Wednesday, 9 July 2025

பாகவத சேவையும் பிரஹலாத சரிதமும் - என்.வி. தேவிபிரசாத், என். ஶ்ரீநிவாசன்


மெலட்டூர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர்

பக்தியைப் புகட்டும் ராமாயணம், மகாபாரதம் முதலிய இதிகாச புராணங்கள் அந்தந்த மொழிகளில் உள்ள பெருங்கவிஞர்களால் காப்பியங்களாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அனைவரும் புரிந்து கொள்வது கடினம். இக்கதைகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் கண்ணுக்கினிய காட்சியாய் வடித்தால் பண்டிதர்கள் பாமரர்கள் என்று அனைவரும் பக்திமான்களாகவும், நீதிமான்களாகவும் ஆவார்கள். அதிலும் இசை, நடனம் இவற்றோடு கூட்டி சிறந்த, எளிய சாகித்தியங்களோடு வழங்கும்போது எல்லோரும் ஆனந்தப் பரவசர்களாகி பக்திமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆவார்கள். 

இத்தகைய நோக்கத்தில் உருவான சாகித்திய, சங்கீத, நாடகங்களின் மேளனம், அதாவது ஒன்றிணைவு, ‘பாகவதமேளம்’ என்று பிரசித்தி பெற்றது. பகவத்பக்தியை ஏற்படுத்தும் நாட்டிய இசை நிகழ்ச்சி என்பதால் இதற்கு பாகவதமேளம் என்றும் இவற்றை நிகழ்த்திக் காட்டுவோருக்கு பாகவதர்கள் என்றும் பெயர். இவை முதன்மையாக கோவில்களில் நிகழ்த்தப்பட்டன. பாகவதமேள நாட்டிய நாடகங்கள் பண்டித-பாமர பேதமின்றி எல்லாத் தரப்பினரிடத்தும் பக்திச்சுவை நுகர்ச்சியை விளைவித்து இறைசிந்தனையை வளர்த்தெடுத்தன. இங்கே நாடகம் என்ற சொல் சித்தரிப்பு என்ற பொருளில் வழங்குகிறது. 

யட்சகானங்களும் பாகவதமேளங்களும்

ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கலைகளாக வெவ்வேறு சாதியினரால் ஆடப்பட்ட இசைப்பாட்டு வடிவிலான கதைகளே யட்சகானங்கள் என்பன. பாமரமக்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்டுப் பின்னர் படிப்படியாக பண்டிதர்களாலும் ஏற்கப்பட்ட நிலையில் வீதிகளிலிருந்து மன்னர்களின் சபைகளுக்குச் சென்று சேர்ந்த யட்சகானங்கள் ஆந்திரப்பிரதேசத்திலிருந்தே நாலாபுறமும் பரவின. பால்குரிகி சோமநாதரின் பண்டிதாராத்4ய சரித்ரத்திலும் ஶ்ரீநாதரின் பீ4மேஸ்வர புராணம், க்ரீடாபி4ராமம் முதலிய நூல்களிலும் ஜக்குல புரந்த்4ரி "ஜக்குல குலமகள்", யக்ஷகா3னஸரணி "இயக்கர் இசைநெறி", என்றெல்லாம் யட்சகானத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. பண்டிதாராத்4ய சரித்ரத்தில் நாடகங்கள், பலவகைச் சித்தரிப்புகள், வெட்33ங்கம் என்னும் நாடக வடிவம், தோற்பாவைக் கூத்துக்கள் போன்றவை மட்டுமல்லாமல் த்ரிபுரவிஜயமு "முப்புரம் வென்றமை", காமத3ஹனமு "காமனை எரித்தமை", 3க்ஷாத்4வரத்4வம்ஸமு "தக்கன்வேள்வி கெடுத்தமை", க்ஷீரஸாக3ரமத2னமு "பாற்கடல் கடைந்தமை", ஸிரியாளசரித்ரமு "சீராளன் திருக்கதை" முதலிய புகழ்பெற்ற நாடக வடிவிலான சரிதங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை யாவும் நாட்டுப்புறக் கலை வடிவிலேயே வழங்கின என்பது அறிந்து கொள்ள வேண்டியது. இந்த யட்சகானங்கள் ஜக்குலர்கள் (ஜக்குலு), குறவர்கள் (கொரவலு), சவரர்கள் (ஸவரலு), இடையர்கள் (கொ3ல்லலு) முதலிய சாதியினரால் ஆடப்பட்டவை.

கி.பி. 1537 வாக்கில் கீர்த்தனைகள் பலவும் இயற்றியவராகிய சின்னதிருமலாச்சாரியர் ஸங்கீர்தனாலக்ஷணம் என்ற வடமொழி நூலை தெலுங்குப்படுத்துகையில் இசைநாட்டிய வடிவங்களாகிய ஜக்குலர் கூத்துக்கள் (ஜக்குல ரேகுலு), தருக்கள் (3ருவுலு), ஓடப்பாடல்கள் (ஏலலு), அம்புலியம்மான் பதங்கள் (சந்தமாம பத3முலு) முதலானவற்றைக் குறிப்பிட்டு யட்சகானத்தைப் பற்றி இவ்வாறு வர்ணிக்கிறார். 

யக்ஷகா3ன பத3ம்பு3லு னவ்வித4ம்பு3

ஸமுசிதானேகவித4 தாள ஸங்க3துலுனு

நவரஸாலங்க்ரியா ஸவர்ணம்ப3கு3சு

னலருனனி ஹரிஸங்கீர்தனாசார்யுட3னியெ


"அவ்வாறே யட்சகான பதங்கள் 

உரிய தாள சங்கதிகள் பலவற்றோடும் கூடி 

ஒன்பான் சுவைகளின் அணிநலன்களும் பொருந்தி

மிளிர்வனவாம் என்றார் அரிசங்கீர்த்தனாச்சாரியர்."


15ம் நூற்றாண்டின் பிற்பாதியில் ப்ரோலுகண்டி சென்னசௌரி இயற்றிய ஸௌப4ரிசரிதத்தை முதல் யட்சகானம் என்று கருதலாம் என்றாலும் இன்று அந்நூல் கிடைக்கப்பெறவில்லை. 16ம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சித்திரக்கவி பெத்தன்ன லக்ஷணஸாரஸங்க3ரஹமு என்ற கிரந்தத்தில் யட்சகானத்திற்கு இலக்கணம் கூறுகையில்:

…நிலுசு னர்த4ம்பு னர்த4சந்த்3ரிகலு தீ3

யக்ஷகா3னாதி3 க்ருதுலலோ னார்யுலிடி3

ரக33 பே43ம்பு3லிவி யௌனு ரம்யசர்ய

யவித நிஜதா3ஸ ஸமுதா3ய! யாஞ்ஜனேய!


"… [இதில்] பாதியென நிற்பவை அர்த்தசந்திரிகைகள் [ஒரு ‘ரேக்கு’வில் ஒரு பாதியை அர்த்த சந்திரிகா என அழைப்பர், இது ஒரு குறிப்பிட்ட சந்தத்தை வெளிப்படுத்த உதவும். பழங்கால குச்சுப்பிடி, யக்ஷகான பாடல்களில் இவை மிகுதியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன].

இதனால் யட்சகானம் முதலிய படைப்புகளில் சான்றோர்கள் அமைத்த

ரேகுலு எனும் பாவின வகைகள் இன்னவை என்று கண்டாய்,

நன்னடத்தை உடையவா! மெய்யடியார்க் கூட்டத்தைக் காத்தவா! ஆஞ்சனேயா!"


என்று சொல்கிறார். 

ஸுக்3ரீவ விஜயமு என்ற யட்சகானத்தை இயற்றிய கந்துகூரி ருத்திரகவி (1550-1600) சித்திரக்கவி பெத்தன்னருக்குக் காலத்தால் பிற்பட்டவர். இதே காலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி ராகவாச்சாரியரின் விப்ரநாராயணசரித்ரமே இதுவரை கிடைத்திருக்கும் யட்சகானங்களில் ஆகப் பழமையானது என்று எஸ்.வி. ஜோகாராவு அவர்கள் கருதுகிறார். அர்த்தசந்திரிகைகள், இயற்றியவரின் பெயரை வெளிப்படுத்தும் துவிபதம் எனும் குறளடிச் செய்யுள், ஜம்பை-திரிபுடம் முதலிய தாளங்களை முதன்மையாய்க் கொண்ட கூத்து விகற்பங்களின் செல்வாக்கு, ஓடப்பாட்டுக்கள் ஆகிய எல்லாக் கூறுகளோடும் கூடியதாய் யட்சகான இலக்கணங்களுக்கு ஏற்றதாய் இந்நூல் அமைந்திருக்கிறது. யட்சகான இலக்கணங்களில் முதன்மையானது தாளத்தை முன்னிலைப்படுத்தும் ரேகுலு என்னும் யாப்புவகைகள். இவற்றை ரேகுலு என்பார்கள். இன்னொன்று தரு என்னும் இசைப்பாட்டு வகை. இதனைத் தெலுங்கில் 3ருவு என்பர். இச்சொல் த்4ருவ என்னும் வடசொல்லின் திரிபெனக் கொள்வர்.

இந்த யட்சகானங்கள் கவிஞர்களின் கண்ணைக் கவர்ந்ததைத் தொடர்ந்து பண்டிதர்களும், கவிஞர்களும் தாங்களும் யட்சகானம் இயற்றத் தலைப்பட்டார்கள். அரச சபைகளிலும் இவற்றுக்கு நல்லாதரவு கிட்டலாயிற்று. குச்சிப்புடி பாகவதர்களும், தஞ்சைத் தெலுங்கு பாகவதர்களும் பரதக்கலையில் வல்லவர்களாய் அக்கலையின் பிரயோகங்களில் கரைகண்டவர்களாய் விளங்கியவர்கள். அவர்களின் ஆடல் நிகழ்ச்சிகள் அறிஞர்களின் பாராட்டுதல்களைப் பெற்று அரசவைகளில் பெருமதிப்பு எய்தின. ஒருகாலத்தில் பிற சாதியினரால் ஆடப்பட்டு, பெருவாரியான மக்களின் ஆதரவையும், அடித்தட்டு வர்க்கத்தினரின் வரவேற்பையும் பெற்று உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்த யட்சகானங்கள் பாகவதர்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. நாட்டியத்தை முதன்மையாய்க் கொண்ட தங்கள் கலைவெளிப்பாடுகளுக்கு பண்டிதர், பாமரர் என்று அனைவரிடத்திலும் பரவலான வரவேற்பு கிட்டும் விதத்திலும், அதன் வாயிலாக பக்தியுணர்வுப் பெருக்கினை சாமானியர்களிடமும் கொண்டு சேர்க்கும் விதத்திலும் யட்சகானத்தில் தாளத்தை முதன்மையாய்க் கொண்ட தருக்கள், துவிபதங்கள், ரேகுலுக்கள் முதலிய அம்சங்களை மரபுவழிப்பட்ட தம் நிருத்தியங்களோடு சேர்த்து ஒரு தனி ஆடல்முறையை வகுத்துக் கொண்டார்கள். இடையிடையே சந்தி வசனங்கள், இவற்றுடன் உரையாடல்கள் போன்றவற்றையும் கூட்டிச் செம்மைப்படுத்திக் கொண்டார்கள். இக்காரணங்களால் பிற்காலங்களில் இந்நாடக நிகழ்ச்சிகள் அனைத்து தரப்பினரும் ஏற்றிப் போற்றும் தகுதி படைத்தவை ஆயின. பக்தியை முதன்மையாய்க் கொண்ட இவர்களின் இசைநாட்டியமேளங்களுக்கு கோவில் வளாகங்களே பிரதான அரங்குகளாயின. 

