 |
அவலோகீஸ்வரர் |
மகாமயூரி
இவளும் ஜாங்குலியைப் போன்று பாம்புக்கடியால் ஏற்படும் நஞ்சினைப் போக்கவல்ல பௌத்த சமயப் பெண்தெய்வமாவாள். புத்தமத சாதகக் கதைகளில் இவள் குறிப்பிடப்படுகின்றாள். தங்க மயிலிறகை ஒருகையில் ஏற்றியிருக்கும் நிலையில் விளங்கும் இவளே புத்தர் பொன்வாத்தாக பிறப்பெடுத்தபோது தங்கமயிலிறகுகளை அவ்வப்போது அவருக்கு அளித்து வந்தவள் ஆவாள். புத்தரின் உருவைத் தலையில் சுமந்து நிற்கும் நிலையில் மூன்று முகங்களுடன் ஆறு கரங்களையும் கொண்டு விளங்குவாள். இவள் மந்திர தந்திர சக்தி படைத்த பெண்தெய்வமாக விளங்கியிருக்கின்றாள்.
சரஸ்வதி
பௌத்த சமயத்தவரால் இந்து சமயத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பெற்ற பெண் தெய்வங்களில் சரசுவதியும் ஒன்று ஆகும். கல்வியை அளிக்கவல்ல தெய்வமாக இவள் போற்றப்படுகின்றாள். வெள்ளைத்தாமரையில் கரங்களில் புத்தகமும் தாமரை மலரும் ஏந்திக் காட்சிதரும் நிலையில் விளங்குவாள். மேலும் வீணை ஏந்திய நிலையிலும் வெந்தாமரை ஏந்திய நிலையிலும் வடிக்கப்படுவாள்.
பிருகுடி
இவள் கையில் அக்கமாலையும் திரிசூலமும் ஏந்திக் காட்சியளிக்கும் தெய்வமாவாள். இவளது தலையினை விரிந்த சடாபாரம் அணிசெய்யும்படி சிற்பத்தில் காட்டப்படுவாள்.
ஆரிதி
இவள் இராசகிருக நகரத்தின் காவல் தெய்வமாக விளங்கினவள். இவளது கணவன் காந்தாரத்தில் காவல் தெய்வமாக விளங்கிய பாஞ்சிகன் என்ற இயக்கன் ஆவான். இவனுக்கும் ஆரிதிக்கும் பிறந்த ஐந்நூறு குழந்தைகளில் இறுதியாகப் பிறந்த பிரியங்கரன் என்ற மகனிடத்து ஆரிதி அதிக அன்பு வைத்திருந்தாள். ஆரிதி என்ற பெயர் இவளுக்கு குழந்தைகளைத் திருடி உண்பதால் ஏற்பட்ட பெயராகும். குழந்தைகளைத் திருடிக் கொன்று விழுங்கும் இவளது கொடுமையைத் தாளாத இராசகிருகத்தின் மக்கள் புத்தரிடம் சென்று முறையிட்டனர். அதனால் அவளது பிரிய மகனான பிரியங்கரனை புத்தர் கவர்ந்து ஒளித்துவைத்துக்கொண்டு அவளை அவனது பிரிவிற்காகக் கதறிவருந்தும்படி செய்தார். எங்கு தேடியும் தனது மகனைக் காணாத ஆரிதி இறுதியில் புத்தரிடம் வந்து முறையிட்டுக் கதறினாள். புத்தரோ இனிமேல் குழந்தைகளைத் திருடி உண்ணமாட்டேன் என்ற உறுதிமொழியை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு பிரியங்கரனை அவளிடம் அளித்தார். அதன்பிரகு இராசகிருக மக்கள் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் வேண்டிய உணவுப்பொருட்களைப் பலியாக அவளுக்கு அளித்து வழிபட்டு வந்தனர். இதன்காரணமாக வட இந்தியாவிலுள்ள பெரும்பாலான புத்த விகாரங்களில் ஆரிதி போற்றி வழிபடப்பெற்றாள் என்று யுவான்சுவாங் குறிப்பிடுகின்றார்.
