Monday, 6 October 2025

தொன்மங்களின் ஆற்றல் - 5: ஜோசப் கேம்ப்பெல்

Bison, Grotto of Lascaux

தொன்மங்களின் ஆற்றல் தொடர்


பகுதி 3 - ஆதி கதைசொல்லிகள்


"தொல்காலத்தை போல மனிதகுலத்திற்கு கற்பிக்கவும் வழிகாட்டவும் விண்ணகசக்தியின் தூதர்களாக எந்த விலங்குகளும் இனி தேவையில்லை. இன்று கரடிகள், சிங்கங்கள், யானைகள், வரையாடுகள், மறிமான்கள் என அனைத்து விலங்குகளும் நமது உயிரியல் பூங்காக்களின் கூண்டுக்குள் வந்துவிட்டன. ஆராயப்படாத சமவெளிகளோ காடுகளோ இப்போதில்லை, அவ்வுலத்தின் புதுவரவாக மனிதனும் இப்போதில்லை, இன்று நமது அண்டைவீட்டானாக இருப்பது காட்டுமிருகங்கள் அல்ல, மாறாக முடிவில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கோளில் இடங்களுக்கும் பொருட்களுக்கும் போராடும் இன்னொரு மனிதன்தான். நமது உடலோ மனதோ பழங்கற்கால வேட்டையினத்தவரின் பல்லாயிர வருட உலகத்தில் இப்போது வசிக்கவில்லை. ஆனால் நம்முடைய உடல் வடிவத்திற்கும் அகக்கட்டமைப்பிற்கும் நாம் அவர்களின் வாழ்க்கைக்கும் வாழ்க்கை முறைக்கும் கடன்பட்டிருக்கிறோம். மேலும் அவர்களுடைய விலங்கு தூதர்களின் நினைவுகள் இன்னமும் நம்முள் எவ்விதமோ உறங்கிக்கொண்டிருக்க வேண்டும். ஆகவேதான் காடுகளுக்குள் நாம் நுழைகையில் அவை கண் விழித்துக்கொண்டு நலுங்குகின்றன. இடியின் பேரோசை எழுகையில் அவை பயங்கரத்துடன் கொந்தளிக்கின்றன. எப்போதாவதொரு குகை ஓவியத்தை தரிசிக்க நேர்கையில் அந்நினைவுகள் அடையாளம் பெற்றுவிட்ட உணர்வுடன் மீண்டும் விழித்துக்கொள்கின்றன. அக்குகைகளின் பூசகர்கள் உளமயக்க நிலையில் இருக்கையில் அவர்களுள் இறங்கிய எல்லா உள்ளிருளும் நம்முள்ளும் இருக்கிறது. இரவில் நாம் உறங்கும் போது அது வருகை புரிகிறது"

- ஜோசப் கேம்ப்பெல், விலங்காற்றலின் வழிகள் (The Ways of the Animal Powers) நூலில் இருந்து. 


மோயர்ஸ்: கவிஞர் வேர்ட்ஸ்வர்த் (Wordsworth) இவ்வரிகளை எழுதியபோது அவர் சரியாகத்தான் சொன்னார் என நீங்கள் நினைக்கிறீர்களா?

“Our birth is but a sleep and a forgetting;
The soul that rises with us, our life’ star,
Hath had elsewhere its setting,
And cometh from afar”?

கேம்ப்பெல்: ஆம், ஆனால் அனைத்தும் மறக்கப்படுகின்றன என்பதைத் தவிர. இப்படிச் சொல்லலாம், சில குறிப்பிட்ட சூழலுக்காகவும் உடலுறுப்புகளின் தேவைக்காகவும் மனித நரம்பமைப்பை வடிவமைத்த நினைவுகளை நமது உடலின் நரம்புகள் இன்னமும் சுமந்துகொண்டுதான் இருக்கின்றன. 

மோயர்ஸ்: எவ்வகையில் நம்முடைய ஆன்மா பழங்கால தொன்மங்களுக்கு கடன்பட்டுள்ளது?

கேம்ப்பெல்: பண்டைய தொன்மங்கள் நமது மனதையும் உடலையும் இசைவுகொள்ளச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டன. மனம் பல விசித்திரமான வழிகளில் அலைவுற்று உடல் விரும்பாதவற்றை செய்ய விழையும். அப்போது இந்த தொன்மங்களும் சடங்குகளும் மனதை உடலுடன் ஒத்திசையச்செய்து வாழ்க்கையின் போக்கினை இயற்கை அறிவுறுத்தும் வழியில் இசைவு கொள்ளச்செய்கிறது.

மோயர்ஸ்: அப்படியானால் இப்பழங்கதைகள் இன்னமும் நம்முள் வாழ்கின்றனவா?

கேம்ப்பெல்: நிச்சயமாக. மானுட வளர்ச்சியின் படிநிலைகள் பழங்காலத்தில் இருந்ததை போலதான் இன்றும் உள்ளன. முதலில் ஒரு குழந்தையாக நீங்கள் ஒழுக்கநெறிகளும் அடக்கமும் உள்ள ஒரு உலகத்திற்குள் அழைத்து வரப்படுகிறீர்கள். அங்கு நீங்கள் பிறரை சார்ந்து வாழ்கிறீர்கள். பின் நீங்கள் முதிர்வடையும்போது அவற்றை கடந்துசெல்லும் நிலைக்கு வரவேண்டும். அப்போதுதான் நீங்கள் தனித்து வாழ்வதுடன் மட்டுமல்லாமல் சுயபொறுப்புடனும் வாழ முடியும். ஒருவேளை உங்களால் அந்த எல்லையை கடக்க முடியவில்லையென்றால் அது மனஅழுத்தத்தை உருவாக்கும். அதன்பின் நீங்கள் பெற்றிருக்கும் உங்கள் உலகம் தளர்வடைந்து, ரத்து செய்யப்பட்டு, துண்டிக்கப்படும்.

மோயர்ஸ்: அதன் இறுதியாக மரணம் நிகழ்கிறது இல்லையா?

கேம்ப்பெல்: ஆம். இறுதியாக மரணம். அதுவே அறுதியான துண்டிப்பு. ஆகவே தொன்மம் இரண்டு இலக்குகளுக்காக வேலை செய்யவேண்டியுள்ளது. ஒன்று, இளைஞனை அவனுக்கான உலக வாழ்க்கைக்குள் ஆற்றுப்படுத்துவது - இதுதான் சமூகம் சார்ந்தது. இரண்டு, அவனை அந்த உலகிலிருந்து விடுவிப்பது. சமூகம் சார்ந்த இலக்கு இரண்டாவது இலக்கான அடிப்படை இலக்கிற்கு இட்டுச்செல்கிறது, இதன்வழியாக உங்களுடைய அகவாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.

