| டேவிட் அட்டன்பரோ |
போர்னியோவின் பசுமையான காடுகளின் மேல் வானில் உயரத்தில் ஒரு வேட்டையாடி பறவை வட்டமிடுகிறது. மரங்களின் நடுவே சுத்த வெண்ணிறத்தில் செங்குத்தாக உயர்ந்து நிற்கும் சுண்ணாம்புப் பாறைகளுக்கு மேலே அது பறக்கிறது. முன்னதாக அன்றைய காலைமுதலே அப்பறவை எவ்வித அசைவுமின்றி மரங்களில் அமர்ந்திருந்தது. அதை பிற விலங்குகள் அதிகம் கவனித்திருக்க வாய்ப்பில்லை. மாலைச்சூரியன் தன் பிரகாசத்தை இழந்து மூழ்கும் வேளையில், தன் எளிய சிறகசைப்பால் காற்றில் மிதந்து இரவு ரோந்தை துவங்கியுள்ளது பறவை. கீழ்நோக்கிய அதன் பார்வையில் சுண்ணாம்புப் பாறையின் முகப்பில் அமைந்துள்ள குகையின் இருண்ட வாய்ப்பகுதி தென்படுகிறது. குகையின் ஆழத்திற்குள் லட்சக்கணக்கான வௌவால்கள் உத்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி, பாறைபரப்பையே மறைக்கும் அளவுக்கு அடர்த்தியாக செறிந்துள்ளன. அவற்றால் பருந்தைப் போல சரிந்து வரும் சூரியனைப் பார்த்து அது மறையப்போவதை தெரிந்துகொள்ள முடியாது. அல்லது வெளியே வெப்பநிலை குறைந்து வருவதையும் அவற்றால் உணர முடியாது, ஏனெனில் குகைக்குள் அபாரமான அளவுக்கு வெப்பநிலை என்பது சீராகவே இருக்கும். இருந்தாலும் வெளியே பகல் முடிவுக்கு வருவதை எவ்வாறோ வெளவால்கள் உணர்ந்து கொள்கின்றன, இருட்டி வரும் காட்டுக்குள் பறந்து பூச்சிகளுக்கான இரவு வேட்டையை அவை சீக்கிரமே தொடங்கப் போகின்றன.
ஒருசில வெளவால்கள் சந்தேகத்துடன் காற்றில் முன்னும் பின்னும் பறக்கின்றன, தங்கள் மீயொலி கீச்சுகளின் எதிரொலி மூலம் இருட்டுக்குள் அவை திசை அறிகின்றன. பின்னர் ஒருசில நிமிடங்களுக்குள் அவை தங்களை நீண்ட வரிசையில் ஒழுங்கமைத்துக் கொண்டு, ஓர் அலையும் கருப்பு நாடாவைப் போல உத்தரத்தை ஒட்டி நகர்கின்றன. குகையின் ஒவ்வொரு அறையிலும் பாறைப்பரப்பின் மேடுபள்ளங்கள், விரிசல்கள் எல்லாவற்றையும் கடந்து இறுதியாக குகையின் வாயிலாக அமைந்த விசாலமான முகப்பு கூடத்தை அவை அடைந்து விட்டன. வெளியே சூரியன் மறைந்து விட்டது, ஆனால் நீங்கள் குகைவாயிலில் அமர்ந்து பார்த்தால் வெளவால்களை பார்க்கும் அளவுக்கு போதுமான வெளிச்சம் உண்டு. அலையும் கருப்பு வளையம் குகையின் ஒரு மூலையிலிருந்து குறுக்காக முன்னகர்ந்து உயர் விளிம்பில் அமைந்த வெளிப்புற மூலையை அடைந்துவிட்டது. காட்டின் தோரணவாயிலாக அமைந்த விளிம்பை அடைந்ததும் வெளவால்கள் ஒவ்வொன்றும் வரிசையை உடைத்துக் கொண்டு காற்றில் சிதறி பரவுகின்றன.
பருந்து இதை பார்க்கின்றது. அதற்கு எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை. குகையில் எண்ணற்ற வௌவால்கள் இருப்பதால் அவை வெளியேறும் படலமே பல நிமிடங்கள் நீடிக்கும். தனக்கான தருணத்தை அது தானே தேர்ந்தெடுக்கலாம். சட்டென, ஒரு முடிவெடுத்தது போல தலையை குனிந்து வேகமாக சிறகடித்தபடி கீழ்நோக்கிப் பாய்கிறது. நேராக வெளவால்களின் மேகக் கூட்டத்துக்குள் நுழைந்து கால்கள் முன்பக்கம் வர, தன் வல்லுகிர்களால் ஒரு வெளவாலைப் பிடித்து விட்டது. சிலசமயம் பறக்கும் போதே தன் இரையை அலகால் குத்திக் கிழி்க்கும். பிற தருணங்களில் சிக்கிக்கொண்ட வௌவாலை தன் இருப்பிடத்திற்கு கொண்டு சென்று உண்ணும். கடைசி வௌவாலும் குகையை விட்டு வெளியேறி இருட்டு கவிவதற்குள் இம்மாதிரி இரண்டு அல்லது மூன்று வெளவால்களை பிடித்துவிடும். பருந்துக்கு பெரிய கண்கள் உண்டு, இருப்பினும் இன்னும் ஒரு அரைமணி நேரம் கடந்துவிட்டால் இதே அதிவேக துல்லிய வேட்டையை அதனால் மீண்டும் நிகழ்த்த முடியாது, இருட்டில் பார்வை குறைந்துவிடும். எப்படியானாலும் அதற்கு தேவையானது கிடைத்தாகிவிட்டது. பறக்கக்கூடிய பாலூட்டிகளிலேயே பறத்தலில் அதிக திறன் வாய்ந்ததும் லாவகமானதும் வெளவால்கள் தான், ஆனால் வெளவால்பருந்துக்கு (Bat Hawk) அவை எவ்வகையிலும் ஈடாகாது. வெளிச்சம் உள்ள வரை பாலூட்டியான வெளவால்களுக்கு அல்ல, பறவைகளுக்கே வான்வெளி சொந்தம்.
![]() |
| Bat hawk |
ஒருவகையில் அது எதிர்பார்க்கக் கூடியது தான். வெளவால்களைக் காட்டிலும் பறவைகள் நீண்ட காலமாக பறந்து வருகின்றன. இதுவரை கண்டறியப்பட்ட வெளவால்களின் புதை படிவங்களில் தொன்மையானதன் வயது ஐம்பது மில்லியன் வருடங்கள். பறவைகளுடைய தொன்மையான புதை படிவங்களின் வயதோ நூறு மில்லியன் வருடங்கள்; டைனோசர் யுகத்தை சேர்ந்தவை. இருந்தாலும் காற்று மண்டலத்தை முதன்முதலில் வசப்படுத்திய விலங்கினம் பறவைகள் அல்ல, அவற்றுக்கு இருநூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னரே பறக்கும் பூச்சிகள் தோன்றிவிட்டன. முதலில் தோன்றிய சில ராட்சத பூச்சிகளுக்கு 30 சென்டிமீட்டர் அகலத்துக்கு இறக்கைகள் இருந்துள்ளன. கால ஓட்டத்தில் இந்த தொடக்ககால வான் உலாவிகளின் வழித்தோன்றல்கள் பறப்பதற்கான பல உத்திகளுடன் பரிணாமம் அடைந்தன. சிலவற்றுக்கு இரண்டு ஜோடி இறக்கைகள் இருந்தன, சிலவற்றுக்கு ஒன்று மட்டும். சுழலியக்கத்தை கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் சமநிலை கொள்ளும் திறனை சில வளர்த்துக் கொண்டன. சில பூச்சிகள் தசைகள் சுருங்கும் வேகத்தை விட வேகமாக இறக்கைகளை அசைக்க கற்றுக்கொண்டன, அவை தங்கள் மார்பின் அதிரும் ஓட்டு பகுதியுடன் இறக்கைகளை இணைத்துக் கொள்வதன் மூலம் அந்த அதிர்வின் விசையிலேயே பறந்தன. ஆனால் இவை எதுவுமே உருவில் பெரிதாக வளரவில்லை. பூச்சிகளின் உடல் கட்டமைப்பின் படி அவற்றால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர இயலாது, எனவே எந்தப் பூச்சியும் இதுவரை அந்த தொடக்ககால ராட்சத பூச்சிகளைத் தாண்டி வளர்ந்ததில்லை. பறவைகள் தோன்றியதும் தங்களைவிட வல்லமைமிக்க உயிரினங்களை காற்று வெளியில் பூச்சிகள் எதிர்கொண்டன. இன்றுவரை அந்த முன்னிலை பறவைகளிடமே நிலைத்திருக்கிறது.
