![]() |
சுதீர் ஶ்ரீகாந்த் ரிஸ்புட் |
உலகம் முழுவதும் உள்ள தொல்பழங்கால சின்னங்கள் பொதுப்பண்புகள் கொண்டவை. கண்டங்களாக, நாடுகளாக பிரிந்து பொருள்கொள்ளப்படும் எல்லைகளை என்னவென்றே அறிந்திராத மனங்களால் சமைக்கப்பட்டவை. மொழியும் எழுத்தும் தோன்றுமுன்பே கலைக்கான தூண்டுதல் கற்கால மனிதனில் பாறை ஓவியங்களாகவும் செதுக்குகளாகவும் வெளிப்பட்டுள்ளது. இவற்றின் அன்றைய தேவை என்ன என்று நமக்கு தெரியாது. பல்வேறு நாடுகளில் விரவிக்கிடக்கும் இவற்றிலுள்ள ஒற்றுமை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான மானிட குலத்தின் ஒற்றை மனம் ஒன்றை நமக்கு காட்டுகிறது. உலகம் முழுவதுமே பாறை செதுக்குகள் (Petroglyphs) கண்டடையப்பட்டுள்ளது. அதன் மேலான ஆய்வும் அவதானிப்புகளும் ஊகங்களும் கடந்த பத்தாண்டுகளில் மேலும் கவனிக்கப்பட்டு பதிவுசெய்ய்யபடுகிறது. இந்தியாவில் பாறைச்செதுக்குகள் செறிவாக கண்டறியப்படுவது மகாராஷ்டிராவின் ரத்னகிரி பகுதியில்தான்.
சுதீர் ஸ்ரீகாந்த் ரிஸ்புட் (Sudhir Shrikant Risbud 05-8-1973) மகாராஷ்ட்ரா ரத்னகிரி கொங்கன் பகுதியை சேர்ந்தவர். மகாராஷ்ட்ர பாறை செதுக்கு ஆய்வுகள் மற்றும் சூழலியல் சுற்றுலாவில் முக்கிய பங்கு வகிப்பவர். அடிப்படையில் மின்பொறியாளரும் தொழில் முனைவருமான சுதீர் தனது ஆர்வம் காரணமாக பெட்ரோக்ளிஃப் என்னும் பாறை செதுக்கு குறித்த தேடலில் ஈடுபட்டார். 30 ஆண்டுகள் அவரது தீவிர செயல்பாடுகளின் வழியே ஈராயிரத்துக்கும் மேற்பட்ட பாறை செதுக்குகளை கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறார். இதற்காக 'நிசர்க் யாத்ரி சன்ஸ்தா' என்னும் அமைப்பை நிறுவி இளம் தொல்லியல் ஆய்வாளர்களை இந்த துறைக்குள் ஆற்றுப்படுத்துகிறார், கருத்தரங்குகளை ஒருங்கிணைக்கிறார். இத்தன்னார்வ அமைப்பின் முயற்சியால் கடந்த பத்தாண்டுகளில் 2000 பாறைச்செதுக்கு உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுதீர் இருபதுக்கும் மேற்பட்ட கொங்கண் பாறைச் செதுக்குகள் குறித்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். சுதீர் பறவையியலிலும் ஆர்வம் உடையவர், 'கொங்கணின் பறவைகள்' என்ற நூலை எழுதியுள்ளார்.
bhairisbud@gmail.com
சுதீர் ரிஸ்புட்: சஹ்யாத்ரி மலைத்தொடருக்கும் அரபிக்கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி ‘கொங்கண்’ என்னும் பெயரில் அறியப்படுகிறது. வரலாற்று ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தனித்த நிலப்பரப்பாக கொங்கண் பகுதி இருந்துள்ளது. கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்ட்ரம் ஆகிய மூன்று மாநிலத்திலும் நீண்டிருப்பது இது. இந்தியாவில் மிகை மழைப்பொழிவு பெறும் இடங்களில் ஒன்று, கோடையில் வெப்பமும் அதிகமாக இருக்கும். இங்குள்ள பல்லுயிர்ப்பெருக்கம் ஆச்சரியமானது, உலக அளவில் அடர்த்தியான பல்லுயிரிய இடங்களில் ஒன்றாக இது அறியப்படுகிறது. அதற்குக்காரணம் மிகக்குறுகிய பிரதேசத்திலேயே ஆறுகள், கடல், மலை என்று அமைந்துள்ள வேறுபட்ட நிலஅமைப்பும் மழைப்பொழிவும் தான்.
