ஆய்வில் இளம் எழுத்தாளர்கள் உருவாகும் தருணங்கள் அரிதுதான். கவிதை தொகுப்பல்லவா யாவர்க்குமான பச்சிலை. இளம் ஆய்வாளனை சமூகம் ஒருபடி கூடுதலாக புரக்கவேண்டிய அவசியமுண்டு, தாய் மொழியின் களநிலவரம் அப்படி. தமிழில் ஆய்வெழுத்துக்கு யுவ புரஸ்கார் முதலிய விருதுகள் எல்லாம் இன்னும் மெய்நிகர் கனிகளாகவே உள்ளது. இவ்விடத்தில் குமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சியிலிருக்கும் சஜூ எழுதி வெளிவந்த தெய்யத்தின் முகங்கள் என்னும் தொகுப்பு முக்கியமானதாகப்படுகிறது. சஜூ பொறியியல் படித்தவர் ஆர்வம் காரணமாக செண்டை மேளம் அடிக்க பயின்றவர். தொடர்ந்து மேள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
![]() |
| சஜு |
தமிழில் தெய்யம் என்று பார்க்கும்போது ஒன்று அதை வேலன் வெறியாடலுடன் ஒப்பிடுவதற்கான ஒன்றாக, அதாவது வெறியாடலில் இருந்து தெய்யம் வந்தது என்று நிறுவதற்கான விஷயமாக மட்டும் பார்ப்பார்கள். மற்றையது பல்கலைக்கழக அணுகுமுறையோடு செல்வது, பட்டியல்கள் தரவுகள் இவற்றுக்கிடையே கொஞ்சம் எழுத்து.
தெய்யத்தின் முகங்கள் புத்தகம் வேறொரு வகையானது. சஜூ பரஸ்ஸினி காவு முத்தப்பனை பார்க்க ரயிலேறிக்கிளம்புவதில் துவங்குகிறது புத்தகம். முத்தப்பன் நித்ய தெய்ய வழிபாட்டுக்காரர். வடகேரளத்தின் தெய்ய வழிபாட்டு கலாச்சாரம் குறித்த அறிமுகம் முத்தப்பனில் இருந்து துவங்கி பிற காவுகளுக்கு செல்கிறது. பகவதி, நீலி, மாக்கப்போதி, கதிவனூர் வீரன் என்று மனித உருவில் வரும் தெய்வங்கள். தெய்வங்களின் கதைகளை சொல்லும்போதே அவற்றின் தெய்யம் கட்டும் முறைகளை எந்தெந்த காவில் அத்தெய்வம் ஆடப்படும் என்பது முதலான தகவல்களையும் சேர்த்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கதைகளினூடே தெய்வமாக்கலின் அடிப்படைக்கேள்விகளையும் சஜூ சேர்த்தே முன்வைக்கிறார். அநீதியாக கொலையுண்ட மனிதர்களே பெருவாரியான தெய்ய வடிவங்கள், ‘மாக்க போதி’ நமது நல்லதங்காளை ஒத்தவள். அண்ணியரின் வஞ்சத்தால் பிள்ளைகளுடன் அழிபவள். இந்த தெய்வங்களில் எல்லாம் வீரனும் கருப்பும் தீப்பாஞ்சம்மன்களும் போல காணக்கிடைக்கிறார்கள்.
வரிசையாக தெய்வங்களை அடுக்கி விடாமல் சஜூ தெய்யம் கட்டியாடும் குலங்களின் வகைகளையும் அவர்கள் எந்தெந்த குறிப்பிட்ட தெய்யம் கட்டியாடுவார்கள் என்ற முறைகளையும் சொல்கிறார். பின்னும் தெய்யச்சடங்கின் வரிசைக்கிரமம், தெய்யமாடுபவர்கள் காவில் அடையாளம் பெறுவது துவங்கி கரியடிக்கல் வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறார்.
தெய்யம் கட்டுபவர்கள் கதைகளை, அவர்கள் பாடுகளை பதிவுசெய்துள்ள இடம் முக்கியமானது. தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த இவர்கள் தெய்யத்தின்போது அருளும் தெய்வங்களாகின்றனர். விழா இல்லாத காலங்களில் சாதாரண வேலைகளுக்கு தினக்கூலியாகிறார்கள். எம்மான் நாஞ்சில் நாடன் இக்களத்தில் சிறுகதை ஒன்றை எழுதியுள்ளார் கதையின் பெயர் கோம்பை.