இவள் சிற்பங்களில் தனது பிரிய மகனுடனோ அல்லது ஐந்து குழந்தைகளுடனோ படைக்கப்படும் வழக்கம் காணப்படுகின்றது. இருகரங்களுடன் அழகிய முடியலங்காரத்துடன் தனது கணவனான பாஞ்சசீகனுடன் படைக்கப்படும் வழக்கம் உள்ளது. அஜந்தா, எல்லோரா போன்ற பல இடங்களில் இவளது சிற்பங்கள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் சமண சமய இயக்கியர் உருவங்கள் செய்ய பெற்று சிறந்த நிலையில் விளங்கியது போன்று பௌத்த மதப் பெண்தெய்வ உருவங்கள் செய்யப்பெற்று சிறப்புற்று விளங்கியதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தொடக்ககாலத்தில் இருந்த பௌத்தசமய பெண்தெய்வ உருவங்களின் வழிபாடு பிற்காலத்தில் படிப்படியே செல்வாக்கு குறைந்து வேற்றுருவைப் பெற்று விளங்கின என்பதற்கு ஆதாரங்கள் காட்டுவர். எடுத்துக்காட்டாக காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் பகுதி முன்பு பௌத்த சமயத்தின் இருப்பிடமாக விளங்கியது என்றும், இங்குள்ள காமாட்சியம்மன் முன்பு பௌத்தர்களால் வணங்கப்பெற்ற தாராதேவியாக விளங்கியிருக்க வேண்டும் என்றும் கூறுவர்.
இப்பகுதியில் அண்மைக் காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது இங்கு புத்த விகாரம் ஒன்று இருந்திருப்பது கண்டறியப்பெற்றிருப்பது இது தொடர்பான கருத்தை வலுப்படுத்துகின்றது. இதுபோன்று தமிழ்நாட்டில் ஆங்காங்கே திரௌபதியம்மன் என்ற பெயரில் விளங்கும் கிராம தெய்வத்தின் கோயில்கள் முன்பு தாராதேவியின் கோயிலாக விளங்கியிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டில் பௌத்த மதத்தினைப் பொருத்தமட்டில் அதில் இயக்கி என்ற பெண் தெய்வ வழிபாடு பரவுவதற்குக் காரணமாக அமைந்தது தமிழ்நாட்டிற்கு மிக அண்மையில் அமைந்திருந்த ஆந்திர மாநிலமேயாகும். கி.மு. இரண்டாம் நூறாண்டிற்கும் கி.பி. இரண்டாம் நூறாண்டிற்கும் இடையில் ஆந்திர மாநிலத்தில் சாதவாகனர் காலத்திலும் அவர்களைத் தொடர்ந்து வந்த இச்சுவாகு காலத்திலும் நிலவிய பௌத்தமதத்தின் செல்வாக்கே காரணமாகும். அங்கு அமராவதி, நாகார்ச்சுனகொண்டா போன்ற பல இடங்களில் இயக்கியரது வழிபாடு சிறப்புற்றிருந்தமைக்கு அடையாளமாக அக்காலத்தினைச் சார்ந்த இயக்கியரின் உருவங்கள் கிடைத்துள்ளன. சாதவாகனரின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடபகுதியில் நிலவியமைக்குச் சான்றாக அவர்கள் வெளியிட்ட காசுகளும் அவை செய்வதற்குரிய அச்சுவார்ப்புகளும் காஞ்சிபுரத்தில் கிடைத்துள்ளன. கடலூரிலும் சாதவாகனரின் கப்பல் உருவம் பொறித்த காசு கிடைத்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்துக்குரிய ரசட்(Russet) வண்ணப் பனையோடுகளும் தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. எனவே ஆந்திராவிலிருந்து அரசியல், சமயம், வனிகம் ஆகியவற்றின் செல்வாக்கின் காரணமாக பௌத்த மதத்திலிருந்த இவ்வழிபாடு அருகிலுள்ள தமிழ்நாட்டிற்கு எளிதில் பரவியிருக்கவேண்டும்.
 |
ஆரிதி |
மணிமேகலையில் பௌத்த சமயப் பெண் தெய்வங்கள்
பௌத்த சமயத்தில் இயக்கி வழிபாட்டின் பரந்து விரிந்த செல்வாக்கை சாத்தனாரின் மணிமேகலைக் காப்பியத்தில் காணப்படும் பின்வரும் தெய்வங்களில் கான முடிகிறது.
