![]() |
பரதம் ஆர்.மகாலிங்கம் |
மெலட்டூர் பாகவத மேளாவை பற்றி கேள்வி பட்டிருந்தாலும், நேரில் காண்பதற்கான தருணம் வாய்க்கவில்லை. தற்செயலாக தஞ்சைக்கு பயணம் செய்த போது நண்பர் ராகவ் மெலட்டூரில் இருந்தார். மெலட்டூர் அவரது பூர்வீக ஊர், ராகவின் அப்பா நீண்ட நாள் பாகவத மேளாவில் ஆடியவர். இப்போதும் ராகவின் உறவினர்கள் அரவிந்தனும் ஆனந்தனும் மேளாவில் பங்கேற்கும் முக்கிய கலைஞர்கள். திருவிழாவிற்காக வந்திருந்தவர் என்னை பாகவத மேளா குழுவின் தலைவர் பரதம் மகாலிங்கம் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்று வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் திருவிழா என்பதால் சிறு நேரமே பேசமுடிந்தது. பாகவத மேளா குழுவினர் அனைவரையும் சந்தித்து பேச வேண்டும் என்றால் நரசிம்ம ஜெயந்தி விழா போது மட்டுமே சந்திக்க முடியும்.
இந்த வருடம் (2025) நரசிம்ம ஜெயந்தி விழாவிற்கு சென்றிருந்தோம். காலை ஒத்திகை முடிந்து மதிய சாப்பாட்டிற்கு பிறகு மேளாவில் முக்கிய பங்கு வகிக்கும் அனைவரையுமே சந்தித்து சிறிது நேரம் உரையாட முடிந்தது. பாகவத மேளாவின் தலைவர் இயக்குனர் ‘பரதம் மகாலிங்கம் (ஊராருக்கு அவர் மாலி சார், செல்லமாக மாலி மாமா. அந்தப்பகுதிகளில் நான்கு நாள் உலவினால் நீங்களும் இயல்பாக மாமா, மாமி என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள்) மேளாவின் முக்கியமான கலைஞரும் சீனியருமான பரதம் நாகராஜனும், குழுவின் முன்னணிப் பாடகர் முரளி ரங்கராஜன், நட்டுவனார் ஹரிஹரன் ஹேரம்பநாதன் ஆகியோரிடமும் பேசத்துவங்கினோம்.
மெலட்டூர் பாகவத வேளா ஓர் அறிமுகம்
![]() |
மாலி |
மாலி: பாகவத மேளா பல கலைத்துறைகள் இணைந்து நிகழ்த்தும் நாட்டிய நாடக நிகழ்வு. குறிப்பாக நான்கு வகையினர் பங்களிப்பு அத்யாவசியமாகின்றது. முதலாவது நாடகத்தின் இயக்குனர். இங்கு குழுவின் தலைவரே இயக்குனராகவும் இருக்கிறார். பிரதியை காட்சிப்படுத்துதல், காட்சிகளின் நேரக்கட்டுப்பாடு, பாத்திரத்தேர்வு, பல்வேறு கலைஞர்களை ஒருங்கிணைத்தல், தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்காக நாடகத்தில் மாற்றங்களை செய்தல் இவையெல்லாம் இயக்குனரது பொறுப்பு. இரண்டாவதாக நடிகர்கள். நடனம் தெரிந்திருக்க வேண்டும், வசனங்கள் பேசவேண்டும், தெலுங்கு பத்யங்களில் மனம் ஒன்றி நடிக்க வேண்டும். மையக்கதாபாத்திரமாக இருந்தால் குறைந்த பட்சம் அரைமணிநேரம் ஒற்றை ஆளாக மேடையில் இசை தருக்களுக்கு ஆடத்தகுதியானவராக இருக்கவேண்டும்.
அடுத்த படியாக இசைக்கலைஞர்கள், பாகவத மேளாவில் இசைக்கு மிக முக்கிய இடமுண்டு. ஸ்ருதி, மிருதங்கம், கஞ்சக்கருவிகள் சூழ பாடகர் பாடுவார். நாடகம் துவங்கி முடியும் வரையிலும் தற்காலத்தில் ஆறு மணிநேரம் வரை கூட நடக்கின்றது, வேறு வேறு பாத்திரங்களுக்கு பாடகர் தொடர்ந்து பங்களிக்க கூடியவர். இறுதியாக நட்டுவனார், இவரே தனது தாளக்கட்டுக்கள் மூலம் மேடையை நிர்வகிக்கின்றவர், நடிகர்களுக்கான நடனப்பயிற்சி அளிப்பவர். ஒவ்வொரு பாத்திரமும் பிரவேசிப்பதில் இருந்து நடனத்துக்கு முக்கியத்துவம் தரும் பத்யங்களிலும், நாடகத்துக்கிடையே மேளாவில் இடம்பெறும் பெண் பாத்திரங்களுக்கான அலாரிப்பூ முதலான நடன உருப்படிகளின்போதும் என மேடை முழுக்க இவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
தாமரைக்கண்ணன்: நீங்கள் எப்போது எப்படி பாகவத மேளாவுக்குள் வந்தீர்கள்?
மகாலிங்கம்: நாங்கள் நான்கு தலைமுறைகளாக பாகவதமேளாவில் பங்கெடுக்கின்றோம். எனது தாத்தா, எனது அப்பா, சித்தப்பா நான் எனது மகன் வினோத் என்று தொடர்கிறது. எனது சித்தப்பா சுப்பையர் பாகவதமேளாவில் பாடிக்கொண்டிருந்தவர், என்னையும் பங்கேற்க அழைத்துப்போனார். அப்போது எனக்கு பத்து வயதுக்கும் குறைவு 1962ல் ஒரு தோழிப்பெண் வேடம்தான் முதலில் நடித்தேன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரகலாத வேடம் கிடைத்தது. 1967 துவங்கி 1989 வரை பிரதான வேடங்களை நான் தான் ஏற்று செய்தேன், முக்கியமாக ஸ்த்ரீ பார்ட்டான லீலாவதி, சந்திரமதி, ருக்மிணி, பார்வதி இப்படி. மெலட்டூரில் பாகவத மேளா 1965ல் இரண்டாக பிரிந்தது. நான் இரண்டு குழுக்களிலும் ஆடியிருக்கிறேன். எனது சகோதரரின் மகனான நாகராஜன் இப்போது குழுவின் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்.
