மழை காலத்தில் இடுப்பளவு உயர்ந்து நிற்கும் புற்கள் வெப்பத்தில் காய்ந்து, மடிந்து, ஒன்றோடொன்று பிணைந்து கிடந்தன. இந்த அடர்ந்த தரைவிரிப்பில் திட்டு திட்டாகக் கறைகள் போல ஆங்காங்கே செம்புரைப்பாறைகளின் தளம் தெரிந்தது. மேட்டுபூமியின் சில பகுதிகளில் சப்பாத்திக் கள்ளிச் செடிகளும், பராமரிக்காமல் விடப்பட்ட முந்திரி மரங்களும் குழுமி நின்றன. இந்த பச்சை பழுப்பு கூடாரங்களிலிருந்து கண்ணிற்கு தெரியாத பட்சிகளின் கூவல்கள் வெப்பக் காற்றில் மிதந்து வந்தன. சற்று தொலைவில் நரி ஒன்று எங்களை நோட்டமிட்டு விட்டு கண நேரத்தில் புற்களுள் மறைந்தது. நாங்கள் நடந்து சென்று கொண்டிருந்த பாதையில் இருந்து சிறிது தூரத்தில் இந்த நிலம் செங்குத்தாக சரிந்து கடலைத் தொடுகிறது. அரபிக்கடலின் அலைகள் பாறைகளில் அறையும் ஓசை, இந்த மேட்டுபூமியின் மூச்சைப் போல, மெலிதாகக் காதில் விழுந்து கொண்டே இருந்தது.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தின் கஷேலி (Kasheli) பகுதியில் நடந்து கொண்டிருந்தோம். பழுதான தார் சாலை போல குண்டும், குழியுமாக இருந்தது பாதை. சட்டென்று ஒரு இடத்தில் நின்றார் தார்கிக். அவர் தொல்லியலில் பட்டம் பெற்றவர். கொங்கன் நிலத்தின் வரலாற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்.
‘ஏதாவது தெரிகிறதா?’ என்று கேட்டார்
நாங்கள் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தொலைவில் நிலத்தின் மேல் சிறு பாறைகளால் ஆன வட்டம் ஒன்று தெரிந்தது. அந்த எல்லைக் கோடு உள்ளடக்கிய கற்தரையில் நீண்டும், வளைந்தும், நெளிந்தும் கோடுகள் தெரிந்தன. அத்தனையும் பாறையால் மேவப்பட்ட தரையில் செதுக்கப்பட்டவை.
‘கோடுகள் தான் தெரியுது வேற ஒண்ணும் தெரியலையே’ என்றேன்.
‘இங்க வந்து நின்னு பாருங்க’ என்று எல்லைக் கோட்டிற்குள் இருந்த தளத்தின் ஒரு மூலையை சுட்டிக் காட்டினார் தார்கிக்.
அங்கே சென்று நின்றேன். முதலில் ஒன்றும் புரிபடவில்லை. ஆனால், சில வினாடிகளிலேயே, பாறை தளத்தில் செதுக்கப்பட்டிருந்த கோடுகளும், வளைவுகளும் ஒன்றோடொன்று இணைந்து, சட்டென்று பெரும் உருவம் ஒன்று மேலெழும்பி வந்தது.
‘யானை’ என்றேன் ஆச்சர்யத்துடன்.
முறம் போன்ற காதுகள் அதன் முகத்தின் பக்கவாட்டில் சிகரங்கள் போல விரிந்திருக்க, தலையைத் திரும்பி நம்மை பார்க்கும் அதன் தும்பிக்கையின் நுனி இரு இலைகள் போல விரிந்திருந்தன. கால்களும், பட்டையான நகங்களும், வாலும், மேடான முதுகும் என்று சர்வ அங்கங்களும் அழகாக வடிக்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய பதினெட்டு மீட்டர் நீளமும் பதிமூன்று மீட்டர் அகலமும் கொண்டு தன்னந்தனியாக கடல்காற்று தாலாட்டும் இந்த வறண்ட பூமியின் மடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்து இருக்கிறது இந்த மாமத யானை.
 |
கஷேலி யானை பாறை செதுக்கு |
‘இங்க யானை மட்டும் இல்லை, மத்த பல விஷயங்களும் இருக்கு. இங்க வந்து பாருங்க’ என்று யானையின் மத்தியப் பகுதியில் சென்று நின்று கொண்டார் தார்கிக். அங்கிருந்து தரையில் ஒவ்வொரு வடிவமாக அறிமுகப்படுத்தினார். சற்று முன்னர் வரை பாறையில் வெற்று கீறல்கள் போல இருந்தவை கானுயிர்களும் மீன்களுமாக மாறி நிலத்தில் உயிர் கொண்டன. யானையின் உள்ளே, தார்கிக்கின் ஆள்காட்டி விரல் தரையில் கோலமிட்டு, ஏறக்குறைய எழுபது வடிவங்களை அடையாளம் காட்டியது.
