கி.பி.800 முதல் தொடர்ந்தமைந்த 250 ஆண்டுகளைக் கவிதையியலின் படைப்புக் காலகட்டம் என்று கூறவேண்டும். குறிப்புக்கொள்கை வடிவம் கொண்டு, வெளிச்சத்திற்கு வந்து அதன்மீது எதிர்ப்புகள், மறுப்புகள், விமர்சனங்கள், விளக்கங்கள் எல்லாம் தோன்றி, மாற்றுத்தரப்புகளும் அவ்வப்போது எழுந்து தணிந்துவிட்ட நிலையில் குறிப்புக்கொள்கையே மரபின் அடிப்படையாக நிலைப்பெற்றுவிட்டது. இதுநிகழ இத்தனைக் காலம் வேண்டியிருந்தது. கற்பனையும் நுண்ணுணர்வும் மிக்க இலக்கணவாதிகளிடையே இந்தக் காலகட்டத்தில் எழுந்த அளவிற்கு இதற்கு முன்பும் பின்பும் கருத்து மாறுபாடுகள் கவிதையியலில் ஏற்பட்டிருக்கவில்லை. சுற்றிவந்த கவிதையியல் தேர் தான் நிலைகொள்ள வேண்டிய இடத்திற்கு வருகைதரும் சூழல் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தான் அமைந்தது. எல்லாக் கவிதை அம்சங்களையும் குறிப்புக்கொள்கை நோக்கிலிருந்து முறையாக விளக்கும் பாடநூல் ஒன்றின் தேவையும் எழுந்தது. சுவை, குணம், குற்றம், அணி முதலியவை கவிதையில் பெறும் இடத்தை ஆனந்தவர்தனர் முடிவு செய்திருந்தார். அதேசமயம் இவற்றைக் கவிதையில் நிறுவும் பணியில் அவர் ஈடுபடவில்லை. அவ்வாறு செய்வதற்குத் த்வன்யாலோகக் கட்டமைப்பில் இடமும் இல்லை. சுவை, குணம், குற்றம், அணி இவற்றை கவிதையில் நிறுவும் பணியைச் செய்து முடித்தவர் மம்மடர்.[1]
ஆனந்தவர்தனர் காட்டிய பாதையையே முதன்மையாகப் பின்பற்றித் தொன்மையான அணி நூல்கள் அங்கீகரிக்கும் அம்சங்களை, த்வனியை விளக்கிக்கூறும் முயற்சியின் பகுதிகளாக மம்மடரும் அமைத்துக்கொண்டார். இவ்வாறு குறிப்புக்கொள்கையை விவரிப்பதாகவும் மறுப்புகளை கண்டிக்கும் விளக்கங்களாகவும் அமைந்த ‘காவ்யப்ரகாசம்’ என்ற நூலை மம்மடர் எழுதியிருக்கிறார். கவிதைச் சிந்தனையில் இவர் கூறாமல் விட்டிருப்பது நாடக இலக்கணம் மட்டும்தான். எல்லையற்ற அறிவுடையவர் மம்மடர். முன்களவீரராக நின்று இலக்கணத்தில், செறிவான யாப்பில் குறிப்புக்கொள்கையை விளக்கும் நூலை இவர் எழுதினார். விளைவாக த்வனிக்கொள்கையின் எதிர்நிற்க எவரும் எஞ்சியிருக்கவில்லை.
இந்தியக் கவிதையியலின் இறுதிச்சொல்லாக இதுவே நிலைப்பெற்றுவிட்டது. பிற்காலத்தைச் சார்ந்த எண்ணற்ற அணியியலாளர்களுக்கு ‘காவ்யப்ரகாசம்’ தான் முன்னுதாரணம், மூலநூல். இந்த இடத்தில்தான் மம்மடர் மாண்பு விளங்குகிறது.[2]
காவ்யப்ரகாசத்துக்கு கணக்கற்ற உரைகள் தோன்றியுள்ளன. இந்த நூலுக்கு உரை வகுத்தால் அன்றி ஒருவர்தம் கல்வி நிறுவப்படுவதில்லை, என்ற எண்ணம்கூட வலுவாக எழுந்தது. விளைவாக இலக்கிய ஈடுபாடு இருந்தாலும், இல்லாமல் போனாலும் தம் இலக்கண அறிவை வெளிப்படுத்தும் நோக்கில் உரை எழுதும் பணியில் பலரும் ஈடுபடத் தொடங்கினார்கள்.[3]
“காவ்யப்ரகாசத்திற்கு வீடுதோறும் உரைகள் தோன்றியிருந்தும் இந்த நூல் எப்போதும்போல செறிவாகவே இருக்கிறது” என்று ஓர் உரையாசிரியர் கூறியிருக்கிறார்.
[காவ்யப்ரகாஸ்ய க்ருதா க்ரிஹெ க்ரிஹெ
வ்யாக்யா ததாப்ஸ்யேஷா ததைவ துர்கமஹா]
எழுபது உரைகளுக்கும் மேல் கிடைத்திருப்பதாக தற்போது கணக்கிட்டிருக்கிறார்கள். ‘அலங்காரசர்வஸ்வ’ ஆசிரியர் ருய்யகர், ‘சாஹித்ய தர்பண’ ஆசிரியர் விஸ்வநாதர் முதலிய புகழ்ப்பெற்ற கவிதையியலாளர்களும் காவ்யப்ரகாசத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.[4]
‘வாக்தேவியின் அவதாரம்’ என்னும் சிறப்பும் கூட மம்மடருக்கு அமைந்துவிட்டது. இவ்வாறு காவ்யப்ரகாசம் பெற்ற அரிய சிறப்பு காரணமாக முக்கியமான பல நூல்கள் உரிய அங்கீகாரத்தை இழந்துவிட்டன. இந்த நிலை த்வன்யாலோகத்திற்கும் ஏற்பட்டு அறிஞர்களிடையே த்வன்யாலோகப் பயிற்சியும் குறைந்துவிட்டது என்று கூறாமல் இருக்கமுடியவில்லை. மம்மடர் எழுதியுள்ள இந்தப் பாடநூலின் பொருளடக்கப்பகுதியை இனி காணலாம். காரிகை, விருத்தி என்னும் வடிவில் காவ்யப்ரகாசம் இருக்கிறது. மொத்தம் பத்து உல்லாசங்கள் (இயல்கள்) இந்த நூலில் உள்ளன. கவிதை இலக்கணம், கவிதையின் தோற்றம், பயன், கவிதை வகை தொடர்பான செய்திகள் மிகச் சுருக்கமாக முதல் உல்லாசத்தில் வந்திருக்கின்றன. இரண்டாவது பகுதியில் சொற்செயல்பாடு குறித்த ஆராய்ச்சியும், மூன்றாவது பகுதியில் சுருக்கமான நிலையில் குறிப்புப் பொருள் தொடர்பான செய்திகளும் முறையே இடம்பெற்றுள்ளன. குறிப்பின் வகைகள் நான்காம் பகுதியில் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. சுவை தொடர்பான ஆராய்ச்சியும் இதே பகுதியில் விரிவாக இடம்பெற்றுள்ளது.
எளியநிலைக்குறிப்பு [குணிபூத வ்யங்க்யம்] தொடர்பான செய்திகளும் குறிப்புப்பொருள் மீதமைந்த விமர்சனங்களுக்கு மறுப்பும் ஐந்தாம் உல்லாசத்தில் இருக்கின்றன. மிகவும் சிறியதாக உள்ள ஆறாம் உல்லாசம் சித்திரக் கவிதை இலக்கணத்தைத் தெரிவிக்கிறது. குற்றம், குணம், சொல்லணி, பொருளணி ஆகியவற்றை ஏழு முதல் பத்து வரை அமைந்த உல்லாசங்களில் முறையே நிறுவியிருக்கிறார் மம்மடர். காவ்யப்ரகாசத்தில் குற்றம், குணம், சொல்லணி, பொருளணி சார்ந்த விவரிப்புகளே பாதி அளவுக்குமேல் நிறைந்துள்ளன. இந்த நிலையில் தொன்மையான அணியியலாளர்கள் எடுத்துக்கூறும் செய்திகளை, அவர்களை விடவும் விரிவாக மம்மடர் கூறியிருக்கிறார் என்பது நன்கு புரிந்திருக்கும். அணிகளை வரையறுக்கும்போது உத்படர் முதலியவர்களின் முறையைப் பெரும்பாலும் பின்பற்றியிருக்கிறார் இவர். அதேசமயம் பல இடங்களில் மம்மடர் தம்முடைய கருத்துகளையே முன்வைத்திருக்கிறார். குண விமர்சனப் பகுதியில் வாமனருக்கு உயிராகிய இருபது குணங்களைப் பரிசீலித்து அவற்றை மறுத்து மூன்றாக குறைத்துவிட்டார் இவர். குற்றங்களை நீக்கும் ‘தோஷ ப்ரகரணம்’ பகுதி காவ்யப்ரகாசத்தில் மிகவும் பரந்து விரிந்ததாக உள்ளது.[5]
ஸ்ரீஹர்ஷர் என்பவர் ‘புலமை மருந்து’ என்று கருதப்படும் ‘நைஷதம்’ என்னும் காவியத்தை தம் மாதுலர் மம்மடரின் பார்வைக்குக் கொண்டுவந்தபோது மம்மடர் “எனக்கு முதலிலேயே இந்தப் படைப்பைக் காட்டியிருந்தால் எவ்வளவோ நன்மை விளைந்திருக்கும்,[6] குற்றங்களைச் சுட்டிக்காட்டும் காவ்யப்ரகாச ஏழாம் உல்லாசத்திற்கு மற்ற இடங்களிலிருந்து உதாரணங்களைத் தேடிக்கொடுக்கும் சிரமம் குறைந்திருக்கும்” என்று கூறிவிட, ஸ்ரீஹர்ஷர் உடனே சினம் கொண்டு “கவிதை நங்கையை துன்புறுத்தத்தான் மம்மடருக்குத் தெரியும்; கவிதையைத் துய்க்க அவருக்குத் தெரியாது” என்று பொருள் தரும் ஒரு கண்டன ஸ்லோகம் வகுத்துவிட்டதாகக் கூறப்படுவதுண்டு.
