Sunday, 30 November 2025

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் விதியையும் தீர்மானிக்கும் - டேவிட் அட்டன்பரோ நேர்காணல்

டேவிட் அட்டன்பரோ 
டேவிட் அட்டன்பரோ (David Attenborough) உலகின் முன்னோடி சூழலியல் ஆளுமை, கானுயிர் சார் ஊடகவியல் முன்னோடி, எழுத்தாளர், சூழலியல் ஆய்வாளர். சுமார் 70 வருடங்களாக உலகம் முழுவதற்குமான சூழலியலுக்கான தொடர்பாளராக இருந்து வருகிறார். இயற்கையின் மீதான காதலை, கரிசனத்தை இந்நூற்றாண்டு மக்களிடம் கொண்டுசென்றதில் பெரும் பங்காற்றியுள்ளார். டேவிட் அட்டன்பரோவின் ஊடகப்பணி பிபிசி-யில் 1950-களின் ஆரம்பத்தில் துவங்கியது. தயாரிப்பாளராக பணியை ஆரம்பித்தவர் விரைவிலேயே தொகுப்பாளராகப் பொறுப்பேற்று, சூழலியல் வரலாற்று ஆவணப்படங்களுக்கான புதிய பாதையை உருவாக்கினார். டேவிட் உலகின் அனைத்துக்கண்டங்களையும் தனது ஆவணப்படங்களின் மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பூமியில் உள்ள உயிர்களைப் பற்றிய மிக முக்கியமான ஆய்வுத் தொடரான ‘லைப் ஆன் எர்த்’ (life on earth 1979) பெரிய வெற்றியைத் தேடித் தந்ததுடன், இவரது பிரபலமான "லைப்(life)'' தொடருக்கும் அடித்தளமாக அமைந்தது. ஒன்பது பகுதிகளாக வெளிவந்த இவரது “life” பிபிசி தொலைக்காட்சி தொடர் சூழலியல் வரலாறு குறித்து பெரும் பரவசத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இயற்கையையும் காட்டுயிர்களையும் தொலைக்காட்சிப் படங்களாக எளிய மக்களுக்கு அறிமுகப்படுத்தியது இவரது சாதனைகளில் முதன்மையானது. 

உலகின் கடல்களைப் பற்றிய ஆய்வான தி ப்ளூ பிளானட் (The Blue Planet 2001), உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி விரிவாகப் பேசிய ஸ்டேட் ஆஃப் தி பிளானட் (State of the Planet 2000) ஆர் வி சேஞ்சிங் பிளானட் எர்த்? (Are We Changing Planet Earth? 2006) உட்பட பல ஆவணப்படங்கள் உலக அளவில் புகழ் பெற்றவை சூழவியல் மீதான கரிசனத்தை ஆர்வத்தை ஏற்படுத்தியவை. தெளிவான, மிக அமைதியான, இரகசியம் பேசும் தொனியிலான இவரது வர்ணனை, இயற்கை ஆவணப்படங்களை தொகுத்து வழங்குவதில் ஒரு புதிய, பிரத்யேக பாணியை உருவாக்கியது. 

டேவிட் இயற்கை வரலாற்றில் வேறு யாரையும் விட அதிகமான புதிய உயிரினங்களைத் தனது தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 'சர்' பட்டம் முதற்கொண்டு முப்பதற்கும் மேல் விருதுகள் பெற்றுள்ளார். அவரை கௌரவிக்கும் விதமாக சில அரிய உயிர்கள் - அவற்றில் சில விலங்குகள் இப்போது புவியில் இல்லை, மற்றும் தாவர வகைகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. டேவிட் அவருடைய ஒளிபரப்புடன் தொடர்புடைய புகழ்பெற்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் Adventures of young naturalist, life on air, Other sides of the world ஆகியவை சிறந்த சுயசரிதைகள்.
டேவிட் அட்டன்பரோ, மனைவி ஜேன் எலிசபெத்
டேவிட் அட்டன்பரோ 1926ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள லண்டனில் பிறந்தார். பெற்றோர்கள் பிரெட்ரிக் அட்டன்பரோ, மேரி அட்டன்பரோ. இருவருமே கல்வியிலாளர்கள். இவருடன் உடன் பிறந்தவர்கள் ஜான் அட்டன்பரோ, ரிச்சர்ட் அட்டன்பரோ. இவர்களில் ரிச்சர்ட் உலக புகழ்பெற்ற காந்தி திரைப்படத்தின் இயக்குனர். ஹெல்கா பேஜச், ஐரீன் பேஜச் இரு சகோதரிகள். மனைவி ஜேன் எலிசபெத். மகன் ராபர்ட் அட்டன்பரோ, மகள் சூசன் அட்டன்பரோ.

இந்நேர்காணல் அவர் அளித்த நேர்காணல்களிலிருந்து எடுக்கப்பட்ட தொகுப்பாகும்.

அட்டன்பரோ
இயற்கையை அல்லது காட்டுயிர்களை படமாக்க வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

நான் ஒரு பள்ளி மாணவனாக லேசெஸ்டரில் (Leicester) வளர்ந்த போது அருகில் சார்ன்வுட் (Charnwood) என்னும் காட்டை அறியும் வாய்ப்பு கிடைத்தது. 1930களில் அங்கு நான் பார்த்து உணர்ந்த இயற்கையின் ரகசியங்கள் என் வாழ்நாள் தேடலுக்கான உத்வேகமாக அமைந்தது.

சிறுவனாக மிட்லாண்ட்ஸில், லெய்செஸ்டரில் வளர்ந்தபோது, நாட்டின் கிழக்குப் பகுதியில் பார்த்த பாறைகளும் சுண்ணாம்பு கற்களும் மிகவும் மாயாஜாலமான விஷயங்களால் நிரம்பியிருந்தன. ஒரு கல்லை உடைத்தால், அது திடீரெனப் பிளந்துவிடும். அதற்குள் ஒரு அற்புதமான, சுருண்ட சங்கு போன்ற படிம அம்மோனைட்டை(Ammonites) பார்க்கமுடியும், அது அழகாகவும் அசாதாரணமானதாகவும் இருக்கும். மேலும் 150 மில்லியன் ஆண்டுகளாக அங்கே இருந்த இந்த படிமங்களை முதன்முதலாக பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. அவை என்னை மிகவும் பரவசத்தில் ஆழ்த்திய பொழுதுகள். அதுவே புதை படிமங்களை சேகரிக்கும் ஒரு சிறுவனின் ஆர்வத்தைத் தூண்டியது. உண்மையை சொல்லப்போனால், நான் அதை இன்னும் இழக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்.