நாளடைவில் அந்தணரல்லாதவரால் நிகழ்த்தப்பட்ட யட்சகானங்கள் வழக்கொழிந்து போயின. யட்சகான இலக்கணங்களோடு கூடி, அந்தணர்களால் ஆடப்பட்டு, பக்தியுணர்வு மிகுந்தவையாய், மரபுவழிப்பட்ட சங்கீத, நிருத்த, நிருத்தியங்களோடு சேர்ந்து புராண இதிகாசக் கதைகளைக் கூறும் இசைக்கூத்துக்களே யட்சகானங்கள் என்ற பெயரில் பிரசித்தி அடைந்தன. பண்டைய யட்சகானங்கள் மக்கள் வழக்கில் வழங்கிவந்த நாட்டுப்புறக் கலைகள் எனலாம். ஆனால் குச்சிப்புடியும், தஞ்சாவூர் பாகவதர்களின் நாட்டியநாடகங்களும் நாட்டுப்புறக் கலைகள் அல்ல. தமக்கே உரிய மரபார்ந்த இலக்கண வரம்புகள் கொண்டவை இவை. பரதர் உரைத்த நிருத்தம், நிருத்தியம், சங்கீதம், சாகித்தியம், உருவகம் முதலிய இலக்கணங்களோடு கூடிய செவ்வியல் கலைகளே பாகவத நாட்டியநாடகங்கள். மகளிர் வேடங்களையும் ஆடவர்களே ஏற்று அபிநயிப்பது பாகவத மேளங்களின் சிறப்பம்சங்களில் முக்கியமானது. பாகவதர்களின் ஆடல் நிகழ்ச்சிகளில் நிருத்திய நிருத்தங்களே முதன்மையாய் வெளிப்பட்டாலும் காலத்திற்கேற்ப மாற்றம் பெற்று உரையாடல்கள், துவிபதங்கள், சந்தி வசனங்கள் (நாடக அங்கங்களுக்கிடையே வரும் கூற்றுகள்), தருக்கள் போன்றவற்றையும் முக்கிய அம்சங்களாய் ஏற்று, தமக்கென தனித்த மரபுக் கூறுகள் கொண்ட இசைநாடக உருப்படிகளாய் இவை இன்று மாறியிருக்கின்றன. வழக்கில் யட்சகானம் என்றே பெயர் பூண்டிருந்தாலும் செவ்வியல் தன்மை கொண்டது இது என்பதால் பாகவதநாட்டியமேளம் ஒரு செவ்வியல் கலையே என்று கூறுவதில் எந்த சந்தேகமுமில்லை. 

வெகுகாலத் தொடர் முன்னெடுப்புகளின் பலனாக அண்மையில் குச்சிப்புடி பாகவதர்களின் நடனக்கலை செவ்வியல் கலையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் தஞ்சாவூர் பாகவத நாட்டியமேளம் செவ்வியல் கலையெனும் அடையாளத்தைப் பெறாமல் நாட்டுப்புறக் கலையாகவே அடையாளப்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. இனியேனும் நடன, இசை, சாகித்தியக் கலைகளில் நிபுணர்களாகிய மத்திய சங்கீத-நாடக அகாதெமியின் உறுப்பினர்கள் இந்தப் பாகவதமேளாவை செவ்வியல் கலையாக அங்கீகரித்துப் பலவாறும் இதற்கு ஊக்கம் தருவது பெரிதும் அவசியம். அருகிக் கொண்டிருக்கும் இக்கலையை ஊக்குவிக்கும் முகமாக இளம் கலைஞர்களுக்கு தக்க பயிற்சியளித்து இதனை வருங்காலத் தலைமுறைகளுக்குக் கடத்தி முன்பிருந்த உன்னத நிலைக்கு இக்கலையினை மீண்டும் உயர்த்துவது அரசாங்கங்களின் பொறுப்பு. 

தஞ்சாவூர் பாகவதமேளா நாட்டியநாடகங்கள்

தஞ்சாவூர் பாகவதமேளா ஏறக்குறைய 500 ஆண்டுகால வரலாறு கொண்டது. தஞ்சை நகரம் இயல், இசை, நாடகக் கலைகளுக்குப் பிறப்பிடம் எனலாம். தஞ்சைப் பெருவுடையார்க் கோவிலில் சோழர் காலத்தில் இராஜராஜேஸ்வரவிஜயம் என்னும் நாட்டியநாடகம் அரங்கேற்றப்பட்டதாக கல்வெட்டுக்களால் தெரிய வருகிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் வீரணுக்கவிஜயம் என்ற தமிழ்நாடகம் பூங்கோவில் நம்பி என்பவரின் தலைமையில் அரங்கேற்றப்பட்டதாக திருவாரூர்க் கோவில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1532ல் விஜயநகர சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தியாகிய அச்சுதராயரின் மனைவி திருமலாம்பாள்தேவி இயற்றிய 4க்தஸஞ்ஜீவி எனும் நாட்டியநாடகம் திருவரங்கத்தில் ஶ்ரீவைஷ்ணவர்களால் அபிநயிக்கப்பட்டது. இந்நாடகத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நிலங்களும், இல்லங்களும் தானமாக அளிக்கப்பட்டன. 

திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களுக்கு அபிநயம் பிடிக்கும் ‘அரையர்’ எனப்படும் ஶ்ரீவைஷ்ணவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களது சேவை ஆண்டுதோறும் கோவில் உற்சவங்களில் நடைபெறவேண்டும் என்று அதற்குத் தக்க தானதர்மங்களைத் திருமலாம்பாள்தேவி செய்ததாகவும் திருவரங்கக் கோவில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருமலாம்பாளின் தங்கை மூர்த்தமாம்பாளுக்கும், செவ்வப்ப நாயக்கருக்கும் திருமணம் நடந்த பிறகு கி.பி. 1550ல் செவ்வப்பநாயக்கர் தஞ்சாவூர் பரிபாலகராக நியமிக்கப்பட்டார். இப்படியாக ஆந்திரர்கள் தஞ்சாவூரின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். செவ்வப்பநாயக்கர், அச்சுதப்பநாயக்கர், ரகுநாதநாயக்கர், விஜயராகவநாயக்கர் ஆகியோர் காலத்தில் ஆந்திரப்பிரதேசத்திலிருந்தும் விஜயநகர சாம்ராஜ்ஜிய அரசவைகளிலிருந்தும் தெலுங்கர்கள் பலரும் தஞ்சை, செஞ்சி, மதுரை நகரங்களில் அரச ஆதரவு பெறவேண்டிக் குடிபெயர்ந்து வந்தார்கள். இதில் கவிஞர்கள், சாத்திர விற்பன்னர்கள், பண்டிதர்கள், கலைஞர்கள், இன்னும் இதரபல துறைகளில் வல்லவர்களும் அடக்கம். 

1506-1509ஐச் சேர்ந்த விஜயநகர மன்னர் வீரநரசிம்மராயரின் அவையில் குச்சிப்புடி பாகவதர்கள் சம்பெட்ட குரவராஜு என்பவனின் அக்கிரமங்களை அபிநயித்துக் காட்டினார்கள் என்று மாச்சுப்பள்ளி வாக்குமூலங்களின் வாயிலாகத் தெரிய வருகிறது. இவ்வாடல் நிகழ்ச்சி யட்சகானமோ நாடகமோ எதுவென அறியக் கூடவில்லை. விஜயநகரப் பிரபுக்கள் இந்தப் பாகவதர்களுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்பது தெளிவு. பாகவத குடும்பங்கள் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கீழ் செவ்வப்பநாயக்கரின் ஆளுகைக்கு உட்பட்ட தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தன. ஆந்திரதேசத்தில் புகழ்பெற்றிருந்த பாகவதர்களின் நாட்டியக் கலை தமிழகத்தின் நாட்டிய மரபுகளோடு இரண்டறக் கலந்தது. இக்காலகட்டத்தில் (தஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில்) தெலுங்கு பிராமணர்கள் மற்றும் பாகவதர் குடிகள் என்று மட்டுமல்லாமல் நாயக்கர்கள், ரெட்டியார்கள் என்று இன்னபிற குடிகளில் பலவும் தலைநகரமாகிய தஞ்சாவூரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் குடியேறின. ரகுநாதநாயக்கரின் தந்தையாகிய அச்சுதப்ப நாயக்கர் 500 தெலுங்கு பிராமணர்களுக்கு தஞ்சையிலிருந்து 20 கி. மீ தொலைவில் உள்ள மெலட்டூர் என்னும் கிராமத்தில் இல்லங்கள் ஏற்படுத்தித் தந்து நிலங்களும் தானம் செய்தார். 

கலைக்கும் கவிதைக்கும் ரகுநாதநாயக்கரின் காலம் ஒரு பொற்காலம். கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் கவிஞர்களுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவு நல்கி இசை மற்றும் இலக்கிய ரசிகராய் விளங்கித் தாமே படைப்புகள் பலவும் இயற்றிய பிறிதோர் ஆந்திரபோஜன் என்று பாராட்டத்தக்கவர் ரகுநாத நாயக்கர். தெலுங்கு பாகவதர்கள் பகவத்பக்தியை ஊட்டி வளர்க்கும் விதமாக வெவ்வேறு புராண இதிகாசக் கதைகளைச் காதுக்கினிய மரபிசைப் பாடல்களோடும், கண்ணுக்கினிய நடனங்களோடும், பாமரர்களுக்கும் புரியும் எளிய பாடல் வரிகளைச் சேர்த்து, துவிபத வடிவில் உரையாடல்களையும், சந்தி வசனங்களையும் பொருத்தி இந்தப் பாகவத நாட்டியநாடகங்களை வடிவமைத்தார்கள். யட்சகானங்களையும், பிற கலைகளையும் தலைமைப்பீடத்தில் அமர்வித்த நாயக்க மன்னர்கள் இசை, நாட்டிய வித்தகர்களையும், பற்பல கலைஞர்களையும், கவிஞர்களையும் போற்றிப் புரந்தார்கள்.

ரகுநாதரின் மைந்தராகிய விஜயராகவரின் ஆட்சியில் பாகவத நாட்டியநாடகங்களுக்கும், நடனம், இசை, கவிதை ஆகியவற்றுக்கும் அரச ஆதரவு வெகுபெரிதும் கிட்டியது. நாயக்கர்களை அடுத்து தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர்களாகிய சிவாஜி, சரபோஜி, அமரசிம்மர், இரண்டாம் சிவாஜி முதலியோர் கலைகளைச் சிறப்பாக ஆதரித்தார்கள். இவர்கள் தெலுங்கு கற்று தெலுங்கிலேயே கவிதைகள், கீர்த்தனைகள், தருக்கள், நூல்கள் என இயற்றலானார்கள். கோவில்களில் நாட்டியங்கள் வளர ஊட்டமளித்தார்கள். பாகவதமேளாக்களுக்கு விசேட ஆதரவு தந்தார்கள். ரகுநாதரின் (1600 – 1633) படைப்புகளில் ஜானகீபரிணயமு, ருக்மிணீக்ருஷ்ணவிவாஹமு, 3ஜேந்த்3ரமோக்ஷமு போன்றவை யட்சகானங்களாய் இருக்கின்றன. 