கொங்கணின் புவியியல் தனிச்சிறப்பு செம்புரைக்கற்கள்(laterite plateaux) கொண்ட தளங்கள். லேட்டரைட் அல்லது செம்புரைக் கல் என்பது இரும்பு மற்றும் அலுமினிய தாதுக்கள் நிறைந்த கல், இரும்பு ஆக்சைடு காரணமாக இது சிவப்பு நிறம் கொண்டதாக இருக்கும். சூடான புவிப்பரப்பில் பெய்த நீண்ட மழை காரணமாக மண் இறுகி இந்தக்கற்கள் உருவானது என்று புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
Petroglyphs (பெட்ரோகிளிஃப்ஸ்) Geoglyphs (ஜியோகிளிஃப்ஸ்) என்று நாம் அழைக்கும் பாறைச்செதுக்குகள், செம்புரைக்கற்தள நிலப்பரப்பில் வெறும் கல் ஆயுதங்கள் கொண்டு செதுக்கப்பட்டவை. சிறிதும் பெரிதுமாக இந்த வடிவங்கள் கொங்கண் கடற்கரையையொட்டி கோவாவிலிருந்து வடக்கு கேரளா வரை விரவிக் கிடக்கின்றன. ரத்னகிரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இந்தச் செதுக்குகளின் எண்ணிக்கை அதிகம்.
பாறைச்செதுக்கு தளங்களின் பெரும்பான்மையும் கிராமங்களிலிருந்து தூரத்தில் உள்ள செம்புரைக்கற்கள் உள்ள வெளிகளில் அமைந்துள்ளன. இவை மத்திய மற்றும் புதிய கற்காலத்தை (Mesolithic & Neolithic) சேர்ந்தவை என்று கருதப்படுகின்றன. சில பொறிப்புகள், மனித சமூகம் வேட்டையாடி–சேகரிக்கும் வாழ்க்கை முறையிலிருந்து (Mesolithic) விவசாயம் தொடங்கிய நிலையான வாழ்க்கைக்குப் (Neolithic) மாறிய காலத்தோடு தொடர்புடையவையாக இருக்கலாம். எனினும், இவைகளுடன் தொடர்புடைய பொருட்கள் (material culture) குறைவாக இருப்பதால் உறுதியான முடிவுகளுக்கு வர முடியாமல் உள்ளது. வேறுசில ஆய்வாளர்கள் இவற்றை விவசாயத்திற்கு முன்பான காலகட்டம் என்று உறுதியாக தெரிவிக்கின்றனர். நிலத்தில் காணும் இவ்வடிவங்கள் சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் முதல் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் கொங்கண் பகுதியில் வாழ்ந்த கற்கால மானுட அகத்தின் வெளிப்பாடுகள் என்று கருதப்படுகிறது.
![]() |
சஹ்யாத்ரி மலைத்தொடர் photo: Lan Lockwood |
நான் அடிப்படையில் ஒரு மின்பொறியாளர், பறவையியல் மீது தீவிர ஆர்வமும் உண்டு, புவியியல் அல்லது வரலாற்று ஆய்வுப்பின்னணி எல்லாம் எனக்கு இல்லை. எனது மாணவப்பருவத்தில் தரையில் ஒரு வித்தியாசமான செதுக்கலை பார்த்திருந்தேன். அது ரத்னகிரியில் இருந்து 15 கிமீ தொலைவில் இருந்த நிவாலி என்ற ஊரில் இருந்தது. அது உயிருள்ள எந்த ஒன்றையும் சுட்டும் உருவமல்ல. வழக்கமாக பார்த்திராத அதே சமயம் நேர்த்தியான வடிவங்களை கொண்டிருந்தது. ஒன்றோடு ஒன்று பிணைந்த சுருள்கள், ஒரே மையம் கொண்ட வட்டங்கள் எல்லாம் அதில் இருந்தன. சாலையை ஒட்டி அது இருந்ததால் ஏதோ ஒரு கலைஞன் ரோடு போடப்பட்டதால் தனது ஓவியத்தை அங்கேயே முடித்துக்கொண்டது போல இருந்தது. அந்த மயக்கும் வடிவம் ஒரு பாறைச்செதுக்கு என்று அப்போது எனக்கு தெரியாது. இருந்தாலும் அவ்வூரின் பழங்குடிகள் அந்த செதுக்குகளை தங்களது முன்னோர்களின் பாரம்பரியச்சின்னமாக மரியாதையுடன் அணுகியதை தெரிந்துகொண்டேன். வித்தியாசமான இந்த தகவல் நெடுங்காலம் மனதில் இருந்தது. எனது தேடலுக்கு இது ஒரு துவக்கமாக அமைந்தது என்று கூறலாம்.