ஏழு வயதில் நான் முதன்முதலில் அனுபவித்த பிரமிப்பும் ஆச்சரியமும், கல்விதுறையில் இயங்கிய என் பெற்றோர்களால் மேலும் வளர்க்கப்பட்டது. இளம் வயதிலேயே இயற்கையின் மீதான என் ஆர்வத்தால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எனக்கு ஒரு கல்வி உதவித்தொகையைப் பெற்றுத் தந்தது. அது வளர்ந்து வரும் என் ஆர்வத்தை மேலும் தொடர உதவியது.

ஆச்சரியம் என்னவென்றால், பின்னாளில் நூற்றுக்கணக்கான மணிநேர திரைப்படங்களை நான் தொகுத்து வழங்குவதற்கும், விவரிப்பதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தொலைக்காட்சியில் என் நீண்ட வாழ்க்கை ஒரு தற்செயலாகவே தொடங்கியது. 'தி டைம்ஸ்' செய்திதாளில் வானொலி வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து அதற்காக விண்ணப்பித்தேன். ஆனால் அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு கூட என்னை அழைக்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, எனக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் ‘தொலைக்காட்சி’ என்ற புதிய விஷயம் ஒன்று இருப்பதாகவும், நான் அதில் ஆர்வம் உள்ளவனா என்றும் கேட்டிருந்தார்கள். மேலும் பயிற்சி வகுப்பில் சேர்ந்தால் ஆயிரம் பவுண்டுகள் அவர்களால் எனக்கு கொடுக்கப்படும் என்றும் சொன்னார்கள். அது நான் அப்போது பதிப்பகத்தில் பெற்ற ஊதியத்தை விட மூன்று மடங்கு அதிகம். எனவே அதை முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து அந்த பயிற்சி வகுப்பில் இணைந்தேன்.
உங்கள் தொடக்க கால திரைப்படத் தயாரிப்பு அணுகுமுறையிலிருந்து இப்போது ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

கண்டிப்பாக! 1954இல் நான் பிபிசி-யின் “ஜூ குவெஸ்ட் (zoo quest)” என்னும் தொலைக்காட்சி தொடருக்காக இயற்கை காட்சிகளை படமாக்குகையில் எங்களிடம் ஆப்பிரிக்காவிற்கு சென்று பறவைகளை மிக அருகே படம்பிடிக்க தேவையான நீண்ட லென்ஸ்கள் கொண்ட கேமராக்களும் போதுமான பண வசதியும் இல்லை. அதுமட்டுமல்ல படம்பிடிக்க உதவும் படச்சுருள்கள் மிகவும் திறனற்று தேவையான ஒளி வெளிப்பாடு(exposure) இல்லாமலும் இருந்தது. கேமராக்களில் உபயோகிக்கும் பேட்டரிக்கள் மிக கனமாகவும் அதை சுமந்து செல்வதென்பது சோர்வளிக்ககூடிய அசாத்தியமான காரியமாகவும் இருந்தது.

1954இல் திரைப்படங்களுக்கு பயன்படுத்தும் 35mm படச்சுருளே இதற்கும் பயன்படுத்தப்பட்டது. நான் ‘ஜூ குவெஸ்ட்’ போன்ற தொடரை அத்தகைய பெரிய கருவிகளில் படமாக்கமுடியாது எங்களால் கேமராக்களை சுமக்க முடியாது என்று கூறினேன். அதன் விளைவாக நாங்கள் தான் முதன்முதலாக 16mmஇல் கேமராவில் கானுயிர்களை படமாக்கினோம். இதற்காக நாங்கள் பிபிசி-யின் தொலைக்காட்சி படத்துறை தலைவரிடம் சண்டையிட வேண்டியதாயிற்று அவர் அதை ஒரு தரக்குறைவாக செயலாக எண்ணினார்.

அடுத்தடுத்த வருடங்களில் மேலும் புதிய தொழில்நுட்பங்கள் வந்தன. நீண்ட பெரிய லென்ஸ்களும், திறன்மிக்க ஒலிவாங்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகிக்க முடிந்தது. ஆழ் நீரில் பயன்படும் கேமரா, இரவில் பயன்படும் இன்ஃப்ராரெட் கேமரா (infrared), நிலத்தடியில் படம்பிடிக்க பயன்படும் ஆப்டிகல் கேமரா (optical cable), செடிகளை படம்பிடிக்க பயன்படும் டைம்-லாப்ஸ் கேமரா (time lapse), முதுகெலும்பிலா (invertebrates) உயிரினங்களை படம்பிடிக்க பயன்படும் அதிக திறன்வாய்ந்த மேக்ரோ கேமராக்கள் என்று பல கருவிகள் வரத்தொடங்கின.

நீங்கள் பல தேசங்களுக்கு பயணம் சென்றுள்ளீர்கள். எப்போதாவது உயிரியல் பூங்காக்களைப் பார்வையிட ஆசைப்பட்டதுண்டா ?

முன்பு உயிரியல் பூங்காக்களுக்கு அதிகம் செல்வதுண்டு. என்னுடைய முதல் தொலைக்காட்சி தொடரான “ஜூ குவெஸ்ட் (zoo quest)” உயிரியல் பூங்காக்காக விலங்குகளை கைப்பற்றும் நிகழ்ச்சியே. இப்போதைய நிலைமை சிறிது மாறியுள்ளது என்றாலும் உயிரியல் பூங்காக்கள் சூழல் பாதுகாப்பு, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றுக்கிறது. ஆனால் பூங்காவின் தரமும் விலங்குகளின் வாழ்வும் சரியாக பேணப்படவேண்டும். விலங்குகள் அங்கேயே இனப்பெருக்கம் செய்கையில் மீண்டும் காட்டு விலங்குகளை கைப்பற்ற வேண்டிய அவசியம் நேராது.

பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதையும், குரங்குகள் தங்கள் இயற்கைக்கு ஒவ்வாத சூழல்களில் பாதுகாக்கப்படுவதையும் பார்க்க நான் விரும்புவதில்லை. ஆகையால் இப்போது அங்கே செல்வதை தவிர்க்கிறேன். ஆனாலும் நான் உயிரியல் பூங்காக்களுக்கு எதிரானவனல்ல.
நீங்கள் பல்உயிரியத்தின் (Biodiversity) வீழ்ச்சியைத் தடுப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி எந்த அளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்?

