| டேவிட் அட்டன்பரோ |
வேட்டைக்காரரான ஆர்ச்சிபால்டு கனடாவின் அடர்காடொன்றில் நீரெலி (Beaver) வேட்டையில் ஈடுபட்டிருந்தார். உடன் அவரது மனைவி அனஹாரியோவுமிருந்தார். இங்கிலாந்திலிருந்து கனடாவுக்கு தனது 17-ம் வயதில் வந்த ஆர்ச்சிபால்டு வட அமெரிக்க ஓஜிப்வே (Ojibwe) பழங்குடி மக்களின் வாழ் முறைகளில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர்களுடன் வாழ்ந்து , வேட்டையாடுதல், சிறு விலங்குகளைப் பொறிவைத்துப் பிடித்தல், அசாதாரண வாழ்விடங்களிலும் பிழைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றுக்கொண்டார்.
அச்சமயத்தில் நீரெலிகளின் பட்டுப்போன்ற உரோமம் நல்லவிலை கொண்டிருந்தது. அந்தத் தோலை விற்பது பெரும் பொருளீட்டிக் கொடுத்ததால் அதையே இவரும் செய்யலானார். பின்னர் அவரது அடையாளமே அந்த சுற்றுவட்டாரெமெங்கும் தேர்ந்த நீரெலி வேட்டைக்காரர் என்றானது.
அன்றைக்கும், மொஹக் (Mohawk) பழங்குடியினத்தைச் சேர்ந்த அனஹா விலங்குகளை வேட்டையாடும் அவரது அறமற்ற செயலை வழக்கம்போல சுட்டிக்காட்டியபடி விவாதித்துக்கொண்டே வந்தார். அப்போது ஒரு தடுப்பணையிலிருந்த மரக்கட்டைக்குள்ளிருந்து ஓடிய ஒரு நீரெலியைப் பொறி வைத்துப் பிடித்துக் கொன்ற ஆர்ச்சிபால்டு அதன் தோலை உரித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
சிறிது நேரத்தில் நீரெலியைப்பிடித்த இடத்திலிருந்து அதன் இரு குட்டிகளும் மனிதக் குழந்தைகள் போலவே அழும் ஒலியைக் கேட்ட அனஹா திரும்பவும் அந்த நீரெலி தங்கி இருந்த இடத்திற்கே சென்று அந்தக் குட்டிகளை எடுத்துக்கொண்டார். தாயைப்பிரிந்த அந்தக்குட்டிகளின் கதறலும், காதல் மனைவி அனஹாவின் கண்ணீருடன் கூடிய மன்றாட்டும் ஒரு வேட்டைக்காரராக இருந்த ஆர்ச்சிபால்டை ஒரு இயற்கையியலாளராக மாற்றியது.
அந்தக்குட்டிகளுக்கு ஜெல்லி ரோல், ராவைட் என்று பெயரிட்டு தங்களின் செல்லப்பிராணிகளாக அவற்றை வளர்த்துப் பாதுகாத்த ஆர்ச்சிபால்டு பின்னர் நீரெலிகள் ரோமத்துக்காகக் கொல்லப்படவேண்டிய எளிய விலங்குகளல்ல என்பதையும், அவற்றின் புத்திசாலித்தனம், அபாயகரமாகக் குறைந்து கொண்டிருந்த அவைகளின் எண்ணிக்கை, அவற்றைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஆகியவற்றையெல்லாம் உலகிற்கு மிக அழுத்தமான செய்தியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரின் மிகப் பிரம்மாண்டமான டிமாண்ட்ஃபோர் அரங்கு அன்று முழுவதுமாக நிறைந்திருந்தது. "Grey Owl." என்றழைக்கப்பட்டிருந்த பிரபல இயற்கைப் பாதுகாவலர் ஆர்ச்சிபால்டு பெலானி (Archibald Belaney) அங்கு அவரது இந்தக்கதையை உணர்ச்சிபூர்வமாக சொல்லிக்கொண்டிருந்தார்.
| ஆர்ச்சிபால்டு பெலானி |
உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் இயற்கை வளம் குறித்து முழுதும் அறிந்திருந்த, அந்நாட்டின் தாவர விலங்கு வகைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருந்த, சூழல் சீர்கேடு உயிரினங்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும் என்று எச்சரிக்கை செய்த ஆர்ச்சிஃபால்டின் உரையைக் கேட்கத்தான் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.