சம்பாபதி
மணிமேகலை
தீவதிலகை
சிந்தாதேவி
சித்திரதெய்வம்
கந்திற்பாவை
முதலிய பெண் தெய்வங்கள் மணிமேகலைக் காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன.
சம்பாபதி
இத்தெய்வம் பற்றி மணிமேகலையில் தொடக்கத்திலேயே எடுத்துக் கூறப்படுகின்றது. இளஞாயிறு போன்ற பொன்னிற மேனியையும் விரிந்த சடையையும் கொண்டவள், பொன்மயமான இமயத்திலிருந்து தோன்றித் தென்றிசைக்குப் பெயர்ந்து வந்தவள், மாநில மடந்தைக்கு (பூமித்தாய்க்கு) வந்த துயரினைக் கேட்டு அரக்கர் அழியும்படியும் நாவல் மரத்தின் கீழ் வந்து நிற்பவள், சம்பாபதி என்ற பெயரினைக் கொண்டவள் என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது.
இத்தெய்வம் நாவலோங்கிய மபெரும் தீவினுள் காவல்தெய்வம் என்று கூறுகின்றபடியால் நாவல் தீவு என்று ஒருகாலத்தில் அழைக்கப்பெற்ற இந்திய முழுமைக்கும் தரைக்காவல் தெய்வமாக விளங்கியிருக்க வேண்டும். துறி, மன்றம், மரம், மக்கள் உறையும் இடம், கோட்டம் போன்ற பல்வேறு இடங்களைக் காத்து நிற்கும் தெய்வமாக மணிமேகலையில் இவள் குறிப்பிடப்படுகின்றாள். மேலும் முந்தைமுதல்வி, முதுமூதாட்டி, தொன்மூதாட்டி, முதியாள், கன்னி, குமரி, அருந்தவமுதியோள் என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றாள்.
காவிரிப்பூம்பட்டினத்தில் இவள் உறைந்திருந்த வனம் சம்பாபதிவனம் என்று அழைக்கப்பட்டது. இவளது கோவில் சக்கரவாளக்கோட்டம் என்றும், அதில் இவள் உறைந்த இடம் குச்சரக்குடிகை என்றும் அழைக்கப்பெற்றது. இக்கோயில் காவிரிபூம்பட்டினத்தில் சுடுகாட்டிற்கு அருகில் இருந்தமையால் சுடுகாட்டுக் கோட்டம் என்றும் மக்களால் அழைக்கப்பெற்றது. இது செழுங்கொடிவாயில், நலங்கிளர்வாயில், வெள்ளிடைவாயில், அச்சுறுத்தும் தோற்றத்தைக் கொண்டு கரங்களில் பாசத்தையும் சூலத்தையும் ஏந்தி நிற்கும் ஊவாரங்களுள்ள வாயில் ஆகிய நான்கு வாயில்களைக் கொண்டு விளங்கியது. இக்கோட்டத்தில் பௌத்தர்கள் கண்ட உலகத்தின் அமைப்பு மண்ணில் செய்து காட்டப்பெற்றிருந்தது. இதில் கடல்சூழ்ந்த மேருமலையும் அதன் பக்கத்தில் நிற்கும் ஏழுவகை குன்றங்களும் நால்வகை மக்கள் நிறைந்த பெருந்தீவும் ஆயிரக்கணக்கான தீவுகளும் அவற்றில் வாழ்கின்ற உயிரினங்களும் அவை உறையும் இடங்களும் அழகுறக் காட்டப்பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் மணிமேகலைக் காப்பியத்திலேயே தொன்மை மிக்க ஒரு பெண் தெய்வத்தின் கோயில் இத்துணை அளவில் விளக்கமாக எடுத்துக்கூறப்பெற்றிருக்கின்றது.