இதன் வரலாற்று உண்மையும், குற்றம் கடியும் மம்மடர் திறனும் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும், ரசனை போதாது என்ற குற்றச்சாட்டிலிருந்து எல்லா நேரத்திலும் மம்மடர் தப்பித்துவிடுவார் என்று கூறுவதற்கில்லை. இவர் குறைத்துச் சொல்லும் செய்யுள்களில் பல நமக்கு உயர்ந்த கவிதைகளாகத் தோன்றுகின்றன. குறிப்பை வெளிப்படுத்தும் கவிதைகள் என்று உயர்த்திப் பிடிக்கும் பல கவிதைகள் நமக்கு எழில் குறைந்த கவிதைகளாகப் படுகின்றன. கவிதை தொடர்பான பார்வை வேறுபாடும் கால மாற்றத்தின் விளைவான ரசனை மாறுபாடும் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தில் முன்னோர்கள் நிராகரிப்பிற்கும் ஒரு வாய்ப்பளிக்கவேண்டும்; எடுத்துக்காட்டு ஒன்றை இங்கு கொடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
அரக்கன் ஹயக்ரீவனின் பேராற்றல் எந்த அளவுக்கு இருந்தது என்பதை வருணிக்கும் செய்யுள் இது.
“மனிதர்களைக் கடைந்தவன் அவன்; மாளிகையிலிருந்து இயல்பாகத்தான் புறப்பட்டான். அதுகேட்டே நடுநடுங்கி இந்திரன் கதவடைத்துத் தாழிட்டுக்கொண்டான்.
அஞ்சிக் கண் மூடிற்று அமர நகரி! “
[விநிர்கதம் மானதமாத்மா மந்திராத் பவத்யுபாஷ்யுருத்யா எத்ரிச்சயபியம் ஸஸம்ரமேந்த்ர த்ருத பாத்ரி தார்கலா நிமிலிதாக்ஷிவ பியாமராவதி][7]
இதில் எந்தக் குறிப்புப்பொருளும் தெளிவாகத் தெரிவதில்லை, எனவே, இது கீழான கவிதை என்பது மம்மடர் கருத்து. பொருளை நேரிடையாக உணர்த்துவதன் அடிப்படையில் வாச்யசித்திரம் என்பதற்கு இந்தக் கவிதையை உதாரணமாகக் கொடுத்துள்ளார் மம்மடர். [காவ்யப்ரகாசம் 1, 5 ப்ரயோகம் உதாரணச் செய்யுள்]. ஆனால் ‘காவ்யப்ரதீப’ ஆசிரியர் ‘கோவிந்த தக்கூரர்’ இந்த நிலைப்பாட்டை ஏற்பதில்லை. பொருள்நிலை அணியாகிய உத்ப்ரேக்ஷை இந்தக் கவிதையில் இடம்பெற்றுள்ளது. சுவை முதலியவற்றில் கவிஞருக்கு ஈடுபாடு இல்லை, சுவை முதலியவை இங்கு தெளிவாக உணர்த்தப்படவில்லை ஆகிய விமர்சனங்கள் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும்; கவிதையில் வருணிக்கப்படுபவன் ஹயக்ரீவன். இந்தக் கவிதையில் அரக்கனின் பேராற்றல் தெளிவாகவே தெரியவருகிறது. [காவ்ய ப்ரதீபம், ப.19.] [8]
கீழானகவிதை என்று இந்தக் கவிதையை அடையாளப்படுத்திய காரணத்திற்காக மம்மடர் ஜகநாதபண்டிதரின் வன்மையான கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கிறார். [ரசகங்காதரம் ப. 20]. ‘ஷப்த வ்யாபார விசாரம்’ என்ற பெயரில் மம்மடர் எழுதியிருக்கும் சிறிய அளவிலான ஒரு நூலும் உள்ளது. நேரிடைப் புலப்பாடு, சூழல்சார் புலப்பாடு ஆகிய சொல்லின் புலப்பாட்டு முறைகளுக்கு சில வகைமாதிரிகளை இந்நூலில் மம்மடர் எடுத்துக்காட்டியிருக்கிறார். மேலும், சொல்லுக்கு அமைந்திருக்கும் குறிப்புப்பொருள் தொடர்பாக சில சொற்கள் கூறி விரிவான ஆராய்ச்சியை மற்றொரு இடத்தில் [காவ்யப்ரகாசம்] தாம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். மம்மடரின் நூலான ‘ஷப்த வ்யாபார விசாரம்’ முகுலரின் ‘அபிதா வ்ருத்தி மாத்ரிகா’ என்னும் நூலை நினைவூட்டுகிறது. அதே சமயம் இரு நூல்களிலும் சிற்சில இடங்களில் வேறுபட்ட கருத்துகளும் காணப்படுகின்றன.
மம்மடரின் ‘காவ்யப்ரகாசம்’, மகிமபட்டரின் ‘வ்யக்தி விவேகம்’ ஆகிய இரு பெருநூல்கள் மீதும் ருய்யகர் [காலம் 1150] என்பவர் உரை இயற்றியிருப்பதை முன்பே கவனித்திருக்கிறோம். நாடக மீமாம்சா, ஸாகித்ய மீமாம்சா, அலங்காரனுசாலினி, ஹர்ஷ சரித்ர வார்த்தீகம் முதலிய நூல்களையும் ருய்யகர் இயற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்டுள்ள எந்த நூலும் தற்போது கிடைப்பதில்லை.[9]
நங்கையரின் குணம், அணி, இளமை, துணையாகும் இயல்புகள் இவற்றை வருணிக்கும் ‘சஹ்ருதயலீலா’ என்னும் சிறிய நூல் இவர் பெயரில் கிடைத்துள்ளது. ருய்யகரின் மிகப் புகழ்ப்பெற்ற நூல் ‘அலங்கார சர்வஸ்வம்’ என்பதாகும். குறிப்புக்கொள்கை நோக்கிலிருந்து சொல்லணிகளையும் பொருளணிகளையும் விமர்சித்து செம்மையாக விவரிக்கும் எழுத்து முயற்சி ருய்யகருக்கு முன்பு வரை நடைபெற்றிருக்கவில்லை. அணிகளை விரிவாக எடுத்துக்கூறி மம்மடர் விளக்கியிருப்பதும் உண்மை. எனினும், அவர் இந்தப் பணியை முறையாகவும் நிறைவளிக்குமாறும் மேற்கொண்டிருந்தார் என்று கூறமுடியாது. ருய்யகரும் குறிப்புக்கொள்கையையே பின்பற்றியுள்ளார். குறிப்புக்கொள்கை நோக்கில் அணிகள் தொடர்பான ஆராய்ச்சியைத் திட்டவட்டமாக மேற்கொண்டவர் ருய்யகர். தனித்தன்மையுடனும் தர்க்கப்பூர்வமாகவும் இவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். படைப்பாற்றல் இல்லாமல் அணி அமைவதில்லை என்று குந்தகர் நிறுவியிருப்பதை நாம் முன்பே அறிவோம். குந்தகர் கருத்தையும் மனத்தில் இருத்தி அணிகளை ஆராய்ந்து அவற்றுக்கு வரையறைகளையும் வகுத்துள்ளார் ருய்யகர். மேலும், ருத்ரடர் தவிர எந்த அணியியலாளரும் முறைமைக்கு உட்பட்டு