![]() |
பரதம் நாகராஜன் பெண் வேடத்தில் |
1989ல் மாலி சாருக்கு தண்டுவடத்தில் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது, இருபது வருடங்களாக எல்லா பெரிய பாத்திரங்களையும் அவர்தான் போட்டிருந்தார். அவ்வளவு காலமாக இல்லாமல் அதற்கு ஒரு வருடம் முன்புதான் நான் சிரத்தையாக அந்தப்பாத்திரங்களை கற்றிருந்தேன், ஒருவிதமான கட்டாயம் ஏற்படும்போது தெய்வாதீனமாக அடுத்த ஒருவர் அங்கு தயாராகிவிடுகிறார். அதற்கான பயிற்சி முறை அடிப்படையான ஒன்றாக இங்கு உள்ளது.
![]() |
நாகராஜன் மகன் ஹரியுடன் |
![]() |
முரளி ரங்கராஜன் |
![]() |
ஹரிஹரன் |
மாலி: கவி வெங்கடராம சாஸ்திரி, மெலட்டூரை சேர்ந்தவர். இவர் பத்து நாடகங்களை எழுதியிருக்கிறார். இவை பாகவதமேளா என்ற நாட்டிய நாடக பாணியில் ஆடப்படுவதற்காக எழுதப்பட்டவை. அவருடைய எல்லா நாடகங்களிலும் 'கோபாலகிருஷ்ண குமாருடை வெங்கடராமுடு விரசிதமுன' என்ற முத்திரை உள்ளது. சாஸ்திரி தனது மார்க்கண்டேயர், ஹரிச்சந்திரா நாடகங்களில் மெலட்டூரில் உள்ள உன்னதபுரீஸ்வர சுவாமியை குறிப்பிடுகிறார், இது முக்கியமான சான்று. எங்களிடம் அவரது நாடகத்தின் படி ஓலைச்சுவடி ஒன்று உள்ளது, அதைப்பாதுகாத்து வருகிறோம். அதே சமயம் மெலட்டூர் தவிர தேப்பெருமாநல்லூர், சாலியமங்கலம் ஆகிய ஊர்களிலும் பாகவத மேளா நடக்கிறது. அங்கெல்லாம் பிரகலாத சரித்திரம் மட்டுமே நடத்துகிறார்கள். அவையும் வெங்கடராம சாஸ்திரியின் நாடகங்கள் அல்ல, தெலுங்கு மொழியிலுள்ள வேறு பிரதிகள். தேப்பெருமாநல்லூரில் இதை செய்பவர்கள் பஜனை சம்பிரதாயத்தில் இருந்து வந்தவர்கள்.
முரளி: பாகவத மேளா ஒரு காலத்தில் அரசவை கலையாக இருந்திருக்கிறது, கலைஞர்களுக்கு அரசு உதவியிருக்கிறது. தஞ்சாவூர் அவையில் இது ஆடப்பட்ட குறிப்புகள் உள்ளன. சரஸ்வதி மகாலில் இருந்து ஐந்து பாகவத மேளா நாடகங்கள் கொண்ட தொகுப்பு ஒன்றும் கிடைத்துள்ளது. பாகவத மேளா கலைஞர்களுக்கு மெலட்டூர் மானியமாக கொடுக்கப்பட்டது. ஆகவே இங்கு இந்த பாரம்பரியம் தொடர்கிறது. வெவ்வேறு கலைவடிவங்களை தஞ்சாவூர் கும்பகோணம் பகுதிகளில் நீங்கள் காணலாம். எல்லாவற்றிற்கும் பக்தி மையச்சரடாக இருக்கிறது.
மாலி: மெலட்டூரை சேர்ந்த நடேச அய்யர், பாலு பாகவதர் இவர்கள் இந்த கலையை மீட்டெடுக்க உதவியவர்கள். அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இதை மீண்டும் நிகழ்த்த பிரயத்தனப் பட்டிருக்காவிட்டால் இன்று நாங்கள் இதை ஆடவும், நீங்கள் பார்க்கவும் வாய்ப்பிருந்திருக்காது. ஒவ்வொரு வருடமும் நரசிம்ம ஜெயந்தியின் போது பிரகலாத சரிதத்தையும், வேறு சில நாடகங்களையும் நடத்துகிறோம். இது கோவிடு பிணைந்த கலை என்பதால் தடங்கலின்றி நடக்கவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுதலாகவும் இருக்கிறது.
அனங்கன்: வெங்கடராம சாஸ்திரிகளின் நாடகங்கள் அனைத்துமே இப்போது மேடையேற்றப்படுகின்றதா?
மாலி: பெரும்பாலானவை முன்பு மேடையேறியுள்ளன. ஆனால் இப்போது அனைத்துமே இல்லை என்பது தான் பதில். நரசிம்ம ஜெயந்தியின் போது பிரகலாத சரித்திரம் நடிப்பது ஒரு வழிபாடு. இந்த சங்கம், மேடைகள் இவை எல்லாம் இல்லாமல் கோவிலின் உள்ளே நடந்த நாடகத்தையும் நான் ஆரம்ப காலத்தில் பார்த்திருக்கிறேன். ஆகவே அது மாறுவதில்லை. பிரகலாதனுக்கு அடுத்ததாக, ஹரிச்சந்திரன் நாடகம் நடத்துவோம். அது இரண்டு நாட்களாக நடக்கிறது. முதல் நாள் பார்த்தவர்கள், இரண்டாம் நாளும் பார்க்கவேண்டும் என்பது நம்பிக்கை. முதல் நாள் நாடகம் துக்ககரமானதாக இருக்கும், இரண்டாம் நாள் மங்கள முடிவாக நிறையும் என்பது தான் அந்த நம்பிக்கைக்கு காரணம்.
![]() |
ஹரிசந்திர நாடகம். மாலி ஹரிசந்திரன், சந்திரமதி நாகராஜன், ரோஹிதாக்ஷன் ஹரி |
“ஸரிலேனி ஶ்ரீஹரிசந்த்ர நாடகமு
முருவுகா ரேண்டங்கமுலுகா நோனர்சி
விரசின்சிதி நேனு விபுலாதலமுன
கரிமனு படியின்சு தனுலைனவாரு
கனின வினினவாரு கடுஹேச்சுகானு
தனதான்யமுலு கலிகி தனயுலு கலிகி
பாடிபண்டலு கலிகி பாக்யமுல கலிகி
வேடுகேன்தோ கலிகி தனயுலு கலிகி
சிரகாலமு சிரஞ்சஜீவுலை இலனு
வருஸதோ வேலயுதுரு வன்னே மீரகனு“
பிரகலாதா, ஹரிச்சந்திரா இவை இரண்டும் கோபதாபங்கள், துக்கம் நிரம்பிய நாடகங்கள் என்பதால் மூன்றாவதாக மகிழ்ச்சியான ஒரு நாடகமாக ருக்மிணி கல்யாணம் போன்ற கல்யாண நாடகம் ஒன்று போடுகிறோம். முன்பு பாகவத மேளா ஏழு முதல் பத்து நாட்கள் வரை நடந்தது, இப்போது நான்கு நாட்கள் தான் நடத்துகிறோம். பல்வேறு ஊர்களிலிருந்து வரும் கலைஞர்கள் இருப்பும், பொருளாதார நிலையும் முக்கிய காரணம். ஆகவே சாஸ்திரிகளின் நாடகங்களை சுழற்சிமுறையில் நடத்தி வருகிறோம்.
