Friday, 8 August 2025

சமூகங்கள் கூறும் இரண்டாம் வரலாறு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

1

சோழர்கள் வரலாறு எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியே தமிழக வரலாற்று எழுத்தின் முன்னோடி. அவரே தமிழ் வரலாற்று ஆய்வுக்கான அடிப்படையை அமைத்து தந்தவர். 

நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ நூலின் முதல் பதிப்பு வெளிவந்து ஆறு தலைமுறைகளைக் கடந்த பின்பும் இன்றளவும் சோழப் பேரரசு பற்றி முதன்மையான நூலாகக் கருதப்படுவதற்கு நீலகண்ட சாஸ்திரியின் தெளிந்த ஆய்வு முறைமையே காரணம் என ஆய்வாளர் எ. சுப்பராயலு தன் நூலில் (South India Under the Cholas) குறிப்பிடுகிறார். சோழர் கால கல்வெட்டுகள் பற்றிய நீலகண்ட சாஸ்திரியின் புலமை அவர் எழுதிய வரலாற்றையே மறுக்கமுடியாததாகவும், இன்றளவும் அடிப்படை ஆதாரமாகவும் கொண்டு அதன் மேல் அடுத்தக்கட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன என்கிறார் சுப்பராயலு.

நீலகண்ட சாஸ்திரிக்கு அடுத்த தலைமுறை வரலாற்றாசிரியர்கள் அவரை கடந்துச் சென்ற புள்ளி என்பது சாஸ்திரியின் வரலாற்று தரவுகள் மேல் நம்பிக்கைக் கொண்டு வரலாற்றாய்வு பார்வையை மாற்றி முன்சென்றவர்கள். அதன் காரணமாகவே சாஸ்திரியின் சோழர்கள் நூலோடு சோழர் கால ஆய்வு தேங்கி விடாமல் அடுத்து நொபுரு கராஷிமா, பர்டன் ஸ்டெயின், ஜி.டபிள்யூ. ஸ்பென்சர், எ. சுப்பராயலு என ஒரு பெரும் நிறை சோழர் கால வரலாற்றாய்வை நிகழ்த்தியது. 

இதில் பொ.யு. 1968 ல் எ. சுப்பராயலு எழுதிய ‘Political Geography of the Chola Country’ ஒரு முக்கியமான திருப்புமுனை. தமிழ்நாட்டில் சோழ நாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, கொங்கு நாடு, நடுவில் நாடு, கங்க நாடு போன்ற பெரிய நாடுகளுக்குள் (மண்டலம்) காணப்படும் உள்நாடு என்பது நிர்வாக பிரிவாக அமைக்கப்பெற்றது என பொதுவாக நம்பப்பட்டு வந்தது. எ. சுப்பராயலு சோழ அரசைக் கொண்டு அதனை விரிவாக ஆய்வு செய்து உள்நாடுகள் எனக் குறிப்பிடப்படும் நாடு, கூற்றம் ஆகியவை நிர்வாக பிரிவுகள் அல்ல அவை வேளாண் சமூக, இனமரபு, வட்டார நிலவியல் பிரிவுகள் இடைக்கால தமிழ்நாட்டிலும் இப்பிரிவு இப்படியே பேணப்பட்டது என்பதைக் கல்வெட்டு தரவுகள் மூலம் ஆய்வுலகிற்குக் கொண்டு வந்தார். அதன் பின் நொபுரு கராஷிமா, பர்டன் ஸ்டெயின் எழுதிய நூல்களில் சுப்பராயலுவின் சமூக நிலவியல் சார்ந்த இப்பார்வை பிரதான அம்சமாக வெளிப்படுவதைப் காணலாம்.