உண்மை என்னவென்றால் நம்மால் அதை தடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. வீழ்ச்சியின் தீவிரத்தை வேண்டுமானால் குறைக்க முடியலாம். அவ்வளவுதான். என்னை திகைக்க வைக்கும் உண்மை என்னவென்றால் நான் தொலைக்காட்சி தொடர்கள் தொடங்கும் போது இருந்ததை விட இப்போது மூன்று மடங்கு மக்கள் தொகை பெருகியுள்ளது. கவனிக்கவும் நான் பிறக்கும் போதும் இத்தகைய மக்கள் தொகை இல்லை! மூன்று மடங்கு அதிகம்!. இவர்கள் அனைவரும் உணவுண்ண வேண்டும் வாகனங்கள் ஓட்டவேண்டும் சொந்த வீடுகள் கட்டிக்கொள்ள வேண்டும்.

அதிர்ச்சியூட்டும் அளவில் பிற உயிரினங்களின் இடங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் மற்ற விஷயங்களை விடுத்தால்கூட, இந்த அடிப்படை உண்மையே எனது வாழ்வின் மகிழ்ச்சியைக் குறைப்பதற்குப் போதுமானது. மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து, நாம் ஒரு சமநிலையை எட்டுவோம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் எதன் அடிப்படையில் இதைச் சொல்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அப்படியானால் கூட, அது ஒன்பது அல்லது பத்து பில்லியனாக உயரும். பிற உயிர்களுக்கு அற்ப நிலமே மிஞ்சும்.
விலங்குகளின் வாழ்க்கையை பட நிகழ்ச்சியாக காட்டும் போது நிறைய பாலுறவு, வன்முறை காட்சிகள் இடம் பெறுகிறது. அது உங்களுக்கு எப்போதாவது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதா?

பெரிதாக ஒன்றும் இல்லை. வழக்கமாக கடிதங்கள் வரும். ஒரு முறை, ஒரு பெண், சிங்கம் காட்டெருமையை அதற்கேயுரிய மூர்க்கத்துடன் கொன்றதைப் பார்த்துவிட்டு எழுதியிருந்தார். இந்தக் கொடூரமான செயலை காட்டுவதற்கு பிபிசி இவ்வளவு பணத்தைச் செலவிடுவது கேவலமானது, அதற்குப் பதிலாக, சிங்கங்களுக்குப் புல் சாப்பிடப் பயிற்சி அளிப்பதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவது மிகச் சிறந்தது என்று எழுதியிருந்தார்.

நிச்சயமாக, இதுபோன்ற விஷயங்களை படமெடுக்கும்போது, உள்ளுணர்வுக்கும், அறிவிற்கும் இடையே ஒரு பிளாட்டோனிய முரண்பாடு ஏற்படும். இதற்குத் தீர்வு, இரண்டையும் கவனமாகச் சமநிலைப்படுத்துவதுதான். நீங்கள் வன்முறையையும், விலங்கின் வலியையும் மட்டுமே காட்டினால், அது தவறானதும், அவமானகரமானதும் ஆகும். ஆனால், மறுபுறம், இப்படிப்பட்ட ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் காட்டவில்லை என்றால், நீங்கள் யதார்த்தத்தைத் திரித்து, கட்டுக்கதைகளை உருவாக்குகிறீர்கள். எனவே, நீங்கள் அந்த சமநிலையை உருவாக்க வேண்டும். சில நேரங்களில் அத்தகைய நிகழ்வுகளை தவறாக புரிந்துகொள்ளக்கூடும், ஆனால் நிச்சயமாக அதன் இரு பக்கங்களையும் காட்ட வேண்டும். எங்களின் எடிட்டிங் அறையில் நாங்கள் நீக்கியதை மக்கள் பார்த்தால்…

அறிவியல் வளர்ச்சி விரைவாக வளர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளின் துணையுடன், நீங்கள் முன்பு தயாரித்த நிகழ்ச்சிகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய ஆசைப்பட்டிருக்கிறீர்களா? 

அறிவியல் வளர்ச்சியின் வேகம் பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை ஆனால் என் முந்தைய நிகழ்ச்சிகளின் அறிவியல் பார்வை என்பது ஆறாம் வகுப்பு பாடத்தின் அடிப்படைகளே ஆகும். உதாரணமாக இது ஒரு பிளாட்டிபஸ் (platypus) இது ஒரு முட்டையிடும் பாலூட்டி என்ற அளவிலேயே அதன் சித்திரம் இருக்கும். இது எப்போதும் மாறப்போவதில்லை இல்லையா.
நீங்கள் கல்வித் துறையில் பணியாற்ற வேண்டும் என்று எப்போதாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா?

நான் முதலில் ஒரு தொல்லுயிரியலாளராக (Paleontologist) ஆகலாம் என்று நினைத்தேன். சிறுவனாக இருந்தபோது புதைபடிவங்களை (Fossil) விரும்பி சேகரித்தேன், அதைக் கொண்டு எப்படி வாழ்க்கை நடத்துவது என்று யோசித்தேன். 1944ல் தொலைக்காட்சி எதுவும் இல்லை, எனவே நான் ஒரு எரிபொருள் சார்ந்த வேலையில் சேர்ந்து(Petroleum geologist), புதிய இடங்களுக்குச் இடம்பெயர்ந்து கொண்டு இருக்கலாம் என்று நினைத்தேன். கேம்பிரிட்ஜுக்குச் சென்று விலங்கியல், புவியியல் , கனிமவியலும் படித்தேன். கனிமவியல் என்னை குழப்பக்கூடிய மிகவும் சலிப்பான பாடமாக இருந்தது, முக்கியமாக என் திறனின்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் ஒரு கணிதவியலாளர் அல்ல ஆனால் எக்ஸ்ரே படிகவியல் (crystallography) செய்யவேண்டியிருந்தது, என்னால் கணித ரீதியாக சிந்திக்க முடியாது, நிச்சயமாக முப்பரிமாணங்களில் என்னால் சிந்திக்க முடியாது.

அதன் பிறகு கடற்படையில் சேர்ந்தேன், ஆனால் பணியில் சேர வேண்டிய நேரத்தில், போர் முடிந்துவிட்டது. யாரையும் கொல்ல வேண்டியதில்லை, அது ஒரு நல்லூழ். ஆனால் வெளியே வந்தபோது, எனக்கு இரண்டு வயது அதிகம் ஆகியிருந்தது, திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், மேலும் ஒரு விஞ்ஞானியாக இருப்பதற்கான அறிவுசார் ஈடுபாடு என்னிடம் இருக்கிறதா என்று சந்தேகித்தேன். நிச்சயமாக, ஆய்வாளர் (behavioral ethologist) ஒருவர் விலங்கு ஒன்று தலையை வெளியே நீட்டுவதற்காக புதரின் அருகே நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது, என்னால் அதைச் செய்ய முடியாது என நினைக்கிறேன். அவர்களை மிகவும் மதிக்கிறேன். என்னிடம் இல்லாத ஒரு அர்ப்பணிப்பு அவர்களிடம் உள்ளது.