அணிகளைப் பாகுபடுத்தியிருக்கவில்லை. அதேசமயம் ருத்ரடர் பகுப்பும் சிறப்பாக அமையவில்லை. இந்த நிலையில் அணிகளைக் குறிப்புக்கொள்கை நோக்கிலிருந்து வரையறுப்பது மட்டுமல்ல, அவற்றை வகைப்படுத்தும் பணியிலும் கவனம் வைத்து பெரிய அளவுக்கு ருய்யகர் அதனையும் நன்கு மேற்கொண்டுள்ளார். உரைநடைச் சூத்திரங்கள், அவற்றுக்குரிய விருத்திப் பகுதி இரண்டையும் கொண்டிருக்கும் நூல் ‘அலங்கார சர்வஸ்வம்’ ஆகும். வட இந்தியப்பகுதிகளில் கிடைக்கும் நூல்சுவடிகள் சூத்திரப்பகுதி, விருத்திப்பகுதி இரண்டையும் ருய்யகரே எழுதியிருப்பதாகக் கூறுகின்றன. ஜெயரதர் என்னும் முற்கால உரையாசிரியரும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். ருய்யகர் சூத்திரப்பகுதியை மட்டும் எழுதினார். ஆனால் மங்கர் அல்லது மங்குகர் என்பவர்தான் விருத்திப்பகுதியை எழுதியிருக்கிறார். மங்கர் என்னும் இவர் ருய்யகரின் மாணவர்; இவர் ‘ஸ்ரீகண்ட சரிதம்’ என்னும் காவியத்தையும் இயற்றியிருக்கிறார். தென்னிந்தியப் பகுதி மூலச்சுவடிகளின் கருத்து இது. கேரளத்தைச் சார்ந்த உரையாசிரியர் ‘சமுத்ரபந்தர்’ என்பவரின் தரப்பும் இதுதான். ஸ்ரீகண்ட சரிதத்தின் சில செய்யுள்களும் விருத்திப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன என்பதையும் நாம் இங்கு கவனிக்கவேண்டும். [10]
அணி தொடர்பான கவிதைப்பகுதிக்கு ருய்யகரின் ‘அலங்கார சர்வஸ்வம்’ என்பதே அடிப்படை நூல். மற்ற கவிதைப் பகுதிகளுக்கு மம்மடர் இயற்றியுள்ள ‘காவ்யப்ரகாசம்’ என்பதே அடிப்படை நூல். இவ்வாறு அமைந்துவிட்ட நிலையில் சிறப்பாக எடுத்துக்கூற பிற்கால அணியியலாளர்களுக்குப் பெரிய அளவில் எவையும் எஞ்சியிருக்கவில்லை.[11]
முன்னோர்கள் வகுத்துள்ள வரையறைகளை மேலும் செம்மைப்படுத்துவது, மேலும் மேலும் இலக்கண உட்பகுப்புகளை முன்வைப்பது, இயன்ற இடங்களில் புதிய எடுத்துக்காட்டுகளை இணைத்து வழங்குவது போன்ற பணிகளிலேயே பிற்கால அணியியலாளர்களின் திறன் வெளிப்பட வேண்டியதாயிற்று. தாம் இயற்றியுள்ள காவ்யப்ரகாசத்தில் மம்மடர் நாடக இலக்கணத்தைத் தவிர்த்திருந்தார். இந்த நிலையில், கவிதை இலக்கணத்துடன் நாடக இலக்கணத்தையும் உட்படுத்தும் முயற்சியை தம் கவிதையியல் நூல்களில் சிலர் மேற்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்புக்கொள்கையின் பகுதியாகவே நாடக இலக்கணத்தையும் உட்படுத்தி இயற்றப்பட்டிருக்கும் நூல்களில் முதலாவதாக அமைவது ஹேமசந்திரரின் ‘காவ்யானுசாசனம்’ ஆகும். சமண சமயத்தைச் சார்ந்த மாபெரும் ஆசிரியர் ஹேமசந்திரர். இவர் குஜராத் பகுதியில் கி.பி. 1089ம் ஆண்டு பிறந்துள்ளார். எட்டாம் வயதிலேயே துறவு பூண்டு தம் இருபத்தொன்பதாம் வயதில் சூரி என்னும் சிறப்புநிலையை அடைந்துள்ளார். குஜராத் பகுதிகளை ஆட்சிபுரிந்த ஜெயசிம்மன், குமாரபாலன் ஆகிய இரு அரசர்களின் உயர்வான நன்மதிப்பால் சிறப்புப் பெற்று ஹேமசந்திரர் இலங்கினார். குமாரபாலன் இவருடைய மாணவராகவும் இருந்தார். பல்துறைக் கல்வி பெற்று சிறந்த நூல்களை இயற்றி ‘கலிகாலத்தில் ஒரு முற்றறிவர்’ [கலிகால சர்வக்ஞர்] என்னும் சிறப்புக்குரியவராக இவர் விளங்கினார். 1173ம் ஆண்டு ஹேமசந்திரர் நிறைவடைந்தார். ‘த்ரிஷஷ்டி சலாக புருஷ சரித்ரம்’ முதலிய சமண சமய நூல்களை இயற்றியிருப்பது மட்டுமல்ல, இலக்கணம், யாப்பு, அணி, நிகண்டு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகளில் சிறந்த நூல்களை இயற்றியவர் இவர். சம்ஸ்க்ருத மொழிக்கு மட்டுமின்றி பிராகிருத மொழிக்கும் பொருந்துமாறு இலக்கணங்களை வகுப்பது ஹேமசந்திரரின் இயல்புகளுள் ஒன்று. இவருடைய பிராகிருத இலக்கணப்பகுதியும் ‘தேஸீ நாமமாலா’ என்னும் நிகண்டும் புகழ்ப்பெற்றவை. மொழி இலக்கணத்தை ‘ஸப்தானுசாசனம்’ என்னும் நூலில் வரையறுத்து, தொடர்ந்து காவ்யானுசாசனம் என்னும் நூலில் கவிதை இலக்கணத்தை இவர் முறைப்படி எடுத்துக்கூறியுள்ளார்.[12]
தொகுப்புப்பணிதான் ஒட்டுமொத்தமாக காவ்யானுசாசனத்தில் நடைபெற்றிருக்கிறது. ஹேமசந்திரர் உள்ளம் பலதுறைகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக இவர் படைப்பில் புதியதான சிந்தனைப்போக்கு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. ஆனந்தவர்தனர், இராஜசேகரர், அபிநவகுப்தர், மம்மடர் முதலிய புகழ்ப்பெற்ற கவிதையியலாளர்களின் கருத்துகளைப் பின்பற்றியிருப்பது மட்டுமல்ல, அவர்களின் நூல்களிலிருந்து பகுதி பகுதியாக அவ்வாறே எடுத்துத் தம் காவ்யானுசாசனத்திலும், அதற்குத் தாமே இயற்றியுள்ள விவேகம் என்னும் உரையிலும் ஹேமசந்திரர் சேர்த்துக்கொண்டிருக்கிறார். இது இவருடைய வாக்கியம் என்று கூட பல இடங்களில் கூறுவதில்லை. அதேசமயம், இத்தகைய நெடிய மேற்கோள்களால் மாணவர்களுக்குப் பயன் ஏற்படவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. சான்றாக, பட்டதௌத்தர் இயற்றியுள்ள ‘காவ்யகௌதுகம்’ என்ற நூலின் பகுதிகள் சில இன்றளவும் எஞ்சி வந்திருப்பது ஹேமசந்திரர் உதவியால்தான்.
