்தது பின்பு காலஓட்டத்தில் அவை அழிந்தது குறித்து அறிந்து பிரம்மித்தேன்.

தஞ்சை பெரிய கோவில்- (ஓவியம் சில்பி)

களப்பயணங்களின் துவக்கம் 

அவ்விடங்களுக்கு நேரில் செல்லவேண்டும் என ஆசை எழ, மறு வாரமே அந்த புத்தகத்தை கையில் ஏந்தி, என் இருசக்கர வாகனத்தில் சென்றேன். முதலில் செந்தலை சென்று வாகீசரையும், நியமம் சென்று முன்பு அங்கிருந்த ஆயிரத்தளியில் தப்பிப்பிழைத்த இரு பிரம்மாண்ட லிங்கங்களையும் தரிசித்தேன், அதில் ஒன்று பதினாறு பட்டை பாணம் கொண்டிருந்த தாராலிங்கம் என அரிய வகையான பல்லவர் கால லிங்கத் திருமேனியாகும், பல்லவர்களின் மேலாண்மையை ஏற்று தஞ்சைப் பகுதியில் ஆட்சிபுரிந்த முத்தரையர்களின் கலைப்பாணி இந்த லிங்கமாகும். முத்தரையர்களின் கலைக்கோவில்களில் அவர்களின் பேரரசர்களான பல்லவர்களின் தாக்கம் அதிகம் இருக்கும். லிங்கத் திருமேனியை தரிசித்தவுடன், மேலும் தனது இரு புதல்வர்களான மாந்தன், மாந்தி இல்லாத தவ்வையையும் கண்டு, கண்டியூர் சென்று வாகீசரை தரிசித்து, வீரசிங்கம்பேட்டை வாகீஸ்வரியை அலைந்து திரித்து பார்த்துவிட்டு, இறுதியாக நந்திபுரத்து காளாபிடாரியையும், பள்ளிப்படையில் எஞ்சியிருந்த இரட்டை லிங்கங்களையும் பார்த்துவிட்டு வீடடைந்தேன். அவ்வளவு அலைந்த பின்னும் அதுவரை வாழ்வில் அறிந்திராத இனிமையை உணர்ந்தேன், அந்நாள் இன்றும் என் அகக்கண்களில் நினைவில் உள்ளது. இரட்டைக்கோவிலில் உள்ளது பள்ளிப்படைதான் என குடவாயிலார் கூறியதற்கு அவர் எடுத்தாண்ட ஆதாரங்கள் அனைத்தும் அற்புதமானவை. முழுவதுமாக இத்துறையில் ஊறித்திளைக்கும் ஒருவராலேயே இது சாத்தியம். ஏனெனில் அது ஓர் சுடோகு புதிரைப் போன்றது. ஆங்காங்கே ஆதாரங்கள் சிதறிக் கிடக்கும், அதனை கவனமாக கருத்தில் வைத்து, இவ்வாறு நடந்திருக்கும் என தனது அனுபவ அறிவினைக் கொண்டு இணைத்தால் மட்டுமே சாத்தியம்.

மாலிக்காபூர் படையெடுப்பில் சிதைந்த பள்ளிப்படையை மீண்டும் காண்பதென்பது மிகச்சிரமமான ஒன்று. நூல்பிடித்து செல்வதுபோல, முதலில் “இரட்டைக்கோவில்” என இன்று அழைக்கப்படும் ஊரின் காரணப்பெயரை கருத்தில் கொண்டு விசாரித்து சென்று, அங்கே கிடைத்த பழங்கால அய்யனார், பிடாரி, லிங்கங்கள், இன்றைய கிறிஸ்துவ வெள்ளாளர் தெருவில் உள்ள கோவிலின் அடித்தளம் ஆகியவற்றை பார்த்து, அதன்பின் கண்டியூர் கோவிலின் கோபுரத்தினை கண்டு, அக்கோபுரத்தில் இருக்கும் அக்கோவிலுக்கு தொடர்பில்லாத துவாரபாலகர், விநாயகர், கொற்றவை ஆகிய தெய்வங்களின் சிற்பங்களை கண்டும், அங்குள்ள அம்மன் கோவிலே வேறொரு இடிபாடுள்ள கோவிலில் இருந்து பிரித்துக் கட்டப்பட்ட கோவில் என கட்டிடக்கலை அடிப்படையில் அறிந்து, அதில் பதிவாகியிருந்த அக்கல்வெட்டினைத் தேடிப் படித்து, அவை சோழப்பேரரசன் சுந்தரசோழன் மற்றும் அவரது மனைவியான வானவன் மாதேவிக்கு எழுப்பப்பட்ட கோவிலின் சுற்றுச்சுவரில் இருந்தவை, என அறிந்து, இன்றைய இரட்டைக்கோவில் பகுதியே அன்று பள்ளிப்படை அமைந்த இடம் என்று உறுதி செய்கிறார். எவ்வளவு மெனக்கெடல், எத்தனை விஷயங்களை கோர்த்து நமக்கு ஒரு முடிவை அவர் அளிக்கிறார் பாருங்கள். 