அது 1936-ம் ஆண்டு, மனிதன் கண்மூடித்தனமாக இயற்கை வளங்களை சுரண்டத்துவங்கியிருக்காத காலமாதலால் சூழல் சீர்கேடு குறித்து யாரும் அப்போது சிந்தித்துக்கூட இருக்கவில்லை. இயற்கையைக் குறித்த அவரது பரந்த அறிவையும் ஒரு நீரெலியைக் காப்பாற்ற அவர் கொண்டிருந்த முனைப்பும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது அரங்கில் தனது மூத்த சகோதரன் ரிச்சர்டுடன் அமர்ந்திருந்த பத்து வயது சிறுவன் டேவிட் அட்டன்பரோவுக்கு ஆர்ச்சிபால்டு ஒரு தேவதூதனைப்போலத் தோன்றினார். அவர் மீது அவனுக்குக் கட்டுக்கடங்காத மதிப்பு உருவாகியது. அவர் அன்று கனடாவின் காடுகள், உயிரினங்கள் மற்றும் நீரெலிகளைக் குறித்த குறும்படங்களையும் காண்பித்தார்.
கனடாவின் இயற்கை வளங்களை பாதுகாப்பது எத்தனை அவசியமானது என்பதைக் குறித்த அந்த உரையில் இயற்கையில் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இடையேயிருந்த பகிர்வாழ்வையும் அதனால் உண்டாகி இருந்த சூழல் சமநிலையையும் எடுத்துரைத்த அவர், மனிதனின் கட்டுப்பாடற்ற சுரண்டல், பெரும் அபாயத்துக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். இளம் டேவிட் அட்டன்பரோவுக்கு அந்தச்செய்தி மிக முக்கியமான தாக்கத்தை உண்டாக்கியது.
அவர் சொன்ன ’’நினைவு கொள்ளுங்கள் நாமெல்லோரும் இயற்கையை சார்ந்திருக்கிறோம் இயற்கை நம்மை சார்ந்திருக்கவில்லை’’ என்னும் செய்தி டேவிட்டுக்கு அன்றிலிருந்து தாரகமந்திரமானது. மிக அந்தரங்கமானதும் அவருக்கே உரித்தானதாகவும் ஆகிவிட்ட அன்றைய உரைதான் தன் தம்பியின் பிற்கால வாழ்வைத் தீர்மானித்த கணம் என்று பின்னர் ரிச்சர்ட் சொல்லி இருக்கிறார். இந்த நிமிடம் வரையிலும் ஒரு தீவிரமான இயற்கையியலாளராக டேவிட் இருப்பதற்கு அந்தக் கணமே துவக்கப் புள்ளியாக அமைந்தது அந்த நாள் இரு சகோதரர்களின் வாழ்வையும் தீர்மானித்தது. அன்றிலிருந்து டேவிட் இயற்கையை நோக்கித் திரும்பினார். ரிச்சர்ட் நல்ல கதை சொல்லியாகவும் கலைஞராகவும் ஆகினார்.
![]() |
| அட்டன்பரோ |
டேவிட் அட்டன்பரோ லெய்செஸ்டர் நகரில் பிறந்து வளர்ந்தார். அந்நகரின் பல்கலைக்கழகத்தின் முதல்வராக டேவிடின் அப்பா ஃப்ரெட்ரிக் அட்டன்பரோ இருந்ததால் அவர்களின் குடியிருப்பும் வளாகத்துக்குள்ளேயே இருந்தது, பல்கலைக்கழகத்தின் பின்னால் பெரிய கல்குவாரியும், பல நீர்க்குட்டைகளும், வயல்களும் இருந்தன.
டேவிட் தனது பெரும்பாலான நேரத்தை அங்கேதான் செலவழித்தான். அந்தக் குவாரியில் பல புதைபடிமங்கள் டேவிடுக்குக் கிடைத்தன. அதில் மிக ஆர்வமுண்டாகி பல முக்கியமான புதைபடிமங்களை (Fossils) அவன் தொடர்ந்து சேகரித்துக்கொண்டிருந்தான். அந்த வயதிலேயே ஒரு புதைபடிமவியலாளர் (Palaeontologist) என்று சொல்லுமளவுக்கு அவற்றைக் குறித்த அறிதலும் ஏராளமான சேகரிப்பையும் டேவிட் கொண்டிருந்தான் அந்தப்பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையின் ஆய்வகச் சோதனைகளுக்குத் தேவைப்பட்ட நீர் வாழ் உயிரினங்களை கல்குவாரி நீர்க்குட்டைகளிலிருந்து பிடித்து விற்ற டேவிடுக்கு அந்த இளம் வயதிலேயே தனது ஆர்வத்தை ஒரு சிறு தொழிலாகச் செய்யத் தெரிந்திருந்தது. 7 வயதிலிருந்தே அவர் ஏராளமான பறவை முட்டைகளைச் சேகரித்து பத்திரப்படுத்தி இருந்த டேவிட் பறவை முட்டைகளை சேகரிக்க சைக்கிளில் நெடுந்தூரம் பயணித்தான்.
