Wednesday, 9 July 2025

மெலட்டூர் பாகவத மேளா ஓர் அறிமுகம் - பரதம் ஆர். மகாலிங்கம், முரளி ரங்கராஜன்


‘பாகவத மேளா’ செவ்வியல் நடனம், இசை உதவியுடன் நிகழும் மேடைக்கலை வடிவம். தொடங்கியது முதல் இப்போது வரை இக்கலை ஆலயம் சார்ந்து இயங்கி வருகின்றது. வழக்கிலுள்ள செவ்வியல் கலைவடிவங்களில் இல்லாத இசைக்கோர்வை, நடன அமைப்பு, தனித்துவமான ராக நிரவல்கள் எல்லாம் இணைந்து பாகவதமேளா என்னும் கலைவடிவை தனிச்சிறப்புள்ளதாக ஆக்குகின்றது. நாடகமும் நடனமும் இணைந்த இந்த கலைவடிவம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. இக்கலைக்கான அனைத்துப்பங்களிப்புகளும், அதாவது நடனம், நடிப்பு, இசை இப்படியாக இவை அனைத்தும் இதுநாள்வரை ஆண்களால் மட்டுமே செய்யப்படுகின்றது. முற்காலத்தில் ஆண்கள் நடனமாடுவதற்கு இருந்த மிகச்சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். தொழில்முறைக்கலையாக இல்லாமல் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் மீதான பக்தியின் வெளிப்பாடாகவே பாகவத மேளா இன்றளவும் நிகழ்த்தப்படுகின்றது. 

பரதநாட்டியம் போன்ற செவ்வியல் நடனத்தைக் காதலிப்பவர் கண்களுக்கு பாகவதமேளா ஒரு விருந்து. இசை ஆர்வலர்களுக்கோ பாகவதமேளா தலைசிறந்த கர்நாடக இசை அனுபவம். நாடகப் பிரியர்கள் பரதரின் நாட்டிய சாஸ்திரம் கூறும் நாடக மரபின் வாழும் தொடர்ச்சியாக பாகவத மேளாவை உணரலாம். மொத்தத்தில் பக்தி பாவம், நடனம், நாடகம், தூய இசை ஆகியவற்றை உள்ளடக்கி நிகழ்வது பாகவதமேளா. 


தஞ்சை தென்னிந்திய கலைகளின் தலைநகரம் என்ற புகழைக் கொண்டது. சோழர் காலம் முதல் நாயக்கர், மராட்டிய ஆட்சியாளர்கள் என அரசர்களால் போற்றப்பட்டது தஞ்சை பகுதியின் கலைகள். தஞ்சை பகுதியானது தமிழ், தெலுங்கு, மராட்டியம் ஆகிய பண்பாடுகள் பின்னிப்பிணைந்த செரிவான பாரம்பரியத்தை உடையது. காவிரியின் கழிமுகத்தில் நிலப்பரப்பை கொண்ட தஞ்சைப் பகுதியானது அரசர்களை, கலைஞர்களை, மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த பண்பாட்டின் ஒரு பகுதியாக பாகவதமேளா திகழ்கிறது. 

தஞ்சையில் மராட்டியர்களின் ஆட்சிகாலம் முடிந்தவுடன் பாகவத மேளா போன்ற கலைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த இருண்ட காலத்தில் மகத்தான நூல்கள் தொலைந்தன, வாய்மொழி மரபு அறுந்தது, நாடகங்கள் நிகழ்த்தப்பட்டாமல் ஆயின. இதை மீட்டெடுக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டன, இன்றும் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மறைந்துவரும் தென்னிந்திய கலைகளில் ஒன்றாகத்தான் பாகவதமேளா வகைப்படுத்தப்படுகிறது. 

மெலட்டூர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர்
பாகவதர்கள்


பாகவதமேளா நாடகத்தில் பாகவதர்கள் பாடி, ஆடி, பக்தியுடன் புராணக்கதைகளை நடிப்பர். இந்த கதைகள் பெரும்பாலும் சைவம் வைணவத்திலிருந்து எடுக்கப்பட்டவை. தமிழையும் தெலுங்கையும் பேச்சு மொழியாகக் கொண்டு நரசிம்மரை வழிபடும் ஸ்மார்த்த பிராமணர்களால் பாகவதமேளா நூற்றாண்டுகளாக தஞ்சையில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. 

