![]() |
வில்லிபுத்தூர் ஆண்டாள் விமானம் |
சிற்றரச குலங்களை விடுத்து தமிழக வரலாற்றை எழுதமுடியாது. சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்களின் முக்கிய அதிகாரிகளாக சிற்றரச குலத்தவர் இருந்துள்ளனர். பேரரசுகளின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளை ஆட்சிசெய்துள்ளனர். பேரரசர்களுக்கு போர்களில் உதவி செய்யுமளவிற்கு சிலர் உயர்ந்துள்ளனர். பேரரச வம்சத்துடன் மணவுறவுகள் கொண்டுள்ளனர். சிலசமயம் தங்கள் பகுதிகளில் நேரடியாக ஆட்சி செலுத்தியுள்ளனர். ஆலயங்களில் திருப்பணிகளிலும் சமூகப்பணிகளும் செய்துள்ளனர்.
தமிழக வரலாற்றில் எந்த பேரரசை விடவும் நீண்ட காலம் தொடர்ச்சியாக நிலைத்திருந்த சிற்றரச குலம் வாணர்களுடையது. சங்க பாடல்களான அகநானூறு மற்றும் நற்றிணையில் வாணர் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொ.யு.17-ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆட்சி செலுத்தியதற்கான வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன. இவர்கள் மாவலி சக்கரவத்தியின் வழிவந்தவர்கள் என கூறிக்கொண்டனர். மாவலி வாணவராயர்கள் என தங்களை அழைத்துக்கொண்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சிதறி இருந்துள்ளனர். சங்கப்பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் வாணர், பாணர் என குறிப்பிடப்படுகின்றனர். இந்த நீண்ட தொடர்ச்சிக்கு காரணம் அவர்களின் நிர்வாகத்திறனும், வீரமும், எல்லோருக்கும் வளைந்துகொடுத்த பண்பும். இவர்களின் ஆதரவை புறக்கணிக்க இயலாதவாறு பேரரசுகள் இவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
வாணாதிராயர்கள் பொ.யு.4-ஆம் நூற்றாண்டில் கடம்ப அரசுக்குக்கீழ் சிற்றரசர்களாக தலையெடுத்தனர். பின்னர் சாளுக்கியர், காஞ்சி பல்லவர், இராட்டிரக்கூடர், சோழர் ஆகியோருக்கு கீழ் இருந்துள்ளனர். சோழர்காலத்தில் இவர்களின் ஒரு பிரிவினர் குண்டூர், கிருஷ்ணா பகுதியில் தனித்து ஆட்சி செலுத்தியுள்ளனர். மற்றொரு பிரிவினர் பெண்ணைக்கரையில் இருந்த பாணப்பாடியில் சோழர்களுக்கு கீழ் ஆட்சிசெலுத்தியுள்ளனர். தற்போதைய சேலம் மாவட்டத்தின் கீழ்பகுதி மற்றும் தென்னாற்காடு மாவட்டத்தின் மேற்பகுதி ஆகியவை கொண்ட மகதை அல்லது மகதேசத்தை ஆட்சிசெய்துள்ளனர். தற்போது ஆத்தூருக்கு அருகிலுள்ள ஆறகளூர் இதன் தலைநகராக இருந்துள்ளது.
இவர்களின் வரலாறு பற்றி ஹூல்ஸ், வால்டர் எலியட், கே.வி.சுப்ரமணிய அய்யர் முதல் ரா.நாகசாமி, கே.வி.ராமன், வி.விஜயலட்சுமி, சு.இராசகோபால் வரை பல வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, பொ.யு. 11-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டு வரை பாண்டியநாட்டுடன் தொடர்புடைய வாணாதிராயர்கள் பற்றிய முழு வரலாற்று சித்திரத்தை ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்கள் திரட்டி ’பாண்டியநாட்டில் வாணாதிராயர்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். செப்பேடுகள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், வழக்காறுகள் ஆகியவற்றை சான்றாக கொண்டும், அவர்களின் ஆட்சிப்பகுதிகள், திருப்பணி செய்த ஆலயங்கள் ஆகியவற்றை நேரில் களஆய்வு செய்தும் வெ.வேதாசலம் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூல் 1987-ல் வெளியிடப்பட்டது. எ.சுப்புராயலு அவர்கள் மதிப்புரை எழுதியுள்ளார்.
இந்நூலில் வாணர்கள் பற்றிய அறிமுகத்தையும், சோழர், பாண்டியர், முகமதியர், விஜயநகரவேந்தர், மதுரைநாயக்கர் ஆகியோரின் ஆட்சி காலங்களில் இருந்த வாணாதிராயர்கள் பற்றியும், அவர்களின் ஆட்சிபகுதிகளின் வளர்ச்சியிலும் கலையிலும் அவர்களின் பங்களிப்புகள் பற்றியும் குறிப்பிடுகிறார். முக்கியமாக ’திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயன்’ பற்றி விரிவாக உள்ளது. பின்னிணைப்பில் வாணாதிராயர்களின் இரண்டு செப்பேடுகளை பற்றி விரிவாக குறிப்பிடுகிறார். இதில் மானாமதுரை செப்பேடு தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு பற்றி கிடைத்த முக்கியமான செப்பேடாக கருத்தப்படுகிறது. அடுத்து வாணாதிராயர் குறித்த கல்வெட்டுகளையும், அவர்களின் பெயர் பட்டியலையும் தந்துள்ளார்.