பாண்டிய நாட்டைப் பற்றி கடந்த ஐம்பதாண்டுகளாக ஆய்வு செய்து வரும் வெ. வேதாசலம் எ. சுப்பராயலுவின் வழி வருபவர். பாண்டிய நாட்டை சுப்பராயலுவின் சமூக நிலவியல் பார்வைக் கொண்டு ஆய்வு செய்தவர். அதனை வேதாசலமே தனது “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்” நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

2

பாண்டியப் பேரரசு இந்திய வரலாற்றிலேயே ஒரு பிரதேசத்தை அதிக ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஓர் அரசு. பொ.மு. 400 முதல் பாண்டியர் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கின்றன. சந்திரகுப்த மௌரியர் காலத்து ‘அர்த்தசாஸ்திரமும்’, மெகஸ்தனிஸின் ‘இண்டிகாவும்’ பிரதான சான்றுகள். இச்சங்ககால பாண்டியர்களின் ஆட்சி களப்பிரர் பொ.யு.300ல் கைப்பற்றும் வரை நிகழ்ந்துள்ளது. பின் களப்பிரர் வீழ்ந்து பொ.யு. 550ல் முற்கால பாண்டியர்களின் ஆட்சி தொடங்குகிறது. பொ.யு. 991 இராஜராஜன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்து சோழர் ஆதிக்கத்தை முற்றாக பாண்டிய நாட்டில் நிலைநிறுத்தும் வரை இவ்வரசு நீடித்தது. பதினொன்றாம் நூற்றாண்டில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சோழர்களுக்கு கட்டுப்பட்ட பாண்டிய ராஜ்ஜியம் தொடங்குகிறது. இதுவே இடைக்கால பாண்டியர் ஆட்சி காலம். பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தனிப்பேரரசாக எழுச்சியுற்றது. இக்காலகட்டத்திலேயே பாண்டிய நாடு பெரும் வளர்ச்சியை எய்தியது என வெ. வேதாசலம் தன் “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்” நூலில் குறிப்பிடுகிறார். தொகுத்து பார்த்தால் 2500 வருடத்தில் 1400 ஆண்டுகள். இது தவிர பிற்கால பாண்டியர்கள் தென்காசியையும், கயத்தாறையும் தலைமையிடமாகக் கொண்டு பதினாறாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். 

இத்தகைய நீண்ட நெடிய வரலாறு இருந்தும் பாண்டியர்களைப் பற்றிய வரலாற்று ஆய்வு குறைவாகவே நிகழ்ந்துள்ளதற்கு காரணம் பாண்டியர்கள் பற்றி கிடைக்கும் குறைவான கல்வெட்டு ஆதாரங்கள். சோழர்களுடன் ஒப்பிடும் போது பாண்டியர்களின் கல்வெட்டு குறைவே; குறிப்பாக பத்தாம் நூற்றாண்டிற்கு பின்னே அதிக கல்வெட்டுகள் கிடைக்கின்றன. 

பாண்டிய வரலாற்று எழுத்தில் ஆரம்பக்கட்ட முன்னோடி முயற்சியாக தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் “பாண்டியர் வரலாறு”, அ.கி. பரந்தாமனாரின் “தலைசிறந்த பாண்டிய மன்னர்கள்”, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் “The Pandyan Kingdom from the Earliest Times to the Sixteenth Century” ஆகிய நூல்கள் பாண்டிய ஆட்சியாளர்களைப் பற்றி ஒரு அடிப்படை வரையறையை வழங்கும் நூல்கள்.

அதன் பின் பாண்டிய வரலாறு பற்றி வெ. வேதாசலம் அவர்களே பரந்துபட்ட ஆய்வு செய்து அவற்றை தொகுத்து “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்”, பாண்டியநாட்டுச் சமூதாயமும் பண்பாடும்”, “பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு”, “பாண்டியநாட்டில் வணிகம் வணிகர் வணிகநகரங்கள்”, “பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 

இதில் “பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல்” நூல் பாண்டியர் வரலாற்றை அதன் சமூகத்தால் உருவாக்கப்பட்ட நில அமைப்பு சார்ந்தும், நிர்வாகம் சார்ந்தும் ஒட்டுமொத்தமாக தொகுக்கும் முயற்சி.