அவனது ஒரு பிறந்தநாளில் அவரின் சகோதரி (இரண்டாம் உலகப்போரில் அநாதைகளாகி விட்டிருந்த ஜெர்மெனியைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகளை டேவிடின் பெற்றோர் தத்தெடுத்து வளர்த்தார்கள்) மரப்பிசினில் சிக்கி புதைபடிமமாகி விட்டிருந்த பூச்சியை பரிசளித்தார். பின்னர் டேவிட் ஆயிரக்கணக்கான பிசினில் சிக்கிய விலங்குகளின் படிமங்களைச் சேகரித்துப் பாதுகாத்தார்.
![]() |
| ரிச்சர்ட் அட்டன்பரோ |
1993-ல் வெளியான உலகப்புகழ்பெற்ற Jurassic Park திரைப்படத்தில் டேவிடின் சகோதரர் ரிச்சர்ட் அட்டென்பரோ (Richard Attenborough) மரப்பிசினில் சிக்கி இருந்த கொசுவின் ரத்தத்திலிர்ந்து டயனோசர்களை உண்டுபண்ணியதை நாம் பார்த்தோமல்லவா?
புதைபடிமங்களும், பல்லிகளும், தவளைகளுமாக டேவிடுக்கு இளமையில் இருந்த இயற்கையோடான நேரடித்தொடர்பு மேலும் மேலும் அதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அவருக்கு உண்டாக்கியது. அந்தக் காலகட்டம்தான் வாழ்நாள் முழுவதும் அவர் கொண்டிருந்த இயற்கையோடான பிணைப்புக்கான அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்தது. அந்த உணர்வைத்தான் டேவிட் அட்டன்பரோ தனது ஆவணப்படங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு இன்று வரை கடத்தியுள்ளார்.
அவரது ரகசியம் பேசும் மொழியில் இயற்கையின் அற்புதங்களைக் காண்பது பரவசமளிக்கும் அனுபவம். கனிகள் வெடித்துச் சிதறுகையிலும், புதிய மலர்களை, உயிரினங்களைக் காண்கையிலும் அவரது கள்ளமற்ற, மனமார்ந்த சிரிப்பில் நாமும் மனம் மயங்குவோம். அவரது குரல் அடர்வனங்களின், ஆழ்கடல்களின் பல்லாயிரக்கணக்கான ரகசியக் கதவுகளைத்திறந்து நம்மை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறது. டேவிட் அட்டன்பரோ மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையேயான ஒரு பாலமாகவே இருக்கிறார்.
அவர் அடர்காடுகளை, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிரிகளின் சான்றுகளை, புதைபடிமங்களை, அதிசயத்தாவரங்களை, ஆழ்கடற்பரப்பை, நாம் கற்பனையில் கூடக் கண்டிராத உயிரினங்களை எல்லாம் நம் வீட்டு கூடத்துக்கே கொண்டு வந்தார்.
1926 மே 8-ம் தேதி பிறந்த டேவிட் அட்டன்பரோ, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை வரலாற்றில் பட்டப்படிப்பை 1947-ல் முடித்தார். இரண்டு வருடங்கள் அரசுக் கப்பற்படையில் பணிபுரிந்தார். 1952-ல் அவர் பிபிசி ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்ற விண்ணப்பித்தபோது நிராகரிக்கப்பட்டார். தொடர்ந்த முயற்சிகளுக்குப்பிறகு ஒரு பயிற்சியாளராக மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
1952-ல் பிபிசி தொலைக்காட்சியில் இணைந்த அவர் 1954- ல் அவரது பிரபல ’’Zoo Quest" தொடரை தயாரித்தார். கூடவே அரசியல் விவாதங்கள், தொல்லியல் கண்டுபிடிப்புகள், சிறுகதைகள், தோட்டக்கலை மற்றும் இறையியல் குறித்த நிகழ்வுகளையும் தயாரித்து ஒளிபரப்பினார்.
1965-ல் பிபிசி 2-ன் கட்டுப்பாட்டு அதிகாரியாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது வண்ணத் தொலைக்காட்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கியப்பங்காற்றினார். 1969-ல் Monty Python's Flying Circus என்னும் பெரும்புகழ்பெற்ற நகைச்சுவைத் தொடரை தயாரித்தளித்தவர் அதே ஆண்டில் பிபிசி தொலைக்காட்சிக் குழுமத்தின் இயக்குனராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எட்டு ஆண்டுகள் பிபிசியில் சிறப்பாகப் பணிபுரிந்தாலும், ஒரு அறைக்குள்ளேயே நாளெல்லாம் இருப்பதன் அசௌகரியத்தை அணு அணுவாக உணர்ந்ததால் அந்தப் பணியை 1973-ல் துறந்து முழுநேர இயற்கைத் தொடர்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.
