Wednesday, 9 July 2025

தேவ தேவா இதுவே சமயம் அய்யா - அனங்கன்

தமிழ் நாட்டின் மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் இரவு முழுவதும் தெலுங்கு பத்யங்கள் (தெலுங்கு மொழி செய்யுள்கள்) பாடி தெலுங்கு வசனம் பேசி இசை நாடகங்கள், ஐந்து நாட்கள் ஒரு திருவிழா போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்குச் சற்று கடினமான விஷயமாக இருக்கலாம். ஆனால் ‘பாகவத மேளா’ என்ற நாட்டிய நாடகம் அவ்வாறு 300 வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்து மெலட்டூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும் (2025) வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. 

வருடாவருடம் சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படும். அன்று தஞ்சை மாவட்டம் மெலட்டூர் கிராமத்தில் பாகவத மேளா குழுவினர் அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் வெங்கடராம சாஸ்திரி இயற்றிய ‘பிரஹலாத சரித்ரமு’ என்ற நாட்டிய நாடகத்தை நிகழ்த்துகிறார்கள். அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் பரத நாட்டியம், குச்சுபிடி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகளும் ஹரிச்சந்திர நாடகம், ருக்மிணீ கல்யாணம், மார்கண்டேய சரிதம் போன்ற பாகவத மேளா நாடகங்களும் நிகழ்கிறது.

நாங்கள்( மூன்றுபேர் கொண்ட குருகு குழு) சென்ற வருடமே பாகவத மேளாவிற்கு செல்ல திட்டமிட்டோம். ஆனால் இந்த வருடம் தான் சென்று காண முடிந்தது. மேளா பற்றிய நேர்காணலும் கட்டுரையும் வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தோம் அதனால் ஒரு வாரம் முன்பே புதுவை தாமரைக்கண்ணன் மெலட்டூர் சென்று அங்கு பாகவத மேளா நிகழ்வுகள் நடத்திக்கொண்டிருக்கும் மகாலிங்கம், குமார் ஆகிய இரு குழுவினரையும் பார்த்து அறிமுகம் செய்து கொண்டார். 

இந்த வருடம் மே பதினொன்றாம் தேதி நரசிம்ம ஜெயந்தி. பத்தாம் தேதியே ஊரிலிருந்து கிளம்பி மேளா குழுவினர் பயிற்சி செய்வதைப் பார்க்கச் சென்றுவிட்டோம். எங்களுடைய இலக்கிய வட்ட நண்பர் ராகவனின் பூர்வீகம் மெலட்டூர். அவருடைய அப்பா, மாலி என்ற மகாலிங்கத்தின் குழுவில் நடித்தவர். ராகவன் நாங்கள் தங்குவதற்கு உண்டான எல்லா வசதிகளையும் முன்கூட்டியே செய்துவைத்திருந்தார். நான் சென்னையிலிருந்து தஞ்சைக்குச் சென்று மெலட்டூருக்கு டவுன் பஸ் ஏறினேன். தஞ்சையிலிருந்து மெலட்டூர் செல்லும் வழி முழுவதும் வளைந்து வளைந்து செல்லும் ஒற்றை தார் சாலை. இருபக்கமும் வயலும் தென்னைகளும் காற்றில் அலையடித்துக்கொண்டிருந்தன. திட்டை வழியாக மெலட்டூர் சென்று சேர்ந்தது பஸ்.

தஞ்சை பகுதிக்கு ஏற்கனவே நான் வந்திருந்தாலும் தஞ்சை கிராமங்களையும் அக்ரஹாரங்களையும் அறிந்ததில்லை. மெலட்டூருக்கு வருவதும் இதுவே முதல் முறை. கடை வீதியில் என்னைத் தள்ளிவிட்ட பேருந்து, மற்ற பயணிகளை அள்ளிக்கொண்டு சென்றது. ராகவன் ஒரு நபரை எங்களைக் கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். ‘கடைவீதியிலிருந்து நேராகச் சென்று மேற்கே திரும்பினால் வரதராஜபெருமாள் கோயில் வந்துவிடும் அந்த வீதியிலேயே நாலைந்து வீடு தள்ளி நம்முடைய வீடு, கடைவீதி ஆட்களிடம் கேட்டு வந்து விடுங்கள்’ என்று அந்த நண்பர் சொல்லியிருந்தார். ராகவன் வீட்டு வாசலிலேயே குமார் ட்ரூப் நடத்த இருக்கும் நாடகக் கொட்டாய் போட்டிருந்தது. ராகவன் ஏற்பாடு செய்திருந்த நபர் நாங்கள் தங்கும் வீட்டில் உரிய வசதிகள் செய்து கொடுத்து மகாலிங்கம் அவர்கள் வீட்டிற்கும் வழிகாட்டிவிட்டுச் சென்றார். நான் குளித்துவிட்டு வெளியே வரும்போது புதுவை தாமரைக்கண்ணனும் தனது ஸ்கூட்டியில் வந்திருந்தான். அவனும் ஸ்கூட்டியும் நூறு கிலோமீட்டருக்கும் மேல் வருவது இத்தனை வருடங்கள் நடக்கும் பாகவத மேளா அளவிற்கே ஆச்சரியமானது. இருவரும் சேர்ந்தே மகாலிங்கம் அவர்கள் வீட்டிற்குச் சென்றோம்.

வரதராஜபெருமாள் சன்னதி தெருவிற்கு வலதுபுறம் உள்ள தெற்குத் தெருவில் முதல் வீடே மகாலிங்கம் அவர்களுடைய வீடு தான். வாசலில் தென்னையோலையால் பந்தல் போடப்பட்டிருந்தது. மெலட்டூர் வீதிகள் முழுவதுமே பழைய அக்ரஹார பாணியில் அளவு எடுத்து செய்த வீதிகள். பாதிக்குப் பாதி நவீன கான்க்ரீட் வீடுகள் வந்துவிட்டாலும், இருபுறம் பெரிய திண்ணைகள் வைத்துக் கட்டப்பட்ட, சிவப்பு நிற ஓடு போட்ட வீடுகளும் இருந்தன. 

காலையில் மகாலிங்கம் அவர்கள் வீட்டில் பயிற்சி நடத்தும் ஓசை வெளியே கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்து எங்களை அறிமுகம் செய்துகொண்டதும் காபியும், காலை உணவும் (பலகாரம் !) கட்டாயப்படுத்தி அளித்தார்கள். பலகாரம் சாப்பிடுவதற்காகவே வீட்டை ஒட்டி தகரக் கொட்டகை போட்டிருந்தனர். நான் இருந்த ஐந்து நாட்களும் யாராவது வந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தனர். மூன்று வேளையிலும் நூறு பேருக்குக் குறையாமல் உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. விழா முடிவில் மொத்தமாக ஆயிரம் பேர் சாப்பிட்டிருக்கலாம் என்று சொல்லிக்கொண்டனர் மாலி குழுவினர். 