அவரது குமாரர் விஜயராகவரின் (1633-1673) அரசவையில் யட்சகானங்களுக்கு உண்டான மகத்துவம் இன்னும் உயர்ந்தது. இதில் ஒர் சிறப்பினைச் சொல்லவேண்டும். யட்சகானங்களுக்கு நாட்டியநாடகங்கள் என்ற பெயர் நன்கு நிலைபெறத் தொடங்கியது விஜயராகவரின் காலத்தில் தான். நாட்டியநாடகங்கள், தருக்கள், ஓடப்பாடல்கள், வசனங்கள், இசைப்பாட்டுக்கள், துவிபதங்கள் ஆகிய இலக்கிய வகைகளில் 57 படைப்புகளை இயற்றியவராகிய விஜயராகவரின் ஆக்கங்களில் ஒன்றில் கூட ‘யட்சகானம்’ என்ற பெயரே காணப்படுமாறு இல்லை. விஜயராகவரின் படைப்புகளாக ஆறு நாடகங்கள் இருக்கின்றன. அவை:

  1. காளியமர்த3னம்

  2. க்ருஷ்ணவிலாஸம்

  3. விப்ரநாராயணசரித்ரம்

  4. ரகு4நாதா2ப்4யுத3யம்

  5. பூதனாஹரணம்

  6. ப்ரஹ்லாத3சரித்ரம்

என்பன. இப்படைப்புகள் இசை, நாட்டியம், செய்யுள் ஆகியவற்றின் ஒன்றிணைவே என்றாலும் கூட விஜயராகவர் இவற்றை யட்சகானங்களென்று குறிப்பிடாமல் நாடகங்கள் என்றே சுட்டிச்செல்கிறார். இவர் காலத்தில் தான் யட்சகானங்களுக்கு ‘நாட்டியநாடகங்கள்’ எனும் பெயர் நிலைபெறத் தொடங்கி இன்று வரை அவை நாட்டியநாடகங்கள் என்றே வழங்கி வருகின்றன. 

நாராயணதீர்த்தர் க்ருஷ்ணலீலாதரங்கிணீ என்னும் வடமொழி யட்சகானத்தையும், பாரிஜாதாபஹரணமு என்னும் தெலுங்கு யட்சகானத்தையும் இயற்றியவர். இந்தப் பாரிஜாதாபஹரணத்தை தீர்த்தர் யட்சகானம் எனாது நாடகமென்றே கூறுகிறார். பாரிஜாதாபஹரணாக்2யம் நாடகமபி4னீயதே ”பாரிசாதமரங் கொணர்தல் என்ற நாடகம் ஆடப்படுகிறது” என்றும் ஔரா யீ வித4ம்புன பாரிஜாத நாடகநாட்ய வைக2ரிகி விக்4னம்பு காகுண்ட3 விக்4னேஶ்வருண்டு3 வச்செ மார்க3ம்பு3 பராகு ”ஆகா! இப்படியாக பாரிசாத நாட்டியநாடக நிகழ்ச்சிக்கு இடையூறு நேராதவாறு விக்கினேசுவரர் வந்திருக்கிறார். வழிவிடுக பராக்!” (இது மார்க்க செய்யுளால் பாடப்படுகிறது) என்றும் நூலின் தொடக்கத்திலேயே வரும் சொற்றொடர்களால் இதனை நாட்டியநாடகம் என்றே தெளிவாய் உணர்த்துகிறார்கள். 

இவ்வாறு தஞ்சை நாயக்கர்களின் காலத்தில் சங்கீத, நாடக, சாகித்திய வடிவங்களின் கூடலால் ஏற்பட்ட செவ்வியல் மரபுக் கூத்துக்கு தமிழ்நாட்டு நாட்டியநாடகம் என்ற பெயர் உண்டானது. நாயக்கர்களுக்குப் பிறகு தஞ்சாவூரை ஆண்ட மராட்டியர் காலத்தில் மூன்றுவித பகவத்சேவைகள் இருந்தன. மூன்றும் நாட்டியத்தோடு கூடியவை. அவையாவன:

  1. அரையர் சேவை

  2. பல்லக்கு சேவை

  3. பாகவதமேளங்கள்

அரையர் சேவை
அரையர் சேவை:

இது வைணவ திவ்வியப் பிரபந்தங்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக அபிநயம் செய்யும் கலை. இவ்வரையர் சேவை என்பது ஶ்ரீவைஷ்ணவர்களால் மட்டுமே நிகழ்த்தப்படுவது. இன்றும் ஶ்ரீரங்கத்திலும் ஶ்ரீவில்லிப்புத்தூரிலும் ஆலய உற்சவங்களில் நடைபெறுகிறது. வழிவழியாக இச்சேவை புரிந்து வரும் வம்சத்தாரின் பெயருக்குப் பின்னால் ‘அரையர்’ என்ற சொல் சேர்ந்து ஒரு குடும்பப்பெயர் போல வழங்கும். இவர்கள் அணியும் நீண்ட கிரீடம் (தொப்பி) கிருஷ்ணதேவராயரின் காலத்தை குறிப்பால் உணர்த்துகிறது. அரையர்கள் இக்கிரீடத்தை சூடிக்கொண்டு பூமாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு பாடியவாறு உணர்ச்சிப்பெருக்குடன் பாசுரங்களுக்கு அபிநயம் செய்வார்கள். 

பல்லக்கு சேவை:

இதற்கான பாடல்களுக்கு கோவில்களைச் சேர்ந்த தேவதாசிப் பெண்கள் மட்டுமே நாட்டியப் பிரயோகம் செய்வார்கள். இதனை ‘சங்கீத மேளம்’ என்றும் சொல்வதுண்டு. சிவாஜியின் பல்லக்கு சேவைப் பிரபந்தங்கள் என்ற வகையில் சங்கர பல்லக்கு சேவை எனும் நூலும், விஷ்ணு பல்லக்கு சேவை எனும் நூலும் உள்ளன. 

பாகவத சேவை:

இதனை ‘பாகவதமேளம்’ என்பார்கள். இந்த மேளத்தை தெலுங்கு அந்தணர்கள் மட்டுமே செய்வார்கள். பெண்வேடங்களை ஆண்களே கட்டுவார்கள். பக்தி உணர்வு மிகுந்த கதைகளை மட்டுமே நாட்டியநாடகங்களாக ஆடுதல் பாகவதமேளாவின் சம்பிரதாயம். இன்று வரையும் கூட பெண்வேடங்கள் ஆண்களாலேயே தரிக்கப்படுகின்றன. தஞ்சாவூரிலுள்ள சில கிராமங்களில் கோவில் வளாகங்களில் இந்த பாகவத மேளங்கள் நடைபெற்று வந்தன. சான்றாக,

  1. ஊத்துக்காடு

  2. மெலட்டூர்

  3. தேப்பெருமாநல்லூர்

  4. சூலமங்கலம்

  5. சாலியமங்கலம்

  6. மன்னார்குடி

ஆகிய கிராமங்களின் ஆலயங்களில் இந்நாடகங்கள் நிகழ்ந்து வந்தன. இந்தக் கிராமங்களின் கோவில்களில் மட்டுமல்லாமல் அரசர் மாளிகைகளிலும் கூட இவை நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திலுள்ள மோடி லிபி ஓலைகளின் வழியாக கி.பி. 1869ல் கோகுலாஷ்டமி தினத்தன்று ருக்மிணீகல்யாணமும், கி.பி. 1821ல் 3ணபதி லீலார்ணவமும் ஆக இரண்டு நாட்டிய நாடகங்கள் ஆடப்பட்டன என்று தெரிகிறது. கி.பி. 1786ல் மன்னார்குடியில் பாகவதமேளங்கள் நடத்தியவர்களுக்கு பொருட்களும் பண்டங்களும் சன்மானம் தந்ததாக அரசோலைகளிலிருந்து தெளிவாகிறது. 

விஜயராகவர் இயற்றிய ப்ரஹ்லாதசரித்ர நாடகம் தஞ்சைக் கோட்டையின் கிழக்குவாயிலின் அருகே இருந்த நரசிம்மர் கோவிலில் நடைபெற்றது. அவ்வாறே அவரது ருக்மிணிகல்யாணமு முதலான நாடகங்கள் மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி ஆலயத்தின் வளாகத்தினுள் நிகழ்த்தப்பட்டன. இப்படியாக நாயக்க, மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் தெலுங்கிலக்கியம் சீரும் சிறப்புமாய் பல்கிப் பரவியது. 

பாகவத மேளா

மெலட்டூர் பாகவதமேளா

சோழர் காலத்திலிருந்து அவர்களது தலைநகரமாகவும், கலை-இலக்கியப் படைப்புகளுக்கு மையமாகவும் திகழ்ந்து வந்த தஞ்சைநகரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது மெலட்டூர். மேளத்தூர், அதாவது மேளத்து ஊர் என்ற பொருளில் தொடங்கி, காலப்போக்கில் மேலட்டூர் > மெலட்டூர் என்று மருவிவிட்டதாகச் சிலர் விளக்கம் கூறுவர். ஆனால் இது உண்மையல்ல. சோழர்களில் ராஜராஜசோழன் மற்றும் ராஜேந்திரசோழன் காலத்து கல்வெட்டுக்களில் ‘நித்தவிநோதவளநாட்டுப் பெருமெலட்டூர்’ என்று இவ்வூர் சுட்டப்படுவதால் சோழர் காலத்திலிருந்தே மெலட்டூர் என்று வழங்கி வந்திருப்பதாக தெளிவாகின்றது. சிலர் கூறுவது போல மெரட்டூர் என்பதும் கூட அதன் உண்மையான பெயர் அல்ல. 

செவ்வப்ப நாயக்கரின் மைந்தர் அச்சுதராயர் 500 தெலுங்குப்பிராமண பாகவதர்களுக்கு மெலட்டூர் கிராமத்தில் குடியிருக்க இல்லங்களும், விளைநிலங்களும் தானமாய் அளித்தார். இத்தானம் செய்ததற்கான காரணம் விசித்திரமானது. தாம்பூலம் ஏந்தும் பையை அடைப்பம் என்பார்கள். அச்சுதராயர் ஒருமுறை அடைப்பக்காரனை அருகே வைத்துக் கொண்டு மனம் போன போக்கில் இடது கையால் அவனிடமிருந்து வெற்றிலை வாங்கி வாயில் போட்டுக் கொண்டாராம். அந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தமாக பூதானம் செய்தார் என்று சொல்வார்கள். எது எப்படியிருந்தாலும் இக்கிராமத்திலும் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களிலும் தெலுங்கர்களே பெரும்பான்மையாக இருந்து வந்தார்கள். அச்சுதராயர் கொடைவழங்கிய ஊர் என்பதால் மெலட்டூருக்கு ‘அச்சுதபுரம்’ என்றும் ‘அச்சுதாப்தி’ என்றும் பெயர்கள் வழங்கின. இத்தலத்தில் உள்ள சிவபெருமானின் திருநாமம் ‘உன்னதபுரீசர்’. இக்காரணத்தால் இவ்வூர் ‘உன்னதபுரி’ என்றும் பெயர் பெற்று விளங்கியது.

மெலட்டூர் இசை, இலக்கியம் மற்றும் நாட்டியங்களுக்குப் பெயர்பெற்றது. தஞ்சாவூர் நாயக்கர் அரசவைக்கும் மெலட்டூருக்கும் இடையே நெருங்கிய நல்லுறவு இருந்து வந்தது. புகழ்பெற்ற நட்டுவனார்களும், பாகவதர்களும், இசைமேதைகளும் இவ்வூரில் குடியிருந்தார்கள். பாகவத மேளாக்கள் கி.பி. 1550 முதலே இங்கு நடந்து வந்திருக்கின்றன. சூலமங்கலம், ஊத்துக்காடு போன்ற இதர கிராமங்களிலும் இவை நடைபெற்றன என்றாலும் மெலட்டூரே பாகவத நாடகங்களுக்கு மையமாய் இருந்து வந்தது. மேலும் நாட்டியம் முதலிய கலைகளை பயில்வோர்க்குப் பயிற்சி மையமாக இருந்ததோடு மட்டுமின்றி தஞ்சாவூர் ஆஸ்தானத்துக்குத் தலைசிறந்த கலைஞர்களையும் வழங்கி வந்தது.