இராமசந்திரர் [காலம் சுமார் கி.பி.1100- 1175], குணசந்திரர் இருவரும் ஆசிரியர் ஹேமசந்திரரின் சீடர்கள். இந்த இரு அறிஞர்களும் ‘நாட்ய தர்பணம்’ என்னும் நூலை இயற்றியிருக்கிறார்கள். தமக்குப் பிறகு இராமச்சந்திரர் ஆச்சாரியார் பட்டத்திற்கு வரவேண்டும் என்று ஹேமசந்திரர் கூறிவந்ததாக மரபாகச் சொல்லப்படுவதுண்டு. நூற்றுக்கணக்கான நூல்களை இயற்றியவர் இராமசந்திரர். ‘நளவிலாசம்’ முதலிய பல நாடகங்களையும் வேறு நூல்களையும் இயற்றியவர் இவர். இவருடைய ஒருசாலை மாணாக்கர்தான் குணசந்திரர். குணசந்திரர் தொடர்பான மேலதிகச் செய்திகள் தெரிவதில்லை. நாட்யதர்பண ஆசிரியர்களாகிய இவ்விருவரும் தசரூபகம், காவ்யப்ரகாசம் முதலிய நூல்களின் கொள்கைகளையே பொதுவாகப் பின்பற்றியிருந்தாலும் புதிய கருத்துகளைப் பல இடங்களில் முன்வைத்திருப்பதும் உண்டு. இலக்கணத்திற்கு மிகவும் மாறுபட்டதாக உள்ள சுவை இயல்பு பற்றிய கருத்தும் இவற்றுள் ஒன்று. ஈடுபாடு போன்று நிலையுணர்வுகள் இன்பமானவையாக இருக்கலாம், அவலம் போன்று துன்பமயமானவையாகவும் இருக்கலாம். காதல் [ஸ்ருங்காரம்], அவலம் [கருணா] உள்ளிட்ட எல்லாச் சுவையனுபவங்களும் ஆனந்தமயமானவையே என்பது இலக்கணவாதிகளின் ஒருமித்த கருத்து ஆகும். நாட்யதர்பண ஆசிரியர்களாகிய இவர்கள் இந்தக் கருத்தை ஏற்பதில்லை. “இன்பமயமானவை, துன்பமயமானவை சுவைகள்” [சுக துக்காத்மகோ ரஸஹா] என்று தெளிவாகவே சூத்திரம் வகுத்து விரிவாக விளக்கியுள்ளார்கள். மேலும், இந்த நூற்பாவின் அடிப்படையிலேயே இன்பமயமானவை, துன்பமயமானவை என இரு பிரிவுகளாக இவர்கள் சுவைகளைப் பாகுபடுத்தியும் இருக்கிறார்கள். இந்த வாதத்தின் பொருத்தப்பாடு குறித்து இதே நூலில் உரிய இடத்தில் விளக்கப்படும்.[13]
பிற்காலத்தைச் சேர்ந்த சில நாடக இலக்கண நூல்கள் தொடர்பாகக் கூறவும் இதுவே பொருத்தமான இடம். சாரதாதனயர் [காலம் சுமார் கி.பி. 1175-1250] இயற்றியுள்ள ‘பாவப்ரகாசனம்’ பிற்கால நாடக இலக்கண நூல்களுள் மிகவும் முதன்மையானது. இதற்குப் பாவப்ரகாசம், பாவப்ரகாசிகம் என்னும் வேறு பெயர்களும் உள்ளன. பரதர் நாட்டியசாத்திரத்தில் கூறியுள்ள கருத்துகள் இந்த நூலில் பெரும்பாலும் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சொல் பொருளுணர்த்தும் பாங்கு, சுவைத்தோன்றுவது போன்றவை தொடர்பாகவும் விரிவான விவாதங்கள் பாவப்ரகாசனத்தில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்கூறும் ஒவ்வொரு செய்தி தொடர்பாகவும் அதுவரை வந்துள்ள இலக்கணவாதிகள் எல்லோர் கருத்துகளையும் இயன்றவரைத் தொகுத்துக் கொடுப்பதென்பது சாரதா தனயர் கடைப்பிடிக்கும் முறை. சதாசிவன், நாரதர் முதலிய புராண ஆளுமைகளின் பெயர்களையும் இவர் குறிப்பிடுகிறார். கோகலர், ஹர்ஷர் முதலியவர்களின் மறைந்துபோன நூற்பகுதிகளையும் ஆங்காங்கு எடுத்தாள்கிறார். நாட்டியசாத்திரம், த்வன்யாலோகம், த்வன்யாலோசனம், தசரூபகம், ஸ்ருங்காரப்ரகாசம், காவ்யப்ரகாசம் போன்ற நூல்களிருந்தும் பல்வேறு பகுதிகளை அவற்றின் சொற்களிலேயே எத்தனையோ இடங்களில் கொடுத்திருக்கிறார் சாரதாதனயர். செய்யுள் வடிவில் பெரும்பாலும் ஸ்லோக அமைப்பில் பாவப்ரகாசனம் உள்ளது. அபிநவகுப்தருக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதை சாரதாதனயரே ஒப்புக்கொள்கிறார். ஆனால், அபிநவகுப்தரின் கருத்துகள் எல்லாவற்றையும் இவர் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்புப்பொருள் சாராம்சப்பொருளில் அடங்கிவிடும் என்பது சாரதாதனயர் கருத்து. இது போஜர் நிலைப்பாடு என்பதை நாம் முந்தைய இயலிலேயே கவனித்திருக்கிறோம். உணர்வு உருவாக்கப்படுவதற்கும், உருவாக்கப்படும் ஓர் உணர்வுக்கும் இடையே உள்ள தொடர்பை சுவையின் தோற்றம் குறித்த விவாதத்தில் பட்டநாயகர், தனஞ்செயர், தனிகர் ஆகியோர் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இந்த வாதம் சாரதாதனயருக்கும் ஏற்புடைய ஒன்றே ஆகும். தனிகர் போன்று இவரும் நாடகத்தில் சாந்தச்சுவைக்கு இடம் இருப்பதாக ஏற்றுக்கொள்வதில்லை. அதேசமயம் சாந்தச்சுவைக்கு கவிதையில் இடம் வழங்கியுள்ளார்.
சாகரநந்தி என்பவர் இயற்றியுள்ள நாடகலக்ஷண ரத்னகோஷம் என்னும் நூல் அண்மையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹர்ஷர், விக்ரமர், மாத்ருகுப்தர் ஆகியோரின் கொள்கைகளுக்கிணங்க பரதரின் கொள்கையை ஆழ்ந்து நோக்கி அவரின் நூலிலிருந்து தாம் கொண்டுவந்துள்ள இரத்தினங்களின் களஞ்சியம் இந்த ‘நாடகலக்ஷண ரத்னகோஷம்’ என்பது நூலாசிரியர் கூற்று. பரதர் நூலிலிருந்து நாடகமுறை, சுவை, உணர்வு முதலியவற்றின் இயல்புகள், நாடக இலக்கண இயல்புகள் உள்ளிட்ட பல அத்யாயங்களின் கருத்துகளை இவர் தொகுத்திருக்கிறார். மேலும், புகழ்ப்பெற்ற படைப்புகளுடன் புகழ்ப்பெறாத பல்வேறு நூல்களிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளின் உதவியால் பரதர் கருத்துகளை விளக்கியிருக்கிறார் சாகரநந்தி. தம் நூல்உருவாக்கத்தில் தசரூபகத்தை இவர் பயன்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.
‘சாகித்ய தர்பணம்’ என்னும் நூலின் ஆசிரியருக்கு சாகர நந்தியின் நூல் மூலநூலாக அமைந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ‘நாடகலக்ஷண ரத்னகோஷம்’ என்னும் நூல் கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருப்பதென்பது இயல்பான ஒன்றே ஆகும்.
‘ரஸார்ணவசுதாகரம்’ என்பது சிங்கபூபாலன் என்னும் ஓர் அரசரின் படைப்பு. காலம் சுமார் கி.பி. 1330. ‘சிங்கபூபாலி’ என்னும் பெயரும்கூட இந்த நூலுக்கு உண்டு. மிகவும் சுருங்கிவிடாமல் அதேசமயம் மிக விரிவாகவும் சென்றுவிடாமல் இடைப்பட்ட ஒரு நிலையில் நாடகம் முதலியவற்றின் இலக்கணம் இந்த நூலில் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது. முந்தைய இலக்கணவாதிகளின் கொள்கைகளைத் தொகுக்கும் பணியை சில இடங்களில் மேற்கொண்டுள்ளார் சிங்கபூபாலன்.[14] முந்தைய காவியங்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ள செய்யுள்களுடன் தாமே இயற்றியுள்ள செய்யுள்களையும் ஆங்காங்கு இவர் மேற்கோள் காட்டுகிறார். கன்னட அணியியலாளர்கள் சிலர் சிங்கபூபாலியத்தின் கொள்கையைப் பின்பற்றியிருப்பதும் உண்டு.
நாடக இலக்கணம் தொடர்பான பிற்கால நூல்களின் இயல்புகள் இவ்வாறு இருக்கும் நிலையில் கவிதைத் தொடர்பான பிற்கால நூல்கள் குறித்து இனி நோக்கலாம்.
நம் விவரிப்பில் ‘சாகித்ய தர்பணம்’ என்னும் நூற்பெயரை சற்றுமுன்பு குறிப்பிட்டுள்ளோம். சாகித்ய தர்பணத்தை இயற்றியுள்ளவர் விஸ்வநாதர். இவர் காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டு. காவ்யானுசாசனம் போன்று சாகித்ய தர்பணம் என்னும் இந்த நூலும் நாடக இலக்கணத்தை உள்ளடக்கியிருக்கும் ஒன்றுதான். அதேசமயம் ஹேமசந்திரரின் காவ்யானுசாசனத்தை விடவும் அதிக அளவு தனித்தன்மையுடன் விஸ்வநாதரின் சாகித்ய தர்பணம் விளங்குகிறது. மம்மடர் கருத்துகளைப் பல்வேறு இடங்களில் மறுத்து இவர் எழுதியிருக்கிறார். அணிகளை வகுத்து விளக்குவதில் ருய்யகர் கொள்கையைப் பின்பற்றியிருக்கிறார்.