அனங்கன்: வெங்கட ராம சாஸ்திரிகளின் நாடகங்கள் என்னென்ன? அவை பதிப்பிக்கப்பட்டுள்ளனவா?
மாலி: அதற்காக சிரத்தை எடுத்து பலமுயற்சிகள் செய்கிறோம். முக்கியமாக கையெழுத்துப்படியாக இருந்த இந்த நாடகங்களை எல்லாம் பதிப்பித்து வருகிறோம், ஒரு புறம் தெலுங்கு லிபியிலும் அதன் அருகில் தேவநாகிரி எழுத்துக்களிலும் இது பதிப்பிக்கப்படுகிறது. அவர் எழுதியவற்றில் ஏழு நாடகங்கள் பதிப்பித்திருக்கிறோம். இதுவரை பிரகலாத சரிதம், ருக்மிணி கல்யாணம், கிருஷ்ண ஜனன லீலா, சீதா கல்யாணம், உஷா பரிணயம், ஹரிச்சந்திரா ஆகிய நாடகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கூடிய விரைவில் எங்களிடமுள்ள அனைத்து பிரதிகளையும் பதிப்பித்துவிடுவோம். இதற்காக தேவிபிரசாத் என்னும் அறிஞர், அவருடன் இணைந்து ஸ்ரீனிவாசன், இருவரும் பெரிதும் உழைத்திருக்கிறார்கள்.
தாமரைக்கண்ணன்: நீங்கள் உஷா பரிணயம் நாடகம் குறித்து சொல்கிறீர்கள் இல்லையா, உஷா பரிணயம் தமிழகத்தின் பழைய நாடகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தோன்றுகிறது, சிலப்பதிகாரத்தில் அதைப்பற்றிய குறிப்பு இருக்கிறது. அநிருத்தனை மீட்க கண்ணன், ருக்மிணி, காமன், துர்க்கை, இந்திராணி ஆகியோர் வாணாசுரன் நகரமான சோணிதபுரியில் வேடங்கள் புனைந்து ஆடுகிறார்கள்.
மாலி: நானும் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், மாதவி அதையெல்லாம் ஆடுகிறாள் இல்லையா. ஆனால் வெங்கடராம சாஸ்திரி எழுதிய நாடகம் வேறு. அதில் உஷை ஒரு கனவு காண்கிறாள், அழகிய ஆண்மகன் ஒருவன் வருகிறான். அவளது தோழியிடம் இதைச்சொல்ல அவள் வெவ்வேறு இளவரசர்கள் சித்திரத்தை வரைந்து காண்பிக்கிறாள். உஷை அவர்களில் அநிருத்தன் படத்தை தேர்ந்தெடுக்கிறாள், இப்படியாக நாடகம் போகிறது.
தாமரைக்கண்ணன்: இந்தப்பிரதிகள் சுருக்கப்பட்ட பிரதிகளா, ஏனெனில் பல இடங்களில் ஆடுவதற்கான பகுதி மட்டுமே சுருக்கப்பட்டு பதிப்பிக்கப்படுகிறது இதனால், காலப்போக்கில் மூலப்பிரதி மறைந்து விடுகிறது
முரளி: இல்லை அச்சிடப்படுபவை முழுவதுமான பிரதிகளே. இந்த புத்தகங்களில் பாகவத மேளா குறித்தும் பிரதிகளின் ஒப்பாய்வு குறித்தும் விரிவான முன்னுரை அளிக்கபட்டுள்ளதை நீங்கள் காண முடியும். அதே சமயம் நீங்கள் சொன்னதுபோல முழுப்பிரதியையும் மேடையில் இன்று நடத்த நேரமில்லை, ஆகவே இயக்குனருடன் ஆலோசித்து சுருக்கப்பட்ட பகுதியை நாடகங்களுக்கு மூலத்திலிருந்து பிரித்துக்கொள்கிறோம். சுருக்கப்பட்ட பிரதி பதிப்பில் இல்லை, அது குழுவினருக்கானது. பெரும்பாலும் தமிழில் அவற்றை எழுதி படித்துக்கொள்கிறோம்
தாமரைக்கண்ணன்: நிகழ்த்துக்கலை பிரதிகள் குறிப்பிட்ட அமைப்பில் இயற்றப்படும். உதாரணமாக தெருக்கூத்தில் தர்க்கம், தரு முதலியவை இருக்கும்...
மாலி: பாகவத மேளாவின் அமைப்பிலும் அப்படி பலபகுதிகள் உள்ளன, திபதை, சரணு தரு, பிரலாப தரு, பிரவேச தரு, சூர்ணிகை, வசனம், சந்தி வசனம் இப்படியெல்லாம் இருக்கிறது. இவற்றின் அடி வரையறை கந்த பத்யம் நான்கு வரி என்றால் திபதை எட்டிலிருந்து பத்து வரி இருக்கும். சீசம் நமது விருத்தம்போல இருக்கும், முழுக்கவே பாவத்திற்கான பகுதி, ஜதி எதுவும் வராது. இவை அனைத்துக்கும் ராகம் தாளம் முதலிய குறிப்புகள் இருக்கும்.
முரளி: நாடகத்தின் சுருக்கம் மேளப்ராப்தியின் போதும், காட்சிச்சுருக்கம் ஒவ்வொரு காட்சியின் துவக்கத்திலும் வசனமாக சொல்லப்படும். தர்க்கம் இங்கு சம்வாதம் என்ற பெயரில் இருக்கும், தெருக்கூத்தோடு ஒப்பிட தர்க்கத்துக்கு இங்கு அவசியம் குறைவுதான். ஆனால் இரணியன் நரசிம்மர் சம்வாதம் போன்று மிக நீளமான, அதே சமயம் நாடகத்திற்கு முக்கியமான தர்க்கங்கள் இருக்கின்றன. பத்தியங்கள் இசையோடு பாடப்படுகையில் அவை உணர்வுகளை உருக்கமாக காட்சிப்படுத்த உதவும். உதாரணமாக ‘ஏமி ஈ கோபம் சுவாமி’ என்ற ஒரு வரிக்கு லீலாவதி அபிநயிக்கையில், ஆடுபவருக்கு தோதாக மீண்டும் மீண்டும் அந்த ஒரு வரி பாடப்படும். செவ்வியல் நடனங்களில் இந்த பாணி உள்ளதுதான்.
