Sunday, 30 November 2025

மீட்சியின் சாட்சியம் - கடலூர் சீனு

மேட்ரிக்ஸ் படத்தில் தன்னிடம் சிக்கிக்கொண்ட மார்ஃபிஸ் வசம் " நீங்கள் எல்லோரும் பாலூட்டி வகை என்றுதான் எண்ணி இருந்தேன். அப்படி இல்லை. பாலூட்டிகள் கொண்டும் கொடுத்தும் சூழல் அமைப்புக்கு தகவமைத்து வாழ்ந்தவை. நீங்கள் வேறு. பெற்றுப் பெருக வேண்டும் எனில் எதையும் எல்லாவற்றையும் அழிப்பவர்கள் நீங்கள். எல்லாம் அழிந்த பிறகு, அதே முறையில் வாழ வேறு பூமி தேடி செல்பவர்கள் நீங்கள். நீங்கள் வெறும் பாலூட்டிகளாக இருந்திருந்தால் உங்களுக்கு இப்போது உள்ள இந்த நிலை வந்திருக்காது" என்று ஸ்மித் சொல்வான்.

அது ஒரு செய்தி. உலகு தழுவி வியாபித்த ஹாலிவுட் சினிமா வழியே, உலக சராசரி பொது மனதுக்குள் அமெரிக்கா விதைத்த செய்தி. டிகாப்ரியோ தயாரித்த இன்கன்வீனியன்ட் ட்ரூத் ஆவண படம் துவங்கி பல பத்து சூழலியல் திரை ஆக்கங்களை, கிரேடா துன்பர்க் போன்ற சூழலியல் புரட்சி தேவதைகளை, சூழலை சீர்கெடுக்கும் முதன்மை தேசங்களில் ஒன்றான அமெரிக்கா தொடர்ந்து வெளி உலகம் நோக்கி களம் இறக்கிக்கொண்டே இருந்தது. கடந்த கால் நூற்றாண்டில், சூழலை காக்க உலக நாடுகள் ஏதேனும் கூட்டணி அமைத்தால் அதன் தலைமை அதிகார நிலையில் அமர, சூழலை காக்கும் வழி முறைகள் என்று சொல்லி உலக வங்கி வழியே வெளியே குறுங் குழுக்களுக்கு நிதி அளித்து மூன்றாம் உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீடு செய்வது, மூன்றாம் உலக நாடுகளை தனது அதிகார, அரசியல், வணிக நலனின் பொருட்டு சுரண்ட, என்று பல்வேறு விஷயங்களுக்கு ஆயுதமாகவே அமெரிக்கா இதை பயன்படுத்தியதே அன்றி, அவை எதுவும் உண்மையான சூழல் நலம் நோக்கிய செயல்பாடு அல்ல என்பது இன்று வெளிப்படை.

இத்தகு சூழலுக்கு மத்தியில்தான் கடந்த முக்கால் நூற்றாண்டாக மானுடம் மீதும் உயிர்க்குலங்கள் மீதும் சூழல் மீதும் உண்மையான பரிவு கொண்ட குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறார் சூழலியல் மெய்ஞானி டேவிட் அட்டன்பரோ. ஆம் மெய்ஞானிதான். மெய்ஞானம் என்றாலே அதை ஆத்மீகத்துடன் இணைத்துப்புரிந்து கொள்ளவேண்டிய தேவை இல்லை. இது என்ன என்று உசாவி, இவற்றை அறிந்து, அதில் தன்னை பிரிதின்றிப் பொருத்திக் கொள்ளும் எவரும் மெய்ஞானியே. அட்டன்பரோ இயற்கை அறிவியல் வழியே அந்த நிலையை சென்று அடைந்தவர். 

1926 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த டேவிட் அட்டன்பரோ, படிப்பு, தொழில், குடும்பம், சமூக செயல்பாடு என்று தான் கைக்கொண்ட அனைத்திலும் சிறந்து விளங்கியவர். இயற்கை அறிவியல் அறிஞராக இன்று அந்த துறையில் உள்ள உலகின் பெரும்பான்மை அறிவு ஜீவிகள், தாங்கள் கண்டடைந்த உண்மையை டேவிட் அட்டன்பரோ குரல் வழியாக அது உலகை சென்று அடைவதையே முதன்மை விருப்பமாக கொள்கிறார்கள். சமூக மானுடவியல் அறிஞராக ஆஸ்திரேலிய அபராஜிதோக்கள் ஆயிரம் தலைமுறைகளாக கைக்கொண்டு இருந்த (உலகம் அதுவரை அறியாதிருந்த அதன் உள்ளடக்க கூறுகளை) குகை ஓவிய கலையை அவர்கள் மத்தியில் சில ஆண்டுகள் வாழ்ந்து, அவற்றை அறிந்து உலகுக்கு வெளிப்படுத்திய முன்னோடி அட்டன்பரோ.

