டுடன்காமுன் மம்மி பெட்டி திறக்கப்பட்ட போது |
டுடன்காமுன் கல்லறை என்னும் திரைப்படத்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்தார் கார்ட்டர். பெட்டிகளுக்குள் இருந்த மம்மியை, கிவிப் பழத்தைத் தேக்கரண்டியால் அள்ளுவதுபோல் பூப்போல எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் கார்ட்டர். ஆனால், அது அவ்வளவு எளிதாக அமையவில்லை. கல்பெட்டிக்குள் இருந்த மம்மி வடிவப் பெட்டிக்குள், மேலும் இரண்டு பெட்டிகள் இருந்தன. அவை, மிக மிக நெருக்கமாக வைக்கப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவே ஒரு சுண்டுவிரலைக்கூட விடமுடியாத அளவுக்கு ஒட்டிக்கொண்டிருந்தன அவை. முதல் பெட்டியைக் காட்டிலும் இரண்டாவது மரப்பெட்டியின் அலங்காரம் மிகச்சிறப்பாக இருந்தது.
![]() |
இரண்டாவது மம்மி வடிவ மரப்பெட்டியின் முழுமைத் தோற்றம். பெட்டியின் அளவைப் புரிந்துகொள்ள அருகிலுள்ள மனிதரின் உயரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். |
இரண்டு மரப்பெட்டிகளுமே தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்தாலும் இரண்டாவது பெட்டி வண்ண வண்ணக் கண்ணாடி விழுது, பீங்கான் விழுது, அருமணிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூன்றாவது பெட்டி சொக்கத் தங்கத்தால் ஆன பெட்டி. இரண்டாவது மற்றும் மூன்றாவது பெட்டிகள் தார் போன்ற ஒருவிதப் பிசுபிசுப்பான பசையால் மூடப்பட்டிருந்தன. அதாவது, அவற்றின் மேல் அந்தப் பசை, கறுப்பாக உருகி வழிந்து மூடியிருந்தது. பண்டைக் காலத்தில் மம்மிகளைப் புதைக்கும்போது அவற்றை வைத்துமூடும் பெட்டிகள் மீது முழங்கை வழிவார மூட நெய் பெய்வதுபோல் நறுமணத் திரவம் தாராளமாய்த் தெளிப்பதுண்டு.
காலப்போக்கில் அந்த வாசனைத் திரவம் இறுகி பெட்டிகள் மீது ஒரு படலம்போல் படிந்து ஒட்டிக்கொண்டது. நிபுணர்களின் உதவியோடு பெட்டிகளுக்குச் சேதமின்றி அவற்றைப் பிரித்து எடுத்தார் கார்ட்டர். அவர் எதிர்கொண்ட மிகச் சிக்கலான பணிகளில் இது தலையாயது. அந்த கதையை இப்போது பார்ப்போம். முதலில் மூன்று மம்மிவடிவப் பெட்டிகளையும் கல்பெட்டிக்குள் இருந்து பக்குவமாகச் சகடையில் கயிறு கட்டி, மேலே ஏற்றிக் கல்பெட்டிக்குமேல் தொங்கவிட்டார் கார்ட்டர். எதிர்பார்த்ததை விட கனமாக இருந்தன பெட்டிகள். முதல் பெட்டியின் மூடி எளிதில் அகற்றப்பட்டபோது அதன் கீழ் பாகத்துக்குள் மற்ற இரண்டு பெட்டிகள் மூடியோடு இருந்தன. முதல் பெட்டியைக் கல்பெட்டிக்குள் இருந்து மேலே தூக்குவதற்கு பண்டைக்காலத் தச்சர்கள் பொருத்தியிருந்த வெண்கலக் கைப்பிடிக் கொக்கிகள் நல்ல நிலையில் இருந்ததால் அவற்றையே பயன்படுத்திக்கொண்டார் கார்ட்டர். ஆனால் இரண்டாம் மூன்றாம் பெட்டிகளில் அத்தகையை கைப்பிடிகள் இல்லை. முதல் பெட்டியும் இரண்டாம் பெட்டியும் பசைபோல் ஒட்டிக்கொண்டிருந்தன. அதனால் இரண்டாவது பெட்டியை எப்படி வெளியே எடுப்பது என்று புரியவில்லை கார்ட்டருக்கு.
![]() |
சகடையில் ஏற்றித் தொங்கவிடப்பட்ட இரண்டாவது மம்மிவடிவ மரப்பெட்டி |
இரண்டாவது பெட்டிதான் ஏராளமான வேலைப்பாடுகளோடு ஜொலித்தது. அதற்கு பாதிப்பின்றி எடுக்கவேண்டிய கட்டாயம். நிபுணர்களை ஆலோசித்து, முதல் பெட்டியின் மேல்விளிம்புகளில், கனமான எஃகு வளையங்களைத் திருகிப் பொருத்தச் செய்தார் கார்ட்டர். ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்திருக்கும் பொருள்களில் உள்ளே இருப்பதைப் பிரித்து எடுக்க, வழக்கமாக வெளிப்புறத்திலுள்ள முதல் பொருளைப் பிடித்துக்கொண்டு உள்ளே இருப்பதை மேலே இழுத்து வெளியே எடுப்பதுதான் எளிதாக இருக்கும். ஆனால் இங்கே வழக்கத்துக்கு மாறான முறையைப் பின்பற்றினார் கார்ட்டர்.