மக்கள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் வியப்பூட்டும் அளவில் மாறியுள்ளபோதும் பிளானட் எர்த்(planet earth) போன்ற இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகள் இன்றும் பரவலாக பார்க்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?

நிறைய காரணங்களை என்னால் சொல்ல முடியும். ஒன்று, விலங்குகள் உங்கள் திரையில் தோன்றும்போது, அவற்றுக்கு மட்டுமேயான பல தனித்தன்மை வாய்ந்த குணங்கள் இருக்கின்றன. அவை உங்களுக்கு எதையும் விற்க முயற்சிப்பதில்லை, பொய் சொல்வதுமில்லை. அவை கணிக்க முடியாதவை. பெரும்பாலும் புதியவை. மிக அழகாக இருக்கின்றன. நாடகத்தன்மை வாய்ந்தவை. அவை நம்முடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கின்றன. உங்கள் தொலைக்காட்சியில் இதைவிட வேறு என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ?

மற்றொரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இவை எப்போதும் பிரபலமாகவே இருந்துள்ளன. தங்கள் அலுவலகத்தைவிட்டு வெளியே வராத, சலிப்புற்ற தொலைக்காட்சி நிர்வாகிகள் இதை உணர்ந்துகொள்வதில்லை, அவ்வளவுதான். இது அமெரிக்காவிற்கு மிகவும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகள் என்பது, காட்டு விலங்குகளுடன் கயிற்றை கொண்டும் மயக்க மருந்தூட்டப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டும் போராடும் மனிதர்களைப் பற்றியதாகவே இருந்தன. பூச்சிகளைப் பற்றி யாராவது ஆர்வம் காட்டுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை, ஆனால் நாங்கள் அவர்களின் கருத்தை தவறென்று நிரூபித்தோம்.

உண்மையென்னவென்றால் 'எல்லா குழந்தைகளும்' - எல்லா குழந்தைகளும் நான்கு அல்லது ஐந்து வயதுகளில் இந்த அழகிய உலகத்தால் ஈர்க்கப்படுகிறது. பிறவற்றின் மீதுள்ள ஆர்வம் நம் எல்லோர் உள்ளிலும் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது சிலருக்கு அது வேறு விஷயங்களில் திசைதிருப்பப்படுகிறது. இது உள ஆற்றலின் வறுமையே. இது இவ்வாறு இருக்கையில் பெருகி வரும் மக்கள் தொகையால் மனிதர்கள் இயற்கையிடமிருந்து மிகவும் விலகியுள்ளனர். தொலைக்காட்சி அவர்களை குறைந்தபட்சம் வெளியே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவாவது உதவுகிறது. இயற்கையிடம் நாம் கொண்ட கடமையை உணர இது அவசியமானது.

தற்போது இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகளைத் தயாரிக்க அனுமதி பெறுவது எளிதாக இருக்கிறதா அல்லது கடினமாக இருக்கிறதா?

இரண்டும் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பல இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன என்பது உண்மைதான். நாங்கள் தொடங்கியபோது இதன் எண்ணிக்கை இத்தனை இல்லை. இப்போது அதிக வாய்ப்புகள் உள்ளன, அதனால் பெரும்பாலோர் அவற்றை உருவாக்க விரும்புகிறார்கள். எனவே இதில் போட்டிகள் கடுமையாக உள்ளது.

'எவரும் வேண்டாம் என்று நினைத்ததை'(காட்டுயிர்களை படமாக்குவது) நான் அன்று செய்தேன் எனக்கு இப்போது அதுவே ஒரு குற்றவுணர்வாகவும் உள்ளது. ஏனெனில் நான் பெரிதும் போட்டியிட வேண்டியதில்லை. நான் ஒரு யோசனையை முன்வைத்தேன் என்றால், தயாரிப்பாளர்கள், 'நீங்கள் அதைச் செய்ய விரும்பினால், செய்யுங்கள்' என்கிறார்கள். இப்போது இருக்கும் கடினமான சூழலில் என் வேலையை தொடங்கியிருந்தால் என்ன செய்திருப்பேனோ தெரியாது. 

'லைப் ஆஃப் பேர்ட்ஸ்'(life of birds) நிகழ்ச்சிக்கு, இலக்கியங்களின் உதவியுடன், எந்தப் பறவை இனம் உருமறைப்பு அல்லது அதுபோன்றவற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதை ஆராய்வதற்காக நாங்கள் ஒரு ஆராய்ச்சி உதவியாளருக்கு விளம்பரம் செய்தோம். அதற்கு மூவாயிரம் விண்ணப்பங்கள் வந்தன, அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மூவாயிரம் நபர்களை உண்மையாகவும் நேர்மையாகவும் தேர்வுசெய்யும் எந்த வழிமுறையும் உலகிலில்லை. சிவப்பு முடி இல்லாத அனைவரையும் நீக்கிவிடலாம், அது ஒரு வழியே, ஆனால் அதுவும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை சுமார் ஐந்நூறாக மட்டுமே குறைத்திருக்கும்

வெகு சில பிரபலமான இயற்கை வரலாற்று படப்பிடிப்பாளர்களில் நீங்களும் இருக்க காரணம் என்ன?

நான் ஒரு பிரபலம் என்றால் அதற்கு ஒரே காரணம் நான் நீடித்த காலமாக இதை செய்துகொண்டிருக்கிறேன் என்பது தான். கடந்த எழுபது வருடங்களாக திரையில் தோன்றிக்கொண்டே இருக்கிறேன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நீங்கள் பாலைவனங்கள், காடுகள், மலைப்பகுதிகள், புல்வெளிகளில் படப்பிடிப்பு செய்துள்ளீர்கள். ஆனாலும் அலைகளுக்கு அடியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் உங்களை மீண்டும் மீண்டும் கடலுக்கு இழுத்துச் செல்லும் காரணம் என்ன?