சங்ககாலத்தில் பாண்டிய நாடு ‘தென்னன் நல்நாடு’, ‘தென்புலம்’ என்ற குறிப்பிலேயே இலக்கியத்திலும், கல்வெட்டிலும் உள்ளன. பாண்டியர் என மன்னர்கள் பெயர் மட்டுமே அமையப்பெற்றிருக்கின்றன. இக்காலத்தில் மக்கள் வாழ்ந்த ஊர் பகுதியையே நாடு என வழங்கும் வழக்கம் இருந்துள்ளது. மற்ற பகுதிகள் மலை, காடு, பள்ளம், மேடு என அழைக்கப்பட்டன.

ஆனால் சங்ககாலத்தின் முடிவில் நாடு பற்றிய தெளிவான வரையரை உருவாகி வந்துவிட்டது. ஒரு நாட்டுப் பிரிவென்பது பல ஊர்களை தன்னகத்தே அடக்கியது என குறுத்தொகை, புறநானூற்றில் வரும் சான்றுகள் மூலம் அறிய முடிகிறது.

நாடுகள் என இக்காலகட்டத்தில் குறிப்பிடப்படும் இவையெல்லாமே பல்வேறு நிலப்பிரிவுகளாக தானாக உருவாகி வந்த வேளாண் சமூகக் குடியிருப்புகள் என வேதாசலம் குறிப்பிடுகிறார். இவை நாடு, கூற்றம், இருக்கை, வளநாடு, முட்டம், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம் என நாட்டு நிலவளம், அவை அமைந்த தன்மைக்கு ஏற்ப பெயரிட்டுள்ளனர்.

வேதாசலம் தன் நூலில் இவற்றை நாடு வாரியாக பட்டியலிட்டு மொத்தம் 156 நாடுகளில் உள்ள 2134 ஊர்களின் பெயரையும் பட்டியலிடுகிறார். அவற்றுக்கான காலவரிசைப்படி கிடைக்கும் கல்வெட்டு சான்றுகளையும் முன்வைக்கிறார். நதிகள் பாயும் பகுதியில் இருந்த ஊர்களின் எண்ணிக்கை, வறண்ட பிரதேசத்திலுள்ள ஊர்களின் எண்ணிக்கை எனப் பிரித்து பட்டியலிடுகிறார்.

3

இந்நூல் வெறும் தகவல் குவியலாக ஆகாமல் அவை சுவாரஸ்யமான வாசிப்பு நூலாக மாறுவதற்கு காரணம், திருநெல்வேலி பகுதியில் பிறந்து மதுரை பகுதியில் வளர்ந்த நான் அவற்றின் சமகால நிலவியல் அமைப்பைக் கொண்டு வரலாற்றில் இவை எப்படி இருந்தது எனப் பார்க்க முடிகிறது என்பதே. 

வேதாசலம் அத்தகைய சுவாரஸ்ய தன்மைக்கு தகுந்தார் போலே தன் நூலை எழுதியுள்ளார் என்பது வாசிக்கும் போதே புலனாகிறது.

உதாரணமாக, இருக்கை எனக் குறிப்பிடப்படும் நாடுகள் - இவை நீர்வளம் சுத்தமாக இல்லாத வரலாற்றில் பல முறை பஞ்சத்தைக் கண்ட இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பகுதிகளிலேயே நாடுகளின் பெயராக உள்ளன. பாண்டிய நாட்டை தவிர தொண்டை நாட்டில் (வட தமிழ்நாடான இதுவும் வறட்சியான பகுதியே) இருக்கை என நாட்டிற்கு பெயரிடும் வழக்கம் இருந்துள்ளது. தமிழகத்தில் நீர்வளம் செழித்த பகுதியான சோழ தேசத்தில் இத்தகைய நாட்டின் பெயர் காணக்கிடைக்கவில்லை.