மம்மி அறையில் கல்பெட்டிக்கு மேலே போதிய உயரம் (Headroom) இல்லை. சற்று உயரத்திலேயே மம்மி அறையின் கூரை இருந்தது. மரச் சட்டங்கள் போடப்பட்டு கயிறும் கப்பியும் மேலே இருந்தன. எனவே இரண்டாவது பெட்டியை மேலிருந்து தூக்குவதற்கு பதிலாக, முதல் பெட்டியில் பொருத்தப்பட்ட வளையங்களில் கயிறு கட்டிக் கீழே இறக்கி அதை மறுபடியும் கல்பெட்டிக்குள் வைத்தார் கார்ட்டர். முன்னதாக, இரண்டாவது பெட்டியின் கீழ்ப்பகுதியையும் அதன் மூடியையும் இணைக்கும் பித்தளை இணைப்புத் தகடுகளில் வலுவான செப்புக் கம்பிகளைப் பொருத்தி உத்தரத்தில் இணைத்திருந்ததால், அது சற்று நேரம் அந்தரத்தில் தொங்கியது. உடனடியாக கல்பெட்டிக்கு மேல் பொருத்தமான மரப் பலகையைப் போட்டு இரண்டாவது பெட்டி மெதுவாகக் கீழே இறக்கப்பட்டு அதன்மேல் வைக்கப்பட்டது. இனி இந்த இரண்டாவது பெட்டி மூடியை பக்குவமாக அகற்றவேண்டும். பெட்டியின் கீழ்ப்பகுதியோடு மேல்மூடியை இணைத்திருந்த வெண்கல இணைப்பான்களும் ஆணிகளும் முன்கூட்டியே அகற்றப்பட்டன. பெட்டியின் மூடியில் நான்கு இடங்களில் கனமான எஃகு வளையம் பொருத்தப்பட்டு அதில் வலுவான கம்பி நுழைக்கப்பட்டு மேலிருந்து மெதுவாகத் தூக்கி வெற்றிகரமாக மேல் மூடி கீழ்பாகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
உள்ளே மம்மிக்கு பதிலாக மூன்றாவதாக மேலும் ஒரு பெட்டி இருக்கும் என கார்ட்டர் எதிர்பார்க்கவில்லை. அதுதான் சொக்கத் தங்கப் பெட்டி!... அதனால்தான், பெட்டிகள் இவ்வளவு கனமாக இருந்தன என்பதை உணர்ந்தார் கார்ட்டர். மரப் பலகை மேல் வைக்கப்பட்ட இரண்டாவது பெட்டியின் கீழ்பாகத்தை முன்னறைக்கு எடுத்துவந்து சோதிக்கத் தொடங்கினார் அவர். புகைப்பட நிபுணர் பர்ட்டன் தேவையான படங்களை எடுத்துக்கொண்டார். மூன்றாவது தங்கப் பெட்டி சிவப்புநிறத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது.
மூன்றாவது பெட்டியைத் திறக்குமுன் இரண்டாவது பெட்டி மீதிருந்த தூசி அகற்றப்பட்டு அம்மோனியாவும் வெதுவெதுப்பான நீரும் கொண்டு துடைக்கப்பட்டது. பெட்டி உலர்ந்ததும் கனமான பாரஃபின் மெழுகுப் பூச்சுப் பூசி பெட்டி உறுதிப்படுத்தப்பட்டு அலங்கார வேலைப்பாடுகள் பாதுகாக்கப்பட்டன. மெழுகு குளிர்ந்ததும் பெட்டியைக் கையாள்வது எளிதானது. மூன்றாவது பெட்டியின் மீதும் நறுமணத் திரவம் இரண்டு வாளி அளவுக்குக் கொட்டப்பட்டிருந்தது. கழுத்திலிருந்து கணுக்கால்வரை அந்தத் திரவம் கறுப்பாகப் படிந்திருந்தது. அதனால் இரண்டாவது பெட்டியின் கீழ்ப்பகுதியோடு மூன்றாவது தங்கப் பெட்டி இறுக்கமாக ஒட்டிக்கொண்டிருந்தது.