பிபிசி-இல் பணி என்ற அவரது தொழிலில் அங்கே அவரை எடுத்துவிட்டு பார்த்தால், ஒரு மலை இல்லாமல் போனது போல வெற்றிடம் தெரியும். அப்படி ஒரு பணி வெற்றியாளர் அட்டன்பரோ. கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய 360 பாகை சூழும் முப்பரிமான தோற்றநிலை மெய்மை காலம் வரை, காட்சி தொழில் நுட்பத்தில் ஒவ்வொன்றும் அது நுழையும்போதே அதன் உச்ச சாத்தியங்களை நிகழ்தி காட்டியவர். 

வெற்றிகரமான நிறைவான குடும்பஸ்தர். மகன் அவர் பணியை துவங்கிய அதே ஆஸ்திரேலியா நிலத்தில், அதே மக்கள் மத்தியில், உயிரியல் மானுடவியல் ஆய்வாளராக இருக்கிறார். மகள் இப்போது அட்டன்பரோவின் தனிப்பட்ட செயலாளர். 

இன்றைய உலக அரங்கில் சூழலியல் சார்ந்து ஒலிக்கும் உண்மையும் அக்கறையும் கொண்ட வலிமையான குரல். கிரகத்தின் அறிவியல் திட்டத்தில் முதன்மை பங்களிப்பாளர். உலகு தழுவி பல்வேறு சூழலியல் நலத்திட்ட பணிகளின் அறக்கொடை புரவலர். உலகின் உயரிய விருதுகள் பெற்றவர். உலகின் உயரிய பல்கலைக்கழகங்கள் வழியே 30க்கும் மேலான கௌரவ பட்டங்கள் அடைந்தவர். புதிய சில உயிர்கள், புதிய சில புதை படிமங்கள் என 30க்கும் மேலான புதிய கண்டடைதல் ஸ்பெசிமன்களுக்கு, இவரை ஆசிரியராக வரித்துக் கொண்ட மாணவர்கள் இவரது பெயரை அதற்கு சூட்டி இருக்கிறார்கள்.

இவரது பணிகளில் முதன்மையானது ‘life’ வரிசை இயற்கை கானுயிர் சூழலியல் தொடர். அதன் வழியே ஒவ்வொரு தனி மனிதனும் எத்தகையதொரு பிரம்மாண்ட உயிர்வலை ஒன்றின் கண்ணி என்பதையும், அதில் நிகழும் சிறு சிதைவும் மனிதன் உள்ளிட்ட ஒட்டு மொத்த உயிர்க்குல வாழ்வையும் எவ்விதம் பாதிக்கும் என்பதை அறிவியல்பூர்வமாக, காட்சி ரீதியாக உலகின் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று சேர்த்தவர். 

கம்பேஷன்(compassion) எனும் நிலை பெரும்பாலும் ஆத்மீகமாகவே விளக்கப் படும் சூழலில், அப்படி ஒரு நிலையை அறிவியல்பூர்வமாக விளக்கி அதை வாழ்ந்தும் காட்டி வருபவர் டேவிட் அட்டன்பரோ. அகவயமான ரமணர் போல ராமகிருஷ்ணர் போல இவர் புறவயமான மெய்ஞானி என்றே சொல்வேன். நூறு வயதை எட்டப்போகும் ஆசிரியர் அட்டன்பரோ, அவர் வாழ்நாள் பணியாக அளித்த முக்கியமான சூழலியல் ஆவணங்கள் பலவற்றில் இந்த இரண்டு மிக மிக முக்கியமானது. முதலாவது தனது 90 ஆவது வயதில் தனது அதுவரையிலான வாழ்நாளை உலக சுற்றுச்சூழல் காலக்கோடாக கொண்டு, அடுத்தடுத்து 10 வருடங்களிலாக இயற்கை மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு சூழல் மெல்ல மெல்ல சமன் குலைந்து, ஆர்டிக் அடுக்கு உருக துவங்கி விட்ட நிலையை காட்டிய ஆவணம். (மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை சூழலில் உயர்ந்த கார்பன்டை ஆக்சைடு அளவை 100 சதம் என்று கொண்டால் அதில் 90 சதம் மனிதன் நிலக்கரியை அகழ்ந்து எடுத்து எரிக்க கற்ற காலத்தில் இருந்து துவங்குகிறது). இரண்டாவது ஆவணம் கொரானா முடக்க சூழலில் உலகே ஸ்தம்பித்து கிடந்த காலத்தில், அந்த சிறிய இடைவெளியில் சுற்றுச்சூழல் தன்னை எவ்விதம் புனர் நிர்மாணம் செய்து கொள்கிறது என்பதை காட்சிகள் வழியே விளக்கிய ஆவணம். அந்த இரண்டு ஆவணங்களுக்கு இணையானது நேஷனல் ஜியாக்ரஃபியில் அண்மையில் வெளியான, டேவிட் அட்டன்பரோ பங்களிப்பில் டோபி நவ்லான் இயக்கிய தி ஓஷன் ஆவணப்படம்.

