முந்தைய பகுதி - தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்
மோயர்ஸ்: தொன்மவியல் என்பது மனிதகுலத்தின் மகத்தான கதையை பற்றிய ஆய்வு என்கிறீர்கள். அந்த மகத்தான கதை என்ன?
கேம்ப்பெல்: நாம் அனைவரும் ஒரே அடிப்படை கொண்டவர்கள், காலத்துடைய களத்தில் வெளிப்பட்டவர்கள். இதுதான் அந்த கதை. காலத்தின் களம் என்பது ஒரு வகையான நிழல்விளையாட்டு, அது காலமற்ற ஒரு தளத்தின் மீது நிகழ்கிறது. நீங்கள் அந்த விளையாட்டை நிழற்களத்தில் ஆடுகிறீர்கள், உங்களால் இயன்ற வரையில் உங்கள் தரப்பை நிகழ்த்துகிறீர்கள். நீங்கள் உங்களை காண்பதன் மறுபக்கம்தான் உங்கள் எதிரி, அதை நீங்கள் நடுநிலையிலிருந்து பார்க்க முடிந்தால் அறிவீர்கள்.
மோயர்ஸ்: ஆகவே அந்த மகத்தான கதையென்பது இந்த நாடகத்தில் நமக்கான இடத்தை கண்டுகொள்வதற்கான தேடல்தானா?
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது மட்டுமல்ல. இந்த உலகமெனும் மாபெரும் இசைக்கோர்வையுடன் ஒத்திசைவு கொள்வதற்கான தேடல் மற்றும் நம் உடலின் ஒழுங்கினை அந்த பேரொழுங்குடன் ஒத்திசைய செய்வதற்கான தேடலும்தான்.
மோயர்ஸ்: இக்கதைகளை நான் வாசிக்கும்போது அவை எந்த நாகரிகத்தை சேர்ந்தவையாக இருந்தபோதிலும் நான் ஒரு அற்புத உணர்வை அடைகிறேன். அது என்னவென்றால், இந்த பூமியில் தமது இருப்பை புரிந்துகொள்வதற்கும் தங்களுடைய சிறிய வாழ்க்கைப்பயணத்தை இந்த ஆழ்நிலை சாத்தியக்கூறுகளில் செலவிடுவதற்கும் துடிக்கும் மானுடக்கற்பனையின் அதிசயத்தைக் காணும் அற்புத உணர்வு. உங்களுக்கு என்றாவது இவ்வாறு நிகழ்ந்துள்ளதா?
கேம்ப்பெல்: ஆம். என்னைப் பொருத்தவரையில் தொன்மம் என்பது மியூஸ்களின் (Muse) தாய்நிலம். அவர்களே சிந்தனைக்கும் கலைக்கும் கவிதைக்குமான ஊற்றுமுகம். வாழ்க்கையை ஒரு கவிதையாக காண்பதையும், ஒரு கவிதையில் உங்களை பங்குகொள்ளச் செய்வதையும் தொன்மம் உங்களுக்கு சாத்தியப்படுத்துகிறது.
மோயர்ஸ்: கவிதை என்றால்?
கேம்ப்பெல்: கவிதை என்று நான் சொல்வது, சொற்களால் அல்லாத ஆனால் செயல்கள் மற்றும் சாதனைகளால் ஆனது. அது செயல்களைக் கடந்ததும்கூட. அதன் வழியாக நீங்கள் பிரபஞ்ச இருப்புடன் ஒரு ஒத்திசைவை எப்போதும் உணர்வீர்கள்.
மோயர்ஸ்: நான் இந்த தொன்மங்களை வாசிக்கும்போது, இவற்றிலுள்ள மர்மத்தை கண்டு வியக்கிறேன். இதில் சிலவற்றை குறித்து நாம் அனுமானம் செய்யலாம், ஆனால் அவற்றினுள் நுழைய இயலாது.
கேம்ப்பெல்: அதுதான் விஷயம். அறுதி மெய்மையை தான் கண்டடைந்துவிட்டதாக மனிதன் எண்ணுவானெனில் அது தவறு. சமஸ்கிருதத்தில் அடிக்கடி ஒரு மந்திரம் சொல்லப்படுவதுண்டு, சீன தாவோ-தே-சிங்கிலும் அது உள்ளது. அது என்னவென்றால் "அறிவேன் என எண்ணுபவன் அறியமாட்டான், அறியவில்லை என எண்ணுபவன் அறிந்தவனாக இருப்பான்" என்பது. இந்த பின்னனியில், அறிவது என்பது அறியாமல் இருப்பது, அறியாமல் இருப்பது என்பது அறிவது என்று பொருள் கொள்ளலாம்.
மோயர்ஸ்: பண்பாட்டுச்சிறையில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த எனது நம்பிக்கையை உங்கள் தொன்மவியல் சார்ந்த பணி மதிப்பிழக்கச் செய்வதற்கு பதிலாக விடுதலை செய்திருக்கிறது.
கேம்ப்பெல்: அது என்னுடைய நம்பிக்கையையும் விடுவித்தது. தன்னை அடைபவர் எவருக்கும் அது அதை செய்யும்.
மோயர்ஸ்: சில தொன்மங்கள் பிறவற்றை விட சற்றேறக்குறைய உண்மைக்கு நெருக்கமாக இருக்குமா?
கேம்ப்பெல்: தொன்மங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உண்மையானவை. அவை ஒரு குறிப்பிட்ட நாகரிகத்துடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான வாழ்க்கைஞானத்துடன் தொடர்புடையது. ஒரு தனிமனிதனை அவனுடைய சமூகத்துடனும், அச்சமூகத்தை இயற்கையுடனும் அது பொருத்துகிறது. இயற்கையின் களத்தை அது என்னுடைய இயற்கையுடன் ஒன்றாக்குகிறது. அதுவொரு ஒத்திசையச் செய்யும் விசை. உதாரணமாக, நம்முடைய தொன்மம் இருமை எனும் கருத்தால் ஆனது; நன்மை தீமை, சொர்க்கம் நரகம் என்று அது காணப்படுகிறது. ஆகவே நமது மதமும் அதன் நடைக்கு நேர்மையுடன் இருக்க முனைகிறது. அதன் பின்னர், பாவம் அதற்கான பிழையீடு, சரி அதற்கெதிரான தவறு போன்றவை உருவாகிறது.
மோயர்ஸ்: ஒன்றிற்கொன்று எதிரானவைகளின் இழுவை; அன்பு – வெறுப்பு, மரணம் – வாழ்வு என்று அது தொடர்கிறது.
கேம்ப்பெல்: இராமகிருஷ்ணர் கூறியது இது, "நீங்கள் அனைவரும் உங்கள் பாவங்களை எண்ணுவீர்களானால் நீங்கள் ஒரு பாவி". நான் அதை படித்தபோது எனது இளம்வயதுகளில் சனிக்கிழமைகளில் அவ்வாரம் முழுக்க நான் செய்த எளிய பாவங்களுக்காக மன்னிப்பு வேண்டி தேவாலயத்திற்கு சென்றதை எண்ணிக்கொண்டேன். இப்போது நான் நினைப்பதென்னவென்றால் ஒருவன் அங்கு சென்று “ஃபாதர் நான் உயர்ந்தவனாக இருப்பதற்கும், இவ்வாரம் முழுவதும் நான் செய்த நற்செயல்களுக்காகவும் என்னை ஆசிர்வதியுங்கள்” என்று சொல்லவேண்டும் என. உங்களுடைய கருத்துக்களை தீய செயல்களுடன் அல்லாமல் நேர்மறையான செயல்களுடன் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உண்மையில் மதம் என்பது இரண்டாவது கருவறை போன்றது. அது மனிதஉயிர் எனும் மிகச்சிக்கலான ஒன்றை முதிரச்செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்டது. அதாவது, தானாகவே உத்வேகம் கொள்வதற்கும், தானாகவே செயலூக்கம் கொள்வதற்கும் உதவுமாறு மதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாவம் எனும் கருதுகோள் உங்களை வாழ்நாள் முழுமைக்கும் ஒரு அடிமையாகவே வைத்திருக்கிறது.
மோயர்ஸ்: ஆனால் படைப்பு மற்றும் வீழ்ச்சி பற்றிய கிறித்துவ கருத்து அதுவல்லவே.
கேம்ப்பெல்: ஒருமுறை நான் முதிய ஜென் தத்துவவாதி ஒருவரின் அருமையான உரை ஒன்றை கேட்டேன். அவர் பெயர் டாக்டர் D. T சுசுக்கி. அவர் எழுந்து நின்று கைகளை மெதுவாக தேய்த்துக்கொண்டு, "கடவுள் மனிதனுக்கு எதிராக இருக்கிறார். மனிதன் கடவுளுக்கு எதிராக இருக்கிறான். மனிதன் இயற்கைக்கு எதிராக இருக்கிறான். இயற்கை மனிதனுக்கு எதிராக இருக்கிறது. இயற்கை கடவுளுக்கு எதிராக இருக்கிறது. கடவுள் இயற்கைக்கு எதிராக இருக்கிறார். மிக வேடிக்கையான மதம்!" என்றார்.
மோயர்ஸ்: நன்று, ஒரு வடஅமெரிக்க வேட்டைப்பழங்குடி மைக்கேலேஞ்சலோவின் படைப்புகளைப் பார்த்தால் என்ன நினைப்பான் என்று நான் அவ்வப்போது எண்ணி வியந்திருக்கிறேன்.
கேம்ப்பெல்: அவை நிச்சயமாக பிற மரபுகளின் கடவுளை போன்றவையல்ல. பிற தொன்மங்களில், ஒருவன் நன்மை தீமை எனும் கலவையுடன் தன்னை இவ்வுலகத்துடன் ஒத்திசைவு கொள்ளச்செய்கிறான். ஆனால் மத்திய-கிழக்கின் மத அமைப்புகளில் நீங்கள் நன்மையுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொண்டு தீமைக்கு எதிராக போரிடுகிறீர்கள். ஆகவே விவிலிய மரபை சார்ந்த யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் அனைத்துமே இயற்கைமதங்களைப் பற்றி இழிவாகப் பேசுகின்றன.
ஒரு இயற்கைமதத்திலிருந்து ஒரு சமூகமதத்தை நோக்கிய இந்த நகர்வு மீண்டும் நம்மை இயற்கையுடன் இணைப்பதை கடினமாக்குகிறது. ஆனால் உண்மையில் பண்பாட்டு சின்னங்கள் அனைத்தையும் உளவியல் மற்றும் பிரபஞ்சவியல் சார்ந்த விளக்கங்களாக மிகச்சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும், அதற்கு நீங்கள் அவைகளை அவ்வாறு பார்ப்பதை தேர்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மதமும் ஏதோ ஒரு வகையில் மெய்யானது. மேலும் அது உருவகமாக புரிந்துகொள்ளப்படுகையில்தான் மெய்யாகிறது. ஆனால் உருவகங்களை நிதர்சனங்கள் என்று விளக்கிக்கொள்ளப்பட்டு அது தனது உருவகங்களாலேயே தடுக்கப்படும்போது, நீங்கள் பிரச்சினைக்குள்ளாகிறீர்கள்.