அவரது முதல் சொந்தப் படைப்பாக "Eastwards with Attenborough" என்னும் தென்கிழக்காசியாவின் இயற்கை வரலாற்றுத் தொடர் வெளியானது. பிறகு 1975-ல் The Tribal Eye என்னும் பழங்குடியினரின் கலை வாழ்வைக் குறித்த தொடரையும் 1979-ல் 13 பாகங்களாக, Life on Earth தொடரையும் எழுதித் தயாரித்தார். அதன் அடுத்தடுத்த பாகங்களாக 1984-ல் The Living Planet தொடரும் 1990-ல் The Trials of Life தொடரும் வெளியாகின. அதன் பின்னர் இந்த நாள் வரையில் லட்சோபலட்சம் மக்களின் பிரியத்துக்குரிய ஏராளமான தொடர்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
தொலைக்காட்சித் தொடர்களை பற்றிய ஒரு உரையில் டேவிட் இப்படிச்சொல்கிறார்:
"1952களில் மிகப்பெரிய அற்புதமாகக் கருதப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டியின் முன்பமர்ந்து அதில் நிகழ்சிகள் தொடங்கப்படக் காத்திருந்து கண்கொட்டாமல் அதில் காட்டப்பட்டவற்றை ரசித்தார்கள். பத்தாண்டுகளில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்து சாப்பிடுவது படிப்பது, சச்சரவுகளில் ஈடுபடுவது என்று அதை முற்றாக அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் வண்ணத்தொலைக்காட்சி அறிமுகமானபோது அப்படித்தான் முதலில் ’’ஆஹா வண்ணம்’’ என வியந்து பின்னர் தொடர்ந்த ஆண்டுகளில் அதிலும் சலிப்படைந்தார்கள்.
முப்பரிமாணத்தில் காட்டப்பட்டிருக்கிறது, அதில் ஏராளமான தொழில்நுட்ப சாத்தியங்கள் இருக்கின்றன போன்றவை ஒரு தொலைக்காட்சித்தொடரை முக்கியமாக்கி விடாது. ஒரு தொடர் அது எப்படி ஆழ்ந்து கவனித்து மக்களால் தொடர்ந்து பாராட்டப்படுகிறது என்பதில்தான் அதன் முக்கியத்துவம் இருக்கிறது."
அவரின் இந்தக் கருத்தை அவரது எல்லாத்தொடர்களிலும் நாம் கண்கூடாகப்பார்க்கலாம்.
பிபிசியில் இணைந்துகொள்வதற்கு முன்னரே அவருக்கு திருமணமாகி இருந்தது.
1950-ல் அவர் ஜேன் எலிசபெத்தை மணம் புரிந்து கொண்டார் 1997-ல் ஜேன் மரணிக்கும் வரையிலான 47 ஆண்டு மணவாழ்க்கையில் டேவிட் அட்டன்பரோவிற்கு எல்லாமுமாக அவர் மனைவிதான் இருந்தார். 70 வயதில் மூளை ரத்தக்கசிவினால் ஜேன் அபாயகட்டத்தில் இருக்கையில் டேவிட் நியூஸிலாந்தில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் எனினும் விரைந்து வந்து ஜேனின் கடைசி நிமிடங்களில் அவர் உடனிருந்தார். இறுதிக்கணத்தில் ஜேன் தன் கைகளை இறுகப்பற்றிக் கொண்டதை எப்போதும் நினைவு கூறும் டேவிட், ஜேனின் இழப்பு தன் மொத்த வாழ்க்கையையும் இழந்ததாக ஆக்கிவிட்டதாக குறிப்பிடுகிறார்.
அவருக்கு ராபர்ட் என்னும் மகனும் சூஸன் என்னும் மகளும் இருக்கிறார்கள். ராபர்ட் உயிர்மானுடவியல் பேராசிரியராகவும் (bioanthropology), சூஸன் ஒரு பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர்.
இயற்கை மீதான தனது அதீத விருப்பத்தினால் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் போதுமான அளவு நேரம் செலுத்தத் தவறியதை குற்ற உணர்வுடன் அடிக்கடி டேவிட் குறிப்பிடுவதுண்டு.
உலகம் முழுக்க மிகப்பிரபலமானவராக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவராகத்தான் டேவிட் இருந்தார்.
