சம்ஸ்கிருதக் கவிதையியல் தொடர்பாக இதுவரை இடம்பெற்றுள்ள அத்யாயங்கள் மிகச் சுருக்கமாக அமைந்திருப்பது மட்டுமல்ல, இவை பலநிலைகளில் முழுமையற்றவாறே விளங்குகின்றன. இருந்தும் இவற்றின் வாயிலாகவே சம்ஸ்கிருதக் கவிதையியலின் பரப்பு ஓரளவேனும் தெரியவரும். வரலாற்று விழிகளில் கவிதையியல் படைப்புகளின் பேராறு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகால நெடும்பரப்பில் பற்பல மாறுதலுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. ஓரிடத்தில் குறுகியும் பிறிதொரு இடத்தில் பொங்கிப் பெருக்கெடுத்தும், ஓரிடத்தில் கிளைபிரிந்தும் மற்றொரு இடத்தில் இணைந்தும், இடையில் எங்கும் வற்றிவிடாமல் இந்தப் பேராறு பாய்ந்து வந்திருக்கிறது. ரசகங்காதர ஆசிரியர் ஜகநாத பண்டிதர் தான் கவிதையியல் துறையின் ஆற்றல் மிக்க ஆளுமைகளில் இறுதியானவர். இருந்தும் மிக அண்மைக்காலம் வரையிலும்கூட, மரபிற்கிணங்க நூல்கள் தோன்றவே செய்தன. மைசூர் பரகால மட ஸ்ரீகிருஷ்ண பிரம்ம தந்த்ர பரகால யதீந்திரர் அவர்கள் கி. பி. 1899ம் ஆண்டு நிறைவு செய்திருக்கும் ’அலங்கார மணிஹாரம்’ என்னும் பெருநூலை இங்கு நினைவுகூர வேண்டும்.[1]
ஏதோ ஒரு வகையில் கவிதையியலில் நூல் இயற்றியவர்களின் எண்ணிக்கை [உரையாசிரியர்களையும் சேர்க்க] ஆயிரத்துப் பத்தை தொட்டுவிடக்கூடும். பெயர் கூட எஞ்சாது எத்தனையோபேர் மறைந்து போயிருக்கலாம். இன்னும் ஒன்றைக் கூறியாக வேண்டும். இவையாவும் சம்ஸ்கிருதத்தில் எழுதியவர்கள் தொடர்பான செய்திகள்தான். சம்ஸ்கிருத நூல்களின் அடிப்படையில், பிராகிருத மொழியிலும் மற்ற வட்டார மொழிகளிலும் பெருகியிருக்கும் எண்ணற்ற நூல்தொகுதிகளை நாம் இங்கு பரிசீலிக்கவே இல்லை. காஷ்மீருக்குச் ‘சாரதாபீடம்’ [கலைமகள் வீற்றிருக்கும் நல்லணை] என்னும் தொல்புகழ் உண்டு. கவிதையியல் வடிவமைவுக்கு காஷ்மீர்தான் பிறந்தகம் என்றால் மிகையல்ல.
பாமகர், உத்படர், வாமனர், ஆனந்தவர்தனர், குந்தகர், அபிநவகுப்தர், ஷேமேந்திரர், மம்மடர், ருய்யகர் ஆகிய எல்லோரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்தான். இவர்களில் பலர் “ராஜானகர்” எனப்படும் விருது பெற்றவர்கள். ஆசிரியர் தண்டி, ராஜசேகரர் ஆகிய இரு தொன்மையான அறிஞர்கள் மட்டும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று உறுதியாகக் கூறமுடியும். ஆசிரியர் தண்டி தென்னகத்தார். இராஜசேகரர் மகாராஷ்டிரப் பகுதியைச் சேர்ந்தவர். நாம் இதுவரை அறிந்துகொண்ட தனித்தன்மைமிக்க சிந்தனையாளர்கள் வரிசையில் ஓரிருவர் தவிர, எல்லோருமே கி. பி. பதினோராம் நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்பே வாழ்ந்து மறைந்தவர்கள் என்பதும் கவனிக்கவேண்டிய மற்றொரு செய்தி. மம்மடரின் ‘காவ்யப்ரகாசம்’ படைப்பாற்றல் காலக்கட்டத்தை நிறைவுசெய்து மெருகேற்றும் காலகட்டத்தைக் கவிதையியல் மரபில் துவங்கிவைக்கிறது. ஓரிரு விதிவிலக்குகள் தவிர, பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியுள்ள நூல்களெல்லாம் அலுப்பூட்டும் போலச்செய்தல்கள் மட்டுமே. கவிதையியலை வரையறுப்பவர்களின் படைப்பாற்றலில் தகதகத்துக்கொண்டிருந்த கனல் எரிந்தணைந்து சாம்பல் மட்டுமே எஞ்சுகிறது. பரதரும், த்வனிகாரர் என்று