மோயர்ஸ்: உருவகங்கள் என்றால் என்ன?
கேம்ப்பெல்: உருவகம் என்பது மறைபொருளை குறிக்கும் ஒரு படிமம். உதாரணமாக நான் ஒருவரைப் பார்த்து "நீ ஒரு கிறுக்கன்" என்று சொன்னால் நான் அவரை ஒரு மனநிலை பிறழ்ந்தவராக எண்ணுகிறேன் என்பது அதன் அர்த்தமல்ல. கிறுக்கன் என்ற சொல் ஒரு உருவகம் மட்டுமே. மதமரபுகளில் உருவகம் குறிப்பது ஆழத்தில் இருக்கும் ஏதோ ஒன்றை. அதாவது நிஜமாக இருக்கும் ஒன்றை குறிப்பதல்ல. ஒருவேளை நீங்கள் அந்த உருவகத்தை நேரடிக்குறிப்பாக எண்ணினால், அது ஒரு உணவுவிடுதிக்கு சென்று அங்கிருக்கும் உணவுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு பதார்த்ததை உண்ணுவதற்கு பதிலாக அந்த உணவுப்பட்டியலையே உண்பதற்கு ஒப்பாகிவிடும்.
உதாரணமாக "இயேசு விண்ணுலகம் ஏறினார்" எனும் இந்த சொற்றொடர் யாரோ ஒருவர் வானத்தின் மீது ஏறினார் என்பதை குறிப்பது போல் தோன்றுகிறது. உண்மையில் அதுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் அதுதான் அச்செய்தியின் மெய்யான பொருளாக இருந்தால், அதை நாம் தூக்கியெறிய வேண்டும். ஏனெனில் இயேசு செல்வதற்கு அப்படி எந்த இடமும் அங்கு நிஜத்தில் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் பௌதிகரீதியாக சொர்க்கம் என்றொரு இடம் எங்குமில்லாததால் இயேசு சொர்க்கத்திற்கு சென்றிருக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஒளியின் வேகத்தில் சென்றால் கூட இயேசு விண்மீன் மண்டலத்திலேயேதான் இருப்பார். வானியலும் இயற்பியலும் அவ்வரியின் நேரடியான அர்த்தத்தை நிராகரித்துவிட்டன. ஆனால் நீங்கள் "இயேசு விண்ணுலகம் ஏறினார்" என்ற வாக்கியத்தை உருவகக் கண்ணோட்டத்தில் வாசித்தால் அவர் உள்முகமாகப் பயணித்தார் என்பதை காண்பீர்கள். அதாவது புறவயமாக அல்லாமல் அகவயமான இடத்திற்கு, எங்கிருந்து அனைத்து உயிர்களும் வந்ததோ அந்த இடத்திற்கு, அனைத்திற்குமான மூலமாக இருக்கும் அந்த தன்னுணர்விற்கு, அதற்குள் இருக்கும் விண்ணுலக அரசிற்கு அவர் பயணித்தார் என்பதைக் காண்பீர்கள். படிமங்கள் வெளிப்புறமானவை, ஆனால் அதன் பிரதிபலிப்புகள் உள்முகமானவை. விஷயமென்னவென்றால், நாம் உள்முகமாகச் செல்வதன் வழியாக அவருடன் இணைந்து முன்னேற வேண்டும் என்பதுதான். அது ஊற்றுமுகத்திற்கே திரும்பிச் செல்வதற்கான ஒரு உருவகம். இதைத்தான் ஆல்பா மற்றும் ஒமேகா என்ற படிமம் சுட்டுகிறது. இந்த உடலுடன் ஆன பிணைப்பை விடுத்து உடலின் இயக்கத்திற்கான மூலத்தை நோக்கி செல்வது.
மோயர்ஸ்: இயேசுவின் அடக்கமும் உயிர்த்தெழலும் மாபெரும் பண்பாட்டு கோட்பாடுகளில் ஒன்று. இது நமது வாழ்க்கையை முன்னுரைக்கிறது எனும் செவ்வியல் கிறித்துவ நம்பிக்கையை நீங்கள் குறைத்து மதிப்பிடவில்லையா?
கேம்ப்பெல்: அது குறியீட்டை வாசிப்பதில் நிகழ்ந்த ஒரு தவறாக இருக்கலாம். அதாவது கவிதையாக வாசிக்க வேண்டிய சொற்களை உரைநடை போல் வாசிப்பது. உருவகத்தை நுண்பொருளாக வாசிப்பதற்கு பதிலாக ஒரு நேரடிக்கருத்தாக வாசிப்பது.
மோயர்ஸ்: ஆம். பார்க்கமுடியா யதார்த்தத்தையே கவிதை சென்றடையும்.
கேம்ப்பெல்: அது யதார்த்தம் எனும் கருத்தையும் கடந்தது, அனைத்து எண்ணங்களுக்கும் ஆழத்தில் இருப்பது. தொன்மம் உங்களை அங்கு செலுத்தி உங்களின் மெய்மையுடன் உங்களை இணைத்துக் கொள்வதற்கான கயிற்றை அளிக்கிறது.
கலை என்பது இயற்கையை காட்டும் ஒரு கண்ணாடி என்று ஷேக்ஸ்பியர் கூறினார். இயற்கை என்பது உங்களுடைய இயற்கையே. மேலும் தொன்மத்தின் இந்த அருமையான கவிப்படிமங்களனைத்தும் உங்களில் இருக்கும் ஏதோ ஒன்றை குறிக்கின்றது. ஆகவே அப்படிமங்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளாமல் அதை வெளிப்புறமாக பார்ப்பதில் உங்கள் மனம் சிக்கியிருந்தால், நீங்கள் படிமத்தை தவறாக புரிந்துகொள்வீர்கள்.
அகவுலகம் என்பது உங்களுடைய தேவைகளின், ஆற்றல்களின், கட்டமைப்பின், சாத்தியக்கூறுகளின் உலகமாகும். அதுதான் வெளியுலகைச் சந்திக்கின்றது. மேலும் வெளியுலகம் என்பது உங்கள் தோற்றத்தின் களமாகும். நீங்கள் அங்கேதான் இயங்குகிறீர்கள். இவ்விரண்டு உலகங்களுடனும் நீங்கள் செயலில் இருக்கவேண்டும். அகவுலகமும் புறவுலகமும் சந்திக்குமிடத்தில்தான் ஆத்மாவின் இருப்பிடம் உள்ளது என்று நோவாலிஸ் (Novalis) கூறியது போலத்தான் இது உள்ளது.
மோயர்ஸ்: ஆகவே இயேசு விண்ணுலகம் ஏறினார் எனும் கதை முன்பு எப்போதோ கடற்கரைக்கு வந்து சென்ற ஒருவன் வீசியெறிந்த கண்ணாடி புட்டிக்குள் இருக்கும் செய்தியைப் போன்றது. ரகசியமானது, அகவயமானது.
கேம்ப்பெல்: ஆம். இயேசு அதைத்தான் செய்தார். இப்போது கிறித்துவ மதத்தைப் பற்றிய வழக்கமான சிந்தனைமுறையில், நம்மை இயேசுவுடன் அடையாளப்படுத்திக்கொள்ள நம்மால் முடியாது, மாறாக அவரை நாம் பின்பற்ற வேண்டும். "நானும் பிதாவும் ஒன்றே" என்று இயேசு சொன்னதைப்போல சொல்வது, நமக்கு தெய்வநிந்தனை. இருப்பினும், நாற்பது வருடங்களுக்கு முன்னர் எகிப்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாமசின் போதனையில், "என் வாயிலிருந்து பருகுபவன் என்னைப்போலவே ஆகுகிறான், நான் அவனாக ஆகுகிறேன்" என்று இயேசு சொல்வதாக காணப்படுகிறது. மிகச்சரியாக இதுதான் பௌத்தம். நாம் அனைவரும் புத்தரின் மனச்சான்றின் வெளிப்பாடுகள் அல்லது கிறிஸ்துவின் மனச்சான்று. நமக்கு அது தெரியாது அவ்வளவுதான். புத்தர் என்ற சொல்லிற்கு 'விழிப்புற்றவன்' என்று பொருள். நாம் அனைவரும் நம்முள் இருக்கும் கிறிஸ்து அல்லது புத்தரின் தன்னுணர்வு குறித்த விழிப்புணர்வை அடையவேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டியது. மரபார்ந்த கிறித்துவ சிந்தனையின் வழியில் பார்த்தால் இது தெய்வநிந்தனை. ஆனால் இதுதான் கிறித்துவ ஞானவாதம் மற்றும் தாமசின் போதனைகளின் மிகச்சரியான சாரமாகும்.
மோயர்ஸ்: மறுபிறப்பும் ஒரு உருவகமா?
கேம்ப்பெல்: நிச்சயமாக அதுவும் உருவகம்தான். "நீங்கள் மறுபிறப்பை நம்புகிறீர்களா" என்று மக்கள் என்னிடம் கேட்கும்போது, "சொர்க்கத்தைப் போல மறுபிறப்பும் ஒரு உருவகம்தான்" என்றுதான் நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
மறுபிறப்பிற்கு நிகராக கிறித்துவத்தில் இருக்கும் இன்னொரு உருவகம் ஆன்மசுத்திகரிப்பு. ஒரு மனிதன் இகவுலக பொருட்களின் மீதான பிடிப்புடன் இறந்துபோவானெனில் அவனுடைய ஆவி தெய்வீக காட்சிகளைக் காண தகுதியுடன் இருப்பதில்லை. ஆகவே அவன் ஒரு சுத்திகரிப்பிற்கு உள்ளாக வேண்டும். தனது குறைபாடுகளை அவன் களைந்து கொள்ளவேண்டும். இந்த குறைபாடுகள் பாவம் என்று அழைக்கப்படுகின்றன. பாவம் என்பது உங்கள் தன்னுணர்வை கட்டுப்படுத்தி அதை ஒரு பொருந்தா சூழ்நிலையில் சிக்கவைப்பதற்கான காரணியாக இருக்கிறது.
கிழக்கத்திய உருவகங்களில், நீங்கள் பற்று நீங்காத நிலையிலேயே இறந்து போவீர்கள் என்றால் அதிலிருந்து விடுபடுவதற்கான அனுபவங்களை அடைய நீங்கள் மீண்டும் மீண்டும் பிறப்பீர்கள். இந்த மறுபிறவியெடுக்கும் ஆன்மாதான் கிழக்கத்திய தொன்மங்களின் முதன்மைக் கதாநாயகர். இந்த ஆன்மா தொடர்ந்து வரும் வாழ்க்கைகளில் வெவ்வேறு ஆளுமையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. மறுபிறவிக் கொள்கை என்பது ஆளுமைகள் என்றளவில் நீங்களும் நானும் எடுக்கும் மறுபிறவியை பற்றியதல்ல, ஆன்மா எதை விடுகிறது என்பதை பொருத்தது. பிறகு அந்த ஆன்மா இன்னொரு உடலில் தன்னை பொருத்திக் கொள்கிறது. அது ஆணோ பெண்ணோ எதுவானாலும் காலத்தின் செயற்களத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள எது தேவைப்படுமோ அந்த அனுபவத்தை பொருத்து மறுபிறப்பு அமைகிறது.