குடவாயில் பாலசுப்ரமணியன்

ஒருமுறை தமிழ் இணைய கழகம் சார்பில் அவர் நிகழ்த்திய உரையை கேட்க வாய்ப்பு கிடைத்தது, அதன் வாயிலாக நந்திக்கும்- அதிகார நந்திக்கும் உள்ள வேறுபாடு, லிங்க சிற்பவியலின் தத்துவம் குறித்து எளிதாக அறிந்தேன். சில ஆண்டுகள் முன்பு வரையிலும், ஈசனின் வாகனமான இடபத்தினையே நந்தி என நினைத்து அழைத்து வந்தேன், நான் மட்டுமல்ல, இன்றும் நிறைய நபர்கள் இடபத்தினையே நந்தி என அழைக்கும் வழமை உள்ளது. ஆனால் உண்மை வேறு, அதிகாரநந்தி என்ற ஒருவர் உண்டு, அவர் சிவாம்சம் பொருந்தியவர், சிவனின் மான், மழு போன்ற ஆயுதங்களும், நெற்றிக்கண் கூட அவருக்கு உண்டு. அவரது கைகள் மட்டும் வணங்கிய நிலையில் இருக்கும், மார்பில் அணைத்தவாறு வாளினைக் கொண்டிருப்பார். அவரின் அருகே சுயம்பிராகாசிகை என்ற அவரது மனைவியும் உடன் இருப்பார். இவர்கள் இருவரும், கோவிலின் நுழைவாயிலான கோபுரத்தின் உட்புறம் பக்தர்களை வணங்கும் வண்ணம் இருப்பர். இவரே நந்தியெம்பெருமான் என்று அந்த காணொளியில் கூறியிருப்பார்.

இதன்பின் நான் என்னுடன் பயணிக்கும் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் குடவாயிலாரின் இக்கருத்தினை உட்புகுத்தி, சரியான பெயர், சிற்பவியல் அடையாளம் காணவேண்டும் என திருத்தி வருகிறேன். இது ஒரு உதாரணம் மட்டுமே இதனைப் போல, தஞ்சைப் பெரியகோவில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் இன்னும் பல கோவில்களின் கட்டுமானம், சிற்பவியல், இக்கோவிலைச் சுற்றி மிகைப்படுத்தி கட்டமைக்கப்பட்ட புனைவுகள், புரளிகள், அவதூறுகள் இவற்றைக் களைந்து எது உண்மையான வரலாறு, எது கட்டமைக்கப்பட்டது போன்ற உண்மைகளை இவரது நூல்கள் வாயிலாகவே நான் உணர்ந்து கொண்டேன். என்னைப்போல இன்னும் எத்தனை ஆயிரம் பேர் இவர் நூல்களைப் படித்து தெளிந்து, அறிவு பெற்றனர்? என அறுதியிட்டுக் கூறுவது கடினம்.

குடவாயிலார் கூறும் கண்டியூர் வாகீசர்

ஈசன் தன் பராக்கிரமத்தை நிகழ்த்திய அட்டவீரட்டானத் தலங்களுள் கண்டியூரும் ஒன்று. இத்தலத்தில்தான் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து அவரது ஆணவத்தை அடக்கினார் என்பது ஐதீகம். காவிரிக்கரையையொட்டி பழம்பெரும் ஏழு கோவில்களை இணைத்து ஏழூர் பல்லக்கு திருவிழா என ஒரு விழா நடைபெறும், இத்திருவிழாவின் ஐந்தாம் கோவில் கண்டியூராகும்.