அறியப்படும் குறிப்புக் கொள்கை ஆசிரியரும் முன்வைத்த கொள்கைகளையும், மேற்கொண்ட விவாதங்களையும் அகம் புக்கு நோக்கி சாரத்தை உள்வாங்காமல், பின்வந்தவர்கள் எத்தனையோ இடங்களில் சக்கையான வெற்றுச்சொற்களில் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். இது மட்டுமல்ல; பல இடங்களில் பொருளற்ற பாகுபாடுகளை மிகையாக வகுத்து கவிதையியலையே ஒரு சுமையாகச் செய்துவிடுகிறார்கள். உத்படரை அணிக்கொள்கையின் “கொடித்தூண்’ என்று போற்றுகிறோம். இவர் அங்கீகரித்துள்ள அணிகள் நாற்பத்தொன்றுதான். ஆனால், அணிக்கு முதன்மையே வழங்காத குறிப்புக்கொள்கையில் அணிகளின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வந்து அப்பய்ய தீட்சிதர் எழுதியுள்ள குவலயானந்தத்தில் அது நூற்று இருபத்து நான்கைத் தொட்டுவிடுகிறது. த்வனிப் பாகுபாடு தொடர்பான வரையறையைப் பொருத்தவரை, அது இன்னும் ஆச்சரியம். ‘பிரதாப ருத்ரீய’ ஆசிரியர் வித்யாநாதர் ஐயாயிரத்து முந்நூற்று நான்கு குறிப்பு வகைகள் இருப்பதாகக் கணக்கிட்டுச் சுட்டிக்காட்டுகிறார். நமது நல்லூழ் காரணமாக இவை எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டுகளை வகுக்கும் முயற்சியில் வித்யாநாதர் ஈடுபடவில்லை.[2]
கவிதையியல் துறையில் வேறுபட்ட கொள்கைத்தரப்புகளுக்கு குறைவில்லை என்பதைக் கவனித்துவருகிறோம். இத்தகைய வேறுபட்ட தரப்புகளைப் பாகுபடுத்தும் பணியும் முன்பே துவங்கிவிட்டது. ‘அலங்காரஸர்வஸ்வம்’ நூலுக்கு உரை வகுக்கும் முயற்சியின் பகுதியாக ‘சமுத்திரபந்தர்’ முன்வைக்கும் வகைப்பாடும் புகழ்பெற்ற ஒன்று.
“இங்கு கவிதை என்பது முதன்மையாக இருக்கும் சொல்லும் பொருளும் மட்டும்தான். இயல்பு மூலமாக, செயல்பாடு வாயிலாக, அல்லது குறிப்புணர்த்தலின் வழியாகக் கவிதைகள் சிறப்படைகின்றன. இவ்வாறு மூன்று தரப்புகள். முதல் தரப்பில் [இயல்பிற்கு முதன்மை வழங்கும் தரப்பு] அணி இயல்பு சார்ந்தவை, குண இயல்பு சார்ந்து அமைபவை என இரு உட்பிரிவுகள். இரண்டாவது தரப்பாக உள்ள செயல்பாட்டிற்கு முதன்மை வழங்கும் தரப்பில் தனித்தன்மையான எடுத்துரைப்பு மூலமாக சிறப்பு பெறுபவை, அனுபவநிலையாக்கம் வாயிலாக உயர்வு பெறுபவை என வேறு இரு உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவையே ஐந்து தரப்புகள். இவற்றில் முதலாவதாக உள்ள அணித்தரப்பை உத்படர் முதலியவர்களும், இரண்டாவதாக உள்ள குணத்தரப்பை வாமனரும் அங்கீகரித்திருக்கிறார்கள். அவ்வாறே, தனித்தன்மையான எடுத்துரைப்பை வலியுறுத்தும் மூன்றாவது கொள்கைத்தரப்பை ‘வக்ரோக்திஜீவித’ ஆசிரியர் குந்தகரும், அனுபவநிலையாக்கத்தை வற்புறுத்தும் நான்காவது தரப்பை பட்டநாயகரும், குறிப்புணர்த்தப்படுவதை விரும்பும் ஐந்தாம் தரப்பை ஆனந்தவர்தனரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
“இஹ விஸிஷ்டவ் ஸப்தார்தவ் காவ்யம் தயோஸ்ச வைஸிஷித்யம்
தர்மமுகேனா, வ்யாபார்முகேனா, வ்யங்க்யமுகேனா வா இதி த்ரயஹ பக்ஷஹா ஆத்யேபி அலங்காரதோ குணதோ வா இதி த்வையிதம்.த்விதியேபி பணிதிவைச்சித்ரேயேண போகக்ரித்வேண வா இதி த்வைதம். இதி பஞ்சசு பக்ஷேஷு ஆத்ய உத்படாதிபிரங்கிக்ருதஹ, த்விதியோ வாமனேண, த்ருதியோ வக்ரோக்தி ஜீவிதகாரேண, சதுர்தோ பட்டநாயகேண, பஞ்சம ஆனந்தவர்தனேணா” ……. (p.3-4).