ஹரிஹரன்: தாளக்கட்டுக்கள் மட்டுமே கொண்ட நடனப்பகுதிகள் நாடகத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு மறு தட்டில் உள்ளவை. இவை பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் திரும்பத்திரும்ப வராமல், ஏதோ ஒன்று அதிகமானதாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்கின்றன. அது போலவே பாத்திரப்படைப்பிலேயே வெங்கடராம சாஸ்திரிகள் ஒவ்வொரு நாடகத்திலும் சுவாரஸ்யமான பாத்திரங்களை கொண்டு வருகிறார். குறத்தி, பாம்பாட்டி, குஸ்தி மல்லர்கள் இப்படி, வேறுபட்ட பாத்திரங்கள். அப்போது நடனம் அமைப்பவருக்கான கற்பனை விரிவுக்கு, வித்தியாசங்களை காட்டுவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
நாகராஜன்: பாத்திர பிரவேசத்திற்கான கட்டியத்திலேயே ஒரு கதாபாத்திரத்தின் விவரணை முழுவதுமாக சொல்லப்படும். வருபவர் யார், அவரது அணிகலன்கள் என்ன, அவரது குணாதிசயம் என்ன என்பது சொல்லப்பட்டுவிடும். ஒரு அரசன் வருவதற்கு உதாரணமாக அரிச்சந்திரனின் பிரவேசத்தைப்பார்க்கலாம்.
அன்தட த்ரிஶங்கு மஹாராஜு குமாருடை3ன ஹரிஶ்சந்த3ர மஹாராஜு வச்சே மார்கம் விதா3ன நம்டேனு-
ஶ்ரீகரம்பி3னவம்ஶ ஶேக2ருண்டகு3சு
ஸாகேதபுரமேலு ஜனபாலவருடு
ஜனமேன்சு மகுடம்பு3 ஶிரமுன தா3லிச
ம்ருமத3 திலகம்பு3 மின்னகா3 தீ3ர்சி
ரவ்வல சோகட்லு சேவுல தே3ரங்க
சவகா3னு ம்ருத்யால ஸருலமரங்க
கரமுல வன்னேம்ப3காரு தோடா3லு
ஸரிபேனல் பதகமுல் ஸௌரு தீ3ரங்க
அதி விதரணஶாலி யுக ஸத்யகீர்தி
மதிமன்துடை3னட்டி மந்திபுங்க3வுடு
கோலுவு ஸேயக3 சேந்த கோமரோப்பகா3னு
அல ஹரிஶ்சந்த்3ருடு3 அருதே3ன்சேநிபுடு3
ஔரா ஈ வித3ம்பு3ன த்ரிஶங்கு மஹாராஜு குமாருடை3ன மங்கலேன்த்3ருல த3ன்டனாக2ண்ட ப்ரசண்ட3 தோ3ர்த3ம்டுடைன ஹரிஶ்சந்தர மஹாராஜு வச்சே மார்க3ம்பு பாராகு-
இன்னாருடைய மகன், தோற்றம், ஆடை அலங்காரம், அவனது அறிவுக்கூர்மை முதலிய குணாதிசியங்கள் இவை அனைத்தும் இங்கே சொல்லப்படுகின்றது. இதே ஹரிச்சந்திர நாடகத்தில் ராணி சந்திரமதியின் பிரவேசம் கேட்பதற்கு அவ்வளவு ரசமாக இருக்கும்.
சேம்காவி பைடா2ணி சீரயு க3ட்டி
ரங்கை3ன ஸரிக3ங்சு ரவிகயு தடி3கி3
கஸ்தூரி திலகம்பு3 கா3விம்சி நுது3ட
ஹஸ்தகங்கணமுலு அமரங்க வைசி
வேல்ல நுங்க3ரமுலு வேலுக3ங்க3 மிகு3ல
கால்ல பாத3ஸராலு க4லுக4ல்லுமனக3
பதிப4க்தி க3ல போ3டி பட3துல மேடி
அத3நுட3த்யனு கோடி அவனிலோ ஜூடி
கப்புரவாஸனல் க3லுகு3 நேம்மேன
கு3ப்பனி தாவி தி3க்குல கரம்மு ஶான
வேடு3ககா3 தன விபு4னி சேந்தகுனு
நேடு3 சந்த3ரமதியு நேலத தா வேடலன்
தாம் தாம் தாம் தம்தி3ரி திரி தில்லான
தீ4ம் தீ4ம் தீ4ம் - பத4னி த4 த4 நி ம ப நி ஸா நி
ப நி ப த3 ம ப நாதி3ரிண் தம்தி3ரிணம்
தி3ரிதி3ரிணம் ததி4ம்கணிதோம்
ஔரோ ஈ வித4ம்பு3ன அத்3த3ம்புநேக3டு முத்3து3 சேக்கில்லு தி3க்கு விதி3க்குல தலுகு மனுசு, சக்கனி சந்தரமதி தன மக3னிகடு3கு வச்சே மார்க3ம்பு பராகு-
அவளுடைய நகைகள் ஒளிவீசுகின்றன, பாத சரம் கலீரென ஓசையிடுகின்றன. அழகிய சேலையும், ரவிக்கையும் அணிந்தவள் பதிபக்தியில் சிறந்தவள் என்று சந்திரமதி ராணியைப்பற்றி தாளக்கட்டுகளோடு சொல்லும் கட்டியம் இது.
அசுரர்களுக்கு சொல்லப்படும் முன்வரவும் இன்னும் ஜோராக அட்டகாசமாக இருக்கும், உஷா பரிணய நாடகத்தில் வாணாசுரனுக்கு இப்படி வருகிறது.