இந்த மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாறைசெதுக்கு தளங்களை கண்டெடுத்திருக்கிறீர்கள்.
ஆமாம், 2012 ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நானும் என் நண்பருமான தனஞ்சய் மராத்தேயும் ரத்னகிரி மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு பயணப்பட்டோம். பல தரப்பட்ட மக்களோடு பேசினோம். அந்த உரையாடலின் முக்கிய குறிக்கோள் ஒவ்வொரு கிராமங்களை சுற்றியும் ஏதேனும் செதுக்குகள் உள்ளனவா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது தான். இந்தத்தேடலுக்கு நடுவே வரலாற்றாசிரியர் ஒருவரும் பயணத்தில் இணைந்தபோது தான், நாங்கள் கண்டுபிடித்தவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டோம்.
நாங்கள் எங்கே சென்றாலும் அந்தப் பகுதியைப் பற்றிய தகவல்களை சேகரிக்க அங்கு இருக்கும் ஆடு மாடு மேய்ப்பவர்களிடமோ, விவசாயிகளிடமோ அல்லது முதியவர்களிடமோ தான் முதலில் உரையாடுவோம். உள்ளூரில் இந்த செதுக்குகளை ‘கதல் ஷில்பா’(Katal shilpa) என்று அழைக்கின்றனர். பொதுவாக அவர்களுக்கெல்லாம் என்ன தெரிந்திருக்கப் போகிறது என்ற ஏளனப் போக்கு நகரவாசிகளிடம் உண்டு. அது முற்றிலும் தவறு. இது போன்ற கிராமவாசிகளுக்கு நவீன அறிவியலின் மொழி அறியாமல் இருக்கக் கூடும் ஆனால் புற உலகைப் பற்றி ஆழ்ந்த புரிதல் உள்ளவர்கள்.
அப்படி ஒரு ஆயர்தான் போவல் என்ற இடத்தில் பாறையில் பல நேர் கோடுகள் உள்ளதை சுட்டிக் காட்டினார். அங்கு சென்ற போதே தெரிந்து விட்டது அவை கதல் ஷில்பா தான் என்று. அதில் தேங்கியிருக்கும் மண் மற்றும் அழுக்கை எடுத்து சுத்தம் செய்தோம். பாறையில் அழகிய வடிவங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஒன்று, இரண்டு என்று ஏறக்குறைய ஐம்பது செதுக்குகளை அந்த ஒரு இடத்தில் கண்டோம். மொத்த வடிவங்களின் பரப்பளவு ஏறக்குறைய ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு இருந்தது.
பாறை செதுக்குகளை அடையாளம் காண்பதற்கோ அல்லது சுத்தம் செய்வதற்கோ நீங்கள் ஏதேனும் பயிற்சி மேற்கொண்டீர்களா?
இல்லை. செம்புரைக் கல் மீது புரண்டு விளையாடி வளர்ந்தவர்கள் நாங்கள், இந்த நிலம் எங்களுக்கு அணுக்கமானது. பாறைகள் மீது தோன்றும் மாற்றங்கள் இயற்கையானவையா அல்லது மனிதக் கரங்கள் கொண்டு செதுக்கப்பட்டனவா என்பதை பற்றிய உள்ளுணர்வு கொஞ்சம் உண்டு. பாறைச்செதுக்கு உருவங்களை நமது புரிதலுக்காக இப்படிப்பிரித்துக்கொள்ளலாம். பறவைகள், பெரிய மற்றும் சிறிய மிருகங்கள், மீன்கள், மனித உருவங்கள் இவற்றோடு வடிவியல் உருவங்கள்.
ஆனாலும், நாங்கள் செதுக்குகளை சுத்தம் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளின் போதாமையை இயற்கை காட்டிக் கொடுத்தது. சில வடிவங்களை சுத்தம் செய்த பின் வெப்பம் மிகுந்ததால் தொலைவில் இருந்த கிராமத்திற்கு சற்று ஓய்வெடுக்கச் சென்றோம். அப்பொழுது நல்ல மழை பெய்தது. சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த பொழுது நாங்கள் சுத்தம் செய்த வடிவங்களை மழை நீரில் கலந்து வந்த மண் அப்பியிருந்தது. நாங்கள் சுத்தம் செய்யாமல் விட்டிருந்த வடிவங்கள் மழை நீரால் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. இதைப் போன்ற பல படிப்பினைகள் எங்களின் தேடலின்போது கிடைத்ததன.