இச்சம்பாபதி தெய்வம் பற்றி மணிமேகலை சக்கரவாளக்கோட்டம் உரைத்தக் காதையில் பின்வரும் கதை ஒன்று கூறப்படுகின்றது. கோதமை என்ற பெண்ணின் மகன் சார்ங்கலன் என்ற சிறுவன் வாளக்கோட்டம் வழியாகச் செல்லும்போது பிணம் ஏந்தி ஆடிய பேய்மகள் ஒருத்தியைக் காணநேர்ந்தமையால் உயிரிழக்க நேரிட்டது. இறந்த அவனது சடலத்தை எடுத்துக் கொண்டு சம்பாபதி கோட்டம் வந்த அவனது தாய் சென்ற தன் மகனின் உயிரை மீட்டுத் தருமாறு சம்பாபதியிடம் வேண்டி நின்றாள். ஆனால் அத்தெய்வம் விதியினால் நேர்ந்த இக்கதிக்கு வேறு கதியில்லை என்று கூறியது. மேலும் அப்பகுதியிலிருந்த எல்லாத் தெய்வங்களையும் அழைத்து எந்த தெய்வத்திற்கும் சென்ற உயிரை மீட்டுத்தரும் ஆற்றல் இல்லையென்பதையும் நிரூபித்துக் காட்டியது. இதனால் உயிர் துறந்த சார்ங்கலன் என்ற அவ்வந்தணச் சிறுவனின் தாயான கோதமை தனது மகனது சடலத்தைச் சுடலையில் இட்டுச்சென்றாள் என்று மணிமேகலை கூறுகின்றது.
மணிமேகலை சம்பாபதி என்ற இப்பெண்தெய்வம் சக்கரவாளக்கோட்டத்துப் பகுதிகளில் விளங்கிய எல்லாத் தெய்வங்களுக்கும் தலைமைத்தன்மை படைத்ததாக விளங்கியது என்பதையும் இத்தெய்வத்தின் தலைமையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே தொன்றுதொட்டு வணங்கி வரப்பெற்ற பிற தெய்வங்கள் அவளுக்குத் துணைத் தெய்வமாக விளங்கின என்பதையும் காட்டுகின்றது. தற்போது காவிரிப்பூம்பட்டினத்தில் சாயாவனம் என்று அழைக்கப்படும் பகுதியில் சம்பாபதிகோயில் ஒன்று உள்ளது. இதனை மக்கள் இன்று பிடாரிகோயில் என்று அழைத்துவருவது குறிப்பிடத்தக்கது. சம்பு என்றால் நாவல் என்று பொருளாகும். இவள் சம்புத்தீவான நாவலந்தீவிற்குத் தெய்வமாக விளங்கியமையால் சம்பாபதி என்றழைக்கப்பெற்றாள். சாத்தனார் காலத்துப் பௌத்தமதத்தில் வடஇந்தியாவில் இத்தெய்வம் எந்தப்பெயரில் விளங்கியது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. இத்தெய்வம் மண்ணுலகத்தையும் அவற்றிலுள்ள உயிர்களையும் காக்கும் தெய்வமாக கூறப்பெற்றிருக்கின்றது. இதனால் இத்தெய்வம் மண்ணுலகத்தில் நல்லவர்களுக்கு நேர்கின்ற துன்பங்களைப் போக்க பௌத்தமதத்து சதுர்மகா ராஜீகரால நிலவுலகில் நிறுத்தி வைக்கப்பெற்ற தரைக் காவல் தெய்வமாக இருக்கவேண்டும்.