மோயர்ஸ்: மறுபிறவிக் கொள்கை கூறும் கருத்து என்ன?
கேம்ப்பெல்: உங்களைப் பற்றி நீங்கள் எண்ணியிருப்பதைவிட நீங்கள் மேலதிகமானவர் என்று மறுபிறவிக் கொள்கை சொல்கிறது. உங்களுடைய இருத்தலுக்கு பல்வேறு பரிமாணங்கள் உள்ளது. மேலும் 'நீங்கள்' என்னும் உங்களுடைய கருதுகோளுக்குள் சேர்க்கப்படாத, அதேசமயம் உங்கள் தன்னுணர்விற்கும் பிரக்ஞைக்கும் அடிப்படையான ஒன்று உள்ளது என்கிறது. இங்கிருக்கும் உங்கள் வாழ்க்கை நீங்கள் எண்ணுவதை விடவும் அதிக ஆழமும் அகலமும் கொண்டது. இங்கு நீங்கள் வாழும் வாழ்க்கை உண்மையில் உங்களுக்குள் இருக்கும் ஒன்றின் துளி மட்டுமே. அதுதான் உங்களுக்கு வாழ்க்கையையும் அதன் நீள அகலத்தையும் வழங்குகிறது. ஆனால் நீங்கள் அந்த ஆழத்திலும் வாழ முடியும். அந்த ஆழமான வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்கும்போதுதான் அனைத்து மதங்களும் அதையே பேசுகின்றன என்பதை ஒரு திடுக்கிடலோடு நீங்கள் காண்பீர்கள்.
மோயர்ஸ்: இதுதான் காலத்தினூடாக வரும் தொன்மக்கதைகளின் தலைமை நோக்கமா?
கேம்ப்பெல்: இல்லை. ’வாழ்வு என்பது கடும்சோதனை கொண்டது, அதன் வழியாகவே நீங்கள் வாழ்க்கை மீதான பிடிப்பிலிருந்து விடுபடமுடியும்’ எனும் கருத்து உயர்தளமதங்களைச் சார்ந்தது. இதைப்போன்ற எதையும் நான் பழங்குடி மக்களின் தொன்மத்தில் பார்த்ததாக நினைவில்லை.
மோயர்ஸ்: பின் அதன் ஊற்று எது?
கேம்ப்பெல்: எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது ஆன்மிகசக்தியும் ஆழமும் கொண்ட மனிதர்களிடமிருந்து வந்திருக்கலாம். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையானது தங்களின் ஆன்மிக அம்சத்திற்கு போதாமல் இருப்பதாக உணர்ந்திருக்கலாம்.
மோயர்ஸ்: உயர்வகுப்புதான் தொன்மங்களை உருவாக்குகிறது என நீங்கள் கூறுகிறீர்கள். அதாவது மாந்திரீகர்கள், கலைஞர்கள், மற்றும் அறிந்திராதவைகளுக்குள் பயணித்து பின் மீண்டுவருபவர்களும் இந்த தொன்மங்களை உருவாக்குவதாக கூறுகிறீர்கள். ஆனால் இங்கிருக்கும் சாதாரணமான நாட்டுப்புற கதைகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? உதாரணமாக பால் பன்யன் (Paul Bunyan) எனும் அரக்கன் பற்றிய கதைகளை அவர்கள் உருவாக்கினார்கள் அல்லவா?
கேம்ப்பெல்: ஆம். அவர்கள் அதை உருவாக்குகிறார்கள். ஆனால் அது தொன்மம் அல்ல. தொன்மத்தின் நிலையை அது எட்டவில்லை. நபிகளும், இந்தியாவில் 'ரிஷி' என்று அழைக்கப்படுவர்களும் வேதங்களை செவிமடுத்ததாக சொல்லப்படுகின்றது. இப்போது எவர் வேண்டுமானலும் தன் செவிகளை திறந்து வைத்திருக்கலாம், ஆனால் வேதச்சொற்களை கேட்கும் திறன் எல்லோர்க்கும் அமைவதில்லை.
மோயர்ஸ்: “கேட்பதற்காக செவி கொண்டவன், கேட்கட்டும்”
கேம்ப்பெல்: திட்டவட்டமானவற்றை மட்டுமல்லாமல் உருவகமானவற்றையும் கேட்பதற்காக உங்கள் செவிகளை திறப்பதற்கு ஒரு பயிற்சி தேவைப்படுகிறது. ஃப்ராய்ட் மற்றும் யுங் இருவருமே தொன்மம் நனவிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள்.
ஒரு நூலை எழுதும் படைப்பாளி படைப்பூக்கத்துடன் கூடிய அவ்வேலையை செய்கையில், தான் திறந்து கொள்வதையும், தன்னுள் தானே உட்புக இயல்வதையும், மேலும் அந்நூல் தன்னுடன் உரையாடி தன்னை உருவாக்கிக்கொள்வதையும் நன்கு அறிந்திருப்பார். தீர்க்கமானவொரு எல்லையில் உங்களுக்கு யாரோ அல்லது எதுவோ அளித்திருக்கும் ஒன்றை 'கடத்துபவர்' ஆக நீங்கள் மாறுகிறீர்கள். அதை உங்களுக்கு அளித்தது மியூஸ் அல்லது விவிலிய மொழியில் இறை என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அலங்காரச் சொல் அல்ல. நிதர்சனமான உண்மை. இந்த படைப்பூக்கம் நனவிலியிலிருந்து வருவதாலும், எந்தவொரு சமூகத்திலும் நனவிலி பெரும்பாலானவற்றை பொதுவானதாக கொண்டிருப்பதாலும், மாந்திரிகர் அல்லது தீர்க்கதரிசி முன்வைக்கும் அந்த ஒன்று அனைவராலும் முன்வைப்பதற்கு காத்துக்கொண்டிருந்ததாக ஆகிறது.
ஆகவே தீர்க்கதரிசி சொல்லும் கதையைக் கேட்கும் ஒருவர் “ஆ! இது எனது கதை! இதைத்தான் நான் எப்போதும் சொல்ல விரும்பியிருந்தது, ஆனால் சொல்ல இயலாமல் போனது“ என்று அவர் எதிர்வினையாற்றுகிறார். ஆகவே தீர்க்கதரிசிக்கும் சமூகத்திற்கும் இடையே சில சொற்கள், ஒரு கலந்துரையாடல் எப்போதும் இருக்கவேண்டும். ஆனால் மக்கள் கேட்க விரும்பாத விஷயங்களை கண்டு அதை சொல்லும் தீர்க்கதரிசி ஏற்பற்றவர் ஆகிறார். சில சமயங்களில் மக்கள் அவரை துடைத்தெறிந்துவிடுவார்கள்.
மோயர்ஸ்: ஆகவேதான் நாம் நாட்டார் கதைகளைப் பற்றி பேசும்போது அதை தொன்மங்கள் என குறிப்பிடுவதில்லை. நம்மை மகிழ்விக்கும் பொருட்டோ அல்லது மகத்தான ஆன்மிகஞானிகளை விட தாழ்ந்த தளத்தில் இருக்கும் நமது இருத்தலை வெளிப்படுத்துவதற்காகவோ நாம் நாட்டார் மரபின் எளிய கதைகளை சொல்கிறோமா?
கேம்ப்பெல்: ஆம். நாட்டார் கதைகள் பொழுதுபோக்கிற்கானவை. தொன்மங்கள் ஆன்மீக சாதகத்திற்கானவை. தொன்மத்தில் இந்த இரண்டு அடுக்குகள் உண்டு - நாட்டார்-கருத்தியல் மற்றும் அடிப்படை-கருத்தியல். இவை குறித்து இந்தியாவில் சிறந்த சொற்கள் உண்டு. நாட்டார் அம்சத்தை தேசம் அல்லது நாடு தழுவியது, சமூகத்துடன் செயல் புரிந்து கொண்டிருப்பது. அது இளவயதினருக்கானது. அதன்படி ஒரு இளைஞன் சமூகத்திற்குள் கொண்டுவரப்பட்டு அரக்கர்களையும் அசுரர்களையும் கொல்வதற்காக பயிற்றுவிக்கப்படுகிறான். "இதோ ஒரு படைவீரனுக்கான சீருடை இங்கே உள்ளது. நாங்கள் உனக்கொரு வேலை வைத்திருக்கிறோம்" என்று அவனிடம் சொல்கிறார்கள். அதேசமயம் இன்னொரு அடுக்கான அடிப்படை-கருத்தியலும் அங்கே உண்டு. சமஸ்கிருத மொழியில் அதை 'மார்க்கம்' என்பார்கள். பாதை என்று பொருள். அது நீங்கள் உங்களை அறிந்துகொள்வதற்கான பாதை. தொன்மங்கள் கற்பனையிலிருந்து வருகின்றன, கற்பனையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. தொன்மத்தை சமூகம் உங்களுக்கு கற்றுத்தருகிறது. பின் அந்த தொன்மம் உங்களை சமூகத்திலிருந்து விடுவித்து உங்களுக்குள் இருக்கும் ஒரு பாதையில் தியானத்தின் வழியாக உங்களை செலுத்துகிறது.
மனித நாகரிகங்கள் தொன்மத்தை அடித்தளமாக கொண்டிருப்பவை. உதாரணமாக மத்திய காலகட்டத்தின் நாகரிகங்கள் ’தோட்டத்தில் வீழ்ச்சி’, ’சிலுவையின் மீது மீட்பு’, மற்றும் ’சடங்குகளின் வழியாக மீட்பின் கருணையை மனிதனுக்கு கொண்டு செல்வது’ போன்ற தொன்மங்களின் மீது கட்டப்பட்டிருந்தது.
மோயர்ஸ்: ஆனால் தொன்மத்தின் இந்த இரண்டு பிரிவுகளுக்குள்தான் சூனியக்காரிகளையும் நோய் பரப்பும் மந்திரவாதிகளையும் பற்றிய கதைகளை மக்கள் சொன்னார்கள்.
கேம்ப்பெல்: தொன்மங்கள் மற்றும் நாட்டார் கதைகளுக்கு மூன்று மையங்கள் மத்திய காலகட்டத்தில் இருந்தன. ஒன்று தேவாலயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மடங்களும் துறவுச்சாலைகளும். இரண்டாவது கோட்டைகள். மூன்றாவது மக்களுக்கான வசிப்பிடங்கள். தேவாலயம் சடங்குகளின் மையமாக இருந்தது. கோட்டை அந்த தேவாலயத்தை காத்து நின்றது. இந்த அமைப்பில் உங்களுக்கு இரண்டுவிதமான அரசாட்சிகள் இருந்தது. ஒன்று ஆன்மிகமானது, இன்னொன்று உலகியல் வாழ்க்கைக்கானது. ஆனால் இவ்விரண்டுமே ஒரே மூலத்துடன் ஒத்திசைவு கொண்டிருந்தது. அதைத்தான் 'சிலுவையேற்றத்தின் கருணை' என்றார்கள்.
