Friday, 8 August 2025

டுடன்காமுன் கல்லறை 4: மகத்தான மம்மி அறை - பொன். மகாலிங்கம்

மம்மி அறை உடைத்துத் திறக்கப்பட்டபோது

முந்தைய பகுதி - டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள்

டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கார்ட்டரை உலகப்புகழ் பெறச் செய்தது. எகிப்திலிருந்த முக்கியப் புள்ளிகள் எல்லாரும் கார்ட்டரை மொய்க்கத் தொடங்கினார்கள். அவர் தங்களோடு வந்து கல்லறையைத் தனிப்பட்ட முறையில் சுற்றிக்காட்ட வேண்டுமென்று அதிகாரிகள் முதல் அயல்நாட்டு அரச குடும்பத்தவர் வரை ஆசைப்பட்டார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்று என்ன கிடைத்தது? இந்த ஒற்றைக் கேள்வியோடு செய்தியாளர்கள் தினமும் துளைத்து எடுத்தனர் கார்ட்டரை. தொடக்கத்தில் முகதாட்சண்யத்துக்காகச் சிலரது ஆசையை நிறைவேற்றி வைத்தார் கார்ட்டர்.

ஆனால், நாளடைவில் அது அவருக்குப் பெரிய தொல்லையாகிப்போனது. அவரது வேலையையும் அது பாதிக்கத் தொடங்கியது. தினமும் அரும்பொருள்களை வெளியே எடுத்துவருவதைக் காணப் பெருங்கூட்டம் கூடத் தொடங்கியது. ஆர்வ மிகுதியால்தான் அவர்கள் கூடுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வமே அரும்பொருளுக்கு எமனாகிவிட்டால்? கட்டுக்கடங்காத கூட்டம் அரும்பொருளைத் தொட்டுப் பார்க்கிறேன் என்று கிளம்பினால் என்னவாகும்?

இதில் இன்னோர் ஆபத்தும் இருந்தது. ஊடகங்கள் இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி ஆகா ஓஹோ என்று விதந்தோதியது அனைத்துலகக் கள்வர்களை கல்லறை வாசலில் கொண்டுவந்து நிறுத்திவிடுமோ என்றுவேறு பயந்துபோனார் கார்ட்டர். கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே சுற்று வட்டாரத்தில் அதுதான் பேச்சு. ‘டன் கணக்கில் உள்ளே தங்கம் இருக்கிறதாம்’ என்று ஆளாளுக்கு அள்ளிவிட்டார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது. கல்லறைபற்றி கதை கதையாகப் பேசித் தீர்த்தனர் சுற்றுவட்டார மக்கள்.

தலைமுறை தலைமுறையாக மன்னர்களின் பள்ளத்தாக்கில் இருந்த கல்லறைகளில் புதையல் தேடும் பழக்கம் அந்த வட்டாரத்தில் உருவாகி இருந்தது கார்ட்டருக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் கைகள் அரிக்கத் தொடங்கியிருக்கும் என்று ஊகித்தார் கார்ட்டர். தொடக்கத்தில் இருந்தே இந்தத் திருட்டு பயம் கார்ட்டரையும் கார்னர்வானையும் அச்சுறுத்தி வந்தது. 3300 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட பொக்கிஷங்களைக் கணநேர அலட்சியத்தால் இழந்துவிடக் கூடாது என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர். கல்லறையின் நுழைவாயிலில் கனமான மரக் கதவு ஒன்றைப் போட்டனர் இருவரும். ஆனால் அதுமட்டும் போதாது என்று தோன்றியது கார்ட்டருக்கு.

தலைநகர் கைரோவுக்குப் போன கார்ட்டர் ஒரு பெரிய இரும்புக் கதவைச் செய்யச் சொன்னார். அவரும் கார்னர்வானும் கைரோவுக்குப் போகுமுன் ஊழியர்களிடம் கல்லறையை எப்படிப் பாதுகாக்கவேண்டும் என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக்கொடுத்தனர். மரக் கதவை அடைத்தாற்போல் மரத் துண்டுகளை அடுக்கித் தடுப்புப் போட்டனர் ஊழியர்கள். படிக்கட்டுப் பகுதியை மீண்டும் கல்லும் மண்ணும் கொண்டு மூடிவைத்தனர். உண்மையில் அப்போது மட்டுமல்ல, கல்லறைப் பொருள்களை வெளியே எடுக்கும் பணி நடக்கும் ஒவ்வொரு பருவத்தின்போதும் அந்தப் படிக்கட்டுப் பகுதி மண்ணால் மூடப்பட்டுக் காவலிடப்பட்டது.

டுடன்காமுன் கல்லறையை முழுமையாகக் காலி செய்ய மொத்தம் 10 ஆண்டுகள் ஆயின என்பதை நினைவில் கொள்க! டிசம்பர் 17ஆம் தேதி உறுதியான இரும்புக் கதவு போடப்பட்டது. ஒன்றுக்கு நாலு பூட்டுகளைப் போட்டார் கார்ட்டர். அவற்றின் சாவியை ஒவ்வொரு தனித்தனிக் குழுவிடம் கொடுத்துவைத்தார். சுழற்சி முறையில் கல்லறைக்குக் காவல் போடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தவிர தமது முழு நம்பிக்கைக்கு உரிய ஊழியர்களைக் கொண்ட ஒரு குழுவையும் காவல் பணியில் ஈடுபடுத்தினார் கார்ட்டர்.

ஆயிரக்கணக்கான அரும்பொருள்கள் தம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளன என்ற எண்ணமே கார்ட்டரைத் தூங்கவிடாமல் செய்தது. வேறு எவரையும்விட அவருக்குத்தான் அந்தப் பொருள்களின் அருமை மிக நன்றாகத் தெரியும். டுடன்காமுன் கல்லறையில் இருந்து எடுக்கும் முக்கியப் பொருள்களை சேகரித்துச் சீரமைக்கும் மாமன்னர் இரண்டாம் செட்டியின் (Seti II) கல்லறைக்கும் தரமான இரும்புக் கதவு போடப்பட்டது. அதற்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டிருந்தார் கார்ட்டர். நல்லவேளையாக கார்ட்டர் அஞ்சியதுபோலத் திருட்டு ஏதும் நடக்கவில்லை. அதுவரை நிம்மதி.

திருட்டு தவிர திடீர் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தாலும் எந்தப் பிரச்சினையும் நேராதது நல்லூழ்தான் என்கிறார் கார்ட்டர். முன்னறையைக் காலி செய்துகொண்டிருந்த வேளையில் இரண்டு மூன்று நாள்களுக்கு வானம் கறுத்துப் பெருமழை பெய்யும் சூழல் உருவானது. அப்போது கனத்தமழை பெய்து திடீர் வெள்ளம் உருவாகியிருந்தால் எந்த சக்தியாலும் கல்லறைக்குள் வெள்ளம் புகுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கமுடியாது. லக்ஸோர் வட்டாரத்தில் வேறெங்கோ பெருமழை பெய்தபோதும், மன்னர்களின் பள்ளத்தாக்கில் சிறு தூறலோடு அந்த ஆபத்து அகன்றது.

கார்ட்டர் தமது வாழ்க்கையில் லக்ஸோர் பகுதியில்மட்டும் 35 ஆண்டுகளுக்கு மேல் செலவிட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் நாலே நாலுமுறைதான் கனத்தமழை பெய்தது என்று குறித்துவைத்துள்ளார் அவர். 1898ஆம் ஆண்டின் வசந்தகாலம், 1900ஆம் ஆண்டின் பின்பகுதி இலையுதிர்காலம், 1916ஆம் ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்கள். மற்ற ஆண்டுகளில், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மழை பெய்ததில்லை.

கல்லறைப் பொருள்களை அகற்றும் அதேநேரத்தில் விருந்தினர்களை உபசரிப்பதிலேயே கார்ட்டருக்குக் கணிசமான நேரம் செலவானது. முதல் பருவத்தில் மட்டும் பார்வையாளர்களுக்கு கல்லறையைச் சுற்றிக் காட்டுவதிலேயே கால்வாசி நேரம் போனது அவருக்கு. ஒவ்வொருமுறை ஒரு முக்கிய விருந்தினர் வரும்போதும் வேலை நிறுத்தப்படும். 