நாடக ஒத்திகை

சாப்பிட்ட பின் நாடக ஒத்திகையைப் பார்க்கச் சென்றோம். நாடக ஒத்திகை என்பது புதிதாக மேளா குழுவில் இணைந்தவர்களுக்காகத் தான் நடத்தப்பட்டதே தவிர மற்ற சீனியர்கள் சில அடவுகளை மட்டும் நட்டுவனார் ஹரிஹரனுடன் பேசி ஆடி ஒத்திகை பார்த்துக்கொண்டனர். நட்டுவானர் ஹரிஹரன் புகழ்பெற்ற நாட்டிய ஆசிரியர் ஹேரம்பநாதனின் இரண்டாவது மகன். சீனியர்களான மாலி மாமா, அருணாச்சலம் தாத்தா, நடராஜன் அண்ணா, அரவிந்தன், ஆனந்த் ஆகியோர் தங்களுடைய சிறுவயது முதல் பாகவத மேளாவில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அதிகபட்சமாக மாலி, அருணாச்சலம் ஆகியோர் ஐம்பது வருடத்திற்கும் மேல் ஆடுகின்றனர். 

எனக்கு இந்தச் சூழல் முற்றிலுமே அன்னியமானது. எப்போதாவது கர்நாடக இசை கேட்பேன் என்றாலும் சில வருடங்களாக நிகழ்த்துக்கலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் அதன் அடவுகள், இசை பற்றி ‘பெயர்’ அளவிற்குத்தான் தெரியும். நாங்கள் சென்றபோது பிரஹலாதனாக நடிக்கும் அதுல் அடவுகளை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். நரசிம்ம ஜெயந்தி இரவு ‘பிரஹலாத சரித்திரம்’ போடுவது வழக்கம். பிரஹலாதன் கதாபாத்திரம் நிறைய வசனங்களும் ஆட்ட அடவுகளும் உடைய முக்கிய கதாபாத்திரம்.

எனக்கு அங்குள்ள இசை, வெற்றிலைச் சீவலின் நறுமணம் எல்லாம் சேர்ந்து தி. ஜானகிரானின் கதைக்குள் இருப்பது போன்ற உணர்வைத் தந்தது. அவர் மொழியிலேயே சொன்னால் உள்ளத்தை உருக்கிச் சிலிர்க்க அடித்தது. அதுல் ஆடிக்கொண்டிருந்தது பிரஹலாதனின் பாத்திர பிரவேசம் என்று மறுநாள் இரவு நாடகத்தைப் பார்க்கும் போது தெரிந்தது. அவனுக்குப் பின் ஜெய், ஆகாஷ், ஒத்திகை பார்த்தனர். இருவருமே பரதம் முறையாக பயின்றவர்கள். ஆகாஷுக்கு இதுவே முதல் முறை என்னைப் போல. அவர்களுடன் ஆடும் சென்னை ஆனந்த் பத்துவருடத்திற்கும் மேலாக மேளாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். நீண்ட வருடமாக மேளாவில் பாடும் முரளி ரங்கராஜன், ஹரிகதா குழுவில் இருந்து பாட வந்திருக்கும் இளைஞரான மணிகண்டனுடன் சேர்ந்துகொண்டார். பொதுவாக மேடையில் நாடகத்தை நடிப்பதை விட நாடக ஒத்திகை மிகவும் கொண்டாட்டமாக இருக்கும் என்று சொல்வார்கள். சிறுவயதில் பாடசாலையில் நாடகத்தில் நடிக்கும் போது அந்த கொண்டாட்டத்தில் திளைத்ததுண்டு. இப்போது வெளியில் இருப்பவனாக மேளா குழுவினர்களைப் பார்க்கும் போது அந்த கொண்டாட்டத்தை உணர முடிந்தது. சில நாட்கள் அன்றாடத்தை விட்டு விலகி கலையில் மகிழ்ந்து திளைப்பதென்பது அனைவருக்கும் கிடைக்காதது. மாலி மாமா, அருணாச்சலம் தாத்தா, நரசிம்மராக வேடம் தரிக்கும் ராமசாமி மாமா ஆகியோரைத் தவிர மிகவும் வயதானவர்கள் என்று யாரும் இல்லை பெரும்பாலானவர்கள் இளைஞர்களாக இருப்பது மேளாவிற்குப் பெரும் பலம். 

ஒத்திகை பத்தரை மணிக்கு முடிந்தது. நானும் புதுவை தாமரையும் எங்காவது செல்லலாம் என்று திருக்கருகாவூர் கிளம்பினோம். கருகாவூர் செல்லும் சாலையின் இரு புறமும் கால்வாய்கள். நல்ல மழைக்காலத்தில் வந்திருந்தால் நீர் நிரம்பி ஓடுவதைப் பார்த்திருக்கலாம். வழி முழுவதுமே அடர்த்தியாக ஆலம், வேம்பு, புன்னை மரங்களும் சரகொன்றைகளும் மூங்கில் புதர்களும் வெயிலின் ஒளியில் மினுங்கிக்கொண்டிருந்தன. மயில்கள் வயல்களில் மேய்ந்து கொண்டிருந்தன. செம்போத்து, மரம்கொத்தி, இரட்டைவால் குருவி தவிர பெயர் தெரியாத பறவைகள் நிறையவே கண்ணில் பட்டன. காலையிலிருந்தே மேகம் போர்த்தி வானம் மிதமாகத்தான் இருந்தது. சூரியனைப் பார்த்தால் இங்கெல்லாம் மஞ்சள் ஒளியை மட்டும் தருவது தான் தன்னுடைய வழக்கம் என்பது போல் அப்பாவித்தனத்துடன் இருந்தது. தி.ஜா. பார்த்திருந்தால் சாதுவான பெண்ணாட்டம் இருக்கிறது என்று சொல்லியிருக்காலாம்.

கருகாவூர்
வீட்டிற்கு வந்து சேர்ந்த போது இரண்டு பந்தி முடிந்திருந்தது. சாப்பிட்டு வந்த போது மாலி மாமா சாப்பாடு எவ்வாறு இருந்தது என்று விசாரித்தார். பதிலுக்கு நாங்கள் ஒரு மணி நேரம் பாகவத மேளா பற்றி கேள்விகள் கேட்டு அவரைப் படுக்கவிடாமல் தொந்தரவு செய்தோம். தஞ்சைப் பகுதியில் மதியம் சாப்பிட்ட பின் வெற்றிலையும் தூக்கமும், சித்திரையில் வெயில் அடிப்பது போன்று வழமையானது. அதனால் நாங்களும் ஊர் வழக்கத்தை மதித்து எங்கள் அறைக்கு சென்று தூங்கிவிட்டோம்.