முரணாக, குளக்கீழ், ஏரிக்கீழ், பேரேரிக்கீழ், தடாகத்தின்கீழ், நிலைக்கீழ் நீர்நிலைகளை மட்டும் நம்பி அமைந்த நாடுகளின் பெயர்களும் பாண்டிய நாட்டிலும், தொண்டை நாட்டிலுமே காணக்கிடைக்கிடைக்கின்றன. ஆற்றுப்போக்கை மையமாக அமைந்த சோழ நாட்டில் இத்தகைய நாடு உருவாக்கத்திற்கு தேவையிருக்கவில்லை. 

பாண்டிய நாட்டில் வளமான நீர்பகுதிகள் வைகையாற்று படுகையும், தாமிரபரணி ஆற்று படுகையும் மட்டுமே. இதில் தாமிரபரணி மட்டுமே வருடம் முழுவதும் வற்றாமல் வளமாக இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. பாண்டிய நாட்டில் அமைந்த பிற நதிகளான வெள்ளாறு, விரிசுழியாறு, வைப்பாறு, குண்டாறு, நம்பியாறு ஆகியன சற்று வளம் குன்றிய பகுதிகளாகவே இருந்துள்ளன.

இதற்கு ஆதாரமாக மதுரையில் வைகையாற்று போக்கு பகுதியிலும், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப்போக்கு பகுதியிலேயே பெரும்பாலான நாடுகள் உருவாகியுள்ளன. (57 நாடுகள் இந்த இருபகுதிகளில் மட்டும்) இந்த நாடுகள் மீதே அரசர்களின் நேரடி செல்வாக்கும், அரசரின் நேரடி கண்காணிப்பும் இருந்துள்ளது என்பதை நூல் மூலம் அறியமுடிகிறது. 

இத்தகைய ஊர்களின் நாடுகளெல்லாம் தெளிவாக வரையறை பெற்று பொ.யு. பத்தாம் நூற்றாண்டிற்குள் பாண்டிய நாட்டில் பெரும்பாலான நாடுகள் நிலைபெற்றுவிட்டன. மேலும் இவற்றின் எல்லைகள் செயற்கையாக அமைக்கப்படவில்லை. சங்ககால முடிவில் வேளாண்வகை சமூகப் பிரிவே ஊர்களாக அமையப்பெற்றிருந்தது. அவை கூடி இயற்கையாக நாடுகளாக அமைந்தன. உதாரணமாக பத்து ஊர்கள் சேர்ந்தது ஒரு நாடு என இயற்கையாக எல்லைகள் உருவாகின. உள்நாட்டிற்குள் எல்லை பூசல்கள் என எதுவும் உருவாகி வந்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலும் அவ்வூர்களிலுள்ள மூதூர் ஒன்றின் பெயரே நாட்டின் பெயராக அமைக்கும் வழக்கமும் இருந்துள்ளது. ஆனால் அந்த குறிப்பிட்ட ஊர் தலைமை ஊராகவோ, மைய ஊராகவோ நாட்டில் அமையப்பெற்றதற்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை.

இக்காலகட்டத்தில் பாண்டிய ஆட்சியில் நிர்வாக முறையும் பெரிய சிரமமான ஒன்றாக இருக்கவில்லை. இந்நாடுகளை நாட்டு கிழவர்கள் நிர்வகித்து வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய அதிக கல்வெட்டுகள் முற்காலப் பாண்டியர் ஆட்சி காலத்திலேயே (பொ.யு. 985க்கு முன்பாக) கிடைத்துள்ளது என ஆய்வாளர் வெ. வேதாசலம் குறிப்பிடுகிறார். ஆனால் மேலே சொன்ன வளம் குன்றிய பகுதிகளிலேயே நாட்டு கிழவர்களின் செல்வாக்கு அதிகம் காணப்படுகிறது. மதுரை, திருநெல்வேலியின் வளமான பகுதிகள் பாண்டிய மன்னனின் நேரடி கண்காணிப்பில் இருந்திருக்கலாம் என்றும் அதன் வரி வசூல் எல்லாம் மன்னனின் நேரடி அதிகாரிகளே செய்திருக்கலாம் என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

