கனவு, பண்டைக் காலத்திலிருந்தே மனிதனுக்குப் புரியாத புதிராக இருந்துவந்தது. தத்துவஞானிகளும் ஆய்வாளர்களும், கனவின் தன்மைகளைப் புரிந்து, விளக்க முயற்சித்துள்ளனர். அவர்கள் மனிதனின் அறிவுணர்வு நிலையை மூன்றாகப் பகுத்தனர்: 1.ஜாக்ரத் (நனவு), 2.சொப்பனம் (கனவு), 3.சுஷுப்தி (உறக்கம்) என. கனவு என்பது நனவுக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் இடைநிலையாக அமைந்தது. ரோக்லின் (Rokhlin) என்ற ருஷ்ய அறிஞர், கனவு ஆழ்ந்த உறக்கம் இல்லாத போது மட்டுமே தோன்றுகிறது என்பர்.
பழங்கால மக்கள், கனவுகள் இறைத்தன்மை உடையன என்றும், அவற்றை உணர்தல் இறைக்கலை என்றும் கருதினர். ஹோமர் (Homer) கனவை இறைத்தூதாகவே கண்டார். கனவு கடவுளின் கட்டளையென்றும் அதைக் கடைப்பிடித்து ஒழுகுதல் கடனென்றும் கூறியவர் அறிஞர் சாக்ரடீஸ் (Socrates).
ஆயின், கனவுகளின் இறைத் தன்மையின் உண்மையில் ஐயுற்று வினவினர் அரிஸ்டாட்டிலும் (Aristotle) ஹிபோகிரடீசும் (Hippocrates). அரிஸ்டாட்டில் தமது பிற்காலக் கட்டுரைகளில் உள-உடலியல் நிலைகளில், வருவதை உணர்த்தும் கனவுகளை விளக்க முயன்றார்.
மிடோரஸின் (Artemidorus of Daldis) கனாநூற்கள் தரும் பல உளஇயல் குறிப்புகள் தற்கால அறிவியல் கண்ணோட்டத்திற்கேற்ப அமைந்துள்ளன. அவர் படைப்பின் செல்வாக்கு, பிற்கால கனா இலக்கியங்களில் பரவலாகக் காணப்பட்டது. நனவிலுள்ளதை விட கனவுக்காலத்தில் கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் அமையும் என்பது காண்ட் (Kant) என்பவர் கொள்கை.
கனா விளக்கத்திற்கு, முழுநிலை (symbolic), துண்டுநிலை (cipher or decoding) விளக்கங்கள் கையாளப்பட்டன. கனவுப் பொருளை முழுமையாகக் கொண்டு, அதன் ஒவ்வொரு கூற்றுக்கும் பதிலாகத் தெளிவும் ஒப்புமையுமுடைய இன்னோர் கூற்றை வைத்து விளக்குவது முழுநிலை விளக்கமாம். கனவை ஒரு புதிர்க் குறியீடாகக் கொண்டு, ஒவ்வொரு குறியீட்டையும், ஒரு குறிப்பிட்ட அமைப்புப்படி, பொருளுள்ள இன்னோர் குறியீடாகப் பெயர்த்துப் பொருள் கொள்வதே துண்டுநிலை விளக்கம். அறிஞர் ஃபிராய்ட் (Freud) பயன்படுத்துவது உளவியலாய்வு விளக்கமாகும். அவர் கொள்கைப்படி, ஒரே கனவு, காணும் சூழ்நிலைக்கேற்பவும் காண்போனுக்கேற்பவும் தனித்தனிப் பொருளுடையதாக அமையும்.
”விருப்ப விளைவே கனவு” எனக் கருதினார் பிராய்ட். ஃபிரன்சி (Ferenczi) சுட்டிய அங்கேரியப் பழமொழி இதை மிகத் தெளிவாக்கியது. ‘பன்றி அகானையும், வாத்து சோளத்தையும் கனவு காணும்’ (the pig dreams of acorn, the goose of maize) என்பது அது. இவ்விருப்பத்தின் விளைவு என்ற கனவுக் கருத்து சங்க இலக்கியத்திலும் காணப்படுகிறது. காகம் இறால்மீனைக் கனவு கான்கிறது. வண்டு யானை மதத்தைக் கனவில் கண்டது. வாவல் நெல்லிக்கனியின் இன்சுவையைக் கனவு கண்டது. மான் நரந்தம் புல்லைக் கனவியது. கலித்தொகையிலும் ஃபிராய்டின் கொள்கை பிரதிபலிக்கின்றது.