பல பத்தாண்டுகளாக, நான் உலகம் முழுவதும் பலவிதமான வாழ்விடங்களையும் பிராந்தியங்களையும் பற்றிய ஆவணப்படங்களை தயாரித்துள்ளேன். உலகத்தின் ஒரு பெரிய பகுதியை உள்ளடக்கிய ‘கடல்’ தவிர்க்க முடியாத பல கண்கவர் வாழ்விடங்களையும் உயிரினங்களையும் கொண்டுள்ளது. இருப்பினும், நீருக்கடியில் உள்ள உலகத்தை அணுகுவது எப்போதும் கடினமாகவே இருந்தது, படப்பிடிப்பு செய்வது அதனினும் கடினம். இப்போது விஞ்ஞானிகள் தொடர்ந்து பல புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து உள்ளனர். அதனால் ஒரு நூற்றாண்டுக்கும் குறைவான காலத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிகவும் முன்னேறி, விஞ்ஞானிகளால் கடலின் ஆழமான பகுதிகளுக்கு கூட செல்ல முடிகிறது. இப்போது நம்மால் முன்பைவிட சிறந்த படங்களையும் எடுக்க முடிகிறது, இவை அனைத்தும் சேர்ந்து கடலில் படப்பிடிப்பு செய்வதற்கு இது ஒரு அற்புதமான காலமாக மாறி இருக்கிறது.

இது ஒரு முக்கியமான காலகட்டமும் கூட. ஒரு ஆரோக்கியமான கடலை நாம் எந்த அளவுக்குச் சார்ந்துள்ளோம் என்பதையும், அதற்கு நாம் எந்த அளவுக்கு சேதம் விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் உணரத் தொடங்கியுள்ளோம். "பெருங்கடல்"(Ocean) என்ற ஆவணப்படத்தில், இந்த கதையையும் சொல்ல முயற்சி செய்துள்ளோம், மேலும் அலைகளுக்கு அடியில் உள்ள உயிர்கள் மீண்டு வர அனுமதிப்பதன் மூலம் நமக்கு ஏற்படும் நன்மைகளையும் வெளிப்படுத்த முயன்றுள்ளோம்.

பூமி வெப்பமயமாதலில் மனிதர்களின் தாக்கம் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஆழ்கடலில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்க்கை அது போலவே தொடர்கிறது என்ற உணர்வு இன்னும் நிலவுகிறது. இது உண்மையா, அல்லது மேற்பரப்பில் நாம் செய்வது ஆயிரக்கணக்கான மீட்டர்களுக்கு அடியில் விளைவுகளை ஏற்படுத்துமா?

‘ஆழ்கடல்’ நாம் முன்பு நினைத்ததைப் போல தனிச்சிறப்பற்ற வெறும் படுகுழி இல்லை, மாறாக அதில் பல வியக்கத்தக்க அம்சங்களும் வாழ்விடங்களும் உள்ளன. கடலின் மற்ற எல்லா பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஆழ்கடலைப் பற்றி நமக்கு இன்னும் குறைவாகவே தெரியும். நமக்குத் தெரிந்தவரை, ஆழ்கடலில் வாழ்க்கை மெதுவாகவே நடைபெறுகிறது. அங்கு குறைந்த ஆக்சிஜன் மற்றும் குறைந்த ஊட்டச்சத்துகள் உள்ளன, மேலும் செல்லுலார் செயல்முறைகள் மெதுவாகவே நடக்கின்றன என்று நினைக்கிறோம். இதன் விளைவாக, பல உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கின்றன, மேலும் அவை தாமதமாகவே இனப்பெருக்கம் செய்கின்றன.

நாம் கண்டிப்பாக ஆழ்கடலை பல விதங்களில் பாதிக்கிறோம். பல ஆழ்கடல் உயிரினங்கள் தங்கள் உணவிற்காக மேற்பரப்பையே சார்ந்திருக்கின்றன மேற்பரப்பில் ஏற்படும் கடல்வாழிகளின் பற்றாக்குறையால் ஆழமும் பாதிக்கப்படும். மேலும் பல உயிரினங்கள் ஆழத்திற்கு மேற்பரப்பிற்கும் இடமாறிக்கொண்டே இருக்கும். மேற்பரப்பில் அவை எளிதாக கிடைக்கும் என்று அவற்றை பிடிப்பதால் ஆழ்கடலின் சுற்றுசூழலையே அது பாதிக்கும். பிளாஸ்டிக் நம் சூழலை சேதப்படுத்தும் விதம் நாம் அனைவரும் அறிந்ததே, ஆனால் அவை பெருங்கடல்களின் ஆழத்திலும் காணப்படுகின்றன. முறையற்ற மீன்பிடிக்கும் செயல் கடல்வாழ் உயிர்களை பாதிக்கிறது. இன்னொறும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். கடலின் மேற்பரப்பை பாதிக்கும் எந்த செயலும் ஆழ்கடலையும் பாதிக்கும்.

கடந்த 40 ஆண்டுகளில் திமிங்கலங்களின் எண்ணிக்கை அபாரமாக மீண்டுள்ளது. மனிதர்களால் அச்சுறுத்தப்படும் மற்ற உயிரினங்களுக்கும் இதேபோன்ற மறுமலர்ச்சி சாத்தியம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? 

திமிங்கலங்களின் மீட்பு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது என்றாலும் இன்னும் முழு மீட்புப்பணி முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். சர்வதேச ஒப்பந்தங்களின் மூலம் இந்த திமிங்கலங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க வேகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இத்தகைய பிரம்மாண்டமான, மெதுவாக வளரும் உயிரினங்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு தான். இதுபோன்ற மற்ற உயிரினங்களுக்கும் இது சாத்தியமாகலாம். 

இப்போது கடலின் செயல்பாடு பற்றி நாம் அதிகம் புரிந்து வைத்துள்ளோம். சுற்றுச்சூழல் மீது அதிக அக்கறை கொண்டு, கண்மூடித்தனமான சேதத்தைத் தவிர்த்து, மீன் பிடிக்க வேண்டும். நாம் வாழ்விடங்களை முறையாக பாதுகாக்கும்போது, அங்கு வந்து செல்லும் கடல்வாழ் உயிர்களும் இடம்பெயரும் இனங்களும் கூடப் பயனடைவதை கண்டிருக்கிறோம். மேலும் கடலில் முறையாகப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அமைப்பது அவசியமாகும், அவை மீன் வகைகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்பதை தெளிவாக்குகிறது, இதன்மூலம், மிகக் குறுகிய காலத்தில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள மீன் இருப்புகளும் அதிகரிக்கும். இது மீன்பிடிக்கும் சமூகங்களுக்கு நன்மையாகவே இருக்கும். அதிகமான மீன்களை பிடிக்கவும் உதவும்.
வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக, இந்த ஆண்டு 84% பவளப்பாறைகள் வெளுத்துப்போயுள்ளன. இந்த சேதத்தை இனி சரிசெய்ய முடியாதா?