செதுக்குகளை கண்டெடுத்தது மட்டுமன்றி அவற்றை பாதுகாக்கவும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்கள். அதைப் பற்றி சொல்ல முடியுமா?
ரத்னகிரியில் இருக்கும் பெரும்பான்மையான பாறை செதுக்குகள் தனியார் நிலங்களில் உள்ளன. ஆகவே, அவரவர் நிலத்தில் மாம்பழம் மற்றும் முந்திரி கன்றுகளை வளர்க்க அல்லது பிற கட்டுமானப் பணிகளுக்காக இவை எப்பொழுது வேண்டுமானாலும் அழிக்கப் படலாம். ஆனால், அதை விட ஒரு பெரிய அச்சுறுத்தல் உள்ளது. இவற்றை மொத்தமாக வெட்டி எடுக்கும் சுரங்கங்கள்.
செம்புரைக்கற்கள் நிறைந்த பூமி கொங்கண். அழகிய வடிவங்கள் நிறைந்த செதுக்குகளே இப்பாறைகள் மீது தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் செம்புரைக்கற்களுக்கு இங்கு மவுசு அதிகம். வீடு கட்டுவதற்கு, வெளிச் சுவர்கள் அமைப்பதற்கு இக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, இவற்றை நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கும் பணி இந்தப் பகுதியின் முக்கியத் தொழில். இதை நிறுத்த முடியாது என்று நன்கு அறிவோம். ஆனால், செதுக்குகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் ஏதேனும் செய்ய முடியுமா என்ற சிந்தனையுடன் தான் களத்தில் இறங்கினோம்.
கண்டிப்பாக. சில கிராமங்களில் நாங்கள் வருகிறோம் என்று தெரிந்தவுடன் கையில் ஆயுதங்களோடு சாலையில் எங்களை மறித்திருக்கின்றனர். இந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி சில முயற்சிகள் எடுத்தோம். சுரங்க ஒப்பந்தக்காரரிடம், நில உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால், பயன் ஏதும் இல்லை. இந்த செதுக்குகள் அப்போது பரவலாக அறியப்படாததால் மாநில தொல்லியல் துறையும் இதில் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த காலகட்டத்தில் இங்கு மாவட்ட ஆட்சியராக இருந்தவர், மற்றும் போலீஸ் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்கள் நாங்கள் எடுத்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு தந்தனர். குறிப்பாக அன்றைய மாவட்ட ஆட்சியர் எடுத்த இரண்டு நடவடிக்கைகளை சொல்ல வேண்டும்.
ஒன்று, செம்புரைக்கல் சுரங்கப் பணிகள் பாறை செதுக்குகளுக்கு ஐம்பது மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட வேண்டும் என்பது. இந்த நடவடிக்கை வந்திருக்காவிட்டால் பல செதுக்குகள் காணாமல் போயிருக்கும். இன்றும் கூட பல இடங்களில் சுரங்கக் குழிகள் செதுக்குகளை எவ்வளவு அருகே தொட்டு நிற்கின்றன என்பதை அவ்விடங்களுக்கு செல்லும் போது நீங்கள் காணலாம். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தொல்லியல் வடிவங்கள் அத்தனையும் மறைந்திருக்கும்
இரண்டாவது. இந்தப் பாறை செதுக்குகள் இருக்கும் நிலங்களை ‘சத்பாரா’ என்றழைக்கப்படும் நில ஆவணத்தில் ஒரு அங்கமாக்கியது. இது நிர்வாக முறையில் ஒரு பெரிய முன்னெடுப்பு. இந்தெந்த நிலங்களில் செதுக்குகள் உள்ளன என்பதை ஆவணப்படுத்தினால் தான் அந்நிலங்களில் எது செய்யலாம் எது செய்யக்கூடாது என்பதை வரையறுக்க முடியும்.