சமுத்ரபந்தர் கருத்துப்படி அணி, குணம், செம்புலப்பாடு [வக்ரோக்தி], அனுபவநிலையாக்கம் [போகிகரணம்], குறிப்பு [வ்யங்க்யம்] ஆகியவை கருத்து மையங்கள். இவற்றுடன் வ்யக்திவிவேக ஆசிரியருக்கு ஏற்புடைய ‘கவிதையை உய்த்துணர்தல்’ [அனுமானம்] என்பதையும் கூறி அது ஆராய்ச்சிக்கு உரியதல்ல; எனவே பரிசீலிக்க வேண்டியதில்லை என்று வலியுறுத்திக் கூறிவிடுகிறார் சமுத்ரபந்தர். இந்த ஐந்து கொள்கைகளில் அணி, குணம், குறிப்பு ஆகியவற்றில் ஏதோ ஒரு இயல்பிற்கு முதன்மை வழங்கும் தரப்புகளை அணிக்கொள்கை, ரீதிக்கொள்கை, குறிப்புக்கொள்கை என்னும் பகுப்படையாளங்கள் வாயிலாக நாம் கவிதையியலில் முறையே அறிந்து வந்துள்ளோம்.[3]
அணி, ரீதி, குறிப்பு ஆகிய கொள்கைகளின் பரப்பு, சிறப்பு, ஒன்று மற்றொன்றை மறுத்து தோன்றியிருக்கும் பாங்கு எல்லாவற்றையும் கருத்தில்கொள்ளும் நிலையில் உண்மையில் அவை கொள்கை என்னும் பகுப்படையாளத்திற்குத் தகுதியுடையவைதான். இது மட்டுமல்ல; அணி, ரீதி, குறிப்பு ஆகியவற்றின் முக்கிய இயல்புகள் பற்றியும் நாம் அறிவோம். இனி எஞ்சுபவை செயல்பாட்டிற்கு முதன்மை வழங்குபவையாகச் சமுத்ரபந்தர் கூறும் குந்தகர் மற்றும் பட்டநாயகர் தரப்புகள்தான். செயல்பாடு [வ்யாபாரம்] என்றால் செயலாற்றும் முறை. கவிதையிலிருக்கும் முக்கியமான சொல்லிலும் பொருளிலும் ஒரு தனித்தன்மை மிளிர்கிறது என்பதே குந்தகர் கொள்கை ஆகும். இத்தகைய தனித்தன்மைக்கு அல்லது செம்புலப்பாட்டுத்தன்மைக்குக் [வக்ரோக்தி] கவிஞரின் உயர்வான படைப்புத்திறன்தான் காரணம். உயர்வான கவிதைச்செயல்பாடு என்பது கவிஞரின் படைப்புத்திறன் அன்றி வேறல்ல. படைப்பாற்றல் காரணமாக வடிவம் கொண்டு கவிதை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதில்தான் குந்தகர் நோக்கு முழுவதும் மையம் கொள்கிறது. இந்தியக் கவிதையியலிலேயே இது ஒரு புதுமையான பாதை. தனித்தன்மை இல்லாமல் அணி அமையாது என பாமகர் முன்பே கூறிவிட்டார். அவரைப் பின்பற்றி செம்மையாக உணர்த்துதல் [வக்ரோக்தி] என்பதன் பரப்பை குந்தகர் விரிவுபடுத்தியுள்ளார். இவ்வாறு பாமகர் கருத்தின் அடிப்படையில் எழுந்துள்ள காரணத்தினால் வக்ரோக்திக் கொள்கையையும் அணிக்கொள்கை பகுதியாகவே உள்ளடக்கிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். இவ்வாறு செய்வதென்பது அநீதி. பாமகர் நூலிலிருந்து குந்தகருக்குக் கிடைத்திருப்பது ஓர் ஆலோசனை மட்டும்தான். அணிகள் மட்டுமின்றி எழுத்துகளின் தனித்தன்மை முதல் முழுமையான நூல்வரை எல்லாவற்றிலும் செம்புலப்பாட்டுத்தன்மையைப் பொருத்திக்காட்டியிருப்பது நாம் பொருட்படுத்தி நோக்கவேண்டிய பணியே ஆகும்.
குந்தகரைப் பின்பற்றி யாருமே நூல் இயற்றவில்லை என்றபோதும், அவருடைய செம்புலப்பாட்டுக் கொள்கையைத் தனித்ததொரு கொள்கையாகச் சுட்டுவதே பொருத்தமானது. கவிதையை ஓர் எல்லையிலிருந்து குந்தகர் அணுகியிருக்க, பட்டநாயகர் மற்றோர் எல்லையிலிருந்து அணுகியிருக்கிறார். குந்தகருக்கு கவிதை என்பது படைப்புத்திறனின் செயல்களம். பட்டநாயகரைப் பொருத்தவரை கவிதை என்பது இணைமனம் கொண்ட ஒருவருக்கு சுவை அனுபவமாகும் நிகழ்வின் களம். கவிதையின் சொல்,பொருள் இவற்றால் சுவையனுபவம் எவ்வாறு வாசகருக்கு ஏற்படுகிறது என்று பட்டநாயகர் ஆராய்ந்தார். பட்டநாயகர் முன்வைக்கும் வாதத்தின் சாரம் முழுவதையும் இவ்வாறு தொகுத்துவிடலாம்.