“சுவையுடன் அமைந்திருக்கும் வாக்கியம்தான் கவிதை” [வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்] என்று தம் நூல் தொடக்கத்திலேயே உரத்து முழங்கியவர் விஸ்வநாதர். இவ்வாறு சுவை என்னும் சொல்லை கவிதை இலக்கணப் பகுதியாகவே உட்படுத்தியுள்ள சிறப்பு விஸ்வநாதருக்கே உரியது. சுவையற்ற ஒன்றைக் கவிதை என்றே குறிப்பிடக்கூடாது என்னும் அளவுக்கு இவர் தொலைதூரம் சென்றுவிடுகிறார். இதுமட்டுமல்ல, சித்திரக்கவிதை என்னும் கவிதை வகையையும் நிராகரித்துவிடுகிறார். முழுமையாக நோக்கும்நிலையில் விஸ்வநாதரின் மொழிநடை எளிமையான ஒன்றுதான். அணியிலக்கணத்துடன் தொடர்புடைய எல்லாவற்றையும் சாகித்ய தர்பணம் எடுத்துக்கூறுகிறது. இத்தகைய காரணங்களால் கவிதையியலை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கு சாகித்ய தர்பணத்தைக் கற்கும் முயற்சி ஒரு நல்ல வழிமுறையே ஆகும்.
வேறுபட்டுத் தனித்தன்மையுடன் சிந்திக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் நூலாசிரியர்களின் திறன் வேறுவேறு வழிகளில் ஒளிப்பெற்று விளங்குவதென்பது இயல்பான ஒன்றுதான். பாமகர், தண்டி உள்ளிட்ட சிலர் தவிர பதிமூன்றாம் நூற்றாண்டுவரை வாழ்ந்துவந்த இலக்கணவாதிகள் எல்லோரும் புகழ்ப்பெற்ற கவிதைகளிலிருந்தும் நாடகங்களிலிருந்தும் எடுத்துக்காட்டுகளைத் தெரிவுசெய்து வந்தார்கள். பொருத்தமான இடங்களில் மட்டுமே மிகவும் எல்லைக்கு உட்பட்டே தங்கள் செய்யுள்களை எடுத்துப் பயன்படுத்தினார்கள். ஆனால், வித்யாதரர் என்பவர் [காலம் - சுமார் கி.பி. 1300] தாம் இயற்றிய ‘ஏகாவளி’ என்னும் நூலில் அநேகமாக அவருக்கு மட்டுமே லாபம் தரக்கூடிய புதியதொரு முறைமையைத் தொடங்கி வைத்தார். வித்யாதரர் ஏகாவளியில் கொடுத்திருக்கும் எடுத்துக்காட்டுகள் எல்லாம் அவரே இயற்றியவை. இந்த அளவுக்கு இருந்திருந்தால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. அவை எல்லாமும் ஒரே மனிதரைப் [இவருடைய புரவலர் கலிங்க தேச அரசர் நரசிம்மன்] போற்றுவதாக அமைந்துள்ளன.
தென்னிந்தியப் பகுதி அறிஞர்களால் பெரிய அளவில் விரும்பப்படும் நூல் வித்யாநாதர் இயற்றியுள்ள ‘ப்ரதாபருத்ர யஸோபூஷனம்’ அல்லது ‘ப்ரதாப ருத்ரீயம்’ என்பதாகும். ஏகாவளி நெறியிலேயே தோன்றி வளர்ந்துள்ள நூல் இது. வித்யாநாதர் காலமும் சுமார் கி.பி. 1300தான்.
“ப்ரதாப ருத்ர தேவர் குணங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கும் அணிநூல் இது. ஓ உயர்ந்தோரே இந்த நூல் உங்கள் செவிகளுக்கு விழவு என திகழட்டும்” என்று போற்றியுள்ளார் வித்யாநாதர். [15]
ப்ரதாப ருத்ர தேவனின் வாழ்க்கைக்கதை அடிப்படையில் நாடக இலக்கண விளக்கத்திற்கு முழுமையான எடுத்துக்காட்டை அமைத்துக்கொண்டிருக்கிறார் வித்யாநாதர். இது நூலின் மற்றொரு அபத்தம். தாமே இயற்றியுள்ள முறையான நாடகத்தை இவர் உதாரணமாக முன்வைத்துள்ளார். தாம் அந்த நாடகத்தில் உட்படுத்தியுள்ள பகுதிகளை ஒவ்வொரு நிலையிலும் இவர் குறிப்பிடவே செய்கிறார். இந்த அளவு இலக்கணத்தன்மையுடன் விளங்கியபோதும் இந்த நாடகம் வாயிலாகச் சுவைஞர்களுக்குச் சுவையனுபவம் சிறிதும் ஏற்படுவதில்லை.[16]
கவிதையியல் வளர்ச்சியை எடுத்துக்கூறுவதுதான் நமது நூலிலுள்ள இந்தப் பகுதியின் முதன்மை நோக்கம். எனவே கவிதையியல் அடிப்படையில் உயர்வாக இல்லாத எத்தனையோ பிற்கால அணியியலாளர்கள் தொடர்பாகக் கூறமுடியாமல் போய்விட்டது. அவர்களின் பெயர்களையும்கூட குறிப்பிடாமல் நாம் கைவிடவேண்டி ஆகிவிட்டது. சம்ஸ்க்ருத கவிதையியலின் இறுதிச் சாதனையாளர்கள் இருவர். ஒருவர் ஜகநாத பண்டிதர்; அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் அப்பய்ய தீட்சிதர் என்னும் மற்றொருவர். இந்த இருவர் குறித்தும் எடுத்துக்கூறாமல் இந்த அத்யாயத்தை நிறைவு செய்வதற்கில்லை.
அப்பய்ய தீட்சிதர் இயற்றியுள்ள நூல்களாகிய குவலயானந்தம், சித்ர மீமாம்சை ஆகிய நூல்களை அறிமுகப்படுத்தும் முயற்சியின் பகுதியாக ஜெயதேவர் இயற்றியுள்ள ‘சந்திராலோகம்’ பற்றியும் சில சொற்கள் கூறவேண்டியது இன்றியமையாதது.
குவலயானந்தம் என்னும் நூலுக்கு அடிப்படை நூலாக அமைவது சந்திராலோகம். ஜெயதேவர் காலம் ஒருவேளை கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
குறிப்பு மரபைப் பின்பற்றி எல்லாக் கவிதைப்பகுதிகள் தொடர்பாகவும் ஜெயதேவர் சந்திராலோகத்தில் விளக்கியிருக்கிறார். இருந்தபோதும் பொருளணிகளை விளக்கும் பகுதியே இந்த நூலில் சிறப்பாக அமைந்துள்ளது. நூறு அணிகள் குறித்து இந்தப் பகுதியில் கூறப்பட்டுள்ளன.[17]
எளியநிலையில் அமைந்த இலக்கணப்பகுதி, இலக்கண ஆசிரியரால் அமைக்கப்பட்டிருக்கும் பொருத்தமான இனிய எடுத்துக்காட்டுத் தனிச்செய்யுள் என்று சந்திராலோகப் பொருளணிப்பகுதி சுருக்கமாக அமைந்துள்ளது. அணிகள் பற்றியத் தொடக்கநிலை அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சந்திராலோகம் ஓர் மிகச்சிறந்த நூல். சந்திராலோகப் பொருளணிப்பிரிவையே அப்பய்ய தீட்சிதர் மீச்சிறு வேறுபாடுகளுடன் மூலநூலாக அமைத்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து இந்த அணிகள் தொடர்பாக விவாதித்து எடுத்துக்காட்டுகள் வகுத்து இருபத்து நான்கு அணிகளை இன்னும் கூடுதலாகச் சேர்த்து குவலயானந்தத்தை அமைத்திருக்கிறார் அப்பய்ய தீட்சிதர். பொருளணிகளை விளக்குவதற்கு அடிப்படை நூலாகக் குவலயானந்தம் தான் தற்போது பெரிய அளவுக்கு பரிணாமம் கொண்டு சிறந்து விளங்குகிறது.
முழுமையற்ற நிலையில் இருக்கும் நூல் ‘சித்ர மீமாம்சை’ ஆகும். குறிப்பு [த்வனி], எளியநிலைக்குறிப்பு [குணிபூத வ்யங்யம்], சித்ரம் எனப்படும் நேர்க்காட்சி அனுபவத்துடன் தொடர்புடைய கவிதை வகைகள் குறித்து சுருக்கமாக இவர் கூறியுள்ளார். தொடர்ந்து, பொருள்நிலை சித்திரக்கவிதைகளின் பகுதியாகிய பொருளணிகள் தொடர்பான இனிமை தவழும் விரிவான விவரிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். ஆனால் உவமை முதலாக அதிசயோக்தி வரை அமைந்திருக்கும் பன்னிரண்டு அணிகளை விளக்கியிருக்கும் நிலையில் நூல் சிதைவுபட்டிருக்கிறது.