மெலட்டூர் பாகவதர்கள் லக்ஷ்மீ நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடுபவர்கள். நரசிம்ம ஜெயந்தியை ஒட்டிய ஒரு சடங்காகவே பாகவதமேளாவை நிகழ்த்துபவர்கள். இவர்கள் வழிபடும் நரசிம்மர் ஆலயம் மெலட்டூர் கிராமத்தின் மேற்கில் உள்ள நாராயண தீர்த்தம் என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ளது. மெலட்டூர் பாகவத மரபில் வந்த ‘வெங்கடராம சாஸ்திரி’ பத்துக்கு மேற்பட்ட நாட்டிய- நாடகங்களை இயற்றியுள்ளார், இவரின் படைப்புகளே இன்று மெலட்டூரில் நிகழ்த்தப்படுகின்றன. இவரின் படைப்புகள் மரபின் செழுமைக்கும், பக்திக்கும் சான்றாக விளங்குகின்றன. 

மெலட்டூரில் மட்டுமல்லாமல் ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர், நல்லூர், சூலமங்கலம், சாலியமங்கலம், மன்னார்குடி ஆகிய ஊர்களில் மரபாக பாகவதமேளா தொடர்ந்து நிகழ்ந்துவருகிறது. இவை அனைத்துமே தஞ்சைக்கு அருகிலுள்ள பகுதிகள். பாகவதமேளா தஞ்சை அரசவையிலும் நிகழ்ந்துள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் நூலக சேகரிப்பு ஒன்றில் பாகவதமேளா கலைஞர்கள் பலர் தீபாம்பாள்புரம் என்ற கிராமத்தில் வசித்தது பற்றிய வரலாற்றுக் குறிப்பு கிடைக்கிறது. அவர்களில் ஒருவர் ஸ்ரீ கிரிராஜ கவி, இவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் தாய்வழி தாத்தா. பிரம்மஶ்ரீ ஶ்ரீதியாகராஜ சுவாமிகளும் கூட இந்த பாகவத மரபில் ஒருவராக வைத்துக் கூறப்படுகிறார். பாகவதமேளா மரபை ஒட்டி அவர் இயற்றிய ’நௌகா சரித்ரமு’ நூல் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. 

பாகவதமேளாவும் பாகவத மரபின் சில தனித்தன்மைகளும்

  1. பங்களிப்பாளர்கள் அனைவரும் ஆண்கள், பெரும்பாலும் அந்தணர்கள், லக்ஷ்மி நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடுவர்கள்.
  2. பாகவதர்கள் ஊர்விட்டு ஊர்சொல்லும் பாணர்கள் அல்ல. எனினும் அரசவைகளில் நாடகங்களை நிகழ்த்தியுள்ளது பற்றி குறிப்புகள் உள்ளன.
  3. பாகவதர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்ல. அவர்கள் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். தற்காலத்தில் தொழில் செய்கின்றனர், பணியாற்றுகின்றனர். பாகவதமேளா நடிகர்கள் அவர்களின் பங்களிப்புக்காக ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்வதில்லை.
  4. சில கதாபாத்திரங்கள் தலைமுறைகளாக தந்தையிடமிருந்து மகனுக்கு கையளிக்கப்படுபவை. இந்த மரபு இன்றும் தொடர்கிறது.
  5. மெலட்டூர் நாடகங்கள் பக்தியை முதன்மையாக கொண்டவை. சிருங்கார பாவம் கொண்ட நாடங்கள் இருந்தாலும் (உதாரணமாக, அரசர் இரண்டாம் ஏகோஜி இயற்றிய சாகுந்தலம்), பக்தியே அனைத்து நாடகங்களிலும் முதன்மையான பாவமாக, உணர்ச்சியாக உள்ளது.
  6. பிரம்மஸ்ரீ ஶ்ரீ தியாகராஜ சுவாமிகளின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த, மெலட்டூரை சேர்ந்த நாடக ஆசிரியர்கள் ஸ்வராஜாதி, சப்தம், தில்லானா போன்ற வடிவங்களில் நாடகங்களை இயற்றியுள்ளனர். இது பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மெலட்டூர் பாகவதமேளா

மெலட்டூர் பாகவதமேளா மரபின் முக்கிய நிகழ்வு வருடாவருடம் நரசிம்ம ஜெயந்தி அன்று, வெங்கடராம சாஸ்திரி இயற்றிய ‘பிரஹலாத சரித்ரமு’ நாட்டிய நாடகத்தை நிகழ்த்துவது (இது இருபதாம் நூற்றாண்டில் சில ஆண்டுகள் நிகழ்த்தப்படாமல் இருந்தது). ஹரிச்சந்திர நாடகமு, ருக்மிணீ கல்யாணமு, சீதா கல்யாணமு ஆகிய வேறு நாட்டிய நாடகங்களும் இதில் நடிக்கப்படுகின்றன. 