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஒரு புள்ளி ஈப்பிடிப்பானை (spotted flycatcher) கவனித்துப் பாருங்கள். ஒருகாலத்தில் ஐரோப்பா தோட்டங்கள் முழுக்க பரவலாக இருந்த பறவை, கோடை காலத்தில் மட்டும் காண முடியும் அதன் எண்ணிக்கை தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அது விவரிப்பதற்கான தோற்றம் கொண்ட பறவை அல்ல, அதன் இறக்கைகளில் வசீகரமான வண்ணங்களும் கிடையாது. ஆனால் அதன் அசைவுகளின் வழியே உங்கள் கவனத்தை உடனடியாக கவர்ந்துவிடும். வழக்கமாக ஒரு மரத்தின் மொட்டைக் கிளையில் நிமிர்ந்து அமர்ந்திருக்கும், சில நொடிகளுக்கு ஒருமுறை காற்றில் பாய்ந்து பறந்து சுழன்று திரும்பி மீண்டும் அதே கிளையை அடையும். உங்களால் அருகில் செல்ல முடிந்தால் அதன் பறத்தலின் நடுவே மிகமெல்லியதொரு சொடுக்கும் சத்தத்தை கேட்க முடியும். அது பூச்சியை பிடிக்கும் போது அதன் அலகு வேகமாக அடையும் சப்தம். தும்பிகள் வளைந்து நெளிந்து சென்று ஏமாற்றலாம், ஆனால் பறவை அருகில் வந்துவிட்டால் தப்பிப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். ஈக்கள், ஊசிவால் குளவிகள் ஆகியன எந்த சிரமமும் இன்றி காற்றில் பிடிபட்டுவிடும். பறவை மிகவும் திறன்வாய்ந்தது என்பதால் சிலசமயம் ஒரே நேரத்தில் பல பூச்சிகளை சாமர்த்தியமாக அலகில் கவ்வியபடி தன் அரியனைக்குத் திரும்பும். ஒவ்வொரு இரையும் அதற்கு தக்க விதத்தில் கவனிக்கப்படும். பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் பிய்க்கப்படும். சற்று பெரிய குதிரை ஈக்கள் கூட அப்படியே விழுங்கப்படும். ஆனால் தேனீக்களும் குளவிகளும் அதே அளவிலும் பொதுவான தோற்றமும் கொண்டிருந்தாலும், அவை தனியாக அடையாளம் காணப்பட்டு அவற்றின் கொடுக்குகள் உதிரும் வரை மரக்கிளையில் அழுத்தமாக தேய்த்து விஷம் நீங்கிய பின்னரே பறவை அதை விழுங்கும். பூச்சிகள் காற்றுவெளியில் தங்களுக்கான இணை எதிரியை நீண்ட காலம் முன்பே கண்டுகொண்டன.
***********
![]() |
| spotted flycatcher |
பறவைகள் இந்த வான்வெளி ஆதிக்கத்தை முதன்முதலில் அடைந்தது எப்போது? இதற்கான விடை சென்ற நூற்றாண்டில் முனிச் நகரிலிருந்து அதிக தொலைவில் இல்லாத பவாரியாவில் (Bavaria) கண்டறியப்பட்டது. அந்த ஊர்பகுதி முழுக்க கற்சுரங்கங்கள் அடுத்தடுத்து இருக்கும். அங்கிருந்து எடுக்கப்படும் அழகிய இளமஞ்சள் நிற சுண்ணாம்பு கற்கள் ரோமன் காலம் முதலே கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவை மிகவும் சீரானதும், மென்மையானதும், நுண்ணிய துகள்களால் ஆனதுமாகும். எந்த அளவுக்கு என்றால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்லச்சுக்கலைக்கு (lithographic printing) இதை பயன்படுத்தியுள்ளனர். அவை சில இடங்களில் மிக மெல்லிய கற்பலகைகளாக பிரியும். மேலிருந்து பார்க்கையில், ஒன்றன்பின் ஒன்றாக அவற்றை பிரிப்பதைப் பார்த்தால் ஒரு புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவது போலிருக்கும். அதன் பெரும்பாலான பக்கங்கள் காலியாகத்தான் இருக்கும் என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். ஆனால் அவ்வப்போது ஒரு பக்கத்தை புரட்டுகையில் சரியாக அச்சிடப்பட்ட ஒரு விலங்கின் பதிவை உலகுக்கு அறிவிக்கும் - மீசையுடன் கூடிய ஒரு இறால், மாசற்ற முறையில் பாதுகாக்கப்பட்ட செதில்களும் விலா எலும்புகளும் கொண்ட மீன், தன் கடைசி காலடிச்சுவடுகளுடன் அதன் இறுதியில் கிடக்கும் குதிரைவாலி நண்டு. சிலசமயம் இந்த எச்சங்களை சுற்றி மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும், அது இறந்தவுடன் விரைவிலேயே மட்கி கரைந்துவிட்ட மென்மையான உடற்பாகங்களின் இடத்தைக் காட்டுகிறது. ஜெல்லிமீன்களைப் போன்று திடத்தன்மையற்ற உயிரினங்களுக்குக் கூட நுட்பமான உருவமாதிரிகள் கிடைத்துள்ளன.
இந்த புதை படிவங்களை ஆராய்வதிலிருந்து எம்மாதிரியான சூழலில் சுண்ணாம்புக்கல் பாறைகள் உருவாகி வந்திருக்கும் என்பதை அறிவது சிரமமான காரியமல்ல. நெடுங்காலம் முன்பு அப்பகுதி வெப்பமண்டல காயலாக, அதன் தரைப்பகுதி சேறாக இருந்தது. வடக்கே சில கிலோமீட்டர்கள் தள்ளி நிலம் இருக்க, தென் திசையிலோ பவளப்பாறைகள் காயலையும் திறந்தவெளி கடலையும் பிரிப்பதாய் அமைந்திருக்கும். நீரோட்டம் குறைவாய் இருப்பதாலும், சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாகும் விகிதம் அதிகமாய் இருப்பதாலும், நீர் அதிக உப்புத்தன்மை கொண்டு எந்த விலங்கினமும் காயலை தன் நிரந்தர வசிப்பிடமாக கொண்டிருக்க முடியாது. அதேசமயம் வழக்கத்துக்கு மாறாக எப்போதாவது பவளப்பாறைகளைத் தாண்டி வரும் உயர் அலைகள், தங்களுடன் கடலிலிருந்து சில உயிரினங்களையும் தள்ளிக் கொண்டு வரும்.
அதுபோக மைநிலத்திலிருந்து அவ்வப்போது வரும் விலங்குகளும் பறக்கும் உயிரினங்களும் காயலின் இந்த வெப்பமான உப்பு நீரில் விழுந்து இறந்துவிடும். எனவே இங்கு பூச்சிகளின் புதை படிவங்கள் போதுமான அளவு கிடைக்கின்றன - ஈசல்கள், தும்பிகள், வெட்டுக்கிகிளிகள், வண்டுகள், குளவிகள். நம் கற்பனைக்கு எட்டா தொல் காலத்திலேயே பூச்சிகள் காற்றுவெளியில் எந்த அளவுக்கு முன்னேறியும் நுட்பமிக்க வடிவமைப்புடனும் இருந்துள்ளன என்பதை இந்தப் படிவங்கள் காட்டுகின்றன. சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ஊர்வன விலங்குகளின் எலும்புக்கூடுகளும் நமக்கு கிடைக்கின்றன. உதாரணமாக pterosaurs இன் புதைபடிவத்தில் அதன் நீண்ட குச்சி போன்ற விரல்களை சுற்றி அமைந்திருக்கும் சதைப்பற்று மிக்க இறக்கைகளின் மங்கிய உருவக்கோடு நமக்கு கிடைக்கிறது.
இவ்வாறான அழகிய மதிப்புமிக்க புதைபடிவங்கள் நூற்றாண்டுகளாக சேமிக்கப்பட்டு அரிய பரிசுகளாக நமக்கு கிடைத்துள்ளன. ஆனால் 1860 இல் ஜெர்மனியில் சோல்ன்ஹோஃபென் (Solnhofen) எனும் சிறிய கிராமம் அருகே வேலை பார்த்த ஒரு கற்சுரங்க தொழிலாளி யாரும் எதிர்பார்த்திராத அற்புத படிவம் ஒன்றை கண்டெடுத்தார் - ஓர் இறகு, மிகவும் சிறியது. 15 சென்டிமீட்டர் நீளமும் 6 சென்டிமீட்டருக்கும் குறைவான அகலமும் கொண்டது, ஆனால் அதன் நுட்பங்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்டிருந்தது. இரண்டு இடங்களில் இறகின் இழைகள் பிரிந்துள்ளன. இறகுத்தண்டின் அடிப்பகுதியில் இழைகள் சேர்ந்து சிறிய குஞ்சம் போன்று உள்ளது. இறகின் ஒரு பக்கம் இருக்கும் அகலத்தில் பாதி அளவே மறுமுனையில் இருக்கும். இந்த சமச்சீரற்றத் தன்மைக்கு ஒரு முக்கிய பங்குள்ளது. இன்றைய பறவைகளில் உள்ள இறகுகளும் இந்த வடிவிலேயே உள்ளன, குறுகிய வலிமைமிக்க முனை முன்பக்கம் அமைந்திருக்கும் வகையில். இவ்வாறான வடிவமே பண்டைய சிறகுகளுக்கு காற்றியக்கவியல் (aerodynamic) சார்ந்த பயன்பாடு இருந்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. இன்றைக்கு சாதாரணமாக ஊர்புற நடையில் ஒருவர் கண்டெடுக்கக்கூடிய இறகிலிருந்து அதிக வேறுபாடுகள் எதுவும் இந்த பண்டைய சிறகில் இல்லை. இருப்பினும் அது ஐம்பது மில்லியன் (ஐந்து கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் காயலின் மேலே பறந்த ஓர் உயிரினத்தின் இறக்கையிலிருந்து உதிர்ந்திருக்க வேண்டும்.