மணிமேகலா தெய்வம்
சாத்தனாரின் காவியத்தில் பெரும் பங்கு கொண்ட பெண்தெய்வமாக இவள் விளங்குகின்றாள். இத்தெய்வம் பௌத்தசமயத்தைப் பின்பற்றியொழுகும் நல்லோரையும் பிறரையும் கடற்செலவு செய்யும்போது நேரிடும் துன்பத்திலிருந்து காப்பதற்காக மண்ணுலகின் காவலர்களாக விளங்கும் சதுர்மகாராஜீகர் என்பவர்களால் கடற்காவல் தெய்வமாக நியமிக்கப்பெற்ற பெண் தெய்வமாகும். நடுக்கடலில் நல்லவர்களுக்கு வந்த துயரினைப் போக்கி மீட்ட இத்தெய்வம்பற்றிய கதைகள் புத்தசாதகக் கதைகளில் கூறப்பெற்றுள்ளன. மகாசனகசாதகத்தில் மணிமேகலை தெய்வம்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
மகாசனகன் என்பவன் தன் தந்தையிடமிருந்து அரசைக்கவர்ந்த பொலசனகனிடமிருந்து மீண்டும் அரசாட்சியை மீட்கக் கருதி பொருளீட்ட கடற்பயணம் மேற்கொண்டான். அப்போது நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கட்டை ஒன்றைப் பற்றிக்கொண்டு ஏழு நாட்கள் கரையை அடையும் முயற்சியைக் கைவிடாமல் கடலில் நீந்திக் கொண்டிருந்தான். ஏழாம் நாளில் இம்மணிமேகலை தெய்வம் அவன் முன்தோன்றி அவனது முயற்சியைப் போற்றி அவன் விரும்பியபடி அவனை இருகைகளாலும் தூக்கியெடுத்துச் சென்று மிதிலை நகரம் கொண்டு சேர்த்தது என்று மகாசனசாதகம் கூறுகின்றது. இதே போன்ற கதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் கூறப்பெற்றிருக்கின்றது. கோவலனுக்கு மாதவி மூலம் பெண் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்குப் பெயர் சூட்டும்போதும் கோவலன் நடுக்கடலில் இரவில் கலம் உடைந்து தவித்த என் முன்னோன் ஒருவன் புண்ணியங்கள் பல செய்தவனாக இருந்தமையால் அவன் முன் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி இந்திரனின் ஏவலினால் இங்கு இக்கடலில் வாழ்கின்றேன், நீ செய்த பெருந்தானமும் அறமும் பிழையாது என்று கூறி வானத்தில் அவனைத்தூக்கிச் சென்று கரைசேர்த்துக் காப்பாற்றியது என்று கூறி அப்பெண்தெய்வத்தின் பெயரினையே தன் குழந்தைக்குச் சூட்டினான். இந்நிகழ்ச்கி சிலம்பில் அடைக்கலக்காதையில மாடலன் என்ற பாத்திரத்தின் வாயிலாக எடுத்துக்கூறப்படுகின்றது. இக்குறிப்பில் மணிமேகலை தெய்வம் கோவலன் குடும்பத்தின் குலதெய்வமாக போற்றப்பெற்றதை அறிய முடிகின்றது. மேலும் இந்திரன் இட்ட கட்டளையின் காரணமாகவே மணிமேகலைதெய்வம் கடலில் வாழ்ந்து வருகின்றது என்று இத்தெய்வம் பற்றிய முக்கிய குறிப்பையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
இம்மணிமேகலா தெய்வம் சங்கன் என்ற அறம் பல செய்து வந்த அந்தணனை நடுக்கடலில் கலம் உடைந்து வீழ்ந்தபோது காப்பாற்றிய செய்தி சாதகக்கதையில் எடுத்துக்கூறப் பெற்றிருக்கின்றது. பௌத்த கதைகள் நிறைந்த இரசவாகிளி என்ற நூலிலும் நடுக்கடலில் கலம் உடைந்து வீழ்ந்த ஒருவனை மணிமேகலா தெய்வம் காப்பாற்றிய வரலாறு கூறப்படுகின்றது. பண்டைத் தமிழ்மக்களும் மணிமேகலை காலத்திற்கு முன்பே அவளுக்கு முன்னோடியாக கடலில் பெண் தெய்வம் ஒருத்தி உறைவதாக நம்பி அவளை 'கடல்கெழு செல்வி' என்று போற்றியதை அகப்பாடல் ஒன்று தெரிவிக்கின்றது. இத்தெய்வம் சாத்தனாரின் காவியத்தலைவி மணிமேகலைக்கு உதயகுமரனால் நேரவிருந்த துன்பத்தையும் போக்கி, அவளை வான் வழியே மணிபல்லவம் என்ற தீவிற்கு எடுத்துக்கொண்டு சென்று காத்தது. மணிமேகலையின் பழம்பிறப்பை உணர்த்தி அவளுக்கு அந்தரத்தில் திரியவும் வேற்றுருக் கொள்ளவும் வேண்டிய மந்திரங்களையும் பசிப்பிண நீக்கும் அமுதசுரபியினைப் பெறும் வழியினையும் கற்றுக் கொடுத்தது. இத்தெய்வமே சோழன் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா கொண்டாடாமையால் அவ்வூரைக் கடல்கோளால் அழித்தது என்று மணிமேகலைக் காவியம் கூறுகின்றது.