75-நாள் இடைவெளியில் 12-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கல்லறையைப் பார்வையிடச் சென்றனர். அதாவது வாரத்தில் ஆறு நாள்கள் வேலை நடக்கும் பத்து மணி நேரத்தில், சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 20 பேர். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும்போது ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் வந்து உங்கள் மேசையைச் சுற்றி நின்றுகொண்டு என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டுத் தொந்தரவு செய்தால் உங்களால் வேலையில் கவனம் செலுத்தமுடியுமா? அதுகூடப் பரவாயில்லை. 

தங்களையும் அறியாமல் பார்வையாளர்கள் சில அரும்பொருள்களைச் சேதப்படுத்திச் சென்றனர். மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தார் கார்ட்டர். முக்கிய விருந்தினர்கள்தான் என்றில்லை கார்ட்டரின் நண்பர்களேகூடக் கல்லறையை அணுஅணுவாகப் பார்த்து ரசிக்க கார்ட்டரை நச்சரித்தனர். எகிப்துக்குச் சென்று கல்லறையைச் சுற்றிக் காண்பிப்பதாக அமெரிக்காவிலுள்ள ஒரு பயண நிறுவனம் உள்நாட்டில் விளம்பரமே செய்ததாம். கல்லறைக்கு வர விரும்பியவர்களில் பெரும்பாலோர் அதை ஒரு கௌரவச் சுற்றுலாவாகக் கருதினார்களே தவிர, தொல்லியல் கண்டுபிடிப்பு மீது உண்மையான அக்கறை ஏதும் அவர்களுக்கு இருக்கவில்லை. குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் அதுபற்றிப் பெருமை பேசுவதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்கிறார் கார்ட்டர்.

கல்லறைக்கு வெளியே படிக்கட்டுகள் மேல் கட்டப்பட்ட ஒரு சுவரைச் சுற்றித் தினமும் பெருங்கூட்டம் கூடியதில் அது என்று இடிந்துவிழுமோ என்று கவலைப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. உலகெங்கும் இருந்து கார்ட்டருக்கு வாழ்த்துத் தந்தியும் கடிதங்களும் வந்து குவியத் தொடங்கின. அவர்களில் சிலர் கல்லறை நினைவாக ஏதாவது ஒரு சிறிய பொருளைப் பரிசாகத் தங்களுக்கு அனுப்பமுடியுமா என்று கேட்டிருந்தனர். கல்லறையில் இருந்து ஒரு பிடி மண்கூட தங்களுக்குப் போதும் என்று சிலர் கார்ட்டருக்குக் கனிவோடு கடிதம் எழுதினர்.

இன்னும் சிலரோ கார்ட்டரோடு திடீரென உறவு பாராட்டத் தொடங்கினர். முன்பின் தெரியாதவர்களெல்லாம் நான்தான் உங்கள் தாயாரின் ஒன்றுவிட்ட சித்தியின் ஓர்ப்படி மகனுக்குப் பெண்கொடுத்த அத்தை என்று கிளம்பிவந்தனர். இப்படி நாளொன்றுக்கு பத்துப் பதினைந்து கடிதங்கள் வந்தனவாம் கார்ட்டருக்கு. வேறு சிலர் “திறக்கக்கூடாத கல்லறையைத் திறந்துவிட்டீர்கள், அதனால் டுடன்காமுனின் சாபம் உங்களைப் பிடித்து ஆட்டப்போகிறது” என்று அச்சுறுத்தியிருந்தார்கள். அதிலிருந்து தப்புவது எப்படி என்ற பரிகாரத்தையும் அவர்களே குறிப்பிட்டிருந்தார்களாம். 

இன்று என்ன கண்டுபிடித்தீர்கள்? அதன் மதிப்பு என்ன? அதை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள்வேறு கார்ட்டரை விடாமல் துரத்தினர். அவர்களில் சிலரின் நடத்தை எல்லைமீறிப் போகவே நிதானமிழந்தார் கார்ட்டர். ஏற்கெனவே அவர் ஒரு முன்கோபி. தன்மானமும் நெஞ்சுரமும் மிக்க மனிதர். அதை எடுத்துக்காட்டும் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம். 1903ஆம் ஆண்டில், கீழ் மத்திய எகிப்தின் தொல்பொருள்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் கார்ட்டர். அங்கிருந்து அவர் இன்னும் பல உயர் பதவிகளை எட்டுவார் என்றே எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.

அரபு மொழி பேசத் தெரிந்தவர். எகிப்திய ஊழியர்களை எப்படிக் கையாளுவது என்னும் நுட்பம் புரிந்தவர். முறையாகப் பயிற்சிபெற்ற தொல்பொருள் ஆய்வாளர். அமர்னா நகரத் தொல்லியல் தலங்களிலும் மன்னர்களின் பள்ளத்தாக்கிலும் உள்ள ஒவ்வோர் அடி மண்ணும் அவருக்கு அத்துப்படி. கார்ட்டர் அளவுக்கு அப்போது தொல்பொருள் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் உலக அளவிலேயே குறைவுதான் என்கிறார், கார்ட்டருடைய முதல் புத்தகத்தின் நான்காவது பதிப்புக்கு 1977இல் முன்னுரை எழுதிய எழுத்தாளர் ஜான் மேன்சிப் ஒயிட் (Jon Manchip White).

ஆனால் தமது முன்கோபத்தாலும் எவரிடத்திலும் அடிபணியாத தன்மானமிக்க இயல்பாலும் எகிப்திய அரசாங்கத்தின் மதிப்புமிக்க பதவியை இழந்தார் கார்ட்டர். படிக்கட்டு பிரமிட் அமைந்துள்ள ஸக்காரா வட்டாரத்தில் புனிதக் காளைகளை (Apis Bull) மம்மியாக்கம் செய்து அடக்கம் செய்துள்ள பிரமாண்டமான செராப்பியம் (Serapeum) என்னும் இடத்துக்கு கார்ட்டர் பொறுப்பு வகித்தபோது நடந்தது அது.

பார்வை நேரம் தாண்டிவந்த பிரெஞ்சுப் பயணிகள் சிலர் செராப்பியத்துக்கு உள்ளே போகவேண்டுமென அங்கிருந்த காவலர்களோடு சண்டைபோட்டனர். மது அருந்தியிருந்த பயணிகளில் ஒருவர் காவலரைத் தாக்கிவிட்டார். தகவல் கிடைத்து ஓடிவந்த கார்ட்டர் தற்காப்புக்காகப் பயணிகளைத் தாக்குமாறு எஞ்சியிருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில் பிரெஞ்சுப் பயணிகளுக்குப் படுகாயம். உடனே அவர்கள் எகிப்தின் உயர் அதிகாரிகளிடம் முறையாகப் புகார் செய்தனர்.

தொல்லியல் தலங்களுக்கான அப்போதைய தலைமைக் கண்காணிப்பாளர் கேஸ்டன் மாஸ்பெரோ பிரபு இதைக் கேள்விப்பட்டு கார்ட்டரை ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதித் தருமாறு கேட்டார். கார்ட்டர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பிரச்சினை பிரிட்டிஷ் அரசதந்திரியும் தூதருமான குரோமர் பிரபுவிடம் எடுத்துச்செல்லப்பட்டது. பிரிட்டனின் காலனி நாடான எகிப்தின் சர்வவல்லமை மிக்க நிர்வாகி அவர். மன்னிப்புக் கேட்குமாறு அவரும் கார்ட்டருக்கு உத்தரவிட்டார். மீண்டும் மறுத்துவிட்டார் கார்ட்டர். தனது காவலர்கள் மீது கைவைத்த பிரெஞ்சுப் பயணிகளைக் காவலர்கள் திருப்பித் தாக்கியதில் எந்தத் தவறும் இல்லை என்னும் நிலைப்பாட்டில் இறங்கிவர மறுத்துவிட்டார் அவர்.

நேரடியாக இல்லாவிட்டாலும்கூடப் பரவாயில்லை, மன்னிப்பு என்ற பொருள் தொனிக்கும் கடிதமாக இருந்தால்போதும் என்றுகூட மாஸ்பெரோ பிரபு மன்றாடிப் பார்த்தார். மசியவில்லை கார்ட்டர். கடுப்பான மேலிடம் கார்ட்டருக்குக் கல்தா கொடுத்துவிட்டது. துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு லக்ஸோரில் இருந்து கைரோவுக்குக் கிளம்பிப் போய்விட்டார் கார்ட்டர். 1907ஆம் ஆண்டு கார்னர்வான் பிரபுவைச் சந்திக்கும்வரை, நான்கு ஆண்டுகள் கைரோவில் ஓவியம் வரைந்துதான் வாழ்க்கையை ஓட்டினார் கார்ட்டர்.