சோழர்காலம்
மதுரை அழகர் கோவிலின் பொ.யு. 11-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ’பாணாதிராஜன்’ என்ற பெயர் உள்ளது. ஆகவே பாண்டிய நாட்டில் வாணர்களில் வருகை 11-ஆம் நூற்றாண்டில் துவங்கியிருக்கலாம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். அப்போது பாண்டிய நாடு சோழர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தது. சோழர்களின் அரசியல் அதிகாரிகளாக வாணர்கள் பாண்டிநாட்டிற்கு வந்திருக்கலாம் என்கிறார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டியர்கள் கலகம் செய்யாது தடுத்து நிறுத்தி இராமநாதபுரம் மதுரை மாவட்டங்களில் வாணாதிராயர்கள் குடியேற்றப்படனர். ஆனால் மூன்றாம் குலோத்துங்கனுக்கு முன்பே இவர்கள் பாண்டியர்களின் அமைச்சர்களாக இருந்துள்ளனர் என்றும் கல்வெட்டு சான்றுகளுடன் குறிப்பிடுகிறார். நிலக்கோட்டை வட்ட தென்கரை சிவன் ஆலயத்தில் 12-ஆம் நூற்றாண்டின் இறுதியை சேர்ந்த கல்வெட்டு ஒன்று பாண்டிய மன்னனின் அரசியல் அதிகாரியாக ’வாணாதிராஜன்’ என்பவன் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.
’இராசராச வாணகோவரையன் பொன்பரப்பினான் மகதைப்பெருமாள்’ என்ற வாணாதிராயன் மூன்றாம் குலோத்துங்கனின் படைத்தலைவனாக இருந்துள்ளான். மகதை மண்டலத்தை ஆட்சிசெய்துள்ளான். குடுமியான்மலை குகைக்கோவில், திருவண்ணாமலை ஆலயம், திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் இந்த அரசனைப் பற்றிய பாடல்கள் கிடைக்கின்றன. திருவண்ணாமலை ஆலயத்தை பொன்னால் வேய்ந்தான் என்பதால் பொன்பரப்பினான் என்று அழைக்கபட்டுள்ளான். இந்நூல் இவனைப் பற்றி விரிவாக குறிப்பிடுகிறது. ஆறுமுறை பாண்டியர்களை வென்றான் என்றும், இதனால் பாண்டிய குலாந்தகன் என்றும் அழைக்கப்பெற்றுள்ளான்.
மூன்றான் குலோத்துங்கன் மதுரையில் விஜயாபிசேகம் செய்துகொள்ள விரும்பினான். இதை அவனுக்குக் கீழ் மதுரையை ஆட்சிசெய்த குலசேகர பாண்டியன் மறுத்துவிடவே பாண்டிநாண்டி மீது படையெடுத்துச் சென்று வென்று குலசேகரனை பாண்டி நாட்டி விட்டு துரத்தினான். இதன் பின் மதுரையில் தன் விஜயாபிசேகத்தை நிகழ்த்தினான். இந்த வெற்றிக்கு உதவிய பாணன் ஒருவனுக்கு பாண்டியன் என பட்டம் சூட்டி என மூன்றான் குலோத்துங்கனின் மெய்கீர்த்தி கூறுகிறது. இந்த போரில் ’வாணகோவரையன் பொன்பரப்பினான்’ பங்கேற்றுள்ளான். இவனுக்கே குலோத்துங்கன் பாண்டியன் பட்டத்தை அளித்திருக்க வேண்டும் என ஆதாரங்களுடன் இந்நூலில் கூறுகிறார் ஆசிரியர். இது பொ.யு. 1202-க்கு சிறிது முந்தைய காலத்தில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்கிறார். முதலில் வாணனுக்கு முடிசூட்டி, பின் தன் விஜயாபிசேகத்தை நிகழ்த்தியுள்ளன் குலோத்துங்கள். பாண்டியனை இழிவுபடுத்தவே இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்கிறார்.
சோழனுக்கு ஆதரவாக இருந்த வாணகோவரையன் பொன்பரப்பினானுக்கு எதிராக பதினொரு தலைவர்கள் கூடி இவனுடன் எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற முடிவை எடுத்துள்ளனர், இதில் இரண்டு வாணர்களும் அடங்குவர் - மகதை நாடாழ்வானான வாணகோவரையன் மற்றும் குலோத்துங்கசோழ வாணகோவரையன். இதனை திருவண்ணாமலையில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. இது 1205-ஆம் ஆண்டை சேர்ந்தது. இதற்கு சற்று முன்புதான் மதுரையை இழந்த குலசேகர பாண்டியன் மீண்டும் மதுரையில் ஆட்சி புரிய துவங்கினான். இந்த வாணர்கள் இருவரும் பாண்டியனுக்கு ஆதரவாக இருந்தர் என இந்த கல்வெட்டு கொண்டு உய்த்தறியலாம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
வாணர் குல காசு |
பாண்டியர்காலம்
குலசேகர பாண்டியனின் தம்பி மாறவர்மன் சுந்தர பாண்டியன் 1216-ல் இளவரசு பட்டம் கட்டினான். 1218-ல் சோழநாட்டின் மீது படையெடுத்து மூன்றாம் குலோத்துங்கனுக்கு பின் அரியனையேறிய அவனது மகன் மூன்றாம் இராசராசனை வென்று சோழ ஆட்சியை முடித்தான். சோழமன்னனின் முடியை இப்போரில் தனக்கு உதவி புரிந்த பாணன் ஒருவனுக்கு சூட்டிய பின் தஞ்சையில் தன் வீராபிசேகத்தை சுந்தர பாண்டியன் செய்துகொண்டான் என அவனது மெய்கீர்த்தி குறிப்பிடுகிறது. அந்த பாணன் யார் என்ற குறிப்பு இல்லை. எனினும் அது மகதை நாடாழ்வானான வாணகோவரையன் அல்லது குலோத்துங்கசோழ வாணகோவரையனாக இருக்கலாம் என ஆசிரியர் குறிப்பிடுகிறார். இவர்கள் இப்போரில் கலந்திருக்கலாம் என்கிறார். மூன்றாம் குலோத்துங்கனின் செயலுக்கு பகை தீர்க்கவே இச்செயல் நிகழ்ந்துள்ளது. இச்செயலை அடிப்படையாக கொண்டு இரு பாடல்கள் புணையப்பட்டுள்ளன. ஒன்று திருவானைக்காவலிலும் மற்றொன்று புதுக்கோட்டை பகுதியிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இருபாடல்களும் இலக்கியச்சுவை கொண்டவை. இதை இந்நூலில் விரிவாக குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