நீடித்த கடல் வெப்ப அலைகள், பவளப்பாறைகள் வெளுப்படைவதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும், மேலும் இது மிகவும் தீவிரமாகவும் தொடர் வழக்கமாகவும் மாறி வருவதால் பவளப்பாறைகளின் எதிர்காலம் குறித்த பல கணிப்புகள் அச்சமூட்டுகின்றன. இருப்பினும் அதன் மீட்சியை பற்றி நல் எதிர்பார்ப்பும் உள்ளது.

நாம் அறிந்தவரை, சாதாரண சூழ்நிலைகளிலும் பவளப்பாறைகள் வெளுப்படைதல் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. வெப்ப அலைகள் மிகவும் குறுகிய காலமே இருப்பதால் பவளம் விரைவாக மீண்டு வந்துவிடும். இருப்பினும், ஒரு வெப்ப அலை நீண்ட காலம் தொடர்ந்தால், பாசிப் படலத்தால் சூழப்பட்டு, பவளம் இறந்த விடக்கூடும். ஆரோக்கியமான மீன் வளம் உள்ள இடங்களில், மேய்ச்சல் மீன்களால் பாசி வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுகிறது, இது பவளத்திற்கு மீண்டு வர அதிக வாய்ப்பை அளிக்கிறது.

எனினும் இது இப்படியே நீடிக்கும் என சொல்ல முடியாது. நாம் தொடர்ந்து பூமியை வெப்பமாக்கினால், காலப்போக்கில் பெரும்பாலான பவளப்பாறைகள் உண்மையிலேயே மறைந்துவிடும். நாம் மீன் வளத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதின் மூலம் பவளம் மீள்வதற்கான அதிக நேரத்தைக் கொடுப்பதோடு, எதிர்காலத்தில் பவளப்பாறைகள் இருப்பதற்கான ஒரு வாய்ப்பையும் நமக்கு அது அளிக்கும்.

இக்கால சூழலியல் திரைப்பட தயாரிப்பாளர்களில் யாரேனும் உங்களை கவர்ந்தவர்கள் இருக்கிறார்களா?

நிறையப் பேர் இருக்கிறார்கள். சைமன் கிங்(Simon King) ஒரு அற்புதமான கேமராமேன்,மிகச்சிறந்த இயற்கை ஆர்வலர். சார்லட் உஹ்லென்புரோக்(Charlotte Uhlenbroek) இன்னொருவர், அவருக்கு இத்துறையில் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். பில் ஓடி(Bill Oddie) இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தைக் கொண்டுவருகிறார். நான் செய்யும் பணியை செய்ய காத்துக்கொண்டிருக்கும் நல்லவர்களுக்கு குறைவில்லை, "கடவுளே, இவர் ஐம்பது வருடங்களாக இங்கே இருக்கிறாரே. ஏன் ஓய்வெடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது?" என்று வரிசையில் காத்திருப்பவர்களும் இருக்ககூடும். அவர்கள் விலங்குகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதுதான் ஒருவர் எதிர்பார்க்கக்கூடியது, மேலும் விலங்குகளை பற்றிய அறிவும் பற்றும் இருந்தால் போனஸ்.

பொதுமக்கள் பார்க்க விரும்பாத விலங்குகளைப் ஆவணப்படங்களின் வழியே காண்பிப்பதில் சிரமங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

இதற்கு ஆமாம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். பார்வையாளர் எல்லா விலங்குகளையும் குதூகலத்துடன் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது இல்லையா. சில விலங்குகளை பார்க்க மனத்தடை இருக்கலாம். ஆனால் அது ஒரு வகையில் சாதகமானதுதானே. ஏனென்றால் அந்த விலங்குகளைப் பற்றிய பல புதிய கதைளை அவர்களுக்கு நாம் கூறலாம். அதனால் அந்த விலங்கின் மீதான ஆர்வத்தையும் நம்மால் எற்படுத்த முடியும் இல்லையா? 

என் பார்வையில் இது ஊடகவியலின் மூலம் (Public Service Broadcasting) என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு அளவுகோலும் தான். பிரபலமான விலங்குகளைப் பற்றி மட்டும் நிகழ்ச்சிகளை உருவாக்குவது அதன் நோக்கமாக இருக்கக் கூடாது. பிற உயிர் இனங்களின் மீதான கவனமும் நமக்குத் தேவை.
நீங்கள் இதுவரை உண்டதிலேயே மிகவும் கவர்ச்சியான உணவு எது?

கம்பளிப் பூச்சிகள். நியூ கினியாவில் உள்ள பெரிய அந்துப் கம்பளிப் பூச்சிகள்(moth caterpillars). அவற்றின் முடிகளை நெருப்பில் எரித்து நீக்கியபின் ட்விக்லெட்ஸ் (Twiglets - ஒருவகைப் பலகாரம்) போல அவை இருக்கும்.

படப்பிடிப்புகள் முற்றிலும் தவறாக நடந்தேறியதுண்டா, அல்லது ஒத்துழைக்காத (uncooperative) விலங்குகள் ஏதேனும் இருந்ததுண்டா?

யாரும் என்னிடம் இதைப் பற்றி கேட்டதில்லை, என்னால் இதற்கு பதில் கூற முடியுமா என்று கூட தெரியவில்லை. சில விஷயங்களைத் தவறவிட நேர்ந்ததுள்ளது. விமான நிறுவன வேலைநிறுத்தம் காரணமாக, நாங்கள் கிறிஸ்மஸ் தீவு நண்டுகளை (Christmas Island crabs) படமெடுக்கச் செல்ல முடியாமல் ஆகிற்று. ஆனால் ஆஸ்திரேலிய விமானப்படையின் உதவியால், சரியான நேரத்திற்கு நாங்கள் அங்கு சென்றடைந்தோம்.

ஆ... ஒரு நிமிடம், வேறொறு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. 1955ஆம் ஆண்டு, வாலஸ்(wallace) என்பவர் முதன்முதலாக கண்ட birds of paradise என்னும் பறவைகளை காண நியூ கினியாவிலுள்ள அரு தீவுகளுக்கு(Aru Islands) செல்ல திட்டமிட்டேன்.

1955இல் அது மிகவும் முதிர்ச்சியற்ற முட்டாள்தனாமான ஒரு முயற்சி. இந்தோனேசியர்கள் அப்போதுதான் சுதந்திரம் பெற்றிருந்தனர், அவர்களின் நிர்வாகம் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஜகார்த்தாவில் ஒரு கேமராவுடன் நாங்கள் வந்து நின்றோம், ஒரு வார்த்தை கூட மலாய் மொழி தெரியாது, யாரிடமிருந்தும் அறிமுகக் கடிதம் கூட எங்களிடம் இல்லை. அது அபத்தமானது. நாங்கள் அரு தீவுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள். நாங்கள் இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று சொன்னோம், ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் தீவை ஹாலந்திடம் இருந்து உரிமை கோர முயன்று கொண்டிருந்ததால், நாங்கள் உளவாளிகள் என்று நினைத்தார்கள்.