அது என்ன மாதிரியான உயிரினம்? பறவைகளைத் தவிர வேறெந்த உயிரினமும் இறகுகள் வளர்ப்பதில்லை. உண்மையில் பறவைகளின் அடிப்படை பண்புக்கான வரையறையே இறகுதான், எனவே சோல்ன்ஹோஃபென் இறகும் ஒரு பறவையினுடையதே. ஆனால் என்ன மாதிரியான பறவை? பதிலுக்காக அறிவியல் அதிக காலம் காத்திருக்க தேவையிருக்கவில்லை. அடுத்த ஆண்டே 1861இல், இறகு கண்டைடையப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி கற்சுரங்கம் ஒன்றில் கிட்டத்தட்ட முழுமையான உருவ அமைப்புடன் ஒரு புதைபடிவம் கிடைத்தது. ஒரு கோழியின் அளவில், சுற்றிலும் இறகுகளுக்கான துல்லிய விவரத்துடன் இருந்தது.
ஆனால் இதை மிகவும் வினோதமான பறவை என்றுதான் சொல்லவேண்டும். எலும்புப்பகுதியுடன் நீண்ட வால் கொண்டிருந்தது, முன்னங்கால் ஒவ்வொன்றிலும் மூன்று தனித்தனி விரல்களும் அதன் இறுதியில் வளைந்த கூர்நகங்களும் இருந்தன. அதன் மண்டையோட்டை பின்னர் ஆய்வு செய்த போது அதில் அலகுக்கு பதில் பற்கள் பதிக்கப்பட்ட எலும்பாலான தாடை இருப்பது தெரியவந்தது. அது ஊர்வன இனத்திற்கும் பறவை இனத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பது தெளிவு. அதை கண்டுபிடித்த அறிவியலாளர் அதற்கு ஆர்கியோப்டெரிக்ஸ் (Archaeopteryx) என பெயரிட்டார், ‘தொன்மையான சிறகு’ என்ற பொருள்வரும் இரு கிரேக்க சொற்கள் இணைந்து உருவான பெயர் அது. அதன் பிறகும் மேலும் பல மாதிரிகள் (Specimens) கிடைத்துள்ளதால் இந்த வியத்தகு உயிரினத்தின் உடற்கூறியல் குறித்து இன்று நமக்கு நிறையவே தெரியும். இருந்தாலும் மிகச்சரியாக அது எவ்வாறு வாழ்ந்தது என்பது குறித்தான விவாதம் இன்றளவும் தொடர்கிறது.
![]() |
| Archaeopteryx fossil |
அதன் இறக்கைப் பகுதியில் இருந்த நகங்கள் நமக்கு சில முக்கியமான தடயங்களை அளிக்கின்றன. இன்றைக்கும் சில பறவைகள் இதுபோன்ற நகங்களை கொண்டுள்ளன. சிலவகை அன்னப்பறவைகள், வாத்துகள், தாமரைக்கோழிகள் போன்ற பல பறவையினங்கள் இறகுத்தோகைக்குள் வெளிப்பார்வைக்கு தெரியாத வண்ணம் அவற்றைக் கொண்டுள்ளன. தென் அமெரிக்காவில் வாழும் அலறல் ஓசை எழுப்பக்கூடிய அன்னம் போன்றதொரு பறவை, ஒவ்வொரு இறக்கையிலும் ஒன்றுவீதம் இரண்டு பிரதான நகங்களை கொண்டுள்ளது. அவை வெளிப்பார்வைக்கு நன்றாகவே தெரியும். ஆண் பறவைகளுக்கு இடையே எல்லைப் பூசல்களுக்கான சண்டையின் போது ஆயுதங்களாக அவை வெளிப்படுகின்றன. ஒருவேளை நமது Archaeopteryx, அதன் இறக்கை நகங்களை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை கண்டறிய, சம்மந்தமே இல்லாமல் எங்கோ தென்னமெரிக்காவில் வாழும் வெடிற்போத்து (hoatzin) எனும் இப்பறவை நமக்கு உதவலாம்.
வெடிற்போத்து சதுப்பு நிலங்களில் வாழ்வது, இலைதழைகளை உண்டு வாழும். நயமற்ற அசைவுகளுடன் மெதுவாக பறக்கும். சிறு கிளைகள், சுள்ளிகளை வைத்து கூடு கட்டி அதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். பொரிக்கும் போதே ஒவ்வொரு இறக்கையிலும் இரண்டு நன்கு வளர்ந்த நகங்களுடன் குஞ்சுகள் வெளிவரும். இளங்குஞ்சுகள் வளர்ந்து சற்றே துணிச்சல் பெற்றதும், இந்த நகங்களை பயன்படுத்தி கிளைகளில் தொற்றிக் கொண்டு அலையாத்தி காடுகளின் மரங்கள் மீதேறும். எதிரிகளால் ஒருவேளை ஆபத்து ஏற்படும் போலத் தோன்றினால் உடனடியாக கீழே இருக்கும் நீரில் பாய்ந்துவிடும். சிறிது நேரம் கழித்து நகங்களால் பற்றியபடி மேலேறி வந்து கூட்டை அடையும். இவை முழுவளர்ச்சி அடைந்ததும் நகங்களை இழந்துவிடுகின்றன. இந்நகங்களை வாழ்நாள் முழுக்க கொண்டிருந்த ஆர்கியோப்டெரிக்ஸ் பறவையும் வெடிற்போத்து குஞ்சுகளைப் போன்றே அவற்றை பயன்படுத்தியிருக்க வேண்டும். சோல்ன்ஹோஃபென் சுண்ணாம்புக் கற்களில் புதைபடிவ மரக்கட்டைகளோ, பெரிய கிளைகளோ கிடைக்காவிட்டாலும் ஊசியிலை மரங்கள், பெண்கூந்தல் பெரணி போன்றவற்றின் இலைகள் அவ்வபோது கிடைத்துள்ளன. எனவே காடு அருகில்தான் இருந்திருக்க வேண்டும். ஆர்கியோப்டெரிக்ஸ் புதைபடிவம் அரிதாகவே கிடைப்பதிலிருந்து அவ்வுயிரினம் அடிக்கடி காயலின் மேலே பறந்திருக்கவில்லை என்பது தெரிகிறது. அவை மையநிலத்திலேயே அதிகம் வாழ்ந்திருக்கலாம், காடுகளே அதன் உண்மையான வாழிடமாக இருந்திருக்க வேண்டும்.
ஆர்கியோப்டெரிக்ஸ் மரங்களில் வாழ்ந்ததற்கான வேறு சில சான்றுகளும் உள்ளன. இன்றைய பறவைகளில் இருப்பது போன்றே ஒவ்வொரு காலிலும் ஒரு பெரிய விரல் பின்னோக்கி திரும்பியுள்ளது. இதன் மூலம் மரக்கிளைகளை பற்றிக்கொண்டு அதனால் நிற்க முடியும். அதன் நீண்ட வால் பகுதியும் மரங்களின் உயரத்தில் வாழ்ந்த ஒரு பறவையினுடையது போல் தோற்றமளிக்கிறது. அதன் பல மாதிரிகள் நல்ல நிலையில் சேமிக்கப்பட்டுள்ளன. நிலத்தில் அதிகம் வாழக்கூடிய உயிரினமாக இருந்தால் அதன் முனைப்பகுதிகளில் சேதம் காணப்படும். அவ்வாறான எந்த சிதைவும் இவற்றில் காணப்படவில்லை. மேலும் நீரில் வாழ்ந்திருந்தால் அதன் மிக நீண்ட வால் பகுதி, அதற்கு பெரும் இடையூறாக இருந்திருக்கும், எனவே அந்த சாத்தியத்தையும் நிராகரித்து விடலாம்.