![]() |
| டேவிட் அட்டன்பரோ (இடது) மணைவி ஜேன் எலிசபெத் மற்றும் சகோதரர் ரிச்சர்ட் அட்டன்பரோ |
ஜேனுக்கான Life on Air, என்னும் அவரது இரங்கல் குறிப்பில் "focus of my life, the anchor, had gone... now I was lost." என்று குறிப்பிட்டவர் அந்தப்பேரிழப்பை இயற்கையுடனான தொடர்பு ஓரளவுக்கு ஈடுசெய்து தன்னை ஆற்றுப்படுத்தியது என்கிறார்.
அவர்கள் வாழ்ந்த அந்த வீட்டிலேயே இறுதிவரை இருக்க முடிவு செய்த டேவிட் "நாங்களிருவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த வீட்டை விட்டு வெளியேறுவது என் மொத்த வாழ்க்கையையும் பொருளற்றதாக்கிவிடும்’’ என்றார்.
2011-ல் ஆச்சரியமான, நம்பமுடியாத ஒரு விஷயம் அந்த வீடு தொடர்பாக நடந்தது. 132 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலையில் அவரும் ஜேனும் இணைந்து உருவாக்கிய அந்த வீடும் சம்மந்தப்பட்டிருந்தது. 1879-ல் அந்தப்பகுதியில் இருந்த வீட்டு உரிமையாளரான ஒரு பெண்ணால் வீட்டில் குடியிருந்த ஒரு விதவைப்பெண் தலை துண்டித்து கொல்லப்பட்டார், உடலை துண்டுகளாக்கிச் சமைத்து அக்கம் பக்கமிருந்த குழந்தைகளுக்கு கொலையாளி அளித்தபோது ஒரு துண்டான பாதத்தைக் கண்ணுற்ற சிலரால் அவர் பிடிபட்டு மரண தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் கொலையுண்டவரின் தலை கண்டுபிடிக்கப்படவே இல்லை. நூற்றாண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத அந்தத்தலை 2011-ல் டேவிட் அட்டன்பரோவின் வீடு விரிவாக்கத்தின்போது தோண்டப்பட்ட மண்ணிலிருந்தது.
தான் விலங்குகளின் விரும்பி என்று அழைக்கப்படுவதை ஆட்சேபிக்கும் இவர் அது வெறும் விருப்பமல்ல இயற்கையுடனும் விலங்குகளுடனும் தனக்கிருப்பது மிக அழகான, ஆழமான, ஆத்மார்த்தமான பிணைப்பும், தொடர்பும் என்கிறார்.
2013- நிலவரப்படி ஐக்கிய இராச்சியத்தில் மிக அதிகமான பட்டங்களைப் பெற்றவர் டேவிட் அட்டன்பரோதான்.
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் இருந்து 32 கெளரவ பட்டங்கள் பெற்ற ஒரே ஒரு நபர் இவர்தான். இவ்விருதுகள் இயற்கைப்பாதுகாப்பிற்கான அவரின் பங்களிப்புக்களின் சான்றாக இருக்கின்றன.
Knighthood எனப்படும் சர் பட்டங்களால் இவர் 1985 மற்றும் 2022 ஆகிய வருடங்களில் இரண்டு முறை கெளரவிக்கப் பட்டிருக்கிறார். இவர் பெற்ற விருதுகள் பெரும் பட்டியலாக நீள்பவை. இவரைக்குறித்து ஏராளமான கவிதைகளும் எழுதப்பட்டிருக்கிறது.
அவரது பெயரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பெயரிடப்பட்டிருக்கின்றன. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் மட்டுமல்லாது அழிந்துவிட்ட சில இனங்களுக்கும் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக Attenborosaurus என்னும் டைனோசரின் ஒரு வகையைச்சொல்லலாம்.
டேவிட் அட்டன்பரோவின் நீண்ட நெடிய இயற்கை அனுபவங்களில் ஏராளமான, சுவாரஸ்யமான, ஆச்சரியமூட்டும் மிக முக்கியமான சம்பவங்களுடன் ஒரு சில அபாயங்களும் இருக்கின்றன.
The Green Planet படப்பிடிப்பின் போது, கைகளுக்குப் போட்டிருந்த பாதுகாப்பு உரையையும் மீறி கலிஃபோர்னியாவின் கள்ளி வகை (cholla cactus) ஒன்றின் கூர் முட்களால் ஆழமாக காயம்பட்டார்.
2012-ல் இறந்துபோன, அரிதானதும் அந்த இனத்தின் கடைசி ஆமையுமான பிண்டா தீவு ஆமையை நேரில் பார்த்து ஆவணப்படுத்தினார் டேவிட். இந்தோனேஷியாவில் சொர்க்கப் பறவைகளை முதன் முதலில் மிக விரிவாக படமெடுத்து ஆவணப்படுத்தியவரும் இவரே.