பெருத்த பசியில் காட்டை முற்றிலும் விழுங்கி விட்டு தாகத்திற்கு கடலையும் விழுங்கியதோ என்று தோன்றும் வகையில் அதன் உள்ளே அத்துணை வடிவங்கள்; சுறா, திருக்கை மீன் (Stingray) மற்றும் பிற அடையாளம் காணவியலா மீன்கள், மான், பன்றி, குரங்கு போன்ற விலங்குகள், பறவைகளின் சாயல் கொண்ட இனங்கள் மற்றும் பலதரப்பட்ட வடிவவியல் (Geometric) செதுக்குகள் என்று வடிவங்களின் பட்டியல் நீண்டது. இவற்றைத் தாண்டி யானைக்கு வெளியேயும் பல வடிவங்கள் நிறைந்திருந்தன. யானை வடிவிலான ஒரு பிரபஞ்சத்தின் நடுவில் நிற்பதைப் போல இருந்தது எனக்கு.
அலையோசை மென்மையாக ஒலிக்கும் அந்த மேட்டுபூமியில் என் மனதில் பல கேள்விகள் அலை மோதின. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படும் இந்த செதுக்குகளை யார் செதுக்கினார்கள்? என்ன காரணம்? ஏன் இந்த இடத்தில்? இந்த வடிவங்களின் அமைப்பில் ஏதேனும் செய்தி உள்ளதா? பல காலமாக தொடர்ந்து வரும் மரபா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பாறைகளை செதுக்கியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்ன ஆனார்கள்?
புதரில் இருந்து ஆள்காட்டி குருவி ஒன்று வானில் எழும்பி என் மனதில் தோன்றியக் கேள்விகளை அதன் மொழியில் காற்றிடம் கூவியது. ஏன்? எதற்கு? எப்படி?
அந்தப் பகுதியில் ஆங்காங்கே வளர்ந்திருக்கும் சிறு இலைகள் கொண்ட ஒரு மரத்தில் இருந்து கொத்து கொத்தாய் தொங்கிக்கொண்டிருக்கும் கிளாக்காய் வடிவ சிறு கருநீல பழம் ஒன்றை பறித்து அதன் காம்பில் கசியும் பாலை உதறி ‘இதை சாப்பிட்டு பாருங்கள்’ என்றார் தார்கிக். தயக்கத்துடன் வாயில் போட்டு கொண்டேன். கனிந்த திராக்ஷை பழத்தின் இனிப்பும், இலந்தையின் ருசியும், நாவல் பழத்தின் மிதமான கடுப்பும் சேர்ந்து என் நாக்கின் சுவையரும்புகளைத் தூண்டின.
‘இது என்ன பழம்’ என்றேன் மேலும் இரண்டை வாயில் திணித்தபடி.
‘கார்வேண்டு’ என்று நாங்கள் இதை அழைப்போம். இது போன்ற நிலங்களில் தானாக வளர்வது என்றார். மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் அமைந்த செதுக்குகள் போல பாறை நிலத்தில் சுவையானக் கனிகளை அள்ளித்தரும் இந்த மரங்கள் கூட ஒரு மர்மம் தான்.
 |
கஷேலி யானை செதுக்கு |
உலகின் பல இடங்களில் – நிலத்தில், பாறைகளில், செங்குத்தான பகுதிகளின் பக்கவாட்டில் – பண்டைய மனிதனால் செதுக்கப்பட்டோ, சிறு கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டோ அல்லது வறண்ட மணலில் கீறப்பட்ட பல வடிவங்கள் உள்ளன. இவற்றில் பல சிறியவை. அந்தந்த இடங்களில் இருந்தபடியே பார்க்க இயலும். உதாரணத்திற்கு, பிரேசில் நாட்டின் சௌசா பேசின் (Sousa Basin) பகுதியில் கடந்த ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் மிகவும் விந்தையான பாறை செதுக்குகளைக் கண்டெடுத்தனர். பாறைகளில் காணப்பட்ட டைனோசர் காலடி புதைப்படிமங்களை (fossilized footprints) சுற்றி சக்கரம் போன்ற வட்டங்களும், கோடுகளும், பிற வடிவவியல் செதுக்குகளும் கண்டெடுக்கப்பட்டன. இதைப் போன்ற சிறு வடிவங்கள் உலகின் பிற இடங்களிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் லடாக் முதல் கேரளா வரை இத்தகைய வடிவங்களைப் பாறைகளில் காணலாம். ரத்னகிரியில் கூட மீன், முதலை, குரங்கு போன்று தரையில் செதுக்கப்பட்ட பல சிறு வடிவங்கள் உண்டு. சில செதுக்குகள் அளவில் பெரியவை. அவற்றின் முழு வடிவைப் புரிந்து கொள்ள சற்று உயரமான இடத்தில் நின்று பார்க்க வேண்டும்.