ஆனால் அது இறக்கைகளை பயன்படுத்தியது உயர்ந்த கிளையிலிருந்து தாழ்வான கிளைக்கு சரிந்து இறங்க மட்டும்தானா? அல்லது அதனால் சிறகடித்து மேலெழும்பவும் முடியுமா? அதனால் சிறகடிக்க முடியுமெனில் அதன் இறக்கைகளை மார்பு எலும்புகளுடன் இணைக்கும் தசைகள் இருந்திருக்க வேண்டும். துவக்க கால புதைபடிவ மாதிரிகளின் எலும்புகளில் இம்மாதிரியான இணைப்பு இருந்தமைக்கான எந்த சான்றுகளும் இல்லை, ஆனால் இதன் பொருள் அப்படியான தசைகள் இருந்திருக்கவே இல்லை என்பதல்ல. அவை கார்டிலேஜ் (cartilage) எனப்படும் மென்மையான திசுக்களால் இணைக்கப்பட்டிருக்கலாம் - அவை சிதைந்து, காலப்போக்கில் எச்சமின்றி அழிந்திருக்கலாம். எனவே, அக்கேள்வி நீண்டகாலம் பதிலளிக்கப்டாமலே நீடித்தது.
ஒருவழியாக 1992-ல் புதிய ஆதாரம் வெளிவந்தது. முதல் மாதிரி (Specimen) கிடைத்த இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்த ஒரு கற்சுரங்கத்தில் புதிய ஏழாவது மாதிரி கிடைத்தது. இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டதைக் காட்டிலும் சிறியது. மேலும் குறிப்பிடத்தக்க வேறுசில வேறுபாடுகளும் இருப்பதால், வேறு இனமாகவே கருதப்படுகிறது. இதற்கு Archaeopteryx bavarica என்று பெயர். இதன் சிறப்பம்சம் என்னவெனில், பிற மாதிரிகளில் காணப்படாத அளவுக்கு பெரிய மார்பு எலும்பு உள்ளது. இது சிறகுத் தசைகளுக்கு வலுவான தாங்கலாகச் செயல்படும் அளவிற்கு போதுமானது. எனவே, இந்தப் பழமையான பறக்கும் உயிரினம் வெறுமனே காற்றில் நழுவிச் செல்லாமல், அவை உண்மையிலேயே தங்கள் சிறகுகளை அசைத்து காடுகளுக்குள் பறந்து திரிந்திருக்கவே வாய்ப்பு அதிகம். சில சமயம் அவற்றில் சில காயலின் மேல் பறந்து, அதில் விழுந்து மடிந்திருக்கலாம்.
சிறப்பு எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில், ஆர்கியோப்டெரிக்ஸ் சிறகின் எலும்பு அமைப்பு இன்றைய பறவைகளின் அமைப்புடன் ஒத்திருக்கிறது என்பதைக் காட்டியுள்ளன. அதிலும் குறிப்பாக, அதன் அமைப்பு காடை (quail) மற்றும் கோழி (pheasant) போன்ற குறுகிய தூரத்துக்குள் திடீரென தெறித்துப் பறக்கக்கூடிய பறவைகளின் சிறகமைப்புடன் மிகவும் ஒத்திருக்கிறது.
வானில் பறந்த முதல் முதுகெலும்புடைய உயிரினமாக ஆர்கியோப்டெரிக்ஸ் இருந்திருக்க முடியாது. அதன் இறகுகளின் மிகச் சிக்கலான அமைப்பை பார்க்கும் போது, அவை பல ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக நீண்ட பரிணாம வளர்ச்சியின் (evolutionary) விளைவாக மட்டுமே உருவாகியிருக்க முடியும். ஆனால் முதலில் அந்த பரிணாமம் ஏன் தொடங்கியது? ஆர்கியோப்டெரிக்ஸின் முன்னோர்களுக்கு மிக எளிய வகை இறகுகளேனும் ஏன் தேவைப்பட்டது? அக்கேள்விக்கான விடை தெளிவானது. அது முழுக்க முழுக்க அம்முன்னோர்கள் யார் என்பதைச் சார்ந்தது.
அது டைனோசர்களாக இருக்கலாம் என்பது சாத்தியமான ஒரு வாய்ப்பு. உண்மையில், ஆர்கியோப்டெரிக்ஸ் மற்றும் ஒரு சிறிய டைனோசருக்கும் இடையேயான ஒற்றுமை என்பது மிகவும் அதிகம். ஒரு மாதிரி (specimen) பல தசாப்தங்களாக அருங்காட்சியகத்தில் டைனோசர் என வகைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பின்னர், அதை மிக நுணுக்கமாக ஆய்வு செய்தபோது, அதன் முன்னங்கால்களின் அருகில் மங்கலான இறகுகளின் தடங்கள் இருப்பது தெரியவந்ததால், உண்மையில் அது ஆர்கியோப்டெரிக்ஸ் தான் என்பது உறுதியானது. அத்தகைய சிறிய டைனோசர்கள் அநேகமாக தனது இரையை துரத்திச் சென்று வேட்டையாடும் துடிப்பான உயிரினமாக இருந்திருக்க வேண்டும். அந்த அளவு துடிப்பாக இருக்க வேண்டுமெனில் அவ்விலங்கின் உடல் சூடாக இருக்க வேண்டும். அப்போதுதான் உடலின் வேதியியல் தீவிரமாக வினைபுரிந்து அதிக ஆற்றலை உண்டாக்கும். இன்றைய ஊர்வன விலங்குகளில் பல்லிகள், பாம்புகள் போன்றவை வெயிலில் காய்வதன் மூலம் தங்கள் உடலை சூடாக்கிக் கொள்கின்றன. ஆனால் வெலோசிராப்டர் (Velociraptor) போன்ற சிறிய ரக டைனோசர்கள், தங்கள் உடலுக்குள்ளாகவே வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டிருந்ததாக சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். பாலூட்டிகள் அவ்வாறுதான் வெப்பத்தை உள்ளூர உருவாக்கிக் கொள்கின்றன. இத்தகைய உட்புற வெப்ப உற்பத்தி, ஆற்றல் ரீதியில் மிகவும் செலவான ஒன்று. உணவில் பெறப்படும் கலோரியின் பெரும்பகுதியை அது செலவழித்துவிடும். ஆனால் இதனால் சில முக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, மற்ற உயிரினங்கள் குளிரினால் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், இவ்வுயிரினம் விழித்திருந்து உணவு தேட முடியும். அப்படிப்பட்ட சூழலில், உடல் வெப்பத்தை தக்கவைக்கும் கவசம் போன்ற அமைப்பு என்பது மிக மதிப்புவாய்ந்ததாக இருந்திருக்கும். அந்தக் காலத்தின் ஊர்வனங்கள் அனைத்தும் இன்றைய ஆஸ்திரேலியாவின் shingleback lizard போன்றே தோலின்மேல் உறைகளால் (scales) மூடப்பட்டிருந்தன. அவையே நீண்டு நார்த்தன்மையுடன் மாறினால், அவை இத்தகைய வெப்பத்தைத் தக்கவைக்கும் சிறந்த பாதுகாப்பாக மாறிவிடும்.
தற்போது இப்படிப்பட்ட ஒரு உயிரினத்தை கற்பனை செய்து பாருங்கள். அது தன்னுடைய அதிக ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு பெரிய பூச்சியைப் பிடிக்க விரைகிறது. அது ஆஸ்திரேலிய frilled lizard போல தன் பின்னங்கால்களில் எழுந்து ஓடலாம். இச்சமயம் அதன் முன்னங்கால்கள் விடுபட்டிருக்கும். அவை நீளமான நார்மயமான உறைகளால் (proto-feathers) மூடப்பட்டிருந்தால், அவற்றை விரித்து நீட்டும்போது அவ்வுயிரினம் சற்றே காற்றில் பறந்து, தன் வாயால் இரையைப் பிடித்துவிட முடியும். அல்லது, ஒரு பெரிய உயிரினத்திடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தால், அத்தகைய அசைவு அதனை சீக்கிரமே ஆபத்தின் எல்லைக்கு அப்பால் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சேர்த்துவிடும். இவ்வாறு, அந்த வெப்ப இரத்தம் கொண்ட ஊர்வன உயிரினம் பறக்கும் திறனுக்கான தன் முதல் படியை எடுத்திருக்கலாம். ஆனால், இந்தக் கோட்பாட்டை நம்பாதவர்கள் ஒரு எதிர்வாதத்தை முன்வைக்கிறார்கள்: இப்படிப்பட்ட ஓர் உயிரினம், வேகத்தை அதிகரிக்கும் நோக்குடன் பின்னங்கால்களில் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென முன்னங்கால்களை விரிப்பது சரியல்ல. அப்படிச் செய்யும்போது காற்றின் எதிர்விசை அதிகரித்து, அதன் வேகம் குறைந்து விடும்.