மாலையில் அவிநாசி தாமரை வந்துசேர்ந்தான். மாலி மாமாவின் டிவியஸ் எக்ஸல் பைக்கை நான் எடுத்துக்கொண்டேன். தமிழக கிராமத்தின் ஆடு மாடுகள் போன்ற உயிரினங்களின் தொகுதியில் டிவியஸ் பைக்குக்கும் இடம் உண்டு. மூவருமாக அய்யம்பேட்டை தாண்டி இருக்கும் புள்ளமங்கை சிவாலத்திற்குச் செல்ல எண்ணியிருந்தோம். புள்ளமங்கையில் இரண்டு ஈசன் கோவில்களும், ராமானுஜரின் ஆசிரியர்களின் ஒருவரான பெரியநம்பியின் திருவரசும்(சமாதி) உள்ளது. திருவரசு கோவிலுக்கு இப்போது தான் கும்பாபிஷேகம் நடந்திருக்கவேண்டும். கோயிலை வெளியிலிருந்து பார்க்கும் போதே பளபளவென்று இருந்தது. கோயில் சாத்தியிருந்தபடியால் எங்களால் கோவிலைப் பார்க்கமுடியவில்லை.

புள்ளமங்கையில் நாங்கள் செல்லவேண்டிய சிவன் கோவிலுக்கு பதிலாக இன்னொரு சிவன் கோவிலுக்கு எங்களை வழிகாட்டு அழைத்து சென்றான் அவிநாசி தாமரை. அந்த கோவில் மாடக் கோவில் அமைப்பில் அமைந்த முக்கியமான ஒரு சிவ தலம். கோவிலில் திருப்பணி நடந்துகொண்டிருந்தது. பிரதோஷ காலம் என்பதால் கூட்டம் இருந்தது. சிவபெருமான் சன்னதியும் விநாயகரின் சன்னதியும் மாடத்தில் அமைந்திருந்தது. கிழே அம்பாளுக்கான சன்னதி. கோவிலுக்கு வெளியே பையன்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர் அவர்களுடன் கொஞ்ச நேரம் விளையாடினேன். 

புள்ளமங்கையில் உள்ள இன்னொரு சிவன் கோவில் பசுபதீஸ்வரர் கோயில் ஆகும். அக்கோயிலிலுள்ள துர்கையை படத்தில் பார்த்துள்ளேன் மிகவும் அழகானவள் என்று சொல்வது மிகவும் குறைச்சல் என்று சொல்லும்படி இருப்பாள். துர்க்கைக்குப் பூட்டு போட்ட இரும்புக் கதவும் சிற்பத்தில் மாலை சாற்றக் கம்பிகளும் பொருத்தியிருந்தனர். அங்குள்ள ராமாயண சிறு செதுக்குச் சிற்பங்கள் புகழ்பெற்றவை. விமானத்தையும், சிற்பங்களையும் பல விதமாக படம் எடுத்துக்கொண்டேன். கோவிலை விட்டு வெளியே வரும் போது இருள ஆரம்பித்துவிட்டது. தஞ்சை மண்ணில் வெயிலுக்கும் சிறப்பு இடம் உண்டு என்பதால் வெயில் தாழ்ந்த பிறகே கிளம்பியிருந்தோம். மீண்டும் அய்யம்பேட்டை வழியாக மெலட்டூர். நான் தனியாக பின்னால் டிவிஎஸ் பைக்கில் உருட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அய்யம்பேட்டையில் நிறுத்தி தண்ணீர் வாங்கிக்கொண்டோம்.

புள்ளமங்கை கொற்றவை
அங்கிருந்த கடைக்கு அருகில் ஒரு வீட்டின் முன் பந்தல் போட்டிருந்தது. பஜனை பாடல்களின் ஒலி வெளியே கேட்டது. மக்கள் உள்ளும் வெளியிலும் சென்று வந்துகொண்டிருந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தோம். வீட்டினுள் பெரிதாக நரசிம்மர் முகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு பாகவத கோஷ்டி மிருதங்கமும் தாளமும் கொண்டு பாடுவதற்குக் காத்திருந்தனர். அங்கேயும் நரசிம்ம ஜெயந்தி விழா கொண்டாடிக்கொண்டிருந்தனர். பாகவத மேளா தஞ்சை மாவட்டம் முழுவதுமே ஒரு காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். அதன் தடயம் போல் தான் தெரிந்தது. அந்த சிறிய இடத்தில் ஒலி பெருகிக்கொண்டே சென்றது, ஒருகட்டத்தில் மைக் இரைச்சல் தாங்க முடியாமல் இருந்ததால் கிளம்பிவிட்டோம். அய்யம்பேட்டை தாண்டி இருள் நிறைந்த பாதையில் மெலட்டூருக்கு சென்றுகொண்டிருந்தோம். நான் நிதானமாக பிந்தியே வந்துகொண்டிருந்தேன். முன்னால் வண்டியில் சென்றவர்கள் எனக்காக நின்று நின்று செல்லவேண்டிருந்தது. பொதுவாகவே எனக்கு இருளில் பயணிக்கப் பிடிக்கும். சென்னையில் இருள் என்பதே கிடையாது என்று நினைக்கிறேன். எல்லா இடத்திலும் ஸ்ட்ரீட் லைட் போடப்பட்டு வெளிச்சம் வாரியிறையும். இரவான ஓர் உணர்வே இல்லாத மாதிரி இருக்கும். அதனால் இருளில் அதுவும் பைக்கில் முன் விளக்கு வெளிச்சமும் முழு நிலவின் வெண்ணிற ஒளியும் தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லாத ஒற்றைத் தார் சாலையில் செல்வது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. சில இடங்களில் நின்று முழு நிலவைப் படங்கள் எடுத்துக்கொண்டேன். மறுநாள் சித்திரை பௌர்ணமி. மெலட்டூர் கடைவீதியில் ஆள் நடமாட்டம் இருந்தது. மாலி மாமா வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். ஒத்திகை முடிந்து பேசிக்கொண்டிருந்தனர். எங்கு சென்று வந்தீர்கள் என்று விசாரித்தார்கள். புள்ளமங்கை கோயில் பற்றியும் அங்குள்ள சிற்பங்களைப் பற்றியும் கொஞ்சம் பேசினோம். அனைவருமாக சாப்பிடச் சென்றோம். மீண்டும் சுடச்சுட பலகாரம் தோசை இட்டிலி தயிர்சாதம் மாங்காய் தொக்கு. 

சாப்பிட்ட உடன் அனைவரும் ஒவ்வொரு குழுவாக தாங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தனர். நாங்கள் மேளா குழுவில் பெரும்பாலார்கள் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்றோம். மேளா பாடகர்கள் முரளி, மணிகண்டனின் சிறு கச்சேரி ஒன்று அங்கு நடந்தது. அரவிந்த் கௌசிக் மிருதங்கத்தில் தனியாவர்த்தனம் ஒன்று வாசித்தார். கச்சேரிக்குப் பின் மீண்டும் பேச ஆரம்பித்து பன்னிரண்டு மணிக்கு மேல் வந்து எங்கள் அறையில் படுத்துக்கொண்டோம். காலையில் ஐந்து மணிக்கு தஞ்சையில் இறங்கி இரவாவதற்குள் காபி, பலகாரம், கோவில், வெற்றிலை சங்கீதம் என தஞ்சையின் தினுசுகளை பார்த்துவிட்ட எண்ணம் எழுந்தது. ஏசியின் காற்று கண்ணை அழுத்த அப்படியே தூங்கிவிட்டேன்.