அப்படிப்பட்ட மனிதரை அன்றாடம் பத்திரிகையாளர்கள் மொய்த்தால் அவரும் எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொள்வார்? பொறுமை பறிபோனதில் ஒரு நிருபரை அடிக்கும்வரை போய்விட்டார் கார்ட்டர். இதற்குமேல் சரிப்படாது என்று எண்ணி லண்டனைச் சேர்ந்த Times நாளேட்டை அதிகாரபூர்வமாக டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்புச் செய்திகளை வெளியிடும் நாளேடாக நியமித்தார் கார்னர்வான் பிரபு. மற்றவற்றை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் அல்லவா?

கல்லறைபற்றிய செய்திகளை அந்த நாளிதழ் மட்டுமே வெளியிடும். அதற்கு ஈடாக அகழ்வுப் பணிக்காகச் செலவிட்ட பணத்தில் ஒரு பகுதியை அந்த நாளேடு தரும். 5000 பவுண்ட் மதிப்புள்ள உடன்பாடு அது. தனியுரிமை பெற்றுவிட்டதால் சட்டப் பிரச்சினைகளுக்கு அஞ்சி இயல்பாகவே மற்ற செய்தி நிறுவனங்கள் கார்ட்டரைத் தொந்தரவு செய்யமாட்டார்கள் அல்லவா? எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் நினைத்து இவ்வளவும் செய்தார் கார்னர்வான். ஆனால் பிரச்சினை வேறுவிதத்தில் வெடித்தது. கார்ட்டர் கார்னர்வான் கூட்டணியின் இந்தச் செயல் உலகச் செய்தி நிறுவனங்களுக்குச் சினமூட்டியது. குறிப்பாக எகிப்தியச் செய்தியாளர்கள் கொதித்துப் போயினர்.

டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்பு என்பது மிகுந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எகிப்தியர்களுக்கு. அதுபற்றிச் சொந்த நாட்டுப் பத்திரிகைகள் எழுதவே கூடாது என்றால் விட்டுவிடுவோமா என்று படை திரட்டத் தொடங்கினர் உள்நாட்டுச் செய்தியாளர்கள். “கொஞ்சம்கூட இது நியாயமாகப் படவில்லையே!” என்று கார்ட்டரைப் பழிவாங்க மனத்துக்குள் கறுவிக்கொண்டனர். நீங்கள் அதிகாரத்துவச் செய்திகளைத்தானே தரமாட்டீர்கள்? அதனாலென்ன? நாங்களே செய்திகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்று ஆரம்பித்துவிட்டனர். பக்கம் பக்கமாக வதந்திகளை உருவாக்கிப் பரப்பத் தொடங்கினர்.

அவற்றுள் முக்கியமானது, மூன்று பெரிய விமானங்கள் மன்னர்களின் பள்ளத்தாக்கில் வந்து இறங்கி எல்லாச் செல்வங்களையும் அள்ளிக்கொண்டு வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டன என்பதுதான். “பெரிய விமானம் பள்ளத்தாக்கில் எப்படித் தரையிறங்கும்?” என்றெல்லாம் அன்று மக்கள் குறுக்குவிசாரணை செய்யவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மிதிவண்டியைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றுகூறி ஒரு கோயான் அனுப்பிய நகரத்தார் புதுப்பித்த கோயில் தூண் புடைப்புச் சிற்பத்தின் படத்தை உண்மை என நம்பி, பேராசிரியர்களும் பெரும்புலவர்களும்கூட வாட்சப்பில் பகிர்ந்து புளகாங்கிதம் அடையவில்லையா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு புடைப்புச் சிற்பம் இவ்வளவு அவலட்சணமாகவா இருக்கமுடியும் என்றுகூட யாரும் யோசிக்கவில்லை. அன்றும் அதுபோலத்தான் நடந்தது. கல்லறையில் பணிபுரியும் ஊழியர்களே சில நேரங்களில் பாதுகாப்புக் கருதி வேண்டுமென்றே தப்புத் தப்பான தகவல்களைக் கசியவிடுவதுண்டாம். அதை ஊதிப் பெரிதாக்கின பத்திரிகைகள். 

தொல்லைதரும் புகைப்படக்காரர்கள் பலர் எந்நேரமும் கல்லறைப் பகுதியில் தென்படத் தொடங்கினர். எங்கிருந்தோ திடீரென முளைத்து படங்களைச் சுட்டுத் தள்ளினர். இது எல்லாம் சேர்ந்து கார்ட்டருக்கு மன உளைச்சலை அதிகரித்தது. எல்லார் மீதும் எரிந்து எரிந்து விழத் தொடங்கினார் கார்ட்டர். கார்னர்வான் உள்பட... பல்லாண்டுகளாக நட்பில் இருந்த கார்ட்டரும் கார்னர்வானுமே சண்டை போட்டுக்கொள்ளத் தொடங்கினர். மிக முக்கியமான முடிவுகளை எடுக்கவேண்டிய நேரத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.

கல்லறைப் பொக்கிஷங்களை பங்கு பிரிப்பதில் இருவருக்கும் சண்டை என்றே நிபுணர்கள் பலரும் நம்பினர். கார்னர்வான் பிரபு அடிப்படையில் ஓர் அரும்பொருள் சேகரிப்பாளர். ஆனால் கார்ட்டரோ அடிப்படையில் ஒரு தொல்லியல் ஆய்வாளர். காசுகொடுத்த தமக்கு கல்லறைப் பொக்கிஷங்களில் கணிசமானவற்றை உடைமையாக்கிக் கொள்ளும் உரிமை இருப்பதாகவே கார்னர்வான் நம்பினார். ஆனால் கார்ட்டருக்கு அதில் உடன்பாடில்லை. காரசாரமாக வாதாடி மறுத்தார்.

டுடன்காமுன் கல்லறைப் பொக்கிஷங்களில் ஒரு பகுதியை 1926ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலுள்ள மெட்ரோபாலிட்டன் கலை அரும்பொருளகத்துக்கு, 145-ஆயிரம் டாலருக்கு கார்னர்வான் பிரபுவின் மகன் விற்பனை செய்ததாகக் குறிப்பிடுகிறது The New York Times நாளேடு. கலைப்பொருள் ஆர்வலர்கள் சிலருக்கும் அவர் டுடன்காமுன் கல்லறைப் பொருள்களை விற்பனை செய்திருப்பதாக நாளேடு கூறுகிறது. பின்னாளில் கார்னர்வான் பிரபுவின் சேகரிப்பில் எஞ்சிய எகிப்திய அரும்பொருள்கள் அனைத்தையுமே அவரது மனைவி அதே அரும்பொருளகத்துக்கு நன்கொடையாக வழங்கிவிட்டார். இப்போது கார்னர்வான் பிரபு மாளிகையில் எகிப்தை நினைவுபடுத்தும் அரும்பொருள் ஒன்றுகூட இல்லையாம்!

கார்னர்வான் அரும்பொருள்கள் சிலவற்றைத் தமக்கென எடுத்துக்கொண்டது கார்ட்டருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஒருகட்டத்தில் கார்னர்வானைத் தம்முடைய வீட்டுக்குள்கூட அனுமதிக்க மறுத்துத் தடை செய்தாராம் கார்ட்டர். அந்த வீட்டைக் கட்டப் பணம் கொடுத்ததே கார்னர்வான்தான் என்பதைக் கருத்தில் கொண்டால் நிலைமையின் கனம் புரியும். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான செல்வத்தைக் கூறுபோடக்கூடாது என்பது கார்ட்டரின் வாதம். அவை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டுமேதவிர ஒரு தனிமனிதரின் உடைமைப் பொருளாக ஒரு மாளிகைக்குள் முடங்கிப்போய்விடக் கூடாது என்று கார்ட்டர் கருதியிருக்கலாம். கல்லறை திறக்கப்பட்ட நேரத்தில் சில பொருள்களைக் கார்னர்வான் எடுத்துக்கொண்டதை கார்ட்டரின் நண்பர் ஹசன் உறுதி செய்திருக்கிறார். ஆனால் கார்ட்டர் ஒரு துரும்பைக்கூடத் தனக்கென எடுத்துக்கொள்ளவில்லையாம்.