இதன்பின் வாணர்கள் தங்கள் தலைமையை சோழர்களிடம் இருந்து பாண்டியர்களுக்கு மாற்றிக்கொண்டனர். 14-ஆம் நூற்றாண்டு வரை தலைத்திருந்த பாண்டியர் ஆட்சியில் வாணர்கள் பாண்டிய நாடெங்கும் சென்றுள்ளனர். பாண்டியர்களின் அதிகாரிகளாக, படைத்தலைவர்களாக, சில பகுதிகளின் தலைவர்களாக, சிற்றரசர்களாக இருந்துள்ளனர். வரிகள் வராது நின்ற காலங்களில் நேரில் சென்று தீர்த்துள்ளனர். பாண்டிய அரசர்களுக்கும் வேற்றுநாட்டு அரசர்களுக்கும் இடையில் நின்று காரியங்களை நிகழ்த்தியுள்ளனர். அரசியலில் தூதுவர்களாக இருந்துள்ளனர். இந்த வாணர்கள் ஒவ்வொருவர் பற்றியும் கல்வெட்டு சான்றுகளை கொண்டு ஆசிரியர் குறிப்பிட்டு செல்கிறார்.
வாணாதிராயர்கள் ஆலயங்களில் செய்த திருப்பணிகளையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பாண்டிய நாட்டிற்கு வெளியே இருந்து வந்த இவர்கள் தங்கள் கலைப்பாணியை பாண்டிய நாட்டில் பதித்துள்ளனர் என்கிறார். கள்ளங்காடு சிவன் கோவிலும், ஸ்ரீவைகுண்டம் சுந்தரபாண்டியன் கோபுரமும் இவர்கள் முயற்சியால் கட்டப்பெற்றவை. மதுரை மீனாட்சி ஆலயத்திலும் இவர்கள் பல திருப்பணிகளை செய்துள்ளனர். ஆனால் இவை தற்போது காணமுடியவில்லை என்கிறார். வாணாதிராசன் திருவாசல் என்ற திருவாசல் இருந்துள்ளனது. ’அதிரவீசியாடுவார் திருமண்டம்’ என்ற நிருத்த மண்டபத்தை நடராசருக்கு கட்டியுள்ளனர். திருநடை மாளிகை ஒன்று கட்டியுள்ளனர், தேரி ஒன்று செய்து அளித்துள்ளனர். ’விரதம் முடித்த ஈஸ்வரமுடையான்’ என்ற ஆலயத்தை மதுரை ஆலத்தினுள் இவர்கள் கட்டியிருந்தனர் என்கிறார்.
வாணாதிராயர்கள் சமூகபணிகளும் ஆற்றியுள்ளர். ஏரிகள், கால்வாய்கள் அமைத்துள்ளனர். பெருமாள்பட்டியிலும் ஆணையூரிலும் ஏரிகளுக்கு தூம்பும், வாய்க்காலுக்கு மதகும் செய்துள்ளனர் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொன்னமராவதியில் தண்ணீர்ப்பந்தல் ஒன்றை ஏற்படுத்தி அதை நிர்வகிக்க பொருளும் அளித்துள்ளான் ஒரு வாணாதிராயன்.
வாணாதிராயர்கள் பாண்டியர்களுடன் மணவுறவுகள் கொண்டுள்ளனர். பராக்கிரமபாண்டிய மாவலி வாணாதிராயர், விக்கிரம பாண்டிய வாணாதிராயர், குலசேகர மாவலி வாணாதிராயர் ஆகியோர் பாண்டியருக்கும் வாணாதிராயருக்கும் பிறந்தவர்களாக இளவரசர்களாக பட்டம் கட்டியுள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். சடாவர்மன் விக்கிரம பாண்டியனின் அரியாசனம் ‘வாணாதிராயன்’ என்று பெயர்பெற்று விளங்கியது.
வாணாதிராயர் என்ற பெயர் குலப்பெயராக மட்டுமில்லாமல் பட்டப்பெயராகவும் இருந்துள்ளது பற்றி கல்வெட்டு சான்றுடன் ஆசிரியர் கூறுகிறார். சுந்தரபாண்டியனின் முப்பதாவது ஆட்சியாண்டை சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் கல்வெட்டு அது. இதில் காலிங்கராயர் கங்கைப்பிள்ளை சூரியதேவர் மற்றும் வாணாதிராயர் கங்கைப்பிள்ளை அழகியபிள்ளை என்ற இருவரின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்களாக இருக்கலாம் என்றும், கங்கைப்பிள்ளை என்பது அவர்களின் தந்தை பெயாராக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். ஒரே குடும்பத்தில் வாணாதிராயர் மற்றும் காலிங்கராயர் ஆகிய பெயர்கள் வருவதற்கு இவை இரண்டும் பட்டப்பெயர்களாகவும் இருந்துள்ளதே காரணம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
பாண்டியர்கால வாணாதிராயர்களில் இருவரை பற்றி விரிவாக ஆசிரியர் இந்நூலில் சொல்கிறார். ஒன்று தஞ்சைவாணன். தஞ்சை என தன் பெயரில் இருந்தாலும் இவன் பாண்டிநாட்டின் பகுதியில்தான் இருந்துள்ளான். இவனது புகழ்களை பாடும் தஞ்சைவாணன் கோவை என்ற நூல் இயற்றப்பட்டுள்ளது. இதில் சந்திரவாணன் என்றும் குறிப்பிடப்படுகிறான். பாண்டியரின் படைத்தலைவனாக சென்று பல்லவர், போசாளர், சேரர்களை இவன் வென்றதாக தஞ்சைவாணன் கோவை குறிப்பிடுகிறது. பாண்டியர்களின் கீழ் இருந்தாலும் அவன் பாண்டியர்களையே புறம்கண்டவன் என்றும் அது பாடுகிறது.