இனி தங்கப் பெட்டியின் மூடியை பத்திரமாக அகற்றவேண்டும். அப்போதுதான் மம்மியைப் பார்க்கமுடியும். தங்கப் பெட்டியின் கீழ்ப் பகுதியையும் மூடியையும் பக்கத்துக்கு நான்கு விகிதம் மொத்தம் எட்டு இணைப்பான்கள் இணைத்திருந்தன. மூடியிலிருந்து வரும் நாக்குப் போன்ற இணைப்பான்கள் கீழ்ப்பகுதிக்குள் செருகப்பட்டு அவை உலோக ஊசி அறைந்து இறுக்கப்பட்டிருந்தன. தொட்டுத் தடவிப் பார்த்து அவற்றை அகற்றினார் கார்ட்டர். நீண்ட திருப்புளியை வளைத்து கிடைத்த இடைவெளிக்குள் விட்டு உலோக ஊசிகளை அகற்றியதும் மெதுவாகத் தங்கப் பெட்டி மூடி அகற்றப்பட்டது. இதற்குச் சில மணி நேரம் பிடித்தது.
![]() |
டுடன்காமுனின் 10 கிலோகிராம் எடையுள்ள பிரபலமான தங்க முகமூடி |
இப்போதுதான் டுடன்காமுனின் பிரபலமான தங்க முகமூடி வெளிப்பட்டது. சட்டென அதைப் பார்த்தால், டுடன்காமுன் கண்ணைத் திறந்து நம்மைப் பார்ப்பதுபோலவே இருக்கும். என் செல்லமே!.. மிக நேர்த்தியாக, லினன் துணியால் சுற்றப்பட்டிருந்தது மம்மி. அதன் கைகளுக்குக் கீழிருந்து, நறுமணத் திரவம் ஊற்றப்பட்டுப் படிந்திருந்தது. நல்லவேளை, தங்க முகமூடி மீதும் கால் பகுதியிலும் நறுமணத் திரவம் ஊற்றப்படவில்லை.
![]() |
பக்கவாட்டுத் தோற்றம் |
மம்மியைச் சுற்றியிருந்த துணி நாடாக்கள் மேல் நறுமணத் திரவம் பரவிக் கறுப்பாகப் படிந்திருந்தது. ஆகவே மம்மியைப் பாதுகாப்பாக எடுப்பது மிகச் சிரமமான செயலாகவே இருந்தது. கெட்டிதட்டிப்போன பிசுபிசுப்புத் திரவம் மம்மியையும் தங்கப் பெட்டியையும் இணைத்து இறுக ஒட்டிக்கொண்டிருந்ததாக எழுதுகிறார் கார்ட்டர். துணி நாடாவைப் பிரித்தால் அதனோடு மம்மியின் பாகங்களும் பிய்ந்து வந்துவிடுமோ என்று அஞ்சினார் கார்ட்டர். ஆகவே மம்மிப் பெட்டிகளை தூக்கி வெளியே எடுத்துச் சென்று வெயிலில் வைத்தால் பிசின் உருகி நெகிழ்ந்து கொடுக்கலாம் எனக் கணக்குப் போட்டனர் நிபுணர்கள். மம்மிப் பெட்டிகளைப் பத்துப் பேர் தூக்கி எடுத்துச் சென்று ஆய்வகமாகப் பயன்பட்ட இரண்டாம் செட்டியின் கல்லறையில் வைத்தனர். அங்கே இரண்டு மம்மி வடிவப் பெட்டிகளின் கீழ்ப்பகுதிகளும் மம்மியோடு சில மணி நேரத்துக்கு வெயிலில் வைக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சி தோல்வியடையவே இரண்டாவது பெட்டியின் அடிப்பகுதியோடு வஜ்ஜிரம்போல் ஒட்டிக்கொண்டுள்ள தங்க மம்மிப் பெட்டியை பாதிப்பின்றி எப்படிப் பிரித்தெடுப்பது என்று தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியது நிபுணர் குழு.
![]() |
லினன் துணியால் மூடப்பட்டிருந்த தங்க முகமூடி. படம் - கைரோ தேசிய அரும்பொருளகம் |
கெட்டிதட்டிப் போயுள்ள பிசினை அதிக வெப்பத்தில் உருக்கி அகற்ற முடியும் என்று உறுதிகூறினர் நிபுணர்கள். கார்ட்டருக்கு வேறு வழியும் தெரியவில்லை. தங்கப் பெட்டிக்கும், அதைத் தாங்கியுள்ள வேலைப்பாடு மிக்க மரப் பெட்டிக்கும் சேதமின்றி அவற்றை அதிக வெப்பத்துக்கு உட்படுத்திப் பெட்டிகளைப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டது. மூன்றாவது தங்கப் பெட்டிக்கு மூடி போடப்பட்டு துத்தநாகத் தகடுகளால் அது முழுவதுமாக மூடப்பட்டது. துத்தநாகம் 500 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில்தான் உருகத் தொடங்கும். அந்த எல்லைவரை அது வெப்பத்தைத் தாங்கும்.