 |
டைனோசர் காலடி புதைப்படிமங்கள் |
 |
சிறு காண்டாமிருகம், கஷேலி |
ரத்னகிரி பயணத்தில் தீயூத் (Deood) என்ற கிராமத்திற்கு அருகே உள்ள பாறை வடிவத்தைக் காணச் சென்றோம். முதலில் கஷேலியில் கண்டதைப் போலவே பாறையில் கீறப்பட்ட வெற்றுக் கோடுகள் தான் என் கண்ணில் பட்டன. ஆனால், இந்த இடத்தில் தரையில் செதுக்கப்பட்ட வடிவத்தைச் சுற்றி கற்களால் ஆன சுவர் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து ஒரு பத்தடி உயரத்தில் அந்த சுவற்றின் மேலே மேடை ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. அந்த மேடையில் நின்று வடிவத்தை பார்த்த போது தான் அது ஏறக்குறைய நான்கு மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் அகலமும் கொண்ட ஒரு காண்டாமிருகத்தின் உருவம் என்று புலனானது. மேடையில் அங்கும் இங்கும் நடந்த போது அங்கே செதுக்கப்பட்டப் பிற வடிவங்களும் தெளிவாயின; மான், குரங்கு, நீண்ட உடம்பில் கோடுகளுடன் பாம்பைப் போல இருக்கும் வடிவம் என்று பலதும் பாறைகளில் தெளிந்து வந்தன.
சில செதுக்குகள் பிரமாண்டமானவை. இவற்றை வானில் பறந்து கொண்டோ அல்லது மலையுச்சியில் இருந்தோ தான் பார்க்க முடியும். பெரு நாட்டில் நாஸ்கா கோடுகள் (Nazca lines) என்று அறியப்படும் செதுக்குகள் இதற்கு ஒரு உதாரணம். பாலைவனத்தில் வரையப்பட்ட இந்த வடிவங்கள் நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் மண்ணையும், சிறு கற்களையம் விலக்கி அடியில் காணப்படும் மஞ்சள் நிறப் படுகையை வெளிப்படுத்துகின்றன. இவ்வகை வெள்ளை/மஞ்சள் கோடுகளால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் பல தினுசு. கிலோமீட்டர்கள் நீளத்திற்கு கோடுகள், முக்கோணங்கள் போன்ற வடிவங்கள். தேன்சிட்டு, சிலந்தி, குரங்கு, நாய், திமிங்கிலம் என்று எண்ணற்ற விலங்கினங்களின் வடிவங்கள் பல நூறு மீட்டர் விஸ்தாரத்தில் பாலைவனப்பரப்பில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதைப் போன்ற பிரம்மாண்ட வடிவங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா போன்று உலகின் பிற பகுதிகளிலும் காணலாம்.
பாறை செதுக்குகள், ஓவியங்கள் போன்றவை ஒரு உலகளாவிய வெளிப்பாடு. இவை நம் முன்னோர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகித்திருக்கிறது. ஆனால் இவற்றின் காலம், நோக்கம், செதுக்கியவர்கள் ஆகியவை இன்றுவரை ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது.
 |
காண்டாமிருகம் - தீயூத் |
 |
காண்டாமிருகம் - தியூத் |
காலக்கணிப்பு
பொதுவாக, செதுக்குகள் அல்லது பாறை ஓவியங்கள் போன்றவற்றின் காலத்தை நிர்ணயிப்பதற்கு சில உக்திகள் கையாளப்படுகின்றன.
செதுக்குகளில் அல்லது ஓவியங்களில் காணப்படும் அங்ககப் பொருட்கள் அல்லது நிலக்கரித் துண்டுகளை கதிர்கரிம பரிசோதனை (Radiocarbon dating) செய்து அவற்றின் வயதை அளக்கலாம். ஆனால், அவை செதுக்கும் போது இருந்த அங்ககத் துணுக்குகளா அல்லது பின் நாட்களில் வந்து சேர்ந்தனவா என்பதை நாம் அறிந்து கொள்ள முடியாது.
இன்னொரு வகை, பாறையில் வடிக்கப்பட்ட வடிவங்களை சுற்றி இருக்கும் பகுதியில் கண்டெடுக்கப்படும் கல் ஈட்டிகள், கற்செதில்கள் அல்லது பானை ஓடுகள் போன்ற உபகரணங்கள், அவை கண்டெடுக்கப்பட்ட ஆழம் ஆகியவற்றை வைத்து காலத்தை அளக்கலாம். ஆனால், இந்த முறையிலும் சில போதாமைகள் உள்ளன. இந்த உபகரணங்களை உபயோகித்தவர்கள் இந்த வடிவங்களை செதுக்கினார்களா அல்லது அவர்களின் காலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ செதுக்கப்பட்டதா போன்ற கேள்விகள் எழும்.
மற்றொரு முறையில் பாறையில் அல்லது மணலில் இருக்கும் குவார்ட்ஸ் கனிமம் தேக்கி வைத்திருக்கும் சக்தியின் அளவை மதிப்பிட்டு அதன் மேல் கடைசியாக எந்த காலகட்டத்தில் சூரியனின் ஒளி பட்டிருக்கக்கூடும் என்று அனுமானிப்பது. Optically Stimulated Luminescence என்ற இந்த முறையை பயன்படுத்தித் தான் நாஸ்கா கோடுகள் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானவை என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ரத்னகிரி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் காணப்படும் செதுக்குகளில், மேலே குறிப்பிடப்பட்ட சில காலகணிப்பு முறைகள் உபயோகப் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வடிவங்கள் காணப்படும் சாவே, கஷேலி, கொலோஷி பகுதிகளில் மனிதன் வாழ்ந்தான் என்பதின் அடையாளமாக சிறு கல் ஈட்டிகள், செதில்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இவை இடைக்கற்காலத்தை, அதாவது குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் முன், சேர்ந்தவை.