நாடக அமைப்பு


மேளப்ராப்தி: எல்லா நாடகங்களும் மேளப்ராப்தியுடன் தொடங்கும். இது இறைவணக்கம், அத்துடன் நாடகத்தின் சுருக்கத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. மேலும் பாடகர்கள், நாட்டியக்காரர்கள், நட்டுவாங்கம் செய்பவர்கள் தங்களை இலகுவாக்கிக்கொண்டு முழுநிகழ்வுக்கும் தயாராவதற்கு இப்பகுதி உதவும். வெவ்வேறு தாளங்களில் (திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ர சாபு, மிஸ்ர ஜம்பை) பல சொல்கட்டுக்கள் மற்றும் வெவ்வேறு ராகங்களில் பல இசைக் குறிப்புகள் இடையிடையே வரும். இது நாடகம் தொடங்குவதற்கான சூழலை உருவாக்கும். இது நாட்டிய சாஸ்திரம் குறிப்பிடும் பூர்வரங்கத்திற்கு இணையானது. 


கோணங்கி பாத்திர பிரவேசம்: இது மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி இயற்றிய தனித்தன்மைவாய்ந்த அம்சம். தஞ்சை அரசவையின் ஒரு தூணில் கோணங்கியின் சிற்பம் ஒன்று உள்ளது. மெலட்டூர் பாகவத மேளாவில் முதலில் வரும் பாத்திரம் கோணங்கி. மரபான பாதவதர் பாணி உடை அணிந்திருந்தாலும் பின்புறம் நோக்கியிருக்கும் கூம்புவடிவ குல்லாய் அணிந்திருப்பார், தலையை சுற்றி துணிகட்டியிருப்பார். சதுஸ்ர ஏக தாளத்தில் அமைந்த காம்போதி ராகத்தில் பாடப்படும் பாத்திர பிரவேசத்திற்கு ஏற்ப ஆடியவாறு வருவார். இது மேளப்ராப்தியின் ஒரு பகுதியே. 


கோணங்கி
சரணு தரு & தோடய மங்கலம்: போதேந்திர சுவாமிகளால் (ஸ்ரீ பகவான்நாம போதேந்திர சரசுவதி சுவாமிகள் ஐம்பத்து ஒன்பதாவது காஞ்சி காமகோடி பீடாதிபதி) இந்த வடிவங்கள் பிரபலமானது. கும்பகோணம், தஞ்சாவூரின் பஜனோற்சவ மரபின் ஒரு பகுதியாக நிலவுகிறது. இவை அரசர்களை மைய பாத்திரமாக கொண்டு இயற்றப்பட்ட சின்ன மேளம் அல்லது சங்கீத மேளத்தில் அவர்களின் வீரத்தை, ஒழுக்கத்தை, அழகை, செல்வத்தை புகழும்படியாகவும் இசைக்கப்படும். 

சப்தம்: மெலட்டூர் சப்தங்கள் நாட்டிய மரபில் புகழ்மிக்கவை. அவை எளிய வரிகளும் சொற்கட்டுகளும் உடையவை. காம்போதி ராகத்தில் இயற்றப்பட்டவை, மிஸ்ர சாபு தாளம் கொண்டவை. பாகவதமேளா நாடகங்களில் சப்தங்கள் சிலசமயம் கதையின் சுருக்கத்தை கொண்டிருக்கும். அவை கதா சங்ரக சப்தங்கள் எனப்படுகின்றன. ருக்மிணி கல்யாணத்தில் சப்தம் ராமாயணத்தின் சுருக்கத்தைக் கொண்டிருக்கும். 