ஓர்த்த சைக்கும் பறைபோல் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா (மருதக்கலி- 92-20)
(பறை இசைப்பவனின் இதயத்து விருப்பம் போலவே பறை இசைக்கு, அதுபோல உன் நெஞ்சத்தில் விரும்புவதையே உன் கனவிலும் நீ தான் கண்டாய் போலும்)
தொல்காப்பியர் கனவை உளவியல் நிலையில் மட்டுமன்றி உடலியல் நிலையிலும் கண்டார்.
எதிர்காலத்தை உணர்த்தும் ஒரு கருவியாகக் கனவைக் கூறினார் ஆட்லர் (Alfred Adler). கனவு காண்பவன் தன் வாழ்வில் எதிரிடப்போகும் ஒரு துன்பத்தை முன்பே கனவு சுட்டுவதாகக் கருதுவார் அவர். மேடர் (Maeder), பிராய்டின் ‘விருப்ப விளைவே கனவு’ எனும் கருத்தை மறுப்பார். விருப்ப உந்தலின் முன்னேற்றத்தால், எதிர்பார்த்த ஓர் முடிவோ அன்றி அம்முடிவை உணரும் முயற்சியோ, கனவுக்கும் பிற மனக்காட்சிக்கும் பொருளாகலாம்; இறப்பைப் போலவே எதிர்வும் நம் உணர்வின்றியே கனவில் புகலாம் என்பார். உறக்கத்தின்போது, உள்மனம் கனவு வாயிலாக விழிப்புடைய அறிவு மனத்தோடு தொடர்புகொள்கிறது. மேடரின் கொள்கைகளைக் கருத்து வேறுபாடின்றி ஏற்றுக்கோண்டார் சி.ஜி.யங் (C.G. Jung). நிகழலாம் என நினைக்கத் தகுவனவற்றின் முற்கலவை கனவு. நனவில் உருவாகும் முற்கலவையைவிட அது சிறப்பாக இருப்பதுண்டு. அறிவு மனத்தைக் கவராத எண்ணங்கள், மன உணர்வுகள், புலன் உணர்வுகள் என்பனவற்றின் கலவையே அது. ஆல்பர்ட் மாடலின் (Albert Modell) கருத்துப்படி, கனவு நம் உள்மனத்தில் ஆழ்ந்த எண்ணங்களின் வெளியீடாம். உறக்கத்தில் நாம் நம்மைப் பற்றிய உண்மைகளை வெளியிடுகிறோம். சிறந்த மனிதரும் இழிந்த கனாக் காண்கின்றனர். கனவுப் பொருள் நம் மூதாதையரான பழங்குடி மக்களின் உள வாழ்விலிருந்தும் நம் குழந்தைப் பருவ உள உணர்விலிருந்தும் எடுக்கப்படுவதே இதன் காரணம்.
கனவு காண்போர் அரற்றுதல் உண்டு. அச்சொற்கோவை தெளிவாக அமையுமெனக் கூற இயலாது. இக்கனவு மொழியில் இலக்கணச் செவ்வியினும்(அழகை விட) அழகு மிகுதி.
தமிழ் இலக்கியத்தில் கனவு, விருப்பவிளைவாகவும், வரும் நிகழ்வை உணர்த்தும் நிலையிலும், உள்ளுறையாகவும், நிமித்தமாகவும் பயன்படுகின்றது.
சங்க இலக்கியத்தில், (அ) விருப்பவிளைவாகவும், (ஆ) உள்ளுறையாகவும், (இ) நிமித்தமாகவும் கனவு கையாளப்பட்டுள்ளது. தொடர்நிலைச் செய்யுட்களில்தான், கனவு வருவதை உணர்த்தப் பயன்பபட்டது வள்ளுவர், விருப்ப விளைவாகக் கனவைக் ‘கனவு நிலையுரைத்தல்’ எனும் அதிகாரத்தில் படைத்தார்.