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாசுதேவம், ஸத்யோஜாதம் என ஐந்து முகங்கள் இருப்பது போன்று பிரம்மனுக்கும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தார். அதனால் தானே படைப்புக் கடவுள் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. அவரது கர்வத்தை அடக்க சிவபெருமான் பைரவரைப் படைத்து அவரை பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒரு தலையைக் கொய்து அவரது கர்வத்தை அடக்கப் பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அத்தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. இத்தோஷம் நீங்க ஊர்தோறும் சென்று பிச்சையெடுக்க வேண்டும் என்று சிவபெருமான் கூறியதால் பைரவரும் பல இடங்களுக்கு சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். இறுதியாக இத்தலத்திற்கு வந்தபோது பிரம்மனின் தலை பைரவன் கையை விட்டகன்றது. பிரம்மனும் தனது கர்வம் நீங்கி தம் மனைவி சரஸ்வதிதேவியுடன் இத்தல இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலை திரும்ப பெற்றதாக இத் தலபுராணம் குறிப்பிடுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோரால் இத்தலம் பாடப்பெற்றுள்ளது. நாவுக்கரசர் தம் நான்காம் பதிகத்தில் இவ்வூரை குறித்து பாடுகிறார்.

வாகீசர்

இத்தலத்தில் காணப்படும் பிரம்மனின் சிலை என்பது சிவனின் உருவான வாகீசரின் திருக்கோலமேயாகும். ஆனால் இன்று அவர் தவறுதலாய் பிரம்மனாய் வணங்கப்படுகிறார். இந்த விவரங்களை மிகவும் அழகாக தனது நந்திபுரம் நூலில் விளக்கியுள்ளார் குடவாயிலார். வாகீசரின் அருகேயுள்ள சரஸ்வதி சிற்பம் கூட மிகவும் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டதே என்கிறார். வாகீசரின் அரிய இப்படிமம் குறித்த சிற்பவியல் தெரியாததாலே அர்ச்சகக்குடியினரும் இவரை பிரம்மன் என விளிக்கின்றனர். ஆனால் இன்று வாகீசருக்கு படைக்கப்படும் மூலமந்திரம் கூட ஈசனுக்கு உரியதுதானே தவிர பிரம்மனுக்கு உரியது அல்ல, இத்தகவல்களை நான் குடவாயிலார் பேசிய ஒரு காணொளி மூலம் அறிந்துகொண்டேன்.

ஆயிரத்தளி என குறிப்பிடப்படும் 'நந்திபுரம்', நியமம் என ஊரில் மட்டுமே இவ்வகை அரிய சிலைகள் உள்ளது. அன்றைய நந்திபுரம் ஆயிரத்தளி எனும் பெருநகரம் இன்றைய கண்டியூர் வீரசிங்கம்பேட்டை மற்றும் அருகேயுள்ள ஊர்களால் ஒருங்கிணைந்த ஊராய் அன்று இருந்துள்ளது. பல்லவன் உருவாக்கிய நந்திபுர ஆயிரத்தளியை போன்றே அவர்களுக்கு கீழடங்கிய முத்தரையர்களால் நியமத்து ஆயிரத்தளி எனும் நகரம் உருவாக்கப்பட்டது. நியமம் எனும் ஊர், கல்லணை -திருக்காட்டுப்பள்ளி இடையே சிற்றூராய் இன்று உள்ளது. 'ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி' என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது. ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.

வாகீசர் எனும் இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும். இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார்.நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார்.நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும். சிவனை சதாசிவமூர்த்தமாக வழிபடுவது ஒருநெறி.பல்லவர்களும் சோழர்களும் சதாசிவ வடிவத்தை பல்வேறு விதங்களில் வடித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடும் சதாசிவ வணக்கம் கூறித்தான் ஆரம்பிக்கிறது.எனவே பெரும்பாலும் இச்சதாசிவ வழிபாடு நான்முகனாகவே வடிக்கப்பெறும். மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகீசர் குறிக்கப்படுகிறார். இவ்வரிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகிறது.