இவ்வகையில் அனுமானிக்கப்பட்ட காலகட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக இதுவரை ரத்னகிரி மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் கண்டெடுத்த செதுக்குகளில் ஒன்றில் கூட, வளர்ப்பு மிருகங்களோ அல்லது விவசாயம் சார்ந்த பிம்பங்களோ செதுக்கப்படவில்லை. ஆகவே இந்த வடிவங்கள் விவசாயம் தோன்றுவதற்கு முன் உருவானது என்பதற்கு இது இன்னொரு சாட்சி.
இவற்றைத் தாண்டி ரத்னகிரி செதுக்குகளில் காணப்படும் மிருகங்கள் நமக்கு சில தகவல்கள் சொல்கின்றன. உதாரணத்திற்கு, இன்று கொங்கன் பகுதியில் காண்டாமிருகங்கள் கிடையாது. ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன், அதாவது Chalcolithic காலம் என்று அறியப்படும் சகாப்தத்தில் இந்தப் பகுதிகளில் இது காணப்பட்டது. ரத்னகிரியில் பல செதுக்குகளில் இந்த மிருகத்தின் வடிவம் காணப்படுகிறது. இந்த மிருகத்தின் வடிவம் செதுக்கப்பட்ட நேர்த்தியைப் பார்த்தால், இதை எங்கேயோ பார்த்து விட்டு வந்து இங்கு செதுக்கியதாகத் தோன்றவில்லை. காண்டாமிருகத்தின் உயர்ந்திருக்கும் வாலும், கால்களின் வளைவும் அது ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் செதுக்கப்பட்டிருக்கிறது. மிருகங்களைப் பற்றிய இத்தகைய நுணுக்கங்கள் அதன் அருகில் வாழ்வதால் மட்டுமே அறிய இயலும். அதன் படி பார்த்தால் காண்டாமிருகத்தின் பாறை செதுக்கு குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்ற முடிவுக்கு வரலாம்.
இதைப் போன்ற கணிப்புகளின் அடிப்படையில் தான் இந்தப் பகுதியின் செதுக்குகளை பத்தாயிரம் ஆண்டுகளில் இருந்து சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் முதற்கட்ட முடிவுகளே. தொடரும் ஆராய்ச்சிகள் ரத்னகிரியின் செதுக்குகளின் வயதை மேலும் துல்லியமாக வரையறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவை ஏன் உருவாக்கப்பட்டன என்ற கேள்விக்கு பதில் இன்று வரை விளங்கவில்லை. பல ஊகங்கள் உள்ளன. ஆனால் இது தான் காரணம் என்று ஆணித்தரமாக நிரூபிப்பது ஒரு பெரும் சவால் தான். இது ரத்னகிரியில் காணப்படும் செதுக்குகளுக்கு மட்டுமல்ல உலகில் காணப்படும் பல செதுக்குகளுக்கும், பாறை ஓவியங்களுக்கும் பொருந்தும். இருப்பினும் சில விளக்கங்கள் புரியாத சில பாகங்களை நன்கு இணைக்கின்றன. இது நடந்திருக்கக் கூடியதே என்று நம் அகத்தின் ஆழத்தில் மின்னல் ஒன்று வெட்டுகிறது.
 |
புலி - கஷேலி |
ஆதி அகத்தின் வெளிப்பாடு
பெருவில் உள்ள நாஸ்கா கோடுகளை எடுத்துக்கொள்வோம். அவை நெடுங்காலத்திற்கு முன் தெய்வங்களால் உருவாக்கப்பட்ட சாலைகள் என்று 16 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்து சேர்ந்த சில ஸ்பெயின் நாட்டவர் நம்பினர். 20 ஆம் நூற்றாண்டில் வானிலிருந்து மட்டுமே தெரியும் அந்தக் கோடுகள் வேற்று கிரக வாசிகள் வந்திறங்கும் விமானப் பாதை என்று பரபரப்பை கிளப்பினார் எரிக் வான் டானிக்கென்.
நவீன அறிவியலின் துணை கொண்டு கடந்த எண்பது ஆண்டுகளாக தொல்லியலாளர்கள் நாஸ்கா வடிவங்களை ஆராய்ந்து வந்திருக்கின்றனர். அவை நீர்நிலைகளைக் சுட்டிக்காட்டும் வரைபடங்கள் என்றும், வானியல் நிகழ்வுகளை சுட்டும் காலிகை (Calendar) என்றும், என்று பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதைப் போன்ற விளக்கங்கள் பல இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோடுகளின் ’புனிதத்தன்மை’ பல ஆய்வாளர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வடிவங்கள் நாஸ்கா பகுதியில் வாழ்ந்த மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பிரபஞ்ச கோட்பாடு போன்றவற்றின் ஸ்தூல வெளிப்பாடு என்ற ஒரு சிந்தனை பரவலாக ஆய்வாளர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.