ஆனால் நாட்டு கிழவர்கள் பாண்டிய மன்னர்களின் சிறப்பைப் பெற்று அந்தஸ்துடன் விளங்கினர் என்பதற்கும் சில ஆதாரங்களும் கிடைக்கின்றன. கோவில்பட்டி பகுதியில் ஏனாதி சாத்தன் என்பவன் அரண்மனை கட்டி வாழ்ந்திருக்கிறான். இன்று மாரியம்மன் கோவிலுக்காக பிரசித்திப் பெற்ற இருக்கங்குடி (முன்பு இருப்பைக்குடி நாடு) பகுதியின் நாட்டு கிழவர் எட்டிச் சாத்தான் பாண்டிய மன்னன் ஶ்ரீமாறன் ஶ்ரீவல்லபனால் சிறப்பு செய்யப் பெற்று இப்பகுதியில் இவனே அரண்மனை கட்டி வாழ்ந்ததற்கான ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகால கல்வெட்டு கிடைக்கின்றன. 

சங்ககால வேள் என்னும் தனியாளுமை அந்தஸ்து பெற்றிருந்த வேளாண்வகை சமூகத்தினர் அத்தனிச்சிறப்பு இழந்து முற்கால பாண்டியர் காலத்தில் ஆன் விகுதி பெற்று வேளாண் எனப் பெயர் பெற்று வாழ்ந்தனர் எனக் ஆய்வாளர் குறிப்பு மூலம் அறிய முடிகிறது.

எதுவானாலும் பொ.யு. பத்தாம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டில் உள்ள உள்நாடுகளும் அவற்றின் நிர்வாகமும் இயற்கையாகவே அமைந்து எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ந்துள்ளது என அறிய முடிகிறது. 

வெ. வேதாசலம்

4

பொ.யு. பத்தாம் நூற்றாண்டு பாண்டிய நாட்டில் பலவித அரசியல், சமூகவியல் நிர்வாக மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம் என தெரிகிறது. குறிப்பாக சோழப் பேரரசின் எழுச்சி அவை நேரடியாக பாண்டிய நாட்டின் நிர்வாகத்தின் மீது செல்வாக்கு செலுத்தியுள்ளது. 

மூன்று வேறு முறையில் சோழர்களுக்கு முன்பான பாண்டியர் ஆட்சி காலத்திலேயே நிர்வாக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

ஒன்று, பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியர் ஆட்சியில் நாட்டார் என்னும் நாட்டுஅவை நிர்வாக கூட்டமைப்பினர் உருவாக்கும் முறைமையும். வெள்ளான்வகை ஊர்கள் நாட்டார்கள் வழி அரசருக்கு வரி செலுத்தி வந்துள்ளனர். வளநாடு என அந்தஸ்து பெற்ற நாடுகளை செயற்கையாக அரசன் உருவாக்கும் முறைமையும் ஏற்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாடுகளை இணைத்து வளநாடு என அரசனின் சிறப்பு பெயர் கொண்டு அழைக்கும் (பாண்டி மார்த்தாண்ட வளநாடு, பராந்தக வளநாடு) நாடுகளை பாண்டியர்கள் உருவாக்கியிருக்கின்றனர். அதன் மேல் நேரடி உரிமையை கையாண்டிருக்கின்றனர். அதன் வரி வசூல் நிர்வாகம் எல்லாம் அரசனின் நேரடி ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டது. 

சோழர் ஆட்சிகாலத்தில் பாண்டிய நாட்டின் முக்கியமான பகுதிகளை சோழ அரசரின் பெயர் கொண்டு வளநாடாக வழங்கும் போக்கும் இருந்துள்ளது.