***********

மெலட்டூர் ஶ்ரீலக்ஷ்மீ நரசிம்மர், சிம்மமுகம்

மறுநாள் காலையில் எழுந்து காபி சாப்பிட மாலி மாமாவின் வீட்டிற்குச் சென்றோம். நரசிம்ம ஜெயந்தியின் விழா காலை பத்து மணிக்கு நரசிம்ம ஸ்வாமிக்கு அபிஷேகத்துடன் தொடங்குகிறது. அபிஷேகத்திற்கான பொருட்களை ஆட்களிடம் மாலி மாமாவும் மாமியும் பார்த்து அனுப்பிக்கொண்டிருந்தனர். காபி சாப்பிட்டு விட்டு கொஞ்சம் பேசிவிட்டு அங்கேயே குளித்து கோவிலுக்குப் புறப்பட்டோம். மெலட்டூரின் மேற்கே கடை கோடியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. அதன் எதிரிலேயே நாடகம் நடப்பதற்கான மேடையும் நரசிம்ம ஸ்வாமிக்குச் சின்ன சன்னிதியும் உள்ளது. முன்பு அங்கு தான் கோவில் இருந்ததாகவும் ஏதோ காரணத்தினால் இன்று வரதராஜ பெருமாள் இருக்கும் இடத்திற்குக் கோவில் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினர். 

முன்பு நரசிம்மர் கோவில் அங்கு இருந்ததால் நாடகமும் அங்கு தான் போட வேண்டும் என்று மெலட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் வீ.டி ஸ்வாமி அங்கேயே நிலம் வாங்கி மேளாவிற்கு கொடுத்துள்ளார். அங்கு இப்போது சிறு நரசிம்மர் சன்னதியும் பாகவத மேளா நடத்த மேடையும் அமைத்து வருடாவருடம் அங்கேயே நாடகமும் போடுகின்றனர். மேளாவில் நடிப்பவர்களும் அவர்கள் உறவினர்களும் ஊர் மக்கள் சிலரும் சன்னிதியில் கூடியிருந்தனர். அபிஷேகம் ஆரம்பித்த உடன் சூக்தங்கள் சொன்னோம். அபிஷேகம் முடியும் தறுவாயில் பிரஹலாத சரித்திரம் நாடகத்தில் உள்ள பாடல்கள் பாடினர். நரசிம்மர் தூணில் தோன்றும் முன் பாடப்படும் ‘தேவ தேவ இதே சமயம் அய்யா, ஈ ஸ்தம்பமுன ஆவஹின்சி நன்னு ப்ரோவய்யா’ என்ற பாடல் அனைவராலும் உருக்கமாகப் பாடப்பட்டது. பாடல் முடிந்தவுடன் அந்த உணர்வு நிலையிலேயே சிறிது நேரம் அனைவரும் இருந்தனர். ஸ்வாமிக்கு ஆரத்தி காட்டப்பட்டது. அனைவரும் சகஜ நிலைக்கு வந்தனர். நடிப்பவர்கள் அனைவருக்கும் கையில் மஞ்சள் காப்பு கயிறு கட்டப்பட்டது. பிரசாதம் வழங்கினர். 

பதினோரு மணிக்கு நாடக ஒத்திகை என்று நேற்றே கூறியிருந்ததால் ஒவ்வொருவராக வீட்டை நோக்கிச் சென்றனர். நாங்களும் காலை பலகாரம் சாப்பிட்டு நாடக ஒத்திகை பார்க்கலாம் என்று விட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். நேற்று(10-5-25) முழுக்க ஊரைச் சுற்றினாலும் வெயில் தெரியவில்லை. இன்று பகல் பத்து மணிக்கே வெயில் தலையில் துண்டு போட வைத்துவிட்டது. அனைவருமே ஒத்திகைக்குக் கூடியிருந்தனர். ஏதோ மாலி மாவிடம் பேசிக்கொண்டிருந்த ஆனந்த் நீங்களும் நாடகத்தில் நடிக்க வேண்டும் பயப்படவேண்டாம் சும்மா சாமரம் வீசுவது, பிரஹலாதனுடன் மாணவனாக இருப்பது போன்று வந்தால் போதும் என்று சொன்னார். நாங்கள் பதில் சொல்லுவதற்கு முன்பு மீண்டும் மாமாவிடம் பேச போய்விட்டார். இப்படித் திடீரென்று நாங்களும் பாகவத மேளா குழு நடிகராக ஆகிவிட்டோம். 

மாலி மாமா ட்ரூப்பின் இயல்பிலேயே நடிக்க ஆர்வம் உடையவர்களை உள்ளிழுத்துக்கொள்வது இருக்கிறது. இதற்கு முன் நாடகத்தில் நடித்தவர்கள் இப்போதும் நடித்துக்கொண்டிருப்பவர்கள் என அத்தனைப்பேரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கும் நாடகத்தில் இடம் அளித்தார்கள். அதனால் தான் என்னை மாதிரி நாடகத்தை முன் இருக்கையில் மட்டும் அமர்ந்து பார்த்த ஒருவரைத் தங்கள் நாடகத்தில் சேர்த்துக்கொள்ள முடிகிறது. நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்கிறோம். நீங்கள் பயப்படவேண்டாம் என்று ஆறுதல் சொன்னார் ஆனந்த். எங்களைச் சேர்த்ததற்கு அவர் தான் பயப்பட வேண்டும் என்ற உண்மையை அவரிடம் நாங்கள் கடைசி வரை சொல்லவில்லை. எங்களைச் சவரம் செய்யச் சொன்னார். அப்போது தான் முகத்தில் அரிதாரம் போடுவதற்கு முடியும். ஒத்திக்கை முடிந்தவுடன் மீண்டும் பலகாரம், மத்தியானத் தூக்கம்.

சாயங்காலம் சிறிய பரபரப்புடன் எழுந்து அருகிலேயே இருந்த சலூனில் முகத்தை மழித்துக்கொண்டு குளித்து மெலட்டூரில் குடிகொண்டிருக்கும் சிவப்பிரியாம்பிகா சமேத உன்னதபுரீஸ்வரரைக் காண கால் நடையாகச் சென்றோம். சென்னையின் நெரிசலும் கோணலுமான தெருக்களுக்கு நேர் எதிரானவை மெலட்டூர் வீதிகள். வீடுகளுக்கு இடையில் சம அளவு இடம் விட்டு அமைக்கப்பட்டிருந்தன. நாங்கள் கிளம்பும் பொழுது நரசிம்ம ஸ்வாமி வீதி உலா வந்து கொண்டிருந்தார். மாலி மாமா வீட்டின் முன் தட்டு கொடுத்து தரிசனம் பெற்றுக்கொண்டும் இருந்தார்கள். 