கனவை, வருணனைக்கு ஒர் உத்தியாகக் கருதுகின்றார் பௌரா(Bowra). தொடர்நிலைச் செய்யுள்கட்கு ஆரம்பமாக அமைவதில் கனவுகள் பெரும்பங்கு பெறுகின்றன. அவற்றால் பல பயன் உள. அவை தம் நிலையில் சுவையாக இருப்பதோடு சாதாரண வாழ்க்கைக்கு மாறுபட்ட நிகழ்வுகளைத் தருகின்றன; ஊழையோ நாம் எதிர்கொள்ளவேண்டிய பிறவற்றைப் பற்றியோ உள்ள உணர்வுகளை உருவாக்குகின்றன. அவை பெரும்பாலும் முக்கியமான இடங்களில் வந்து செயற்பாட்டின் பாதையை வகுக்கின்றன.
வரும் நிகழ்வை முன்னுணர்த்தும் கனவுகளே மிக இயல்பாக நெடும் பாடல்களில் அமைந்தன. பெருங்கதையில், உதயணன் கனாவும் வாசவதத்தையின் கனாவும் எதிர்வை உணர்த்துவதோடு விருப்பவிளைவாகவும் வந்தன. சீவகசிந்தாமணியில், அரசி விசயையின் கனவு வருவதை வகுத்தது. கம்பனின் திரிசடைக் கனவு, பெரிய புராணச் சமணர் கனவு, சீறாப்புராணக் கதீஜாவின் கனவு, தேம்பாவணியில் ஆரணன் கனவு முதலியன வருவதை உணர்த்தியவையே. பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோண்மணீயத்திலும், நாடகத் தலைவியின் கனவு பின் நிகழ்வுகளை முன் சுட்டியது. முழுநிலையில் மனோண்மணீயத்தின் கதைப் பின்னல், புருஷோத்தமன் - மனோண்மணியின் கனாக்களைச் சுற்றியே அமைந்தது. ஆசிய ஜோதியில் மாயாதேவியின் கனவும் வருநிகழ்வை முன் உணர்த்தியது. அரண்மனைகளில், கனாவிளக்கம் தர வல்லோர் அமர்த்தப்பட்டிருந்தனர் என்ற செய்தியும் கிடைக்கின்றது.
தமிழில் தோன்றிய முதற்காப்பியம், முதன்மைக் காப்பியம் சிலப்பதிகாரம். இக்காப்பியம் வழியாக ஆசிரியர் இளங்கோவடிகள் வலியுறுத்த விரும்பிய உண்மைகள் மூன்று.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாக
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்
’ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்’ என்பது மூன்று கருத்துக்களில் ஒன்றாக இருந்தபோதும் அதுவே நிகழ்ச்சிகட்கு அடிப்படையாகவும் முதன்மைக் கருத்தாகவும் அமைந்தது.
பௌராவின் கருத்துப்படி கனவு, ஊழ்வினை பற்றிய உணர்வைத் தருகிறது. கவிஞன், ஊழின் வலியை விளக்கக் கதையொன்றை இயற்றும்போது, அவனுக்குத் தன் கைவண்ணத்தைக் காட்டத்தக்க இடவிரிவு அமையின், அவன் கனவைப் பயன்படுத்துவதோடு, கருத்தழுத்தத்திற்குப் பல கனவைச் செறிப்பதும் உண்டு என்பார் அவர்.
சிலம்பின் முக்கனவுகள் ஊழ்பற்றிய உணர்வைத் தரப் பயன்பட்டன. அவை காப்பியத்திற்கு விரைவைத் தருகின்றன. கண்ணகி - கோவலன் கனவுகள் அவ்வப் பாத்திரப் பண்பையும் அறியத் துணைபுரிகின்றன. மூன்று கனவுகளும் காப்பியத்தின் முக்கிய இடங்களில் அமைகின்றன.