இத்தகைய எதிர்வாதத்தைப் புறக்கணித்தாலும், இன்னும் ஒரு கேள்வி உள்ளது. ஆர்கியோப்டெரிக்ஸின் முன்னோர்களாக இருந்த டைனோசர்கள் உண்மையில் வெப்ப இரத்தம் (warm-blooded) கொண்டவைதானா? சிலர் அப்படித்தான் என நம்புகின்றனர். அதற்கான ஆதாரத்தை அவர்கள் பல்வேறு மூலங்களிலிருந்து எடுக்கின்றனர்: முதலாவது அவற்றின் எண்ணிக்கைக்கும், அவை வேட்டையாடிய தாவர உண்ணி ஊர்வன விலங்குகளின் எண்ணிக்கைக்கும் இடையிலான விகிதம். அவற்றின் எலும்புகளின் நுண்ணிய அமைப்பு (microscopic structure), மற்றும் அவற்றின் மூளையின் அளவு ஆகியவை பிற ஆதாரங்கள். ஆனால் இத்தகைய எந்த ஆதாரமும் அனைவராலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. வேறு சில ஆய்வுகள் தெரிவிப்பது என்னவெனில் இன்றைய ஊர்வனவைகளைப் போலவே, அந்த உயிரினங்களும் தங்கள் உடல் வெப்பத்தை நிலையான அளவில் வைத்திருக்க முடியாதவையாக இருந்தன. அப்படியான உயிரினங்களை பொறுத்தவரை ஆண்டின் வெவ்வேறு காலங்களில் அதன் வளர்ச்சி விகிதம் வேறு வேறாக இருக்கும். இதன் விளைவாக, அவற்றின் எலும்புகளில் மரத்தின் தண்டு வளையங்களைப் போல ஒரே மையத்திலிருந்து பரவி நிற்கும் வட்ட வடிவ வளையங்கள் (concentric rings) உருவாகும். அத்தகைய வளையங்கள், ஆர்கியோப்டெரிக்ஸிற்குப் பிறகு வானில் தோன்றிய பண்டைய பறவைகளின் புதைபடிவங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது, ஆர்கியோப்டெரிக்ஸும் தன் உடல் வெப்பத்தைத் தானாக உருவாக்க முடியாத உயிரினம் என்பதைக் காட்டுகிறது. ஆர்கியோப்டெரிக்ஸ் புதைபடிவங்கள் மிகவும் அரிதானதும் விலைமதிப்பற்றதும் என்பதால் யாரும் இதுவரை இதை உறுதிப்படுத்தும் பொருட்டு அதன் கால் எலும்புகளை வெட்டி ஆய்வு செய்யவில்லை. ஆனால் இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தரையில் ஓடக்கூடிய உயிரினங்களில் இருந்தே இறகுகளுடன் கூடிய பறக்கும் திறன் தோன்றியது என்ற கோட்பாடு பலவீனமாகிறது. ஒரு குளிர் இரத்தம் கொண்ட உயிரினம் (cold-blooded animal) தன்னை வெயிலில் காய வைத்து வெப்பமடைய வேண்டிய ஒன்று. எனவே, வெப்பத்தைத் தடுக்கவோ வெயிலில் காயவிடாமலோ செய்யும் நார்மயமான உறையால் மூடிய தோல் அமைப்பு அத்தகைய உயிரினங்களில் உருவாக வாய்ப்பில்லை என்பது தெளிவு.
மற்றொரு மாற்றுக் கோட்பாடும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அந்த முன்னோடி ஊர்வன உயிரினம், தன் உடல் வெப்பத்தை உள்ளூர உருவாக்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும், நான்கு கால்களாலும் கஷ்டப்பட்டு மரங்களில் தொற்றி ஏறத் தொடங்கியிருக்கலாம். அது அவ்வாறு செய்ததற்கான பல காரணங்கள் இருந்திருக்கலாம்: தரையில் இருந்த பெரிய வேட்டையாடும் ஊர்வனங்களிடமிருந்து தப்பிக்க, தன் முட்டைகளுக்குப் பாதுகாப்பான இடம் தேட, அல்லது மரக்கிளைகளில் வாழும் பூச்சிகளைப் பிடிக்க. அது மரத்தின் மேலே சென்றதும், அங்கிருந்தும் நகர்ந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். ஒரு மரத்திலிருந்து கீழிறங்கி, தரையில் ஓடி, மீண்டும் வேறொரு மரத்தில் ஏறுவதைக் காட்டிலும் அருகில் இருக்கும் மரத்தின் தாழ்வான கிளைக்கு தாவுவது மிக விரைவானதும், குறைந்த ஆற்றலே செலவிடும் முறையாகவும் இருக்கும்.
இன்றும் மரங்களில் தாவித் திரியும் பல உயிரினங்கள் உள்ளன; அவை தங்கள் தாவும் தூரத்தை அதிகரிக்கச் செய்யும் சிறப்பு உடல் அமைப்புகளை பரிணாம வளர்ச்சியின் மூலம் பெற்றுள்ளன. போர்னியோ காடுகளில் மட்டுமே, இதற்கான குறைந்தது நான்கு வெவ்வேறு முறைகள் உருவாகியுள்ளன.
![]() |
| giant flying squirrel |
அதில் ஒன்று பெரிய பறக்கும் அணில் (giant flying squirrel). இதன் உடல் ஒரு தளர்வான, மென்மயிர் தோலால் மூடப்பட்டுள்ளது; அது மிகவும் விரிவானது என்பதால், இந்த அணில் மரத்தில் தாவி ஓடும் போது, தளர்வான மேலங்கியை அணிந்திருப்பது போல் தோற்றமளிக்கும். அருகிலுள்ள மற்றொரு மரத்துக்கு அது பறந்து செல்ல முடிவெடுத்து விட்டால் அந்த “மேலங்கி” எவ்வளவு பெரியது என்பதை நாம் தெளிவாகப் பார்த்துவிடலாம். அது ஒரு கிளையிலிருந்து குதித்து வானில் பாய்கையில், தன் நான்கு கால்களையும் முழுமையாக விரிக்கும். அந்த மேலங்கி (தோல்) அதன் மணிக்கட்டுகளிலிருந்து கணுக்கால்கள் வரை விரிந்திருப்பத்தை வெளிப்படுத்தி, ஒரு பெரிய செவ்வக வடிவிலான பாராசூட் போல மாறிவிடும். இது மிகச் சிறப்பாக செயல்படுவதால், அந்த அணில் எளிதாக நூறு மீட்டர் தூரம் வரைகூட காற்றில் நழுவிச் செல்லும். அது மட்டுமல்ல, அதனால் தான் பறக்கும் திசையை இயக்கவும் முடியும். அதன் பின்பக்கம் நீளமாக விரிந்திருக்கும் மயிர் நிறைந்த வாலை அசைப்பதன் மூலமும், தன் கால்களின் நிலையை மாற்றுவதால் அந்தப் பறக்கும் தோலின் இறுக்கத்தை மாற்றியும் அது தான் பறக்கும் திசையை தீர்மானிக்கிறது. இதனால் அது தான் விரும்பும் இடத்திற்கே, உதாரணமாக தன் கூடு இருக்கும் துளை நுழைவாயிலிலேயே மிகச்சரியாக இறங்க முடியும்.
மரங்களில் வாழும் Draco என்ற இனத்தைச் சேர்ந்த சிறிய பல்லிகள், முற்றிலும் வேறொரு முறையில் காற்றில் நழுவிச் செல்கின்றன (glide). இவற்றின் விலா எலும்புகள் மிகவும் நீளமானவை. இவ்வகைப் பல்லி ஒரு கிளையில் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அதன் விலா எலும்புகள் உடலுடன் சேர்ந்து, முதுகு தண்டுவடத்திற்கு இணையாகப் படர்ந்திருக்கும். ஆனால் அதுவே தாவும் போது, அதன் வயிற்றுத் தசைகள் சுருங்கி, அந்த எலும்புகளை முன்னோக்கி நகர்த்துகின்றன; இதனால் அவை விரிவடைந்து, உடலின் இருபக்கமும் ஒளிவீசும் நிறத்தாலான தோல் மடல்களை வெளிப்படுத்துகின்றன. காற்றில் மிகுந்த திறனுடன் இயங்கக் கூடிய இந்தச் சிறிய பல்லிகள் அடிக்கடி கிளையிலிருந்து கிளைக்கு பறந்தபடி இருக்கும். அதன் எல்லைக்குள் கவனக்குறைவாக அமர்ந்திருக்கும் பூச்சிகளைப் பிடிக்கவும், தங்கள் பிரதேசத்தில் போட்டியாக நுழையும் மற்றொரு பல்லியுடன் மோதவும் செய்கின்றன.
![]() |
| Draco |
அதேபோல, ஒரு தவளை இனமும் உண்டு. அதன் விரல்கள் மிகவும் நீளமாகவும் விறல்களுக்கிடையே சவ்வு போன்ற இணைப்பும் இருக்கும். அது காற்றில் பாயும் போது, அதன் ஒவ்வொரு காலும் தனித்தனி பாராசூட்களாக செயல்படுகிறது.