![]() |
டுடன்காமுன் மம்மி வெளிப்பட்ட தோற்றம். தங்கத் தாங்கிகளால் மம்மி நிலைப்படுத்தப்பட்டிருந்தது. |
இந்த ஏற்பாட்டுக்குப் பின்னர் இரண்டு பெட்டிகளும் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு இரும்புச் சட்டங்கள் (Trestle Table) மீது குப்புறப் போடப்பட்டன. இரண்டாவது பெட்டியின் மேற்பகுதி, (அதாவது அடிப்பகுதி) தீயாலும் நெருப்பாலும் பாதிக்கப்படாமல் இருக்க, கனமான போர்வைகளால் போர்த்தப்பட்டு அவற்றின்மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. தங்கப் பெட்டிக்குக் கீழிருந்து பாரஃபின் மெழுகு விளக்குகள் கொளுத்தப்பட்டு வெப்பம் உண்டாக்கப்பட்டது. அந்த வெப்பம் துத்தநாகத் தகடுகளைக் கடந்து தங்கப் பெட்டி முழுவதும் பரவி அதைச் சூடாக்கி, மேலே படிந்து பரவியிருந்த பிசினை உருகச் செய்தது. தீச் சுவாலை நேரடியாகத் தங்கப் பெட்டியைத் தாக்கவில்லை. ஆனால் பெட்டிக்கு மேலே படர்ந்திருந்த அடர்த்தியான பிசினை இளக்குவதற்கு அது போதுமானதாக இருந்தது.
அவ்வப்போது வெப்பம் 500 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிடாமல் கண்காணிக்கப்பட்டது. இவ்வாறு சுமார் மூன்று மணி நேரம் தீச் சுவாலையில் “வேக விடப்பட்டது” தங்கப் பெட்டி. வெப்பத்தில் பெட்டிகள் அசைந்து கொடுக்கும் சத்தம் கேட்டதும் விளக்குகள் அணைக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்தில் தங்கப் பெட்டியின் அடிப்பாகம் ஒருவழியாக இரண்டாம் பெட்டியிலிருந்து விடுபட்டது. இந்த வேலை நடந்துகொண்டிருந்தபோது கார்ட்டரின் இதயம் எவ்வளவு வேகமாய்த் துடித்திருக்குமோ!... பெட்டிகளை இறுகப் பிடித்திருந்த பிசின் இளகியதும் குப்புறப் போடப்பட்டிருந்த இரண்டாவது மரப் பெட்டியின் கீழ்ப்பகுதியை மேலிருந்து மெதுவாகத் தூக்கவேண்டியிருந்தது. தங்கப் பெட்டி சூடாக்கப்பட்டபோது உள்ளே இருந்த மம்மிக்கு ஏதும் பாதிப்பு நேர்ந்திருக்குமா என்பதுபற்றி கார்ட்டர் ஏதும் குறிப்பிடவில்லை.
இதே முறையைப் பின்பற்றித்தான் டுடன்காமுனின் தங்க முகமூடியும் பெட்டியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது. அப்போது உருவான சூடு காரணமாக தங்க முகமூடியில் பதிக்கப்பட்டிருந்த மணிகளும் தட்டைக் கற்களும் முகமூடியிலிருந்து உதிர்ந்து இளகிய பிசினுக்குள் விழுந்துவிட்டனவாம். மம்மிக்குக் கீழ் தேங்கிய பிசுபிசுப்பான பசையில் இருந்து எண்ணற்ற சின்னஞ்சிறு வண்ணக் கண்ணாடி மணிகளையும் பொருள்களையும் பொறுமையாகச் சேகரித்து அவற்றை முகமூடி மீது மீண்டும் ஒட்டவைத்தார் கார்ட்டர்.
ஒருவழியாகப் பெட்டிகளைப் பிரித்தாயிற்று. ஆனால் மம்மியின் உடல்பகுதி இன்னமும் தங்கப் பெட்டியின் அடிப்பகுதியோடு ஒட்டியிருந்தது. லினன் துணியால் மூடப்பட்டிருந்த மம்மி, மந்திரச் சொற்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பட்டைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்தது. மாமன்னர்கள் மட்டுமே கைகளில் வைத்திருக்கும் Crook என்னும் வளைகோலும் Flail என்னும் தானியம் அடிக்கும் கழியும் மம்மியின் கைகளில் காணப்பட்டன.
இடையர்கள் சில ஆயிரம் ஆண்டுக் காலமாகப் பயன்படுத்தும் வளைகோல் எகிப்திலும் உண்டு. பல சிற்பங்களில் அதைப் பார்க்கலாம். நமது மாமல்லபுரத்துக் கிருஷ்ண மண்டபத்திலும் எல்லோரா குகைகளிலும் கூட, குடைக்கம்பி போல் வளைந்த தலைப்பைக் கொண்ட வளைகோலை இடையர்கள் வைத்திருக்கும் சிற்பங்களைக் காணலாம். இடையர்கள் அதன்மேல் கையை வைத்துத் தாடையை ஊன்றி நிற்கும் காட்சி பல இடங்களில் காட்டப்பட்டிருக்கும். அந்த மேய்ப்பர்களின் வளைகோல் மக்களை வழிநடத்திச் செல்லும் மாமன்னர்களின் சின்னம் எகிப்தில். அதேபோல் தானியச் சூட்டடிப்புக் கோல் செழிப்பின் அடையாளம். ஒற்றைக் கம்பில் இருந்து கிளைத்த மூன்று நீண்ட குஞ்சலங்கள் போலிருக்கும் இது.