தீவதிலகை
மணிமேகலைக் காவியத்தில் பாத்திரம் பெற்ற காதையில் இப்பெண்தெய்வத்தின் வரலாறு கூறப்படுகின்றது. இத்தெய்வம் இந்திரனின் கட்டளையினால் மணிபல்லவத்தீவில் வாழ்ந்து வந்தது. மணிமேகலை மணிப்பல்லவம் வந்தடைந்தபோது அவளுக்கு அமுத சுரபியின் வரலாற்றை எடுத்துக் கூறியது. புத்தனைப் போற்றி அவளுக்குப் பசியின் கொடுமையை எடுத்து விளக்கியது.
சிந்தாதேவி
இத்தெய்வம் தென்திசை மதுரையில் உறைந்து வந்த தெய்வமாகும். மேலும் ஆபுத்திரனுக்கு பசிப்பிணியறுக்கும் அமுதசுரபியை அளித்த சிறப்புடையது. வானோர் தலைவி, மண்ணோர் முதல்வி, தென்தமிழ் மதுரை செழுங்கலைப்பாவை என்று மணிமேகலை இவளைப் புகழ்ந்து கூறுகின்றது. மணிமேகலையில் ஆபுத்திரன் திறம் அறிவித்தகாதை, பாத்திரம் மரபு உரைத்த காதை முதலிய பகுதிகளில் இவளது வரலாறு கூறப்படுகின்றது.
சித்திரதெய்வம்
இத்தெய்வம் ஓவியத்தினால் வரைந்து வைக்கப் பெற்ற உருவத்தை கொண்டு விளங்கியதால் சித்திர தெய்வம் என்று பெயர் பெற்று விளங்கியது. முதியவன் உறைந்திருந்த குச்சரக்குடிகைக் கோயிலில் இத்தெய்வம் உறைந்து வந்தது. காவியத் தலைவியான மணிமேகலையைத் துரத்திக்கொண்டு அவளை அடைய வந்த இளவரசன் உதயகுமரனை நோக்கி இத்தெய்வம் இடித்துரைத்தது என்று சாத்தனாரின் காவியம் கூறுகின்றது.
கந்திற்பாவை
காயசண்டிகை என்ற தனது மனைவியின் உருக்கொண்டிருந்த மணிமேகலையை அடைய முற்பட்ட உதயகுமரனைக் கொன்று, பின்னர் மணிமேகலை அறியாது, அவளை நெருங்க முற்பட்ட காஞ்சனனைத் தடுத்து, அவள் உருமாறிய மணிமேகலை என்ற உண்மையை எடுத்துக்கூறிக் காத்தது, இக்கந்திற்பாவை என்ற தெய்வமாகும். இத்தெய்வம் ஒரு தூணில் இருந்ததாகும். மேலும் உதயகுமரனின் பழம்பிறப்பு உணர்த்தி மணிமேகலையின் எதிர்காலம் பற்றியும் இத்தெய்வம் எடுத்துரைத்தது. இப்பாவை கடவுளால் எழுதப்பெற்ற பாவையென்றும் இதனைப் புகார் மக்கள் போற்றி வழிபட்டனர் என்றும் மணிமேகலை கூறுகின்றது.
