விஷ்ணு உள்ளே நுழைந்தவுடன் என்னுடைய பென்சிலைப் பார்த்துவிட்டான். பொதுவாகவே அவனுடைய கவனம் கீழே விழுந்துகிடப்பவை மேல் அதிகமாகவே இருக்கும். டம்ளர், ஸ்பூன், டீவி ரிமோட், பைக் சாவி ஆகியவை அவனுடைய கவனத்தை அதிகம் கவர்ந்தவை. பென்சிலை எடுத்துக்கொண்டவன் சுவரில் வரைய ஆரம்பித்துவிட்டான். முதலில் அவன் அப்பாவுடைய பைக், அவன் அப்பா வேலையிலிருந்து வந்ததும் முதல் வேலையாக விஷ்ணுவை ஒரு ரவுண்ட் கூட்டிச்செல்லவேண்டும். இருபக்கம் வட்டம் போட்டு நடுவில் கோடு ஒன்றை இழுத்து அதன் மேல் மேலும் இருகோடுகள் வரைந்து தலையாக புள்ளி ஒன்றை வரைந்தான்.
அவனுடைய பொம்மைகளான வாத்து, ரயில், சைக்கிள், குரங்கு, சூப்பர்மேன், தெருநாய் ஆகியவை கோடுகளாக சுவரில் தோன்றினர். இரண்டு வயது பையனின் சிறு உலகம் எங்கள் வீட்டு சுவரில் தோன்றிக்கொண்டிருந்தது. நான் அவனிடம் ‘விஷ்ணு உனக்கு யார் வரையக்கற்றுகொடுத்தார்கள்’ என்றேன். சுலிருந்து கண்களை எடுக்காமலேயே ‘நானே வரைவேன் மாமா’ என்றான். எனக்கு ஆச்சிரியம் ஒன்றும் இல்லை இரண்டு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவனுக்கு எட்டாத கதவின் தாழ்ப்பாளை மூன்று மாதமாக முயன்று வளர்ந்தவுடன் திறந்துவிட்டான். ஒரு தரம் காருக்கு அடியில் பந்து சென்றபோது பேட்டை வைத்து எடுத்தேன் அதன் பின் எப்போது காருக்கு அடியில் பந்து சென்றாலும் பேட்டால் அவனே எடுத்துவிடுவான். சாய்த்து வைத்திருந்த ஏணியில் ஏற நிச்சியம் யாரும் அவனுக்கு கற்றுத்தரவில்லை. கட்டிலுக்கு அடியில் பந்து சென்றுவிட்டது உடனே அடியில் சென்று பந்தை எடுத்தவுடன் நிமிர்ந்து விட்டான் தலையில் கட்டில் இடித்து ஒரே அமர்க்களம், அதன் பிறகு ஒருமுறைக்கூட கட்டிலில் இடித்துக்கொண்டதில்லை.
விஷ்ணுவுடைய பேன்சில் ஓவியக் கிறுக்கலைப் பார்த்தவுடன் எனக்கு தொல்காலத்து மனிதன் வரைந்த பாறை ஒவியங்கள் தான் நினைவில் எழுந்தது. ‘பாறை ஓவியங்கள்’ மானிடம் குழந்தையாக இருக்கும் போது வரைந்தவை தானோ என்று தோன்றியது.
உலகிற்கு பாறை ஓவியங்கள் 19ஆம் நூற்றாண்டில் தான் ஒரு ஆய்வு துறையாக அறிமுகம் ஆகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவிலும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியாவில் உள்ள பாறை ஓவியங்களில் மத்தியப்பிரதேச பிம்பேட்கா குகைகளில் உள்ள ஓவியங்கள் எண்ணிக்கையில், அளவில் பெரியவை. ஆனால் தமிழகத்தில் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டு அறிவுலகத்தின் கவனம் பெறுகின்றன. கண்டறியப்பட்டவற்றுள் கீழ்வாலை, கருக்கியூர் பகுதிகளில் உள்ள பாறை ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவையாக கருதப்படுகின்றன.
நிலைக்கற்கள் (Menhir), கல்திட்டைகள் (Dolmen), கல்பெட்டிகள் (Cist), குடைக்கற்கள் அல்லது தொப்பிக்கற்கள் (Umbrella Stone), கல்வளையங்கள் (Round Barrow) ஆகிய தொல்பழங்கால சின்னங்களில் பாறை ஓவியங்கள் மிக முக்கியமான தடயங்களாக அறியப்படுகிறன. மற்ற தொல் சின்னங்களில் இல்லாத சிறப்பம்சமாக பாறை ஓவியங்களில் உயிர்த்தன்மை நிறைந்து இருக்கிறது. அவை நம்முடன் தொடர்பு கொள்ள முயல்வதை, பேச முற்படுவதை நேரடி அனுபவத்தில் அறியலாம்.