மோயர்ஸ்: மேலும் இந்த தொன்மங்கள் எவ்வாறு பிறர் தங்களுக்கான பாதையை உருவாக்கினர் என்றும், நான் எவ்வாறு எனக்கான பாதையை உருவாக்க இயலும் என்பதையும் கூறுகின்றன, இல்லையா?

கேம்ப்பெல்: ஆம். அதுமட்டுமல்லாமல், அப்பாதையின் அழகை பற்றியும் பேசுகிறது. நான் என்னுடைய கடந்த காலத்தை பார்க்கும்போது இதை இன்று உணர்கிறேன். தொன்மங்கள் அதற்கு உதவுகின்றன.

மோயர்ஸ்: என்ன வகையான தொன்மங்கள் அவை? இதற்கு உங்களுக்கு உதவிய ஒரு தொன்மத்தை குறிப்பிடுங்கள்.

கேம்ப்பெல்: நீங்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு செல்கையில் உங்களுடைய மொத்த ஆடை அமைப்பையும் பெயரையும் கூட மாற்றிக்கொள்ளும் இந்திய மரபை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். எனது ஆசிரியர் பணியிலிருந்து நான் ஓய்வு பெறுகையில் நான் ஒரு புதிய வாழ்க்கைமுறையை உருவாக்க வேண்டியிருந்தது. மேலும் நான் எனது வாழ்க்கை குறித்த சிந்தனை முறையையும் மாற்றிக்கொண்டேன். அதாவது சாதனை புரிவதை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையிலிருந்து மகிழ்ச்சி, போற்றுதல், பிரபஞ்சம் எனும் அதிசயத்தின் முன் இருத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சிந்தனை முறை அது.

மோயர்ஸ்: அதன்பின்தான் இருண்ட நுழைவாயிலை கொண்ட இறுதிப்பாதை வருகிறது.

கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது பிரச்சினை அல்ல. பிரச்சினை இருப்பது நமது வாழ்வின் இடைக்காலத்தில்தான். நமது உடல் எப்போது அதன் வலிமையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்து வீழ்ச்சியடையத் தொடங்குகிறதோ அப்போது. கைவிட்டுச்செல்லும் இந்த உடலுடன் உங்களை அடையாளப்படுத்தாமல் உடலை ஒரு ஊர்தியாக கொண்டிருக்கும் தன்னுணர்வுடன் அடையாளம் காண்பதில்தான் பிரச்சினை உள்ளது. இதை நான் தொன்மங்களில் கற்றுக்கொண்டேன். நான் என்பது என்ன? ஒளியை ஏந்தியிருக்கும் விளக்கா? அல்லது விளக்கை ஒரு ஊடகமாகக் கொண்டிருக்கும் ஒளியா? 

முதுமையடைவதில் இருக்கும் உளவியல் சிக்கல்களில் ஒன்று இறப்பை பற்றிய அச்சம். மரணத்திற்கான நுழைவாயிலை மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால் இந்த தேகம் என்பது தன்னுணர்வின் ஒரு வாகனம் மட்டுமே. நீங்கள் உங்களை தன்னுணர்வுடன் அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தால், இவ்வுடல் ஒரு பழைய வாகனத்தைப் போல் அழிவதைக் காணலாம். சக்கரம், இருக்கைகள் என வாகனத்தின் அங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பழுதடைகின்றன. அது எதிர்பார்க்கக்கூடியதுதான். அதன் பிறகு படிப்படியாக அனைத்தும் வீழ்ந்ததும் தன்னுணர்வு தன்னுணர்வுடன் மறுஇணைவு கொள்கிறது. இனி அது இந்த சுற்றத்தில் இல்லை.

மோயர்ஸ்: தொன்மங்கள் மூப்படைவது குறித்தும் சொல்கின்றனவா? நான் ஏன் இதை கேட்கிறேன் என்றால் பெரும்பான்மையான தொன்மங்கள் இளமையழகை பேசுவதாகவே உள்ளன.

கேம்ப்பெல்: கிரேக்கத் தொன்மங்கள் இளமையழகை பேசுவதாகவே உள்ளன. தொன்மம் என்றால் நாம் பொதுவாக எண்ணுவது கிரேக்க அல்லது விவிலியத் தொன்மங்களைத்தான். ஒருவகையான மானுடப்படுத்துதலே இந்த இரண்டு நாகரீகங்களுடைய தொன்மங்களின் உள்ளடக்கம். மானுடம் மீது மிக வலுவான போக்கு இதில் காணப்படுகிறது. குறிப்பாக கிரேக்க தொன்மத்தில் மானுடம் மீதும், இளமையழகின் மகிமை மீதும் இப்போக்கு உள்ளது. ஆனால் இதில் முதுமைக்கும் அங்கீகாரம் உண்டு. முதிய அறிஞர்களும் துறவிகளும் மதிப்பிற்குரிய ஆளுமைகளாக கிரேக்க தொன்மத்தில் கருதப்படுகிறார்கள்.

மோயர்ஸ்: பிற நாகரிகத்தில் எவ்வாறு உள்ளது?

கேம்ப்பெல்: இளமையின் அழகை இந்த அளவிற்கு அவை வலியுறுத்துவதில்லை.

மோயர்ஸ்: ’மரணம்’ என்ற படிமமே தொன்மத்தின் துவக்கம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அதை விளக்க முடியுமா?

கேம்ப்பெல்: தொன்மவியல் போன்ற எந்த சிந்தனைக்கும் ஆதிகாலச் சான்று இடுகாட்டுடன் தொடர்புடையதே.

மோயர்ஸ்: மேலும் அவை சொல்வதென்னவென்றால் ’ஆணும் பெண்ணும் வாழ்க்கையை தரிசித்தார்கள், பின் அவர்கள் அதை இழந்தார்கள், ஆகவே அவர்கள் அதை குறித்து அதிசயத்துக்கொண்டார்கள்’.