“சொல் முதன்மையின் அடிப்படையில் சாத்திரம் [வேதம் உள்ளிட்ட சிலவகை நூல்கள்] என்னும் பகுப்பை உருவாக்கினார்கள். பொருளே முதன்மையானது என்றால் அதனை ஆக்யானம் [புராணம் முதலியவை] என்று குறிக்கிறார்கள். இரண்டும் [சொல் மற்றும் பொருள்] இணையும் செயல்பாடுதான் இன்றியமையாதது என்னும் நிலையில் அதுவே கவிதை மொழியாகிறது.”
“சப்த ப்ரதான்ய மாத்ருத்ய தத்ர சாஸ்த்ரம் ப்ரதக்விதுஹு
அர்த்தே தத்வேன யுக்தே து வதந்த்யாக்யான மேதயோஹோ
த்வயோர் குணத்வே வ்யாபார ப்ரதான்யே காவ்ய கீர் பவத்”
பட்டநாயகர் வாக்கியத்தை அபிநவகுப்தர் உள்ளிட்ட பல அணியியலாளர்கள் எடுத்தாள்கிறார்கள்.[4]
சாத்திரம், ஆக்யானம் அல்ல கவிதை தொடர்பான செய்திகளே நமக்கு இன்றியமையாதவை. [5] சொல்லும்பொருளும் கூட கவிதையில் முக்கியமல்ல. முதலில் சொல்லிலிருந்து நேர்ப்பொருள் தோன்றுகிறது. உணர்வுநிலையாக்கம் [பாவகத்வம்], அல்லது உணர்வு [பாவனா] மற்றும் அனுபவநிலையாக்கம் [போகிகரணம்] எனப்படும் வேறு இரு செயல்பாடுகளும் நேர்ப்பொருள் வெளிப்பாட்டைத் தொடர்ந்து நடைபெறுகின்றன. பிறகுதான் வாசகருக்குச் சுவையனுபவம் தோன்றுகிறது. இந்த நிகழ்வுகளையே பட்டநாயகர் செயல்பாடு [வ்யாபாரம்] என்னும் கலைச்சொல் வாயிலாகக் குறித்துள்ளார். பட்டநாயகரைப் பொருத்தவரை கவிதையின் முழுமையான சாரம் என்றால் சுவை மட்டும்தான். எனினும் மறைமுகமாகச் சுவை உணர்த்தும் முறையாகிய குறிப்புப் புலப்பாடு என ஒன்று தனியே இருப்பதாக அவர் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாகத் தான் பட்டநாயகர் கொள்கையும் ஒரு தனித்த கவிதைக் கொள்கை என்பதாக ஆயிற்று.
பாரதீய நாட்டியசாத்திரத்தில் சுவை முதன்மைப் பெற்றிருப்பது உண்மை. ஆனால் சுவையின் முதன்மைத்தன்மையை பொதுவான கவிதை இயல்பாக ஆனந்தவர்தனர் காலம் வரை யாருமே பொருத்திக்காட்டவில்லை. லொல்லடர், சங்குகர் முதலியவர்கள் சுவைத் தோற்றம் தொடர்பாக ஆராயும்போது இயல்பான மொழிவெளிப்பாடுகளாகிய கவிதையை தவிர்த்து விட்டு நடிப்பிற்குரிய நாடகத்தையே கவனத்தில் வைத்துக்கொண்டிருந்தார்கள்;
குறிப்புக்கொள்கையை நிராகரிக்கும் நிலையிலும் கவிதையின் உயிர் சுவைதான் என்பதைப் பட்டநாயகர் ஏற்றுக்கொள்கிறார். இதுமட்டுமல்ல; சுவை எவ்வாறு கவிதையுணர்வாக சொல் மற்றும் பொருள் மூலம் வெளிப்படுகிறது என்பதையும் இவரே முதலில் விளக்கியிருக்கவேண்டும். பட்டநாயகர் முன்வைத்துள்ள அனுபவநிலையாக்கக் [போகிகரணம்] கொள்கையை அபிநவகுப்தர் நிராகரிக்கிறார். இருந்தும் நாடக இலக்கணத்தைப் புலப்படுத்தும் தசரூபகம், பாவப்ரகாசனம் முதலிய முதன்மையான நூல்களில் மரபின் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் அனுபவநிலையாக்கக் கொள்கை இருந்துவந்தது. இத்தகைய காரணங்களால்தான் பட்டநாயகருடையதும் ஒரு தனிப்பாதை என்று கூறவேண்டியுள்ளது.
அணி, ரீதி, குறிப்பு போலவே சுவைக்கொள்கை என ஒன்று இருப்பதாகச் சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனை ஏற்றுக்கொண்டால் யார்யாரை எல்லாம் இதில் உட்படுத்தலாம், பரதரையும் அவருக்கு உரை வகுத்தவர்களையும் சுவைக்கொள்கையாளர்கள் வரிசையில் சேர்த்தே ஆகவேண்டும் என்று கூறலாம். அவ்வாறெனில் உரையாசிரியர்களின் மகுடமணி அபிநவகுப்தர்; அபிநவகுப்தருக்கு எந்த வரிசையில் இடம், சுவைக்கொள்கையிலா, அல்லது குறிப்புக்கொள்கையிலா? கவிதையை உய்த்துணர வற்புறுத்தும் ஐயுறவுக் கொள்கையாளர் என்றபோதும் ‘சுவையே கவிதையின் உயிர்’ என உரத்துமொழிந்த மகிமபட்டரும் சுவைக்கொள்கையாளர்களின் வரிசையில் இடம்பெறுவாரா என்ன? அவ்வாறெனில் அரசர் போஜர்?