சோழமண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்கள்

சோழவளநாட்டில் தொன்மை சிறப்புமிக்க கவின்மிகு கற்றளிகளில் ஏராளம் உண்டு, இத்தகைய கோவில்களை எழுப்பிய அரசர்கள், அரச குடும்ப மகளிர், அரசகுலத்தினர், அமைச்சர்கள் என எண்ணற்றோர் தமது படிமங்களை கோவில் உறுப்புகளான கோட்டம், கண்டம், தூண்கள் போன்றவற்றில் ஆங்காங்கே சிற்பமாய் வடிப்பதுண்டு. இத்தகைய சிற்பங்கள் சோழமண்டலங்களில் நிறைய உண்டு. சில படிமங்களில் அவர்களின் பெயர் இருக்கும், பெரும்பாலும் பெயர் இருப்பதில்லை, இத்தகைய சிற்பங்களை அடையாளம் கண்டு, அதனை சோழமண்டல வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும் என்ற நூலில் ஆவணப்படுத்தியுள்ளார் குடவாயிலார். இந்நூலினைப் படித்து இதிலுள்ள வரலாற்று நாயகர்கள் அனைவரின் படிமங்களையும் நான் நேரில் கண்டுள்ளேன். ஒவ்வொரு சிற்பமும் வேறு வேறு தோற்றங்களில் இருப்பினும் அச்சிற்பங்களில் உள்ளவர் எவர் என, அறுதியிட்டு கூற தெளிவான வரலாற்றுப் பார்வையும் அனுபமும் தேவை. கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் முழுவதும் ஆராய்ந்து, அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் மட்டுமே சரியான தகவல்களை வெளிக்கொணர முடியும். உதாரணமாக தென் திருவாலங்காடு மற்றும் கொறுக்கை என்ற இரு தலங்களில் ஓர் மன்னர் சிற்பம் இருக்கும், அவரின் தலையின் மேலே பாதணிகள் இரண்டு இருக்கும், மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு “சிவபாதசேகரன்” என்ற பட்டம் ஒன்று உண்டு. மேலும் இக்கோவில்கள் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை அறிந்துகொள்ள கல்வெட்டு செய்திகளும், கோவில் கட்டிடக்கலை பற்றிய அறிவும் அவசியம். குடவாயிலார் அதில் கரை கண்டவர்.

சிவபாதசேகரன்

தாராசுரம் கட்டிய இரண்டாம் ராஜராஜன் மற்றும் அவரது மனைவியர், அக்கோவிலில் பதிகம் பாடிய 108 பிடாரர்கள், இராஜராஜன் மற்றும் அவரது மனைவி தந்திசக்தி விடங்கி எனும் உலகமாதேவி, முதலாம் ஆதித்தன், கோனேரிராஜபுர செம்பியன் மாதேவி, கண்டராதித்தர், உத்தமசோழன் சிற்பம், திருவாவடுதுறை கோவில் கட்டிய இருக்குவேளிர் மரபினரான திருக்கற்றளி பிச்சன் போன்ற வரலாற்று நாயகர் சிற்பங்கள் அவரால் வரலாற்று உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

அவர் எழுதிய இராஜராஜேச்சரம், தேவார மாண்பும் ஓதுவார் மரபும், இராஜேந்திர சோழன், தஞ்சை நாயக்கர் வரலாறு, சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், தமிழ் மன்னன் கோனேரிராஜன், அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள், தஞ்சாவூர், மேலும் இன்னும் பல புத்தகங்கள் எனது இல்ல நூலகத்தினை அலங்கரித்துக் கொண்டுள்ளது. குடவாயிலார் எழுதிய புத்தகம் ஒவ்வொன்றும் முனைவர் பட்டத்திற்கு ஈடான ஆழமான கருத்தியலிற்கு நம்மை இட்டுச் செல்லும் என்பது நான் படித்து, அதன்பின் அவற்றை நேரில் பார்த்து, ஒப்பிட்டு உணர்ந்துகொண்ட உண்மை.