மேலும் ஆச்சர்யமாக ஒரு பறக்கும் பாம்பு கூட உண்டு. அது வானில் பாய்கையில், தன் வயிற்றைப் முதுகெலும்பை நோக்கி இழுத்துக் கொள்ளும்; இதனால் அதன் கீழ்பக்கம் உட்குழிவு (concave) கொண்டதாக மாறுகிறது. பின்னர் அது தன் நீண்ட உடலை ஜிக்-ஜாக் வடிவத்தில் வளைப்பதன் மூலம், கிட்டத்தட்ட அதன் உடல் சதுர வடிவை அடைகிறது. வியத்தகு வகையில் இந்த வடிவம் காற்றை பிடிப்பதில் நன்றாக செயல்பட்டு அதனை காற்றில் கொண்டு செல்கிறது.
போர்னியோவின் இந்த எல்லா காட்டு உயிரினங்களும், மேலும் உலகின் பல காடுகளில் வாழும் பிற உயிரினங்களும், ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன: மரங்களில் வாழும் உயிரினங்களுக்கு காற்றில் நழுவிச் செல்லும் (gliding) திறன் மிகுந்த பயனுள்ள ஒன்றாகும், மேலும் அவை தங்கள் உடல் அமைப்பை அதற்கேற்ப மாற்றிக் கொண்டு பரிணாமம் அடைகின்றன. எனவே, மிகவும் சாத்தியமான விளக்கம் என்னவென்றால் ஆர்கியோப்டெரிக்ஸின் முன்னோர்களும் இதே திறனை வளர்த்துக் கொண்டன, அவை தங்கள் தோல் உறைகளை (scales) இறகுகளாக (feathers) மாற்றுவதன் மூலம் இதை சாதித்தன.
தோல் உறைகள், இறகுகள் இரண்டும் ஒரேவிதத்தில் தோலில் சிறிய பைகளாகவே முதலில் தோன்றுகின்றன. மேலும் அவை இரண்டும் ஒரே போன்ற பொருளால் ஆனவை. தோல் உறைகள் இறகுகளாக நீள்வது மிகச் சிறிய அளவில் நடந்தால்கூட, அது காற்றியக்கரீதியிலான (aerodynamic) நன்மையை அளிக்கும். எனவே, ஒரு பண்டைய ஊர்வனத்தின் கைகளிலும் வாலிலும் உள்ள உறைகள் படிப்படியாக நீண்டு, அதன் தாவும் தூரத்தை அதிகரிக்கச் செய்திருப்பதை கற்பனை செய்வது கடினமல்ல. அவ்வாறு, அந்த அமைப்புகள் படிப்படியாக மேம்பட்டன. இறகின் மையத்தை பலப்படுத்தும் வகையில் உறுதியான இறகுத் தண்டு (quill) உருவானது; அதன் இருபுறத்திலும் அமையப்பெற்ற இறகின் இழைகள் சிறிய கொக்கிகளை உருவாக்கின. அது அவற்றை ஒன்றோடொன்று இணைத்து, காற்றைப் பிடிக்கும் ஒற்றைப் பரப்பாக இறகை மாற்றியது. அந்தப் பரப்பு சிதைய நேர்ந்தால், பறவைகள் தங்கள் அலகின் உதவியுடன் அப்பகுதியை மீண்டும் பிணைத்து (zipping) சரிசெய்து விட முடியும்.
*******
முதல் ஆதாரமான ஆர்கியோப்டெரிக்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின் நூறாண்டுகள் வரை, பறவைகளின் ஆரம்ப வரலாற்றை விளக்கும் ஒரே ஆதாரமாக ஜெர்மனியின் சோல்ன்ஹோஃபன் சுண்ணாம்புக் கல் மட்டுமே இருந்தது.
![]() |
| Sinosauropteryx |
பின்னர், 1995 ஆம் ஆண்டில், சீனாவில் இருந்து சில அற்புதமான புதைபடிவங்கள் கிடைத்தன. அவை சீனாவின் வடகிழக்கில் உள்ள லியோனிங் மாகாணத்தில் (Liaoning Province) கண்டெடுக்கப்பட்டன. இந்த புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்ட களிமண் கற்கள் சுமார் 120 மில்லியன் (12 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஏரியின் அடிப்பகுதியில் உருவானவை. இது ஆர்கியோப்டெரிக்ஸ் வாழ்ந்த காலத்திலிருந்து சுமார் 30 மில்லியன் ஆண்டுகள் பிந்தையது. அங்கு பலவிதமான உயிரினங்களின் தொல் எச்சங்கள் கிடைத்தன - பலவகை மீன்கள், தவளைகள், முதலைகள் மற்றும் சிறிய ஆரம்பநிலை பாலூட்டிகள் ஆகியவை. அங்கு கண்டறியப்பட்ட ஊர்வனவற்றில் ஒரு சிறிய டைனோசர் இருந்தது; அதற்கு சினோசாரோப்டெரிக்ஸ் (Sinosauropteryx) அல்லது ‘சீன டிராகன்-பறவை’ என்று பெயர். அதன் தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பை ஒட்டியும் மென்மையான பஞ்சுபோன்ற இழைகள் இருந்தன. இவற்றை ஆரம்பநிலை இறகுகள் என ஒருசாரார் கருதினாலும், அப்பார்வை பரவலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்த இறகுகளில் சமச்சீர்த்தன்மையோ அல்லது ஒன்றுக்கொன்று பிணைத்துக் கொள்ளும் தன்மையோ இல்லை என்பதால் அவை காற்றியக்க ரீதியில் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவை ஒரு வெப்ப இரத்த உயிரினத்தின் உடல் வெப்பத்தை தக்க வைக்கும் காப்புறையாக செயல்படும் அளவிற்கு தடிமனாக இருந்ததா, அல்லது சினோசாரோப்டெரிக்ஸ் அவற்றை வெறுமனே காட்சிக்காக பயன்படுத்தியதா என்பது இன்னும் தெளிவாகவில்லை. எப்படியானாலும், இறகு போன்ற தோல் உறைகள் வளர்த்த மிகப் பழமையான ஊர்வனங்கள் ஒன்றின் நேரடி சந்ததியாக சினோசாரோப்டெரிக்ஸை கருதலாம். மேலும் அது ஒருவேளை ஆர்கியோப்டெரிக்ஸ்-க்கு முன்பே தோன்றியிருந்தாலும் அதைதாண்டி நீண்டகாலம் உயிர்வாழ்ந்துள்ளது.
இந்தக் களிமண் அடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு உயிரினம், நிச்சயம் ஆர்கியோப்டெரிக்ஸை விட பறவைக்கு இன்னும் நெருக்கமானது. ஒரு வண்ணாத்திக்குருவியின் (magpie) அளவுடையது. தன் உடல் முழுவதும் இறகுகளால் மூடப்பட்டு, அதன் ஒவ்வொரு முன்னங்காலிலும் நகங்களுடன் கூடிய மூன்று விரல்கள் இருந்தன. ஆனால் அதன் வால்பகுதியில் உள்ள எலும்புத் தொகுப்பு மிகவும் குறுகியதாக இருந்தது. அனைத்திற்கும் மேல், மிக முக்கியமான மாற்றமாக, பற்களும் தாடை எலும்புகளும் இல்லாமல், அதற்குப் பதில் ஒரு கொம்பு போன்ற அலகை கொண்டிருந்தது. பறக்கும் திறனை மேம்படுத்தியதில் இதற்கு மிகமுக்கிய பங்குண்டு. ஏனெனில், இம்மாற்றம் அந்த உயிரினத்தின் எடையை குறைத்ததோடு, அதன் புவியீர்ப்பு மையம் முன்பு எடைமிக்க வாய்ப்பகுதியில் இருந்ததிலிருந்து வயிற்றுப் பகுதிக்கு கொண்டு வந்தது. இவ்வுயிரினம் சீனாவின் தத்துவஞானி கன்பூசியஸ் (Confucius) நினைவாக கன்பூசியுசோர்னிஸ் (Confuciusornis) என அழைக்கப்பட்டது. இந்த ஆச்சரியமூட்டும் உயிரினத்தின் நூற்றுக்கணக்கான புதைபடிவ மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு அற்புதமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவற்றின் எலும்புகளை சுற்றி கருமை நிறத்தில் மங்கலான தடங்கள் காணப்படுகின்றன, அது இந்த உயிரினத்தின் சதைப்பற்று மிக்க இறகுப்பகுதியின் பரப்பளவைக் காட்டுகிறது. சில புதைபடிவங்களில் வாலிலிருந்து இரட்டை இறகுத் தண்டுகள் மிக அதிக நீளத்துடன் நீண்டிருந்தன. இவை ஒருவேளை ஆண் பறவைகளாக இருக்கலாம், மேலும் இருபாலருக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உருவாக தொடங்கியிருப்பதையும் இது காட்டுகிறது. புதைபடிவங்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கிடைப்பதிலிருந்து, இவை அடர்த்தியான கூட்டங்களாக வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் யூகிக்கலாம்.