வீதி உலா
மாலையில் சிவன் கோவிலுக்கு முதல் வருகை நாங்கள் தான் ஆகையால் ஈசனுடன் தனியாக உரையாட முடிந்தது. கோவிலின் கருவறை கல்சுற்று பற்றியும் கோவிலின் அமைப்புபற்றியும் சுதைச் சிற்பங்கள் பற்றியும் புதுவை தாமரை கூறிக்கொண்டிருந்தான். கோவிலைச் சுற்றி விட்டு வீட்டிற்குச் சென்றோம். ஒவ்வொரு நாடகம் போடுவதற்கு முன்பும் வீட்டில் உள்ள ஸ்வாமிக்குப் பூஜை செய்யப்படும். ஆரத்தி எடுத்தவுடன் நாடகத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவராக ஸ்வாமியை நமஸ்காரம் செய்து, மேளாவில் உள்ள பெரியவர்களிடம் விபூதி பூசிக்கொள்வார்கள். மாலி மாமாவிடம் ஒவ்வொருவராக விபூதி பூசிக்கொண்டார்கள். நாங்களும் விழுந்து கும்பிட்டு விபூதி பூசிக்கொண்டோம். 

ஒவ்வொருவராகக் கலைந்து நாடகக் கொட்டகைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். நிரந்தரமாகப் போடப்பட்ட சிமண்ட் மேடைக்கு நேர் எதிரில் ‘பிரஹலாத சரிதம்’ நாடகம் மட்டும் போடுவதற்கு மர மேடை அமைத்திருந்தார்கள். மேடைக்கு இரு புறங்களிலும் தீபம் ஏற்றுவதற்கு வரிசையாக வாழையை வெட்டி நட்டிருந்தனர். அதன் மேல் பெரிய மடக்கில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. தீவட்டியின் வெளிச்சத்தில் ஆடும் பழைய மரபைக் கடைப்பிடிப்பதற்காக அவ்வாறு அந்த அமைப்பு செய்யப்பட்டிருந்தது. 

மெலட்டூர் பாகவத மேளா நிகழ்ச்சிகளில் மேளா நாடகங்கள் மட்டும் இல்லாமல் பரதம், குச்சுபிடி ஆகிய நடனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாலையில் நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்ச்சிகள் இரவு ஒன்பது மணிவரை நடக்கிறது. பின் மேளா நாடகம் ஆரம்பிக்கும். சிறிது நேரம் அமர்ந்து பரத நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்து விட்டு ஒப்பனை அறைக்குச் சென்றோம். முதன்மைப் பாத்திரங்கள் ஒப்பனையில் ஈடுபட்டிருந்தனர். பிரஹலாத சரிதம் நாடகத்தில் முக்கியபாத்திரம் ஹிரண்யகசிபுவாக நடிக்கும் அரவிந்தன் பதினேழு வருடங்களாக அவ்வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். லீலாவதியாக நடிக்கும் நாகராஜன் நாற்பது ஆண்டுகளாக அனைத்து முக்கிய பெண் கதாபாத்திரங்களும், மற்ற முதன்மைப் பாத்திரங்களும் போடக்கூடியவர். பிரஹலாதனாக நடிக்கும் அதுல் சில வருடங்களாக பிரஹலாதன், ஹரிச்சந்திர நாடகத்தில் ரோஹிதாக்ஷன் பாத்திரங்களைப் போட்டுவருகிறான். 

இரண்டாவது தலைமுறை பாகவத மேளா ஒப்பனைக் கலைஞர் கதிர்
இவர்கள் இல்லாது லீலாவதிக்குத் தோழிகள், பூமாதேவி ஆகிய பெண் பாத்திரங்களுக்கு ஒப்பனை நடந்துகொண்டிருந்தது. மெலட்டூர் பாகவத மேளாவின் தனித்தன்மையாக ஆண்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடிப்பதைச் சொல்வார்கள். முன்பு பொதுவாகவே பெரும்பாலான நிகழ்த்துக்கலைகளில் அனைத்து பாத்திரங்களையும் ஆண்கள் மட்டும் தான் நடித்துக்கொண்டிருந்தார்கள். உதாரணமாக யக்ஷகானாவிலும், கதகளியிலும் ஆண்கள் மட்டுமே நடித்துக்கொண்டிருந்தார்கள். பின்னால் அந்த கலைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பெண்களும் நடிக்கத் தொடங்கினார்கள். மேளாவை பொறுத்தவரையில் இப்போதும் பெண்கள் கதாபாத்திரத்தையும் ஆண்களே ஏற்று நடிக்கும் வழக்கம் நீடிக்கிறது. இப்போதுள்ள மேளா அணியில் பெண்களுக்குச் சவால் விடும் நடிகர்களும் உள்ளனர். நாகராஜனைத் தவிர ஆனந்த், ஜெய், ஆகாஷ், சென்னை ஆனந்தன் என பெண் பாத்திரங்களை பெரு மகிழ்ச்சியோடு ஏற்று செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். 

பிரஹாத சரித நாடக மேடை
நாடகத்தைக் காண்பதற்குக் கொட்டகை முழுக்க கூட்டம் நிறைந்திருந்தது. பத்து மணிக்கு நாடகம் பாட்டுடன் தொடங்கியது. கோணங்கி தோன்றி நாடகத்தை ஆரம்பித்துவைத்தார். பின்னர் விநாயகப் பூஜை. கட்டியக்காரன் தோன்றி ஹிரண்யனின் வருகையைச் சபைக்கு அறிவித்தான். ஹிரண்யனின் வருகை நிகழும் போது இசை மேலும் ஏறத்தொடங்கியது. தன் பரிவாரங்களுடன் ஹிரண்யன் அரசவையில் தோன்றினான். உலகை வென்று தன் கீழ் வைத்துள்ள பராக்கிரமத்தை வெளிக்காட்டினான். பரிவாரங்கள் அவனுடன் ஆரவாரித்து நடனமிட்டனர். கம்பன் ‘ஹிரண்யனை பிரம்மாவிடம் இருந்தே வேதத்தை கற்றவன், முக்கண்ணனுக்கும் ஐம்பூதங்களுக்கும் இணையான வலிமையுடையவன்’ என்று அறிமுகப்படுத்துவார். கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரிகளின் தெலுங்கு பத்யங்களும் உணர்வு மிக்கவையாக வலுவானவையாக இருந்தது.