கேம்ப்பெல்: அப்படி ஏதோ ஒன்று இருந்திருக்கலாம். நீங்கள் உங்கள் சொந்த அனுபவம் குறித்து மட்டும்தான் கற்பனை செய்ய வேண்டும். கல்லறைகளில் புதைக்கப்படும்போது ஆயுதங்களையும் உயிர்பலியையும் சேர்த்துப் புதைப்பது வாழ்க்கை தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. இப்போது உங்கள் முன்னால் குளிர்ந்து அழுகத்துவங்கும் மனிதன் இதற்கு முன்பு உயிர் கொண்டு வெம்மையுடன் இருந்தான் என்பதை அவை காட்டுகின்றன. அப்போது அங்கிருந்த ஏதோ ஒன்று இப்போது இல்லை. இப்போது அது எங்குள்ளது?

மோயர்ஸ்: மரணத்தை மனிதர்கள் எப்போது முதன் முதலாக கண்டடைந்திருப்பார்கள் என நீங்கள் கருதுகிறீர்கள்?

கேம்ப்பெல்: எப்போது அவர்கள் முதன் முதலாக மனிதர்களாக இருந்தார்களோ அப்போதே கண்டடைந்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் அப்போதே இறக்கவும் செய்திருப்பார்கள். விலங்குகளுக்கு தங்கள் துணைகள் இறப்பதை காணும் வழக்கம் உண்டு. ஆனால் நாம் அறிந்தவரையில் விலங்குகளுக்கு அதைக்குறித்து மேலதிகமாக எந்த சிந்தனையுமில்லை. மேலும் நியாண்டர்தால் காலகட்டம் வரையிலும் மனிதர்களும் அதைப்பற்றி குறிப்பிடத்தகுந்த வகையில் சிந்தித்ததற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை, ஆயுதங்களும் பலி விலங்குகளும் அவர்களுடன் சேர்த்து புதைக்கப்பட்டிருந்த போதும்.

மோயர்ஸ்: இவற்றை புதைப்பது எதை குறிக்கின்றன?

கேம்ப்பெல்: எனக்கு தெரியாது.

மோயர்ஸ்: ஒரு ஊகமாக சொல்ல முடியுமா?

கேம்ப்பெல்: நான் ஊகிக்க முயல்வதில்லை. இந்த விஷயத்தைப் பற்றி நாம் ஏராளமான தகவல்கள் வைத்திருக்கிறோம். ஆனால் தகவல்கள் நின்றுபோகும் இடம் ஒன்று உண்டு. நீங்கள் அவர்களின் எழுத்துக்களை அறியும்வரை அம்மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை உறுதியாக தெரிந்துகொள்ள முடியாது. உங்களிடம் இருப்பதெல்லாம் சில எச்சங்கள் மட்டுமே. நீங்கள் அதை பின்னோக்கி விரித்துக் கொள்ளலாம், ஆனால் அது அபாயகரமானது. எப்படியாயினும் நாம் அறிவது என்னவென்றால், புதைத்தல் என்பது கண்ணுக்கு புலப்படும் தளத்திலிருக்கும் வாழ்க்கைக்கு பின்னால் வேறொரு தளத்தில் வாழ்க்கை தொடர்கிறது என்ற கருத்தை உள்ளடக்கியது என்பதையே. அத்தளத்தில் உள்ள வாழ்க்கைதான் இந்த விழியறியும் வாழ்க்கையை எவ்விதமோ தாங்குகிறது. நாம் அவ்வாழ்க்கையுடன்தான் நம்மை தொடர்புறுத்திக்கொள்ளவேண்டும். இதுதான் அனைத்து தொன்மங்களின் அடிப்படைக் கரு என்று நான் சொல்வேன். அதாவது விழிக்கு புலப்படா தளம் ஒன்று விழி தொடும் தளத்தை தாங்கி நிற்கிறது.

மோயர்ஸ்: நாம் அறிந்தவற்றிற்கு அடித்தளமாக இருப்பது எது என்று நாம் அறிவதில்லை.

கேம்ப்பெல்: ஆம். மேலும் இந்த புலப்படா அடித்தளம் ஒருவனுடைய சமூகத்துடனும் இணைந்துள்ளது. சமூகம் உங்களுக்கு முன்பும் இருந்தது, நீங்கள் சென்ற பின்பும் இருப்பது. நீங்கள் அதன் ஒரு உறுப்பினர் மட்டுமே. உங்கள் சமூகக்குழுவுடன் உங்களை இணைக்கும் தொன்மமானது நீங்கள் ஒரு மாபெரும் உயிரினத்தின் ஒரு உறுப்பு என்பதை உறுதிப்படுத்துகிறது. சமூகமேகூட இன்னும்பெரிய உயிரினத்தின் ஒரு உறுப்புதான். அதுதான் நிலப்பரப்பு, பழங்குடிகள் தங்களின் உலகம் என்று கருதிய நிலப்பரப்பு. சடங்கின் முக்கிய சாரமே ஒரு தனிமனிதனை அவனுடைய சொந்த உடலைவிட மிகப்பெரிதான ஒரு கட்டமைப்புடன் இணைப்பதுதான். 

மனிதன் கொன்று உண்பதன் வழியாக வாழ்கிறான். அதைப்பற்றிய ஒரு குற்றவுணர்வு அவனுக்குண்டு. புதைத்தல் வழியாக இறந்துபோன என் நண்பன் எங்கோ வாழ்கிறான் என்று கருதமுடிகிறது. ஆகவே நான் கொன்ற விலங்குகளும் எங்கோ உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். தொல்காலத்தைய வேட்டைமனிதர்கள் ’தெய்வீக விலங்கு’ என்றொரு கருத்தினை கொண்டிருந்தார்கள். அதை ’தலைமை விலங்கு’ என்றும் சரியான அர்த்தத்தில் குறிப்பிடலாம். அதன்படி அனைத்து மிருகங்களுக்கும் ஒரு தலைவன் உண்டு. அதுதான் கொல்லப்படவேண்டிய விலங்கை தேர்வு செய்து அனுப்புகிறது.