ஶோணபுரம்பே3லு ஶூரோத்தமுண்டு3
பா3ணதை3த்யுடு3 ஶிவப4க்தாக்3ரகு3ண்டு3
ப3லிஸுகுமாருண்டு3 பரமஶிவாங்க்4ரி
நளின ப்4ருங்கா3யமானான்தரங்கு4ண்டு3
பு4ஜஸஹஸ்ரம்பு3லன் பு4வி பதி3வேல
பு4ஜ ஸஹஸ்ரம்பு3லன் புவி பதி3வேல
க3ஜதோ3ர்ப3லம்பு3லு கை3கோனி தி3ஶல
விஜயம்பு3 ஜேன்த3 ஏவேல கோருசுனு
குதலான கும்பா4ண்ட3கோபகண்ட3குலு
மதி மந்துலைநட்டி மந்தரபுங்க3வுலு
ஸததமு கோலிவங்க4 சதுராத்முலகு3சு
அதிவேக3 சனுதே3ன்சே அசுரகுனஜருடு
ஔரோ ஈவித4ம்பு3ன ஶங்கருனி பாத3பங்கேருஹத்3வய
ப்4ருங்கா3நான்தரங்க3ண்டை3ன பா3ணாஸுருட3 வச்சே மார்கம்பு பராகு-
‘சோனபுரத்திலுருப்பவன் அசுரர்களில் சிறந்தவன் பாணன் என்னும் அரக்கன் சிவபக்தனும் தான்’ என்று துவங்கி அவன் ஆயிரம் கைகளின் பெருமையை சொல்கிறது. இப்படி பல அழகான பகுதிகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
![]() |
மாலி |
மகாலிங்கம்: இப்போது தான் ஒவ்வொருவராக வந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊர்களிலிருந்து வருகிறார்கள். பெரும்பாலானவர்கள் சென்னையிலிருக்கிறார்கள். மற்றவர்கள் வேறு சில நகரங்களிலிருந்து வந்து இணைகிறார்கள். இப்போது இங்கே தஞ்சை மண்ணில் இருப்பவர்கள் சிலர் தான். நண்பர்களை நெடுநாள் கழித்து பார்க்கிறோம் என்பதால் இயல்பாகவே உற்சாகம் வந்துவிடும். ஒத்திகையின்போது கேலி கிண்டல்களுக்கு குறைவிருக்காது, சங்கீதம்போல வெற்றிலைசீவல் போல அதுவும் எங்கள் ஊருக்கென்று ஏற்பட்டது இல்லையா. இப்போது நீங்கள் காலையில் பார்த்தீர்களே அதுல் அவன் பிரஹலாதனாக நடிக்கிறான். பிரஹலாத பாத்திர பிரவேச நடனத்தைத் தான் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான்.
நாகராஜன்: முன்பு இதில் பங்கேற்பவர்கள் அனைவரும் மெலட்டூரிலேயே இருந்தார்கள், விவசாய நிலங்கள் இருந்தது, அதன் வருமானம் போதுமானதாக இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் சென்னை, பெங்களூர் போன்று வெளியூரில் வேலைக்காக இடம்பெயர்ந்துவிட்டார்கள். வெவ்வேறு துறைகளில் வேலை, வங்கி, ஐடி, ஒருவர் மருத்துவராகக்கூட பணிபுரிகிறார். ஆனால் எல்லா வருடமும் திருவிழாவிற்கு வந்துவிடுவார்கள். ஒரு நாடகத்தில் தோராயமாக பத்திலிருந்து பன்னிரண்டு பேர் வரை நடிகர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொருவரும் குறைந்தது பத்திலிருந்து ஐம்பது வருடங்கள் வரை பாகவத மேளா அனுபவம் உள்ளவர்கள். ஆகவே அதிலே ஊறியிருப்பார்கள், இந்த வருடம் என்னென்ன நாடகம் போடப்போகிறோம் என்பது தீர்மானமானவுடன் பாத்திரங்களை சொல்லிவிட்டால் அவர்கள் தனித்தனியே பயிற்சிகளை துவக்கி விடுவார்கள்.
ஹரிஹரன்: இங்கு அனைவரும் விழா துவங்குவதற்கு நான்கு நாட்கள் முன்புதான் கூடுகிறோம். நாங்கள் எப்போதும் நரசிம்ம ஜெயந்திக்கு சில நாட்கள் முன் ஒத்திகைகள் பார்ப்போம். போன வருடம் செய்ததில் மாற்றம் இருந்தால் அந்த பகுதியை ஒத்திகை பார்த்துக்கொள்வோம். காலையில் நீங்கள் பார்த்த அருணாச்சலம், ராமசாமி இருவருக்கும் மேளாவில் ஐம்பது வருட அனுபவம் உள்ளது. அதனால் அவரவர்களுக்கே தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். செய்வதை மேலும் சிறப்பாக செய்யவே எங்களுக்கு ஒத்திகை தேவைப்படுகிறது.
![]() |
பாகவத மேளா மாலி குழு (2025) |
மாலி: ஒன்றை நினைவு வைத்துக்கொள்ளுங்கள், முன்பு இந்தக்கலைகளுக்கு எல்லாமே குடும்ப தொடர்ச்சி இருந்தது. அப்பா தனக்கு தெரிந்தவற்றை மகனுக்கு சொல்லித்தருவார், அவர் தனது மகனுக்கு சொல்லுவார். அப்படித்தான் இவ்வளவு காலம் அடிப்படைக்கல்வி நடந்தது. அவருக்கு மேலும் தேவைப்படும்போது பல குருக்களை நாடிச்செல்வார். அங்கேயே தங்கி கற்றுக்கொள்வார். இப்போது அப்படி இல்லை.
நாகராஜன்: புதிதாக ஒருவர் நடிப்பதற்கு குழுவில் இணைவதானால், பெரும்பாலும் குழந்தையாக இருக்கும்போதே இங்கு வந்து விடுவது நல்லது. அடிப்படையான நடனப்பயிற்சி, வசனங்கள் இவை கற்பிக்கப்படும். அவருக்கு ஆர்வமிருந்தால் அவர் பின்னர் பாடுபவராக, இசைக்கலைஞராக கூட ஆகலாம். துவக்கநிலை பயிற்சிகளுக்குப் பிறகு முதலில் சிறிய பாத்திரங்கள் கொடுப்போம், ஏனெனில் மேடை ஏறுவதும் பயிற்சிகளில் அடிப்படையானது தான். மேடைக்கூச்சம் விலகும், ஒவ்வொருவரும் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பது புரியும். மேடை வெளிச்சத்துக்கு கண்கள் பழகுவது, பார்வையாளர்களின் முகங்களை பார்ப்பது, அவர்களின் மனவோட்டத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது இவை எல்லாமே பயிற்சியின் பகுதிகள். மெல்ல மெல்லத்தான் அவை கைவரும்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் ரோஹ௺தான், பிரகலாதன் இப்படி குழந்தைகள் செய்யக்கூடிய பாத்திரங்களில் நடிக்க வைப்போம். சில காலம் அந்த பாத்திரங்களில் படித்தபிறகு திறமைக்கேற்ப பெரிய பாத்திரங்கள் கிடைக்கும், இன்று பிரதான பாத்திரங்களில் நடிப்பவர்கள் அனைவருமே குழந்தைகளாக இருக்கும்போதே இங்கு வந்தவர்கள் தான். எங்கள் குழுவில் இருந்த கோபாலகிருஷ்ணன், சுப்ரமணியன் எல்லாம் தலைசிறந்த கலைஞர்கள். சிலரது பாத்திரத்தை நாங்கள் எடுத்து செய்வதே பெரிய சவால் என்று நினைக்கும் அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
பயிற்சிக்கான சாத்தியங்கள் என்று பார்த்தால் எங்கள் துவக்க காலத்தை விட இப்போது வசதிகள் மேம்பட்டுள்ளன, ஒருவர் புதிதாக குழுவில் இணைய அவர் மெலட்டூர் வர வேண்டுமென்பது கிடையாது. சென்னையில் எங்கள் குழுவினர் இருப்பதால் அங்கேயே பயிற்சி அளிக்க முடியும். மேலும் தகுதியுள்ள சில குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்களை நாங்களே பயிற்றுவிக்கலாம் என்றும் யோசிக்கிறோம், அவர்களுக்கு மெலட்டூர் பூர்வீகமாக இருக்கவேண்டும் என்பதொன்றும் விதியில்லை.