இந்த நடவடிக்கைகள் உருவானதில் எங்கள் பங்கும் உண்டு என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தப் பாறை செதுக்குகளைப் பாதுகாக்க மற்றும் பராமரிப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் முக்கியமான அங்கம் Public Archeology அல்லது Citizen Archeology. அதாவது அந்தப் பாறை செதுக்குகளை சுற்றி வாழும் மக்களை இந்த முயற்சிகளில் ஈடுபட வைப்பது. அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
எங்களின் பல ஆண்டுகள் பயணத்தில் இந்த செதுக்குகளை மக்களிடம் கொண்டு சேர்த்தது தான் எங்களின் தலையாயப் பணியாக இருந்திருக்கிறது. பல வருடங்களாக நாங்கள் இந்த மாவட்டத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களிடம் பேசிக் கொண்டே இருக்கிறோம். பஞ்சாயத்து அலுவலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திருவிழாக்கள் போன்ற பல இடங்களிலும், சந்தர்ப்பங்களிலும் மக்களிடம் இந்தப் பாறை வடிவங்களைப் பேசிக் கொண்டே இருக்கிறோம். நாங்கள் பொதுமக்கள் மனதில் பதியவைப்பது ஒன்றே ஒன்று தான் “இந்த செதுக்குகள் நம்முடையது. இந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீகர்கள் உண்டாக்கியது. இதைப் பேண வேண்டியது நமது கடமை.” என்னைப் பொறுத்தவரை இந்த எண்ணம் தான் வேர். இது நன்கு மனதில் வேரூன்றி விட்டால், மற்றவையெல்லாம் – பெயர் பலகைகள், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் போன்றவை – தானாக நடக்கும்.
எங்கள் முயற்சிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கின்றன இங்குள்ள உள்ளூர் பத்திரிகைகள். பல ஆண்டுகளாக பாறை செதுக்குகளைப் பற்றி செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதைப் படித்து விட்டு இந்த மாவட்டத்தை சேர்ந்த பலர் எங்களை தொடர்பு கொண்டு அவர்கள் கண்ட பாறை செதுக்குகளை பற்றி செய்தி சொல்கின்றனர். எங்களின் முயற்சிகளுக்கு இவை பேருதவியாக இருக்கின்றன.
உங்களின் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக Konkan Geoglyphs and Heritage Research Centre என்று தோன்றுகிறது? சிறு தன்னார்வத் தொண்டு குழு ஆய்வுகள் நடத்தும் மையமாக எவ்வாறு மாறியது?
என் வாழ்க்கையில் பல விஷயங்கள் எதேச்சையாக நடந்தவை. அதில் இதுவும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்த ஒரு உயர் அதிகாரி, நீங்கள் பார்க்க வந்ததைப் போல, இந்தப் பாறை செதுக்குகளை பார்க்க வந்தார். அவரை இந்த சின்னங்கள் இருக்கும் பல இடங்களுக்கு கூட்டிச் சென்றோம். அவற்றை பார்த்து மிகவும் வியந்து போனார் அவர். இந்த சின்னங்களை கண்டெடுப்பது, பராமரிப்பது ஆகியவற்றிற்கு உங்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்று கேட்டார். நாங்கள் சிரித்து கொண்டே எங்களின் சொந்தக் காசை வைத்துக் கொண்டு தான் செய்கிறோம் என்றேன். இதை கேட்டு அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். நீங்கள் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையில் இருந்து நிதி உதவி கேட்கலாமே என்றார். அது வரை அதைப் பற்றி எங்களுக்கும் ஒன்றும் தெரியாது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நிதி கிடைத்தது. அதில் தொடங்கப்பட்டது தான் இந்த ஆராய்ச்சி மையம்.
இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறையின் (Department of Science and Technology) நிதி உதவியுடன் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் முக்கிய பணிகள்; இந்தப் பாறை செதுக்குகளை எண்ம வடிவில் ஆவணப்படுத்துதல் (Digital documentation), அப்படி சேகரித்த தரவுத் தளத்தை பல்துறை வல்லுநர்கள் அணுக, உபயோகிக்க வழி வகுத்தல், பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவுசார் இயக்கங்களோடு கூட்டமைத்தல்.