கவனியுங்கள், வேட்டையின் அடிப்படைத்தொன்மம் என்பது விலங்கு உலகத்திற்கும் மானுட உலகத்திற்கும் இடையே நடக்கும் ஒரு வகையான உடன்படிக்கை அல்லது புரிதல். விலங்கு தன்னுடைய வாழ்வானது மீட்புச் சடங்குகள் மூலம் உடல்சார்ந்த இருப்பை கடந்து நிலத்திடமோ அல்லது அன்னையிடமோ திரும்பி செல்லும் என்ற புரிதலுடன் மனமுவந்து தன் வாழ்வை அளிக்கிறது. மேலும் இந்த மீட்புச்சடங்கு முதன்மை வேட்டை விலங்குடன் தொடர்புடையது. சமவெளிகளில் வாழும் அமெரிக்கப் பூர்வக்கூடிகளுக்கு அது எருமையாக இருந்தது. வடமேற்கு கடற்கரைப் பகுதி மக்களுக்கு அது சாலமன் மீன்கள். கூட்டம் கூட்டமாக அங்கு வரும் சாலமன் மீன்களுக்கு அவர்கள் மிகப்பெரிய விழாக்கள் நடத்தினார்கள். தென் ஆப்ரிக்கவில் 'Eland' எனப்படும் மாபெரும் சுருண்ட கொம்புகளுடைய கம்பீரமான மான் முதன்மை விலங்கு.

மோயர்ஸ்: முதன்மை விலங்கு என்றால்?

கேம்ப்பெல்: அதுதான் உணவை வழங்குவது.

மோயர்ஸ்: ஆகவே முற்கால வேட்டை சமூகங்கள் மனிதர்களும் விலங்குகளும் ஒன்று இன்னொன்றிற்கு உணவாக வேண்டும் என்ற பிணைப்பின் அடிப்படையில் வளர்ந்தன.

கேம்ப்பெல்: ஆம். அவ்வாறுதான் வாழ்க்கை உள்ளது. மனிதன் ஒரு வேட்டைக்காரன். வேட்டைக்காரன் தனது இரைக்கு ஒரு கொலைமிருகம். தொன்மங்களில் இந்த கொலைமிருகமும் அதற்கு இரையாகும் விலங்கும் இரண்டு முக்கிய பாத்திரங்கள். அவை வாழ்க்கையின் இரண்டு அம்சங்களை பிரதிபலிக்கின்றன. ஒன்று, மூர்க்கமான, கொலை புரியக்கூடிய, வென்று செல்லக்கூடிய வாழ்க்கை அம்சத்தை சொல்வதாக உள்ளது. இன்னொன்று, அதற்கு ஒப்புக்கொடுக்கும் பொருளாக அல்லது படுபொருள் என்று நீங்கள் சொல்லக்கூடியதாக உள்ளது.

மோயர்ஸ்: வாழ்க்கையும் அப்படித்தான். வேட்டையாளனுக்கும் வேட்டைப்பலிக்கும் இடையே உள்ள உறவில் என்ன நிகழ்கிறது?

Buffalo Hunter under wolfskin mask at the foot of the Rockies, George Catlin, 1832-39

கேம்ப்பெல்: ஆப்பிரிக்கப்பாலைவன பழங்குடி மக்களின் (Bushmen) வாழ்க்கையிலிருந்தும் அமெரிக்கப் பூர்வகுடிகள் எருமையுடன் கொண்டுள்ள உறவிலிருந்தும் நாம் அறிவது என்னவென்றால், அவ்வுறவு ஒரு போற்றுதலைக் கொண்டது, பெருமதிப்புடையது எனலாம். இப்படி விளக்கலாம். ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பாலைவனத்தால் ஆன ஒரு உலகத்தில் வாழ்கின்றனர். வாழ்க்கை அங்கு மிகக் கடினமானது. வேட்டை அங்கு அதைவிட கடினமானது. வலிமை மிக்க பெரிய அம்புகளைத் தயாரிப்பதற்கு மரங்களும் அங்கு குறைவு. சிறிய அம்புகளை வைத்துக்கொண்டு பழங்குடிகளால் முப்பது அடிக்கும் குறைவான தொலைவிற்குத்தான் அம்புகளை எய்ய இயலும். அம்பு தைக்கும் ஆழமும் மிகக்குறைவு. விலங்கின் தோல்பரப்பைச் சற்று கிழிப்பதை தவிர்த்து பெரிதாக அந்த அம்புகளால் ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் வியக்கத்தக்க வகையில் இப்பழங்குடிகள் சக்திவாய்ந்த நஞ்சினை அம்பு முனையில் தடவி இரையை நோக்கி எய்கிறார்கள். ஈலெண்ட் (Eland) எனப்படும் அந்த அழகான மான் நஞ்சேறி, ஒன்றரை நாளிற்கு வலியை அனுபவித்து இறக்கிறது. அம்பு பாய்ந்து நஞ்சு கலந்து வேதனையுடன் அந்த மான் இறந்த பிறகு வேட்டையாளர்கள் சடங்குகளை செய்ய வேண்டும். அதற்கு 'மறை பங்களிப்பு' (Participation Mystique) என்று பெயர். இறந்த விலங்கின் ஊன் அவர்களுக்கு வாழ்வளித்திருக்கிறது என்று கூறி அவ்விலங்கின் இறப்பில் ஒரு மறை பங்களிப்பை மேற்கொள்ளும் ஒரு செயல் அது. இங்கே தொன்மரீதியான ஒரு தொடர்புருத்தல் உள்ளது. கொல்வது என்பது வெறுமனே வெட்டிச்சாய்ப்பதல்ல, அது சடங்கின் வழிவரும் செயல். உணவுக்கு முன்னால் நீங்கள் உணவின் மீது கருணையுடன் அமர்ந்திருப்பது போல. தானாகவே முன்வந்து தன் வாழ்வையை அளித்ததனால் உங்களுக்கு உணவிட்ட விலங்கினை நீங்கள் சார்ந்துள்ளீர்கள், அதை அடையாளம் கண்டு கொள்வதுதான் அச்சடங்கின் செயல். வேட்டை என்பதே ஒரு சடங்குதான்.

மோயர்ஸ்: ஒரு சடங்கு ஆன்மீகமான உண்மை ஒன்றை வெளிப்படுத்துகிறது.