உண்மையில் சம்ஸ்கிருத கவிதையியலிலும் நாடகவியலிலும் போற்றப்படும் சுவை ஒரு கொள்கை மட்டுமல்ல. அது எல்லாக் கொள்கைகளின் இணைவுமையமும் ஆகும். ஒருவகையில் நம் கவிதையியலின் கதையைச் ‘சுவையை நிறுவும் கதை’ என்றே கூறிவிடலாம். சுவையின் படிப்படியான வளர்ச்சிநிலைகளை நாம் இதுவரை அமைந்துள்ள இயல்கள் நெடுகிலும் கவனித்து வந்திருக்கிறோம். கவிதையை ஓர் ஆலயத்துடன் ஒப்பிட்டால் அணிக்கொள்கையாளர்கள் அதன் புறமதிலை வலம் வருவதிலேயே காலம் கழித்தார்கள். புறமதிலில் செதுக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்களுள் ஒன்றே சுவை என்று அவர்கள் கருதினார்கள். சுவையெனும் இந்த சிற்பம் சிதைந்தாலும், உடைந்து வீழ்ந்தாலும் ஆலயத்திற்கு எந்தக் கேடும் ஏற்பட்டுவிட்டதாக அணிக்கொள்கையாளர்கள் கருதவில்லை. புறமதிலைச் சார்ந்திருக்கும் சுவையெனும் அணிச்சிற்பம் ரீதிக்கொள்கையில் ஆலயத்தின் அகத்துள் வந்து விட்டது. கவிதையின் பொருத்தமானப் பகுதியாகவும் ஆயிற்று. இருந்தபோதும் சுவை இன்னும் அதற்குரிய முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கவில்லை. ரீதிக்கொள்கையில் சுவையின் இடத்தை ஆலயத்தின் கருவறை வாயிலாளர்களுடன் ஒப்பிடலாம்தான். குறிப்புக்கொள்கை ஆசிரியர் (த்வனிகாரர்) வருகைபுரிந்து, அதன் மகத்துவம் அறிந்து சுவையைக் கருவறை அகத்துள்ள பீடத்தில் நிறுவ ‘சுவையே ஆலயத்தின் முதன்மைத் தெய்வம்’ என்பது தெரியவந்தது. இருந்தபோதும் இந்தத் தெய்வத்திருமேனிக்கு உயிராற்றல் [பிராண பிரதிஷ்டாபனை] மையம் கொள்ளுமாறு செய்திருப்பவர் அபிநவகுப்தர் என்றால் அது மிகையல்ல! பட்டநாயகர், மகிமபட்டர் எல்லோரும் சுவை எனும் தெய்வத்தின் ஆராதகர்களே. வழிபாட்டுமுறையில்தான் இவர்களுக்கும் குறிப்புக் கொள்கையாளர்களுக்கும் வேறுபாடு. இந்தப் பின்னணியில் கவிதை வரையறையிலேயே சுவையை உட்படுத்தி, வலியுறுத்தி கூறும் பணி விஸ்வநாதருக்கு எஞ்சியிருந்தது. இத்தனைக்குப் பிறகும் சுவைமுதன்மையை மறுத்து வந்தவர் என்றால் ஜகநாதர் ஒருவர்தான். இவரும்கூட சுவை மறைமுகமாக வெளிப்படுவதன் உயர்வான எழிலை முழுமனத்துடன் ஏற்றுக்கொள்ளவே செய்கிறார். சுவை என்பது அனுபவத்தால் சிறப்படைகிறது. உலகியல் வார்த்தைகளில் நாம் கவிதை என்று குறிப்பிடும் சொல்லும் பொருளும் ஒரு துணைக்காரணம் மட்டும்தான். அவற்றால் இணையுள்ளம் கொண்டவருக்குச் சுவையனுபவம் ஏற்பட்டால்தான் கவிதை என்பது கவிதையாகிறது. சுவையின் இத்தகைய அனுபவம் பற்றி மட்டுமே இந்தியக் கவிதையியலின் அக்கறை எல்லாம் இருக்கிறது. சமுதாயத்தில் சுவையனுபவத்தை விளைவிக்கும் அடிப்படையான பொருள் எது? இதன் இயல்பு எத்தகையது? இந்த அடிப்படைப்பொருளின் பகுதிகள் எவ்வாறு சிறப்புடன் விளங்கவேண்டும்? ஒரு மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்டு சுவையனுபவம் எவ்வாறு ஏற்படுகிறது? இவை தொடர்பான எல்லாவற்றையும் விவரிப்பதே நம் கவிதையியலின் முதன்மை உள்ளடக்கம் ஆகும். இந்த அனுபவம் கவிஞரின் மனத்தில் முதலில் தோற்றம்கொண்டு, படைப்பாற்றலில் வடிவம்கொண்டு, சொல்லாகவும் பொருளாகவும் கவிதையில் வெளித்துலங்க வேண்டும் என்பதை நம் கவிதையியலாளர்கள் அறிந்தே இருந்தார்கள். அதேசமயம் எவ்வாறு கவிஞருக்கு அனுபவம் ஏற்படுகிறது ? கவிதைவடிவை அது எவ்வாறு அடைகிறது? போன்ற விவரிப்புகளில் அவர்கள் அதிகமாகக் கவனம் செலுத்தவில்லை. கவிஞரின் உள்ளத்தில் ஓர் அனுபவம் தோன்றி கவிதைப் படைப்பில் வடிவம்கொள்ளும் நிகழ்வு முதலிய யாவும் மேலைக் கவிதையியலின் முதன்மைச் செய்திகள். இத்தகைய வேறுபட்ட பொருண்மைகளில் கீழைக் கவிதையியலும் மேலைக் கவிதையியலும் ஒன்றையொன்று ஈடுசெய்கின்றன.