லீலாவதியின் பாத்திரப் பிரவேசம் நீண்ட நாட்டியத்துடன் நிகழ்ந்தது. நாகராஜனின் அடவுகளும் அபிநயனங்களும் ஏற்கனவே புகழ்பெற்றவை. அடுத்து பிரஹலாதன் ஹரி நாமம் சொல்லிக்கொண்டே பிரவேசித்தான். பிரகலாதனுக்கு நடனமும் நீண்ட வசனங்களும் நிறையவே இருந்தன. அத்தனை வசனங்களையும் பேசி நடிப்பது சாதாரணமான விஷயம் அல்ல. 

நாடகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. எனக்கு நாடகங்களை முன்னால் இருந்து பார்த்த அனுபவம் தான் இருக்கிறதே தவிர அரிதாரம் பூசியபடி பக்கவாட்டில் பார்க்கும் அனுபவம் புதிதாகவே இருந்தது. அசுரப் பாத்திரம் முடிந்தவுடன் பிரஹலாதனுக்கு ஹிரண்யனின் நாமத்தை சொல்லிக்கொடுக்கும் பாத்திரம். அனைவரும் அசுர வேஷத்தைக் களைத்து விட்டு வேட்டியும் விபூதிப்பட்டையும் அடித்துக்கொண்டு காதில் பூவை வைத்துக்கொண்டு மேடைக்குச் சென்றோம். அந்தக் காட்சியைச் சபை ரசித்ததை சிரிப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததன் மூலமாகத் தெரிந்துகொண்டோம். அத்துடன் எங்கள் ரோல்கள் முடிந்துவிட்டது என்று சொன்னதால் முகத்தில் எண்ணைத் தேய்த்து அலம்பி நாடகத்தைப் பார்க்கச் சென்று விட்டேன். 

பிரஹலாத சரிதம் நாடகத்தில் நரசிம்மராக தோன்றும்போது ‘சிம்ம முகம்’ ஒன்றை அணிந்தபடி தோன்றுவார்கள். அந்த நரசிம்ம முகம் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும். காலையில் அபிஷேகம் முடிந்த உடன் நரசிம்ம ஸ்வாமி சன்னதியில் முகத்தைச் வைத்துவிட்டார்கள். அந்த முகத்திற்கும் சேர்த்தே பூஜையும் நடந்தது. அந்த முகத்தை அணிந்துகொண்டு தான் நரசிம்மராகத் தோன்றுபவர் மேடையில் வருவார். அவர்கள் காலையிலிருந்து விரதம் இருந்து நரசிம்மராக வேடம்கட்டுவார். ராமசாமி மாமா மிக நீண்ட ஆண்டுகளாக நரசிம்மராக வேடம் தரிக்கிறார். நரசிம்ம முகத்தைச் சன்னதியிலிருந்து வாத்தியமும் தீவட்டியும் குடையுமாகச் சென்று எழுந்தருளப்பண்ணி வந்து கொட்டகைக்குப் பின்புறம் கொணர்ந்து பூஜை செய்து ராமசாமி மாமா முகத்தில் அணிவித்தனர். 

நரசிம்ம மூர்த்தி உக்ர தெய்வம் ஆகையால் அவரை கட்டுப்படுத்த இடுப்புடன் சேர்த்து துணியைக்கட்டி இழுக்க நான்கு பேர் இருந்தனர். நான் மெதுவாக முன்பக்கம் சென்று நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். கோபத்துடன் ஹிரண்யன் பிரஹலாதனுடன் சம்வாதித்துக் கொண்டிருந்தான். பிரஹலாதன் உறுதியான மனதுடன் பதில்களை கூறிக்கொண்டிருந்தான். வாதம் முற்றிக்கொண்டே வந்தது. இசை மெல்ல ஏறிக்கொண்டே சென்று இந்தத் தூணிலா உன் ஹரி இருக்கிறான் என்று ஹிரண்யன் கர்ஜிக்க‘ஆம் நூறாக கூறிட்ட அணுவிலும் உளன், இத்தூணிலும் உளன்’ என்று பிரஹலாதன் கூறிவிட்டான். 

பிரம்மன் முதலான தேவர்களும் உயிரினங்களும் ‘தேவ தேவ யிதே சமயம் அய்யா, ஈ ஸ்தம்பமுன ஆவஹின்சி நன்னு ப்ரோவய்யா’. தேவ தேவா இதுவே சமயம் இந்தத் தூணில் எழுந்தருள வேண்டும் என்று மன்றாடினர். அந்த மன்றாட்டு உச்சத்திற்குச் செல்லும் போது ஹிரண்யன் தூணை தன் கதையால் அடிக்க, தூணைப் பிளந்து சீயம் வெளிப்பட்டது. நரசிம்மம் சிவந்து அதிஉக்கிரமாகத் தெரிந்தது. ஹிரண்யன் நரசிம்மத்திடம் கோபத்தைக் காட்டினான் வசைபாடினான். நரசிம்மரை தூஷித்துப் பேசிக்கொண்டே இருந்த ஹிரண்யன் தீடிரென்ற நரசிம்மத்தின் தாக்குதலால் சிம்மத்தின் காலில் வீழ்ந்து மடிந்தான். பின் பிரஹலாதன் நரசிம்மத்தை பூஜை செய்து பானகம் காட்டி வழிபட்டுக் குளிர்வித்தான். நரசிம்மர் பிரஹலாதனுக்கு லக்ஷ்மீ நரசிம்மராக அருள்பாலித்தவுடன் மங்களம் பாடினார்கள். 

நரசிம்மமாக தோன்றியவரை அந்த முகத்துடன் கோவில் முன் அமரச்செய்து மீண்டும் பூஜை செய்து அனைவரும் வீழ்ந்து வணங்கினர். பின் சிம்ம முகத்தை சன்னதியில் வைத்தவுடன் அங்கே வரதராஜப்பெருமாள் கோவில் முன் நாடகம் போடும் குமார் ட்ரூப்புக்கு எடுத்துச் சென்றனர். மணி நான்கைத் தொட இருந்தது. நாடகத்தில் நரசிம்மத்திற்கு நைவேத்தியம் செய்த பானகத்தை சாப்பிட்டு விட்டு வரதராஜ பெருமாள் முன் நடக்கும் நாடகத்தை காணச் சென்றோம். நாங்கள் செல்லும் போது பிரஹலாதனை பாம்பை விட்டு கொல்லும் காட்சி நடந்துகொண்டிருந்தது. இங்கே நரசிம்மம் தோன்றி மங்களம் பாட ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. நாங்கள் தங்கும் வீட்டிற்கு முன்னே தான் நாடகம் நடந்துகொண்டிருந்ததால் அப்படியே சென்று மெத்தையில் படுத்துவிட்டேன். புதுவை தாமரை அவிநாசியை பஸ் ஏற்றி விட்டு வரச் சென்றான். நான் மட்டும் தனியாக படுத்திருந்தேன். கண்களை மூடினால் நரசிம்மம் ‘ராக்ஷசா’ என்று கர்ஜிக்கும் குரலே கேட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் வர நீண்ட நேரம் பிடித்தாலும் அப்படியே கண்களை மூடிக்கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கியும்விட்டேன். 