கேம்ப்பெல்: ஆம். இச்சடங்கு நமது சொந்த தனிப்பட்ட வேட்கைக்காக அல்லாமல் இயற்கையின் வழியில் இயைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 

ஆப்பிரிக்கபழங்குடிகள் விலங்களின் கதைகளை கூறும்போது பலவகை விலங்குகளுடைய குரலை ஒலிப்பார்கள் எனவும், சொற்களை அவ்விலங்குகள் உச்சரிப்பது போல உச்சரிப்பார்கள் எனவும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அந்த விலங்குகள் பற்றிய அந்தரங்கமான அறிவையும், நட்பார்ந்த அணுக்கம் மிகுந்த உறவினையும் அவர்கள் கொண்டிருந்தர்கள். அவற்றில் சிலவற்றை அவர்கள் உணவிற்காக கொன்றார்கள். பண்ணை விலங்குகளுடன் சேர்த்து ஒரு பசுவை செல்லமாக வளர்த்து வரும் பண்ணையாளர்களை நான் அறிவேன். அவர்கள் எதன் பொருட்டும் அப்பசுவை கொன்று உண்பதில்லை. ஏனென்றால் நண்பனாக இருக்கும் அந்த விலங்கை உண்கையில் ஓரினத்து ஊனை உண்ணும் ஒரு செயல்பாடு அடங்கியுள்ளது. ஆனால் தொல்பழங்குடிகள் எப்போதும் தங்கள் நண்பர்களின் ஊனை உண்டுகொண்டிருந்தார்கள். அதற்காக உளவியல்ரீதியான பிரதியீடு ஒன்று அங்கே செய்யப்பட வேண்டியிருந்தது. தொன்மங்கள் அதை செய்வதற்கு உதவி புரிந்தன.

மோயர்ஸ்: எப்படி?

கேம்ப்பெல்: வாழ்க்கைக்கு அத்யாவசியமான செயல்பாடுகளில் குற்றவுணர்வோ அல்லது அச்சமோ இன்றி ஈடுபடும் மனநிலையை அடைவதற்கு அந்த முற்கால தொன்மங்கள் உதவிபுரிந்தன.

மோயர்ஸ்: மேலும் வேட்டை, வேட்டையாளன், வேட்டைப்பலி மற்றும் நண்பனான விலங்குகள், கடவுளின் செய்தியாளனான விலங்குகள் போன்ற கருத்துக்களை இந்த மாபெரும் கதைகள் தொடர்ந்து சொல்லி வந்தன.

கேம்ப்பெல்: சரியான சொன்னீர்கள். பொதுவாக, இரையாகும் விலங்கு தெய்வீகத்தின் செய்தியாளனாக மாறுகிறது.

மோயர்ஸ்: இதை நீங்கள் ‘வேடன் தூதனை கொல்கிறான்’ என்று சொல்லிவிடுகிறீர்கள்.

கேம்ப்பெல்: கடவுளை கொல்வதுதான் அது.

மோயர்ஸ்: அது குற்றவுணர்வை ஏற்படுத்துமா?

கேம்ப்பெல்: இல்லை. அந்த குற்றவுணர்வுதான் தொன்மத்தால் களையப்படுகிறதே. ஒரு விலங்கை கொல்வது என்பது உங்களுடைய தனிப்பட்ட செயலல்ல. இயற்கையின் வேலையைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

மோயர்ஸ்: தொன்மத்தால் குற்றவுணர்வு துடைத்தெறியப்படுகிறதா?

கேம்ப்பெல்: ஆம்.

மோயர்ஸ்: ஆனால் சிலசமயம் நீங்கள் கொலையை நெருங்கும்போது ஒருவகையான தயக்கத்தை உணரவேண்டும் என்றும் தொன்மம் எதிர்பார்க்கிறது. அப்போது நீங்கள் உண்மையிலேயே அதை கொல்ல விரும்பமாட்டீர்கள்.

கேம்ப்பெல்: அந்த விலங்கு ஒரு தந்தை. நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் தந்தைதான் உங்கள் முதல் எதிரி என்று பிராய்ட் சொல்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீங்கள் சிறுவனாக இருக்கும்போது ஒவ்வொரு எதிரியும் ஆற்றல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தந்தையென்ற படிமத்துடன் ஒத்துப்போவதை உணர்ந்திருப்பீர்கள்.

மோயர்ஸ்: அம்மிருகம் தந்தை என்ற படிமமாக மாறுகிறதா, அதாவது பிதா என்ற படிமமாக?

கேம்ப்பெல்: ஆம். மத நம்பிக்கையின்படி பார்த்தால், அந்த விலங்கின் மீதான நம் மனப்பான்மையானது மரியாதையும் பெருமதிப்பும்தான். அது மட்டுமல்லாமல், அந்த விலங்கின் ஊக்கத்திற்கு நாம் காட்டும் அடிபணிதலும் கூட. 

மோயர்ஸ்: கடவுளாக அல்லது கடவுளின் தூதனாக இருக்கும் அவ்விலங்கை கொல்லும் செயல் ஆதிமனிதனை தொந்தரவு செய்தது என நீங்கள் நினைக்கிறீர்களா?

கேம்ப்பெல்: நிச்சயமாக. அதனால்தான் நீங்கள் சடங்குகளை பெற்றுள்ளீர்கள்.

மோயர்ஸ்: என்ன வகையான சடங்குகள் அவை?

கேம்ப்பெல்: விலங்குகளை ஆற்றுப்படுத்துவதற்கும் அதற்கு நன்றியுரைப்பதற்குமான சடங்குகள். உதாரணமாக ஒரு கரடி கொல்லப்பட்ட பின், அதன் ஊனின் ஒரு துண்டை அந்த கரடிக்கே படையலாக்குவது ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு அக்கரடியின் தோலை ஒரு பாறை மேல் போர்த்தி அக்கரடி அங்கிருப்பதைப் போலவும் நமது உணவிற்காக அது தனது ஊனையே கொடையளிப்பது போலவும் கருதி சிறிய விழா அங்கு நடக்கிறது. அதன் முன்னால் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும். அது பெண்தெய்வம். பிறகு மலைத்தெய்வமான கரடிக்கும் பெண்தெய்வமான நெருப்பிற்கும் இடையே ஒரு உரையாடல் நிகழ்கிறது.

மோயர்ஸ்: அதில் அவர்கள் என்ன பேசுவார்கள்?

கேம்ப்பெல்: யாருக்கு தெரியும்? ஒருவரும் அதை கேட்டதில்லை. ஆனால் அங்கொரு சிறிய சமூகமாக்கல் நிகழ்கிறது.

மோயர்ஸ்: குகைக்கரடிகள் ஆற்றுப்படுத்தப்படவில்லை என்றால் அவை மீண்டும் தோன்றாது. பிறகு ஆதிகால வேட்டையர்கள் பசியால் இறக்க நேரிடும். அவர்கள் தாங்கள் சார்ந்திருந்தவற்றிலிருந்து ஏதோ ஒரு வகையான சக்தியை பெற்றார்கள். அந்த சக்தி அவர்களுடையதைவிட ஆற்றல் மிக்கதாக இருந்தது.