முதற் கனவு, காப்பியத்தின் முதற் திருப்பு மையத்தைத் தொடர்ந்த ‘கனாத்திறமுரைத்த காதை’யில் வருகின்றது. பல்லாண்டு இணைந்து வாழ்ந்த கோவலனும் மாதவியும் ஊழால் பிரிகின்றனர். அவர்கள் எதிர்கால வாழ்வைப் பற்றிய கவலை, காப்பியச் சுவைஞனுக்கு எழுகின்றது. அந்நிலையில் காப்பியத்தில் கனவு வந்து, வருவதை உணர்த்துகின்றது. அதோடு, அடுத்த முக்கிய நிகழ்வான கோவலன் கொலையையும், இறுதித் திருப்பு நிகழ்வாகிய, பாண்டியன் வீழ்வையும் சுட்டுகின்றது. இவ்வாறு, கண்ணகியின் கனவு முக்கிய இடத்தில் வந்து, பிற முக்கிய நிகழ்வுகளைத் தருகின்றது. கோவலனும் பாண்டிமாதேவியும் கண்ட (பிற இரு) கனவுகளும் முதன்மையான இடங்களிலேயே அமைந்தன. கோவலன் கனவு அவன் கொலையின் முன்னும், பாண்டிமாதேவி கனவு பாண்டியன் இறப்பின் முன்னும் பொருந்தின.
கண்ணகியின் கனவு:
கடுக்குமென் நெஞ்சம் கனவினால் என்கைப்
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுட் பட்டேம்
பட்டபதியிற் படாத தொருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட்டு என்தலைமேல்
கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முனர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ, தீக்குற்றம்
உற்றேனோ டுற்ற உறுவனோ டியானுற்ற
நற்றிறங் கேட்கின் நகையாகும்…
(கண்ணகி தேவந்தியை நோக்கி செறிந்த வளையல்களை அணிந்தவளே நீ வாழ்த்தியபடி நான் என் கணவனை பெறுவேன் என்றாலும், நேற்று நான் கண்ட கனவினால் என் நெஞ்சம் யாது நேருமோ என்று ஐயுருகிறது. என் கணவர் கனவில் வந்து என் கையை பற்றி அழைத்துச் செல்ல நாங்கள் இருவரும் ஒரு பெரிய நகரத்தினுள் சென்று புகுந்தோம் அங்குள்ள ஊரார் தகாததொரு பழியை இடுதேள் இடுவது போல் எங்கள் மேல் ஏற்றி கூறினார். அதன் காரணமாக கோவலனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டது என்று ஒரு சிலர் கூறக் கேட்டு நான் மன்னனின் அரசவை முன் சென்று வழக்குரைத்தேன். அதனால் அம்மன்னனுக்கும் ஊரார்க்கும் நேரிட்ட தீங்கு ஒன்று உண்டு அத்தீங்கு நான் செய்த கொடிய குற்றத்தின் பயன் போல தெரிகிறது ஆதலால் அதை உன்னிடம் கூறுவதற்கில்லை இவ்வாறு குற்றம் இழைத்த நானும் என் கணவரும் ஒரு நன்மையை அடைந்தோம் அதைக் கேட்டால் உனக்கு சிரிப்பு கூட வரலாம் என தான் கண்ட கனவை கூறினால்.)
கற்புடை மனைவி என்ற காரணத்தால், கணவனுடன் விண்ணுலகடைவதைக் கண்ணகி விரும்பியிருக்கலாம். அது அவள் ஆசையாகவும் இருந்திருக்கலாம். அதோடு, கோவலன் மாதவியைப் பல இடங்கட்கு அழைத்துச் சென்றதுபோல் தன்னையும் அழைத்துப்போக வேண்டுமென நினைத்திருக்கலாம். இவ்விரு விழைவுகளும், தீக்குற்றம் உற்றேனோ டியானுற்ற நற்றிறம்’, ‘என்கைப் பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம்’ எனும் தொடர்களில் தீட்டப்பட்டுள்ளன. இவ்வாறு விருப்ப விளைவாக வருவதோடு, இக்கனவு, காப்பியத்தின் சிக்கலையும், வரும் நிகழ்வுகளையும், கண்ணகியின் பண்பையும் தெளிவாக்குகின்றது. கண்ணகி தன்னையும் தன் கணவனைப் பற்றியும் மட்டுமே கனவு காண்பது, அவள் அவனிடம் கொண்ட ஒருமுகமான ஆழ்ந்த அன்பை வெளியிடுகின்றது. கோவலன் கொல்லப்படுவதுவரை அவள் கனவை நினைவுகூறவே இல்லை. அவன் இறந்தபோது நினைத்தாள்; அந்நினைவு அவளைச் செயற்படத் தூண்டியது; கோவலன் கள்வன் அல்லன் என அரசனிடம் சென்று முறைடத் தூண்டுகோலாயிற்று. அடிகள் அதை இவ்வாறு தருகின்றார்:
தீவேந்தந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள்
என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்.