அடுத்தது ‘கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காலிங்கராயன்’.
பாண்டியர்களின் பிற்காலத்தில் வாணாதிராயர்கள் பெருமதிப்புடனும் வல்லமையுடனும் இருந்துள்ளதற்கு இவன் உதாரணம். இவன் மேலே பார்த்த ‘காலிங்கராயர் கங்கைப்பிள்ளை சூரியதேவரின்’ மகனாக இவன் இருக்கலாம் என்கிறார். இவன் ’மாறவர்மன் குலசேகர பாண்டியனின்’ (1268-1311) அமைச்சராக இருந்துள்ளான். 1293-ஐ சேர்த்த இளையான் குடி கல்வெட்டு இவன் ‘பெருமற்றப்புலியூர், ஸ்ரீரங்கம், திருவாணைக்கால், திருவிடைமருதூர், திருநரையூர், திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், மதுரை, திருக்கானப்பேர், துகவூர், மணவில், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருத்தங்கல், சேரன்மாதேவி, திருநெல்வேலி, வல்லநாடு, திருக்குருங்குடி, வள்ளியூர், திருவனந்தபுரம், இளையான்குடி’ ஆகிய ஆலயங்களில் திருப்பணிகளும் பூஜைக்கு ஏற்பாடும் செய்ததை குறிப்பிடுகிறது.
குலசேகர பாண்டியனுக்கு பின் பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைய துவங்குகிறது. ”சோழப்பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கிய மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்து வாணாதிராயர்கள் பாண்டிய அரசில் அதிகமாக பங்குபெற்றனர். பாண்டியப்பேரரசு வீழ்ச்சியடையத் துவங்கிய மாறவர்மன் குலசேகர பாண்டியனின் இறுதிகாலத்தில் இருந்து அரசியலில் வாணாதிராயர்களின் பங்கு படிப்படியாக குறைந்துள்ளதை அவர்கள் பற்றிய கல்வெட்டாய்வு காட்டுகிறது” என்கிறார் ஆசிரியர் வெ.வேதாசலம்.
இதன் பிறகு நிகழ்ந்த முகமதியர் ஆட்சியின் போதும் கம்பண்ணர் படையெடுப்பின் போதும் 1378-வரை வாணாதிராயர்கள் எவ்வாறு இருந்தார்கள், யாருக்கு கீழ் ஆட்சி நடத்தினார்கள் அல்லது தனியாக ஆட்சி நடத்தினார்களா என்பது பற்றி அறிய முடியவில்லை என்கிறார் ஆசிரியர்.
![]() |
வெ. வேதாசலம் |
விஜயநகர காலம்
விஜயநகர வேந்தரகளின் காலத்தில் 1378 முதல் கிருஷ்ணதேவராயரின் ஆட்சி முடியும் 1533 வரை அவர்களுக்கு கட்டுப்பட்ட சிற்றரசர்களாக பாண்டிநாட்டின் மதுரை, பழைய இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சிசெய்துள்ளனர் என கல்வெட்டுகள் வழியாக அறியலாம் என்கிறார் ஆசிரியர். இந்த ஆட்சிப்பரப்பு செல்லச்செல்ல குறைந்தும் வந்துள்ளது. பாண்டியர் காலத்தின் அவர்களுக்கு கீழ் அதிகாரிகளாக இருந்த வாணாதிராயர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தின் முடிசூடி ஆட்சி செலுத்தியுள்ளனர். ஆனால் சக்ரவர்த்திகளாக இருக்கவில்லை. இவர்களது அரச சின்னமாக கருடன் நாணயங்களிலும் கொடிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தன. முகமதியர் இடித்துச்சென்ற ஆலயங்களை புதுப்பித்துள்ளனர்.
ஆனால் முகமதியர்கள் சென்ற பின், விஜயநகர ஆட்சியாளர்கள் யாருக்கு மதுரை பகுதியின் ஆட்சியை கொடுத்தனர் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை என்றாலும் ஒரு ஊகத்தை ஆசிரியர் முன்வைக்கிறார்.