நாஸ்கா கலாச்சாரத்தில் புனிதமாக கருதப்படும் மலைகளை, நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை, இறந்தவர்களை புதைக்கும் இடங்களை இந்த வடிவங்கள் இணைப்பதாக சிலர் கருதுகிறார்கள். சிலந்தி, தேன்சிட்டு போன்ற உயிரினங்கள் அவர்களின் பண்பாட்டில் வளத்தை அல்லது பாதுகாப்பை அளிக்கும் உயிரினங்கள், அதாவது வணங்கப்படவேண்டிய தெய்வங்கள். ஆகவே வளத்தை அளிக்கும் மழையை வேண்டி அல்லது வளமையை வேண்டி (Fertility rituals) சடங்குகள் இந்த வடிவங்களுக்கு அருகில் நடந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.
இதைப் போன்ற மாந்திரீக (Shamanistic) அல்லது தொல் சடங்குகள் சார்ந்த விளக்கங்கள் செதுக்குகளுக்கு மட்டுமன்றி பாறை ஓவியங்களுக்கும் பொருந்தும் என்கின்றனர் டேவிட் லூயிஸ் வில்லியம்ஸ் போன்ற சில ஆய்வாளர்கள்.
இவர்களின் வாதத்தின் முக்கியப் புள்ளி உலகளாவிய கற்கால ஓவியங்கள் பல வேட்டை சமூகங்களின் தொல் மாந்திரீகம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் வெளிப்பாடு என்பதே. பல கற்கால ஓவியங்களில் காணப்படும் புள்ளிகள், வெட்டுக் கோடுகள், சுருள் வட்டங்கள் போன்றவை தன்னுணர்வு தளம் மாறும் பொழுது (altered states of consciousness) காணப்படும் வடிவங்கள். தன்னுணர்வை பல படிகள் கொண்ட ஒரு பாதையாக உருவகப்படுத்தி, ஒவ்வொரு தளத்திலும் தோன்றும் காட்சிகளை குகை ஓவியங்களோடு இணைத்து ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார் வில்லியம்ஸ். இது போன்ற ‘புனித’ சடங்குகள் அங்கத்தினர்களை பிணைத்து ஒரு குழுவாக ஆக்குவதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கும் என்று சொல்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
எனக்கு இந்த வடிவங்கள் வெற்று கிறுக்கல்கள், யாரோ ஒரு ஆதி மனிதன் தான் கண்டெடுத்த வரைகலையை அல்லது செதுக்கு கலையை பிறருக்கு பிரகடனப்படுத்துவதற்கு எடுத்து கொண்ட முயற்சிகள் என்ற தட்டையான விளக்கங்களைத் தாண்டி இவை பண்டைய மானுடனின் அகம் கண்டு கொண்ட அடுக்குகள், தன்னை சுற்றி இருக்கும் உலகை அர்த்தப்படுத்திக் கொள்ளவும் அதில் அவன் அடையாளம் கண்ட பெரு விசைகளை ‘திருப்தி’ செய்து பூமியில் வளமையாக வாழ அவன் செய்த முயற்சிகளின் வெளிப்பாடுகள் என்ற விளக்கம் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
இரு தினங்கள் ரத்னகிரியில் நான் கண்ட பாறை செதுக்குகள் அதை எனக்கு மேலும் உறுதி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.
 |
நாஸ்கா கோடுகள் |
கற்கோலம்
ராஜாப்பூர் செல்லும் பிரதான சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்தில் உள்ள நிலப்பரப்பில் நடக்கத் தொடங்கினோம். இரவு மழை பெய்திருந்ததால் பாறைகளின் மடிப்பில் நீர் தேங்கி நின்றது. மழை காலத்தில் பல நீரோடைகள் உருவாகி இந்த நிலத்தில் வெள்ளை ரேகைகள் போல நுரைத்து ஓடும் என்றார் தார்கிக். ருந்தே தாலி (Rundhe tali) என்றழைக்கப்பட்ட அவ்விடத்தில் நான் கண்ட செதுக்கு முற்றிலும் வித்தியாசமானது.
இரு வட்டங்கள் இடையே கோட்டையின் மதில் சுவற்றில் காணப்படும் ஏற்ற இறக்கங்கள் போல அமைந்த வடிவத் துண்டுகள். வெளி வட்டத்தில் மேலும் கீழும் காதுகளை போல துருத்திக் கொண்டிருக்கும் நான்கு முட்டையுருக்கள். ஓவ்வொன்றிற்கும் நடுவே ஒரு கூட்டல் குறியீடு. உள் வட்டத்தின் நடுவே ஒரு செவ்வகம். அதன் நடுவே நேர் கோடுகள் கொண்டு செதுக்கப்பட்ட ஒரு மனிதனின் உருவம். அந்த உருவத்தின் இரு கைகள் ஏதோ நீண்ட தடி போன்ற பொருளை ஏந்திக் கொண்டிருந்தன.
ஏறக்குறைய மூன்று மீட்டர் அகல நீளம் கொண்டுள்ள இந்த ‘கற்கோலத்திற்கு’ வெளியே, தென்கிழக்கு பகுதியில், முட்டியில் இருந்து வடிக்கப்பட்ட இரு கால்கள் காணப்பட்டன. வாளிப்பான கெண்டைதசைகள் கருமையாக மின்னிய இச் செதுக்கின் பாதங்கள் இரண்டும் நேரெதிர் திசைகளை நோக்கியிருந்தன. கால்களில் இருந்து சற்று தள்ளி மற்றொரு பகுதியில் புலி, மீன் மற்றும் இழுதுமீன் என்றழைக்கப்படும் jellyfish இன் வடிவங்கள்.