![]() |
| Confuciusornis |
சமீப காலங்களில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் பாறைகளில் இருந்து இன்னும் மேம்பட்ட வகை பறவைகளின் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. இந்தப் பிந்தைய இனங்கள், அசலான பறவைகளுக்கே உரிய எடைக் குறைப்புத் தன்மைகளை பெற்றுள்ளன. அவற்றின் நீண்ட வால் எலும்பு, முதுகுத் தண்டின் பின்பகுதியில் சிறிய முக்கோண வடிவிலான கூட்டெலும்பாக சுருக்கப்பட்டது. இறக்கை மற்றும் கால்களின் நீண்ட எலும்புகள் உள்ளீடற்று காலிகுழாய் போன்று மாறின, அதேசமயம் குறுக்கும் நெடுக்குமான இழைகளின் மூலம் அவை உள்ளூர பலப்படுத்தப்பட்டன. பல உயிரினங்களுக்கு மார்பெலும்பில் கீல் (keel) எனப்படும் பெரிய நீட்சி உருவானது, அதில் பெரிய இறக்கை தசைகள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றின் விலா எலும்புகள் விளிம்பு பட்டைகளால் ஒன்றுடன் ஒன்று இணைந்து பிணைக்கப்பட்டு, மார்பு கூடுக்கு வலிமை சேர்த்தன. பறவைகள் எனும் பேரினம் முழுமையாக நிலைபெற்று விட்டதை இம்மாற்றங்கள் தெளிவாக அறிவித்தன.
அதன் பின்பு, இன்றிலிருந்து சுமார் 65 மில்லியன் (ஆறரை கோடி) ஆறரை ஆண்டுகளுக்கு முன், இன்னும் முழுமையாக விளக்கப்படாத ஒரு மர்மமான பேரழிவு பூமியில் உயிரினங்களை அழித்தது. அது, விண்வெளியில் இருந்து வந்த ஒரு விண்கல்லோ அல்லது வால் நட்சத்திரமோ பூமியை மோதியதால் நடந்ததாகத் தெரிகிறது. அப்போது ஏற்பட்ட மாபெரும் வெடிப்பில் உண்டான தூசுப்படலம் காரணமாக, சூரிய ஒளி பல மாதங்கள் மறைக்கப்பட்டு, பூமி முழுவதும் இருளால் மூடப்பட்டு இருந்திருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும், இதன் விளைவாக ஏற்கனவே எண்ணிக்கையில் குறைந்து கொண்டிருந்த டைனோசர்களின் கடைசி இனங்களும் முற்றிலுமாக அழிந்துவிட்டன. அவற்றுடன் பல பெரிய ஊர்வன இனங்களும் அழிந்தன. மோசாசர்கள் (Mosasaurs) மற்றும் பிளேசியோசர்கள் (Plesiosaurs) கடல்களில் இருந்து மறைந்தன; ப்டெரோசார்கள் (Pterosaurs) வானிலிருந்து காணாமல் போனது. அதேபோல், பறவைகளின் பெரும்பாலான இனங்களும் அழிந்தன. சில குழுக்கள் மட்டும் எவ்வாறோ தப்பிப் பிழைத்தன. அவற்றில் வாத்துகள், கடற்காகக்கைகள், நீர்மூழ்கி பறவைகள், சில கரையோரப் பறவைகள் மற்றும் கடற்கரைப் பறவைகளான உப்புக்கொத்திகள் போன்ற இனங்களின் மூதாதையர்கள் அடங்கும். இப்போது அவற்றின் முன் பெரும் வாய்ப்புகள் திறந்து கிடந்தன. முன்பு பல்வேறு விலங்கினங்களால் நிரம்பியிருந்த பூமியின் விசாலமான பகுதிகள், இப்போது வெறிச்சோடியும், மீண்டும் குடியேற்றத்திற்குத் தயாராகவும் இருந்தன. முக்கியமாக, வானம் இனிமேலும் பறக்கும் ஊர்வன இனங்களால் ஆட்கொள்ளப்படவில்லை. அதனால், இன்றைய பறவைகளின் முன்னோர்கள் அங்கு குடியேறும் வகையில் பரிணாமம் அடைந்தன, அது வியக்க வைக்கும் வேகத்தில் நடந்தேறியது. பத்து மில்லியன் ஆண்டுகளுக்குள், இன்றைய பறவைகளின் பெரும்பாலான ஒழுங்குகள், சிறிய கிளைகளில் அமரும் பறவைகள் தவிர அனைத்தும் தோன்றிவிட்டன.
இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள எசெக்ஸ் மாநிலத்தின் வால்டன்-ஆன்-த-நேஸ் (Walton-on-the-Naze) பகுதியில் இந்த வேகமான பரிணாம வளர்ச்சிக்கு அற்புதமான ஆதாரம் கிடைத்துள்ளது. இங்கு லண்டன் களிமண் (London Clay) எனப்படும் பாறை அடுக்கு சுமார் ஐம்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிந்தது, அதிலிருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட பழமையான அழிந்த பறவைகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில எச்சங்கள், இன்றைய குயில், கிளி, ஆந்தை, உழவாரக் குருவி, பருந்து, கடற்காக்கை, மீன்கொத்தி போன்ற பல இனங்களுடன் நேரடி தொடர்புடையவை என அறியப்பட்டுள்ளன. இதேபோன்ற பரிணாம வளர்ச்சி வெடிப்புகள் உலகின் பல பகுதிகளிலும் நடந்தன. வட அமெரிக்காவில், இன்றைய வாத்து இனங்களின் முன்னோர்கள் போன்று தோன்றும் நீர்பறவைக் கூட்டங்கள் ஒரு பெரிய ஏரிக்கரையில் அதிக அளவில் கூடுகள் அமைத்திருந்தன. அந்த ஏரி, இன்று வையோமிங் மாநிலம் (Wyoming) என அழைக்கப்படும் பிராந்தியத்தின் பெரும்பகுதியை மூடியிருந்தது. அப்போது அங்கு படிந்த மணற்படிவங்களில், அந்த பறவைகளின் எலும்புகள் மற்றும் முட்டைச் சிதைவுகள் ஆயிரக்கணக்கில் உறைந்து, இன்று மணற்கற்களாக காணக் கிடைக்கின்றன.
இங்கிருந்து அதிக தொலைவில்லாத பகுதியில், புல்வெளிகளில் உருவான புதைபொருள் அடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து, புதிய சூழ்நிலைகளில் முற்றிலும் வேறுபட்ட முறையில் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திய பறவைகளின் எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.
முன்பு, பறவைகளின் முன்னோர்களுக்கு நிலத்தை அபாயகரமான இடமாக வைத்திருந்த டைனோசர்கள் அழிந்துவிட்டன. இதனால், பறவைகள் மீண்டும் நிலவாழ் உயிரினங்களாக மாற வாய்ப்பு அமைந்தது, அவையும் அவ்வாறே ஆயின.
அவற்றில் ஒரு இனப் பறவை 2 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டது. அதன் தலை மட்டும் 45 செ.மீ. நீளமும், மிகப்பெரிய கனமான அலகும் கொண்டது. அதன் இறக்கை எலும்புகள் மிகவும் சிறிதாக இருப்பதிலிருந்து, அது பறக்க முடியாதது என்பது தெளிவாகிறது. டியாட்ரைமா (Diatryma) என்று அழைக்கப்படும் இப்பறவை, நூறாண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவரை, சிறிய ஊர்வனங்களையும் பிற சிறிய உயிரினங்களையும் வேட்டையாடும் கொடிய வேட்டையாடி எனக் கருதப்பட்டு வந்தது.