![]() |
இசை நாட்டிய ஆசிரியர் ஹேரம்பநாதன் |
ஹரிஹரன்: பாகவத மேளா என்பது நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட ஒரு நாட்டிய நாடக மரபு, கட்டாயம் அது பரதநாட்டியம் கிடையாது, குச்சுப்புடியும் கிடையாது இது ஒரு தனி நாட்டிய நாடக பாணி. அடவுகளை கொண்டு இது பரதம் என்று சொல்லிவிடமுடியாது. அவை பெரும்பாலான தென்னிந்திய நடன வகைகளில் ஒன்றுபோலத்தான் இருக்கும். இது உணர்வு பூர்வமான பாவங்களுக்கு பெரிய இடம் கொடுப்பது. பத்யங்களுக்கு ஒருவர் பாகவத மேளா மேடைகளில் மிக விரிவாக அபிநயம் செய்வார். இது ஆழ்ந்து போய்க்கொண்டேயிருக்கும். சமயங்களில் பரதம் பயின்றவர்கள் பாகவத மேளாவில் ஆட நேர்கிறது. இருப்பினும் நாங்கள் கவனமாக பாகவதமேளா பாணியை மட்டுமே வெளிப்படுத்த பயிற்றுவிக்கிறோம்.
மாலி: ஆண்கள் பெண்களாக வேடமிடுவது பாகவதமேளாவில் உண்டு. எங்களைப் பொறுத்தவரை இதுவும் முக்கியமான விஷயம். ஏனென்று கேட்டால் பல நாடகங்களில் மையப்பாத்திரங்கள் லீலாவதி, சந்திரமதி, ருக்மிணி போன்ற பெண் பாத்திரங்கள் தான். பெண்வேடங்கள் மூலமாகத்தான் அதிகமும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும் என்பதால், இந்த நாடகங்களை எழுதியவரான வெங்கடராம சாஸ்திரிகள் ஒவ்வொரு நாடகத்திலும் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். லீலாவதி குழந்தைக்கும் கணவனுக்கும் இடையே இருந்து தவிக்கிறாள். அப்போது பாடப்படும் சீஸபத்யம் பலதும் உணர்வுப்பூர்வமானவை. பாடுபவர் பாடி, ஆடுபவர் ஆடினால் பார்வையாளர்களுக்கு கண்ணீர் வரும். நான் அழுதிருக்கிறேன், பிறர் அழுகையை பார்த்திருக்கிறேன். இப்படி பெண் பாத்திரங்களின் மேடை நேரத்தை ஒப்பிட்டால் நாயக வேடத்திற்கு இணையாகவோ அல்லது அதிகமாகவோதான் இருக்கிறது.
பல பெரியவர்கள் பாகவத மேளாவிற்கு தொண்டு செய்திருக்கிறார்கள், இந்தக்கலை அவர்களை ஏதோ வகையில் ஈர்த்துள்ளது என்பதும் நீங்கள் யோசிக்க வேண்டிய ஒன்று. கிட்டப்பா பிள்ளைக்கு இல்லாத புகழா, உலகப்புகழ் பெற்ற நடன ஆசிரியர். இருந்தாலும் பாகவத மேளாவிற்கு விரும்பி பணி செய்திருக்கிறார். இப்போது எங்கள் குழுவிலுள்ள நட்டுவனார் ஹரியின் தந்தை ஹேரம்பநாதனும் அது போலவே பாகவத மேளாவிற்கு பங்களித்துள்ளார். எங்களுடைய குழுவில் நடிகர்கள், நட்டுவனார், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் இவர்கள் அனைவரும் தனித்தனியே கச்சேரிகள் நிகழ்ச்சிகள் செய்பவர்கள். பலர் புகழ் பெற்ற கலைஞர்கள், இருப்பினும் அவர்கள் இந்த கலையில் ஒன்றியிருக்க விரும்புகிறார்கள், இது நரசிம்மருக்கு செய்யும் சேவை என்று நினைக்கிறார்கள். அல்லது இந்தக்கலையின் தனித்தன்மையாக இருக்கும் ஏதோ ஒன்று அவர்களையெல்லாம் ஈர்க்கிறது.
![]() |
பெண் வேடத்தில் ஆண் கலைஞர் (ஆனந்த்) |
அனங்கன்: நரசிம்ம ஜெயந்தி தவிர வேறு சமயங்களில் பாகவத மேளா நாடகங்களை நடத்துகிறீர்களா?
நாகராஜன்: எங்கள் குழு மெலட்டூரில் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க நாடகங்களை நடத்தியுள்ளது. வெங்கடராம சாஸ்திரிகளின் நாடகங்கள், முக்கியமாக பிரகலாத சரிதம் அதிகமுறை மேடையேறிய நாடகம். தெலுங்கு அல்லாத சில நாடகங்களும் மேடையேற்றியிருக்கிறோம். தஞ்சை சரஸ்வதி மகாலில் கிடைத்த நாடகங்களில், சாகுந்தலம் என்ற மராட்டிய நாடகத்தை எடுத்து மகாராஷ்டிராவில் நடித்தோம். அதுபோல ஆண்டாள் கல்யாணம் நாடகத்தை தமிழில் தயாரித்து நடித்திருக்கிறோம். பகவத்கீதை பிறப்பிற்கு காரணமான நிகழ்வுகளை ஒட்டி கீதோதயம் என்ற தமிழ் நாடகத்தையும் தயாரித்து நடித்துள்ளோம்.