கணபதி பாத்திர பிரவேசம்: இது தஞ்சைக்கு மட்டுமே உள்ள மரபு. நாடகத்தில் கணபதி பார்வையாளர்களுக்கு அருளவும், உற்சவம் எந்த சிக்கல்களும் இல்லாமல் நடைபெறவும் வருகிறார். பொதுவாக, ஒரு சிறுவன் இந்த கணபதி பாத்திரத்தை ஏற்று வருவார். பாடகர்கள் தரு பாடும்போது அச்சிறுவன் கணபதியின் முகமூடியை அணிந்துகொண்டு நடனமிட்டபடி வருவார். சிலசமயம் மூத்த பாகவத கலைஞர் அச்சிறுவனை அழைத்துக்கொண்டு வருவார். தரு பாடி முடியும் போது கணபதி மேடையில் போடப்பட்டுள்ள தனது ஆசனத்திற்கு சென்று அமர்வார். பாகவதர்கள் அவருக்கு மலரும் ஆரத்தியும் காட்டி வழிபட்ட பின் அவரை மேடையில் இருந்து இறக்குவர். 


 கணபதி 

கட்டியங்காரன் மற்றும் சூத்ரதாரர்: கட்டியங்காரன் பாத்திரம் நுழையும் போது நாடகம் துவங்கப்படுகிறது. பொதுவாக, இவர் நாயகரின் அரசவை உறுப்பினர் அல்லது நாயகனின் வருகையை அறிவிப்பவராக இருப்பார். கட்டியங்காரன் மேடையை விட்டு வெளியேற இயலாத நாடகங்களில் (உதாரணமாக, நாயகர் அரசனாக இல்லாத நாடகங்கள்), அந்த பாத்திரம் அந்த நாடகத்தின் சூத்ரதாரியாகவும் இருக்கும். பிரவேச தரு இவரின் ஆடை, செயல்கள், பணி ஆகியவற்றை குறிப்பிடும். கட்டியங்காரன் கையில் ஒரு கோல் வைத்திருப்பார். பார்வையாளர்களை அமைதியாக இரு என அதைக்காட்டி எச்சரிப்பார். இவர் நாடகத்தில் அசரர் வருவதை அறிவிப்பவர். வெங்கடராம சாஸ்திரியின் பாகவத மேளா நாடகங்களில் சூத்திரதாரி பேசுவதற்கு நீண்ட வசனங்கள் இருக்கும். அதன் பிறகு நாயகர் மேடையில் தோன்றுவார், அவரை அடுத்து நாயகி தோன்றுவார். 


கட்டியங்காரன்

பாத்திர பிரவேச தருக்கள்: பாத்திர பிரவேச தருக்கள் பாத்திரங்களுடைய ஆளுமை, குணங்களை குறிப்பிடுகின்றன. அவை நாடகத்தின் கதைமாந்தர்களுடைய செயல்பாடுகள், ஆடை, நடை, முக பாவனைகள் ஆகியவற்றை வரையறுத்து கூறும். அந்த பாத்திரத்தின் வருகையின் போது சூழலில் என்ன நிகழ்கிறது என்பதை கூறும். பாத்திரபிரவேச வரிகளின் மேடைக்கான குறிப்பாகவும், இயக்குனருக்கான கையேடாகவும் பயன்படும். உதாரணமாக பிரகலாத சரித்திரத்தில் உள்ள ஹிரண்யஹசிபுவின் பாத்திரபிரவேச வரிகளை பார்க்கலாம். “ஹிரண்யஹசிபு அசுரர் படைசூழ விரைந்த நடையுடன் மேடையில் நுழைகிறார். நிகரற்ற அந்த மாவீரரின் நடையில் பூமி அதிர்கிறது. அவரின் முகத்தில் தன்மீதான பெருமை உணர்ச்சி வெளிப்படுகிறது. அமைச்சர்களும் தளபதிகளும் அவரின் அருகில் நிற்கின்றனர். கம்பீரமாக அரசர் நடந்துவரும்போது அவர் தன் கைகளை மார்பில் கட்டியுள்ளார். அவரை சூழ்ந்துள்ள மக்கள் அவரை போற்றி வாழ்த்துகின்றனர்.”

நாயகிகளின் பாத்திரபிரவேச தருக்களில் மரபாக இரண்டு பெண்கள் நாயகிக்கு முன் ஒரு திரையை பிடித்து நாயகியை மறைத்துகொண்டு வருவர். திரைப்பாடு எனப்படும் பாடலுக்கு நாயகி நடனமிட்டுக்கொண்டு வருவார். பிறகு தன்னை முழுவதுமாக பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டுவார். 