இந்த தேவாலயங்களையும், கோட்டைகளையும், வசிப்பிடங்களையும் வளர்ந்த நாகரிகங்களின் எப்பகுதிக்கு சென்றாலும் நீங்கள் கோவில்களையும், அரண்மனைகளையும் நகரங்களையும் காண்பீர்கள். நாகரீகங்கள் மையங்களை உருவாக்குவதில் வேறுபட்டாலும், இதுவரை அவை ஒரே சமூகமாக இருப்பதால், ஒரே மாதிரியான குறியீட்டு களத்தில் அவை செயல்படுகின்றன.
மோயர்ஸ்: ஒரே மாதிரியான குறியீட்டுக்களமா ?
கேம்ப்பெல்: ஆம். குறியீட்டுக்களம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, ஒரு குறிப்பிட்ட காலத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த மக்களின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டது. அதேசமயம் தொன்மங்கள் என்பவை பண்பாடு, காலம், இடம் ஆகியவற்றுடன் அந்தரங்கமாக பிணைக்கப்பட்டது. ஆகவே அதன் குறியீடுகளும் உருவகங்களும் கலைகளின் வழியாக தொடர்ச்சியாக புத்துயிரூட்டப்படவில்லையெனில் வாழ்க்கை அவற்றிடமிருந்து மிக எளிதாக நழுவிச்சென்றுவிடும்.
மோயர்ஸ்: இன்று உருவகங்களைப் பற்றி பேசுபவர்கள் யார் ?
கேம்ப்பெல்: கவிஞர்கள் அனைவரும். கவிதை என்பது உருவக மொழி.
மோயர்ஸ்: உருவகம் ஆற்றலை குறிக்கிறது.
![]() |
Leonardo da Vinci plan for a church based in San Lorenzo in Milan Manuscript |
கேம்ப்பெல்: ஆம். அத்துடன் அது விழிதுலங்கும் அம்சத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் உண்மையைப் பற்றியும் கருத்துரைக்கிறது. உருவகம் என்பது கடவுளை மூடியிருக்கும் திரை. அதன் வழியாகவே நித்யம் உணரப்படவேண்டும்.
மோயர்ஸ்: நீங்கள் கவிஞர்கள் கலைஞர்கள் பற்றியும் பேசுகிறீர்கள். மதகுருக்களை பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
கேம்ப்பெல்: நமது மதகுரு அமைப்பு உண்மையில் சரியான பணிகளை செய்வதில்லை என்றே நான் எண்ணுகிறேன். அது உருவகங்கள் காட்டும் கருதுகோளைப் பற்றி பேசுவதற்கு மாறாக நன்மை தீமை எனும் நெறிக்குள் தடுமாறி நிற்கிறது.
மோயர்ஸ்: பாதிரியார்கள் ஏன் அமெரிக்க சமூகத்தின் மாந்திரிகர்களாக ஆகியிருக்கவில்லை?
கேம்ப்பெல்: ஒரு பாதிரியாருக்கும் ஒரு மாந்திரீகருக்கும் உள்ள வேறுபாடென்பது - பாதிரியார் ஒரு செயல்பாட்டாளர், ஆனால் மாந்திரீகர் ஏதேனும் ஒரு அனுபவத்தை அடைந்தவர். நமது மரபில் துறவிதான் அனுபவத்தை தேடுபவர், பாதிரியார் சமூகசேவை பயின்றவர் மட்டுமே.
என் நண்பன் ஒருவன் பாங்காக்கில் நடைபெற்ற ரோம-கத்தோலிக தியான அமைப்பின் சர்வதேச அரங்கில் கலந்து கொண்டான். அவன் என்னிடம் இப்படி கூறினான், கத்தோலிக்க துறவிக்கு பௌத்த துறவியை புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் இவ்விரண்டு மதங்களின் குருக்கள் அமைப்புதான் ஒன்றையொன்று புரிந்துகொள்ள இயலாதாக ஆயின.
ஒரு தெய்வீக அனுபவத்தை பெற்ற மனிதன் அதன் அனைத்து குறியீட்டுரீதியான வெளிப்பாடுகளும் தவறானவை என்பதை அறிவான். அக்குறியீடுகள் அவ்வனுபவத்தை வழங்குவதில்லை, அவை பரிந்துரைக்கின்றன. நீங்கள் அந்த அனுபவத்தை பெற்றிருக்காவிடில், அதைப் பற்றி எவ்வாறு நீங்கள் அறிவீர்கள்? வெப்பமண்டல பிரதேசத்தில் பனியையே பார்த்திராமல் வாழும் ஒருவனுக்கு பனிச்சறுக்கு விளையாட்டை விளக்க முயல்வது போலத்தான் அது. செய்தியை புரிந்துகொள்ள ஒரு அனுபவம் இருக்க வேண்டும் அல்லது ஏதாவது குறிப்புகள். இல்லாவிடில் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் செய்தியை நீங்கள் கேட்கமாட்டீர்கள்.
மோயர்ஸ்: அனுபவத்தை அடைந்த ஒரு மனிதன் அதை படிமங்களுடன் இணைத்து தன்னால் இயன்ற அளவிற்கு சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நமது சமூகத்தில் படிமங்களாக சிந்திக்கும் கலையை நாம் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.
கேம்ப்பெல்: ஆம். உறுதியாக நாம் அதை இழந்துவிட்டோம். நமது சிந்தனைமுறை பெரும்பாலும் சிதறுண்டதாகவும், வாய்மொழியாகவும், நேரடியாகவும் உள்ளது. ஒரு சொல்லில் இருப்பதை விட ஒரு படிமத்தில் ’மெய்’ நிறைய உள்ளது.
மோயர்ஸ்: மதம் அளிக்கும் அனுபவத்தினூடாக வரக்கூடிய பித்துநிலையும் மகிழ்ச்சியும் இல்லாததும் மற்றும் ஆழ்நிலை மீதான சமூக மறுதலிப்பும் சேர்ந்து நமது இளைஞர்கள் பலரை போதைமருந்து உபயோகத்திற்கு திருப்பிவிட்டது என என்றாவது நீங்கள் நினைத்திருக்கிறீர்களா?
கேம்ப்பெல்: ஆம். நிச்சயமாக. போதைமருந்தே நமது செல்வழியாக தற்போது உள்ளது.
மோயர்ஸ்: எங்கு செல்வதற்கான வழி அது?
கேம்ப்பெல்: ஒரு அனுபவத்திற்கு.
மோயர்ஸ்: ஆனால் மதமோ அல்லது கலையோ அவ்வனுபவத்தை நமக்கு அளிக்க முடியாதா?
கேம்ப்பெல்: முடியும். ஆனால் அவை இப்போது அதை செய்யவில்லை. மதங்கள் தெய்வீக அனுபவங்களுக்கு பதிலாக சமூகம் மற்றும் நெறி சார்ந்த பிரச்சினைகளை அணுகிக் கொண்டிருக்கின்றன.
மோயர்ஸ்: அப்படியானால், ‘அனுபவம்’ மதத்தின் அழைப்ப்பாகத்தான் இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
கேம்ப்பெல்: ஆம். கத்தோலிக்க சடங்குகளில் இருக்கும் ஒரு அருமையான விஷயம் என்னவென்றால் Communion எனப்படும் 'நற்கருணை' நிகழ்வு. அங்கே இதுதான் மீட்பரின் இரத்தமும் சதையும் என்று உங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. நீங்கள் அதை புரிந்துகொண்டு, அகவயமாகத் திரும்புகிறீர்கள், உங்களுக்குள் கிறிஸ்து செயலாற்றிக்கொண்டிருக்கிறார். மக்கள் 'நற்கருணை' கூட்டங்களிலிருந்து வெளியே வருகையில், அவர்கள் உண்மையிலேயே உள்முகமாக திரும்பியிருப்பதை நீங்கள் காணமுடியும். இதுதான் உங்களில் இருக்கும் ஆன்மாவை தியானத்தின் வழியாக உணர்வதற்கான எழுச்சியூட்டும் ஒரு வழி.
![]() |
Communion |
இந்தியாவில் ஒரு கல்லைச் சுற்றி சிவப்பு வளையம் ஒன்றை வைத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வளையத்தினுள் இருக்கும் அந்த கல் தெய்வீகத்தின் ஒரு திருவுருவாகக் கருதப்படுகிறது. பொதுவாக நீங்கள் பொருட்களை நடைமுறை சார்ந்துதான் எண்ணுவீர்கள், ஆனால் அதன் தெய்வீகம் சார்ந்தும் நீங்கள் சிந்திக்கலாம். உதாரணமாக, இது ஒரு கடிகாரம், ஒரு பொருள், ஆனால் இதற்கு இருப்பு ஒன்று உள்ளது. இப்போது நீங்கள் இதை தரையில் வைத்து, சுற்றி ஒரு வட்டத்தை வரைந்து, அதை அந்த கோணத்தில் எண்ணுங்கள். அதுதான் பிரதிஷ்டை என்றழைக்கப்படும் கருத்து.
மோயர்ஸ்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் அணிந்திருக்கும் கடிகாரத்தை கொண்டு என்ன செய்கிறீர்கள்? எவ்வகையான தெய்வீகத்தை அது வெளிக்கொண்டுவருகிறது?
கேம்ப்பெல்: அது ஒரு பொருள். இல்லையா?
மோயர்ஸ்: ஆமாம்.
கேம்ப்பெல்: ஒரு பொருள் என்றால் என்னவென்று உண்மையில் நீங்கள் அறிவீர்களா? எது அதை பொருளாக ஆக்குகிறது? காலவெளியில் இருக்கும் ஏதோ ஒன்றுதான் அதை பொருளாக ஆக்குகிறது. அது எதுவாக இருப்பினும் அது எவ்வளவு மர்மமானது என்று சிந்தித்து பாருங்கள். கடிகாரம் ஒரு தியானத்திற்கான மையமாக, எங்கும் நிறைந்திருக்கும் இருத்தலின் அறிவார்ந்த மர்மத்திற்கான மையமாக மாறுகிறது. இப்போது இந்த கடிகாரம் பிரபஞ்சத்தின் மையம். அதுதான் சுழலும் இவ்வுலகின் நிலைப்புள்ளி.
மோயர்ஸ்: தியானம் உங்களை எங்கே இட்டுச் செல்கிறது?
கேம்ப்பெல்: அது உங்கள் திறனைப் பொருத்தது.