நாராயணதீர்த்தர் மெலட்டூரில் வாழ்ந்து வந்தவர். தீர்த்தரின் க்ருஷ்ணலீலாதரங்கி3ணீ எனும் வடமொழி யட்சகானமும், பாரிஜாதாபஹரணம் எனும் தெலுங்கு யட்சகானமும் இவ்வூரைச் சேர்ந்த பாகவதர்களால் நாட்டிய சாத்திரத்தில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு இணங்க ஆடப்பட்டவை. ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த காஜா எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நாராயணதீர்த்தர் ஒரு மாமேதை. சங்கீதம், சாகித்தியம், நாட்டியம் ஆகியவற்றில் தேர்ந்தவர். அத்வைதி என்றாலும் கிருஷ்ணபக்தர்; நரசிம்ம உபாசகர். பல திருப்பதிகளுக்கும் சஞ்சாரம் செய்து இறுதியில் மெலட்டூரில் குடியமர்ந்தவர். இவருக்கு முன்பே இவ்வூர் பாகவதமேள நாட்டியத்திற்குப் பெயர் போனது. இந்தப் பாகவதமேள சம்பிரதாயத்தில் தீர்த்தரின் தாக்கம் தெள்ளத் தெளிவாகக் காணக் கிடைக்கிறது. இப்போது கூட நாராயணதீர்த்தம் என்னும் பொய்கை, வரதராஜ சுவாமி கோவில், அங்கு நரசிம்மசுவாமியின் சந்நிதி போன்றவை இதற்குச் சாட்சியங்களாக நிற்கின்றன. இவரும் தனது பாரிஜாதாபஹரணத்தை நாடகம் என்றாரே தவிர யட்சகானம் என்று கூறவில்லை. அத்துடன் இவர் தனது நாடகத்தின் இற்ற இறுதியில் வரும் துதிப்பாடலில் வரதராஜ சுவாமியைப் போற்றி

     ஶரணம் ஶரணம் முனீந்த்3ரஸந்நுத - ஶரணம் கமலாநாயக 

ஶரணமச்யுதபுரிநிவாஸ – ஸ்வாமி வரத3ராஜப்ரபோ4


"முனிவர் பெருமக்களால் தொழப்படுபவனே சரணம் சரணம்!

திருமகள் கேள்வனே சரணம்! அச்சுதபுரியில் அமர்ந்தவனே சரணம்!

வரதராஜசுவாமியே பிரபுவே சரணம்! "


என்ற வரிகளோடு நிறைவு செய்கிறார். 

நாராயண தீர்த்தர்

நாராயணதீர்த்தரின் சீடர் சித்தேந்திரயோகி குச்சிப்புடி நாட்டியக்கலையின் மகோன்னத நிலைக்கு மூலகாரணமாய் இருந்தவர். சித்தேந்திரயோகியின் பங்களிப்பால் யட்சகான நாடகங்கள் மரபு நெறிப்பட்ட நிருத்தியங்களோடு கூடியவையாய் எட்டாத சிகரங்களை எட்டின. சித்தேந்திரயோகி பா4மாகலாபமு என்ற நாடகத்தை இயற்றி குச்சிப்புடி நாட்டியக்கலையின் புதியதொரு மரபினைத் தோற்றுவித்தார். பா4மாகலாபம் என்று பரவலாய் அறியப்பட்டாலும் இது பாரிஜாதாபரஹரணக் கதையே ஆகும். 

ஔரா யீ வித4ம்புன பாரிஜாத நாடகநாட்ய வைக2ரிகி விக்4னம்பு காகுண்ட3 விக்4னேஶ்வருண்டு3 வச்செ மார்க3ம்பு3 பராகு

"ஆகா! இப்படியாக பாரிசாத நாடகநாட்டிய நிகழ்ச்சிக்கு இடையூறு நேராதவாறு விக்கினேசுவரர் வந்திருக்கிறார். வழிவிடுக பராக்! " இது மார்க்கச்செய்யுளால் பாடப்படுகிறது.

எனும் சந்திவசனமும் பின்னர்,

வச்செனே க3ணபதி இது3கோ3 – 

பா3லவரது3டை3 மிகு3லனு வன்னெ மீரக3னு

"வந்தனன் கணபதி இதோ –

வரந்தரு பிள்ளையாய் மிக்கொளி மிளிர! "


என்னும் நாராயணதீர்த்தரின் பாரிஜாதாபஹரண எடுப்பும் பின்னர்த் தோன்றிய பாகவத நாட்டியநாடகங்களுக்கு விழுமமாகவும், முன்மாதிரியாகவும் மாறின. இவ்வகையில் மெலட்டூர் பாகவதமேள நாட்டியநாடகங்கள் யாவும் இத்தகைய சந்திவசனங்கள் அமைய விக்கினேசுவர வருகையோடு தொடங்குவன ஆயின. 

சுமார் 1672-1685க்கு இடையில் குச்சிப்புடி பாகவதர்கள் அபுல்ஹசன் தானாஷாவின் முன்னிலையில் பா4மாகலாபத்தை ஆடிக் காட்ட அவ்வற்புத ஆடலைப் பாராட்டிய அவர் பாகவதர்களுக்கு குச்சிப்புடி அக்கிரகாரத்தை வெகுமதியாய் அளித்தார். என்றால் அதற்கு முன்பே சித்தேந்திரயோகியின் பா4மாகலாபம் பிரசித்தி பெற்றிருக்க வேண்டும். இக்காலத்திற்கு முன்னரே தஞ்சாவூரின் அருகில் உள்ள மெலட்டூரில் நாராயணதீர்த்தர் நிரந்தரவாசம் ஏற்படுத்திக் கொண்டு பாரிஜாதாபஹரணம் இயற்றுதலும், அதனை அங்குள்ள தெலுங்கு பாகவதர்கள் அபிநயித்தலும் நடந்திருக்க வேண்டும். 

இவற்றைக் கொண்டு தெலுங்கு பாகவதர்களின் பாகவதமேளங்கள் இருகிளைகளாக தஞ்சாவூர், குச்சிப்புடி பிரதேசங்களில் ஒரேகாலத்தில் வளர்ச்சியடைந்தன என்று கருத வழி ஏற்படுகிறது. நாராயணதீர்த்தரின் தரங்கங்கள் (இசைப்பாடல் வகைகளில் ஒன்று) இன்று வரை குச்சிப்புடி நாட்டியத்தில் இன்றியமையாதனவாக இருப்பதனைக் காணலாம். ‘பா3லகோ3பால மாமுத்34ர’ என்னும் அவரது தரங்கம் குச்சிப்புடி நாட்டியப் பயிற்சியின் அடிப்படை அங்கமாக இருப்பதும் இதனை வற்புறுத்துகிறது. 


கவிகுல திலகம் மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி
மெலட்டூர் வெங்கடராமசாஸ்திரி

குச்சிப்புடி நாட்டியக்கலைக்கு சித்தேந்திரயோகி எப்பேர்ப்பட்டவரோ தஞ்சாவூர் பாகவதமேளாவிற்கு வெங்கடராமசாஸ்திரி அப்பேர்ப்பட்டவர். மெலட்டூர் பாகவதமேளா சம்பிரதாயத்திற்கு மிக உயர்ந்த அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்குப் புத்துயிரூட்டிய பெருந்தகையாளர் வெங்கடராமசாஸ்திரியார். இவர் சங்கீத, நாட்டிய, சாகித்தியங்களில் அபார ஞானம் நிறைந்த பன்முக வித்தகர். ஆந்திர-சமஸ்கிருத மொழிகளிலும், வேதாந்தம் முதலிய சாத்திரங்களிலும் ஈடிணையில்லாத பாண்டித்தியம் உடையவர். இவர் எழுதிய பல்வேறு நாட்டிய நாடகங்களும் இவரது தலைமையிலேயே நிகழ்த்தப்பட்டு பாகவதமேளா சம்பிரதாயம் மீண்டும் நிலைபெறத் துணை புரிந்ததோடு அல்லாமல் கவிஞர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று அனைவரின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்று இன்று வரை தமக்கென்று ஒரு தனியிடத்தை வகித்துக் கொண்டு உயிர்ப்புடன் நிலைத்து நிற்கின்றன. 

வெங்கடராமசாஸ்திரியின் தந்தையார் கோபாலகிருஷ்ணய்யா. குருநாதர் லட்சுமணய்யா. கோபாலகிருஷ்ணய்யா நாராயணதீர்த்தரின் சீடராய் இருந்திருக்கலாம். இவரும் சில நாட்டிய நாடகங்களை இயற்றி அரங்கேற்றம் நிகழ்த்தினார் என்பார்கள்.

“ஸலலித லக்ஷ்மணார்யுனி க்ருபவல்ல

கோபாலக்ருஷ்ணார்ய கொமருடை3னட்டி...” 

"இன்னலம் வாய்ந்த இலக்குமணாரியர் அருளால்

கோபாலகிருஷ்ணாரியரின் மைந்தனாகிய...” 


என்று நாடகத்தை இயற்றியவரின் பெயர் துவிபத வடிவில் குறிக்கப்பெற்றுள்ளது. இவர் ஶ்ரீவத்ச கோத்திரக்காரர். தெலுங்கு பாகவதர் குலத்தைச் சேர்ந்தவர். ‘வேங்கடராமுடு3 விஶத3ம்பு3கா3னு’ என்று பாயிரத்தின் துவிபத உறுப்பில் காணப்படுவதால் இவர் தெலுங்கு பிராமணர் என்றும், ‘வெங்கடராமய்ய’ என்பது இயற்பெயராகவும் தெளியப்படுகிறது. அவரது பெயரின் பின்னடையாய் வந்த ‘அய்ய’ என்னும் தெலுங்கு சொல் ‘ஆர்ய’ என்று வடசொல்லாக துவிபதப் பாடலில் ஆளப்பட்டிருக்கிறது. இவர் அத்வைத வேதாந்தம் முதலான சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்த பாண்டித்தியம் உடையவராதலால் வெங்கடராம சாஸ்திரி என்று புகழ்பெற்றார். இவர் தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜியின் காலத்தில் வாழ்ந்தவர் என்று சங்கீ3தஸம்ப்ரதா3யப்ரத3ர்ஶினியில் சுப்பாராவு தீட்சிதர் குறிப்பிடுகிறார்.

“தீ4ருடௌ3 ஶ்ரீஶிவாஜீ க்ஷிதிதனயு

டா3ர்ஜவம்பு3ன ப4க்தி னதி4குடை3னட்டி...” 

"வீரர் ஶ்ரீ சிவாஜியின் நாட்டைச் சேர்ந்தவரும்

எளிமையிலும் பக்தியிலும் சிறந்தவருமாகிய...”


என்று வரும் மார்க்கண்டேய நாடக கதைச்சுருக்கத்தின் துவிபத வரிகளால் இவர் இரண்டாம் சிவாஜியின் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அம்மன்னரின் ஆதரவினைப் பெற்றிருந்தார் என்றும் திடமாகிறது. சரபோஜியின் ஆட்சிக்காலம் கி.பி. 1800 – 1832; இரண்டாம் சிவாஜியின் ஆட்சிக்காலம் கி.பி. 1832 – 1855. ‘ஏமந்தயானரா’ எனும் புகழ்பெற்ற ஹுசேனி ராக ஸ்வரஜதிக்கு வெங்கடராமசாஸ்திரி சாகித்தியம் எழுத தஞ்சாவூர் ஆஸ்தானத்தின் சங்கீத வித்துவான் ஆதி அப்பய்யா அதற்கு ஸ்வரம் சேர்த்தார் என்று சுப்பாராவு தீட்சிதர் சுட்டிக் காட்டியுள்ளார். பச்சிமிரியம் ஆதி அப்பய்யா தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் (கி.பி. 1741 – 1764) மற்றும் இரண்டாம் துளஜாவின் (கி.பி. 1765 – 87) ஆஸ்தானத்தில் இடம்பெற்றவர். மேற்கூறிய ஸ்வரஜதி சாகித்தியத்தின் பாடபேதத்தில் 1799 – 1836 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த மல்லாரிஜீ கதாநாயகராக வருணிக்கப்பட்டிருப்பார். அக்காலத்து மராட்டிய மன்னர்களின் ஆட்சிப்பத்திரங்களில் தத்தாஜீயின் குமாரர் மல்லாரிஜீ என்ற குறிப்பு கிடைக்கிறது. 