நாடத்தில் த்விபதம் (ஈரடி), சீச பத்யம் (தாளம் இல்லாமல் பாடப்படும் வரிகள்), கந்த பத்யம், சூர்ணிகை போன்றவையும் பயன்படுத்தப்படும். இவை ஈரடி, நாலடி அமைப்பில் உள்ள பாடல்கள். நாடக பிரதிகளில் சில பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இடம்பெறும். இவை ஞானம் மற்றும் தத்துவ உண்மைகளை விரித்துரைக்கும். இவற்றை இயற்றிய வெங்கடராம சாஸ்திரி மொழி, இசை, நாட்டிய சாஸ்திரம், நாடகம், அழகியல் ஆகியவற்றில் கொண்டுள்ள புலமையை அவை காட்டுகின்றன. ருக்மணி கல்யாணத்தில் சாஸ்திரி குறத்தி, குடுகுடுபாண்டி பாத்திரங்களையும், பிரகலாத சரித்திரத்தில் பாம்பாட்டி, மல்லர்கள் பாத்திரங்களையும் இணைத்துள்ளார். இவை நாட்டார் பாத்திரங்கள், நாட்டுப்புற பார்வையாளர்களுக்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன. 

மெலட்டூர் பாகவத மேளா இசைக் குழு 2025
இசை

பாகவதமேளாவில் முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ள இசை வடிவம் 'தரு'. நாட்டிய சாஸ்திரத்தின் ‘தரு’ அத்யாயத்தில் ஆறு வகை தருக்கள் குறிப்பிடப்படுகின்றன. முதலாக வருவது பிரவேசிக தரு, இது பாத்திரங்களை அறிமுகப்படுத்துவது. சம்வாத தரு (விவாதம்), பிரலாப தரு (விளக்கம்), தில்லானா தரு, சரணு தாரு (வழிபாடு அல்லது சரணடைவதல்), மங்கல தரு (வாகை அல்லது மங்கலம்) ஆகியவை பிற தருக்கள். தருக்கள் கதையின் மைய கருத்துக்களை இணைப்பதால் அவை தருவாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. 'தரு’வின் அமைப்பு கிருதியின் அமைப்பை ஒத்திருக்கும். இது பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என மூன்று பிரிவுகளாக இருக்கும். கிருதியில் இருப்பது போலவே பல்லவிகளும் சரணங்களும் மத்ய ஸ்தாயி அல்லது மந்திர ஸ்தாயியாக இருக்கும். அனுபல்லவி முதன்மையாக தார ஸ்தாயியில் இருக்கும். பல நிகழ்வுகளில் குறிப்பாக பிரவேச தருக்களின் நாடகீய உணர்ச்சிக்காக அனுபல்லவி முதலில் பாடப்படும். 

உணர்ச்சி மற்றும் பாவனைக்காக தருக்கள் ரக்தி ராகத்தில் இயற்றப்பட்டிருக்கும். ராகங்கள் கதாப்பாத்திரத்தின் தன்மையையும் குணத்தையும் காட்டும் பொருட்டு அல்லது காட்சியின் தன்மையை காட்டும் பொருட்டு தேர்வுசெய்யப்படும். சில குறிப்பிட்ட ராகங்கள் பாத்திரபிரவேசத்திற்காக பயன்படுத்தப்படும். உதாரணமாக பேகடா (பிரகலாத சரித்திரத்தில் கணபதி, சீதா கல்யாணத்தில் தசரதன்), தேவகாந்தாரி (பிரகலாத சரித்திரத்தில் ஹிரண்யஹசிபு, ஹரிச்சந்திராவில் சந்திரமதி), பைரவி (பிரகலாதன்), காம்போதி (ஹரிச்சந்திரன்) போன்றவை. முஹாரி, தன்யாசி, மாஞ்சி, சாரங்கா, அபோகி, அஹிரி போன்ற ரக்தி ராகங்கள் மற்ற தருக்களில் பயன்படுத்தப்படுகின்றன. காந்தா மற்றும் கும்ப காம்போஜி போன்ற ராகங்களும் பாகவத மேளாவில் பயன்படுத்தப்படுகின்றன. 