கார்ட்டரும் கார்னர்வானும் இணைந்து 1923ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி மம்மி அறையைத் திறந்தனர், சுமார் 20 பேர் முன்னிலையில். நல்லவேளையாக மம்மி வைக்கப்பட்டிருந்த அந்த அறை கள்வர்களால் சேதப்படுத்தப்படாமல் அப்படியே இருந்தது. அதுபற்றி இந்த அத்தியாயத்தின் பிற்பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.

மம்மி அறை இருந்த நிலை, கார்ட்டர் வரைந்த பென்சில் ஓவியம்

இந்தக் கட்டத்தில் எல்லாருமே களைப்படைந்திருந்தனர். அனைவருக்குமே ஓர் இடைவெளி தேவைப்பட்டது. பிப்ரவரி 26ஆம் தேதி கார்ட்டர் குழு கல்லறையையும் தற்காலிக ஆய்வகத்தையும் மூடியது. இந்தச் சமயத்தில் சுமார் ஆறு பெட்டிகள் அளவுள்ள அரும்பொருள்கள் கைரோ அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டன. லக்ஸோரில் இருந்து நீராவிப் படகுகளில் ஏழு நாள் பயணம் செய்து அவை கைரோவுக்கு பத்திரமாகச் சென்று சேர்ந்திருந்தன.

கல்லறையும் ஆய்வகமும் மூடப்பட்டதும் கார்ட்டர் லக்ஸோரில் உள்ள தமது இல்லத்துக்குத் திரும்ப, கார்னர்வான் பிரபு எகிப்துக்கு உள்ளேயே பயணம் கிளம்பினார். அந்தப் பயணத்தின்போது மார்ச் மாதத்தில் ஒருநாள் முகத்தில் கொசுக்கடிக்கு ஆளானார் கார்னர்வான் பிரபு. சவரம் செய்யும்போது கொசு கடித்ததால் தடிப்பு உண்டான இடத்தில் சவரக்கத்தி பட்டு லேசான ரத்தக் காயத்துக்கு ஆளானார் அவர். காயம்பட்டவுடன் அதில் தொற்று உருவாகாமல் இருக்க அயோடின் ரசாயனத் திரவத்தைத் தடவியிருக்கவேண்டும். அல்லது சில நாள்களுக்குச் சவரம் செய்வதை கார்னர்வான் தவிர்த்திருக்கவேண்டும். அந்த இரண்டையும் அவர் செய்யத் தவறினார். ஆகவே சவரக்கத்தி வெட்டிய இடத்தில் தொற்று உருவாகிக் குருதியில் நஞ்சு கலக்கத் தொடங்கியது.

அப்போது அவர் எகிப்தின் தென் பகுதியில் இருந்தார். தலைநகர் கைரோவுக்குச் சென்றால் அங்கே அவருக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்புக் கிடைக்கும் என்று நம்பினர் கார்னர்வானின் குடும்பத்தார். கைரோவுக்குத் திரும்பித் தொற்றுக்கு சிகிச்சை மேற்கொண்டநிலையில், மார்ச் மாதக் கடைசியில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் கண்டது. உடனடியாக தமது மகனைக் காண விரும்பினார் அவர். அவரது மகன் போர்செஸ்டர் பிரபு (Lord Porchester), அப்போது இந்தியாவில் இராணுவச்சேவை ஆற்றிக் கொண்டிருந்தார். உடனடியாக எகிப்து திரும்புமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்தே, கார்னர்வான் பிரபு தொடர்பான எல்லாச் செய்திகளுமே பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துவந்தன. அவர் கடுமையாக உடல்நலம் குன்றிய செய்தி வேகமாகப் பரவியது. போர்செஸ்டர் இந்தியாவிலிருந்து எகிப்துக்கு விரைவில் திரும்ப எல்லா முயற்சிகளையும் எடுத்தார். அடித்துப் பிடித்து கைரோவிலுள்ள கான்டினன்ட்டல் ஹோட்டலுக்கு அவர் வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் கார்னர்வானின் உயிர் பிரிந்தது. ஆனால், மகன் வந்துவிட்டதை அறியாமலேயே!

1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அதிகாலை மணி 1.55க்கு, டுடன்காமுன் மம்மியையோ கல்லறைப் பெட்டியையோ தங்கத்தால் ஆன முகக்கவசத்தையோ காணாமலேயே காலமானார் கார்னர்வான் பிரபு. அவரது நல்லுடல் ஏப்ரல் 14ஆம் தேதி கைரோவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது விருப்பப்படியே அவருடைய மாளிகைக்கு எதிரிலுள்ள குன்றில் புதைக்கப்பட்டது. கலங்கிப் போனார் கார்ட்டர்! தமக்கு நிதியாதரவு தந்த செல்வந்தர் மறைந்துவிட்டாரே என்ற கவலையைக் காட்டிலும், சக பயணியாக இவ்வளவு தூரம் தம்மோடு வந்தவர், டுடன்காமுனின் செல்வங்களை முழுமையாகப் பார்க்காமல் போய்விட்டாரே என்ற ஆற்றாமைதான் கார்ட்டரை அதிகம் வருத்தியது. “டுடன்காமுன் திருவதனம் காணாதே போதியோ கார்னர்வானே!” என்று அரற்றியிருக்கவேண்டும் நமது கார்ட்டர்.

இதற்கிடையே டுடன்காமுன் கல்லறையைத் திறந்ததால்தான் கார்னர்வான் மாண்டார் என்ற வதந்தி உலகெங்கும் பரவத் தொடங்கியது. எகிப்திய மாமன்னர்களின் கல்லறையைத் திறப்போர் அனைவருமே அந்தந்த மன்னர்களின் சாபத்துக்கு ஆளாவர் என்பது பலரின் நம்பிக்கை. இன்றும்கூட, தொல்பொருள் ஆய்வுக்காகப் புதைகுழிகளையும் கல்லறைகளையும் தோண்டுவதை ஒரு பிரிவினர் எதிர்த்து வருகின்றனர். “உங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறை தோண்டப்பட்டு, அவர்களின் சடலம் உலகத் தொலைக்காட்சிகளில் காட்சிக்கு வைக்கப்படுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்கின்றனர் இந்தப் பிரிவினர். “மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்ட ஆத்மாக்களை வரலாற்றுத் தேடல் என்ற பெயரில் ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று சினமடைகின்றனர் இவர்கள்.

கார்னர்வான் பிரபு மாண்டுபோவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர் மெரி கெரெல்லி, முத்திரையிடப்பட்ட எகிப்தியக் கல்லறையைத் திறக்கும் எவருக்கும் தண்டனை கிடைத்தே தீருமென்று முன்னுரைத்திருந்தார். அதற்குத் தோதாக கார்னர்வான் மாண்டுபோனதும் பலரும் அதை நம்பத் தொடங்கினர். டுடன்காமுனின் கல்லறையைத் தோண்டி எடுத்ததால் அந்த மன்னரின் சாபம் அவரது உயிரைப் பறித்துவிட்டது என்று பேசத் தொடங்கினர் மக்கள். ஏதாவது வேண்டத்தகாத சம்பவம் நடக்கும்போதெல்லாம் அதற்கும் அப்போது திறக்கப்பட்ட கல்லறைக்கும் தொடர்பு இருப்பதாக நம்பத் தொடங்கினர் மக்கள். கல்லறை திறக்கப்பட்ட நாளன்று கார்னர்வான் ஆசையாக வளர்த்துவந்த பாடும் சிட்டு ஒன்றை நாகப்பாம்பு விழுங்கியது.

கார்னர்வான் எகிப்தில் மாண்ட சற்று நேரத்தில், லண்டனில் அவருடைய மாளிகையில் வளர்த்துவந்த நாய் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்குக் கதறி ஊளையிட்டு மாண்டுபோனது. அது போர்செஸ்டர் பிரபுவின் செல்லநாய். அவர் இந்தியாவுக்குச் செல்ல நேரிட்டதால் தமது தந்தையின் பராமரிப்பில் அதை விட்டுச் சென்றிருந்தார். தமது புதிய முதலாளியின் மறைவை எப்படியோ உணர்ந்துகொண்டு உயிரைவிட்டது அது.