1925ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி டுடன்காமுனின் மம்மி முதன்முறையாகத் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மம்மியாக்கம் செய்யப்பட்ட உடல் ஒரு நீளமான மரச்சட்டத்தைப் போல் ஆகிவிடும். ஈரப்பதம் இல்லாத அந்த உடல் ஒரு தக்கையைப் போல் ஆகிவிடும். சராசரி மம்மியின் எடை 3 கிலோகிராமுக்கும் குறைவாகவே இருக்குமாம். (இதில் எனக்குச் சந்தேகமுண்டு. ஆனால் பெரும்பாலான புத்தகங்களில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. சடலத்திலிலுள்ள தண்ணீர்ச் சத்து வற்றிவிட்டாலும் எலும்பின் எடை கணிசமாக இருக்குமே!)
மம்மியைச் சோதிக்கும் பணியில் கார்ட்டரால் நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் டக்ளஸ் டெர்ரி, முதலில் மம்மியின் கழுத்திலிருந்து கால்வரை நெடுக்குவாக்கில் லினன் துணியை வெட்டி எடுத்தார். டுடன்காமுன் மம்மி மீது 16 சுற்றுகளாகத் துணி நாடாக்கள் சுற்றப்பட்டிருந்தன. அந்த நாடாக்களை எதிர்த்திசையில் சுழற்றி எடுக்கமுடியாதபடி அடிப்பகுதியில் பிசின் இறுக்கமாகப் பிடித்திருந்தது.
முதலில் தங்க முகமூடிக்குக் கீழிருந்து கால்பகுதிவரை உள்ள முதல் சுற்றுத் துணிகள் மீது வெதுவெதுப்பான பாரஃபின் மெழுகை ஊற்றிச் சற்று நேரம் குளிரவிட்டார் டெர்ரி. மெழுகு ஊடுருவிச் சென்ற சில மில்லிமீட்டர் ஆழம்வரை மட்டும் இருந்த துணி வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இப்போது உள்ளே வைக்கப்பட்ட நகைகளும் மந்திரத் தாயத்துகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கின. டுட் உடலைச் சுற்றியிருந்த வெளிப்புற நாடாக்களைப் போல் உள்புறத் துணிச்சுற்றும் கறுப்புப் பிசினால் இறுகி ஒட்டியிருந்தது.
துண்டு துண்டாகத் துணிப் பகுதிகள் அகற்றப்பட்டன. மாம்பழத் தோலைச் சீவி எடுப்பதுபோல ஒவ்வொரு துணிச் சுற்றையும் கவனமாக நீக்கினார் பேராசிரியர் டெர்ரி. சுற்றுத் துணிகள் அகற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் நகைகளோடு சேர்த்துப் படம் எடுக்கப்பட்டது. முழு உடலையும் மூடியிருந்த லினன் துணிக்குள் 101 இடங்களில் 148 ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. (கார்ட்டரே சில இடங்களில் 143 ஆபரணங்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.) மன்னரின் உடலில் இருந்த ஆபரணங்களில் இரும்பால் செய்யப்பட்ட பொருள்கள் மூன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார் கார்ட்டர்.
ஒன்று, உர்ஸ் (Urs) என்னும் சிறிய தலையணை. எகிப்தியர்கள் தலைவைத்துப் படுக்க தாங்கி போன்ற பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். அது மரம், அலபாஸ்டர் பளிங்கு எனப் பல்வேறு பொருள்களால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் இரும்பால் ஆன சடங்குபூர்வத் தலைதாங்கி டுட்டின் தலைக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. அடுத்ததாக, உஸாட் (Uzat) என்னும் புனிதக் கண் உருவிலான கங்கணம். மூன்றாவது, டுட்டின் வயிற்றுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தங்க உறையோடு காணப்பட்ட இரும்புக் கத்தி. இதிலென்ன பெரிய அதிசயம் என்று நினைக்கவேண்டாம். டுட் காலத்தில், இரும்பு பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. அல்லது எகிப்துக்கு அறிமுகமாகவில்லை. கி.மு. ஆறாம் நூற்றாண்டுவரை எகிப்தில் இரும்பை வார்த்து எடுத்துப் புழங்கியதற்கான எவ்விதத் தொல்லியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறது நேஷனல் ஜியாகிரஃபிக் தொலைக்காட்சி. அதாவது, டுடன்காமுன் மறைந்து சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரும்பு இருந்ததற்கான முதல் தடயம் பதிவாகிறது.