மேலெரி ஏறுதலில் உள்ள கஷ்டங்கள், அதனூடாக தெய்யக்கலைஞர்கள் அடையும் உடல்வாதைகள் இவற்றோடு விபத்தில் உறுப்புக்கள் சிதைதலும் அழிதலும் கூட ஆவணப்படங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதை சஜூ குறிப்பிடுகிறார்.
புத்தகத்தில் இன்னொரு முக்கியமான அங்கம், இந்தக்கலையில் ஈடுபடும் பிற துறை வல்லுநர்கள். ஆடையும் அலங்காரமும் இந்த ஆட்டத்திற்கு முக்கியமானது. தெய்வங்கள் இவற்றினூடாகவே வெளிப்படுகின்றன. முகத்தெழுதும் கலைஞர்களும், முடியும் ஒலியும் தட்டும் பனையோலைகளில் செய்தளிக்கும் கலைஞர்களும் அவர்தம் பங்களிப்பும் இந்நூலை ஆய்வு நோக்கில் ஒரு முழுமையான பார்வை கொண்டதாக ஆக்குகிறது. புத்தகத்தில் இதுவரை காணாது கண்டு அறிந்து கொள்ள ஒரு நூறு தகவல்கள் உண்டு. மாப்பிள்ள தெய்யம் போன்று எத்தனையோ சுவாரஸ்யமான விஷயங்களும் உண்டு.
ஆய்வு எழுத்தை சுவாரஸ்யமானதாக எழுதுவது மிகப்பெரிய சவால். சஜு இந்த விஷயத்தை அருமையாக கையாளுகிறார், தகவல்களை அடுக்கிச்செல்வதில்லை. வாசகனுக்காக அனைத்தையும் எளிமைப்படுத்தி விடுகிறார் என்பதும் இல்லை. மாறாக அவனை தொடர்ந்து வாசிக்கத்தூண்டும்படி எழுதுகிறார். இவரது முந்தைய நூலான ஆற்றுமாடன் தம்பிரான், அப்பெயரிலான நாட்டார் தெய்வம் குறித்த நல்ல ஆக்கம். ஆனால் அங்கிருந்து தெய்யம் நூலில் கருப்பொருள் மீதான அணுகுமுறையும், மொழியும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஆய்வுக் களம் என்றாலும் அதை சுவை மிகச்செய்வதில், அந்த சுதந்திரத்தை எடுக்கொள்ளும் தைரியத்தில்தான் சஜூ முக்கியமானவராகிறார். எழுத்தாளர்கள் ஜெயமோகன், SJ சிவசங்கர், சோ தர்மன் ஆகியோரும் ஆய்வாளர்கள் அ.கா.பெருமாளும், பக்தவத்சல பாரதியும் சஜூவை ஏற்கனவே அடையாளப்படுத்தியுள்ளனர். இம்முறை சஜூ விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் நினைவு விருது பெறுகிறார். தொடர்ந்து செயல்படுகையில் அதற்கு மேலும் பல சிறப்புகளை அவர் பெற தகுதியானவரே. சஜூவுக்கு வாழ்த்துக்கள்.
மனிதனில் தெய்வம் பிரவேசிக்கும் தருணங்கள் உண்டு. அன்பில், கோபத்தில், வஞ்சத்தில், காமத்தில் தெய்வங்கள் எழக்கூடும். நின்று கொல்லும் தெய்வம் நீரிலிருந்தும் கைப்பற்றி ஆறுதல் சொல்லும் தெய்வம் நெருப்பிலிருந்தும் எழக்கூடும். அதை எடுத்துச்சொல்லும் ருசி இதுவரை அறிந்திராத ருசியாக இருக்கிறது, அனைத்தும் ஆக்கிக்கொடுத்தும் தன் ருசி சொல்லாத நெருப்பின் ருசி.
தாமரைக்கண்ணன் புதுச்சேரி
![]() |
| சஜு |
சஜூவின் நூலினைப் பெற: முத்ரா பதிப்பகம், கன்னியாகுமரி மாவட்டம். பேச: 6379082628