கார்னர்வான் மாண்டுபோன நிமிடத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் மட்டுமின்றி கைரோ நகர் முழுவதுமே மின்சார விநியோகம் தடைபட்டது. இவை எல்லாம் டுடன்காமுன் மம்மி இட்ட சாபம் என்றே கிசுகிசுத்தனர் மக்கள். இன்றளவும் இது ஒரு பரபரப்பான விவாதப்பொருள்தான். எகிப்திய மாமன்னரின் சாபம் என்ற தலைப்பில் ஏராளமான புத்தகங்களும் ஆவணப் படங்களும் கிடைக்கின்றன.

ஆனால் அறிவியலாளர்கள் இதை அங்கீகரிப்பதில்லை. அக்கால எகிப்தில் தொற்று என்பது அரிதான ஒன்றல்ல. 100 ஆண்டுகளுக்கு முன் மருத்துவம் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கவில்லை. நாகப்பாம்பு பறவைகளை விழுங்குவதும் எகிப்தில் பெரிய அதிசயமில்லை. எல்லாமே தற்செயல்தான் என்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். ஆனால் கைரோவில் மின்சாரம் தடைபட்டு நகரம் இருளில் மூழ்கியதற்கு மட்டும் இன்றளவும் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. எகிப்துக்கான பிரிட்டிஷ் தூதராக அப்போது பதவிவகித்த ஃபீல்ட் மார்ஷல் ஆலன்பி பிரபு, மின்சேவைக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் பொறியாளரை அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டபோதும் திருப்திகரமான தொழில்நுட்ப விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.

மின் விநியோகம் நிலையற்ற ஓர் ஆப்பிரிக்க நாட்டில் அது தடைபட்டதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்பதே பகுத்தறிவாளர்களின் நிலைப்பாடு. ஆனால், வெறும் வாயை மென்றுகொண்டிருந்த பத்திரிகைகளுக்கு இது அவலை அள்ளிப்போட்ட கதையாகிவிட்டது. பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின அவை. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாகத் தமது காரியத்தில் இறங்கிவிட்டார் கார்ட்டர்.

அவருக்கும் ஒன்றுக்குப் பின்னால் ஒன்று என ஏராளமான பிரச்சினைகள் முளைத்தன. முதல் பருவத்தைக் காட்டிலும் இரண்டாம் பருவத்தில் இன்னும் ஏராளமான சிக்கல்கள். கார்னர்வான் பிரபு காலமானதும் அவரது மனைவி அல்மினா கார்னர்வான் சீமாட்டி மன்னர்களின் பள்ளத்தாக்கில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான உரிமத்தைத் தமது பெயரில் புதுப்பித்தார். அத்துடன், தமது கணவர் Times நாளேட்டுடன் செய்துகொண்டிருந்த கல்லறைச் செய்தி வெளியிடும் ஏகபோக உரிமையையும் சேர்த்துப் புதுப்பித்தார்.

கார்ட்டர் நல்ல தொல்பொருள் ஆய்வாளரே தவிர கார்னர்வான் அளவுக்கு அரசியல் நெளிவு சுளிவுகள் தெரிந்தவர் அல்லர். லண்டன் மகாப் பிரபு இருந்தவரை சில அரசியல் சிக்கல்களை அவர் கவனமாகக் கையாண்டு பிரச்சினை நேராமல் பார்த்துக் கொண்டார். ஆனால் முசுட்டுக் குணம் கொண்ட கார்ட்டரால் அவ்வளவு சுமுகமாக நடந்துகொள்ள முடியாமற்போனது. அறிவாளிகளுக்கே உரிய சிக்கல்!

எல்லா சிக்கல்களுக்கும் மூலகாரணம் இந்தப் பத்திரிகை உரிமைதான். எகிப்திய அரசாங்கத்துக்குச் சூடேற்றி அதெப்படி ஓர் ஆங்கிலேயர் அவர் நாட்டுப் பத்திரிகைக்கு மட்டும் செய்தி தரலாம்? எகிப்திய நாளேடுகள் அவ்வளவு தாழ்ந்து போய்விட்டோமா? என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் எவ்விக் குதித்தனர் உள்ளூர்ச் செய்தியாளர்கள். அரும்பொருள் துறைக்கு கார்ட்டரிடம் கடுமை காட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு முழுமையான சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கவேண்டுமென்ற ஆசை எகிப்தில் உருப்பெற்று வந்த காலம் அது. மம்மி அறை திருடர்களால் சேதப்படுத்தப்படாமல் முழுமையாக இருந்தால் அங்கு கிடைக்கும் அரும்பொருள்கள் முற்றாக எகிப்திய அரசாங்கத்துக்கே சொந்தம் என்னும் சட்டப் பிரிவைக் காட்டி, மேற்கொண்டு பணிகளைச் செய்யவிடாமல் கார்ட்டரைத் தடுத்து நிறுத்த முயன்றது அரும்பொருள் சேவைப்பிரிவு. நன்மை செய்வது என்ன அவ்வளவு எளிதா?

மம்மி அறையைத் திறந்து உள்ளே இருந்த கல்பெட்டியை (Sarcophagus) கார்ட்டர் கண்டுபிடித்த நேரம் இந்தக் கூத்தெல்லாம் அரங்கேறியது. 1924ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி, கல்பெட்டியைத் திறந்து அதன் மூடியைச் சகடையில் ஏற்றி அந்தரத்தில் தொங்கவிட்டிருந்தார் கார்ட்டர். மூடி மட்டுமே, கிட்டத்தட்ட ஒன்றே கால் டன் எடையுள்ளது. மறுநாள், பத்திரிகையாளர்களுக்குக் கல்லறையைச் சுற்றிக்காட்ட ஏற்பாடு செய்திருந்தார் கார்ட்டர். கூடவே தொல்பொருள் ஆய்வாளர்களின் மனைவியர் உள்ளிட்ட குடும்பத்தாரும் கல்லறையைச் சுற்றிப்பார்க்கத் தனி ஏற்பாடு செய்திருந்தார் அவர். இதை மோப்பம் பிடித்துவிட்ட பத்திரிகையாளர்கள் எகிப்திய அரசாங்கத்துக்குத் தூபம் போட்டனர். அன்று இரவே கார்ட்டருக்கு எகிப்தின் அரும்பொருள் சேவைப் பிரிவிலிருந்து ஒரு தந்தி வந்தது.

பத்திரிகையாளர்களுக்கான சுற்றுலாவுக்கு மட்டும்தான் அனுமதி. தனிப்பட்ட குடும்பங்களுக்கு அனுமதி இல்லை என்றிருந்தது அதில். கார்ட்டரும் குழுவினரும் கடும் கோபமடைந்தனர். “சகிக்க முடியாத நிபந்தனை விதிக்கிறார்கள், கொஞ்சம்கூட நாகரிகம் தெரியவில்லை” என்று அறிக்கை வெளியிட்டார் கார்ட்டர். கல்லறையை மூடுவதாகவும் இனிமேல் எந்த வேலையும் நடக்காது என்றும் அறிவித்தார் கார்ட்டர். கல்லறையைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போய்விட்டார் அவர். எகிப்து அரசாங்கத்துக்கு இது நல்ல சாக்காகிப் போனது. பூட்டை உடைத்துக் கல்லறையின் பொறுப்பைத் தன்வசம் எடுத்துக்கொண்டது. கார்ட்டருக்கான பணி அனுமதியையும் ரத்து செய்தது.

இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்குக் கிளம்பிப்போனார் கார்ட்டர். அங்கே டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்புப் பற்றி ஊர் ஊராகச் சென்று ஆய்வுரைகள் நிகழ்த்தினார். ஒரு கட்டத்தில் கார்ட்டர் எகிப்துக்குத் திரும்பவே முடியாமற்போகும் நிலைகூட உருவானது. பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் அதில் தலையிட்டு எகிப்தில் இருந்த தேசியவாத அரசைக் கொஞ்சம் தலையில் தட்டிப் பிரச்சினையைத் தீர்த்தது. சில நிபந்தனைகளோடு கார்ட்டர் மீண்டும் கல்லறைப் பணிகளில் ஈடுபட எகிப்து அனுமதியளித்தது. டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருந்த ஏகபோக உரிமையையும் அல்மினா கார்னர்வான் சீமாட்டி கொஞ்சம் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

சரி, மீண்டும் நாம் மம்மி அறை திறக்கப்பட்ட கதைக்கு வருவோம். 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அடுத்த பருவப் பணிகள் தொடங்கின. மம்மி அறையைக் காலி செய்ய முடிவெடுத்து அதற்கான பணிகளைத் தொடங்கினார் கார்ட்டர். பிப்ரவரி மாதம் அந்த அறையை மூடியிருந்த தடுப்புச் சுவரை அங்குலம் அங்குலமாகப் பெயர்த்து எடுத்து ஆவணப்படுத்தி இருந்தார் கார்ட்டர். அடர்த்தியான சாந்துக் கலவையால் பூசப்பட்டிருந்த பகுதியில் தெளிவான முத்திரைகள் இருந்தன. சுவரின் கீழ்ப்பகுதியில், கள்வர்கள் உடைத்துப் புகுந்த சிறிய ஓட்டையும் மறுபடி பூசப்பட்டு முத்திரை இடப்பட்டிருந்தது. கறுப்பு-வெள்ளைப் படத்தில்கூட சாந்து பூசப்பட்ட சிறிய ஓட்டை தெளிவாக வித்தியாசம் தெரிகிறது.