கடல் என்பது வெறும் கடல் அல்ல, அதில் நீரோட்ட நதிகள் உண்டு, மலைகள் உண்டு, காடுகள் உண்டு புல்வெளிகள் உண்டு, அந்தந்த நிலப்பரப்புக்கு தக்க உயிர்கள் உண்டு, அவற்றுக்கு இடையே சமூக அடுக்குகள் உண்டு, ஒன்றை விட்டு ஒன்று வாழ முடியாத வகையில் பிணைக்கப்பட்ட உயிர்வலை அமைப்பு உண்டு, அந்த உயிர் வலை அறுந்தால், உட்கடல் நிலச்சூழல் அழிந்தால், அதன் ஒரு பகுதியாக நிலத்தில் இருக்கும் மானுடமும் எவ்விதம் பாதிக்கப்படும் என்பதன் பொதுவான அறிமுகத்துடன் துவங்கும் இந்த ஆவணம், கடலுக்குள் உயிர்க்குலங்களுக்குள் நிகழ்ந்த அண்மைய கண்டு பிடிப்புகள் குறித்து விவரிக்கும் போது வேகம் கொள்கிறது. அண்மையில் கிட்டதட்ட 2000 புதிய உயிர்கள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. புதிய நடத்தைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று. ஒரு நண்டு. அதற்கு கொடுக்குகளில் ஒரு பையில் விஷம். மிக சமீபத்தில்தான் அந்த பை தனித்ததொரு உயிர் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது அந்த உயிரை படக் கதையில் வரும் இரும்புக்கை மாயாவி கொண்ட இரும்புக் கை போல பயன்படுத்துகிறது அந்த நண்டு. இப்படி நகரும் ஆவணம், ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நிலத்தின் அருகே உள்ள கடல் பகுதியில் உள்ள சூழல் வழியே வளியில் உள்ள கார்பனில் மூன்றில் ஒரு பாகம் எவ்விதம் குறைகிறது, பிராண வாயுவில் 40 சதமானம் அந்த சூழல் வழியே எவ்விதம் கிளர்கிறது என்பதை விளக்கி, உலகு தழுவி பல லட்சம் மிதக்கும் ராட்சத மீன் பிடி தொழிற்சாலைகள், வருடா வருடம் எவ்விதம் அந்த நிலத்தை உழுது புரட்டி உயிர்ச்சூழல் மொத்தமும் அழிய வழிவகை செய்கிறது என்பதை சித்தரிக்கும் போது உச்சம் கொள்கிறது.

அட்டன்பரோ
தேவைக்கு மீன் பிடித்தல் என்பது போக, நுகர்வு வெறிக்கு மீன் பிடித்து இன்று கடலின் பல பகுதிகள் பாலைவனம் ஆகிப்போக, அண்மையில் சில நாடுகள் அந்த ராட்சத மீன் பிடி யந்திரங்களுடன் no man's land ஆன ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் கடல் பகுதிகளுக்குள் புகுந்து அங்குள்ள திமிங்கலம் முதல் பெங்குயின் வரையிலான முதன்மை உயிர்களின் அடிப்படை உணவான இறால்களை மொத்தமாக வாரிச் சுருட்டி வருகிறது என்பதை ஆவணம் பதை பதைக்கும் வண்ணம் முன் வைக்கிறது. எனில் இந்த ஆவணம் அழிவின் பாடலை பாடும் மற்றும் ஒரு ஆவணமா என்றால், இல்லை. 300 கோடி மக்களை வாழ வைக்கும் கடல் உணவை மனிதனை கைவிட சொல்லி இந்த ஆவணம் கோரவில்லை, இன்னும் சொல்லப்போனால் உலகு தழுவிய மீனவர் சமுதாய வாழ்வாதாரத்தை பாதிக்கும் மீன்பிடி ராட்சத தொழிற்சாலை கப்பல்கள் எனும் நிலையை எதிர்த்தே இவ்வாவணம் பேசுகிறது. தீர்வுகளுக்கான வாய்ப்புகளையும் இவ்வாவணம் சுட்டுகிறது.