நவீனத் துருக்கியின் ஆசியப் பகுதியைச் சேர்ந்த (Asian Minor) ஹிட்டைட்ஸ் என்னும் வெளிநாட்டவர்தான் டுட் காலத்தில் இரும்பை அறிமுகம் செய்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. மிக மிக அபூர்வமான உலோகம் என்ற வகையில் அது டுட் உடலில் வைக்கப்பட்டது. டுட் உடலில் இருந்த இரண்டு குறுவாள்களில் ஒன்றின் கத்திப் பகுதிதான் இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அந்தக் குத்துவாள்களின் அழகு, அருமை பற்றிப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். தங்கக் காப்புகள், Amulets எனப்படும் மந்திரக் காப்புத் தாயத்துகள், மகத்தான ஆரங்கள் உள்ளே இருந்தன. மந்திரத் தாயத்துகள் என்பவை மம்மிகளைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றின் உள்ளே வைக்கப்படுவதுண்டு. அதன் எகிப்தியப் பெயர் மெக்கெட்.
அதன் பொருளே பாதுகாவலர் என்பதுதான். எகிப்தியர்கள் பொதுவாக அதைக் கழுத்தைச் சுற்றி அணிவதுண்டு. அருமணிகள், உலோகம், மரம், எலும்பு, பீங்கான் போன்றவற்றால் அவை செய்யப்பட்டிருக்கும். தவறான பொருளால் செய்யப்படும் அமுலெட்டுகள் வேலை செய்யமாட்டா என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. வெட்ஜெட் எனும் புனிதக் கண்ணும் ஸ்காரப் என்னும் புனித வண்டும் மிகப் பிரபலமான மந்திரத் தாயத்துகள். உயிரற்ற உடலைப் பதப்படுத்தும்போது கை, கால் விரல்கள் சுருங்கிப் போய்விடும் அல்லது வற்றி உதிர்ந்துவிடும். மம்மிக்கு முழு வடிவம் கொடுப்பதற்காக கை, கால் விரல்கள் தனியே தங்கத்தில் செய்யப்பட்டு, மம்மிகளுக்கு அணிவிக்கப்படும். அப்படிப்பட்ட தங்க விரல்களும் டுடன்காமுனின் மம்மியில் காணப்பட்டன. பப்பைரஸ் தாள்கள்மீது இலைகளையும் மலர்களையும் கொண்டு தைத்து உருவாக்கப்பட்ட ஆரங்களும் மலர் வளையங்களும் மம்மியை அலங்கரித்தன.
எல்லா ஆபரணங்களையும் அகற்றிய பிறகு மம்மியைப் பல பகுதிகளாக வெட்டினால்மட்டுமே அதைப் பெட்டியில் இருந்து விடுவிக்கமுடியும் என்று புரிந்தது பேராசிரியர் டெர்ரிக்கு. நியாயமான எந்தவொரு சக்தியைப் பிரயோகித்தும் மம்மியை முழுமையாகத் தங்கப் பெட்டியின் அடியிலிருந்து பிரித்து எடுக்கமுடியாது என்ற நிதர்சனத்தைக் கார்ட்டர் ஏற்றுக்கொண்டார். குறிப்பாக, மம்மியின் முகத்திலிருந்து தங்க முகமூடியைப் பிரிக்கத் திணறிப்போனார் கார்ட்டர்.
![]() |
டுட் மம்மியின் தலை |
மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு டுட் மம்மியின் தலையை உடலில் இருந்து துண்டிக்கச் சம்மதித்தார் கார்ட்டர். பின்னர் சில கத்திகளைச் சூடாக்கி முகமூடிக்கு உள்ளேவிட்டுப் பிசினை இளகச் செய்து மம்மியின் தலையும் தங்க முகமூடியும் பிரித்து எடுக்கப்பட்டன. அது கார்ட்டரை எவ்வளவு வேதனை அடையச் செய்திருக்கும் என்பதை எவராலும் ஊகிக்க முடியும். இப்போதும் டுடன்காமுனின் மம்மியை உற்றுப் பார்த்தால் அது முகமூடிக்கு உள்ளிருந்து வழித்து எடுக்கப்பட்டதன் தடயத்தைப் பார்க்கலாம். கைரோ அரும்பொருளகத்திலுள்ள மாமன்னர் இரண்டாம் ராம்சிஸ் மற்றும் முதலாம் செட்டியின் மம்மிகளின் அளவுக்கு டுடன்காமுன் மம்மியின் முகம் திருத்தமாக இருக்காது.