இரண்டு, நாட்டார்களை தவிர்த்து இந்நிர்வாக முறைமையில் குறுநிலக்குடித் தலைவர்கள் என்பவர்களின் பங்கும் முக்கியமானது. இவர்கள் தென்னிந்தியாவில் பழங்காலத்தில் சிறுநாடுகளையோ, பெரிய நாட்டிலுள்ள சிறுநாடுகளையோ ஆண்ட சிற்றரச மரபினர். காங்கேயன், காலிங்கராயர், குருகுலத்தரையன் போன்ற பெயர்கள் இச்சிற்றரசர்களுள் கல்வெட்டுகளில் அதிகம் காணக்கிடைக்கின்றன. 

இவர்கள் பத்தாம் நூற்றாண்டின் கல்வெட்டுகளிலிருந்து அரசியல் அதிகாரிகளாக நியமிக்கப்பெற்று பாண்டிய அரசில் நாட்டாருக்கு மேலாக சிறப்பு அந்தஸ்துடன் இருந்தனர் என்பது தெரிகிறது. பாண்டிய நாட்டின் அரண்மனையிலுள்ள அரச அரியணைகள் இவர்களின் பெயர்களிலேயே அழைக்கப்பட்டன. இது இவர்கள் அரசனின் மேலாண்மையை ஏற்று அதனை தாங்கி நிற்பவர்கள் என்னும் பொருளில் பொறிக்கப்பட்டுள்ளது.

நாட்டு கிழவர்கள் போல் அல்லாமல் நாட்டார்களுக்கு நிறைய பணியும் அமைப்பும் இருந்ததை காணமுடிகிறது. அதனால் நாட்டுஅவை உருவாக்கம் பெற்று அதில் வரி காரியங்களைக் கவனிப்பதற்கென்றும், ஆவணங்கள் எழுதுவதற்கும் நாட்டுக் கணக்கர் இருந்துள்ளனர். பன்னிரெண்டாம் நூற்றாண்டிற்கு மேல் வேட்கோவர் போன்ற பிற சமூகத்தினரும் நாட்டுக் கணக்கராக இருந்துள்ளனர். எழுதிய ஆவணத்தை கல்வெட்டாக பொறிக்கும் கல்தச்சர்கள் இருந்தனர். இவர்களை நாட்டாச்சாரியன், தச்சாச்சாரியன் என்றழைத்தனர். நாட்டிற்கு காவல் புரியும் காவலர்களை நியமித்து அவர்களுக்கான நில மானியமும் வழங்கியுள்ளனர். இவர்கள் அரையர்கள் என்றழைக்கப் பெற்றனர். இவ்வாறு நாட்டுகிழவர்கள் என ஒற்றை ஆளின் கீழிருந்த நாட்டின் நிர்வாகம் பத்தாம் நூற்றாண்டில் பெரும் நிர்வாக அமைப்பாக வளர்ச்சியுற்றுள்ளது.

பதினொன்றாம் நூற்றாண்டிற்கு பின் அரசு அலுவலர்களை நாட்டில் நியமிக்கும் வழக்கமும் தொடங்கிவிட்டது. இதில் நாடாழ்வான், மண்டலமுதலிகள், தண்டநாயகம், நாடுவகை செய்கின்றவன், நாடுகூறு செய்கின்றவன், நாடுகண்காணி செய்வார், நாட்டுக்காரியஞ் செய்கின்றவன், வரி கூறுசெய்வார் என பலர் நாட்டுக் காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் மண்டலமுதலிகள் தலைமையதிகாரியாக இருந்துள்ளனர் என்றும் அரசரின் திருமுகப்படி இவ்வதிகாரிகள் செயல்பட்டனர் என்றும் அறியமுடிகிறது.