தியாகராஜர்
இந்த ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் மெலட்டூர் வெங்கடராமசாஸ்திரி, ஆதி அப்பய்யா, மல்லாரிஜீ, சங்கீத மும்மூர்த்திகளில் முதலாமவரும் முதன்மையானவருமான தியாகராஜர் ஆகியோர் சமகாலத்தவர்கள் என்று தெள்ளத்தெளிவாகிறது. ஆதி அப்பய்யாவின் முதுமைக் காலத்திலும், தியாகராஜரின் இளமைக் காலத்திலும் வெங்கடராம சாஸ்திரி வாழ்ந்திருக்கக் கூடும். ஆதி அப்பய்யா அமைத்த ஸ்வரஜதிக்கு உண்டான சாகித்தியத்தை எழுதியபோது வெங்கடராம சாஸ்திரி இளைஞராய் இருந்திருப்பார். எனில் வெங்கடராமய்யா எனும் வெங்கடராமசாஸ்திரி ஏறக்குறைய 1760 – 1860க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இவர் நரசிம்ம உபாசகர். இவரது தந்தையார் கோபாலகிருஷ்ணய்யா நாராயண தீர்த்தரின் சீடராய் இருந்து அவரிடமிருந்து நரசிம்ம உபாசனையை உபதேசமாய் பெற்றார் என்பதால் தன் தந்தையிடமிருந்தே இவரும் உபதேசம் பெற்றிருப்பார் என்று கருதலாம். 

பாகவத மேளாவின் முதல் நூலான பிரஹலாத சரிதம் நூல் வெளியீட்டு விழா (2016)
வெங்கடராமசாஸ்திரியின் படைப்புகள்

இவர் 11 நாட்டியநாடகங்களைப் படைத்துள்ளார். அவையாவன:

  1. ப்ரஹ்லாத3சரித்ரமு

  2. ருக்மிணீகல்யாணமு

  3. மார்கண்டே3யசரித்ரமு

  4. ஸீதாகல்யாணமு

  5. கம்ஸவத4மு அல்லது ஶ்ரீக்ருஷ்ணஜனனமு

  6. ஹரிஶ்சந்த்3ரநாடகமு

  7. உஷாபரிணயமு

  8. த்4ருவசரித்ரமு

  9. பார்வதீபரிணயமு

  10. ஹரிஹரலீலாவிலாஸமு

  11. ஶிவராத்ரிநாடகமு

இவற்றில் ஶிவராத்ரிநாடகமு இது வரை முழுமையாய்க் கிடைக்கவில்லை. சில பகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இவை தவிர ஜகல்லீலாவிலாஸமு, ஸத்ஸங்க3ராஜ சரிதமு, அஸத்ஸங்க3ராஜ சரிதமு என்னும் மூன்று நாட்டியநாடகங்களை வெங்கடராமசாஸ்திரியின் படைப்புகளாக முனைவர் ஜோகாராவு அவர்கள் எடுத்துக் காட்டுகிறார். இன்னும் சிலர் வெங்கடராமசாஸ்திரி மெலட்டூரிலிருந்து வெளியேற்றப்பட்டு தேப்பெருமாநல்லூரில் வசித்து வந்ததாகவும் அங்கு தான் அவர் ருக்மாங்க33சரித்ர, அம்ப3ரீஷசரித்ர, க்ருஷ்ணாவதாரமு, தேவகீகல்யாணமு, ருக்மிணீகல்யாணமு முதலிய நாடகங்களை எழுதினாரென்றும் கூறுகிறார்கள். ஆனால் இவற்றுக்குத் தக்க ஆதாரங்கள் புலப்படுமாறு இல்லை. ஆண்டுதோறும் ஶ்ரீராமநவமிக்குப் பிறகு வரும் ஏகாதசி அன்று ருக்மாங்க33 சரித்ரமும், துவாதசி அன்று அம்ப3ரீஷ சரித்ரமும் ‘ப்ராசீன ஸம்ப்ரதா3ய நாடக ஸங்க4ம்’ என்ற பெயர்கொண்ட அமைப்பின் கீழ் நிகழ்த்தப்பட்டு வந்தன என்று மட்டும் தெரிய வந்திருக்கிறது. 

அண்மைக் காலங்களில் பாகவதமேளாக்கள் பல இடங்களில் வழக்கொழிந்து விட்டன. சில காலம் முன்பு வரை மெலட்டூரில் பத்து நாட்களும், சாலியமங்கலத்தில் மூன்று நாட்களும், தேப்பெருமாநல்லூரில் ஒரு நாளும் என்று மேளாக்கள் நடந்து வந்தன. இப்போது மெலட்டூரில் ஐந்து நாட்களும், சாலியமங்கலத்தில் ஒரு நாளும் மட்டுமே நடைபெறும் வழக்கம் உள்ளது. கலைஞர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணிநிமித்தம் சென்ற பின்னரும், ஆண்டிற்கு ஒருமுறை வந்து மேளாக்களில் நடிக்கிறார்கள். கலைஞர்களில் தெலுங்கர்கள் இருந்தாலும் அவர்களுக்கு தெலுங்கு எழுதவோ படிக்கவோ வராது. 

ஶ்ரீவெங்கடராமசாஸ்திரி நாட்டியநாடகங்கள் என்று மட்டுமில்லாமல் பல தத்துவப் பாடல்கள், கீர்த்தனைகள், சிந்துக்கள், பக்திக் கிருதிகள் இவ்வாறு பலதரப்பட்ட ஆக்கங்களைப் படைத்தளித்துள்ளார். ‘தோட வேஸினாமு இபுடு3’ என்ற வேதாந்த கீர்த்தனையில் உடலைத் தோட்டத்தோடு ஒப்பிட்டு வைராக்கிய போதனையை நெடிய சரணங்களின் வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இப்படைப்பு தற்காலத்தில் நம் கைக்கு கிட்டவில்லை. வெங்கடராமசாஸ்திரி மந்திரசித்தி அடைந்தவர். இவரது மகிமைகள், ஆன்மீக சாதனைகளைப் பற்றி சமஸ்கிருத சுலோகத் தொகுதி ஒன்று உள்ளதாக அறிய நேர்ந்தது. ஆயினும் எவ்வளவு தீவிரமாய்த் தேடியும் அகப்படவில்லை. இத்தொகுதி கிட்டுமானால் இன்னும் பல விவரங்கள் தெரிய வரலாம். 

***********

பிரஹலாத சரிதம் பாகவத மேளா நாடகம்

ப்ரஹ்லாத3சரித்ரமு

ஶ்ரீவெங்கடராம சாஸ்திரிகளின் படைப்புகள் தமிழகத்துத் தெலுங்கிலக்கியத்துக்கும், பாகவத நாட்டியக்கலைக்கும் ஒப்பற்ற ஏற்றத்தை தேடித் தந்தவையாகவும் என்றென்றும் பெருமைப்படத்தக்க கலை இலக்கியச் செல்வங்களாகவும் உள்ளன. இம்மரபுக் கலையும் இலக்கியமும் தமிழர்களால் இன்று வரையும் காப்பாற்றப்பட்டு வந்திருப்பது சொல்லிக்கொள்ளத் தக்க தனிச்சிறப்பு எனலாம். இவர் படைத்த நாட்டியநாடகங்கள் யாவற்றிலும் முதன்மையானது ப்ரஹ்லாத3சரித்ரமு. சாகித்திய நலத்தின் அடிப்படையிலும், சங்கீத, நாட்டிய மேன்மையின் அடிப்படையிலும் இந்நாடகம் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. நரசிம்மஜெயந்தி உற்சவங்களோடே இந்தப் பாகவதமேளா தொடங்குகிறது. நரசிம்ம ஜெயந்தியன்று இரவில் பிரகலாதனின் சரித்திரம் மேடையேற்றப்படுகிறது. அதே போல நாட்டியநாடகங்கள் எல்லாவற்றிலும் இந்நாடகமே பல்வேறு இடங்களில் பலமுறை ஆடப்பட்டிருக்கிறது. பாகவதமேளா என்றாலே எல்லோருக்கும் பிரகலாதனின் சரித்திரமே மனதில் நிழலாடும். 

வெங்கடராமசாஸ்திரியின் புலமைத் திறன், பக்திப்பெருக்கு, இசைநாட்டியக் கலைகளில் அவருக்கிருந்த நுண்மாண் அறிவு, மேதைமை இவற்றுக்கு நிதர்சனமாய் விளங்குவது இவரது ப்ரஹ்லாத3சரித்ர நாடகம். இந்நாடகத்தில் கந்தமு, ஸீஸமு, உத்பலமால, சம்பகமால, ஶார்தூ3லவிக்ரீடி3தம், மத்தேப4ம், தேடகீ3தி முதலிய பல்வேறு யாப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியக் கதையும், உரையாடல்களும் பெரும்பாலும் துவிபத வடிவில் அமைந்திருக்கின்றன. கடவுள் வாழ்த்துக்குப் (ப்ரார்த2) பிறகு துவிபதமாய் அமைந்த பாயிரத்தோடு (நாந்தி3) இந்நாடகம் தொடங்குகிறது. நாந்தி துவிபதத்தை (நூலாசிரியரின் விவரங்களைக் கூறும்) கர்த்ருத்வ த்3விபத3மு என்றும், (கதைபொதி பாடலாய் கதையை சுருங்கச் சொல்லும்) கதா2ஸங்க்3ரஹ த்3விபத3மு என்றும் கூறுவர். இவை வெங்கடராமசாஸ்திரிகளின் நாடகங்கள் அனைத்திலும் காணப்படுவன. பின்னர் விநாயகர் வாழ்த்தில் (3ணபதி ப்ரார்த2) தொடங்கி, கட்டியக்காரனின் பிரவேசம், இரணியகசிபு, பிரகலாதன், லீலாவதி ஆகிய பாத்திரங்களின் பிரவேசம், சுக்கிராச்சாரியரின் வருகை, இரணியகசிபு தன் சகோதரனைக் கொன்றழித்த அரியைத் தேடுவதற்காகத் தன் பரிவாரங்களை அனுப்புதல், பிரகலாதனும் லீலாவதியும் இரணியகசிபுவுக்கு விஷ்ணுவோடுள்ள பகைமை தகாது என்று கூறுதல், பிரகலாதனுக்கு எழுத்தறிவித்து குருவுபதேசம் செய்வித்தல், இரணியன் பிரகலாதனின் அரிபக்தியைச் சினந்து அவனைக் கொல்லத் தீர்மானித்தல், லீலாவதி அதனைத் தடுக்க முயலுதல், பாம்பாட்டிகளைக் கொண்டு நஞ்சு புகட்டுதல், யானைகளைக் கொண்டு மிதிக்கச் செய்தல், மல்யுத்த வீரர்களைக் கொண்டு கொல்லச் செய்தல், இறுதியில் இவை எவற்றாலும் பிரகலாதனைக் கொல்ல இயலாது போகவே இரணியகசிபுவே இவனிடத்தில் அரியை நேருக்கு நேர் காட்டுமாறு பணித்தல், அரி எல்லாவிடங்களிலும் இருக்கிறான் என்றும் அவனோடு கொள்ளும் பகை நல்லதல்ல என்றும் தந்தைக்கு உபதேசித்தல், இதனால் ஆத்திரமடைந்த இரணியகசிபு அரி தூணில் இருக்கிறானா என்று கேட்டு அத்தூணை வாளால் பிளத்தல், நரசிம்ம உருவில் விஷ்ணுமூர்த்தி தூணில் தோன்றுதல், தனக்கு இதுவரை கண்ணில் படாத அரியைக் காட்டித் தந்ததற்கு மகன் பிரகலாதனை இரணியன் மெச்சுதல், இரணியன் நரசிம்மர் உரையாடல், இரணியகசிபுவை வதஞ்செய்தல் என்று தொடர்ந்து, இறுதியில் பிரகலாதன் நரசிம்ம சுவாமியைத் துதித்தல், சுவாமி பிரகலாதனுக்கு அருள் செய்தல் என்பதோடு முடியும். இது நாடகத்தின் சாராம்சம். 