தூய தத்துவவாதிகளுக்கு கவிதையிலும் மற்ற கலைகளிலும் ரசனையும் மதிப்பும் ஏற்படாதிருக்கலாம். தர்க்க வாதிகள், மீமாம்சகர்கள் போன்றவர்களை சுவையுணர்வே இல்லாதவர்கள் என்று அணியியலாளர்கள் கேலிசெய்தும் இருக்கலாம். ஆனால், மற்றத் துறைகளுடனும் தத்துவம் முதலியவற்றுடனும் கவிதையியலுக்கு நம் நாட்டில் என்றுமே தொடர்பு இருந்ததில்லை என்று கருதக் கூடாது. இந்திய இலக்கண மரபில் கவிதையியல் ஓர் இளங்குழந்தை என்று தோற்றுவாய்ப் பகுதியாகிய முதல் இயலிலேயே கவனித்திருக்கிறோம். இளம் குழந்தையாக இருக்கும் காரணத்தினாலேயே கவிதையியல் மற்ற மூத்தத் துறைகளிடமிருந்து வெகுவாகச் சாரத்தைப் பருகி நன்கு வலிமையடைந்துள்ளது. நம் கவிதையியல் ஆசிரியர்களில் பலர் இலக்கணம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம் முதலிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அபிநவகுப்தர் போன்றவர்கள் இலக்கணம், இலக்கியம் இரண்டின் பகுப்பாய்விலும் ஒரேவண்ணம் எளிதின் முன் சென்ற இருகை வில்லவர்கள்! எனவேதான், கவிதைக்கொள்கை தொடர்பான விவரிப்பில் இயல்பாகவே அவர்களின் துறையறிவு வழிகாட்டுகிறது. கவிதையின் உடற்பரப்பு சொற்களால் அமைகிறது. இவ்வாறிருக்கும் நிலையில் சொல்தூய்மையே கவிஞரின் முதல்கடமை என்றாகிறது. எனவேதான் பாமகர், வாமனர் முதலியவர்கள் இயற்றியுள்ள கவிதையியல் நூல்களில் இலக்கணம் தொடர்பான செய்திகளைக் கற்பிக்க தலா ஓர் இயலே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, குறிப்புக்கொள்கையாளர்களுக்கு இலக்கணம் மீது அதிகமான மதிப்புண்டு. இலக்கணவாதிகள் முன்வைத்த வெடிப்புக்கொள்கையே [ஸ்போட] குறிப்புக்கொள்கைக்கு ஆதாரம் என்று அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் குறிப்புணர்த்தும் செயல்பாடு ஒன்று சொல்லுக்கு அமைவதை முற்கால இலக்கணவாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை; அவ்வாறே நியாயவாதிகள் உள்ளிட்ட தத்துவவாதிகளும் சொல்லின் குறிப்புணர்த்தும் இயல்பை ஏற்றுக்கொள்வதில்லை.[6]
அணியியலாளர்கள் பலரும் குறிப்புக்கொள்கையைத் தொடக்க காலகட்டத்தில் ஏற்கவில்லை என்பதை நாம் முன்பே அறிவோம். இவ்வாறிருக்கும் நிலையில் மாற்றுத்தரப்பாளர்களின் ஆட்சேபனைகள் எல்லாவற்றையும் மறுத்து மாற்றுத் தரப்பாளர்களுக்கு அவரவர் வழியிலேயே பதிலளித்து குறிப்புக்கொள்கையைத் த்வன்யாலோக ஆசிரியரும் அவருடையத் தரப்பைச் சார்ந்தவர்களும் நிறுவியிருக்கிறார்கள். வியப்பூட்டும் அறிவுநுட்பத்தையும் இலக்கணப் புலமையையும் அவர்கள் இந்தப் பணியில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சொற்களின் இயங்குமுறைகள் தொடர்பான குறிப்புக்கொள்கையாளர்களின் அணிநூல் பகுதிகள் கவிதையியல் துறையின் விவாதமேடை போலவே விளங்குகின்றன.[7]