இறுதியாக, வேளாண் சமூக முன்னுரிமையாக இருந்த நாடுகளை அரசன் தானமாக வழங்கும் வழக்கமும் இக்காலகட்டத்தில் உருவாகி வந்துள்ளது. பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நாடு பிரமதேயம் என்றும், வணிகர்களுக்கு கொடுக்கப்பட்டது நகரம் என்றும், போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது படைப்பற்று என்றும், கோவில்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது தேவதானம், பள்ளிச்சந்தம் என்றும் வழங்கப்பெறுள்ளது. இதனை ஊர்களிலிருந்து தானமாகக் கொடுக்க அரசர்கள் நாட்டார்களையே பயன்படுத்தியுள்ளனர் என கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. நாட்டார் பிற நாடுகள் மீதும் செல்வாக்கு செலுத்தியுள்ளனர் என சில கல்வெட்டு சான்று தெரிவிக்கின்றன. பிரமதேயமாக இருந்த கானநாட்டு ஊற்றியூரில் பிராமணர் விலைக்கு வாங்கிய நிலத்திற்கு வரி செலுத்தாமல் இருந்த போது அதனை நாட்டாரும் தண்டநாயகமும் சேர்ந்து பெற்று கோவிலுக்கு அளித்துள்ளனர். அதே நேரத்தில் எதிர்ப்பும் கலகமும் ஏற்பட்ட போது பிற நாட்டவர்களுக்கு ஆசிரியம் (அடைக்கலம்) கொடுத்து நாட்டார்கள் ஆதரித்துள்ளனர். 

5

முற்கால பாண்டியர் காலத்தில் எளிமையாக இருந்த நிர்வாக அமைப்பு அதன் இறுதிக்கட்டத்தில் பலவாறாக பிரிந்து வளர்ந்து கிளைபரப்பி பெரும் நிர்வாக அமைப்பாக ஆன சித்திரம் ஒன்றை ஆசிரியர் நூலில் படிப்படியாக உருவாக்கி அளிக்கிறார்.

இத்தகைய மாற்றத்தால் நிர்வாக குழப்பமோ, அரசியல் குழப்பமோ ஏற்பட்டதற்கான எவ்வித நேரடி கல்வெட்டு சான்றுகளும் கிடைக்கவில்லை. ஆனால் அரச நிர்வாக நிலைகளை தவிர்த்து மக்களில் இத்தகைய மாற்றங்கள் எவ்விதம் நேர்மறை/எதிர்மறையாக செல்வாக்கு செலுத்தின என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. நாட்டார் நிர்வாக அமைப்பு சிறப்புடன் இருந்ததற்கும், பிற பிரமதேயம், நகரம், படைப்பற்று ஆகிய பிரிவுகளுடன் இணக்கமாக இருந்ததற்கும் மட்டுமே கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆனால் இதில் நாம் கவனிக்கவேண்டிய அம்சம் என்பது ஆதாரம் எனக் குறிப்பிடுவது கல்வெட்டு ஆதாரங்கள் மட்டுமே. அவை எத்தனை நம்பத்தன்மைக் கொண்டது என்றாலும் அவை அரசர்களோ, நாட்டார்களோ, நாட்டுகிழவர்களோ உருவாக்கியது மட்டுமே என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

இங்கே விடுபடல் என்பது நாட்டார் மரபின் சான்றுகள் இல்லை என்பதே. தமிழக நாட்டார் ஆதாரங்கள் கிடைப்பது பொ.யு. 14 ஆம் நூற்றாண்டிற்கு பின்பாக தான். அவற்றில் சில நேரடி அரசியல் குழப்பங்களைக் காண முடிகிறது. 

நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா. பெருமாள் எழுதிய பூதமடம் நம்பூதிரி என்னும் நூலில் திருநெல்வேலி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் கோவிலுக்கு விஜயநகரப் பேரரசரான விஜயரங்க சொக்கநாதர் வந்த போது வரித்தொல்லை தாங்க முடியாமல் ஊரில் ஒருவனை கோபுரத்தின் மேல் ஏறி அரசன் முன் விழுந்து தற்கொலை செய்துக் கொள்ளவைத்த கதையொன்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘வண்ணம்’ என்னும் சிறுகதையில் திருவிதாங்கூர் நாட்டில் கயத்தாறிலிருந்து வேளிமலை அடிவாரத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளாண் சாதியினர் மேல் பஞ்ச காலத்தில் அரசராலும், அரச நிர்வாகிகளின் அலட்சிய கணக்காலும் தாளமுடியாத வரிப்பணம் செலுத்த நேர்ந்தது என்னும் சித்திரம் வேடிக்கையாகச் சொல்லப்பட்டுள்ளது. 