கேம்ப்பெல்: ஆம். அதுதான் தலைமை விலங்கின் சக்தி, இவ்விளையாட்டில் கலந்து கொள்வதற்கான விலங்குகளின் ஏற்பு அது. உலகம் முழுதும் வேடர்கள் தங்களுக்கு முதன்மை உணவை அளிக்கும் விலங்கிடம் மிக அந்தரங்கமான, போற்றிப்பாடும் உறவுமுறையை கொண்டிருந்தார்கள். இன்று நாம் உணவிற்கு முன் அமர்கையில் இவ்வுணவை அளித்தமைக்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். இம்மனிதர்கள் அந்த விலங்குகளுக்கு நன்றி சொன்னார்கள்.

மோயர்ஸ்: இத்தகைய சடங்குகளை கொண்டு விலங்குகளை ஆற்றுப்படுத்துவதும் கௌரவிப்பதும் ஒருவகையில் இறைச்சிக் கடையில் ஊன் வெட்டுபவனுக்கு கையூட்டு அளிப்பது போல உள்ளதே.

கேம்ப்பெல்: இல்லை. நான் இதை கையூட்டாக எண்ணவில்லை. மாறாக, ஒரு பரஸ்பர உறவிற்கு ஒத்துழைப்பு நல்கியதற்காக நண்பனுக்கு நன்றி கூறுதல் என எண்ணுகிறேன். நீங்கள் அவ்வண்ணம் நன்றி செலுத்தாவிட்டால் அது அந்த உயிர்களை அவமதிப்பிற்கு உள்ளாக்குவதாகும்.

விலங்குகள் கொல்லப்படுவதை விளக்குவதற்கான சடங்குகள் இங்கே உள்ளன. ஒரு விலங்கை கொல்வதற்கு முன்னர் அந்த வேட்டையாளன் மலையுச்சியில் இருக்கும் ஒரு பாறையின் மேல் கொல்லப்படவிருக்கும் விலங்கின் உருவத்தை ஓவியமாக வரைவான். படம் வரைவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் உதித்தெழும் சூரியனின் முதற்கதிர் தொடும் இடமாக இருக்கும். சூரியன் உதிக்கையில் வேடனுடன் இணைந்து சடங்கினை செய்வதற்காக அவனுடைய மக்கள் சிறு குழுவாக அந்த மலை உச்சியில் காத்திருப்பார்கள். புலரியில் சூரியன் தோன்றி கதிர்கள் அந்த ஓவியத்தை தீண்டுகையில் வேடனின் வில்லிலிருந்து ஓர் அம்பு புறப்பட்டு அந்த ஓவியத்தில் குத்தி நிற்கும். அப்போது அக்குழுவில் அவனுக்கு உதவியாக இருக்கும் பெண் தனது இரு கைகளையும் உயர்த்தி ஓசையெழுப்புவாள். அதன் பிறகு அவ்வேடன் அந்த விலங்கைக் கொல்வதற்காக அங்கிருந்து புறப்படுவான். அவன் எய்த அம்பு அந்த பாறை ஓவியத்தின் மீது குத்தி அப்படியே நின்றிருக்கும். மறுநாள் காலை கதிரவன் தோன்றுகையில் அந்த ஓவியம் வேடனால் அழிக்கப்படும். இயற்கையின் ஒழுக்காக இச்செயல் நிகழ்த்தப்படுகிறது. வேடனின் தனிப்பட்ட நோக்கத்திற்காக அல்ல. 

உலகின் இன்னொரு பகுதியில் முற்றிலும் மாறுபட்ட கதையும் உண்டு. அது சாமுராய் என்ற ஜப்பானிய போர்வீரன் தன் தலைவன் கொல்லப்பட்டமைக்காக பழிதீர்க்கும் கடமையை கொண்டிருக்கும் கதை. அப்போர்வீரன் தன் தலைவனை கொன்ற கொலைகாரனை சிறைபிடித்து தன் வாளால் வெட்ட முற்படுகையில், சிறைபிடிக்கப்பட்ட கொலைகாரன் வெறிமிகுந்து போர்வீரனின் முகத்தில் காறி உமிழ்கிறான். போர்வீரன் உருவிய வாளை தன் உறையிலேயே மீண்டும் செலுத்திவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுகிறான்.

மோயர்ஸ்: ஏன்?

கேம்ப்பெல்: ஏனென்றால் போர்வீரன் கொலைகாரனால் சினமூட்டப்பட்டு விட்டான். சினத்துடன் இவன் அவனைக் கொன்றால் அது தனிப்பட்ட நோக்கத்திற்காக செய்த செயலாகிவிடும். மேலும் இவன் வந்தது வேறொரு வகையான செயலிற்காக. அது தனக்காக அல்லாத பழிவாங்கும் செயல். 

மோயர்ஸ்: இத்தகைய ’தன்னை சாராத செயல்’ பெரும் சமவெளிகளில் வாழும் வேட்டைக்காரனின் மனதில் ஏதோவொரு இடத்தை வகித்தது என நீங்கள் எண்ணுகிறீர்களா?

கேம்ப்பெல்: ஆம், உறுதியாக. ஏனெனில் ஒருவரை கொன்று உண்பது அறப்பிழையல்லவா? இம்மக்கள் விலங்குகளை நாம் கருதுவதுபோல கீழ்நிலை உயிர்களாக எண்ணுவதில்லை. அவர்களுக்கு விலங்குகள் மனிதர்களுக்கு நிகரானவை. சிலசமயங்களில் மனிதர்களைவிட மேலானவை. மானுடரிடம் இல்லாத சக்திகளை விலங்குகளிடன் உள்ளன. உதாரணமாக ஷாமன் இனத்தவர்கள் ஏதாவது ஒரு விலங்கினை பரிச்சயப்படுத்தி வைத்திருப்பர். ஏனெனில் அவ்விலங்கின் ஆன்மா அவர்களுக்கு துணையாகவும் ஆசிரியராகவும் இருக்கும் என்பதால்.

Blackfoot Tribe

மோயர்ஸ்: ஆனால் கற்பனை செய்யதல், அழகைக் காணும் உணர்வு, உறவுகளில் இருந்து அழகை உருவாக்குதல் ஆகியவை மனிதர்களுக்கு இயலத்தொடங்கும் என்றால், அவர்கள் விலங்குகளை விட மேலானவர்கள்தானே?