இவ்வாறு கவிதையியலுக்கு பிறதுறைகளுடன் இருந்து வந்த உறவும் முரண்பாடும் தெளிவாகவே தெரியவருகின்றன. இது தவிர, மற்ற இந்தியத் தத்துவப் பிரிவுகள் கவிதையியலாளர்களின் பார்வைமுறையின் அடிப்படையைக்கூட மாற்றியமைத்திருக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றில் மிக முதன்மையானதாக சுவை தோன்றுவது குறித்த விவாத நிகழ்வைக் கூறலாம். அனுபவநிலையாக்கத்தை வலியுறுத்தும் பட்டநாயகரின் புக்தி[i] வாதத்தை மறுத்து அபிநவகுப்தர் வெளிப்பாடு [அபிப்யக்தி] வாதத்தை நிறுவினார். பட்டநாயகர், அபிநவகுப்தர் ஆகிய இருவர் கொள்கைகளும் முறையே சாங்கியம் மற்றும் வேதாந்தத் தத்துவக்கொள்கைகளின் செல்வாக்கால் விளைந்தவை என்று பேராசிரியர் எம். ஹிரியண்ணா அவர்கள் முடிவுசெய்திருக்கிறார். தத்துவக் கொள்கைகளின் அடிப்படையில் அழகியல் கொள்கையில் வேறுபாடு எவ்வாறு ஏற்படுகிறது என்று எம். ஹிரியண்ணா அவர்கள் மேலும் எடுத்துக்கூறியுள்ளார்.[8]
கவிஞரின் படைப்புத்திறன் சார்ந்த இயல்பு, படைப்புத்திறன் கவிஞரிடம் செயல்படும் பாங்கு இவை தொடர்பாக நடைபெற்றுள்ள ஆராய்ச்சி என்பது தத்துவச் செல்வாக்கு தீவிரமாகக் கவிதையியலில் தெரியவரக்கூடிய மற்றொரு இடம் ஆகும். உலகியல் சார்ந்த அன்றாடத் தர்க்க ஒழுங்கிற்கு உட்படாமல் தெய்வீக ஒளிபோன்று சட்டெனத் துலங்கித்தோன்றும் யோகக்காட்சி உள்ளிட்ட பலவகை அறிவுநிலைகள் இருப்பதாக தத்துவவாதிகள் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த அறிவுநிலைகளின் இயல்பையும் பிறவற்றையும் அவர்கள் தங்களின் சித்தாந்தங்களுக்கிணங்க பல்வேறு வகைகளில் விளக்கியிருக்கிறார்கள். [9]
கவிதையியலாளர்களின் படைப்புத்திறன் தொடர்பான கருத்துகளில் தத்துவங்களின் வண்ணங்கள் மிகச் சிறப்பாகவே ஒளிவிடுகின்றன. சான்று அபிநவகுப்தர்; இவர் காஷ்மீரச் சைவ ஆகமங்களை விவரிக்கும் ஒரு சைவ ஆச்சாரியார். மகிமபட்டர் நியாயவாதி என்பதற்கு அவருடைய கவிதை உய்த்துணர்வுக் கொள்கையே சான்று. ஹேமசந்திரர் ஒரு சமணசூரி. இந்த அறிஞர்களின் படைப்புத்திறன் தொடர்பான கொள்கைகள் இவர்கள் மூவரின் தத்துவங்களுக்கு உகந்தவாறே அமைந்துள்ளன.
இவ்வாறு, ஒருவர் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு உகந்தவாறு அவருக்கு ஏற்புடைய கவிதைக்கொள்கை வடிவம்கொள்கிறது. இது இயல்பான ஒன்று மட்டுமல்ல, இதுவே நியாயமானதும் ஆகும். காரணம், கவிதையின் மூலவேர் வாழ்க்கை என்றால் கவிதையியலின் மூலவேர் வாழ்வியல்!
[ஆசிரியர் தீ. ந. ஶ்ரீ கண்டய்யா கன்னடத்தில் இயற்றியுள்ள 'பாரதீய காவ்ய மீமாம்சே' என்னும் நூலின் முதல் பகுதியாகிய 'இலக்கண வளர்ச்சி ' (சாஸ்த்ரத பெளவனிகே) என்னும் பகுதி நிறைவு.]
அடிக்குறிப்புகள்
மொழிபெயர்ப்பாளர் அடிக்குறிப்பு:
[i] பெரும்பாலும் ஆழமானதாக எளிதில் புலப்படாத தன்மையில் திகழும் பேரின்பத்தை அனுபவிக்கும் ஓர் நிலையை புக்தி என்னும் சொல் குறிக்கிறது. ஒரு கலைப்படைப்பில் இடம்பெற்றிருக்கும் உணர்விற்கு அதனை துய்ப்பவர்கள் மறுவினை ஆற்றுவதில்லை. மாறாக மிகப்பெரி ஓர் விழிப்புணர்வு நிலையை இந்தக் கலைப்படைப்பின் துணையால் இணைமனம் கொண்டவர்கள் அடைகிறார்கள். இவ்வாறு பட்டநாயகர் கருதுகிறார். இதுவே புக்தி வாதம் ஆகும்
நூல் அடிக்குறிப்புகள்:
[1] அலங்கார மணிஹாரம் நூலில் இருக்கும் மூலக்காரிகைகளின் எண்ணிக்கை 2428. இவற்றை விளக்கி உரைநடை வடிவிலுள்ள விருத்தியுரையும், ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றி நூலாசிரியரால் இயற்றப்பட்டுள்ள எடுத்துக்காட்டுச் செய்யுள்களும் உள்ளன. முழு நூலும் நான்கு தொகுதிகளாக மைசூர் ஓரியண்டல் நூலக சம்ஸ்கிருத நூல்வரிசையில் இடம்பெற்றுள்ளது.