இரண்டும் நாட்டார் மரபிலிருந்து எழுந்துவரும் கதைகள். இத்தகைய எதிர் சான்றுகள் எதுவும் கல்வெட்டில் கிடைக்காது.

ஊகங்கள் எதுவானாலும் கல்வெட்டுகள் கூறும் வரலாற்று சான்றென்பது இத்தகைய நிர்வாக மாற்றங்கள் அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டது என்பதையே காட்டுகிறது. உதாரணமாக பதிமூன்றாம் நூற்றாண்டில் மீண்டும் பாண்டியர்கள் தன்னாட்சி பெற்று வந்த போது மதுரை அனைத்து விதங்களிலும் வளர்ச்சி கண்டது என ஆசிரியர் முன்வைக்கும் தரவுகளின் அடிப்படையில் காணமுடிகிறது.

மேலும் இயற்கையாக எல்லை பிரித்து அமைந்த நாடுகளின் மேல் வளநாட்டை உருவாக்கியதோடு, பிரமதேயம் போன்ற பிற நாடுகளின் உருவாக்கத்திற்கு வேதாசலம் சமூகவியல் மாற்றம் சார்ந்து ஒரு பார்வையைக் கூறுகிறார். அதாவது ஒரு நாடு அல்லது சமூகம் அந்த காலகட்டத்தில் எதற்கு முன்னுரிமை வழங்கியது என்பதும் கவனிக்கத்தக்கது. சங்ககாலம் தொடங்கி, களப்பிரர், முற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் சமூகத்தின் பிரதான நிலையிலிருந்தவர் வேளாண் குடியினர். பாண்டிய நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதியிலும் அப்படி தான். 

எனவே இக்காலகட்டத்தில் வேளாண்வகையினர் அவர்களின் கூட்டு தலைவரான நாட்டுகிழவர்களும் முதன்மை அதிகாரத்திலிருந்தது இயற்கையே. அதன் பின்பாக எட்டாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில் எழுந்து வந்த பக்தி இயக்கம் பிராமணர்களை முதன்மையானவர்களாக ஆக்கியது. பிரமதேயம் எழுந்து வந்தது. உள்நாட்டு வெளிநாட்டு வணிகங்கள் பெருகி வர வணிகர்களின் நகர உருவாக்கமும். தமிழ்நாட்டில் பேரரசுகளின் எழுச்சிக்குப் பின் முறையான ராணுவ உருவாக்கமும் தேவைப்பட்ட காலத்திலேயே நாடுகளை தானமாக பெற்று படைப்பற்று உருவாகியது. அதே போல் பெரும் கோவில்கள் எழுந்துவந்த காலமும் அதுவே அப்போது தேவதானம், பள்ளிச்சந்தம் தவிர்க்க முடியாதது என்ற சமூகவியல் அமைப்பில் எழுந்துவரும் நூலாசிரியரின் பார்வை மேலும் முதன்மையானது.

இறுதியாக, நாடுகளின்/ஊர்களின் பெயர் பட்டியல் கால வாரியாக அதனை அடுக்கி அமைக்கும் முறை, உள்நாட்டின் வரைப்படங்கள் என அனைத்து தரவுகளும் இணைந்து வெ. வேதாசலத்தின் நாற்பதாண்டுகால உழைப்பில் உருவாகி வந்த இந்நூலின் தேவையை காட்டுகிறது. 

ஜி.எஸ்.எஸ்.வி. நவின்


ஜி.எஸ்.எஸ்.வி. நவின் - நவீன கவிதைகளுக்காக மட்டும் ’கவிதைகள்’ என்ற இதழை கவிஞர் மதாருடன் இணைந்து நடத்திவருகிறார். தொடர்ந்து மின்னிதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பில் பங்காற்றிவருகிறார்.