மோயர்ஸ்: நீங்கள் "ஆழ்நிலையை" பற்றி பேசுகிறீர்கள். "ஆழ்நிலை" என்றால் என்ன? ஆழ்நிலையில் இருக்கும் ஒருவருக்கு என்ன நிகழ்கிறது?
கேம்ப்பெல்: ஆழ்நிலை என்பது ஒரு நுட்பமான தத்துவார்த்த சொல். அதை இரண்டு மாறுபட்ட வகையில் மொழிபெயர்க்கலாம். கிறிஸ்துவ இறையியலில், இந்த சொல் இயற்கையின் களங்களுக்கு வெளியே அல்லது அதைக் கடந்த நிலையில் இருக்கும் இறையை குறிக்கிறது. இது ஆழ்நிலை பற்றி பேசுவதற்கு பொருள்முதல்வாதம் கொண்டிருக்கும் வழி, ஏனெனில் கடவுள் என்பவர் எங்கோ வெளியில் இருக்கும் ஒரு வகையான ஆன்மிகஉண்மை என எண்ணப்படுகிறார். ஹெகல்தான் நமது மனிதவடிவ-கடவுளை வாயுவாலான முதுகெலும்பைப் போன்றவர் என்று குறிப்பிட்டவர். பெரும்பாலான கிறித்தவர்கள் கடவுளைப் பற்றி இதைப் போன்றதொரு கருத்தைத்தான் கைக்கொண்டிருக்கிறார்கள். அல்லது கடவுள் என்பவர் மகிழ்ச்சியான சுபாவமற்ற தாடி வைத்த முதியவர் என்று எண்ணப்படுகிறார்கள். ஆனால் 'ஆழ்நிலை' சரியாக குறிப்பது என்னவென்றால் அனைத்துக் கருத்துக்களையும் கடந்தது என்பதைத்தான். காண்ட் சொல்கிறார், நமது அனைத்து அனுபவங்களும் காலம் மற்றும் வெளியால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அனுபவங்கள் காலத்திலும் இடத்திலும் தன்னை நிகழ்த்திக்கொள்கின்றன.
காலமும் இடமும் நமது அனுபவங்களை கட்டுப்படுத்தும் உணர்வுநிலையை வடிவமைக்கிறது. நமது உணர்வுகள் காலவெளியின் களத்தால் மூடப்பட்டுள்ளது, மேலும் நமது மனங்கள் பலவகை எண்ணங்களின் சட்டங்களால் மூடப்பட்டுள்ளது. ஆனால் நாம் தொடர்புடன் இருக்க முயற்சிக்கும் அந்த அறுதிவிஷயம் அவ்வாறு மூடப்பட்டவில்லை. ஆனால் அதைப் பற்றி சிந்திக்க முயலும்போது நாம் அதை மூடிவிடுகிறோம்.
ஆழ்நிலை இவ்வகையான சிந்தனை அனைத்தையும் கடக்கிறது. இருத்தல் மற்றும் இன்மை என்பவை அதன் வகைமைகள். 'இறை' என்ற சொல் அனைத்து சிந்தனைகளையும் கடந்து செல்லும் ஒன்றை குறிக்கிறது, ஆனால் அந்த 'இறை' எனும் சொல் தன்னளவிலேயே சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
இப்போது நீங்கள் கடவுளை பல்வேறு வழிகளில் மனிதப்பண்புடையவராக ஆக்கலாம். இருப்பது ஒரு கடவுளா? அல்லது நிறைய கடவுள்கள் இருக்கின்றனவா? இவையெல்லாம் வெறும் சிந்தனையின் பிரிவுகள். நீங்கள் பேசிக்கொண்டிருப்பதும் சிந்திக்க முயன்று கொண்டிருப்பதும் இவையனைத்தையும் கடந்தது.
பழைய கிறித்துவ ஞானநூல்களில் சொல்லியிருப்பதைப்போல யகோவாவிடம் இருந்த ஒரு சிக்கல் என்னவென்றால் தான் ஒரு உருவகம் என்பதை அவரே மறந்துவிட்டதுதான். தன்னை ஒரு நிதர்சனமான உண்மை என அவர் எண்ணினார். ஆகவே அவர் 'நான் கடவுள்' என்று சொன்னபோது ஒரு குரல் ஒலித்து, "நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள், சமயேல்" என்று சொன்னது. 'சமயேல்' என்றால் 'விழியற்ற கடவுள்' என்று பொருள், முடிவற்ற ஒளியை காணாது பார்வையின்மை கொண்டவர், ஒரு வரலாற்று வெளிப்பாடு அவர். தன்னைத் தானே கடவுள் என்று அவர் நினைத்துக் கொண்டது ’யகோவாவின் நிந்தனை’ என்று அறியப்படுகிறது.
மோயர்ஸ்: இறை அறியப்பட இயலாதது என நீங்கள் கூறுகிறீர்கள்.
கேம்ப்பெல்: எது அறுதியோ அது இருப்பு இன்மை என்ற வகைகளுக்கு அப்பாற்பட்டது என்று நான் குறிப்பிடுகிறேன். உண்டா இல்லையா? என்ற கேள்விக்கு புத்தர் கூறியதாக சொல்லப்படுவது என்னவென்றால், "அது இருப்பும் இன்மையும் கொண்டது; அது இருப்பும் இன்மையும் அற்றது" என்பதுதான். இருத்தலின் அறுதி மர்மமாகிய இறை சிந்தனைக்கு அப்பாற்பட்டது.
தேவர்களின் தலைவனான இந்திரனைப் பற்றி ஒரு அருமையான கதை உபநிடதம் ஒன்றில் உள்ளது. முன்பெப்போதோ ஒரு காலத்தில் பேருருவ அரக்கன் ஒருவன் பூமியின் அனைத்து நீர்மூலங்களையும் மூடிவைத்திருந்தான். நீரில்லாததால் கடும்வரட்சி ஏற்பட்டு புவி ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இதைக் கண்ணுற்ற இந்திரன் தனது வஜ்ராயுதத்தை அந்த அரக்கன் மீது ஏவி அவனை வெடித்துச் சிதறச் செய்தான். அரக்கன் வீழ்ந்ததும் அடைபட்டிருந்த நீர் பொங்கி ஓடியது. உலகம் புதுப்பொலிவு கொண்டது. "எவ்வளவு மகத்தானவன் நான்" என்றான் இந்திரன்.
அவ்விதம் எண்ணியவுடனே இந்திரன் தன் மதிப்பிற்கேற்ற வகையில் ஒரு அரண்மனையை இப்புவியின் மையத்தில் இருக்கும் பிரபஞ்சமலையில் கட்ட திட்டமிட்டான். இந்திரனின் விழைவிற்கிணங்கி தேவசிற்பி தன் வேலையைத் தொடங்க, வெகுவிரைவில் அங்கொரு அழகிய அரண்மனை உருவானது.
![]() |
இந்திரன் |
வளர்ந்துவரும் அரண்மனையைப் பார்வையிட இந்திரன் அங்கு வருகையிலெல்லாம் அரண்மனையை மேலும் அற்புதமாக, பிரம்மாண்டமாக ஆக்கும் பொருட்டு தான் கொண்டிருந்த பெரும் யோசனைகளை சிற்பியிடம் சொல்லலானான். இந்திரனின் திட்டங்களுக்கெல்லாம் செவி சாய்த்த அந்த சிற்பி, இறுதியில் "தெய்வமே, நாங்கள் இருவருமே இறப்பற்றவர்கள். அவர் ஆசைகளுக்கு முடிவேயில்லை. ஆகவே இவ்வலையில் நான் நிரந்தரமாக சிக்கிக்கொண்டேன்" என்று உணர்ந்துகொண்டான். இதிலிருந்து விடுபட அவன் படைப்பு முதல்வனாகிய பிரம்மாவிடம் சென்று முறையிட முடிவெடுத்தான்.
பிரம்மா தாமரை மலர் மீது அமந்திருப்பவர். தாமரை தெய்வீக ஆற்றலுக்கும் கருணைக்குமான குறியீடாக கருதப்படுகிறது. விஷ்ணுவின் தொப்புளில் முளைத்தது அந்த தாமரை. விஷ்ணு அனந்த சயனத்தில் இருப்பவர், அவர் காணும் கனவு இப்பிரபஞ்சம். இந்திரனின் சிற்பி அந்த மகத்தான தாமரை உள்ள குளத்தின் கரையில் நின்று பிரம்மனிடம் தன் கதையை கூறினான். பிரம்மா அவனை நோக்கி "இதை நான் தீர்க்கிறேன். நீ உன் இல்லம் திரும்பு" என்றார். தனது தாமரை பீடத்திலிருந்து இறங்கி உறங்கும் விஷ்ணு முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தார் பிரம்மா. துயில் கலைந்து எழுந்த விஷ்ணு அனைத்தையும் உணர்ந்து, பிரம்மாவிடம் "நிகழப்போவதை கவனி" என்றார்.
மறுநாள் காலை, இந்திரனின் அரண்மனை வாயில் முன்பு ஒரு கருநீலநிறச் சிறுவன் தன் அழகைப் புகழ்ந்து பேசும் சிறுவர் கூட்டம் ஒன்றினால் சூழப்பட்டுத் தெரிந்தான். இதைக் கண்ட அரண்மனைக் காவலன் உள்ளே ஓடிச்சென்று இந்திரனிடம் விஷயத்தைக் கூறினான். இந்திரன், "அச்சிறுவனை உள்ளே அழைத்து வா" என்றான். உள்ளே அழைத்துவரப்பட்ட சிறுவனிடம் தேவர்க்கரசனான இந்திரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்தபடி, "வருக இளைஞனே, உன் வரவு இனிதாகட்டும், என் மாளிகையைத் தேடி நீ வந்த நோக்கம் என்ன?" என்று வினவினான்.
சிறுவன் இடியென முழங்கும் குரலில் "நன்று, நீ இதுவரை வந்த இந்திரர்களில் எவருமே அமைத்திராத ஒரு மாளிகையை உருவாக்குக்கிறாய் என நான் அறிந்தேன். அதைக் காண வந்தேன்" என்றான்.
இந்திரன் "எனக்கு முன்பே வந்த இந்திரனா? சிறுவனே, நீ எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறாய்?" என்றான்.