கேம்ப்பெல்: நன்று. அவர்கள் மேட்டிமையை சிந்தித்தவர்கள் அல்ல, சமத்துவத்தை பார்த்தார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்கு விலங்குகள் வாழ்வை எப்படி வாழ்வது என்பதை காட்டுவதாக இருந்தன. ஆகவே அவர்கள் விலங்குகளை நாடிச்சென்றனர். அவ்வகையில் அதுதான் மேன்மையானது. சிலசமயம் விலங்குகளே அவர்களுக்கு சடங்கை வழங்கின என்று தொன்மங்கள் கூறும். உதாரணமாக அமெரிக்க பழங்குடியான Blackfoot இனத்தவர் ஆடும் எருமை-நடனச்சடங்கு பற்றிய தொன்மம். இவர்கள் எருமையை வேட்டையாடுபவர்கள். நான் சொல்லும் சமத்துவத்தை இவர்களின் தொன்மத்தில் காணலாம். இதன் வழியாக அவர்கள் விலங்குகளின் ஒத்துழைப்பை தங்கள் வாழ்க்கையினுள் வரவைக்கிறார்கள்.

மோயர்ஸ்: அது என்ன?

கேம்ப்பெல்: இந்த வகையான கதைகள் பெரிய பழங்குடிக்குழு ஒன்று தங்களுக்கான உணவை சேகரிக்க எதிர்கொள்ளும் அல்லல்களில் இருந்து தோன்றுகின்றன. குளிர்காலத்தில் இறைச்சியை சேகரிப்பதற்கான ஒரு வழி காட்டில்மேயும் எருமை மந்தையை ஒரு மலைமுடிக்கு ஒட்டிச்சென்று அங்கிருந்து கீழே உருளச்செய்து மலையடிவாரத்தில் எளிதாக வெட்டிக் கொல்வது. இது எருமை வீழ்த்துதல் (Buffalo fall) என்றழைக்கப்படுகிறது.

இந்த கதை Blackfoot பழங்குடியுடையது. வெகு காலத்துக்கு முன்பு மலையுச்சிக்கு ஒட்டிச்செல்ல எருமை கிடைக்கப்பெறாத ஒருவனின் கதையிது. எருமை ஒன்று மலைமுகட்டை அடைந்து ஒருபக்கமாக ஒதுங்கி பார்த்தது. அதன் பார்வை இந்த பழங்குடிக்கு இக்குளிர்காலத்தில் இறைச்சி எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதைப்போல இருந்தது.

ஒரு நாள், அங்கிருந்த ஒரு இல்லத்திலிருந்து பெண் ஒருவள் தனது குடும்பத்திற்கு நீர் கொண்டு வருவதற்காக அதிகாலையில் எழுந்து வெளியே வந்தாள். அப்போது அவள் ஏதேச்சையாக அந்த மலைமுகட்டை நோக்கினாள். அங்கே ஒரு எருமைக் கூட்டம் நின்றிருந்தது. அதைப் பார்த்து அவள், "ஓ, நீங்கள் இப்போது இங்கே வந்தீர்களானால் நான் உங்களை திருமணம் செய்து கொள்வேன்" என்று கூவினாள்.

உடனே அவள் வியக்கும் படி அவை அனைத்தும் கீழிறங்கத் தொடங்கின. அது முதல் ஆச்சரியம். இரண்டாவது ஆச்சரியமாக, அந்த கூட்டத்தின் தலைவனான முதிய எருமை, இவளை நெருங்கி வந்து "நன்று, வா பெண்ணே, நாம் செல்வோம்" என்றது.

அவள் திடுக்கிட்டு "ஐயோ! இல்லை" என்றாள்.

"ஆம், என்னுடன் நீ வரவேண்டும்" என்றது எருமை. "நீ ஒரு சத்தியம் செய்தாய். அதன்படி நமது பேரம் முடிந்துவிட்டது. இங்கே மடிந்த எனது உறவினர்களை எண்ணிக்கொள். என்னுடன் வா இப்போது" என்றது அது.

பொழுது விடிந்ததும் அப்பெண்ணின் குடும்பம் அவளை தேடியது. எங்கே மினஹாஹா? அவள் தந்தை வீட்டு முற்றத்தை சுற்றிலும் பார்த்து - நீங்கள் பழங்குடிகளைப் பற்றி அறிவீரா, அவர்கள் கால் தடங்களை கவனிப்பவர்கள் - இவ்வாறு கூறினார் "அவள் ஒரு எருமையுடன் சென்றிருக்கிறாள். நான் சென்று அவளை மீட்டு வருகிறேன்".

தந்தை தனது காலணிகளை அணிந்து கொண்டு வில்லையும் அம்பையும் கைகளில் எடுத்துக்கொண்டு சமவெளியில் இறங்கி நடக்கலானார். கணிசமான தூரம் கடந்ததும் அவர் சற்று ஓய்வெடுக்க எண்ணினார். ஆகவே அவர் ஓரிடத்தில் அமர்ந்தவாறே இனி செய்வதென்ன என்று சிந்தித்தார். அப்போது அதுவரை அவருடன் இணையாக பறந்து வந்து கொண்டிருந்த மக்பை (Magpie) என்னும் பறவையை கண்டார். அது ஒரு புத்திசாலியான பறவை. அதற்கு கண்கட்டு வித்தைகள் செய்யும் தகுதி இருந்தது.

மோயர்ஸ்: மாயவித்தைகள். 

கேம்ப்பெல்: ஆம். அந்த பூர்வகுடி அப்பறவையை நோக்கி, "அழகிய பறவையே, எனது மகள் ஒரு எருமையுடன் சென்றாளா? நீ அவளை கண்டாயா? நீ இரை தேடிக்கொண்டே இந்த சமவெளிகளில் அவள் எங்காவது இருக்கிறாளா என்று பார்க்க முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு அந்த பறவை, "ஆம் இப்போதுதான் ஒரு அழகிய பெண் ஒரு எருமையுடன் சென்றாள். அங்கேதான், சிறிது தொலைவுதான் சென்றிருப்பாள்" என்றது.

"நன்று என்ற அம்மனிதன், "அவளது தந்தை இங்கே எருமைகள் புரளும் சேற்றுக்கதுப்பின் அருகே காத்திருக்கிறார் என்று நீ அவளிடம் சொல்ல முடியுமா?" என்று கேட்டான்.

உடனே அந்த மக்பை பறந்து சென்று எருமைகளுக்கு நடுவில் இருந்த அப்பெண்ணை சந்தித்தது. எருமைகள் அனைத்தும் உறங்கிக்கொண்டிருக்க அவள் அங்கு எதையோ நெய்து கொண்டிருந்தாள். பறவை அவளை நெருங்கி "உனது தந்தை அங்கே எருமைச் சேற்றிற்கருகே உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்" என்றது.