மற்ற செதுக்குகளை ஒப்பிடுகையில் இந்த நுட்பமான வடிவம் பாறை தளத்தில் ஆழமாக வெட்டப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய இரண்டு இஞ்சுகள் ஆழம். மழை காலங்களில் இந்த வெட்டுகளில் நீர் தேங்கி நிற்கும் என்றார் தார்கிக். வானில் கரு மேகம் சூழ்ந்த மங்கிய வெளிச்சத்தில் நீர் நிறைந்த இந்தக் கோடுகளின் பிம்பம் கனவில் வரும் ஒரு காட்சி போல தோன்றுமோ?
கொக்கி போல என்னை இழுத்த இந்தக் கோலத்தின் நடுவே சென்று நின்ற போது, அதன் நெளிவுகளும், கோடுகளும் மிகவும் பரிச்சியப்பட்ட ஒன்றாகத் தோன்றின. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு யந்திரத்தின் நடுவே நிற்கிறோம் என்ற எண்ணம் ஒரு குமிழி போல மேலெழுந்து உடைந்ததது. அது வெறும் கற்பனை தான் என்று என் மனத்தின் ‘நவீன’ அடுக்கு கூறினாலும், நான் நின்று கொண்டிருந்த தலத்தில் அகம் சற்று தடுமாறுகிறது என்பதை மறுக்கமுடியவில்லை.
இந்த வடிவங்கள் என்ன என்ற பிரமிப்பா அல்லது மனதின் ஆழத்தில் இவை உண்டாக்கும் மென் அதிர்வுகளா அல்லது இவற்றின் சுட்டி இழுக்கும் அடர் நுணுக்கங்களா என்று தெரியவில்லை, ஆனால் ருந்தே தாலியில் உள்ளதைப் போன்ற சில வடிவங்கள் அந்தப் பகுதிகளில் வாழும் கிராம மக்களின் வழிபாடு மற்றும் சடங்குகளில் ஒரு அங்கமாகியுள்ளது.

காலவெளிப் பாலங்கள்
தேவிஅசோல் கிராமத்திற்கு அருகே உள்ள ஆர்யதுர்கா கோவிலுக்கு மிக அருகே, ருந்தே தாலியில் உள்ள வடிவத்தை விட, பெரிய செதுக்கு ஒன்று உள்ளது. இரு சதுரங்களுக்கு இடையே நெளிந்து செல்லும் நீண்ட பாம்பின் உடலைப் போல ஒரு வடிவம் சுற்றி வர, உள்ளிருக்கும் சதுரம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாகத்திலும் நெளி நெளியாக பல்வேறு வடிவங்கள். ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு பெயர் தெரியாத நகரத்தின் வளைந்து செல்லும் தெருக்களின் வரைபடம் போல இருக்கிறது. இந்த நான்கு பகுதிகளுக்கு நடுவே, செதுக்கின் மையத்தில், பாறையில் தோண்டப்பட்ட ஒரு சிறு பள்ளத்தில் சிவலிங்கம் போல ஒரு கல் வீற்றிருக்கிறது.
தேவிஅசோல் கிராமத்தில் பண்டிகைகளின் போது ஆர்யதுர்காவின் பிம்பம் பல்லக்கில் சுமந்து வரப்பட்டு இந்த சதுரத்தின் நடுவே வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அன்னை கொலுவிருக்கும் அந்த நேரங்களில், கற்கோலம் வண்ணங்கள் தீட்டப்பட்டு கோலமாகவே மாறி விடும். இது கடந்த சில நூறாண்டுகளுக்குள்ளாக தோன்றிய சடங்காக இருக்கக் கூடும். இந்த சடங்கின் அடித்தளமான நம்பிக்கைக்கு பலம் சேர்கின்றன உள்ளூரில் புழங்கும் சில கதைகள்.
கோவிலிற்கு அருகே உட்கார்ந்திருந்த முதியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்த போது கதை ஒன்று சொன்னார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த கற் சதுரத்தில் அம்மன் வீற்றிருந்த போது, அதன் நடுவே இருந்த பள்ளத்தில் இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து, ஊர்ந்து சென்று அன்னை வந்திறங்கிய பல்லக்கில் ஏறி மறைந்து விட்டது என்றார். ஆர்யதுர்கா கோவிலில் அம்மன் கொலுவிருக்கும் சன்னதியிலேயே பாறையில் வடிக்கப்பட்ட பாதங்கள் உள்ளன என்றார் தாடியை தடவியபடி.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முகம் அறியாத முன்னோர்கள் உருவாக்கிய ஒரு பாறை செதுக்கும், சமீப காலங்களில் உருவான சடங்கும் ஒன்று சேரும் இந்த பூமியில் கதைகள் பல முளைத்தெழுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. அது எங்கும் நடப்பது தான். ஆனால், என்னை முற்றிலும் திகைப்பில் ஆழ்த்தியது ரத்னகிரியில் காணப்படும் இந்த வடிவங்களில் காலம் மற்றும் நிலம் கடந்த வீச்சு.