எனவே, நாங்கள் அவசரமாக வேறு எதையாவது யோசித்து, கொமோடோ டிராகன்களை (Komodo dragons) படமெடுக்கச் சென்றோம், ஆனால் அதையும் எங்களால் எடுக்க முடியவில்லை. அது ஒரு கையாலாகாத முயற்சி, ஆனாலும் மிகவும் வேடிக்கையான அனுபவமாக இருந்தது.

நீங்கள் இன்னும் பார்க்க விரும்பும், ஆனால் பார்க்காத இடங்கள் ஏதேனும் இருக்கின்றனவா?

நான் மங்கோலியாவுக்கும் மத்திய ஆசியாவுக்கும் செல்லவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். இருப்பினும் நான் போனதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளது. அங்குள்ள விலங்குகள் மிகவும் அரிதானவை ஆனாலும் அந்த நிலப்பரப்பு மிகவும் வறண்டதாகவும், உயரமானதாகவும் இருப்பதால், அங்கு விலங்கினங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நீங்கள் மைல்கணக்காக நடந்தாலும் ஒரு விலங்கையும் பார்க்க முடியாமல் போக வாய்ப்புள்ளது. 

அதே போல் நான் கோபி (Gobi) பாலைவனத்தில் படப்பிடிப்பு நடத்தியதில்லை, இத்தனை சிரமப்பட்டு பணம் செலவுசெய்து உங்களுக்கு படம்பிடிக்க எதுவுமே கிடைக்காமல் போகலாம். ஆனாலும் அங்கு செல்லவே விரும்புகிறேன்.
உங்களிடம் பல அரிய தொல்லுயிர் படிமங்களின் (fossil collection) சேகரிப்பு இருக்கிறதல்லவா?

நான் மாணவனாக பல்கலைக்கழகத்தில் இணைந்தபோது, மத்திய ஜுராசிக் காலத்து (Middle Jurassic) தொல்லுயிர் படிமங்களின் நல்ல சேகரிப்பை வைத்திருந்தேன். என் தந்தை கல்லூரியின் முதல்வராக இருந்தார், அது பிற்காலத்தில் லீசெஸ்டர் பல்கலைக்கழகமாக(University of Leicester) மாறியது. அங்கே ஒரு புவியியல் துறை (Geology department) தொடங்கப்பட்டபோது, அவர்களிடம் எந்தச் சேகரிப்புகளும் இல்லை, அதனால் எனது பொருட்களை அங்கே நன்கொடையாக அளித்தேன். இருந்தாலும், இன்னும் என்னிடம் சில பொருள்கள் உள்ளன, ஆனால் முக்கிய சேகரிப்புகள் இப்போது என்னிடம் இல்லை.

அப்போது இந்த தொல்லுயிர் படிமத்தை ஒரு விதை என்று தான் நினைத்தேன், ஆனால் இது டெவோனியன் கவச மீன்களில் (Devonian armoured fish) ஒன்றான ஆர்த்ரோடைர் (arthrodire) என்பதன் தோல் செதில் (dermal scute). இது ஆஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள கோகோ (Gogo) என்ற இடத்தில் இருந்து கிடைத்தது. 

இதை இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை(Natural History Museum) சேர்ந்த ஒரு தொல்லுயிரியலாளர் கண்டுபிடித்தார். நான் அந்த இடத்தைப் படமெடுக்க விரும்பினேன், அதனால் புவியியல் சேவை தலைவரிடம் அனுமதி கேட்டேன். அவர்கள் ஏற்கனவே அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டார்கள், அங்கு இப்போது எதுவுமே இல்லை என்று என்னிடம் கூறினார். ஆனாலும், அவர் இறுதியாக எங்களுக்கு அனுமதி கொடுத்ததுடன், தானும் கூட வருவதாக கூறினார்.

நாங்கள் ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தோம், அந்த காட்சி எனக்குப் பகல் வெளிச்சம் போல இன்றும் தெளிவாக நினைவிருக்கிறது, அது மிக மெதுவாகத் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது, நான் தரையில் இந்த தொல்லுயிர் படிமத்தை பார்த்தேன். ஹெலிகாப்டரின் கால் கம்பிகள் அதை ஒட்டி சில அங்குல தூரத்தில் தரையைத் தொட்டது. நான் முதலில் வெளியே வந்து இதை கையில் எடுத்தேன். தலைவர் வெளியே வந்தவுடன் ‘இது என்ன?’ என்று கேட்டேன், அவர் அதுவரை யார் கண்ணிலும் படாமல் இருந்த இதைப்பார்த்து “திருட்டு பயலே” என்று கூறினார். அவரது பெருந்தன்மையால், இதை என்னிடமே வைத்துக்கொள்ள அவர் அனுமதித்தார்.

இது மற்றொரு பொருள், ஒரு முதுகெலும்பு தொடர்(series of vertebrae) இக்தியோசாரின் (ichthyosaur - அழிந்துபோன கடல் உயிர்) மார்பு முதுகெலும்புகள். நான் நிறைய அயல்நாட்டு மீன்களை(tropical fish) வளர்ப்பேன், அதனால் மீன் தொட்டியில் வைப்பதற்காகப் பாறைகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் ஒருவர் கீழே மலையில் வசித்து வந்தார், அவர் தன் தோட்டம் முழுவதும் பாறைகளால் நிரம்பி இருப்பதாகவும், நான் வேண்டிய அளவு பாறைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார். நான் அங்கே சென்றபோது, இது அங்கே சாதாரணமாகக் கிடந்தது. அந்த வீட்டிற்கு முந்தைய உரிமையாளர்களில் ஒருவர் தொல்லுயிர் படிமங்களைச் சேகரிப்பவராக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

உங்களுடைய பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைக்கொள்ளும் விஷயம் ஏதாவது இருக்கிறதா? 

நம் பேரக்குழந்தைகள் ஒரு யானையை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்க்க நேரிடும் என்றால் அது திருப்தியான விஷயாமாக இருக்குமா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
நீங்கள் வரம்புக்கு மீறிய நுகர்வால், வளர்ச்சியால் வரக்கூடிய பிரச்சனைகளைப் பற்றி பேசியுள்ளீர்கள். அதை நாம் எப்படி அணுக வேண்டும்?