சிறுவன், "உனக்கு முன்பே இங்கிருந்த இந்திரர்களைப் பற்றி. தோன்றி மறைபவர்களாக அவர்கள் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். சிந்தித்துப் பார், பிரபஞ்சக்கடலில் விஷ்ணு உறங்கிகொண்டிருக்கிறார், அவரது தொப்புளில் இருந்து பிரபஞ்சத்தின் தாமரை முளைக்கிறது. அந்த தாமரையின் மீது படைப்போனாகிய பிரம்மா அமர்ந்திருக்கிறார். பிரம்மா தன் கண்களை திறக்கையில், ஒரு உலகம் உயிர் கொள்கிறது, அது இந்திரனால் ஆளப்படுகிறது. பிரம்மா தன் விழி மூடுகையில் அந்த உலகம் இருப்பிலிருந்து மறைகிறது. ஒரு பிரம்மாவின் வாழ்நாள் நான்கு இலட்சத்து முப்பத்திரெண்டாயிரம் வருடம். அவர் மரணிக்கையில் அந்த தாமரை மறைந்து மற்றொரு தாமரை மலர்கிறது. பிறிதொரு பிரம்மா தோன்றுகிறார். எண்ணிப்பார், இந்த முடிவிலா வெளியில் ஒன்றைக் கடந்து ஒன்றாக இருக்கும் விண்மீன் மண்டலங்களை, தன் கண்களை மூடி திறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரம்மாவையும் அவர் வீற்றிருக்கும் ஒவ்வொரு தாமரையையும். பிறகு இந்திரர்களை? உலகில் இருக்கும் கடல்களின் நீர்த்துளிகளையும், கடற்கரைகளின் ஒவ்வொரு மணற்பருவையும் கணக்கிட இயலும் அறிவாளி உன் அவையில் இருக்கலாம், ஆனால் எவராலும் பிரம்மாக்களை எண்ண முடியாது, இந்திரர்களையும்தான்" என்றான்.
சிறுவன் இவ்வாறு கூறிக்கொண்டிருக்கையில் எறும்புகளால் ஆன படை ஒன்று தரையில் அணிவகுத்துச் சென்றது. சிறுவன் அதைக் கண்டு நகைக்க, இந்திரன் தன் மயிர்க்கால்கள் சிலிர்க்க எழுந்து நின்று சிறுவனை நோக்கி "ஏன் நகைக்கிறாய்" என்று கேட்டான்.
"உன் மனம் புண்பட விரும்பவில்லை என்றால் நீ அதைக் கேட்காதே" என்றான் சிறுவன்.
"நான் கேட்பேன், எனக்குச் சொல்" என்றான் இந்திரன். (இது ஒருவகையில் கிழக்கைச் சார்ந்த மிகச்சிறந்த யோசனை: அதாவது வலிந்து கேட்கப்படாதவரை நீங்கள் எதையும் கற்றுத் தரக்கூடாது. மக்களின் உள்ளத்திற்குள் நீங்கள் உங்கள் குறிக்கோளை திணிக்கலாகாது)
எறும்புகளை சுட்டிக்காட்டி சிறுவன் கூறலானான், "இவர்கள் அனைவரும் கடந்தகால இந்திரர்கள். பல்வேறு வாழ்க்கைத் தருணங்களூடாக இவர்கள் கீழ்நிலையிலிருந்து மேலான பிரகாசத்தை நோக்கி எழுந்தார்கள். தங்களுடைய இடி ஆயுதத்தை பயன்படுத்தி அரக்கர்களை அழித்தார்கள். அதன்பின் "நான் எத்தகைய நல்லவன்" என்று எண்ணி மீண்டும் கீழிறங்கிவிட்டார்கள்.
சிறுவன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போதே, ஒரு வயது முதிர்ந்த யோகி தன் வளைந்த உடலுடன் வாழையிலையால் ஆன சிறுகுடை ஒன்றைத் தாங்கி அம்மாளிகைக்குள் நுழைந்தார். உடலில் ஒரு புலித்தோலாடை அன்றி அவர் ஏதும் அணிந்திருக்கவில்லை. அவரது மார்பின் மத்தியில் மயிர்களால் ஆன ஒரு வட்டம் இருந்தது, அவ்வட்டம் பாதி மயிர் உதிர்ந்த நிலையில் இருந்தது.
சிறுவன் அவரை நோக்கி வணங்கி இந்திரன் கேட்கவிருந்த கேள்வியை கேட்டான். "முதியவரே, உங்கள் பெயர் என்ன? எங்கிருந்து நீங்கள் வருகிறீர்கள்? உங்கள் குடும்பம் எங்கிருக்கிறது? உங்கள் இல்லம் இருக்குமிடம் எது? மேலும் ஆர்வத்தையூட்டும் உங்கள் மார்பிலிருக்கும் முடிகளால் ஆன நட்சத்திரக்கூட்டத்திற்கு அர்த்தம் என்ன?
"நன்று" என்று கூறி முதியவர் தொடர்ந்தார், "என்னுடைய பெயர் ரோமசன். எனக்கு வீடென்று எதுவுமில்லை. வாழ்க்கை மிகச்சிறியது, அதற்கெல்லாம் நேரமில்லை. நான் இச்சிறுகுடையை மட்டுமே கொண்டிருக்கிறேன். எனக்கு குடும்பம் இல்லை. நான் வெறுமனே விஷ்ணுவின் காலடியில் அமர்ந்துகொண்டு தவமியற்றி, முடிவின்மை பற்றியும் கடந்து செல்லும் காலம் பற்றியும் சிந்திக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒரு இந்திரன் மரணிக்கையில் அவனுடன் சேர்ந்து ஒரு உலகமும் மறைகிறது - ஒரு மின்னல் வந்து செல்வது போல. ஒவ்வொரு முறையும் ஒரு இந்திரன் மறைகையில் என் மார்பின் மையத்தில் இருக்கும் இந்த மயிர்வட்டத்திலிருந்து ஒரு மயிர் உதிர்கிறது. இதுவரை பாதி மயிர் விழுந்துவிட்டது. வெகுவிரைவிலேயே அனைத்தும் உதிரும். வாழ்க்கை மிகச்சிறியது. இதில் நாம் எதற்கு இல்லறத்தை அமைக்க வேண்டும்?
இவ்வாறு சொன்னவுடன் அந்த சிறுவனும் முதியவரும் அங்கிருந்து மறைந்துபோனார்கள். அந்த சிறுவன், விஷ்ணு, உலகைக் காப்பவன். அந்த முதுயோகி உலகை படைத்து அழிப்பவனாகிய சிவன். இருவரும் இந்திரனுக்கு அறிவுறுத்த வருகை புரிந்திருந்தார்கள். இந்த இந்திரன் என்பவன் வரலாற்றில் ஒரு தேவன் மட்டுமே. ஆனால் தானே முழுமுதல்வன் என்று எண்ணியவன்.
தன் மாயை முற்றிலும் கலைந்தவனாக, வீழ்த்தப்பட்டவனாக இந்திரன் அங்கே அந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். தனது சிற்பியை அழைத்து "நான் இந்த மாளிகையிலிருந்து வெளியேறுகிறேன், இப்பணியில் இருந்து நீ விடுவிக்கப்படுகிறாய்" என்றான். சிற்பி தனது நோக்கத்தில் வெற்றி பெற்றான். பணியிலிருந்து நீங்கப் பெற்றான். மாளிகையில் பிறகெந்த பணியும் நடைபெறவில்லை. இந்திரன் அனைத்திலிருந்தும் வெளியேறி ஒரு தவயோகியாக விஷ்ணுவின் தாமரை மலர் பாதத்தில் அமர்ந்து தவம் புரிய முடிவெடுத்தான். ஆனால் அவனுக்கு இந்திராணி என்ற அழகிய அரசி இருந்தாள். இந்திரனின் இந்த திட்டத்தை கேட்ட இந்திராணி ரிஷி ஒருவரிடம் சென்று, "இந்திரன் இப்போது அனைத்தையும் துறந்து யோகியாக அமர வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்" என்றாள்.
ரிஷி "நன்று, என்னுடன் வா பிரியத்திற்குரியவளே, இதை நான் முடிக்கிறேன்" என்றார்.
இந்திரனின் அவைக்கு சென்று இருவரும் அவன் முன் அமர்ந்தனர். ரிஷி இந்திரனை நோக்கி, "பல்லாண்டுகளுக்கு முன்பு நான் உனக்காக அரசியல் கலை பற்றி ஒரு நூலை இயற்றினேன். நீ தேவர்களுக்கெல்லாம் அரசன் என்ற இடத்தில் இருக்கிறாய். நீ காலத்தின் செயற்களத்தில் உதித்த ஒரு வெளிப்பாடு.. இது மேலானவொரு கொடுப்பினை. அதைப் பாராட்டு. அதற்கு மதிப்பளி. உண்மையில் நீ யாரோ, முன்பு நீ எப்படி இருந்தாயோ அப்படியே உன் வாழ்க்கையை எதிர்கொள். இப்போது நான் உனக்காக காதலின் கலை எனும் ஒரு நூலை எழுதுகிறேன். அதன் மூலமாக நீயும் உன் மனைவியும் இணைந்து வாழும் இந்த அற்புதமான வாழ்க்கையில் இருவரும் ஒன்றே என அறிவீர்கள், மேலும் இவையனைத்தையும் படைத்தவனாகிய பிரம்மன் அங்கே தன்னொளியுடன் இருப்பதையும் அறிவீர்கள்”.
இந்த அறிவுரைகளால் இந்திரன் யோகியாகும் தனது எண்ணத்தை கைவிட்டு இவ்வாழ்க்கையிலேயே நித்யத்தை ஒரு குறியீடாக தன்னால் பிரதிபலிக்க முடியும் என்பதை கண்டுகொள்கிறான்.
நாம் ஒவ்வொருவரும் நமது தனி வாழ்க்கையில் ஏதோ ஒரு வழியில் இந்திரனே. நீங்கள் இவையனைத்தையும் துறந்து வனம் புகுந்து ஊழ்கத்தில் அமரலாம். அல்லது உலகியலில் ஈடுபட்டு திறன் கொண்டு சாதனைகள் புரிந்து மனைவியும் குடும்பமும் கொண்ட அன்பிலூறும் வாழ்க்கையை தேர்ந்தேடுக்கலாம். இதை அறிவுறுத்தும் இத்தொன்மம் மிக இனிதான ஒன்று என எனக்குத் தோன்றுகிறது.
மோயர்ஸ்: மேலும் இது நவீன அறிவியலின் கூற்றான காலம் முடிவற்றது என்பதைப் பற்றியும் பேசுகிறது.
கேம்ப்பெல்: அது மட்டுமல்லாமல், எண்ணற்ற விண்மீன் திரள்களையும், மனிதப்பண்பேற்றப்பட்ட நமது கடவுளையும், அவரது மகனையும், அதன் மர்மத்தையும் இச்சிறிய காலத்தில் வைத்து பேசுகிறது.
மோயர்ஸ்: எனினும் அறுதி விஷயங்களைப் பற்றிய நமது சிந்தனைகளின் மீது பண்பாடு எப்போதும் தன் தாக்கத்தை செலுத்தியிருக்கின்றது.
கேம்ப்பெல்: பண்பாடு அதன் கருதுகோள்களைக் கடந்து செல்வதற்கும் நமக்கு கற்றுத் தர முடியும். அதுதான் தீட்சை எனப்படுகிறது. மெய்யான தீட்சை என்பது "சாண்டா கிளாஸ் என்று யாருமில்லை" என எப்போது ஒரு குரு உங்களிடம் கூறுகிறாரோ அப்போது நிகழ்கிறது. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள நல்லுறவின் உருவகத்தன்மையே சாண்டா கிளாஸ். அப்படி ஒரு உறவு இருந்தால் சாண்டா கிளாஸ் உணரப்படமுடியும். ஆனால் சாண்டா கிளாஸ் என்று எவருமில்லை. ஆகவே சாண்டா கிளாஸ் என்பது ஒரு உறவை பாராட்டுவதற்கு குழந்தைகளைத் தூண்டும் ஒரு எளிய வழி மட்டுமே.