மேலோட்டமாகப் பார்க்கையில் ரத்னகிரியில் காணப்படும் பாறை செதுக்குகள் நாம் அறிந்த மனித கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து விலகி ஒரு தீவாக இருப்பதைப் போலவே தோன்றும். விலங்குகள், மனித உரு, வட்டங்கள், செவ்வகங்கள் என்று வெட்டவெளியில் பாறையில் வடிக்கப்பட்ட இவற்றின் கதை, மழை நீர் இந்த செதுக்குகளில் அப்பியிருக்கும் மண்ணை கொண்டு செல்வது போல, என்றோ கரைத்து சென்று விட்டது என்று நினைக்க வைக்கும். அதில் பெரும் பகுதி உண்மையே. இந்த வடிவங்களின் அர்த்தத்தை நாம் முழுவதுமாக அறிந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், சில செதுக்குகள், இவை பல்லாயிரம் ஆண்டுகளாக உலகளாவிய ஒரு மரபுத் தொடரின் ஒரு இணைப்போ என்று நம்மை சிந்திக்க வைப்பவை.

சாவே (Chave) பகுதியில் புதிதாக தார் இடப்பட்ட முச்சந்தியில் சாலைக்கு மிக அருகே உள்ள ஒரு செதுக்கு இப்படிப்பட்டது. வீங்கிய வயிற்றுடன், கால்களை அகல விரித்து, உட்கார்ந்திருக்கும் ஒரு வடிவம் அங்கே இருக்கிறது. தலையில்லாத அந்த உருவம் பெண் தான் என்பது யோனி பகுதியில் தோண்டப்பட்ட பள்ளம் சுட்டுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஏறக்குறைய பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாக, அதாவது Neolithic சகாப்தத்தின் தொடக்கத்திலிருந்தே இதே போன்ற பெண்ணின் வடிவத்தை உலகின் பல ஆதி மானுடர்கள் வரைந்தும், சிறு சிலைகளாக வடித்தும் இருக்கின்றனர். ஐரோப்பா, ஆசியாவின் பல பகுதிகள், ஏன் பல்லாயிரம் ஆண்டுகள் பிற மக்களோடு எந்த தொடர்பும் இல்லாது இருந்த ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் கூட பழங்குடியினர் இந்த வடிவத்தை குகையோவியமாக தீட்டியிருக்கின்றனர். வளமை, குழந்தை பிறப்பு, பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பல சமூகங்கள் இந்த தெய்வத்தை வணங்கியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பெண் தெய்வ வழிபாடு இன்றும் தென் மற்றும் மேற்கு இந்தியாவில் தொடர்கிறது; லஜ்ஜா கௌரி, ரேணுகா எல்லம்மா, அசிர்மா (அசிர் – தலையில்லாதவள்), சாகம்பரி என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த வடிவம் மக்களால் இன்றும் வழிபடப்படுகிறது.
விலங்குகளின் அதிபதி (Master of Animals)
இரண்டாம் நாள் மாலை பார்சூவிற்கு (Barsu) சென்றோம். கரடு முரடான பாதை. சூரியன் இறங்கிக் கொண்டிருக்க செந்நிற பூமி கங்குகள் போல ஒளிர்ந்தது. துரு பிடித்த இரும்பு வேலிகளுக்குள்ளே ஒன்றிரண்டு பூசப்படாதக் கட்டிடங்கள் தென்பட்டன. எல்லாம் ஆள் அரவமற்று, சிதிலமாக இருந்தன. சுவர்களில் காய்ந்த புற்கள் முள்ளம் பன்றியின் முட்கள் போல குத்திட்டு நின்றன. சில ஆண்டுகள் முன்னர் வரை இந்தப் பகுதிகளில் செம்புரைப் பாறைகளை வெட்டி எடுக்கும் தொழிலாளர்கள் இங்கே தான் குடியிருந்தனர். பல இடங்களில் பாறைகளை அடுக்கி தொட்டி போல அமைத்து அதில் மண் கொட்டி மாமரங்கள் நடப்பட்டிருந்தன. சொட்டு நீர் பாசனத்தின் கருப்பு குழாய்கள் பாம்பு போல தொட்டிகள் இடையே நீண்டு கிடந்தன. பிரபலமான ரத்னகிரி மாம்பழங்கள் இவ்வாறு தான் ‘பெரும் தொட்டிகளில்’ வளர்க்கப்படுகின்றன. வெளியூரிலிருந்து வந்து இங்கு நிலம் வாங்கி இது போன்ற சாகுபடி செய்பவர்கள் பலர். இந்த பின்புலத்தில் தான், ஒரு அமைதியான மூலையில் உள்ளது ‘விலங்குகளின் அதிபதி’.
தேவிஅசோல் போன்ற செதுக்குகளை ஒப்பிடுகையில் பார்சூவில் இருப்பவைகளில் அவ்வளவு நகாசு வேலை இல்லை. பெரியதாக இருந்தாலும் உடம்பில் சில எளிய வடிவங்களை மட்டும் தரித்த இரு புலிகள் நடுவே நின்று கொண்டிருக்கும் ஒரு மனித உரு. மனிதனின் பலகை போன்ற கைகள் இரு பக்கம் இருக்கும் புலிகளை தள்ளி விடுவதை போல நீண்டு இருந்தன.