பாறையில் செதுக்கப்பட்ட வடிவங்களை எண்மமாக்கி கணினியில் சேகரித்து வைப்பது ஒரு விதத்தில் அவற்றை நிரந்தரமாக பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு அங்கம். அதோடு இந்தப் பகுதியில் இருக்கும் பல பாறை செதுக்குகளின் வீச்சும், விஸ்தாரமும், நுணுக்கங்களும் தரையில் நின்று கொண்டு அனுமானிப்பது கடினமான காரியம். அவற்றை ட்ரோன் போன்ற கருவிகள் கொண்டு புகைப்படம் எடுக்கிறோம். பின்பு புகைப்பட பிம்பங்களை சுத்தம் செய்வது, புகைப்படத்தில் சிக்கி இருக்கும் பிம்பங்களின் அளவை அளப்பது, பின்பு ஒரு பகுதியில் இருக்கும் பல பிம்பங்களின் திசையமைவு, அவை எங்கே இருக்கின்றன போன்றவற்றை ஆவணப்படுத்துகிறோம். சுருங்கச் சொன்னால் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் ஒரு தரவுத்தளத்தை உருவாகும் முயற்சி இது. ரத்னகிரி மாவட்டம் மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் ஏறக்குறைய இருநூறு இடங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட செதுக்குவடிவங்களை அடையாளம் கண்டு ஆவணப்படுத்தியிருக்கிறோம்.
நீங்கள் இதை சொல்லும் போது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. சமீபத்த்தில் பெரு நாட்டில் இருக்கும் நாஸ்கா கோடுகளை (Nazca lines) மீளாராய்ச்சி செய்வதற்கும் நிலப்பரப்பில் புது வடிவங்களை கண்டுபிடிப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் அதன் விளைவாக மேலும் பல வடிவங்களை நாஸ்கா பகுதியில் கண்டெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அது இங்கு சாத்தியமா?
ஆமாம். நாங்களும் அந்தச் செய்தியைப் படித்தோம். ஆனால், அதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். நாஸ்கா கோடுகளை ஆவணப்படுத்தும் முயற்சிகள் ஏறக்குறைய நாற்பது, ஐம்பது ஆண்டுகள் நடந்துள்ளன. அப்படி சேகரித்த தரவுகள் ஏராளம். அந்தத் தரவுத்தளத்தின் வாயிலாகத் தான் செயற்கை நுண்ணறிவுக்கு ‘பாடம் புகட்டப்படுகிறது’. செயற்கை நுண்ணறிவு பல வடிவங்களை பார்த்து கற்று கொள்கிறது. அதை வைத்துக்கொண்டு தான் மறைந்திருக்கும் வடிவங்களை சாட்டிலைட் பிம்பங்களில் கண்டெடுக்கிறது. இதற்கு அடித்தளம் தரவு. அதை சேகரிப்பதற்கு தான் இந்த மையத்தின் குறிக்கோள். அதை அடைவதில் பெரும் பங்கு ஆற்றுகிறவர்கள் இந்த மையத்தில் இணைந்திருக்கும் நண்பர்கள். இவர்கள் அனைவருமே தொல்லியல் துறையில் பட்டம் பெற்றவர்கள். மிகவும் உற்சாகமாக ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பல்கலைக்கழங்களோடு அல்லது பிற ஆராய்ச்சி அமைப்புகளோடு நீங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டுமுயற்சிகளை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?
இந்த ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியதில் உண்டான முக்கிய பயன் அது. ஐஐடி மெட்ராஸ், ஐஐடி ஹைதராபாத், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றவற்றோடு இணைந்து கடந்த இரு ஆண்டுகளில் சில கருத்தரங்குகளை ஒருங்கிணைத்துள்ளோம்.
இந்த வடிவங்கள் இங்கு வாழ்ந்த ஆதி மனிதனின் சிந்தனையின் வடிவங்கள். அதை நாம் புரிந்து கொள்வதற்கு அவன் வாழ்ந்த நிலப்பரப்பு, சூழியல், வாழ்முறை போன்ற பலவற்றை புரிந்து கொள்ள வேண்டும். கருத்தரங்குகள் மூலம் தான் பல்வேறு துறையினர் – தொல்லியல், வரலாறு, நிலவியல், முற்கால சூழலியல், மானுடவியல் ஆகியோர் ஒற்றை நோக்கத்துடன் இப்பணிக்கு உள்ளேவர முடியும் . அத்தகைய பல்துறை நோக்கு தான் இந்தப் பாறை செதுக்குகளைப் பற்றிய ஒரு சரியான பார்வையை அளிக்கக் கூடும். இன்னும் சொல்லப்போனால் நாங்கள் பின்னணியில் நிற்கிறோம், ஆய்வுக்கு தகுதியான அவர்களை முன்னிறுத்துகிறோம். அவர்களது கவனத்தை இங்கு ஈர்த்து பாறைச்செதுக்கு ஆய்வுக்கான அடைப்படைத் தளத்தை உறுதியாக அமைப்பதில் அர்ப்பணிப்போடு செயல்படுகிறோம். அதன்மூலம் ஆய்வுக்கான வழிகள் தானே திறக்கத்துவங்குகின்றன.