அவரது 90ஆவது வயதில் உலகம் அதுவரை பார்த்தே இருக்காத கிரேட் பேரியர் பவளப்பாறைகளைக் காண, கடலினுள் 1000 அடியையும் தாண்டிய ஆழத்திற்குச்சென்று ஆவணப்படுத்தினார். அந்த பவளப்பறைகளை அவர் கண்களின் வழியாகத்தான் உலகம் முதன் முதலாகப் பார்த்தது 1956-ல் ஒரு தொலைக்காட்சி தொடருக்காக, பர்மாவில் இருக்கும் மலைப்பாம்பொன்றை பிடித்து அதை பிரிட்டிஷ் விலங்குப்பூங்காவிற்கு கொண்டு வரவேண்டி இருந்தது. இன்றைக்கு போல பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமற்ற அக்காலத்தில் 30 வயதே ஆன டேவிட் மரத்தின் மீது வேகமாக ஏறி சுமார் 4 அடி நீளமிருந்த பர்மிய மலைப் பாம்பின் தலை மீது ஒரு சாக்கை தூக்கிப்போட்டு எளிதாகப் பிடித்து கீழிறங்கி அதை ஒரு கூண்டுக்குள் அடைத்தார்.
Life on Earth படப்பிடிப்பிற்காக 1979-ல் ஆப்பிரிக்காவின் ருவாண்டா பகுதிக்குச் சென்றிருக்கையில் மலைக்கொரில்லாக்களின் கூட்டமொன்றை மிக அருகிலென டேவிட் சந்தித்தார்.
அச்சமின்றி கொரில்லாக்களுக்கு மத்தியில் அமர்ந்த டேவிட்டின் மீது ஒரு குட்டிக்கொரில்லா ஏறி அவரை பின்னிருந்து கட்டித்தழுவிக்கொண்டது. எதிர்பாராத அந்த நிகழ்வினால் படப்பிடிப்புக்குழுவினர் ஸதம்பித்தனர். எனினும் எந்த ஆபத்துமின்றி டேவிட் படப்பிடிப்பை முடித்து மலைக் கொரில்லாக்களின் வாழ்க்கையை நமக்குக்காட்டினார். மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பரஸ்பர அன்பையும் புரிதலையும் நமக்குக் காட்டிய முதல் தொலைக்காட்சித் தொடர் இது.
கிறிஸ்துமஸ் தீவில் தன்னைச் சுற்றிலும் தன் மேலேயும் இருந்த லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகளுக்கு மத்தியில் ஒரு டார்ச்சை மட்டும் வைத்துக்கொண்டு அமர்ந்தபடி மிக அமைதியாக கேமிராவைப்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் அந்த ஆவணப்படம் அவர் விலங்கு உலகின் மீதுகொண்டிருக்கும் அச்சமற்ற புரிதலைக்காட்டுகிறது.
ஒரு குட்டைக்குள்ளிருந்து படப்பிடிப்பை அவர் ஒருங்கிணைக்கையில் அவர் காலணிகளுக்குள் நூற்றுக்கணக்கில் புகுந்து விட்ட அட்டைகளை எந்தப்பதட்டமுமின்றி அவர் மெல்லத் தொட்டு அவற்றையும் விளக்கும் காட்சியைப் பார்க்கையில் அவரும் இயற்கையும் ஒன்றெனக் கலந்துவிட்டதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மிகப்பிரம்மாண்டமான கொமோடோ டிராகன் பல்லி அவருக்கு நேரெதிரில் மிக மிக அருகில் வந்தபோதும் அவர் அச்சமின்றி அமைதியாக நின்று கொண்டிருந்தார்.
ஆர்டிக் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தபோது, குழுவினருக்கு மிக அருகில் பனிக்கரடிகள் வந்து தாக்க முயன்றது. ஆயுதமேந்திய பாதுகாவலர்களால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். டேவிட் அப்போது காலநிலை மாற்றத்தால் பனிக்கரடிகள் அப்படி மனிதர்களுடன் மோதலை உண்டாக்குகின்றன என்று வருந்தினார், The Blue Planet தொடர் லட்சக்கணக்கானோருக்கு ஆழ்கடலின் அற்புதங்களையும் மனிதர்களால் காணப்பட்டிருக்காத ஏங்லர் மீன்களையும், டம்போ அக்டோபஸ் போன்ற அரிய உயிரினங்களையும் காண்பித்தது The Private Life of Plants, படபிடிப்பின் போது உலகின் மாபெரும் மலர்மஞ்சரியைக் கொண்டிருக்கும் Amorphophallus titanum என்பதின் அறிவியல் பெயர் ''ஒழுங்கற்ற நெடிகொண்ட மாபெரும் தாவரம்’’ என்னும் பொருளில் இருப்பதை உணர்ந்த டேவிட் அட்டன்பரோ, அப்பெயர் அந்தத் தாவரத்தை அவமதிப்பதாகக் கருதி அதற்கு titum arum என்ற வழங்கு பெயரைச் சூட்டினர். உணர்வற்றது, சிந்தனையற்றது என்று உலகோரால் கருதப்பட்ட ஒரு தாவரத்திற்கு அதை அவமதிக்கும்படியான ஒரு பெயர் இருப்பதைக்கூட சம்மதிக்காதது அவரது கருணை மனது.