மீன்கள் தீர்ந்து கைவிடப்பட்ட பகுதி ஒன்று, ஒரே ஒரு லாப்ஸ்டார் உள்ளே வந்து முட்டைகள் போட, அதன் லாவாக்கள் பல கிலோமீட்டர்கள் பயணித்து, கடலடி காடு உள்ளிட்டு புதியதொரு உயிர்ச்சூழல் உருவானதை, இந்த இனம் முற்றிலும் அழிந்து விட்டது என்று நம்பிய வேட்டையாடி மீன் இனம் ஒன்று அதில் மீண்டும் தென்பட்டதை, சில நாடுகளில் பாதுகாக்கப்பட்ட கடல் நிலங்கள் வழியே ஒட்டு மொத்த கடலடி உயிர்ச்சூழலும் சில ஆண்டுகளில் மீள முகிழ்ந்ததை, சில ஆண்டுகள் முன்னர் பாலைவனம் ஆன கிரேட் பேரியர் ரீஃப்-இன் சில பகுதிகள் உள்ளிட்ட சில பவளப்பாறை வெளிகள் மீண்டும் வண்ணம் பூத்து உயிர்கள் கிளைத்த நிலையை உவகையூட்டும் வண்ணம் புத்துயிர்ப்பு நிகழும் சித்திரமாக இந்த ஆவணம் முன்வைக்கிறது.

ஆம் நிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் போல, (உலக நாடுகள் பலவும் கையெழுத்து இட்டு இன்னும் செயல்படுத்தாத) கடலுக்குள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். கடலுக்குள் ரசாயனம் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பது நிறுத்தப்பட வேண்டும். ராட்சத வலைகள் கொண்டு தொழிற்சாலை கப்பல்கள் கொண்டு நிகழ்த்தப்படும் மீன்பிடி கணிசமாக குறைக்கப்பட வேண்டும். நுகர்வு வெறிக்கு அல்லாது, அடிப்படை உணவுத் தேவைக்கு எவ்வளவோ, அவ்வளவு மட்டுமே மீன் பிடிக்கப்பட வேண்டும். அது கடலோர மீனவர் சமூக வாழ்விடம் அளிக்கப்பட வேண்டும். வளம் குன்றா மீன் பிடியும், கணிசமான அளவு பாதுகாக்கப்பட்ட கடல் நிலங்கள் இந்த இரண்டு மட்டுமே போதும். கடல் தன்னை மீண்டும் புத்துயிர்ப்பு செய்து கொள்ளும். மானுடத்தை வாழ வைக்கும். இதுவே இந்த ஆவணத்தின் மைய செய்தி. இந்த செய்தியை கொண்ட இந்த ஆவணம் இணையற்ற உணர்ச்சிகரமான பின்னணி இசையும், கூர்மையான படத்தொகுப்பு, ஓவியம் போல வசீகரிக்கும் அதி துல்லிய ஒளிப்பதிவு, என சூழலியல் ஆவணங்களில் அடுத்த கட்ட பாய்ச்சல் என்றே சொல்லலாம். குறிப்பாக ராட்சத யந்திர தொழிற்சாலை கப்பலின் வலைக்குள் கேமராவை வைத்து கடல் அடி உயிர்கள் துடிக்கத்துடிக்க மொத்தமாக சுருட்டப் படும் காட்சி.