எந்த ராகத்தை எந்த தருவில் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான குறிப்பு நூல்களில் இருந்தாலும், காலம் செல்லசெல்ல சில மாறுபாடுகள் நிகழ்ந்துள்ளன. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன: முதல் காரணம், இந்த பாடல்கள் வாய்மொழியாக வந்தவை, ஆகவே துவக்ககால ஆசிரியர்கள் சில மாறுபாடுகளை செய்து, அது பழக்கத்தில் இருந்திருக்கலாம். இரண்டாவது காரணம், ஒரு நாடகம் புதிதாக மறுகட்டமைப்பு செய்யப்படும் போது, தலைமை ஆசிரியர் சில மாறுபாடுகளை செய்திருக்கலாம் - உதாரணமாக, ஒரே ராகம் திரும்பத்திரும்ப வரும்போதோ அல்லது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராகம் கதை சந்தர்ப்பத்திற்கு பொருந்தாமல் இருக்கும்போதோ மாற்றியிருக்கலாம். என்ன மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், அது தியாகராஜருக்கு முந்தைய கர்நாடக இசையின் தூய்மையையும் பாகவதமேளா பாணியையும் பேணுவதாகவே இருக்கும். ஒருவிதிவிலக்காக, அதிகமாக நிகழ்த்தப்படும் பிரகலாத சரித்திரம் மற்றும் ஹரிச்சந்திரா ஆகிய நாடங்களில் பாகவதமேளா பாணியின் இசை அவ்வாறே இன்றும் உள்ளது என உறுதியாக கூறமுடியாது. ’பாகவதமேளா நாட்டிய வித்யா சங்க’த்தின் இசை கலைஞர்கள் பரதம் நடேச ஐயரின் (1855-1931) குறிப்புநூலில் உள்ள இசை முறைமையையே இன்று பயன்படுத்துகின்றனர். அந்த குறிப்புநூலில் உள்ள பாடல்களும் குறிப்புகளும் நடேச ஐயரின் மகள் கல்யாணியம்மாள் அவர்களால் எழுதப்பட்டது. அதில் தெலுங்கு பாடல்கள் தமிழ் எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன. இது சொற்களை பிழையாக உச்சரிக்கவும் வழிவகுக்கும். எனினும் அந்த கலைக்குழுவில் உள்ள அறிஞர்கள் அவ்வாறான பிழைகள் நடைபெறாமல் தவிர்க்கின்றனர். 

தருக்களின் பாடல்களில் யதி, பிராசம், அனுபிராசம், யமகம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை வெங்கடராம சாஸ்திரியின் தெலுங்கு புலமையையும், இவற்றைக்கொண்டு உன்னதமான தெய்வீக இசையை கட்டமைத்ததின் திறனையும் காட்டுகின்றன. 

ராகங்களின் கால-நேரமும் அந்த பாடல்களில் கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக பூபாள ராகம் நாடகம் முடிவடையும் புலரி வேளையில் பாடப்படும்.

பெண் வேடத்தில் ஆண் கலைஞர்கள்
நடனம்

பாகவதமேளாவின் பாடல்கள் நடனத்திற்கு ஏற்றவையாக அமைக்கப்பட்டிருக்கும். அலாரிப்பூ, ஸ்வரஜதிகள், ஜதிஸ்வரங்கள், பதவர்ணங்கள், தில்லானா ஆகியவை பெரும்பாலும் பிரவேச தருக்களில் அறிமுகமாகின்றன. மெலட்டூர் சப்தங்கள் புகழ்பெற்றவை, அவை குச்சிபுடிக்குள் சென்றிருப்பதை காணமுடிகிறது. அலாரிப்பூக்கள் தருவின் தாளத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டு ஐந்து கதிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது அனைத்து கதிகளிலும் நிகழ்த்தப்படுகின்றன. இன்றைய பாகவதமேளாவின் சிறப்புகளில் ஒன்று என்னவென்றால், அலாரிப்பூக்களை ஐந்து கதிகளிலும், பல தாளங்களில் (உதாரணமாக ஆதி தாளம் [இரண்டு கலை], ரூபக தாளம் அல்லது ஆதி தாளம் [திஸ்ர கதி], மிஸ்ர சாபு தாளம் ), பல எடுப்புகளில் காணமுடியும் என்பது.