![]() |
தொல்லியலாளர் வசந்த் ஷிண்டே, பத்மஸ்ரீ விஜய் பட்கர், விஞ்ஞானி பிரமோத் சங்கர் இவர்களோடு தங்கள் புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் சுதீர் ரிஸ்புட், தனஞ்சய் மராத்தே மற்றும் ருத்விஜ் ஆப்தே |
பலர் தங்களுடைய ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், சில சங்கடங்களும் உண்டு. இந்த வடிவங்களைப் பற்றி விவரிக்கும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த ஆராய்ச்சி அமைப்பின் பங்களிப்பை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அதில் எங்களுக்கு சற்று வருத்தம் தான்.
அதைத் தவிர இந்த பாறை செதுக்குகளைப் பற்றிய முடிவுக்கு வர சில ஆராய்ச்சியாளர்கள் சற்று அவசரப்படுகிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஒன்றிரண்டு வடிவங்களை ஆராய்ந்து விட்டு அதன் பேரில் ஒரு கருதுகோளை உருவாக்குவது சரியல்ல. ஏனென்றால் இந்தப் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடிவங்கள் உள்ளன. அவை இப்பொழுது தான் மெல்ல மெல்ல வெளிவர தொடங்கி இருக்கின்றன. இவற்றின் இலக்கணம் இன்னும் புரிபடவில்லை. ஒரு ஒழுங்கோ, அல்லது தொடர்ச்சியான கதையோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இவற்றின் சில வடிவங்களை எடுத்து அதை நாம் அறிந்த தொன்மங்கள் அல்லது வரலாற்றோடு இணைப்பது சரியாக இருக்காது.
சீக்கிரமாக அறிவியல் இதழ்களில் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையை பிரசுரிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இந்த அவசர ஆராய்ச்சிகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதில் இன்னொரு ஆபத்தும் உண்டு. சில வடிவங்களை மட்டும் ஆராய்ந்து விட்டு அவசரகதியில் உருவாகும் முடிவுகள், கருத்துக்கள் ஆகியவை மக்களை குழப்பி விடும். இது நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வந்து கொண்டிருக்கும் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு ஒரு இடைஞ்சலாகக் கூடும்
கடந்த பன்னிரண்டு ஆண்டு பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தீபாவளி பண்டிகைக்காகக் கோட்டைகளின் வடிவ மாதிரி அமைக்க உருவான குழு இன்று ஒரு சிறு ஆராய்ச்சி மையமாக மாறி இருக்கிறது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பாறை செதுக்கு களங்களை கண்டெடுத்திருக்கிறோம். ஏறக்குறைய ஐநூறுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு முகாம்களும், நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்திருக்கிறோம். ரத்னகிரி பகுதியில் உள்ள பாறை செதுக்குகளின் விரிவான தரவுத்தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இப்பொழுது தொல்லியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இந்த அமைப்போடு இணையத் தொடங்கியிருக்கின்றனர்.
இவர்களின் கூட்டு செயற்பாட்டின் விளைவாக 2024-ல், மகாராஷ்டிரா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறை, ரத்னகிரி மாவட்டத்தின் ஆறு இடங்களிலுள்ள பாறைச்செதுக்குகளை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக (Protected Monuments) என 1960-இல் உள்ள Maharashtra Ancient Monuments and Sites and Remains Act படி அறிவித்தது 2023-ல், பல கொங்கண் பாறைக் கல்வெட்டு தளங்கள் யுனெஸ்கோ தற்காலிக உலக பாரம்பரியத் தள பட்டியலில் (Tentative List of UNESCO World Heritage Sites) இடம்பெற்றுள்ளன. இவை எல்லாமே மகிழ்ச்சி அளிக்கும் முன்னேற்றங்களே.
![]() |
கிராம மக்களுடன் சுதீர் |
இந்தப் பாறை செதுக்குகளை பற்றி அவற்றை சுற்றி வாழும் மக்கள் புரிந்து கொள்வது, அதோடு இந்தத் தொல்லியல் சின்னங்களை ஒரு குவிகம் ஆக வைத்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா? ஏனென்றால் Public Archeology என்று அறியப்படும் துறை அந்த யோசனையையும் முன் வைக்கிறதே?
கண்டிப்பாக. செதுக்குகளை உள்ளூர்வாசிகள் அறிந்து கொள்ள வேண்டும் அத்தோடு அவற்றால் பயன் பெறவும் வேண்டும். அதற்கான சில முயற்சிகளை ஆரம்பித்திருக்கிறோம்.