ஆவணத்தின் இறுதியில் அட்டன்பரோ கடற்கரை ஓரத்தில் நின்றிருக்கிறார். கடலும் வானம் சேரும் தூரத்து, தொடு வானத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னணியில் அட்டன்பரோவின் குரல் எழுகிறது, "என் இளம் வயதில், மனிதன் இந்தக் கடலை வென்று அதன் ஆற்றலை தனக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவனாக இருந்தேன்" என்று சொல்ல கருப்பு வெள்ளையில் காட்சிகள் விரிகிறது. இளம் வயதினன் என டேவிட் அட்டென்ட்பரோ மீன்பிடி கப்பல் ஒன்றின் அமர முனையில் நிற்கிறார். கப்பலின் இருபுறமும் பீரங்கி போன்ற துப்பாக்கிகள். அதில் தோட்டாக்கள் போல வலிமையான இரும்பு ஈட்டிகள். துப்பாக்கி சுட அந்த ஈட்டிகள் பறக்கிறது. அந்த ஈட்டிகளின் பின்பக்கம் கம்பி கொண்டு கப்பலோடு சேர்த்து பிணைக்கப்பட்டிருக்கிறது. சுடப்பட்ட ஈட்டிகள் பாய்ந்து சென்று அந்தப் பெரும் உயிரினத்தை தைக்கிறது. நீலத் திமிங்கலம். ஆம் அட்டன்பரோ வேடிக்கை பார்த்த அந்தத் திமிங்கல வேட்டை துவங்கி, அந்த இனமே அறுகி வெகு சீக்கிரத்தில் உலகில் வெறும் பத்து சதவீத நீலத் திமிங்கலங்கள் மட்டுமே எஞ்சின. அட்டன்பரோ தனது மத்திம வயதில் நிகழ்ந்துவிட்ட பிழைக்கு வருந்துகிறார். இனி நீலத்திமிங்கலம் என்ற அந்த அழகிய பேரினத்தை பார்க்கவே முடியாதோ என்று ஏங்குகிறார். அட்டன்பரோவுக்கு வயதாகிறது. காட்சிகள் வண்ணங்களுக்கு மாறுகிறது. வருடம் 2000. குட்டிக்கரணம் அடிக்கும் நீலத் திமிங்கலம் ஒன்றின் அருகே இருந்து உற்சாகமாக கூவுகிறார் அட்டன்பரோ. ஆம் நீலத்திமிங்கலங்கள் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டு விட்டது. உலகெங்கும் உள்ள மக்கள் கூடி ஒவ்வொரு நிலத்திலும் உள்ள அரசாங்கத்துக்கு அதற்காக அழுத்தம் கொடுத்தார்கள். உண்மையான தீவிரமான போராட்டம். அது வென்றது. நீலத் திமிங்கலங்கள் இனி வேட்டையாடப்பட வேண்டிய உயிர் அல்ல என்று சட்டங்கள் இயற்றி ஒவ்வொரு தேசமும் அதை நடைமுறை படுத்தியது. நீலத்திமிங்கலங்கள் மீண்டும் பெருகியது. ஆம் நாம் பாலூட்டிகள். சக உயிர்களுடன் கொண்டும் கொடுத்தும் சூழலுடன் இணைந்து வாழ வந்தவர்கள். சூழல் சீர்கெட்டால் அதை மீட்க கற்றவர்கள். 

"நீலத் திமிங்கலங்கள் என்ற இந்த அழகிய பேருயிர்களை காப்பாற்ற முடிந்த நம்மால், அந்த உயிர்கள் வாழும் கடல் என்ற அதனுடைய இல்லத்தை அதற்கு காப்பாற்றித் தர முடியாதா என்ன? எனக்குத் தெரியும். நம்மால் அது முடியும்."

என்ற டேவிட் அட்டன்பரோவின் நம்பிக்கையூட்டும் சொற்களுடன் இந்த ஆவணம் நிறைவடைகிறது. இந்தியா போல முப்புறமும் கடல் சூழ்ந்த தேசத்தில், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளம் தலைமுறை ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய தந்தையின் குரல் இது. அவசியம் பார்த்திருக்கவேண்டிய அவரது ஆவணம் இது. 

முன்னர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் காந்தி. அவர் எங்கே இருந்தும் மெல்லிய குரலில் எதை சொன்னாலும் அது உலகம் முழுக்க சென்று சேர்ந்தது. அவர் சொன்னால் உலகம் அதை செவிக்கொண்டது. இன்றைய சூழல் முற்றிலும் வேறு. நுகர்வு வெறி உச்சம் கொண்ட காலம். பின்நவீனத்துவத்துக்கு பிறகான காலம். எவர் எதை சொன்னாலும் அது கருத்தியலாக திரண்டு, செயல் ஆற்றலாக மாற இயலாத சமூக ஊடக காலம். இந்தக் காலத்தில் ஒருவர் சொன்னால் அதை உலகே கேட்கும் என்ற நிலையில் இன்று இருக்கும் வெகு சில அபூர்வ ஆளுமைகளில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. செஞ்சுரி போடப் போகும் டேவிட் தாத்தாவுக்கு அவரது பல ஆயிரம் நேசர்களில் ஒருவனாக எனது அன்பு முத்தங்கள்.

கடலூர் சீனு
கடலூர் சீனு கலை விமர்சகர், எழுத்தாளர். தமிழ் நவீன இலக்கிய வாசிப்பு குறித்த இவரது பார்வைகள் முக்கியமானவை. நவீன இலக்கியம் மட்டுமன்றி மரபான பண்பாட்டுத்தளங்கள் குறித்தும், சினிமா ஆவணப்படங்கள் குறித்தும் விரிவாக தொடர்ந்து எழுதுபவர். கவிதைகள் குறித்த இவரது கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் பரவலான வாசிப்பை பெற்றவை.