பெரிய தடுப்புச்சுவரின் மேல்பகுதியில் இருக்கக்கூடிய மர உத்தரத்தை அடையாளம் கண்டு மேலிருந்து உடைக்கத் தொடங்கினார் கார்ட்டர். முத்திரை பதிக்கப்பட்ட சாந்துப் படலத்தைக் கூடியமட்டும் சிதைக்காமல் பெயர்த்து எடுத்துவைத்தார் கார்ட்டர். மேலிருந்து சில கற்களை உருவி எடுத்தபோது, உள்ளே தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு சுவர் இருந்ததுபோல் தெரிந்ததாம். மேலும் கற்களை அகற்றியபோது அந்த மர்மம் விலகியது. அது ஒரு பெரிய பெட்டி. இரண்டு மணி நேரமானது தடுப்புச்சுவரை முழுவதுமாக உடைக்க. முன்னறையின் தரைத் தளத்தைக் காட்டிலும் நான்கு அடி பள்ளத்தில் இருந்தது மம்மி அறை. நீல நிறமும் தங்க நிறமும் கலந்த கலவையாக இருந்த பெட்டிக்கும் மம்மி அறைச் சுவருக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கவில்லை. கீழே சின்னச் சின்ன அரும்பொருள்கள் ஏதும் சிதறிக்கிடக்காததால் முன்னறையில் இருந்து குதித்துக் கீழே இறங்கினார் கார்ட்டர்.

மம்மி அறைக்குள் இருந்த முதல் மரப்பெட்டி, கைரோ தேசிய அரும்பொருளகம்

அடி முதல் நுனிவரை தங்க வேலைப்பாடுமிக்க மாபெரும் மரப்பெட்டியைப் பார்த்து அதிசயித்துப்போனார் கார்ட்டர். வலுவான ஓக் மரத்தால் செய்யப்பட்டிருந்தது பெட்டி. இந்தப் பெட்டி சிடார் (Cedar) எனும் தேவதாரு வகை மரத்தால் செய்யப்பட்டதாகவும் சில குறிப்புகள் உள்ளன. ஆனால் இது ஓக் மரம்தான் என்பதை உறுதிப்படுத்திய ஆய்வாளருக்குத் தமது புத்தகத்தில் நன்றி கூறியிருக்கிறார் கார்ட்டர். உண்மையில் அந்தப் பெட்டி புனிதமான பொருள்கள் வைக்கப்படும் ஒரு சிற்றாலயம் (Shrine) என எகிப்தியவியலில் குறிப்பிடப்படுகிறது. 17 அடி நீளம், 11 அடி அகலம், 9 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தது அது. டுடன்காமுனின் மம்மி வைக்கப்பட்டுள்ள கல்பெட்டியை மூடிப் பாதுகாக்கும் வகையில் அந்தப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பெட்டிக்கு அடிப்பகுதி இல்லை. நான்கு சுவர்களும் மேல்மூடியும் மட்டும்தான் இருந்தன. பெட்டியின் பக்கவாட்டுப் பகுதிகளிலும் இரட்டைக் கதவுகளிலும், நிலைத்தன்மையைக் குறிக்கும் டிஜெட் தூண்களும் (Djed Pillars) அங்க் உயிர்க்குறியைப் போன்ற ஐசிஸ் முடிச்சுகளும் (Isis Knot) மாறி மாறிப் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த ஐசிஸ் முடிச்சு, கிட்டத்தட்ட அங்க் உயிர்க்குறியைப் போலவேதான் இருக்கும். ஆனால், கீழே தட்டையான பகுதியோடு அங்ங்கின் நடுத்தண்டைப் பிளந்ததுபோல் கீழ்நோக்கித் தொங்கும் இரண்டு கைகளோடு இருக்கும். டீட் (Tit) என்ற பெயரிலும் இந்தச் சின்னம் அழைக்கப்படுகிறது. டிஜெட் தூண்களோடு தொடர்புடைய சின்னம் இது.

டிஜெட் தூண்களும் ஐசிஸ் முடிச்சுகளும் பொறிக்கப்பட்ட முதல் பெட்டி

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற Gesso எனப்படும் ஒருவகைப் பசையை முதலில் மரப்பெட்டிமீது தடவி, அது காய்ந்தபின், மெலிதான தங்கச் சருகுத் தாளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது பெட்டி. நீல நிறப் பின்னணியில், தங்கத் தகடால் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஓக் மரம் நல்ல நிலையில் இருந்தாலும், மூவாயிரம் ஆண்டுகளாக உள்ளே இருந்த வெப்பம், ஈரப்பதம் காரணமாக அது சற்றே சுருங்கியிருந்தது. மேலே இருந்த தங்க வேலைப்பாடோ, விரிவடைந்து போயிருந்தது. அதனால், தங்கச் சருகுத் தாள் மீது கை வைத்தாலே அது உதிர்ந்துவிடும்போல் இருந்ததாம். உரிய பராமரிப்புக்குப் பின்னரே, அதை ஒவ்வொரு துண்டாக அகற்றமுடிந்தது கார்ட்டர் குழுவினரால்.

நாங்கள் கைரோவிலுள்ள பழைய அரும்பொருளகத்துக்குப் போனபோது, முதல் மாடியில் டுடன்காமுன் அரும்பொருள்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் எங்களை முதலில் வரவேற்றது இந்தப் பேரழகுப் பெட்டிதான். இந்தப் பெட்டிக்கும் மம்மி அறைச் சுவர்களுக்கும் இடையே மிகக் குறுகிய இடைவெளிதான் இருந்தது. அந்த ஒரு சில அடி இடைவெளிப் பகுதியில் தரையில் படகுத் துடுப்புகள் ஏழு சிதறிக் கிடந்தன.

டுடன்காமுன் கல்லறைக்குள் இந்தப் பெட்டியை முழுமையாக எடுத்துவர முடியாது. எனவே அக்கு அக்காகப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்துத்தான் இதை உள்ளே கொண்டுவந்திருக்க முடியும். வெளியே பிரித்து, உள்ளே வந்து எதை எங்கே வைத்துக் கோக்க வேண்டும் என்பதில் குழப்பம் வரக்கூடாது என்பதற்காக, ஆங்காங்கே கறுப்பு மசியால் அடையாளமிட்டுள்ளனர் பண்டைய தச்சர்கள். நமது ஆலயங்களைச் சீரமைக்கும்போது கற்களைத் திசையும் இலக்கமும் இட்டுப் பிரித்துப் பின்னர் ஒன்றுகோப்பதுபோல. தாராசுரம் ஆலய சுற்றுச் சுவர்க் கற்களில் அப்படிப்பட்ட அடையாளக் குறிப்புகளை இன்றும் காணலாம்.

ஓக் மரப் பெட்டியில் தச்சர்கள் இட்ட அடையாளக் குறிகள்

தச்சர்கள் இட்ட குறிகள் இன்னமும் அழியாமல் உள்ளன பெட்டிகளின்மேல். எல்லாமே அவசரக்கோலத்தில் அள்ளித் தெளித்ததுபோல் உள்ளன. மேலும், பெட்டியில் எழுதப்பட்டுள்ள சித்திர எழுத்துகள் சொல்லும் திசைப்படி பெட்டி வைக்கப்படவில்லை. இந்தப் பெட்டியை உள்ளே வைத்துக் கோப்பதில் உள்ள சிரமம் காரணமாக, அதன் இரட்டைக் கதவுகள் உள்ள பகுதி கிழக்கை நோக்கித் திறக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர் வரலாற்றாய்வாளர்கள்.