"ஓ" என்று அதிர்ந்த அப்பெண், "இது மிக பயங்கரமானது, அபாயகரமானது" என்றாள். "இந்த எருமைகள் நம்மை கொன்றுவிடும். நீ அவரை காத்திருக்க சொல், நான் இவற்றை சமாளித்துவிட்டு வருகிறேன்" என்றாள்.

அப்போது அவளுடைய எருமைக்கணவன் உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு அவள் பின்னால் வந்து நின்று தனது கொம்புகளை கழட்டித் தந்தவாறு அவளிடம், "நீ அந்த எருமை சேற்றிலிருந்து நான் அருந்துவதற்கு நீர் கொண்டு வா" என்றான்.

அந்த கொம்பை எடுத்துக் கொண்டு அவள் அங்கு சென்று தன் தந்தையை காண்கிறாள். தந்தை அவளுடைய கைகளைப் பற்றிக்கொண்டு "என்னோடு வந்துவிடு" என்றார்.

ஆனால் அவள், "இல்லை, முடியாது இது வெகு ஆபத்தானது" என்றாள். "எருமை மந்தையே நமக்கு சற்று முன்னால் தான் இருக்கிறது. நான் அதை சமாளிக்க வேண்டும். இப்போது நான் திரும்பிச் செல்கிறேன்" என்றாள்.

அவள் நீரள்ளிக்கொண்டு அங்கே திரும்பிச்செல்கிறாள். அவளைக் கண்ட அந்த எருமைக்கணவன் மூச்சொலிகளுடன் மோப்பம் பிடித்தவாறே, "ஒரு பூர்வகூடியின் குருதி மணத்தை நான் முகர்கிறேன்" என்றது. அதற்கு அவள், "இல்லை, அப்படி எதுவும் இல்லையே" என்றாள். ஆனால் அந்த எருமை "நான் உண்மையாகவே உணர்கிறேன்" என்றது. உடனே அது தனது கூட்டத்தை நோக்கி கர்ஜித்தது. அனைத்து எருமைகளும் உறக்கத்திலிருந்து எழுந்து வாலை உயர்த்தி மெதுவாக எருமை நடனத்தை ஆடத்தொடங்கியது. ஆடியவாறே அக்கூட்டம் அங்கு சென்று காத்துக் கொண்டிருந்த அந்த மனிதனை மிதித்து நசுக்ககியது. எருமைகளின் கால்களுக்கிடையில் சிக்கி துண்டு துண்டாக சிதறி அம்மனிதன் முழுதாக மறைந்து போனான். அனைத்தும் முடிந்தது. அப்பெண் அழுது கொண்டிருந்தாள். அவளருகே வந்த எருமை கணவன் " அழுகிறாயா?" என்றது. 

Slaughtered for the Hide, Harper’s Weekly, December 12, 1874

"ஆம். அவர் என்னுடைய தந்தை" என்றாள் அவள்.

"நன்று" என்ற எருமைக்கணவன், "எங்களைப் பற்றி நினைத்தாயா? அங்கே மலையடிவாரத்தில் கொல்லப்பட்ட எங்களவர்களிலும் குழந்தைகள், பெற்றோர்கள் மனைவிகள் உண்டு. இங்கே நீ உன் தந்தைக்காக அழுகிறாய்" என்று அவளைப் பார்த்து கூறியது. அது ஒரு கருணையுள்ள எருமை என்பது வெளிப்படையாக தெரிந்தது. தொடர்ந்து அது அவளிடம், "சரி, உன்னால் உன் தந்தையை உயிர்ப்பிக்க முடிந்தால் நீ இங்கிருந்து செல்ல நான் அனுமதிக்கிறேன்" என்றது.

அவள் அந்த மக்பை பறவையை நோக்கித் "பறவையே, தயவு செய்து எனது தந்தையின் உடலில் இருந்து ஒரு சிறிய பாகத்தை கொண்டு வா" என்றாள். அப்பறவை அவள் கேட்டது போலவே ஒரு சிறிய எலும்புத் துண்டை கொண்டு வந்தது. "இது போதும்" என்றாள் அவள். அந்த எலும்புத்துண்டை தரையில் வைத்து தனது போர்வையால் மூடி உயிர்மீட்கும் சக்தி கொண்ட பாடலை பாடினாள். அரிய சக்திகளுள்ள ஒரு மந்திரப்பாடல் அது. திடீரென்று போர்வைக்குள் ஒரு மனிதன் தோன்றினான். அவள் அதை கண்டு "அது எனது தந்தை வந்துவிட்டார்" என்றாள். ஆனால் அவர் இன்னமும் சுவாசிக்கவில்லை. அவள் தொடர்ந்து அப்பாடலைப் பாட தந்தை உயிர்கொண்டு எழுந்து நின்றார்.

எருமைகள் வியந்து போய் நின்றன. அவளை நோக்கி அவை, "நீ ஏன் இதை எங்களுக்கு செய்யக்கூடாது? உனக்கு நாங்கள் எருமை நடனத்தை கற்றுத் தருகிறோம். உங்களால் எங்கள் குடும்பத்தினர் கொல்லப்படுகையில் நீ நடனமிட்டு அந்த மந்திரத்தை பாடு, நாங்கள் மீண்டும் உயிர்கொள்கிறோம்" என்றது.

இதுதான் இக்கதையின் அடிப்படைக் கருத்து - சடங்கின் மூலம் லெளகீகத்தை கடந்த ஒரு பரிமாணம் அடையப்படுகிறது, அப்பரிமாணத்திலிருந்துதான் உயிர் வருகிறது, மீண்டும் அதன்னுள்ளேயே உயிர் செல்கிறது.

மோயர்ஸ்: ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் வந்து இந்த மதிப்பிற்குரிய விலங்குகளை வெட்டிச்சாய்த்தபோது என்ன நிகழ்ந்தது?

-தொடரும் 

மொழிபெயர்ப்பு - பூபதி துரைசாமி

--------------------------------------------------------------

மோயர்ஸ் மற்றும் கேம்ப்பெல்
பூபதி துரைசாமி

பூபதி துரைசாமி. கோவையில் வசிக்கிறார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் படைப்புகளில் இருந்து கலை, இலக்கியம், வரலாறு, தத்துவம் இவற்றில் ஆர்வம் பெற்று தேடல் கொண்டிருப்பவர்.