அனங்கன்: சிங்கமுகம் கொண்ட முகமூடி பற்றி சொல்லுங்கள்? பாகவத மேளாவின் அடையாளமாகவே சிங்கமுகம் உள்ளது இல்லையா?
மாலி: நரசிம்மரின் முகமூடி வருடம் முழுவதும் வரதராஜப்பெருமாள் கோவிலில் வைத்து பூஜிக்கப்படுகிறது. கோவில் புனரமைக்கப்படும்போது முகமூடியும் பழுதுநீக்கப்பட்டு வண்ணம் தீட்டப்படுகிறது. தஞ்சாவூர் ஓவிய பாணியில் அமைந்துள்ள அந்த முகமூடி கடவுளின் வடிவமாக கருதப்படுகிறது. வருடத்துக்கு ஒருமுறை நாடகம் நடத்தும்போது நரசிம்மரோடு முகமூடியும் வெளியே ஊர்வலமாக வருகிறது. பிற ஊர்களிலும் இதுபோன்ற வழக்கம் உள்ளது. நாங்கள் வெளியூரில் நிகழ்ச்சிகள் நடத்துகையில் அங்கு இந்த முகமூடியை எடுத்துச்செல்ல முடியாது, ஆகவே அங்கு பயன்படுத்த வேறு பிரதி முகமூடி ஒன்று செய்துள்ளோம்.’அனுரேணு முதலு சகல வஸ்துலு உன்னாவை’ என்றே நாடகத்தில் பிரகலாதன் பாடுவான். எங்கு மேடையேறினாலும் நரசிம்மர் எங்களுடன் இருப்பார்.
தாமரைக்கண்ணன்: நாட்டிய நாடகங்கள் இங்குள்ளவர்களை சென்றடைய மொழி ஒரு தடையாக இருக்கிறதா, தெலுங்கு மொழியில் நடத்தப்படும் இவற்றை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்வார்களா?
மாலி: முதலில் நாங்கள் தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இல்லை, தமிழர்கள்தான். அப்படி தெலுங்கை தாய்மொழியாக கொண்ட, குழுவில் உள்ள ஓரிருவருக்கும் தெலுங்கு எழுதப்படிக்க தெரியாது. தலைமுறைகள் மாறுகிறது இல்லையா. அவர்கள் குடும்பத்தில் இப்போதுள்ள இளைஞர்களுக்கு தெலுங்கு பேசவும் வருவதில்லை, இதுதான் நிலவரம்.
ஆனாலும் நாங்கள் இந்த ஊரில் ஐநூறு ஆண்டுகளாக வழக்கமாகிவிட்ட ஒரு சம்பிரதாயத்தை பின்பற்றுகிறோம், தெலுங்கு வசனங்களை தமிழில் எழுதிவைத்து படிக்கிறோம், அதன் பொருளை மூத்தவர்களிடம் அறிஞர்களிடம் கேட்டுத்தெரிந்துகொண்டு நடிக்கிறோம். ஒரு கலையினால் இன்னொன்று வளருமே தவிர நசித்துப்போவதில்லை. எங்கள் ஊரிலேயே பிற நாடகங்களும் நடக்கின்றன, திரௌபதை அம்மன் கோவிலில் தமிழில் அரவான் களப்பலி நாடகம் நடக்கிறது. நாங்களே தமிழிலும், மராட்டியிலும் நாடகங்கள் போட்டிருக்கிறோம்
நாகராஜன்: நாங்கள் என்ன யாருக்கும் தெரியாத கதைகளையா நடத்துகிறோம். காலம் காலமாக இங்கு புழங்கிய கதைகள், பிரகலாதன் கதை என்ன என்று தெரிந்தவருக்கு நாடகத்தை ரசிக்க மொழி கட்டாயம் ஒரு தடையல்ல. அருகிலுள்ள திருவையாறில் தியாகபிரம்ம உற்சவ பாடல்கள் தெலுங்கில்தானே பாடப்படுகின்றன, கலைகளில் மொழி பார்க்க தேவையில்லை. நல்ல ரசிகனுக்கு அது ஏதோவகையில் சென்றடைந்துவிடும்.
இருந்தாலும் இந்தக்கேள்வி எங்களை வெகுகாலமாக தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறைந்தது உங்களையெல்லாம் திருப்திப்படுத்தவாவது தற்காலம் நாடக சுருக்கத்தை, காட்சி சுருக்கத்தை தமிழில் சொல்ல ஆரம்பித்துள்ளோம்.
ஆனந்த் (பாகவத மேளாவில் பங்கேற்கும் கலைஞர்): தஞ்சாவூரில் ஒரு கிராமத்தில் அதுவும் அக்கினி நட்சத்திர வேளையில் நாங்கள் தெலுங்கு நாடகங்கள் நடத்துகிறோம் என்பது தானே இதிலுள்ள விஷேஷம். மொழி தாண்டிய கலாசார பாலமாக நாங்கள் இந்த நிகழ்வை பார்க்கிறோம். இந்த கலைவடிவம் இன்னும் அதிகம் பேரை சென்றடைய வேண்டும், அதன்மூலம் அது இன்னும் நீண்டகாலம் இங்கு நிலைகொள்ளும் என்று நம்புகிறோம்.
தாமரைக்கண்ணன்: இங்கு வந்து நாடகம் பார்ப்பவர்களுக்கும் உணவிடுகிறீர்கள் இந்த வழக்கம் எப்படி வந்தது?
நாகராஜன்: இப்போது இந்த ஊருக்கு வருபவர்கள் ஏ சி அறை வேண்டும் என்று கேட்டால் எங்களுக்கு மிகவும் சங்கடமாகிவிடும். ஐயா இது ஒரு கிராமம் இங்கு அந்த வசதிகளையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. திண்ணையும் கூடங்களும் அதிகபட்சம் மின்விசிறியும்தான் உங்களுக்கு கிடைக்கும் என்பதை எல்லாருக்கும் புரியவைக்க முடியாது. இப்போதே இப்படி இருக்கிறது, பழைய காலத்தில் நாடகத்தில் பங்கேற்கவும் பார்க்கவும் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பார்கள், இப்படித்தான் பார்வையாளர்களுக்கு உணவிடும் இந்த வழக்கம் தோன்றியிருக்கிறது.