இரண்டாம் தேவராயரின் அமைச்சர் லக்கண நாயக்கர் பாண்டிய அரசனுடைய வைப்பாட்டி வயிற்றில் பிறந்த பிள்ளைகளை பாண்டிய அரச வம்சமாக கொண்டு பட்டங்கட்டி ஆட்சியை அளித்தான் என்று மதுரைத்தலத்தார் வரலாறு கூறுகிறது: ”பாண்டிய ராஜாவினுடைய வைப்பாட்டி காளையார் கோவில் தாசி அபிராமி வயிற்றுப்பிள்ளை சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயர், காளைய சோமனார், அஞ்சாத பெருமாள், முத்தரசர், திருமலை மாவலிவாணாதிராயர் நாளையில் (இவர்களை) லக்கண நாயக்கர் கொண்டு வந்து பாண்டியனுக்குப் பிறந்த பிள்ளைகளென்று பட்டங்கட்டி வைத்துக் கையெடுத்துக் கும்பிட்டு ராஜ்யத்தையும் அவர்கள் கைவசப்படுத்திக் கொடுத்து ராஜ்யம் ஆண்டார்கள்”
இதில் குறிப்பிடப்படும் பெயர்கள் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் விஜயநகர வேந்தர்கள் யாரிடம் பாண்டிநாட்டின் ஆட்சியை அளித்தார்கள் என்பதற்கு இது விடையளிக்கிறது என்கிறார். பாண்டியர் காலத்தில் வாணாதிராயர்களுக்கும் பாண்டியர்களும் மணவுறவுகள் நிகழ்ந்துள்ளதை மேலே பார்த்தோம். ஆகவே ”இவர்களை தாசிக்கு பிறந்த பிள்ளைகள் என்று கொள்வதை விட பாண்டியர்களுக்கும் வாணாதிராயர்களுக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்த பிள்ளைகள் என்று கொள்வதே பொருத்தமானது” என்கிறார் ஆசிரியர். எனினும் இந்த நால்வரில் ’சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயர்’ பெயர் மட்டுமே அக்கால கல்வெட்டுகளில் கிடைக்கிறது.
இந்த காலகட்டத்தில் முக்கியமானவர்கள் ’திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயன்’ மற்றும் அவரது மகன் ‘சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயன்’. இவர்கள் இருவர் பற்றியும் ஆசிரியர் மிக விரிவாக எழுதியுள்ளார்.
திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயன் 1428 முதல் 1477 வரை திருமாலிருஞ்சோலையை தலைநகராக கொண்டு ஆண்டுள்ளான். இவனது முழுப்பெயர் ’திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன் உறவங்காவில்லி தாசனான சமரகோலாகலன்’. இது அழகர் கோவிலுக்கு இவன் அளித்த அம்மிக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கு கீழ் வாணர்கள் இருந்தபோது பாண்டியர்களின் பட்டப்பெயர்களை தங்களுக்கு சூட்டிக்கொண்டது போலவே திருமாலிருஞ்சோலை நின்றான் விஜயநகர அரசரின் பட்டங்களை தனக்கு சூட்டிக்கொண்டான். இவனது அரசி ஸ்ரீரங்கநாயகியார்.
இவனது கல்வெட்டுகள் ஸ்ரீவில்லியுத்தூர், அழகர் கோவில், புளியகுளம், சேவலூர், காரையூர், காஞ்சி, திண்டுக்கல், தாடிக்கொம்பு, பூவாலைக்குடி ஆகிய ஊர்களில் கிடைக்கின்றன. எல்லா கல்வெட்டுகளிலும் இவனது பெயர்கள் மாறுபடுகின்றன. ஆனால் ’திருமாலிருஞ்சோலை நின்றான்’ என்ற பெயர் தொடர்ந்து எல்லா கல்வெட்டுகளிலும் வருவதால் இதுவே இவனது இயற்பெயராக இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். இது இவனது வம்சம் திருமாலிருஞ்சோலை அழகரிடம் கொண்ட அன்பை காட்டுகிறது.
திருமாலிருஞ்சோலைக்கும் வாணாதிராயர்களுக்குமான தொடர்பு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்தே கிடைக்கிறது. பாண்டியர் காலத்திலேயே வாணாதிராய மடம் ஒன்று அங்கு இருந்துள்ளது. வாணாதிராயர்கள் அழகர் கோவிலுக்கு கொடைகள் அளித்துள்ளனர். வாணர் பற்றி பாண்டி நாட்டில் கிடைக்கும் குறிப்புகளில் பழமையானது இங்கிருந்தே கிடைக்கிறது என்கிறார் ஆசிரியர்.
திருமாலிருஞ்சோலை நின்றானுக்கும் தென்காசி பகுதியை ஆண்ட அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்கும் போர்கள் நிகழ்ந்துள்ளனர். சிலவற்றில் திருமாலிருஞ்சோலை நின்றானும் சிலவற்றில் பராக்கிரம பாண்டியனும் வென்றிருக்கலாம் என்கிறார். விஜயநகர ஆட்சி காலத்தில் தனக்கென்று நாணயம் வெளியிட அதிகாரம் படைத்தவனாக இருந்துள்ளான் இந்த வாண அரசன். இவன் வைணவ பற்றுள்ளவன், ஆகவே இவனது நாணயங்களில் கருடன் பொறிக்கப்பட்டிருக்கும். திருமாலிருஞ்சோலை நின்றான் பாண்டியனை வென்றதன் நினைவாக நாணயம் ஒன்றினை வெளியிட்டு அதன் ஒருபுறம் கருடன் பாண்டியச்சின்னமான மீனின் மீது அமர்ந்திருக்குமாறு பொறித்துள்ளான்.
இவனது ஆட்சிப்பரப்பு தெற்கே ஸ்ரீவில்லிபுத்தூர் வரையும் வடக்கே புதுக்கோட்டை பகுதியையும் உள்ளடக்கியது. 1469-ல் இவனது ஆட்சிப்பரப்பு வடக்கே காஞ்சி வரை இருந்துள்ளது என்பதை காஞ்சியில் உள்ள அவ்வாண்டை சேர்ந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆனால் 1472-ல் இருந்து விஜயநகர அரசர்களின் கல்வெட்டுக்களே அங்கு கிடைக்கின்றன. விஜயநகர வேந்தர்கள் அங்கு வலிமை குன்றியிருந்தபோது இவன் அங்குவரை சென்றிருக்கலாம் என்றும், ஆனால் அது நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இவனது புகழை பாடும் மூன்று பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவன் பாண்டியனை வென்றதை பாடுபவை அப்பாடல்கள். இன்னொரு தனிப்பாடல் இவன் காஞ்சியில் இருந்தபோது இவன் பிரிவால் வாடும் தலைவி தன் தோழியிடம் கூறுவது போல இயற்றப்பட்டுள்ளது. இவை பற்றி ஆசிரியர் விரிவாக குறிப்பிடுகிறார். இப்பாடல்கள் வாசிக்க சுவாரஸ்யமானவை.