இந்த அலுவலகத்தில் நீங்கள் நுழையும் போது ரத்னகிரியின் செதுக்குகள் வரையப்பட்ட டீ ஷர்ட்கள், படங்கள் ஆகியவற்றை பார்த்திருப்பீர்கள். இவற்றை ஒரு நிறுவனத்தின் உதவியோடு வடிவமைத்திருக்கிறோம். இவை இந்த தொல்லியல் சின்னங்களை காண வருபவர்களுக்கு ஒரு நினைவுப்பொருளாக விற்பதற்கு தான். அடுத்த ஆண்டு முதல் இதே நிறுவனத்தின் உதவியுடன் இந்த பொருட்களை எவ்வாறு வடிவமைப்பது என்பதைப் பற்றிய பயிற்சிகளை இந்த செதுக்குகளை சுற்றி வாழும் கிராம மக்களுக்கு அளிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்.
இதன் வாயிலாக அவர்களே இது போன்ற நினைவுப் பொருட்களை வடிவமைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்க முடியும். அது மட்டும் அல்லாமல் பாறை செதுக்குகள் உள்ள இடங்களில் உள்ளூர் வாசிகள் சிறு சிற்றுண்டி கடைகள் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளவனவா என்பதை பற்றியும் யோசித்து வருகிறோம்.
அதே சமயம் இத்தளங்களை பாதுகாப்பது தொடர்பாகவும் தெளிவான திட்டம் அவசியம். உள்ளூர் சமூகங்கள் தங்கள் நிலத்தில் இவ்வகை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததிலிருந்து பெருமைப்படுகின்றன. இது சுற்றுலா, பார்வையாளர்கள் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புகளைத் தரும் என்பதை உணர்கின்றன. ஆனால், இந்த உற்சாகம் சிறிது தவறான பாதையில் போய்விட்டால் , அந்தப் பகுதிகள் மாற்றமுடியாத சேதத்திற்கு ஆளாகலாம் என்பதால் இந்த விஷயத்தில் நிதானமாகவே செயல்படவேண்டியுள்ளது.
பெரிய பரப்பளவில் பார்க்கும்போது, இதே போன்ற பாறைச்செதுக்குகள் தென் கோவாவில் உள்ள உஸ்காலிமலில் (Usgalimal) ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், கர்நாடக மாநிலத்தின் கொல்லூரில் புதிய தளம் அறியப்பட்டது. எனக்குத் தோன்றுவது, நாம் இன்னும் மேற்பரப்பையே மட்டுமே தொட்டிருக்கிறோம்; வருங்காலத்தில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ வாய்ப்புள்ளது.
இந்த கற்கால மனிதர்களின் கலைவடிவத்தை அழியாமல் காப்பாற்ற எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு மூன்று முகங்கள் உண்டு. ஒன்று கண்டறிந்து ஆவணப்படுத்துவது, அடுத்து செதுக்குகளின் முக்கியத்துவம் குறித்த மக்களின் விழிப்புணர்வு, மூன்றாவது சட்ட ரீதியிலான பாதுகாப்பு முயற்சிகள். நாங்கள் இப்பொழுது செய்து கொண்டிருக்கும் இந்த மூன்று செயல்பாடுகளையும் தொடர்ந்து செய்வதே எங்களின் திட்டம். இத்தனை வருடங்களில் நடந்த முக்கியமான மாற்றமாக நான் கருதுவது இவற்றை மக்கள் தங்கள் பெருமிதமாக நினைக்க ஆரம்பித்துள்ளதை, அவர்களும் பங்குபெறுவதை தான்.
சந்திப்பு: ரகு ராமன்
![]() |
ரகு ராமன் |
எழுத்தாளர் ரகு ராமன் அறிவியல், சூழலியல் மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர். இவரின் கட்டுரைகள், சிறுகதைகள் சொல்வனம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளி வந்துள்ளன. காலநிலை மாற்றங்கள் உலக வரலாற்றை எப்படி மாற்றியிருக்கின்றன என்பதை விவரிக்கும் இயற்கையின் மரணம் (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வேற்று கிரக வாசிகளைப் பற்றிய அறிவியல் தேடலை அறிமுகப்படுத்தும் ஏலியன் வேட்டை (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வெளிவந்துள்ளன. ரகு ராமன் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார், சென்னையில் வசித்து வருகிறார்.
madhuvanam2013@gmail.com