பாறை ஓவியங்கள் இடைக்கற்காலத்திலிருந்து வரலாற்றுக்குப் பிந்தியகாலம் வரை வரையப்பட்டன. உலகம் முழுவதிலும் பெரும்பாலும் வழிபாட்டு சடங்குகளுக்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இன்றும் சில இடங்களில் பழங்குடிகளால் வழிபாட்டு சடங்குகள் செய்யப்படும் இடமாகவும் குகை ஓவியங்கள் உள்ளன. மேலும் வேட்டைச் செய்திகளை பரிமாறிக்கொள்ளவே இக்குறியீடுகள் அன்றைய மனிதன் இவற்றை வரைந்திருக்கலாம் என்பது போன்று பல ஊகங்கள்.
தமிழக பாறை ஓவியங்கள் பற்றிய ஆய்வுகள் மிக குறைவாகவே நடக்கிறது, நூல்கள் வெளியீடும் சொற்பமே. சமீபத்தில் ஆய்வாளர் தென்கொங்கு சதாசிவத்துடைய ‘கொங்குநாட்டு பாறை ஓவியங்கள்’ புத்தகம் தடாகம் வெளியீடாக வந்துள்ளது. சதாசிவம் பற்றி அறிந்தவர்களுக்கு அவரது வளர்ச்சி எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். முறையான கல்விப்பின்புலம் இல்லாதவர் சதாசிவம், தொழில் முறையில் மரத்தச்சர். நூல்கள் வழியாக வரலாற்றின் மேல் உள்ள ஆர்வத்தால் தொல்லியல் ஆய்வுக்கு வந்தவர். தமிழக வரலாற்றாய்வின் முன்னோடிகளான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார், ராசமாணிக்கனார், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரை வாசித்து பயின்று இருக்கிறார். அவருடைய வரலாற்று ஆர்வம் பாறை ஓவியங்கள், வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் சின்னங்கள் சார்ந்த ஆர்வமாக உருவானது. அமராவதி பகுதியில் கல்வட்டங்கள், பெருங்கற்கள் உட்பட பல கற்காலத் தொல்லியல் தடையங்களை முதல்முறையாகக் கண்டடைந்து பதிவு செய்துள்ளார். கொங்கு சதாசிவத்தின் வழிமுறை கண்டடையும் தகவல்களை முறையாக தொல்லியல் துறைக்குத் தெரிவிப்பதும், அவர்கள் அவற்றை ஆவணப்படுத்த உதவுவதுமாக இருந்தது. இப்போது அவற்றை நூல்களாகவும் எழுத ஆரம்பித்துள்ளார்.
![]() |
தென்கொங்கு சதாசிவம் |
ஒப்பீட்டளவில் தமிழகத்தில் பாறை ஓவியங்களின் பரவல் அதிகமாகவே உள்ளது. ஆனால் கண்டறிதல் மட்டுமில்லை அவற்றை ஆவணப்படுத்துதலும் பாதுகாத்தல் இவையெல்லாம் இன்று நமக்குள்ள பெரும் சவால்கள். எந்த புதிய விஷயமும் ஒற்றை முதல் அடியிலிருந்தே துவங்க முடியும், அது அறிதல். பாறை ஓவியங்களை பற்றி முற்றிலும் அறியாதவர்கள் கூட இந்நூலிலிருந்து தொடங்கலாம் அவர்களுக்கு பாறை ஓவியங்களை காண அழகிய கையேடாக ‘கொங்குநாட்டு பாறை ஓவியங்கள்’ நூல் இருக்கும்.
இந்த நூல் அடிப்படையில் கொங்கு நாட்டில் அமராவதிகரையில் உள்ள அஞ்சு நாடு பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்த பாறை ஓவியங்களை அறிமுகப்படுத்துகிறது. புத்தகம் மிக எளிமையாக இந்த பாறை ஓவியங்களின் அமைவிடம், எப்போது இந்த ஆய்வுகள் துவங்கப்பட்டது என்று கூறுகிறது. அஞ்சு நாடு குறித்த அறிமுகத்தில் ஆசிரியர் இலக்கியத்தில் இருந்தும் கல்வெட்டுகளில் இருந்தும் அப்பகுதிக்கான சான்றுகளை விவரிக்கிறார். தொடர்ந்து ஓவியங்களின் வகைகள் காலம் இவற்றை விளக்குகிறார்.