மிகச்சிக்கலான தாள வகைகள் நிருத்தத்துடன் இருக்கும், குறிப்பாக மெய்யடவு. இது மெலட்டூர் பாணியின் சிறப்பு. தருக்களை பாடும்போது கலைஞர்கள் நிருத்தத்தையும் (பாத அசைவுகள் / அடவுகள்) நாட்டியத்தையும் (மெய்ப்பாடு / உணர்வுகளை வெளிப்படுத்துதல் ) ஆடுவர். பெண் பாத்திரங்களை ஏற்று ஆடும் இளைஞர்களின் அசைவுகளில் கனிவும் கண்ணியமும் வெளிப்படும். நாயகிகளின் பாத்திர பிரவேச தருக்களில் சிலசமயம் அலாரிப்பூ, பதவர்ணம் அல்லது தில்லானா ஆகியவை இருக்கும். அபிநயங்கள் வரும் பிற தருக்கள் மெல்லிய நிருத்தங்களுடன் நிகழும். எல்லா நடிகர்களும் குறைந்த அளவிலாவது தாளத்தின் புரிதலை வெளிப்படுத்தி காட்டவேண்டும். பாகவதமேளா நடனத்தின் மிகமுக்கியமான அம்சம் என்பது அது சடங்குசார்ந்த நிகழ்த்து வடிவம் என்பது. நாடகத்தில் பங்களிப்பாற்றும் அனைவரும் தங்களின் பங்களிப்பை நாட்டியக்காரர்களாக, நடிகர்களாக, பாடகர்களாக அல்லாமல் வழிபாடாக செய்யவேண்டும்.

கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி

மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி - அறிமுகமும் பங்களிப்பும்

பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தஞ்சை மராத்தி அரசரின் அவையில் இருந்த பல கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் மெலட்டூரிலும் தஞ்சையை சுற்றியுள்ள பிற பகுதிகளில் வாழ்ந்துவந்தனர். அவர்களில் ஒருவர் மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி. அவர் இயற்றிய நாட்டிய நாடகங்கள் பாகவதமேளா மரபின் பக்திக்கும், இசை ஆழத்திற்கும், நாடகீய சித்தரிப்பிற்கும், நாட்டிய நுணுக்கங்களுக்கும் சான்றாக நிலைத்துள்ளன. 

வெங்கடராம சாஸ்திரி பற்றி நாம் அறிந்துகொள்வது அனைத்தும் அவர் இயற்றிய படைப்புகளில் உள்ள குறிப்புகளை வைத்தே. அவரின் மார்கண்டேய சரித்திரத்தின் கதா சங்ரகத்தின் ஒரு ஈரடியில் அவை தான் வாழும் நிலமானது “திருதௌ ஸ்ரீ சிவாஜி க்ஷிதிபதி தன்யு ராஜ்யம்புன’ என குறிப்பிடுகிறார். இதிலிருந்து அவர் தஞ்சை அரசர் சிவாஜியின் (1833-1855) காலத்தில் வாழ்ந்தார் என ஊகிக்க முடிகிறது. ‘பாகவதமேளா நாட்டிய வித்யா சங்கத்தின்’ ஸ்ரீ மகாலிங்கம் (மாலி) அவர்களிடம் உள்ள சாஸ்திரி இயற்றிய ஹரிச்சந்திராவின் ஓலைச்சுவடியில் அது ’தாரள வருஷம், ஆவணி மாதம், 17-ஆம் நாள், திங்கள்’ அன்று இயற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 30 1824. இதை இயற்ற சாஸ்திரிக்கு குறைந்து இருபத்தைந்து வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆகவே இவரின் காலத்தை 1800-1875 என ஊகிக்கலாம். ஸ்ரீ சுப்பராமா தீக்‌ஷிதர் தனது நூலில் (ஸங்கீத ஸம்ப்ரதாயா ப்ரதர்ஷினி) அரசர்கள் சரபோஜி மற்றும் சிவாஜி ஆகியோரின் காலத்தின் சாஸ்திரி வாழ்ந்தார் என குறிப்பிடுகிறார். யக்‌ஷகான ஆய்வாளர் ஸ்ரீ ஜோகா ராவ் அவர்கள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு இளையவர் வெங்கட்ராம சாஸ்திரி என குறிப்பிடுகிறார். 

மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி கோபாலகிருஷ்ண ஐயருக்கு பிறந்தார். குரு லக்ஷ்மண ஐயரிடம் கல்வி கற்றார். தஞ்சை அரசவையின் பாகவதமேளா தலைமை கலைஞர் வராஹப்பைய தீட்சிதர், பஞ்சநாத தீட்சிதர் மற்றும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆகியோருக்கு சமகாலத்தவர். லக்ஷ்மி நரசிம்மரின் உபாசகர். 