கோவலன் கனவு:
… … ஓர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறைங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறை கோட்பட்டுக் கோட்டுமா வூரவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி யறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி யளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிந்தீங்குறும்…
(அப்போது கோவலன் மாடலனிடம் கூறினான்: மண்ணுயிர்களை சிறப்புடன் காத்து வரும் இப்பாண்டிய மன்னனது தலைநகராகிய மதுரையில் ஓர் கீழ் மகனால் ஐவகையாகக் பகுக்கப்பட்ட மணம் மிக்க கூந்தலுடைய என் மனைவி கண்ணகி நடுங்கி துயர் அடைந்தாள், யான் உடுத்திருந்த ஆடையோ பிறரால் பறிக்கப்பட்ட பின்பு கொம்புகளுடைய எருமை கடாவின் மீது நான் ஏறிச் சென்றேன். அழகுமிக்க கடை சுருண்ட கூந்தலை உடைய கண்ணகியோடு பற்றினைத் துறந்து மேலோர் பெறும் பேற்றினையும் நாங்கள் பெற்றோம். மன்மதன் தன் மலரம்புகளை நிலத்தில் எறிந்து விட்டு செயலற்று ஏங்கி நிற்கும்படி மாதவி, அழகு விளங்கும் போதி மரத்தடியில் தங்கியுள்ள புத்தபிரான் முன்னர் மணிமேகலையை துறவி ஆக்கினாள். நள்ளிருள் கூடிய வைகறை யாமத்தில் நனவில் நடப்பது போல் இக்கனவினைக் கண்டேன். அதிகாலையில் கண்ட கனவு ஆதலால் அதன் பயன் விரைவில் இப்போதே வந்து சேரும் என உணர்கிறேன் என்று கூறினான்.)
கோவலன் தன் கனவை மாடலனிடம் கூறியபோது கவுந்தியும் கண்ணகியும் உடனிருந்தனர். கோவலன் தன்னைப் பற்றியும், கண்ணகி, மாதவி, மணிமேகலை ஆகிய மூவரைப் பற்றியும் கனாக் காண்கிறான். இவர்கள் தம் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதைக் கண்ணகியின் முன்னிலையில் உணர்த்த விரும்பினான் கோவலன். இக்கருத்து வெளியீட்டிற்குச் சிறந்த வாய்ப்பாகக் கனவை வகுக்கின்றார் அடிகள். கண்ணகி கோவலனை மட்டுமே காண, அவன் மூவரையும் கனவில் கண்டது அப்பாத்திரங்களின் பண்பு வேறுபாட்டைக் காட்டுகின்றது. காமக் கடவுளால் கோவலன் உற்ற துன்பம் மிகுதி; எனவே அக்காமன் துன்புற வேண்டும் எனக் கோவலன் விரும்பியிருக்கலாம்; ஈவிருப்பவிளைவே அவன் கனவில் மாதவி, மணிமேகலையை அம்மாரன் வருந்தத் துறவறம் படுத்துவதாக விரிந்தது எனின் அது மிகையாகாது.
கோவலன் தன் கனவைக் கலையழகோடு கூறிச்செல்வது அவன் கலையார்வத்தையும் கலையுணர்வையும் உணர்த்துகின்றது.
இக்கனவில் வரும் ’கோட்டுமா’ என்ற தொடருக்கு விளக்கம் தேவை. ஏனெனில் அது யானை, பன்றி, எருமை, மான், காளை முதலிய, கொம்புடைய எல்லா விலங்கையும் குறிக்கலாம். கோடு எனும் சொல் விலங்கின் கொம்பை மட்டுமின்றி, சுறா, பன்றி போன்றவற்றின் நீண்ட தந்தத்தையும் குறித்தல் உண்டு. மா எனும் சொல் பொதுவாக விலங்கையும் சிறப்பாக யானையையும் குதிரையையும் குறிப்பினும், சிலம்பின் காலம்வரை எருமையைச் சுட்டவே இல்லை. கோடு யானையின் தந்தத்தையோ பன்றியின் பல்லையோ சுட்டினும் எருமையின் கொம்பைச் சுட்டுவதில்லை. ‘கோட்டுமா’ எனும் தொடர் யானையையும், பன்றியையும் சங்க இலக்கியத்தில் குறித்தபோதும் எருமையைக் குறித்திலது. இங்கு, உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், எருமை எனப் பொருள்கொண்டார். பழங் கனாநூல் விளக்கத்தின்படி அதுவே பொருந்தும். ஏனெனில், யானைமேல் செல்லக் கனாக் காணின் நன்மையே விளையும்; பன்றியின்மேல் செல்வதாகக் கனவு கண்டால் அரசனால் தீமை ஏற்படும்; எருமைமேற் செல்வதாகக் கண்டால் சாவு நிகழும் - ஏனெனில் எருமை யமனது வாகனம். இக்கனா விளக்கங்கள் துண்டுநிலையின்படி (cipher method) அமைந்தவை. பழந்தமிழ்க் கனாநூல் இதற்கு அளவுகோலாகப் பயன்படுத்துகின்றது.