***** 

மறுநாள் காலையில் பத்துமணிக்கு எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு மாலி மாமா வீட்டிற்குச் சென்றோம். மாமா நாடகம் எப்படி இருந்தது என்று கேட்டார் எங்கள் அனுபவத்தைச் சொன்னோம். இசையிலும் விளக்கின் ஒளியிலும் நடிகர்கள் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்த விதத்திலும் சிறப்பாக இருந்ததாகக் கூறினேன். இன்னும் இந்த நாடகம் உயிர்ப்புடன் உள்ளதையும் அது என் கற்பனையில் எப்படி விரிந்து எழுந்தது என்றும் சொன்னேன். மாமா எதிர் மரியாதையாக எங்களுக்கு காபி தந்து உபசரித்தார். காபிக்குப் பின் புதுவை தாமரை மாமாவிடம் விடைப்பெற்றுக்கொண்டான். நானும் அவனுடனே செல்வதாகத் தான் மெலட்டூர் வரும் போது எண்ணமாக இருந்தது. ஆனால் சூழலும் மனிதர்களும் இந்த விழா முடியும் வரை இருக்கவைத்து விட்டனர். 

இந்த நான்கு நாட்களும் காலையில் பத்து மணிக்கு மேல் எழுந்துகொள்வது மாமா வீட்டிற்கு வந்து காபியை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் பேசி விட்டு பலகாரம் சாப்பிடுவது. மீண்டும் மதியம் ஒத்திகை இருந்தால் பார்க்கவேண்டியது. இல்லை என்றால் பேசி விட்டு மதிய சாப்பாட்டை சாபிட்டு தூங்கவேண்டியது. சாயங்காலம் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பலகாரம் காபி விழா அரங்கத்திற்கு சென்று நாட்டியத்தை பார்த்துவிட்டு நாடகத்தில் நடித்தும் பார்த்தும் விட்டு இரவெல்லாம் பேசி அதிகாலை தூங்கச் செல்ல வேண்டியது என்று இவ்வாறாக மிக சொகுசாகவும் மகிழ்வாகவுமே சென்றது. 

இரண்டாம் நாள் மாலையில் மேளா குழுவினருக்கு ஓய்வு. அன்று மாலை சென்னையைச் சேர்ந்த நடனக்குழு பரதம் ஆடியது. அதனைத் தொடர்ந்து ஆந்திரத்தைச் சேர்ந்த குச்சுபிடி குழு ஒன்று பஸ்மாசுரன் நாட்டிய நாடகம் போட்டனர். விழாவைக் காண வந்த மற்ற நடனமங்கைகள் விசில் அடித்தும் கூவியும் ரசிக்கும் படி அந்த நாடகம் இருந்தது. வழக்கமாக இங்கே முடிந்தவுடன் கோவில் முன் போடப்படும் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்று பார்ப்பேன். 

மூன்றாம் நாள் மாலை நாட்டிய நிகழ்ச்சிக்கு பின் மேளா குழுவினர் போடும் ஹரிச்சந்திர நாடகம். ஹரிசந்திர நாடகம் நீளமானது என்பதால் இரண்டு நாட்களாக பிரித்துப் போட்டனர். ஹரிச்சந்திர நாடகத்தில் இயல்பிலேயே துக்கம் அதிகம். நாடகம் முழுக்க சோக பாவம் விரவியிருக்கும்.

ஹரிசந்திர நாடகம்
இந்திரன் தன் சபையில் வசிஷ்டர் விஸ்வாமித்திரர் உடன் வீற்றிருக்கும் போது யார் இந்த உலகில் சத்தியசந்தன் என்பது விவாதத்திற்கு வருகிறது. வசிஷ்டர் ஹரிசந்திரன் தான் உலகில் சிறந்த சத்தியவான் என்று சொல்கிறார். அவர் சொல்வதை தான் பொய்யாக்கிக் காட்டுவதாகச் சொல்லி விஸ்வாமித்திரர் சவால் விடுத்து ஹரிசந்திரனின் ராஜ்யத்தையும் அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்வார். அவனிடமிருந்து மேலும் பணம் பிடுங்குவதற்காக நக்ஷத்திர குண்டு என்ற தேவகணத்தைப் படைப்பார். அவனும் ஹரிசந்திரனிடம் பணம் கேட்டு அவனை சித்திரவதை செய்வான். ஹரிசந்திரன் அவனுடைய மனைவி சந்திரமதியையும் மகன் ரோஹிதாக்ஷனையும் ஒரு பிராமனணனிடம் விற்கும் படி செய்வார். பின் தன்னையும் சுடுகாட்டை சேர்ந்தவனிடம் விற்றுக்கொண்டு வெட்டியானாகவும் ஆகிவிடுவான். அப்போது அவன் பிள்ளை ரோஹிதாக்ஷன் நாகம் தீண்டி இறந்துவிடுவான். சந்திரமதி மகனை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு வருவாள். ஹரிசந்திரனோ மகனாகவே இருந்தாலும் பணம் கொடுக்காமல் எரிக்க முடியாது அது என் எஜமானனுக்கு செய்யும் துரோகம் என்று சொல்லிவிடுவான். அதனால் யாரிடமாவது பணம் கேட்டு வர நகரத்திற்கு மீண்டும் சந்திரமதி செல்லும் போது காசி ராஜனின் மகனை திருடர்கள் நகைக்காக கொன்று வீதியில் வீசியிருப்பார்கள். அந்த பழி சந்திரமதி மேல் விழும். அவளை மரண தண்டணை அளித்து அவள் கழுத்தை வெட்ட ஹரிசந்திரனிடமே அனுப்புவார்கள். அவனும் அரசாணையை மீறமுடியாமல் அவள் கழுத்தை வெட்டும் போது ஈசன் பார்வதியுடன் தோன்றி அவனை உலகில் சிறந்த சத்தியவான் என்று அருள் புரிவார். 

இந்த நாடகம் முழுவதும் சோக பாவம் நிறைந்திருக்கும். மகனை இழந்து சந்திரமதி ஆடும் இடங்கள் மிகவும் உருக்கமாக இருக்கும். இதில் நான் நக்ஷத்திரகுண்டுவின் சிஷ்யனாக ஆனந்துடன் இரு நாட்களும் நடித்தேன். நக்ஷத்திரகுண்டு ஒரு ஹாஸ்யம் நிறைந்த பாத்திரம் ஆதலால் சுதந்திரமாகவே நடிக்க முடிந்தது. மூன்றாம் நாள், நான்காம் நாள் என இரண்டு பகுதிகளாக ஹரிசந்திர நாடகத்தை போட்டனர். 