வான் நீலச்சட்டையும் காக்கிக் கால்சட்டையுமாக மிடுக்கான தோற்றத்தில் பெரும்பாலும் காட்சியளிக்கும் டேவிட் அட்டன்பரோ 1975 -ல் உருவான Back to nature தொடருக்காக சாலமோன் தீவு பழங்குடியினருடன் இடுப்பில் ஒற்றைத்துணி மட்டும் அணிந்து முழுப்படப்பிடிப்பையும் முடித்தார். அவரது கலாச்சாரப் புரிதல் வாழ்த்தப்பட வேண்டியது.
பல தொடர்களில் ஆபத்தானவை என்றறியப்பட்ட பல விலங்குகள் டேவிட் அட்டன்பரோவுடன் தோழமையாக இருந்ததைப் பார்க்கலாம். அவர் விலங்குகளின் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்ததற்கான சான்றுகள்தானவை.
விலங்குகளுடனான அவரது அணுக்கமானது வெறும் உடல்ரீதியான அருகாமை மட்டுமல்ல; அது ஒரு ஆழமான, அறிவுப்பூர்வமான மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பு. அவர் தனது வாழ்க்கையை வனப்பகுதிகளை ஆவணப்படுத்துவதில் மட்டும் செலவிடவில்லை, அவற்றைக் காப்பாற்ற வாதிடுவதிலும் செலவிட்டார். அவரது புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் தனிப்பட்ட அறிக்கைகள், இயற்கை உலகத்துடன் அவருக்குள்ள ஆழ்ந்த நெருக்கத்தையும், மற்றவர்களும் அந்தத் தொடர்பை உணர வேண்டும் என்னும் அவரது ஆசையையும் காட்டுகின்றன.
கடந்த ஒரு நூற்றாண்டாக டேவிட் அட்டன்பரோ அவரது நம்பிக்கையூட்டும் ஆழ்ந்த அமைதியான குரலால் நம்மை, உலகின் மனிதக்காலடிகள் தொட்டிருக்காத மிக அற்புதமான, அசாதாரணமான பகுதிகளுக்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார் ஒரு தனி மனிதர் எப்படி இயற்கை மீது அத்தனை அன்புகொண்டிருக்க முடியும் என்பதற்கான ஒரே சாட்சியும் டேவிட் அட்டன்பரோதான்.
"நமக்கு பிறக்கும் 90-95% சதவீத குழந்தைகளை நாம் காப்பாற்றி வளர்க்கத்துவங்கியபோதே டார்வினின் இயற்கைத் தேர்வு மற்றும் வலியவையே வாழும் போன்ற பரிணாமக்கொள்கைகள் பொருளிழந்துவிட்டன.
எனினும் மனித இனம் அழிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை, நாமனைவரும் மிக மிக புத்திசாலிகள் நம்மை எப்படியும் நாம் காப்பாற்றிக்கொள்வோம் ஆனால் நம் வாழ்வு இப்போது இருப்பதுபோலவே எதிர்காலத்தில் இருக்குமா என்பதுதான் நம் முன்னே இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னும் டேவிட் அட்டன்பரோ இன்னுமொரு நூற்றாண்டுக்கு மனிதர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இயற்கைவளங்கள் மிக அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்" என்கிறார்.
அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தச் சமயத்தில் நாம் அவருக்குச் செய்யக்கூடியதெல்லாம் அவர் காட்டிய வழியில் பயணித்து இந்த உலகின் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்னும் உறுதிமொழியை அளிப்பதுதான்.
அவர் அடிக்கடி சொல்வதுபோல இந்தபூமியின் எதிர்காலமென்பது நாம் எப்படி அதைக்காப்பற்ற செயலற்றுகிறோம் என்பதில் தான் இருக்கிறது. எனவே செயலாற்றுவோம்.
2007-ல் அவர் ஒரு பேட்டியில் 2050-ல் உலகின் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கின்றன. எனினும் இப்போதும் காலதாமதமாகி விடவில்லை, நீங்கள் குழந்தைகளாக இருந்தால் இயற்கையை காப்பதே உங்களின் எதிர்காலமாக இருக்கட்டும். ஒருவேளை நீங்கள் பெற்றொர்களென்றால் இயற்கையைப் பாதுகாப்பதே உங்களின் ஒரே குறிக்கோளாக இருக்கட்டும், செயலாற்ற வேண்டிய கணத்தில்தான் நாம் அனைவரும் இருக்கிறோம் என்றார்.