பிற செதுக்குகளைப் போல இதுவும் ஒரு விந்தையான பாறை செதுக்கு என்று எண்ணி இதை ஒதுக்க இயலாது. ஏனென்றால் இதைப் போன்ற தோற்றம் உடைய பிம்பங்கள் இந்தப் பாறை செதுக்குகள் உருவாகி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய சில பெரும் தொல் நாகரீகங்களிலும் காணப்படுகின்றன.
சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி எகிப்து வரை இதே போன்ற உருவங்கள் பதித்த களிமண் வில்லைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. தெய்வம் அல்லது மனிதன் இரு ஆக்ரோஷமான விலங்குகளை கைகளில் பிடித்து அடக்குவது என்பது தொன்மத்தில் தோய்ந்த கதை என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. இந்தத் தொல் கதை கற்காலத்தில் மேற்கு மற்றும் தெற்கு ஆசிய நிலப்பரப்பில் வேர் விட்டிருக்கலாம் என்பது இவர்களின் அனுமானம். பர்ஸுவில் வடிக்கப்பட்ட புலி மனிதன் அந்த வேரின் ஒரு முடிச்சா?
பார்சுவில் இருந்து திரும்பும் பொழுது கதிரவன் தொடுவானில் மறைந்து கொண்டிருந்தான். நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் இருந்து கீழே, சரிவுகளைத் தாண்டி, வெண் மணலை தடவி, விலகி மீண்டும் தீண்டிக் கொண்டிருந்தன அரபிக் கடலின் அலைகள். சாலையோரம் இருந்த ஒரு கடையில் தேநீர் அருந்தினோம். சூடாக, இஞ்சியின் சுவையுடன், சர்க்கரை கொஞ்சம் கூடுதலாக இட்டு காய்ச்சியது. ஒரு பிஸ்கட் பொட்டலத்தை கண்ணாடி குடுவையிலிருந்து எடுத்து எங்களிடம் கொடுத்த கடைக்காரர் எங்களிடம் குசலம் விசாரித்தார். பாறை செதுக்குகளை கண்டு விட்டு திரும்புகிறோம் என்றோம்.
‘ஓ…கதல் ஷில்ப பார்த்து விட்டு வருகிறீர்களா’ என்றார். மராத்தியில் கற் செதுக்குகளை அவ்வாறு அழைக்கிறார்கள்.
‘ஆமாம்’ என்றோம்.
‘எப்படி இருந்தது?’ என்று என்னை பார்த்து கேட்டார்.
‘அது பெரும் மர்மம் தான்…ஏன், எதற்கு என்று எதுவும் புரியவில்லை’ என்றேன்
‘இங்கு வாழ்ந்த என் முன்னோர்கள் விட்டு சென்றது. அப்படியே மர்மமாகவே இருந்து விட்டு போகட்டுமே. அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டு, பாக்கு மென்று கறை படிந்த பல் காட்டி சிரித்தார்.
ரகு ராமன்
 |
ரகு ராமன் |
எழுத்தாளர் ரகு ராமன் அறிவியல், சூழலியல் மற்றும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர். இவரின் கட்டுரைகள், சிறுகதைகள் சொல்வனம் உள்ளிட்ட பல இதழ்களில் வெளி வந்துள்ளன. காலநிலை மாற்றங்கள் உலக வரலாற்றை எப்படி மாற்றியிருக்கின்றன என்பதை விவரிக்கும் இயற்கையின் மரணம் (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வேற்று கிரக வாசிகளைப் பற்றிய அறிவியல் தேடலை அறிமுகப்படுத்தும் ஏலியன் வேட்டை (கிழக்கு பதிப்பகம்) என்ற நூலும் வெளிவந்துள்ளன. ரகு ராமன் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கிறார், சென்னையில் வசித்து வருகிறார்.
மேலதிக வாசிப்புக்கு
- A remarkable assemblage of petroglyphs and dinosaur footprints in Northeast Brazil. L P Roiano and others, Sci Rep 14, 6528 (2024).
- Geospatial context of the Ukshi geoglyph in the Konkan zone of Maharashtra, western India, Prabhin Sukumaran and others, L'Anthropologie, Volume 129, Issue 1, 2025.
- Petroglyphs in Konkan: Historiography, Recent Discoveries and Future Endeavours, Tejas M Garge and others, Purakala, Volume 27-28, 2018.
- The Archaeological and Religious History of Lajjagauri, a Pre-Vedic Fertility Deity on the Indian Sub-continent, R Korisettar, South Asian Goddesses and the Natural Environment, 2024
- Geoglyphs, A Chapter in Encyclopedia of Global Archaeology, D. Valenzuela and P B Clarkson, Springer, New York, 2014
- Master of Animals and Animal Masters in the Iconography of the Indus Tradition, J M Kenoyer, A Chapter in The Master of Animals in Old World Iconography, Archaeolingua Foundation, Budapest, 2010
- The Nazca Lines, edited by Austin Mardon and others, Golden Meteorite Press, 2021
- The Mind in the Cave, David Lewis-Williams, Thames and Hudson, 2004