பாண்டியர்களின் காலத்தில் பாண்டியர்கள் பின்பற்றிய சமயத்தையே வாணர்களும் பின்பற்றினர். விஜயநகர அரசர்கள் காலத்தில் அவ்வரசர்களின் சமயத்தை பின்பற்றினர். எனினும் எல்லா காலங்களிலும் சைவ வைணவ சமயங்கள் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்துள்ளனர், கொடைகள் அளித்துள்ளனர் வாணர்கள். திருமாலிருஞ்சோலை நின்றான் ஸ்ரீவில்லிபுத்தூர், அழகர்கோவில், காஞ்சி ஏகாம்பரநாதர், காமாட்சி ஆலயம், சேவலூர் பூமிசுவரமுடையார் ஆலயம் ஆகியவற்றிற்கு நிவந்தங்கள் அளித்து பணிகள் செய்துள்ளான். மீனாட்சி ஆலயத்தின் முதல் திருச்சுற்று மண்பம், சன்னிதி முன்னுள்ள மகாமண்டபம், பள்ளியறை ஆகியவற்றை இவன் கட்டினான் என மதுரை திருப்பணிமாலை கூறுகிறது. இவன் காலத்தில்தான் 1464-ல் சோமசந்தவிமானம் என்று அழைக்கப்படும் அழகர்கோயில் சுந்தரரசப்பெருமாள் கருவறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. வட்டவடிவில் அமைந்த அரிய அழகிய விமானம். பாண்டிநாட்டில் வேறு எங்கும் இதை காண முடியாது.
திருமாலிருஞ்சோலை நின்றானின் மகன் சுந்தரத்தோளுடையார் மாவலிவாணாதிராயன். கல்வெட்டுகளில் பெயர் குழப்பங்கள் இருந்துள்ளன. இருவரும் ஒருவரே என்று சொல்வதற்கான சாத்தியங்களும் உள்ளன. திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலிவாணாதிராயன் மற்றும் சுந்தரத்தோளுடையார் மாவலிவாணாதிராயன் ஆகியோர் வேறுவேறு நபர்கள் என்றும் இவர்கள் தந்தையும் மைந்தனும் ஆவர் என்றும் கல்வெட்டு சான்றுகளின் படி ஆசிரியர் நிறுவுகிறார்.
சுந்தரத்தோளுடையார் மாவலிவாணாதிராயன் 1468 முதல் 1488 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்துள்ளான். இவனது தந்தை 1477-ல் இறப்பதற்கு முன்பே இளவரசு பட்டம் கட்டி ஆட்சிப்பணியில் இருந்திருக்க வேண்டும். அதன் பின் சுந்தரத்தோளுடையான் மழவராயன் என்ற தன் பெயரை சுந்தரத்தோளுடையான் வாணாதிராயன் என்று மாற்றியுள்ளான்.
சுந்தரத்தோளுடையாரின் பல பட்டப்பெயர்களில் பாண்டியகுலாந்தகன் என்ற பெயரும் ஒன்று. இதிலிருந்து அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்கு பின் வந்த பாண்டியர்களுடன் போரிட்டு வென்றுள்ளான் என்பதை அறியலாம். இவனது கல்வெட்டுக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், நெக்கோணம், குன்னத்தூர், மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் கிடைக்கின்றன. அதிகமான கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆகவே இவன் செய்த திருப்பணிகள் பற்றி அறிந்துகொள்ள இயலவில்லை. எனினும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்தின் ஆலயத்தின் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை இவனால் கட்டப்பட்டவை. தந்தைபோல சிறப்பாக விளங்காவிட்டினும் தந்தை விட்டுச்சென்ற பாண்டியநாட்டின் பகுதிகளை ஆண்டுவந்துள்ளான். 1488-க்கு பிறகு இவனது கல்வெட்டுக்கள் கிடைக்கவில்லை. ஆகவே அதன் பின் இவன் தொடர்ந்து ஆட்சி செலுத்தினான் என்று தெரியவில்லை என்கிறார் ஆசிரியர்.
இதன்பின் 1488 முதல் 1515 வரை விஜயநகர அரசியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. இது பாண்டிநாட்டின் வாணாதிராயர்களையும் பாதித்திருக்க வேண்டும். இக்காலத்தில் வாணாதிராயர்கள் எந்த பகுதியை ஆட்சி செலுத்தினர் என தெரியவில்லை என்கிறார். கிருஷ்ணதேவராயரின் ஆட்சிகாலத்தில் 1515 முதல் 1533 வரை வாணாதிராயர்கள் ஆட்சிபுரிந்ததற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
இக்காலத்தின் ஆட்சி செய்தவன் ‘இறந்தகாலம் எடுத்த சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயன்’ (1515 - 1533). இவன் சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயனின் மகன் என்பதை நெக்கோணம் மற்றும் காளையார் கோவில் கல்வெட்டுகள் மூலம் கூறுகிறார். சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயனின் மகன் திருமாலிருஞ்சோலை நின்றான் என நெக்கோணம் கல்வெட்டு கூறுகிறது. இவன் 1488 முதல் 1515 வரை என்ன ஆனான் என தெரிவியல்லை. 1515-ல் தன் இயற்பெயரை மாற்றி தந்தையின் பெயரையும் ‘இறந்தகாலம் எடுத்த’ என்பதையும் சூட்டி ஆட்சிக்கு வந்துள்ளான் என்ற சித்திரத்தை ஆசிரியர் அளிக்கிறார்.