எகிப்திய ஈமச்சடங்கு முறைப்படி அது மேற்கில் இருந்திருக்கவேண்டும். சூரியன் மறையும் திசைநோக்கித்தான் சிற்றாலயக் கதவுகள் திறக்கவேண்டும். தமிழர்களுக்குத் தென்திசை கூற்றுவன்திசை என்பதுபோல, எகிப்தியர்களுக்குக் கதிரவன் அணையும் மேற்குதான் மாண்டவர்களின் திசை. ஆனால் அங்கே இடமில்லை என்பதால் கதவைத் திறக்கமுடியாது. திறந்தால் சுவரில் முட்டும். ஆகவே கிழக்கு நோக்கித் திறக்கும் வகையில் கதவை இந்தப் பக்கம் வைத்துவிட்டார்கள். முதல் பெட்டியின் இரட்டைக் கதவு மூடப்பட்டுத் தாழிடப்பட்டிருந்தாலும் அது முத்திரையிடப்படவில்லை.

முதல் பெட்டியின் இரட்டைக் கதவுகளில் ஒன்றில் தலையும் பாதங்களும் வெட்டப்பட்ட ஒரு விலங்கின் உருவம் காட்டப்பட்டுள்ளது. அதன் நீண்ட வால் இரண்டு கால்களுக்கு இடையே கடைசிவரை நீண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. மற்றொரு கதவில் ஆட்டுக் கிடாய்க் கொம்புகளோடு தீக்கோழியின் இரட்டை இறகுகளைக்கொண்ட மகுடத்தைத் தலையில் சூடியபடி தாடி வைத்துள்ள ஒரு தெய்வ உருவம் குத்தவைத்துள்ளது. அது தனது கையில் அங்க் என்னும் உயிர்க் குறியைப் பிடித்துள்ளது. இது அமுன் கடவுளின் ஒரு வகையாக இருக்கலாம் அல்லது மாட் தெய்வமாகவும் இருக்கலாம். அதன் எதிரே ஹைரோகிளிஃபிக்ஸில் சில குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. கார்ட்டூஷ் வடிவத்துக்குள் செதுக்கப்பட்டிருந்த டுடன்காமுன் பெயரை மட்டும் எங்களால் படிக்கமுடிந்தது.

இரட்டைக் கதவுகளில் ஒன்றில் தலை வெட்டப்பட்ட விலங்கின் உருவம்
மற்றொரு கதவில் குத்த வைத்துள்ள தெய்வ உருவம்

முதல் பெட்டிக்கு உள்ளே அடுக்குப் பாத்திரம்போல மற்றொரு பெட்டி இருந்தது. ஆனால் அது தாழிடப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்தது. அந்த முத்திரை கல்லறைக் கதவுகளில் இருந்த முத்திரையைப் போலவே இருந்தது. இந்த இரண்டாவது பெட்டியைச் சுற்றிக் கூடாரம்போல் ஒரு சட்டம் வைக்கப்பட்டு அது பித்தளைப் பூக்கள் பின்னப்பட்ட பழுப்புநிற லினன் துணியால் மேலிருந்து மூடப்பட்டிருந்தது. அது நட்சத்திரங்கள் மிளிரும் இரவு வானத்தைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.

இரண்டாவது ஓக் மரப் பெட்டி

ஐந்தரை மீட்டர் நீளமும் சுமார் நாலரை மீட்டர் அகலமும் கொண்ட அந்தத் துணி காமாசோமாவெனப் பெட்டியின்மேல் போர்த்தப்பட்டிருந்தது. அந்தத் துணியின் ஒரு பகுதியும் சில பித்தளைப் பூக்களும் கைரோவில் இன்னமும் முதல் பெட்டிக்குப் பக்கத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு துணிகளால் ஒட்டுப்போடப்பட்டிருந்த அந்தத் துணி மிக மோசமான நிலையில் இற்றுப் போயிருந்தது. பித்தளைப் பூக்களின் எடை தாளாமல் துணி ஆங்காங்கே கிழிந்து தொங்கியது. அதைப் பாதுகாக்க, கார்ட்டர் பெரிதும் முயன்றார். ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்த துணி, சண்டை வந்து கல்லறை மூடப்பட்டிருந்த நேரத்தில் திறந்தவெளியில் கைவிடப்பட்டதால், கடுமையாகச் சிதைந்தது. அந்தத் துணிக்குக்கீழ் பொருத்தமான வேறு ஒரு துணியை வைத்துச் சேர்த்துத் தைத்து அதைக் காப்பாற்ற எண்ணியிருந்தார் கார்ட்டர். ஆனால் அது நிறைவேறாமற்போனது.

மூன்றாவது ஓக் மரப் பெட்டி
நாலாவது ஓக் மரப் பெட்டி

இரண்டாவது பெட்டிக்குள் முத்திரையிடப்பட்ட மூன்றாவது பெட்டி இருந்தது. அதற்குள் நான்காவது பெட்டி இருந்தது. எல்லாமே உறுதியான மரத்தில் செய்யப்பட்டவை. நான்கு பெட்டிகள்மீதும் தங்கத் தகடு போர்த்தப்பட்டுச் சித்திரங்கள் கீறப்பட்டிருந்தன. நாலாவது பெட்டிக்குள்தான் டுடன்காமுனின் கல்லறைக் கல்பெட்டி (Sarcophagus) இருந்தது. குவார்ட்ஸைட் (Quartzite) எனப்படும் இறுகிப்போன கடினமான சிவப்புநிற மணற்கல்லால் செய்யப்பட்ட (சரியாகச் சொன்னால் குடையப்பட்ட) அந்தக் கல்பெட்டிக்குள்தான் தங்கத் தகடு போர்த்தப்பட்ட மம்மி வடிவ மரப் பெட்டிகள் இரண்டும், சொக்கத் தங்க மம்மி வடிவப் பெட்டியும் இருந்தன.

110 கிலோ சொக்கத் தங்கப் பெட்டி
தங்க முலாம் பூசப்பட்ட வேலைப்பாடு மிக்க மம்மி வடிவ மரப் பெட்டி.

எல்லாமே அபாரமான வேலைப்பாடு மிக்கவை. நேரில் பார்த்தாலொழிய உங்களால் அதன் நேர்த்தியை நம்பவே முடியாது. 22 காரட் தரமுள்ள தங்கப் பெட்டியின் எடை மட்டும் 110 கிலோகிராம். அந்தப் பெட்டிக்குள்தான் டுடன்காமுனின் மம்மி சுமார் 10 கிலோ எடையுள்ள தங்க முகமூடியோடு கிடத்தப்பட்டிருந்தது. அந்த முகமூடி மனித நாகரிகம் கண்ட அற்புதப் பொக்கிஷங்களில் ஒன்று எனத் துணிந்துகூறலாம். அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்ட முகமூடி அது.

10 கிலோ தங்க முகமூடி, கைரோ அரும்பொருளகம்

கல்பெட்டியின் மூடி சுமார் ஒன்றே கால் டன் எடையுள்ள இளஞ்சிவப்புக் கருங்கல்லால் (Rose Granite) செய்யப்பட்டு, பெட்டிக்குப் பொருத்தமாக சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. அந்த மூடி நடுவில் கீறல் விட்டு உடைந்திருந்தது. அது ஏன் என்பது இன்றுவரை தெரியவில்லை. கல்பெட்டியின் மூடி தென்புற அஸ்வான் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும். நேரில் பார்த்தபோது, சாயம் பூசிய தடயம் எதனையும் எங்களால் பிரித்தறிய இயலவில்லை.

டுடன்காமுன் மம்மி இருந்த கல்பெட்டி
கல்பெட்டியின் மூடி உடைந்த நிலையில்

மூடியின் நடுவில் உள்ள உடைந்த பகுதி கவனமாக ஒட்டப்பட்டு மேலே சாயம் பூசப்பட்டிருந்ததாகவே கார்ட்டரும் எழுதுகிறார். கல்லறையை எழுப்பியவர்களின் நோக்கம், பெட்டிக்கு ஏற்ற Quartzite கல்லால் செய்த மூடியைப் பொருத்துவதாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆனால், விபத்துப் போல ஏதோ நடந்து திட்டம் மாறிவிட்டது. அல்லது கல்லறைப் பெட்டியை மூடும் நேரத்திற்குள் அந்தக் கல் மூடி தயார் ஆகாமற்போயிருக்கவேண்டும். அதனால் அவசர அவசரமாகக் கருங்கல்லால் மூடி செய்து பொருத்தியிருக்கவேண்டும். உடைந்துபோன மூடி கார்ட்டருக்குப் பல வகையிலும் தொல்லை கொடுத்திருக்கிறது. அதை ஒற்றைப் பலகையாக உயர்த்த சகடையையும் இரும்புத் தாங்கிகளையும் பயன்படுத்தினார் கார்ட்டர்.