இந்த இரைச்சல் மிகுந்த உலகில் அவரது மென்மையான ஆழ்ந்த நம்பிக்கையூடடும் குரல் நம்மை வழிநடத்தி மேலும் ஆரோக்கியமான உலகில் நம்மையும் அவருடன் வாழச் செய்யட்டும்.
2013-ல் இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்திக்கொண்டார். 2015-ல் கால்மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட டேவிட் ’’நான் என் பயணத்தை எதன்பொருட்டும் நிறுத்திக்கொள்ளப் போவதில்லை தொடர்ந்து உலகைச்சுற்றி அதன் எண்ணற்ற சுவாரஸ்யங்களைத் தேடிக்கொண்டே தான் இருக்க போகிறேன் ஏனெனில் தன் கிராமத்தில் இருந்து ஐந்து மைல் தொலைவுக்கப்பால் தன் வாழ்நாளில் பயணித்திருக்காத என் முப்பாட்டனைக்காட்டிலும் நான் அதிர்ஷ்டக்காரன், எனக்கு கிடைத்திருக்கும் வசதிகளுக்கும் வாய்ப்புகளுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ‘’ என்றார்.
டேவிட் அட்டன்பரோ நூறாவது வயதைத் தொட்ட 2025 மே மாதம் அவரது பிறந்தநாளைக் கொண்டாட வெளியானது அவரின் "Ocean with David Attenborough" என்னும் கடல்களின் முக்கியத்துவத்தையும் அவை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சொல்லும் ஆவணப்படம். கடல்களை நமக்கு விவரிக்கும் டேவிட்டின் வயது 100 என்று யாருமே சொல்லிவிடமுடியாது அத்தனை உற்சாகமாக அவர் ஒவ்வொன்றையும் விளக்குகிறார். திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் நெட் ஜியோ போன்ற தளங்களில் இருக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான அவரின் உருவாக்கமான "Asia" ஆசியக்கண்டத்தின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையின் அதிசயங்களைச் சொல்லும் நெடுந்தொடர். இதே ஆண்டு பாலூட்டிகளைக் குறித்த அற்புதமான ஆவணப்படமான Mammals வெளியானது.
சமீபத்தில் Our Story with David Attenborough என்னும் ஒரு முப்பரிமாணக் காட்சியில் டேவிட் தான் கடந்துவந்த இயற்கை எழில் நிறைந்த பயணத்தை, அவர் சந்தித்த மக்களை எல்லாம் விவரிக்கிறார். அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் ஜூன் 2025-ல் லண்டனில் திறக்கப்பட்ட இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 50 நிமிட நிகழ்வாக இது காட்டப்பட்டது.
மேலும் பல புதிய தொடர்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் டேவிட் வாரத்துக்கு 7 நாட்களுமே பணியாற்றுகிறார் என்கின்றனர் அவரது நண்பர்கள். அடுத்து Blue Planet தொடரின் மூன்றாம் பாகம் விரைவில் அவரால் உருவாகவிருக்கிறது.
புதை படிமங்கள் சேகரித்த ஒரு சிறுவனாக இருந்து உலகோரை இயற்கை உலகிற்கு கைபிடித்துக் கூட்டிச்செல்லும் இயற்கையியலாளரான டேவிட் அட்டன்பரோவின் வாழ்க்கையைக் காட்டிலும் அரியதோர் இயற்கை வரலாற்று நூலை நாம் காண முடியாது.
நூற்றாண்டை நிறைவு செய்யவிருக்கும் உலகின் மிக அற்புதமான கதைசொல்லிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னுமோர் நூற்றாண்டு எங்களுடன் இருந்து எங்களுக்கு வழி காட்டுங்கள் டேவிட்.
லோகமாதேவி
லோகமாதேவி தமிழ் எழுத்தாளர், தாவரவியலை நவீன தமிழ் இலக்கிய மொழியில் அறிமுப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். தமிழ் தாவரவியல் அகராதியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவ்வகையில் தமிழ் தாவரவியலில் முன்னோடி. துறைசார்ந்த நூல்கள் வெளியாகியுள்ளன. மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறார். பொள்ளாச்சி அருகே வேடசந்தூர் என்ற ஊரில் வசிக்கிறார்.
தமிழ் விக்கி பக்கம்: லோகமாதேவி - Tamil Wiki
லோகமாதேவி இணையதளம்: அதழ் (logamadevi.in)