![]() |
| Diatryma |
ஆனால் சமீபத்தில் சில விஞ்ஞானிகள், அதன் அலகு நுனி வளைந்து கூர்மையாக இல்லையென்பதை சுட்டிக் காட்டுகின்றனர். எனவே, டியாட்ரைமா உண்மையில் ஒரு வேட்டையாடியாக அல்லாமல், இறந்த உயிரினங்களின் உடல்களையோ அல்லது வெறுமனே இலைகளை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எதுவாக இருந்தாலும், அது மட்டுமே உலகின் புல்வெளிகளில் அலைந்து திரியும் பெரிய பறக்க முடியாத பறவை அல்ல. தென் அமெரிக்காவில் இதேபோன்று வேறுசில இனங்களும் இருந்தன. ஆனால் அவை நிச்சயமாக வேட்டையாடிகளே. அவற்றில் சில 3 மீட்டர் உயரம் கொண்டவை. தலை குதிரைகளின் தலை அளவுக்கு பெரிதாகவும், அலகுகள் பயங்கரமான வளைந்த கொக்குகளுடனும் இருந்தன. அவை ‘அச்சமூட்டும் பறவைகள்’ (terror birds) என அழைக்கப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
******
ஆனால், நிலத்திலும் சரி வானிலும் சரி பறவைகளின் ஆதிக்கம் என்பது முற்றிலும் எதிர்க்கப்படாமல் போய்விடவில்லை. ஆர்கியோப்டெரிக்ஸ் காலத்திலிருந்தே, சிறிய மூஞ்சூறு போன்ற தோற்றம் கொண்ட விலங்குகள் காடுகளின் தரையில் ஓடி, பூச்சிகளை வேட்டையாடி வந்தன. அவை ஏற்கனவே வெப்பமான உடலையும், அதை பாதுகாக்கும் விதமாக மயிரடர்ந்த தோல்பகுதியையும் பெற்றிருந்தன. அவை டைனோசர் யுகம் முழுக்க எளிய முறையிலேயே வாழ்ந்து வந்தன. அவைவும் பறவைகளைப்போல, மாபெரும் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவைதான். இப்போது அவற்றுக்கான வாய்ப்பும் திறந்து கிடந்தது. அவை அளவில் வளரத் தொடங்கின. அவற்றுள் சிலவற்றின் பற்களை பார்க்கும்போது அவை இன்றைய கழுதைப்புலிகளைப் போன்று மூர்க்கமான விலங்குகளாக மாறியது தெரிகிறது. அத்தகைய ஆரம்பகால பாலூட்டிகளுடன் போட்டியிட்டே, பறக்க முடியாத பறவைகள் (Flightless) நிலத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், பாலூட்டிகள் அளவில் பெரிதாகவும் பல்வேறு வடிவங்களிலும் பரிணாமம் அடைந்து இறுதியில் வெற்றி பெற்றுவிட்டன. சுமார் இருபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நிலத்தில் வாழ்ந்த டியாட்ரைமா மற்றும் அச்சமூட்டும் பறவைகள் அனைத்தும் அழிந்துவிட்டன.
எனினும், அளவில் பெரிய பறக்க முடியாத பறவைகள் இன்றைக்கும் சில பூமியில் நடைபோடுகின்றன. ஆப்பிரிக்காவில் தீக்கோழி (ostrich), தென் அமெரிக்காவில் ரியா (rhea), ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவில் ஈமு மற்றும் காசோவரி (emu and cassowary) ஆகியவை. இவை, மாபெரும் அழிவுக்குப் பிறகு சிறிது காலத்திலேயே டியாட்ரைமா மற்றும் அச்சமூட்டும் பறவைகளுடன் சேர்ந்து தோன்றியிருக்கலாம். அந்தக் காலத்தில், பூமியின் கண்டங்கள் யாவும் இன்றைய இடங்களில் இல்லை. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அவை அனைத்தும் சேர்ந்து ஒரே மிகப்பெரிய மீப்பெரும் கண்டமாக (supercontinent) இருந்தது. மிக நீண்ட காலஓட்டத்தில், அக்கண்டம் பிளந்து, துண்டுகளாகப் பிரிந்து இன்றைய தனித்தனியான கண்டங்களாக மாறியது. அப்போது, இன்றைய பறக்க முடியாத பறவைகளின் முன்னோர்கள் அந்தக் கண்டத் துண்டுகளுடன் சேர்ந்து பயணித்திருக்கலாம். அதன் பின்பு, லட்சக்கணக்கான ஆண்டுகளில், அவை தங்களின் தனித்தனியான கண்டங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப பரிணாமம் அடைந்து, இன்று நாம் அறியக்கூடிய இனங்களாக உருவாகியிருக்கலாம்.
பறவைகள் தங்களை நிலைப்படுத்திக்கொண்ட பிற தீவுகளிலிருந்து நியூசிலாந்து முற்றிலும் வேறுபட்டது. இந்தத் தீவுகளில்தான் நவீனப் பறவைகள், தமது வரலாற்றின் ஆரம்பத்திலேயே பறக்க முடியாத தன்மையை முழுமையாக சோதித்துப் பார்த்தும் பயன்படுத்தியும் கொண்டன. அவற்றில் ஒன்று, தற்போது அழிந்துவிட்ட மோவா (Moa) என்ற பறவைக் குடும்பம். இந்தக் குடும்பத்தில் இதுவரை வாழ்ந்ததிலேயே மிகப் பெரிய இனங்களும் இருந்தன. அவற்றின் தோற்றம் தீக்கோழியை (Ostrich) ஒத்திருப்பதால், அதனுடன் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும்.
![]() |
| Kakapo |
\நியூசிலாந்தின் அனைத்து பறக்க முடியாத பறவைகளிலும் மிகவும் விசித்திரமான ஒன்றான ஆந்தைக் கிளி (Kakapo) உயர்ந்த மலைப்பகுதிகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டது. மோவா போலவே இலைகளை உணவாக கொண்டது, அளவிலும் மிகப்பெரியது. ஏனெனில் இத்தகைய உணவைக் கையாள பெரிய செரிமான அமைப்பு தேவை. உலகின் அனைத்து கிளிகளிலும் மிகப் பெரியது இதுவே. பகல் நேரத்தில் பூனைப் பருந்து (Harrier) அல்லது கழுகு போன்ற வேட்டையாடிகளிடமிருந்து தப்பிக்க, மண்ணுக்குள் தோண்டிய பதுங்கு குழிகளில் தங்கி விடுகிறது. மற்றபடி இரவில் மட்டுமே இயங்கும் இரவாடியாக (nocturnal) வாழ்ந்து வருகிறது. இரவில் தன் பிரதேசத்தைச் சுற்றி நடந்து, வழியெங்கும் பச்சை முளைகள் மற்றும் இலைகளைத் தின்று செல்லும். பசும் வெளிக்குள் இது சென்ற பாதையின் தடத்தை தெளிவாக பார்த்துவிட முடியும். முயலுக்கு இணையாக நியூசிலாந்து உருவாக்கிக் கொண்ட சொந்த உயிரினமாகவே இது ஆகிவிட்டது.
![]() |
| பூனைப் பருந்து |
பறவைகள் தமக்கான உணவைத் தேட மீண்டும் தரைக்கு திரும்பும் என்பதும், அங்கு பாதுகாப்பாக வாழ முடிந்தால் தங்கள் நிரந்தர இல்லத்தையும் அங்கே அமைத்துக் கொள்ளும் என்பதற்கும் உறுதியான சான்றாக நியூசிலாந்து திகழ்கிறது. ஆனால் இறுதியில், பல கோடி ஆண்டுகள் செலவிட்டு அடைந்த பறக்கும் திறனை கைவிட்ட பிறகு, அம்முயற்சி பறவைகளுக்கு வெற்றிகரமாக அமையவில்லை. சுமார் எழுபது மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டியாட்ரைமா மற்றும் அச்சமூட்டும் பறவைகள் (Terror Birds) போன்ற இனங்களும், இறுதியில் தங்களது ஆதிக்கத்தை பாலூட்டிகளுக்குக் கையளிக்க வேண்டியதாகிவிட்டது. பூனைகள், எலிகள், கீரி இனத்தை சேர்ந்த ஸ்டோட்கள் (Stoat) போன்ற பாலூட்டி வேட்டையாடிகள் நியூசிலாந்தை அடைந்தபோது, அங்கிருந்த பறக்க முடியாத பறவைகளுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிக வழிகளில்லை. பாலூட்டிகளின் ஊடுருவலுக்கு முன், நியூசிலாந்தை பூர்வீகமாகக் கொண்ட, முழுமையாகவோ அல்லது பெரும்பாலும் பறக்க முடியாத குறைந்தது பதினெட்டு இனப் பறவைகள் இருந்தன. இப்போது அந்தப் பதினெட்டு இனங்களில் பதினொன்று முற்றிலும் அழிந்து விட்டன; மீதமுள்ள இனங்களும் மிகச் சிறிய எண்ணிக்கையில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன, அவையும் அழிவின் விளிம்பில் உள்ளன. கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது மில்லியன் (பதினைந்து கோடி) ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் தோன்றிய இறகுடைய ஊர்வனங்களின் விதி வானில் இருந்தது. வானில் அவை தங்களை உருவாக்கிக் கொண்டன. அங்கே இன்று வரை, எந்தப் போட்டியுமின்றி, ஆட்சியாளர்களாகத் திகழ்கின்றன.
டேவிட் அட்டன்பரோ
தமிழில்: டி. ஏ. பாரி
குறிப்பு: டேவிட் அட்டன்பரோவின் 'தி லைஃப் ஆஃப் பேட்ஸ்' என்ற நூலில் இருந்து ஒரு பகுதி இங்கு மொழியாக்கம் செய்யப்படுள்ளது.
| டேவிட் அட்டன்பரோ |








.webp)