இவர் இயற்றிய நாடகங்கள்:

  1. பிரகலாத சரித்திரமு

  2. ருக்மணி கல்யாணம்

  3. மார்க்கண்டேய சரித்திரமு

  4. உஷா பரிணயமு

  5. ஹரிச்சந்திரா

  6. சீதா கல்யாணமு

  7. பார்வதி பரிணயமு

  8. கம்ச வதம் (அல்லது) கிருஷ்ண லீலா

  9. ஹரிஹர லீலா விளாசம்

  10. துருவ சரித்திரமு

ருக்மாங்கத சரித்திரமு இவர் இயற்றியதாக கூறப்பட்டாலும் அதன் கதா சங்ரகத்தில் இதற்கான ஆதாரம் இல்லை. (கதா சங்ரகம் என்பது கதைச்சுருக்கம் மற்றும் அந்த நாடகத்தை இயற்றியவர் அதை தான் இயற்றியது என்றும், எப்போது, எங்கு இயற்றியது என்றும், நாடகம் எப்படி அரங்கேற வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பார்). மேலும் காலஞ்சென்ற பாகவதமேளா குரு பத்மஸ்ரீ பாலு பாகவதர் ருக்மாங்கத சரித்திரமு நாடகத்தை இயற்றியவர் ’ஸ்ரீ வராஹபுரி வசஸ்தா ஸ்ரீ நாராயண தீர்த்த விரகிதமிதி கேசித் வதந்தி’ என குறிப்பிட்டுள்ளார்.

சிவராத்திரி வரத சரித்திரமு நாடகத்தை இயற்றியவர் வெங்கடராம சாஸ்திரி என ஜோகா ராவ் குறிப்பிடுகிறார். இந்த நூல் மெலட்டூரில் கிடைத்துள்ளது. எனினும் இதன் கதா சங்ரகம் உட்பட இதன் பல பகுதிகள் கிடைக்கவில்லை. ஆகவே இதை இயற்றியவர் சாஸ்திரி என உறுதியாக கூற முடியாது. மேலும் ஜோகா ராவ் சத்சங்கராஜ சரித்திரமு, அசத்சங்கராஜ சரித்திரமு, ஜகன்லீலா போன்ற நாடகங்களையும் சாஸ்திரி இயற்றியதாக குறிப்பிடுகிறார். ஆனால் இவற்றிற்கும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

பரதம் மகாலிங்கம்

முரளி ரங்கராஜன்

தமிழில்: தாமரைக்கண்ணன் அவிநாசி

ஆங்கில மூலம் - Melattur Bhagavata Mela - Bharatam. R. Mahalingam and Murali Rangarajan

------------------------------

பரதம் ஆர்.மகாலிங்கம்

பரதம் ஆர்.மகாலிங்கம் (எ) மாலி 1952ல் பிறந்தார் இவரது தந்தை மெலட்டூரை சேர்ந்த இராமலிங்க ஐயர். பாலு பாகவதரிடமும், கிட்டப்பா பிள்ளையிடமும் நேரடியாக பயின்றவர். பி கே சுப்பையர், ஹேரம்பநாதன் போன்ற சிறந்த கலைஞர்களோடு இணைந்து பாகவத மேளாவில் பங்களித்தவர். பிரகலாத சரித நாடகத்தில் 1962ல் பிரஹலாதனாக நடித்தார். அதன் பிறகு பல்வேறு முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். 1985ம் ஆண்டு முதல் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தின் தலைவராகவும், குழுவின் கலை இயக்குனராகவும் இயங்கி வருகிறார். இவரது பொறுப்பிலேயே புரவலர்கள் உதவியுடன் லட்சுமி நரசிம்மர் ஆலயமும், காட்சியரங்கமும் கட்டப்பட்டன. பல இளம் கலைஞர்களை பயிற்றுவித்தவர். அரும் முயற்சியால் பாகவத மேளா பிரதிகளை பதிப்பித்து வருகிறார். இவர் கலைமாமணி விருது, பரதம் விருது முதலிய பல விருதுகளை பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான இவர் இன்றளவும் பாகவத மேளா மேடைகளில் நடித்து வருகிறார்.

முரளி ரங்கராஜன்

முரளி ரங்கராஜன் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கத்தின் பாடகராக இருந்து வருகிறார். ஆண்டாள் கல்யாணம் உட்பட சில பாகவத மேளா நாடகங்களை தொகுத்துள்ளார்.