அந்தக் கல்பெட்டிக்குள் இருந்த பெரிய மம்மி வடிவப் பெட்டி, உள்ளே சரியாகப் பொருந்தி உட்காரவில்லை. ஆகவே அதன் கால்பகுதி இழைப்புளியால் சீவி எடுக்கப்பட்டுச் சற்றே சிறிதாக்கப்பட்டுக் கல்பெட்டிக்குள் அழுத்தப்பட்டது. பெட்டியின் கருங்கல் மூடி கச்சிதமாகப் பொருந்தவேண்டும் என்பது அதற்கு மற்றொரு காரணம். மரப்பெட்டியின் கால்பகுதி சீவப்பட்டபோது கீழே விழுந்த மரச் சீவல் சுருள்கள் அகற்றப்படாமல் அங்கேயே கிடந்தன. எனவே ஈமச் சடங்கு அவசர அவசரமாக நடந்திருக்கவேண்டும் என ஊகிக்கப்படுகிறது.

1923 அக்டோபர் முதல் 1924 பிப்ரவரி மாதம் வரை, முதலில் இருந்த நான்கு சிற்றாலயங்கள், அதாவது தங்க வேலைப்பாடுமிக்க மரப் பெட்டிகளைச் சேதமின்றிப் பிரித்து எடுக்கும் பெரும் பணியில் ஈடுபட்டிருந்தார் கார்ட்டர். மரப்பெட்டியின் பகுதிகள் கண்ணுக்குத் தெரியாத மர ஆப்புகளால் உள்ளுக்குள் இணைக்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் இணைப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியை அதிகரித்து உள்ளே மெல்லிய ரம்பத்தைவிட்டு அறுத்துத்தான் மரப் பெட்டியின் பகுதிகளைப் பிரிக்கமுடிந்தது. முதலாவது பெரிய பெட்டியைப் பிரித்த அனுபவம் அடுத்தடுத்த பெட்டிகளைப் பிரிப்பதில் உதவியது. ஆனால், மற்ற பெட்டிகளின் ஆப்புகள், மரத்துக்கு பதிலாக வெண்கலத்தால் செய்யப்பட்டு அவற்றின் பாகங்கள் கோக்கப்பட்டிருந்தன. அந்த ஆப்புகளில் டுடன்காமுனின் பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. அறுக்கவேண்டிய அவசியமின்றி அவற்றை எவ்வாறு நேக்காக அகற்றி எடுப்பது என்பதை நிபுணர்கள் அதற்குள் கற்றிருந்தனர்.

மரப் பெட்டிகளை அகற்றுவதற்கான அந்தப் பருவப் பணி முடிவதற்குள்தான், கார்ட்டருக்கும் எகிப்திய அரசாங்கத்துக்கும் இடையே ஏராளமான சர்ச்சைகள் உருவாயின. மனம் வெறுத்துப்போன கார்ட்டர் உலகெங்கும் தமது கண்டுபிடிப்பு குறித்து உரை நிகழ்த்தப் புறப்பட்டுப்போனார். அமெரிக்காவில் தொடங்கி ஸ்பெயின்வரை சென்று உரை நிகழ்த்தி முடித்து ஒருவழியாக 1924ஆம் ஆண்டு டிசம்பரில் எகிப்து திரும்பினார் கார்ட்டர். அவரை மனமுவந்து வரவேற்ற அப்போதைய எகிப்தியப் பிரதமர் ஸிவார் பாஷா கல்லறையைத் திறந்து சீரமைப்புப் பணிகளைத் தொடரும்படி வேண்டிக்கொண்டார். அப்போதைய அமைச்சரவையோடு புதிய உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டு பணிகளை ஆர்வத்தோடு தொடர ஆரம்பித்தார் கார்ட்டர்.

அந்தப் பருவத்துக்கான பணிகளை முடிக்க சிறிது காலமே இருந்தது. எனவே, கல்லறையில் உள்ள பொருள்களை அகற்றுவதற்கு பதிலாக, ஏற்கெனவே எடுத்துச் செல்லப்பட்டுத் தற்காலிக ஆய்வகத்தில் சேகரிக்கப்பட்டிருந்த பொருள்களைச் சீரமைத்துப் பாதுகாப்பதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டார் கார்ட்டர். டுடன்காமுனின் கல்லறை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இதற்குள் மக்களும் பத்திரிகையாளர்களும் ஆர்வமிழந்து அகன்றுவிட்டிருந்தனர். எனவே தொந்தரவில்லாமல் பணியாற்ற முடிந்தது கார்ட்டரால். சுமார் 20 பெட்டிகள் நிறைய அரும்பொருள்களை நிரப்பி கைரோவுக்கு அனுப்பிவைத்தார் கார்ட்டர். அவை கைரோவுக்குப் போய்ச் சேர்ந்ததும் பத்திரமாக அவற்றைப் பிரித்து எடுத்துக் காட்சிக்கு வைப்பதிலும் சமமான அக்கறை காட்டினார்.

1925-க்குப் பின் 5 ஆண்டுகளில் 5 முறை எகிப்தில் அரசாங்கம் மாறியதையும் இந்த இடத்தில் குறிப்பிடவேண்டும். 1930-ஆம் ஆண்டில் அப்போதைய எகிப்தியப் பிரதமர் நஹாஸ் பாஷா தலைமையிலான அமைச்சரவை “எகிப்தில் கண்டுபிடிக்கப்படும் எந்தவோர் அரும்பொருளையும் நாட்டைவிட்டு எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது” என்று முடிவெடுத்தது. தொல்லியல் கண்டுபிடிப்புக்காகத் தனி மனிதர்கள் ஏதேனும் செலவு செய்திருந்து அரும்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்காகச் செய்திருந்த மொத்தச் செலவைத் திருப்பித்தர அவரது அரசாங்கம் முன்வந்தது.

புதிய ஒப்பந்தப்படி டுடன்காமுன் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட அரும்பொருள்கள் அனைத்துமே எகிப்தில்தான் இருக்கவேண்டும். அல்மினா கார்னர்வான் சீமாட்டி தாமோ தமது வாரிசுகளோ கல்லறை மீதோ கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட அரும்பொருள்கள் மீதோ எவ்வித உரிமையையும் வருங்காலத்தில் கோரப்போவதில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். டுடன்காமுன் கல்லறைக் கண்டுபிடிப்புப் பணிகளுக்காக, கார்னர்வான் பிரபு குடும்பம் செலவழித்திருந்த மொத்தத் தொகையான 44-ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டை எகிப்திய அரசாங்கம் 1930இல் திருப்பிக் கொடுத்தது. அரும்பொருள்களைப் பாதுகாத்துச் சீரமைக்கும் பணியில் நிதி உதவியும் நிபுணத்துவ உதவியும் வழங்கிய நியூயார்க் மெட்ரோபாலிட்டன் அரும்பொருளகத்துக்கும் 8-ஆயிரம் ஸ்டெர்லிங் பவுண்டை இழப்பீடாக வழங்கியது எகிப்திய அரசாங்கம்.

மீண்டும் நாம் 1925-க்குத் திரும்புவோம். அடுத்த அகழ்வுப் பணிக்கான பருவம் 1925 அக்டோபரில் தொடங்கியது. அது அனைத்துலகப் பயணிகள் வரத் தொடங்கும் நேரம். அவர்கள் வந்து கூட்டம் கூடுமுன் டுடன்காமுன் மம்மியைக் கல்பெட்டியில் இருந்து அகற்றிவிட வேண்டுமென இலக்கு நிர்ணயித்திருந்தார் கார்ட்டர். அது எவ்வளவு சிரமமான பணியாக இருக்கப் போகிறது என்று அவர் அப்போது உணர்ந்திருக்கவில்லை. 

கட்டுரை மற்றும் புகைப்படங்கள்: பொன். மகாலிங்கம்

ஆசிரியர் குறிப்பு

இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 

தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்.