இவனது கல்வெட்டுகள் திருப்புல்லாணி, காளையார்கோவில், தேவிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மட்டும் கிடைக்கின்றன. இக்காலத்தில் வாணாதிராயர்கள் ஆண்ட பகுதி சுருங்கி மறவர் நாட்டில் மட்டும் நிலவியிருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம். இவன் திருப்புல்லாணி ஆலயத்தில் சந்தி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளான், நிவந்தங்கள் அளித்துள்ளான். காளையார் கோவிலில் முகமதியர்களால் இடிக்கப்பட்ட செல்லப்பிள்ளையார் கோவிலை மீண்டும் கட்டியுள்ளான்.
![]() |
சோம சந்த விமானம் அழகர் கோவில் |
மதுரை நாயக்கர் காலம்
கிருஷ்ணதேவராயர் பாண்டிய நாட்டின் ஆட்சியை விசுவநாத நாயக்கருக்கு பொ.யு.1529-ல் அளிக்கிறார். இதிலிருந்து மதுரை நாயக்கர் வம்சம் துவங்குகிறது. எனினும் 1533 வரை ‘இறந்தகாலம் எடுத்த சுந்தரத்தோளுடையான் மாவலிவாணாதிராயன்’ ஆண்டுள்ளதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவன் நாயக்க மன்னருக்கு உதவி செய்திருக்கலாம் என்கிறார்.
விசுவநாத நாயக்கர் பாண்டிய நாட்டின் அரியணை ஏறுவதை அங்குள்ள குறுநில மன்னர்கள் எதிர்த்துள்ளனர். ஆகவே விசுவநாத நாயக்கர் தன் ஆட்சிப்பகுதியை எழுபத்திரெண்டு பாளையப்பட்டுகளாக பிரித்தார். அதில் இறந்தகாலம் எடுத்த சுந்தரத்தோளுடையானுக்கு பிறகு வந்த வாணாதிராயர்களும் ஒருபகுதியின் பாளையக்காரர்களாக இருந்துள்ளனர்.
வீரப்பநாயக்கன் (1572-1595) காலத்தில் ஒரு வாணாதிராயன் மானாதுரையிலும் காளையார் கோவிலிலும் இருந்த கோட்டைகளை பலப்படுத்தி அருகிலிருந்த சிற்றூர்களை கைப்பற்றி நாயக்கர் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தான். ஆனால் வீரப்பநாயக்கன் இந்த கலகத்தை முடித்தான். வாணாதிராயனின் நாடு கைப்பற்றப்பட்டது. இதனால் வாணர்குலம் பாண்டிநாட்டில் ஆட்சிப்பொறுப்பை இழந்தது. இதன் பின் மறவர் நாட்டில் வாணாதிராயர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை என்கிறார் ஆசிரியர்.
வீரப்பநாயக்கருக்கு பின் வந்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் இராமநாதபுரம் பகுதியை சடைக்கத்தேவர் என்ற மறவர்குலத்தவர் ஒருவனுக்கு அளித்தார். சடைக்கத்தேவரும் அவருக்கு பின் வந்தவர்களும் தங்களை சேதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தினர்.
இதனுடன் பாண்டிநாட்டில் வாணர்களின் ஆட்சி முடிந்தது. திருமாலிருஞ்சோலையில் 16-ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் துவக்கப்பகுதிகளை சேர்ந்த கல்வெட்டுகள் வாணர்குலம் பற்றி சில தகவல்களை தெரிவிக்கின்றன. இவர்கள் மதுரையை ஆட்சிபுரிந்த வாணாதிராயர்களின் வழிவந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
வாணர் குல காசு |
மானாமதுரை செப்பேடு
மானாமதுரையின் மேல்கரைபகுதியில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு வாணாதிராயர் கால செப்பேடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து வெ.வேதாசலம் அவர்கள் இந்நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு பற்றி கிடைத்த செப்பேடுகளில் இதுவே பழமையானது. இதில் சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயனின் பெயர் உள்ளது. பொ.யு. 15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தது. இக்காலத்தில் மாரியம்மன் வழிபாடு பாண்டியநாட்டுப் பகுதியில் சிறப்புடன் இருந்ததை இது காட்டுகிறது.
சுந்தரத்தோள் மாவலிவாணாதிராயனின் கீழ் இராக்கப்ப ராசர் என்பவர் மானாமதுரை பகுதியின் பொறுப்பில் உள்ளார். இவர் மகள் அலங்காரம்மாளுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்ததால் அவர் மானாமதுரை மாரியம்மனை வேண்டியுள்ளார். உடல் நலம் பெற்றதும் மாரியம்மனுக்கு ஆண்டியேந்தல் என்ற பகுதியை ஆரோக்கியதானமாக ’மாரியம்மன் திருவிளையாடல் ஏந்தல்’ என்ற பெயரில் வழங்கியுள்ளார். மாரியம்மனுக்கு மண்டபமும் கட்டியுள்ளார்.
தற்போது இக்கோவில் முத்துமாரியம்மன் என்ற பெயரில் உள்ளது. இராக்கப்பராசர் கட்டிய மண்டபம் தற்போது இல்லை. பழைய அம்மன் சிலையின் தலை மட்டும் வெளியே வைக்கப்பட்டுள்ளது என்கிறார். இராக்கப்பராசரின் மகளுக்கு வந்தது அம்மை நோயாக இருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.