ஐந்தாம் நாள் ருக்மிணீ கல்யாண நாடகம். ஒரு மங்களமான நாடகம். ருக்மிணிக்கு யாரை கல்யாணம் செய்துகொடுப்பது என்று அவளுடைய தந்தை பீஷ்மகர் கவலைப்படுகிறார். கிருஷ்ணனுக்கு கொடுக்கலாம் என்று விவாதம் எழும் போது, ருக்மிணியின் அண்ணன் ருக்மியைக் கிருஷ்ணனுக்கு தர மறுத்து சிசுபாலனுக்குத் தர வேண்டும் என்று சொல்கிறான். ருக்மிணியோ கண்ணனை நினைத்து ஏங்குகிறாள். ஒரு பிராமணனை கண்ணனிடம் தூது விடுகிறாள். அப்போது குறத்தி ஒருத்தி வந்து நீ விரும்பிய மணவாளனே உனக்கு கிடைப்பான் என்று குறி சொல்லிச் செல்கிறாள். கிருஷ்ணனும் பலராமனின் துணையுடன் ரும்மிணியை கல்யாணம் செய்துகொள்வான். இந்த நாடகத்தில் நிறைய இடங்கள் ஹாஸ்ய பாவத்துடன் கூடியது. குறத்தி வந்து குறி சொல்லும் காட்சியெல்லாம் விசிலடித்து ரசித்தனர். நான் கோணங்கியாகவும், பலராமனாகவும் வேடம் போட்டேன். கிருஷ்ணன் ருக்மிணியை தேரில் தூக்கி வந்து மணம் புரிந்தவுடன் நாடகம் நிறைவுபெற்றது. மங்களம் பாடிய பின் நாடகக்குழு முழுவதும் மேடையில் நின்று படம் எடுத்துக்கொண்டோம். 

பாகவத மேளா குழு (2025)
ஒவ்வொரு நாடகத்தின் போதும் நரசிம்ம ஸ்வாமியின் உற்சவ மூர்த்தியை மேடைக்கு எதிர்புறம் உலா வந்து எழுந்தருளப்பண்ணுவார்கள். நாடகத்தில் நடித்தவர்கள் வேடத்தைக் களைக்காமல் நரசிம்ம மூர்த்தியை மீண்டும் தோளில் ஏற்றி கோவிலுக்கு எழுந்தருளப்பண்ணினோம். அங்கே பூஜை செய்து ஆரத்தி காட்டி மங்களம் பாடினார்கள். மேளாவின் அடையாளமான ‘தேவ தேவ இதே’ பாட்டுடன் முடித்தனர். எல்லோருக்கும் குங்கும பிரசாதம் வழங்கப்பட்டது.

அப்படியே அனைவரும் வேடம் களையாமல் வாத்தியம் தீவட்டி சீர்வரிசையுடன் மாலி மாமாவின் வீடு நோக்கிச் சென்றோம். விழாவிற்கு வந்த பெண்கள் அனைவரும் உடன் வந்தனர். வீட்டின் முன் கிருஷ்ணன் ருக்மிணிக்கு ஆரத்தி எடுத்து பூசணி சுற்றி கும்மி அடித்தனர். அனைவரும் வலது கால் எடுத்துவைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். சந்தனம் சக்கரை எடுத்துக்கொண்டனர். நாடகத்தில் நடித்தவர்கள் ஸ்வாமி அறைக்குச் சென்று நமஸ்கரித்த பின் வேடத்தை களைந்தனர். 

நரசிம்மர் முன் மங்களம் பாடும் போது

அனைவரும் சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். சாப்பிடாதவர்கள் சாபிட்டனர். அனைவரும் மீண்டும் கூடிய பின் சுற்றி உட்கார்ந்து கொண்டோம். நாகராஜன் பேசினார். வருடா வருடம் அனைவரும் குடும்பத்துடன் பாகவத மேளாவைக் காண வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேசிமுடித்த பின் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரிடம் விடை பெற்றுக்கொண்டனர். காலையில் ஆஞ்சனேயருக்கு விழா. அத்துடன் நரசிம்ம ஜெயந்தி விழாவான பாகவத மேளா முடிவடைகிறது. ஆனால் என்னுடைய ரயிலும் காலை ஆறரை மணிக்கு தஞ்சையில் என்பதால் நானும் மாலி மாமாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். 

சிறுவயதிலிருந்து மேளாவில் இருந்துகொண்டிருக்கும் சூர்யாவின் பைக்கில் தஞ்சைக்குச் சென்றேன். ஒரு வாரம் முன்பு மெலட்டூருக்கு வரும் போது எனக்கு அங்கு யாரையும் தெரியாது. இப்போது பாகவத மேளா குழுவில் ஒருவனாக ஆக்கிவிட்டனர். இரவின் இருள் சூழ்ந்த வயல் வெளிகளின் நடுவே பைக்கின் முன் பக்கம் விழும் சிறு வெளிச்சம் அப்போதுள்ள ஒளி. சுற்றி சிற்றுயிர்களின் ஒலிகள் காதில் விழுந்துக்கொண்டே இருந்தது.

சூர்யா என்னை தஞ்சை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றான். மணி நான்காக பத்து நிமிடம் இருந்தது. ரயில் நிலையத்தின் முன் படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன். தூக்கமும் வரவில்லை மாலி மாமா கொடுத்த பாகவத மேளா நூல்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அருகில் உள்ள கடை திறந்ததும் சென்று காபி சாப்பிட்டு விடியத்தொடங்கியதும் ரயில் நிலையத்திற்குள் சென்று என் ரயில் வரும் நடைமேடையில் இருந்த அரசமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டேன். 

அரசமரம் பரந்து விரிந்து சிறு வானை தன்னுள் கொண்டிருந்தது. கிளைகளின் ஊடாக மெல்ல இளங்காலை வானம் இளமஞ்சள் கொள்ளத் தொடங்கியது . மெல்ல இளமஞ்சள் நிறம் அடர்த்தியாகி வட்டமாகி சூரியனாகியது. இசையும் நாட்டியமும் சிரிப்பும் மகிழ்வுமாக ஐந்து நாட்கள் சென்றது தெரியாமல் சென்றுவிட்டது. அதனால் மனம் சோர்வும் வெறுமையெல்லாம் உணரவில்லை. உற்சாகமாகத்தான் இருந்தது. ரயில் சரியாக ஆறரை மணிக்கு வந்ததும் ஏறிக்கொண்டேன். ரயில் வயல்களின் நடுவே சென்றுகொண்டிருந்தது. வயல்களில் தேங்கி இருந்த நீரில் சூரியன் பிரதிபலித்துக்கொண்டிருந்தான். வானமும் பூமியும் இளமஞ்சள் நிறத்தால் ஆனதாக ஆகிவிட்டது. ரயிலின் ஜன்னலோர இருக்கையிலிருந்து வானையும் தென்னைகளையும் வயல்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் ‘தேவ தேவ இதே சமயம் அய்யா’ என்றே சொல்லிகொண்டிருந்தது. 

அனங்கன்