மூன்றாவதாக அமைகின்றது பாண்டிமாதேவியின் கனவு:
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி யின் குரல் காண்பெண்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பெண்காண் எல்லா
இடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பெண்காண் எல்லா…
(தோழி நம் மன்னனுடைய வெண்கொற்றக் குடையோடு செங்கோலும் ஒரு சேர நிலத்தில் வீழவும், அரண்மனை தலை வாயிலில் உள்ள ஆராய்ச்சி மணி இடைவிடாது ஒலித்ததையும் கனவில் கண்டேன். அது மட்டுமின்றி எட்டு திசைகள் அதிரவும் கதிரவனை இருள் விழுங்கவும் கனா கண்டேன் அதனுடன் இரவிலே வானவில் தோன்றவும் பகற்பொழுதிலே வின்மீன்கள் எரிந்து வீழவும் கனவு கண்டேன்.)
அரசியின் கனவில் இயற்கைக்கு மாறுபட்ட நிகழ்வுகள் காட்சியளிக்கின்றன. பகலில் மீன் விழுவதும், இரவு இந்திரவில் தோன்றுவதும், கதிரை இருள் விழுங்குவதும், திசை அதிர்தலும் அத்தகையன. இயல்பான, ஆயின் அருகிய சில நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. அவை, அரண்மனை வாயில் மணி ஒலித்தலும் குடையும் கோலும் வீழ்தலும் ஆகும். இவை அரசனுக்கும் நாட்டிற்கும் தீமை வருமென உணர்த்துகின்றன. இயற்கை இறந்த நிகழ்வுகளைத் தீய நிமித்தமாகக் கொள்ளலாம்.
முக்கனவுகளும் வருவதை உணர்த்தும் தன்மையின. முதலிரு கனவுகளும் தனிமனிதனைப் பற்றியவை. மூன்றாம் கனவு, அரசையும் நாட்டையும் பற்றியது. பாண்டிமாதேவியின் கனவு இயற்கை இறந்த ஆற்றலின் வெளியீடு எனும் நிலையில் சிறப்புப் பெறுகின்றது. கோவலன் - கண்ணகி கனவுகள் எதிர்வை முன்கண்டன. கோவலன் தன் இறப்பையும், மகள் மணிமேகலையின் துறவையும் கண்டான். கண்ணகி எதிர்வைக் கண்டதோடு, பாண்டியனிடம் வழக்குரைக்கவும், மதுரையை எரிக்கவும் தூண்டப்படுகின்றாள்; செயற்பாட்டிற்குக் காரணமாக அமைகின்றது அக்கனவு. அது அறிவு மனத்திற்கு உள்மனம் இட்ட கட்டளையாக, இறைக் கட்டளையாக அமைந்தது.
இவ்வாறு சிலம்பில் கனவு நற்பங்கு பெற்றது. அவை பாத்திரப் பண்பை வெளியிட்டும், திருப்பு மையங்களில் வந்து ஊழை வலியுறுத்தியும் காப்பிய அழகுக்கு மெருகூட்டின. அது காப்பியக் கதைப் போக்குக்கு எழுச்சியும் விரைவும் தந்தது.
ச.வே.சுப்ரமணியன்
ச.வே.சுப்ரமணியன் (டிசம்பர் 31, 1929 - ஜனவரி 12, 2017) (ச.வே.சுப்பிரமணியன்) தமிழறிஞர், இலக்கண ஆய்வாளர். கல்வியாளர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.