மாரியம்மன் வழிபாடு கர்நாடகம் மற்றும் தெலுங்கு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு விஜயநகர காலத்திற்குமுன் இருந்ததற்கு கல்வெட்டு மற்றும் செப்பேடு சான்றுகள் இல்லை. நோய்களுக்காக காளியை வழிபட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. காளி, கொற்றவை, சாமுண்டி வழிபாடுகள் இருந்துள்ளன. பொ.யு.14-ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் இந்த வழிபாடுகளை தமிழ்நாட்டிற்கு வெளியிலிருந்து வந்த மாரியம்மன் வழிபாடு பிடித்திருக்கலாம் என்கிறார் ஆசிரியர். பொ.யு.8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சேந்தன் திவாகரம் நிகண்டு காடுகாள் என்ற தாய்த்தெய்வத்திற்கு மாரி என்ற பெயர் இருப்பதை காட்டுகிறது. இத்தெய்வத்திற்கு சோழர்காலத்தில் கோவில்கள் இருந்துள்ளன. இந்த காடுகாளின் தன்மைகளுள் ஒன்றே பிற்காலத்தில் மாரியம்மனாக வழிபடப்பட்டிருக்கலாம் என்றும் ஊகிக்கிறார். இவளுக்கு வடுகி என்ற பெயரையும் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது. இதிலிருந்து இத்தெய்வம் வடுகர் வாழும் தெலுங்கு கன்னட பகுதிகளில் இருந்தும் வந்திருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்.
மாரியம்மன் வழிபாடு பொ.யு 14-ஆம் நூற்றாண்டிகு முன்பு தெலுங்கு கன்னட பகுதிகளில் சிறப்புடன் இருந்ததற்கான சான்றுகளை குறிப்பிடுகிறார். இந்த சான்றுகளின் படி இவள் சுடுகாட்டுடன் உறைந்த தெய்வம் என்றும் உணரமுடிகிறது என்கிறார். தமிழில் காடுகளுக்கு மாரி, வடுகி என்ற பெயர்கள் இருந்துள்ளன. மாரி என்ற சொல்லிற்கு மழை, மரணம் வடுகி, நோய் என்ற பொருள்கள் உள்ளன. இவை காடுகாளுக்கும் மாரியம்மனுக்கும் உள்ள உறவை காட்டுகிறது. ஆகவே காடுகாளும் மாரியம்மனும் ஒரே தெய்வமாக இருக்கலாம் என ஊகிக்கிறார். தக்க சான்றுகள் கிடைக்கும்வரை இதை உறுதியாக கூறவும் முடியாது என்கிறார்.
எனினும் பொ.யு. 15-ஆம் நூற்றாண்டில் இருந்து மாரியம்மன் வழிபாட்டிற்கே சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஹொய்சாளர், விஜயநகர படையெடுப்புகளினாலும், கர்நாடக மக்களின் குடியேற்றங்களினாலும் மாரியம்மன் வழிபாடு தமிழ்நாட்டில் பிரபலமடைந்திருக்க வேண்டும். உதாரணமாக சமயபுரம் பொ.யு.13-ஆம் நூற்றாண்டில் ஹெய்சாளர்களின் தலைநகரமாக சிறிதுகாலம் இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்.
மானாமதுரை செப்பேடு மாரியம்மனை சிறப்புமிக்க தெய்வமாக காட்டினாலும் உயர்ந்த இடத்தை பெற்ற தெய்வமாக விளங்கவில்லை என்பதையும் காட்டுகிறது. இந்த செப்பேட்டில் ‘கடையினமாதாவாகிய மாரியம்மன்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேட்டில் இறுதியில் மாரியம்மன் உமையோடு ஒப்பிட்டும் போற்றப்படுகிறாள். இந்த மாரியம்மன் நோய் பரப்பும் தெய்வமாக மட்டுமல்லாமல் நோயை தீர்க்கும் தெய்வமாகவும் தமிழ் மக்களிடம் இருந்துள்ளாள் என்பதை இச்செப்பேடு காட்டுகிறது. மேலும் இராக்கப்பராசர் போன்ற உயர்குடிகளும் நடுத்தர மக்களும் மாரியம்மனை வழிபட்டுள்ளனர் என்பதையும் காட்டுகிறது.
இந்நூல் வாணாதிராயர்களின் வரிசை மட்டுமல்லாமல் அவர்களின் காலத்தில் இருந்த நில அமைப்பு, அளவுகள், நாணயங்கள், அதன் வகைகள் ஆகியவற்றை பற்றியும் விரிவாக பேசுகிறது. மானாமதுரை செப்பேட்டுடன் ஆவுடையார் கோவில் செப்பேட்டையும் விவரிக்கிறது. மானாமதுரை செப்பேட்டை கொண்டு ஆசிரியர் மாரியம்மன் வழிபாட்டின் வரலாற்றை ஆராய்வதும், ஒரு குறிப்பிட்ட சிற்றரச குலத்தின் வரிசையையும் அதன் ஆட்சியை விரிவாக குறிப்பிடுவதும் இந்நூலை முக்கியமான முன்னோடி நூல்களில் ஒன்றாக ஆக்குகிறது.
பாண்டிநாட்டில் வாணாதிராயர்கள் நூல்
தாமரைக்கண்ணன் அவிநாசி
தாமரைக்கண்ணன் தத்துவம் கலை சார்ந்த படைப்புகளை மொழிபெயர்த்து வருகிறார். இவருடைய மொழிபெயர்ப்பில் ஆனந்தகுமாரசாமியின் 'இந்திய கலையின் நோக்கங்கள்' என்ற நூல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து மின்னிதழ்களில் கலை, தத்துவம் சார்ந்து மொழிபெயர்த்தும் கட்டுரைகள் எழுதியும் வருகிறார்.