இந்நாடகம் எளிய நடையில் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் சொற்பொருள் நயங்கள் நிறைந்ததாய் இருக்கிறது. பக்திச்சுவை இந்நாடகத்தில் முதன்மையாய்ப் பேணப்பட்டிருக்கிறது. போத்தன்னர் இயற்றிய பாகவதத்தின் தாக்கம் எண்ணற்ற கவிஞர்களின் படைப்புகளில் காணப்படுவதைப் போல இந்த நாட்டியநாடகத்திலும் அங்கங்கு அமைந்திருப்பது அழுத்தம் திருத்தமாகப் புலப்படுகிறது. 

“கமலாக்ஷுனர்சிஞ்சு கரமுலு கரமுலு”

"கமலக்கண்ணனை அர்ச்சிக்கும் கரங்களே கரங்கள்” 

என்னும் போத்தன்னரின் புகழ்பெற்ற பாகவத வரிகளை அடியொற்றி அதே பொருளில் வேறு வரிகள் இதில் காணப்படுகின்றன.

“ஈ ஹஸ்தயுக3ளம்பு32லம்பு3ரா 

ஶ்ரீரமாபதினி பூஜிம்பகுன்ன

ஈ நேத்ரயுக3ளம்பு3கேமி ப2லம்பு3ரா 

ஸோமஸூர்யாக்ஷுனி ஜூட3குன்ன

ஈ மஸ்தகம்பு3னகேமி ப2லம்பு3ரா 

தீ3னரக்ஷுனி வந்தி3ம்பகுன்ன

ஈ ஜிஹ்வயுண்டு3டகேமி ப2லம்பு3ரா 

நிக3மஸஞ்சருனி வர்ணிம்பகுன்ன

அவயவம்பு3லு கல்கு3டகு ஹரினி யிடுல 

4ஜனஜேசிதெ வைகுண்ட2 பத3விக3லது3

அனுசு யெவரு போ3தி4ஞ்சுனோ யதடெ3 தண்ட்3ரி – தக்க 

விரோதி4ம்ப ஶத்ருடௌ3 தண்ட்3ரிகாடு3


"கரங்க ளிரண்டாலு மென்னபயன்

றிருமகள் கேள்வனைத் தொழாவிடின்?

கண்க ளிரண்டாலு மேதுபயன்

மதியிரவிக் கண்ணனைக் காணாவிடின்?

தலையா லொருவர்க்கு யாது பயன்

எளியர்தம் வைப்பினை வணங்காவிடின்?

நாவினை யுடையதா லென்னபயன்

மறைகளின் நாதனைப் பேசாவிடின்?

பூண்டவுன் னவயவ மொவ்வொன்று மரியைப்

போற்றினால் சேரும் வைகுந்த வாசம்

என்றெவன் போதிக்கு மவனே தந்தை - மாறாய்ப்

பகைப்பவன் பகைவனே தந்தையல்லன்” 


“திருமகளின் கணவனைத் தொழாவிட்டால் இவ்விரு கைகள் இருப்பதனால் என்ன பயன்? சூரியசந்திரர்களைத் தன் கண்களாகக் கொண்டுள்ள விஷ்ணுவைக் காணாவிட்டால் இவ்விரு கண்களாலும் என்ன பயன்? எளியவர்களுக்குப் பாதுகாவலனாக விளங்கும் அவனை வணங்காவிட்டால் இந்தத் தலையால் என்ன பயன்? வேதத்தில் விரவிக் காணப்படும் அவனை வர்ணிக்காவிட்டால் இந்நாவினால் என்ன பயன்? உடலில் அங்கங்கள் வாய்த்திருப்பதை எண்ணி அரியை இவ்வாறு போற்றிப் பணிந்தால் வைகுந்தபதவி கிட்டும் என்று எவன் போதிக்கிறானோ அவனே உண்மையான தந்தை. மாறாக, இறைவனோடு எவன் பகைத்து நிற்கிறானோ அவன் தந்தையே அல்லன்.” என்கிறான் பிரகலாதன். 

லீலாவதி ஒருபுறம் மகனையும் இன்னொரு புறம் கணவனையும் என்று இவர்கள் இருவரையும் ஒன்றுமே சொல்ல முடியாமல் தத்தளிப்பதையும், ஒரு தாயிடம் இயல்பாகவே காணப்படும் உணர்ச்சிகளையும் ஆசிரியர் பின்வருமாறு வர்ணிக்கிறார். 

“இஸுமந்த த3யலேக பஸிபா3லு னின்கூல்ப 

அகடாயெ டுலநோரு லாடெ3னம்மா?

எந்தவி த4ம்புல யெந்த வேடி3னனுன் 

மதினிதன பந்தம்பு3 மானட3ம்மா!

இடுவண்டி நட3தலு யிலலோன யெந்தைன 

கன்னார? வின்னார? கத2லனைன?

தனயுதண் ட்3ருலக3துல் தலபோ3வ தனப்3ரதுகு 

அரடாகு ஸாமத்ய மாயெனம்மா!

விதி4னிதூ3 ஷிந்துநே னெவரிதோ வின்னவிந்து?

தாமராகு நீருவலெ நேதல்ல டி3ல்லுசு


அஹஹ வூஹிந்துனே உபாயம்பு3 னெந்தயே 

யெடுலவே கி3ந்துநே னிந்து3கேமி ஸேது”


"எள்ளளவு மீவின்றிப் பசுங்குழவி யைக்கொல்வே – 

னடடாயெத் தகுவார்த்தை வந்ததம்மா?

யெத்தனை விதமாக வெவ்வளவு வேண்டிடினு

மனங்கொண்ட பகைமையிங் கொழியானம்மா!

இதுபோன்ற நடத்தையை மேதினியி லெங்கேனுங்

கண்டதார்? கேட்டதார்? கதையிலேனு

மகன்றந்தை யிருவர்கதி யெதுவென்று யெண்ணுகிற

யென்வாழ்க்கை யெச்சிலிலை யானதம்மா!

விதியையே பழிப்பேனோ? எங்குமுறை யிடுவேனோ?

கமலவிலை நீர்போல நான்றத்த ளிக்க

அய்யகோ! வழியென்ன வென்றுசிந் திப்பேனோ?

விழிதுஞ்ச வொண்ணேனே யினியென்ன செய்வேன்? 


“எள்ளவளவும் ஈவிரக்கமின்றி பச்சைக் குழந்தையைக் கொல்வேன் என்கிறார். அய்யோ! எப்படிப்பட்ட வார்த்தையைக் கூறுகிறார்! எத்தனை விதமாக எவ்வளவு வேண்டினாலும் மகன் மீது தான் கொண்ட பகைமையை விட்டொழிக்க மாட்டேன் என்கிறார். தந்தை மகனிடம் இவ்வாறு நடந்து கொள்வதை இவ்வுலகிலோ கதைகளிலோ எங்கேனும் கண்டோ கேட்டோ இருக்கிறீர்களா? தந்தை தனயன் ஆகிய இருவரின் நிலையையும் எண்ணிப் பார்க்கப் பார்க்க இருபுறமும் கிழிந்து போகும் எச்சில் இலை போல் உள்ளது என் வாழ்க்கை. இதற்காக விதியைப் பழிப்பேனா? இதனை யாரிடம் சென்று விண்ணப்பம் செய்வேன்? தாமரை இலையின் நீர்த்துளியைப் போல நான் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன். ஐயோ! இதற்கு உபாயம் என்னவென்று யோசிப்பேன்? எப்படிக் கண்விழித்துக் கிடப்பேன்? எனது இந்நிலைக்கு நான் என்ன செய்வேன்?” 

என்று புலம்புகிறாள் லீலாவதி. இரணியகசிபு மூலன், வலன் முதலிய ராட்சசர்களை அனுப்பி விஷ்ணு எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து வருமாறு பணிக்கிறான். நதிகள், மலைகள், முனிவரின் ஆசிரமங்கள், ஈரேழு பதினான்கு உலகங்கள் அனைத்திலும் தேடச் சொல்கிறான். அரி உபநிடதங்களிலும், ஆலிலைகளிலும் கரந்துறைகிறான் என்று ஆசிரியர் இரணியகசிபுவின் வாயிலாக வேதாந்த மறைபொருளை வெளிப்படுத்தும் நயம் அற்புதம். 

ஹிரண்யன், லீலாவதி, பிரஹலாதன்

“ஸகலாத்மு ட3கு3சுனு ஸஞ்சரிஞ்சதடு3 

வேத3பா43முலந்து3 விபு3து4லயந்து3

ஸாது4ஸஜ் ஜனுலந்து3 ஸத்புண்யுலந்து3

கலஶவா ரிதி4யந்து3 கர்மடு2லந்து3

ஸலலிதாத்மகுலந்து3 ஸர்வக்ஞுலந்து3

வடபத்ரமுலயந்து3 வனமுலயந்து3 

அலபுரா ணமுலந்து3 அகி2லாத்முலந்து3

“எல்லா உயிர்களினுள்ளும் உறைந்து எங்கும் விரவி நிற்பவன் அவன். அவன் வேதங்களின் சாகைகளில் இருக்கிறான். அறிஞர்களிடம் இருக்கிறான். சாதுக்களிடமும் நன்மக்களிடமும் இருக்கிறான். நல்வினை புரிந்தவர்களிடமும் இருக்கிறான். கலசநீரிலும், கர்மானுஷ்டானப் பிடிப்பு கொண்டவர்களிடமும் இருக்கிறான். ஆலிலைகளிலும், அடர் காடுகளிலும் இருக்கிறான். சிறந்த புராணங்களிலும், இன்னும் எல்லாவற்றிலும் இருக்கிறான்” 

என்ற வரிகளில் சகமெங்கும் பரமாத்மா நிறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. பூவினுள் மணமும், எள்ளினுள் எண்ணெயும், சொல்லினுள் பொருளும், கரும்பினுள் சாறும், உடலினுள் உயிரும் பிரணவத்தில் பரம்பொருளும் கரந்துறைவதைப் போல, அணுவணுவிலும் அரி கரந்துறைகிறான் என்பதால் அவனை வெகு ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு வரும்படி இரணியகசிபு கட்டளையிடுகிறான். 

“பூவுல கடு3தாவி பொந்தி3யுன் னட்லு

நுவ்வுல தைலம்பு3 னொனரியுன் னட்லு

ஸரஸஶப்3 தா3ர்த2முல் ஸமகூடி3 னட்லு

செறுகுன னம்ருதம்பு3 செலகி3யுன் னட்லு

சாலஜீ வமுகா3த்ர ஸஹிதமை னட்லு

ப்ரணவமுன பரதத்வ முண்டி3ன யட்லு 

அணுரேணு மொத3லிட்லு அணகிய ட3தடு3


“பூக்களில் நறுமணம் பொதிந்தது போலவும், எள்ளினில் எண்ணெய் உறைந்ததைப் போலவும், நயமிக்க சொற்பொருள் பொருத்தம் போலவும், கன்னலில் இன்னமுது விளங்குவது போலவும், ஆருயிர் உடலோடு கூடியது போலவும், பிரணவத்தில் பரம்பொருள் திகழ்வது போலவும், அணுத்துகள் முதற்கொண்டு [யாவிலும்] அவன் கரந்துறைகிறான்”. 