அப்பய்ய தீட்சிதர் திராவிடத் தேசத்தவர். இவர் காலம் கி.பி. 1520-1593 என்று சிலர் கருதுகிறார்கள். கி.பி. 1554-1626 என்று வேறுசிலர் கருதுகிறார்கள். அப்பய்ய தீட்சிதரும் ஜகநாத பண்டிதரும் சில ஆண்டுகளேனும் சமகாலத்தவர்களாக இருந்து வந்திருப்பதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் இரண்டாவதாக அமைந்திருக்கும் கருத்துதான் [கி.பி. 1554-1626] அதிகப் பொருத்தமுடையதாக உள்ளது.[18]
அப்பய்ய தீட்சிதர் ஒரு பேரறிஞர். பல்வேறு பொருண்மைகளில் நூற்றுக்கும் அதிகமான நூல்களை இயற்றியவர் இவர்.[19]
சிவாத்வைதம் குறித்த அப்பய்ய தீட்சிதர் நூல்கள் புகழ்ப்பெற்றவை. இவர் குறித்து பல்வேறு கதைகள் வழங்கிவருகின்றன. கடமையில் பற்றும் மென்மையான உள்ளமும் அப்பய்ய தீட்சிதரிடம் ஒருசேர இருந்து வந்தன. ஒரு வேள்வியின் பொருட்டு பசு ஒன்றை பலியிடவேண்டி வந்தபோது இவருடைய உள்ளம் உருகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ‘வேதமே உன்னை நம்பினேன்’ என்று தமிழ் மொழியில் கூறியவாறே வேள்விப்பணியில் இவர் தொடர்ந்து ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதுண்டு.
அப்பய்ய தீட்சிதரின் முதன்மை எதிர்தரப்பாளர் ராஜா ஜகநாத பண்டிதர். காலம் கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியும் இடைப்பகுதியும் ஆகும். இவருக்குப் பண்டித ராஜா என்னும் விருதை தில்லிப் பேரரசர் ஷாஜகான் வழங்கியிருப்பதாகத் தெரியவருகிறது. ஜகநாத பண்டிதர் ஷாஜகான் அவையிலும், ஷாஜகான் மகன் தாராஸுக்கோ, ஷாஜகான் மாமனார் அஸஃப்கான் ஆகியோர் ஆதரவிலும் எப்படியும் சிறிது காலம் இருந்திருக்கவேண்டும். அஸஃப்கான் குறித்த இவருடைய உரைநடைக் காவியம் ‘அஸஃபவிலாசம்’ ஆகும். பிராண நாராயணன் என்னும் காமரூப அரசன் ஆதரவிலும் ஜகநாத பண்டிதர் சிறிதுகாலம் இருந்திருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ‘ப்ராணாபரணம்’ என்னும் காவியமே இந்தக் கருத்துக்கு அடிப்படையாக உள்ளது. இஸ்லாமியச் சமயத்தைச் சார்ந்த ஓர் இளம் அழகி மீது விருப்பம் கொண்டு ஜகநாதர் அவளைத் திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக தம் குலத்தைச் சேர்ந்தவர்களின் புறக்கணிப்பிற்கு உள்ளாகி, தொடர்ந்து, காசியில் கங்கை சேர்ந்தார் ஜகநாதர். இத்தகைய கதைகளும் உலவிவருகின்றன.[20]
ஜகநாத பண்டிதர் ஒரு கவிதையியலாளர் மட்டுமல்ல; இவர் ஒரு புகழ்ப்பெற்ற கவிஞரும் ஆவார். இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் காவியங்கள் தவிர பாமினி விலாசம், ஜகதாபரணம், கருணாலகரி, ஃபியூஷலகரி முதலிய போற்றிச்செய்யுள்களின் பெயர்களையும் ஜகநாதர் சிறந்த கவிஞர் என்பதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். தாம் இயற்றியுள்ள அணி இலக்கண நூல்களுக்கு எடுத்துக்காட்டுச் செய்யுள்களாகத் தம் செய்யுள்களையே ஜகநாதர் கொடுத்துள்ளார்.
“பொருத்தமான உதாரணச் செய்யுள்களை நானே தொடுத்து இங்கு இணைத்திருக்கிறேன். மற்றவருடையது எதையுமே தீண்டவில்லை. கத்தூரி உண்டாக்கும் விலங்கு மனத்தாலும் முகருமோ பூக்களின் வாசனையை?” இவ்வாரு மிடுக்குடன் மொழிபவர் ஜகநாதர் [21]
தர்க்க நெறி சார்ந்து அமைந்திருக்கும் மொழிநடையில் ஜகநாதர் தம் அணிநூல்களை இயற்றியிருக்கிறார். இந்த நூல்களை முறையாகப் புரிந்துகொள்ள தர்க்க சாத்திர அறிமுகமும் இன்றியமையாதது. ஜகநாதர் இயற்றியுள்ள ‘ரஸகங்காதரம்’ கவிதையியல் பற்றிய ஓர் உயர்வான நூல். இவருடைய நுட்பமான அறிவும் சுதந்தரமான மன விகசிப்பும் இந்த நூலில் நன்கு வெளிப்படுகின்றன. எவ்வளவுதான் அவர் பெரியவராக இருந்தபோதும் முன்னோர் எவர் கருத்தையும் ஆராயாமல் ஜகநாதர் கௌரவிப்பதில்லை. கவிதை இலக்கணத்தை தம் நூலின் முதல்பகுதியில் வரையறுக்கும்போது வாமனர், மம்மடர், விஸ்வநாதர் உள்ளிட்டவர்களின் கொள்கைகளை மறுத்திருப்பது மட்டுமல்ல, புதியதொரு வரையறையை ஜகநாதர் முன்வைத்திருப்பதைச் சான்றாகக் கூறலாம். முதல் பகுதியில் மட்டுமல்ல இதே நெறியில்தான் தொடர்ந்து இவர் சென்றுள்ளார். குறிப்புக்கொள்கையை ஏற்றுக்கொண்டதன் வாயிலாகத் த்வன்யாலோக ஆசிரியர் மீது உயர்வான மதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்; இருந்தும் வாய்ப்புள்ள இடங்களில் த்வன்யாலோக ஆசிரியர் கருத்தையும் மறுப்பதற்கு ஜகநாதர் தயங்குவதில்லை. கவிதை எல்லாவற்றுக்கும் சுவைதான் உயிர் என்று ஜகநாதர் பொதுவாக ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் மறைமுகமாகச் சுவை வெளிப்படுவதுதான் மிகவும் எழில்வாய்ந்தது என்று இவர் ஏற்றுக்கொள்கிறார். தாம் இயற்றியுள்ள நூலுக்கு ‘ரஸகங்காதரம்’ என்று பெயர்சூட்டியிருக்கிறார் இவர். நூல் அத்யாயங்களை முகங்கள் என்று பொருள்படுமாறு ஆநநம் என்னும் சொல்லால் குறித்திருக்கிறார். இவற்றை எல்லாம் நோக்கும் நிலையில் மொத்தம் ஐந்து அத்யாயங்களை நூலில் அமைக்கவேண்டும் என்று ஜகநாதர் எண்ணியிருப்பதாகக் கருதலாம். ஆனால், தற்போது கிடைப்பது இரு அத்யாயங்கள் மட்டும் தான். இரண்டாவது அத்யாயமும் முழுமையாக இல்லை. சுவை தொடர்பான ஆராய்ச்சி முதல் அத்யாயத்திலும் குறிப்பு வகைகள், அணிகள் ஆகிய மற்றவை இரண்டாவது அத்யாயத்திலும் விளக்கப்பட்டுள்ளன. அணிகளைத் தெளிவுப்படுத்துவதில்தான் ஜகநாதரின் நுண்ணறிவு வெளிப்படுகிறது. அணிகளை விவரிக்கும் பகுதியில் ருய்யகர், அப்பய்ய தீட்சிதர் கொள்கைகளை ஜகநாதர் உறுதியாக மறுத்துள்ளார்.
அப்பய்ய தீட்சிதர் மீது இவருக்குத் தனிப்பட்ட காழ்ப்பு இருக்கவேண்டும். வாய்ப்பு அமையும் போதெல்லாம் தீட்சிதர் கருத்துகளை வலிந்து கொண்டுவந்து கேலிசெய்கிறார். திரவிடசிசு என்று தீட்சிதரைக் குறிப்பிடவும் இவர் சற்றும் யோசிப்பதில்லை. ஆந்திரப்பகுதியைச் சேர்ந்தவர்தான் ஜகநாதர் என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு ரஸகங்காதரத்தில் மறுப்பது மட்டுமல்ல, அப்பய்ய தீட்சிதர் இயற்றிய சித்ரமீமாம்சையை இலக்காக வைத்துக்கொண்டு தம் மறுப்புகள் எல்லாவற்றையும் தொகுத்து முன்வைக்கும் ‘சித்ரமீமாம்சா கண்டனம்’ என்னும் நூலையே இயற்றியுள்ளார் ஜகநாதர்.