எங்கள் களஆய்வுக்கான அங்கீகாரம் 

ரிஷிகளில் தலைமையானவர் வசிஷ்டர். தவத்தில் ஈடுபடுவோரை ரிஷியாக அங்கீகரிக்கும் அதிகாரம் பெற்றவர். முன்பு மன்னராக இருந்த கவுசிகன், தவத்தில் ஈடுபட்டு நீண்ட காலத்திற்குப் பிறகே அவரை ரிஷியாக வசிஷ்டர் ஏற்றார். இந்த கவுசிகனையே ‘விஸ்வாமித்திரர்’ எனப் போற்றுகிறோம். இதனையே வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர் என்கிறோம். தான் நேசிக்கும் தலைமைப்பண்பு, ஆளுமை, ஞானச்செருக்கு உள்ள ஒருவர் மற்றொருவரை புகழ்வதை இதற்கு உதாரணமாய் கூறுவர். எனக்கும் அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. கடந்த 2018 ம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உள்ள தலைவீரி சிங்கம் எனும் சுனையின் மேல் ஓர் கல்வெட்டினை நானும் என் நண்பர்கள் சிலரும் கண்டோம். அதனைப் படித்துப் பார்க்கையில், இக்கல்வெட்டு இருக்கும் பாறையின் அடியில் ஓர் குடைவரை உண்டு என்றும், ஜூவரஹேஸ்வரர் எனும் லிங்கம் குடைவரையின் உள்ளே உள்ளதெனவும், 1857ம் வருடம் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானின் மனைவி அந்த சுனையில் உள்ள நீரினை வெளியேற்றி ஈசனை வழிபட்டதாக ஒரு புதிய தகவலும் கிடைத்தது. இத்தகவலை அடிப்படையாகக் கொண்டு ஊராரிடம் விசாரித்தோம். ஊராரிற்கு இதுகுறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. இந்த சுனைக்கு அடியிலே குடைவரை இருக்குமோ? அதனுள்ளே ஈசன் இருப்பாரோ? என்ற, ஐயத்துடனே இந்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற்று, ஊரார் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அதிலுள்ள நீரினை இறைத்து வெளியேற்ற அங்கே ஓர் அழகிய குடைவரை முதன்முதலாக சுமார் 160 ஆண்டுகளுக்குப் பின்னர், வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.

இச்செய்தியானது நாளிதழ்களில் வெளியாகி பெரிய அளவில் பேசுபொருளானது. இது குறித்து நான் மதிக்கும் மானசீக குரு.திரு.குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் தனது அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள் எனும் புத்தகத்தில் நீருக்குள் ஜ்வர ஹரேஸ்வரர் எனும் கட்டுரைஒன்றில் விரிவாக அந்நூலில் 114-120 ம் பக்கம் வரையிலும் எழுதியுள்ளார் மேலும் எங்கள் குழுவான யாஊயாகே (யாதும் ஊரே யாவரும் கேளிர்) வை பாராட்டி, எங்கள் குழுவினரின் புகைப்படத்தினையும் பதிவேற்றி, மேலும் முத்தாய்ப்பாக எங்கள் குழுவிற்கு தமிழகமே நன்றிக்கடன் பட்டுள்ளது என்ற கருத்தினையும் தெரிவித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் எங்களை ஆழ்த்தினார். 

நார்த்தா மலை சுனையில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம்

துரோணாச்சாரியாரை தமது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஏகலைவன் வில்வித்தை கற்றான். ஆனால் அதனை அரங்கேற்றம் செய்ய இயலாது, அவனது விரல்கள் அன்றைய சதியால் வெட்டப்பட்டு, கற்ற அவனது வித்தையானது முடித்து வைக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது. குடவாயிலாரை மானசீக குருவாய் ஏற்று, அவரது பண்பட்ட அறிவினை நூல்கள் வயிலாக பயின்று, நான் தெளிந்து என்னைப்போல் பலரது வரலாற்று ஐயத்தினை தெளியவைக்கும் முயற்சியில் நான் என்றும் இயங்குவேன். முதுமுனைவர்.திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் பூரண நலத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து இன்னும் பல வரலாற்று ஆய்வுநூல்களை படைக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.

வே.பார்த்திபன்

வே.பார்த்திபன் (V.Parthiban) திருச்சியை சேர்ந்தவர். பத்து ஆண்டுகளுக்கு மேல் தொல்லியல் சார்ந்து கள ஆய்வுகள் செய்து வருகிறார். பார்த்திபன் எழுத்தில் 'கல்லாகிப் போனவர்கள் (ஆதிவனம்), கல்வெட்டு ஓர் அறிமுகம் (காக்கைக்கூடு), சோழநாட்டு நடுகற்கள்(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்), குறுநிலத்தலைவர்கள், அவிபலி (கிழக்கு பதிப்பகம்)' ஆகிய நூல்கள் வெளியாகியுள்ளன. வரலாற்றுக்காக இவர் துவங்கிய 'ஆற்றுப்படை' என்னும் மின்னிதழ் தற்போது அச்சு இதழாக வெளிவருகிறது. ஆற்றுப்படை என்னும் பெயரிலேயே மரபுச்சுற்றுலா அமைப்பை நிறுவி, தமிழகம் துவங்கி சிந்துவெளி நாகரீக களங்கள் வரை தொல்லியல் சார்ந்த பயணங்களையும் இவர் ஒருங்கிணைக்கிறார்.