என்ற இரணியகசிபுவின் உரையில் பரமாத்ம தத்துவம் பொதிந்திருப்பதைக் காண்கிறோம்.

லீலாவதி ஹிரண்யனிடம் மன்றாடுதல்

இரணியகசிபு பிரகலாதனிடம் அரிபக்தியைக் கைவிடுமாறும், அன்றேல் தன் பகைவனைத் தொழுபவன் தன் சொந்த மகனென்றாலும் தனக்குப் பகையே ஆவான் என்றும் பயமுறுத்துவான். அப்போது பிரகலாதன், “தந்தையே! மூவுலகங்களிலும் உள்ள முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதற்கொண்டு அசுரர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள் என்று அனைவரையும் வென்றுவிட்டதாக இறுமாப்பு கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சமம், தமம் முதலிய அறுவகைச் செல்வங்களையும் சூறையாடிய மோகம் என்னும் மாமன்னன் பெருமிதம், செருக்கு முதலிய படைத்தலைவர்களோடு உங்கள் இதயத்தில் நிலையாகக் குடிகொண்டுவிட்டான். இந்த அகப்பகைவனை வெல்லவியலாத நீங்கள் ஈரேழு உலகங்களையும் வென்றுவிட்ட மயக்கத்தில் ஆழ்ந்து வெகுகோரமான மாயையின் பாசவலையில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அம்மோகம் என்னும் எதிரியை வென்று ஆன்மதத்துவத்தை உணர்ந்து ஆன்ம இன்பத்தில் திளைத்தீர்களானால் அதுவே உண்மையான வெற்றியாகும். அவ்வாறு ஆன்மஞானத்திற்காக உழைக்காமல் மோகப் பெருங்கடலில் மூழ்கியவராய் கோபுரத்தில் செதுக்கிய சிற்பப்பதுமைகள் அக்கோபுரத்தின் எடையைத் தாங்களே தாங்குவதாகக் கருதி மயங்குவது எப்படியோ அதே போல எல்லாம் என்னால் சாதிக்கப்படுகிறது என்ற அறியாமை ஊசலில் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். இனியேனும் அகந்தையை விடுத்து அரியின் நினைப்பில் காலத்தைச் செலவிடுங்கள் தந்தையே! மோக இருளிலிருந்து விடுபட்டவராய் பிரம்மானந்தக் கடலில் அமிழ்ந்து கிடவுங்கள்” என்று கூறுவான். 

“முப்பதி3 முக்கோடி வேல்புலு மொத3லு

சப்புன ராஜுல ஜயமொந் தி3தினனி

கொ3ப்பக3 பலுமாரு செப்பேவு நீவு

அலமோஹ ராஜு ட3ம்பா4தி3 ஸைன்யமுதோ

நெலகொனி யுன்னாடு3 நீயாத்ம யந்து3

வானிப3ட்டி ஜயிம்ப வஶமிந்த லேக 

பை3னிபௌ ருஷவார்த ப3லுகுசுன் னாவு

மோபுன ப3ருவு தானெத்து குன்னட்லு 

கோ3புர ப்ரதிமயு கொனியாடு3 ரீதி

ஈரேடு3 ஜக3முல ஜயிஞ்சிதி மனுசு 

கோ4ராக4 வனமுலோ தூ3ரியுன் னாவு

பூனிகதோ ஆயாத்ம போ34ல னெறிங்கி3

ஆனந்த3 பரிபூர்ணு டை3யுண்ட3 லேக

மோஹஸா க3ரமுன முனிகி3தே லுசுனு

ஓஹோநீ வக்ஞான வூயலா டே3வு”

“முப்பத்து முக்கோடி தேவர்கள் முதலான அதிபர்கள் யாவரையும் சட்டென்று வெற்றி கொண்டதாய் பெருமிதச் சிறப்புடன் பலமுறை கூறிவிட்டாய். மோகம் என்னுமோர் அரசன் செருக்கு முதலிய படைகளுடன் உன் ஆன்மாவில் நிலைகொண்டிருக்கிறான். அவனைப் பிடித்து அடக்கும் வலிமை சிறிதும் இல்லாமல் உன் மேலோட்டமான பிரதாபங்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறாய். எடையின் பாரத்தைத் தான் சுமப்பதாக கோபுரப் பதுமை கொண்டாடினாற் போல ஈரேழு புவனங்களையும் வென்று விட்டேன் என கோரமான தீவினைக்காட்டினுள் அகப்பட்டுக் கிடக்கிறாய். முனைப்புடன் ஆன்மபோதத்தை உணர்ந்து நிறைந்த ஆனந்தத்தை உடையவனாய் வாழத் தெரியாமல் மோகக்கடலில் மூழ்கிக் கிடக்கிறாய். அந்தோ! நீ அறியாமை ஊசலில் ஆடுகிறாய்.” 

என்கிறான் பிரகலாதன். “நீ வணங்கும் அரி எங்கிருக்கிறான்?” என்று இரணியகசிபு கேட்கவும் பிரகலாதன், “அரி யாவற்றின் உள்ளும் உறைபவன். உன்னிலும் என்னிலும் சகல புவனங்களிலும் நித்தியமாகவும் சத்தியமாகவும் இருக்கிறான். நீரினில் பிம்பங்களைப் போல வெவ்வேறு உருவங்களாகக் காட்சியளித்தாலும் அந்தப் பரமாத்மா ஒருவனே”. 

“நீடபி3ம் ப3முவலெ நெக3டு3சு னுண்டு3

பாடிகா யிஸுமந்த பா4விஞ்சி மிகு3

ஏயேட3 ஜூசினா ஆயாட33லடு3

நீயாத்ம நாயாத்ம நித்யம்பு3 லதடு3

3லுபைன யீரேடு பு4வனம்பு3 லதடு3

செலுவமீ ரினநதீ3 ஶைலம்பு3 லதடு3 

புட3மினி யலபஞ்ச பூ4தம்பு3 லதடு3

ஸட3லக னீரீதி ஸர்வம்பு3 லதடு3

னனயுசு னுண்டு3னு இந்தி3ரா விபு4டு3 

அணுரேணு பரிபூர்ணு ட3னிதெலிய லேக...”


“நீரினில் பிம்பம் போல் திகழ்கின்றவன் அவன். முறையாய் எள்ளளவேனும் நன்றாக நினைத்து எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு இருப்பவன். உன்னுள்ளும் என்னுள்ளும் நித்தியமாய் உறைபவன். திடமான ஈரேழு புவனங்களும் அவன். கரைபுரண்ட நதிகளும் பர்வதங்களும் அவன். புவியினில் காணும் ஐம்பூதங்களும் அவன். தளர்வின்றி இவ்வாறு யாவுமானவன் அவன். யாதுமாய் விரிகின்ற இலக்குமிபதி அவன். அணுத்துகள் வரையிலும் நிறைகின்றவன் அவன் என்று தெரியாமல்...” 

என்கிறான். தூணிலிருந்து நரசிம்ம உருவில் பரமாத்மா விஷ்ணு ஆவிர்ப்பவிக்கும் கட்டத்தை ஒரு அற்புதமான தருப்பாடலின் வாயிலாக மருட்கை (அற்புதம்), அச்சம் (பயானகம்), வெகுளி (ரௌத்திரம்) ஆகிய மெய்ப்பாடுகளுக்கு பொருத்தமான சொற்கட்டுக்களால் ஆசிரியர் நிறைவாய் வர்ணித்திருக்கிறார். 

“கடு3வடி3333333மனி புட3மியத3ரகா3

ஜடி3சிஸப்த ஸாக3ரமுலு சாலகலக3கா3

அடு33டு3கு3கு அலத3ஶுஜுந்3ரிபெ33ரகா3

அஸுருலதல குதலமைநரஹரி ஆவஹிஞ்செனு

பு43பு43மனி த3ஶதி3ஶலனு பொக3லுனெக3ரகா3

4343மனி மிகு3ல மண்டி மிண்டிகெக3யகா3 

நிக3நிக3மனி காந்திதி3ஶல நிண்டி3வெலுக3கா3

அக3ணிதமுக3 நரஹரியிபு ட3வதரிஞ்செனு”


“வெகுவிரைவாய் புவித்தலமும் கடகடவென்று அதிரும்படி, தகவே அவ்வெழுகடலும் அச்சத்தால் நடுங்கும்படி, அடிமேலிவர் அடிவைத்திட அரக்கர்கள் பதறும்படி, அசுரர் தலை மண்மீதுற நரசிம்மன் வந்தான்; குபுகுபுவென்று எண்டிசையும் புகையெழும்பி மண்டும்படி, சரசரவென மண்புழுதியும் விண்ணோக்கிச் செல்லும்படி, தகதகவென ஒளிமண்டலம் திசையெங்கிலும் திகழும்படி, நரனும் அலன் அரியும் அலன் நரசிம்மன் வந்தான்.” 

இத்தூணிலும் உளன்

அந்த அற்புத திவ்விய மங்கள நரசிம்ம சொரூபத்தைக் கண்டு ஒருகணம் கலங்கிப்போய், பின் சுதாரித்துக் கொண்ட இரணியன், “இத்தனை காலம் எங்கு தேடியும் அகப்படாத அரியை நீ உன் பக்தியினால் வசப்படுத்தி எனக்குக் காட்டினாயடா மகனே! நான் எண்ணியதைப் போல உன்னை முன்பே கொன்றிருந்தால், இதோ எனது அரும்பகையாகிய அரியை நான் கண்டிருக்க முடியுமா? விஷ்ணுவை எப்படியேனும் கண்டுபிடித்து விடவேண்டும் என்னும் என் சபதம், என் சூளுரை உன்னால் மெய்ப்பட்டதடா! நிறைவேறியதடா!” என்று மெச்சினான். இரணியகசிபுவின் இவ்வுணர்ச்சியை ஆசிரியர் மூன்று செய்யுள்களால் இவ்வாறு வர்ணிக்கிறார். 

“நீவே ப4க்தஶி ரோமணீ கு3ணமணீ நீவேம னீஷீமணீ

நீவே ஸாது4ஶி கா2மணீ நருலலோ நீவேஸு ஶீலாமணீ

நீவே பா33வ தப்ரியுண் டு3பு4விலோ நீஸாடி நீவேயகு3ன்

யேவே ளன்க3ன கோரியுண் டு3தனகுன் யீவேள னேலோலுடை3

ஶ்ரீவத் ஸாங்குனி கண்ட்லஜூ பிதிவிகா3 சின்னாரி மாணிக்யமா!”


“அடியார்களில் மேலவன் நீயே; குணமதி நலங்களில் சிறந்தவன் நீயே!

நல்லோர்களில் தலையவன் நீயே! மனிதருள் பண்பினில் உயர்ந்தவன் நீயே!

பாகவதர்களின் அன்பனும் நீயே! உலகினில் உனக்கிணை யானவன் நீயே!

எதுநாள்முதல் தேடினேன் அவனை? இன்று உன் பக்தியால் மகிழச்செய்து 

ஶ்ரீவத்ச மருவொடு விஷ்ணுவைக் காட்டினாய் அல்லவா என்செல்ல மாணிக்கமே!” 


அளவடி என்னும் நான்கு அடிகளுக்கும் மேலாக ஓரடி கூட்டி ஐந்தடிப் பாடலாய் மேற்கண்ட செய்யுளை ஆசிரியர் அமைத்திருக்கிறார்.

“ப4ளிப4ளி புத்ர காயிபுடு3 பா3கு33 நேனினு மெச்சு கொண்டிரா

யெலமினி நீகு ஸாடித4ர னெவ்வரு லேரிக நாது3 யன்னனுன்

யிலவதி4 யிஞ்சு நாடிமொத3 லெக்கட3 ஜூசின கா3னமீதனின்

தெலிவிக34க்தி சேஸியிடு தெச்சிதி வௌரகு மாரரத்னமா!”