“நுட்பமாக ஆராய்ந்து அப்பய்ய தீட்சிதர் நூல்களில் நான் கண்டு வெளிப்படுத்தியிருக்கும் குற்றங்களை காழ்ப்பு சிறிதும் இன்றி ஒருவர் மறுக்கும் நிலையில் அறிவு ஒளிவிடும் அவர் திருவடிகளை நான் சூடிக்கொள்கிறேன்” [22]
இத்தகைய ஒரு வீரச்சூளுரை சித்ரமீமாம்சா கண்டனத் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது. பண்டிதராஜரின் நுண்ணறிவு முன்பு எந்த வாதமும் நிலைக்காமல் போகலாம்; ஆனாலும், அப்பய்ய தீட்சிதர் சிரம் மீது அவர் ஏற்றிவைக்கும் எல்லாக் குற்றங்களும் நியாயமானவைதான் என்று ஒப்புக்கொள்வதற்கு மனது இடம் தருவதில்லை.
அடிக்குறிப்புகள்
[1] இவர் காலம் கி.பி. 1100. காவ்யப்ரகாசத்தின் ஏழாம் உல்லாசம் மற்றும் பத்தாம் உல்லாசம் ஆகியவற்றின் எழுத்து வடிவில் அலகர் அல்லது அல்லடர் என்பவரின் பங்களிப்பு இருப்பதாக உரையாசிரியர்கள் சிலர் கருதுகிறார்கள்.
[2] காவ்யப்ரகாசக் காரிகைகளை அவ்வாறே வைத்துக்கொண்டு அவற்றுக்கு விருத்தி உள்ளிட்ட வேறு சிலவற்றை எழுதியவர்களும் இருக்கிறார்கள்.
இத்தகைய நூல்களில் கோவிந்த தக்கூரர் இயற்றிய ‘காவ்யப்ரதீபமும்’ ஒன்று. இவர் காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக் காலக்கட்டமாக இருக்கவேண்டும்.
[3] பல்கலைக்கழகங்களில் தற்போது முனைவர்ப் பட்டம் பெறுவதற்கு ஆய்வேடுகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. அவ்வாறே மம்மடரின் நூலுக்கு உரை எழுதுவதும் புலமையை நிறுவும் செயலாக இருந்திருக்கக்கூடும்
[4] காவ்யப்ரகாசத்திற்கு அமைந்த பழைய உரைகளில் ஒன்றை இயற்றியுள்ள மாணிக்யசந்திரரின் சங்கேதம் என்னும் உரையையும் நாம் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்கலாம். மாணிக்யச்சந்திரர் சமணசமயத்தைச் சார்ந்த ஒருவர். இவர் தம் உரையை சுமார் கி.பி.1160ல் இயற்றியுள்ளார்.
[5] இந்தப் பகுதியில் மம்மடர் பெரும்பாலும் ‘வ்யக்திவிவேகம்’ இரண்டாம் விமர்சத்தை பின்பற்றியிருப்பதாகத் தோன்றுகிறது.
[6] ஸ்ரீஹர்ஷர் காலம் கி.பி. 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கலாமென்று அறிஞர்கள் பொதுவாகக் கருதுகிறார்கள். - M. Krishnamachariar : Classical Sanskrit Literature ப, 178 - 179 பார்க்கவும்.
[7] இந்தச் செய்யுள் பர்த்ருமேண்டரின் ‘ஹயக்ரீவவதம்’ என்னும் காப்பியத்தைச் சார்ந்தது என்று தோன்றுகிறது.
இந்தச் செய்யுளில் இடம்பெற்றிருக்கும் ‘உத்ப்ரேக்ஷை’ (தற்குறிப்பேற்ற அணி போன்றே விளங்கும் மற்றோர் அணி) என்னும் அணி காரணமாக அச்ச உணர்வு தெளிவாக வெளிவருகிறது. இந்தச் செய்யுளில் ‘பயா’ என்னும் சொல் வாயிலாக அச்ச உணர்வும் குறிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக உணர்த்தப்பட வேண்டிய அச்ச உணர்வு நேரிடையாகக் கூறப்பட்டுவிட்டது என்றும் கூறமுடியும். இந்தக் குற்றத்தை ஏற்றுக்கொள்வதிலும் கேடில்லை. ஏனெனில் எப்படியும் அச்சம் என்ற உணர்வு அவ்வாறே முடிவடையவில்லை. மாறாக, அது ஹயக்ரீவனின் வீரச்சிறப்பை உணர்த்துவதால் அந்தச்சொல் மறைமுகமாகவே உணர்வை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு செய்வதால் ‘பயா’ என்னும் சொல் உணர்வுக்குறிப்பு (பாவ த்வனி) என்பதற்குக் களமாகிறது. இதுவே பொருள் நிறைவாக வெளிப்படும் இடமாகும். கவிதையின் சாராம்சம் இந்த இடத்திலெல்லாம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் கவனிக்கவேண்டும். இந்தச் செய்யுளைப் பொறுத்தவரை அது சுவையுணர்வை முற்றாகப் புறக்கணிக்கவில்லை என்று உறுதியாகக் கூறலாம். மம்மடரின் ரசனை குறித்த இந்த வாக்கியத்தைப் பரிசீலித்து காவ்யப்ரகாச கன்னடமொழிபெயர்ப்பின் ஆசிரியர் டாக்டர் கே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் ‘கன்னட காவ்யப்ரகாசம்’ என்னும் நூலில் தோற்றுவாய்ப் பகுதியில் விரிவாக எழுதியிருக்கிறார். [ப.11 முதல் ப.16 வரை]. இந்தப் பக்கங்களில் இடம்பெற்றிருக்கும் எண்ணப்பதிவுகளுக்கு பதிலளிக்க இந்த அடிக்குறிப்பு பொருத்தமான இடமில்லை. ஆனால் ஒரு வார்த்தை கூறியே ஆகவேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்யுள் குறிப்புணர்த்தவில்லை அல்லது தெளிவாகக் குறிப்புணர்த்தவில்லை என்று கூறுவதற்குக் காரணம் அது சுவை முதலியவற்றை (ரஸாதி) மறைமுகமாக உணர்த்தவில்லை என்பதால் அன்று. ஆனால் பொருள், அணி இவை குறிப்பாக உணர்த்தப்படுவதில் உள்ள குறைபாடு தான் என்றமைந்த டாக்டர் கே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கூற்றை இந்த நூலாசிரியரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
“ரஸா பாவாதி தாத்பர்ய விவக்ஷா விரஹெசதி
அலங்கார நிபந்தோ ய ஸ சித்ர விஷயோ மதஹ”
என்னும் த்வன்யாலோக வாக்கியத்துடன் [ப. 221] ஒத்திசைவு கொள்ளாமல் இந்தக் கூற்று உறுதியாக விலகியுள்ளது. இதுமட்டுமல்ல, காவ்யப்ரகாச ஆறாம் உல்லாசத்தின் இறுதியில் சித்திரக்கவிதை தொடர்பாக குறிப்பிடும்போது,
“எத்யபி சர்வத்ர காவ்யே அந்ததஹ விபாவத் ரூபதய ரஸ பர்யவந்சாம்
ததாபி ஸ்புடஸ்ய ரஸ ய அனுபாலம்பாத் அவ்யங்க்ய ஏதத்
காவ்யத்வய முக்தம்”
என்று மம்மடர் கூறியிருப்பதற்கும் முழுமையாக மாறுபட்டுள்ளது. மம்மடர் ரசனையை நிறுவும் தீவிரத்தில், அவர் சிறப்பாக ஏற்றுக்கொள்ளும் குறிப்புக்கொள்கையின் ஒரு முதன்மையான அம்சத்திற்கே ஆபத்து ஏற்படும் நோக்கத்தை அவர் மீது சுமத்தலாமா என்ன?