[2] வெவ்வேறு குறிப்புகளின் இணைவால் பிறக்கும் வேறுபாடுகளையும் சேர்க்க குறிப்புகளின் எண்ணிக்கை 10455 ஆக இருக்கக்கூடும் என்று ப்ரதாப ருத்ரீய ஆசிரியருக்கும் முன்பு மம்மடர் சுட்டியிருந்தார். (காவ்யப்ரகாசம்,4.21)
[3] குணம், ரீதி இவற்றிடையே வேறுபாடு வகுத்து குணம்சார்ந்த கருத்துத் தரப்பே ஆசிரியர் தண்டியுடையது என்றும், வாமனர் முன்வைப்பது ரீதித் தரப்பு என்றும் சிலர் கூறுவதுண்டு. அவ்வாறே, க்ஷேமேந்திரர் பொருத்தப்பாட்டை [ஔசித்யா] வற்புறுத்திக்கூறும் காரணத்தினால் அவருடையதையும் ஒரு தனிக்கொள்கையாகக் கருதுகிறார்கள். இவ்வாறே நுட்பமான வேறுபாடுகள் எல்லாவற்றையும் பொருட்படுத்திக் கொண்டே செல்ல இலக்கண ஆசிரியர் ஒவ்வொருவருடையதும் ஒரு தனித்தக் கொள்கை என்று கூறவேண்டி வரலாம்.
[4] அபிநவபாரதி,II,298. அபிநவகுப்தர் தம் அபிநவபாரதியில் செயல்பாடு [வ்யாபாரம்] என்பதை நேரிடைப் பொருளை மட்டுமே உணர்த்தும் செயல்பாடு [அபிதா வ்யாபாரம்] என்று பொருள் கொள்கிறார். பட்டநாயகருக்கு இது ஏற்புடையதென்றால் நேர்ப்பொருளை உணர்த்தக்கூடிய செயல்பாட்டிலேயே சொல்லின் சூழல்சார்ந்த பொருள்கோடலும் உருவாகிவிடுகிறது. மேலும், இதிலேயே உணர்வுநிலையாக்கம் [பாவனா], அனுபவநிலையாக்கம் [போகிகரணம்] வரை எல்லாச்செயல்பாடுகளும் அடங்கியிருப்பதாகக் கூறவேண்டும். உணர்வுநிலையாக்கம் [பாவனா] அனுபவநிலையாக்கம் [போகிகரணம்] இவற்றின் இயல்புகளை 21ம் அத்யாயத்தில் விளக்கவிருக்கிறோம்.
[5] சொல்லுக்கு முதன்மை அல்லது பொருளுக்கு முதன்மை என்றால் என்ன? இவை பற்றிய ஆராய்ச்சி அடுத்துள்ள எட்டாம் இயலில் இடம்பெற்றுள்ளது.
[6] “There is no evidence to believe that viyanjana was ever recognised by ancient grammarians. Among the grammarians, Nagesa has definitely supported Vyanjana, and he lays much emphasis on the desirability of acknowledging it from the standpoint of grammar…” ( P.C. Chakravarthi : The Philosophy of Sanskrit Grammar, P.395)
குறிப்புக்கொள்கை புகழ்ப்பெறத் தொடங்கியபோது இளைஞராக இருந்தவர் பட்டஜெயந்தர். தம் நியாயமஞ்சரியில் த்வன்யாலோக ஆசிரியரை ‘தனித்துச் செல்லும் அறிஞர்’ (பண்டிதமன்யா) என்று இவர் கேலிசெய்கிறார். குறிப்புக்கொள்கை பற்றித் தம் எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஓரிரு வாக்கியங்களுக்குப் பிறகு உடனே தம் மனத்தை மாற்றிக்கொண்டவராக
“அதவா நேத்ரேஸி சர்ச்சா கவிபிஹி சஹ ஸோபதெ
வித்வாம்ஸோபி விமுஹ்யந்தி வாக்யார்த கஹனெ த்வனி” (நியாயமஞ்சரி,p.45.)
என்று நிறைவுசெய்கிறார் பட்ட ஜெயந்தர்.
[7] M.Hiriyanna: ‘Indian Aesthetics – in Art Experience’. வேதாந்தத்தை விடவும் வெளிப்பாட்டுக் கொள்கையை [ஆபாசவாதம்] அபிநவகுப்தர் எழுதியிருக்கிறார் என்று கூறுவதே இன்னும் பொருத்தமாக இருக்கும். பார்க்க K.C. Pandey: Comparative Aesthetics, Vol I, Chap.ii.
[8] Gopinath Kaviraj: “The doctrine of Pratibha in Indian Philosophy” (ABORI. V)
[9] வரவிருக்கும் பத்தாம் இயலில் இந்த அம்சம் சுருக்கமாக கூறப்படும்.
![]() |
கு.பத்மநாபன் |