“பலே! பலே! மகனே இன்று நன்றுனை மெச்சிக் கொள்வேன்;

தெளிவினில் உனக்கோர் ஈடு உலகினில் இல்லை; என்றன்

தமையனைக் கொன்ற மாலை இதுவரைக் கண்டிலேன்; இன்(று) 

உனது பக்தியினால் அவனைக் கொணர்ந்தனை செல்வக்கண்ணே!” 


என்று நரசிம்மர் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த பிரகலாதனை பாராட்டுகிறான். மேலும்

“உபகா ரம்பு3லு ஸேயு வாட3னுசு முன்னூ ஹிம்ப லேனை திரா

அபுடே3 வேக3மெ நின்னு சம்பக3ல வாடை3 யுண்ட3 கா3மே தி3நின்

யிபுடே3 வைரினி நேனு ஜூட33ல னேயெந் தைன நீவல் லனன்

ஸப2லம் பா3யெர நாது3 பந்தமில லோஸத் புத்ர காநே டிகின்”


“நன்றே செய்திட வல்ல மைந்தனென முன்பே உன்னை எண்ணாமலே

அன்றே கொன்றிடக் கொண்ட ஆசையினில் வென்றே னில்லை – அதுநல்லதே! 

இன்றே கண்ணுற பகைவன் ஆனவனைக் கண்டேன்; உன்றன் ஒருசொல்லிலே 

கன்றே போலவும் வந்த நாரணனைக் கொல்வேன்! என்றன் சூள்வென்றதே!” 


“நீ உபகாரங்கள் செய்பவனாவாய் என்று முன்னே கற்பனை கூட செய்ய இயலாதவன் ஆனேனடா! அப்போதே விரைவாய் உன்னைக் கொல்ல முடிந்தவனாய் நான் இருந்திருந்தால் இந்த மண்ணில் இப்போது என் எதிரியை நான் பார்த்திருக்க இயலுமா? மைந்தா! எவ்வளவு சொன்னாலும் உன்னால் இன்று என் சபதம் பலித்திருக்கிறதடா!” 


இவ்வாறு மகனை மெச்சிக்கொண்டவாறே நரசிம்மமூர்த்தியைப் பார்த்து, “வாடா! கபடதாரி! கள்வா! உன்னை பாகவதம் முதலிய புராணங்கள் அரும்பெருமை உடையவனாக வர்ணித்துப் பேசும். நீயோ நம்பத்தகாதவன். ஒரு சின்ன விண்ணப்பம் வைத்தால் போதும். பிறவியே இல்லாத வண்ணம் செய்துவிடுவாய் (முக்தி அளித்து விடுவாய்). உன்னை இனி இங்கும் அங்கும் போகவிட மாட்டேன்!” என்று ஒரு பெரும்பக்தன் மாயையிலிருந்து தெளிந்து பகவானை அறிந்து கொண்டால் எவ்வாறு மகிழ்ச்சி கொள்வானோ அவ்வாறான தெய்வீகக் கருத்துக்கள் தொனிக்கும்படி பேசினான் இரணியன்.

“தாபஸ மான ஸாப்3ஜமுன தா3கி3 ஸதா3நிவ ஸிஞ்சி யுண்டிவோ

ஆபர தத்வ மந்து3வஶ மைவெலி ராகனெ ஜொச்சு கொண்டிவோ

காபுர மெந்து3 ஜேஸிதிவி கானக யின்னிதி3 னாலு தா3கஹே!

பா3வுரெ! நின்னு கண்டிதன பந்தமு செல்லெனு மெச்சு கொண்டிரா!” 


"தவசியர் மனத்தா மரையில் ஒளிந்துநீ வாழ்ந்துவந் தனையோ 

பரவெளி யதனில் ஒடுங்கி வெளிப்படா திருந்துவந் தனையோ 

கரந்துநீ எங்குறைந்தாய் இத்தனை நாளாய்க் காணேன்

நலமடா! இன்று கண்டேன் ஆகையால் மெச்சுகின்றேன்"


"தவம் செய்பவர்களின் மனம் எனும் தாமரையினுள் சென்று இதுநாள் வரை ஒளிந்து வாழ்ந்து வந்தாயா? அந்த மேலான பரதத்துவத்தினுள் ஒடுங்கி வெளிவராதவாறு புகுந்துகொண்டாயா? எங்கு குடிகொண்டிருந்தாயடா? அடே! இத்தனை நாட்களாக உன்னைக் காணாமல் இருந்தேனே! நன்றாயிருக்கிறதடா! இப்போதாவது உன்னைக் கண்டு என் பந்தயத்தில் வென்றேனே. அதனால் உன்னை மெச்சிக் கொள்கிறேன்". 

நரசிம்மர், ஹிரண்யன் சம்வாதம்

'அடே நரஹரி! இத்தனை நாட்களாக எங்கிருந்தாய்? என் கண்களில் படாமல் தப்பித் திரிந்தாய்! பரதத்துவத்தில் ஒளிந்து கொண்டாயா? அல்லது தபோதனர்களின் மனதில் அமர்ந்து கொண்டாயா?' என்ற இரணியனின் கேள்வியில் பக்தி தத்துவம் வெளிப்படுகிறது. இது ஒருவிதமான நிந்தாஸ்துதி போல் தெரிகிறது. மேலோட்டமாக விரோதபாவத்தை வெளிப்படுத்தும் இப்பாடல்களில் கூர்ந்து நோக்கினால் பக்திபாவமே தொனிக்கிறது. 

அதற்கு நரசிம்மமூர்த்தி “அடேய்! பாபாத்மா! என் அன்புக்குரிய பக்தனைப் பெற்றவன் என்ற காரணத்தால் இத்தனை காலம் பொறுமையைக் கைக்கொண்டேன். அந்தச் சின்னஞ்சிறு பிள்ளையை எண்ணற்ற வாதைகளுக்கு உட்படுத்தினாய். இரக்கமின்றிக் கொல்லவும் துணிந்தாய். இனி உன்னைப் பொறுத்துக்கொள்ள இயலாது.”

“ஸரஸிஜ ஸம்ப4வு டி3ச்சின

வரமுலவல் லனுநீகு வரமுலு செல்லென்

பருவடி3 நீஶூ ரத்வமு

மரிநடு3வது3 இங்கமீத3 மஹிதலமுக3னு” 


"தாமரைத் தோன்றல்வ ழங்கிய 

தண்ணருள்சேர் வரங்களினால் நன்மைகள் பெற்றாய் – நீ 

கொண்டிடும் ஆற்றலும் வீரமும்

பொல்லாமையும் செல்லாதினி இந்நிலவுலகில்"


"சேற்றில் முளைத்த தாமரையில் தோன்றிய பிரம்மதேவனின் வரங்களால் நீ இதுவரை நன்மைகளை அடைந்து வாழ்ந்திருந்தாய். இனி உன் வலிமையும் ஆற்றலும் இப்பூவுலகில் நீடித்து நடைபோடாது". 

இப்படி இவர்கள் இருவரின் உரையாடல்களும் வேதாந்த தத்துவங்களை பிரதிபலிப்பது போல அமைந்திருக்கும். வெறும் சாகித்திய நோக்கில் மட்டுமல்லாமல், சங்கீத நாட்டிய நோக்கிலும் கூட ப்ரஹ்லாதசரித்ரமு உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்று, பலவகைச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நாட்டிய நாடகத்தில் இருபத்தைந்துக்கும் மேலான ராகங்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நன்கு பரிச்சியமுள்ள ராகங்களாகிய பேகடா, மோகனம், கல்யாணி, மத்யமாவதி போன்றவை மட்டுமல்லாமல் ஆகிரி, கண்டாராகம், கும்பகாம்போஜி, பரஜு போன்ற சில அபூர்வ ராகங்களும் எடுத்தாளப்ப்ட்டிருக்கின்றன. 

ஹிரண்யன் வதம்

மெலட்டூர் பாகவதர்கள் பாடும் கண்டா ராகத்தில் 72 மேளகர்த்தா ராகங்களிலிருந்து வேறுபட்ட சுரஸ்தானங்கள் இருக்கின்றன. இது பாகவதமேளம் என்னும் இக்கலைமரபில் மட்டும் இன்று வரை பண்டைய முறையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நாடகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட தருக்களும், இரண்டு தாளச் செய்யுள்களும் முப்பதுக்கும் மேற்பட்ட யாப்பு வகைகளில் செய்யுள்கள் இயற்றப்பட்டும் உள்ளன. போத்தன்னர் பாகவதத்தில் வரும் இரண்டு கந்தபத்யங்கள் (ஒரு பா வகை) ஒரு சில மாற்றங்களோடு அப்படியே எடுத்தாளப் பட்டிருக்கின்றன. 

-------------------------------------------------------------------

என்.வி. தேவிபிரசாத்


என். ஶ்ரீநிவாசன்


தெலுங்கிலிருந்து தமிழாக்கம்: விக்னேஷ்வரன் புதுச்சேரி

தெலுங்கு மூலம் - మెలట్టూరు భాగవతమేళా మరియు ప్రహ్లాదచరిత్రము - డా. ఎన్.వి. దేవీప్రసాద్, విద్వాన్ ఎన్.శ్రీనివాసన్

என்.வி. தேவிபிரசாத்
என்.வி. தேவிபிரசாத் சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர் . பல்மொழி அறிஞர். மெலட்டூர் கவி வெங்கடராம சாஸ்திரியின் பாகவத மேளா நாடங்களை ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கும் பணியில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். சாஸ்திரியின் பிரஹலாத சரிதம், ஹரிசந்திர நாடகம், உட்பட எட்டு நாடகங்களை பதிப்பித்தும் உள்ளார். இது தவிர ப‌‌‌ல நூல்களையும் சுவடியிலிருந்து பதிப்பித்து உள்ளார்.

என்.ஶ்ரீநிவாசன்

என்.ஸ்ரீனிவாசன் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் மூத்த சமஸ்க்ருத வித்வானாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ், சமஸ்கிருதம் என இருமொழிகளிலும் புலமை பெற்றவர். இரு மொழிகளிலுமாக 53 நூல்கள் பதிப்பித்திருக்கிறார். இவர் இளமையில் புகழ்பெற்ற கதாகாலட்சேப கலைஞர், அப்போது தஞ்சாவூர் N ஸ்ரீனிவாசன் என்று அறியப்பட்டார். இந்தியா முழுக்க காலட்சேபங்கள் செய்திருக்கிறார், திருச்சி வானொலியில் பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார், சென்னை உ.வே.சா நூலகத்தில் குறுகிய காலம் பணியாற்றியுள்ளார். இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான இவர் மெலட்டூர் பாகவத மேளாவில் 25 வருடங்கள் பாடகராக தனது பங்களிப்பை செய்திருக்கிறார். பாகவத மேளா குறித்த பல முக்கியமான சான்றுகளை சரஸ்வதி மகால் ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தியவர். சம்ஸ்கிருத பேராசிரியர் என் வி தேவி பிரசாத் அவர்களுடன் இணைந்து கவி வெங்கடராம சாஸ்திரியின் பாகவத மேளா நாடகங்களை பதிப்பித்தும் உள்ளர்.

விக்னேஷ்வரன் புதுச்சேரி
விக்னேஷ்வரன் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு கீழ்த்திசை ஆய்வு மையத்தில் (EFEO) ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலைக் கல்வி பயின்றவர். மொழிகளின் மீது கொண்ட ஈடுபாட்டால் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். தென்னிந்திய மொழிகள் நான்கிலும், வடமொழியிலும் நல்ல பரிச்சயமும் திராவிட மொழியியல் ஒப்பாய்வில் பயிற்சியும் உடையவர். மரபிலக்கிய நூல்களைக் கற்பதிலும் ஆராய்வதிலும் ஆர்வம் கொண்ட இவர் கச்சியப்ப முனிவரின் காஞ்சிப்புராணத்தை தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார்.