மாலி: நாங்கள் மட்டுமல்ல அருகிலுள்ள ஊர்களில் பாகவத மேளம் நடக்கையில் அவர்களும் இதைப்பின்பற்றுகிறார்கள். தஞ்சை பகுதியின் விருந்தோம்பல் அடையாளம் என்று கூட வைத்துக்கொள்ளுங்களேன். இந்த நாடகம் பார்க்க வரும் ஒவ்வொருவரும் எங்களுடைய விருந்தினர், அவர்களை உபசரிப்பதை இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக நினைக்கிறோம். நாடகம் போலவே இதுவும் எங்களுக்கு ஒரு கடமை மாதிரி.
மாலி: எங்கள் குழுவில் மூத்த கலைஞர் ஒருவர் நரசிம்மர் வேடமிடுகிறார், வேடமிடுகிறவர் நரசிம்ம ஜெயந்தி அன்று முழுவதும் உபவாசம் இருக்கிறார். தற்போது ராமசாமி என்ற கலைஞர் 1967ல் இருந்து குழுவில் இருப்பவர் நரசிம்மர் முகமூடியை அணிந்து நடிக்கிறார். அவருக்கு மேடையில் ஒரு ஆவேசம் வந்துவிடுகிறது, இரணியனை நோக்கி அவர் போகாமலிருக்க அவரை மற்றவர்கள் பிடித்துக்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை நீங்கள் பக்தி என்றும், நம்பிக்கை என்றும், சடங்கு என்றும் எப்படிவேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் ஆடத்துவங்கியபோது பெண் பாத்திரங்களாக நடிப்பவர்கள் மருதாணி இடுவதுபோல மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து குழம்பாக்கி கை, கால்களில் இட்டுக்கொண்டோம். பின்னர் அதற்குப்பதிலாக பூசினால் உடனே காய்ந்துவிடும் சாயங்கள் (அல்டா) வந்தன. இரு தினங்கள் முன்பு பெரியகோவிலில் ஒரு நடன நிகழ்ச்சி அவர்கள் சாயத்தையும் பயன்படுத்தவில்லை, அவர்கள் விருப்பம் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டேன். எல்லா இடங்களிலும் இதுபோல மாற்றங்கள் வருவதை பார்க்க முடிகிறது.
நீங்கள் இன்று பாகவத மேளாவை விளக்கொளியில் பார்க்கிறீர்கள் அது எப்படி இருக்கிறது. ஹிரண்யனாக வருபவர் உடலெங்கும் சந்தனத்தை பூசிக்கொண்டு கொண்டையில் பூ அணிந்து வருகிறார், வேறு எந்த நாடகங்களிலும் இப்படி பார்த்திருக்கிறீர்களா.. இங்கு நிஜப்பூவைத்தான் கலைஞர்கள் தலையில் சூடிக்கொள்வார்கள், தோளில் மாலைகள் போட்டுக்கொண்டு நடிப்பதும் அப்படித்தொடரும் வழக்கம்தான். இந்த பழக்கங்கள் அதாவது நீங்கள் ஒருவேளை மூடப்பழக்கம் என்று நினைக்கலாம், ஆனால் அதுவும் சேர்ந்துதான் உங்களுக்கு பாகவத மேளாவாக கண்ணுக்கு தெரிகின்றது.
பாலு பாகவதர் கலாஷேத்ராவிற்கு சென்று நாட்டிய நாடகங்கள் பயிற்றுவிக்கும் போதே ஒரு கலையாக அது பெண்களை சென்று சேர்ந்துவிட்டது. ஆனால் இங்கு நாங்கள் கோவில் கலையாகத்தான் இதை நடத்துகிறோம். தொன்று தொட்டு வரும் சில பழக்கங்களை மாற்ற எனக்கு அதிகாரமில்லை, அதை பாதுகாத்து பிறரிடம் கொடுப்பதுதான் நான் செய்யவேண்டும். எனக்கு பாலு பாகவதர் எப்படி சொல்லிக்கொடுத்தாரோ அதைத்தான் நான் இவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறேன். இன்று நீங்கள் பார்க்கும் இந்த பாகவத மேளா கலையின் அழகியலில் ஒன்றுதான் ஆண் பெண்வேடமிடுதல். அதை நீங்கள் மாற்றும்போது இத்தனை காலம் அதில் ஜீவித்திற்குக்கும் எதோ ஒன்றை மாற்ற விரும்புகிறீர்கள். நான் அதை மாற்ற விரும்பவில்லை.
பாகவதமேளா மட்டும் அல்ல, பிற பாரம்பரிய கலைகள் எதுவாயினும் அது குச்சிப்பிடியோ அல்லது தெருக்கூத்தோ. அதில் உள்ள பழைய பழக்கங்களை, அது அந்தக்கலையின் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில், கலையின் தனித்துவமாக இருக்கும் பட்சத்தில், அது ஆபரணமோ, மேடை அமைப்போ, இசையோ, மொழியோ அதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளுங்கள். இன்னும் கூட அழகாக்கி பெருமிதத்தோடு அதை வெளிப்படுத்துங்கள் என்று சொல்வேன்.
அனங்கன்: பார்வையாளர்களிடம் என்ன எதிர்பார்கிறீர்கள்?
மாலி: இன்று பாகவதமேளாவின் பார்வையாளர்களில் பெரும்பாலானோர் வெளியூர்காரர்கள். உள்ளூர் வாசிகளுக்கு பாகவத மேளா மேல் ஆர்வம் குறைந்து வருகின்றது. பொழுதுபோக்கு விஷயங்கள் பெருகிவிட்டன, ரசனை மாறிக்கொண்டே வருகிறது. மெலட்டூரை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன என்பதும் ஒரு காரணம். பாகவத மேளா ஒருவராக நடத்தும் காரியமில்லை, ஆகவே உங்களைப் போன்ற இளைஞர்களைத் தான் நாங்கள் பாகவதமேளாவுக்கு எதிர் பார்க்கிறோம். அவர்களுடைய பங்களிப்பு மேலும் பாகவத மேளாவிற்கு தேவையாகிறது. முதன்மையாக பாகவத மேளாவை மெலட்டூர் வந்து பார்க்க வர வேண்டும். இங்கு இருந்து இந்த ஐந்து நாள் விழாவை காண வேண்டும். தங்கள் குடும்பங்களை நண்பர்களை அழைத்து வர வேண்டும். அப்போது தான் நாடகம் நடத்தும் எங்களுக்கு திருப்தி.
சந்திப்பு - தாமரைக்கண்ணன் புதுச்சேரி, அனங்கன்
*****************************
![]() |
மாலி |
![]() |
நாகராஜன் |
![]() |
முரளி |
![]() |
ஹரிஹரன் |