தங்க முகமூடியோடு கூடிய மம்மியின் தலைப் பகுதியை வெட்டி எடுத்தபின், தோள்பட்டை, முழங்கைகள், கைகள், இடுப்பு, முழங்கால், கணுக்கால் ஆகிய இணைப்புப் பகுதிகளில் சடலத்தைத் தனித்தனியே பிரித்து, உளியைப் பயன்படுத்திப் பெட்டியிலிருந்து “உடைத்தும் வெட்டியும்” விடுவித்தார் பேராசிரியர் டெர்ரி. கொப்பூழுக்குச் சற்று மேலே உடலை இரண்டாக வெட்டினார் அவர். உடற்கூறியல் நிபுணரான டெர்ரி மம்மியின் கடைவாய்ப் பற்களையும் (ஞானப் பல்) எலும்புகளின் வளர்ச்சியையும் வைத்து, மாண்டுபோகும்போது டுடன்காமுனின் வயது 17இல் இருந்து 19க்குள் இருக்கும் என நிர்ணயித்தார்.
![]() |
மிகக் குறுகலான கல்லறைக்குள் அமர்ந்தவாறு குறிப்புகள் எடுக்கும் கார்ட்டர் |
எப்படி டுடன்காமுன் இத்தனை இளம் வயதில் மாண்டு போயிருக்கக் கூடுமென வியந்தனர் கார்ட்டரும் அவரது குழுவினரும். பேராசிரியர் டெர்ரி மேற்கொண்ட சவப் பரிசோதனையில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தச் சமயத்தில் மம்மிகளைக் காட்டிலும் அவற்றோடு சேர்த்துக் கட்டி வைக்கப்படும் ஆபரணங்களைப் பற்றித்தான் மக்களிடையே ஆர்வம் அதிகமிருந்தது. மம்மிகளால் எவ்வளவு மதிப்புமிக்க தகவல்களைத் தரமுடியும் என்று அப்போது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
எல்லாவற்றையும் கவனமாகக் கையாண்ட கார்ட்டர் குழு மம்மியைக் கையாண்ட விதத்தில்மட்டும் சறுக்கிவிட்டதாகவே வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். பேராசிரியர் டெர்ரியின் செயல்களால் டுடன்காமுனின் மம்மி நிரந்தரமாகச் சேதமுற்றது. இப்போதைய நவீன வசதிகள் 100 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால் அந்த மம்மியைச் சேதப்படுத்தாமல் இன்னும் பத்திரமாக வெளியே எடுத்துப் பாதுகாத்திருக்கமுடியும்.
1925ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி தங்க மம்மி வடிவப் பெட்டியையும், தங்க முகமூடியையும் தலைநகர் கைரோவுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி அரும்பொருளகத்திடம் ஒப்படைத்தார் கார்ட்டர். அந்தப் பருவத்தின் எஞ்சிய நாள்களை, எஞ்சிய பெட்டிகளையும் நகைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டது அவரது குழு. இரண்டு மம்மி வடிவப் பெட்டிகளும் ஆய்வகத்தில் சீரமைக்கப்பட்ட வேளையில், கல்பெட்டிக்குள் வைக்கப்பட்ட முதல் பெட்டியின் கீழ்ப்பகுதி பக்குவமாக வெளியே எடுக்கப்பட்டு, அதற்கும் மெழுகுப்பூச்சு பூசிப் பாதுகாக்கப்பட்டது.
மூன்று பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்த 9 அங்குல உயரமுள்ள சிங்கமுகக் கட்டிலும் வெளியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. முதல் பெட்டியின் வளைந்த கீழ்ப்பகுதியை ஏற்றுக்கொள்ளும்வகையில் சிங்கமுகக் கட்டிலும் நடுவில் வளைவாக வடிவமைக்கப்பட்டிருந்தது. நான் கூட முதலில் எடை தாங்காமல்தான் கட்டில் நடுவே வளைந்துவிட்டது என்று கருதினேன். நமது ஊர் நார்க் கட்டிலில் இருப்பது போலவே மஞ்சள் நார்ப் பின்னல் வடிவில் இருந்தது அதன் உடல் பகுதி.
![]() |
மம்மி வடிவ மரப் பெட்டிகளையும் தங்கப் பெட்டியையும் மம்மியையும் தாங்கியிருந்த, நடுவே வளைந்த சிங்கமுகக் கட்டில் |
![]() |
சிங்கத்துக்குத் தலை இருந்தால் வாலும் இருக்கவேண்டும்தானே |
![]() |
110 கிலோகிராம் எடையுள்ள மம்மிவடிவச் சொக்கத் தங்கப் பெட்டி |
இரண்டு பக்கங்களில் சிங்கத்தின் தலை பொருத்தப்பட்ட தாழ்வான படுக்கை மரத்தால் செய்யப்பட்டு தங்கச் சருகுத் தகடால் போர்த்தப்பட்டிருந்தது. படுக்கையின் கால்கள் சிங்கத்தின் கால்களைப் போல் செதுக்கப்பட்டிருந்தன. தங்கப் பெட்டியின் எடை மட்டுமே 110 கிலோ கிராம். முகமூடி 10 கிலோ கிராம். ஏனைய இரண்டு மரப்பெட்டிகளின் எடை தனி. 3300 ஆண்டுகள், ஒரு டன்னுக்கும் மேற்பட்ட எடையைத் தாங்கியுள்ளபோதும் சேதமடையாமல் கிண்ணென்று இருந்தது கட்டில். டுடன்காமுனின் ஏனைய படுக்கைகளுக்கு அருகே இந்த ஈமப் படுக்கையும் கைரோவிலுள்ள பழைய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கவனித்துப் பார்க்கவில்லையென்றால் இதைத் தவறவிடும் வாய்ப்பு அதிகம்.
வெகுவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டாவது மம்மி வடிவப் பெட்டியையும் மூன்றாவது தங்கப் பெட்டியையும் நாங்கள் கைரோ பழைய அரும்பொருளகத்தில் பார்த்தோம். அவை அருகருகே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த இரண்டையும் உள்ளடக்கிய முதலாவது பெரிய பெட்டி அங்கே இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் அந்த ஒரு பெட்டி மட்டும் கல்பெட்டிக்கு உள்ளேயே கல்லறையில் விட்டு வைக்கப்பட்டிருந்தது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும், கண்ணாடி மூடியிடப்பட்ட கல்பெட்டிக்குள் அந்தத் தங்கநிற மம்மிப் பெட்டி இருப்பது. ஆனால் நாங்கள் 2019 செப்டம்பர் முதல் தேதியன்று டுடன்காமுன் கல்லறைக்குப் போனபோது கல்பெட்டி காலியாகத்தான் இருந்தது.
2019 ஜூலை மாதம்தான் அதை அங்கிருந்து அகற்றிப் புதிய அரும்பொருளகத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தப் பெட்டி 30 விழுக்காடு சேதமடைந்துள்ளதாக எகிப்திய அரும்பொருள் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. கல்லறைக்குள் நிலவிய சூடும் ஈரப்பதமும் அதற்கு முக்கியக் காரணம். அதில் ஏராளமான வெடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள சில பாகங்களையும் காணவில்லை. இந்தப் புத்தகம் வெளிவரும்போது அந்தப் பெட்டி சீரமைக்கப்பட்டு கைரோ புதிய அரும்பொருளகத்தில் காட்சிக்கு வந்திருக்கும். 7 அடி நீளமுள்ளது அந்தப் பெட்டி. அதன் கால் பகுதியில்தான் மரம் தேய்த்துச் சீவி எடுக்கப்பட்ட தடயம் உள்ளது. இனிமேல் மூன்று பெட்டிகளையும் ஒரே இடத்தில் அருகருகே பார்த்து ரசிக்கும் வாய்ப்பைப் பார்வையாளர்கள் பெறவுள்ளனர்.
பொன். மகாலிங்கம்
டுடன்காமுன் மம்மியின் மீது வைத்துக் கட்டப்பட்டிருந்த அணிகலன்
![]() |
Amulets and Bracelets |
![]() |
Pectoral |
![]() |
Bracelet |
![]() |
Solar Barque Beetle Pectoral |
![]() |
டுடன்காமுனின் ஒரு ஜதைக் காதணி |
![]() |
டுடன்காமுன் மம்மி உடலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மந்திரத் தாயத்துகளில் ஒன்று |
![]() |
டுடன்காமுன் மம்மி உடலில் பொதிந்து வைக்கப்பட்டிருந்த மந்திரத் தாயத்துகளில் ஒன்று |
![]() |
டுடன்காமுன் மம்மியின் மீது வைத்துக் கட்டப்பட்டிருந்த வல்லூறு வடிவ ஆரம். சிதறிக் கிடந்த இதை, கார்ட்டர் குழு தவறுதலாய்க் கோத்துள்ளதாக இப்போது கண்டுபிடித்துள்ளனர். |
![]() |
Bracelet |
![]() |
வல்லூறும் நாகமும் பாதுகாக்க, நடுவே ஒசைரிஸ் தெய்வ வடிவில் டுடன்காமுனைப் பிரதிபலிக்கும் மந்திரத் தாயத்து |
ஆசிரியர் குறிப்பு
இராஜபாளையத்தில் பிறந்த பொன் மகாலிங்கம், கட்டடப் பொறியியலில் இளநிலைப் பட்டமும் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். சிங்கப்பூரிலுள்ள தமிழ் வானொலி 96.8 பண்பலையில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர். சிங்கப்பூர்த் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிவழியான வசந்தத்தில் செய்தித் தயாரிப்பாளராகவும் 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில், புதிய தலைமுறை தொலைக்காட்சி உருவான தொடக்ககாலத்தில், அதில் செய்தி ஆசிரியராக ஈராண்டுகள் பணியாற்றியுள்ளார். தற்போது ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார். கம்போடியாவிலுள்ள அங்கோர் வாட் பேராலயம் பற்றிய இவரது பயணக் கட்டுரை, நூலாக வெளிவந்துள்ளது. பயணம் செய்வதில் அதீத ஆர்வமுள்ளவர்.