[9] ‘த்ருவேந்தரம் ஸம்ஸ்க்ருத’ நூல்களின் வரிசையில் ஒன்றாக ‘ஸாகித்ய மீமாம்சா’ என்னும் நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் நூலாசிரியர் பெயர் காணப்பெறவில்லை. நூல் பெயரில் இருக்கும் ஒப்புமை காரணமாக இது ‘அலங்கார ஸர்வஸ்வம்’ என்ற நூலை இயற்றிய ஆசிரியரால் இயற்றப்பட்டிருக்கலாம் என்று தொகுப்பாசிரியர் கூறுகிறார். குந்தகர், போஜர் இவர்களின் நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகள் நூல் நெடுகிலும் பல இடங்களில் காணப்படுகின்றன. மேலும் சில கருத்துகள் இலக்கணத்திற்கு முரணானதாக இருக்கின்றன. இந்த நூல் குறிப்புக்கொள்கையை ஏற்கும் ருய்யகரால் இயற்றப்பட்டதாக நம்புவது கடினம். V. Raghavan : Bhoja’s Sringaraprakaasha, I.pp 98-100
[10] எஸ்.கே.டே, பீ.வி.காணே முதலிய அறிஞர்கள் சூத்திரம், விருத்தி இரண்டிற்கும் ருய்யகரே ஆசிரியராக இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தக் கருத்தையே நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.
[11] ‘அலங்கார ஸர்வஸ்வம்’ என்னும் நூலில் அணிப்பகுதியும், கவிதையியலின் மற்ற பகுதிகள் காவ்யப்ரகாசத்திலும் உயர்வாக அமைந்திருக்கும் சிறப்பை வித்யாதர சக்ரவர்த்தி என்னும் உரையாசிரியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.
“காவ்யப்ரகாஷே அலங்கார சர்வஸ்வெ ச்ச விபச்சிதாம்
அத்யாதரொ ஜகத்யஸ்மின் வ்யாக்யாத உபயம் ததஹா”
S.K. De : Sanskrit Poetics, தொகுதி 1. 201 பக்கத்தைப் பார்க்கவும்
[12] இதன் உருவாக்கக் காலகட்டம் கி.பி. 1140ஆகும். ருய்யகர் படைப்பை ஹேமசந்திரர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
[13] சமண சமயத்தைச் சார்ந்த இலக்கணவாதிகள் இன்னும் இருவரையும் இங்கேயே நினைவுகூரவேண்டும். ‘வாக்படலங்காரம்’ என்னும் நூலை இயற்றியிருக்கும் வாக்படர் என்பவர் ஒருவர். இவருடைய காலம் கி.பி. 12ம் நூற்றாண்டின் முற்பகுதி. மற்றொருவர் பெயரும் வாக்படர் என்பதே ஆகும். இவருடைய காலம் கி.பி. 14ம் நூற்றாண்டாக இருக்கலாம். இவருடைய நூல் பெயர் ‘காவ்யானுஸாசனம்’. இந்த நூல்கள் இரண்டுமே சாதாரணமான நூல்கள்தான். கவிதையியல் வளர்ச்சி என்ற நோக்குநிலையிலிருந்து இவ்இரு நூல்களுக்கும் உயர்வான மதிப்பெல்லாம் கிடையாது. கன்னட மக்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு சமண நூல் ‘அலங்கார சிந்தாமணி’ ஆகும். அஜிதசேன முனிஸ்வரர் என்பவர் பங்கவாடி சாந்தீஸ்வர சைத்தியத்தில் அலங்கார சிந்தாமணியை இயற்றினார் என்று உரையின் தொடக்கப் பகுதியிலிருந்து தெரியவருகிறது. அஜிதமுனிஸ்வரர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. கங்ககுல அரசர்களின் குரு அஜிதசேனாச்சாரியார் என்று அறியப்படுபவர் இந்த அஜிதமுனிஸ்வரர் தான் என்று கருதி சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ( New Catalogus Catalogorum, I.p.69; P.V.Kane : History of Sanskrit Poetics, P.378) ஆனால் இங்குக் கூறப்படும் அளவுக்கு உறுதியாக அலங்கார சிந்தாமணி காலத்தால் முற்பட்டதல்ல என்றே தோன்றுகிறது. இந்த பங்கவாடி அஜிதசேனரும், சாவுண்டராயர் ரத்னர் முதலியவர்களின் ஆசிரியரான அஜிதசேனரும் வெவ்வேறு நபர்கள். அலங்கார சிந்தாமணியின் ஆசிரியர் அஜினசேனாச்சாரியார் என்று தவறாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். பங்கவாடியை ஆண்டுவந்த காமராயர் என்னும் அலூப அரசருக்காக அஜிதசேனாச்சாரியார் இயற்றியிருக்கும் ஸ்ருங்காரமஞ்சரி என்னும் மற்றொரு நூலும் உண்டு. இந்த நூலாசிரியரும் அலங்கார சிந்தாமணின் ஆசிரியரும் ஒருவராகவே இருக்கவேண்டும். இவர் கன்னடமொழி அறிந்தவர் என்பதில் ஐயமில்லை. சம்ஸ்க்ருதம், கன்னடம் ஆகிய இரு மொழிகளுக்கும் பொருந்துமாறு அமையும் ‘சம்ஸ்க்ருதகர்நாடஜாதி’ என்ற கூற்று அமைக்கும் உயர்வான முறைகளை எடுத்தாண்டிருக்கிறார் இவர். (2.118)
[14] போஜர், சாரதாதனயர் ஆகியோரை முதன்மையாக இவர் பின்பற்றியிருப்பதாகத் தோன்றுகிறது.
[15] “ப்ரதாப ருத்ர தேவஸ்ய குணானாஷ்ர்த்ய நிர்மிதஹி
அலங்கார ப்ரபந்தோயம் ஸந்தஹ கருணோத்ஸவோஸ்து வஹா”
[16] புகழ்ப்பெற்ற உரையாசிரியர் மல்லிநாதர் ‘ஏகாவளி’ என்ற நூலுக்கும், மல்லிநாதர் மகனாகிய குமாரஸ்வாமி ‘ப்ரதாப ரூத்ரீயம்’ என்ற நூலுக்கும் முறையே உரைகளை இயற்றியிருக்கிறார்கள்.
[17] ஜெயதேவருக்கு ‘ப்யூஷவர்ஷர்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. ப்ரஸன்னராகவா என்னும் நாடக ஆசிரியர் ஜெயதேவர் தான் இவர் என்று கருதுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. ‘கீதகோவிந்தத்தின்’ ஆசிரியர் பெயரும் ஜெயதேவர் தான். ஆனால் அவரும் இந்த ஜெயதேவரும் ஒருவர் அல்ல; இருவரும் வெவ்வேறு நபர்கள்.
[18] Y.Mahalinga Sastri : ‘Appayya Dikshita’s Age’ (JORM,II,pp.225-237) : P.V.Kane; History of Sanskrit Poetics, pp.307-309
[19] சொல்லுக்கு அமைந்த அபிதா எனப்படும் நேரிடையான மற்றும் லக்ஷனா எனப்படும் சூழல்சார் புலப்பாட்டு முறைகளை விளக்கும் ‘வ்ருத்தி வார்த்தீகம்’ என்னும் இவருடைய நூல் பெயரை இங்கு நினைவில் கொள்ளலாம்.
[20] ஜகநாதபண்டிதர் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பெல்லாவே வெங்கட நாராயணப்பா எழுதியுள்ள ‘ஜகநாதபண்டிதராஜா’ (Partishatpatrika, XVI.2) என்னும் கட்டுரையையும், வி. ஏ. ராமஸ்வாமி சாஸ்த்ரி எழுதியுள்ள ‘ஜகநாதபண்டித’ (Annamalai Sanskrit Series) என்னும் நூலையும் பார்க்கவும்.
[21] நிர்மாய நூதனம் உதாரண நஹ்ரூபம் காவ்யம் மயாத்ரா நிஹிதம் ந பரஸ்ய கிஞ்சித் கிம் செவ்யதெ ஸுமநஸம் மநஸபி கந்தஹ கஸ்தூரிகா ஜனந ஸக்திப்ரிதா ம்ரிகேணா
[22] சூக்ஷ்மம் விபாவ்ய மயகா ஸமூதீரிதாநாம் அப்பய்யதீக்ஷித க்ருதாவிஹ தூஷநாநாம்
நிர்மத்சரோ யதி சமுத்தரணம் விதத்ய தாஸ்யாஹம் உஜ்வலம் மதெஸ்சரணவ் வஹாமி
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: அப்பய்ய தீக்ஷிதர் பதினாறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த அறிஞர். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தத்துவம், இலக்கியம், இலக்கணம் ஆகிய துறைகளில் பங்களித்தவர். சிவாத்வைதம் என்னும் தத்துவக்கொள்கையில் ஈடுபாடு மிக்கவர். வேலூர் அருகிலுள்ள விரிஞ்சிபுரம் அப்பய்ய தீக்ஷிதரது பூர்வீக ஊர், இவர் ஆரணி அருகிலுள்ள அடையப்பலம் (அடையப்புலம், அடையாப்பாலம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது) கிராமத்தில் வசித்தார். வேலூர் பகுதியை ஆண்ட சின்ன பொம்ம நாயக்கரின் அவையில் இருந்தார்.
![]() |
கு.பத்மநாபன் |