மேலே கண்ட பௌத்தமதப் பெண்தெய்வங்களெல்லாம் சாத்தனாரின் காப்பியத்தின் கதைவளர்ச்சிக்குத் துணை செய்யும் வகையில் பல இடங்களில் ஆங்காங்கே புகுத்தப்பெற்றிருக்கின்றன. இவை பௌத்தசமயத்தின் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும் தெய்வங்களாக காப்பியத்தில் வந்துசெல்கின்றன. சாத்தனார் வடநாட்டுப் பௌத்த சமயத்தில் காணப்படும் இயக்கி வழிபாட்டிலிருந்து வந்த பெளத்தமதப் பெண்தெய்வ வழிபாட்டினையும் அது தொடர்பான கதைகளையும் காவியங்களையும் பிறசான்றுகளையும் நன்கு அறிந்திருந்தமையால் அவற்றைத் தமது காவியவரலாற்றிற்கு நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
இவற்றில் சம்பாபதி என்ற தெய்வம் வட நாட்டிலிருந்து வந்த பெண் தெய்வம் என்று அவர் வாய்மொழி மூலமே உணரமுடிகின்றது. இதேபோன்று மணிமேகலா தெய்வமும் வடநாட்டு பௌத்தமதச் சாதகக்கதை போன்றவற்றிலிருந்து பெறப்பெற்ற பெண்தெய்வமாகும். தீவ திலகை போன்ற பெண்தெய்வங்கள் மேலே கண்ட தெய்வங்களின் தன்மையை அறிந்து சாத்தனாரால் கதைக்காக அவரால் உருவாக்கப்பெற்ற கற்பனைப் பாத்திரங்கள் எனத் தோன்றுகின்றது. சித்திரதெய்வம், கந்திற்பாவை முதலிய தெய்வங்கள் பழந்தமிழிலக்கியத்தில் கூறப்பெற்றுள்ள பாவை வழிபாட்டிலிருந்து பெறப் பெற்ற தெய்வங்களாகத் தோன்றுகின்றன. தமிழ் நாட்டுப் பௌத்த சமயப் பெண்தெய்வ வழிபாட்டில் சாத்தனாரின் காவியம் இன்றியமையாத இடத்தினைப் பெற்று விளங்குகின்றது. தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் இவை அற்புதங்களைச் செய்யும் தெய்வங்களாகக் காட்டப்பெற்றிருக்கின்றன. மக்கள் மனதில் எழும் ஆசைகளை அற்புதங்கள் மூலம் செய்யவல்ல மந்திர தந்திரங்கள் நிறைந்த தெய்வங்களாக இவை விளங்குகின்றன இவையெல்லாம் எளிய நிலையில் விளங்கும் சாதாரணமான பொதுமக்களையும் பௌத்த சமயம் தன்பால் ஈர்க்கச் செய்ய கையாண்ட சமயவுத்திகளே ஆகும்.
வெ. வேதாசலம்
படங்கள்: வெ. வேதாசலம்
குறிப்பு: இக்கட்டுரை வெ. வேதாசலம் எழுதிய 'இயக்கி வழிபாடு' (1989) என்ற நூலில் இருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
 |
வேதாசலம் |
வெ. வேதாசலம் தமிழின் முக்கியமான தொல்லியல் ஆய்வாளர், தொல்லியல் ஆசிரியர். வேதாசலம் அவர்களின் ஆய்வுகள் பன்முகத்தன்மை கொண்டவை. திருவெள்ளறை கோவில் குறித்த அவரது முதல் புத்தகம், கோவில் ஆய்வுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக காட்டத்தக்கது. சமணம் குறித்த இவரது ஆய்வுகள் பாண்டிய நாட்டில் சமணம் பதினான்கு நூற்றாண்டு வரை திகழ்ந்ததற்கு முக்கியமான சான்றுகளாக ஆகின. தவ்வை, இயக்கி வழிபாடுகள் குறித்தும் அறுவகை சமயங்கள் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார். வாணாதிராயர்கள் என்னும் சிற்றரசர் குலம் குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார்.