அடுத்தபடியாக அமைந்துள்ள தொல்கால மக்களின் வாழ்க்கையை இன்றுள்ள பழங்குடிகளுடன் இணைத்து எழுதப்பட்டுள்ள பகுதி சுவாரசியமானது. தொல்கால மனிதனின் வழிபாட்டில் நீத்தார் வழிபாடு மிகமுக்கியமான இடத்தை பெற்றிருந்தது. பெரும்பாலான தொல்காலச் சின்னங்கள் நீத்தாருக்காக அமைத்தவை. இன்றுள்ள நீத்தார் சடங்குகளில் தொல்கால மனிதர்களின் தடத்தை மிக சுலபமாக கண்டுகொள்ளமுடியும். உதாரணமாக வைதீக சடங்குகளில் ஒருவர் மரணித்து எரியூட்டிய மூன்றாம் நாள் இறந்தவரை நினைத்து ‘கல்ஊன்றி’ பத்தாம் நாள் வரை எள்ளுநீரும் அன்னமும் பலியாக அளிக்கப்படும். அவற்றை நேரடியாக நிலைக்கற்கள் (Menhir) மற்றும் கல்திட்டைகளுடன் (Dolmen) பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு பல சமூகங்களின் நீத்தார் சடங்குகள் நேரடியாகவே தொல்கால நீத்தார் சின்னங்களுடன் தொடர்புடையவை. பழங்குடிகளின் நீத்தார் சடங்குகளில் இடம்பெறும் பாடை, தேர் ஆகியவை பாறை ஓவியங்களின் பிரதிபலிப்பதை ஆசிரியர் பொருத்தமாகவே காட்டியிருக்கிறார். பின் பாறை ஓவியங்கள் இடம் பெற்றிருக்கும் யானை, குதிரை, வேட்டைக் காட்சிகளை சங்க பாடல்களின் துணைகொண்டு விளக்கியிருக்கிறார்.
இந்தப்புத்தகத்தின் சிறப்பம்சமாக சில விஷயங்களை சொல்லலாம். சதாசிவம் அதை திட்டமிட்டு அமைக்கவில்லை, தொடர்ந்த அவரது செயல்பாடுகள் மற்றும் ஆர்வம் இவற்றினூடாக அது உருவாகி வந்துள்ளது. ஒன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்களை தொகுத்து அவற்றின் காட்சிகளை சிறிய அலகுகளாக்கி தரும் தன்மை. முதல் பார்வையில் உங்களால் அந்த தொடர் காட்சிகளை இப்படிப்பகுத்து புரிந்து கொள்ள இயலாது. அதன் தொடர்ச்சியற்ற தன்மையும், தெளிவின்மையும் உங்களை குழப்பிவிடும் ஆகவே இந்த காட்சி விளக்கங்கள் அவசியமாகிறது. அடுத்தது அவற்றை இரு முனைகளில் நீட்டிச்செல்லுதல். ஒன்று இலக்கியம், அது இந்த ஓவியங்களில் இருந்து நாம் அடுத்து நகர்ந்து வந்த மனநிலை, மானுடம் மொழியில் படிமங்களாக பேண விரும்பிய தொடர்ச்சியை காட்டுகிறது. அடுத்த விஷயம் பழங்குடிச்சடங்குகளோடு அந்த ஓவியங்களை தொடர்புறுத்துதல். சதாசிவம் போன்று தொடர்ந்து பயணிக்கும் ஒருவருக்கே இது சாத்தியம். இதனால் நெடுங்காலம் முன்பிருந்து இன்றுவரை 'அப்படியே' நம்மிடம் தொடர்வது என்னென்ன என்று கண்டுகொள்ள முடிகிறது.
![]() |
குமட்டிபதி தேர் ஓவியம் |
இவை ஒரு வாசகருக்கு இரண்டு பெரும்வாயில்களை திறந்து வைக்கிறது, ஒரு சிறந்த புனைவு வாசகர் இலக்கியத்தின் பல்வேறு தளங்களை இதன்வழி கண்டுகொள்ளலாம். அவர் வாசித்த ஆக்கங்களில் இந்த படிமங்கள் எங்கெல்லாம் மின்வெட்டாக தோன்றி மறைந்தது என்று காணலாம். எதிர் திசையில் ஒரு பேரார்வம் கொண்டவர், இந்தக்கற்றலின் வழி தொல்லியல் மீது நாட்டாரியல் மீது மானுடவியல் மீதான தனது அறிதலை அதனூடாக தனது ஆளுமையை வளர்த்தெடுக்கலாம்.
பாறை ஓவியங்களை ஆய்வுசெய்பவர்களை ஆச்சரியமடைய வைப்பது உலகளாவிய பாறை ஓவியங்களில் உள்ள ஒற்றுமை. அருகில் இருக்கும் ஊரில் அல்லது ஒரே நாட்டில் உள்ள பாறை ஓவியங்கள் ஒரே மாதிரி இருப்பது பெரிதில்லை. ஆஸ்திரேலியாவில் இருக்கும் ‘பெரும் கை’ தமிழகத்திலும் தேன்வரந்தையிலும் ஒரே மாதிரி இருப்பது தான் ஆச்சரியம். ஆனால் எனக்கு எந்த விதமான ஆச்சரியமும் இல்லை ஆஸ்திரேலிய, அமேரிக்க குழுந்தையாக இருந்தாலும் இந்திய தமிழக குழந்தையாக இருந்தாலும் ஒன்று போலவே அழுகின்றன, அடம்பிடிக்கின்றன, பென்சில் கையில் கிடைத்ததும் ஒன்றுபோலவே வரைகின்றன.
அனங்கன்