இந்த பூமியில் நமக்கு வரம்புக்குட்பட்ட இயற்கை வளம் தான் உள்ளது. வரம்புக்குட்பட்ட சூழலில் வரம்பற்ற நுகர்வு, வளர்ச்சி சாத்தியம் என்று நினைப்பவர் ஒரு பைத்தியக்காரராகவோ அல்லது ஒரு முட்டாள் பொருளாதார நிபுணராகவோ தான் இருக்க முடியம்.

நீங்கள் ஒரு தொலைபேசியை எடுத்து சீன அதிபர் ஜி (Xi) அல்லது பிற உலகத் தலைவர்களுடன் பேச நேர்ந்தால், அவர்களிடம் என்ன சொல்வீர்கள்?

தேசிய நடவடிக்கைகளை(National ambitions) ஒதுக்கி வைத்துவிட்டு, உயிர் பிழைப்பதற்கான சர்வதேச நடவடிக்கைகளை(international ambition of survival) தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுவேன்.

இத்தகைய சூழலில் நாம் என்ன செய்ய வேண்டும்? 

நாம் செய்யவேண்டிய மிகச் சிறந்த செயல் என்பது, எதையும் வீணாக்காமல் இருப்பது தான். மின்சாரம், காகிதம், உணவு ஆகியவற்றை வீணாக்காதீர்கள். இயற்கை வளத்தை சுற்றுச்சூழலை, அதில் உள்ள விலங்குகளை, தாவரங்களை கவனித்துக் கொள்ளுங்கள். இது நம்முடைய உலகம் மட்டுமல்ல, அவற்றின் உலகமும் கூட.

இப்பூமியின் மீதான மனிதனின் ஆற்றலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மை என்னவென்றால், இப்பூமியில் இதற்குமுன்னரும் இப்போதும் மனிதனை தவிர வேறு எந்த உயிரும் பிறவற்றை அடக்கி ஆளும், இப்பெரும் ஆற்றலை அடைந்ததில்லை. இந்த ஆற்றலை நாம் பெரிதும் கவனமின்றி சுயநலமாகவே பயன்படுத்தியுள்ளோம். இத்தகைய ஆற்றலை பொறுப்புடன் கையாள்வதே நம்மையும் மற்ற உயிர்களையும் காப்பாற்றும்.

பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் விதியையும் எது தீர்மானிக்கும்?

அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மனிதர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் பூமியிலுள்ள அனைத்து உயிர்களின் விதியையும் தீர்மானிக்கும். நான் என்னுடைய நல்லூழாலோ அல்லது தற்சயலாகவோ ஒரு பெரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்போது நினைக்கையில் என்னுடைய வாழ்க்கை எத்தனை மகத்தானதாக உற்சாகமாக இருந்திருக்கிறது என்று எண்ணி நிறைவுகொள்கிறன். அதேசமயம் நான் வாழும் காலத்திலேயே என் கண் முன்னே நான் சென்று திரிந்த அழகிய இயற்கை உலகம் இன்று அழிந்துகொண்டிருப்பதை பார்க்கையில் மிகவும் வேதனைப் படுகிறேன்.

இப்போது என்னுடைய முயற்சி என்பது நாம் செய்யும் அழிவுகளை எடுத்துக்காட்டி அதை நாம் திருத்திக்கொண்டு மனித இனமும் பிற உயிர்களும் ஒத்திசைவுடன் வாழ முடியுமா என்பது தான். நம்முடைய மக்கள் தொகை, எரிசக்தி, உணவு பழக்கம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படாதவரை அழிவின் தீவிரத்தை குறைக்கமுடியாது. நம்முடைய உலகில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளே பறவைகளில் எழுபது சதவீதம் இருக்கின்றன. மனிதர்களும் மனிதர்களுக்காக வளர்க்கப்படும் கால்நடைகளும் தவிர்த்தால் சுண்டெலியிலிருந்து திமிங்கிலங்கள் வரை வெறும் நான்கு சதவீத பாலூட்டிகளே இருக்கின்றன. பல பழங்குடியினர் சைவ உணவையே உண்கின்றனர் தேவைக்கும் அதிகமாக ஒரு பொருளும் அவர்களிடம் இல்லை.

நம்மால் கைப்பற்றப்பட இப்பெரும் நிலப்பகுதிகளை மீண்டும் வனங்களாக மாற்றவேண்டும். நமது விவசாய முறையிலே மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் இது சாத்தியப்படும். நிறைய நாடுகள் குறைந்த இடங்களில் தொழில்நுட்ப உதவியுடன் அதிக விளைச்சல் செய்கின்றனர். கடல் இப்புவியின் உயிர்நாடி எனலாம். பூமி வெப்பமாவதை அவை பெரிதும் தடுக்கிறது. நிலமும், கடலும், பல்லுயிரும் சரியான சதவிகிதத்தில் இயங்கினால் மட்டுமே நம்முடைய இந்த பூமியும் நிலைத்து இயங்கும்.

முதன்முதலில் நாசா (NASA) நம்முடைய பூமியை ஆகாய வெளியில் படம்பிடித்து அனுப்பியபோது அதே நேரத்தில் அதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை பரவசத்திலும் அச்சத்திலும் ஆழ்த்திய தருணம் அது, பெருவெளியில் தனியாக சுழலும் நம் சிறிய பூமி, அங்கிருந்து பார்க்கையில் பூமியின் வளங்கள் முடிவற்றவை என்று தோன்றும் ஆனால் நம் வளங்கள் மிக மிக அரிதானவை, மீட்கமுடியாதவை. ஐந்து பெரும் அழிவுகளை இப்பூமி கண்டுள்ளது. மகத்தான உயிர்கள் பிறந்து அழிந்திருக்கின்றன. ஆனால் கடந்த பல மில்லியன் நூற்றாண்டுகளில் பூமி இப்போது தான் ஒரு சமநிலையை அடைந்துள்ளது. அறிவியலாளர்கள் இதை ஹோலோசீன்(Holocene) என்கின்றனர். இது ஒரு பொற்காலம். இந்த பொற்காலம் நீடிக்க வேண்டும்.

கேள்விகள் தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: விஷ்ணு குமார்
நன்றி: National geography, Unric, BBC

விஷ்ணுகுமார்
விஷ்ணு குமார் புதுச்சேரியை அடுத்த திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இவரது மொழிபெயர்ப்பில் கட்டுரைகள் வெளியாகியுள்ளது. கவிதையியல், தத்துவம் மீது ஆர்வமுள்ளவர். தற்போது பணிநிமித்தம் பெங்களூரில் வசிக்கிறார்.