வாழ்க்கை என்பது அதன் சாரத்திலும் தன்மையிலும் பயங்கரமானவொரு மர்மம் - அதாவது வாழ்க்கை ஒட்டுமொத்தமாக கொல்லுதலும் புசித்தலுமாக உள்ளது. ஆனால் இந்த வலிகளுக்காக வாழ்க்கையை மறுதலிப்பதும், இது இவ்வண்ணம் இருந்திருக்கக்கூடாது என்று சொல்வதும் குழந்தைத்தனமானது.
மோயர்ஸ்: "வாழ்க்கை இடர்களாலானது" என்று ஸோர்பா கூறுகிறார்.
கேம்ப்பெல்: ஆம். மரணம் மட்டுமே பிரச்சினையில்லாதது. மக்கள் என்னிடம், “இவ்வுலகைப் பற்றி நேர்மறையான பார்வை உங்களுக்கு உண்டா?” என்று கேட்பார்கள். நான் அதற்கு, “ஆம், வாழ்க்கை தான் இருக்கும் விதத்தினாலேயே உன்னதமானது. மேலும் அதை நீங்கள் சரிசெய்யப் போவதில்லை. ஒருவரும் இதை ஒருபோதும் சிறப்பானதாக ஆக்கியதில்லை. இது ஒருபோதும் சிறப்பானாதாக இருக்கவும்போவதில்லை. இது இப்படித்தான். ஆகவே இதை ஒப்புக்கொள்ளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள். நீங்கள் இதை சரிசெய்யவோ அல்லது மேம்படுத்தவோ போவதில்லை" என்று பதிலளிப்பேன்.
மோயர்ஸ்: நீங்கள் சொல்வத் தீமைக்கெதிராக ஒரு செயலற்ற மனப்பாங்கிற்கு வழிகாட்டுவதாக உள்ளதே?
கேம்ப்பெல்: நீங்கள் தானாகவே தீமையில் பங்குகொண்டிருக்கிறீர்கள். அப்படி இல்லையெனில் நீங்கள் உயிருடன் இருக்க முடியது. நீங்கள் எதைச் செய்தாலும் அது எவரோ ஒருவருக்கு தீங்கானதே. இது இந்த படைப்பு முழுவதிலும் காணப்படும் அங்கதங்களில் ஒன்று.
மோயர்ஸ்: நன்மை தீமை எனும் கருத்து தொன்மத்தில் எப்படி பார்க்கப்படுகிறது? அதாவது வாழ்க்கை என்பதே இருளின் விசைக்கும் ஒளியின் விசைக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம் எனும் கருத்து.
கேம்ப்பெல்: அது ஜுரோஸ்ட்ரியன் கருத்து, யூதமதத்திலும் கிறிஸ்தவத்திலும் நுழைந்தது. மற்ற மரபுகளில் நன்மை தீமை என்பது நீங்கள் இருக்கும் தரப்பைப் பொருத்தது. எது ஒருவருக்கு நன்மையோ அதுவே இன்னொருவருக்கு தீமை. இவ்வுலகம் எத்தனை பயங்கரமானது என்பதை உணர்ந்தபோதும் நீங்கள் இவ்வுலகிலிருந்து பின்வாங்காமல் உங்கள் பணியை செய்கிறீர்கள். அதே சமயம் இந்த பயங்கரம் ஒரு வினோதத்தின் நிகழ்களம் என்றும் கண்டுகொள்கிறீர்கள்: ஒரு அச்சுறுத்தும் கவர்ச்சியான மர்மம் (a mysterium tremendum et fascinans) என்று அது சொல்லப்படுகிறது.
"அனைத்து வாழ்க்கையும் துன்பகரமானது" என்பது பௌத்தத்தின் முதற்சொல், மேலும் அது அப்படித்தான். துன்பத்தையும் இழப்பையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த லௌகீகம் இல்லையெனில் வாழ்க்கை இருந்திருக்காது. நீங்கள் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், இவ்வழியில் அது அற்புதமாக இருப்பதையும் காணவேண்டும் - இதுதான் கடவுள் உத்தேசித்த வழியும் கூட.
மோயர்ஸ்: நீங்கள் அதை உண்மையாகவே நம்புகிறீர்களா?
கேம்ப்பெல்: வாழ்க்கை தன்னளவில் மகிழ்ச்சிகரமானது. ஆனால் இது இவ்வாறு இருக்கவேண்டும் என ஒருவர் உத்தேசித்து வடிவமைத்தார் என்பதை நான் நம்பவில்லை. ஆனால் இது இவ்வண்ணமே இருக்கிறது. "வரலாறு என்பது நான் விழித்தெழ முயற்சிக்கும் ஒரு கொடுங்கனவு" என்பது ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) சொன்ன ஒரு மறக்கமுடியாத வரி. அக்கனவிலிருந்து விழித்தெழுவதற்கான வழி, இவையனைத்தும் அச்சுறுத்தும் சக்தியின் ஒரு வெளிப்பாடு என்று அடையாளம் கண்டுகொள்வதுதானே தவிர அதைக் கண்டு அஞ்சியிருப்பது அல்ல. அதுதான் எல்லா படைப்புகளை பற்றியதும். இவற்றின் முடிவுகள் எப்போதும் வலிமிகுந்தது. ஆனால் வலியும் இவ்வுலகத்தின் ஒரு பகுதிதான்.
மோயர்ஸ்: ஆனால் அதுதான் அறுதி முடிவு என்று நீங்கள் ஒப்புக்கொண்டீர்களானால், நீங்கள் எந்த சட்டங்களையும் இயற்ற மாட்டீர்கள், எந்த போரையும் நிகழ்த்த மாட்டீர்கள். மேலும்,
கேம்ப்பெல்: இல்லை. நான் அப்படிச் சொல்லவில்லை.
மோயர்ஸ்: அனைத்தையும் அது இருக்கும்வண்ணமே ஏற்றுக்கொள்வோம் என்பதிலிருந்து நாம் வரக்கூடிய தர்க்கபூர்வமான முடிவு அதுதானே?
கேம்ப்பெல்: அப்படி ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்பதில்லை. "எப்படியாயினும் நான் இந்த வாழ்க்கையில் பங்குகொள்வேன், இராணுவத்தில் இணைவேன், போரிடுவேன்” என்றும்கூட நீங்கள் சொல்லலாம்.
மோயர்ஸ்: அதாவது "என்னால் இயன்ற சிறந்ததை நான் இயற்றுவேன்" எனலாம்.
கேம்ப்பெல்: ஆம். நான் இந்த விளையாட்டில் ஈடுபடுவேன், இது ஒரு அருமையான ஓப்ரா (Opera). சற்று வலியளிக்கும் என்பதைத் தவிர!
உறுதிகொள்தல் என்பது கடினமானது. நாம் எப்போதுமே நிபந்தனைகளுடன்தான் உறுதி கொள்கிறோம். சாண்டா கிளாஸ் கூறியது போல் உலகம் இருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாகக் கொண்டு நான் இந்த உலகத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி உறுதி செய்வது மிகவும் கடினமான ஒன்று - ஆனால் சடங்குகள் செய்வது இதைத்தான். சடங்கு என்பது கடுமையான வெறுக்கத்தக்க செயல்களில் கூட்டாக பங்கேற்பது. வாழ்க்கை அவ்வாறுதான் செயல்படுகிறது - அதாவது இன்னொரு உயிரை கொன்று உண்பது. நாம் அதை கூட்டாக செய்கிறோம். வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளது.
நாயகன் என்பவன் தெளிவாகவும் துணிவுடனும் வாழ்க்கையில் கலந்துகொள்கிறான். தனிப்பட்ட வெறுப்போ ஏமாற்றமோ வஞ்சமோ இல்லாமல் அவன் இயல்பாக வாழ்க்கையில் பங்கெடுக்கிறான்.
நாயகனின் செயல்வட்டம் என்பது ஆழ்நிலையில் இருப்பதல்ல, அதாவது அனைத்தையும் கடந்தநிலையில் இருப்பதல்ல. மாறாக இங்கே இப்போது காலத்தின் செயற்களத்தில், நன்மை தீமை எனும் முரண்களின் இணைகளுடன் உள்ளது. எப்போதெல்லாம் ஒருவன் ஆழ்நிலையிலிருந்து வெளியேறுகிறானோ அப்போது அவன் முரண்-களத்திற்குள் வருகிறான். நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் (Tree of knowledge) பழத்தை உண்ட ஒருவர், நன்மை தீமை இவற்றிற்குள் மட்டுமல்லாமல், ஆண் பெண், சரி தவறு, இது அது, இருள் ஒளி என அனைத்திற்குள்ளும் வந்துவிடுகிறார். காலத்தின் செயற்களத்தில் இருக்கும் அனைத்தும் இருமையால் ஆனது: கடந்த காலம் எதிர் காலம், மரணம் உயிருடன் இருத்தல், இருப்பு இன்மை. ஆனால் இந்த கற்பனையின் உச்சபட்ச இணை என்பது ஆணும் பெண்ணும்தான். ஆண் மூர்க்கத்தை வெளிப்படுத்துபவனாக இருக்கையில் பெண் பெற்றுக்கொள்பவளாகவும், ஆண் போர்வீரனாக இருக்கையில் பெண் கனவு காண்பவளாகவும் இருக்கிறார்கள். நம்மிடம் காதலுக்கும் போருக்கும் சாம்ராஜ்ஜியங்கள் உள்ளன. ஃபிராய்டின் Eros and Thanatos கோட்பாட்டினைப் போல.
ஹெராக்லிடிஸ் “கடவுளைப் பொருத்தவரையில் அனைத்துமே நல்லது, சரியானது, நியாயமானது, ஆனால் மனிதர்களுக்கு சில விஷயங்கள் சரியானது, மற்றவை அப்படியல்ல” என்கிறார். நீங்கள் மனிதனாக இருக்கையில் காலம் மற்றும் தீர்மானங்களின் களத்தில் இருக்கிறீர்கள். வாழ்க்கையின் பல பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், இவை இரண்டையும் பற்றிய உணர்தலோடு இருப்பது. இப்படிச் சொல்லலாம், “நான் மையத்தையும் அறிவேன், நன்மை தீமை என்பதெல்லாம் எளிய தற்காலிகமான பிறழ்வுகள் மட்டுமே என்பதையும் அறிவேன், கடவுளின் பார்வையில் எந்த வேறுபாடும் இல்லை என்பதையும் அறிவேன்”.
மோயர்ஸ்: அதுதான் உபநிடதங்களின் கருத்து. “ஆணுமல்ல, பெண்ணுமல்ல, நடுநிலையுமல்ல. எதை தன்னுடலென கொள்கிறதோ அதன் வழியாக அது தழைக்கிறது.”
கேம்ப்பெல்: அது சரிதான். இயேசு சொல்கிறார், “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்”. அதாவது, நீங்கள் நன்மை தீமை பற்றி சிந்திப்பதற்கு முன்னால் சொர்க்கத்தில் உங்களை மீண்டும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பிரசங்க மேடைகளிலிருந்து இவ்வளவையும் கேட்கமாட்டீர்கள். வாழ்க்கையின் பெரும் சவால்களில் ஒன்று, உள்ளத்தில் நீங்கள் மிகவெறுக்கக்கூடிய ஒரு மனிதனுக்கோ, செயலுக்கோ அல்லது நிலைக்கோ “ஆம்” என்று சொல்வது.
மோயர்ஸ்: மிகவெறுக்கக்கூடியது என்றால்?
கேம்ப்பெல்: இவ்வகையான விஷயத்திற்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று செயலாற்றுபவராக உங்களுடைய தீர்மானம், இரண்டு உருவகரீதியான அவதானிப்பாளராக உங்களுடைய தீர்மானம். நீங்கள் நச்சுப்பாம்புகள் இருக்கவேகூடாது என்று சொல்ல முடியாது, ஏனெனில் அதுதான் வாழ்க்கையின் வழி. ஆனால் செயல்பாட்டு களத்தில் நீங்கள் ஒரு நச்சுப்பாம்பு ஒருவரை தீண்டவிருப்பதைக் கண்டால் அதை அடித்துக்கொல்வீர்கள். பாம்பிடம் அவ்வாறு செய்யாதே என சொல்லமுடியாது, மாறாக நீங்கள் அச்சூழ்நிலையை தவிர்கிறீர்கள். ரிக் வேதத்தின் ஒரு மிகச்சிறந்த வரி சொல்வதென்னவென்றால், "அந்த மரத்தின் மேல் அதாவது வாழ்க்கையெனும் மரத்தின் மேல் அல்லது உங்கள் சொந்த வாழ்க்கை மரத்தின் மேல் இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. ஒன்று அம்மரத்தின் கனியை கொத்தி உண்கிறது, இன்னொன்று வெறுமனே வேடிக்கை பார்க்கிறது." இப்போது கனி உண்ணும் பறவை அக்கனியை கொன்று கொண்டிருக்கிறது. வாழ்க்கை உயிரின் மீது நிகழ்கிறது. அதுதான் இவையனைத்தையும் பற்றி சொல்வது.
இந்தியாவில் இப்பிரபஞ்சமே அவனின் நடனம் என்று கருதப்படக்கூடிய கடவுளான சிவனைப் பற்றியவொரு சிறிய தொன்மக்கதை சொல்லப்படுகிறது. அவர் தனது மனைவியாக மலையரசனின் மகளான பார்வதியை கொண்டிருந்தார். ஒரு அசுரன் சிவனிடம் வந்து உனது மனைவியை எனது எஜமானியாக்க நான் விரும்புகிறேன் என்றான். சிவன் கோபமடைந்து தன் மூன்றாம் விழியை திறந்தார். பெரு மின்னலும் இடியும் வெடித்துக் கிளம்பி அவ்விடமே நெருப்பாலும் புகையாலும் மூடப்பட்டது. புகை மறைந்த பின் மெலிந்த உடல் கொண்ட புதிய அசுரன் ஒருவன் தன் தலைமயிர் சிம்மத்தின் பிடரிமயிர் போல நாற்புறமும் பறக்க அங்கு தோன்றியிருப்பது தெரிந்தது. முதல் அசுரன் தன்னை கொன்றுண்ண வந்திருக்கும் இந்த புதிய அசுரனைக் கண்டான். இப்படியொரு சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் இப்போது என்ன செய்வீர்கள்? மரபு கூறும் வழி என்பது, இறைவனின் கருணையை நாடுவது. முதலசுரனும், "இறைவா, என்னை உன் கருணையின் கீழ் ஒப்படைக்கிறேன்" என்றான். இந்த தெய்வ விளையாட்டிலும் சில விதிமுறைகள் உண்டு. யாரவது உங்கள் கருணையை எதிர்நோக்கி தன்னை அடிபணியச் செய்தால், நீங்கள் கருணையை அளித்திட வேண்டும்.
ஆகவே சிவன் கூறினான் "என்னுடைய அருள் உனக்குண்டு. உடல் மெலிந்தவனே, நீ அவனை உண்ணலாகாது" என்று புதிய அசுரனை நோக்கி கூறினான்.
“நன்று” என்று பதிலுரைத்த அந்த மெலிந்த அசுரன், “இப்போது நான் என்ன செய்வது? எனக்கு பசிக்கிறது. இவனை உண்ணும் பொருட்டு நீ என்னை பசியுடன் படைத்தாயே" என்று கேட்டான்.
"ஆம் என்ற சிவன் "உன்னையே நீ உண்க" என்று மறுமொழியுரைத்தான்.
அந்த மெலிந்த அசுரன் தன் கால்களில் தொடங்கி தன்னைத்தானே வெறிகொண்டு ஒலியுடன் கடித்துண்ணத் தொடங்கினான். இதுதான் வாழ்க்கை உயிரின் மீது நிகழ்கிறது என்பதற்கான படிமம். இறுதியாக முகத்தைத் தவிர மீதமில்லாமல் அனைத்தையும் தின்று முடித்திருந்தான் அந்த ஒல்லி அசுரன். சிவன் அந்த முகத்தைக் கண்டு, வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கு இதை விட பெரிய மெய்ப்பித்தலை நான் கண்டதில்லை என்றார். நான் உன்னை “கீர்த்திமுகன்” என்றழைக்கிறேன். மகிமை பொருந்திய முகம் என்றுபொருள். நீங்கள் அம்முகத்தை, அதாவது மகிமையின் முகத்தை சிவன் கோவில்களிலும் புத்தரின் கோவில்களிலும் உள்ள நுழைவாயில்களில் காண்பீர்கள்.
சிவன் அந்த முகத்தை நோக்கி சொன்னார், “உன் முன் பணியாதவன் என்னை வந்தடையும் தகுதியற்றவன்”. நீங்கள் வாழ்க்கையின் இந்த அற்புதத்திற்கு “ஆம்” என்று சொல்லியாகவேண்டும், உங்கள் விதிகளை அது பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையில்லாமல். இல்லையெனில் நீங்கள் ஒருபோதும் இந்த மீபொருன்மை பரிமாணத்தை புரிந்துகொள்ள மாட்டீர்கள்
ஒருமுறை நான் இந்தியாவில் ஏதாவது ஒரு முக்கியமான குருவையோ அல்லது ஆசிரியரையோ நேரடியாக சந்திக்க வேண்டும் என எண்ணினேன். ஆகவே நான் பெரிதும் கொண்டாடப்படும் ஆசிரியரான ஸ்ரீ கிருஷ்ணமேனன் என்பவரை காண்பதற்காக சென்றேன். என்னை கண்டதும் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி “உனக்கு ஏதாவது வினா இருக்கிறதா” என்பதுதான்.
பொதுவாக இம்மரபில் உள்ள ஆசிரியர்கள் கேள்விக்கான விடைகளையே எப்போதும் சொல்கிறார்கள். நீங்கள் கேட்கத் தயாராக இல்லாத வரை அவர்கள் எதுவும் சொல்வதில்லை. ஆகவே நான் சொன்னேன், “எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்துசிந்தனையின்படி அனைத்துமே பிரபஞ்சத்தின் ஒரு வெளிப்பாடு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே ஒரு புனிதத்தின் வெளிப்பாடு என்றாகுகையில் நாம் எவ்வாறு இவ்வுலகத்தில் இருக்கும் எதையாவது மறுக்க முடியும்? எப்படி நாம் கொடூரத்திற்கு, முட்டாள்தனத்திற்கு, அசிங்கத்திற்கு, சிந்தனையின்மைக்கு நமது மறுப்பைச் சொல்ல முடியும்?
அதற்கு அவர், “உனக்கும் எனக்கும் இருக்கும் வழி என்பது ஆம் என்று சொல்வதுதான்” என்று பதில் அளித்தார்.
பிறகு நாங்கள் இருவரும் அனைத்து விஷயங்களின் மீதான உறுதிப்பாட்டினை பற்றி ஒரு மிக அருமையான உரையாடலில் ஈடுபட்டிருந்தோம். அது, இவையனைத்தையும் தீர்மானிக்க நாம் யார் என்ற எனது உணர்வை மேலும் உறுதி செய்தது. இது இயேசுவும் அளித்த மாபெரும் போதனைகளில் ஒன்று என எனக்குத் தோன்றியது.
மோயர்ஸ்: மரபார்ந்த கிறித்துவ கோட்பாடுகளில், இந்த பௌதிக உலகம் இழிவாகக் கருதப்பட வேண்டியது, வாழ்க்கை இதற்குப்பிறகு நமக்குரிய வெகுமதிகளுடன் சொர்க்கத்தில் மீட்டெடுக்கப்பட வேண்டியது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் சொல்வதென்னவென்றால், ’வருந்துவதற்குரியவற்றின் மீது நாம் உறுதி கொண்டிருந்தால், நாம் இந்த உலகத்தையே உறுதியாக்குகிறீர்கள், அதுவே தற்போது நம்முடைய நித்யம்’ என்று.
கேம்ப்பெல்: ஆம். நான் அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நித்யம் பிறகு எப்போதோ வருவதில்லை. நித்யம் என்பது நீண்ட காலம் என்பதுகூட இல்லை. காலத்திற்கும் நித்தியத்திற்கும் எந்த தொடர்புமில்லை. நித்தியம் உங்களுக்கு இங்கே கிடைக்கவில்லை என்றால் பின் வேறெங்கும் அது கிடைக்காது. சொர்க்கத்தின் இடர் என்னவென்றால், உங்களுக்கு அங்கே மிகச்சிறந்த பொழுதுகள் கிடைக்கும், அதில் நீங்கள் நித்தியத்தை பற்றி எண்ணவே மாட்டீர்கள், கடவுளின் அழகான உருவில் நீங்கள் முடிவிலா சந்தோஷத்தை பெறுவீர்கள் என்பதுதான். ஆனால் நித்தியத்தின் அனுபவம் என்பது இங்கேயே இப்போதே அனைத்திலும் உள்ளது. நீங்கள் நன்மை என்றோ அல்லது தீமை என்றோ அதை எண்ணினாலும் அதுதான் வாழ்க்கையின் செயல்பாடு.
மோயர்ஸ்: அவ்வளவுதான்.
கேம்ப்பெல்: ஆம். அவ்வளவுதான்.
- அத்யாயம் இரண்டு நிறைவு.
மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி
--------------------------------------------------------------
![]() |
மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல் |
![]() |
பூபதி துரைசாமி |
பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.